09 ஜூன் 2019

“நிழல்” – இந்திரா பார்த்தசாரதி சிறுகதை – வாசிப்பனுபவம்“நிழல்” – இந்திரா பார்த்தசாரதி சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன்              வெளியீடு:- “எவர் பொருட்டு” – இலக்கியச் சிந்தனை 2018 ம் ஆண்டின் சிறந்த 12 சிறுகதைகள்வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.                                                                            -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------                                    வாழ்க்கைத் துணையான மனைவியைத் தனக்கான நிழலாய்க் கருதி அதில் காலம் பூராவும் இளைப்பாறும் மனநிலை கொண்டவர்கள்தான் பெரும்பாலான ஆண்கள். அந்த நிழலிலேயே தனது மீதிக் காலத்தையும் கழித்து விடுவோம் என்று ஆறுதல் கொண்டு, நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பார்கள். அவள் போகும் முன் தான் போய்விட வேண்டும் என்று நினைப்பார்கள். தன்னைத் தவிக்க விட்டு விட்டு அவள் போய்விடக் கூடாதே என்று மனதுக்குள் பயப்படுவார்கள்.
        அப்படியானவர்கள் காலத்தின் விளையாட்டில் தன் துணையை, துணைவியை இழக்க நேரிட்டால் அதன் பிறகு வெகு காலம் உயிரோடிருப்பதில்லை. அந்த நினைவிலேயே, அவள் நினைவிலேயே, அவள் பிரிவிலேயே தங்களை ஒடுக்கிக்கொண்டு, என்று தனக்கு அந்த முடிவு வரும் என்று மானசீகமாய்க் காத்திருப்பார்கள். இதில் மனைவியை இழந்த துக்கம் தாங்க முடியாமல், அவளின்றித் தன்னால் இனி வாழ முடியாது என்கிற முடிவிற்கு வந்து, தற்கொலை செய்து கொண்ட கணவன்மார்களும் உண்டு. ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் கூட அப்படியான முடிவை எய்தியிருக்கிறார்கள்.
        பெற்ற மகன், மகள், பேரன், பேத்திகள் மற்றும் வாழ்க்கை வசதிகள் இப்படி எதுவும் அதன்பின்  பெரிதாய்த் தெரிவதில்லை. வாழ்க்கையே துச்சமாய்ப் போய்விடும் தருணத்தில் மற்ற எதுதான் இந்த  மனதுக்குப் பெரிதாய்த் தோன்றும்?
        அப்படித்தான் இந்தக் கதையின் தந்தை நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனைவியை இழந்த பின்னும் அவளோடு அனுதினமும் இருந்து கொண்டிருப்பதாய்க் கற்பனை செய்து கொண்டு தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.
        கொஞ்சம் வெளியிலே போய் ஒரு சின்ன ரவுன்ட் போகலாமாப்பா…? – மகள் கேட்கிறாள். வீட்டைச் சுற்றி ஒரு ரவுன்ட் நடந்தாப் போதும்…..என்கிறாள்.
        நீ வர வேண்டாம்…நான் உன் அம்மாவோட பேசிக்கிட்டு நடக்கிறேன்….அவளோட கொஞ்சம் பேசணும் எனக்கு…..!ஷ
        அப்பா…ப்ளீஸ்….
        ஏன் கோபப்படறே…? நான் இப்ப என்ன சொல்லிட்டேன்….?
        அப்பா…ப்ளீஸ்…நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமாக் கேளுங்க…அம்மா போய் மூணு வருஷமாறது…..புரிஞ்சிதா? அம்மா போகலேன்னு ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம்? உங்களையே நீங்க ஏமைாத்திக்கிறதிலே ஏன் உங்களுக்கு இவ்வளவு சந்தோஷம்…?
        மகள் வேற்று ஜாதியில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு ஆறு மாதத்தில் டைவர்ஸூம் ஆகி வந்து நிற்பதைக் கண்டு, மனம் பதை பதைத்து, காரை எடுத்துக் கொண்டு கண் மண் தெரியாமல் ஓட்டிச் சென்று ஆக்ஸிடென்ட் பண்ணிக் கொள்கிறார் தந்தை. கால் ஒடிந்து, பிறகு தேறுகிறார். ஆனால் நினைவுகள் மட்டும் மனைவியை விட்டு அகலாமல் அப்படியே இருக்கிறது. அந்தத் தந்தையின் மனநி-லையை விஸ்தரிப்பதுான் இந்தக் கதையின் மன ஓட்டங்களாய்த் திகழ்கிறது.
        கல்யாணத்தின்போதே சொன்னேன்…வேற வேற நிறம், மதம், நாடு….பின்னாலே இதனாலே கலாசாரப் பிரச்னைகள் வரக்கூடாது…்நிதானமா யோசிச்சு முடிவு செய்னு…கேட்கலை…இப்ப என்ன ஆச்சு? ஆறு மாசத்துக்குள்ளாறவா கல்யாணம் முறியணும்? கல்யாணமாகி ரொம்ப நாளைக்கப்புறம் பொறந்த பொண்ணு…செல்லமா வளர்த்தேன்…மை..காட்….!
        மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா…? நம்ம காலம் வேறே…இப்போ வேறே…நம்ம காலத்திலே இப்போ இருக்கிற மாதிரி சமூகச் சூழ்நிலை இருந்திருந்தா எத்தனையோ கல்யாணம் அந்தக் காலத்திலேயும் முறிஞ்சிருக்கும்….நாம கூடத்தான் பிரிஞ்சிரிப்போம்…
        ஒண்ணு மட்டும் நிச்சயம்…உன்னைப் பிரிஞ்சு என்னாலே இருந்திருக்க முடியாது….
        புரியுது….சரி, தூங்குங்க…..காலையிலே பேசிக்கலாம்…
        நீயும் போய்த் தூங்கு…எங்கேயும் எழுந்து போயிடாதே…..
        இப்படியே மனைவியோடு மானசீகமாய்ப் பேசிக்கொண்டேயிருந்கிறார். காலையில் உறக்கத்திலிருந்து விழிக்கும்போதே…எங்கே காணலை….? என்று தேடுகிறார்.  பாத்ரூமில் நிழலாடினால் உள்ளே இருக்கியா…? என்று கேட்கிறார்.
        ராத்திரி ஒரு பயங்கரமான சொப்பனம் கண்டேன் தெரியுமோ….? ஏதோ ஒரு நாய் என்னை விரட்டுறமாதிரியும், எழுந்து தலை தெறிக்க ஓடுற மாதிரியும்….கால் நடக்க முடியாமப் படுத்துக்கிடக்கிற ஒருத்தனுக்கு, ஒடுற மாதிரி சொப்பனம் வந்தா எப்டியிருக்கும் நினைச்சுப்பாரு…?
        மனைவி தன்னுடன் இருப்பதாய் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன்….அவளோடு தன் சம்பாஷனையைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்.
        எனக்காக வேண்டிக்க நீ கோயிலுக்குப் போயிருக்கிறதா பொண்ணு சொன்னா….என்னாலே உனக்கு அப்படி வேண்டிக்கிட்டிருக்க முடியுமா தெரியலே…?
        ஏன் தெரியுமா? எனக்கு நம்பிக்கை இருக்கு….உங்களுக்கு இல்லே…அதுதான்….நான் இருக்கிறதா நீங்க நம்பறதும், நீங்க இருக்கிறதா நான் நம்புறதும்…எல்லாமே நம்பிக்கையைப் பொறுத்த விஷயம்தான்….நம்பிக்கைக்கும் லாஜிக்குக்கும் சம்பந்தமேயில்லை. நம்பிக்கைதான் லாஜிக்…லாஜிக்தான் நம்பிக்கை…..
        அம்மா இறந்து மூன்று வருடஙகள் ஆயிற்று என்று சொன்ன மகளிடம் அவரது விவாதம் தொடர்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் கதைகளில், நாவல்களில் அறிவு பூர்வமாய், தத்துவார்த்தமாய்த் தொடரும் இம்மாதிரி விவாதங்கள் நம்மை மிகவும் ஈர்க்கின்றன. படிப்பதற்கான ஸ்வாரஸ்யத்தைக் குறையாமல் கொண்டு செல்கின்றன. எழுதிக் கொண்டிருக்கும்போதே இம்மாதிரி விவாதங்களைக் கொண்டு வருதல் கடினம் என்றுதான் தோன்றுகிறது. நிறைய யோசித்து வைத்து, மனதிற்குள் ஒருங்கிணைத்து, பிறகுதான் கையில் பேனாவைப் பிடிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது இ.பா.வின் எழுத்து வன்மை. மகளுடனான இந்த விவாதத்தைப் பாருங்கள் :-
        எனக்கும் உங்கம்மாவுக்கும் கல்யாணமாகி எத்தனை வருஷமாகுது…சொல்லத் தெரியுமா…?-மகள் மௌனமாய் இருக்கிறாள்.
        ஐம்பத்திரெண்டு வருஷமாச்சு….எதுக்குக் கேட்குறேன் புரிஞ்சிதா?
        என்னாலே ஆறு மாசத்துக்கு மேலே என் புருஷனோட குப்பை கொட்ட முடியலே…அதானே? டிவோர்ஸ்னு கேட்டவுடனே அதிர்ச்சியடைஞ்சிட்டீங்க….ஏன் டிவோர்ஸ்னு தெரிஞ்சா  தாங்கிப்பீங்களா…?
        கேட்டுவிட்டுக் காரணத்தைச் சொல்கிறாள் மகள்.
        வில்சன் பை செக் ஷூவல்…பெண் உறவுக்கு நான்…ஆண் உறவுக்கு அவனுடைய நெருங்கிய சிநேகிதன்….இதான். கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் இதை எங்கிட்டே சொல்லியிருக்கணும். அதான் சரி…
        சொல்லியிருந்தா ஒத்துண்டிருப்பியா?
        நிச்சயம் மாட்டேன்….ஏன்னா அது எனக்குப் பிடிக்காது. அவன் இருக்கிறது தப்பா, ரைட்டாங்கிறது எனக்குப் பிரச்னையில்லை…எனக்கு அது பிடிக்காது… இப்படித் தொடரும் விவாதம்….கடைசியில் தந்தைக்கு சமாதானம் சொல்வதாய், தந்தையைப் பராமரிப்பதில், அவரைச் சமாதானப்படுத்துவதில் வந்து நிற்கிறது.
        ஆனால் அவர் தன் மனைவியோடு மானசீகமாய்ய வாழ்ந்து கொண்டேயிருக்கிறார். என் டிவோர்ஸ்னால பாதிக்கப்பட்டு நீங்க தற்கொலைக்கு முயன்றதா அம்மா எப்பயும் சொல்லலை…அப்படி தயவுசெய்து நினைக்காதீங்க…உங்க மனசாட்சிதான் உங்களுக்கு அப்படிச் சொல்லியிருக்கு…மூணு வருஷத்துக்கு முன்னாடியே போயிட்ட அம்மா, நீங்க ஆஸ்பத்திலிலேர்ந்து பொழச்சு வீட்டுக்கு வந்தவுடனேயே திரும்பவும் வந்துட்டாங்க…அப்படித்தானே….
        நம்பிக்கைதான் வாழ்க்கை…லாஜிக்கோட அழிவில்தான் நம்பிக்கையோட ஜனனம்…! – அவர் மகளின் கைகளை ஆதுரமாய்ப் பற்றிக் கொள்கிறார்.
        நம்பிக்கைகள் நிழலாய்த் தொடர்ந்து அவரை இம்சிக்கிறது.  அவர் மனைவிதான் அவரின் நிழல்.  தரமான இலக்கியப் படைப்பொன்றைப் படித்த திருப்தி நமக்கு. கல்கி தீபாவளி மலர் 2018 ல் வெளி வந்த இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இச்சிறுகதையைப் படித்து முடித்தபிறகு, அதன் தாக்கத்திலேயே நம்மை நாள் பூராவும் இருத்தி விடுகிறது என்பதுதான் உண்மை.
                                -------------------------------------------------------------------------------------
       
       

       


       

கருத்துகள் இல்லை: