16 மார்ச் 2019

“திரும்பி வரும் தருணம்“ –ஸிந்துஜா – குறுநாவல் – வாசிப்பனுபவம்

“திரும்பி வரும் தருணம்“ –ஸிந்துஜா – குறுநாவல் – வாசிப்பனுபவம்
வெளியீடு – கணையாழி – கலை இலக்கியத் திங்களிதழ் – மார்ச் 2019
                           -------------------------------------------
       சின்ன வயதில் தந்தையால் மிகவும் கண்டிப்பாக வளர்க்கப்பட்ட பெரியவர்கள், தனது குடும்பத்தில் மகனிடம் அதே கண்டிப்புடன் பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் அனுபவித்த அடி, உதை, திட்டு, வசவு இப்படியான கஷ்டங்கள் எல்லாமும் தன்னோடு போகட்டும் என்கிற மனநிலைக்கு வந்து சமன் ஆகி, தன் பிள்ளைகளுக்கும் அந்தக் கேடு வேண்டாம் என்கிற இரக்க நிலையில், பெற்ற பிள்ளைகள் அடி பிறழும்போது அல்லது கோணல் ஏற்பட்டுப் போகுமோ என்று மனதில் அச்சம் கொள்ளும்போது அதை வாய் வார்த்தையாய்க் கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். தப்பிப் போகுமோ என்று மனதிற்குள் தண்டிக்க வேண்டும் என்கிற கோபம் இருந்தாலும், செய்கையில் அது தீவிரமாக வெளிப்படாது. அப்படியே வெளிப்பட்டாலும் ஓரிரு முறை சொல்லிப் பார்த்து, அதுவும் பலனளிக்காமல் போகும் தருணங்களில் சற்றே கோபத்தின் அடையாளமாக சில அதீத   வார்த்தைகள் வெளிப்படும். இப்படியான நடவடிக்கைகள் அந்தத் தந்தையின் முதிர்ந்த, பக்குவப்பட்ட தன்மையின் இருப்பு நிலை.
       ஆனால் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு அவையே எரிச்சலூட்டும் விஷயமாக இருந்துவிடுவதுதான் துர்லபம். எல்லாமும் நம் நன்மைக்காகத்தான் என்று புரிந்தாலும், எனக்குத் தெரியாதா….சும்மா நச்…நச்சுன்னு சொல்லிட்டே இருக்கணுமா என்று சலிப்புக் கொள்ளும் நிலையில்தான் பெரியவர்களின் அறிவுரைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
       சும்மா அட்வைசக் குடுக்காத….என்று தந்தையிடமே சொல்லும் எத்தனையோ மகன்களை இன்று நாம் காண முடிகிறது. இப்படிச் சொன்னால் கூடப் பரவாயில்லை….இப்போதுதான் புதிய பாஷைகள் நிறையக் கிளம்பி நடைமுறையில் இருக்கின்றனவே… எல்லாம் எனக்குத் தெரியும்…சதா மொக்கையப் போடாத….என்று படு  கொச்சையாகப் பேசுகிறார்கள். ஜல்லியடிக்காத….என்பார்கள். அதாவது சொன்னதையே சொல்லிச் சொல்லிக் கொல்வது என்பது பொருள்.  இந்த இந்த வார்த்தைகளுக்கு இவைதான் அர்த்தம் என்று எப்படி முடிவு  செய்து பிரயோகிக்கிறார்கள், இவையெல்லாம் எப்போது இந்தச் சமுதாயத்தில் பரவி புழக்கத்திற்கு வந்தன என்பதே நாம் அறியாத புதிர்.தலைமுறை இடைவெளியில் நிகழ்ந்து விட்ட அபத்தங்கள்.  அறிவியல் தொழில் நுட்பம் எப்படி திடீரென்று விரிந்து பரவி மூத்த தலைமுறையின் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போய்விட்டதோ, அதுபோலவே இந்த இளம் தலைமுறைகளின் பேச்சும், நடவடிக்கைகளும் என்று தாராளமாய்ச் சொல்லலாம்.
என்னென்னவோ  வார்த்தைகள் இன்று நிறையப் புழங்குகின்றன. மொக்கை, சப்பை, நூல் விடுதல், கடலை போடுதல், செம, மச்சி, மச்சான், மாப்ள, மாமு,டப்பு…டுப்பு…….இன்னும் சொல்லிக்கொண்டே  போகலாம். இப்படிப் பேசுவதுதான் ஃபேஷன் இன்றைக்கு என்று நினைத்து, மகனோடு சரிக்குச் சமமாக அவ்வப்போது மனதுக்குள் நினைவு வரும் இம்மாதிரியான கொச்சைச் சொற்களை மகனை நோக்கி வீசும் தந்தைமார்களும் உண்டு. தோளுக்கு மேல் போனால் தோழன் என்று மகனோடு நட்பாய்ப் பழகுகிறார்களாம்…இந்த வகை வேதனைகளையும் காணத்தான் செய்கிறோம். சற்றுத் தீவிரமாய்ச் சொல்லப் போனால் இந்த வார்த்தைகள் எல்லாம் ஒருவனின் காரெக்டரை ஸ்பாயில் பண்ணும் அடையாளங்களாக இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.  இவற்றை அடிக்கடி பயன்படுத்தும் ஒரு இளைஞனை மதிப்போடு நாம் நோக்க முடியாது என்பதுதான் நிச்சயமாய் இருக்கிறது.  இவையே இன்றைய நடைமுறை உலகின் இளைய சமுதாயத்தின் முற்போக்கு அடையாளங்களாய்த் திகழ்கின்றன.
       ஆனால் இந்தக் கதையின் நாயகன் சச்சி அப்படியான விநோத வார்த்தைகளைப் பிரயோகிப்பதில்லையென்றாலும், அப்பாவின் கண்டிப்பில் சலிப்புக் கொள்கிறான். மனதுக்குள் கோபம் கொள்கிறான். நேரடியாய் எதிர்ப்பதில்லையாயினும் முகம் சுளிக்கிறான்.
       ஊரிலிருந்து காலையில் வந்து சேரப் போகும் மகனுக்காக இரவு முழுக்கத் தூங்காமலேயே கழித்து விடுகிறார் தந்தை. மகனின் மீதான பாசம்.
       ராத்திரி பூரா கொட்டு கொட்டுன்னு கிடந்தீங்களா என்று மனைவி கேட்க… …நீயும்தானே…என்கிறார் அவர். பையனுக்குப் பிடித்த ஸ்பெஷல் ஐட்டங்கள் என்று பாலம்மாள் கூறும்போது பாயசம் உண்டுதானே…? என்று ஆசையை மறைமுகமாய் வெளிப்படுத்துகிறார்.
       இவ்வளவு சுகர் வச்சிட்டு…இது வேறயா…என்று மனைவி கடிந்து கொள்ள “காஞ்சு வரான்” என்று அவள் சொன்னதின் உண்மையை மனது உணர மகனுக்குப் பிடித்த ஐட்டங்களாய்  அன்று தயாராவதில் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.
                ஆட்டோவில் இறங்கி வீட்டுக்குள் நுழையும்போதே பெற்றோர்களை நமஸ்கரித்து  ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளும் மகன். வந்து விலாவாக நலம் விசாரித்துப் பேச முடியாத நேரத்தில் உடனே  அலறும் தொலைபேசி. பேசுவது யார் என்று  அறியத் துடிக்கும் மனம். அது  பெண்ணா,  ஆணா…..பெண் எனில் பேர் என்ன? என்ற கேள்வி. எமிலி என்றதும் கிறிஸ்துவா? அழகா இருப்பாளா? என்று அம்மா கேட்க…ஏன் உன் பையனுக்குப் பொண்ணு பார்க்கப் போறியா? என்று கைலாசம் இரைய…என் ஃப்ரென்ட்ஸ் எல்லாரையும் கல்யாணம் செஞ்சுக்கணும்னா தசரத மகாராஜாவாத்தான் நான் இருக்கணும் என்ற அவனின் பதிலில் ஆறுதல் கொள்கிறார் தந்தை.
       குளித்து விட்டு வந்து என்றோ ஒரு நாள் வரும் மகனோடு சேர்ந்து சாப்பிடுவோம் என்று மனம் அவாவ, உறங்கிக் கொண்டிருக்கும் பையனை நினைத்து, என்னைக்கோ வரான்…சேர்ந்து சாப்பிடலாம்னு பார்த்தா….என்று வருந்துகிறார்.
       படுக்கையில் அடக்க ஒடுக்கமாய்ப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். உருளுவது, புரளுவது, பிறத்தியார் மேல் கால் போடுவது என்கிற ஜோலியெல்லாம் கிடையாது….இளம் பிராயம் முதலே அதுவெல்லாம் அவன் பழக்கமில்லை என்று தோன்றுகிறது.
ஒழுக்கத்தின் அடையாளமாய் இது நினைக்கப்பட, மூடி வச்ச புஸ்தகம் மாதிரில்ல படுத்துக் கிடக்கான் என்று அவருடைய சகோதரி சொல்வதை நினைத்துக் கொள்கிறார். தூங்கட்டும் நல்லா….என்று பொங்கிய மனசை அடக்கிக் கொள்கிறார்.
வியாபாரத்தைக் கவனிப்போம் என்று கடைக்குச் சென்றுவிடுகிறார். வேலைகளை முடித்து நாலு மணிக்கு மேல் வீடு வந்து சேரும்போதே சாப்பிட்டானா? என்று விசாரிக்கும் மனது.
சாப்டுட்டு இப்பத்தான் ஃபிரண்டை பார்க்கப் போயிருக்கான்….என்ற பதிலில் எப்போ வருவானாம்? என்று கேட்க….ஏழு எட்டு மணிக்கு வந்திர்றேன்னான் என்று சொல்லி அவனுக்குப் பிடித்த இடியாப்பம் பண்ணி வைக்கிறதாகச் சொல்லியிருப்பதால் நிச்சயம் வந்திருவான் என்று காத்திருக்கிறார்கள். ஆனால்  சச்சி இரவு வீட்டுக்கு வராமல், ஃபோன் வேலை செய்யவில்லை என்று நண்பனின் ஃபோன் மூலம் காலை வருவதாகச் சொல்ல மீண்டும் ஏமாற்றமாகிறார் தந்தை.
சீக்கிரம் வா என்று நீ சொல்ல, சீக்கிரம் வந்திர்றேன்னு வீட்ல சொல்லிட்டு இங்க வந்திருக்கேன்…என்கிறான் சச்சி எமிலியிடம். அவள் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தைச் சொல்லி, சற்று நேரத்தில் அவள் அம்மாவிடமிருந்து வரும் ஃபோன் மூலம் அந்தப் பையனை வேண்டாம் என்று சொல்லியாயிற்று என்ற விபரம் அறிந்து மகிழ்கிறார்கள் இருவரும். பிறகு அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நண்பன் திருமேனியைப் பார்க்கக் கிளம்புகிறான். அங்கு தேவா என்றொரு நண்பனையும் சந்திக்கிறான். அன்று பார்ட்டி என்று ஏற்பாடாகிறது.  தேவாவை ஜெயந்தி என்ற பெண் அழைக்கிறாள்.உடனே சற்றே பதறியவனாய் தேவா கிளம்பிப் போகிறான். இது சச்சியை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீ ஏன் ஷாக் ஆகுறே…? பணம், அதிகாரம் செல்வாக்கு இருந்தா இதான் ப்ராப்ளம்…என்று திரு கூற, பெண் சம்பந்தப்பட்ட பிரச்னையை உணர்ந்து இதை என்னால ஜீரணிக்க முடில என்று சச்சி கூற, அவனுக்கும் நம்ம வயசுதான் என்கிற அளவில் அவன் சிந்திக்க…வயசுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்ல….என்று திருமேனி மறுக்கிறான். சூழலும் வசதி வாய்ப்புகளும் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாய்க் கொண்டு  செல்கிறது என்பதை நாம ரெண்டு பேரும் ஒரே வயசு…நீ தண்ணியடிக்கிறதில்ல…நான் அடிக்கிறேன். தேவா ஒரு படி மேல போயி பொம்பளை கிட்ட விளையாடுறான்…என்கிறான் திருமேனி.
ஏதோவொரு வகையில் மனச் சங்கடம் கொண்ட சச்சி, நான் வீட்டுக்குப் போகணும் காத்திருப்பாங்க…என்று சொல்ல, நண்பனின் வற்புறுத்தலில் மெஸேஜ் அனுப்பி காலை வருவதாக அப்பாவுக்குச் சொல்லி விடுகிறான். காலையில் தாமதமாக வீடு அடையும்போது, இப்பவாவது வீட்டுக்கு வரணும்னு தோணிச்சே…என்று கைலாசம் வரவேற்கிறார். உனக்காக இடியாப்பம் பண்ணி வச்சிருந்தேன் என்று தாயார் வருந்த, உங்க அப்பாவுக்கு ரொம்ப கோபம்…என்க…கிளப்புக்கு போனவன் கொஞ்சம் லேட்டானாலும் ராத்திரி வீட்டுக்கு வந்திருக்கலாம்…என்று அப்பா சொல்ல…இவருக்கு எப்படித் தெரிந்தது என்று சச்சி திகைக்க, உனக்கும் அந்தப் பழக்கம் வந்திருச்சா…? என்கிறார் மேற்கொண்டு. என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு? என்று கோபம் கொள்கிறான் சச்சி. நீ நல்லவனா இருக்கக் கூடாதுன்னு கெடுக்கிறதுக்கு வெளில நூறு பேர் காத்துக் கிடப்பாங்க…என்று எச்சரிக்கிறார். அத்தோடு அந்தப்  பெண் எமிலி ராத்திரி பேசலேன்னா எங்களுக்கும் தெரிஞ்சிருக்காது என்கிறார். ரொம்ப சிநேகிதமோ, ராத்திரி அவ்வளவு நேரங்கழிச்சி ஃபோன் பண்ணனுமா என்ன? என்கிறார். கேள்வியில் தொக்கியுள்ள சந்தேகத்தை, பயத்தை இவன் உணர்ந்தாலும், துளைத்துத் துளைத்து அப்படிக் கேட்டது மனக் கசப்பை உண்டாக்குகிறது. அவரின் வயதுக்கு மரியாதை கொடுத்து மேற்கொண்டு ஏதும் அவரைக் கேட்காமல் தன் அறைக்குச் செல்கிறான். சச்சியின் செயல், நடத்தை மூலமாக அவன் காரெக்டர் நமக்கு முன் வைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் ஒரு பையன் இந்த அளவுக்கு இருப்பதே பெரிய விஷயமாயிற்றே…? என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அப்படியொன்றும் நீ வித்தியாசமான ஆள் இல்லை  என்று அப்பா கைலாசம் தன் தலையில் தட்டிச் சென்று விட்டதாய் ஒரு உறுத்தல் வருத்தம் அவனுக்கு. இதுவும் ஒரு வகையான அடக்கு முறைதான் என்று அவன் இளம் உள்ளம் நினைக்கிறது.
எமிலிக்கு ஃபோன் செய்ய,  அவள் மற்றவர்கள் யாரும் அழைக்கும் முன் அழைத்து விடுவோம் என்ற அவசரத்தில் வீட்டிற்குப் பேசி, டின்னருக்கு அழைக்கலாம் என்று ஃபோன் போட்டதைச் சொல்ல….எமிலியின் அழைப்பை இவன் அம்மாவிடம் சொல்ல,  அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை என்க, ஒரு .போன் கால்ல எல்லாம் புரிஞ்சிண்டுட்டாராமா? என்று கோபமாய்க் கேட்கிறான். அப்பாவைப்பற்றி இப்படியெல்லாம் பேசமாட்டானே என்று தாய் திகைக்கிறாள். இன்றைய இளைஞர்களுக்கு, தான் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு பொறுக்க முடியாததாய் இருக்கிறது என்பதுதான் உண்மை. தங்கள் நலன் நோக்கியதான நடவடிக்கை அது என்பதை அவர்கள் பின்னால்தான் உணர நேருகிறது.
மீண்டும் மாலை எமிலியைப் பார்க்கப் புறப்படுகிறான். அங்கு அவளது பெற்றோர்களுடன் பேசிக் கொண்டிருக்க, கைலாசம் அவனுக்குப் பேசுகிறார். சீக்கிரம் வந்துருவியா? என்று கேட்கிறார். தாமதிக்காது புறப்படுகையில் இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்? என்று சச்சி கேட்க, வந்ததிலிருந்து ஊருக்குப் போகிற வரை தன் கூடவே இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்..அவருக்கு என் மேலிருக்கும் காதலின் உக்கிரத்தை என்னால் தாங்க முடில…என்று சச்சி சொல்ல….இட்ஸ் ஆப்வியஸ்….என்கிறாள் எமிலி. அவளுக்குக் குழந்தை மனம் என்று அவனுக்குத் தோன்றுகிறது.
எதற்கு இப்படி ஃபோன் செய்கிறார்…என்னதான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்…?என்று எரிச்சலுறுகிறான். அதைப்போலவே வீட்டிற்குள் நுழைந்ததும், இன்னிக்கும் லேட்டாகி  அங்கியே தங்கிடுவியோன்னு நினைச்சேன்…என்று வேறு சொல்கிறார். கதிர்வேலு சித்தப்பா  அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்ததைத் தெரிவிக்க, அடடே…அவரை நானில்ல போய்ப் பார்க்கணும்…காலைல முதல் வேலையா போயிடுறேன்…என்று இவன் மரியாதை நிமித்தம் சொல்ல…ஆமாமா…. அப்புறம் சித்த நாழியாச்சுன்னா ஃப்ரெண்டு, ஃப்ரெண்டின்னு வந்து இழுத்திட்டுப் போயிடுவாங்க…என்கிறார் கைலாசம். அந்தப் பரிகாசம் இவனை மேலும் உறுத்துகிறது..
குற்றவுணர்வு விஞ்ச, காலையில் புறப்பட்டு சித்தப்பா வீடடைந்து அவரோடு பேசிக் கொண்டிருக்கிறான். அவரின் எதிர்நோக்கல் இவனை சந்தோஷப்படுத்துகிறது. வயசுப்புள்ள…ஏழெட்டு மாசங்களிச்சு வரே…கூடப் படிச்சவன், விளையாடினவன்னு எல்லாரும் பார்க்கணும்பாங்க…ஒரு ரவுண்டு ஊர் சுத்திட்டு வரலாம்பாங்க…விட்டுக் கொடுக்க முடியுமா…என்கிறார். அப்பாவுக்கு நேர்மாறான இந்தப் பேச்சு  இவனை ஈர்க்கிறது. உங்கப்பன் பொலம்பித் தள்ளிட்டான் நேத்திக்கு…வந்ததுலேர்ந்து ரெண்டு வார்த்தை இருந்து பேசுறதுக்கு அவனுக்கு முடிலன்னு பொங்கிட்டான்…என்று சித்தப்பா சிரிக்கிறார். எடுத்துச் சொல்லும் முறையில், நேரடியாய் சம்பந்தப்படாதவர்களால் இதமாய் பதமாய் மன நெருக்கத்தோடு  முன் வைக்கப்படும்போது நியாயங்கள் உணரப்படும் வாய்ப்பு கிட்டுகிறது.
சித்தப்பாவின் வார்த்தைகள்  இவனைச் சமனப்படுத்தும் அந்தத் தருணம்….உரிமையோடு அப்பாவைப்பற்றிச் சொல்கிறான்.  அதுக்காக வாயில வந்ததெல்லாமா பேசுறது? என்று ஆதங்கமாய் வருந்துகிறான். பேச்சோட நிறுத்திட்டான்ல உங்கப்பன்…அதை நினை…என்கிறார் அவர். அந்த வார்த்தைதான் அவனைத் திடுக்கிடச் செய்கிறது. உணர வேண்டிய ஒன்றல்லவா? அறிவுள்ள புத்திசாலிப் பையன் உள்ளிருக்கும் தாத்பர்யத்தை உணர்ந்து கொள்கிறான்.
இந்த இடம்தான் கதையின் திரும்பி வரும் தருணமாகிறது. வீட்டை விட்டுப் புறப்படும்போது, இருந்த மனநிலை…திரும்பி வந்த பின்பு….மாற்று சிந்தனையாக, பொறுப்போடு விகசிக்கிறது. சித்தப்பாவால் சொல்லப்பட்ட அப்பாவின் வாழ்க்கை அனுபவங்கள், அவரது தந்தையால் மிகவும் கண்டிப்பாக வளர்க்கப்பட்ட தண்டனைகளுடன் கூடிய நெடிய காலங்கள், அவனை யோசிக்க வைக்கின்றன. அம்புட்டு கஷ்டப்பட்டிருக்கான் கைலாசம்…தெரியுமா…? என்று அனுபவங்களை அழகாய் முன் வைக்கிறார் சித்தப்பா. சச்சியின் மனம் தெளிவடைகிறது.
அவன் அணிந்திருந்த  கறுப்புக் கண்ணாடியைக் கழற்றியபோது மனமும் வெளிச்சம் கொள்கிறது. வெளேரென்ற வானத்தைப் பார்க்கும்போது புத்துணர்வை அடைகிறான்.. உரிமையுடன் கூடிய அப்பாவின் தன் நலம் சார்ந்த, பாசமும் நேசமும், அன்பும் தழுவிய வார்த்தைகளுக்கே இப்படி  சங்கடம் கொள்கிறோமே…சீரான வளர்ப்பு என்கிற நோக்கில் .எப்படிப்பட்ட  கொடுமைகளையெல்லாம் தன் தந்தையின் மூலமாய் அப்பா எதிர்கொண்டிருக்கிறார்…? அதன் மூலம் எவ்வளவு அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்? என்ன மாதிரியான எண்ண முதிர்ச்சியை அனுபவத்தை  எய்தியிருக்கிறார்?- எண்ணத் தலைப்படுகிறான். தன் தவறுக்காக மனம் வருந்துகிறான். உதடுகளை இறுக மூடிக்கொண்டு துக்கத்தை அடக்கிக் கொள்ள முயல்கிறான் சச்சி.
வீட்டினுள் புக முயன்று கொண்டிருக்கும் சூரிய ஒளியோடு சேர்ந்து தெளிந்த மனதோடு உள்ளே அடியெடுத்து வைக்கிறான். தலைமுறை இடைவெளியில், இந்த வாழ்க்கை அனுபவங்களில், மனித மனங்களின் மாறுபாடுகளும், அதைப் பகுத்துணரும் தன்மையும், அவையே நம் அனுபவச் செழுமையின் சாரம் என்பதை, ஒரு குடும்பத்தின் உறவுகளின் பாசமுள்ள  எளிய நிகழ்வுகளின் வழி நமக்கு உணர்த்தியிருக்கும் அற்புதமான படைப்பு எழுத்தாளர் ஸிந்துஜா அவர்களின் இந்தத் “திரும்பி வரும் தருணம்”.
கணையாழி மார்ச் 2019 இதழின் தலையாய படைப்பாக இக்குறுநாவல் திகழ்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.
                     ------------------------------------------------------கருத்துகள் இல்லை:

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...