04 மார்ச் 2019

“ஒரு மரம்…சில மரம் கொத்திகள்…!“ வண்ணதாசன் சிறுகதை-வாசிப்பனுபவம்


        “ஒரு மரம்…சில மரம் கொத்திகள்…!“ வண்ணதாசன் சிறுகதை- வாசிப்பனுபவம்-உஷாதீபன்
ஈரம் கசிந்த நிலம் – இது எழுத்தாளர் திரு.சி.ஆர். ரவீந்திரன் எழுதிய  ஒரு நாவலின் தலைப்பு.   இந்தத் தலைப்பை வண்ணதாசனின் மனதிற்கு ஒப்பிட்டுச் சொல்வேன் நான். அப்படியான மனதுள்ள ஒருவரால் இப்படி ஒரு கதையை எழுத முடியும்….பக்கங்களைப் புரட்டி நகரும் வெறும் சிறுகதையா இது…?


இளம் பிராயத்தில் தீப்பெட்டிப் படங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டதுபோல், மயிலிறகினைப் புத்தகங்களுக்கு நடுவில் வைத்துப் பாதுகாத்ததுபோல் இவர் தன் கற்பனைகளை, ரசனையை, சின்னச் சின்னச் சொற்களாய் மனதிற்குள் சேகரித்து வைத்துப் பாதுகாக்கிறார். சொற்கள் சேரச் சேர, புதிது புதிதாய் அவருக்கு ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கிறது.
              எல்லோருக்கும் தோன்றுவதுதான் என்று பொதுமைப் படுத்திச் சொல்லி அதைச் சாதாரணமாக்கிவிட முடியாததால், இவருக்குத் தோன்றுவது இவருக்கு மட்டுமே தோன்றியதாய், தேர்ந்தெடுத்த முத்துக்களாய் பொறுக்கிக் கோர்த்து மாலையாக்குகிறார்.
              பொதுவான ரசனை என்பது பலருக்கும் இருக்கும்தான். அந்த ரசனை வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி விரிவடைந்திருக்கும் என்றாலும், எத்தனை பேருக்கு அதை சமயம் பார்த்து, நுணுக்கமாய் முன் வைக்கத்  தெரிந்திருக்கிறது?
              பெற்றோர் வழி வந்த கருணை மிகுந்த மனமும், அன்பு வழியும் செயலும், இதமும் பதமுமான பேச்சும் இப்படிப் பலவும் படிந்திருந்தால்தான் இவையெல்லாமும் சாத்தியமாகும் எனலாம்.
              வெளிவந்து இன்றைக்குப் பத்தொன்பது ஆண்டு காலம் முடிந்து போன நிலையில் இப்பொழுதும் எடுத்துப் பார்க்கையில் இக்கதையைத் தாங்கியுள்ள ஆதிமூலத்தின் அந்தப் படம் கண்களை விட்டு அகல மறுக்கிறது. எந்த அளவுக்கு அந்தக் கதையை அந்த ஓவியக்காரர் மனதில் உள் வாங்கியிருந்தால் இப்படி ஒரு ஓவியம் வந்து விழும்? கதையை விட, கதையின் தலைப்பை விட எழுதிய படைப்பாளியின் முக்கியத்துவம் அறிந்து, அவர் பெயரைப் பெரிதாய் வெளியிடுவதே பெருமை என்ற நோக்கில் விகடனில் வெளியான இந்தச் சிறுகதை காலத்துக்கும் அழியாதது. வண்ணதாசனின் எந்தத் தொகுதியில் இது சேர்ந்திருக்கிறதோ அந்தத் தொகுதி இந்த ஒரு கதையால் தலை நிமிரும்.
        ஒரு மரம்….சில மரம் கொத்திகள்…..!
              தலைப்பை வாய்விட்டுப் படிக்கும்போதே எங்கே அந்தப் பாட்டி, சத்தம் கேட்டு வந்து விடுமோ என்றுதான் தோன்றுகிறது. நாம் இயற்கையை வழிபடுபவர்கள்…வீட்டிலுள்ள மரம் எங்க அக்கா, எங்க அம்மா என்று சொல்வதை, குங்குமம், சந்தனமிட்டு, தூய ஆடைசுற்றி மகிழ்ந்து பயபக்தியோடு வணங்குவதைப் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களிலும் காட்சிகளாய்க் கண்டிருக்கிறோம்.
              இந்தக் கதையில் வருகின்ற மரமும், அது நின்ற வருடங்களும் ஆயாவிற்குச் சொந்தமானவை. அவளும் தெய்வம்…அந்த மரமும் தெய்வம்.   கதையின் முடிவு இதைத்தான் சொல்கிறது.
              காலத்தின் கட்டாயத்தில், தவிர்க்க முடியாத நெருக்கடியில், வெட்டப்படுவதற்காக மரம் நிற்கும்போது, அதற்கான யத்தனிப்பின் இடையில், ஆயாவின் காலம் முடிந்து போக, மரம் ஞாபகச் சின்னமாய் மாறி விடுகிறது.
              மனிதர்களை நாம் எப்படி மதிக்கிறோமோ அது போல் இயற்கையையும் மதித்துப் போற்ற வேண்டும். வானுயர்ந்த, அடர்ந்து பரந்து விரிந்து முதிர்ந்த மரங்களைப் பார்க்கும்போது நம் முன்னோர்களின் ஞாபகங்கள் நமக்கு வருவதில்லையா? இந்தக் கதையின் ஆன்மா இதுதான்..
              கதையே அப்படியான சோக வரிகளோடுதான் ஆரம்பிக்கிறது. அழியாத கவிதை மனம் இருந்தால்தான் இப்படிச் சொல்ல முடியும்….வண்ணதாசனின் ரசனை மிகுந்த வரிகளைப் பாருங்கள்….
              எந்த மரத்தை வெட்டப் போகிறோமோ அந்த மரத்து நிழலில்தான் கோடரிகள், தாம்புக் கயிற்றுச் சுருணை, அரிவாள், ரம்பம் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருக்கிறது… மாமரம் எப்போதும்போல அறிந்தும் அறியாததுமாக நின்றது. அநேகமாய்க் காய்ப்பு முடிந்து ஓய்ந்திருந்தது. கீழே விழுந்து கிடந்த சறுகுகள் சுள்ளிகள் எல்லாம் நடக்கிற கால்களுக்கிடையில் சுக்காக நொறுங்கின…அடி மரத்தின் முண்டு முடிச்சில் கறையான் வீடுகட்டி இருக்க, கடுத்துவா எறும்புகள் திடீர் திடீரென்று திசைமாற்றி நகர்ந்து கொண்டிருந்தன…“ –
            என்ன ஒரு ரசானுபவம் கூடிய ஆரம்பம் பாருங்கள்.
              கொஞ்சம் உடம்பை எக்கி, கைக்கு எட்டின கிளையிலிருந்து ஒரு கொம்பை வளைத்து ஒரு இலையை உருவவும், முரட்டுப் பச்சையும், பறவை எச்சமுமாக கை விரல்களுக்குள் மொர மொரவென்று மாவிலை நொறுங்க எழும்பும் வாசனையை உணரும்முன் அந்த ஆயா வந்து நின்று விடுமோ…!
              அது யாருப்பா மாமரத்துப் பக்கத்துலே…?
              ஆயாவை மாதிரி ஒரு மனுஷியைப் பார்த்தது அதுவே முதன் முறை. வீட்டின் பின் வாசல் வழியாக கம்பை ஊன்றிக் கொண்டு இப்படி ஒரு அதிகாலையில் ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் கட்டப்பட்டு இருக்கக்கூடிய அந்த வீட்டின் தணிந்த இருட்டுக்குள்  இருந்து கிட்டத்தட்ட இரண்டாக மடிந்து போன உடம்புடன் ஆயா வருகிற தோற்றம் மிக அபூர்வமான உணர்வை உண்டாக்கும் காட்சி.
              குனிந்து கம்பை ஊன்றி வந்த ஆயா மறுபடியும் எங்கள் பக்கம் வந்து, “அது யாருப்பா மரத்தாண்ட…குச்சியை ஒடிக்கிற வாசனை வந்துச்சே…துளிர் எது, முத்தினது எது, பிஞ்சு எது, பழுத்தது எதுன்னு தெரிய வேண்டாமா பறிக்கிறவனுக்கு…? – உணர்வும் உடம்பும் பதறப் பதற விழும்  இந்தக் கேள்விகள் போதாதா பாட்டியின் மரத்தின்பாலான நேசத்தை உணர….?
              ஒண்ணும் இல்லை அம்மா…நீ உள்ளே வந்து படுத்துக்கோ….நான் பார்த்துக்கிறேன்… - ஆயாவைக் கூட்டிக் கொண்டு போகும் மகனிடம்….இல்லைப்பா…குச்சியை ஒடிச்சா மாதிரி வாசம் வந்ததே…என்கிறது மறுபடியும்.
                எனக்கு என்னவோ சுருட்டி அடிக்கிற மாதிரிஒரு பெரிய அலை கரை வரைக்கும் வந்து உள் வாங்கிப் போகிற போது நான் நிற்கிற பக்கத்துத் தரையை எல்லாம் உருவிக் கொண்டு போய்விட்டதாகத் தோன்றியது. அந்த வாசனையைக் கூடக் காணோம். கீழே விழுந்து அழுகிற குழந்தையைத் தட்டிக் கொடுத்ததும் அழுகை நின்று போகிற மாதிரி, ஆயா வந்துவிட்டுப் போனபிறகு எந்த வாசனையும் இல்லை அங்கே…“
       இப்படி ஒவ்வொரு வரியையும் அளந்து அளந்து சொல்ல எவ்வளவு கனிந்த மனம் வேண்டும்? மனதுக்குள் ஈரம் கசிந்து கொண்டேயிருந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்….!
                                ஆயாவின் மகன்– “அம்மாவும் அப்பாவும் இந்த ஊருக்கு வந்து பாடுபட்டு சம்பாதிச்சு கட்டின வீடு இது. இந்த மரத்தை யார் நட்டாங்கயார் வளர்த்தாங்க என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அம்மாவே நட்டு அம்மாவே வளர்த்திருக்கணும் என்கிறதுதான் என்னோட அனுமானம். இந்த வயசுலயும் எழுந்திருந்த உடனே அது நேரே இந்த மரத்துக்குத்தான் போகும். காய்ப்புக் காலம்னா கேட்கவே வேண்டாம். ஒரு சுற்று மரத்தைச் சுற்றி, உதிர்ந்த பிஞ்சு, அணில் கடிச்ச பழம் என்று மடியில் கட்டிக் கொண்டு வரும். சுள்ளியைப் பொறுக்கி எடுத்துக்கிட்டு வரும். ஒரு நாள் கூட இது தப்பினதே இல்லை. கொள்ளா கொள்ளையாய்க் காய்த்துக் குலுங்கினால் கூட மரத்தைக் குத்தகைக்கு விடாது. காயை விலைக்கு விற்காது. வர்றவங்க போறவங்க…பக்கத்து வீடு, எதிர்த்த வீடுன்னு கொடுத்து விடும்…இப்போ கொஞ்ச காலமாத்தான் உடம்புக்கு முடியல…என்ன ஞாபகம் இருந்தாலும் இல்லாட்டாலும் மாமரத்தை மட்டும் அது மறக்கவே செய்யாது….இந்த மரத்துல ஒரு தட்டான் பூச்சி உட்கார்ந்தாக்கூட அதுக்குத் தெரிஞ்சிரும்னா பாருங்க…”
        மரத்தை விலை பேசும் தகவல் தெரிந்தால் உயிரையே விட்டு விடும் கிழவி…பங்காளித் தகராறு….கட்சிக்காரங்க தலையீடு….காலி மனையா இது மட்டும் கிடக்கிற உறுத்தல்…தாக்குப்பிடிக்க முடியாமத்தான் செய்றோம்…மத்தப்படி விற்கிற அளவுக்கு நெருக்கடி ஒண்ணுமில்லே…..என்று வருந்தும் மகனின் வார்த்தைகள்.
       இந்த துக்கத்தை எல்லாம் கடந்து இன்று எல்லா ஏற்பாட்டோடும் வந்தாயிற்று. மின் வாரியத்திற்கு மரம் வெட்டப் போகிற தகவல் சொல்ல ஆள் போயாயிற்று. ஒரு ஆள் விறகுத் தொட்டி நாடாரையும் அழைக்கப் போயாயிற்று. நான் மட்டும் இந்த நினைவுகளில் மரத்தடியில்….
       குச்சியை ஒடிக்கிற வாசனைக்கே யாருப்பா என்று கேட்டு ஓடி வந்த ஆயா…மரம் வெட்டுவது தெரிந்தால்…?
       எந்த நடமாட்டமும் இல்லாத பின் வாசலின் வெறுமை…..
       முன் பக்கமாய்ப் போய் குரல் கொடுப்போமா…? அதற்குள்  ஆயா பின் வாசல் வழி வந்து போய்விட்டால்?
       அதோ ஆயாவின் மகன்….கைகளைக் குவித்துக் கும்பிட்டுக் கொண்டே….
       பதிலுக்குக் கும்பிட்டு நின்ற என் கைகளைப் பிரிக்க விடாமல்…மரத்தின் அருகே செல்ல…எதையோ சொல்லிவிட யத்தனிப்பதை உணர….அதை உறுதி செய்வதுபோல்…மேல் துண்டைச் சரிசெய்தபடி….
       “அம்மா காரியம் ஆகிப் போச்சு….“
       அவர் கைக்குள் இருந்த என் கைகளை உருவி, மறுபடியும் அவர் கைகளை என் பிடிக்குள் வைத்துக் கொண்டேன்.
       எல்லோருடைய காலடியின் கீழும் அந்த மரத்தின் நிழல்….கயிற்றுச் சுருணையுடன் வைத்த கோடரிகளில் ஒன்று புரண்டு விழுந்திருக்க…அதன் பளபளத்த விளிம்பில் கண்ணாடிச் சிறகுகளுடன் ஒரு தட்டான் அசையாமல்….
       மரம் அதுபாட்டுக்கு நிற்கட்டும்…வீட்டுக்காரரிடம் நான். கண்ணீர் கசிய நிற்கும் அவர்….
தட்டான் இப்போது பறக்க ஆரம்பித்திருந்தது.
வண்ணதாசனின் வரிகள் கவிதை மனதின் உச்சத்தில் நிற்க…. மேலும் விரித்துச் சொல்ல என்னதான் இருக்கிறது?
மரம் நிற்கிறது ஆயாவின் நினைவில்….நிம்மதியடைகிறது நம் மனம்…
ஒரு நீண்ட கவிதையை இப்படியும் கதையாகச் சொல்ல முடியுமா? வெறும் கதையா இது? நாடி நரம்பெல்லாம் ஊடுருவி….இப்படியா உணர்வுகள் சிலிர்த்துப் போகும்….?
ஒரு மரம்…சில மரம் கொத்திகள்…..-என் உணர்வுகளைப் பிழிந்தெடுத்த  செம்மையான ஒரு நீள் கவிதை…!                                          -----------------------------------------------



       
                 
                              

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...