13 அக்டோபர் 2018

"”வீட்டு டீச்சர்” - அரங்கம் - நாடகம் - தினமணி சிறுவர் மணி வெளியீடு


அரங்கம்                                  “வீட்டு டீச்சர்”                                  ***************************************                **************************************
காட்சி – 1 இடம்- வீடு. மாந்தர் -  சிறுவன் சசி, அப்பா தியாகராஜன், அம்மா லட்சுமி.
(அறையில் அமர்ந்து  படித்துக் கொண்டிருக்கும் தியாகராஜனிடம் மடியில் புரண்டு அடம் பிடிக்கிறான் சசிகுமார். )
லட்சுமி – அங்க என்ன சத்தம்…..அப்பாவைத் தொந்தரவு செய்யாதே…போய்ப் படி……
சசிகுமார் – படிச்சிட்டுத்தாம்மா இருக்கேன்….
லட்சுமி – அப்போ உன் ரூமுக்குப் போக வேண்டிதானே….அப்பா ரூம்ல என்ன வேலை…? தனியாப் போய் உட்கார்ந்து, கவனமாப் படி…..
தியாகராஜன் – போ…அம்மா சொல்றாங்கல்ல….போய் பாடப்புத்தகத்தை எடுத்து வச்சுப் படி…..
சசிகுமார் – போக மாட்டேன்….நீ என்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லு…அப்பத்தான் போவேன்…
தியாகராஜன் – உன்னைக் கூட்டிட்டுப் போனா அம்மா திட்டுவா….படிக்கிற வயசுல பாடப் புத்தகம்தான்….கதைப் புத்தகம்லாம் படிக்கக் கூடாதும்பா….
சசிகுமார் – ஏனாம்…? படிச்சா என்னவாம்…..?
தியாகராஜன் – அப்புறம் பாடத்துல கவனம் செல்லாது….முப்பதும் நாற்பதும்தான் மார்க் வாங்குவே…மக்காப் போயிடுவே….
சசிகுமார் – நீ மட்டும் கட்டுக் கட்டா புத்தகமா வாங்கி அடுக்கியிருக்கே…எப்பயும்  படிச்சிட்டேயிருக்க….! அது மட்டும் சரியோ….?
தியாகராஜன் – இந்த பாரு… எதிர்த்து எதிர்த்து கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது…பெரியவங்க சொன்னா உடனே  சரின்னு கேட்கணும்…அவங்க உன் நன்மைக்காகத்தான் சொல்வாங்க….தெரிஞ்சிதா…?
சசிகுமார் – போப்பா…நீ எப்பயும் இப்டித்தான்….அம்மா எதச் சொன்னாலும் கோயில் மாடு மாதிரித் தலையாட்டுவே….
தியாகராஜன் – பார்றா….இது எப்டிறா உனக்குத் தெரிஞ்சிது?….முதல்ல கோயில் மாட்டைப் பார்த்திருக்கியா நீ?
சசிகுமார் – எங்க க்ளாஸ் டீச்சர் கதை சொல்லியிருக்காங்களே…படம் போட்டுக் காண்பிச்சாங்க…நல்லா டிராயிங் போடுவாங்க….கலர் சாக்பீஸ் வச்சு போர்டுல வரைவாங்க…தினம் எதாச்சும் ஒரு படம் போட்டு…அதைப்பத்திச் சொல்வாங்க….ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும். அவங்க கூட nஉறட்மாஸ்டர் முன்னாடி அப்டித்தான் தலையத் தலையை ஆட்டுவாங்க….
தியாகராஜன் – அநியாயக் குசும்புடா  உனக்கு…..இந்த வயசுல டீச்சரப்பத்தியே கமென்ட்…இல்ல…?
சசிகுமார் – நான் சொல்லலைப்பா….என் கூடப் படிக்கிறானே…விமல்….அவன்தான் அப்டிச் சொன்னான். டீச்சர் காதுல விழுந்திடிச்சு….ஆனா பாரேன்…அவங்களும் உடனே சிரிச்சிட்டாங்க…கோவிக்கவேயில்லை….
(சொல்லிவிட்டு, சரி…நா போறேன்…. என்று தன் அறையை நோக்கி ஓடினான் சசி)
காட்சி – 2இடம் - சமையலறை.  மாந்தர் – லட்சுமி…மற்றும் தியாகராஜன்
தியாகராஜன் – ஏன் அவனைப் புத்தகக் கண்காட்சிக்குக் கூட்டிட்டுப் போக வேணாம்ங்கிறே…?
லட்சுமி – படிக்கிற வயசுல அதென்ன புக் ஃபேர்…அது இதுன்னு?…பாடங்களை ஒழுங்காப் படிச்சாப் போதாதா? அப்புறம் கவனம் சிதறிப் போயிடும்…கதைப் புஸ்தகமாப் படிக்க ஆரம்பிச்சிடுவான்…
தியாகராஜன் – வாசிப்புப் பழக்கத்தை இந்த வயசுலயே ஏற்படுத்துறது நல்லதுதானே…?
லட்சுமி –அதுலயே கவனம் போயிடும்….பாடங்களை ஒழுங்காப் படிக்க மாட்டான்…படிக்கிற வயசுல அதைத் தவிர வேறே எதுலயும் கவனம் செல்லக் கூடாது….
தியாகராஜன் – ஏன் லட்சுமி இப்டிச் சொல்றே….இப்போ டி.வி. பார்க்கலியா…? அதுக்கு அலவ் பண்றமில்லியா…? அத விடவா இது மோசம்….? மொழியறிவு வளரத்தானே செய்யும்….நல்ல புஸ்தகமா வாங்கிக் கொடுத்தாப் போச்சு….
லட்சுமி – மொழியறிவுன்னு தமிழ்ப் புத்தகங்களை மனசுல வச்சிட்டு நீங்க பேசுறீங்க…நான் இங்கிலீஷ் புக்ஸையும் சேர்த்துத்தான் சொல்லுவேன்…
தியாகராஜன் – சரி இருக்கட்டும்…இதுவும் படிக்கட்டும்…அதுவும் படிக்கட்டும்…ரெண்டுலயும் லாங்க்வேஜ் இம்ப்ரூவ் ஆனா நல்லதுதானே….?
லட்சுமி – ரெண்டு மட்டுமில்லே…கூடவே உறிந்தியும் படிக்கணும் …அதான் நல்லது…..
தியாகராஜன் – அதென்னத்துக்கு இப்போ…? பின்னாடி பார்த்துக்கலாம்…அத்தனை அவசியமா என்ன?
லட்சுமி – என்ன இப்டிக் கேட்குறீங்க…? இந்தியாவுல எந்த ஸ்டேட்சுல போய் வேலை பார்க்கிறதானாலும் உறிந்தி அதி முக்கியமாக்கும்…அங்கெல்லாம் நம்ப தாய்மொழி செல்லுபடியாகாது. ஏன், இங்கிலீஷே அப்டித்தான்…..கூட ஒரு மொழியைத் தெரிஞ்சி வச்சிக்கிறதுல என்ன தப்பு….?
தியாகராஜன் – தப்பு ஒண்ணுமில்லே… சரிதான்….நாமதான் என்னென்னவோ அபத்தமா மனசுல நினைச்சிட்டு அதையெல்லாம் இழந்திட்டோம்….அந்த முரணை நமக்குள்ள ஏற்படுத்தினவங்க நமக்குத் தெரியாம ஜாக்கிரதையாயிட்டாங்கங்கிறதுதான் உண்மை…..தாய்மொழி மேல மதிப்புள்ளவன், பக்தியுள்ளவன் வேறே எந்த மொழியையும் வெறுக்க மாட்டான்…அதுதான் புத்திசாலித்தனம்….
லட்சுமி – தெரியுதில்ல…கொஞ்சம் பொறுங்க… சமயம்  வரட்டும்…எதையெதை எப்டி செஞ்சா சரியா வரும்னு ஒரு கணக்கு இருக்கு….
தியாகராஜன் – என்ன உன் மனக் கணக்கோ…? சரி…நீ எதைச் சொன்னாலும் யோசிச்சுத்தான் சொல்லுவே….உன் இஷ்டப்படியே செய்துக்கோ…. – கூறிவிட்டு தன் அறையை நோக்கிப் போனார் தியாகராஜன். குழந்தைகள் அப்பா பேச்சைக் கேட்டு வளர்வதைவிட அம்மா சொல்லுக்கு அடங்கி வளர்வது நன்று என்பது அவரது எண்ணமாய் இருந்தது. ஆனாலும் தேர்வு செய்து சில புத்தகங்களை வாங்கிக் கொடுக்கிறதுல என்ன தப்பு? என்ற ஒரு எண்ணமும் இருந்தது அவருக்கு.
…நானே அவ கிழிச்ச கோட்டைத் தாண்டுறதில்லையே… நல்லது நடக்குமானா அதை யார் சொன்னா என்ன…? இஷ்டப்படி செய்யட்டும்…(தியாகராஜன் தனக்குள் முனகிக் கொண்டார்)
காட்சி – 3 – இடம் – வீடு  நேரம் மாலை 6 மணி . மாந்தர் – தியாகராஜன், சிறுவன் சசிகுமார்.
சசிகுமார் – அப்பா….யப்பா….யப்பா…..யப்பா…..நீ சொல்லுப்பா அம்மாகிட்ட….விரல்களால் தியாகராஜனின்  கையைச் சுரண்டிக்கொண்டே அரித்தான் சசி.
தியாகராஜன் – என்ன சொல்லணும்ங்கிறே…. உங்க அம்மா ஒண்ணும் சொல்லமாட்டா….சந்தோஷமாப் போய் விளையாடு….
சசிகுமார் – நீ அம்மாட்ட முதல்ல சொல்லு…..நா அப்புறமா விளையாடப் போறேன்….
தியாகராஜன் –நான்தான் சொல்றனே…நம்பிக்கையில்லயா….அம்மா சரின்னுதான் சொல்லுவா….போ…போ….உன் ஃப்ரென்ட்ஸெல்லாம் காத்திட்டிருப்பாங்க….ஓடு…..
சசிகுமார் – உனக்குத் தெரியாது…..அம்மா பர்மிஷன் தர மாட்டா….வேண்டாம்னுதான் சொல்லுவா…அன்னைக்கு உன் ஷெல்ஃப்லேர்ந்து புக் எடுத்துப் படிச்சிட்டிருந்தேன்…சடார்னு பிடுங்கி வச்சிட்டா…அம்புட்டுக் கோபம்….அம்மாவுக்குப் பாடப் புஸ்தகம் தவிர வேறே எது படிச்சாலும் பிடிக்காது…
தியாகராஜன் - என்னடா…உன்னோட பெரிய அனத்தலாப் போச்சு….! நான்தான் சொல்றேன்ல…அம்மா திட்ட மாட்டான்னு …நீ விளையாடிட்டு வா…நான் அதுக்குள்ளே பர்மிஷன் வாங்கி வைக்கிறேன்…
சசிகுமார் – அதெல்லாம் முடியாது….என் முன்னாடி கேளு….அம்மா சரின்னு சொன்ன பின்னாடிதான் நான் விளையாடப் போவேன்….
தியாகராஜன் – சரிய்ய்ய்ய்யான பிடுங்கல்றா நீ…..! …!
காட்சி – 4 இடம் – கொல்லைப்புறத் தோட்டம் மாந்தர் – லட்சுமி, தியாகராஜன், சசிகுமார்.
தியாகராஜன் – லட்சுமி….லட்சுமி….இங்க என்ன பண்ணிட்டிருக்கே….? கேட்டுக் கொண்டே பின்புறம் நோக்கிப் போனார்.
லட்சுமி – கொல்லைப் பக்கம் என்ன பண்ணுவாங்க…? துணி துவைச்சிக்கிட்டிருக்கேன்….
தியாகராஜன் – அதுக்குத்தான் வாஷிங் மிஷின் இருக்கே….எதுக்கு கைல பண்ணிக்கிட்டு….?
லட்சுமி – அது வெறும் தூசியைத்தான் அலசும். படிஞ்சிருக்கிற அழுக்கை எடுக்கணும்னா கையாலதான் சோப்புப் போட்டுக் கசக்கியாகணும்….அத்தோட தண்ணிச் செலவு இருக்கே….அது தாங்காது….
தியாகராஜன் – சரி…அத விடு….சசி ஸ்கூல்ல குழந்தைகளை புக் ஃபேருக்குக் கூட்டிட்டுப் போறாங்களாம்….அதுக்குப் போகணும்னு அடம் பிடிக்கிறான்…..என்ன சொல்ல….?
லட்சுமி – இதுக்கு எதுக்கு என்கிட்டே கேட்குறீங்க….? போகச் சொல்ல வேண்டிதானே….!
தியாகராஜன் – (மனசுக்குள் அதிர்ந்து) லட்சுமி…நீயா இப்டிச் சொல்றே…? அன்னைக்கு என் ரூமுல அவன் புஸ்தகத்தை எடுத்துப்  படிச்சதுக்கு அவ்வளவு கோபப் பட்டே….இப்போ இதுக்கு சரின்னு சொல்றே….? யோசிச்சுத்தான் சொல்றியா….நீ…?
லட்சுமி – உங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்லி அனத்தியெடுத்தான். அதனாலதான் வேண்டாம்னு சொன்னேன்…உங்களுக்கு சிரமமா இருக்கும்னு தெரியும் எனக்கு…..!
தியாகராஜன் – அதுதானே எனக்கு ஆச்சரியம்….நீ எப்போ எது சொல்வேன்னே தெரியமாட்டேங்குதே….!
லட்சுமி – இதுல ஆச்சரியத்துக்கு என்னங்க இருக்கு….ஸ்கூல்ல கூட்டிட்டுப் போறாங்கன்னா ஒரு கன்ட்ரோல் இருக்கும்….குழந்தைகளுக்குன்னு இருக்கிற ஸ்டால்களுக்கு கவனமா அழைச்சிட்டுப் போவாங்க…குழந்தைக படிக்கிறதுக்குன்னு நிறையப் புத்தகங்கள் இருக்கில்லியா…அதை மட்டும்தான் வாங்க அலவ் பண்ணுவாங்க….மற்றதுக்கெல்லாம்……நகருங்க….நகருங்க…ன்னு தள்ளிட்டுப் போயிடுவாங்க….கண்டதையும் வாங்க விடமாட்டாங்க…குழந்தைங்க மனசு புத்தகம், அது இதுன்னு எல்லாத்தையும் வாங்கணும்னு ஆசைப்படும்…எதை எதைன்னு இனம் பிரிச்சு தேவையானதை மட்டும் பார்க்கத் தெரியாது அதுங்களுக்கு…..இஷ்டத்துக்கு வாங்கிக் காசைக் கரியாக்கிடும்…ஏன்…உங்ககூட அவன் வந்தாலும் அப்டித்தான் ஆகும்….நீங்க பையன் கேட்குறானேன்னு மறுக்க முடியாம எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்திடுவீங்க….அதுல  புத்தகங்கள் தவிர வேண்டாத பொருளெல்லாம்   நிறையச் சேர்ந்து போயிட வாய்ப்பிருக்கு…அப்டியும் ஸ்டால்கள் இருக்குதானே….குழந்தைக படிக்கிற மாதிரி…புத்தகங்களை மட்டும் டீச்சர்ங்க தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுப்பாங்க…அந்தந்த வயசுக்கு, அவுங்கவுங்க விருப்பத்துக்குத் தகுந்த மாதிரி இதையிதை வாங்கணும்னு கைடு பண்ணுவாங்க… ….அதுல ஒரு ஒழுங்கு இருக்கும்….வரைமுறை  இருக்கும்….உங்க கூட…ஏன் நாமளே கூட்டிட்டுப் போறோம்னு வச்சிக்குங்க…அந்தக் கன்ட்ரோல் இருக்குமா? பையன் அழறானே, அடம் பிடிக்கிறானேன்னு கேட்டதையெல்லாம் வாங்கிக் கையில திணிப்போம்….பிறகு அத்தனையும் வீட்டுல சீந்தாமக் கிடக்கும்…எந்தப் பொருள் வாங்கினாலும் அதுக்கு முழுமையா ஒரு உபயோகம்  இருக்கணும்ல…கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறோம்…அதைச் சிக்கனமாச் செலவு செய்யலாமேயொழிய, விரயம் பண்ண முடியுமா…? யோசிங்க…..
கல்லூரி விழாவில் மாநில கவர்னரிடம் தங்கப் பதக்கம் வாங்கும், சுவற்றில் தொங்கும் லட்சுமியின் அந்தப் பழைய புகைப்படத்தை அப்பொழுதுதான் புதிதாய்ப் பார்ப்பதுபோல்   வியந்து நோக்கியவாறே வாயடைத்து நின்றார் தியாகராஜன்…..
அம்மா சொல்றது நூத்துக்குநூறு சரிதாம்ப்பா…. எங்க க்ளாஸ் டீச்சரும் இதேதான் சொன்னாங்க…சில்ரன்ஸூக்குன்னு தனி வரிசையே போட்டிருக்காங்களாம்…அதுலதான் வாங்கணுமாம்…
பின்னால் சத்தமில்லாமல் வந்து நின்று தனக்கு மட்டும் கேட்பதுபோல் சொன்ன குழந்தை சசிகுமாரை அப்படியே வாரியெடுத்து உச்சி மோர்ந்தார் தியாகராஜன்.
தியாகராஜன் - சரி…உன் இஷ்டப்படி எவ்வளவு பணம் கொடுக்கணுமோ…அதை மட்டும் கொடுத்தனுப்பு என்றார்….
                          திரை

----------------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...