26 பிப்ரவரி 2019

(அசோகமித்திரனின் “புண் உமிழ் குருதி“-சிறுகதை) ரசானுபவம்



நேசிப்பவர்களாலும் தீங்கு வரும்
---------------------------------------------------
(
அசோகமித்திரனின்புண் உமிழ் குருதி“-சிறுகதை) ரசானுபவம்
-------------------------------------------------------------------------
-------------
வாழ்க்கையில் உறவுகளால் நமக்குச் சங்கடங்கள் ஏற்படுவதுண்டு. கெடுதல்கள் நிகழ்வதுண்டு. அவுங்க நமக்குத் தீங்கு செய்வாங்களா? அப்புறம் உறவுங்கிறதுக்கு என்னதான் அர்த்தம்? என்று நம்பிக்கையோடு இருக்கும் நிலையில் எதிர்பாராவிதமாகச் சில நஷ்டங்கள் ஏற்பட்டு விடுவதுண்டு. போகட்டும்என்று விடுபவர் சிலர். அதையே மனதில் பகையாய்க் கொண்டு பழி தீர்க்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்போர் சிலர். பழிக்குப் பழி வாங்கினால்தான் மனசு ஆறும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். விடுபோனாப் போகுது….என்று உதறி, மறக்க முனைவோரும் உண்டு. மறந்து கைகோர்ப்போரும் இருக்கிறார்கள். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. முதுமொழி நமக்கு இதை உணர்த்துகிறது.
உறவு அல்லாத வெளியிலும் இருந்து தீங்குகள் நேர்ந்து விடுவதுண்டு. நண்பர்களினாலும், நட்பு என்று அல்லாது வெறுமே பழக்கமுடையோராலும், என்றைக்கோ ஓரிரு முறை சந்தித்து மீளுவோராலும்….எதிர்பாராவிதமாய் நஷ்டங்கள் நம்மை வந்து அடையும் போது, விதி என்று நொந்து கொள்பவர்கள் உண்டு….யாருக்கோ, எப்பொழுதோ செய்த கெடுதலுக்கு இப்போது ஏற்பட்ட நஷ்டம் என்று உணர்பவர்கள் உண்டு.
மனதைச் சமன் செய்து கொள்வதற்கு மனிதர்களுக்குப் பக்குவம் வேண்டும். அதை எய்துவதற்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான அனுபவங்கள் வேண்டும். கிட்டிய அனுபவங்களிலிருந்து கிடைத்த உண்மைகளை உணர்ந்து மனதில் இருத்திக் கொள்ளும் நிதானம் வேண்டும். அது, கொஞ்சம் கொஞ்சமாய் சேகரம் ஆகி, பக்குவப்படுத்தி புடம் போட்ட தங்கமாய் மாற்றும் போது, மீதமுள்ள நாட்களில் ஒருவன் தனக்கு நேரும் துன்பங்களை, சங்கடங்களை, தீமைகளை தைரியமாய் மனத் துணிவோடு எதிர்கொள்ளும் பரிபக்குவத்தைப் பெறுகிறான். அந்த நிலையில் உலகம் இப்படித்தான் இருக்கும், மனிதர்கள் இவ்வாறுதான் இருப்பார்கள் இந்த மாதிரியெல்லாமும் நடக்கும் வாய்ப்புக்கள் உண்டுதான், இது நடந்தால் அது நடக்கும், அதை இவ்வாறுதான் எதிர்கொள்ள வேண்டும் என்கிற மெய்ஞான நிலையில் எல்லாம் கடந்தவனாக ஒரு மென்மையான புன்னகையோடு இந்த வாழ்க்கையை நகர்த்தும் இறைச் சிந்தையை அடைகிறான்.
அசோகமித்திரனின்புண் உமிழ் குருதிசிறுகதையைப் படித்தபோது இப்படி என்னென்னவோ நினைக்கத் தோன்றிவிட்டது. அசோகமித்திரனைப் படிக்கும்போதெல்லாம் முதலில் அவர் முகம் மனதில் தோன்றுகிறது எனக்கு. அது ஆயிரம் விஷயங்களைப் பேசுகிறது. சக மனிதர்கள் மேல் கொள்ளும் கருணை, பரிதாபம், இரக்கம், வருத்தம், எப்போதும் மனதில் படிந்திருக்கும் ஒரு சோகம் இதெல்லாமும் அவர் மனதில் எந்நிலையிலும் ஓடிக் கொண்டே இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
மேலே நான் சொன்ன உறவுகள், நட்புகள் அல்லாத வெளி மனிதர்களிடமிருந்தும்கூட நமக்குச் சங்கடங்கள், துன்பங்கள் வர வாய்ப்பு இருக்கிறதுதான். ஆத்மார்த்தமாய் நேசிப்பவர்களிடமிருந்தும், பிற உயிரினங்களிடத்தில் காட்டும் கருணை, அன்பு இவைகளுக்குப் பின்னாலும் நமக்கு ஏதேனும் நிகழ்ந்துவிடக் கூடும்தான்.
அப்போதும் அதனை ஜீரணித்து உலகம் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்து, எந்த வெறுப்பும் இல்லாமல் விலகும் தன்மை எத்தனை மனிதர்களுக்கு சாத்தியம்?
இந்தக் கதையில் வரும் பெரியவருக்கு அது சாத்தியமாகிறது. கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவர் தனது கருணை நிலையிலிருந்து மாறவேயில்லை. முதலில் நமக்கு எப்படி அறிமுகமாகிறாரோ அதே நிதானத்தில், அன்பில் கடைசிவரை இருக்கவே செய்கிறார். இதை ஆழமாய் உணர்த்துவதற்கு அசோகமித்திரனின் அப்பழுக்கில்லாத யதார்த்தமான நடையழகு உதவுகிறது. ஒரு மனிதன் தானே அப்படி இருந்தால்தான் இந்த மன எழுச்சி உண்டாகும். அல்லாமல் அது சாத்தியமேயில்லை. எந்தவோரிடத்திலும் இம்மியும் அந்த யதார்த்தம் பிசகுவதில்லை அவருக்கு. அப்படி எழுதுவதற்கு மிகுந்த முதிர்ச்சி வேண்டும். அது ஆரம்ப காலத்திலிருந்தே அசோகமித்திரன் அவர்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது நமக்கு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. நுழையும்பொழுதே பல்கலைக்கழகமாய் உள்ளே வந்தார் என்று எப்படி நடிகர்திலகத்தைச் சொல்கிறோமோ அதுபோலவேதான் அசோகமித்திரனின் யதார்த்தப் பின்னணியும் மிகுந்த அனுபவம் செறிந்தது என்று உறுதியாய் எண்ண வேண்டியிருக்கிறது.
அவரது நடையைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதை வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக அனுபவித்து வாசித்துத்தான் உணர வேண்டும். வீதியில் சென்று கொண்டிருக்கும் பற்பல மனிதர்களுக்கிடையே கலந்து அசோகமித்திரனும் நடந்து சென்று கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அதுபோலவே அவரது படைப்பு மொழியும் மிக எளிதாக ஆனால் ஆழமாகப் படிந்து நம்மை கைகோர்த்து இழுத்துச் செல்கிறது.
ஒரு சிறுவன். தனபால் என்பது அவன் பெயர். பஸ்ஸில் கூட்டத்திற்கு நடுவே நின்று பயணம் செய்து கொண்டிருக்கிறான். முன்னால போமுன்னால போ என்று கண்டக்டர் கூச்சலிட இடைவெளி சற்றுமில்லாது, சிறு சிறு அசைவுகளோடு நிற்பவர்கள் நகர்கிறார்கள். நகர்கிறார்கள் என்று கூட அவர் சொல்லவில்லை. நிற்பவர் மத்தியில் சிறு சிறு அசைவுகள் உண்டாயின என்றுதான் சொல்கிறார். முன்னால் நகர இடமேயில்லை என்பதை அவர் அப்படிச் சொல்லும் பாங்கே அழகுதான்.
கையில் ஒரு சின்ன பெயின்ட் டப்பா வைத்திருக்கிறான் தனபால்.அது யார் மீதும் பட்டுவிடக் கூடாது என்று கவனமாகத்தான் நிற்கிறான். ஒரு நிறுத்தத்தில் ஏழெட்டுப் பேர் ஏறிவிட முன்னே நின்றவரின் வேட்டியில் பெயின்ட் தீற்றி விடுகிறது. அவர் சத்தம் போடுகிறார். அறிவிருக்கா? என்று கேட்கிறார். கூட்டத்துல இப்டி இடிச்சிக்கிட்டு, பெயின்ட்டோட நிற்கிறியோ? என்று கத்துகிறார். தனபாலை அருகே வந்து அமரச் சொல்கிறார் ஒரு பெரியவர். அந்த பெயின்ட் டப்பாவை என்னிடம் கொடு என்று வாங்கி காலடியில் வைத்துக் கொள்கிறார். அவனை அருகே அமரச் சொல்கிறார். இருவர் அமரும் இருக்கையில் மூவர் எப்படி? என்று சங்கடப்படுகையில் அந்த இன்னொருவர்நான் அடுத்த ஸ்டாப்புல இறங்கிடுவேன்நீ உட்காரு என்று எழுகிறார். தனபால் அமருகிறான். பேச்சு ஆரம்பிக்கிறது. கிழவர் அவனை விசாரிக்கிறார்.
எங்க போகணும்….பெயின்ட் பண்ணப் போறியா….பெயின்ட் உன்னோடதா…? என்று ஒன்றொன்றாகக் கேட்கிறார். தனபால் பதில் சொல்கிறான். பதினைஞ்சு ரூபாய் கூலி என்கிறான். மீதி பெயின்ட் இருந்தா தந்திடுவாங்கஅதை வித்திக்கிடுவேன்என்று விபரங்களைச் சொல்கிறான். தினமும் வேலை கிடைக்குமா, கிடைக்காதா? கான்ட்ராக்ட் ஆளுகளோட சேர்ந்துக்க வேண்டிதானே? என்று சொல்கிறார் பெரியவர். அது முடியாது என்கிறான். படிச்சிட்டே வேலைக்கும் போகிறேன். பாலிடெக்னிக்குல படிக்கிறேன்என்கிறபோது கிழவருக்கு அவன் மீது பரிவு அதிகமாகிறது. படிச்சிண்டே வேலையும் பார்க்கிறியா? என்று பாராட்டுகிறார்.
வைத்திருக்கும் பதினைஞ்சு ரூபாயில் பதிமூணை தங்கியிருக்கும் வீட்டோட சொந்தக் காரங்ககிட்டே கொடுத்திடுவேன்பணம் மிச்சமாச்சுன்னா ஊருக்கு அனுப்புவேன்தங்குறதுக்கு மட்டும்தான் பதிமூணு ரூபா….சாப்பாடெல்லாம் வெளில தான்….என்று பேசிக் கொண்டே வருகிறான்.
அவன் இறங்க வேண்டிய சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் வருகிறது. இறங்கிக் கொள்கி றான். பஸ் கிளம்பிய பிறகு அவனது டிரவுசர் பையைத் துழாவுகிறான். வைத்திருந்த பதினைந்து ரூபாயைக் காணவில்லை. பஸ் பின்னால் ஓடுகிறான். அது வேகமாய்க் கடந்து விடுகிறது.
பசி கிள்ளுகிறது. எதிர் பஸ் ஸ்டாப்பில் போய் நின்று கொள்கிறான். அந்த பஸ் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. ஏறி கண்டக்டரிடம் ரூபாய் தொலைந்து போனதைச் சொல்லிக் கேட்கிறான். பஸ்ஸில்தான் விட்டேன் என்று தேடுகிறான். கண்டக்டரும் பஸ்ஸில் இருப்போர் சிலரும் தேடுகிறார்கள். பணமில்லை. பிக்பாக்கெட் கொடுத்திருப்பே….என்கிறான் கண்டக்டர். நான் பர்சுல வைக்கலியேஎன்று தனபால் கூறுகிறான். ஒரு கிழவர்ட்டப் பேசிட்டிருந்தியே அவர்தான் எடுத்திருப்பாருஎன்கிறான். இவனுக்கு அதிர்ச்சியாகிறது. இந்தக் காலத்துல யாரத்தான் நம்ப முடியுது….கிழவனாவதுகுமரனாவதுஎல்லாரும்தான் திருடுறாங்கஎன்கிறான் கண்டக்டர். இவன் சோர்வோடு கீழே இறங்கி விடுகிறான்.
நாட்கள் கழிகின்றன. ஒருநாள் பீச்சில் கண்ணகி சிலையருகே அந்தக் கிழவரைச் சந்திக்க நேரிடுகிறது. ஏய் கிழவாஅன்னிக்கு என் பணத்தை நீதானே திருடினேஎன்று கேட்டுவிட்டு அவர் எதிர்பார்க்கும்முன் ஓங்கி அடித்து விடுகிறான். அவர் கீழே விழ, சிலர் சேர்ந்து கொண்டு விபரம் கேட்டுஅவரை மொத்துகிறார்கள்.வேட்டி கிழிந்து, முகத்தில் காயம் பட்டுப் போகிறது கிழவருக்கு.
நான் எடுக்கலப்பாஉன் பணத்தை நான் எடுக்கலைஎன்று மட்டும் சொல்கிறார். எப்ப எடுத்தாருபர்சே போச்சாஎன்று ஆட்கள் கேட்கஇப்ப இல்லைமூணு மாசத்துக்கு முன்னாடிஎன்றவுடன் கூட்டம் மெல்ல விலகுகிறது. ஒரு போலீஸ் அந்த வழியே வர, என்ன கலாட்டா? என்று கேட்க, “நாங்க ஏதோ பேசிக்கிட்டு இருக்கோம் என்று அந்தப் பெரியவர் பதில் சொல்கிறார். போலீஸ் போய்விடுகிறான்.
கிழவருக்கு அடிபட்ட இடத்தில், முகத்தில் ரத்தம் கசிகிறது. வேட்டி கிழிந்திருக்கிறது. என்ன திடீர்னு இப்படி அடிச்சிட்டியே….நீ யாரு…? என்று கேட்டுவிட்டு, நினைவு வந்ததுபோல் பெயின்ட் அடிக்கிற பையன்தானே நீ? என்கிறார்.
தனபால் பேச விருப்பமில்லாமல் அமைதி காக்கிறான். அன்னைக்கு ரொம்ப அக்கறையா விசாரிக்கிற மாதிரி என் பணத்தை அடிச்சிட்டு போயிட்டேஎன்று பொருமுகிறான் தனபால்.
.
கிழவர் தன்னை வெளிச்சத்தில் நிறுத்திக் கொண்டு, “நான் அப்டியெல்லாம் செய்றவன் இல்லேப்பா….உன் பணத்தைத் தூக்கிண்டு போயிட்டேன்னா இப்டி ஊரைக் கூட்டி உதைக்க வச்சே…? எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா…. என்று நிதானமாய்ச் சொல்கிறார்.
தனபால் ஒன்றும் சொல்லாமல் நிற்கிறான்.
உன்னைப் பத்தி அப்புறம் நிறையத் தடவை நினைச்சுப் பார்த்திருக்கேன்என்னைத் திருடன்னு சொல்லி அடிச்சுப் போடுவேன்னு நான் நினைக்கலை… - என்கிறார்.
யார் என்ன கண்டாங்கஎன் பணம் போச்சு? என்று மட்டும் பதில் வருகிறது இவனிடம்.
நான் எடுக்கலைஎனக்குத் தெரியாதுஎன்று மறுபடியும் சொல்லும் அவரை உற்றுப் பார்க்கிறான் தனபால். அவர் கோபமில்லாதவராக இருந்தார் என்று எழுதுகிறார்.
என்னை நம்புப்பாஉன் பணத்தை நான் எடுத்திட்டுப் போகலை….எனக்கு ஒண்ணும் தெரியாதுஎன்று சொல்லிவிட்டு கிழவர் அங்கிருந்து மெல்ல விலகிப் போனார்என்று முடிக்கிறார் அசோகமித்திரன்.
அந்நிலையிலும் அவன் மீது கோபம் கொள்ளாத நிதானமும், கருணையும், உன்னைப் பத்தியே பல நாள் அதுக்குப் பிறகு யோசிச்சிட்டேயிருந்தனேஇப்படி ஆளைக் கூட்டி அடிச்சிட்டியே…? என்று வேதனை கொள்வதும்….என்னைத் திருடன்னு சொல்லி இப்டி அடிச்சிப்பிடுவேன்னு நான் நினைக்கவேயில்லை என்று வருத்தம் கொள்வதும்…..ஒரு மகானின் மனநிலையில் அந்தப் பெரியவர் நின்று பேசும் அந்தக் காட்சி நம்மை மனதை உருக்கி விடுகிறது. போலீஸ் வரும்போது, அடிபட்ட அந்த நிலையிலும், நாங்க ஏதோ பேசிட்டிருக்கோம் என்று சொல்வதற்கு எத்தனை முதிர்ச்சியான அனுபவம் வேண்டும் ஒரு மனிதனுக்கு. அந்த வார்த்தைகள் நம்மைச் சட்டென்று கலங்க வைத்து விடுகின்றன.
நாம் நேசிப்பவர்களாலும் நமக்குக் கேடு வந்து விடக் கூடும் என்பதை அசோகமித்திரன் தனது எளிய யதார்த்த நடையில் அழுத்தமாய் உணர்த்தி நிலை நிறுத்தும்புண் உமிழ் குருதிஎன்ற தலைப்பிலான இச்சிறுகதை…..அவரின் சிறந்த படைப்புக்களில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். .
-------------------
----------



கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...