13 அக்டோபர் 2018


சிறுகதை                                                                      “கொக்கி”         
       -------------------------------------

       விஜயாதான் இவனை வளைத்துப் போட்டாள். இவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. பாடத்துல கொஞ்சம் சந்தேகம்…நாகுட்டக் கேட்டுக்கட்டுமா? என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறாள்.
நாகராஜன் என்ற என் பெயரை எல்லோரும் அப்படித்தான் சுருக்கிக் கூப்பிடுவார்கள். நாகு, நாகு என்று அழைப்பது எனக்குப் பிடிப்பதில்லைதான். இனி நானே நினைத்தாலும் மாற்ற முடியாத அளவுக்கு அந்தப் பெயர் பழகி நிலைத்து விட்டது. நாகராஜன் வேண்டாம் நாகராஜ் என்று அழைத்திருக்கலாமே? அதில் ஒரு கம்பீரம் இருப்பதைப் பாருங்கள். அதெல்லாம் இந்தப் பழம் பெருச்சாளிகளுக்கு எங்கே தெரியப் போகிறது. நாகு…பீகு என்று என்னத்தையோ கூப்பிட்டார்கள். தெருவில். இளம் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் முதற்கொண்டு எல்லாரிடமும் நிலைத்து விட்டது இந்த அசட்டு அழைப்பு.  இந்த எரிச்சலினால் பல சமயங்களில் காதில் விழாதது போல் கூட நான் இருந்திருக்கிறேன். அம்மாவிடம் மனம் விட்டுச் சொல்லியிருக்கிறேன்.
எதுக்கும்மா இப்படி நாகு நாகுன்னு கூப்பிட்டுப் பழக்கினீங்க…? சுந்தரம்னா சுந்து சுந்துன்னு கூப்பிடுறீங்க…சேகர்ன்னா சேகு சேகுங்கிறீங்க…ரமேஷ்னா மட்டும் ரமேஷ்…டேய் ரமேஷ்னு எவ்வளவு அழுத்தம் திருத்தமாக் கூப்பிடறீங்க…அந்தப் பெயரை உங்களால சுருக்க முடிஞ்சிதா…அது போல ஒரு பெயரை வச்சிருக்க வேண்டிதானே? சே! நாகுவாம் நாகு…இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் என்னை நாகு…பேகு…பேக்குன்னு கூப்பிடப் போறாங்க…அப்புறம் நீங்களே வருத்தப் படப் போறீங்க …
உங்க தாத்தாவுக்குத் தாத்தா பேருடா அது…கொள்ளுத் தாத்தா பேராக்கும்…
கொள்ளுத் தாத்தாவோ எள்ளுத் தாத்தாவோ…எனக்குப் பிடிக்கலே…
விஜயாவுக்குப் பிடித்திருந்தது என் பெயர். இல்லையென்றால் நாகுட்ட ஒண்ணு கேட்கணும்…நாகுட்ட ஒரு சந்தேகம்…என்று அடிக்கடி ஓடி வருவாளா? அவளுக்குப் பெயர் பிடித்திருந்ததா அல்லது என்னையா?
 அம்மா சரி என்று விஜயாவுக்குச் சொல்லிவிட அவள் கடைக்குப் போன நேரம் பார்த்து வந்தாள் அன்று.  அங்கேதான் அவளுக்கு உள் நோக்கம் இருந்திருக்கிறது. உண்மையில் பாடத்தில் சந்தேகம்தான். ஆனால் மனதுக்குள் வேறு ஒன்றும் இருந்திருக்கிறது அவளுக்கு. நான் தனியே இருப்பேன் என்றுதான் வந்தாள். என்னிடம் தனிமையில் அவளின் சுதந்திரம் எப்போதும் அதீதம்தான்.  உறாலில் உட்காருவதை விட ஏதேனும் அறைக்குள் சென்றால் தேவலாம் என்று அவளுக்குள் தோன்றியிருக்க வேண்டும். உன் கணக்கு நோட்டு எங்கே? என்றாள். என் புத்தக ஷெல்ப் கூடத்தின் ஓரமாய் இருக்கும் அறையில்தான் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும். அப்படிக் கேட்டால்தான் நான் அந்த அறைக்குள் போவேன். அவளும் வரலாம். அப்படித் தனிமையை வலிய இழுத்துப் பிடிக்கும் தைரியம் எல்லோருக்கும் வருமா என்ன? நேரம் வீணாகக் கூடாது என்பதில்தான் என்ன ஒரு கவனமும் அவசரமும்! அவள் கண்கள்தான் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடுகிறதே! 
     
எத்தனையோ முறை அவள் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். என் அம்மாவிடம் ஏதாச்சும் நச்சு நச்சென்று பேசிக் கொண்டிருப்பாள். அவள் தோசை வார்த்துக் கொண்டிருந்தால் உதவி செய்வாள். அந்த நேரம் அம்மா டிபனுக்குக் கூப்பிட்டால் அவள்தான் எனக்கு தட்டு எடுத்து வைத்துப் பறிமாறுவாள். இன்னொன்ணு போட்டுக்கோ என்று ஏதோ இவள் வீடு மாதிரி தாராளமாக அவள் என் தட்டில் தோசையை வைப்பதைப் பார்த்து அம்மா சிரித்துக் கொள்வாள். அம்மாவுக்கு எதுவுமே வித்தியாசமாக மனதில் தோன்றாதோ என்றிருந்தது எனக்கு. அதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் விஜயா. அம்மா பாவம். விகல்பமில்லாதவள். சே! அவளை ஏமாற்றக் கூடாது. அப்படிச் செய்தால் அது பாவம் என்று எனக்குத் தோன்றும். ஆனால் அம்மாவின் அந்த இருப்புதான் விஜயாவுக்கு சாதகமாக இருந்தது.
அவள் சமைத்துக் கொண்டிருந்தால் காய்களை நறுக்கிக் கொடுப்பாள். கிணற்றடியில் துவைத்துக் கொண்டிருந்தால் தண்ணீர் இறைத்து விடுவாள். ஒன்றுமே இல்லாவிட்டால் அம்மா கொல்லைப் புறம் இருக்கும் நேரம், அவள் பார்க்க பூச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றுவாள். ஏதோ சகஜமா இருக்கா என்று அம்மா விட்டிருக்கலாம். ஆனால் அவளின் எல்லா செய்கைகளுக்கும் நடு நடுவே என் மீதான பார்வை ஒன்று எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
அந்த நீண்ட வீட்டை அம்மா பெருக்கும்போது எத்தனை முறை வலியப் பிடுங்கியிருக்கிறாள் தெரியுமா? இதெல்லாம் உனக்கு எதுக்கு? என்றால் அவள் கேட்டால்தானே? பெருக்கிக் கொண்டே அப்படியே உள்ளே படித்துக் கொண்டிருக்கும் என் அறைக்கு அவள் வரலாம்தானே!
      இது எப்படி உனக்குத் தெரிந்தது என்று கேட்கலாம். என்னவோ மாறுபாடாய் ஒரு முறை அவள் பார்வையை நான் உணர, ஆரம்பத்திலேயே நோட்டமிட ஆரம்பித்து விட்டேன் நான். . அவளும் அதை உணர்ந்து உஷாராகிக் கொண்டாள்.
      முதல் முதலாக அவள் கை பட்டு நான் வித்தியாசமாய் உணர்ந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  இந்த லைனைப் படி என்று நான் குறிப்பிட்டு ஒரு வரியைக் காண்பிக்க, இதுவா இல்ல இதுவா என்று அவள் கணமும் தாமதிக்காமல் புத்தகத்தின் மேலிருந்த என் கை மேல் தன் கையை வைத்து தெரியாததுபோல் கேட்ட போது என் முகம் மாறுவதைக் கண்டு கெட்டியாக என் கைகளை அவள் பிடித்துக் கொண்டாள்.
ஏன்? என்னாச்சு…! ஒண்ணுமில்ல…எதுக்கு இப்படி உன் கை நடுங்குறது? ஏ…னாம்?
அப்படியே என் கையை இழுத்து அவள் தன் மார்பில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டபோது அந்த நடுக்கம் படிப்படியாகக் குறைந்து வேறு எதையோ உணர ஆரம்பித்தேன் நான்.  
அந்த இடத்தின் மென்மையையும், குளிர்ச்சியையும், விட்டு அகல மனமில்லாமல் என்னவோ ஒரு புத்துணர்ச்சியில் அப்படியே நின்றேன். அவள் நெஞ்சு ஏனிப்படிப் படபடவென்று அடித்துக் கொள்கிறது? எதைக் கண்டு பயப்படுகிறாள் அவள்? என்னாயிற்று அவளுக்கு? என் நடுக்கத்தைக் குறைத்துவிட்டு இப்போது அவள் ஏன் இப்படிப் படபடக்கிறாள்?
      வாசலில் வேலைக்காரி தங்கத்தின் குரல் கேட்டு, ”அம்மா கடைக்குப் போயிருக்காங்க..”என்று நானே அறையிலிருந்து குரல் கொடுக்க அன்று நான் தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.
உள்ளே வரச்சொல்லாமல் உறாலுக்குள் யாரும் நுழைய மாட்டார்கள் என்பதால் தங்கம் அன்று எங்கள் இருவரின் தனிமையைக் கண்டு பிடித்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் அன்று தங்கம் தேடி வந்தது விஜயாவைத்தான் என்பது கொஞ்சம் கழித்து எனக்குத் தெரிய வந்த போது, அவள் இங்குதான் வந்திருக்கிறாள் என்று தெரிந்துதான் எங்கள் வீட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்பது உறுதியானது எனக்கு. பின் ஏன் அவள் அம்மாவைப் பற்றிக் கூறியதும் பேசாமல் புறப்பட்டுப் போக வேண்டும். வந்தவள் விஜயா என்றுதானே சத்தம் கொடுத்திருக்க வேண்டும். எங்கள் அறையில் எரிந்த விளக்கு வெளிச்சத்தின் கதவு அளவிலான பகுதிக்குரிய  வெளிச்சம் உறாலில் வலது சாய்வாக விழுமிடத்தில் நானும் விஜயாவும் நெருங்கி நின்று கொண்டிருந்த நிழலை அவள் கண்டிருப்பாளோ?
      அடிப்பாவீ!, தங்கம் இப்பொழுதுதான் படியிறங்கிப் போகிறாள். அதற்குள் இவள் ஓடுகிறாளே? இவளே காட்டிக் கொடுத்து விடுவாள் போலிருக்கிறதே! தெரிந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டாளோ? படு துணிச்சல்காரியப்பா!
      என் மன ஒருமைப்பாடு அவளால்தான் சிதறிப் போனது. நெஞ்சில் பட்ட அந்தக் கையை மீண்டும் அங்கே வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனம் அவாவியது. சதைப் பிடிப்பான அவள் கையில் சதைக்குள் பதிந்திருக்கும் விரல் நகங்கள் என் மனக்கண்ணில் ஆடின. ஒரு பெண்ணின் ஸ்பரிசத்திற்கு இவ்வளவு சக்தியா?

அன்புள்ள நாகுவுக்கு,
சரிதா எழுதிக் கொள்வது. நீ நன்றாகப் படித்து வருவாய் என்று நினைக்கிறேன். உன் அப்பா உன்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து வருகிறார். நீ வேலைக்குப் போனால்தான் உங்கள் குடும்பம் கஷ்டத்திலிருந்து விடியும். என் அப்பாவும் உன் அப்பாவும் சேர்ந்து உணவகம், , ஸ்வீட் ஸ்டால், விறகுக் கடை, கரிக்கடை, ஜவுளிக்கடை என்று என்னென்னவோ வியாபாரமெல்லாம் நடத்திப் பார்த்து எல்லாமும் நஷ்டத்திலேயே விடிந்ததில் பிரிந்து போனவர்கள் என்பதை நீ அறிவாய். உன் குடும்பமும், எங்கள் குடும்பமும் நம் குடும்பம் என்னும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள். நமக்குள் வித்தியாசம் என்பது கிடையவே கிடையாது. அப்படியான நெருக்கத்தில்தான் என்னை உனக்கே தருவது என்று  நமது சிறு பிராயம் முதல் அவர்கள் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்று உனக்குத் தோன்றலாம். நான் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் படிப்பு முடிந்து விட்டதை நீ அறிவாய். அதற்கு மேல் வீட்டில் வசதியில்லை என்பதை நீ அறிவாய். நம் குடும்பங்கள் இரண்டும் செழிப்பாக இருந்த காலத்தில் நம் அப்பாக்கள் அன்றே முடி போட்டு விட்டார்கள் நமக்கு. எனவே என்னை நீ மறந்து விடாதே. இன்னும் கல்லூரிப் படிப்பு உள்ளதே என்று நீ கேட்பது எனக்குத் தெரிகிறது. பிஞ்சில் பழுத்த பழம்போல் இப்படி எழுதுகிறாளே என்று கூட உனக்குத் தோன்றலாம். இந்தக் கடிதங்கள் மூலமாக நமது அன்பினை நான் புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவே!                                                                                                                                                                      அன்புடன்,                                                                                      என்றும் உனது                                                                                          சரிதா

      இதுநாள் வரை கிடைக்காமல் இப்போது வந்து என் படிப்பைக் கெடுக்கிறாளே என்று இருந்தது. இப்போது நான் ப்ளஸ் டூ.  எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. விஜயாவின் நினைவாகவே இருந்தது. எங்கே என் அம்மாவுடன் எங்கள் வீட்டில் படுத்துக் கொள்கிறேன் என்று வந்துவிடுவாளோ என பயமாக இருந்தது எனக்கு. அப்படி வந்தாலும் வந்ததுதான். நடக்காது என்றும் சொல்ல முடியாது.
என் அம்மாவும், அவள் அம்மாவும் அத்தனை நெருங்கின சிநேகிதிகள். ஒவ்வொருவரும் அன்றாடம் அவரவர் வீட்டில் செய்த சமையல் வகைகளைச் சொல்லிச் சொல்லி மாற்றிக் கொள்வார்கள். விஜயாவின் அம்மா வந்து ஒரு கரண்டி காபிப் பொடி என்று கடன் கேட்டால் என் அம்மா அங்கே போய் ஒரு கரண்டி பருப்பு என்று வாங்கி வருவாள். ஒருவருக்கொருவர் கொடுத்ததை, வாங்கியதைத் திருப்பித் தந்து கொள்வார்களோ மாட்டார்களோ? நடுக்கூடத்தில் உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதைகளையெல்லாம் அவ்வளவு பேசுவார்கள். மணிக் கணக்காகப் போய்க் கொண்டிருக்கும் அவர்களின் பேச்சு.
      காலையில் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு நான் மாடிக்குப் போனேன். எங்கள் தெருவில் மொட்டை மாடியில் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு தாண்டித் தாண்டி சென்று விடலாம். இரண்டு வீடுகளுக்குப் பொதுவாக ஒரு சுவர்தான் இருக்கும். எனவே ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் இடைவெளி என்பதே கிடையாது.
      இதனால்தான் திருடர்கள் சர்வ சாதாரணமாய் வந்து திருடிக் கொண்டு மாடி வழி தப்பித்துச் சென்று விடுகிறார்கள் என்ற பேச்சிருந்தது எங்கள் தெருவில். மாடி வழி தப்பி, பஜாரில் போய் கூட இறங்கி விடலாம் என்றார்கள். ராத்திரி குரூப் குரூப்பாகப் பாரா போட்டார்கள். ராத்திரி ஒரு மணிவரை ஒரு செட். பின்பு வேறொரு செட் என்று கையில் தடி கம்புகளோடு அலைந்தார்கள்.
      உலகில் பல வகையான திருடர்கள். பொருளைத் திருடுபவர்கள். மனதைத் திருடுபவர்கள். வெறும் உடம்பைத் திருடுபவர்கள் என்று.
      உடம்பைத் திருடுபவர்களா? அதெப்படி உனக்குத் தெரியும்? என்று கேட்பது புரிகிறது எனக்கு. எங்கள் தெருக் கோவிலில் வைத்து அதெல்லாமும் நடக்கிறது என்கிற செய்தி என் நண்பர்கள் மூலமாக வந்தது எனக்கு. பிராகாரத்தைச் சுற்றி வருகையில் இருட்டுப் பகுதியில் மாமாக்கள் பிற மாமிகளோடு அந்த வேலையைச் செய்கிறார்கள் என்று தெரிந்தது. வாழ்க்கையில் எல்லாரும் ஏதேனும் ஒரு தப்பை அந்தந்தக் கால கட்டங்களில் செய்து கொண்டேயிருப்பார்களோ? எல்லாருக்கும் காமம் என்பது கூடவே வந்து கொண்டிருக்கிறதோ? என்னென்னவோ நினைத்துப் பார்க்கக் கற்றுக் கொண்டிருந்தேன் நான். பள்ளிப் படிப்போடு உள்ளுர் வாசக சாலை படிப்பு அனுபவமும் எனக்கு இப்படியெல்லாம் நினைக்கக் கற்றுக் கொடுத்திருந்தன.
      அன்று நான் மாடிக்குப் போனபோது அப்படியே தாண்டிச் சென்று விஜயா அவள் வீட்டின் கொல்லைப் புறத்தில் தென்படுகிறாளா பார்க்கலாமே என்று தோன்றியது எனக்கு. இது வேண்டாத வேலைதான். இந்த மாதிரி ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்ததற்கு அவளே பொறுப்பு. உன்னை யார் அங்கே போகச் சொன்னார்கள்? நீயாக அடக்கிக் கொண்டு இருந்து கொள்ள வேண்டியதுதானே? என்று கேட்பது தெரிகிறது. என்னவோ தெரியவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்று ஒரு அரிப்பு. இதுநாள் வரையில் மாடிப் பகுதியில் நான் இப்படியெல்லாம் தாண்டும் வேலைகளைச் செய்ததில்லை. என் வீட்டுப் பகுதி உண்டு நான் உண்டு அவ்வளவுதான். இப்பொழுதுதான் முதன் முதலாய்த் தாண்டுகிறேன். எதைத் தாண்டுகிறேன். என் மனது இந்தக் கேள்வியைக் கேட்கத்தான் செய்கிறது.
     
அடச்சே! என்று என் தலையைத் திருப்பிக் கொள்ளப் பார்த்தவன் என்னையறியாமல் என் பார்வையை மீண்டும் அங்கே செலுத்தினேன். இரு கைகளாலும் விரித்துப் பிடித்த பாவாடையைத் தூக்கிக் கொண்டு கொல்லைப் புற மடைப் பகுதியில் அவள் அமர, அந்த நேரம் பார்த்து கரெக்டாக நான் எட்டிப் பார்க்க, அவள் திரும்பிப் பார்த்துவிட்டால் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பாள்? பார்க்கவில்லையே…பார்த்தால்தானே…. மெல்ல அப்படியே குனிந்து என் உயரத்தைக் குறைத்துக் கொண்டு என்னை மறைக்க முயன்றேன். சட்டென்று எழுந்த அவள் வீட்டுக்குள் திரும்ப முயன்றபோது என்னைக் கவனித்து விட்டது போல்தான் தோன்றியது. எழுந்து நான்தான் என்று என்னை முழுதுமாகக் காண்பிக்க எனக்குத் தெம்பில்லை.
      விடுவிடுவென்று என் வீட்டுப் பகுதிக்கு வந்து புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். வாய்தான் வரிகளை முனகியதே தவிர என் கவனம் முழுவதும் நான் பார்த்த காட்சியிலேயே இருந்தது. கொஞ்சங் கொஞ்சமாக நான் எதுவாகவோ ஆகிக் கொண்டிருக்கிறேனோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது எனக்கு.
      சற்று நேரத்தில் ஒரு கை என் பின்புறமாக இருந்து  என் கண்களை மூடியது. அதன் ஜிலுஜிலுப்பு என்னை அதை எடுக்காதே என்றது. ஒருசில கணங்களில் அது நிச்சயமாக விஜயாவாகத்தான் இருக்க வேண்டும் என்று மனது சொல்லிவிட்டது.
      ”இங்க வேண்டாம்…அப்டியே குனிஞ்ச மேனிக்கே தவழ்ந்து அந்தப் புகைக் கூண்டுக்குப் பின்புறமா வா…” என்றது அவள் குரல்.
      சொல்லிவிட்டு கணத்தில் மறைந்து விட்டாள்.. மனது படபடக்க சுற்று முற்றும் பார்த்தேன். நேர் எதிர் வீட்டு மாடிகளில் ஆட்கள் யாரும் தென்படவில்லை. பத்துப் பதினைந்து வீடுகள் தள்ளி ஒருவர் சூரியனைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். எதிர்த்த தெரு மாடிகள் எல்லாமும் காலியாகத்தான் இருந்தன. விஜயாவின் வீட்டுக்குப் பத்து வீடுகள் தள்ளி தெரு முடிகிறது. அதற்குப் பின் கோவில். உயரமான கோபுரத்தின் உச்சியில் மைக் செட் குழாய் கட்டப்பட்டிருந்தது. விடிகாலையில் பக்திப் பாடல்களும், ஸ்லோகங்களும் ஒலிக்கும் அங்கே. அதைக் கேட்டுக் கொண்டே அம்மா வாசலில் கோலம் போடுவாள். நாலு வீடுதள்ளி விஜயாவின் அம்மாவும் கோலமிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் பெரிசா, நீ பெரிசா என்பது போல் பெரிய கோலமாகப் போடுவதில் இருவருக்குள்ளும் போட்டியிருக்கும்.
      பெரும்பாலும் அம்மா போடும் புள்ளிக் கோலங்களும் அதன் அநாயாசமான வளைவுகளும் என்னை ரொம்பவும் ஈர்க்கும். இப்போது லேசாய் வாசலை எட்டிப் பார்த்த என் பார்வையில் அம்மா போட்ட அன்றைய கோலம் என் கண்ணில் பட்டது. புள்ளிகளும் அதன் நடுவே வளைந்து வளைந்து செல்லும் கோடுகளும் எதிலிருந்து துவங்கியது, எங்கே முடிகிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் நான் அந்தச் சிக்கலுக்குள் சென்று மாட்டிக் கொண்டது போல் என்னை உணர வைத்தது. ஏன் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் தோன்றுகிறது?
      எனக்கு விஜயா கூப்பிட்டது மனசை அவசரப்படுத்தியது. கைகளை ஊன்றிக் கொண்டு முட்டியால் நகர்ந்தபடியே எப்படியோ ஒரு வீடு தாண்டி ஒரு வீடாக அவள் சொன்ன அந்தப் புகைக் கூண்டிற்கு அருகில் போய்ச் சேர்ந்தேன். ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கக் கூடாது. வீட்டினுள் சுவற்றில் நிழல் தெரிந்து விடும். யாரோ ஆள் மாடியில் என்று கண்டு பிடித்து விடுவார்கள். ஏற்கனவே திருட்டு பயத்தில் ஊர் உஷாராக இருந்தது. தவழ்ந்து வந்த வேகத்தில் எந்த வீட்டிலாவது அதிர்வை உணர்ந்திருப்பார்களோ என்ற பயமும் இருந்தது.
      என்ன? எதுக்கு பயப்படுறே? நா ஒன்னை ஒண்ணும் நினைச்சிக்க மாட்டேன்…வா இப்டி…பக்கத்துல வா…இழுத்து வைத்து இவனை மடியில் அமர்த்தாத குறையாக அவள் இவன் கையைப் பிடுங்கிக் கொண்டாள்.
      இதுதானே வேணும்….நீ பார்த்தது இதுதானே…இந்தா எடுத்துக்கோ…என்றவள் சட்டென்று அவன் கையை இழுத்து உள்ளே திணித்துக் கொண்டாள்.
      உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்து  ஊத்த, நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, மயக்கமே வந்துவிடுமோ என்பது போல உணர ஆரம்பித்தேன். எங்கே கையை எடுத்துவிடுவேனோ என்பதுபோல் கெட்டியாக அவள் பிடித்துக் கொண்டு கண்களை மூடித் தலையை என் மேல் சாய்த்து, நாகு…நாகு… என்று பிதற்ற ஆரம்பித்தாள்.
      சத்தம் கேட்டு யாரேனும் வந்து விடுவார்களோ என்று பயம் வேறு. ஆனாலும் விடுவித்துக் கொள்ள மனமில்லை.. கைகள் அவள் வைத்த இடத்திலிருந்து சுற்றுப் புறங்களில் விளையாட ஆரம்பித்தன. அந்தச் செழுமையும், மென்மையும், குளிர்ச்சியும், வழமையும், என்னைக் கிறங்கடித்தன. இவ்வளவு சீக்கிரம் விஜயாவோடு இப்படியெல்லாம் நடக்கும் என்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. கருப்பீ…ஏ கருப்பீ….
      ரெண்டு பேர் மனங்களுமே இந்த எண்ணங்களிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்ததனால்தானோ இவ்வளவு சீக்கிரம் ஆகிப் போனது என்று தோன்றியது. இருந்தாலும் அவளின் வேகம் ரொம்ப அதிகம். தானும் இணக்கமாகவே இருப்பதுபோல் அவளாகவே நினைத்துக் கொண்டு இப்படி என்னைப் படுகுழியில் தள்ளுகிறாளே!  அவள் தள்ள நீயும்தானே விழுந்தாய்.
      உன்னை யார் மாடிக்கு வரச் சொன்னது? நீயாகத்தானே வந்தாய். நீயாகத்தானே போய் எட்டிப் பார்த்தாய். இப்போது அவளைக் குறை சொல்கிறாய்?
      விஜயா, ஆனாலும் நீ ரொம்ப அழகு…
      இப்பத்தான் தெரிஞ்சிதா….
      ஆமா…இதுநாள் வரைக்கும் உன்னை வெறுமே பார்த்திட்டுதானே இருந்தேன்…
      இப்ப என்னவாம்?
      இப்பத்தானே உன் அழகை உணர முடிஞ்சிது…
      போதுமா….
      போதும்…
      என்னது? போதுமா?
      இன்னைக்குப் போதும்னேன்…
எப்படி அங்கிருந்து விடுபட்டான் என்று தெரியவில்லை. ஆள விடு சாமி…!
அன்றைக்கு அகன்று விட்டாலும் அவள் நினைவாகவே இருந்தது. அந்த அது மனதில் வந்து வந்து முட்டியது. திரும்பவும் அப்படி ஒரு தனிமை எப்பொழுது கிடைக்கும்? சர்தான்…நம்ம கதை அவ்வளவுதானா…
சே! கொஞ்சங்கூடப் பயமில்லையே அவளுக்கு. இப்படி நினைப்பு உள்ளவளை எதற்குப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்? இவள் அங்கு சென்று என்னத்தைப் படிக்கப் போகிறாள்? அம்மாடி இவள் என் வகுப்பில் இருந்தால் முடிந்தது கதை. இப்போதே இந்த நினைப்பு இப்படிப் போட்டுப் புரட்டுகிறதே! க்வார்டர்லி எக்ஸாம் வேறு வருகிறது. ஒன்றுமே படிக்கவில்லையே! என்னத்தை எழுதப்போகிறேன். படிக்க என்று உட்கார்ந்தால் எதாவது சந்தேகம் என்று வந்து விடுகிறாளே! அப்படியானால் அவள் பள்ளியில் பாடம் நடத்தும்போது கவனிப்பதேயில்லை என்றுதானே பொருள். நான்தானா கிடைத்தேன் எடுத்ததற்கெல்லாம்?
விஜயாவின் பிடியிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்றுதான் நினைத்தேன். அம்மாவிடம் சொன்னேன். இனிமே அவ வந்தா எங்கிட்ட அனுப்பாதே! எனக்கு படிப்பு டிஸ்டர்ப் ஆகுது…எதையாவது சொல்லி அனுப்பிச்சிடு. என்ன, அடிக்கடி வந்து தொந்தரவு செய்றேன்னு கூடச் சொல்லிடு…எனக்குப் படிக்கணும்….
அம்மா ஆச்சரியமாகப் பார்த்தாள் என்னை. என்ன வந்தது இவனுக்கு என்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை.
ஏண்டீ கமலம், உன் பிள்ளை நாகு என் பொண்ணை வராதேன்னுட்டானாமே! ஏன் அப்டிச் சொன்னான். என்னவோ பாடத்துல சந்தேகம் சந்தேகம்ங்கிறா…சரி போன்னேன்…சொல்லித் தரப்படாதா? பள்ளிக்கூடத்துல வாத்தியார் நடத்துறது புரியலேங்கிறாடி…எதுவோ அவளையும் ஸ்கூல் ஃபைனல் வரைக்கும் படிக்க வச்சு எவனாவது ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுத்திறலாம்னு பார்க்கிறேன். அந்தத் தடிச்சி என்னடான்னா இப்பவே அலையறா. அதுதான் படிப்பு ஓடலை அவளுக்கு…எனக்கென்ன தெரியாமயா இருக்கு…என்னவோ இழுத்துப் பறிச்சு முடிச்சுறட்டுமேன்னு காத்திருக்கேன்…
அதுக்கென்ன மாமி…சொல்றேன்…. – அம்மாவின் பதில் இத்தனை சுருக்கமாக முடியும் என்று நான் நினைக்கவேயில்லை.
ஆனால் ஒன்று அதற்குப் பிறகு விஜயா வரவேயில்லை. எனக்கா ஆச்சரியமான ஆச்சரியம். அன்று மாடியில் என் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு என் மேல் மொத்தமாய்ச் சாய்ந்து கொண்டு, என்னால முடிலடா நாகு, … என்று அர்த்தமில்லாமல் (அவளுக்குள் என்ன அர்த்தம் இருந்ததோ?)  பிதற்றியவளா இன்று, இவ்வளவு சீக்கிரம் இப்படியிருக்கிறாள். நம்ப முடியவில்லைதான். இப்போது எனக்குத்தான் அவள் நினைப்பு அதிகமானது. ருசி கண்ட பூனையாகிப் போனேன் நான்.
அடிப்பாவீ…நான்பாட்டுக்கு இருந்தேனே…வந்து வந்து என் மனதைக் கலைத்துவிட்டு இன்று நாடகமா ஆடுகிறாய்…என்ன ஏது என்று தெரியாத அப்பாவியாயிருந்த என்னை இதுதான் அது, அதுதான் இது  என்றெல்லாம் காண்பித்துக் கொடுத்துவிட்டு இன்று ஓடியா ஒளிகிறாய்…என் மனசு அவளை எதிர்பார்க்க ஆரம்பித்தது.

அன்புள்ள நாகு,

எனது முந்தைய கடிதம் உனக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். கடிதம் கொண்டு வந்து உன்னிடம் ரகசியமாய்ச் சேர்த்த நமது ஆரம்பப்பள்ளி நண்பன் விச்சுவின் மூலம்தான் இந்த இரண்டாவது கடிதமும் வருகிறது. அவன் மாதத்தில் ஒரு முறை உங்கள் ஊருக்கு வந்துகொண்டுதான் இருக்கிறான். சென்ற கடிதத்திற்குப் பிறகான இந்த மூன்று மாதங்களிலும் பிரதி மாதமும் அவன் உங்கள் ஊருக்கு வந்தான். ஆனால் உன்னைச் சந்தித்தானா தெரியாது. உங்கள் தெருவில் அவனுக்கும் ஏதோ உறவினர்கள் இருப்பதாகச் சொன்னான். இதெல்லாம் உனக்குத் தெரியுமோ தெரியாதோ? எனக்கு வசதியாக இருக்கிறது அவனின் உங்கள் ஊருக்கான வருகை.  அவன் ரொம்பவும் நம்பிக்கையானவன். நம்மைப் பள்ளியில் ஒன்றாய் இருந்த காலத்திலிருந்தே அறிந்தவன். நம் இருவரின் குடும்ப ஒற்றுமையும், விவகாரங்களும் எல்லாமும் அவனுக்குத் தெரியும். இன்று எனக்கிருக்கும் ஒரே உதவி அவன்தான். எனக்கென்னவோ உன் நினைவாகவே இருக்கிறது. நீ என்னைவிட்டு விலகி விடுவாயோ என்று என் மனது அடித்துக் கொள்கிறது. நாம் இருவரும் உள்ளுரிலேயே இருந்து சேர்ந்து இருந்தால் கூட யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. நம்மை இணைப்பதாகத்தான் முடிவு செய்து விட்டார்களே! ஆனால் காலம்தான் நம்மைப் பிரித்து வைத்து விட்டது. இந்த வயதிலேயே இவளென்ன இப்படியெல்லாம் எழுதுகிறாள் என்று கூட உனக்குத் தோன்றலாம்.  என் அம்மா உன் மீது அப்படி நம்பிக்கையோடிருக்கிறாள். உங்களை விட நாங்கள் ரொம்பவும் நொடித்துத்தான் போனோம். அப்பா உன் அப்பாவிடமிருந்து பிரிந்து தனியே வியாபாரம் செய்து அதிலும் பலத்த நஷ்டத்தை எதிர் கொண்டார் என்பதை நீ அறிவாய்தானே! அதெல்லாமும் உன் அப்பாவிற்கு அவர் செய்த துரோகம் என்று இன்று மனம் புழுங்குகிறார். அன்று உன் அப்பாவிற்குத் தெரியாமல் வியாபாரப் பணத்தைச் சுருட்டியவர் என் அப்பா. லாபத்தை மறைத்தவர். பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான். பிடிபட்டார். ஆனால் அந்த நாளில் உன் அப்பாதான் எத்தனை கௌரவமாக நடந்து கொண்டார் என்று இன்றும் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறார் என் தந்தை.
அந்த நன்நம்பிக்கைதான் இன்றுவரை உன்னையே என்னை நினைத்துக் கொண்டிருக்கச் செய்கிறது. வீட்டில் அந்த எண்ணங்களெல்லாம் கலைந்து கரைந்து போய்விட்டதாகத்தான் தோன்றுகிறது. காலம்தான பதில் சொல்ல வேண்டும். இன்று எனக்கிருக்கும் ஒரே பிடி நீதான். எனக்கு சரிதாதான் வேண்டும் என்று நீ நிற்பதில்தான் இருக்கிறது என் எதிர்காலம். உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.                                                                                                                                          என்றும் அன்புடன்                                                                                  உன் சரிதா

ஒரு பக்கம் விஜயா. மறுபக்கம் சரிதா. இரண்டு பேரும் என்னைப் போட்டுப் பாடாய்ப் படுத்தினார்கள். இந்த வருடம் என் படிப்பு அவ்வளவுதானோ என்று எனக்கு அப்பொழுதே தோன்ற ஆரம்பித்து விட்டது.
பள்ளியிறுதிக் காலத்திலேயே இப்படியெல்லாம் வரும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. ஒழுங்காக நான்பாட்டுக்கு என் படிப்பு உண்டு நான் உண்டு என்று இருந்தேன். சந்தேகம் சந்தேகம் என்று வந்து என் கழுத்தை அறுத்து, இன்று என்னை நானே  சந்தேகப்படும்படி ஆக்கி விட்டுவிட்டுப் போய்விட்டாள். போதாக் குறைக்கு இந்த சரிதா வேறு.
என்ன ஒரு தைரியம் இந்தப் பெண்டுகளுக்கு. இருநூறு மைல் தொலைவிலுள்ள ஊரிலிருந்து படு தில்லுடன் ஒரு மூன்றாமவனிடம் இப்படி ஒரு கடிதத்தைக் கொடுத்து விடுகிறாளே! அவன் ஏதாவது விளையாடிப் பார்ப்போம் என்று நினைத்தால்? அவன் நல்லவனாய் இருக்கக் கண்டு சரியாய்ப் போயிற்று. ஒரு பிரச்னையான ஆளாய் இருந்தால்? நேரில் வரவும் பயம். போன் பேசவும் அதைவிட பயம். எங்கே காரியம் கலைந்து விடுமோ? என்னமாவது விபரீதமாகிவிடுமோ என்கிற அசாத்தியமான ஜாக்கிரதை உணர்வு! இது எல்லாவற்றையும் மீறிய ஒரு மூன்றாவது நண்பனிடம் நம்பிக்கை! அடேயப்பா! இந்த ஒரு காரியத்தை எவ்வளவு  உருப்படியாகப் பார்க்கிறார்களய்யா இந்தப் பெண்கள்! மனதில் நினைத்து விட்டால் அதற்கு என்னென்ன பாதுகாப்பான வழி முறைகள் உண்டு என்று யோசித்துக் கொண்டேயிருப்பார்களோ! பிடிப்பு விட்டுவிடக் கூடாது என்று தொடர்ந்து முயலுகிறார்களே!! சரியான கட்டைகள்தான்! நினைத்துக் கொண்டேன். மனது ரொம்பவும் குழம்பிப் போயிருந்தது.
காலாண்டுத் தேர்வுக்கு இன்னும் பத்து நாட்களேயிருந்தன. ஒரு தம் கட்டினால் அத்தனையையும் முடித்துவிடும் தைரியம் உண்டுதான். முடியும்தான். அதற்குப் பாதகமான அளவு ஒன்றும் நான் என்னை இழந்து விடவில்லைதானே! அந்தத் தன்னம்பிக்கை கொடுத்த தைரியம்தானோ என்னவோ,  அத்தோடு மட்டுமல்லாது அன்று என் மனதிருந்த குழப்ப நிலைக்கு அது ஒன்றுதான் வழி. அம்மாவிடம் சொல்லலாம்தான். சொன்னால் சரி, வா…கோவிலுக்குப் போய்விட்டு வருவோம்…எல்லாம் சரியாய்ப் போயிடும்…என்று அழைத்துக் கொண்டு போவாள். ஆனால் என் மனது வேறு வழி தேடியது.
என்னடா சொல்ற? ஆச்சரியமா இருக்கு!! என்றான் நண்பன் மனோகரன். என் ஃபிரண்டு நாகராஜனா இப்படிப் பேசுறது? என்று விழித்தான். அவனுக்கு ஒரே சந்தோஷம். கூடவே . யாராச்சும் பார்த்துட்டா என்னடா பண்றது? என்று வேறு கொக்கியைப் போட்டான்.
பரவால்லடா… கொஞ்சம் லேட்டானாலும் பரவால்ல…நல்லா இருட்டட்டும்…என்றேன் நான். அன்று டியூஷன் சார் வைத்திருந்த ரிவிஷன் டெஸ்ட்டுக்கு டிமிக்கி கொடுத்தோம். பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம். மறுநாள் எழுதுகிறோம் என்றால் எங்கள் ரெண்டு பேருக்கு மட்டும் மாட்டேன்  என்றா சொல்லப் போகிறார் என்கிற அசட்டு தைரியம். தொலைஞ்சு போங்க…என்றவாறே க்வெஸ்டின் பேப்பரை வீசி எங்கள் மூஞ்சியில் எறிவார். அவ்வளவே!
சொன்ன பிரகாரம் கொஞ்சம் தாமதமாக, சரியாகச் சொல்லப் போனால் அரைமணி தாமதமாக உள்ளே சென்றோம்.
நியூஸ் முடிந்து படம் போட்டு பத்து நிமிஷந்தான் ஆச்சு என்றார்கள். எங்களுரிலெல்லாம் ஒன்றொன்றுக்கும்  இப்படிச் சில வசதிகள் உள்ளன என்பதுதான் எங்களுக்குப் பெரிய வசதி. .
கடைசி மேல் வரிசையின் இருட்டான அந்தப் பகுதியில் எங்களுக்கென்றே இரண்டு சீட்கள் தயாராய் ஒதுக்கி வைத்தாற்போன்று காலியாகக் கிடக்க, அந்த இருக்கைகளில் போய் கமுக்கமாய் நாங்கள் அமர்ந்து கொள்ள, தலைக்கு மேலிருந்து வந்த குளிர்ச்சியான காற்று எங்கள் பயத்தைச் சற்று விலக்கி ஆசுவாசப்படுத்த, உள்ளே கவ்வியிருந்த இருட்டு மெல்ல மெல்ல விலகி கண்கள் சற்றே தெளிவான  பார்வைக்குட்பட்டபோது, எனக்கு நேர் இரண்டாவது கீழ் வரிசையில் ஓரமாய்  அமர்ந்திருந்தவர்களை சற்றே தலையைச் சாய்த்து நான் பார்க்க நேரிட்ட போது, டே…! அங்கே பார்த்தியா….!! என்றான் என் முன் கதை தெரிந்த ஆப்த நண்பன் மனோகரன்.
“நாந்தான் சொன்னல்லடா… அவ பெரிய கொக்கின்னு…கேட்டியா…” என்றவாறே இருட்டுக்குள் என்னை நோக்கிக் கையை ஓங்கினான். பூர்வ கதை அறியும் புண்ணியவாளன் இன்னும் ஏதேனும் அவளைப்பற்றி வைத்திருப்பானோ? 
அங்கே அவள் தோளில் கைபோட்டு, முன் பக்கம் கால் மேல் கால் போட்டு படு சொகுசாக, ரொம்பவும் அநாயாசமாக அமர்ந்திருந்தது எனக்கு வழக்கமாகக்  கடிதம் கொண்டு வந்த அந்த ஆண் மகன்.
அது விச்சு….. அவள் விஜயா….!!!                                                              -----------------------------------------------


கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...