“தொலைந்து போனவன்” – வாஸந்தி சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன்
வெளியீடு:- இலக்கியச் சிந்தனை 2018ம் ஆண்டின் 12 சிறந்த சிறுகதைகள்
தலைப்பு:- “எவர் பொருட்டு” – வானதி பதிப்பகம், 23,தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை-600 017.
நா நம்ப மாட்டேன்…போலீஸ் என்ன வேணா சொல்லட்டும்…நக்சல்னா
யாரு…?
போராளிங்க.
அமைப்பை எதிர்க்கிறவங்க…
அம்மா நிதானமாகச் சொன்னாள் – அப்ப நானும் நக்சல்காரிதான்
இன்னிலேர்ந்து…
-இப்படித்தான் முடிகிறது
இக்கதை. தொலைந்து போனவன் கிடைக்கும்போது பிணமாய்க் கிடைத்தால் ஒரு தாயின் மனது என்ன
பாடு படும்….?
அதுவும் அவப்பெயரோடு …..!
போலீஸ் தினமும் ஏதானும் சொல்லி
மிரட்டுது…நமக்கு இன்னொரு மகன் இருக்கிறதைச் சொல்லி எச்சரிக்குது…யாரு கண்டா…நமக்குத்
தெரியாம அவன் யார் கூட சிநேகம் வச்சிருந்தானோ? சாகறதுக்கு முந்தியே தொலைஞ்சு போயிட்டான்…
தந்தையின் பயம் நிறைந்த வார்த்தைகள்
தாயை நிதானமில்லாமல் அடிக்கிறது. எரியும் அந்த வயிறு கேட்கும் கேள்விகள் ….நக்சல்னா
யாரு…..?
என் மகன்தான்னு கையெழுத்துப் போட்டு பாடியை எடுத்திட்டுப் போகலாம். அப்புறம்
சார் இதை வெளியிலே சொல்ல வேண்டாம். புரியுதில்லே…விஷயம் நாசூக்கானது. உங்களுக்குத்தான்
பிரச்சினை வரும்….
மறைமுகமான மிரட்டல். தந்தை அரண்டு
விடுகிறார். அப்பா நம்பி விடுவாரோ…அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. ஊருக்குச் செல்லும்
வழி முழுவதும் அப்பாவும் அண்ணனும் பேசவேயில்லை.
எதுக்குப்பா தற்கொலை செய்துக்கணும்?
– தம்பியைப்பற்றி அண்ணன்.
எனக்கு ஒண்ணும் புரியல்லே…அவனுக்கு
நக்சலைட்காரங்களோட நட்பு இருந்ததாடா…?
தெரியாதுப்பா….
ஊருக்கு பாடியைக் கொண்டு இறக்குகிறார்கள். தாய் கட்டிக்கொண்டு குலுங்கிக்
குலுங்கி அழுகிறாள். என்ன சொன்னாங்க…? சாவுக்கு என்ன காரணம்னு சொன்னாங்க…?
தற்கொலைங்கறாங்க……
தற்கொலையா….என்ன அபத்தம் இது? எங்கிட்ட நல்லாத்தானே பேசினான்…பரீட்சைக்குப்
படிச்சிட்டிருக்கேன்ம்மா…ரூமுக்குள்ளதான பாதுகாப்பா இருக்கேன்னான்…நீ கவலைப்படாதேன்னு
வேறே சொன்னானே….இது ஏதோ சூது… - கூப்பாடு போடுகிறாள் தாய்.
வேறே என்னவோ இருக்கலாம்னு போலீஸ்காரங்க சொல்றாங்க…. – அப்பா
காதுக்கருகில் நெருங்கி கிசு கிசுக்கிறார்.
நா நம்பமாட்டேன்…. – அம்மா தன் கணவரை வெறித்துப் பார்க்கிறாள். என் குழந்தையைத்
தொலைச்சுட்டேன்…. கதறுகிறாள்.
யார் கேட்பது….? கல்லூரியில் நடந்த சம்பவம். திடீரென்று கல்லூரிக்குள்
புகுந்த போலீஸ் கூட்டம் ரூம் ரூமாகப் புகுந்து மாணவர்களைத் தாக்குகிறது. ரெண்டு பேர்
ஓடி வந்து ஓடு…ஓடு…இங்க இருக்காதே….என்று அவனையும் விரட்டுகிறது. தலைதெறிக்கத் தப்பித்து
ஓடுபவர்கள் இஷ்டத்துக்குச் சிதறிப் போகிறார்கள். கல்லூரி வளாக நீச்சல் குளத்தில் இரண்டு
மூன்று பேர் குதிக்கிறார்கள். தண்ணீருக்குள் மூழ்கித் தப்பிக்கலாம்….. நீச்சல் தெரியாத இவனும்…அவர்களோடு சேர்ந்து பயத்தில்
குதித்து விடுகிறான். …நீச்சல் குளம் இவ்வளவு ஆழமா?
நல்லா படி கண்ணு….படிப்புதான் நமக்கு ஆயுதம்…ஞாபகம் வச்சுக்க….
படிச்சிட்டுத்தாம்மா இருக்கேன்…உனக்கென்ன இவ்வளவு சந்தேகம்…?
என்னவோ காதில விழுகுது கண்ணு…உங்க காலேஜ்ல மாணவர் கலாட்டான்னு…போலீஸ்
நிக்குதுன்னு டி.வி.ல வருது ராஜா…..
அவன் சிரிக்கிறான்.
நா அதுல இல்லே. கவலைப்படாதே…நா ரூமுக்குள்ளே உட்கார்ந்திருக்கேன்…பாதுகாப்பா….போதுமா…?
அறைக் கதவு தடதடவென்று.
அக்கம் பக்கத்து அறை மாணவர் இருவர் நின்றிருக்கிறார்கள். ஓடு…ஓடு…உறாஸ்டலுக்குள்ளே
போலீஸ் வந்து எல்லாரையும் அடிக்குது…அவனையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.
எல்லாம் முடிந்தது. தன்னால் இவர்களுக்கு எத்தனை பிரச்னை?
போலீஸ் துரத்தினதால்தானே குளத்தில் விழுந்தேன்….எனக்கு நீச்சல் தெரியாது…சாரி…..(இறந்தவனே
பார்வையாளனாக)
யப்பா…பொணம் என்னா கனம் கனக்குது….மூழ்கி இறந்த கேஸ்…தடியடி
அடையாளம் எது
வுமில்லை….தற்கொலைன்னு சொல்லணும்…புரிஞ்சிதா..?
வுமில்லை….தற்கொலைன்னு சொல்லணும்…புரிஞ்சிதா..?
இதப் பார்க்கிறதுக்காகவாய்யா உன்னை அவ்வளவு தூரத்துக்குப்
படிக்க அனுப்பிச்சேன்… அண்ணனுடன் வந்த அப்பா கதறுகிறார்.
உங்க மகனுக்கு மன
வருத்தம், டெப்ரஷன் ஏதாச்சும் இருந்ததா? நக்சலைட்டோட தொடர்பு இருந்ததா? அவங்களுக்குள்ளேயே
கூட சண்டை நடக்குது…அவங்க வேலையாக்கூட இருக்கலாம்….
இருந்ததா எனக்குத் தெரியல்லே…
பல அப்பா அம்மாக்களுக்கு எதுவுமே தெரியறதில்லே…
என் மகன்தான்னு கையெழுத்துப் போட்டுட்டு பாடியை வாங்கிட்டுப்
போங்க….
நா நம்ப மாட்டேன். போலீஸ் என்ன வேணா சொல்லட்டும்…நக்சல்னா யாரு…?
போராளிங்க…..அமைப்பை எதிர்க்கிறவங்க…..
அப்ப நானும் நக்சல்காரிதான் இன்னைலருந்து…..
இவ்வளவுதான் கதை….
அந்தத் தாயின் மனம் குமுறிக்கொண்டேயிருக்கிறது. நாம் செய்திகளாய்
கேள்விப்பட்ட விஷயங்களை உள்ளடக்கி, புனைவாய் ”தொலைந்து போனவன்” என்ற தலைப்பிலான வாஸந்தியின்
இந்தக் கதை நம் மனதை மிகவும் வேதனையுறச் செய்கிறது. இத்தொகுப்பிற்கு மதிப்புரை எழுதியுள்ள திரு மு.இராமநாதன் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்……
இதையொத்த சம்பவம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அப்பாவும்
அஞ்சினார். இறந்தவன் தனது மகனே இல்லை என்றார். அஞ்சாத அப்பாக்களும் இருந்தார்கள். நெருக்கடி
நிலையின்போது கோழிக்கோடு மாணவன் ராஜனை நக்சலைட்
என்கிற சந்தேகத்தில் போலீஸ் பிடித்துக் கொண்டு போனது. பிறகு அவன் தொலைந்து போனான்.
ராஜனின் தந்தை ஈச்சரவாரியார் கதையில் வருகிற அம்மாவைப் போல்
கேள்வி கேட்டார். அதோடு நிற்காமல் வழக்குப் போட்டார். சாத்தியமான எல்லாக் கதவுகளையும்
தட்டினார். சமூக வலைத்தளங்களும் தொலைக்காட்சிகளும் இல்லாத காலம் அது. எனில் அச்சு ஊடகங்கள்
ராஜன் தொலைந்து போன கதையை எழுதின. திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கு விருதுகளும்
கிடைத்தன.
வாரியரே எழுதிய ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் என்ற
புத்தகத்திற்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருந்தது.
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களை எளிய மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொலைந்து
போனவன் போனதுதான்.
இந்த வரலாற்றையெல்லாம் வாஸந்தியின் இந்தக் கதை கிளறி விடுகிறது.
அமுசுரபி நவம்பர் 2018 ல் வெளிவந்த வாஸந்தியின் இப்படைப்பு
இலக்கியச் சிந்தனை 2018 ம் ஆண்டின் நவம்பர் மாத சிறந்த சிறுகதையாகத் தேந்தெடுக்கப்பட்டுள்ளது
மிகுந்த பாராட்டுக்குரியது. படித்து முடித்ததிலிருந்து மனம் நாள் பூராவும் அதைச் சுற்றியே
வட்டமிடுகிறது. இது மாதிரி இன்னும் எத்தனை நடந்திருக்கிறதோ…!
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக