26 ஜனவரி 2019

கி.ராஜநாராயணன் சிறுகதை-புறப்பாடு-வாசிப்பனுபவம்-மாயமான்-காலச்சுவடு க்ளாசிக்தொகுதி


               
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வாசிப்பனுபவம்   
உஷாதீபன்-கட்டுரை  
 சிறுகதை  “புறப்பாடு”   கி.ராஜநாராயணன்                                                               வாசிப்பனுபவம்   


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------         ,                                                     
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (காலச்சுவடு தமிழ் க்ளாசிக் சிறுகதைகள் தொகுப்பு- கி.ராஜநாராயணன்-“மாயமான்”                                                                         --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெவ்வேறு விதமாய் எப்படியெல்லாம் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்…தன் போக்கில், தன் இஷ்டத்தில் இருந்து கழித்திருக்கிறார்கள் என்பதை ஸ்வரஸ்யமாய் இவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும்.   கிராமங்களில் காலங்காலமாய் இருந்து வரும்  நம்பிக்கைகள், நடைமுறைகள் சில விஷயங்களில், சில பேர்களிடத்தில் எப்படித் தகர்ந்து போகின்றன, எப்படிப் பொய்யாகி விடுகின்றன என்பதும் இயல்பாய் நிகழ்ந்து விடும்போது அவை மிகுந்த ரசனைக்குரிய, மறக்க முடியாத நிகழ்வுகளாகி விடுகின்றன.
       ஒரு மனிதன் வயசாகி, தொண்டு கிழமாகி, உயிரோடு இருப்பது என்பது ரொம்பவும் கொடுமை. கூட இருந்த நண்பர்கள், உறவுகள், பழகிய மக்கள் என்று பலரும் அடுத்தடுத்து செத்துப் போவதைப் பார்த்துக் கொண்டே காலம் கழிப்பது பெரிய துரதிருஷ்டம்.
       ஆனால் கிராமங்களில் ஒரு சில பெரிசுகள் கடைசி காலம்வரை இப்படியிருந்து மதிப்பிற்குரியவர்களாய் மாறியிருக்கிறார்கள். அப்படி ஒருத்தர்தான் இக்கதையின் அண்ணாரப்பக் கவுண்டர்.
       பெரியவர் கி.ரா.விடம் அவரது உவமைகளையும், அதற்குப் பொருத்தமான மனிதர்களின் ஆகிருதிகளையும், நசிவு, நலிவுகளையும் ஆழ்ந்து கவனித்து ரசிக்க வேண்டும். போகிற போக்கில் படிப்பவர்களுக்குக் கூட ரசனை மேம்பட்டுவிடும்தான்.
       அந்த நடையில் அவ்வப்போது தடங்கலில்லாமல்  வந்து விழும் நகைச்சுவையையும் கவனித்துக் கொண்டே நகர வேண்டும்.
       ஒரு மனிதன் சாகக் கிடக்கும்போது அல்லது செத்துடுவான் என்று நினைக்கும்போது இவ்வளவு சிரிப்பா?
       ஒருவன் எப்போ சாவான் என்பது பலருக்கும் எதிர்பார்ப்பாகவும், சிலருக்கு அதுவே சிரிப்பாகவும் இருக்கும் விநோதம் இக்கதையில் நிகழ்கிறது.
        என்னத்துக்கு வாசிப்பனுபவம்? வரிக்கு வரி நான் சொல்லி ரசித்து, பிறகு அதைப் படிப்பதை விட நேரடியாய்க் கதையையே படித்து விடலாமே…! எளிய மொழியில்தானே சொல்லியிருக்கிறார்…? என்றும் தோன்றுகிறது. வாசக நண்பர்கள் தேடிப் படிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாசிப்பனுபவம்.
       அண்ணாரப்பக் கவுண்டர் இறப்பிலிருந்து தப்பிப்பதை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் பாருங்கள். முதலில் தகவல் இப்படிப் பரவுகிறது….
       அண்ணாரப்பக் கவுண்டர் – ஆள் தீந்து போயிட்டார்… - சொன்னவனும் சந்தோஷமாகச் சொன்னான். கேட்டவர்களும் சந்தோஷமாகக் கேட்டார்கள்.  நெசமாத்தான் சொல்லுதியா? – மத்தியில் ஒரு சந்தேகம்.  இடையில் என்ற வார்த்தையில்லை. மத்தியில் என்கிறார். கிராமத்து எழுத்து.
       அந்தாப் பாருங்க…பொய்யா சொல்லுதேன்…கயத்தாத்து மேளத்துக்கு ஆள் புறப்பட்டாச்சி….
       லேய் மக்காளி…மக்காளி… - பல்லைக் காட்டிக் கொண்டே வந்த அவன்…வாஸ்தவந்தான் என்றுவிட்டு வேகமாய்ப் போகிறான்.
       நம்ம அண்ணாரப்பக் கவுண்டர் ஆள் க்ளோஸ்….. – கிராமத்து ஜனங்கள் இப்படி ஆனந்தமாகச் சொல்லவும்  கேட்கவும் போதுமான காரணம் இருந்தது. அண்ணாரப்பக் கவுண்டரின் கையைப் பிடித்துப் பார்த்த பண்டிதன் சம்முகம் “சரீ்“ என்கிற மாதிரி தலையை அசைத்தான்.
       தலையை ஆட்டினால் தொடங்கி விடுவார்கள். முதல் காரியம் கட்டிலில் கிடப்பவனைக் கீழே எடுத்துப் போடுவது. இல்லையென்றால் கட்டிலையே ஆவி சுற்றிக் கொண்டிருக்கும். வேறு யாரும் பிறகு அதில் படுக்க மாட்டார்கள். அமாவாசை, பாட்டிமை (பிரதமை) கழிந்தது.
       கவுண்டர் ஒரு நாள் திடீரென்று கண்விழித்துப் பார்த்தார். கேட்குற கேள்வியப் பாருங்க…
       “எவண்டா என்னைக் கட்டில்லே இருந்து கீழே எறக்கிப் போட்டது….” என்று சத்தம் கொடுத்துவிட்டுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டு விட்டார். இந்தச் செய்தி பரவியதும் ஊரே சிரிப்பில் ஆழ்கிறது. பண்டிதனின் கணிப்பு பலித்தபாடில்லை.
       இத்தனைக்கும் நோய் நொடி  என்று ஒன்றுமில்லை. படுக்கையில் விழவில்லை. நல்ல வயசாகிவிட்டது. அவ்வளவே. எவ்வளவு என்று கேட்கக் கூடாது. தெரிந்தால்தானே…! பிறந்த நட்சத்திரம் கூடத் தெரியாது. அந்தப் பட்டியிலேயே வயசானவர் அவர்தான். மூன்று பெண்டாட்டிகள், ரெண்டு தொடுப்பு. அவர்கள் எப்பவோ செத்துப் போனார்கள். மகன்கள், மகள்கள் உட்பட. பேரன் பேத்திகள் சிலருக்குப் பல் விழுந்து விட்டது.சிலருக்கு நரையும், வழுக்கையும்.
       மன்னன் அண்ணாரப்பக் கவுண்டருக்கோ தந்தம் பன்னரிவாள்ப் பல்மாதிரி தேய்ந்து போனதே தவிர ஒன்று கூட உதிரவில்லை.
       நாப்பது நாளைக்குக் கோழிக்கறியும் பச்சை நெல்லுச் சோறும் போட்டா…இப்பவுங்கூட ஒரு கல்யாணம் பண்ணிக் காட்டுவேன்…
       இப்பவும் சத்தம்போட்டு, குரல் நடுங்காமல் பாட முடியும் அவரால். ஆளுகதான் சண்டைக்கு வருவார்கள்.
       முழு வயோதிகத்தினால் கம்பீரமும், உயரமும் உருவமும் வாடிய சருகுபோல் சுருண்டு வளைந்து சிறுத்து விட்டது. கட்டிலில் மூலை சேர்ந்து விட்டார். தேய்ந்து போன கலப்பை மாதிரி.
       என்னா ஒரு விவரிப்பு…!! ஒவ்வொரு பௌர்ணமியும் அமாவாசையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துதான் போகிறார்கள்.
       அந்தப் பெரிய உசிர் பிழைக்கவும் முடியாமல், சாகவும் முடியாமல் காலம் தாழ்த்துவதனால் பல காரியங்கள் தடை படுகின்றன. வந்த விருந்தாளிகள் திரும்ப முடியாமல்…கல்யாணம் காட்சி என்று வைக்க முடியாமல்….விவசாய வேலைகள் தொடங்க முடியாமல்….
       ஒரு நாள் திடீரென்று நிலைமை மோசமாகிறது. வைத்தியர் வருகிறார். நாடி பார்க்கிறார்.
       ஏதுகாரங்களையெல்லாம் செய்துரலாம். தூர இருக்கிற சொந்தக்காரங்களுக்குச் சொல்லிரலாம்…
பேரன் பேத்திகள் ஜாதகம் பார்த்து, “இந்தத் திசை விடுதி“, கர்மம் செய்வதற்கு வேண்டிய சட்டம் இருப்பதால் இந்தத் தடவை தப்பாது என்று நிச்சயிக்கிறார்.
       பந்துக்களுக்கும் தூர பந்துக்களுக்கும் கூட வரச்சொல்லியாகி விட்டது. பந்தல்போட, பெண்ணடிப் பாயசம் காய்ச்ச….-எல்லா ஏற்பாடுகளும் தடபுடல்….
       சுற்றிலும்  ஆட்கள் அமர்ந்து கிடக்க, ராப்பகல் கடந்து போகிறது. தேயிலைத் தண்ணி போட்டுக் குடித்து, வாலி மோட்சம் கதை படித்து…ஒரு நாளா ரெண்டு நாளா….ம்உறீம்….
       என்ன இப்படிப் பிடிவாதம் பண்றார்…… பிடிசாதகம் பண்றாரே கவுண்டர்….?
       சிலேப்பணம் கட்டுங்கய்யா…..
அப்படீன்னா….?
       பஞ்சுப்பால் விடணும்….என்ன பால் விட்டீங்க…?
பசுவம் பால்….
       எருமைப்பால் சொட்டு விடணும்…அதான் திக்காய் இருக்கும்…
       அப்டீன்னா ஆட்டுப்பால் விடலாமே…!
       சர்தான்…ஆட்டுப்பாலையும், பசுவம் பாலையும் விட்டு ஆள எழுப்பி உட்கார்த்திருவீக போல்ருக்கே…!
       எருமைக்கும் எமனுக்கும் எவ்வளவு சம்பந்தம்…? –மனசில் பலருக்கும் வியப்பு.
       காய்ச்சுறதா…இல்லயா…..பச்சைப்பாலே சிலாக்கியம்….
       எருமைப்பாலில் பஞ்சை முக்கி….பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள்….முத்தாத்தாவுக்கு திறந்திருந்த வாயில்…..
       தொண்டைக்கும் வாய்க்கும்தான் உயிர் ஊசலாடுகிறது. பாலினால் தொண்டையில் சிலேப்பனங்கட்டி கொஞ்ச நேரத்தில் உயிர் போய்விடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் எல்லோரும்.
       அப்பத்திக்கு இப்ப ஆள் கொஞ்சம் தெளிச்சியா இருக்காப்ல தெரியுது….-சொன்னார் ஒருத்தர்.
       ஏ….ஆமா…..!
       ஊர் முக்கியஸ்தர்கள் கூடுகிறார்கள். விசேஷ கேஸ் இது….குளுப்பாட்டி படுக்க வைக்க வேண்டிதான்….விளக்கெண்ணெய் கொண்டு வந்து தலையிலும் உடம்பிலும் அறக்கித் தேய்த்து தப்பணம் போட்டார்கள். மணி ராத்திரி பன்னெண்டு.
       கிணத்தடியில் கொண்டு உட்கார்த்தி, தண்ணீர் சேந்திச் சேந்தி கவுண்டரின் தலையில் கொட்டிக் கொண்டேயிருந்தார்கள். ரோட்டுக் கடை வைத்தியரும், கெப்பணக் கவுண்டரும் வெற்றிலை போட்டுக் கொண்டு, முத்தாத்தா கட்டிய கல் தொழுவைப் பார்த்தவாறே வந்து சேர, இடைவெளியில்லாமல் மூச்சு முட்டத் தண்ணி விடணும் என்பது தவற, கெப்பணக் கவுண்டருக்குக் கோபம் வர…..வீட்டுக்குள்ளே பொன்னுத்தாயி ஒரு அரைக்கால் ரூபாய் நாணத்தை எடுத்துப் புளி போட்டு விளக்கித் தயார் நிலையில் வைக்க, எ்ல்லோரும் சந்தோஷப் படுகிறார்கள்.ஒருத்தி நாடி கட்ட மல் துணி கிழித்து சரிபார்த்து வைக்கிறாள்.
தண்ணீர் விட்டவர்கள் அலுத்து அசந்து போக, நாடியைப் பார்த்த வைத்தியர் உள்ளே கொண்டு போங்கள் என்கிறார். 
நார்க் கட்டிலில் படுக்க வைத்து, அடியில் சாம்பிராணிப் புகை போட்டு….
கவுண்டர் பார்ப்பதற்கு இப்போது படு சுத்தமாக இருக்கிறார். சித்திரபுத்திர நயினார் கதையை ஒருவர் பாடுகிறார்…எல்லோரும் அசந்து அண்ணாக்கத்துக் கேட்கிறார்கள்.
மறுநாள்…அதற்கு மறுநாள்….அதற்கும் மறுநாள்…நாட்கள் ஆமையைப் போல் நகர்கின்றன. அந்த உடலில் உயிர் இழையோடிக்கொண்டே இருந்தது.
முதலில் பயந்தவர் வைத்தியர்தான். அவரது நாடி சாஸ்திரத்தைக் கேலி செய்வது போலிருக்கிறதே இது…!
கவுண்டருக்குப் பிடித்தமான பலகாரங்களைச் செய்து குழந்தைகளுக்கு விநியோகிக்கிறார்கள். குறிப்பாகப் பால் கொழுக்கட்டை…..
கெப்பணா…எனக்குப் பெரிய கவுண்டரைத் தெரியும்…அவரு அரும்பாடு பட்டுச் சம்பாரிச்ச நிலம்…அந்த எருவடிப் புஞ்சை…அங்க போயி கொஞ்சம் மண்ணை எடுத்துக்கிட்டு வா…அதைத் தண்ணில கரைச்சி ஒரு சங்கு ஊட்டு……தொட்டேரப்பக் கவுண்டர் இப்படிச் சொல்ல……
என்னவொரு சத்தியவாக்கு…! கூட்டம் விதிர்க்கிறது.
சொன்னபடி புகட்டுகிறார்கள். அந்த மண்ணைக் கரைத்துப் புகட்டியதாலோ அல்லது தற்செயலோ…மறுநாள் பின்னிரவில் அந்த விவசாயி அண்ணாரப்பக் கவுண்டர் காலமானார்.
விவசாயி என்கிற வார்த்தைப் பிரயோகம்….கவனியுங்கள்.
வயசானவர்கள் போனால் யாரும் அழக் கூடாது.இது சம்பிரதாயம்.
சத்தக் குழல், கொட்டு, மேளம் அந்த இசைப்புக் ஏற்ற மாதிரி சுற்றிச் சுற்றி வந்து ஆடும் பொய்க்கால் குதிரை…. – அமர்க்களமாய்ப் புறப்படும் ஊர்வலம்.
நொடி நிறைந்த வண்டிப்பாதை…லம்பல் அதிகம். குடிமகன், முறுக்கிய மாத்தை கவுண்டரின் மேல்நெற்றியில் இறுக்கிய கட்டு கொஞ்சம் நழுவியதாலோ என்னவோ வண்டியின் லம்பலில் கவுண்டரின் தலை இடது பக்கமாகவும், வலது பக்கமாகவும் ஆடிக்கொண்டே போகிறது….
மாட்டேன்…மாட்டேன்…..என்று சொல்வது போல……!!!!
சுந்தரராமசாமி சொல்கிறார்  =  அபூர்வமான அழகுணர்ச்சி, ரசனையில் திளைக்கும் மனோபாவம்,இவர் தமிழ் மண்ணுக்கே உரித்தான பழத்தோட்டம்…..வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல், கலை வன்மை…..!
இதற்கு மேல் நான் என்ன சொல்ல….?
                           ----------------------------------------------------

      
      
      
      
        


கருத்துகள் இல்லை:

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...