சிறுகதை உஷாதீபன், “முரண் நகை”
கொல்லைப்புறத்தில் அமர்ந்திருந்தான் பஞ்சவடி. மரங்களை வேடிக்கை பார்ப்பதில்
அவனுக்குப் பொழுது போனது. அடிக்கும் வெயிலுக்கு ஒரே சமயத்தில் மரத்தில்
உள்ள எல்லா இலைகளும் பழுத்திருந்தன.
அவற்றின் மஞ்சள் நிறம் அழகாய்
இருப்பதாய் தோன்றியது. தானும் இன்னும் கொஞ்ச
நாளில் அப்படிப் பழுத்து உதிர்ந்து விடுவோமோ
என்று நினைத்துக் கொண்டான். உடம்பு அந்தளவுக்குத் தளர்ந்து
போவதாய் உணர்ந்தான்.
நேர்மையாய் இருந்தால் அப்படித்தான் என்று சொல்லிக் கொண்டான்.
அது அவனே தன்னைத் திட்டிக்
கொள்வதுபோல் இருந்தது. அப்டித்தாண்டா இருப்பேன்…என்னால பன்னி மாதிரிப்
பீ திங்க முடியாதுடா…என்று பல்லைக் கடித்துக்
கொண்டு முனகினான். உள்ளே படுத்துக் கிடந்த
கோகிலா தலையை உயர்த்திப் பார்த்தது
போல் இருந்தது.
“நீங்களே
ஒரு பியூனு…உங்களுக்கெதுக்கு இதெல்லாம்…” அவள் அதைத்தான் சொல்வாள்.
ரொம்ப காலமாய்;ச் சொல்லிக்
கொண்டிருக்கிறாள். அவ கிடக்கா…பஞ்சவடி காலால் அவள்
வார்த்தைகளை எட்டி உதைத்தான். அது
எங்கோ பறந்து உருத் தெரியாமல்
போனது.
எதுவும் பேசினன்னா உன்னையும்
இப்டித்தான்….சொல்லிக்
கொண்டே வாயில் ஒரு பீடியைச்
செருகினான். விடும் புகை வீட்டுக்குள்
போனது. புகை பிடிக்காமல் அவள்
இருமினாள். அவனின் வார்த்தைகள் சுருள்
சுருளாய்ச் சென்று அவள் கழுத்தைத்
திருகின. லொக்கு லொக்கென்று கழுத்தைப்
பிடித்துக் கொண்டு அவள் இருமுவது
இவனுக்கு அலுப்பாய் இருந்தது. அந்தப் பக்கமாய்ப் போய்
கெடவேண்டீ…அவள் உருண்டு மறைவிற்குப்
போய் தலையணையை இழுத்துக் கொண்டாள்.
பஞ்சவடி காம்பவுன்ட் சுவற்றில்
வைத்த சோற்றைப் பார்த்தான். அதை அணில் தின்று
கொண்டிருந்தது. பருக்கை பருக்கையாய் கையில்
எடுத்துக் கொண்டு இவனைப் பார்த்தது.
உனக்குத்தான் வெச்சிருக்கேன்…சும்மா பயப்பிடாமச் சாப்பிடு…நல்ல காசுல வாங்கினதுதான் இது.
லஞ்சக் காசில்ல…என்றான்.
அணில் சிரித்தது. இத்தன
நா நான் எதுவும் கேட்டதேயில்லையே.
இன்னைக்கு நீயா எதுக்குச் சொல்ற?
என்றது அது.
“நீ சந்தேகப்பட்ட மாதிரி இருந்திச்சு…அதான் சொன்னன்…”- பஞ்சவடி பதிலிறுத்தான்.
“அதெல்லாம்
எனக்கு வேணாம். உம்மேல எனக்கு
நம்பிக்க உண்டு…”
– சொல்லிவிட்டு பருக்கை விடாமல் அணில்
சாப்பிட்டது. பஞ்சவடி திருப்தியானான்.
அன்று ஆபீசுக்கு மட்டம் போட
நினைத்தான் பஞ்சவடி. போனா அந்தக் காண்ட்ராக்டர்
வருவான். பேரம் பேசுவான். அவனுக்கும்
ஆபீசுக்கும் நடுவுல நா அலையணும்.
எனக்கென்ன தலையெழுத்தா? எவனோ பேசிட்டுப் போறானுக…என்னமோ
பண்ணிட்டுப் போறானுக …நானா முடி போடணும்
இவனுகளுக்குள்ள? என்ன தலையெழுத்துடா இது?
இவங்க பண்ற பாவத்துக்கு நாம
துண போக வேண்டிர்க்கு. என்னை
ஆள விடுங்கடான்னாலும் கேட்க மாட்டேங்குறானுங்க…ஏற்கனவே இருந்த எடத்துலயும்
இந்த டார்ச்சர்தான்னுட்டு இங்க வந்தா இங்க
தலைய விரிச்சுப் போட்டுக்கிட்டு ஆடுது. எம்புட்டு ஆச
அந்தச் சொட்டத் தலையனுக்கு? இவனெல்லாம்
ஆபீசராம்? ஒனக்கு ப்ரோக்கர் வேணும்னா
ஒரு க்ளார்க்க வச்சிக்க? என்னை ஏண்டா கூப்பிடுற?
நானென்ன மாமாப் பயலா? இப்டி
நொச்சுப் பண்ணிக்கிட்டிருந்தீன்னா அப்றம் காப்பி, டீ
வாங்குறதக்; கூடச் செய்ய மாட்டன்
பார்த்துக்க. போடா மசிருன்னுடுவேன் ஆமா…!
எரிச்சல் வந்தது பஞ்சவடிக்கு. ஏன்
நாம இப்டி இருக்கோம்னு நினைக்க
ஆரம்பிச்சான். அப்பாட்டருந்து பழகிக்கிட்டதுதான்னு தெரிஞ்சிச்சு. அவரு மட்டும் மண்டையப்
போடலன்னா இந்த வேலயும் கிடைச்சிருக்காது.
என்னத்தவோ எட்டாங்கிளாஸ் படிச்சதுக்கு இந்த வேலையப் போட்டுத்
தந்தானுங்க…சர்தான்
பேசாமக் கெடப்போம்னா இருக்க விடுறாஞ்ஞளா? ஏதோ
வேலையைப் பார்த்தோம், சம்பளத்த வாங்கினோம்னு இருக்காம அத்தனை தேவடியாத் தனத்துக்கும்ல
இழுக்குறாங்ஞ...நானா ஆளு அதுக்கு?
பஞ்சவடி வேலைக்குப் போய்
பத்து வருடம்தான் ஆகிறது. அவன் தந்தை
ஒரு குடிகாரர். திடீரென்று ஒரு நாள் மாரடைப்பில்
மரித்துக் போனார். அவரிடம் உள்ள
கெட்ட பழக்கங்கள் எதுவும் தன்னிடம் தலை
காட்டக் கூடாது என்று உறுதி
எடுத்துக் கொண்டுதான் அவன் அந்த வேலைக்கே
போனான். அதுக்குக் கோகிலாதான் காரணம். ஆனால் அவளே
இப்பொழுதெல்லாம் சமயா சமயங்களில் நிறையப்
பிதற்றுகிறாள். உங்க ஆபீசுல காண்டுராக்டருகளெல்லாம்
வருவாகளாமுல்லய்யா…அவுகளெல்லாத்தையும்
பழகி வச்சிக்கிட்டேன்னா நல்லா துட்டுத் தருவாகளாமுல்ல…நீ பியூனுதான…வாங்கினா யாரு என்ன சொல்லப்
போறாக…ஏன்ய்யா கெடந்து காயுற…என்னையும்
காய வக்கிற…?
அவள் பேச்சு இவனுக்குப் பிடிக்கவில்லை.
இவளுக்கு ஏன் இப்படிப் புத்தி
போகிறது என்று நினைத்தான.; பியூன்
வேலைக்கு வருவதற்கு முன்பு சித்தாள் வேலைக்குப்
போனான.; ஒரு நாளைக்கு நூறு
ரூபாய் கிடைத்தது. தினமும் காலையில் தூக்குச்சட்டியுடன்
பிராவிடன்ட் ஆபீஸ் பிளாட்பாரத் திட்டியில்
போய் அமர்ந்து விடுவான். அங்கேதான் எல்லாரும் கூடுவார்கள். அங்குதான் அஞ்சலையை சந்தித்தான். அவள் குணம் இவனுக்குப்
பிடித்திருந்தது. வேலை நேரங்களில் அவள்
ரொம்பவும் இவனைத் தொந்தரவு செய்தாள்.
என்ன காரணத்தால் தன்னிடம் இப்படி மோகிக்கிறாள் என்று
இவனுக்குப் புரியவில்லை. அவளின் சிரிப்பும் அங்க
அசைவுகளும் குனிந்து நிமிரும்போது அவளின் இடுப்பும், பின்புறப்
பிருஷ்டமும் இவனைப் பாடாய்ப் படுத்தி
எடுத்தன. அவளே தன்னை இத்தனை
விரும்பும்போது தான் ஏன் ஒதுங்க
வேண்டும் என்று நினைத்தான் பஞ்சவடி.
கோகிலாவுக்குத் தெரிந்தால் வருத்தப் படுவாளோ என்று தோன்றியது.
பயமாயும் இருந்தது. நிச்சயம் வீட்டில் கலகம் வெடிக்கும். என்னமாதிரி
யோக்யமானவன் பயப்படத்தான செய்யணும்…அதான் நியாயம்! தன்னைக்
கட்டுப்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொண்டான். ஆனாலும் மனசு ரெண்டு
பக்கமும் அடித்துக் கொள்ளத்தான் செய்தது.
ஒரு நாள் சற்றும்
எதிர்பாராமல் அஞ்சலை வீட்டுக்கு வந்த
அன்றைக்கு கோகிலா அலட்டிக் கொள்ளவேயில்லையே
என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
ஆனால் ஒன்று அதற்குப் பிறகுதான்
அவளின் பேச்சே மாறிற்று என்பது
மட்டும் பஞ்சவடிக்கு ஞாபகம் வந்தது. உன் ஆபீசுல நிறையக்
கெடைக்குமாம்ல என்று அடிக்கடி அவள்
அரிப்பது இவனுக்குப் பிடிக்கவில்லை. வாங்கிக் கொடுத்தா அஞ்சல கூடச் சுத்துறதக்
கண்டுக்க மாட்டா போலிருக்கு…படுபாவிக்குத் துட்டுத்தான் குறியா இருக்கும் போல...குறும்பாக நினைத்துக் கொண்டான்.
கோகிலாவின் அரிப்பும், அஞ்சலையின் அழகும், அவனை ஒவ்வொரு
வகையில் தொந்தரவு செய்தன. அஞ்சலையாவது பலன்
எதுவும் எதிர்பார்த்த மாதிரித் தெரியவில்லை. ஆனால் கோகிலா தினமும்
பணம் பணம் என்று பறக்கிறாளே?
அவளை எப்படித் தேற்றுவது? கொடுக்கிற காசை வச்சிக்கிட்டு கம்முனு
குடும்பம் நடத்துறீ! மூணு வேளச் சோத்துக்குக்
கெடைக்குறப்பவே இப்டி இருக்க! இல்லாமப்
போயிட்டா எவனோடயாச்சும் ஓடிப் போயிறுவ போல்ருக்கு…என்றான்
ஒரு நாள். அதற்கு அவள்
ஒன்றும் பதில் சொல்லவில்லை. பேசாமப்
போறாளே தடிச்சி! நா சொன்னதுல சம்மதம்தான்
போல்ருக்கு? என்று நினைத்து வேதனைப்
பட்டான் பஞ்சவடி. அவனுக்கு
வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. ஆபீஸ் போகவும் பிடிக்கவில்லை.
ஒரு கட்டு பீடியில்
பாதி காலியாகியிருந்தது. புகையாய் விட்டு விட்டு அவனுக்கே
இருமல் வர ஆரம்பித்திருந்தது. மரத்திலிருந்த
அணில் திரும்பத் திரும்ப அவன் சோறு
வைத்திருந்த இடத்திற்கு வந்து வந்து போனது.
வேறு உணவு எதுவும் அதற்குக்
கிடைக்கவில்லை என்று நினைத்தான். தேய்க்கக்
கிடந்த பாத்திரத்தில் சில பருக்கைகள் ஒட்டிக்
கொண்டிருந்தன. அவற்றை வழித்து எடுத்தான்.
பக்கத்தில் குழம்புச் சட்டியில் இருந்த காய்த் துகள்களைக்
கலக்கி வழி;த்தான். காம்பவுன்ட்
சுவரில் போய் வைத்தான். இப்போது
அணில் அதை ஒத்திக் கொண்டிருந்தது.
குழம்பு ருசியா இருக்கா, தின்னு
தின்னு என்றான் இவன். அவனை
இங்க வா என்று அழைத்தது
அணில். கையிலிருந்த பீடியை விட்டெறிந்தான் பஞ்சவடி.
வாயைக் கொப்பளித்தான். அணில்கிட்டப் போகைல வாய் நாறக்
கூடாது என்று நினைத்தான். என்
முதுகில ஏறிக்கோ உன்ன சுத்திக்
காண்பிக்கிறேன் என்றது அணில். அய்யோ…அந்தக்
கோடு அழிஞ்சிடுச்சின்னா? என்றான் இவன். அது
அழியாது, அது சாமி போட்ட
கோடு…அதுதான் எனக்கு பலம்
என்றது அணில். அதானே உனக்கு
அழகு. அது மேல ஒக்காந்து
நான் அதை மறைக்கிறது பாவமில்லையா?
சாமி போட்டது மேல கால
வைக்கலாமா? மரியாத இல்லையே? என்றான்
பஞ்சவடி. அப்படியெல்லாம் நினைக்காத என்ற அணில் அவனை
அதன் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டது.
பஞ்சவடியை
ஒரு பெரிய அரண்மனையில் கொண்டு
விட்டது அணில். ரெண்டு நாளைக்கு
இங்கேயே இரு. பிறகு வந்து
கூட்டிப் போகிறேன் என்று போய்விட்டது. யேய்!
யேய்! என்று இவன் அழைத்தது
அதன் காதில் விழவேயில்லை. அரண்மனையைப்
சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான் பஞ்சவடி.
தர்பார் மண்டபம், நாட்டிய அரங்கு, என்று
ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தான். அரசர்
வரிசையாக நிற்கும் ஜனங்களுக்கு பொற்காசுகளை அள்ளிக் கொடுப்பது போல்
ஒரு புகைப்படம் இருந்தது அங்கே. திடீரென்று இவனுக்கு
பகீர் என்றது. அந்த அரசர்
தன்னைப் போலவே இருப்பதை அப்போதுதான்
உணர்ந்தான் பஞ்சவடி. கொஞ்சம் கொஞ்சமாக தான்
அந்தப் புகைப்படத்துக்குள் நுழைவதாக எண்ணினான்.
“மந்திரியாரே…இந்த வெள்ளிக் காசுகளெல்லாம் எப்படி வந்தது?”
“மக்களிடமிருந்து
வந்த வரிப் பணம்தான் மன்னா…” மந்திரி
சொன்னார்.
“வரிப் பணத்தை இப்படி வெறுமே
அள்ளி வீசுவதால் என்ன பயன்? அவர்களை
உழைக்க வைத்து அதற்குக் கூலியாகத்
தாராளமாக வழங்கலாமே?”
“உழைத்து
உற்பத்தியைப் பெருக்குவதனால்தான் இந்த வரிப் பணம்
வருகிறது மன்னா…இது தாங்கள் அறியாததா?”
“அப்படியானால்
மேலும் நல்ல நலத்திட்டங்களுக்கு இதைப்
பயன்படுத்துங்கள்…அதுதானே
சரி…”
“வருடத்திற்கு
ஒரு முறை இவ்வாறு செய்வது
நம் அரண்மனை வழக்கம்…இன்று ராணியாரின் பிறந்தநாள்
என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?”
“ராணியாரா?
அப்படியென்றால் அவளைக் கொண்டு கொடுக்க
வைப்பதுதானே முறை…அப்பொழுதுதானே அவளின் பெருமையை மக்கள்
உணர்வார்கள்? ராணியை முன்னிறுத்தாமல் எப்படி
இதை நடத்துகிறீர்கள்? அழைத்து வாருங்கள் ராணியாரை.
ராணி வருவதைப் பார்த்து
அதிர்ந்தான் பஞ்சவடி. கோகிலா நீயா?
“ஆமாம்,
என்னை மறந்து விட்டதா உங்களுக்கு?”
“உன்னை மறக்க முடியுமா? நான்
கட்டியவளாயிற்றே நீ?
“அப்படியென்றால்
அவள்?”
“யாரைக்
கேட்கிறாய்?”
“அதுதான்
அன்றொரு நாள் வீட்டுக்கு வந்தாளே…அவள்தான்”
“ஓ! அவளைச் சொல்கிறாயா? அஞ்சலைதானே…அவள் என்னைச் சுற்றியவள்?”
“என்னது,
சுற்றியவளா?”
“ஆமாம்,
அவள்தானே என்னைச் சுற்றிச் சுற்றி
வந்தாள்…”
“மந்திரியாரே…போய் அவளை அழைத்து வாருங்கள்…”
“அவளெதற்கு
இந்நேரத்தில்…?”
“அவள்தானே
உங்களைச் சந்தோஷப் படுத்துகிறாள்…அதனால்தான்…”
“அஞ்சலையின்
நாட்டியம் ஆரம்பமாயிற்று. அவளின் ஒவ்வொரு அசைவும்
பஞ்சவடியைக் கிறங்கடித்தன. அவளின் பாவங்கள் இவனை
வா….
வா..என்றழைத்தன. அருகில் பாவமாய் அமர்ந்திருக்கும்
கோகிலாவைப் பார்த்தான். அவளும் அழகுதான். ஆனால்
வசதி போதாது. நல்ல வசதி
வாய்ப்பு இருந்தால் அஞ்சலையை மிஞ்சி விடுவாள் அவள்.
ஆனாலும் வெறும்
சித்தாள் வேலை பார்க்கும் அஞ்சலைக்கு
இத்தனை அழகு ஆகாது என்று
பொறாமைப் பட்டது மனம். காசா,
பணமா? அவளோ விரும்புகிறாள். அவளையும்
கட்டிக் கொண்டால் என்ன? கூடாது. பாவம்
கோகிலா…அவள் முகத்தில் கண்ணீரைக்
காணக் கூடாது. தானே சதம்
என்று வந்து விட்டவள். இவள்
எங்கிருந்து முளைத்தாளோ? வேலைக்குப் போன இடத்தில் என்னையே
நோங்குகிறாள். நான் வேண்டாம் என்றாலும்
விடமாட்டேன் என்கிறாள். கிடந்து விட்டுப் போகிறாள்.
ஒருவன் இரண்டு சம்சாரம் வைத்துக்
கொள்ளக் கூடாதா? வசதி வாய்ப்போடு
இருந்தால் என்ன பாதிக்கப் போகிறது?
எல்லோரும் சந்தோஷமாக் இருந்து விட்டுப் போகட்டுமே?
கோகிலா விட மாட்டாள். அவளுக்குத்
துரோகம் செய்யக் கூடாது. கெட்டுப்
போக இருந்த தன்னை மீட்டவள்
அவள்தான். வேலை கிடைத்த புதிதில்
அவள் மட்டும் தன்னிடம் வந்து
சேராவிட்டால் தான்
என்றோ சீரழிந்து சின்னாபின்னமாகிப் போயிருப்போம்… அவள்தான் தனக்கு நல்லது சொல்லிக்
கொடுத்தாள். ஆனால் அவளேதான் இன்று
அலுத்துச் சலித்துக் கொள்கிறாள். அவளால்தானே ஆபீஸ் போகாமல் உழன்று
கொண்டிருக்கிறோம்.
அவள் தரும் நெருக்கடியைப்
பார்த்தால் தானும் போய் கை
நீட்டி விட்டால்? அப்புறம் அப்பா
மாதிரி குடித்துக் குட்டிச் சுவராய்ப் போய் கடைசியில் உயிரை
விட வேண்டியதுதான். பணம் எல்லாக் கெட்ட
பழக்கங்களையும் கொண்டு வந்து விடுமே!.
வாங்கி விடுவோமோ? வாங்கி விட்டோமோ? புரியவில்லை.
குழப்பமாயிருந்தது.
“அது கிடக்கட்டும்…அஞ்சலை, உனக்கு அன்றொரு
நாள் காலில் கடப்பாரை விழுந்ததே!
அந்த வீக்கம் தணிந்து விட்டதா?
இந்த ஆட்டம் போடுகிறாய்?
எங்கே காலைக் காண்பி….பார்க்கிறேன்…ஓடிப் போய் அஞ்சலையின்
இடது கால் சேலை நுனியைத்
தூக்கினான் பஞ்சவடி. காயம் பட்டாலும் அந்தக்
கால்தான் என்ன அழகு? கொடுத்து
வைத்த கடப்பாரை! வீக்கம்
குறைந்திருந்த காலில் விரவியிருந்த புண்
ஆறாமல் அப்படியே
இருந்தது. அதோடுதான் தன்னை மகிழ்விக்க இப்படி
ஆடுகிறாளா?
“மந்திரியாரே
இங்கே வாருங்கள்….”
– மந்திரி பதற்றத்தோடு அருகில் வந்தார். அவர்
காதில் சொன்னான் பஞ்சவடி.
“இவளை என் அந்தரங்க அறைக்கு
அழைத்துச் சென்று சகல வசதிகளோடு
தங்கச் செய்யுங்கள்…”
“கோகிலா…வா நாம் போவோம்…மந்திரியாரே, போதும் இன்றைய தருமம்…இனி அடுத்த ஆண்டு பார்ப்போம்…” – கோகிலாவின்
தோள்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக நடக்கலானான் பஞ்சவடி.
“யோவ்…விடுய்யா…விடுய்யா….என்னா
இது பட்டப் பகல்ல….அடச் சீ!…பீடி
நாத்தமும் நீயும்!…ராத்திரிக் குடிச்சது
இன்னமும் போதை எறங்கலையாக்கும்…! அதான் திண்ணைல விழுந்து
கெடந்தியா? ஆரம்பிச்சிட்டியா
நீயும்…உன்ன சும்மா அரிச்சு
அரிச்சு நாந்தான்யா கெடுத்துப்புட்டேன்….வாங்கிருந்தேன்னா
நேரா எங்கிட்ட வந்து கொடுக்க வேண்டிதானய்யா…உங்கப்பன
மாதிரி நேரா அங்க போயிட்ட
போல்ருக்கு…இனி உருப்டமாதிரித்தான்…என்னமோ
கண்டமேனிக்கு அர்த்தம் பொருத்தமில்லாம உளர்றியேன்னு
பார்த்தேன்….வாங்காதவன்
வாங்குனா இப்டித்தான்யா…உன்னப் பத்திக் கவலப்
படாம நாம்பாட்டுக்கு நிம்மதியாயிருந்தேன்…ஏதோ சம்பளத்த ஒழுங்காக் கொடுக்கிற புருஷனாச்சேன்னு…இனிமெ தெனமும் உன்னைக் கவனிக்கணும்…இல்லன்னா
நா நிர்க்கதியாயிடுவன்…காசு இல்லன்னாலும் கஷ்டம்… வந்தாலும் கஷ்டம்…இத்தன நாளா நல்லவனா
இருந்த நீ…யாரு கண்ணு பட்டுச்சோ…இல்ல எந்தச் சிறுக்கி மகளுக்காகவோ?யாரச் சொல்லி என்ன
செய்ய? நாந்தேன் உன்னக் கெடுத்துப்புட்டேன்…”சொல்லியவாறே தரதரவென்று இழுத்து வந்து கொல்லைப்புறக்
குத்துக்கல்லில் உட்கார்த்தி; ஒரு வாளி நிறையத்
தண்ணீரை மொண்டு சுமந்து அவன்
தலையில் மடமடவென்று ஊற்றினாள் கோகிலா!!
-----------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக