13 அக்டோபர் 2018


”துணையிிலி பிணநெஞ்சே…..”                                                     ----------------------------------------------------------------                                   
திருவாசகத்தின் எட்டாவது பதம் “ஆன்ம சுத்தி.”
     ஆத்மாவைச் சுத்தப் படுத்திக் கொள்வதற்காக, ஆன்ம சுத்தி அடைவதற்காக இந்த உலகில் பலரும் வெவ்வேறுவிதமான  முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஸ்தல யாத்திரைகள், இடை விடாத இறை வழிபாடு, தியானப் பயிற்சி, ஸ்தோத்ரப் பாராயணம், ஸத் சங்க நிகழ்வுகளில் பங்குகொள்ளுதல், அதன் வழி இறைவனைத் துதித்துக் கொண்டேயிருத்தல் என்பதாகப் பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.
     குடும்பம் என்கிற அமைப்பில் லௌகீகக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில், அதன் அன்றாடச் சிக்கல்களிலிருந்து விடுபட்டு மனதை லேசாக்கிக் கொள்வதற்காகவும், தன்னை இலகுவாக்கிக் கொண்டு பதட்டமின்றி அனுதினமுமான செயல்பாடுகளைச் சுலபமாய்க் கடந்து செல்வதற்காகவும் வெவ்வேறு விதமான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எல்லாமுமே தொடர்ந்த பயிற்சியின்பாற்பட்டே சென்றடைவதாகவும், அப்படி முயற்சிப்பதன் மூலமாய் மன நிம்மதியை மெல்ல மெல்ல எய்துவதாகவும் கொள்ளப்பட்டிருக்கிறது.
     ஆன்ம சுத்திக்கான பயிற்சிகளில் எதையுமே மேற்கொள்ளாத ஒருவன் பிணம் போன்ற மனத்தினைக் கொண்டவன் என்று வலியுறுத்தி திருவாசகம் “பிண நெஞ்சே” என்று குறிப்பிட்டு ஒருவன் தன்னைத்தானே இழித்துக் கூறிக் கொள்வதற்கு ஒப்பாய் அது அமையும் என்று இந்த எட்டாவது பதப்பொருள் பாடலில் வலியுறுத்தப்படுகிறது.
ஆடு கின்றலை கூத்துடை யான்கழற்                                        கன்பிலை என்புருகிப்                                                       பாடுகின்றலை பதைப்பதுஞ் செய்கிலை                                      பணிகிலை பாதமலர்                                                       சூடு கின்றலை சூட்டுகின் றதுமிலை                                         துணையிலி பிணநெஞ்சே                                                   தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை                                      செய்வதொன் றறியேனே…!       
மனித வாழ்க்கை அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த அன்பு வலையிலிருந்து மீள முடியாமல்தான், அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டு, வாழ முயற்சித்துக் கொண்டும், விரும்பியும், விரும்பாமலும் வாழ்ந்து கொண்டும் நாட்களையும் பொழுதுகளையும் கடந்து செல்கிறான். அப்படியான இந்த உடல் சுமந்த உயிரினை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது? கற்பித்துக் கொண்ட வெவ்வேறு விதமான காரணிகள் மூலமாய் அவை நிறைவேறுகின்றன எனலாம். அன்பு வயப்பட்ட மனிதர்களின் செயல்பாடுகள் ஆடுதலும், பாடுதலும், சூடுதலும், தேடுதலுமாய்க் கழிகின்றன என்கிறது திருவாசகம். அதன் வழி மனிதன் ஏந்தியிருக்கும் இந்த உயிர் தூய்மை பெறுகிறது. சூடுதல் என்பதன் சாரமாய் இறைவனின் திருவடியைச் சென்னிமேல் (உச்சியில்) வைத்துக் கொள்ளுதல், திருவடிக்கு  மலரிட்டு வழிபடுதலின் பொருளாய் சூட்டுதல் என்கின்ற ஆத்ம சுத்தியை எய்த முயற்சித்தல், உயிர் தூய்மை பெறுவதற்கு ஆடுதல், பாடுதல் முதலான மனமார்ந்த களிப்பினைக் கொண்டாடுதல் என இடைவிடாத பயிற்சியின்பாற்பட்டு ஆன்ம சுத்தியை நோக்கிப் பயணித்து, எல்லாவற்றையும் உடையவனான இறைவன் திருவடியை  அடைதல் ஆகியவை மனித வாழ்க்கையின் இன்றியமையாத கடமைகளாகின்றன என்கிறது இப்பாடல்.
     மனம் ஒருமைப்படாத போது, செயல்பாடுகள் நிகழாதாகையால்  செய்வதொன்றறியேனே…என்ற பதப்பொருளின்பால் ஆத்ம சுத்திக்கான பயிற்சிகளை அன்பின் வயப்பட்டு மேம்படுத்தி பல்வேறு வழிபாட்டு முறைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு அதனை எய்துதலே சாலச் சிறந்த வழிமுறையாகும் என்பதாய் திருவாசகம் நமக்கு வழிகாட்டுகிறது.
                     ----------------------------------------------------------

                               


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...