04 ஜூன் 2019

முருங்கை மர மோகினி சிறுகதை-கு.அழகிரிசாமி - வாசிப்பனுபவம் -


                                         முருங்கை மர மோகினி          சிறுகதை-கு.அழகிரிசாமி        -                                                             வாசிப்பனுபவம் -                                        வெளியீடு:- கு.அழகிரிசாமி கதைகள்> சாகித்ய அகாதெமி>புதுடெல்லி                                   


                இக் கதையை எழுதிய பின்னால்தான் எனக்கு நன்றாகக் கதை எழுத வந்துவிட்டது என்று பலரும் சொல்ல ஆரம்பித்தார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார் திரு.கு.அழகிரிசாமி. தெரிந்தோ தெரியாமலோ பலரும் அப்படிச் சொல்லியிருந்தாலும், இந்தக் கதையைப் பாராட்டியவகையில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி வரத்தான் செய்தது என்றும் சொல்லி  திருப்தியடைகிறார்.
                வாழ்க்கையில் நல்லவர்களுக்குத்தான் அதிகச் சோதனை வரும். அவர்கள் தங்கள் நேர்மையை விட்டொழித்து, தவறு செய்வதற்கு என்னென்ன கேடுகள் வருமோ அத்தனையும் வந்து ஒருவனை ஆட்டிப் படைக்கும். எந்தவொரு துன்பத்திற்கும் மனம் கலங்காமலும், சோர்ந்து போகாமலும், மன திடத்துடன் கஷ்டங்களை எதிர்கொண்டு, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்கிற தாரக மந்திரத்தோடு வாழ்ந்து கழிப்பவர்கள் ஏராளம்.
                என்னதான் ஆனாலும் சராசரி மனிதனுக்கு அந்தத் திடம் காலத்துக்கும் கூட வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவனை அடித்து வீழ்த்த ஏராளமான சோதனைகள் ஏற்பட்டுப் போய், தன் கஷ்டங்களிலிருந்து தப்புவதற்காக, விடுபடுவதற்காக, தவறு என்னும் படுகுழியில் மனிதன் வீழ்ந்து விடுகிறான்.
                ஒரேயொரு முறைதானே செய்தால் என்ன என்றும், யாருக்குத் தெரியப் போகிறது என்றும், இதனால் என்ன நஷ்டம் எதிராளிக்கு வந்துவிடப் போகிறதென்றும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு அந்தத் தவறைச் செய்யத் துணிகிறான். ஆனாலும் அடியொட்டிப் போய்க் கிடக்கும் அவனது நேர்மையுணர்வு, பெற்றோர்கள் மூலமாய் வந்த நன்னெறி, காலம் காலமாய்ப் பாதுகாத்து வந்த நல்லுணர்வு, ஒழுக்கம் அப்பொழுதும் அவனை விடாமல் துரத்தியடித்து, அவன் மனசாட்சியைக் கிழித்தெறிகிறது.
                ச்சே…புத்தி கெட்டுப் போய் செய்திட்டனே….என்றும், கடைசி நேரத்துல இப்படித் தடுமாறிட்டனே என்றும் வருந்தி, மனம் நொந்து…எந்த லாபத்திற்காகச் செய்தானோ அதை அடையவும் முடியாமல், அனுபவிக்கவும் இயலாமல் அந்தத் தவறைச் சரிசெய்யவும் வழியில்லாமல் ,மனசாட்சி உறுத்தியெடுக்க, கேவலம்…இது இல்லாமல் மனுஷன் வாழ்ந்திருக்க முடியாதா…? இதற்குப் போயா இப்படி நடந்து கொண்டேன் என்று எண்ணி எண்ணி வேதனைப் பட்டு… செய்த தவறுக்காக உள்ளுக்குள்ளேயே புழுங்கி…தன்னைத்தானே சக மனிதர்களிடமிருந்து ஒதுக்கிக்கொண்டு….மறுபடியும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முயல்கிறான்.
                வாழ்க்கையில் நல்லவர்கள் தவறு செய்யக் கூடாது. தவறே செய்யக் கூடாது. என்ன கஷ்டம் வந்தாலும் சரி, எந்தவிதமான சோதனை வந்தாலும் சரி….எல்லாவற்றையும் அனுபவித்து நொந்து நூலாய்ப் போனாலும் சரி….மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, மாறுபட்டு நேர்மையாய் இருந்தோம் என்கிற திருப்தி இருக்கிறதே…அதற்கு ஈடு…இணை இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. இறைவனின் சந்நிதானத்தில் நிற்பதற்குச் சமம்.
                கு.அழகிரிசாமியின் இந்த “முருங்கை மர மோகினி” கதையைப் படிக்கும் போது நம் மனதில் தோன்றுவது பல. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு…… நல்லவன் ஒரு ரூபாய் திருடினாலும் ஒரு கோடி திருடியதற்குச் சமானமாய் தவறை நினைத்து நினைத்து  மாய்ந்து போவான்….ஏனென்றால் காலத்துக்கும் அவன் நல்லவனாய் இருந்து என்றோ ஒரு முறை, எந்த விதி வசத்தினாலோ தவிர்க்க முடியாமல் ஒரு தவறை நிகழ்த்தி விடுகிறான். அதைச் செய்துவிட்டு ஐயோ…இப்படிச் செய்து விட்டோமோ என்று அவன் மனம் படும் பாடு இருக்கிறதே…அது சொல்லி மாளாது.
                இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்த தொழிலாளியாக வாழும் மேன்மைக்கு ஈடு இணையே கிடையாது இந்த உலகத்தில். சந்தோஷம் என்பது எங்கிருக்கிறது…அவரவர் மனத்தில்தான். அதுபோல்தான் திருப்தி என்பதும். போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து.
                அப்படித்தான் இருந்தார் பலகாரக்கடை நல்லபெருமாள் பிள்ளையும்…..காலக் கிரகம்…அவரைக் கொண்டு எங்கோ நிறுத்தி விட்டது. தெரியாத்தனமாய் ஒரு தப்பைச் செய்து விட்டு அவர் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே….!
என்ன பெரிய இது….அப்டியென்ன தப்பைச் செய்துட்டோம்…ஊரு உலகத்துல எவனுஞ் செய்யாதத…? போய்யா….எவன்யா யோக்கியம் இன்னிக்கு….? நீயும் செஞ்ச…நானும் செஞ்சேன்…போவியா….! பெரிஸ்ஸா சொல்லிட்டு வந்திட்ட….? இது இந்தக் காலப் பேச்சு….எதற்கும் அஞ்சாத பேச்சு….!
அதாவது நல்லதற்கல்ல…தீயதைச் செய்ய அஞ்சாத நெஞ்சம். அதையே பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளும் காலம். அதுவே தனது சாதனை என்று நினைக்கும் காலம் கூட. தப்பு என்று தெரிந்தும் அதைப் பாராட்டி மகிழும் உடனிருப்போர்…! தட்டிச் சொல்ல ஆள் இல்லாததால் மேலும் மேலும் நிகழும் தவறுகள். அதுவே வாடிக்கையாகிப் போகும் அவலம். இதுதான் இன்றைய உலகம்.
பலகாரக்கடை நல்லபெருமாள் பிள்ளை தானுண்டு, தன் தொழில் உண்டு என்றுதான் இருந்தார். காலக்கிரகம் அவரைப் புரட்டிப் போட்டு விட்டது. திடீரென்று உடம்பு சரியில்லாமல் போனது அவருக்கு. ரெண்டு மூன்று மாசம் அவரைப் படுக்கப்போட்டு விட்டது. அதில் தொழில் கொஞ்சம் படுத்துவிட்டது. கொஞ்சமென்ன…நிறையத்தான்…கையிலுள்ள காசு, சேமிப்பு என்று எல்லாம் கரைந்து போயின.  அந்த நஷ்டத்தை ஈடு கட்ட, அன்றாடம் செய்யும் பலகாரங்களில் வித்தியாசம் தெரியாமல் (அதாவது யாரும் கண்டுபிடித்து விட முடியாத வகையில்) தன் சாமர்த்தியத்தைக் காட்டினார் பிள்ளை. மக்களையா ஏமாற்ற முடியும்? அவர்களின் கைத்தராசு என்ன அப்படி சாதாரணப்பட்டதா? எடை துல்லியமாய் உணருமே…! புகார்கள் எழாமலில்லை. பலகாரங்கள் மெலிந்து போனதைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்தான். தப்பு செய்தல் என்பது அங்கேயிருந்து, அதிலிருந்து  ஆரம்பிக்கிறது பிள்ளைக்கு.
மனசு நொந்துதான் போகிறது அவருக்கு. மனிதன் தன் எண்ணங்களினாலும், செயல்களினாலும் பலவீனப்படும்போது…அதைவிட உடல் ரீதியாக,மன ரீதியாக பலவீனமாகிப் போகும்போது….அந்தக் காலம் பார்த்துத்தான் அந்தச் சனி வந்து புகுந்து கொள்கிறது. என்ன செய்ய….? அதுவும் போயும் போயும் ஐந்தாறு முருங்கைக்காய்களுக்கா நல்லபெருமாள் பிள்ளை அப்படி சபலப்பட வேண்டும்? பட்டு விட்டாரே…! முருங்கை மர மோகினி அவரை ஆட்டுவித்து விட்டதே…!
வருடக் கணக்காய் ஐரணக் கவுண்டர் வயற்காட்டுக் கிணற்றில் விடிகாலை தவறாமல் குளித்து வரும் பிள்ளைக்கு, அப்பொழுது பார்த்தா அந்தக் காய்கள் கண்ணில் பட வேண்டும்? அவரைக் கொடிகளுக்கு நடுவே…அதிகப் பிஞ்சும் இல்லாமல், அதிக முற்றலும் இல்லாமல் பக்குவமாய்  பளபளவென்று என்னமாய் அழகுபடத் தொங்குகின்றன?  சபலப்பட்டுவிட்டது அவர் மனசு. தினமும் பொழுது விடியும் முன் முதல் ஆளாய்க் குளிக்க வரும் தனது செயல் யாருக்குத் தெரிந்து விடப் போகிறது?
இந்த நாலைந்து காய்களைப் பறிப்பதனால் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது? மனது இப்படி நினைக்க ஆரம்பித்தால் போதாதா? ஐரணக் கவுண்டர் என்ன பெரிய நட்டமா பட்டுவிடப் போகிறார்?
அது இல்லைதான். ஆனாலும் அந்த மாதிரி நஷ்டம் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கான அடையாளம்தானே அந்தச் செருப்பு…? அந்த ஒற்றைப் பழைய செருப்பை ஏன் அங்கே அப்படிக் கண்ணுக்குப் பளீரென்று தெரிவதுபோல் கட்டித் தொங்கவிட வேண்டும்? மானமுள்ளவனுக்கு இது போதும் என்று நினைத்திருப்பாரோ?
மானம் பார்ப்பவன் திருட மாட்டான். திருடினால் செருப்படிதான்…என்பதற்கான அடையாளம்தானே…! பெரிய்ய்ய்ய வேலியா வேண்டும்? இந்த ஒன்று போதாதா? அது கண்ணுக்கு உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் மனசு முடிவு செய்து விட்டதே, என்ன செய்ய…? சோத்துல உப்புப் போட்டுத் தின்னும் இன்னிக்கு மனசு ஏன் இந்தப் பாடு படுது இதைச் செய்ய? பிள்ளையால் அந்த ஆசையை ஒதுக்கவே முடியவில்லை.
ன்ன….வேகு வேகுன்னு போனீக….குளிக்கலையா….? –
இவளை யாரு இந்தக் கேள்வியெல்லாம் கேட்கச் சொன்னா….? பேசாம வேலையப் பார்க்க மாட்டா போல்ருக்கு… இந்தா புடி….வழில வரைல  வாங்கினேன்…சாம்பார் வையி……உடம்பு ஒரு மாதிரியிருக்கு…ஜாதோஷம் புடிச்சுக் கெடக்கு…அதான் திரும்பிட்டேன்….
ஒரு பொய்யை மனைவி முத்தம்மாளிடம் சொல்லி….அப்படியும் நடுக்கம் தீராமல் தவிக்கிறார் பிள்ளை. இனிமேல் திரும்பவும் கிணற்றுக்குக் குளிக்கப் போக முடியாது. பல் தேய்த்த வேப்பங்குச்சியை ஒரு வேளை கிணற்றின் பக்கமாய்ப் போட்டு விட்டோமோ? அது கவுண்டர் கண்ணில் பட்டுவிட்டால்?
மனம் என்ன பாடு படுகிறது பாருங்கள்…? இதற்குத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன். தவறே செய்யாதவன், வாழ்க்கை பூராவும் அப்படியே கழித்து விட வேண்டும் என்று.  ஒரே ஒரு தப்பு செய்து பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள் நிறையப்பேர்.  சர்வீஸில் கடைசி நேரத்தில் தப்பு செய்து மாட்டிக் கொண்டவர் உண்டு. கடைசி காலத்தில் மனம் பிறழ்ந்து அதனால் கேவலப்பட்டவர் உண்டு. நம்ம செய்த தப்பெல்லாம் யாருக்குத் தெரிஞ்சிருக்கப் போகுது என்று நினைத்துக் கொண்டு தப்பித்தவர்களும் உண்டு. ஆனால் அந்த மனசாட்சி? லேசில் அறுபட்டுப் போகுமா என்ன? செய்த சில தப்புக்களை தனக்குத்தானே மறைத்துக் கொண்டு அல்லது மறந்ததுபோல இருந்து கொண்டு, தனக்குத்தானே பொய்யாய் நேர்மை பேசிக் கழிக்கும் ஆத்மாக்களும் உண்டு. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் கனிந்திருக்க – அம்மாதிரி நிலையில் ஒருவன் தவறு செய்யாமல் திடகாத்திரமாய், இரும்பு மனநிலையில் இருக்கிறானா, இருந்து இயங்குகிறானா என்பதே முக்கியம். இந்தக் கதை இப்படிப் பலவற்றையும் எழுப்பி விட்டு விடுகிறது.
யாருக்கு வேணும் இந்த சாம்பாரு….? சாம்பார் இல்லாம சாப்பிட முடியாதா என்ன? பெரிய்ய்ய்ய சாம்பார் வச்சிட்டியாக்கும்…? வேறே ரசம்…கிசம் வச்சிருக்கியா….? அதக் கொண்டா…இந்த முருங்கைக்காய் சாம்பார் வேண்டாம்….
என்னாது? சாம்பார் வேண்டாமா? நீங்கதான ஆசப்பட்டு வாங்கியாந்தீக…? உங்களுக்காகத்தான் வச்சேன்… இப்ப வேணாம்னா எப்டி….? என்னாச்சு உங்களுக்கு…? – முத்தம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவளுக்கென்ன தெரியும்…அவர் மனதிலுள்ள தவிப்பு…? மனுசன் என்னா பாடு பட்டுக்கிட்டிருக்கான்…போவியா….!
இந்த முருங்கக்காய் என்ன தங்கப் புதையலா…? அப்டியென்ன ஆசை துள்ளுது….? – மனசுக்குள் நினைத்துக் கொண்டே கீரைச் சாதத்தை விழுங்கிக் கொண்டிருந்தார் பிள்ளை.
முத்தம்மாள் தன் கணவரின் ஜாதோஷத்தை உத்தேசித்து கவனமாய் செய்து வைத்திருந்த மிளகு ரசத்தை எடுத்துவர உள்ளே போனாள்.
மனசுக்கு வேலி போட பெரிய்ய்ய்ய வடக்கயிறா வேண்டும்? ஒரு சின்ன நூல் போதுமே…! அந்த நூல் கூட வேண்டாமே…!  அப்படியெல்லாம்  முடியாமல்தானே மனிதன் தவிக்கிறான்? – நல்ல பெருமாள் பிள்ளையை நினைத்து நாமும் பரிதாபம் கொள்ளத்தான் செய்கிறோம். கூடவே நம்மையும் சுதாரித்துக் கொள்கிறோம்.
கிணற்றைச் சுற்றிலும் அங்கங்கே நிற்கும் தென்னை மரங்களில் ஏறி எவனும் காய்களைப் பறித்து விடக் கூடாது என்று அதன் உடம்பில் குறிப்பிட்ட உயரத்தில் கம்பி வேலியைச் சுற்றி வைத்திருக்கும் ஐரணக் கவுண்டரின் ஜாக்கிரதை…திருட வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டவனுக்கு ஒரு பொருட்டா என்ன….?
அதுபோல் நல்ல பெருமாள் பிள்ளையின் மனது அந்த ஐந்தாறு முருங்கைக்காய்களின் மேல் வைத்த ப்ரீதி…அவரைத் திருட வைத்துவிட்டதுதானே…! மோகினியாய் நின்று என்ன ஆட்டம் போட்டுவிட்டது அவர் மனதில்.  தொங்கும் ஒற்றைச் செருப்பை அப்படி ஒதுக்கி விட்டு, காய்களைச் சத்தமின்றிப் பறித்து விடும்போது ஒரு கிளை ஒடிந்து போக, அந்தச் சத்தமே வேட்டுச் சத்தம் போல் அவரை உணர்ந்து பதற வைக்கிறது. தவறு செய்யும் மனதின் தவிப்பு. யாரோ கமலைக்கு மாடு ஓட்டி வருவது உணர, பறித்த காய்களை கக்கத்தில் நெட்டுக் குத்தலாக நிறுத்தி மறைத்து வைத்துக் கொண்டு, துண்டை விரித்து தோளில் போட்டுப் பரத்தி, விடுவிடுவென்று அவர் வீடு வந்து சேரும் அந்த நேர நடுக்கம்,  அவரோடு சேர்த்து நம்மையும் பதறத்தான் வைக்கிறது. பாவம்…சபலப்பட்டுட்ட, அல்ப ஆசைக்கு உட்பட்டு விட்ட  அந்த மனுஷன் பிடிபட்டுக் கொண்டு விடக் கூடாதே என்று….!
ஆனால் மனசாட்சிதானே வெல்கிறது கடைசியில். மனிதனுக்கு நீதி மனசாட்சியில். அதற்கு மீறிய கோர்ட் என்று ஒன்று உண்டா என்ன? அதை வென்றவர்கள் யார்?
இலக்கியம் நமக்கு எத்தனையோ பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது. இந்த வாழ்வில் நம் அனுபவ எல்கை என்பது மிகக் குறைவு. ஆனால் அனுபவப்பட்டு அதைப் பதிவு செய்து வைத்திருக்கும் பெரியோர்களின் எழுத்துக்களைப் படிக்கும்போது, நம் மனம் முதிர்ச்சி பெறுகிறது. இந்த சமூகத்திற்கு நாமும் மிகுந்த பக்குவமுள்ள ஒரு பிரஜையாக உருப்பெறுகிறோம். சிறந்த விவேகியாக வாழப் பழகிக் கொள்கிறோம்.
திரு கு.அழகிரிசாமியின் இந்த முருங்கை மர மோகினி இப்படி பலப்பல எண்ணங்களை விரித்து நம்மைப் புடம் போட்டுக் கொள்ள உதவுகிறது. என்றால் அது சத்தியம்.
----------------------------------------------------------------------------------------------------------------------




       

       

       
               


கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...