“வருகைக்கான ஆயத்தங்கள்“ – சிறுகதைகள் – இதயா ஏசுராஜ் - வாசிப்பனுபவம்
இதயா ஏசுராஜின் முதல் சிறுகதைத்
தொகுப்பு இது என்று பின் அட்டையில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உள்ளே இருக்கும் படைப்புக்களைப்
படிக்கும்போது அப்படித் தெரியவில்லை. ஏற்கனவே ஐந்தாறு தொகுதிகள் வெளியிட்டிருந்தால்தான்
இப்படியொரு ஆழமான எழுத்து சாத்தியம். இந்தத் தொகுப்பைப் படித்தபோது எனக்கு அப்படித்தான்
தோன்றியது. இலக்கியத் தரமான சிறுகதைகள் இந்தத் தொகுதியை அலங்கரிக்கின்றன.
வாசிப்பனுபவமாக அத்தனை கதைகளையும்
சொல்ல வேண்டும் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். அப்படி ஒரு தொகுதியை எடுத்துக் கொண்டு அதில் உள்ள அனைத்துக் கதைகளையும்
பற்றி விலாவாரியாகச் சொல்லி அது குறைந்தது பதினைந்து பக்கங்களுக்கு நீண்டு, கடைசியில்
எவரும் அதைப் படிக்காமல் நகர்ந்து போனதுதான் மிச்சம். படைப்பாளிக்கு மட்டுமே திருப்தி
அளித்தது அது. வெளியிட்ட பதிப்பகத்தார் கூட “நன்று“ என்றதோடு சரி. சிலவற்றை மட்டும்
சொல்லி, புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டுவதுதான் சிறந்த பணி. ஆனால் ஒன்று
அதுவே ஐந்தாறு பக்கங்களுக்கு நீள்கிறது. தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் நிச்சயம் அதைத்
தவற விட மாட்டார்கள்.
இன்றைய இளம் தலைமுறையினர் மிக
நன்றாகவே எழுதுகிறார்கள். வழக்கமான மடிசஞ்சி விவகாரங்களை விட்டு விட்டு புதிய தளங்களில்
அவர்களால் ஜம்மென்று பயணிக்க இயல்கிறது. நிறையப்
பேர் அப்படி எழுத வந்து விட்டார்கள்..
க்ளாசிக் வரிசையிலான பழம் பெரும்
எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்ல பலரும் இருக்கிறார்கள். அவர்களின் படைப்புக்களின் வழிதான்
இவர்கள் எழுத வந்திருக்கிறார்கள் என்றாலும் அவர்களால் தொடப்படாத பல இடங்களை இவர்கள்
தொட்டு, உறவாடி, கம்பீரமாய்ப் நடை பயில்கிறார்கள்
என்று சொல்லலாம்.
வணிக ரீதியிலான பத்திரிகைகளுக்கு
எழுதுவது என்பது வேறு. அது பிரசுர சந்தோஷம் சார்ந்தது. அப்படி வரும்போது பக்க அளவுகள்,
இத்தனை வார்த்தைகளுக்குள் என்கிற கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன. நாம் அசலாக எழுதிய
படைப்புக்களுக்கு உயிரே இல்லாமல் போய்விடும் அபாயம் சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது அங்கே. இலக்கியச் சிற்றிதழ்களில் எழுத முனைவது என்பது வேறு.
அங்கே அந்த பயம் இல்லை.எடிட்டிங் என்பது இல்லை. தரம் மட்டுமே தலை தூக்கி நிற்கிறது.
இதயா ஏசுராஜ் இலக்கியச் சிற்றிதழ்களில்தான் எழுதியிருக்கிறார்.
உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே, மலைகள்.காம், கதை சொல்லி, கிழக்கு வாசல் உதயம் என்று பயணித்திருக்கிறார். அவரால் கதைகளை இறுக்கமாக, ஆழமாக, சம்பவங்களை மற்றும்
காட்சிகளைக் கோர்த்துக் கோர்த்து கதையை சுவையாக நகர்த்த முடிகிறது. எல்லாக் கதைகளிலும்
ஏதோ ஒரு சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கிறது. மனிதர்களுக்கிடையிலான பரஸ்பர அன்பும்,
நேயமும் வாழ்க்கையின் விட்டுக் கொடுத்தல் சார்ந்த அனுபவங்களும், சொந்த நஷ்டங்களைப்
பொருட்படுத்தாத பண்பாட்டு அசைவுகளும், .மானிட வாழ்க்கையின் மேன்மைகளை நமக்குச் சொல்லிக்
கொண்டே பயணிக்கின்றன.
மாய யதார்த்த வெளியில் கதை சொல்லும் முறை இவருக்குப் பிடித்தது
போலும். சில கதைகளை அப்படியான வெளிகளில் சரளமாய் உலவ விட்டு வெற்றியும் கண்டிருக்கிறார்.
முதல் கதையான உயிர்க்குமிழி என்கிற கதையைப் படிக்கும்போது,
இதையே இவர் புத்தகத்தின் தலைப்பாக வைத்திருக்கலாமே என்றுதான் எனக்குத் தோன்றியது. ஆனால் இந்தக் கதையை எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட மனநிலை வேண்டும்
என்று சொல்வேன். அப்படி ஒரு கதாபாத்திரத்தை சாமான்ய மனிதன் தன் கற்பனையில் உலவ விட
முடியுமா என்று மனசு பயம் கொள்கிறது.
மனசை சூன்யம் போன்ற ஏதோவொன்று ஆட்கொண்டால்தான் அல்லது அப்படியான
மனநிலைக்கு நம்மைப் பயிற்றுவித்துக் கொண்டால்தான் இம்மாதிரி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க
முடியும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இப்படியான ஒரு கதையைச் சொல்லித்தான் ஆக வேண்டுமா
என்று கூட மனதுக்குத் தோன்றுகிறது.
இலக்கிய ரீதியான, ஆழமான, காத்திரமான படைப்புக்களைக் கொடுக்க
நினைக்கும்போது, முதலில் அந்த உலகுக்குள் நம்மைப் புகுத்திக் கொண்டு மூழ்கித் திளைக்க
வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால் எந்தக் கதாபாத்திரத்தை முன் வைக்க வேண்டும் என்று
நாம் நினைக்கிறோமோ அதுவாக நாமே மாறி நின்றால்தான் அது சாத்தியப்படும் என்று கூடச் சொல்லலாம்.
கதைக்கான களம், சூழல், அதை உய்த்துணரும் பாத்திரத்தின் மனநிலை, அந்த மனநிலைக்குள் புனைவாகக்
கொண்டு இணைக்க வேண்டிய ஏற்கனவே நம் ஆழ் மனதில் படிந்து போய்க் கிடக்கும் காட்சியலைகள்
என்பதாக ஒரு கதையை வடிவம் கொடுத்துத் தூக்கி நிறுத்தும்போது, படைப்பு சிறந்து விளங்குகிறது.
அந்த அக்கறையோடு
உயிர்க்குமிழி என்கிற இந்தக் கதையை கவனமாக எழுதியிருக்கிறார் இதயா ஏசுராஜ்.
மனமும் செயலும் அசிங்கப்பட்டுப் போகும்போது, விகார எண்ணங்களும், காணும் காட்சிகளின்
மிகு கற்பனை வக்கிரங்களும் சேர்ந்து மனிதனை இழி நிலைக்குத் தள்ளி விடும் அபாயமும் புத்தி
தெளிந்த பிறகு ஏதும் சக்தியற்றவனாய் குற்றவுணர்வு உறுத்த, தனக்குத்தானே தண்டனை வழங்கிக்
கொள்பவனுமான வெவ்வேறு மனநிலைக்குத் தள்ளப்படும் ஒருவனை நினைக்கும்போது நமக்கு அவன்
செயல்களை விட, அவனின் இருப்பு மீதான பரிதாபம்தான் மேலிடுகிறது. இந்த உயிர்க்குமிழி
கதையில் அப்படி ஒரு காரெக்டரை அழுத்தமாய் உலவ விட்டிருக்கிறார் ஏசுராஜ். அவருக்கு நம்
பாராட்டுக்கள்.
லூசியா மாலை நேரப் பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்குச் செல்வதும்,
பிரார்த்தனைக்கு நேரமிருப்பதை உணர்ந்து அங்குள்ள இயேசுவின் பாடுகளைச் சொல்லும் சிற்பங்களைக்
கவனிக்கும்போது தன்னை மறந்து நெஞ்சுருகுவதும், அண்ணாந்து பார்த்து கதி கலங்கி நிற்கையில்
இயேசுவின் சிற்பத்திலிருந்து வழியும் ஒரு துளி குருதி அவளது கன்னத்தில் விழுவதும்,
தான் நிற்குமிடம் மட்டும் தனியே சுழல்வதாய் அவள் உணர்வதும், ஏனிந்த அதிசயம் நிகழ்ந்தது
எனத் தெரியாமல் குழப்பம் கொள்வதும், ஒரு வேளை பெயின்ட் ஏதும் ஒழுகியிருக்குமோ என்று
சந்தேகம் கொள்வதும், அதே சமயம் இப்படி அவநம்பிக்கை கொள்ளலாமா என்று அசரீரி ஒன்று கேட்பதும்,
விடியற்காலையில் நதிக்கரைப்பக்கம் செல்கையில் அங்கே நீளமான கேசமும், தாடியுமாக (ஏசுவைப்போல்)
கருணை நிறைந்த விழிகளோடு ஒரு இளைஞனை சந்திப்பதும், உட்காரு லூசியா…என்று அவன் சொல்ல…இவள்
அதிர்ந்து அதே குரல்…அதே குரல்…நேற்று தேவாலயத்தில் கேட்ட அந்தக் குரலேதான் இந்தக்
குரலும் என்று நெஞ்சடைக்க அதிர்வதும்….ஆக இப்படிப் பல்வேறு விதமான அனுபவங்களுக்கு உள்ளாகிறாள்
லூசியா….உன்னத வழி நடத்தலின் நோக்கமாகவே எல்லாமும் இருக்குமோ என்கிற தெளிவான புரிதலில்
கர்த்தரே என்னைக் காத்தருளும்…என்பதாக வேண்டி நிற்கிறாள். மத்தேயு 24 வது அதிகாரம்,
ஐந்தாவது வசனம் அவள் கண்ணில் பட்டு, நானே கிறிஸ்து
என்று என் நாமத்தைத் தரித்துக் கொண்டு பலரும் வருவர்…வஞ்சிப்பர்…என்பதான உபதேசம்…கண்டு
பீதியின் உச்சத்திற்குப் போகையில் வீட்டின் அருகாமையிலுள்ள பன்னீர் மரத்தடியில் அந்தப்
பனிரெண்டு சீடர்களும் நின்றிருப்பதை அவள் பார்த்தாள் என்பதாக இந்தக் கதையை நிறைவுக்குக்
கொண்டு வருகிறார் ஏசுராஜ். அவரின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைக் கேள்விக்குட்படுத்தி,
மாய யதார்த்தப் பின்னணியில்…சொல்லப்பட்டிருக்கும் இப்படைப்பு இறைவனின்பாலான ஈர்ப்பை
நமக்கு உபதேசிக்கிறது என்று கொள்ளலாம். வருகைக்கான ஆயத்தங்கள் என்ற புத்தகத் தலைப்புக்
கொண்ட இச்சிறுகதை….மதம் சார்ந்த நம்பிக்கைகளை அழுத்தமாய் எடுத்துச் செல்லும் படைப்பு.
மரண நாள் வாழ்த்துகள் என்கிற இவரது இன்னொரு கதை மாய யதார்த்தப்
பின்னணியில் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.ஃ இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நரேனின் மரண நேரம் பிற்பகல்
ஒன்று முப்பதுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது….என்று ஆரம்பித்தால்…எது நிச்சயித்தது,
யார் நிச்சயித்தார்கள்…? என்கிற கேள்விகளோடு நாமும் பின்தொடரும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
நிச்சயிக்கப்பட்ட மரணத்திற்கு முன்னால், இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு
பெற்றோரைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்று எண்ணமிடுகிறான் நரேன்….அலுவலகத்தில்
சிலரோடு இன்னும் சிறிது நேரம் பேசியிருக்கலாமே என்று எண்ணுகிறான். உடன் பணியாற்றும்
நந்தினியோடு இன்னும் சற்று நேரம் மனம் விட்டுப் பேசியிருக்க லாமே என்று எண்ணமிடுகிறான்.
ஊருக்கு வெளியே வண்டியை ஓட்டி வருபவன்…ஒரு கடை வாசலில் நின்று இளைப்பாறுகிறான். அங்கே
பழைய பாக்கி கொடுக்காத ஒருவரிடம் சற்றே வாக்குவாதத்திற்குப் பின், கேட்ட பொருளைக் கொடுத்தனுப்பும்
கடைக்காரர், போனால் போகிறது அவன் அடுத்த வாரம் மரண நாள் விழா கொண்டாடப் போகிறான் என்று
சொல்லும் செய்தியைக் கேட்டு தன்னைப் போலவே இன்னும் மரண நாள் குறித்த சிலர் தங்களை நாட்களை
எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆறுதல் கொள்கிறான் நரேன். வெவ்வேறு விதமான செயலில்
ஈடுபடுவதும், வெவ்வேறு மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களின் மரண நாட்களைப் பற்றி எண்ணமிடுவதுமாக
நகரும் இக்கதை கடைசியில் என்னதான் ஆகிறது பார்ப்போம் என்று நம்மையும் அந்த மரணத்தை
நோக்கி இழுத்துச் செல்கிறது. எதை மையமிட்டு கதை சொல்ல ஆரம்பித்தோமோ அதிலிருந்து வழுவாமல்,
சங்கிலித்தொடராய் சம்பவங்களை இணைத்து, சுவாரஸ்யமாய் கதை சொல்லும் தந்திரம் ஏசுராஜூக்கு
நிரம்பவே கைவரப்பெற்றிருக்கிறது. இப்படித் திருப்தி அளிக்கும் கதைகள் இத்தொகுதியில்
பலவுள்ளன.
வெல்லும் சொல் பதிப்பகத்தார் இதயா ஏசுராஜைப் பற்றிக் குறிப்பிடுகையில்
இப்படிச் சொல்கிறார்கள்.
பெரும்பாலானோர் புழங்காத கதை வெளியில் தன் மொழியோடு இளைப்பாறுகிறார்.
கதைகளுக்குள் மனித மனத்தின் வன்மம் நடுங்கும் ஒரு சிறு குரலாக ஒலித்தபடி இருக்கிறது.
அவஸ்தைகளோடும் வலிகளோடும் கடந்து போகும் கதைகளைச் சுமந்து செல்லும் அடர்த்தியான மொழி.
இத் தொகுப்பின் சில கதைகளை விட்டு விட்டு இனி தற்காலச் சிறுகதைகளைப் பற்றிப் பேச முடியாது. இக்கருத்தை அப்படியே நாமும் ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது.
வாழ்வியல் அனுபவமும், மாய யதார்த்தமும் கலந்த கலவையாகவே இவரது
கதைகள் வெளிப்படுகின்றன. இவர் சொல்வதுபோலவே அடுத்தவர் தொடாத, அதிகம் புழங்காத கதைக்
களனாகவே எடுத்துக் கொண்டு தன் படைப்புக்களைத் தந்திருக்கிறார். இவரது முதல் தொகுப்பான
இப்புத்தகம், அடுத்தடுத்த தொகுப்புகளை எப்போது கொண்டு வருவார் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதனினும் மேம்பட்ட, இலக்கிய உச்சங்களைத் தொடும்
ஆகச் சிறந்த படைப்புக்களை நிச்சயம் இதயா ஏசுராஜ் அவர்களால் தர முடியும். அந்த நம்பிக்கையை
இத்தொகுதி ஏற்படுத்துகிறது. இத்தொகுதி கண்டிப்பாக ஒவ்வொரு வாசகர்களாலும் விலை கொடுத்து
வாங்கிப் படிக்க வேண்டிய அவசியம் சார்ந்தது என்பதனால்தான், வாசிப்பனுபவத்திற்கான பக்க
அளவுகள் கருதி, மூன்றே கதைகளோடான அனுபவங்களை மட்டும் சொல்லி முடித்திருக்கிறேன்.
அனுமதிக்கப்பட்ட காலம், சாண்பிள்ள, தாதன், நிழலைத் தழுவியவன்,
நீர்வளையம், வெள்ளச்சி, ஆயுதம், , கை நிறைய டாலர், கனவில் நெளியும் வாசனை முகம், என்று
இவர் வைத்திருக்கும் தலைப்புகளே, அந்தந்தத் தலைப்புகளை எவ்வாறு நிறுவுகிறார் பார்ப்போம்
என்று நம்மை உற்சாசமாகப் படிக்க வைத்து விடுகிறது. மொத்தம் 15 கதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு
தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு ஒரு கொடை என்றே சொல்லி பெருமைப் படுத்துகிறேன். இதயா ஏசுராஜ்
அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
-------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக