03 ஜூலை 2019

“ஒரு சோறு பதம்…!” (எஸ்.வி.ரங்காராவ்) கட்டுரை ------------------------------------


கட்டுரை                        உஷாதீபன்,                                                           
 “ஒரு சோறு பதம்…!”          




     (எஸ்.வி.ரங்காராவ்)           
------------------------------------

குரல்கள் பலவகைப் படும். ஆண்களுக்கு என்று ஒரு வகை. அதுபோல் பெண்களுக்கும். சமயங்களில் சில ஆண்களுக்குப் பெண் குரல் அமைந்து விடுவதுண்டு. அதுபோல் பெண்களில் சிலருக்கும் ஆண் குரல் அமைந்திருப்பதைப் பார்த்திருக்கின்றோம்.
     ஆனாலும் ஒரு மனிதனைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் நிகழ்வில் அவனது குரல் முக்கிய இடம் பெற்று விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. அது ஒரு ஆணுக்கு அமைந்த பெண் குரலாக இருந்தாலும் கூட, ஒரு முறை திரும்பி நோக்கி அறிந்த பின்புதான் அது ஏற்கப்படவோ, மறுக்கப்படவோ…! அபூர்வமாய்ப் பெண்ணுக்கு அமைந்திருக்கும் ஆண் குரலும் கூட அப்படித்தான்.
     குரலை வைத்து ஒரு மனிதனை ஏற்பது, மறுப்பது என்பது இல்லை. குணத்தை வைத்துத்தான் எனினும், குரல் எல்லாச் சமயங்களிலும் மனிதர்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அது ஒரு தனித்த அடையாளம்.
     அந்த அடையாளம் இவருக்கு நூறு சதவிகிதம் பொருத்தமாய் அமைந்து போனது. அந்தக் கண்ணியமான குரல் எல்லோராலும் ஏற்கப்பட்டதாய் இருந்தது. அது அவருக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்தது. குரலில் என்ன கௌரவம், அகௌரவம்? பார்ப்பவர், கேட்பவர் மனதைப் பொறுத்ததுதானே அது? குரலுக்காக ஒருவரை இகழ்வோர் உண்டா?  எங்கும் மனிதர்கள் அவ்வாறு செய்வதில்லையே? அது ஒரு வகை என்ற அளவில்தானே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது?
     ஆனால் இவர் குரல் அப்படியில்லை. அது எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  ஒருவர் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும், என்ன மனநிலையிலிருந்தாலும், அந்தக் குரல் அவரை ஈர்க்கத்தான் செய்தது. அந்தக் குரலைக் கேட்பதே கூட ஒரு கௌரவம் என்பதுபோல் தனது தெளிவற்ற மனநிலையிலிருந்து சமனமடையத்தான் செய்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் நல்லதைத்தான் சொல்லுவார், நன்மையைத்தான் பேசுவார், கட்டாயம் நல்லவராய்த்தான் இருப்பார் என்ற முடிவுக்கு இட்டுச் சென்றது. அவர் பேசிய போது அவர் சார்ந்த குடும்பம்  அடங்கியது, பணிந்தது. சுற்றம் அமைதி காத்தது. மரியாதை செய்தது. பயந்து ஒதுங்கியது.  அவர் செய்தால் சரியாய்த்தான் இருக்கும் என்று நம்பி, வாய்பொத்தி மௌனித்தது. 
     மதிக்கத்தக்க அந்தக் குரல்வளம். அன்பு, கருணை, பாசம், பந்தம், அரவணைப்பு இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய அபூர்வம்.. அது அவருக்கு மட்டுமே அமைந்த வரப்பிரசாதம். யாரேனும் ஒரு சிலர் தானே வெவ்வேறுவிதமாய், பலரும் நினைக்கும் வண்ணம் இருக்க முடியும். ஒரேவிதமாய்ப் பலரும் இருந்தால் அதனை அடையாளப்படுத்தி ரசிக்க முடியுமா?
     இங்கே இவரைத் தனித்துப் பார்த்து பெருமையுடன்   நாம் ரசித்துத்தான் ஆக வேண்டும். ரசித்தார்கள் பலரும், உருகினார்கள் மனமுவந்து. இன்றும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாகாவரம் பெற்ற குரலாய் அமைந்தது அது.
     அப்படியான வரம்பெற்ற, அபூர்வமான, எல்லோரையும் நெகிழச் செய்யும் கண்ணியமான, கௌரவமான குரலுக்குச் சொந்தக்காரர் திரு எஸ்.வி.ரங்காராவ் அவர்கள். அவருக்கு அமைந்த அதிர்ஷ்டக் குரலுக்கேற்ற ஆகிருதியும் பெற்றவர். எடுப்பான உயரம், வளமான கனம், அறிவுக் களை ததும்பும் பரந்த முகம், கம்பீரமான நடை, இந்த லட்சணங்கள் பிரதிபலிக்கும் தீர்க்கமான நடிப்பு,  இப்படி எல்லாமும் ராஜகளையாய் அமைந்த தோற்றம் அவர்.
     சொல்லும்பொழுதே திரு என்று உள்ளார்ந்த மரியாதையுடன் விளித்துத்தான், மதிப்பிட்டு முன்னே நிறுத்த வேண்டியிருக்கிறது. அப்படியான மெச்சத்தகுந்த  எல்லோரும் விரும்பும் அற்புத நடிகராய்த் திகழ்ந்த பெருமை அவருக்கு உண்டு.
     பொறுப்பு மிக்க குடும்பத் தலைவனாய், கடமையும், கண்ணியமும் மிக்க போலீஸ் அதிகாரியாய், சிறந்த தொழிலதிபராய், பெரிய செல்வந்தனாய், நீதிக்கு நியாயமாய் நிற்கும் வழக்கறிஞராய், வறுமையிற் செம்மையைப் பாதுகாக்கும் ஏழையாய், விவசாயியாய், இப்படி எத்தனையோ வகையில் இனம் பிரித்தாலும் எல்லாவற்றிலும் அந்தந்த கதா பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டி, தன்னை எவரும் மறக்க முடியாத நிலையான இடத்தில் நிறுத்திக் கொண்டவர் இவர்.
     அவரை நினைவு கூர்கையிலேயே கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் பிரமாதம்…அந்த கௌரவப் ப்ரசாதம்….இதுவே எனக்குப் போதும்….உற…உற்உற…உற்உற….உற்உறா…..என்று கடோத்கஜனாய்த்தான் நினைத்துப் பார்த்து ஆரம்பிப்பார்கள் எல்லோரும். எடுத்த எடுப்பில் அவரின் அந்த வேஷத்தைத்தான் முதலில் சொல்வார்கள். அத்தனை பொருத்தமான அந்தக் காட்சி இன்றும் கூட வயதான பெரியவர்களுக்கும், நேற்றுப் பிறந்த குழந்தைக்கும் உற்சாகமூட்டும், குதூகலமூட்டும் சிரஞ்சீவியாகவே இருந்து வருகிறது.
     நிறையப் புராணப்படங்கள், சரித்திரப்படங்கள், என்று இவர் நடித்திருந்தாலும் அவற்றிலெல்லாம் அவர் ஏற்றுக் கொண்ட வேஷமும், கதைகளும்தான் முன்னின்றன. ஆனால் இவரின் சமூகக் குடும்பக் கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாதவை. அனைத்துப் படங்களிலும்  தந்தையாகவே இவர் வந்திருந்தாலும், அந்தந்தத் திரைப்படத்திலான இவரது முத்திரை யாராலும் மறக்க முடியாதது.. அதே நடிகர்தான், அதே குரல்தான், என்றாலும் அத்திரைப்படத்தின் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு இவர் அப்படிப் பொருந்தி நின்றார் என்பது உறுதி.
     பாலா மூவிஸ் “படிக்காத மேதை” அனைவரும் அறிந்த படம். நடிகர்திலகத்தின் நடிப்பு, கதை, வசனம், காட்சிகள் என்று தமிழ் நாட்டுக் குடும்பங்கள் அனைத்தும் உருகி உருகி ரசித்த படம் இது. இப்படத்தில் கண்ணாம்பா, எஸ்.வி.ரங்காராவ் தம்பதியர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வசனங்களும், நடிப்பும் நம்மைப் பிழிந்து எடுத்துவிடும். வாழ்க்கையின் உயர்ந்த நெறிகளை உள்ளடக்கமாகக் கொண்ட ஆவணம் இது என்று சொல்லலாம்.
இப்படத்தின் ஒரு காட்சி. ஏழைக் குடும்பத்திலிருந்து வாழ வழியில்லாமல் கிடந்த ஒரு பெண் சௌகார்ஜானகி. அவரைக் கோயிலில் பார்த்து உருகும் தாயிடம் இரக்கம் கொண்டு, தன் வீட்டுக்கு மருமகளாக அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அழைத்து வருகிறார் கண்ணாம்பா.  மகன் டி.ஆர்.ராமசந்திரனுக்கு மணமுடிக்க நினைக்க,  அவர் வேறொரு பெண்ணோடு சுற்றி அலைவது தெரிந்தும், சௌகார் ஜானகியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது என்றும் சொல்லி மறுக்கிறார். , அய்யோ வழியறியாத ஒரு குடும்பத்திற்கு இப்படி வாக்குக் கொடுத்துக் கூட்டி வந்துவிட்டோமே  இப்போது என்ன செய்வது என்று தவித்து, கடைசியில் வளர்ப்புப் பிள்ளை ரங்கனுக்குத் (சிவாஜி கணேசன்) திருமணம் செய்து வைத்து மகிழ்கிறார்,
அந்த வீட்டில் ஏற்கனவே உள்ள ராவ்பகதூரின் இரண்டு மருமகள்கள் ஏழை வீட்டுப் பெண்ணான சௌகார்ஜானகியைக் கேலி செய்யவும், கடுஞ்சொல் சொல்லவும் என்று அலைக்கழிக்க,அழுது அழுது தன் குறையைக் கணவனிடம் சொல்லி தனிக்குடித்தனம் பற்றிப் பேச்செடுக்கிறார்  அவனோ புரியாது அவளைத் திட்டித் தீர்க்க, குடும்பம் நொடித்த நிலையில் தவிக்கும் ரங்காராவ் இதைக் கேட்டு விடுகிறார். அந்த அப்பாவிப் பெண் நிம்மதியாக வாழ வேண்டும் என்கிற ஆசையில் தனக்குப் பின் அந்த ஏழைப் பெண்ணின் பாடு திண்டாட்டமாகிவிடக்கூடாது என்ற முடிவில் ரங்கனை அழைத்து வீட்டை விட்டு வெளியே போ என்கிறார்…அந்தக் காட்சி…..
மாமா…கூப்டீங்களா…?
“………………………………..” – ரங்காராவ் அமைதியா இருப்பார். எப்படிச் சொல்வது என்று தயங்கியவராய்.
என்னா நான் கேட்குறேன்…நீங்கபாட்டுக்கு உலாத்திக்கிட்டு இருக்கீங்க…நான் வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன்னு  தெரியுமில்ல…ஆமா…அந்தச் சின்னப் பையன் நீங்க ஏதோ கோபமா இருக்கிறதாச் சொன்னானே…நீங்க ஏன் கோபமா இருக்கீங்க? யார் உங்கள என்னா சொன்னா?
டேய்….நா ஒண்ணு சொல்றேன்…செய்றியா….
உறாங்….இப்புடிங்கிறதுக்குள்ள செஞ்சுப்புடறேன்….சொல்லுங்க….
அப்போ….நீ உடனே வெளிய போ….
போய்ட்டு வந்திர்றேன்……. – சொல்லிவிட்டு நகர்கிறார் ரங்கன்.
டாய்….எங்கடா போற….?
வெளிய போயிட்டு வரச் சொன்னீங்களே……
நீ மட்டுமில்லடா….உன் சம்சாரம் லட்சுமியையும் அழைச்சிட்டுப் போ….
உறிஉறிஉற்உற்உற்உறி….அய்ய்ய்யோ……எனக்கு அவளத் தனியா கூட்டிட்டுப் போய் பழக்கமில்லே…வேண்டாம்…அத்தை கூட அனுப்புங்க…போகட்டும்…..
அத்தையா…..? நீயே அழைச்சிட்டுப் போடா…..டேய்…கொஞ்ச நாளைக்கு எங்கயாவது என் கண்ணுல படாம இருங்க…போங்க…..
அப்டீன்னா மாமா…என்னை வீட்டை விட்டே வெளிய போகச் சொல்றீங்களா…?
ஆமாண்டா…ஆமா….
ஆமா…நான் அவளக் கூட்டிட்டுப் போயி என்னா செய்றது, எங்க தங்கறது?
போய் கார் ஷெட்ல இரு. இல்ல ஒரு  குடிசைல இரு போ….
ஏன்,தலவிதியா? அரண்மன மாதிரி நமக்குச் சொந்தமா இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டிப்போட்டுட்டு குடிசைலயும் கார் ஷெட்லயும் போய் தங்கறதுக்கு அத்தைக்கொண்ணும் தலைல விதி எழுதியிருக்கான்னு கேக்குறேன்….
வாயை மூடுறா முட்டாள்….நான் என்ன சொல்றேன் புரியல? உன் சம்சாரத்த அழைச்சிட்டுப் போயி, நீ சம்பாரிச்சி, அவளுக்குச் சோறு போடு…போ…
ஏன், இங்க என்ன குறைச்சலு? இங்க என்ன சோத்துக்குப் பஞ்சமாஎன்ன?இங்கதான் ஒன்ணொண்ணும் மூணு வேளைக்கு ஆறு வேளை தின்னுப்புட்டு நல்லா இத்தத்தப் பெரிசுக்கு உட்கார்ந்துட்டிருக் குங்களே….அப்புறம் என்ன அப்புறம்….
அடடடா….நான் என்ன சொல்றேன்? எதுக்காகச் சொல்றேன், உன் மூளைல ஏறல?
ஏறுது…
உன் உடம்புல நல்ல ரத்தம் ஓடல….
ஓடுது……
நீ ஆம்பிளையாடா?
ஆமா, ஆம்பிளைதான்….
ஆம்பிளைதானே…..உன் சம்சாரத்த வச்சுக் காப்பாத்த முடியாது?
முடியாது……
முடியாதா? டேய்…..?
முடியாது மாமா….முடியாது மாமா…. மாமா…இப்போ நமக்குள்ள உண்மையப் பேசிக்கலாம்….நான் அவளக் கல்யாணம் பண்றப்ப, என்ன வச்சுக் காப்பாத்தற மாதிரி அவளையும் நீங்க வச்சுக் காப்பாத்தணும்னு நான் உங்ககிட்டச் சொல்லிட்டுத்தான தாலி கட்டினேன்…..நீங்களும் அதுக்குச் சம்மதிச்சீங்கல்ல….
டேய்…..டேய்…..!!!! – மேற்கொண்டு பேச முடியாமல் இறுமலில் தடுமாறுகிறார்.
மாமா….மாமா…சத்தம் போடாதீங்க….உங்களுக்கு ரத்தக் கொதிப்பு வந்துரும்…..மாமா….உங்களுக்கு விஷயம் தெரியாது மாமா….நான் வெளிய போனேன்னா எனக்கு உங்களத் தவிர யாரையும் தெரியாது மாமா…..
இனிமேலாவது தெரிஞ்சிக்கணும்னுதாண்டா வெளிய போகச் சொல்றேன்…..லட்சுமி கண்கலங்காம இருக்கணும்னுதாண்டா கத்தறேன்…போ…..போ வெளியே…….- பின்னணி இசை அதிர்ச்சியோடு ஸ்தம்பிக்கிறது.
ஒரு கணம் தியேட்டரே அமைதியாகிறது இந்தக் காட்சியில். மனம் பதறக் கிடக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரங்கன் தன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் திரும்ப வந்து கேட்கிறான்.
மாமா….நெஜம்மாத்தான் என்னை வெளிய போகச் சொல்றீங்களா…?
சத்தியமாச் சொல்றேண்டா….போடா வெளியே…போ..நிக்காதபோ…..
அதிர்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்குகிறான் ரங்கன். பிறகு சற்று நிதானித்துக் கேட்கிறான்.
ஏம்மாமா….நான் வெளிய போறது அத்தைக்கும் இஷ்டந்தானா?
டேய்…நீ இங்க இருக்கிறது யாருக்குமே இஷ்டமில்லடா…என் முகத்துல விழிக்காத…போடா…
மொகத்துலயே முழிக்கக் கூடாதா….அத்தைக்கும் இஷ்டமில்லையா…அப்ப நான் போயிட வேண்டிதான் மாமா…
மாமா….போயிட்டு வர்றே…....- அழுது கொண்டே புறப்படுகிறான் ரங்கன்.
இந்தக் காட்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தாதவர்கள் உண்டா? இன்று ஐம்பதைத்தாண்டிய பெரியவர்கள் அனைத்துப் பேரையும் நீங்கள் கேட்டுப் பாருங்கள். எவராவது இல்லை என்று சொல்லட்டும்….நான் அவரிடம் தனியாகப் பேசிக் கொள்கிறேன்….!!! அவரென்ன மனுஷனா அல்லது ஜடமா என்று…!!!
படிக்காத மேதை படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பா, கண்ணாம்பாவின் நடிப்பா, ரங்காராவின் நடிப்பா….? எது பெரிது என்று கேட்டால் நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னதுபோல நடிக்க வரும்போதே பல்கலைக்கழகமாக வந்த நடிகர்திலகத்தை விடுங்கள்…,எஸ்.வி. ரங்காராவின் நடிப்பைத்தான் இப்படத்தின் முதல் என்று சொல்வேன் நான்.
வீட்டை விட்டுப் பிரிந்து போன, ரங்கனை நினைத்து நினைத்து உருகி, அவனது தன்னலமற்ற சேவையையும், அன்பையும், ஆதரவையும் நினைந்து நினைந்து தான் பெறாமல் பெற்ற பிள்ளை அவன்,அவனை இழந்து நிற்கிறோமே  என்று தவித்து,  “எங்கிருந்தோ வந்தான்…இடைச்சாதி நான் என்றான்…ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்…..ரங்கன்……. என்ற பாடல் காட்சியோடு, மனஅவஸ்தையும் உடல் அவஸ்தையும்  விஞ்சிப் போய் அவனை நினைத்தே அவர் தன் மரணத்தை எய்தும் காட்சி கால காலத்துக்கும் மறக்க முடியாத ஒன்று.
இந்த ஒரு காட்சி மட்டுமல்ல அத் திரைப்படத்தில். பின்னர். தான் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப நேர்ந்த காரணத்தை தன் மனைவி கண்ணாம்பாவிடம் சொல்லி வருந்துவதும், சிக்கனம, சிக்கனம்னு சொல்றவங்க முதல்ல அவங்கல்ல அதைக் கடைப்பிடிச்சுக் காண்பிக்கணும் என்ற மருமகளின் குதர்க்கமான பேச்சைக் கேட்டு, தனது புகைப் பிடிக்கும் பழக்கத்தை அந்தக் கணமே விட்டுவிடுதலும், டப்பாவோடு இருந்த சிகரெட்டுகளை அப்படியே வெளியே கொட்டிவிட்டு டப்பாவைத் தூக்கி எறிவதும், கடைசி கடைசியாக கையில் புகையும் சிகரெட்டை ஆசை தீர வேதனையோடு ஒரு இழுப்பு இழுத்து வெளியே வீசி எறிவதும் முகம் முழுக்க சோகத்தையும் வேதனையையும் அவர் காண்பிக்கும் காட்சி நம்மையெல்லாம் கட்டிப் போட்டு அவர் காலடியில் விழ வைக்கும். அது என்ன நடிப்பா அல்லது உண்மையான வாழ்க்கையா? ஒரு கலைஞன் இந்த அளவுக்கா தன்னை அர்ப்பணிக்க  முடியும்?  சொந்த வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பான ஒரு மனிதன், தான் மேற்கொண்ட நடிப்புத் தொழிலில் ஒரு கதாபாத்திரத்தின் சாராம்சத்தை இந்த அளவுக்கா உள்வாங்கி தத்ரூபமாக வெளிப்படுத்த முடியும்? இந்த நடிப்புத் தொழிலின் மீதும், ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் மீதும் அவர்களுக்குத்தான் எந்த அளவுக்கு ஒரு பக்தி இருந்திருக்கிறது? எந்த அளவுக்கு ஒரு அர்ப்பணிப்பு உணர்வு…!!!
படிக்காத மேதை திரைப்படம் வெறும் படமல்ல…பாடம்…. இன்னும் நூறு ஆண்டுகள் போனாலும் நிற்கும் என்பதான அப்பழுக்கற்ற திரைப்படங்கள்தான் ஐம்பது, அறுபதுகளில் எத்தனை வந்திருக்கின்றன? காலத்தாலும் அழியாத காவியங்கள் அவை. இன்னும் எத்தனையோ திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் எஸ்.வி. ரங்காராவின் நடிப்புக்கு. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இவரைப் போன்ற நடிகர்களைப் பெற்றது தமிழ்த் திரையுலகின் பெறும் பேறு. ரசிகர்களாகிய நம்மின் பேரதிருஷ்டம் என்பதைத்தவிர வேறென்ன சொல்வது?
               --------------------------------------------------







    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...