வாசிப்பனுபவம் ”எஸ்.ரா.வின் அஷ்ரப்…” --------------------------------- -------------------------------------------------
திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னவோ ஒரு ஈர்ப்பு. படித்ததைத் தொகுப்பாக நினைத்துப் பார்க்க
முடிகிறதா? அதற்குரிய நடையில் அது அப்படியே
மனதில் நிற்கிறதா?
இல்லையென்றால் அது
படைப்புக்கான வெற்றி.
அதனால்தான் அதை மறுபடி
படிக்கத் தோன்றுகிறது.
படித்த உடனேயே சொல்லிவிட
முடியுமென்றால் அதில் என்ன ஸ்வாரஸ்யம்? அது
படைப்பின் ஆழத்தைக் குறிக்காது.
அது படைப்புக்கான வெற்றியல்ல.. இப்படியெல்லாம் நமக்கும் தோன்றியிருக்கிறதே
நாம் எழுதியிருக்கலாமே என்று மனம் ஏக்கம் கொள்கிறது. அந்த உருவகம் வராததனால்தானே நீங்கள் அங்கே
முந்திக் கொள்கிறீர்கள்!
நீங்கள் சந்திக்கக் கூடிய மனிதர்களை மற்றவர்களும் சந்தித்திருக்க
முடியாதா? பெரிய தொல்லையாப் போச்சே இவனோட…என்று நினைத்திருக்க முடியாதா? இனி இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதே…வந்தே காலை வெட்டிடுவேன் என்று சொன்னதில்லையா…? அப்படியும் வந்து வந்து தொல்லைப் படுத்திய
நபர்களை சகித்துக் கொண்டதில்லையா?
கிடந்துட்டுப் போறான்
என்று அனுமதித்ததில்லையா?
எல்லாமும் உண்டுதான். ஆனால் இம்மாதிரியான சின்னச் சின்ன நிகழ்வுகள், அனுபவங்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள், துயரங்கள், வெறுப்புகள், வேதனைகள் இப்படி எல்லாவற்றையும் சேகரித்து
வைப்பவன்தானே எழுத்தாளன்.
அதைத் தொகுத்து உருவகப்படுத்தி, வடிவமைத்து, பாங்காகத் தட்டில் வைத்து நீட்டுபவன்தானே
படைப்பாளி…?
அப்படியான பணியை எத்தனை கச்சிதமாகச் செய்கிறீர்கள்…!
எங்கு ஆரம்பித்தது இந்தக் கதை? எப்படியெப்படிப் பயணிக்கிறது? என்பதையெல்லாம் மனதில் நிறுத்த முடியாமல்
திணறும்போதுதான் படைப்பு அதீதமான ஒன்றாகப் பரிமளிக்கிறது. . ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு அடடா…! சம்பவங்களை எப்படியெல்லாம் கோர்த்துக் கோர்த்து அழகான
மாலையாக்கி வாசகனின் கழுத்தில் அணிவிக்க முடிகிறது இவரால்?
பிரமிக்க வேண்டியிருக்கிறது.
மனதை என்னவோ சங்கடப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. எதனால்? அந்த அவனாக இருப்பது நானே என்பதனாலா? அல்லது அவனை அடிக்கடி வந்து சங்கடப்படுத்தும்
அந்த அவனாலா? அந்தச் சங்கடங்களையெல்லாம் சாதுவாக
நின்று சகித்துக் கொண்டு அவனை வெறுத்து ஒரேயடியாக ஒதுக்காமல் என்னவோ ஒரு இருப்பில்
அவனை விடமுடியாமல் தவிக்கிறாரே…அது நானாக என்னை நினைத்துக் கொண்டு
அவஸ்தைப் படுவதனாலா?
அந்த அவஸ்தையை படிக்கும்
வாசகனுக்கு உண்டாக்கியது நீங்கள்தான்.
பெரு நகரங்களில் குடியிருக்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் இருக்கும் இடம் ஒன்று. சென்று செயல்கள் முடிக்க வேண்டிய இடம் வேறொன்று. அல்லது சென்று தேவைகளை முடித்து வர வேண்டிய
இடங்கள் பல.
கெடக்கு கழுத…நாளைக்குப்
பார்த்துக்கலாம்…..எவன் இந்தக் கூட்டத்துல போறது…? ஒரு எடம் போய் ஒரு எடம் வர்றது என்ன சும்மாவா
இருக்கு? எத்தனை பேர் இப்படிச் சொல்லி நகரங்களை
வெறுத்து ஒதுங்குகிறார்கள்.
ஒதுங்கி அக்கடா என்று
விழுந்து கிடக்கிறார்கள்.
ஏனடா இந்த நகரத்துக்குள்
புகுந்தோம் வாழும் பிரஜையாக என்று குமைகிறார்கள்.
எங்கயும் போ வேணாம். இருக்கிற எடமே போதும்…எத்தனை பேர் இப்படிச் சொல்லிப் புலம்பிச்
சிவனே என்று கிடக்கிறார்கள்.
டவுனுக்குள்ளல்லாம் போக முடியாது. இங்கயே எங்கயாச்சும் பக்கத்துல போய் வாங்கிட்டு
வந்திடறேன்…என்று தங்கள் எல்கையை எப்படியெல்லாம்
சுருக்கிக் கொள்கிறார்கள்.
எல்லாம் இந்த நகரம் படுத்தும் பாடு. அதன் பிரம்மாண்டம் காட்டும் காட்சிகள். அதன் மிரட்சிகள். உயிர் துச்சமாக மதிக்கப்படும் அவலங்கள். இதையெல்லாம் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஒரு நாளைக் கடந்து செல்வது என்பது இந்த மாநகரில்
மிகவும் பிரயத்தனப்பட்டு மேற்கொள்ளும் செயலாகிவிட்டது. எதுவும் இயல்பாக
இல்லை.
யாரும்
சந்தோஷமாயிருக்கவில்லை.
எத்தனை வருத்தம் இந்தப் படைப்பாளிக்கு. இந்த சமூகத்தை நிமிர்ந்து பார்த்து அய்யோ…! இந்தப் பாழும் ஜனம் இப்படி அவதியுறுகிறதே…! இந்த மக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
பலவற்றிலும் அல்லல்பட்டு,
அழுது மடிந்து, ஏமாந்து நிற்கும் நல்லவர்களாக இருக்கிறார்களே…! எண்ணிலடங்கா வருத்தங்களைச் சுமந்து கொண்டு
இப்படி நாள் தவறாமல் ஓடுகிறார்களே….!
ஒரு படைப்பாளிக்கு இந்தச் சமூகத்தின்பாற்பட்ட மனச் சுமைகள். முகம் தெரியாப் பலருக்காக வருந்தும் மனித
நேயம்.
ஓடிவந்து பேருந்தில் கால் வைத்துத் தடுமாறி விழும் பெண். அவளை யாரோ தூக்கி விடும் காட்சி. பின் அவள் தனக்குத்தானே அழும் சோகம். அடுத்த பேருந்து வந்தவுடன் இதை மறந்து விட்டு
ஓடிப் போய் ஏறிக்கொள்ளும் ஜனம்.
அந்தப் பெண் அழுவதைக் காண்கிறார்கள். தங்களுக்குள் வருத்தமுறுகிறார்கள். தங்களுக்கு என்றான பேருந்து வந்ததும் ஏறிச்
சென்று விடுகிறார்கள்.
இந்த மக்கள் ஏனிப்படி
இயந்திர கதியாகி விட்டார்கள்.
எந்தத் துயரத்தையும், வருத்தத்தையும், தற்காலிகமாக மின்னி மறையும் காரணிகளாக்கி
தங்கள் இயல்பு வாழ்க்கையில் புகுந்து கொள்கிறார்களே? ஒரே நாளில் எத்தனை எத்தனை காட்சிகள்? எத்தனை அவலங்கள். யாருடைய துயரமும் யாரையும் நிறுத்தி வைக்காத
வேகம் கொண்டது இந்த நகரம்.
எந்த அவமானங்களும், அவலங்களும், அதிர்ச்சிகளும் நகரத்தை ஏன் பாதிக்கவில்லை. நகரம் அதன் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் அதற்குள் ஐக்கியமாகி முடுக்கி விட்ட
இயந்திரங்களாகத் தங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகிலே மனிதர்கள் இட்லி சாப்பிடுவதற்காக மணிக்கணக்கில்
காத்துக் கிடக்கிறார்கள் நகரம் புதைகுழி போல யாவரையும் உள்ளே இழுத்துக் கொண்டேயிருக்கிறது. இதிலிருந்து மீண்டு
வர முடியாது.
நகரம்
ஒரு பெரும் சூதாட்டப் பலகை. அதன் முன்னே உட்கார்ந்து ஆட ஆரம்பித்தவன் வெளியே
எழுந்து போகவே முடியாது. கண்ணை மூடிக்கொண்டு படுத்தால் பேருந்துகள் தலைக்குள்ளாக
ஓடிக் கொண்டேயிருக்கின்றன. ஆட்டோக்களின் இரைச்சல். மனிதர்களின் கோபக்
குரல்கள் மண்டைக்குள் கொப்பளிக்கின்றன. ஏன் இந்த நகரில் குடியிருக்கிறேன்?
இதே கேள்வியோடுதான் பல்லாயிரக்கணக்கானோரும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகரம் பிடித்து யாரும் வாழவில்லை என்றுதான்
தோன்றுகிறது. காலத்தின் கட்டாயத்தில் அங்கே போய்
அடைந்து விட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. வருபவர்களையெல்லாம் புதைகுழியைப் போல் உள்ளே
இழுத்துக் கொண்டேயிருக்கிறது.
வா…வா…வா…இன்னும் வா…இன்னும் வா…என்று கெக்கலியிட்டுப் பிடித்து அந்த மாய
வலைக்குள் தள்ளிக் கொண்டேயிருக்கிறது.
எஸ்.ரா.வின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது நம்
மனதுக்குள் நடுக்கம் பிறக்கிறது.
ஒரு நாள், இரண்டு நாட்கள் என நகருக்கு வந்து திரும்பும்
நமக்கு ஏற்படும் மன நடுக்கங்கள்.
அந்தப் போக்குவரத்தும், நெரிசலும், மக்களின் அவசரங்களும், வாகனங்களின் ஓயாத இரைச்சலும், அதன் அசுர வேகங்களும், நம்மை பயங்கொள்ள வைக்கின்றன.
இந்த நகரத்தில்தானே நம் பையனை விட்டு வைத்திருக்கிறோம். நம் பெண்ணே இந்த மாநகரத்தின் நடுப்பகுதியில்தானே
வாழ்ந்து வருகிறாள்.
டே!
பார்த்து…பார்த்து…கவனம்…என்ன…புரிஞ்சிதா…? ஜாக்கிரதடா செல்லம்…
பார்த்தும்மா…டூ
வீலர்ல போகாதம்மா…..பஸ்லயே போக முடியுமான்னு பாரும்மா…வேண்டாண்டா கண்ணு….சொன்னாக் கேளுடா…
எத்தனை பெற்றோர்கள் தொலைபேசியில் அனுதினமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்
தம் வாரிசுகளிடம்.
அப்பாவி மக்கள். விகல்பமில்லாத மூத்த தலைமுறையினர். அவர்களின் மனசு அவர்களுக்குத்தான் தெரியும். அதை முற்றிலும் புரிந்தவர் யார்? நல்லதையே எண்ணி, நல்லதையே செய்து, நல்லதுக்காகவே வாழ்ந்து மடியும் ஒழுக்கமும், கட்டுப்பாடும், பேணிய பெரியோர்கள். இந்த நகரச் சிதைவுக்குள் அவர்களின் நெஞ்சங்கள்
நடுங்குவது நியாயந்தானே?
படைப்பாளி
இவற்றையெல்லாம் எத்தனை ரத்தினச் சுருக்கமாக தனக்கே கைவந்த அற்புதமான மெல்லிய நடையில்
ஓராயிரம் அர்த்தங்களைத் தரும் சிறு சிறு வார்த்தைகளைப் போட்டு கதையை எவ்வளவு அழகாக
நகர்த்திச் செல்கிறார்?
மனதுக்கு எத்தனை இதமாக, மயிலிறகு கொண்டு வருடி விட்டது போல் இருக்கிறது
இந்த நடை. சும்மா வருமா? எழுதிப் பார்த்தால் உடனே வந்து விடுமா?
எல்லோருக்கும் எல்லாமும் தோன்றுகிறதுதான். ஆனால் எத்தனைபேரால் அதை இப்படி வடிக்க முடிகிறது? வடித்து மனதில் நிறுத்த முடிகிறது.?
இப்படியான நெருக்கம் மிகுந்த நகரத்தின் ஒரு மூலையில் சந்துக்குள், ஒரு பொந்துக்குள் குடியிருக்கும் ஒருவனைப்
பற்றிச் சொல்லிக் கதையை ஆரம்பிக்கும் விதம் உங்களைக் கை பிடித்துக் கூடவே அழைத்துச்
செல்வதை நீங்கள் உணருகிறீர்களா?
அப்படி உணர்ந்தால்
உங்களுக்கும் ஆழ்ந்த ரசனை இருக்கிறது என்று பொருள். .இல்லையென்றால் நீங்கள் இயந்திர கதியாக இயங்குகிறீர்கள்
என்று கொள்ளலாம்.
மனதில் ஆழமாக வாங்காமல்
வரிகளைக் கடந்து செல்கிறீர்கள் எனலாம். கதையைப்
படிக்கும்போதே அந்தப் பாத்திரத்தோடு ஒன்றிவிட முடிகிறதா உங்களால்? அந்த அளவுக்கான சக்தி அந்த எழுத்துக்கு இருக்கிறதா? சொல்லும் விதம் உங்களை அப்படியாக ஈர்க்கிறதா? ஈர்க்கும். நிச்சயம் ஈர்க்கும். அதுதான் எஸ்.ரா.வின் அற்புதமான எழுத்து அபிநயம்.
நகரத்தில் பல்லாண்டுகளாகக் குடியிருக்கும் அவன். திருமணம் ஆகப் பெறாதவன். போதுமான வருமானமில்லாதவன். அழகான பெண்களைக் காணும்போது குற்றவுணர்ச்சி
மேலோங்குகிறது அவனுக்கு.
நகரப் பேருந்தைப் பயன்படுத்தியே
அலுவலகம் போய் வருகிறான்.
அத்தனை வருடங்கள் வேலையில்
குப்பை கொட்டியும்,
ஒரு வாகனம் கூட வாங்கும்
தகுதி அவனுக்கு வாய்க்கப் பெறவில்லை. இன்னும்
அழுந்திக் காலூன்ற முடியாமல் கிடக்கிறான். எல்லாம் அவனின் இயலாமை. அதன் அடையாளமாய் அவன் குடியிருக்கும் அறை. அதுவும் அவனைப்போலவே. அழுக்கேறிய சுவர்கள். அவன் சோகத்தைப் பிரதிபலிக்கின்றன. மரக்கதவுகள் எலிகளால் கரண்டப்பட்டுத் துளை
விழுந்து கிடக்கின்றன.
ஒரு மடக்குக் கட்டில. பழைய ரேடியோ ஒன்று. ஒரு பழைய நடிகை படக் காலண்டர் ஒன்று. அடப் பாவமே…! அவனுக்கு அந்தக் காலண்டர் பெண்தான் துணை. அவளோடு பேசுகிறான் மானசீகமாக. கூடக் குடியிருக்கும் பிற ஜீவன்கள் மரப்பல்லி, சிலந்திகள், எலி, இரண்டு காக்கைகள், எப்போதாவது வந்து போகும் அணில், கூடவே
மூட்டைப் பூச்சிகள் இத்தனை அசௌகரியங்களுடே அவனின் வாழ்க்கை. மின்சாரம் இல்லாத நாட்களில் கூட அயர்ந்து
உறங்கப் பக்குவப்பட்டிருக்கிறான் அவன். அவனின்
பழக்கங்கள் அவனுக்கு மிகப் பெரிய பலவீனங்களாகத் தோற்றமளிக்கின்றன. ஆனாலும் அவற்றை உணர்ந்து சகித்து வாழப் பழகிக்கொண்டிருக்கிறான். இவற்றினூடேதான் கதவைத் தட்டுகிறான் அஷ்ரப். தேடி வரும் எல்லோரும் கதவைத்தானே தட்டுவார்கள். இந்த அஷ்ரப் ஜன்னலைத் தட்டுகிறான். அதன் மூலமாகத் தான் அறிமுகப்படுத்தும் அந்தப்
பாத்திரம் என்னமாதிரிக் குணாதிசயங்கள் உள்ளவன் என்பதை இந்தச் சிறு நிகழ்வின் மூலமாக
நமக்கு எடுத்து வைக்கிறார் எஸ்.ரா. கதவைத் தட்டுவதிலும் கூட ஒரு திருட்டுத்தனம்
அந்தப் பாத்திரத்திற்கு இருப்பதாகத்தான் நாம் உணர முடிகிறது. அர்த்த ராத்திரியில் அப்படி வந்து மெல்ல
ஜன்னலைத் தட்டுபவன் வந்திருப்பது நான்தான் என்று துல்லியமாக உணர வைக்கும் பாங்கு என்பதை
நமக்கு உணர்த்துகிறதல்லவா?
எழுத்தாளன் இப்படியாகத்தானே யோசித்தாக வேண்டும் சொல்வதைப் வித்தியாசப்படுத்தினால்தானே
படைப்பாளி. . .
இப்படிச் சொல்லி ஆரம்பித்து
அந்தப் பாத்திரத்தை எப்படியெல்லாம் வடித்தெடுத்திருக்கிறார் எஸ்.ரா.
அஷ்ரப்பை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம். உங்களுக்கும் அவன் கொடுக்கும் இடைஞ்சல்களான
அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.
நீங்களும் அவனைச் சகிக்க
முடியாமல் கோபப்பட்டிருக்கலாம்.
அவன் பொறுட்டு நீங்கள்
நஷ்டப்பட்டிருக்கலாம்.
ஆனாலும் போகட்டும்
என்று விட்டிருக்கலாம்.
இத்தோடு தொலையட்டும்
என்று நினைத்திருக்கலாம்.
பிறகும் அந்தத் தொல்லை
உங்களைச் சூழ்ந்திருக்கலாம்.
ஆனாலும் உங்களுக்குக்
கோபம் வராமல் இருந்திருக்கலாம்.
இரக்கம் பிறந்திருக்கலாம். மீண்டும் உதவியிருக்கலாம். அந்த உதவியும் மதிக்கப்படாமல் போயிருக்கலாம். உங்களையே எதிர்த்திருக்கலாம். பிறகு மன்னிக்கப்பட்டிருக்கலாம்.
எல்லாமுமாய்த்தானே
இந்த வாழ்க்கையில் மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படியான ஒருவன் ஏன் இருக்கக் கூடாது. அப்படியான ஒருவன் ஏன் நம் காலைச் சுற்றிய
பாம்பாய் நம் அனுபவ எல்கைக்குள் வந்திருக்கக்கூடாது? உதறவும் முடியாமல், கை கோர்த்துக் கொள்ளவும் முடியாமல் நீங்கள்
ஒருவனை இந்த வாழ்க்கையில் சந்தித்ததேயில்லையா? உறவுகளுக்குள் இருக்கிறார்கள். நட்பு வட்டத்திற்குள் இருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். விடாது கருப்பு என்பதுபோல் நம்மை ஆட்டிப்
படைத்திருக்கிறார்கள்.
விநோதமான குணங்கள் படைத்தவர்களாய். விபரீதச் சிந்தனை கொண்டவர்களாய். தான் நினைப்பதுதான் சரி என்பதான பிடிவாதம்
உள்ளவர்களாய். தனது எண்ணங்கள் வக்கிரமானவை என்பதை
உணராதவர்களாய்.
ஆனாலும் வந்து வந்து
தொல்லைப் படுத்துபவர்களாய்.
நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? நான் சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் ஏமாறியிருக்கிறேன். அவர்களை நம்பியிருக்கிறேன். மீண்டும் ஏமாறியிருக்கிறேன். இரக்கம் கொண்டிருக்கிறேன். உரிமையளித்திருக்கிறேன். நஷ்டப்பட்டிருக்கிறேன். கண்ணீர் சிந்தியிருக்கிறேன். ஆனாலும் மனிதர்களை வெறுக்கப் பழகியவனில்லை. இப்படித்தான் இருக்கும் என்கிற பக்குவம்
வந்து விடுகிறதே அதைத் தந்தவர்கள் அவர்கள் அல்லவா? எங்கோ ஒரு மூலையில் அவனுக்கான மனசாட்சி அவனை
உருத்திக்கொண்டிருக்குமே!
அதை என்றேனும் ஒரு
சில கணங்களாவது உணராமலா போய் விடுவான்?
இந்த அஷ்ரப் அப்படித்தான் இருக்கிறான். கதையின் நாயகன் அவன்தான். அவனால் துன்பப்படுபவர் மணி. அஷ்ரப் சொல்கிறான் –
“இந்த ஊரில் எனக்குத் தெரிந்த
அத்தனை பேரும் நிம்மதியாக இருக்கிறீர்கள். நான் ஒரு ஆள் நிம்மதியில்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறேன். இதுக்கு நீங்கள் அத்தனை பேரும் காரணமில்லையா? எதுக்கு என்னை ஒதுக்கி
வைக்கப் பார்க்கிறீர்கள்?
உங்களுக்காக நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. என்னைச் சகித்துக்
கொள்ள முடியாத அளவிற்கு ஏன் நீங்கள் தரம் தாழ்ந்து போயிருக்கிறீர்கள்? அதை நான் தெரிந்து
கொள்ள வேணும்.
என்னை எல்லோரும் சந்தேகப்படுகிறீர்கள். முதுகிற்குப் பின்னால்
ஏளனம் பேசுகிறீர்கள். எனக்கு ஒரு திறமையும் கிடையாது. நான் அப்படி இருப்பதாகச்
சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஒன்றும் செய்யாத ஒருவனை வைத்து காப்பாற்ற ஏன் ஒரு
ஆள் கூட முன்வருவதில்லை? இந்த உலகத்தில் உதவாத எத்தனையோ பொருட்கள் இருக்கத்தானே
செய்கின்றன.
அதை
அனுமதிக்கும் உங்களுக்கு என்னோடு மட்டும் என்ன பிரச்னை?
பாத்திரத்தின் வடிவமைப்பு நோக்குங்கள். வெட்டியாய் இருக்கும் ஒருவனின் விதண்டாவாதமான
பேச்சு. விட்டேற்றியான வார்த்தைகள். இத்தனையையும் சொல்லிக் கொண்டு மணியண்ணனின்
அறைக்கு வந்து வந்து போகிறான் அஷ்ரப். அங்குள்ள
பொருட்களைத் திருடிக் கொண்டு செல்கிறான். தன்
அறையைப் போல் உரிமையோடு இருந்து கொள்கிறான். தன்னின் தவறுக்காக வருந்துகிறான். மன்னிப்புக் கேட்கிறான். ஒரு சமயத்தில் எதிர்க்கிறான். தகாத வார்த்தைகள் பேசுகிறான். பக்கத்து வீடுகளில் பழகி இவரின் பெயரைச்
சொல்லிப் பணம்
வாங்கிக் கொண்டு போய்விடுகிறான்.
குடித்துவிட்டு வந்து
அட்டகாசம் பண்ணுகிறான்.
பிறகு தெளிந்து வந்து
மன்னிப்பு வேண்டுகிறான்.
உத்தரவில்லாமலேயே அறையைச்
சுத்தம் செய்கிறான்.
துணி துவைத்துப் போடுகிறான். பிறகு இந்த வேலையெல்லாம் சும்மாவா செய்ய
முடியும். காசைக் கொண்டா என்கிறான். ஒரு பெண்ணை லவ் பண்ணினேன் என்கிறான். கல்யாணம் செய்து கொள்கிறான். பிறகு கைவிட்டு விடுகிறான்.
திடீரென்று வேறொரு நட்பு. அவனின் தந்தை காவல் துறை டி.ஜி.பி. அந்தப் பையனிடம் நட்பு கொண்டு, அவனோடு ஊர் சுற்றி விட்டு, அவன் தந்தையின் பதவியைப் பயன்படுத்தி, தன்னை நெருக்கமாக உணர்த்தி பெண் போலீஸ் இருவரிடம்
பதவி உயர்வு பெற்றுத் தருவதாகச் சொல்லிப் பணம் பறித்து, அந்த அதிகாரியின் வீட்டு வேலைக்காரியிடம்
பாலுறவு நட்புக் கொண்டு,
அந்தப் பையன் விநோத்தின்
தங்கையின் மோதிரத்தைத் திருடி விற்று என்று ஏகப்பட்ட தப்புகள் செய்கிறான்.
அஷ்ரப்பின் பாத்திரம் அத்தனை இயல்பாக வடிக்கப்பட்டிருக்கிறது
எஸ்.ரா. அவர்களால். நமக்கே அவன் தொடர்ந்து பலரையும் ஏமாற்றுவதை
சகிக்க முடியவில்லை.
ஆனாலும் அதில் இருக்கும்
சுவை நம்மை கூடவே அழைத்துச் செல்கிறது. அதையும்
உணர்ந்து ஓரிடத்தில் சொல்கிறார் எஸ்.ரா.
அவனிடம் கடைசியாக ஏமாந்த அந்த விநோத் என்கிற பையன் மணியண்ணன்
அவர்களைச் சந்தித்து இந்த விபரங்களையெல்லாம் சொல்கிறான்.
அவனை என்ன செய்யப் போகிறாய்? என்கிறார் மணி.
ஒன்றும் செய்யப் போவதில்லை. அப்படியே விட்டுவிட வேண்டியதுதான் இனி அவனின்
நட்பைத் தொடராமல் என்கிறான் அவன்.
அந்த இடத்தில் ஒன்று சொல்கிறார் எஸ்.ரா.
”ஏமாந்து போனவர்கள் தன்னைப் போலவே மற்றவர்களும்
இருப்பதில் சந்தோஷம் கொள்கிறார்கள்.”
அத்தோடு அஷ்ரப்பின் தவறுகள் முடிந்தனவா? அதுதான் இல்லை. அடுத்த வாரமே அண்ணாசாலையில் அதே வினோத்தோடு
வண்டியில் செல்கிறான் அவன்.
அதுபோலவே மணியண்ணனின்
வீட்டிற்கு வந்து அவர் எதிர்பார்க்காமல் சில காரியங்களைச் செய்து வைத்து விட்டு, கிணற்று வாளியைத் திருடிக் கொண்டு சென்று
விடுகிறான். இப்படி இருப்பவன் கடைசி வரை இப்படித்தான்
இருப்பான் என்பதாக.
அந்நியன் திரைப்படத்தில் விக்ரமின் பாத்திரம் கடைசியாக இப்படித்தான்
முடியும். நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப்பின்
குணமான அம்பி, ரயிலில் பயணம் செய்யும்போது அந்நியனுக்கான
குணத்தோடு ஒரு தீமையை அழிப்பதுபோல் காட்சி வந்து படம் முடியும். அதுபோல் முடிகிறது இந்தக் கதையும்.
ஒரு தேர்ந்த இயக்குநரால் யதார்த்தமான ஒரு குறும்படமாக குறைந்தது
ஒரு மணி நேரப் படமாக இந்தச் சிறுகதை ஆக்கப்படுமானால் எஸ்.ரா. எப்படி அனுபவித்து இந்த அஷ்ரப் பாத்திரத்தைப்
படைத்திருக்கிறாரோ அப்படியே அழகாக, ஆழமாக
வடித்தெடுக்கலாம்.
அந்த அளவுக்கான யதார்த்தமான
அனுபவச் செறிவினை இந்த அற்புதமான சிறுகதையின் மூலமாக நம் முன்னே வைத்திருக்கிறார் திரு
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.
உயிர்மை
100 வது இதழில் எடுத்த
எடுப்பிலேயே படித்து முடிக்கப்பட்ட இந்தச் சிறுகதை ஒரு சிறந்த சுகானுபவம். திரும்பத் திரும்பப் படிக்க வைத்த திறமையான
எழுத்து அனுபவம். நாமும் இப்படி எழுத வேண்டும் என்று ஊக்கம் தந்த வாசக அனுபவம்.
சற்றுப் பொறுங்கள். யாரோ ஜன்னலைத் தட்டுவது போலிருக்கிறது. ஒரு வேளை அஷ்ரப்பாய் இருக்குமோ என்னவோ…!!! --------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக