கட்டுரை உஷாதீபன், ந.சிதம்பர சுப்ரமண்யத்தின் “இதய நாதம்” (நாவல் சுகானுபவம்)
நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை
சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
“சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான
வாரிசாக நான் ஏற்படவில்லை.
என் குடும்பத்தில்
எனக்கு முன்னே பிறந்திருந்த சங்கீத சிம்மங்களுக்குப் பின்னால் வருவதற்கு நான் கொஞ்சமேனும்
யோக்யதை இல்லாதவன்.
இருந்தாலும் இரத்தத்தில்ஊறியிருக்கும்
பரம்பரைச் சங்கீத வாஸனை நான் லௌகீக முறைப்படி எந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும் இதயத்தைச்
சங்கீதத்திலேயே நாட வைத்தது.
நாதத்தை முறைப்படி
உபாசிக்காத நான் நாத யோகிகளை உபாசிக்கலானேன். அந்த முயற்சியின் பயன்தான் இந்தப் புத்தகம்“ என்கிறார் ஆசிரியர் திரு ந. சிதம்பர சுப்ரமணியன் அவர்கள்.
இசையை முன் வைத்து நாவல்கள் வந்திருக்கின்றன. தி.ஜா.ரா.வின் மோகமுள். அதற்கு முந்தையது இந்த நாவல்.
யுவன் சந்திரசேகர் எழுதிய கானல்நதி ஒன்று.
இசையைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொண்டு சிற்சில நுணுக்கங்களைப்
புரிந்து கொண்டு ஒரு சிறுகதையைப் படைத்து விடலாம்தான். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் சீசனில் ஏதேனும்
ஒரு வார இதழில் அப்படியான ஒரு சிறுகதை வந்துவிடுவதுண்டு. குறிப்பாகக் கல்கி. ஆனால் முழுக்க முழுக்க குறைந்தது இருநூறு
பக்கங்களுக்கு மேல் ஒருமுழு நாவலைப் படைப்பது என்பது அதிலேயே வெகு காலத்திற்கு மூழ்கித்
திளைத்து எழுந்தாலே சாத்தியமாவதற்கு
வாய்ப்பிருக்கிறது என்று தோன்றுகிறது.
ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய
நாதம் நாவல் மிகுந்த பக்தியோடும், மரியாதையோடும், பொறுப்புணர்வோடும், பெருத்த தன்னடக்கத்தோடு கட்டுசெட்டாக, கன கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.
சுங்குடிப் புடவையைக் கட்டிக்கொண்டு ஒரு குடும்பப் பெண் பாந்தமாய்
நின்றாளென்றால் அந்தக் காட்சி மனதை எத்தனை கொள்ளை கொள்ளும். எந்தவிதமான பயபக்தியையும் மரியாதையையும்
உண்டு பண்ணும்?
அப்படியான ஒரு மரியாதையும், பயபக்தியும் இந்த நாவலைப் படிக்கும்போது
நமக்கு ஏற்படுகிறது.
நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் வாசகன் ஒருவன் இந்த நாவலைப்
படிக்கும்போது இதைக் கண்டிப்பாக உணருவான். எழுத்து, படிப்பவர் மனங்களில் நல் உணர்ச்சிகளை, நல்ல எண்ணங்களை, சமூக ஒழுக்கங்களை, மனிதனின் அடிப்படை வாழ்வியல் நியாயங்களை
உசுப்பி விடுவதாக அமைந்து விடும்போது, வாசகன்
அங்கே தன்னிடம் உள்ள தவறுகளைத் துடைத்துக் கொள்ள முயலுகிறான். தன்னிடமுள்ள தீய எண்ணங்களைத் துரத்துவதற்கு
யத்தனிக்கிறான்.
எழுத்தின் பாதிப்பு
அவனுக்குள்ளும் மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது வாழ்க்கையின் அனுபவப் பகிர்வுகள் மனிதனைப்
பக்குவப்படுத்துகின்றன.
அவனை விவேகமுள்ளவனாக
மாற்றுகின்றன. அம்மாதிரியான பல்வேறு மனித யத்தனங்கள்
கொண்ட பாத்திரங்களை உள்ளடக்கிய நாவலாக இந்த இதய நாதம் நம் நெஞ்சத்தை அள்ளுகிறது.
வாழ்க்கையிலே சில சங்கீதப் பெரியார்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்
சிலவற்றைப் போன்று தொகுத்துக் காட்ட முயன்றிருக்கிறேன். காளிதாஸன் சொல்லியிருப்பதுபோல், நாதயோகம் எங்கே, நான் எங்கே… இருந்தாலும் ஆசை வெட்கமறியாது என்ற முறையில்
இதை எழுதியிருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். எவ்வளவு தன்னடக்கம் பாருங்கள். மனிதர்கள் கர்வமில்லாதவர்களாக, மிகுந்த அடக்கமுள்ளவர்களாக நின்று தனது உள்ளார்ந்த
திறமைகளை பணிவோடு முன் வைக்கும்போது எவ்வளவு உயர்ந்து போகிறார்கள். உண்மையான மன எழுச்சி, அதிலே பிரதிபலிக்கும் அடக்கமான வார்த்தைகள், அவர்களின் திறமையை ஒளிவிடச் செய்கிறது.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற நாதப் பிரம்மங்களைப்
பற்றியும், மஉறா வைத்தியநாத சிவன் போன்ற சங்கீத
உபாஸகர்களைப் பற்றியும் கேட்டு,
என் இதயம் ஒரு நாதோபாசகனைப்
பற்றி எழுதத் தூண்டியது.
அநேக சங்கீதப் பெரியார்களைப்
பார்த்தும், கேட்டும், அவர்கள் பட்ட சிரமங்களையும், அவர்கள் செய்திருக்கும் தபசையும் அறிந்ததிலிருந்து
ஒரு நாத யோகியைக் கதாநாயகனாக வைத்து எழுத வேண்டும் என்ற ஆசையை இந்த நாவல் மூலம் நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
நாவலின் கதை இதுதான் என்று முன் வைத்து விடுவது சுலபம். ஆனால் அத்தோடு இதுதானே என்று அதை வாங்கிப்
படிக்காமல் விட்டு விடும் அபாயம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. சொல்லப்பட்டிருக்கும் கதை முக்கியமல்ல. கதையின் சம்பவங்களுடே விரிவடையும் இசை பற்றியதான
விளக்கங்களும்,
சம்பாஷனைகளும், அதை மேற்கொண்டிருந்த பெரியோர்களின் பக்தி
உபாசனையும், அந்தப் பக்தி உபாசனையினால் அவர்கள்
வாழ்க்கையின் நியமங்களில் ஒன்றிப் போன ஒழுக்க நெறிகளும்,தத்துவ விசாரங்களும், அந்த ஒழுக்க நெறிகளின் சீர்மையினால் அவர்களின்
வாழ்வில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களும், எந்தவித
இடர்பாடுகளிலும் நெறி பிறழாத பிடிவாதமும், அத்தன்மையின்பாற்பட்டே அவர்கள் மலையளவு உயர்ந்து
நிற்கும் தார்மீக நெறியும்,
எல்லாமும் வாழ்க்கையின்
அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக நம்மை உணர வைக்கும்போது, ஒவ்வொரு மனிதனும் தன்னை எவ்விதம் வடிவமைத்துக்
கொண்டால் நிம்மதியோடும்,
சந்தோஷத்தோடும் இருந்து
கடக்கலாம் என்னும் அனுபவ முத்திரைகளை உள்ளடக்கியதாக இந்த நாவல் உணரப்படும்போது இன்னும்
என்னென்ன பொக்கிஷங்கள்தான் தமிழில் இருக்கின்றன என்கிற தீவிரத் தேடல் நோக்கு நம்மை
வந்து பற்றிக் கொள்கிறது.
இலுப்பூர் கிராமத்தில் கௌரியம்மாள் பையன் கிட்டு. பஞ்ச நத தீட்சிதரின் பெண் அவள். கௌரியின் கணவன் வைத்தி. அவனுக்குச் சங்கீத்தில் விசேஷ ஞானம் உண்டு
என்பதாக ஊராரால் அறியப்படுகிறது.
அது மட்டுமே வாழ்க்கைக்கு
சோறு போடுமா? என்பதாக கௌரி உணர்கிறாள். ஆனால் அவனது நடவடிக்கைகள் மனம் போனவைகளாக
இருக்கின்றன. கௌரிக்கு இவரோடு எப்படி வாழ்வது
என்பது எப்போதும் பிரச்னையாக இருக்கிறது. புருஷனைத்
திருத்த முயல்கிறாள்.
ஒழுங்கில்லாத வாழ்க்கை
வாழ்ந்து, அதனால் உடம்பும் மனமும் கெட்டு காசநோய்
வந்து கஷ்டப்பட்டு வைத்தி இறக்கிறான். கௌவி
விதவையாகிறாள்.
புருஷனிடம் இருந்த
வெறுப்பில் சங்கீதத்தில் கசப்பு ஏற்படுகிறது அவளுக்கு.
பையன் சமஸ்கிருதத்திலும், சாஸ்திரத்திலும், பயிற்சி பெற விரும்பினாள். கிட்டுவுக்கு பாடங்களில் மனம் செல்லவில்லை. சங்கீதம் வந்தது. பஜனைப் பாட்டுக்கள் வந்தன. தெம்மாங்கு, தில்லானா, ஜாவளிகள், பாடமாயின. கந்தர்வனின் சாரீரம். அவனுக்குச் சங்கீதம் சொல்லி வைத்தால் நன்று
என்று ஊரார் வற்புறுத்துகிறார்கள். கௌரிக்கு
அது பிடிக்கவில்லை.
சொன்னால் நல்ல சிரேயசை
அடைவான் என்கிறார்கள்.
கிட்டுவுக்குப் படிப்பு
வேம்பு.
ஒரு கல்யாண கோஷ்டி வருகிறது ஊருக்கு. அதிலிருக்கும் பெரியவர் துணைக்கு கிட்டுவை
எடுபிடிக்கு அழைக்கிறார்.
நாதஸ்வரக் கோஷ்டியை
வேடிக்கை பார்த்துக் கொண்டு,
தன்னையறியாமல் தாளங்களைச்
சரியாய்ப் போடும் கிட்டுவை,
பாடச் சொல்கிறார் வாசிப்பவர். பாடுகிறான் கிட்டு. அவனின் சாரீர மகிமையை உணர்ந்து பெரியவர்
கணேச சாஸ்திரியிடம் சிபாரிசு செய்கிறார்கள் அவர்கள். உடன் அழைத்துச் சென்று திருவையாறு சபேச சாஸ்திரிகளிடம்
சேர்த்து விடுகிறார் கிட்டுவை.
சபேச அய்யர் லட்சண வித்வான். சங்கீதத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர். கிட்டுவின் குரல் கேட்டு அவர் தன்னை இழக்கிறார். திவ்யமான சாரீரம். அசாத்ய ஞானம் என்கிறார். ஒரு விஜயதசமியில் வித்யாப்பியாசம் நடைபெறுகிறது.
சபேசய்யரின் மனைவி தருமாம்பாள். அவர்களுக்கு ஒரு பெண். அதைக் கல்யாணம் செய்து கொடுத்து ஒரு ஆண்
மகவை ஈன்றெடுத்து இறந்து விடுகிறது அந்தப் பெண். பையன் பெயர் மகாதேவன்.
மகாதேவனுக்கும் கிட்டுவுக்கும் மன மோதல்கள் ஏற்படுகின்றன. சபேசய்யர் இல்லாத ஒரு நாளில் அவரது பூஜை
பீடத்தில் இருக்கும் வீணையை எடுத்து வாசிக்க ஆசைப்படுகிறான் கிட்டு. அவனது நெடுநாள் ஆசை அது. அதுவே நல்ல சந்தர்ப்பம் என்று உந்துதல் ஏற்பட
அதை எடுத்து வைத்து உட்காரும்போது, அதன்
பிருடை ஒன்று சுவற்றில் மோதி உடைந்து போகிறது. தன்னை நொந்து கொள்கிறான் கிட்டு. இனி எப்படி இவரோடு நான் இருந்து கழிப்பேன்
என்று வேதனை கொள்கிறான்.
ஆண்டவா இந்தக் கணமே
என் உயிரை எடுத்துக் கொள்ளேன் என்று அழுகிறான். சபேசய்யர் வருகிறார். பார்த்து விடுகிறார். முதலில் மகாதேவன்தான் இதைச் செய்திருக்கக்
கூடும் என்று நினைக்கிறார்.
கிட்டு உண்மையைச் சொல்லி
மண்டியிடுகிறான்.
உனக்கு ஏன் இந்த வேலை? என்று கேட்ட சபேசய்யர் அவனின் உண்மைக்கு
முன் மனம் நெகிழ்கிறார்.
போனால் போகிறது. சரி செய்து கொள்ளலாம் என்கிறார். நீ உண்மை பேசினாயே அதுதான் எனக்கு வேண்டும்
என்று அவனை மன்னிக்கிறார்.
பேரன் மகாதேவனுக்கு உபநயனம் செய்விக்க முடிவு செய்கிறார். நம்மோடு இன்னொரு பிள்ளையாய் இருந்து கழிக்கும்
கிட்டுவுக்கும் சேர்த்து முடிக்கலாமே என்கிறாள் தர்மாம்பாள். இருவருக்கும் உபநயன விசேஷம் சிறப்புறக் கழிகிறது.
தஞ்சாவூருக்கு ஒரு நாடகக் கோஷ்டி வருகிறது. அந்தக் கோஷ்டியிலிருந்தவர்கள் பெரும்பாலும்
மிகுந்த அறிவாளிகள்.
வடமொழியிலும், தென் மொழியிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர்கள். நிமிஷப் பொழுதில் கவனம் செய்யக்கூடிய கவித்துவ
சக்தி பெற்றவர்கள்.
அத்துடன் கூட சங்கீதத்திலும்
நல்ல பூரணமான ஞானத்தைக் கொண்டவர்கள். அறிவாளிகளும், பண்டிதர்களும் நிறைந்து இருந்தபடியால் அவர்கள்
எல்லோரிடமும் உயர்ந்த ஒழுக்கம் இருந்தது.
சபேசய்யர் சங்கீதத்திலும், சாஸ்திரத்திலும் சிறந்த விற்பன்னராகையால்
அவரைக் கூட்டிக் கொண்டுவந்து சில நாடகங்களைக் காட்டுகின்றனர். அப்போது கிட்டுவைப் பாட வைத்துக் கேட்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தங்கள் நாடகக் கோஷ்டியோடு
சேரச் சொல்கிறார்கள்.
முடிவு செய்யத் தெரியாமல்
கிட்டு குருவை நோக்குகிறான்.
சங்கீதத்திற்கு அவன்
செய்ய வேண்டிய தொண்டு நிரம்ப இருக்கிறது. ஆகையினால்
அவனுக்கு இது வேண்டாம்.
அவனை விரும்பாதீர்கள்
என்கிறார் சபேசய்யர்.
எனக்கு என்ன தெரியும்? என் கண்ணைத் திறந்து உருவாக்க வேண்டியவர்கள்
நீங்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்கிறான் கிட்டு. சபேசய்யர் மனம் நிறைந்து போகிறார்.
கிட்டு வித்தையில் பெருகுகிறான். கிரமமாக அவனுக்கு அனைத்தையும் பயிற்றுவிக்கிறார்
சபேசய்யர். அவன் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு
ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கிக் கொள்வதைக் கண்டு வியக்கிறார்.
சொல்லிக் கொடுப்பதென்பது ஒரு வியாஜம். சில கோடிகளைக் காட்டி விட்டால் அந்த வழி
அவரவர் மனோ தர்மத்திற்குத் தகுந்தாற்போல் போக வேண்டியதுதானே? மணிக்கணக்காகச் சோர்வின்றிச் சாதகம் செய்கிறான்
கிட்டு. பசி, தாகம் ஒன்றுமே அவனைப் பாதிப்பதில்லை. யோகத்திலிருக்கும் ரிஷி குமாரனைப் போன்று
தோன்றுகின்றான்.
அவனுடைய சாதகத்தையும், மேதா விலாசத்தையும் கண்டவர்கள், இவன் சங்கீத உலகத்திற்கே ஒரு சிகரமாக வரப்போகிறான்
என்று காண்கிறார்கள்.
ஸ்ரீராமநவமி உற்சவம் வருகிறது. வருடா வருடம் சபேசய்யரின் கச்சேரி உண்டு. அந்த வருடம் அவருக்கு நல்ல ஜூரம். கிட்டுவைப் பாட வைக்கிறார் சபேசய்யர். பழைய சிஷ்யன் விசுவநாதனுக்குப் பொறாமை வருகிறது.
காலில் ஏதோ குத்தி, அது பெருகி, விடாது தொடர்ந்து படுக்கையில் கிடந்து சபேசய்யர்
உயிர் துறக்கிறார்.
கிட்டு பல வருடங்களுக்குப்
பிறகு தன் தாயாரைத் தேடிப் போகிறான். அவளின்
இறப்புச் செய்தி அறிகிறான்.
ஊர் திரும்புகிறான். தஞ்சாவூரில் சபேசய்யரின் நண்பர் பொன்னையாபிள்ளை
அவர்களைச் சந்திக்கிறான்.
அவர் சபேசய்யரின் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர். கிட்டுவை நன்கறிந்தவர். அவனின் இசையை அடிக்கடி கேட்கும் நல் வாய்ப்புக்
கிட்டியதே என்று தஞ்சையில் வீடு தருகிறார். இதற்கிடையில் தர்மாம்பாள் தன் தங்கை பெண்
நீலாம்பாளைக் கிட்டுவுக்கு மணம் செய்விக்கிறாள்.
தஞ்சையில் வருடா வருடம் கந்த சஷ்டி விழா. கந்தசாமி பாகவதர் அதை விமர்சையாக நடத்துபவர். அந்த வருடம் முடிவு செய்த பிரபல வித்வான்
வரவில்லை. கிட்டு ஏற்பாடாகிறான். கச்சேரியை அமர்க்களப்படுத்துகிறான். அவன் பாட்டில் மெய் சிலிர்த்து அவருக்கு
ஒருவர் மூலம் கிடைக்கப்பெற்ற தம்புரா ஒன்றை அவனுக்குப் பரிசாக அளிக்கிறார் கந்தசாமி
பாகவதர். கிட்டுவின் புகழ் பரவுகிறது.
ஒரு மிராசுதார் வீட்டுக் கல்யாணம் வருகிறது. கிட்டு கச்சேரி ஏற்பாடாகிறது. நியமங்களைக் கிரமமாக முடித்து விட்டுத் தாமதமாக
வருகிறான் கிட்டு.
பிரச்னையாகிறது. கேட்ட பணத்தைக் கொடுத்தேனா இல்லையா என்கிறார்
மிராசுதார். அப்போதுதான் பணத்தின் மீது வெறுப்புக்
கொள்கிறான் கிட்டு.
பாட முடியாது என்று
வெளியேறுகிறான்.
கந்தசாமி பாகவதர் சமாதானப்படுத்துகிறார். மூலையில் உட்கார்ந்து கேட்கும் உன் பாட்டை
மனதார விரும்பும் ஏழை பொது ஜனத்திற்காகப் பாடு என்கிறார். கச்சேரி இனிதே முடிகிறது. ஆனாலும் மனம் அலைபாய்கிறது கிட்டுவுக்கு. சங்கீதம் விலை பேசப்படுவதாக உணர்ந்து மனமுடைகிறான். அப்பொழுதிலிருந்து காசுக்குப் பாடுவதில்லை
என்று முடிவெடுக்கிறான்.
ஆத்மாவின் பசியைத் தீர்ப்பதற்கு முன்னால் வயிற்றுப் பசியைத்
தீர்ப்பதற்கான போராட்டம் ஆரம்பமாகிறது. வீட்டில்
மன நிம்மதியில்லாமல் இருக்கிறான்.
அடிக்கடி மனைவியோடு
சண்டை வருகிறது.
இதற்கிடையில் கும்பகோணத்தில்
இருக்கும் பாலாம்பாள் என்னும் தாசி அருமையான சாரீரம் உடையவள்.எல்லோரும் அவளுடைய குளுமையான சாரீரத்தைக்
கேட்பதற்கே கூடுவது வழக்கம்.
அவள் கிருஷ்ணபாகவதரைப்
பற்றிக் கேள்விப்பட்டு
(கிட்டு) அவரிடம் முறையான சங்கீதம் கற்க ஆசைப் படுகிறாள். அதற்கு உறுதுணையாய் இருக்கிறார் மிருதங்க
வித்வான் மாரிமுத்தா பிள்ளை.
வித்தையை யாசிப்பவருக்கும்
போதிப்பவருக்கும் வித்தைதான் பெரிது என்றால் என்ன வித்தியாசம் வந்து குறுக்கிடப்போகிறது
என்று சம்மதிக்கிறார் கிருஷ்ணபாகவதர்.
திருவையாறு தியாகய்யர் உற்சவம். கிருஷ்ணபாகவதர் கச்சேரி ஏற்பாடு. எதிர்க் கச்சேரி பாலாம்பாளுடையது அதே நாளில்
ஓரிடத்தில். பயபக்தியோடு ஓடிவந்து கிருஷ்ணபாகவதருடைய
கச்சேரியில் உட்கார்ந்து விடுகிறாள் அவள். ஜனமும் கலைந்து அங்கேயிருந்து இங்கு வந்து
விடுகிறது. அவளின் பயபக்தி உணரப்படுகிறது. சாரீரம் உள்ளது வித்வத் இல்லையே? என்று புலம்புகிறாள் அவரிடம். சங்கீதம் முறைப்படி கற்கிறாள். ஊரில் அபகீர்த்தி வந்துவிடக் கூடாது என்று
கந்தசாமி பாகவதர் பயப்படுகிறார்.
கானலோலன் காமினிலோலன்
ஆகிவிட்டாரே என்று ஊர் பேசுகிறது.
அதற்குத் தக்க பதிலடி
கொடுக்கிறார் கந்தசாமி பாகவதர்.
தன் கணவன் மீதான பாலாம்பாளின் அக்கறையைக் கண்டு கொதிக்கிறாள்
நீலா. மனதில் களங்கமில்லாமல் பழகிவரும்
கிருஷ்ணபாகவதர் பாலாம்பாளின் வீடு தேடிச் சென்று சிட்சையைக் கேட்டு மனம் உருகுகிறார். உன் தவம் பலித்தது என்கிறார். அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கிறாள்
அவள். நான் மிகவும் கேவலமான குலத்தில்
பிறந்தவள். என் மீது கிருபை கூர்ந்து வித்தையை
அனுக்கிரஉறித்ததற்கு உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்றும் என் இருதயத்தில்
நீங்கள் இருக்கிறீர்கள் என்றும் நா தழு தழுக்கிறாள் பாலாம்பாள். தொடர்ந்து சிட்சை நடக்கிறது. தன்னை மறந்து பாடுகிறார் கிருஷ்ணபாகவதர். மெய்மறக்கிறாள் அவள். என்னிடம் சங்கீதத்தை சாகரமாய்ப் பெருக்கியிருக்கறீர்கள். அன்பின் ஒரு துளி அதில் சேரவில்லை என்கிறாள். பதறுகிறார் பாகவதர். இது என்ன பேச்சு? என்று திடுக்கிடுகிறார். நாதத்தை மகத்தான யோகமாக உபாசித்தேன். சங்கீதம் மனத்திலே தூய்மையான எண்ணங்களைத்தான்
உண்டுபண்ணும் என்று எண்ணியிருந்தேன். என்
பாட்டு கேவலம் மிருக இச்சையைத் தூண்டுமானால் என் சங்கீதம் பொய். என் யோக்கியதையும் பொய். நான் பாடுவதற்கே லாயக்கில்லாதவன். என்று சொல்லி அன்று முதல் பாடுவதையே நிறுத்தி
விடுகிறார் கிருஷ்ண பாகவதர்.
இதுவரை வித்தையில் நாட்டங்கொண்ட வித்யார்த்தினியாய் இருந்தாய். இப்பொழுது உணர்ச்சி வசப்பட்ட பெண்ணாகிவிட்டாய். இனிமேல் எனக்கு இங்கு வேலையில்லை. வித்தையை வீணாக்காமல் போற்றி வளர்த்து சௌக்கியமாய்
இரு என்று சொல்லிவிட்டு வெளியேறி விடுகிறார்.
ஊருக்குள் இந்தப் பிளவு பல
சந்தேகங்களைக்
கிளப்புகிறது. நீலாம்பாள் மனதிலும் போராட்டம். ஆனால் கந்தசாமி பாகவதர் மட்டும் கிருஷ்ணபாகவதரை
நம்புகிறார்.
காலம் மாறுகிறது. மகாவெள்ளத்தில்
தனி மனித உணர்ச்சிகள் அடித்துச் செல்லப்படுகின்றன. கிருஷ்ணபாகவதரின் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பஜனை மடத்தைப் புனருத்தாரணம் செய்விக்க கச்சேரி
வைத்து பணம் வசூல் செய்யலாம் என்று முனைகின்றனர் இருவரும்.
சோதனையாய் அவரது உடல் நலம் சீர்கெடுகிறது. கச்சேரி நாளன்று மேடையேறுகிறார் கிருஷ்ணபாகவதர். பின்னால் கணீரென்று தம்பூராவின் இன்னிசை. அந்த சுருதியில் செவியையும் மனத்தையும் இதயத்தையும்
புகுத்திக் கொண்டு வாயைத் திறந்து பாட ஆரம்பிக்கிறார். சுருதிக்காக அவர் கொடுத்த ஆவென்ற சப்தத்திற்கு
பதிலாக அவர் தொண்டையிலிருந்து வெறும் காற்றுத்தான் கிளம்பியது. ஒரு விநாடி உடம்பு அசைவற்று நிற்கிறது. முகத்திலும், உடம்பிலும் வியர்வை கொப்பளிக்கிறது. திரும்பவும் பாட முயல்கிறார். வெறும் காற்றுடன் வருகிறது ஒலி. இது அவருடைய சாரீரம்தானா? அவர் குரல் எங்கு போய் ஒளிந்து கொண்டது? அந்த திவ்யமான சாரீரம் எங்கே? போய்விட்டது. லட்சக்கணக்கான ஜனங்களுக்கு ஆனந்த வெள்ளத்தைக்
கொடுத்து இசையமுதத்தைப் பெருக்கிய அந்த இனிய சாரீரம் தொண்டையிலிருந்து போய்விட்டது. அவருக்குத் தலை சுழன்றது. மயக்கம் வருவதுபோல் ஓர் உணர்ச்சி. தூக்கத்தில் இருந்து எழுந்தவரைப்போல் மேடையிலிருந்து
வேகமாகக் கீழிறங்குகிறார்.
கந்தசாமி பாகவதரைப்
பார்த்து சோகம் ததும்ப வினவுகிறார். என்
சாரீரம் போய் விட்டது.
சரீரம்தான் நிற்கிறது. என் குரலுக்குப் பதிலாக என் உயிரைக் கடவுள்
கொண்டு போயிருக்கக் கூடாதா?
என்று கண்கலங்குகிறார். சிகிச்சை பலனளிக்கவில்லை.
தாம் இனி சபையிலமர்ந்து பாட முடியாது. சபையில் என்ன? தமக்காகவே அவர் இனிப் பாட முடியாது. தம் உள்ளத்தில் பொங்கி வரும் சங்கீத வெள்ளத்திற்கு
இனி ஒலி உருவம் கொடுக்க முடியாது.
எதற்காக வாழ்ந்து வருவதாக
எண்ணியிருந்தாரோ அந்த அடிப்படையில் கேடுவிளைந்ததில் அவருக்கு நெஞ்சம் வெதும்பியது. அவருடைய நடவடிக்கையில் பெருத்த மாறுதல் ஏற்பட்டது. ஒழுங்கும் முறைமையும் கொண்ட அவருடைய வாழ்வில்
குழப்பம் ஏற்பட்டது.
அக்குழப்பத்தைத் தீர்க்கிறார்
கந்தசாமி பாகவதர்.
வானிலும் வெளியிலும் அணுவிலும் இயங்கும் நாத பிரும்மத்தின் ஒரு
திவலையைத்தானே உன் காதுகள் ஏற்று வாங்கிக் கொள்ளுகின்றன? உன் செவிக்கு எட்டாது இயங்கும் நாதவெள்ளம்
எவ்வளவு இருக்கிறது?
உன் காதுகள் கேட்ட
நாத வெள்ளத்தில் இதுவரையில் ஈடுபட்டிருந்தாய். இனி செவிக்கு எட்டாத இனிய நாதத்தில் ஈடுபடுவதற்குத்தான்
உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. செவிகள்
கேட்கும் இனிய கீதத்தில் ஈடுபட்டிருந்தாய். செவிக்கு எட்டாது நிற்கும் பரம கீதத்தில்
ஈடுபடப்போகிறாய்.
உன் செவிகள் வெளியே
கேட்கும் நாதத்தில் ஈடுபட்டன.
இப்பொழுது அவைகளை உள்நோக்கித்
திருப்பு. எங்கும் நிலவி வரும் பரம ஒலியின்
எதிரொலியை உன் உள்ளத்திலே கேட்பாய்…” – இதைக்
கேட்டு கிருஷ்ணபாகவதரின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிகிறது. விசுவரூப தரிசனம் கண்ட பார்த்தனைப்போல் நிற்கிறார். கந்தசாமி பாகவதர் தொடர்கிறார்.
நீ நாதத்தின் எல்லையைக் கடந்து விட்டாய். அடுத்தபடியில் இருப்பது மௌனம். அதற்கு நீ வந்து விட்டாய். அதுதான் தியானம் என்கிறார்.
உண்மைதான்.
இதுநாள்வரை பகவானைக்
குரல் கொடுத்துக் கூப்பிட்டு வந்தேன். இனி
என் இதயத்தால் அவரைக் கூப்பிடுவேன் என்கிறார் கிருஷ்ணபாகவதர். சஞ்சலம் நீங்குகிறது. சாந்தி பிறக்கிறது. வெளியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. ஆனால் கிருஷ்ணபாகவதரின் இதயத்தில் இருள்
இல்லை. தன் இதய நாதத்திலேயே அவர் ஈடுபட
ஆரம்பிக்கிறார்.
அற்புதமான நாவல். அடடா…! முடிந்து விட்டதே என்றிருக்கிறது நமக்கு. இதயத்தைப் பிழிந்தெடுக்கும் மகோன்னதப் படைப்பு. காலத்தால் கண்டு கொள்ளப்படாமல் பின் தள்ளப்பட்டு
விட்டதோ என்ற மனத்தாங்கல் ஏற்படுத்துகிறது.
வெளியீடு – சித்தக்கடல் பதிப்பகம், ஜே.-6,
லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை-14. (விலை ரூ. 100.00)
-------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக