“நிலா டீம்…” *********************
பகுதி - அரங்கம் காட்சி – 1
இடம் - பள்ளிக்கூடம் மாந்தர்
– வகுப்பாசிரியர் ரங்கராஜ், மாணவர்கள் – சதீஷ் மற்றும் சுரேஷ்.
ஆசிரியர் ரங்கராஜ் – சதீஷ், சுரேஷ்….நீங்க ரெண்டு பேரும் இப்போ விளையாட்டு வகுப்புக்குப் போக
வேண்டாம். நான் பி.டி. சார்ட்டச் சொல்லிக்கிறேன்….நீங்க என்ன செய்றீங்க….. இந்தக் கரும்பலகையைத்
துடைச்சு பளிச்சினு வைக்கணும்… இந்த அறிவிப்புத் தாள்களையெல்லாம் கிழிச்சு சுவத்தைத்
துடைச்சு நீட் பண்றீங்க…..ஓ.கேயா…? செய்வீங்களா….?
சதீஷ்….சுரேஷ் –செய்றோம் சார்….
ரங்கராஜ் – இனிமே ஒவ்வொரு விளையாட்டுப் பீரியடுக்கும் ரெண்டு ரெண்டு பேர்….வாரா
வாரம்…நம்ம வகுப்பை சுத்தம் பண்ணனும்….
- சொல்லிவிட்டு தலைமையாசிரியர் அறையை நோக்கி நடக்கிறார் ரங்கராஜ்.
-
- காட்சி – 2 – மாந்தர் - சதீஷ் மற்றும் சுரேஷ்
சதீஷ் – என்னடா சுரேஷ்…..இப்டி மாட்டி விட்டுட்டாரு….?
சுரேஷ் – ஆமாடா… விளையாடப் போகலாம்னு ஆசையா
இருந்தேன். இன்னைக்கு கபடி டீம் ஃபார்ம் பண்றதா பொம்மையன் மாஸ்டர் சொல்லியிருக்காரு…..அதுல
சேர முடியாதோ…?
சதீஷ் – அதான் நான் சொல்லிடறேன்னு சொல்லிட்டாருல்ல…
சுரேஷ் – பி.டி. மாஸ்டர் நம்பள விட்டுட்டு
டீம் ஃபார்ம் பண்ணிட்டாருன்னா……?
சதீஷ் – ஆமா…இப்ப என்னடா பண்றது….ரங்கராஜ்
சார்ட்டப் போய் சொல்வமா?
சுரேஷ் – அப்பயே சொல்லியிருக்கணும்…..சொன்ன
வேலையை உடனே செய்யலேன்னா…. கோபம் வரும் அவருக்கு….
சுரேஷ் – ஆமாமா….நல்ல வேளை சொன்னே…..எனக்கு
மனசு பூராவும்….கபடில இருக்குடா….புரோ கபடி…..தமிழ் தலைவாஸ்-உறரியானா ஆட்டத்துக்கு
இன்னைக்குப் படம் போட்டிருக்காம் பாரு….பேப்பர்ல….சூப்பராயிருக்கு…. நம்ம ஸ்கூல்ல டீம்
மட்டும் ஃபார்ம் ஆகட்டும்….அப்புறம் பாரு என் விளையாட்ட……! ….நம்ம கிளாஸ்தான் ஜெயிக்கும்….!!
இருவரும் தீவிரமாய் ஆசிரியர் இட்ட பணியைச் செய்தார்கள்.
காட்சி 3
இடம் - சுரேஷின் வீடு…..மாந்தர் – சுரேஷின் அம்மா மரகதம்மாள், அப்பா – விநாயகம் மற்றும் சுரேஷ்
மரகதம் – ஏண்டா கண்ணு….சோர்வா இருக்கே…..உடம்புக்கு
என்ன…?-சொல்லிக்கொண்டே வந்து கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள் மரகதம்.
சுரேஷ் அப்படியே அம்மா மேல் சாய்ந்து கொள்கிறான். மனசு பூராவும் கபடியில் இருந்தது.
நானும்….உன்
டீம்லயே சேர்ந்துக்கிறேண்டா….பி.டி. சார் கேட்டார்னா என் பெயரைச் சொல்லிடு…மறந்திடாதே…(மனதுக்குள்
நினைத்துக் கொள்கிறான்)
……….சதீஷையும்
சேர்த்து ஒரு நல்ல விளையாட்டுக்காரனாக்க வேண்டும். பொம்மையன் சாருக்கு….அக்கறையாய்
விளையாடுபவர்களைக் கண்டால் பிடிக்கும். நான்தான் தலைமை….எனக்குக் கீழதான் டீம்… “நிலா டீம்…”….-
மரகதம் - என்னடா சொல்றே……நிலா டீமா….அப்டின்னா….?
– தன்னை மறந்து உற்சாகத்தில் கூறியதை அம்மா பிடித்துக் கொண்டதைக் கண்டு நாக்கைக் கடித்துக்
கொண்டான். சுரேஷ்.
சுரேஷ் - அப்டீன்னா …. கபடி டீம்…
மரகதம் – சதீஷூம் இருக்கான்ல…அவனையும் சேர்த்துக்கோ…நல்ல
பையனாக்கும்…..
….சுரேஷ் – அவனில்லாமயா…..கண்டிப்பா என் ஃப்ரெண்டும்
உண்டும்மா…..
விநாயகம் – நல்லா விளையாடவும் செய்யணும்….அது
போல நல்லாப் படிக்கவும் செய்யணும்….புரியுதா….? படிப்பைக் கோட்டை விட்டுடக் கூடாது…..இது
உடம்புக்கு….அது அறிவுக்கு…..புரியுதா…?
சுரேஷ் – சரிப்பா……சொல்லிக் கொண்டே கபடிக்
கபடிக் கபடிக் கபடி…..என்று ராகமிட்டுக்கொண்டே
பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கக் கிளம்பினான் சுரேஷ்……விளையாட்டில்
அவனுக்கிருக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள் பெற்றோர்
இருவரும். வாசலில் சத்தம்.
ரங்கராஜ் – என்ன விநாயகம் சார்…உம்ம பையனை நம்ம
ஸ்கூல் கபடி டீம்ல போட்டிருக்கேன்….அவந்தான் டீம் லீடர்…….சம்மதம்தானா…இல்ல ஆட்சேபணை
ஏதும் உண்டா….?
விநாயகம் –
குரு….. நீங்க சொன்னா அதுக்கு அப்பீல் ஏது? பையனையே உங்ககிட்டே ஒப்படைச்சாச்சே…..!
சத்தம் கேட்டு…..சார்….சார்…..நிலா டீம்னு
பேரு வைக்கலாம் சார்…..-சொல்லிக்கொண்டே வாசலுக்கு ஓடுகிறான் சுரேஷ்.
மரகதம்மாள் – அப்டியே இவனோட படிக்கிற
சதீஷையும் சேர்த்துக்குங்கோ….
ரங்கராஜ் – ரெண்டு பசங்களும்தான்….அவங்களப்
பிரிக்க முடியுமா…?
சொல்லிக் கொண்டே கடந்த அவரைப் பார்த்தவாறே
நிற்கிறார்கள் மூவரும். சுரேஷின் வாய் கபடிக் கபடிக் கபடிக் கபடி…… !!!!!
----------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக