13 அக்டோபர் 2018

தண்ணீர் - கண்ணீர் - கட்டுரை - கைத்தடி மாத இதழ்


 தண்ணீர்…கண்ணீர்….!  கட்டுரை
--------------------------------------
ரசுக் கடனில் கட்டிய அந்த வீட்டுக்கு நாங்கள் குடிபோன போது குனிந்து கைகளால் அளையும் எட்டத்தில் இருந்தது கிணற்றுத் தண்ணீர். அப்போதெல்லாம் கிணறுதான் தோண்டினார்கள். ஆழ்துளைக்கு அவசியம் இருக்கவில்லை. அதனால் அன்றாடம் கட்டப்பட்ட பகுதிகளுக்கு சதும்பத் தண்ணீர் விட முடிந்தது. எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீர் விட்டு கட்டப்பட்ட சுவர்களை ஈரப்படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை கெட்டிப்படும். பலமாகும்.
ஒன்றுக்கு ஐந்து போட்டாலும், நன்றாகத் தண்ணீர் விட்டோமானால் வீட்டுக்கு நல்லது.  . அதென்ன ஒன்றுக்கு ஐந்து?. ஒரு தட்டு சிமின்ட் ஐந்து தட்டு மணல். இவ்விரண்டையும் சேர்த்த கலவையில் செங்கல் சுவர்களை எழுப்புதல்.
கட்டடம் கட்டும்பொழுதே பெரிய அகலமான பேசினில் தண்ணீர் வைத்து அதில் சுட்ட செங்கல்களைப் போட்டு ஆறப்பண்ணி, அந்த ஈரச் செங்கல்களைத்தான் சுவர் எழுப்ப எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலும் அப்படி நடவாது. நாம் நின்று கண்காணிக்கும் வேளையில் அதைச் செய்வார்கள். இப்படி நகர்ந்தால் கடகடவென்று வெறும் சுட்ட செங்கலில் சுவர் உயர்ந்து விடும். பிறகாவது தண்ணீர் ஊற்றி ஊற்றி ஈரப்படுத்துதல் நலம். அதே போல் சீலிங் எழுப்பி இருபத்தியோரு நாட்கள் தண்ணீரில் ஊற வேண்டும். தினமும் சீலிங்கில் நின்று கொண்டு வாட்ச்மேன் சுற்றுச் சுவர்களுக்குத் தண்ணீர் அடித்தலும், சீலிங்கிற்கு தண்ணீர் நிரப்புதலும் நாம் பார்த்திருக்கலாம். அதுவே முறையான பராமரிப்பு. இப்படியாக வீடு கட்டுதலில் ஒவ்வொரு கட்டத்திலும் தண்ணீரின் தேவை மிக மிக அத்தியாவசியமாகிறது. நாம் உயிர் வாழ்வதற்கே அதுதானே ஆதாரம்.  
…இதெல்லாம் தண்ணீர் செழுமையாக இருந்த காலகட்டம். எண்பதுகள், தொண்ணூறுகளில் நிலத்தடி நீர் (நகரிலிருந்து கொஞ்சம் விலகிய பகுதிகளில்) அருகில் இருந்ததுதான். வீடு கட்டுபவர்கள் வெறும் எழுபதடி, எண்பதடி தொண்ணூறு அடி என்றுதான் போர் போட்டார்கள். யாரும் நூறு, நூற்றைம்பது என்றாலே அஞ்சுவார்கள். எதற்கு வெட்டியாய்க் காசு செலவு செய்து கொண்டு என்று.
நாங்கள் குடி போனபோது அருகில் வீடுகளே கிடையாது. சுற்றிலும் வயற்காடுகள்தான். கிரஉறப்பிரவேசப் பத்திரிகையில் பஸ் ஸ்டாப் எது, அங்கிருந்து எப்படி வர வேண்டும் என்று ஒரு ரைஸ் மில்லை அடையாளம் வைத்து வரைபடம் போட்டு ஆட்களை வரவழைத்தேன். வயல் வரப்பில் நடந்து விசேடத்திற்கு வந்தார்கள். நடந்து வருகையில், தவறினால் தேங்கியிருக்கும் சகதியில்தான் விழ வேண்டும். அந்தளவுக்கு தண்ணீர் ததும்பி நின்ற காலம். என் அலுவலக நண்பர் ஒருவர் வீடு கட்ட வானம் தோண்டுகையில் தண்ணீர் ஊற்று, பெருகிக் கொண்டேயிருந்தது. மோட்டார் வைத்து அதை வெளியேற்றினார். வெளியேற்ற வெளியேற்ற விடாத ஊற்று. அதற்கே அவருக்குப் பெரும் செலவு.
எதற்குச் சொல்கிறேனென்றால் அருகில் இருந்த மிகப் பெரிய கண்மாய் ஒன்றின் தேவையை முன்னிட்டுத்தான். அதுதான் அந்தப் பகுதி மக்களுக்கு, அதாவது சுமார் மூன்று கி.மீ. சுற்றளவில் குடியிருந்த மக்களுக்கு அட்சயபாத்திரமாய் இருந்து உதவியது. ஒரு முறை அது நிரம்பினால் போதும். காலத்துக்கும் கவலையில்லை. விடாது மழை பெய்த ஒரு பருவத்தில் தண்ணீர் தளும்பி வேறு வழியின்றி கண்மாயின் ஒரு பகுதியை உடைத்து விடும் நிலை ஏற்பட்டது. அப்போது எங்கள் காலனியில் தொடையளவு தண்ணீர். பலரும் ரெண்டு மூன்று நாட்கள் பயந்து நடுங்கிப் போனார்கள். கண்மாய் மேட்டில் குடி கொண்டிருந்த அய்யனார்தான் காப்பாற்றினார் என்று அவருக்குப் பொங்கலிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கலாச்சார ரீதியிலான மக்களின் நம்பிக்கைகள் மதித்துப் போற்றப்பட வேண்டியவை.
குறைந்தது பதினைந்து ஆண்டுகள் கழிந்த பொழுதில்தான் அந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்னையே வந்தது. வெறும் மூன்று மூன்று சென்ட் இடங்களாகப் பிரிக்கப்பட்ட அந்தப் பகுதி ரொம்பவும் நெருக்கமாகிப் போனது. வீட்டுக்கு வீடு போர்க் குழாய்கள். எண்பது, நூறு, நூற்றைம்பது, இருநூறு, இருநூற்றைம்பது, முன்னூறு என்று போய் நீ பெரிசா…நான் பெரிசா என்கிற ரீதியில் முன்னூற்றைம்பது நானூறில் வந்து நிற்கிறது இன்று. யார் அதிக அடி போர் போட்டிருக்கிறார்களோ அவர்களே பெருமைக்குரியவர்கள். ஜெட் மோட்டாரெல்லாம் என்றோ காலாவதியாகி, கம்ப்ரெஷரில் வந்து நிற்கிறது இன்று. அது மணலோடு கரைசலாய் அள்ளிக் கொட்டுகிறது தண்ணீரை. வெறும் சுண்ணாம்பு. ஒரே ஆயில் வாடை…..வாய் கொப்பளிக்க ஆகாது…..அதில்தான் குளியல், துவைத்தல், பாத்திரம் கழுவல்….சகலமும்…..கண்மாய் வறண்டு அம்போ என்று நிற்கிறது. அருகில் ஒரு பெரிய மேல் நிலைத் தொட்டியைக் கட்டி, ஊருக்குத் தண்ணீர் கொடுக்கிறேன் என்று மேலே ஏற்றிய காலத்திலே நிலத்தடி நீர் குறைய ஆரம்பித்து, இன்று அந்தத் தொட்டிக்கும் தண்ணீர் இல்லை. அரசு போட்ட குழாய்கள் அத்தனையும் அடைபட்டுப் போனது.  வீட்டுக்குக் குழாய் வரும் என்று பணம் கட்டியவர்கள் இன்றுவரை வாய் பிளந்து நிற்கிறார்கள். யானை வாயில் போன கரும்பு….!
மழை நீர் சேகரிப்புக்கு அரசு அழுத்தம் தர, பல வீடுகளில் அதைச் செய்தார்கள். நாங்கள் வற்றிய கிணறை அதற்குப் பயன்படுத்திக் கொண்டோம். மாடித் தண்ணீர் மொத்தமும் அதில் வந்து விழும். அருகில் போர் போட்டு பைப் இறக்கியிருந்தது. ஆனாலும் முன்னூறடிக்கு மேல் ஆழத்தில் கம்ப்ரெஷர் சுண்ணாம்போடு அடித்துக் கிளப்பி கொண்டு தள்ளுகிறது. கால் தொட்டி தண்ணீர் நிறைந்தால் அதில் மூன்றில் ஒரு பங்கு சுண்ணாம்பு. இதுதான் இன்றைய நிலை. மழை நீர் சேகரிப்பு  தயார் நிலையில் இருந்தாலும், மழை பெய்தால்தானே…! இறைக்க இறைக்கத்தானே ஊறும்….பூமிக்கடியில் ஊற்று வேண்டாமா?
எங்கள் பகுதி மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்க ஆரம்பித்து வெகு நாளாயிற்று. அருகிலுள்ள கிராமங்களிலிருந்து டிராக்டர் இணைந்த டாங்க் தண்ணீரை நிரப்பி வந்து கேட்போருக்கு இறக்கி விட்டுப் போகிறார்கள். தொட்டியின் அளவிற்கேற்றாற்போல் இருநூறு, முன்னூறு என்று வியாபாரம் தூள் கிளப்புகிறது. எத்தனை நாளைக்கோ…! தண்ணி கல்கண்டு மாதிரி இருக்கும் சார்….!சொல்கிறார்கள்.
பாட்டில் தண்ணீர் இருபதுக்கு வாங்கி என்றோ குடிக்கப் பழகிக் கொண்டோமே…! பிறகு இதற்கென்ன? குடும்ப பட்ஜெட்டில் தண்ணீரும் சேர்ந்து கொண்டது எப்போதோ..! அதுவும் ஒரு முக்கியச் செலவினம்.. காசு இப்படி வந்து அப்படிப் போகிறது…! செல்வம்…செல்வம்…செல்வோம்….என்று…..கை மாறிக் கொண்டேயிருக்கிறது. காசு தண்ணீராய்ச் செலவாகிறது என்ற சொலவடை எவ்வளவு பொருத்தம்…!
பருவ மழை இல்லை என்று ஆகிப்போனது. எப்பொழுதாகிலும் வெப்பச் சலனத்தில் மழை பெய்தால்தான் உண்டு. சென்னை போன்ற பெரு நகரங்களில் அடிச்சா மொட்டை…..…வச்சா குடுமி என்கிற கதையாய் பெய்து அழித்தல் அல்லது போகிற போக்கில் உங்களுக்கும் கொஞ்சம், இந்தா பிடி… என்கிற கதையாய்த்தான் மழையைக் காண முடிகிறது. அதுவும் எங்கேனும் ஒரு பகுதியில் என்பதாய். மொத்த நகருக்கும் என்ற முறையெல்லாம் என்றோ இல்லாமல் போய் விட்டது.
இந்தியாவில் 78 சதவிகிதம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்று புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன. 2025 ல் 60 சதவிகிதம் நிலத்தடி நீர் காலியாகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோடையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பதே பெரிய கேள்வி.  மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கோடைக் காலம். கொஞ்சமேனும் இந்த மாதங்களில் வெப்பச் சலனத்தால்  கோடை மழை பெய்து அடித்தால்தான் பிழைத்தோம். இல்லையென்றால் தண்ணீர் கஷ்டத்தைச் சமாளிப்பது  பெரிய அபாயமாகிப் போகும்….!     
---------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...