02 மே 2019

'“பழி“ - சிறுகதை - அந்தி மழை - ஏப்ரல் 2019


'“பழி“ - சிறுகதை - அந்தி மழை - ஏப்ரல் 2019
தை யாரு எழுதினது?


அந்தம்மாளின் இந்தக் கேள்வியே என்னைத் துணுக்குறச் செய்தது. நூலகர் அவர்.
என்னம்மா இப்டிக் கேட்குறீங்க….? என்றேன். இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவேயில்லை.
சொல்லுங்க…யார் எழுதினது? என்றது மறுபடியும். குரலில் அப்படியொரு கோபம். என் முகத்தைப் பார்க்கத் தயங்கி அல்லது பார்க்காமல் கேட்டால்தான் கோபமாய்க் கேட்க முடியும் என்பதுபோல்…
இது எனக்குத் தேவையா? என்றிருந்தது எனக்கு. தலை குனிந்திருந்த அவர்களையே நோக்கினேன்.
நீங்கதானம்மா தேதி போட்டுக் கொடுத்தீங்க…யாரு எழுதினதுன்னு கேட்டா…?
ம்உறீம்….நா பென்சில்ல போட மாட்டேன். இத எழுதினது யாரு….சொல்லுங்க….! – மறுபடியும் அந்தப் புள்ளியிலேயே  கேள்வி நின்றது.
நான்தான் போட்டேன் என்று சொல்லணும் என அந்தம்மாள் எதிர்பார்ப்பது போலிருந்தது மீண்டும் விழுந்த அந்தக் கேள்வி. எனக்குள் பயங்கர எரிச்சல்.
முதல்ல நீங்க இப்டிக் கேட்குறதே தப்பு….புத்தகம் வாங்கிட்டுப் போகுற மெம்பர்களை மதிக்கக் கத்துக்குங்க…!
எல்லாம் தெரியும் சார் எங்களுக்கும்….இந்த லைப்ரரில அஞ்சு வருஷத்துக்கும் மேலே இருந்திட்டிருக்கேன்…எனக்குத் தெரியாதா என்ன நடக்கும்னு…? சொல்லுங்க…நீங்கதானே போட்டுக்கிட்டீங்க…?
என்ன தைரியம் அந்தப் பெண்ணுக்கு…? தன் மறதியைக் கணக்கில் கொள்ளாமல்..அடுத்தவர் மேல் குற்றம் சாட்டுவதில் எவ்வளவு தீர்மானம்? எத்தனை வேகம்?
இந்த பாருங்கம்மா… ட்யூ டேட்ஸை அப்டியெல்லாம் நாங்களே போட்டுக்கணும்ங்கிற அவசியமில்லே எங்களுக்கு. வேணும்னா இன்னொரு வாட்டி தேதி எக்ஸ்டென்ட் பண்ணி எடுத்திட்டுப் போய் படிச்சிட்டுப்  போறோம்…எல்லாரும் அதைத்தானே செய்வாங்க…அன்னைக்கு பேனாவை எங்க வச்சேன்னு தேடின நீங்க…கைக்குக் கிடைச்ச பென்சிலை எடுத்து இந்தத் தேதியை நீங்கதான் போட்டுக் கொடுத்தீங்க…அன்னைக்கே பென்சில்ல போடுறீங்களேன்னு நான் உங்களைக் கேட்டேன். பேனாவ எங்க வச்சேன்னு தெரில சார் …இருக்கட்டும்னு எடுத்திட்டுப் போகச் சொல்லிட்டீங்க…நானும் போயிட்டேன்…இதுதான் நடந்தது. பதினஞ்சு நாளாயிடுச்சு… இன்னைக்கு அதை மறந்திட்டீங்க…மறந்திட்டு எங்கிட்டயே யார் போட்டதுன்னு கேட்குறீங்க….!
நான் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருவர் நான்கு புத்தகங்களை அடுக்கிக் கொண்டு வந்து நின்றார். என்னாச்சு…என்ன பிரச்னை…என்பதுபோல் என்னையும் அந்தம்மாளையும் மாறி மாறிப் பார்த்தார்.
பாருங்க சார்….டிலேயை மறைக்கிறதுக்கு தேதியை அவரே போட்டுக்கிட்டு கமுக்கமாக் கொண்டு வந்து நீட்டுறதை….? என்றது அந்தம்மாள் அவரைப் பார்த்து.
அவர் பென்சிலில் எழுதியிருந்த அந்தத் தேதியையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன சொல்லலாம் என்று யோசித்தது போலிருந்தது.
வீதியில் புழுதியைப் பரத்திச் சுழன்று  அடித்த காற்று….அந்த நுழை வாயிலுக்குள் தாராளமாகக் கொஞ்சம் வராண்டா மணலை வீசிவிட்டுச் சென்றதில் டேபிளில் இருந்த காகிதங்கள் பறந்து கீழே விழுந்தன. வைத்திருந்த பேனா, பென்சில் என்று உருண்டு கீழே விழப் போன போது பாய்ந்து அவைகளைப் பிடித்து  டேபிள் டிராயருக்குள் போட்டது. கீழே சிதறியிருந்த பேப்பர்களை எடுக்கத் தலைப்பட்டது.
இதுக்குத்தான் நுழையுற எடத்துல ஒரு தடுப்பு  வச்சுக் கொடுங்கன்னு ஆயிரம் தடவை மனுக் கொடுத்திட்டேன்…செய்ய மாட்டேங்குறாங்க…இருக்கிற புஸ்தகமெல்லாம் புழுதிக் காடாப் போயிடுது. ஒரு நாளைக்கு எத்தனை வாட்டிதான் தூசி தட்டுறது….? எடுத்துப் பிரிச்சு அடுக்கி அடுக்கி எனக்கு வீசிங்கே வந்திடுச்சு….சளித்தொல்லை தாங்க முடியல….எங்க பாடு இப்டிக் கெடக்கு….இதுல இது வேறே….?
இப்போது அவர் சொன்னார்…புத்தகத்தை எடுத்திட்டுப் போகைல நீங்க தேதி போட்டுத்தானம்மா கொடுப்பீங்க…பதினஞ்சு நாள் தள்ளின தேதியப் போட்டிருப்பீங்கல்ல…..?
சொல்லிவிட்டு அந்தம்மாளைப் பார்த்தாரேயொழிய அவர் என்னை நோக்கவில்லை. என்னைப் பார்த்தால் அவர் எனக்கு ஆதரவானவரோ என்று அந்த லைப்ரரியன் நினைத்து விடலாம்….அதனால் புதியபுதிய புத்தகங்கள் கிடைப்பது அவருக்குத் தடைப்பட்டுப் போகலாம். திருப்பிக் கொடுப்பதில் சற்றுத் தாமதமானாலும்…பரவால்ல சார்…என்கிற அட்ஜெஸ்ட்மென்ட் இல்லாமல் போகலாம். ஒரே புத்தகத்தை மாதக் கணக்காய் வைத்திருந்தாலும் எதுவும் குறை சொல்லாமல் கமுக்கமாய் வாங்கி வைத்துக் கொள்ளலாம்…எங்குமே திட்டுவதும், குறை சொல்வதும் எச்சவன், எளைச்சவனுக்குத்தானே…!
அதத்தான் சார் நானும் பார்க்கிறேன்…எப்டித் தேதி போடாம, என் கைப்பட எழுதாம இந்தப் புஸ்தகம் வெளில போச்சுன்னு….? அப்டி ஒரு புத்தகத்தக் கூட நான் விட்டதில்லையே…! வருஷா வருஷம் அன்யூவல் ஆடிட்டிங்கின்போது தொலைஞ்ச புத்தகங்களுக்குன்னு ரெக்கவரி கட்டிட்டிருக்கேன் சார் நானு…என் சம்பளத்துல பிடிச்சிர்றாங்க…எவ்வளவுதான் கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திட்டுப் பார்த்தாலும் எப்டியும் வருஷத்துக்குப் பத்துப் பதினைஞ்சு புத்தகங்கள் காணாமப் போயிடுது சார்…தடுக்கவே முடியல…வாங்கிட்டுப் போய் தொலைச்சிர்றவங்களைவிட, திருப்பிக் கொடுக்காமயே விட்டுர்றவங்கதான் ஜாஸ்தி…. எங்கயாவது சித்தாள் வேலை செய்து பிழைக்கலாம் சார்….கையில காசு…வாயில தோசைன்னு….
இப்போது என் மீது இன்னொரு குற்றச்சாட்டு படர்வது போலிருந்தது. இந்தப் புஸ்தகம் எப்படி வெளில போச்சு என்று கேட்கிறார்களே…! இவர்கள் கூற்றுப்படி இவர்களுக்கே தெரியாமல் நான் எடுத்துப் போயிருந்தேனானால் (அந்த மாதிரி இழி செயலைச் செய்பவன் அல்ல நான்) அதைத் திருப்பிக் கொடுக்க வருவேனா…? அப்படித்தான் நானே ஒரு தேதியைப் போட்டுக் கொண்டு வந்து நீட்டுவதாக இப்போது சொல்ல முனைகிறது அந்த அம்மாள்.
சரி….புத்தகத்தின் பெயர், வரிசை எண். விலை, சீல் விபரங்கள் அடங்கிய சிறிய அட்டை எனது லைப்ரரி டோக்கனில் செருகப்பட்டிருக்கும்தானே…! அதை அந்த அம்மாள்தானே வைத்திருக்கும்…? அப்படி வைக்கப்படாமல் நான் ஒரு புத்தகத்தை வெளியே கொண்டு செல்ல முடியுமா?
நான் நின்று கொண்டேயிருந்தேன். நான்கு புத்தகங்களைக் கொண்டு வந்தவர் டேபிளில் அதை வைத்து விட்டு, புதிதாய் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்ல அலமாரியில் தேட ஆரம்பித்திருந்தார்.
எப்படித் தேதி போடாமல் புத்தகத்தை வெளியில் அனுப்பித்தேன் என்று தனக்கு சாதகமாய் யோசிக்கும் அந்தப் பெண்மணி, ஒரு வேளை அவசரத்தில் பென்சிலில் தேதி போட்டுக் கொடுத்திருப்போமோ என்று யோசிக்க மறுத்தது எனக்குப் புரிந்தது. தன் பணியில் அத்தனை ஸ்திரத்தன்மையும் நம்பிக்கையும் இருக்குமேயானால், எப்படித் தேதி போடாமல் அனுப்பினேன் என்கிற சந்தேகமே அவர்களுக்கு ஒரு மைனஸ்தானே…! அதுபோல் பென்சிலில் போட்டிருப்பேனோ என்பதையும் ஒரு சந்தேகமாய்க் கொள்ளலாம்தானே…!
சரி…போனது போச்சு…இதை எதுக்குப் பெரிசு பண்ணிட்டு…என்று புத்தகம் திரும்ப வந்திருச்சே திருடு போகாம…அதுவே பெரிசு என பிரச்னையை முடிக்கலாம்தான். பிரச்னை என்பது அந்தம்மாளைப் பொறுத்துத்தான். எனக்கு இல்லை.
நல்லாப் பாருங்கம்மா….இந்த எழுத்தும்…இதுவும் ஒண்ணாயிருக்கிறது தெரியுதா…நீங்கதான் எழுதிக் கொடுத்தீங்க…இதுல போய் நான் ஏன் பொய் சொல்லணும்…எனக்கென்ன கிடைக்கப் போகுது….இதனால…? என்றேன் நான்.
பக்கத்தில் இன்னொரு புத்தகத்தில் இருந்த அவர்களின் கையெழுத்திலான தேதியைச் சுட்டிக் காட்டி, நீங்க நம்பர் எழுதுறது ஒரே மாதிரி இருக்கு பாருங்க…இப்பவாவது நம்புறீங்களா..? என்று சொல்லியவாறே நட்பாய்ச் சிரித்தேன் நான்.
இதைச் சொன்னதும் என் முகத்தை முதன் முறையாய் நன்றாய் நிமிர்ந்து பார்த்தது அது. கண்களில் என்ன தேடுகிறது? நானும் இமைக்காமல் அவர்களையே பார்த்தேன். பொய்யைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். எனக்கென்ன பயம்? நான் உண்மைதானே சொல்கிறேன்?
நான் நம்பத் தயாராயில்ல சார்….இப்படியெல்லாம் நான் செய்யவே மாட்டேன்….சரி…புத்தகம் திரும்ப வந்திடுச்சு…எனக்கு அதுவே போதும்… - இப்படி அந்தம்மாள் சொல்ல…எனக்கும் வேகம் பிறந்தது.
புக் டீடெய்ல்ஸ் அட்டையை என் டோக்கன்ல செருகியிருப்பீங்கல்ல….புக்ஸை வெளில அனுப்புறபோது அப்படித்தானே செய்வீங்க…? அதை எடுத்துப் பாருங்க…அதுல கார்டு இருந்திச்சுன்னா…நீங்க கொடுத்து அனுப்பிச்சதாகத்தானே அர்த்தப்படும்…? அப்ப ஒத்துக்குவீங்கல்ல? ஏம்மா….நீங்க செய்றது கொஞ்சமாச்சும் நல்லாயிருக்கா…? முதல்ல இந்தத் தேதிய பென்சில்ல  நான் போடலைன்னீங்க…நானே எழுதிக் கொண்டு வந்திருக்கிறதாச் சொன்னீங்க…இப்போ இந்தப் புத்தகம் எப்டி வெளில போச்சுன்னு சந்தேகப் படுறீங்க….? சரி…இருக்கட்டும்…தெரிஞ்சவங்கதானேன்னு பென்சில்ல தேதி எழுதினதைப் பொருட்படுத்தாம நான் எடுத்திட்டுப் போனது தப்பாப் போச்சு….இந்த லைப்ரரிக்கு நீங்க அஞ்சு வருஷமாத்தான் வர்றீங்க…நான் இந்தக் கிளை  இந்த இடத்துல திறந்த அன்னைலர்ந்து இருக்கேன்…..சொல்லப்போனா முதல் டோக்கன் போட்டு, முதல் புத்தகம் எடுத்தவனே நான்தான்ங்கிற பெருமை எனக்கு உண்டு… இதுக்கு முன்னாடி இருந்த லைப்ரரியன்லாம் புதுப் புத்தகங்கள் வந்திச்சுன்னா என்னை மாதிரிச் சிலரைக் கூப்பிட்டு எல்லாத்துக்கும் நம்பர் போட்டு அடுக்கிக் கொடுக்கச் சொல்வாரு….நாங்களும் செய்து கொடுத்திருக்கோம்…எந்த கௌரவமும் பார்த்ததில்லே….நேத்து வந்த நீங்க எங்க மேலே சந்தேகப்படுறீங்க…நீங்க செய்ற தவறுகளை வேலைல ஏற்படுற விடுதல்களா நினைக்காம, நூறு சதவிகிதம் பெர்ஃபெக்ட் மாதிரி நினைச்சிட்டு உங்க இஷ்டத்துக்குப் பேசிட்டேயிருக்கீங்க….என்னவோ ஒரு குற்றவாளியை நிறுத்தி வைக்கிறமாதிரி என்னை நிப்பாட்டி வச்சிருக்கீங்க…என் வயசையாவது கொஞ்சமேனும் நினைச்சீங்களா…? இப்டி உட்காருங்கன்னு உங்க வாய்லேருந்து ஒரு வார்த்தை சொல்லத் தெரிஞ்சிதா  உங்களுக்கு? புத்தகங்களோட நாளெல்லாம்…வருஷக் கணக்கா புழங்குறீங்களே…அதெல்லாம் வெறும் காகிதக் கட்டுக்களா? எதையுமே நீங்க தொட்டுக் கூடப் பார்த்ததில்லையா…? அப்படிப் பார்த்திருந்தா, படிச்சிருந்தா உங்க நடவடிக்கைகள்  இப்படி இருக்காது. நீங்க எதையுமே தொட்டதில்லைன்னு தெரியுது….அது எப்டியோ இருந்திட்டுப் போங்க…எனக்கென்ன வந்தது? ஒரு லைப்ரரியனுக்கு அழகான்னா, இல்லைன்னுதான் சொல்லுவேன். உங்களை மாதிரி ஆளுங்க இப்டி நடந்துக்கிறபோது அப்புறம் வேறென்ன சொல்றதாம்? எனக்கு என்னோட டோக்கனைக் கொடுங்க…நான் வேறே புத்தகம் எடுக்கணும்…
என் வார்த்தைகளின் வெப்பத்தில்  அந்தம்மாள் ரொம்பவும் சூடு பட்டுவிட்டதோ என்னவோ, அமைதியாய் என் டோக்கனை உருவி எடுத்தது. அதிலிருந்த அட்டையை எடுத்து நான் கொண்டு வந்த புத்தகத்தில் செருகியது. தான் கொடுத்தனுப்பாமலிருந்தால் அந்த அட்டை டோக்கனில் இருந்திருக்காதே என்று அந்தம்மாளுக்குத் தோன்றியிருக்க வேண்டும்…இருந்தாலும் கெத்து என்று ஒன்று இருக்கிறதே…! ஓட்டை அதிகாரம் எங்கேனும் எடுபடுமா? அசடு என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். இப்படி நினைத்த அந்தக் கணத்தில் அந்தம்மாள் வாயைத் திறந்தது.
நீங்க சொல்றது உண்மையா, பொய்யான்னு எனக்குத் தெரில….இனிமே நானே இப்டிப் பென்சில்ல தேதி போட்டுக் கொடுத்தாலும் நீங்க வாங்கிட்டுப் போகாதீங்க…சொல்லிப்புட்டேன்…பிறகு ஃபைன்தான் கட்ட வேண்டியிருக்கும்…..
என்ன ஒரு பேச்சு? நான் நினைத்ததுபோல் உண்மையிலேயே இந்தம்மாள் அசடுதான். ஒரு அசடுக்கு, அசட்டுத் திமிரும் இருக்கும்தானே?
ரைட் விடுங்க சார்…நான்தான் மறந்தவாக்குல பென்சில்ல போட்டு அனுப்பிட்டேன் போல்ருக்கு….விடுங்க…விடுங்க… - ஒரு வார்த்தையில்லையே இப்படி? தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளத் தயாராயில்லையே…? அதென்ன அப்படி ஒரு வீம்பு? ஃபைன் போடுமாமே ஃபைன்? போட்டுத்தான் பார்க்கட்டுமே…அதையும் பார்த்திருவோம்….!!
வரிசை வரிசையாக நெருக்கமாய் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளில் புத்தகத்தைத் தேட ஆரம்பித்தேன் நான். போதிய வெளிச்சமின்மையும், தூசியும் என்னைச் சங்கடப்படுத்தியது. வெளியில் வந்து நச்சு நச்சென்று பெரிசாய் ரெண்டு தும்மல் போட்டேன். கொஞ்சம் சத்தம் அதிகம்தான். அடைந்து கிடந்த பல நாள் தூசி…
அது என்னையே அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தது. எதற்காக இத்தனை வன்மம்? ஒரு மனிதனை இப்படியெல்லாமும் வெறுக்க முடியுமா? சட்டென்று ஒருவன் அப்படியா பிடிக்காமல் போவான்? என் முகராசிதான் அப்படியோ? எனக்கே இப்படியொரு ஐயப்பாடு அது நேரம் வரை எத்தனை பேர் வந்து புத்தகம் மாற்றிக் கொண்டு போனார்கள்? எல்லோரும் என்னையே உற்று நோக்கினார்களே..! ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் வருகிறார்கள். போகிறார்கள்? அமர்ந்து படிக்கிறார்கள்,…எழுந்து போகிறார்கள்? எத்தனை பிரபலமான லைப்ரரி அது…! ஏறக்குறைய எல்லோரும் தெரிந்தவர்களாயிற்றே எனக்கு? அவர்களே சந்தேகப்படும்படி செய்துவிட்டதே இது!  அவர்கள் முன் இப்படிக் கேவலப்படுத்தி விட்டதே? என்ன பிரச்னை என்பதைக் காதில் வாங்கிக் கொண்டுதானே ஒவ்வொருவரும் நகர்ந்தார்கள்…நமக்கென்ன வந்தது என்றா விலகிப் போனார்கள்? எவனும் வாயைத் திறக்கவில்லையே? புத்தகங்கள் படிப்பது வேறு….நடைமுறை என்பது வேறா…?அது மனிதர்களை மாற்றுவதில்லையா? பக்குவப்படுத்துவதில்லையா?   அந்த லைப்ரரிக்கே எவ்வளவு சீனியர் வாசகன் நான்? ஒண்ணுமில்லாத விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்தி, ப்ராபகேன்டா பண்ணி விட்டதே…! இதென்ன பொம்பளைதானா? என் மனது விடாது புகைந்து கொண்டேயிருந்தது.
நீ சந்தேகப்பட்டா பட்டுக்கிட்டே இரு….உன்னை மாதிரி ஆளுங்களையெல்லாம் மாத்தவே முடியாது….உனக்காக நான் புத்தகம் எடுக்காம இருக்க முடியுமா…இல்ல படிக்காமத்தான் இருக்க முடியுமா…..? நான் பணம் கட்டி மெம்பராகியிருக்கேன்….பல வருஷத்து மெம்பர் நான்…புத்தகங்கள் உன்னைப் பக்குவப்படுத்தியிருக்கோ இல்லையோ என்னைப் பக்குவப்படுத்தியிருக்கு… உன் வழி உனக்கு என் வழி எனக்கு…!  - நினைத்துக் கொண்டே படு நெருக்கமான  அந்தப் புத்தக அடுக்கக வெளியிலிருந்து வெளிப் போந்தேன் நான். குகைக்குள்ளிருந்து விடுதலை பெற்றது போலிருந்தது.
இந்தா பாருங்கம்மா….நல்லாப் பார்த்துக்குங்க….இது என்னோட டோக்கன்…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க என்கிட்டே கொடுத்தது….நான் இன்னொரு நாளைக்கு வந்து புத்தகம் எடுத்துக்கிறேன்…தூசி தாங்க முடில என்னால……இப்ப வெறுமேதான் போறேன்….- என்றவாறே என் பெயர் எழுதிய அந்த லைப்ரரி டோக்கனை அந்தம்மாளிடம் நீட்டிக் காண்பித்துக் கொண்டே வெளியேறி, என் டூ வீலரை எடுத்துக் கொண்டு விருட்டென்று பறந்தேன் நான்.
இன் பண்ணி புஸ்ஸென்று பலூன் போல்  உப்பியிருந்த   என் தொள தொளாச் சட்டையையும் மீறி முதுகுப் புறத்தில் பனியனுக்குள் கமுக்கமாய் இருத்தியிருந்த என் ஆதர்ஸ எழுத்தாளரின் அந்த விரிவான ஆய்வு நூல், கிச்சுக் கிச்சு மூட்டுவதுபோல் என் முதுகை வருடிக் கொண்டேயிருந்தது.
                    --------------------------------------------------------------


கருத்துகள் இல்லை: