13 அக்டோபர் 2018


  “ஏனிந்த அவலம்“      
     
மது நாட்டின் முக்கிய உணவு அரிசி. அரிசியினால் ஆன சோறு. அரிசியை அரைத்த மாவில் செய்யப்படும் இட்லி, தோசை. புல் வகைத் தாவரமான இது வருடத்திற்கு ஐந்து மாதங்கள் வளரக்கூடிய ஆண்டுத் தாவரம். உமி என்னும் மேலுறை நீக்கப்பட்டபின் உணவாகப் பயன்பட்டு வருகிறது. சங்க இலக்கியங்களில் அரிசிபற்றிய குறிப்புகள் உள்ளன. பண்டைய நாட்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பதற்காக நெற்களஞ்சியங்கள், பத்தாயம், குதிர் என்ற வகையிலான அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அறுநூறு ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியங்கள் நமது கோயில்களில் இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பண்டைய காலம் தொட்டு இறைவனுக்குப் படையல் போடுதல், பொங்கல் வைத்து வழிபடுதல் என்பதான பக்தி வழி நடைமுறைகள் இந்த நெற்பயிரின் மீதான நமது மதிப்புமிக்க பாரம்பரியத்தைப் பறைசாற்றுகின்றன. “நெல் திருவிழா” என்ற பெயரிலான விழா இப்போதும் தென் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவே இந்த நெல் பயிராகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
     சமீபத்தில் சுவாமி விவேகானந்தரின் 115-வது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அன்ன பூஜை நடந்தது. பிடி அரிசித் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட 15 டன் அரிசியை மலையாய்க் குவித்து, மலர்களால் அலங்கரித்து, அதன் மேல் அன்னபூரணி விக்கிரகம்  வைக்கப்பட்டு சிறப்ப பூஜைகள், பிரார்த்தனைகள் நடந்தேறின. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
     அரிசி உணவான அன்னம் இறைவனுக்குச் சமம். அன்றாடம் நம் வீடுகளில் வடித்த சாதத்தை சாமி படத்தின் முன் வைத்து வணங்கிவிட்டு, மாடியில் சென்று காக்கைக்குக் கொஞ்சம் சோறு வைத்து, கா…..கா…..கா…என்று குரல் கொடுத்து அவைகளை வரவழைத்து, அவை பறந்து வந்து கூடி அன்னத்தைக் கொத்தித் தின்னும் அழகைக் கண்டு திருப்தியுற்ற பிறகுதான் சாப்பிடும் வழக்கம் இப்போதும் நம் வீடுகளில் விடுபடாது இருந்து வருகின்ற ஒரு தொன்று தொட்ட நடைமுறை. சாப்பிடும் இலைக்கு முன் அல்லது தட்டின் முன் அமர்ந்து அம்மா இட்ட அன்னத்தை சுற்றிலும் மந்திரமோதி நீர் தெளித்த பின், துளித்துளிப் பருக்கைகளாக எடுத்து இறைவனை நினைத்து ஐந்து முறை கண்மூடி தியானித்து உட்செலுத்தி வணங்கிய பின்தான் சாப்பிட ஆரம்பிக்கும் வழக்கம் இப்போதும் நம்மில் பலரிடம் இருக்கும் மதிக்கத்தக்க நடைமுறைகளாகும். இந்த அன்னம் இந்த தேசத்தின் ஆதாரம். நம் மக்கள் வணங்கி வழிபடும் தெய்வம். அதை மதித்துப் போற்றுதல் நம் கடமை. அதுதான் நமது பாரம்பரிய மாண்பு.
     ஆனால் காலம்  அப்படியா நம்மை வைத்திருக்கிறது? எப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் கண்டு மனம் நோக வைக்கிறது? எதெல்லாம் நடக்கக் கூடாதோ அதெல்லாம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்கக் கூடாத/முடியாத  அளவில் நடந்து போகின்றனவே….! பார்த்தவருக்கெல்லாம் மனசு பதறித்தான் போனது.
ஐயோ, இப்படிச் செய்கிறார்களே….!
அடடா….அதற்காக இப்படியா செய்வது…?
என்ன ஒரு பொறுப்பில்லாத தன்மை….?
இவர்களைக் கேட்பார் யாருமேயில்லையா….?
பட்டப் பகலில் வெட்ட வெளியில்…..எதையும், யாரையும் பொருட்படுத்தாத என்ன ஒரு மோசமான நடவடிக்கை இது,.....?
மனதுக்குள் அங்கலாய்த்தோர் பலர்…..அங்கலாய்த்துக்கொண்டே வேடிக்கை பார்த்தோர் சிலர்….நமக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று பார்த்துக் கொண்டே நகர்ந்து சென்றோர் சிலர். பார்த்தும் பார்க்காததுபோல் சென்றவர் பலர்…இப்படியெல்லாம்தான் நடக்கும்…..யாரு கேட்கறது  இவங்களை…. எதற்கு வம்பு என்று விலகிச் சென்றவர் பலர்…..
இப்படிப் பலபடிக் காட்சியாகிப் போன அந்த நிகழ்வு…..இப்பொழுது மட்டுமில்லை….இனி எப்பொழுது நினைத்தாலும் மனசு நடுங்கித்தான் போகும்…
     சற்று விலகிப் போய் சுற்று முற்றும் பார்த்து ஏதேனும் ஒரு பட்டயக் கல்லை எடுத்து வந்து போட்டிருக்கலாம். ஆளுக்கு ஒரு கையாகக் கொஞ்சம் மணலை அள்ளிக் கொண்டு வந்து கொட்டி அந்தப் பள்ளத்தை நிரப்பியிருக்கலாம். கொஞ்ச நேரத்திற்கு என்று சொல்லி பக்கத்துக் கடைகளில் ஒன்றில் ஒரு மரப்பலகையை வாங்கி வந்து தாங்கலாக வைத்திருக்கலாம். இப்படி எதுவுமே செய்யாமல், (செய்யத் தோன்றாமல் என்று சொல்ல மனசு கூசத்தான் செய்கிறது…அங்கே வேலை செய்தவரும் சில தொழிலாளிகள்தானே…) எதை மக்களுக்கு முறையாக வழங்குவதற்காக அக்கறையாக ஏற்றி வந்தார்களோ, எதைக் கால தாமதமின்றிக் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தந்தக் கடைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வந்து சேர்ந்திருந்தார்களோ அவர்கள்தான் இதைச் செய்து விட்டார்கள்.
சீறிப் பாயும் அலைகள் கரைப் பகுதியை அரித்து, அரித்து மக்களின் வாழ்விடங்களுக்குள் நுழைந்து விடக் கூடாது என்றும், விடாது கொட்டித் தீர்க்கும் மழை வெள்ளத்தினால் உடைபடவிருக்கும் கண்மாய் நீர்த்தேக்கம் தன்னை விடுவித்துக் கொண்டு குடியிருப்புப் பகுதிக்கள் புகுந்து சேதம் விளைவித்து விடக் கூடாது என்று முன் ஜாக்கிரதையாய் அடுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்படும் மணல் மூட்டைகளைப்  போல்……பள்ளத்தில் இறங்கி நகர்த்த முடியாமல் நின்று போய் சரக்கு உரிய இடம் சேருவதற்குப்  பாதகம் வந்து விடக்கூடாதே என்று கொண்டு வந்த பொக்கிஷத்தையேவா மணல் மூட்டையாய் வைத்து ஏற்ற முனைவது?
லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கியது அரிசி மூட்டையல்ல. நமது பண்பாடு. நமது பாரம்பரியம். ஆண்டாண்டு காலமாய் நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஐஸ்வர்யம். இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது? இதை இப்படிச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
வெறும் செய்தியாய் அறிய ஆவலா? இதோ- பள்ளத்தைக் கடக்க லாரிச் சக்கரத்துக்கு அடியில் ரேஷன் அரிசி மூட்டை……நெல்லை மேலப்பாளையத்தில்…..
ஊரே பார்த்தது. உலகம் பார்த்தது. சக்கரம் ஏறித் தெறித்த அரிசி மூட்டையிலிருந்து மணலில் கொட்டிய அரிசிக் குவியல். அதை எடுக்க வேண்டாம் என்று அப்படியே வீசிய நிகழ்வு….மனசு பதறவில்லையா இந்தக் காட்சியைக் கண்டு….நம் மக்களில் ஒருவர் லாரிக்கு அடியில் விபத்தில் சிக்கிக் கொண்டது போன்றதான உணர்வை நீங்கள் அடையவில்லையா…?
நடவடிக்கை தொடரலாம்…அது வேறு. ஆனால் இந்த அவலம்….? இனி நடக்கலாமா? இதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா?
                --------------------------------------------------------------

    
    
    
      .  

     


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...