02 மே 2019

‘“ஆனந்தியின் அப்பா” – ஜெயமோகன் சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன்


                            
  

   ‘“ஆனந்தியின் அப்பா” – ஜெயமோகன் சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன்    
“பிரதமன்” – சிறுகதைத் தொகுப்பு – வெளியீடு – நற்றிணைப் பதிப்பகம், வடபழனி, சென்னை.      
              2018 தினமணி தீபாவளி மலரில் வந்தபோதே இக்கதையைப் படித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பின்னர் ஜெயமோகனின் சமீபத்திய கதைகள் தொகுக்கப்பட்டு நற்றிணை வெளியீடாக “பிரதமன்” என்ற தலைப்பில் புதிதாக வெளி  வந்திருக்கும் சிறுகதைத் தொகுதியில் (ஜனவரி 2019)  இக்கதையினை மீண்டும் படித்துவிட்டு ஆர்வ மிகுதியில்  இனியும் தாமதிக்கக் கூடாது என்று எழுதி விட்டேன்.
       முழுமையான வடிவத்தில்  ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி வேண்டுமானால் இக்கதையைக் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.  சொல்லப்பட வேண்டிய கதை தன்னைத்தானே உரிய இடத்தில் துவக்கிக் கொண்டு, படிப்படியாக வளர்ந்து, உரிய காட்சி விவரணைகளோடு, அழுத்தமான சம்பவக் கோர்வைகளோடு, அர்த்தம் பொருத்தமான சம்பாஷணைகளோடு தன்னைத் தானே ஸ்திரமாய் நிறுத்திக் கொண்டு பயணித்து முற்றிலுமாகக் கனிந்து வரும்போது, தக்க இடத்தில்  தன் முடிவைத் தானே தேடிக் கொண்டு நின்று விடுவது  என்பதான அசலான சிறுகதைக்குரிய இலக்கணம்,  அந்த நிறைவு இக்கதையைப் படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்டது.
       இளம் பிராயத்திலிருந்து நம்மின் மொத்த வாழ்க்கையினைப் படிப்படியாக நினைவுக்குக் கொண்டு வந்து இன்றைய நாள் வரை கொண்டு நிறுத்தி, அதில் வேண்டாதவைகளையெல்லாம் கழித்து, வெட்டி, நறுக்கி, காரண காரியத் தொடர்பற்றவைகளையெல்லாம் ஒதுக்கி,  அர்த்தமுள்ள சாராம்சத்தை மட்டும் கவனமாகத் தொகுத்தோமானால் அது நம் வாரிசுகளுக்கு அல்லது நம்மோடு வாழ்ந்தவர்களுக்கு, உடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சுகமான நினைவுகளாகவோ, நம்மை நினைத்துப் பெருமைப்படும்படியாகவோ அல்லது பெரும் வழிகாட்டியாகவோ அமையுமானால் அது எத்தனை அர்த்தபூர்வமானதாக இருக்கும்? அப்படி ஒரு அடையாள வாழ்க்கையை எத்தனை பேர் வாழ்ந்திருக்கிறார்கள் இங்கே?
       அப்படி நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஒரு சிலரையேனும் அல்லது ஒருவரையேனும் ஈர்த்திருந்தோமானால் அதுவே நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தபூர்வ வரலாறு எனக் கொள்ளலாம்.
       கதையில் ஆனந்தியின் அப்பா ஸ்ரீராம் அப்படியான ஒரு அடையாளமாய் அமைந்து அவளுக்குள் நிலை பெற்று விடுகிறார். பெண் குழந்தைகளுக்கு அப்பாவின்பால் பெரிய ஈர்ப்பு இருக்கும். இளம் பிராயத்திலிருந்து மனதில் சித்திரமாய்ப் படிந்து போன அப்பா, ஆனந்தியின் வயதான காலத்தில் அல்ஷைமர் நோய் தாக்கியிருந்த நிலையிலும், அவளை விட்டு இம்மியும்  அகலாது எண்ண ஓட்டங்களில் வண்ணக் கோலமிடுகிறார். அவளது நினைவுகள் என்பதே அப்பாவோடு பயணிக்கும் அன்றாட நிகழ்வுகளாகத்தான் இருக்கிறது.
       ஃபிலிம் எடிட்டர் கோதண்டம் ஆனந்தியின் மகன் மாதவ்வின் அழைப்பின்பேரில்  அவரைச் சந்திக்கச் செல்கிறான். பேச்சுத்  துவங்கும்போதுதான் தெரிகிறது அது சினிமா வேலை சம்பந்தமாக இல்லை….வேறொரு பணி நிமித்தம் என்று.
       இதுவும் சினிமா சம்பந்தப்பட்ட வேலைதான். ஆனா கொஞ்சம் வித்தியாசம். ஏற்கனவே எடுக்கப்பட்ட சினிமாக்களிலிருந்து ஒரு சினிமாவை நீங்க தயார் பண்ணனும்….என்று சொல்கிறார் அவர். புதிய ஆனால் வித்தியாசமான பணியாய் உணர்கிறான் கோதண்டம்.
       தாத்தா நடிச்ச அத்தனை படங்களிலே இருந்தும் அவர் நடிச்ச காட்சிகளை மட்டும் வெட்டி ஒட்டி ஒண்ணா ஒரு சினிமா மாதிரி ஆக்கிக் கொடுக்கணும்….. – இதுதான் மாதவ் கோதண்டத்திடம் சொல்வது.
       ஸ்ரீராம் மாதவ்வின் தாத்தா என்பதும், அவர் மிகப் பெரிய ஸ்டாராகப் புகழோடு இருந்த காலங்களையும், மொத்தம் 69 படங்களில் உறீரோவாக நடித்திருப்பதையும், பின்னால் மகள் ஆனந்தியின் பெயரில் சினிமாக் கம்பெனி ஆரம்பித்ததும், அதில் பதிமூன்று படங்கள் எடுத்திருப்பதும் பிறகு படிப்படியாக எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டதும், அம்மா தாத்தாவோட பெட் என்பது வரையும் சொல்லப் புரிந்து கொள்கிறான் கோதண்டம்.
       “அம்மாவுக்கு அல்ஷைமர்ஸ்ல மூளை நியூரான்ஸ் அழிஞ்சிட்டிருக்கு…தாத்தாவோட முகம் மட்டும்தான் மூளையத் தூண்டுது. அவங்க மகிழ்ச்சியா இருக்கிறது அப்ப மட்டும்தான். மத்தபடி எப்பவுமே பதற்றம்தான். கடைசிவரைக்கும் அவங்க அந்த மகிழ்ச்சியிலேயே இருக்கட்டும்னு நினைச்சேன். ஒரு கனவை உருவாக்கி அவங்கள அதுக்குள்ள உக்கார வச்சிரணும்….”      -
       ஆனந்தியின் இளம்பிராயத்திலிருந்தான அனைத்துப்  புகைப்படங்கள் வழியாக அவர் வாழ்க்கையைத் தொகுத்துக் கொள்கிறான் கோதண்டம். மாதவ் அமெரிக்கா சென்று விட அவன் தங்கை அருணாவைச் சந்தித்து அவள் மூலம் கிடைக்கும் எல்லாப் புகைப்படங்களையும், காணொளிகளையும் காண்கிறான்.  அருணா நிறைய விபரங்களைக் கூறுகிறாள். குறிப்பாக…
       தாத்தா செத்துப் போன பிறகுதான் அம்மா அவரோட சினிமாக்களைப் பார்க்க ஆரம்பிச்சாங்க…தினம் ஒரு படம்…எவ்வளவு வேலை இருந்தாலும் பார்த்திடுவாங்க…ரெண்டு மாசத்துலே எல்லாம் முடிஞ்சி போனவுடனே திரும்பவும் ஒரு சுத்து…. வருஷத்துல எல்லாப் படத்தையும் ஆறு வாட்டி பார்த்திருவாங்க…அப்டியே முப்பது வருஷம்…எல்லாப் படமும் அம்மாவுக்கு ஒண்ணுதான். கண்ணு மட்டும் மின்னிட்டே இருக்கும்….ஆச்சர்யம் என்னன்னா படத்தைப் பத்தியோ, தாத்தா பத்தியோ அம்மா ஒரு வார்த்தை கூடச் சொல்றதில்லே….என்னதான் நினைக்கிறாங்கன்னே தெரியாது….கோயில், குளம் எதிலுமே ஆர்வமில்லே. சினிமா பாக்கறது…இல்லன்னா பால்கனியிலே உட்கார்ந்திருக்கிறது….பதினேழு வருஷம் கிட்டத்தட்ட…அப்பவே அல்ஷைமர் ஆரம்பிச்சிருக்குன்னு மாதவ் சொல்றான்….
       அந்த சினிமாவை எப்படி வடிவமைப்பது என்று திட்டமிடத் தொடங்குகிறான் கோதண்டம். ஒவ்வொரு படத்தின் காட்சிகளை வெட்டி எடுத்து, அடிக்குறிப்பிட்டுக் கொடுக்கலாமா என்று யோசனை போகிறது. ஆனால் ஆனந்திக்குத்  தேவையானது அதுவல்லவே என்று தோன்றுகிறது. அவர்களை மீண்டும் ஒரு முறை சந்தித்த வேளையில் ஸ்ரீராமின் குரலை பெரும்பாலும் அணைத்து விட்டே அவர்கள் படம் பார்ப்பதைப் பார்த்து வியக்கிறான். அவன் யோசனை பலமடைகிறது. எப்படித் தொகுத்தால் சிறப்படையும்? காட்சிகளாலேயே ஒழுக்கும், பொருளும் பெற வேண்டும். பலவாறு யோசித்து காட்சிச் சட்டகங்களால் ஆன இரண்டாயிரம் நிமிடப் படம் ஒன்றைத் தயாரித்து  உதவியாளன் மகேஷிடம் காண்பிக்க, அவன் அறவே மறுத்துவிடுகிறான் அதை. கண்டமேனிக்கு வெட்டி ஒட்டி இருக்குதே சார்…அர்த்தமேயில்லை…என்று விடுகிறான்.
       மீண்டும் மீண்டும் காட்சிகளை  வெட்டி, மாற்றி மாற்றி அடுக்கி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய படமாக அது உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றை மட்டும் அப்போது துல்லியமாய் உணர்கிறான். எத்தனை காட்சிகளை மாற்றினாலும் ஸ்ரீராம் மட்டும் மாறுவதேயில்லை.
       சார்…இது பேயோட வேலை…ஆவி…அவருதான் உங்க கையிலே புகுந்துகிட்டு இந்த வேலையைச் செஞ்சிருக்கார்….இத உதவியாளனின் பதிலாய் இருக்கிறது.
       கோதண்டத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சில நாட்கள் அதைத் தொடாமல் இருக்கிறான். ஆனால் நினைவுகள் மட்டும் அதைப்பற்றியே ஓடிக்கொண்டிருந்தன.
       அழித்துவிடு என்கிறான் உதவியாளனிடம். அவங்களுக்கு இந்தப் படம் பிடிக்காது என்று வேறு மகேஷ் கூறி, அழிச்சா பணம் வராது என்று பயமுறுத்துகிறான்.
       இச்சமயத்தில் மாதவ் பேசுகிறான். அவனிடம் இரண்டு லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருப்பதை நினைத்துக் கொண்டே படம் முடிஞ்சாச்சா? என்று கேட்கும் மாதவ்விடம் முடிந்து விட்டது என்று சொல்லி விடுகிறான்.   வீட்டுல Nஉறாம் தியேட்டர் ரெடி பண்ணியிருப்பதைச் சொல்கிறான். இதையே போட்டுக் காட்டிவிடுவது என்று முடிவு செய்து விடுகிறான் கோதண்டம்.
       டி.வி. ரிப்பேர் செய்யும் மெக்கானிக் என்ற வகையிலேயே கோதண்டத்தை அறிந்திருக்கும் ஆனந்தி, டி.விய ரிப்பேர் செய்தாச்சா? என்று கேட்க, ஆச்சு என்றும் பாருங்க என்றும் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறான் கோதண்டம்.
       ஆனந்தியின் உடல் அதிர்கிறது. கைகளைக் கும்பிடுவதுபோல் நெஞ்சோடு சேர்த்து  அணைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். கண்கள் மின்னிக்கொண்டேயிருக்கின்றன. திரையில் ஸ்ரீராம் நிகழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு அதிசயம்…திரையில் வேறு எவருமே இல்லை.
       இது நான் பார்த்த படமில்லையே…!அதிர்கிறான் கோதண்டம். அவனும் முழுமையாக ஈடுபடுகிறான். அறைக்குள் ஓசையே இல்லாமல் ஒளி மட்டும். அலை ததும்பிக் கொண்டிருந்தது.  ஐந்தாறு மணி நேரங்கள் கடக்கின்றன. ஆனந்தி சக்கர நாற்காலியிலிருந்து எழுந்தபோது வியப்பில்லா விழிகளுடன் நோக்குகிறான். கைகளை விரித்தபடி திரையை நோக்கி ஓடுகிறாள் ஆனந்தி. ஸ்ரீராம் துயர் கனிந்த சிரிப்புடன் அவளை நோக்கிக் கைகளை விரித்து அழைக்கிறார். அவள் ஒரு நடை பழகும் குழந்தை போலவும், அவர் ஒரு பயிற்றுவிக்கும் தந்தை போலவும், ஆனந்தியைப் பற்றி இடுப்பில் ஏற்றிக் கொள்கிறார். குட்டை ஃபிராக்குகளுடன் அவள் கால்களை உதைத்துச் சிரிக்கிறாள். அவள் ஆடை பறக்க வட்டமாகச் சுழற்றித் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு நடக்கிறார்.  கடல் அலையடித்துக் கொண்டிருந்தது. அவர்களின் காலடிகளை அலைகள் அழிக்கின்றன. சக்கர நாற்காலி வெறுமையாக ஒளியிலாடி அமர்ந்திருக்கிறது.
       ஞாபகங்கள் மங்க மங்க….தந்தையைப் பற்றியதான அவள் மனச் சித்திரம் இளம் பிராயத்தின் அச்சு அசலாகத்  தெளிவடைந்திருப்பதை உணர முடிகிறது. படிக்கும் வாசக மனம் ஆதிர்ச்சியும் ஆனந்தமும் கொண்டு நிறைந்து பொங்கி வழிகிறது. எண்ண அடுக்குகளின் ஒருங்கிணைப்பில் அந்தப் பால்ய காலப் பெரு வெளியில், பாசமும் நேசமும் மிக்க   தந்தையின் அன்புச் சிறைக்குள் சிக்கிக் கிடந்த வசந்த காலங்கள் மட்டுமே அவள் நினைகளுக்குள் மிஞ்சியிருக்கின்றன. அர்த்தமுள்ள சாராம்சமாக ஆனந்திக்குள் படிந்திருக்கும் அந்த  இனிய நினைவுகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
       இத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு எழுதப்பட்ட இப்படைப்பு முழுமையான மன நிறைவைத் தரும் அதே நேரத்தில் ஜெயமோகன் அவர்களை நம் சிந்தையில் மதிப்பு மிக்க ஒரு ஸ்தானத்தை ஏற்படுத்திப் பெருமை கொள்ள வைக்கிறது.  
                                                -----------------------------------------------------
      

      

      
      

            
                    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...