27 மார்ச் 2019

“வருகைக்கான ஆயத்தங்கள்“ – சிறுகதைகள் – இதயா ஏசுராஜ் - வாசிப்பனுபவம்




“வருகைக்கான ஆயத்தங்கள்“ – சிறுகதைகள் – இதயா ஏசுராஜ்  - வாசிப்பனுபவம்
       இதயா ஏசுராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது என்று பின் அட்டையில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உள்ளே இருக்கும் படைப்புக்களைப் படிக்கும்போது அப்படித் தெரியவில்லை. ஏற்கனவே ஐந்தாறு தொகுதிகள் வெளியிட்டிருந்தால்தான் இப்படியொரு ஆழமான எழுத்து சாத்தியம். இந்தத் தொகுப்பைப் படித்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது. இலக்கியத் தரமான சிறுகதைகள் இந்தத் தொகுதியை அலங்கரிக்கின்றன.
       வாசிப்பனுபவமாக அத்தனை கதைகளையும் சொல்ல வேண்டும் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். அப்படி ஒரு தொகுதியை  எடுத்துக் கொண்டு அதில் உள்ள அனைத்துக் கதைகளையும் பற்றி விலாவாரியாகச் சொல்லி அது குறைந்தது பதினைந்து பக்கங்களுக்கு நீண்டு, கடைசியில் எவரும் அதைப் படிக்காமல் நகர்ந்து போனதுதான் மிச்சம். படைப்பாளிக்கு மட்டுமே திருப்தி அளித்தது அது. வெளியிட்ட பதிப்பகத்தார் கூட “நன்று“ என்றதோடு சரி. சிலவற்றை மட்டும் சொல்லி, புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டுவதுதான் சிறந்த பணி. ஆனால் ஒன்று அதுவே ஐந்தாறு பக்கங்களுக்கு நீள்கிறது. தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் நிச்சயம் அதைத் தவற விட மாட்டார்கள்.
       இன்றைய இளம் தலைமுறையினர் மிக நன்றாகவே எழுதுகிறார்கள். வழக்கமான மடிசஞ்சி விவகாரங்களை விட்டு விட்டு புதிய தளங்களில் அவர்களால் ஜம்மென்று  பயணிக்க இயல்கிறது. நிறையப் பேர் அப்படி எழுத வந்து விட்டார்கள்..
       க்ளாசிக் வரிசையிலான பழம் பெரும் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்ல பலரும் இருக்கிறார்கள். அவர்களின் படைப்புக்களின் வழிதான் இவர்கள் எழுத வந்திருக்கிறார்கள் என்றாலும் அவர்களால் தொடப்படாத பல இடங்களை இவர்கள் தொட்டு, உறவாடி,  கம்பீரமாய்ப் நடை பயில்கிறார்கள் என்று சொல்லலாம்.
       வணிக ரீதியிலான பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பது வேறு. அது பிரசுர சந்தோஷம் சார்ந்தது. அப்படி வரும்போது பக்க அளவுகள், இத்தனை வார்த்தைகளுக்குள் என்கிற கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன. நாம் அசலாக எழுதிய படைப்புக்களுக்கு உயிரே இல்லாமல் போய்விடும் அபாயம்  சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது அங்கே.  இலக்கியச் சிற்றிதழ்களில் எழுத முனைவது என்பது வேறு. அங்கே அந்த பயம் இல்லை.எடிட்டிங் என்பது இல்லை.  தரம் மட்டுமே தலை தூக்கி நிற்கிறது.
இதயா ஏசுராஜ் இலக்கியச் சிற்றிதழ்களில்தான் எழுதியிருக்கிறார். உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே, மலைகள்.காம், கதை சொல்லி, கிழக்கு வாசல் உதயம்  என்று பயணித்திருக்கிறார்.  அவரால் கதைகளை இறுக்கமாக, ஆழமாக, சம்பவங்களை மற்றும் காட்சிகளைக் கோர்த்துக் கோர்த்து கதையை சுவையாக நகர்த்த முடிகிறது. எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கிறது. மனிதர்களுக்கிடையிலான பரஸ்பர அன்பும், நேயமும் வாழ்க்கையின் விட்டுக் கொடுத்தல் சார்ந்த அனுபவங்களும், சொந்த நஷ்டங்களைப் பொருட்படுத்தாத பண்பாட்டு அசைவுகளும், .மானிட வாழ்க்கையின் மேன்மைகளை நமக்குச் சொல்லிக் கொண்டே பயணிக்கின்றன.
மாய யதார்த்த வெளியில் கதை சொல்லும் முறை இவருக்குப் பிடித்தது போலும். சில கதைகளை அப்படியான வெளிகளில் சரளமாய் உலவ விட்டு வெற்றியும் கண்டிருக்கிறார்.
முதல் கதையான உயிர்க்குமிழி என்கிற கதையைப் படிக்கும்போது, இதையே இவர் புத்தகத்தின் தலைப்பாக வைத்திருக்கலாமே என்றுதான் எனக்குத் தோன்றியது. ஆனால் இந்தக் கதையை எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட மனநிலை வேண்டும் என்று சொல்வேன். அப்படி ஒரு கதாபாத்திரத்தை சாமான்ய மனிதன் தன் கற்பனையில் உலவ விட முடியுமா என்று மனசு பயம் கொள்கிறது.
மனசை சூன்யம் போன்ற ஏதோவொன்று ஆட்கொண்டால்தான் அல்லது அப்படியான மனநிலைக்கு நம்மைப் பயிற்றுவித்துக் கொண்டால்தான் இம்மாதிரி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க முடியும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இப்படியான ஒரு கதையைச் சொல்லித்தான் ஆக வேண்டுமா என்று கூட மனதுக்குத் தோன்றுகிறது.
இலக்கிய ரீதியான, ஆழமான, காத்திரமான படைப்புக்களைக் கொடுக்க நினைக்கும்போது, முதலில் அந்த உலகுக்குள் நம்மைப் புகுத்திக் கொண்டு மூழ்கித் திளைக்க வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால் எந்தக் கதாபாத்திரத்தை முன் வைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதுவாக நாமே மாறி நின்றால்தான் அது சாத்தியப்படும் என்று கூடச் சொல்லலாம். கதைக்கான களம், சூழல், அதை உய்த்துணரும் பாத்திரத்தின் மனநிலை, அந்த மனநிலைக்குள் புனைவாகக் கொண்டு இணைக்க வேண்டிய ஏற்கனவே நம் ஆழ் மனதில் படிந்து போய்க் கிடக்கும் காட்சியலைகள் என்பதாக ஒரு கதையை வடிவம் கொடுத்துத் தூக்கி நிறுத்தும்போது, படைப்பு சிறந்து விளங்குகிறது.
அந்த அக்கறையோடு  உயிர்க்குமிழி என்கிற இந்தக் கதையை கவனமாக எழுதியிருக்கிறார் இதயா ஏசுராஜ். மனமும் செயலும் அசிங்கப்பட்டுப் போகும்போது, விகார எண்ணங்களும், காணும் காட்சிகளின் மிகு கற்பனை வக்கிரங்களும் சேர்ந்து மனிதனை இழி நிலைக்குத் தள்ளி விடும் அபாயமும் புத்தி தெளிந்த பிறகு ஏதும் சக்தியற்றவனாய் குற்றவுணர்வு உறுத்த, தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்பவனுமான வெவ்வேறு மனநிலைக்குத் தள்ளப்படும் ஒருவனை நினைக்கும்போது நமக்கு அவன் செயல்களை விட, அவனின் இருப்பு மீதான பரிதாபம்தான் மேலிடுகிறது. இந்த உயிர்க்குமிழி கதையில் அப்படி ஒரு காரெக்டரை அழுத்தமாய் உலவ விட்டிருக்கிறார் ஏசுராஜ். அவருக்கு நம் பாராட்டுக்கள்.
லூசியா மாலை நேரப் பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்குச் செல்வதும், பிரார்த்தனைக்கு நேரமிருப்பதை உணர்ந்து அங்குள்ள இயேசுவின் பாடுகளைச் சொல்லும் சிற்பங்களைக் கவனிக்கும்போது தன்னை மறந்து நெஞ்சுருகுவதும், அண்ணாந்து பார்த்து கதி கலங்கி நிற்கையில் இயேசுவின் சிற்பத்திலிருந்து வழியும் ஒரு துளி குருதி அவளது கன்னத்தில் விழுவதும், தான் நிற்குமிடம் மட்டும் தனியே சுழல்வதாய் அவள் உணர்வதும், ஏனிந்த அதிசயம் நிகழ்ந்தது எனத் தெரியாமல் குழப்பம் கொள்வதும், ஒரு வேளை பெயின்ட் ஏதும் ஒழுகியிருக்குமோ என்று சந்தேகம் கொள்வதும், அதே சமயம் இப்படி அவநம்பிக்கை கொள்ளலாமா என்று அசரீரி ஒன்று கேட்பதும், விடியற்காலையில் நதிக்கரைப்பக்கம் செல்கையில் அங்கே நீளமான கேசமும், தாடியுமாக (ஏசுவைப்போல்) கருணை நிறைந்த விழிகளோடு ஒரு இளைஞனை சந்திப்பதும், உட்காரு லூசியா…என்று அவன் சொல்ல…இவள் அதிர்ந்து அதே குரல்…அதே குரல்…நேற்று தேவாலயத்தில் கேட்ட அந்தக் குரலேதான் இந்தக் குரலும் என்று நெஞ்சடைக்க அதிர்வதும்….ஆக இப்படிப் பல்வேறு விதமான அனுபவங்களுக்கு உள்ளாகிறாள் லூசியா….உன்னத வழி நடத்தலின் நோக்கமாகவே எல்லாமும் இருக்குமோ என்கிற தெளிவான புரிதலில் கர்த்தரே என்னைக் காத்தருளும்…என்பதாக வேண்டி நிற்கிறாள். மத்தேயு 24 வது அதிகாரம், ஐந்தாவது வசனம்  அவள் கண்ணில் பட்டு, நானே கிறிஸ்து என்று என் நாமத்தைத் தரித்துக் கொண்டு பலரும் வருவர்…வஞ்சிப்பர்…என்பதான உபதேசம்…கண்டு பீதியின் உச்சத்திற்குப் போகையில் வீட்டின் அருகாமையிலுள்ள பன்னீர் மரத்தடியில் அந்தப் பனிரெண்டு சீடர்களும் நின்றிருப்பதை அவள் பார்த்தாள் என்பதாக இந்தக் கதையை நிறைவுக்குக் கொண்டு வருகிறார் ஏசுராஜ். அவரின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைக் கேள்விக்குட்படுத்தி, மாய யதார்த்தப் பின்னணியில்…சொல்லப்பட்டிருக்கும் இப்படைப்பு இறைவனின்பாலான ஈர்ப்பை நமக்கு உபதேசிக்கிறது என்று கொள்ளலாம். வருகைக்கான ஆயத்தங்கள் என்ற புத்தகத் தலைப்புக் கொண்ட இச்சிறுகதை….மதம் சார்ந்த நம்பிக்கைகளை அழுத்தமாய் எடுத்துச் செல்லும் படைப்பு.
மரண நாள் வாழ்த்துகள் என்கிற இவரது இன்னொரு கதை மாய யதார்த்தப் பின்னணியில் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.ஃ இரு சக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்த நரேனின் மரண நேரம் பிற்பகல் ஒன்று முப்பதுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது….என்று ஆரம்பித்தால்…எது நிச்சயித்தது, யார் நிச்சயித்தார்கள்…? என்கிற கேள்விகளோடு நாமும் பின்தொடரும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நிச்சயிக்கப்பட்ட மரணத்திற்கு முன்னால், இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு பெற்றோரைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்று எண்ணமிடுகிறான் நரேன்….அலுவலகத்தில் சிலரோடு இன்னும் சிறிது நேரம் பேசியிருக்கலாமே என்று எண்ணுகிறான். உடன் பணியாற்றும் நந்தினியோடு இன்னும் சற்று நேரம் மனம் விட்டுப் பேசியிருக்க லாமே என்று எண்ணமிடுகிறான். ஊருக்கு வெளியே வண்டியை ஓட்டி வருபவன்…ஒரு கடை வாசலில் நின்று இளைப்பாறுகிறான். அங்கே பழைய பாக்கி கொடுக்காத ஒருவரிடம் சற்றே வாக்குவாதத்திற்குப் பின், கேட்ட பொருளைக் கொடுத்தனுப்பும் கடைக்காரர், போனால் போகிறது அவன் அடுத்த வாரம் மரண நாள் விழா கொண்டாடப் போகிறான் என்று சொல்லும் செய்தியைக் கேட்டு தன்னைப் போலவே இன்னும் மரண நாள் குறித்த சிலர் தங்களை நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆறுதல் கொள்கிறான் நரேன். வெவ்வேறு விதமான செயலில் ஈடுபடுவதும், வெவ்வேறு மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களின் மரண நாட்களைப் பற்றி எண்ணமிடுவதுமாக நகரும் இக்கதை கடைசியில் என்னதான் ஆகிறது பார்ப்போம் என்று நம்மையும் அந்த மரணத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. எதை மையமிட்டு கதை சொல்ல ஆரம்பித்தோமோ அதிலிருந்து வழுவாமல், சங்கிலித்தொடராய் சம்பவங்களை இணைத்து, சுவாரஸ்யமாய் கதை சொல்லும் தந்திரம் ஏசுராஜூக்கு நிரம்பவே கைவரப்பெற்றிருக்கிறது. இப்படித் திருப்தி அளிக்கும் கதைகள் இத்தொகுதியில் பலவுள்ளன.
வெல்லும் சொல் பதிப்பகத்தார் இதயா ஏசுராஜைப் பற்றிக் குறிப்பிடுகையில் இப்படிச் சொல்கிறார்கள்.
பெரும்பாலானோர் புழங்காத கதை வெளியில் தன் மொழியோடு இளைப்பாறுகிறார். கதைகளுக்குள் மனித மனத்தின் வன்மம் நடுங்கும் ஒரு சிறு குரலாக ஒலித்தபடி இருக்கிறது. அவஸ்தைகளோடும் வலிகளோடும் கடந்து போகும் கதைகளைச் சுமந்து செல்லும் அடர்த்தியான மொழி. இத் தொகுப்பின் சில கதைகளை விட்டு விட்டு இனி தற்காலச் சிறுகதைகளைப் பற்றிப் பேச முடியாது.  இக்கருத்தை அப்படியே நாமும் ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது.
வாழ்வியல் அனுபவமும், மாய யதார்த்தமும் கலந்த கலவையாகவே இவரது கதைகள் வெளிப்படுகின்றன. இவர் சொல்வதுபோலவே அடுத்தவர் தொடாத, அதிகம் புழங்காத கதைக் களனாகவே எடுத்துக் கொண்டு தன் படைப்புக்களைத் தந்திருக்கிறார். இவரது முதல் தொகுப்பான இப்புத்தகம், அடுத்தடுத்த தொகுப்புகளை எப்போது கொண்டு வருவார் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.  இதனினும் மேம்பட்ட, இலக்கிய உச்சங்களைத் தொடும் ஆகச் சிறந்த படைப்புக்களை நிச்சயம் இதயா ஏசுராஜ் அவர்களால் தர முடியும். அந்த நம்பிக்கையை இத்தொகுதி ஏற்படுத்துகிறது. இத்தொகுதி கண்டிப்பாக ஒவ்வொரு வாசகர்களாலும் விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டிய அவசியம் சார்ந்தது என்பதனால்தான், வாசிப்பனுபவத்திற்கான பக்க அளவுகள் கருதி, மூன்றே கதைகளோடான அனுபவங்களை மட்டும் சொல்லி முடித்திருக்கிறேன்.
அனுமதிக்கப்பட்ட காலம், சாண்பிள்ள, தாதன், நிழலைத் தழுவியவன், நீர்வளையம், வெள்ளச்சி, ஆயுதம், , கை நிறைய டாலர், கனவில் நெளியும் வாசனை முகம், என்று இவர் வைத்திருக்கும் தலைப்புகளே, அந்தந்தத் தலைப்புகளை எவ்வாறு நிறுவுகிறார் பார்ப்போம் என்று நம்மை உற்சாசமாகப் படிக்க வைத்து விடுகிறது. மொத்தம் 15 கதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு ஒரு கொடை என்றே சொல்லி பெருமைப் படுத்துகிறேன். இதயா ஏசுராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
                           -------------------------------------------





16 மார்ச் 2019

“திரும்பி வரும் தருணம்“ –ஸிந்துஜா – குறுநாவல் – வாசிப்பனுபவம்





“திரும்பி வரும் தருணம்“ –ஸிந்துஜா – குறுநாவல் – வாசிப்பனுபவம்
வெளியீடு – கணையாழி – கலை இலக்கியத் திங்களிதழ் – மார்ச் 2019
                           -------------------------------------------
       சின்ன வயதில் தந்தையால் மிகவும் கண்டிப்பாக வளர்க்கப்பட்ட பெரியவர்கள், தனது குடும்பத்தில் மகனிடம் அதே கண்டிப்புடன் பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் அனுபவித்த அடி, உதை, திட்டு, வசவு இப்படியான கஷ்டங்கள் எல்லாமும் தன்னோடு போகட்டும் என்கிற மனநிலைக்கு வந்து சமன் ஆகி, தன் பிள்ளைகளுக்கும் அந்தக் கேடு வேண்டாம் என்கிற இரக்க நிலையில், பெற்ற பிள்ளைகள் அடி பிறழும்போது அல்லது கோணல் ஏற்பட்டுப் போகுமோ என்று மனதில் அச்சம் கொள்ளும்போது அதை வாய் வார்த்தையாய்க் கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். தப்பிப் போகுமோ என்று மனதிற்குள் தண்டிக்க வேண்டும் என்கிற கோபம் இருந்தாலும், செய்கையில் அது தீவிரமாக வெளிப்படாது. அப்படியே வெளிப்பட்டாலும் ஓரிரு முறை சொல்லிப் பார்த்து, அதுவும் பலனளிக்காமல் போகும் தருணங்களில் சற்றே கோபத்தின் அடையாளமாக சில அதீத   வார்த்தைகள் வெளிப்படும். இப்படியான நடவடிக்கைகள் அந்தத் தந்தையின் முதிர்ந்த, பக்குவப்பட்ட தன்மையின் இருப்பு நிலை.
       ஆனால் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு அவையே எரிச்சலூட்டும் விஷயமாக இருந்துவிடுவதுதான் துர்லபம். எல்லாமும் நம் நன்மைக்காகத்தான் என்று புரிந்தாலும், எனக்குத் தெரியாதா….சும்மா நச்…நச்சுன்னு சொல்லிட்டே இருக்கணுமா என்று சலிப்புக் கொள்ளும் நிலையில்தான் பெரியவர்களின் அறிவுரைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
       சும்மா அட்வைசக் குடுக்காத….என்று தந்தையிடமே சொல்லும் எத்தனையோ மகன்களை இன்று நாம் காண முடிகிறது. இப்படிச் சொன்னால் கூடப் பரவாயில்லை….இப்போதுதான் புதிய பாஷைகள் நிறையக் கிளம்பி நடைமுறையில் இருக்கின்றனவே… எல்லாம் எனக்குத் தெரியும்…சதா மொக்கையப் போடாத….என்று படு  கொச்சையாகப் பேசுகிறார்கள். ஜல்லியடிக்காத….என்பார்கள். அதாவது சொன்னதையே சொல்லிச் சொல்லிக் கொல்வது என்பது பொருள்.  இந்த இந்த வார்த்தைகளுக்கு இவைதான் அர்த்தம் என்று எப்படி முடிவு  செய்து பிரயோகிக்கிறார்கள், இவையெல்லாம் எப்போது இந்தச் சமுதாயத்தில் பரவி புழக்கத்திற்கு வந்தன என்பதே நாம் அறியாத புதிர்.தலைமுறை இடைவெளியில் நிகழ்ந்து விட்ட அபத்தங்கள்.  அறிவியல் தொழில் நுட்பம் எப்படி திடீரென்று விரிந்து பரவி மூத்த தலைமுறையின் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போய்விட்டதோ, அதுபோலவே இந்த இளம் தலைமுறைகளின் பேச்சும், நடவடிக்கைகளும் என்று தாராளமாய்ச் சொல்லலாம்.
என்னென்னவோ  வார்த்தைகள் இன்று நிறையப் புழங்குகின்றன. மொக்கை, சப்பை, நூல் விடுதல், கடலை போடுதல், செம, மச்சி, மச்சான், மாப்ள, மாமு,டப்பு…டுப்பு…….இன்னும் சொல்லிக்கொண்டே  போகலாம். இப்படிப் பேசுவதுதான் ஃபேஷன் இன்றைக்கு என்று நினைத்து, மகனோடு சரிக்குச் சமமாக அவ்வப்போது மனதுக்குள் நினைவு வரும் இம்மாதிரியான கொச்சைச் சொற்களை மகனை நோக்கி வீசும் தந்தைமார்களும் உண்டு. தோளுக்கு மேல் போனால் தோழன் என்று மகனோடு நட்பாய்ப் பழகுகிறார்களாம்…இந்த வகை வேதனைகளையும் காணத்தான் செய்கிறோம். சற்றுத் தீவிரமாய்ச் சொல்லப் போனால் இந்த வார்த்தைகள் எல்லாம் ஒருவனின் காரெக்டரை ஸ்பாயில் பண்ணும் அடையாளங்களாக இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.  இவற்றை அடிக்கடி பயன்படுத்தும் ஒரு இளைஞனை மதிப்போடு நாம் நோக்க முடியாது என்பதுதான் நிச்சயமாய் இருக்கிறது.  இவையே இன்றைய நடைமுறை உலகின் இளைய சமுதாயத்தின் முற்போக்கு அடையாளங்களாய்த் திகழ்கின்றன.
       ஆனால் இந்தக் கதையின் நாயகன் சச்சி அப்படியான விநோத வார்த்தைகளைப் பிரயோகிப்பதில்லையென்றாலும், அப்பாவின் கண்டிப்பில் சலிப்புக் கொள்கிறான். மனதுக்குள் கோபம் கொள்கிறான். நேரடியாய் எதிர்ப்பதில்லையாயினும் முகம் சுளிக்கிறான்.
       ஊரிலிருந்து காலையில் வந்து சேரப் போகும் மகனுக்காக இரவு முழுக்கத் தூங்காமலேயே கழித்து விடுகிறார் தந்தை. மகனின் மீதான பாசம்.
       ராத்திரி பூரா கொட்டு கொட்டுன்னு கிடந்தீங்களா என்று மனைவி கேட்க… …நீயும்தானே…என்கிறார் அவர். பையனுக்குப் பிடித்த ஸ்பெஷல் ஐட்டங்கள் என்று பாலம்மாள் கூறும்போது பாயசம் உண்டுதானே…? என்று ஆசையை மறைமுகமாய் வெளிப்படுத்துகிறார்.
       இவ்வளவு சுகர் வச்சிட்டு…இது வேறயா…என்று மனைவி கடிந்து கொள்ள “காஞ்சு வரான்” என்று அவள் சொன்னதின் உண்மையை மனது உணர மகனுக்குப் பிடித்த ஐட்டங்களாய்  அன்று தயாராவதில் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.
                ஆட்டோவில் இறங்கி வீட்டுக்குள் நுழையும்போதே பெற்றோர்களை நமஸ்கரித்து  ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளும் மகன். வந்து விலாவாக நலம் விசாரித்துப் பேச முடியாத நேரத்தில் உடனே  அலறும் தொலைபேசி. பேசுவது யார் என்று  அறியத் துடிக்கும் மனம். அது  பெண்ணா,  ஆணா…..பெண் எனில் பேர் என்ன? என்ற கேள்வி. எமிலி என்றதும் கிறிஸ்துவா? அழகா இருப்பாளா? என்று அம்மா கேட்க…ஏன் உன் பையனுக்குப் பொண்ணு பார்க்கப் போறியா? என்று கைலாசம் இரைய…என் ஃப்ரென்ட்ஸ் எல்லாரையும் கல்யாணம் செஞ்சுக்கணும்னா தசரத மகாராஜாவாத்தான் நான் இருக்கணும் என்ற அவனின் பதிலில் ஆறுதல் கொள்கிறார் தந்தை.
       குளித்து விட்டு வந்து என்றோ ஒரு நாள் வரும் மகனோடு சேர்ந்து சாப்பிடுவோம் என்று மனம் அவாவ, உறங்கிக் கொண்டிருக்கும் பையனை நினைத்து, என்னைக்கோ வரான்…சேர்ந்து சாப்பிடலாம்னு பார்த்தா….என்று வருந்துகிறார்.
       படுக்கையில் அடக்க ஒடுக்கமாய்ப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். உருளுவது, புரளுவது, பிறத்தியார் மேல் கால் போடுவது என்கிற ஜோலியெல்லாம் கிடையாது….இளம் பிராயம் முதலே அதுவெல்லாம் அவன் பழக்கமில்லை என்று தோன்றுகிறது.
ஒழுக்கத்தின் அடையாளமாய் இது நினைக்கப்பட, மூடி வச்ச புஸ்தகம் மாதிரில்ல படுத்துக் கிடக்கான் என்று அவருடைய சகோதரி சொல்வதை நினைத்துக் கொள்கிறார். தூங்கட்டும் நல்லா….என்று பொங்கிய மனசை அடக்கிக் கொள்கிறார்.
வியாபாரத்தைக் கவனிப்போம் என்று கடைக்குச் சென்றுவிடுகிறார். வேலைகளை முடித்து நாலு மணிக்கு மேல் வீடு வந்து சேரும்போதே சாப்பிட்டானா? என்று விசாரிக்கும் மனது.
சாப்டுட்டு இப்பத்தான் ஃபிரண்டை பார்க்கப் போயிருக்கான்….என்ற பதிலில் எப்போ வருவானாம்? என்று கேட்க….ஏழு எட்டு மணிக்கு வந்திர்றேன்னான் என்று சொல்லி அவனுக்குப் பிடித்த இடியாப்பம் பண்ணி வைக்கிறதாகச் சொல்லியிருப்பதால் நிச்சயம் வந்திருவான் என்று காத்திருக்கிறார்கள். ஆனால்  சச்சி இரவு வீட்டுக்கு வராமல், ஃபோன் வேலை செய்யவில்லை என்று நண்பனின் ஃபோன் மூலம் காலை வருவதாகச் சொல்ல மீண்டும் ஏமாற்றமாகிறார் தந்தை.
சீக்கிரம் வா என்று நீ சொல்ல, சீக்கிரம் வந்திர்றேன்னு வீட்ல சொல்லிட்டு இங்க வந்திருக்கேன்…என்கிறான் சச்சி எமிலியிடம். அவள் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தைச் சொல்லி, சற்று நேரத்தில் அவள் அம்மாவிடமிருந்து வரும் ஃபோன் மூலம் அந்தப் பையனை வேண்டாம் என்று சொல்லியாயிற்று என்ற விபரம் அறிந்து மகிழ்கிறார்கள் இருவரும். பிறகு அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நண்பன் திருமேனியைப் பார்க்கக் கிளம்புகிறான். அங்கு தேவா என்றொரு நண்பனையும் சந்திக்கிறான். அன்று பார்ட்டி என்று ஏற்பாடாகிறது.  தேவாவை ஜெயந்தி என்ற பெண் அழைக்கிறாள்.உடனே சற்றே பதறியவனாய் தேவா கிளம்பிப் போகிறான். இது சச்சியை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீ ஏன் ஷாக் ஆகுறே…? பணம், அதிகாரம் செல்வாக்கு இருந்தா இதான் ப்ராப்ளம்…என்று திரு கூற, பெண் சம்பந்தப்பட்ட பிரச்னையை உணர்ந்து இதை என்னால ஜீரணிக்க முடில என்று சச்சி கூற, அவனுக்கும் நம்ம வயசுதான் என்கிற அளவில் அவன் சிந்திக்க…வயசுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்ல….என்று திருமேனி மறுக்கிறான். சூழலும் வசதி வாய்ப்புகளும் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாய்க் கொண்டு  செல்கிறது என்பதை நாம ரெண்டு பேரும் ஒரே வயசு…நீ தண்ணியடிக்கிறதில்ல…நான் அடிக்கிறேன். தேவா ஒரு படி மேல போயி பொம்பளை கிட்ட விளையாடுறான்…என்கிறான் திருமேனி.
ஏதோவொரு வகையில் மனச் சங்கடம் கொண்ட சச்சி, நான் வீட்டுக்குப் போகணும் காத்திருப்பாங்க…என்று சொல்ல, நண்பனின் வற்புறுத்தலில் மெஸேஜ் அனுப்பி காலை வருவதாக அப்பாவுக்குச் சொல்லி விடுகிறான். காலையில் தாமதமாக வீடு அடையும்போது, இப்பவாவது வீட்டுக்கு வரணும்னு தோணிச்சே…என்று கைலாசம் வரவேற்கிறார். உனக்காக இடியாப்பம் பண்ணி வச்சிருந்தேன் என்று தாயார் வருந்த, உங்க அப்பாவுக்கு ரொம்ப கோபம்…என்க…கிளப்புக்கு போனவன் கொஞ்சம் லேட்டானாலும் ராத்திரி வீட்டுக்கு வந்திருக்கலாம்…என்று அப்பா சொல்ல…இவருக்கு எப்படித் தெரிந்தது என்று சச்சி திகைக்க, உனக்கும் அந்தப் பழக்கம் வந்திருச்சா…? என்கிறார் மேற்கொண்டு. என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு? என்று கோபம் கொள்கிறான் சச்சி. நீ நல்லவனா இருக்கக் கூடாதுன்னு கெடுக்கிறதுக்கு வெளில நூறு பேர் காத்துக் கிடப்பாங்க…என்று எச்சரிக்கிறார். அத்தோடு அந்தப்  பெண் எமிலி ராத்திரி பேசலேன்னா எங்களுக்கும் தெரிஞ்சிருக்காது என்கிறார். ரொம்ப சிநேகிதமோ, ராத்திரி அவ்வளவு நேரங்கழிச்சி ஃபோன் பண்ணனுமா என்ன? என்கிறார். கேள்வியில் தொக்கியுள்ள சந்தேகத்தை, பயத்தை இவன் உணர்ந்தாலும், துளைத்துத் துளைத்து அப்படிக் கேட்டது மனக் கசப்பை உண்டாக்குகிறது. அவரின் வயதுக்கு மரியாதை கொடுத்து மேற்கொண்டு ஏதும் அவரைக் கேட்காமல் தன் அறைக்குச் செல்கிறான். சச்சியின் செயல், நடத்தை மூலமாக அவன் காரெக்டர் நமக்கு முன் வைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் ஒரு பையன் இந்த அளவுக்கு இருப்பதே பெரிய விஷயமாயிற்றே…? என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அப்படியொன்றும் நீ வித்தியாசமான ஆள் இல்லை  என்று அப்பா கைலாசம் தன் தலையில் தட்டிச் சென்று விட்டதாய் ஒரு உறுத்தல் வருத்தம் அவனுக்கு. இதுவும் ஒரு வகையான அடக்கு முறைதான் என்று அவன் இளம் உள்ளம் நினைக்கிறது.
எமிலிக்கு ஃபோன் செய்ய,  அவள் மற்றவர்கள் யாரும் அழைக்கும் முன் அழைத்து விடுவோம் என்ற அவசரத்தில் வீட்டிற்குப் பேசி, டின்னருக்கு அழைக்கலாம் என்று ஃபோன் போட்டதைச் சொல்ல….எமிலியின் அழைப்பை இவன் அம்மாவிடம் சொல்ல,  அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை என்க, ஒரு .போன் கால்ல எல்லாம் புரிஞ்சிண்டுட்டாராமா? என்று கோபமாய்க் கேட்கிறான். அப்பாவைப்பற்றி இப்படியெல்லாம் பேசமாட்டானே என்று தாய் திகைக்கிறாள். இன்றைய இளைஞர்களுக்கு, தான் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு பொறுக்க முடியாததாய் இருக்கிறது என்பதுதான் உண்மை. தங்கள் நலன் நோக்கியதான நடவடிக்கை அது என்பதை அவர்கள் பின்னால்தான் உணர நேருகிறது.
மீண்டும் மாலை எமிலியைப் பார்க்கப் புறப்படுகிறான். அங்கு அவளது பெற்றோர்களுடன் பேசிக் கொண்டிருக்க, கைலாசம் அவனுக்குப் பேசுகிறார். சீக்கிரம் வந்துருவியா? என்று கேட்கிறார். தாமதிக்காது புறப்படுகையில் இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்? என்று சச்சி கேட்க, வந்ததிலிருந்து ஊருக்குப் போகிற வரை தன் கூடவே இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்..அவருக்கு என் மேலிருக்கும் காதலின் உக்கிரத்தை என்னால் தாங்க முடில…என்று சச்சி சொல்ல….இட்ஸ் ஆப்வியஸ்….என்கிறாள் எமிலி. அவளுக்குக் குழந்தை மனம் என்று அவனுக்குத் தோன்றுகிறது.
எதற்கு இப்படி ஃபோன் செய்கிறார்…என்னதான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்…?என்று எரிச்சலுறுகிறான். அதைப்போலவே வீட்டிற்குள் நுழைந்ததும், இன்னிக்கும் லேட்டாகி  அங்கியே தங்கிடுவியோன்னு நினைச்சேன்…என்று வேறு சொல்கிறார். கதிர்வேலு சித்தப்பா  அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்ததைத் தெரிவிக்க, அடடே…அவரை நானில்ல போய்ப் பார்க்கணும்…காலைல முதல் வேலையா போயிடுறேன்…என்று இவன் மரியாதை நிமித்தம் சொல்ல…ஆமாமா…. அப்புறம் சித்த நாழியாச்சுன்னா ஃப்ரெண்டு, ஃப்ரெண்டின்னு வந்து இழுத்திட்டுப் போயிடுவாங்க…என்கிறார் கைலாசம். அந்தப் பரிகாசம் இவனை மேலும் உறுத்துகிறது..
குற்றவுணர்வு விஞ்ச, காலையில் புறப்பட்டு சித்தப்பா வீடடைந்து அவரோடு பேசிக் கொண்டிருக்கிறான். அவரின் எதிர்நோக்கல் இவனை சந்தோஷப்படுத்துகிறது. வயசுப்புள்ள…ஏழெட்டு மாசங்களிச்சு வரே…கூடப் படிச்சவன், விளையாடினவன்னு எல்லாரும் பார்க்கணும்பாங்க…ஒரு ரவுண்டு ஊர் சுத்திட்டு வரலாம்பாங்க…விட்டுக் கொடுக்க முடியுமா…என்கிறார். அப்பாவுக்கு நேர்மாறான இந்தப் பேச்சு  இவனை ஈர்க்கிறது. உங்கப்பன் பொலம்பித் தள்ளிட்டான் நேத்திக்கு…வந்ததுலேர்ந்து ரெண்டு வார்த்தை இருந்து பேசுறதுக்கு அவனுக்கு முடிலன்னு பொங்கிட்டான்…என்று சித்தப்பா சிரிக்கிறார். எடுத்துச் சொல்லும் முறையில், நேரடியாய் சம்பந்தப்படாதவர்களால் இதமாய் பதமாய் மன நெருக்கத்தோடு  முன் வைக்கப்படும்போது நியாயங்கள் உணரப்படும் வாய்ப்பு கிட்டுகிறது.
சித்தப்பாவின் வார்த்தைகள்  இவனைச் சமனப்படுத்தும் அந்தத் தருணம்….உரிமையோடு அப்பாவைப்பற்றிச் சொல்கிறான்.  அதுக்காக வாயில வந்ததெல்லாமா பேசுறது? என்று ஆதங்கமாய் வருந்துகிறான். பேச்சோட நிறுத்திட்டான்ல உங்கப்பன்…அதை நினை…என்கிறார் அவர். அந்த வார்த்தைதான் அவனைத் திடுக்கிடச் செய்கிறது. உணர வேண்டிய ஒன்றல்லவா? அறிவுள்ள புத்திசாலிப் பையன் உள்ளிருக்கும் தாத்பர்யத்தை உணர்ந்து கொள்கிறான்.
இந்த இடம்தான் கதையின் திரும்பி வரும் தருணமாகிறது. வீட்டை விட்டுப் புறப்படும்போது, இருந்த மனநிலை…திரும்பி வந்த பின்பு….மாற்று சிந்தனையாக, பொறுப்போடு விகசிக்கிறது. சித்தப்பாவால் சொல்லப்பட்ட அப்பாவின் வாழ்க்கை அனுபவங்கள், அவரது தந்தையால் மிகவும் கண்டிப்பாக வளர்க்கப்பட்ட தண்டனைகளுடன் கூடிய நெடிய காலங்கள், அவனை யோசிக்க வைக்கின்றன. அம்புட்டு கஷ்டப்பட்டிருக்கான் கைலாசம்…தெரியுமா…? என்று அனுபவங்களை அழகாய் முன் வைக்கிறார் சித்தப்பா. சச்சியின் மனம் தெளிவடைகிறது.
அவன் அணிந்திருந்த  கறுப்புக் கண்ணாடியைக் கழற்றியபோது மனமும் வெளிச்சம் கொள்கிறது. வெளேரென்ற வானத்தைப் பார்க்கும்போது புத்துணர்வை அடைகிறான்.. உரிமையுடன் கூடிய அப்பாவின் தன் நலம் சார்ந்த, பாசமும் நேசமும், அன்பும் தழுவிய வார்த்தைகளுக்கே இப்படி  சங்கடம் கொள்கிறோமே…சீரான வளர்ப்பு என்கிற நோக்கில் .எப்படிப்பட்ட  கொடுமைகளையெல்லாம் தன் தந்தையின் மூலமாய் அப்பா எதிர்கொண்டிருக்கிறார்…? அதன் மூலம் எவ்வளவு அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்? என்ன மாதிரியான எண்ண முதிர்ச்சியை அனுபவத்தை  எய்தியிருக்கிறார்?- எண்ணத் தலைப்படுகிறான். தன் தவறுக்காக மனம் வருந்துகிறான். உதடுகளை இறுக மூடிக்கொண்டு துக்கத்தை அடக்கிக் கொள்ள முயல்கிறான் சச்சி.
வீட்டினுள் புக முயன்று கொண்டிருக்கும் சூரிய ஒளியோடு சேர்ந்து தெளிந்த மனதோடு உள்ளே அடியெடுத்து வைக்கிறான். தலைமுறை இடைவெளியில், இந்த வாழ்க்கை அனுபவங்களில், மனித மனங்களின் மாறுபாடுகளும், அதைப் பகுத்துணரும் தன்மையும், அவையே நம் அனுபவச் செழுமையின் சாரம் என்பதை, ஒரு குடும்பத்தின் உறவுகளின் பாசமுள்ள  எளிய நிகழ்வுகளின் வழி நமக்கு உணர்த்தியிருக்கும் அற்புதமான படைப்பு எழுத்தாளர் ஸிந்துஜா அவர்களின் இந்தத் “திரும்பி வரும் தருணம்”.
கணையாழி மார்ச் 2019 இதழின் தலையாய படைப்பாக இக்குறுநாவல் திகழ்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.
                     ------------------------------------------------------



04 மார்ச் 2019

எழுத்தாளர் திரு.சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள் எனது அன்பான மனதுக்கு இணக்கமான நண்பர். அவரின் படைப்புக்கள் அனைத்தையும் படித்துப் படித்து வியந்திருக்கிறேன். தனித்துவம் மிக்கவர். அதனால்தான் மிகக் குறைவாக எழுதியபோதிலும் நின்று பேசப் படுபவராக இருக்கிறார். அவரது "நடன மங்கை" சிறுகதைத் தொகுப்புபற்றி நண்பர் திரு.சுனில் கிருஷ்ணன் எழுதிய வாசிப்பனுபவத்தை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.
-------------------------------------------------------------------
-திரு.சுனில் கிருஷ்ணன் எழுதிய சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் "நடனமங்கை" சிறுகதைத் தொகுப்பின் வாசிப்பனுபவம்
-------------------------------------------
நடன மங்கை – சுரேஷ்குமார் இந்திரஜித்
Posted by suneel krishnan
சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதி உயிர்மை வெளியிட்டுள்ள ‘நடன மங்கை’ எனும் சிறுகதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. எண்பது பக்க அளவில் சிறிய புத்தகம்தான்.
தமிழ் தி இந்து தீபாவளி மலரில் அவருடைய ஒரு கதையை படித்தது நினைவில் இருக்கிறது. விஷ்ணுபுர விழா ஒன்றில் அவருடன் கலந்துரையாடல் நிகழ்ந்ததும் நன்றாகவே நினைவிருக்கிறது. கதைகளின் வழி அவர் எதை நிகழ்த்த முயன்றார் என விரிவாக பேசினார். குறிப்பாக, கதைகளில் இருந்து கதையை வெளியேற்றுவது, எனும் தனது தற்கால முயற்சிக்கு தான் வந்து சேர்ந்த பாதையை பற்றிப் பேசினார்.
நிகழ்வின் சாத்தியங்களை மனம் கற்பனை செய்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் ஒரு தீர்மானம்தான். கணக்கற்ற பாதைகள் கண்முன் விரிகின்றன. ஏதோ ஒன்றைத் தேர்வு செய்கிறோம், அல்லது அவ்வாறு நிர்ப்பந்திக்கப்படுகிறோம். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கதைகள், வாழ்வின் இம்மர்மத்தின் சாத்தியத்தை நவீன சிறுகதைக்கே உரிய அடங்கிய தொனியில் காட்டுகிறது. வாசகனை வியப்பில் ஆழ்த்த வேண்டும் எனும் யத்தனம் ஏதுமில்லை. “ஆமாம்ல” என்று ஒரு சிறிய புன்னகையுடன் அவனும் ஆமோதித்து கதைசொல்லியோடு சேர்ந்து தலையாட்டுகிறான். .
நடன மங்கை, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, வீடு திரும்புதல் ஆகிய கதைகளில் இந்த அம்சத்தை காண முடிகிறது. ‘நடன மங்கை’ கதையில் முந்தைய இரவில் தன்னுள் காமத்தை கிளர்த்திய பெண்ணைத் தேடி செல்கிறான். முன்னர் அவள், ஆட்டத்தின்போது ஒரு களிப்பின் கணத்தில் ரவிக்கையிலிருந்து ஒரு சிறு துணியை அவன் முகத்தின் முன் வீசி எறிந்திருக்கிறாள். ஹோட்டலில் தன்னை நெல்லை ஹோட்டல் மேனேஜர் ஆனந்த் குமார் என அறிமுகம் செய்து கொள்கிறான். அடுத்து ஆனந்த், பாலா மாஸ்டரை சந்திக்கச் செல்கிறான். அங்கு தன்னை, ஆங்கில இதழ் நிருபர் ஜான்சன் என அறிமுகம் செய்து கொள்கிறான். அதன்பின் ஜான்சன், நடன மங்கையை தேடிச் செல்கிறான். அவனுக்கும் அடையாளமில்லை, அல்லது வெவ்வேறு அடையாளங்களுக்குள் அவன் பாட்டுக்கு புகுந்து செல்கிறான். அவளுக்கு மஞ்சு என்றொரு பேரும் உருவமும் அடையாளமும் இருக்கிறது. ஆனால் அவள் யார்? யாராக எல்லாம் இருக்கக்கூடும்? அவள் வசிப்பிடம் என்னவாக இருக்கும்? சந்தித்தார்களா இல்லையா? என எல்லாமும் புதிராக இருக்கிறது.
இந்த கதை எனக்கு முக்கியமாகப் பட்டதற்கு காரணம் இது மனித மனத்தின் விசித்திரமான ஒரு மூலையைக் காட்ட முனைகிறது. அவள் ரவிக்கையில் இருந்து ஒரு துண்டு துணியை வீசி எறியும் காட்சி அவனை அமைதியிழக்கச் செய்கிறது. அதன்பின் அந்த கணம் அவனுள் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஜெயமோகன் அவருடைய ஒரு உரையில், பேருந்தில் தனக்கு முன் எழுந்து இறங்கிச் சென்ற ஒரு பெண்ணின் பின்பக்கத்தைப் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறார். அவள் பேரழகியாக இருக்க வேண்டும். ஆனால் இறங்கிச் சென்றுவிடுகிறாள். அவளுடைய முகத்தைக் காண முடியவில்லை. இனி காண்பதற்கான வாய்ப்பேதும் இல்லை. கண்டாலும் அவள்தானா என்றறிய வாய்ப்பில்லை. கணப்பொழுது என்பது முடிவிலிக்கு நீளும் சாத்தியம் கொண்டது. இங்கு, ஜெயமோகன் எழுதிய, பிழை எனும் மற்றொரு கதையும் நினைவுக்கு வருகிறது. நாயகனின் மிக அபத்தமான ஒரு தலையசைப்பு கோடான \கோடி மக்களால் நினைவு கூரப்படும் மர்மத்தை எழுதி இருப்பார். ஒரு காட்சி, ஓர் அசைவு நடன மங்கை நாயகனைக் கிளர்ந்தெழச் செய்கிறது. அவன் நினைவில் என்றென்றைக்கும் அது உயிர்த்திருக்கும். ஒரு விழிப்புற்ற கணம். அந்த கணம் மீண்டும் நிகழ்ந்திடாதா என்றொரு ஏக்கம். அந்த கணம் நினைவு கூரப்படும்தோறும் அதனுடன் சேர்ந்து காமமும் கிளர்ந்தெழும். ஏன் இப்படி என்ற கேள்விக்கு, தர்க்க ரீதியாக எந்த விடையும் இல்லை.
‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ கதையில் எழுத்தாளனின் கனவுகள் தறிகெட்டு போகின்றன. இந்தக் கதை முடிவில் சிறிய புன்னகை விரிகிறது. ஒரு முக்கியமான கேள்வியையும் விட்டு செல்கிறது. ‘மனிதர்களை நம்புவது அத்தனை சிக்கலானதா’ என்பதே அந்த கேள்வி. எழுத்தாளனின் பகற்கனவுகளைப் பார்க்கும்போது, ஆம், அத்தனை எளிதில் நம்பிவிடக்கூடாது, என்றே தோன்றுகிறது. இந்தக் கதை எழுதக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வை இந்திரஜித் முன்னுரையில் சொல்கிறார்.
‘கலந்துரையாடல்’ என்ற மற்றொரு கதையில் இலங்கை இனப் படுகொலை பற்றிய விவாதத்தில் பங்குபெற ஹனுமார் வருகிறார். இந்தக் கதையிலும் ஒரு சிரிப்பு ஒளிந்திருக்கிறது, இயலாமையின் சிரிப்பு. இந்திரஜித்தின் கதைகள் அரசியலை விலக்கிக் கொள்ளவில்லை. பெரியார் இரண்டு கதைகளில் நினைவுகளாகவும் நேரடியாகவும் வருகிறார். இலங்கை பிரச்சனையை இரண்டு கதைகளில் கையாள்கிறார். ‘அம்மாவின் சாயல்’ மட்டும் கொஞ்சம் உரக்க ஒலிப்பது போலிருந்தது. இரண்டு மூன்று கதைகளில் பெரியார் அபிமானம் இருந்தும் செவ்வியல் பக்தி இலக்கியங்கள் மீதும், கர்நாடக சங்கீதம் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பாத்திரங்களை காண முடிகிறது. முன்னுரையில், இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளை தவிர பிற அனைத்தும் ஒரு நாவலுக்கு உரியவை என்கிறார். அந்த இணைப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது. திருமணமாகி கணவனை இழந்து “வீடு திரும்புதல்” பெரியாரின் உந்துதலில் இளம் மகளுக்கு மறுமணம் செய்விக்கும் தந்தையின் கதை “புன்னகை” என அந்த நீட்சி பிடிபடுகிறது.
இந்திரஜித்தின் ‘கணவன் மனைவி’ கதை ஜெயமோகனின் 'தாஸ்தாவெஸ்கியின் முகம்' கதையை நினைவுபடுத்தியது. “எழுத்தாளன், நடிகை, காரைக்கால் அம்மையார்” மற்றொரு சுவாரசியமான கதை. புனைவுக்கும் உண்மைக்கும் இடையிலான உறவு, கதாபாத்திரங்களின் சித்தரிப்பு பற்றிய கதைகள் பலரும் எழுதி இருக்கிறார்கள். யுவனின் “நீர் பறவைகளின் தியானம்” தொகுப்பில் கூட இப்படி ஒரு கதை வாசித்திருக்கிறேன்.
'கால்பந்தும் அவளும்' மற்றுமொரு நுட்பமான கதை. ஈஸ்வரனை அந்த ஆங்கிலோ இந்திய பெண் அவனுடைய கால்பந்து விளையாட்டில் மயங்கி நேசிக்கிறாள். அவன் கால்பந்து விளையாடும் அழகை அவள் வர்ணிப்பது மிக அழகாக இருக்கிறது. அவள் மகன் வைத்திருக்கும் புகைப்படத்தில் வாஞ்சை நிறைய கால்பந்துடன் நிற்கிறாள் அவள்.
இந்திரஜித்தின் கதைகள் எனக்கு யுவனை நினைவுபடுத்தின. கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுதத் துவங்கியவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள் என்பதை தாண்டி இருவருமே கதைகளின் சம்பிரதாய வடிவத்தை மீறி செல்ல முயன்றவர்கள். யுவனின் கதைகளில் ‘தற்செயல்களின் ரசவாதத்தை’, ‘மாற்று மெய்மையை’ உணர்வது பிரமிப்பளிக்கிறது. இந்திரஜித்தின் கதைகள் நிகழ்வுகளில் உள்ள திடத்தன்மையை குலைக்கின்றன. நிகழ்வுகள் நாம் எண்ணுவது போல் அத்தனை இறுக்கமானவையல்ல மாறாக நெகிழ்வானவை (plasticity) என்பதை வியப்பற்ற தொனியில் சொல்லிச் செல்லும் கதைகள். இருவரின் கதைகளிலும் உள்ள முக்கியமான பொதுத்தன்மை என்பது வாசக சுதந்திரம். கதைகள் வாசக மனதில் வேர்கொண்டு கிளைபிரித்து வளரும் இயல்புடையவை. மிக முக்கியமாக வெறுமே கதை யுத்திகளை பரிசோதித்தவர்களாக நில்லாமல் இலக்கிய கர்த்தாக்களாக தம்மளவில் வாழ்க்கையை சித்தரித்து காட்டியவர்கள். இருவரின் கதைகளுமே அவை அளிக்கும் வாசிப்பின்பத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் வாசிக்க வைப்பதாக இருக்கின்றன.
இந்திரஜித்தின் கதைகள் யுவனின் கதைகளில் இருந்து வேறுபடும் ஒரு புள்ளி அவரளிக்கும் காட்சி அனுபவம். யுவனுடைய கதைகள் ஒலி அனுபவத்தை அதிகமும் அளிப்பதாகத் தோன்றும். சினிமா மொழியில் சொல்வதானால் ஒரு சில ஃபிரேம்கள் கதையை மீறி மனதிற்குள் நிலைத்திருக்கின்றன.
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் இத்தொகுதி மனித நடத்தையின் விசித்திரங்களை பதிவு செய்கிறது. அறுத்து, கூறு போடாமல் அதை அவரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது. .
-சுகி
நடன மங்கை
சுரேஷ்குமார் இந்திரஜித் புனைவு, சிறுகதைகள்,
உயிர்மை வெளியீடு

“வருகை“ – எழுத்தாளர் சிந்துஜா - சிறுகதை – வாசிப்பனுபவம்

“வருகை“ – எழுத்தாளர் சிந்துஜா - சிறுகதை – வாசிப்பனுபவம்-உஷாதீபன்
(தொடரும் ஒற்றைத்தடம்-சிந்துஜா - சிறுகதைத் தொகுதி)
வெளியீடு-அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்-பெரம்பூர்-சென்னை. ****************************************
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்….. ----------------------------------------------------------------------------------
தொடர்ந்து வார, மாத இதழ்களைத் தவறாமல் பார்க்கும், படிக்கும் வாசக அன்பர்கள், சமீப காலமாக ஒரு குறிப்பிட்ட பெயர் அடிக்கடி கண்ணில் தட்டுப்படுவதை உணர்ந்திருப்பார்கள். அதுதான் “ஸிந்துஜா“.
தினமணி கதிர், கணையாழி, நவீன விருட்சம், கல்கி, தீராநதி என்று எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார் இவர். என்ன வேகத்தில் எழுதுகிறாரோ அதே வேகத்திலான அநாயாசமான நடை இவருடையது. அலட்டிக் கொள்ளாமல்,மெனக்கெடாமல், போகிற போக்கில் கதை சொல்லும் பாங்கு, படிக்கும் வாசகர்களை ஸ்வாரஸ்யப்படுத்தும். விறுவிறுவென்று பக்கங்களை நகர்த்தும்.
நா.பார்த்தசாரதியின் “தீபம்” காலத்து எழுத்தாளர் இவர். என் பார்வையில் இடையில் ஒரு பிரேக். இப்போது மறுபடியும் சுறுசுறுவென்று கிளம்பி மேலே வந்து கொண்டிருக்கிறார். மேலென்ன வர்றது? மேலதான்யா இருக்கேன் …அவர் சொல்வது காதில் விழுகிறது. .
நமக்குத் தடையாக இந்த மனுஷன் எங்கேயிருந்து வந்தான்…? என்று விடாமல் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒரு கணமேனும் நினைக்கக் கூடும். அதற்காக அவரைத் தவிர்த்துவிட்டா போக முடியும்? எதையெதையோ படித்துத் தள்ளுகிறோம்…சீனியரான இவருடையதைப் படிக்க என்ன கேடு வந்தது? எனக்கு அந்த வித்தியாசமெல்லாம் கிடையாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகக் கதை சொல்வது கட்டுப்பட்டு வந்திருக்கிறது. அதையதை அவரவர்கள் அங்கங்கே செய்து கொண்டிருக்கிறார்கள். எவன் தடை போடுவது? யார் தடை போட முடியும்? முடியுமானால் இந்த ரேஸில் ஜெயிக்க முனையலாம். அதுவே புத்திசாலித்தனம். அல்லது கை குலுக்கலாம். நீயும் எழுது, நானும் எழுதறேன்….காலம் பதில் சொல்லட்டும் என்று….! காலம் கை விட்டுப் போனால்தான் என்ன கெட்டுப் போகிறது? இங்கே எழுத்தால் என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன? மிகப்பெரும் ஜாம்பவான்களுக்கே ஒன்றுமில்லையே…! ஆனால் அவர்களின் படைப்புக்கள் காலத்தால் நிற்கின்றன. அதை மறுக்க முடியாது. அந்த வகையில் ஒரு திருப்திதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு….!
எல்லோரோடும் கை குலுக்குவதுதான் என் பாணி. நேற்று எழுத ஆரம்பித்த இளைஞர்கள் கூட நல்ல படைப்புக்களைக் கொடுக்கும்போது, மனம் பூரித்துத்தான் போகிறது. நாம் செய்யாததை இவர்கள் எத்தனை சுலபமாகச் செய்து விட்டார்கள்? வாழ்க…வளர்க…என்று வாழ்த்துகிறது மனது.
எனக்குத் தெரிந்த வகை மாதிரி இது. எழுதுவேன்…எழுதாமலும் இருப்பேன். யாரைக் கேட்டு எழுத வந்தேன்….யாரைக் கேட்டு நிறுத்த வேண்டும்? சொல்லப்போனால் அதிகமாய் படிப்பதிலேயே இன்பம் காண்பவன் நான். அதிகபட்சமாய் ஒரு உந்துதல் ஏற்படும்போதே நான் எழுதுகிறேன். மற்ற நேரம் பூராவும் வாசிப்புதான். நிம்மதியான பாடு.
அப்படியான ஒரு அரிப்பில்தான் ஸிந்துஜாவின் புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.“தொடரும் ஒற்றைத் தடம்“.. படிக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு தொகுதியிலுள்ள மொத்தச் சிறுகதைகளையும்பற்றிச் சொல்வது என்பது எனக்கு எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை. அணிந்துரை எழுதுபவர்கள்கூட அந்தத் தொகுதியின் மூன்று நான்கு கதைகளைப் பற்றி மட்டுமே சொல்லிச் சென்றிருப்பார்கள். அந்த மூன்று நான்கில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டுமே பிரமாதமாகப் பகிர்ந்திருப்பார்கள். ஒரு தொகுதியின் பதினைந்து கதைகளில் ஒரு ஐந்து சிறுகதைகள் சிறப்பு என்றாலே அந்தப் புத்தகத்திற்குப் பெருமைதான். பதினைந்தில் பத்துக்கு மேல் தேறும் தொகுதிகளெல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மேலாண்மை பொன்னுச்சாமியின் தொகுதிகளை நான் அப்படிக் கண்டடைந்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அது என் ரசனையின்பாற்பட்டது. மொத்தக் கதைகளையும் சொன்னால் அங்கங்கே ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டு செல்வதுபோல் ஆகிவிடக்கூடும். எனக்கே திருப்தி இல்லாத தன்மை ஏற்படும். எழுதுபவனுக்கு முதலில் திருப்தி வர வேண்டும். அதுதான் வாசகனை மனதில் வைத்து அவன் கணிக்கும் கணிப்பு. அதனால்தான் ஒரு சோறு பதம் என்று பலவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துச் சொல்வதே சிறப்பு என்று கருதுகிறேன். ஒன்றே சொல்லுதல்…அதுவும் நன்றே சொல்லுதல்…!
சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையில் ஏற்படும் அசாதாரணத் தருணங்களே இத் தொகுப்பில் உள்ள கதைகளின் அடிநாதம் என்ற குறிப்பு இப்புத்தகத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது.
அந்த அசாதாரணத் தருணங்களை இவர் கண்டடையும் இடம் நமக்கு சற்றே அதிர்ச்சியை, எதிர்பாராத் தருணத்தில் வியப்பைக் கொடுத்து, மனது ஏற்க மறுத்தாலும் கூட, ஏன் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்து சமாதானம் கொள்ள வைக்கிறது. அங்கங்கே ஒன்றிரண்டு அப்படியும் நடந்துபோகிறதுதானே என்ற உண்மையை நினைக்க வைக்கிறது. மிடில் க்ளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் மனிதர்களைச் சுற்றி வலம் வருகிறது இவரது கதைகள். உலகின் எல்லாப் பகுதிகளிலும் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன.
நானும் கதை எழுதுபவன்தான். ஆனால் என் கதாபாத்திரங்கள் மிக மிக எளிமையானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். வண்டி இழுக்கும் தொழிலாளி, இளநீர் விற்பவன், தெருவில் உப்பு விற்றுச் செல்பவன், பழைய செருப்புத் தைப்பவன், இஸ்திரிப் பெட்டியோடு போராடுபவன், பழைய பேப்பர் எடுப்பவன், சாக்கடை அள்ளுபவன், ஆட்டோ டிரைவர், பழக்கடை வைத்திருப்பவன், போஸ்ட்மேன், தெருக்கூட்டுபவன் …என்று என் ரத்தத்தோடு கலந்த மனிதர்களைப் பற்றிச் சொல்வதில்தான் எனக்கு ஆத்ம திருப்தி. நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்தது இதைத்தான். அவர்களை விட்டு என்னால் தாண்ட முடிவதில்லை என்பதுதான் உண்மை.
அதற்காக அதை எழுதினால் மட்டுமே சரி என்று சொல்ல முடியுமா? கலையும் இலக்கியமும் இந்த சமுதாயத்திற்காக என்கிற அதேசமயத்தில் கலை கலைக்காகவே என்கிற இன்னொரு கூற்றும் இங்கே அழகுறப் பயணித்துக் கொண்டிருக்கிறதே…! அதில் விஞ்சி நிற்கும் படைப்புக்கள் வியக்க வைக்கின்றனவே…!
ருக்மிணி மாமியை அறிமுகப்படுத்தும்போதே அந்த மாமிக்குள் பொதிந்திருக்கும் உற்சாகம் நம்மையும் வந்து தொற்றிக் கொள்கிறது. மாமி பெங்களூர் மெஜஸ்டிக்கில் போய் இறங்கும்போதே வரவேற்கும் கார்த்தி, மாமியின் நீல நிற ட்ராவல் பேக்கை வாங்கிக் கொண்டு கைக்குஅடக்கமா அழகா இருக்கு என்று சொல்ல, ஃப்லிப்கார்ட்ல வாங்கினேன் என்று ஆன் லைனில் வாங்கியதை மாமி பெருமையாய்ச் சொல்ல, நவீன யுகத்தின் இயக்கங்களோடு மாமி கைகோர்த்துக் கொண்டு முனைப்பாய் செல்லும் தன்மையை நமக்குக் கோடிட்டுக் காட்டி விடுகிறார் ஸிந்துஜா. கூடவே ஸாம்சங் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பதையும் பெருமையாய்ச் சொல்லிக் கொள்கிறாள். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சமையல் மாமியின் கலை. இந்த ஒட்ட ஒழுகல்தான் பின்னால் அந்த மாமிக்குப் பொருத்தமான ஒரு முடிவையும் தருகிறது. அனுபவங்கள் கற்றுத் தந்த பாடம் மாமியை உச்சபட்ச முதிர்ச்சிக்குக் கொண்டு செல்கிறது.
அவரவருக்கு அமைந்த வாழ்க்கையை எத்தனை பேர் உற்சாகமாய் எதிர்கொள்கிறார்கள் இந்த உலகத்தில்? மனதுக்குள் குறைபட்டுக்கொண்டோ, அல்லது செயலற்று முடங்கியோதானே பெரும்பாலும் தென்படுகிறார்கள். ஆனால் மாமி அப்படி அல்ல. கிடைப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அங்கே உண்மையாய் இயங்கி மனதுக்கு துரோகம் செய்யாதவளாய்ப் பரிணமிக்கிறாள். இந்த உலகத்தையும், சக மனிதர்களையும் நேசிக்கத் தெரிந்தவர்கள் அப்படியான பரிபக்குவம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அப்படியானவர்களுக்கு பார்ப்பவர்களின் மேன்மைதான் மனதிற்குள் வட்டமிடும். எல்லாவற்றையும் நிறைவாகவே பார்ப்பவர்கள் அவர்கள்.
நீங்க சிவப்பு கலர் ஷர்ட்ல வரேள்னு ஜானகி மாமி சொல்லியிருந்தாளே என்று கார்த்தியிடம் சொல்லும் மாமி, எனக்கு முன்னாடி ஒருத்தன் அதே கலர்ல ஷர்ட் போட்டுண்டு போனானே என்ற கார்த்தியிடம்….மூஞ்சியப் பார்த்தா தெரியாதா? அவன் அசமஞ்சம் மாதிரின்னா இருந்தான்….என்று ஒரு போடு போடுகிறாள். மனிதர்கள் வார்த்தைகளுக்கு ஏங்குபவர்கள்…அதிலும் புகழ்ச்சியான வார்த்தைகளுக்குக் காத்துக் கிடப்பவர்கள். பரஸ்பரம் சேர்த்து வைப்பவை அன்புமிக்க இந்த வார்த்தைகள்தான். அதை இடம் பொருள் ஏவல் பார்த்துப் பயன்படுத்தத் தெரிந்தவன் புத்திசாலி. அப்படியானவன் தன்னைச் சுற்றி ஒரு இனிய சூழலை வளர்த்துக் கொள்கிறான். பொழுதுகளை இன்பமாக, அர்த்தமுள்ளதாகக் கழிக்க முயல்கிறான்.
மாமி டெல்லியில் இருந்ததையும், பிறகு மெட்ராஸ் வந்ததையும், அதற்கு முன் பெங்களூரில் இருந்த காலங்களையும் சுவையாய் எடுத்து வைக்கிறாள். கார்த்தியின் மனைவி கோதையைப் பார்க்கும் முதல் பார்வையிலேயே நீ ரொம்ப அழகா இருக்கே… என்று மனதாரச் சொல்லி மகிழ்கிறாள். கோதையின் குழந்தையை அன்பாய்ப் பார்த்துக் கொள்கிறாள். அதுவும் மாமியிடம் ஒட்டிக் கொள்கிறது.
குத்து விளக்கு என்றுமே அழகுதான்.அது குடும்ப விளக்கு. அதை ஒரு வீட்டின் பாங்கான சுமங்கலிப் பெண்களுக்கு சூட்டி மகிழ்வார்கள்.
“அழகா நெத்தில பொட்டு இட்டுண்டிருக்கே. தலைல பூ வச்சிண்டிக்கே…எல்லாத்துக்கும் மேலே மூக்குல மூக்குத்தி போட்டுண்டிருக்கே…என்று மகிழ்ந்து பழமையின் அந்தப் பெருமையை…“இப்ப இருக்கிறதெல்லாம் என்னமோ அமெரிக்கால பிறந்தது மாதிரி கழுத்து காது எல்லாம் மூளியா வச்சுண்டுன்னா அலையறதுகள்…” என்று சொல்லி தூக்கி நிறுத்துகிறாள்.
உலகத்தில் எல்லாராலுமா புதிதாய் சந்திக்கும் மனிதர்களிடம் அத்தனை சீக்கிரம் நெருக்கம் கொள்ள முடிகிறது? மனம் பூராவும் அன்பு நிறைந்து வழியும் ஒரு சிலருக்குத்தான் அது சாத்தியமாகிறது. பாட்டியை நமஸ்கரிக்கும் மாமி, இது என்ன இவ்வளவு மெல்லிசா ஒரு கை. ஒல்லியா உடம்பு. இருங்கோ நான் சமைச்சுப் போட்டு உங்களை ஒரு மாசத்தில் குண்டாக்கிக் காட்டறேன்…என்று சொல்லி…பாட்டியின் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொள்கிறாள். கோதையின் குழந்தையை இங்கே வாடா செல்லம்…என்று கொஞ்சி மகிழ்ந்து, பேச்சோடு பேச்சாக…வெகு நாள் அங்கேயே இருந்து கொண்டிருப்பவள் போல்…நான் போய் சமையல் வேலையைக் கவனிக்கிறேன்…என்று கிளம்பும் ருக்மிணி மாமியிடம் வந்த சில தினங்களில் எல்லோரும் ஒட்டிக் கொள்கிறார்கள்.
எல்லோரையும் மகிழ்விக்கும் கடமையைச் சுமப்பவர்கள் மனதில் ஏதேனும் சோகம் ஒட்டிக் கொண்டிருக்கும்…அதிலிருந்து மீண்டுதான்…அல்லது மீள்வதற்குத்தான் அவர்கள் தங்களை திசை திருப்பிப் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படியான ஒரு சோகம் இந்த ருக்மிணி மாமியிடமும் உண்டுதான். மாமியின் கணவர் எங்கே இருக்கிறார்? என்று கோதை கேட்க அந்த உண்மை வெளிப்படுகிறது.
ரகசியமாய், தானே தன் மனத்தில் ஒளித்து அல்லது அழுத்தி வைத்துக் கொண்டிருக்கும் உண்மைகளை சிலர் ஊகித்துக் கேட்டு விடும் சமயங்களில், இதிலென்ன பெரிய ரகசியம் இருக்கு? என்று சிலர் தெரிந்தால் தெரியட்டுமே என கேள்வியைச் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு சொல்லி விடுவார்கள். ஆனால் அந்த மாதிரியான கேள்விக்கும் ஒரு அவசியம் ஏற்படும் காலங்கள் என்று ஒன்று உண்டு. அப்படியான ஒரு நேரத்தில்தான் மாமியை நோக்கி அந்தக் கேள்வி விழுகிறது. மாமியும் சொல்லி விடுகிறாள். கணவன் ஆபீசில் வேறொரு பெண்ணோடு தொடுப்பு கொண்டு போய்விட்ட சமாச்சாரம் தெரிய….என் பையன் மூலமாத்தான் இந்த விஷயமே எனக்குத் தெரிய வேண்டிய தலைவிதியைப் பார்த்தியோ….என்று முடிக்கிறாள். கூடவே பையனும் வெளிநாடு சென்று விட்டதும், பெண்ணும் தன் படிப்பு, வேலை என்று தன் வழியைப் பார்த்துக் கொண்டதும், மாமி தனிமையாக்கப்பட, இருந்து சாப்பிடும் வசதி வாய்ப்பு இருந்தும், தன் அவலங்களை மறக்கடிக்க பாட்டி சமையல் வேலையைக் கையில் எடுத்துக் கொண்டு தன் பிரயாணத்தைத் தொடர்கிறாள்.
உங்களை மாதிரி நல்லவாளோடு என்னை அந்த ஆண்டவன் சேர்த்து வச்சிருக்கான்…என்று பெருமையுறுகிறாள்.
ஆனாலும் இந்த மனசு அப்படியேவா காலங்களைக் கடந்து செல்கிறது. பெற்றதுகளே அவரவர் வழியைப் பார்த்துக் கொண்டு செல்லும்போது, தனக்கு அன்பாய், ஆதரவாய், அரவணைப்பாய் ஒன்று காலத்துக்கும் இருக்கும் என்று நம்பும் வகையில் ஒரு ஆத்மார்த்தமான சிநேகம் வந்து சேர்கையில் யார் மனதுதான் அசைவுறாது? மாமியும் அந்தக் கட்டத்தை எய்துகிறாள்தான்.
கோயிலுக்குச் சென்று வருகிறேன் என்று கிளம்பிச் செல்லும் அவள். மகள் தனக்கு ஜோடியாக ஒருவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட செய்தியை எதிர்கொள்ள நேர, இந்த மாமிக்குத்தான் ஏன் கடவுள் இப்படி அடி மேல் அடி கொடுக்கிறான் என்று கோதை வேதனையுறுகிறாள். இத்தனை ஆதரவற்ற நிலையிலும், மாமிக்குத்தான் எத்தனை தைரியம்? மனதை ஆற்றிக் கொள்ளத்தான் இப்படிக் கோயிலுக்குச் செல்கிறாள் போலும்…என்று நினைக்கிறார்கள் கோதையும் கார்த்தியும்.
ஆனால் ரெண்டு மூணு நாள்ல நான் இங்கிருந்து கிளம்பலாம்னு இருக்கேன்…என்று மாமி திடீரென்று சொன்னதும் ஆடிப் போகிறார்கள் எல்லோரும். நாம் ஏதாவது தப்பாய் பேசி, நடந்து கொண்டு விட்டோமா என்று அதிர்கிறார்கள்.
ஆனால் மாமி தன் பக்கத்து நியாயத்தை எடுத்து வைக்கும் பாங்கு…அதில் பொதிந்துள்ள தவிர்க்க முடியாத தன்மை ஆகியவை படிக்கும் வாசகர்களாகிய நம்மையும் சரி என்று தலையாட்ட வைத்து விடுகிறது என்பதுதான் உண்மை. மாமி சொல்லும் தன் பங்கு நியாயம் எந்த நேரத்தில், எப்படியான காலகட்டத்தில் எடுத்து வைக்கப்படுகிறது என்பதிலேயே நாமும் அந்த முடிவு சரிதான் என்கிற ஒப்புதலுக்கு வந்துவிடுகிறோம். அதுதான் படைப்பாளியின் திறமை.
என் பொண் விஷயத்தில் நடந்தது ரொம்பவும் எதிர்பாராத ஷாக்தான். சில சமயம் அடி விழறப்போ கொ!ஞ்சம் பலமாத்தான் இருக்கும். வலி கொஞ்ச நேரம் இருக்கத்தான் செய்யும்…சிலது கொஞ்ச நாள் நீடிக்கும்…ஆனா ஆறாத வலியக் கொடுக்கிற அடி விழுந்தா மனுஷா என்னதான் பண்ண முடியும்? அதனால நான் என்னோட வழியைப் பார்த்திண்டு போகறதுதான் சரிங்கிற முடிவுக்கு வந்திட்டேன்….என்கிறாள்.
ஆர்மியில் இருந்து வந்து, மனைவியை இழந்து தனியாளாய் நிற்கும் மனதுக்கு இணங்கிய ராஜா மோகன் என்கிற ஒருவரோடு ஏற்பட்ட பழக்கத்தைச் சொல்லி அவரோடுதான் இனித் தனது மீதிக் காலம் என்று சொல்லி, அடுத்த மூன்றாம் நாள் சேர்ந்து வந்து பாட்டியை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கிளம்புகிறாள்.
ருக்மிணி மாமி-ராஜா மோகன் ஜோடியை இணக்கமாய், ஆசையோடு பார்த்து மகிழ்ச்சியோடு வழி அனுப்புகிறார்கள் கோதையும், கார்த்தியும்….நாமும்தான். கதை முடிகிறது. அன்பு ததும்பிய ருக்மிணி மாமியின் மீதி வாழ்க்கை அங்கே இனிமையாய்த் தொடங்குகிறது.
சுயநலம் மிக்க இந்த உலகில் போராடி வெற்றி கொண்ட ருக்மிணி மாமியின் கதை ஒரு சிறந்த கதாபாத்திரத்தை நம் மனதில் நிலை நிறுத்துகிறது.
ஸிந்துஜா அவர்களின் திறமையான இந்த எழுத்தனுபவம் நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. இந்த ஒரு கதை இத்தொகுப்பின் மற்ற எல்லாக்கதைகளையும் இதே போன்ற தரத்தில்தான் நிறுத்தியிருக்கும் என்கிற தவிர்க்க முடியாத நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகிறது. எழுத்தாளர் திரு. எஸ்.சங்கரநாராயணன் அவர்களின் அணிந்துரை அதைப் பறைசாற்றுகிறது.
------------------------------------------------------------



Comments

“ஒரு மரம்…சில மரம் கொத்திகள்…!“ வண்ணதாசன் சிறுகதை-வாசிப்பனுபவம்


        “ஒரு மரம்…சில மரம் கொத்திகள்…!“ வண்ணதாசன் சிறுகதை- வாசிப்பனுபவம்-உஷாதீபன்
ஈரம் கசிந்த நிலம் – இது எழுத்தாளர் திரு.சி.ஆர். ரவீந்திரன் எழுதிய  ஒரு நாவலின் தலைப்பு.   இந்தத் தலைப்பை வண்ணதாசனின் மனதிற்கு ஒப்பிட்டுச் சொல்வேன் நான். அப்படியான மனதுள்ள ஒருவரால் இப்படி ஒரு கதையை எழுத முடியும்….பக்கங்களைப் புரட்டி நகரும் வெறும் சிறுகதையா இது…?


இளம் பிராயத்தில் தீப்பெட்டிப் படங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டதுபோல், மயிலிறகினைப் புத்தகங்களுக்கு நடுவில் வைத்துப் பாதுகாத்ததுபோல் இவர் தன் கற்பனைகளை, ரசனையை, சின்னச் சின்னச் சொற்களாய் மனதிற்குள் சேகரித்து வைத்துப் பாதுகாக்கிறார். சொற்கள் சேரச் சேர, புதிது புதிதாய் அவருக்கு ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கிறது.
              எல்லோருக்கும் தோன்றுவதுதான் என்று பொதுமைப் படுத்திச் சொல்லி அதைச் சாதாரணமாக்கிவிட முடியாததால், இவருக்குத் தோன்றுவது இவருக்கு மட்டுமே தோன்றியதாய், தேர்ந்தெடுத்த முத்துக்களாய் பொறுக்கிக் கோர்த்து மாலையாக்குகிறார்.
              பொதுவான ரசனை என்பது பலருக்கும் இருக்கும்தான். அந்த ரசனை வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி விரிவடைந்திருக்கும் என்றாலும், எத்தனை பேருக்கு அதை சமயம் பார்த்து, நுணுக்கமாய் முன் வைக்கத்  தெரிந்திருக்கிறது?
              பெற்றோர் வழி வந்த கருணை மிகுந்த மனமும், அன்பு வழியும் செயலும், இதமும் பதமுமான பேச்சும் இப்படிப் பலவும் படிந்திருந்தால்தான் இவையெல்லாமும் சாத்தியமாகும் எனலாம்.
              வெளிவந்து இன்றைக்குப் பத்தொன்பது ஆண்டு காலம் முடிந்து போன நிலையில் இப்பொழுதும் எடுத்துப் பார்க்கையில் இக்கதையைத் தாங்கியுள்ள ஆதிமூலத்தின் அந்தப் படம் கண்களை விட்டு அகல மறுக்கிறது. எந்த அளவுக்கு அந்தக் கதையை அந்த ஓவியக்காரர் மனதில் உள் வாங்கியிருந்தால் இப்படி ஒரு ஓவியம் வந்து விழும்? கதையை விட, கதையின் தலைப்பை விட எழுதிய படைப்பாளியின் முக்கியத்துவம் அறிந்து, அவர் பெயரைப் பெரிதாய் வெளியிடுவதே பெருமை என்ற நோக்கில் விகடனில் வெளியான இந்தச் சிறுகதை காலத்துக்கும் அழியாதது. வண்ணதாசனின் எந்தத் தொகுதியில் இது சேர்ந்திருக்கிறதோ அந்தத் தொகுதி இந்த ஒரு கதையால் தலை நிமிரும்.
        ஒரு மரம்….சில மரம் கொத்திகள்…..!
              தலைப்பை வாய்விட்டுப் படிக்கும்போதே எங்கே அந்தப் பாட்டி, சத்தம் கேட்டு வந்து விடுமோ என்றுதான் தோன்றுகிறது. நாம் இயற்கையை வழிபடுபவர்கள்…வீட்டிலுள்ள மரம் எங்க அக்கா, எங்க அம்மா என்று சொல்வதை, குங்குமம், சந்தனமிட்டு, தூய ஆடைசுற்றி மகிழ்ந்து பயபக்தியோடு வணங்குவதைப் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களிலும் காட்சிகளாய்க் கண்டிருக்கிறோம்.
              இந்தக் கதையில் வருகின்ற மரமும், அது நின்ற வருடங்களும் ஆயாவிற்குச் சொந்தமானவை. அவளும் தெய்வம்…அந்த மரமும் தெய்வம்.   கதையின் முடிவு இதைத்தான் சொல்கிறது.
              காலத்தின் கட்டாயத்தில், தவிர்க்க முடியாத நெருக்கடியில், வெட்டப்படுவதற்காக மரம் நிற்கும்போது, அதற்கான யத்தனிப்பின் இடையில், ஆயாவின் காலம் முடிந்து போக, மரம் ஞாபகச் சின்னமாய் மாறி விடுகிறது.
              மனிதர்களை நாம் எப்படி மதிக்கிறோமோ அது போல் இயற்கையையும் மதித்துப் போற்ற வேண்டும். வானுயர்ந்த, அடர்ந்து பரந்து விரிந்து முதிர்ந்த மரங்களைப் பார்க்கும்போது நம் முன்னோர்களின் ஞாபகங்கள் நமக்கு வருவதில்லையா? இந்தக் கதையின் ஆன்மா இதுதான்..
              கதையே அப்படியான சோக வரிகளோடுதான் ஆரம்பிக்கிறது. அழியாத கவிதை மனம் இருந்தால்தான் இப்படிச் சொல்ல முடியும்….வண்ணதாசனின் ரசனை மிகுந்த வரிகளைப் பாருங்கள்….
              எந்த மரத்தை வெட்டப் போகிறோமோ அந்த மரத்து நிழலில்தான் கோடரிகள், தாம்புக் கயிற்றுச் சுருணை, அரிவாள், ரம்பம் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருக்கிறது… மாமரம் எப்போதும்போல அறிந்தும் அறியாததுமாக நின்றது. அநேகமாய்க் காய்ப்பு முடிந்து ஓய்ந்திருந்தது. கீழே விழுந்து கிடந்த சறுகுகள் சுள்ளிகள் எல்லாம் நடக்கிற கால்களுக்கிடையில் சுக்காக நொறுங்கின…அடி மரத்தின் முண்டு முடிச்சில் கறையான் வீடுகட்டி இருக்க, கடுத்துவா எறும்புகள் திடீர் திடீரென்று திசைமாற்றி நகர்ந்து கொண்டிருந்தன…“ –
            என்ன ஒரு ரசானுபவம் கூடிய ஆரம்பம் பாருங்கள்.
              கொஞ்சம் உடம்பை எக்கி, கைக்கு எட்டின கிளையிலிருந்து ஒரு கொம்பை வளைத்து ஒரு இலையை உருவவும், முரட்டுப் பச்சையும், பறவை எச்சமுமாக கை விரல்களுக்குள் மொர மொரவென்று மாவிலை நொறுங்க எழும்பும் வாசனையை உணரும்முன் அந்த ஆயா வந்து நின்று விடுமோ…!
              அது யாருப்பா மாமரத்துப் பக்கத்துலே…?
              ஆயாவை மாதிரி ஒரு மனுஷியைப் பார்த்தது அதுவே முதன் முறை. வீட்டின் பின் வாசல் வழியாக கம்பை ஊன்றிக் கொண்டு இப்படி ஒரு அதிகாலையில் ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் கட்டப்பட்டு இருக்கக்கூடிய அந்த வீட்டின் தணிந்த இருட்டுக்குள்  இருந்து கிட்டத்தட்ட இரண்டாக மடிந்து போன உடம்புடன் ஆயா வருகிற தோற்றம் மிக அபூர்வமான உணர்வை உண்டாக்கும் காட்சி.
              குனிந்து கம்பை ஊன்றி வந்த ஆயா மறுபடியும் எங்கள் பக்கம் வந்து, “அது யாருப்பா மரத்தாண்ட…குச்சியை ஒடிக்கிற வாசனை வந்துச்சே…துளிர் எது, முத்தினது எது, பிஞ்சு எது, பழுத்தது எதுன்னு தெரிய வேண்டாமா பறிக்கிறவனுக்கு…? – உணர்வும் உடம்பும் பதறப் பதற விழும்  இந்தக் கேள்விகள் போதாதா பாட்டியின் மரத்தின்பாலான நேசத்தை உணர….?
              ஒண்ணும் இல்லை அம்மா…நீ உள்ளே வந்து படுத்துக்கோ….நான் பார்த்துக்கிறேன்… - ஆயாவைக் கூட்டிக் கொண்டு போகும் மகனிடம்….இல்லைப்பா…குச்சியை ஒடிச்சா மாதிரி வாசம் வந்ததே…என்கிறது மறுபடியும்.
                எனக்கு என்னவோ சுருட்டி அடிக்கிற மாதிரிஒரு பெரிய அலை கரை வரைக்கும் வந்து உள் வாங்கிப் போகிற போது நான் நிற்கிற பக்கத்துத் தரையை எல்லாம் உருவிக் கொண்டு போய்விட்டதாகத் தோன்றியது. அந்த வாசனையைக் கூடக் காணோம். கீழே விழுந்து அழுகிற குழந்தையைத் தட்டிக் கொடுத்ததும் அழுகை நின்று போகிற மாதிரி, ஆயா வந்துவிட்டுப் போனபிறகு எந்த வாசனையும் இல்லை அங்கே…“
       இப்படி ஒவ்வொரு வரியையும் அளந்து அளந்து சொல்ல எவ்வளவு கனிந்த மனம் வேண்டும்? மனதுக்குள் ஈரம் கசிந்து கொண்டேயிருந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்….!
                                ஆயாவின் மகன்– “அம்மாவும் அப்பாவும் இந்த ஊருக்கு வந்து பாடுபட்டு சம்பாதிச்சு கட்டின வீடு இது. இந்த மரத்தை யார் நட்டாங்கயார் வளர்த்தாங்க என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அம்மாவே நட்டு அம்மாவே வளர்த்திருக்கணும் என்கிறதுதான் என்னோட அனுமானம். இந்த வயசுலயும் எழுந்திருந்த உடனே அது நேரே இந்த மரத்துக்குத்தான் போகும். காய்ப்புக் காலம்னா கேட்கவே வேண்டாம். ஒரு சுற்று மரத்தைச் சுற்றி, உதிர்ந்த பிஞ்சு, அணில் கடிச்ச பழம் என்று மடியில் கட்டிக் கொண்டு வரும். சுள்ளியைப் பொறுக்கி எடுத்துக்கிட்டு வரும். ஒரு நாள் கூட இது தப்பினதே இல்லை. கொள்ளா கொள்ளையாய்க் காய்த்துக் குலுங்கினால் கூட மரத்தைக் குத்தகைக்கு விடாது. காயை விலைக்கு விற்காது. வர்றவங்க போறவங்க…பக்கத்து வீடு, எதிர்த்த வீடுன்னு கொடுத்து விடும்…இப்போ கொஞ்ச காலமாத்தான் உடம்புக்கு முடியல…என்ன ஞாபகம் இருந்தாலும் இல்லாட்டாலும் மாமரத்தை மட்டும் அது மறக்கவே செய்யாது….இந்த மரத்துல ஒரு தட்டான் பூச்சி உட்கார்ந்தாக்கூட அதுக்குத் தெரிஞ்சிரும்னா பாருங்க…”
        மரத்தை விலை பேசும் தகவல் தெரிந்தால் உயிரையே விட்டு விடும் கிழவி…பங்காளித் தகராறு….கட்சிக்காரங்க தலையீடு….காலி மனையா இது மட்டும் கிடக்கிற உறுத்தல்…தாக்குப்பிடிக்க முடியாமத்தான் செய்றோம்…மத்தப்படி விற்கிற அளவுக்கு நெருக்கடி ஒண்ணுமில்லே…..என்று வருந்தும் மகனின் வார்த்தைகள்.
       இந்த துக்கத்தை எல்லாம் கடந்து இன்று எல்லா ஏற்பாட்டோடும் வந்தாயிற்று. மின் வாரியத்திற்கு மரம் வெட்டப் போகிற தகவல் சொல்ல ஆள் போயாயிற்று. ஒரு ஆள் விறகுத் தொட்டி நாடாரையும் அழைக்கப் போயாயிற்று. நான் மட்டும் இந்த நினைவுகளில் மரத்தடியில்….
       குச்சியை ஒடிக்கிற வாசனைக்கே யாருப்பா என்று கேட்டு ஓடி வந்த ஆயா…மரம் வெட்டுவது தெரிந்தால்…?
       எந்த நடமாட்டமும் இல்லாத பின் வாசலின் வெறுமை…..
       முன் பக்கமாய்ப் போய் குரல் கொடுப்போமா…? அதற்குள்  ஆயா பின் வாசல் வழி வந்து போய்விட்டால்?
       அதோ ஆயாவின் மகன்….கைகளைக் குவித்துக் கும்பிட்டுக் கொண்டே….
       பதிலுக்குக் கும்பிட்டு நின்ற என் கைகளைப் பிரிக்க விடாமல்…மரத்தின் அருகே செல்ல…எதையோ சொல்லிவிட யத்தனிப்பதை உணர….அதை உறுதி செய்வதுபோல்…மேல் துண்டைச் சரிசெய்தபடி….
       “அம்மா காரியம் ஆகிப் போச்சு….“
       அவர் கைக்குள் இருந்த என் கைகளை உருவி, மறுபடியும் அவர் கைகளை என் பிடிக்குள் வைத்துக் கொண்டேன்.
       எல்லோருடைய காலடியின் கீழும் அந்த மரத்தின் நிழல்….கயிற்றுச் சுருணையுடன் வைத்த கோடரிகளில் ஒன்று புரண்டு விழுந்திருக்க…அதன் பளபளத்த விளிம்பில் கண்ணாடிச் சிறகுகளுடன் ஒரு தட்டான் அசையாமல்….
       மரம் அதுபாட்டுக்கு நிற்கட்டும்…வீட்டுக்காரரிடம் நான். கண்ணீர் கசிய நிற்கும் அவர்….
தட்டான் இப்போது பறக்க ஆரம்பித்திருந்தது.
வண்ணதாசனின் வரிகள் கவிதை மனதின் உச்சத்தில் நிற்க…. மேலும் விரித்துச் சொல்ல என்னதான் இருக்கிறது?
மரம் நிற்கிறது ஆயாவின் நினைவில்….நிம்மதியடைகிறது நம் மனம்…
ஒரு நீண்ட கவிதையை இப்படியும் கதையாகச் சொல்ல முடியுமா? வெறும் கதையா இது? நாடி நரம்பெல்லாம் ஊடுருவி….இப்படியா உணர்வுகள் சிலிர்த்துப் போகும்….?
ஒரு மரம்…சில மரம் கொத்திகள்…..-என் உணர்வுகளைப் பிழிந்தெடுத்த  செம்மையான ஒரு நீள் கவிதை…!                                          -----------------------------------------------



       
                 
                              

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...