“அரங்கம்” “வாழ்க்கைக் கல்வி”
காட்சி – 1 – இடம் – பள்ளிக்கூட விளையாட்டு
மைதானம். மாந்தர் – சதீஷ், பிரதீப்…..சைலபதி
மற்றும் ரமணி. (பயிற்சியின் நிமித்தம்
மெதுவாய் ஓடிக் கொண்டே பேசிக் கொள்கிறார்கள்)
சதீஷ் – எங்க அப்பா.. எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் என்னைச் சொல்லிட்டே இருக்கார்டா….
பிரதீப் – எங்கப்பா கூட அப்டித்தான்….சரியான நொச்சுப் பார்ட்டி….
சைலபதி –…..என்னைச் சதா திட்டிட்டே இருக்காரே…அதுக்கு என்ன சொல்றே….?
ரமணி – பேச ஆரம்பிச்சவுடனே ஏன்டா நின்னுட்டீங்க….ஓடிட்டே பேசலாமே…..(மீண்டும் ஓட
ஆரம்பிக்கிறார்கள்) பெரியவங்க நம்ப நல்லதுக்காகத்தான் சொல்லுவாங்க…அது நமக்குத் திட்டுறமாதிரித்
தோணுது…. நம்ம அப்பா அம்மா திட்டாம வேறே யார்றா திட்டுவாங்க…
சதீஷ் –….ஸ்கூல்ல டீச்சர்ஸ் அறுக்கிறாங்க… வீட்டுக்குப் போனா இவங்க ரம்பம்… தாங்க
முடிலடா…
ரமணி –…சரின்னு கேட்டுக்கிறதுல என்ன தப்பு? ரோட்டுல போறவனா வந்து நமக்கு சொல்லுவான்?
சதீஷ் – அப்டி எவனாவது வந்து சொல்லித்தான் பார்க்கட்டுமே….கிழிச்சித் தொங்க விட்ற
மாட்டோம்…?
ரமணி – முதல்ல இந்த மாதிரியெல்லாம் பேசறதே தப்பு….அவன்..இவன்னு, கிழிச்சித் தொங்கவிடுவேன்றது…
….எங்கேயிருந்து வந்தது இந்த பாஷை…? சினிமா
கத்துக் கொடுத்திச்சோ? இல்ல சிலர் பேசறதைக்
கேட்டு, பெருமையா நினைச்சு நாமளும் பேசணுமா?
சைலபதி – என்னடா?…வாயவே திறக்க விடமாட்டேங்கிறான்…? இவனே பெரிய்ய்ய…ப்ளேடா இருப்பான்
போல்ருக்கே…?
ரமணி – கொஞ்சம் நில்லுங்கடா…. ….ஓட்டப் பந்தயத்துக்குப் பயிற்சி எடுக்கிறோம்னா அதுல
மட்டும்தான் கவனம் இருக்கணும்..இப்டிக் கண்டதையும் பேசிட்டு…நல்லாவா இருக்கு? பேசறதே
தப்பு முதல்ல… இன்னைக்கு இது போதும்….
சதீஷ் – ப்ரதீப் – சைலபதி – (ஒருசேரக் கூறுகிறார்கள்) நீ வேண்ணா போ……நாங்க வரலை….
(ரமணி ஓரமாய் இருந்த கல்லில் உட்கார்ந்து விடுகிறான். அவர்கள் பேசிக் கொண்டே
ஓடுகிறார்கள்)
காட்சி – 2 – மாந்தர் – சதீஷ்,
ப்ரதீப் மற்றும் சைலபதி.
சைலபதி – ஏண்டா…இப்டிச் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவிச்சிக்கிறீங்க?.அப்புறம்
நாம ஃப்ரென்ட்ஸ்ங்கிறதுக்கு என்னதான் அர்த்தம்? வீட்டுலதான் தொட்டதுக்கெல்லாம் கோவிச்சிட்டு,
மூஞ்சியைத் திருப்பிட்டு வர்றோம்னா…இங்க வந்தும் அப்டியே இருந்தா எப்டிறா?
சதீஷ் – அது கிடக்கட்டும்…முதல்ல உங்கப்பா என்னென்ன சொல்லி உன்னைத் திட்டுறார்னு
நீ சொல்லு…அடுத்த ரௌன்ட் நான் ஆரம்பிக்கிறேன்…
ப்ரதீப் – அப்போ இன்னைக்கு தடகளப் பயிற்சியில்லே….இதான் சப்ஜெக்டா…?
சதீஷ் – அப்டீன்னா ரமணியையும் கூப்பிட்டுக்கலாம்டா…. …?
ப்ரதீப் – கூப்பிடுறா அவனை….. (சதீஷ் கை தட்டி அழைக்கிறான்-ரமணி எழுந்து ஓடி வருகிறான்)
சைலபதி – ஸ்கூல்ஸ் லெவல்ல நடக்கப் போற போட்டில நாம கலந்துக்கிறோம்..…இதுக்காக நம்ம
அத்லெடிக் ட்ரெய்னர்…அதான் பி.டி. மாஸ்டர்….நம்மை எப்டியெல்லாம் திட்டுறார்…எதுக்குமே
லாயக்கில்லேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கார்…அது மட்டும் ஏன் நமக்கு உறைக்கல்லே?
விளையாட்டுல ஜெயிக்கணும்ங்கிற வெறிதானே? அது போல, நம்ம பெற்றோர்களுக்கும் நம்ம மேலே
அக்கறை இருக்கும்தானே……இதிலென்ன தப்பு…? ஏன் கோவிச்சிக்கணும்? .
சதீஷ் – அது நம்ப உரிமைடா….அப்பாம்மாட்டக் கூடக் கோவிக்கக் கூடாதா? .எங்க முடியுமோ
அங்கதானே சுதந்திரமா வாய் நீளும்…?
ப்ரதீப் – வாய் நீளுறது நமக்கில்லே…நம்ப பேரன்ட்ஸூக்கு…அவங்கதான் ஓயாம ஒழியாம அட்வைஸாக்
கொடுத்துத் தள்ளுறாங்க…வறுத்து எடுக்கிறாங்க…வீட்டுல நுழைஞ்சாலே ஒரே போதனைதான்….
ரமணி – நல்லது சொன்னா நமக்கெல்லாம் பிடிக்கல்லேல்ல? எது நல்லதுன்னு நம்ப பேரன்ட்ஸைத்
தவிர வேறே யார் சொல்வாங்க…? கண்ட கண்ட சினிமாவும், டி.வி.சீரியல்களும், மொபைல்ல வகை
தொகையில்லாம இன்டர்நெட் பார்க்கிறதும்தாண்டா நம்பளை இப்டி மாத்திப் பேச வச்சிருக்கு….முதல்ல
நம்ப எல்லார்கிட்டேயிருந்தும் செல்ஃபோனைப்ப் பிடுங்கணும்…அப்பத்தான் உருப்படும்…எங்கப்பாதான்
சொல்வாரு…படிக்கிற பசங்களுக்கு எதுக்கு ஃபோன்னு….!
சைலபதி – அதுலேர்ந்து நிறைய ஜெனரல் நாலெட்ஜூம் கிடைக்குதே…அதை மறுக்க முடியுமா….?
நம்ப பாடங்களுக்கே கூட எவ்வளவு உதவியா இருக்கு?
ரமணி – இருக்கலாம்…அதோட நிக்கிறதில்லையே நாம…! வீணாப் பொழுதைப் போக்குற படங்களையும்,
மனசைக் கெடுக்கிற விஷயங்களையும்தானே மொட்டை மாடிக்குப் போயி, தனியா உட்கார்ந்துகிட்டு கண் விழி பிதுங்கப் பார்த்திட்டிருக்கோம்….ஒருத்தருக்குத்
தெரியாம அல்லது தெரியக் கூடாதுன்னு ஒரு விஷயத்தை மறைச்சு செய்றோம்னா அப்பவே அதுல ஏதோ
தப்பு இருக்குன்னுதானே அர்த்தம்? செய்யக் கூடாததைச் செய்றோம்னு மனசு உறுத்த வேண்டாமா
…?
ரமணி – எங்கப்பா ஒண்ணு சொன்னாரு…….முதல்ல நாம அதையெல்லாம் விடணும்னு சொல்லுவேன்….கேட்பீங்களா…?
சதீஷ் – ப்ரதீப் – சைலபதி - (மூவரும் சேர்ந்து) கண்டிப்பா கேட்போம்…சொல்லு….
ரமணி – முதல்ல நாம பேசற பேச்சே அவங்களுக்குப் பிடிக்கல்லே…. இது என்னடா பாஷைன்னாரு
எங்கப்பா…? ஸ்கூல்ல ஒழுக்கமே கத்துக் கொடுக்கிறதில்லையாங்கிறாரு…!
சதீஷ் – பாஷைன்னா….? தமிழைத்தான் அப்டிச் சொல்றாரா….? இல்ல இங்கிலீஷையா?
ரமணி –….தமிழைக் கொலை பண்றதாச் சொல்லிச் சொல்றாரு…. நம்ப தமிழ் லாங்க்வேஜ்ல இருக்கிற
வார்த்தைகளையே வெவ்வேறு விதமான தப்பு அர்த்தங்கள்லயும், கேலியாவும், கிண்டலாவும் கொச்சையாப் பயன்படுத்துறதாச் சொல்றாரு…கேட்கவே அசிங்கமாயிருக்குன்னு
சங்கடப்படுறாரு….
சைலபதி
– என்னெல்லாண்டா அது……? வரிசையா அடுக்கு பார்ப்போம்….நான் அப்டியெல்லாம் நினைச்சுப்
பார்த்ததேயில்லை….எல்லாரும் பேசுறாங்க…நாமளும் பேசினா என்னன்னுதான் பேசிட்டிருக்கேன்…
எல்லார்ட்டையும் அந்த மாதிரிதான் பரவிக் கிடக்கு ….அப்டிப் பேசுறது என்னவோ ஒரு பெருமை
போல….பேசத் தெரிலன்னா கிண்டலடிக்கிறானுங்களே…? ஃப்ரென்ட்ஸாவே ஏத்துக்க மாட்டேங்கிறாங்களே?
ரமணி – அந்த மாதிரி ஃப்ரென்ட்ஸ் தேவையில்லைன்னு ஒதுங்கிப் போக வேண்டிதான்…
ப்ரதீப்
– அந்த வார்த்தைகளை நான் சொல்றேன்…சரியா பாருங்க….அறுவை… பிளேடுபோடாத…. கடலைபோடாத….ஜல்லியடிக்காத…மொக்கை….பெரிசு….ஜவ்வு…..சிப்சு….பிசாத்து…கேவலமாயிருக்கு…மச்சி,மாப்ள…தல…தலைவா…பாஸ்ஸூ…பருப்பு….இப்டி
இன்னும் நிறையச் சொன்னாரு….!- …இதெல்லாம் காலித்தனமான
பாஷைன்னு திட்டுறாரு….ஒழுக்கமுள்ள பையன் …நீ பேசாதேன்னாரு…நாம கூடப் படிக்கிற லேடீசோட நீ. வா, போ… வாடா…போடான்னு பேசிக்கிறோம்…அவங்களும்
கூட நம்பளை அப்டிப் பேசுறாங்கதானே…அதெல்லாமும் அவங்களுக்குத் தப்புதான்….ஒழுக்கத்தைச்
சிதைக்கிற மொழிப் பயன்பாடுன்னு அதிரடியா ஒரு போடு போட்டாரு…அசந்திட்டேன்…
சைலபதி
–தலையாட்டிட்டே உட்கார்ந்திருந்தியாக்கும்…? …
ப்ரதீப் – வேறென்ன பண்றது? சட்டை மேல் பட்டனைத்
திறந்து விட்டா எங்கப்பாவுக்குப் பிடிக்காதுடா… … ரௌடிங்கதான் அப்டியெல்லாம் இருப்பாங்கம்பாரு….
சரிய்யா சட்டையை இன் பண்ணு..…பெல்ட்டை நல்லாச் செருகு…… …டிரஸ் பண்ணினா ஒரு டீசன்ஸி இருக்கணும்..தலைக்கு எண்ணெய் தேய்ச்சு வகிடெடுத்துப்
படிய வாருன்னுவாரு…முடியச் சுருட்டிவிட்டா பிடிக்காது…அதுவா வந்து நெத்தில விழுந்தாக்கூட
ஏத்தி விடுன்னுவாரு……பயங்கர டார்ச்சராயிருக்கும்…
ரமணி – அது டார்ச்சரா உனக்கு? ….நாம அதை மதிக்கணும்டா…! வேறே யாரு நம்ம மேலே அவ்வளவு
அக்கறையா இருப்பாங்க? உறவுக்காரங்க வீடுகளுக்குப் போய்ப் பாரு…கேலிதான் பண்ணுவாங்க…ரகசியமாச்
சிரிப்பாங்க…….நமக்கு அது நச்சரிப்பாத் தெரியுது…பெரியவனாகும்போது நாமளும் அதை உணருவோம்…அதை
இப்பயே உணர்ந்திட்டுப் போறது…எங்கப்பா சூப்பரா ஒண்ணு சொன்னாருடா…. …பள்ளிக்கூடம், கல்வி
அறிவைத்தான் கொடுக்கும்… ஆனா வீட்டுல சொல்லிக் கொடுக்கிறதுதான் உலக அறிவை வளர்க்கும். வாழ்க்கைக்கு உதவும்…
சமூகப் பழக்க வழக்கங்கள்தான் உலக ஞானத்தை ஏற்படுத்தும்… மனுஷனாக்கும்ன்னு அழகாச் சொல்வாருடா….
சதீஷ் – சரி போதும்…லெக்சர் அடிக்காத …எனக்கு அலுப்பா இருக்கு…நாளைக்குப் பார்க்கலாம்…..
சைலபதி – அதுக்குள்ளயும் அலுத்திடுச்சா…? இதையெல்லாம் ஒரு பத்து நிமிஷம் நினைச்சுப் பார்த்ததுக்கே டயர்டா
ஆயிட்டமே…நம்பளப் பத்தியே சதா நினைச்சிட்டிருக்கிற அவுங்களுக்கு எப்டியிருக்கும் மனசு?
ப்ரதீப் – ஆல்ரைட்….ப்ளீஸ் ரிலாக்ஸ்…..பி…ஃப்ரீ….
ரமணி – போற வழிதானடா…எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒரு விசிட் கொடுங்க…எங்கம்மா வெஜிடபிள் ஸூப் பண்ணியிருப்பாங்க இன்னிக்கு…
சதீஷ் – ப்ரதீப் – சைலபதி
– ஓ.கே….ஷ்யூர்….வாங்கடா போவோம்…..
காட்சி – 3 ( இடம் – வீடு) மாந்தர் – ரமணி, சதீஷ், ப்ரதீப், சைலபதி மற்றும் ரமணியின்
அப்பா ராஜேஷ்வர், அம்மா கங்கா)
ராஜேஷ்வர் – அடடே….என்ன ஒரே அதிசயமாயிருக்கு இன்னிக்கு…எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க…?
ரமணி, சதீஷ், ப்ரதீப்,
சைலபதி - சும்மாத்தான்
அங்கிள் …ரமணிதான் கூப்டான்… ஸூப் சாப்பிடலாம்னு…
ராஜேஷ்வர் – அதுக்கென்ன…சாப்டாப் போச்சு….கங்கா…பசங்களுக்கு ஸூப் கொண்டு வா….
கங்கா – (அடுப்படியிலிருந்து வெளிப்பட்டு) தலையை எண்ணுகிறாள்.
ரமணி, சதீஷ், ப்ரதீப்,
சைலபதி - குட் மார்னிங்
ஆன்ட்டீ…. (பதிலுக்கு வணக்கம் சொல்கிறாள்)
ப்ரதீப் – அங்கிள்…உங்களை ஒண்ணு கேட்கலாமா…? கோவிக்க மாட்டீங்களே…?
ராஜேஷ்வர் – எதுக்குக் கோவிக்கணும்? தாராளமாக் கேளு…..
ப்ரதீப் – இல்ல அங்கிள்…இது ரொம்ப சீரியஸ்…..
ராஜேஷ்வர் – என்னப்பா… பீடிகை போடுற…? என்னதான் உன் கேள்வி….?
ப்ரதீப் - நீங்க ரமணிக்கு நிறைய அட்வைஸ் கொடுப்பீங்களாமே…சட்டை பேண்டை உறாங்கர்ல மாட்டு,
வீசி எறியாதே…புத்தகங்களை அடுக்கி வை…..ஃபேனை வெட்டிக்கு ஓட விடாதே…குழாயை நல்லா மூடு…..ஆளில்லாத
இடத்துல லைட்டை அணை… படிக்கும்போது டி.வி. பார்க்காதே… சாயங்காலம் கால் கை கழுவி, தலை சீவி, விபூதியிட்டு, சாமி கும்பிட்டு
படிக்க உட்காரு…படிச்சதை எழுதிப் பாரு…படுக்கிறதுக்கு முன்னாடி கண்ணை மூடி ரெண்டு நிமிஷம்
தியானம் பண்ணு. …ஏன் அங்கிள்…மூட்டை மூட்டையா இப்டி அட்வைசாக் கொடுத்துத் தள்ளுறீங்க….?
நாங்களாத் தெரிஞ்சிக்க மாட்டமா?
ரமணி – (அப்பாவிடம் இவ்வளவு தைரியமாய்ப் பேசி விட்டானே என்று ரகசியமாய் இடிக்கிறான்
ரமணி…) .சும்மார்றா…டேய்….இன்னைக்குச் செத்தன் நானு…நீங்கள்லாம் போனப்புறம் கைமா பண்ணிடுவாரு
….ஏண்டா இதெல்லாம் சொன்னேன்னு…
ராஜேஷ்வர் – (பெரிதாகச் சிரித்துக் கொண்டே) நீ இப்டி வெளிப்படையாக் கேட்டதுதான் சூப்பர்…ஒண்ணுவிடாம
அடுக்கிட்டியே…ஃபைன்…! நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு வேண்டாததா, கேலியா, கோபமாக் கூட
இருக்கலாம். தொல்லையாத் தெரியலாம். ஆனா படிச்சு
முடிச்சு ஒரு நல்ல வேலைல போய் உட்கார்ற போது அந்த வேலையைக் கவனமா கருத்தா செய்யறதுக்கும்,
மற்றவங்களைவிடச் சிறப்பா, விரைவா செய்து முடிக்கிறதுக்கும், உயரதிகாரிகள்ட நல்ல பேர்
வாங்குறதுக்கும் இது ரொம்ப உதவும். அதுக்கான நிதானத்தைக் கொடுக்கும். பதட்டப்படாம,
யோசிச்சு, பெர்ஃபெக்டா செய்ற கேப்பபிலிட்டியை வளர்க்கும். அதுக்கான அடிப்படைப் பயிற்சிகள்தான்
இதெல்லாம். பிற்காலத்துல நீங்க பார்க்கப்போற வேலைகளுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாததா
இப்போ இது தோணலாம்…ஆனா அந்த வேலைகளைப் பொறுப்பாச் செய்றதுக்கு இதெல்லாம் அடிப்படை ஒழுக்கங்கள்,
கட்டுப்பாடுகள்……இந்த வயசுல இதுக்கெல்லாம் வளைஞ்சாத்தான்…நாளைக்கு எல்லா நல்லதும் உங்களுக்கு
விளையும்….புத்திசாலிப் பையன்களான நீங்க இதைப் புரிஞ்சு ஃ.பாலோப் பண்ணத்தான் வேணும்….
இதோட அவசியம் பெரியவங்களான எங்களுக்கு மட்டும்தான் தெரியும்…ஏன்னா அனுபவப்பட்டவங்க
நாங்க…அதை உங்களுக்குப் புகட்டி, எதிர்காலத்துல ஒரு சிறந்த பிரஜையா உங்களைத் உருவாக்குறது
எங்களோட அத்யந்தக் கடமை….அதைத்தான் சலிப்பில்லாம எல்லாப் பெற்றோர்களும் செய்திட்டிருக்கோம்….எங்க
வயசையும் மீறி .உங்க கேலிகள், கிண்டல்களையெல்லாம் பொருட்படுத்தாம…!?
என்ன பேசுவது என்று தெரியாமல், வாய் பிளந்து எல்லோரும் ராஜேஷ்வரையே பார்த்துக்
கொண்டிருந்தனர்…. உடம்பு வியர்த்து விட்டிருந்தது அவர்களுக்கு…! இன்னொரு முறை கொஞ்சம்
சொல்லுங்களேன் அங்கிள்..திரும்ப மனசுல வாங்கிக்கிறேன்……நாக்கு நுனி வரை வந்ததைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் சதீஷ்…. வரிசையாக நினைத்துப்
பார்க்க முற்பட்டான்.! “இதுக்குப் பேர்தாண்டா குருகுலம்…” முனகினான் சைலபதி. புத்தருக்கு
ஞானம் பிறந்த மாதிரி.நம்பளுக்கு… ப்ரதீப் ஆமோதித்தான். ரமணியின் அம்மா வந்து வரிசையாக
ஸூப்பைக் கொடுத்தபோது, அன்று புரிந்து தெளிந்த அத்தனை நல்லவைகளையும் சேர்த்தே ருசியாய்
உறிஞ்சினார்கள்.
அவர்களுக்குள் ஒரு
புதிய மாற்றத்தை உணர்ந்தார்கள் அனைவரும்.
(திரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக