13 அக்டோபர் 2018

“கறை“ - கட்டுரை - கைத்தடி இதழில் வந்தது


                  “கறை…!”       
                  கட்டுரை
               ---------------------------     
     கொடுக்க நினைத்தவர்கள் கொடுத்தார்கள். வாங்க நினைத்தவர்கள் வாங்கினார்கள். கொடுக்காதவர்களுக்கும் கொடுத்தார்கள். வாங்காதவர்களையும் வாங்க வைத்தார்கள். வாங்குபவர்களும் வாங்கினார்கள். வாங்காதவர்களும் வாங்கினார்கள்.
எல்லாமும் கொடுத்தாச்சா. எல்லாருக்கும் கொடுத்தாச்சா… எல்லாரும் வாங்கியிருக்கிறார்களா? எல்லாரும் வாங்கினதால நானும். எல்லார்க்கும் கொடுத்ததுனால நானும்…! அவரே வாங்கியிருக்காரு…நான் வாங்கக் கூடாதா? அவர் வாங்கினாரு, அதனால நானும்…! யார் வாங்கினா என்ன, வாங்காட்டி என்ன, எனக்கு வேணும், நான் வாங்குறேன்… வாங்குறது என் இஷ்டம்னா, வாங்காதது அவரிஷ்டம் வாங்குறதும் வாங்காததும் அவரவரிஷ்டம்.
     எப்பயோ ஒரு வாட்டிதானே…அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை தானே…. தேறுதல்.!  கொடுக்கிறான், வாங்குறேன்… அங்கெல்லாம் கொடுத்திருக்கீங்க…இன்னும் எங்களுக்கு வரல்ல? எங்களுக்கு மட்டும் இவ்வளவுதானா? அவுக என்ன பெரிசு, நாங்க என்ன சிறிசு? எல்லாருக்கும் ஒரே மாதிரிச் செய்ங்க…அதுலென்ன பாரபட்சம்? அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, கொடுத்தாப் போடுவோம், இல்லன்னா இல்லதான்.
     அவர்களும் கொடுத்தார்களா, அவர்களும் வாங்கினார்களா? இவர்கள் கொடுத்ததையும் வாங்கி, அவர்கள் கொடுத்ததையும் வாங்கி…..!
     அவர்கள் கொடுத்ததற்காக இவர்கள் கொடுத்தார்கள். இவர்கள் கொடுக்கிறார்களே என்று அதிகமாக அவர்கள் கொடுத்தார்கள். அதையும் வாங்கினார்கள். இதையும் வாங்கினார்கள்.  கழுத விட்டைல முன் விட்டை என்ன பின் விட்டை என்ன?
     எவர் கொடுத்தால் என்ன, அது நம்மளதுதானே? என்று போதித்தார்கள். நம்ப வைத்தார்கள். நம்மளதுதானே என்று சொல்லி, என்னவோ உறுத்துதே என்று துடைத்தெறிந்தார்கள். சிரித்து மழுப்பிக் கொண்டார்கள்.  
     வாங்கினவர்களைப் பார்த்து வாங்காதவர்கள் ஏங்கினார்கள். எப்படியாவது நமக்கும் கிடைக்காதா என்று நினைக்க ஆரம்பித்தார்கள். யாருக்கும் தெரியாமல் யாரேனும் கொண்டு வந்து கொடுத்து விடமாட்டார்களா, காத்திருந்தார்கள்.  கண்களால் தேட ஆரம்பித்தார்கள்.
     மனைவிக்குத் தெரியாமல் கணவன் வாங்கிக் கொள்ளவும், கணவனுக்குத் தெரியாமல் மனைவி வாங்கிக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் ரகசியத்தைப் பாதுகாத்தும், பரஸ்பரம் ரகசியத்தை மூடி வைத்தும், பெற்ற மகனுக்குத் தெரியாமல் பொதிந்தும் வைத்தார்கள்.
     கொடுத்தா வாங்கிக்க வேண்டிதான், வேண்டாம்னா சொல்ல முடியும்…இளைய தலைமுறை இப்படியும் சொல்லிற்று. மகனைப் பார்த்து, சந்தோஷமடைந்தார்கள். உனக்கு வந்திடுச்சா? என்று கேட்டார்கள். மொத்தம் வீட்டில் எத்தனை ஓட்டு? கணக்கிட்டு, எவ்வளவு தேறும் என்றும் திட்டமிட்டார்கள்.
     சீ…! என்னடா இப்டிப் பேசற? என்றும் அதிசயமாய்க் கண்டித்தார்கள்.
     இந்த பிசாத்தை எவன் வாங்குவான்? சொல்லி விடக் கூடாதே என, மதிப்பாய்த் தொகையைக் கூட்டி நிர்ணயித்தார்கள். கூட்டிப் பார்த்தபோது குடும்பத்தோடு குதூகலித்தார்கள். எவன் தர்றான்? என்றார்கள். எத்தனை நாளைக்காச்சு என்று சமாதானமடைந்தார்கள். ஒரு வாரம் அரிசிக்காச்சு…பதினஞ்சு நாள்  காய்கறிக்காச்சு…ஒரு மாசம் பஸ்ஸூக்காச்சு…
யாராச்சும் வாங்கினீங்க… தெரியும் சேதி? துள்ளித் துடித்த சிலதும் அடங்கிப் போனது.
     சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிந்தும் கொடுத்தார்கள். தெரிந்தும் வாங்கினார்கள். தவறான நடைமுறை என்று தெரிந்தும் கொடுத்தார்கள். அறிந்தும் வாங்கினார்கள். எவன் பார்க்கிறான்…அதையும்தான் பார்ப்போம்….என்று காலை எட்டிப் போட்டார்கள்.
     வாங்கக் கூடாது என்று இருந்தவர்களும் வாங்கினார்கள். வாங்காதே என்று சொன்னவர்களும் வாங்கினார்கள். வாங்கினால் என்ன தப்பு என்றும் வாங்கினார்கள். என்ன தப்பு…பெரிய தப்பு என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டார்கள். எவன்தான் யோக்கியம் என்று சமாதானம் செய்து கொண்டார்கள். குடும்ப அமைப்பு என்கிற அடிப்படை ஒழுக்க நெறியில் அமிழ்ந்து போன நம் மக்களா இப்படி என்று பிரமித்தார்கள். பிரமித்தவர்களும் உறி….உறி….உறி….என்று நீண்ட தங்கள் கைகளை மடக்க மறந்தார்கள்.
     தவறு என்பது தவறிச் செய்வது…..
     தப்பு என்பது தெரிந்து செய்வது…..
     தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்…
     தப்பு செய்தவன் வருந்தியாகணும்…..
     ஆன மட்டும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து தடுக்கத்தான் செய்தது. அதையும் குறை சொன்னார்கள். இதையும் குறை சொன்னார்கள். அதைக் குறை சொன்னவர்களும், இதைக் குறை சொன்னவர்களும் வாங்கத்தான் செய்தார்கள். ரெண்டையும் குறை சொல்லி வாங்காமலும் சிலர் இருந்தார்கள். வாங்கியும் குறை சொன்னார்கள்.
     வாங்கினவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும், வாங்க நினைத்து வாங்காதவர்களுக்குமாய், கிடைக்காதவருக்குமாய் தவறு என்று சுட்டி, தண்டனை என்று நிர்ணயித்து, உறுதி மொழி செய்து, சிறப்பாய்த்தான்  நடந்தன எல்லாமும்.
     ஆனால் மனசாட்சி? …அதை மீறியா ஒன்று வேண்டும். எத்தனை சட்டம் போட்டால் என்ன, எவன் வந்து முன்னே நின்றால் என்ன? அது ஒன்று போதாதா?  அதைத் தாண்டிய சக்தியா? சுய ஒழுக்கம் விஞ்சிய மனிதன்….தவறு செய்வானா? அப்படியானால் நம் மக்கள் ஒழுக்கமில்லாதவர்களா? அப்படியில்லையே? குடும்ப அமைப்பின் ஆதாரமே அதுதானே….! ஆனாலும் இந்தப் படுகுழியில் எப்படி விழுகிறார்கள்? ஏன் எல்லா நல்லவைகளும் தெரிந்திருந்தும், அறிந்திருந்தும் நழுவிப் போகிறார்கள்? பொருளாதாரப் பற்றாக்குறை….தேக்க நிலை…வறுமை…..போதாமை….எல்லாக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் எல்லா நல்லவற்றையும் உணர்ந்த மனிதர்கள்தானே….! கோடி கோடியாய்ப் பணம் சேர்ப்பவர் பலர் ஒரு புறம் என்றாலும், உழைத்து உண்ண வேண்டும் என்கிற பிடிவாதத்தில் அன்றாடம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உழைப்போர் எத்தனை கோடிப் பேர்?
உங்கள் பணம்தான். கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்…தப்பு இல்லை என்று பேசுகிறார்கள். எவ்வளவு தவறான பேச்சு? ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்? விட்டதைப் பிடிப்பதுதானே வேலையாயிருக்கும்?
உங்கள் வரிப் பணம்தான் இப்படி வருகிறது. வாங்கிப் போடுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்குப் போடுங்கள். பழுத்த அரசியல்வாதியும் பழமாய்ப் பேசுகிறார். பாழாய்ப் பேசுகிறார்.
இது சரியா? பிரஜை என்கின்ற முறையில் அரசாங்கத்துக்கு வரி கட்டியது என் கடமை. ஆனால் அந்தக் காசு கொள்ளையாய்ச் சேர்ந்தல்லவா இந்த விநியோகம் நடக்கிறது? கொள்ளையில் பங்குதானே அது. கொள்ளையைப் பிரித்தளித்தால் அது தர்மமா அல்லது பிச்சையா? நாளைக்கு என்னைத் திரும்பவும் கொள்ளையடிக்க விடு என்பதற்கு அச்சாரம்தானே அது…? அதையும் கேள்வி கேட்க வாயிருக்குமா?
எந்தக் காசு அது? சொந்தக் காசா….வந்த காசா….?
எல்லாமும் நம் மக்களுக்குத் தெரியும்தான். ஆனாலும் வாங்கிக் கொள்கிறார்கள். எப்படி இந்தக் கலாச்சாரம் பரவிற்று? எப்படி புற்று நோயாய் ஊடுருவிற்று? செல்லரித்துப் போன சமுதாயம் என்கிறோமே…இப்படித்தான் அது முற்றுமோ? அல்லது முற்றி விட்டதா? ஊருக்கும் வெட்கமில்லை…இந்த உலகுக்கும் வெட்கமில்லை….
மங்களம்…சுபமங்களம்….ஊறீம்….தப்பு..தப்பு…
மங்கலம்…திருமங்கலம்…முதன்முதல்…மங்கலம்..திருமங்கலம்…
உலகம் அழியும்போது எல்லாத் தீமைகளும் அழிந்து போகும். கூடவே நிறைய நன்மைகளும் சேர்ந்துதான் அழியும். அத்தனை நல்லவர்களும்தான். போகட்டும்…அப்படியாவது ஒரு புதிய சமுதாயம் உருவாகட்டும்….
என்று விட்டுவிடுவோமா….?  அல்லது நம்மை மாற்றிக் கொள்வோமா….? கொஞ்சம் சிந்திக்கலாமே….!      நம் மக்களுக்கு எல்லாமும் தெரியும்….அவர்கள் மாறுவார்கள்…..!!!! மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர எல்லாமும் மாறுதலுக்குட்பட்டதுதான்….!!!!                           
----------------------------------------------

    
                                         
    

கருத்துகள் இல்லை: