15 அக்டோபர் 2018

“இப்படியும் நடக்கும்” - சிறுகதை - இளந்தமிழன் மாத இதழ்


        இப்படியும் நடக்கும்”         சிறுகதை
     -------------------------------------------
     ர்சிலிருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான் கேசவன். எண்ணும் வேகத்தில் படபடப்புத் தெரிந்தது. மெதுவா…மெதுவா நோட்டு கிழிஞ்சிடப் போகுது…என்றாள் சங்கவி. கிழியட்டும், நல்லா கிழியட்டும்…என்றான் கோபமாக.
     இதற்கு எப்படி எதிர் பதில் சொல்வது? சொன்னால் இன்னும் கோபிப்பான். சண்டை வரும். வருமில்லை. வளரும். ஏற்கனவேதான் சண்டை வந்தாயிற்றே? தொடர்ச்சிதானே இது….
     ரெண்டாயிரம் குறையுது…ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் அஞ்சாயிரம். அதுல ரெண்டாயிரத்தை இப்டித் தூக்கி சூரை விட்டா? என்ன வயித்தெரிச்சல்? அதுக்குள்ளேயும் வந்து பிடுங்கிட்டுப் போயிட்டானுங்களா? ஆளாளுக்கு வந்து வெட்கமில்லாமக் கேட்டு வாங்கிட்டுப் ஓடிற்றாங்க…இன்னும் எத்தனை பேரோ? ஊருக்கும் வெட்கமில்லை…இந்த உலகுக்கும் வெட்கமில்லை…அவ்வளவுதான்….-நிறுத்திய அவனை உற்றுப் பார்த்தாள். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்வது இங்கிருந்து கேட்டது இவளுக்கு.
     எதுக்கு இத்தனை பதட்டம்? வருஷா வருஷம் கொடுக்கிறதுதானே?
     ஆம்மா…கொடுக்கிறது. எவனோ கொடுத்து வச்சிருக்கான் பாரு…தூக்கிப் பறக்க விடுறதுக்கு?வருஷாவருஷம் கொடுக்கிறதாம்…நல்லாச் சொல்லுவியே…?
     அப்போ இல்லேங்க வேண்டிதானே….! தர முடியாதுப்பா…வசதியில்லே…..- சொல்லிட்டா முடிஞ்சி போச்சு…..
     நீ சொல்ல வேண்டிதானே….நீதான வீட்டுல இருக்கே….சாமர்த்தியமாச் சொல்லி அனுப்பணும்…நான் .லீவு போட்டுட்டு இதைச் சொல்லிட்டிருக்க முடியுமா? .
     என்னால முடியாதுங்க… ….நீங்க ஆபீஸ் போயிடறீங்க…நா வீட்ல கெடக்கேன்…போஸ்ட்மேன், பால்காரன், அயர்ன் பண்றவன், கூரியர் தபால்காரன், வாட்ச்மேன்னு எல்லாரும் நா இருக்கிறபோதுதான் வர்றாங்க…ஒருத்தரும் காலை வேளைல வர்றதில்லை….ஏழாச்சுன்னா பஸ்ஸூக்கு நேரமாச்சுன்னு ஓடிடறீங்க…அப்புறம் ஊரடஞ்சுதான் வர்றீங்க…நானென்ன செய்யட்டும். வருஷங் கூடி தீபாவளிக்கு ஒரு தடவைம்மான்னு கேட்குறாங்க…? எப்டி இல்லன்னு சொல்றது…? இனிமே வர்றவங்கள ஞாயித்துக்கெழமை வந்து அவர்ட்ட நேரடியா வாங்கிக்குங்கன்னு சொல்லிடறேன்…போதுமா…?
     அதான் எல்லாருக்கும் கொடுத்தாச்சே…இன்னும்  என்ன இனிமே? இதுக்கெல்லாம் நம்ம சுப்ரமணியன்தான் சரி…யார் கேட்டாலும் இல்லன்னு சொல்லிடுவார்…எதுக்குங்க உங்களுக்குக் கொடுக்கணும்…நீங்க சம்பளம் வாங்குறீங்க., வேலை செய்றீங்க…நான் ஏன் உங்களுக்குத் தீபாவளிக் காசு கொடுக்கணும்னுவார்…வீட்லயும் சரி, ஆபீஸ்லயும் சரி, அவர்தான் கரெக்ட்…
     அப்போ அவரப்போல இருங்க…முறிச்சுச் சொல்லுங்க… …ஆரம்பத்துலயே நான் உங்கள்ட்டக் கேட்டனில்லையா? கேட்டுட்டுத்தானே கொடுக்க ஆரம்பிச்சேன்….இப்போ பணம் இவ்வளவு குறையுதேன்னு வயித்தெறிச்சப் பட்டா? இன்னும் காஸ்காரன், பேப்பர் போடுறவன்னு சிலர் இருக்காங்க….
     வயித்தெறிச்சல்தாண்டீ? குளிரவா செய்யும்? அந்த ரெண்டாயிரம் இருந்தா பையன் டிரஸ்ஸை முடிச்சிருவேன். உனக்கு ரெண்டு புடவை எடுத்தா தீபாவளி முடிஞ்சிது…ஒரு மாசம் வீட்டுச் சாமான் ஆச்சு….சும்மாவா? எதாச்சும் ஒண்ணு வள்ளிசா முடியுமே? வெறுங்கை முழம் போடுமா?
     எதுக்கு இப்டிப் புலம்புறீங்க…? கொடுத்தது கொடுத்தாச்சு…இனிமே அடுத்த வருஷம்தானே…விடுங்க….
     என்னடி சர்வ சாதாரணமா விடுங்கன்ற? போஸ்ட்மேனுக்கு எதுக்கு நூறு கொடுத்தே? காந்தி நகர் சங்கக் குப்பை வண்டிக்கு மட்டும் கொடுன்னுதானே சொன்னேன்…பஞ்சாயத்துக்காறங்களுக்கு ஏன் கொடுத்தே? அவன் ஆடிக்கொருதரம், அமாவாசைக் கொருதரம் டிராக்டர் ஓட்டிட்டு வர்றான்…இப்ப அவன் ஒரு வாரமா வந்ததே தீபாவளிக்காகத்தான்…அந்த வசூல் ஒழுங்கா நடக்கணும் அவங்களுக்கு….நீபாட்டுக்கு அள்ளி வீசினேன்னா? எவன்ட்ட இருக்கு ஐவேஜூ?  யாரானாலும் அம்பதுக்கு மேல கொடுக்காதன்னுதானே சொன்னேன்…இஷ்டம்னா வாங்கிக்கட்டும், இல்லன்னா போகட்டும்…. அநியாயமா இருக்கு? வாங்கி எண்றதுக்குள்ள பறிச்சிட்டுப் போயிடறாங்க…? அந்த அஞ்சாயிரத்தை ஒரு வாரமாச்சும் பீரோக்குள்ள வச்சிப் பூட்ட முடிஞ்சிதா? எங்கிருந்துதான் மோப்பம் பிடிப்பானுங்களோ? ஒரு அஞ்சாயிரம் உள்ளே சுளையா இருக்குங்குற சந்தோஷத்தைகொஞ்ச நாளைக்காச்சும் நினைச்சு அனுபவிக்க முடிஞ்சிதா?  இது உங்காசில்லய்யா…எங்களோடதுன்னுல்ல பிடுங்கிட்டுப் போயிடறானுங்க…?  ஒரு வருஷமா நான் இந்தத் தெருவுல போய் வந்திட்டிருக்கேன்…தீபாவளிக் காசு கொடுங்கன்னு கேட்பானுங்க போலிருக்கு…தெனம் ஒருத்தர் இந்தக் கடைசில இருக்கிற கண்மாய்ல மாடு குளிப்பாட்டப் போறார்...பார்த்திருக்கேல்ல? அவர் கூடக் கேட்டுருவார் போலிருக்கு…ஒரு பழக்கத்துக்குக் கூடச் சிரிச்சு கிரிச்சு வைக்கக் கூடாது. அடுத்தாப்ல காசுக்கு அடி போட்டுடறாங்க…நல்ல உலகம்டா…? அடுத்தவன்ட்டக் கையேந்துறதுல எவனுக்கும் இப்டி வெட்க மானமில்லாமப் போச்சே…?
     தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள் சங்கவி. ஆரம்பித்தால் ஓய மாட்டான். முதலிலேயே பலமாகத்தான் யோசித்தாள். அத்தனை பேரையும் ஒட்டுக்க ஞாயிறு வாருங்கள் என்று எப்படிச் சொல்வது? அப்படியே வரிசையாய் வந்து நின்றாலும், இவன் கொதித்துக் கும்மாளம் இட்டு விடுவானே? மூஞ்சிக்கு மூஞ்சி பார்க்காமல் பேசித் தீர்த்து விடுவானே? எல்லாவற்றையும் பேசிவிட்டு, கடைசியில் கொடுத்தும் அனுப்புவான். வயிறெஞ்சு கொடுப்பான். மனசோடு, சந்தோஷமாய்க் கொடுக்க மாட்டான். ஆனால் கொடுக்காமல் இருக்கவும் தெரியாது. இப்படி ரெண்டும் கெட்டானை வைத்துக் கொண்டு எப்படி மாரடிப்பது? ஒரே முடிவாய் இல்லை என்று பிடியாய் நிற்கவும் தெரியாது. அப்படியே ஒருவேளை இல்லை என்று சொல்லி, ஆபீசுக்குக் கம்பி நீட்டி விட்டாலும்,  தன் பாடு? தான் அல்லவா எல்லாரையும் நேர் கொள்ள வேண்டும்? இது அவனுக்குத் தெரிகிறதா? காலம் பூராவும் அவஸ்தைதான் அவனோடு. வருஷா வருஷம் இந்தத் தீபாவளி ஏன்தான் வருகிறதோ?
     மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தாள் சங்கவி. இன்னும் அந்த லிஸ்ட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். மனசு அடங்கவில்லை போலும்.  ஒருவகையில் பார்த்தால் நியாயம்தான் பாவம். உழைப்பவனுக்குத்தானே தெரியும் அந்த அருமை? அந்த விழா முன் பணத்தை அவன் வாங்கியிருக்கிறான் என்றால் அது முற்றிலும் அவனைப் பொறுத்தவரை நியாயம்தான். பற்றாக்குறை வந்து விடுமோ என்கிற பயம். கடன் வாங்கக் கூடாது என்கிற வைராக்கியம். ஏனென்றால் அந்த வருஷம் முழுவதும் ஒரு நாள் கூட லீவே எடுக்காமல் வேலை பார்த்திருக்கிறான். வேலையில் அத்தனை சின்சியர். சனி, ஞாயிறு விடுமுறை நாள் கூட ஆபீஸ் போய் வேலை வேலை என்று மாரடித்திருக்கிறான். அலுவலகத்துக்குப் பணிந்த, பயந்த மனிதன்.
     இன்னும் சொல்லப் போனால் கேசவனுக்கு சம்பளம் தவிர வேறு வருமானம் கிடையாது. இத்தனைக்கும் நிறையக் கிடைக்கும் ஒரு பிரிவில்தான் அவனது பணி. ஆனால் இதுநாள் வரை  அதற்கெல்லாம் ஆசைப்பட்டதில்லை. என் பெயரைச் சொல்லி யார் கேட்டாலும் கொடுக்காதீங்க என்று தருபவரிடம் கட்டன்ரைட்டாகச் சொல்லி விடுவான். மொத்தமாக வாங்கிப் பிரிப்பவரிடம் இவன் பங்கு என்ன ஆகும் என்று என்றுமே யோசித்ததில்லை. நேர்மை, நேர்மை, நேர்மை என்று அடித்துக் கொள்வான். கேட்டால், எங்கப்பா அவ்வளவு வறுமையிலும், நேர்மையாவும், ஒழுக்கமாவும் இருந்ததனாலதான் எங்களையெல்லாம் முன்னேற்ற முடிஞ்சிது. அது ஒண்ணுதான் மனுஷன உயர்த்தும் என்று குரல் உயர்த்திச் சொல்வான். ஆபீஸ் பேப்பரில் லீவு லெட்டர் எழுதிக் கொடுத்தால் கூட வருந்துவான்.  
     ஒரு சம்பளக்காரன். சங்கவி உள்ளுரில் மூவாயிரம், நாலாயிரத்திற்கு வேலைக்குப் போகிறேன் என்றுதான் சொன்னாள். வேண்டாம் என்றுவிட்டான். எனக்கு உறவுஸ் ஒய்ஃப் வேணும்னுதான் நான் கட்டியிருக்கேன்…நீ என்ன வேலைக்குப் போறேங்கிறே? என்று தடுத்து விட்டான்.  
     அவனுக்கு, அவன் ஆபீஸ் விட்டு வரும்போது அவள் பூவும் பொட்டுமாக சித்திரமாய் அவன் முன்னே நிற்க வேண்டும். சிரித்த முகமாய், சந்தோஷமாய் இருக்க வேண்டும். நன்றாகச் சமைத்துப் போட வேண்டும். வீட்டைப் பொறுப்பாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் அவள் வேலை. காசைக் கணக்குப் பார்ப்பதும், கச்சிதமாய்ச் செலவு செய்வதும், கொஞ்சமாவது மிச்சம் பிடித்து சேமிப்பில் தள்ளுவதும், அந்தப் பரிவர்த்தனையில் கில்லாடி அவன். நியாயமான செலவுகளுக்கு என்றுமே முகம் சுழிக்க மாட்டான். ஆனால் அதுவே தகுதிக்கு மீறியதாகத் தெரிந்தால் மறுத்து விடுவான். செலவு வேறே. விரயம் வேறே. என்பான். தாய் தந்தையரிடம் கற்றுக் கொண்ட வாழ்க்கை அது என்று உணர்ந்தாள் சங்கவி. ஒரு நல்லதை எப்படி மறுதலிக்க முடியும்? தன்னை மீறி எதுவும் நடந்துவிடக் கூடாது என்று அவன் நினைப்பதில் என்ன தவறு? நல்லதற்காகத்தானே அப்படித் திட்டமிடுகிறான்? அதற்கு ஒத்துழைக்கத்தானே வேண்டும். அப்படியானால்தானே குடும்பச் சக்கரம் சீராக ஓடும். அது தடம் புரளாமல் சென்று கொண்டிருப்பதைக் கண்டு நிம்மதிதானே கொள்ள முடியும்? எனவேதான் அவனோடு முழுமையாய் ஒத்துழைத்தாள் அவள். அதுதானே ஒரு குடும்பத்தலைவிக்கும் அழகு.  
     அந்த அழகுக் கலையில் ஒன்றுதான் இப்படிக் கணக்கு எழுதி வைத்தது.எங்கப்பா அந்தக் காலத்துல எழுபது ரூபாதான் சம்பளம் வாங்கினார். ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வச்சிருப்பார். மூக்குப் பொடி வாங்கினதைக் கூட எழுதியிருப்பார். பார்க்கிறதுக்கும், கேட்குறதுக்கும் கேவலமாக் கூட இருக்கலாம். ஆனா அதுதானே ஒழுக்கத்தின் அடிப்படை? அத்தனைக் கட்டுப்பாடா இருக்கக் கண்டுதானே குடும்பத்தைக் கரையேத்த முடிஞ்சிது? எவன் செய்தான் அந்தத் தெருவுல? கஷ்டப்பட்டு முன்னேறின குடும்பம் எங்க வீடு ஒண்ணுதான். அவரோட லைஃப் அச்சீவ்மென்ட் அது.கணக்கு எழுதிப் பார்த்தாத்தான் எது நியாயமான செலவு, எது வீண் செலவுங்கிறது தெரியும். அப்பத்தான் கூட்டக், குறைக்க முடியும்.
     இன்று கூட அவன் செலவுகளுக்கெல்லாம் கணக்கு வைத்திருக்கிறான். ஒவ்வொரு மாதச் சம்பளத்திற்கும் பைசா விடாமல் கணக்கு உண்டு அவனிடம். இது என் பழக்கம், நான் செய்யறேன். அவ்வளவுதான் அவனைப் பொறுத்தவரை.
     அதே பழக்கம் இவளையும் தொற்றிக் கொண்டது என்னவோ உண்மைதான்.       எழுதி வைக்காவிட்டால் எப்படிக் கணக்குச் சொல்வது? யாருக்குக் கொடுத்தோம், யாருக்குக் கொடுக்கவில்லை என்று எப்படித் தெரியும்?  நினைவில் வைத்துக் கொள்வது போலவா வந்து நிற்கிறார்கள்? படையெடுத்ததுபோல் வந்தால் ஒரு சாதாரணன் என்னதான் செய்வது? ஆனால் கொடுக்காமல் முடியாது. தொலையுது என்றாவது கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் இன்றைய சூழ்நிலையில் வாழ முடியாது. அன்றாடம் பலவற்றோடும் தொடர்புடைய வாழ்க்கை. அந்தப் பலவற்றையும் கொண்டு வந்து விநியோகம் செய்யும், அல்லது செய்து கொடுக்கும் ஆன்மாக்களுக்கு ஏதோ நம்மாலானா அன்பு. உலகம் இன்று இப்படிக் கலந்துகட்டித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனித் தீவாக எவனும் வலம்வர முடியாது. அன்றாடம் தெருவில் காய் விற்பவர் கூட தீபாவளிக் காசும்மா? என்று தலையைச் சொறிகிறார். அஞ்சுக்கும், பத்துக்கும் கீரை விற்பவர் கூட கவனிங்க தாயீ…!  என்று தயங்கி நிற்கிறார். முகம் சுளித்து, மனம் முறித்து, என்னத்துக்குக் கொடுக்கணும்? காசு கொடுத்துத்தானே பொருளை வாங்கிறோம். அப்புறம் எதுக்கு உங்களுக்குத் தனியாக் காசு? கேட்டு விடலாம்தான். வாய்வரவில்லையே…மனுஷங்க இல்லாமப் போயிட்டா? .இவ்வளவு சொல்கிறானே அவனாலேயே இது முடியுமா? – நினைக்கத்தான் முடிந்தது சங்கவியால்.
     ச்சே….!! இப்டி ஆளாளுக்குப் பிடுங்கிட்டுப் போயிடறாங்களே…நாம யார்ட்டப் போய் நிக்கிறது? இனிமே ஆபீஸ்ல நாமளும் ஒரு நோட்டுப் போட்டு உள்ளுர்ல எல்லா ஆபீசர்கள்ட்டயும் போய் நின்னு கையேந்த வேண்டிதான் போல…அப்டித்தான் இருக்கு நெலம….எனக்கு என்ன செய்றதுன்னே தெரில…தலையைச் சுத்துது….- நொந்து நூலாய்ப் போனான் கேசவன். சங்கவிக்கு அவனைப் பார்க்கவே பரிதாபமாய்த்தான் இருந்தது. இன்னும் தைக்கக் கொடுத்த அவனுடைய பேன்ட், சர்ட்டுகள் வாங்கியாகவில்லை.  வெறும் முன்னூற்று அம்பதுக்கு எங்கிருந்தோ ஒரு செட் பிட்களை வாங்கி வந்திருந்தவன், அதன் தையற் கூலியைப் பார்த்து ஏற்கனவே வயிறெறிந்திருந்தான்.
     என்ன அநியாயம்? ஒரு பேன்ட்டுக்கு முன்னூற்றைம்பது ரூபாவா? சட்டைக்கு நூத்தி ஐம்பதா? மொத்தத் துணியே முன்னூத்தம்பதுதான்….ச்சே…பேசாம ரெடிமேட் எடுத்திருக்கலாம் போலிருக்கு….ரெண்டும் சேர்ந்தே ஐநூறுக்குள்ள முடிஞ்சிருக்கும்….உலகத்துல எல்லாரும் இப்டிக் கொள்ளையடிக்க ஆரம்பிச்சிட்டாங்களே….சாதாரண மனுஷன் வாழவே முடியாது போலிருக்கே…உன்னை யாரு வாழச் சொன்னா…? சாவு…போய் எங்கயாவது விழுந்து சாவுய்யா…ன்னுல்ல சொல்றாங்க…கடவுளே…கடவுளே…..வாழ்க்கையைச் சவாலாப் பார்க்கலாம்னா, சாவாப் பார்க்க விட்ருவாங்க போலிருக்கு…? இந்த உலகத்துல இன்னிக்குத் தேதிக்கு எதுலதான் நியாயம் இருக்குன்னு தேடணும். அப்டில்ல ஆயிப் போச்சு?
     அவனின் எல்லாப் புலம்பல்களும் ஒரு சேரப் படிப்படியாக இவளுக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தன. அன்றைக்கு அத்தோடு விட்டு விட்டான் கேசவன். அதுவே இவளுக்குப் பெரும் நிம்மதியாய் இருந்தது.
     ஆபீஸ்ல பியூனுக வேறே நோட்டை வந்து நீட்றானுங்க…என்ன செய்றதுன்னு தெரில்ல…? நிறையப் பேரு ஃபெஸ்டிவல் அட்வான்சுப் பணத்திலேர்ந்தே கொடுத்துக் கழிச்சிட்டாங்க…நான் ஒருத்தன்தான் அப்டியே கொண்டு வந்தவன். முழுசாக் கொண்டு வந்து உன்கிட்டே கொடுக்கிறதுல ஒரு திருப்தி. அதவிட வேறென்ன சந்தோஷம் இருக்கு? அது தப்பா? கையெழுத்துப் போட்டு பணம் கைல வாங்கியாச்சுன்னு மூக்குல வேர்த்தமாதிரி வந்து நின்னா? எம் பொண்டாட்டிட்ட கொண்டாந்து முதல்ல கொடுப்பனா? இவங்களுக்குப் பங்கிடுவனா? ஒரு இங்கிதம் இருக்கா பாரு அவுங்ககிட்டே..இன்னைக்குத்தானே வாங்கியிருக்காரு…நாளைக்குக் கேட்போம்…உடனே போய் நிக்க வேணாம்ங்கிறது தெரிய வேணாம்…? விவஸ்தை கெட்ட பயலுங்க…..
     நல்லவேளை, வீட்டுக்குள்ளே இருந்து புலம்புகிறான். யாரையெல்லாம் திட்டுகிறானோ அவர்கள் முன்னால் நின்று சொல்ல முடியுமா? இவன் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்குவார்கள், அல்லது பழி சண்டைக்கு வருவார்கள். அல்லது வேறு எதிலாவது வசமாய்ப் போட்டுப் பார்த்து விடுவார்கள். அப்படி ஒருவரின் பணி விபர ரிஜிஸ்டரையே ஸ்டீல் பீரோவுக்குப் பின்னால் தூக்கிப் போட்டுவிட்டு, காணவில்லை, காணவில்லை என்று என்னமாய் ஆட்டினார்கள் அந்த சம்பந்தப்பட்டவரை? அவனே சொன்ன கதை இது. இவளுக்கு உடம்பு ஆடியது. அப்படி எதிலாவது மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று தெய்வத்தை வேண்டினாள். அதற்குப் பின் சரியாகப் பேசவேயில்லை கேசவன். அது சங்கவியைச் சங்கடப்படுத்தியது. இருந்தாலும் என்ன செய்வது? இம்மாதிரி சமயங்களில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான். புரிந்து கொள்வாள். மீறிப் பேசப் புகுந்தால் கன்னா பின்னாவென்று எதையாவது உளறுவான். கடைசியில் சாப்பிடாமல் போய்ப் படுத்துக் கொள்வான். செய்தது அத்தனையும் வீணாகும். வாளாவிருந்தாள் சங்கவி.
     படு அமைதியாய் மறுநாள் ஆபீசுக்குப் புறப்பட்டுப் போனான் கேசவன். எப்பொழுதுமில்லாத அந்த அமைதி அவளைத் துணுக்குற வைத்தது.  கேஸ்காரன், பேப்பர்காரன்னு இன்னும் ரெண்டு மூணுபேர் இருக்காங்க…வந்தா கொடுக்கவா இல்ல உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லிடவா…? கேட்டேவிட்டாள். அவரவர் பாடு அவரவருக்குதானே. அதான் முழுக்க நனைஞ்சாச்சே…இனிமே எதுக்கு முக்காடு? என்று பொருந்தியும் பொருந்தாமலும் எதையோ சொல்லிவிட்டுப் போனான். இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது உளறுவான் என்று தலையில் அடித்துக் கொண்டாள் இவள். பீரோவைத் திறந்து பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். அதே மூவாயிரம் அப்படியே இருந்தது. இருந்தால் கொடுத்துத் தீர்த்து விடுவாள் என்று எடுத்துப் பாக்கெட்டில் செருகிக் கொண்டு போய் விட்டானோ என்று ஒரு சம்சயம். ஆபீசில் பியூன்களுக்கு இன்னும் கொடுக்கவில்லை என்றானே? இதிலிருந்து எடுத்துக் கொண்டு போனால்தானே ஆயிற்று? ஏன் அதைப் போட்டு இந்த இழுவை இழுக்கிறான்? கொடுத்து ஓய்த்தால் முடிந்தது.. ஜவ்வாய் இழுத்து தீபாவளிக்கு முதல் நாள் ஆபீசை விட்டு வரும்போது மனசில்லாமல் நீட்டுவான். அவர்களும் அவனின் சோக முகத்தைப் பார்த்துக் கொண்டே கை நீட்டி வாங்கிக் கொள்வார்கள்.
     இனிமேத்தான் சார் பங்கு பிரிக்கணும். நீங்கதான் கடைசி….போன தடவையே பியூன் பூதலிங்கம் இப்படிச் சொன்னதாக அதை வேறு வந்து இவளிடம் சொல்லியிருந்தான். அது ஞாபகத்துக்கு வந்தது இவளுக்கு. அப்படியென்னதான் அதில் பெருமை இருக்கிறதோ? கடைசி நாளில் கொடுப்பதில் பணத்தின் மதிப்பு குறைந்து போகிறதா என்ன? எல்லோரும் கொடுக்கும்போதே  தானும் கொடுத்து, அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளக் கூடாதோ? மனுஷன் லேசுல எடுக்கமாட்டான்யா…..அப்டியே நாம மறந்துட மாட்டமான்னுகூட இருப்பான்….என்று அவர்கள் வயிறெரிந்தால்? என்னவோ இவளுக்கு இப்படியெல்லாம் தோன்றியது. தான் உண்டு தன் வழியுண்டு என்று இருப்பவனுக்கு இதெல்லாம் ஏன் தெரியமாட்டேன் என்கிறது? எல்லாருக்கும் உள்ளது தனக்கும் என்று கழித்து விட்டுப் போக வேண்டிதானே? மனதின் மூலையில் எங்கோ ஓரிடத்தில்  இது பிடிக்காத தன்மையினால்தானே இப்படியெல்லாம் நடக்கச் சொல்கிறது? என்றுதான் இவருக்கு இதெல்லாம் புரிபடுமோ? வருத்தம் படர ஆரம்பித்தது சங்கவிக்கு.
     நாளை எப்படியும் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதற்குப் பின் சனி, ஞாயிறு விடுமுறை கழிந்து தீபாவளி வந்துவிடுகிறது. பார்ப்போம் என்ன செய்கிறான் என்று? – காத்திருந்தாள் சங்கவி.
     இரவு ஒன்பதுக்குத்தான் வந்தான் கேசவன். போதாக்குறைக்கு சில ஃபைல்களை வேறு வீட்டுக்கு எடுத்து வந்திருந்தான். அதான் காலைல போயிடுவீங்கல்ல. இவ்வளவு நேரத்துக்கு மேலே எங்க பார்க்கிறது? எதுக்கு இதுகளத் தூக்கிட்டு வந்தீங்க? என்றாள்.
     இவள் கேள்வியைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அறையில் விளக்கு எரிந்து கொண்டேயிருந்தது. ஃபைல்களை முடித்து விட்டுத்தான் படுப்பான். அது அவன் பழக்கம். நிறைய இப்படிப் பார்த்தாயிற்று. எப்பொழுது படுத்தான் என்று தெரியாது.  பையனை ஆதுரமாக அணைத்துக் கொண்டு அயர்ந்திருந்தாள் இவள்.
     காலையில் பூதலிங்கம் வந்தார். இத அப்டியே கொண்டு அய்யா டேபிள்ல வச்சிடுங்க….நான் அவருக்கு ஃபோன்ல சொல்லிடுறேன்….என்றான். அத்தனையையும் கொண்டு வந்திருந்த நீலத்துணியில் கட்டி எடுத்துப் போனார் அவர். சந்தேகம் வந்தவளாய்க் கேட்டாள் இவள். ஆபீஸ் உண்டுல்ல?
அவனிடமிருந்து பதில் இல்லாதது கண்டு, அருகில் வந்து என்னாச்சு, உடம்புக்கு முடிலயா? என்றாள்.
     அதெல்லாம் ஒண்ணுமில்ல…பேசாமப் போ……என்றான் கேசவன். என்றுமில்லாமல் அவன் பதில் மாறுபட்டு இருப்பதை உணர்ந்த இவள் சரி, பிறகு பார்த்துக் கொள்வோம் என்று பின்கட்டை நோக்கிப் போனாள்.
     குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியே கிளம்பினான் கேசவன். பீரோவிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டான். போய் என்னோட டிரஸ்களை வாங்கிட்டு வந்திடுறேன். உன் ப்ளவுஸ்களைத் தைத்திருப்பாங்களா…வேணும்னா அந்தக் கார்டையும் கொடு…ஒரேயடியா அதையும் வாங்கிட்டு வந்திடுறேன்….என்றான். இவளுக்கே ஞாபகம் வராததைக் கருத்தாக அவன் சொன்னது  ஆச்சரியப்படுத்த, பேக்கில் வைத்திருந்த இரண்டு அட்டைகளை எடுத்து அவனிடம் நீட்டினாள். தையற்கூலி எதாச்சும் குறைக்க முடியுமான்னு கேளுங்க…போனவாட்டி நான் அப்டித்தான் குறைச்சுக் கொடுத்தேன்…கேட்டாக் குறைப்பாங்க….என்றாள். ஆம்மா, இந்தப் பத்து, இருபதுலதான் வந்துதாக்கும்….இதுக்காகப் போயி அந்த லேடீஸ் கூட்டத்துல என்னை வாயிழக்கச் சொல்றியா…அதெல்லாம் எனக்குத் தெரியாது…துணிய வாங்கிட்டுக், காசைக் கொடுத்திட்டு வந்திடுவேன்…அவ்வளவுதான்…என்றுவிட்டு வெளியேறினான். திடீரென்று வாசலில் ஒரு சத்தம்.
     என்னாச்சு…என்றுகொண்டே ஓடினாள். வராண்டா திட்டில் உட்கார்ந்து கால்களை நீவி விட்டுக் கொண்டிருந்தான் கேசவன்.     பார்த்து இறங்கக் கூடாதா? என்ன அவசரம் அப்டி? என்றவாறே கசங்கிப் புரண்டு கிடந்து கால்மிதியடியைச் சரி செய்துவிட்டு உள்ளே வந்தாள்.
     இன்று எதற்குத் தேவையில்லாமல் இப்படி லீவு போட்டான் என்கிற அவனின் நடப்பைச் சந்தேகித்தவாறே அறைக்குள் நுழைந்தாள். எப்பொழுதும் அது அவளின் வழக்கமல்ல. ஆனால் அன்று ஏனோ மனது அவளைத் தூண்டியது. எதையோ தேடுவது போல சுற்று முற்றும் பார்த்தாள். டேபிளில் அவன் டைரி கண்ணில் பட்டது.  அது நாள்வரை அதை அவள் தொட்டதேயில்லை. அன்று ஏனோ அதைப் பார்க்கத் தோன்றியது. அந்தக் குறிப்பிட்ட தேதியில் எழுதியிருந்த அந்த வரிகள் அவளை ஈர்த்தது..
     மனசாட்சிக்கு விரோதமாய் ஒரு காரியம் செய்தேன் இன்று. எது என்னை அப்படித் தூண்டியது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களால் வழக்கமாய்த் தரப்படும் என் பங்குத் தொகையை முதன் முறையாய்க் கை நீட்டி வாங்கி, பியூன்களுக்கும், காவலர்களுக்கும் தீபாவளிப் பணமாய்க் கொடுத்துத் தீர்த்தேன். அதில் ஒரு பைசாக் கூட என் உபயோகத்திற்கு என்று எடுக்கவில்லையெனினும், என்னவோ அது உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்.
     கண்களில் நீர் சுரக்க அப்படியே விக்கித்து நின்றிருந்தாள் சங்கவி. அந்தக் கடைசி வரி அவளை உலுக்கியது. ஒரு சொட்டுக் கண்ணீர் அந்த டைரியின் பக்கத்தில் விழுந்தபோது, தானும் ஏதோவொரு வகையில் அவனின் அந்தச் செயலுக்குக் காரணமாகி விட்டோமோ என்று நினைத்து வருந்தத் தலைப்பட்டாள் அவள்.. 
                           --------------------------------

    
     
                                ---------------------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...