19 பிப்ரவரி 2019

குங்குமம் வார இதழில் வந்த சிறுகதை“சொந்த வீடும் சமையல் மாமியும்”



சிறுகதை               உஷாதீபன்,                                                                   சொந்த வீடும்  சமையல்   மாமியும்”                                                                                                    
 ள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக சமையல் மாமிக்கு போன் போட்டேன். அடைத்துக் கிடந்த வீட்டைத் திறந்ததும் கப்பென்று முகத்தில் அறைந்தது புழுக்க வாடை.  காற்றாடத் திறந்து கிடந்தால் அழுக்கு வீடு கூட நாற்றமடிக்காது. வீட்டிற்குள் சூரிய ஒளி பட்டால் ஆரோக்கியம்.  ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. மாமி சமையலில் பிஸி.  உறால் ஜன்னலைத் திறந்தேன். உதித்த சூரியனின் ஒளிக் கீற்றுகள் சரேலென்று உள்ளே பாய்ந்தன. என் வீட்டிற்கு அழகே அதுதான்.
     ஆறரைக்கேவா…இத்தனை வெளிச்சம்? பகல் பொழுது அதிகம் போலும்…ஏழு மணிக்கு மேல்தான் வழக்கமாய் உள்ளே வெயில் பாயும்.….வீட்டின் அனைத்து ஜன்னல்களையும் பட்…பட்டென்று திறந்து விட்டேன். ஒளி  விரி்ந்து பரவியது. சத்தம் கேட்டு அங்கங்கே ஒடுங்கியிருந்த பல்லிகள் ஒன்றிரண்டு விளுவிளுவென்று  வெளி வந்து சுவற்றில் நகர்ந்தன. அரவமின்றி அடைத்துக் கிடந்த வீடு. காம்பவுன்ட் சுவரில் நடந்து கொண்டிருந்த பூனை,  ஆள் வந்தாச்சா? என்பது போல் திரும்பிப் பார்த்து பம்மியது. பக்கத்தில் வெத்து நிலம். காலி மனை. மண்டிக் கிடக்கும் புதர். நெருங்கினால் கிழித்தெறிந்து விடுவேன் என்பதாய் கூர்மையான முட்கள் அடர்ந்த  கருவேல மரங்கள். காம்பவுன்ட் சுவரையும்  தாண்டி பாம்புகள் வந்து வீட்டுக்குள் அடைந்து கிடக்க வாய்ப்புண்டு என்கிற பயம் எப்போதும். உள்ளே நுழைந்ததும் அனைத்து லைட்டுகளையும் எரிய விட்டிருந்தேன். எந்த மூலையிலிருந்தாவது ஏதாச்சும் புறப்படுகிறதா என்று அச்சம் கலந்த பார்வை. அரணை ஒன்று திண்ணை வழியாக வெளியேறியது. போதாதா சாம்பிளுக்கு?
     அந்த வீட்டுக்குள் வந்து விட்டால் மனதில் ஒரு நிம்மதி. கோயிலுக்குள் நுழைந்தது போல உணருவேன். அந்த நம்பிக்கையே எனக்கு பலம்.  தனிமையில் எத்தனை நாள் கிடந்தாலும் வீட்டோடு பேசிக் கொண்டிருப்பேன். பூஜை அறையில் சென்று வணங்கும்போது சாமிகளோடு ஆத்மார்த்தமாய் ஒரு  உரையாடலும் உண்டு. ஊருக்குப் புறப்படும்போது “போயிட்டு வரேன்…பத்திரமா இருங்க…” என்று சொல்லி பொதுவாய்  உறாலில் விழுந்து கும்பிட்டு விட்டுத்தான் கிளம்புவேன். பார்ப்போருக்குக் கேலியாய்த் தோன்றலாம். சிலவெல்லாம் அவனவன் மனசு சம்பந்தப்பட்ட விஷயம். இந்த உலகத்தில் எங்கும், எதையும் மனிதன் இஷ்டம்போல் விரும்ப முடியும்…வெறுக்க முடியும், வணங்கவும் முடியும்.
லோன் போட்டு இடம் வாங்கிக் கட்டிய வீடு. ஒன்றரை லட்சம். இன்று அது பல இலட்சங்கள். என் விருப்பப்படியெல்லாம் செய்து கொடுத்தார் இன்ஜினியர் சிவகடாட்சம்.  கருணை நிரம்பிய மனிதர். நாம் எப்படியிருக்கிறோமோ அதுபோல் நமக்கு சுற்றமும் சூழலும் அமையும் என்பதில் அபார நம்பிக்கை உண்டு எனக்கு. நச்சு நச்சென்று மாற்றங்கள் சொல்லிக் கொண்டேயிருப்பேன். அறைக்கு அறை அலமாரி கண்டிப்பாக வேண்டுமென்று பிடிவாதம். பொறுமையாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றினார். முகம் சுளித்ததேயில்லை. இரண்டு முறை ஐயாயிரம், ஐயாயிரம் என்று பணம் கொடுத்து எழுத மறந்து விட்டேன். அவரும் விட்டு விட்டார். மாதங்கள் கடந்து விட்டன. மொத்தக் கணக்குப் பார்க்கையில் வங்கிக் கணக்கு உதைக்க, ஓ.கே..ஓ.கே., ஏன் பதர்றீங்க? என்று ஒரு மேல் வார்த்தை இன்றி வரவு வைத்துக் கொண்டார். அவ்வளவு நம்பிக்கை என் மேல்.   எனக்கு அமைபவர்கள் அப்படித்தான் போலும். அது என் ராசி. நறுக்குத் தெறித்தாற்போல் நாலு பேர் இருந்தாலும் சுத்தம், படு சுத்தம்.
வீடு கட்டுகையில் அன்றாடம் அதைப் பார்க்க வேகு வேகுவென்று சைக்கிள் மிதித்து ஸ்பாட்டுக்கு வருவேன். எதுவும் கொள்ளை போய்விடுமோ என்கிற அளவுக்கான பயம், பதற்றம்.  கலவை ஒண்ணுக்கு நாலு சரியாகப் போடுகிறார்களா என்று ஊன்றிப் பார்ப்பேன். சர்ப்ரைஸ் விசிட். ஆபீசர் கெட்டார் போங்கள்.  ஏமாற்றி விடுவார்களோ என்று தொட்டதற்கெல்லாம் சந்தேகம். செங்கல்லை நனைத்து ஈரப்படுத்தி வைக்கிறார்களா….சிமின்ட் பிராண்ட் எதுவும் மாற்றுகிறார்களா, மண் சலிக்கிறார்களா…வாட்ச்மேன் சரியாகத் தினமும் தண்ணீர் ஊற்றுகிறாரா என்று விழுந்து விழுந்து கவனித்தேன்.
அவ்வப்போது வடை, பஜ்ஜி, டீ, காபி என்று விடாது சப்ளை தொழிலாளிகளுக்கு. குறை வைத்ததே இல்லை. அதெல்லாம் எந்தக் கணக்கிலும் வராது. ஆட்கள் ரொம்பவும் உற்சாகமாத்தான் வேலை செய்தார்கள். ஒரு நாள் கூட அவர்களின் கூலி தாமதமானதில்லை. இன்ஜினியர் தன் வேலையில் படு ஸ்டிரிக்ட். எனக்கு மனசு கேட்க வேண்டுமே…!   கூரை ஷெட்டிலேயே படுத்து உறங்கிக் கண்காணிக்கவில்லை. அது ஒன்றுதான் மிச்சம். நல்ல ஆள்ட்ட மாட்டினேன்யா? என்று என்றேனும் ஒரு பொழுதாவது அவர் நினைத்திருக்கக் கூடும். என் அடிக்கடி வருகையும், ஆய்வும் அங்குள்ளவர்களுக்கே சற்று கசந்திருக்கலாம்தான், ஓரளவுக்கு தர்மமும் நியாயமும் தலை தூக்கியிருந்த கால கட்டம் அது. தொழில் தர்மம் மேலோங்கியிருந்த பொழுதுகள்.
மூன்று தவணைகளாக வாங்கிய அரசாங்கக் கடன், இரண்டாவது தவணையின் போது மாட்டிக் கொண்டது. அப்ரூவ்டு பிளானில் கொல்லைப் புறத்தில் தனியாகக் காண்பித்திருந்த டாய்லெட், பாத்ரூம் வீட்டோடு சேர்ந்து கொண்டதே…எப்படி? என்று கொக்கியை மாட்டி விட்டார் ஆர்.டி.ஓ. ஆபீஸ் அதிகாரி. தவணை நின்று போனது. அப்பா அம்மாவைக் கொண்டு வந்து வைத்துக் கொள்ள வசதியாக அந்த ஐடியா. முதலில் ஏனோ தோன்றவில்லை.  அதனாலென்ன சார்…பணம் வந்ததும் கொடுங்க…என்று வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் இன்ஜினியர். அத்தனை நல்ல மனுஷன்….வாழ்க்கைல கடன் வாங்கி ஒரு முறை கட்டுற வீடு….நல்லாப் பண்ணித் தர்றேன் சார்….கவலைப்படாதீங்க…என்று சொன்ன அளவுப்படி சரியாகத்தான் செய்தார். நான்தான் அவரைப் பாடாய்ப் படுத்திவிட்டேன். பிறகு பிளான் மாற்றி மறு அப்ரூவல் வாங்கி அடுத்த தவணை கிடைத்தது. கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப் பார்…என்பது எத்தனை சரி…!
நான் அங்கு குடி வந்தபோது எதிர் வீடு மட்டும்தான். நல்ல வேளை எங்கோ தள்ளி ஒரு வீடு என்றில்லாமல்….! ஐம்பதடிக்குள் இருந்த கிணற்றுத் தண்ணீர் இன்று நானூறு அடிக்குப் போய் விட்டது. நெருக்க நெருக்கமாய் வீடுகள் மண்டி விட்டன. வெறும் மும்மூணு சென்ட்டுகளாகப் ப்ளாட் போட்டு விற்று  கசகசவென்று வீடுகள் திரும்பிப் பார்ப்பதற்குள் முளைத்து விட்டன. இன்று தண்ணீர் சுத்தமாய் இல்லை. குடியேற மறுக்கும் பகுதியாக இருக்கிறது எங்கள் நகர். அருகிலுள்ள கிராமங்களிலிருந்து டிராக்டர் ட்ரெயிலரில் டாங்க் இணைத்து தண்ணீர் கொண்டு வந்து விடுகிறார்கள். தொட்டியின் அளவைப் பார்த்து இஷ்டத்துக்குக் காசு பிடுங்குகிறார்கள். அந்த மட்டும் எங்கிருந்தாவது தண்ணீர் கிடைக்கிறதே என்று மக்கள் அதையும் ஒரு குடும்பச் செலவாக மனதார ஏற்றுக் கொண்டு ஓட்டி வருகிறார்கள். வேறு வழி? பொழுது விடிந்தால் கக்கூசுக்குத் தண்ணி வேணுமே? வெள்ளைக்காரன் மாதிரி பேப்பர் போட்டா துடைத்தெறிய  முடியும்? அசோசியேஷன் வைத்து நிறைய வசதிகள் பண்ணி விட்டோம்தான். ஆனால் இந்தத் தண்ணீருக்கு வழி எங்கள் கையில் இல்லையே…!  
தண்ணீரைப் பற்றி நினைத்தவுடன்தான் நினைவுக்கு வருகிறது. மாடியில் தொட்டியில் தண்ணீர் கிடக்கிறதா பார்க்க வேண்டும்.. வந்ததும் வராததுமாக பாத்ரூம் போக, குளிக்க என்று வேண்டாமா?. சென்னையில் பையனோடு இருக்கும் நான் பிரதி மாதமும் இங்கு வந்து போகிறேன். வீடு சுத்தம் பண்ண, மெழுக, லோகல் வேலைகளைப்  பார்க்க…என்று அவசர அவசரமாக முடித்து விட்டு மூன்று நான்கு நாட்களில் திரும்பி விடுவேன். சென்னை இழுக்கிறதே…! எப்படி அந்தப் பரபரப்புக்கு அடிமையானேன்? என்ன மாயமோ?
சாயங்காலமானால் எதிர் வீட்டு நண்பர் வாசல் லைட்டைப் போட்டு வைத்துக் கொள்கிறார். இரவு பத்து, பத்தரைக்கு அணைக்கிறார். தபால்கள் வந்தால் தரையில் கிடப்பதை எடுத்து மாட்டியிருக்கும் தகரத் தபால் பெட்டியில் போட்டு வைக்கிறார். இ.பி.யிலிருந்து வந்து கரன்ட் கன்சம்ஷன் குறித்துக் கொண்டு போனால் ஃபோனில் தெரிவிக்கிறார். நூறு யூனிட் வரை காசில்லையே…!  யார் செய்வார்கள் இந்தக் காலத்தில்? . விடாது அவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் இந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். வெறும் நண்பரல்ல அவர். உடன் பிறவாச் சகோதரர். எனக்கே இந்த அளவுக்குப் பொறுமை இருக்குமா என்று ஆச்சரியம்தான்.
வீடு இன்றுவரை பாதுகாப்பாய்த்தான் இருந்து கொண்டிருக்கிறது. பெயர்த்து எடுத்துக் கொண்டா போய் விடுவார்கள்?  எங்கெங்கோ திருட்டு, கொள்ளை என்று கேள்விப்படுகிறோம். ஆனால் எதுவும் எங்கள் வீட்டைப் பாதித்ததில்லை. இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். அந்தத் தெருவிலேயே மாடி கட்டாத வீடு எங்கள் வீடுதான். பார்க்க சாதாரணமாய்த்தான் இருக்கும். எப்படி ஒரு அரசு ஊழியரை சாதாரண வேட்டியும், சட்டையுமாய் உருவகித்து உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியுமோ அது போலதான் அவன் கட்டிய வீடும்…! பங்களாவா தூக்கி நிறுத்த முடியும்?  அது பூட்டியிருந்தா என்ன, திறந்து கிடந்தாத்தான் என்ன என்றுதான் பார்ப்போருக்குத் தோன்றும். எளிமையின் சின்னம்.
ஒன்றுமில்லாத இந்த ஏழை வீட்டில் கன்னம் வைத்துத் திருட வந்து அநியாயமாய் ஏமாந்து போயிருப்பானே…பாவம்… என்று திருடனுக்காகப் பரிதாபப்பட்டு உட்கார்ந்து அழுதாராம் திருலோக சீதாராம். கேள்விப்பட்டிருப்பீர்களே? அவர் ஒரு பாரதி விஸ்வாசி. அவரின் வாரிசாய்த் தன்னை நினைத்துக் கொண்டு உயிரோடிருக்கும் வரை வருடந்தோறும்  பாரதிக்கு திதி நிறைவேற்றிய  பெருந்தகை அவர்..  
 அவ்வளவு எளிமையான, பழசான எங்கள் வீட்டில்  கொல்லைப் புறமாய் ஒருவன் ஆசைப்பட்டு  நுழைந்து விட்டாலும், எடுத்துச் செல்வதற்கு சில துணிமணிகளும், கொஞ்சம் எவர்சில்வர் பாத்திரங்களும் மட்டும்தான் மிஞ்சும். அப்படியெல்லாம் திருடிய காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் லம்ப்பாய் அடிப்பதுதானே ஃபேஷன்….
ஒன்று சொல்லலாம்…திருடன் புத்தகப் பிரியனாய் இருந்தால் நிறையப் புத்தகங்களை வேண்டுமானால் அள்ளிக் கொண்டு போகலாம். திருடிக் கொண்டு போய் வைத்துப் படிக்கலாம். படிப்பவன் திருடமாட்டான் என்று சொல்ல முடியுமா என்ன? அல்லது திருடுபவன் படிக்க மாட்டான் எனலாமா? பொது நூலகத்தில் புத்தகங்களைத் திருடுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? டோக்கன் போட்டு வாங்கிக் கொண்டு போய் எவ்வளவு பேர் திரும்பக் கொடுக்காமல் விட்டு விடுகிறார்கள்? என்னிடமே எத்தனை பேர் ஏமாற்றியிருக்கிறார்கள்? சென்னையில் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் போதாது என்று இங்கும் நிறைந்திருக்கும் நூற்றுக் கணக்கானவற்றை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இந்த மாதிரித் தோன்றுவது இயல்புதானே…! தனிமையும் அமைதியும் நிரம்பி வழிய, அந்த வீட்டில் உட்கார்ந்து தலையணை தடிமனுக்கு எவ்வளவு புத்தகங்களைப் படித்து முடித்திருக்கிறேன்? தனிமையின் சுகம் உணர்ந்ததும் மனம் லயித்து சஞ்சாரம் பண்ணியதும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துதானே…!
நாங்க இந்தப் பகுதிக்குக் குடி வந்து பத்து வருஷத்துக்கும் மேலாச்சு மாமா …உங்களத் தெரிஞ்சிக்கவே இல்லையே …? எத்தனையோ வாட்டி இந்தத் தெரு வழியாப் போறேன்…வர்றேன்…இப்போத்தான் வேளை வந்திருக்கு…. என்று சொல்லிக் கொண்டேதான் அறிமுகமானாள் சமையல் மாமி. பெயர் இந்திரா.
நானென்ன அவ்வளவு ஃபேமஸ்ஸா? சாதாரண ஆள். நானுண்டு என் வேலையுண்டு என்று இருப்பவன். புத்தகங்களே கதியென்று வீட்டோடு கிடப்பவன். எப்படித் தெரியும் பலருக்கும்? தெரியாட்டாத்தான் என்ன நஷ்டம்? எல்லாம் மனசு பொறுத்த விஷயம். லைப்ரரிப் பக்கம் போனால் சிலர் அறிவார்கள். அததுக்குன்னு, அவனவனுக்குன்னு  ஒரு இடம்னு வரிச்சிருக்கே…! அங்கதானே அது சுத்தும்…!
ஏது மாமா..இவ்வளவு புத்தகம் வச்சிருக்கேள்…? நா  எடுத்துண்டு போகட்டுமா? படிச்சிட்டு அடுத்தாப்ல நீங்க ஊருக்கு வரச்சே திருப்பித் தரேன்…சரியா…?  எங்காத்து மாமா புஸ்தகப் பிரியராக்கும்….என்று சொல்லி சமையல் மாமி முதலில் ஆசையாய் வாங்கிக்கொண்டு போன அந்தப் புத்தகங்களின் பெயர் “ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம்”  மற்றும் கோகிலா என்ன செய்து விட்டாள்…?
அந்தக் காலத்துல அக்ரஉறாரம் பூராவும் ஆத்துக்கு ஆம்….போட்டி போட்டுண்டு இவரோட கதைகளப் படிப்பா தெரியுமோ…? விகடன் என்னிக்குடா வரும்னு பிச்சுப் பிடுங்கிண்டு…எனக்கு உனக்குன்னு சண்டை… தொடரைப் படிச்சிட்டுத்தான் அடுத்த வேலைக்கே போவா….ஜெ.யோட ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் படிச்சிருக்கேளோ…அற்புதமான நாவலாக்கும். அதை ஏழெட்டுத் தடவை படிச்சவாள்லாம் இருக்கா….அவ்வளவு நன்னாயிருக்கும்….அந்த nஉறன்றி கதா பாத்திரத்தை என்னமா வடிச்சிருப்பார்…? ஓர் உலகம்தானே…ஒரு உலகம்னு எப்படி வைக்கப் போச்சுன்னு கேட்க …அதுக்கு தன்னோட முன்னுரைல அப்டியொரு அழகான  விளக்கம் தந்திருப்பார். என்ன ஒரு தன்னம்பிக்கை தன் எழுத்து மேலே? …கொடுத்த விளக்கத்துக்கு ஏத்தமாதிரி நாவல்ல அந்தக் காரெக்டரை  ஸ்தாபிச்சிருப்பார்….அவர் மாதிரி ஒரு எழுத்தாளர் அதுக்கப்புறம் யாரும் வரல்லே…..இனி வரவும் மாட்டா….சிங்கமாக்கும் மனுஷன்…! …எங்காத்துக்காரர் சொல்லி நீங்க கேட்கணும் ….அவர் பேச்செடுத்தா உருக ஆரம்பிச்சிடுவார்…
மாமிதான் நான் வைத்திருக்கும் புத்தகங்களுக்கு அத்யந்த ரசிகை என்று நினைத்திருந்தேன். மாமா அதைவிட டாப் கிரேடு என்று பிற்பாடுதான் தெரிந்தது. தாராள மனசோடு புத்தகங்களைக் கொடுத்தனுப்பினேன்.
எங்காத்து மாமா கதைகளெல்லாம் எழுதுவார்…தெரியுமோ?…. …விகடன், கல்கி, கலைமகள்ன்னு அந்தக் காலத்துல ஏகமா வந்திருக்கு…பரிசெல்லாம் கூட வாங்கியிருக்கார்…அன்னம்ங்கிற பேர்ல நீங்க பார்த்திருப்பேள்….ஞாபகப்படுத்திப் பாருங்கோ….உங்களுக்கு நிறையப் படிக்கிற பழக்கம் இருக்கிறதுனால சொல்றேன்…தீபாவளி மலர்லெல்லாம் கூட  அவரோட கதைகள் வந்திருக்கு……ரிடையர்ட் ஆனப்புறம் இன்னும் நிறைய எழுதுவார்னு பார்த்தாக்கா உடம்புக்கு வந்துடுத்து. முன்ன மாதிரி எழுத முடிலை… நடமாட்டமில்லை…உடம்பு க்ஷீணிச்சிப் போச்சு…..அப்புறம் எங்க எழுதறது….? எழுதினதையெல்லாம் தலை மாட்டுல வச்சிண்டு கண் கலங்கிண்டிருப்பார். பார்க்கவே பாவமா இருக்கும்….என்ன பண்றது? உடம்புதான் முக்கியம்…எழுதாட்டா என்னன்னுட்டேன்……அவருக்குத்தான் பென்ஷனெல்லாம் கிடையாதே…அரசாங்க ஆபீஸ்லயா இருந்தார் …தனியார் கம்பனிதானே….! ஏதோ ஓடிண்டிருக்கு….உப்புக்குச் சப்பாணியா….!
இந்த வீட்டுக்கு வந்தாலே மாமியின் நினைப்பும் அலை மோதும்…அந்த வீடு அவ்வளவு நினைவுகளைப் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கிறது.
மறுபடி ஃபோன் செய்தேன். எதிர் முனையில் அந்தக் கனிவான குரல். எல்லோருக்குமா அந்த இனிமை இழைகிறது? எனக்கு அமைந்த மாமி அப்படி!
மாமா, வந்துட்டேளா…சந்தோஷம்…இன்னைக்கு ஒரு நாளைக்குப் பொறுத்துக்குங்கோ…பத்தரை, பதினொண்ணுக்குள்ள கொண்டு வந்துடறேன். நாளைலேர்ந்து ஒன்பதுக்கெல்லாம் டாண்ணு வந்துடும். பக்கத்துல ஒரு கேதம்..அதுக்குப் போயிட்டேன். இப்பத்தான் வந்து குளிச்சேன். சீக்கிரம் வந்துடறேன் மாமா……இன்னைக்கு மட்டும்….உங்க கிட்ட வாங்கின புத்தகங்களும் கொண்டு வரேன்…படிச்சாச்சு…எங்காத்து மாமாவும் ஆசையாப் படிச்சார்….வேறே  சில கேட்டு வாங்கிண்டு வாங்கிறார்….இதோ வரேன்…. கிளம்பியாச்சு….
மாமியிடம் எனக்குப் பிடித்ததே இந்தப் பேச்சுதான். அந்தப் பணிவான பதில் நம் வாயை அடக்கி விடும். மேற்கொண்டு ஒன்றும் சொல்ல வைக்காது. நாலு நாட்களோ அல்லது ஒரு வாரமோ அங்கிருந்தால் மாமிதான் சமையல். சாதம் மட்டும் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றப்படி மூன்று காய்கள், ரசம், சாம்பார், மோர் என்று வந்து விடும். எழுபது ரூபாய் வாங்கினாள். சாதத்தோடு எவ்வளவு என்றபோது நூறு என்றாள். அது கொஞ்சம் அதிகமாய்த் தெரிந்தது. உணவகங்களிலேயே ரூபாய் எண்பதுக்கு சாப்பாடு கிடைக்கிறதே…ஆனால் ஒன்று…மாமி கொண்டு வரும் கூட்டு, கறி…சாம்பார், ரசம் இவைகள் ரெண்டு வேளைக்கு வரும். வயிற்றுக்கு எந்தக் குந்தகமும் பண்ணாது.  அதற்கு உத்தரவாதம். குக்கரில் சாதம் கொஞ்சம் அதிகமாய் வைத்துக் கொண்டு விட்டோமானால் ராத்திரிச் சாப்பாடும் கழிந்து போகும்.
கோயிலுக்கு அன்னதானம், முதியோர் இல்லம், பால்வாடிக் குழந்தைகள் என்று அவ்வப்போது  சில செய்யும்   வழக்கம் எனக்கு உண்டு. அது அம்மாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டது.. வேலைக்குப் போனதிலிருந்து. அப்பா திவசம், அம்மா திவசம் என்று முதியோர் இல்லத்திற்குச் சென்று கொடுத்து விடுவேன். இருபத்தைந்து, முப்பது பேர் இருக்கிறார்கள் என்றால் மதியம் ஒரு வேளைச் சாப்பாடுக்குப் புக் பண்ணி பணம் கட்டி விடுவேன். அதற்கு அத்தனை கிராக்கி அங்கே. தேதி கிடைக்காதாக்கும். வீட்டில் சடங்குகளைக் கிரமமாக முடித்துக் கொண்டு, அங்கு சென்று அந்த வயதான பெரியவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டு மீளுவேன். அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறெதிலும் இல்லை.. அவர்களுக்குத் தேவையான சோப்பு, சீப்பு, எண்ணெய், விபூதி, சந்தனம், குங்குமம், பற்பசை, பிரஷ், கர்சீப், துண்டு  என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வருவதுபோல் தலைகளை எண்ணி, வாங்கிக் கொடுப்பதும் உண்டு. பெற்றோர்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தைக் கண்கொண்டு பார்த்துப் பார்த்து வளர்ந்த விதத்தில் இம்மாதிரிச் சில என்னிடம் படிந்து போயிருந்தன.   கஷ்டப்படுபவர்களைக் கண்டால் மனம் கசிந்து விடும். ஏதாவது செய்து ஆற்றிக் கொள்வது வழக்கம்.  உன் மனம் பூராவும் நல்லவைகளைப் போட்டு நிரப்பி விடு என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல்  முயன்று கொண்டிருக்கிறேன் நான்.
 ரு பொருளை வாங்கிக் கொண்டுதானே பணம் கொடுக்கிறோம். கொஞ்சம் கூடக் குறைய இருந்துவிட்டால்தான் என்ன? என்று நான் எதுபற்றியும் யோசிப்பதி்ல்லை. நாலு நாள் ஸ்டே பண்ணி, ஊருக்குத் திரும்பும் அன்று எவ்வளவு ஆச்சு மாமி? என்பேன். கணக்கிட்டுச் சொல்லும் பணத்தைக் கொடுத்து விடுவேன். ரூபாய் நானூற்று எண்பது வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்…ஐநூறாக் கொடுத்திடுங்கோ என்பாள். எதற்காக அப்படிக் கேட்கிறாள் என்று தோன்றும்.   இருபது ரூபாய் பாக்கி இருக்காதோ? பரவாயில்லை என்று கொடுத்து விடுவதுதான். கணக்குப் பார்த்து…கணக்குப் பார்த்து வாழ்க்கையில் என்னத்தைக் கண்டோம்…? பத்திருபது கூடப் போனால்தான் என்ன, மாமிக்குத்தானே…குடியா முழுகிடும்…? ஆனாலும் மாமி ரௌன்டாகக்  கேட்பதன் மர்மம் இன்று வரை எனக்கு விளங்கியதில்லை. நானும் வாய்விட்டுக் கேட்டதில்லை. ஏதோவொரு நப்பாசை என்று நினைத்துக் கொள்வேன்.
ஆனால் ஒன்று, மாமியின் சாப்பாடு அத்தனை ருசி என்று சொல்லிவிட முடியாது. ஒன்று புளிப்பு அதிகமாயிருக்கும். அல்லது உப்பு. சமயங்களில் ரெண்டும். காரமும் விண்ணென்று தெறிக்கும்தான்.  
எனக்கும் வயசாயிடுத்து மாமி…உப்பு, புளி, காரம் வள்ளிசாக் குறைச்சிடுங்கோ… சொல்லி விடுவதுதான். எதுவும் மாறியதில்லை. எத்தனை பேருக்குச் சமைப்பாளோ…? நமக்கென்று மட்டும் தனியாய் எடுத்து வைத்துச்  செய்ய முடியுமா? மாமியின் பதில் பணிவாய்த்தான் வரும்..
ஆஉறட்டும் மாமா…நாளைலேர்ந்து குறைச்சே போடறேன்…. – எப்பொழுது என்ன சொன்னாலும், எதைக் கேட்டாலும் அந்தப் பதிலிலுள்ள அடக்கம் என்னை பிரமிக்க வைக்கும். என்ன ஒரு பணிவு…என்னவொரு மரியாதை…? அடடா…இத்தனைக்கும் மாமிக்கும் எனக்கும் அதிக வயசொன்றும் வித்தியாசமிருக்க வாய்ப்பில்லை. அதிகபட்சம் போனால் நாலைந்து வயதிற்குள்தான் பெரியவளாயிருப்பாள். அந்த வகைப் பேச்சே என்னைக் கட்டிப் போட்டிருந்தது.
துக்காக…? எதைக் கொடுத்தாலும், எப்படிக் கொடுத்தாலும் திம்பேளா? ஊருக்குப் போய் ஒரு வாரமிருக்கேன், பத்திருபது நாள் நிம்மதியாக் கழிச்சிட்டு வரேன் என்று ஷூகரையும், ப்பி.பியையும், கொலஸ்ட்ராலயும்  ஏத்திண்டு வந்து நிக்காதீங்கோ…அப்புறம் என்னால கழிச்சுக் கூட்ட முடியாது…எனக்கும் வயசாயிடுத்து… என்றாள் என் சகதர்மிணி. படுக்கைல விழுந்தா நம்ம கவனிக்க வேண்டி வந்திருமோ? என்கிற பயம்.
அவளுக்கு நான் மாமியிடம் சாப்பிடுவதில் அறவே இஷ்டமில்லை. சரியான சோம்பேறி…ஒராளுக்கு ஒரு சாம்பாரும், கறியும் வச்சிக்க முடியாதா? அங்கதான் டைரி இருக்கே…? செய்முறை அத்தனையும் விலாவாரியா எழுதி வச்சிருக்கேனே? அதும்பிரகாரம் பார்த்துப் பார்த்து இதுக்கு முன்னால சமைச்சிண்டுதானே இருந்தேள்…மாமியக் கண்டுண்டப்புறம் சோம்பேறித்தனம் வந்து ஒட்டிண்டிடுத்தாக்கும்? …உங்ககிட்டே சொன்னதே தப்பாப் போச்சு…ஏதோ அவசரத்துக்கு, முடியாதன்னிக்கு உதவுமேன்னு விசாரிச்சுச் சொன்னா…அதையேவா கிரமமா வச்சிக்கிறது? இதுநாள் வரை கத்துண்ட சமையலும் மறந்து போயிடப் போறது…அதிக பட்சம் முக்கால் மணி நேரம் ஆகுமா? ஒரு மணி நேரம்னே வச்சிக்குங்கோ…உங்க ஒருத்தருக்கு உங்களால சமையல் பண்ணிக்க முடியாதா? இதப் போய் காசக் கரியாக்கி வாங்கணுமா? செலவு வேறே விரயம் வேறேன்னு நீங்கதானே வாய்க்கு வாய் சொல்லுவேள்…இப்போ நீங்களே இப்டி நடந்துண்டேள்னா? கழுத தேய்ஞ்சு கட்டெறும்பாயாச்சு….!! பெண்களுக்கு அவர்கள் நினைப்பதைக் கொட்டித் தீர்த்தால்தான் மனசு ஆறும் போலும்..! தன் கை ருசி தவிர வேறு ருசிகளைக் கண்டு விடக் கூடாது என்கிற பொறாமையோ என்னவோ? மாமி சாப்பாடு அத்தனை ருசின்னு சொல்ல முடியாது என்றால் மனதுக்கு அவ்வளவு சந்தோஷம்.
யப்பாடீ…..வசுமதியின் வார்த்தைகள் சுளீர்…சுளீர் என்றுதான் இறங்கும். ஊரு உலகத்துல யார்ட்ட வேணாலும் தப்பிச்சிடலாம். உங்கிட்ட மட்டும் மாட்டப்படாது…அடுத்த வாட்டி பார்க்கலாம்…என்று ஓடி ஒளிந்து  கொள்வேன்.
சமையல் மாமியைக் கைவிட இன்றுவரை ஏனோ எனக்கு மனம் வரவில்லை. ஒவ்வொரு முறை ஊர் செல்லும்போதும் அவளிடம்தான் சாப்பாட்டுக்குச் சொல்கிறேன். உப்பு, புளிப்பு கூடுதலோ, குறைச்சலோ…மாமி கொண்டு வருவதை வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டுதான் இருக்கிறேன் தடங்கலில்லாமல். அப்படி ஒரு இரக்கம் படிந்து போனது..
வாழைக்காயே எனக்கு ஆகாது மாமி…ஞாபகம் வச்சிக்குங்கோ…மதியம் சாப்பிட்டேன்னா…ராத்திரி இடுப்பு பிடிச்சிண்டிடும்…என் உடம்பு வாகு அப்டி…அம்புட்டு வாயு…அதனால அத மட்டும் மறந்தும் எனக்கு வச்சிடாதீங்கோ….
ஓ…அப்டியா…இது தெரியாமப் போச்சே நேக்கு…மன்னிச்சிக்குங்கோ மாமா…இன்னைக்கு அமாவாசை ஆச்சே…வாழைக்காய் வைக்கணுமேன்னு ஒரே நெனப்பா  பண்ணிக் கொண்டு வந்துட்டேன்…பொறுத்துக்குங்கோ….இனிமே கண்ணுலயே காட்ட மாட்டேன்….
என்றும் மாறாத இந்தப் பணிவான, கரிசனமான  வார்த்தைகள்தான் அவளிடமிருந்து விடுபட முடியாமல்  என்னைக் கட்டிப் போட்டிருக்கிறதோ என்னவோ?  மனிதன் இதமான வார்த்தைகளுக்காகத்தானே ஏங்கி நிற்கிறான். அன்பும், நேயமும், கருணையும் தானே வலைப்பின்னலாய் அமைந்து வாழ்க்கையில்  மனிதர்களை, மனித உறவுகளை ஆட்டுவிக்கிறது?
மாமா…சித்த வந்து கதவைத் திறக்கிறேளா…? – வாசலில் குரல். ஓடிப் போய் பூட்டிய  கதவைத் திறக்கிறேன்.
பூட்டிண்டு உள்ளே இருக்கிறது நல்லதுதான்…காலம் கெட்டுன்னா கெடக்கு…ஆத்துல மாமி, குழந்தேள் எல்லாரும் சௌக்கியமா? நீங்க சௌக்கியம்தானே…? வந்ததும் வழக்கம்போல ஞாபகம் வச்சிண்டு, சாப்பாடு கொண்டு வரச் சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம் மாமா…உங்கள மாதிரிப் பத்திருபது பேர் என்னைக்கும் இருந்தாப் போதும்…எங்க காலத்தை ஓட்டிருவோம்… - சொல்லிக் கொண்டே கேரியரைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தாள் மாமி.
மாமியிடம் ஒரு சரியான சாப்பாட்டுக் கேரியர் கூடக் கிடையாது. தலையாட்டிக்  கொண்டேயிருக்கும்.  அடுக்குகளை அணைத்துப் பிடித்து மேலே துளைக்குள் இடைச் செருகும் கனமான ஸ்பூன் தொலைந்து போச்சு என்று நீண்ட ஆணியைச் செருகியிருந்தாள். அடுக்குகளும் நசுங்கியிருந்தன. அதற்கென்று உள்ளது மாதிரித் தெரியவில்லை. பொருந்தாமல் தலையாட்டின. சற்று அசந்தால் கவிழ்ந்து கொட்டி விடும். எப்படியோ அணைத்துப் பிடித்து, வொயர் கூடைக்குள் வைத்துக் கொண்டு வருகிறாள். வந்ததும் ஜாக்கிரதையாய்த் தனித் தனியே எடுத்து வைத்து விடுகிறாள். தயவுபண்ணி தட்டுப் போட்டு மூடிக்குங்கோ மாமா…! முடிந்தால் ஊர் செல்வதற்குள் ஒரு நான்கடுக்குக் கேரியரை வாங்கி இந்த முறையாவது  பரிசளிக்க வேண்டும் மாமிக்கு. நினைத்துக் கொண்டேன்.
பொதினாத் துவையல் வச்சிருக்கேன்….அடிஷனலா…மாவு வாங்கிண்டு தோசை வார்த்துப்பேளோன்னோ…தொட்டுக்க வேணும்தானே…என்னவோ மனசுக்குத் தோணித்து… செய்து கொடுப்போமேன்னு பண்ணி எடுத்துண்டு வந்தேன்…ரெண்டு வேளைக்கு தாராளமா வரும்…நாளைக்கு வேறே சட்னி செய்து கொண்டு வரேன்….போயிட்டு வரட்டுமா….-சொல்லிவிட்டுக் கிளம்பிய மாமி, பார்த்தேளா…மறந்துட்டேன்…இந்தாங்கோ உங்க புஸ்தகம்….ரெண்டு பேருமே படிச்சிட்டோம்…..தி.ஜானகிராமன் வச்சிருக்கேளா….மாமா கேட்கச் சொன்னா….அவரோட கதைகளெல்லாம் என்னைக்கும் ஜீவிதம்னு சொல்லி, ஞாபகமா  வாங்கிண்டு வான்னா….அவர்ட்டேயிருந்துதானே படிக்கிற பழக்கமே எனக்கும் வந்தது….புஸ்தகப் புழுவாக்கும்…நாங்க ரெண்டு பேரும்….அவசரமில்லே….சாவகாசமா எடுத்து வையுங்கோ….சாயங்காலமா கேரியர் எடுக்க வரச்சே…வாங்கிண்டு போறேன்…..சரியா…..? ரயில்ல சரியாத் தூங்காம வந்திருப்பேள்…வயிறாரச் சாப்டுட்டு நன்னா ரெஸ்ட் எடுங்கோ…..நாளைக்குப் பார்த்துக்கலாம் உள்ளூர்  வேலையெல்லாம்….நான் வரட்டுமா….?
-கொட்டித் தீர்த்த மழை போலப் பொழிந்து குளிர வைத்து விட்டு மாமி போய்க் கொண்டிருந்தாள். மனசு படு சுத்தம் போலும்.  நல்லதையே பேசுவது என்று பிரதிக்ஞை செய்திருப்பார்களோ என்னவோ? இல்லையென்றால் இத்தனை இனிமையாய் வார்த்தைகள் வருமா? அவைதான் எவ்வளவு பலம் வாய்ந்தவை…! எதிராளியை எத்தனை பதமாக்குகின்றன?
முதல் வேலையாக அவர்கள் கேட்ட தி.ஜா.ரா.வின் புத்தகங்களை எடுத்து வைப்பதற்காக அறையினுள் பிரவேசித்தேன். ஒரு வேளை அவர்களின் இந்த ஆழ்ந்த இலக்கிய ரசனைதான் புடம் போட்டது போல இத்தனை மென்மையாய் அவர்களை மாற்றியிருக்கிறதோ…? எனக்கு ஏனோ சட்டென்று மனதில் இப்படித் தோன்றியது. கலையழகும் ஆழமுமிக்க இலக்கியம் மனித மனங்களை மென்மைப் படுத்தி, மேன்மைப் படுத்தும்தானே…!      அந்த அபார சக்தி அதற்குக் கண்டிப்பாய்  உண்டே….!!!                                              
                     ----------------------------------------------






கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...