14 அக்டோபர் 2018

“பவுனு பவுனுதான்“ - சிறுகதை - தினமணி கதிர் 2017


சிறுகதை                                     “பவுனுபவுனுதான்…!”       
     
ம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. வலி பின்னியெடுத்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர். டவுன் பஸ் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் இறங்க வேண்டியதுதான். காலையில் வெகு சீக்கிரமே, முதல் லோடுக்கு வந்து விட வேண்டும் என்று கடை முதலாளி சொல்லியிருந்ததில் ராத்திரித் தூக்கமே பிடிக்கவில்லை. லேட் ஆயிடுமோ என்று பயந்து பயந்தே நேரம் போய்விட்டது. பவுனுவை எழுப்பி விடு என்று பணித்திருந்தான். அவள் கிடக்கும் கிடையில் தன்னை எங்கே எழுப்ப? முடிந்தால் அவளையும் சேர்த்து, தானே எழுப்ப வேண்டும். அதுதான் சாத்தியம். தேவதையாய்த் தன்னிடம் வந்தவள் இன்று தேய்ந்தே போய் விட்டாள். மனசில் ஆறாத ரணம்.
அஞ்சு கிலோ மீட்டர் தொலைவில் திருப்பாவூரில் கட்டட வேலை நடக்கிறது என்று போய்க் கொண்டிருந்தாள். கசக்கிப் போட்ட சாணிச் சுருணையாய் அவள் உறங்கும் நிலை இவன் மனதைப் பிழிந்தது. அழகுப் பெட்டகமாய் வந்து சேர்ந்தவளை, உருக்குலைத்து விட்டேன். மனசாட்சி குத்திக் கிழித்தது. சொகுசாய் பாதுகாத்து, அந்த ரதியை மனசார ரசிக்கக் கொடுத்து வைக்கவில்லை. காலம் பூராவும் சோத்துக்கு மாறடிக்கும் கூலி வேலைக்குச் சென்றே சீவன் இற்றுப் போகிறது. நாடி வந்தவளுக்கு, தான் கொடுத்த வசதி, வேலைக்கு அனுப்பியதுதான். அவள் குறையாய் நினைக்கவில்லை. அதுதான் தன் அதிர்ஷ்டம். அதனால்தான் அவளைக் குலதெய்வமாய் மனசு போற்றியது.
வந்து தலையைச் சாய்க்கும்போதே மணி ரெண்டரை. அந்த நேரத்தில் பஸ் பிடித்து ஊருக்குச் சென்றுதான் ஆக வேண்டுமா என்கிற யோசனையும் வந்ததுதான். வெளியூர் பஸ்ஸில் ஏறினால்தான் ஆகும். சமயத்தில் ஏற்றமாட்டான்கள். ஒத்தவாடையின் கடைசி ஸ்டாப்பில், ஊர் விலக்கில் இறங்கினால் தேவலை. நம்ம வசதிக்கு நிறுத்துவான்களா? லட்சுமி தியேட்டர் ஸ்டாப்தான் கடைசி. அங்கிருந்து நடக்க வேண்டியதுதான். இரவு எத்தனை மணி ஆனாலும் வீட்டிற்குச் சென்று படுக்கையைப் போட்டால்தான் மனசுக்கு இதம். அப்படியே பழகி விட்டது. அருகில் பவுனு இருக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது.
எதுக்கு இப்டி வெட்ட வெளில படுத்திருக்கீங்க……ஒரு சத்தம் கொடுத்தா எழுந்திரிக்க மாட்டனா…நானே பொணம் மாதிரிக் கெடக்கேன்…எனக்கு என்னா தெரியுது….ஒரு பாம்பு,தேளு ஊர்ந்தாக் கூட கடிச்சாத்தான் சொரண…வாங்க உள்ளுக்குள்ளே….. – அழுந்தி அழைப்பதில் நெகிழ்ந்து போவான் செல்லப்பன். அவள் காலடிப் பக்கம் தலை வைத்துப் படுத்துக் கொண்டு காலைப் பிடித்து விட முனைவான். திண்ணென்று உட்கார்ந்திருந்த மெட்டிகள் இப்போதெல்லாம் விரலில் முன்னும் பின்னுமாக நழுவுகின்றன. மெலிந்து விட்டாள், பாவம். மனதில் ரத்தம் கசிகிறது இவனுக்கு. இரண்டு கால்களையும் அப்படியே அள்ளித் தூக்கி அடிப் பாதத்தைத் தன் முகத்தில் அழுந்தப் பதித்துக் கொண்டு கண்ணீர் விடுகிறான். தன்னையே நம்பி வந்தவள். மாமனத்தான் கல்யாணம் கட்டுவேன் என்று பெற்றோரின் எதிர்ப்பை மீறி நின்றவள். நிரந்தர வருவாய் இல்லாத அவன் பிழைப்பை இன்றுவரை அவள் குறை சொன்னதில்லை.
அதுனாலென்ன மாமா…எதாச்சும் ஒரு வழி நாமளாப் பண்ணிக்கிட வேண்டிதான்.எதுக்கும் ஒரு நேரம் வரும்ல… - நம்பிக்கையோடு சொல்வாள்.
கூலிக்காரப் பய….தெனசரிப் பொழப்புக்கே எடம் மாறிப்  போயிட்டிருக்கிறவன்…நிரந்தர வருவாய் இல்லாதவன்….உனக்கு ஒலகம் புரியாது…கொஞ்சம் பொறு…அரசாங்க ஆபீஸ்ல ஒரு பியூனா இருந்தாலும் பரவால்ல…பார்த்துத் தேடிக் கட்டி வைக்கிறேன்…உன் அழகுக்கு அப்டியே கொத்திட்டுப் போயிடுவானுங்க…–
இவர்தான் எட்டாப்பு வரைக்கும் படிச்சிருக்காருல்ல…பதிஞ்சு வேறே வச்சிருக்கேன்றாரு…அவுருக்கு எங்கயாச்சும் முயற்சி பண்ணி வாங்கிக் கொடுக்கலாமுல்ல…?
உம் பொண்ணு பேச்சைப் பார்த்தியா? அந்தத் தடிப் பயலுக்கு நான் வேலை வாங்கிக் கொடுக்கணுமாம்…காசைச் செலவழிச்சு வாங்கிக் கொடுக்குறேன்னே வையி…அந்தப் பய அடங்கிக் கெடப்பாங்கிறதுக்கு என்னா உத்தரவாதம்? அவுரு ஏதாச்சும் வியாபாரம்தான் பண்ணுவாராம். முதலு வச்சிருக்காரு பாரு…? எடுத்துப் போட்டுத் தொவக்குறதுக்கு…! அவன நம்பி காசைக் கொடுத்தேன்னா …ஆயுசுக்கும் அது திரும்பாது …அழிச்சிப்பிட்டு, மறுபடியும் நம்பகிட்டதான் வந்து நிப்பான்….கடிக்கும்னு தெரிஞ்சே பொந்துக்குள்ள கைய விட முடியுமா?
எல்லா ஏச்சும் பேச்சும் கேட்டு கடைசியில் தன்னிடம்தானே புகலிடம். அவள் சொல்லும் எதையும் தட்டியதில்லை இவன்.
அவ இஷ்டப்படியே கட்டிக் கொடுத்திடுங்க…நம்ம பொண்ணை கண்ணாலயாச்சும் பார்த்திட்டிருப்போம். இல்லன்னா எதாச்சும் மருந்தக்கிருந்தக் குடிச்சிட்டு செத்துத் தொலையப் போறா….எருக்கங்காய்தான் எனக்குன்னு அடிக்கடி பயமுறுத்துறா….செய்தாலும் செய்துப்புடுவா….படு ராங்கிக்காரி…..
தெரியாமச் சொல்றடீ நீ…ராங்கிக்காரின்னா அவனோட ஓடிப் போவாளாக்கும்…மருந்தக் குடிச்சி சாக மாட்டா எவளும்….
எதுக்கு ஓடிப் போகணும் என்று  மாலையும் கழுத்துமாய் வந்து நின்ற அந்தக் கணம் பாட்டன், முப்பாட்டன் காலத்து பரம்பரை வீம்பை பவுனுவின் முகத்தில் கண்டார் செந்தாழை. ராமாயி ஆசீர்வாதத்துக்குத் தயாராய் நின்றது அவள் ஏற்பாடுதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. நோண்ட விரும்பாமல், அமுங்கிப் போனார். அறுந்தது பெண்ணின் உறவு. பவுனுவும் பெத்தவர்களை எட்டியே பார்க்கவில்லைதான். தனக்கென என்று ஒரு கௌரதை கிடைக்கிறதோ அன்றுதான் வீடு திரும்பல். இது அவள் முடிவு.
அந்த மன உறுதி செல்லப்பனைக் கொள்ளை கொண்டது. எம்புட்டு வசதியோட வாழ்ந்திருக்க வேண்டியவ…என்னை மனசுல வரிச்சிட்டதுனாலயே அத்தனையையும் இழந்து நிக்கிறாளே…!
தலையிலிருந்து அருவியாய் வியர்வை கொட்டியது. நெற்றிப் பகுதியிலிருந்து இறங்கி மூக்கிலும் கண்களிலும் வழிந்தது. துடைத்து விட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டால்தான் அடுத்தாற்போல் வண்டியை இழுக்க முடியும். தலைப்பாகைத் துண்டு தலையில் இல்லை. பின்னால் கம்பிக் கட்டு நுனியில் சிவப்பு அடையாளமாய் கொடி கட்டித் தொங்கவிட்டிருந்தான். அதுவும் இல்லையென்றால் பின்னால் வரும் வண்டிகள், இருசக்கர வாகனங்கள் மோதி விடும் ஆபத்து உண்டு.
     உன் தலைத் துண்டுதான் இருக்குல்ல…அதத் தொங்கவிட்டுக்கய்யா…எடுய்யா வண்டியை சல்தியா…அடுத்தாப்ல லோடு ஏத்தணும்ல…இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த போலீசு வேறே வந்து தொண தொணம்பான்…. அவனுக்கு வேறே வாய்க்கரிசி போடணும்….கோயில் கூட்டம் எக்கும்ல…சட்டுப் புட்னு எடு…– கடை முதலாளி காரியத்திலேயே கண்ணாய்ப் பேசியது செல்லப்பனுக்கு எரிச்சலைத்தான் ஊட்டியது.
     மனதில் தோன்றுவதை வெளியில் காண்பிக்கும் நிலையில் தான் இல்லை. வண்டியின் கைப்பிடியை மெல்லக் கீழ் நோக்கி இறக்கினான். பின்னால் இருக்கும் கம்பிக்கட்டு பாரம் கைகளின் நரம்பை அறுத்து விடும்  அளவுக்குக் கீழே தள்ளியது.
     யப்ப…யப்பா.மனுஷன் இழுக்கிறதுக்கும் ஒரு அளவு வேணாமா? இந்த கனத்துக்கு வெயிட் போட்டா இன்னைக்கு முழுக்க இந்த ஒரு லோடுதான் தாங்கும். அப்டியே கூலிய வாங்கிட்டுக் கழன்டுக்க வேண்டிதான்…. – தன்னையறியாமல் சலித்துக் கொண்டான். அப்போதுதான் மனசுக்குள் சுருக்கென்றது.
     அப்டியே எங்கே கழன்டுக்கிறது? வண்டியக் கொண்டு கோடவுன்ல நிறுத்தியாகணுமே…!இல்லன்னா நாளைக்கு திரும்ப லோடு தர மாட்டாரே… கோடவுன் ஒரு பக்கம், இந்தாள் கூலி தர்றது இன்னொரு பக்கம்…இதுக்கும் அதுக்கும் நடந்தே செத்தான்  மனுஷன்…ஒண்ணொண்ணுக்கும் பஸ் ஏறி இறங்கியாகுமா? டவுன் பஸ் டிக்கெட்டு என்ன அம்புட்டுச் சல்லிசாவா இருக்கு? கேட்டா சாதா பஸ்ல போன்னுவாரு…அது ஒரு மணி, ஒன்றரை மணிக்கொருவாட்டிதான் வரும்…ஏறக் கூட முடியாமத் தொங்கிக்கிட்டு வருவானுக…
     ஏன்யா, நீ கூலி வாங்க எப்டி வருவே, ஏதா வருவேன்னெல்லாம் யோசிச்சிக்கிட்டு நான் கவலைப் பட முடியுமா? கூலியத்தான் தர முடியும். வந்து வாங்கிக்கிட வேண்டியது உன் வேலை…புரிஞ்சிதா…?
     ரொம்ப யோக்ய மயிராத்தான் பேசுறான்யா இந்தாளு….ஊருல இருக்கிற எல்லாக் கடைக்காரனும் வேன் வச்சிருக்கானுவ…இந்தாளு ஒருத்தன்தான்யா கட்ட வண்டிய வச்சிக் காலந்தள்ளுறவன்…நல்ல வேள…அத டயர் வண்டியா வச்சித் தொலைச்சான்…இல்லன்னா நம்ம பாடு இன்னும் திண்டாட்டம்… …டிரைவர் சம்பளம், டீசல்னு அம்புட்டு செலவும் கொறைச்சல்தான…ஆதாயம் இல்லாம ஆத்துல எறங்குவாரா? – ராமுப்பிள்ளை அடிக்கடி இவனிடம் பொறுமுவான்.
     அவனும் இவனும் சேர்ந்துதான் சொந்த வண்டி வாங்க வேணும் என்று திட்டமிட்டிருந்தார்கள். ராமுப்பிள்ளை ஏற்கனவே சினிமாத் தியேட்டர் ஒன்றில் வேலை பார்த்தவன். டிக்கெட் கிழிக்கும் வேலைதான் என்றாலும் இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர்வைசர் ஆயிடுவேன் என்று கூறிக் கொண்டிருப்பான். அவன் கக்கூஸ் கழுவி விடுவதையெல்லாம் பார்த்திருக்கிறான். அவனாகவே யாரும் சொல்லாமல் செய்வான். சொல்லாம, நாமளே எடுத்துச் செய்யணும்யா…அப்பத்தான் நாம கவனிக்கப்படுவோம்….என்பான். சூப்பு ஆனவுடனே பாரு…நீயும் உள்ளே வந்திடுவ….அப்ப நம்ம பேச்சு எடுபடும்….உன்னை இழுத்துர்றேன் என்று கூறுவான் செல்லப்பனிடம்.
 வெறுமே சொல்லிக் கொண்டிருந்தானேயொழிய காரியம் நடந்தபாடில்லை. கடைசியில் பார்த்தால் தியேட்டரை மூடும் நிலைதான் வந்தது. அதைத்தான் இப்போது கோடவுன் ஆக்கியிருக்கிறார்கள். தியேட்டர் ஓனரிடமே சொல்லி அவர் சிபாரிசில்தான் இந்தக் கம்பிக் கடையில் லோடு மேனாகச் சேர்ந்தான் ராமுப்பிள்ளை.
     ஒரு சொந்த வண்டி வாங்கக் கூட இன்றுவரை வக்கில்லை. பல்லில் கடித்துக் கொண்டிருந்த பீடியை உதட்டின் நுனிக்குக் கொண்டு வந்து ஆழமாய்ப் புகை இழுத்து, கண்கணை மூடி உள்ளுக்குக் கொண்டு போய் அந்த சுகத்தை அனுபவித்தான் செல்லப்பன். ஒரு டீ குடிச்சிட்டு இதை இழுத்திருந்தா இன்னும் தெம்பா இருக்கும். போதும்…அதுக்கு ஒன்பது, பத்து அழணும்…எவன்ட இருக்கு பைசா….? அளந்து அளந்தே நம்ம வாழ்க்கை போயிடும் போலிருக்கு…
     சட்டென்று உணர்வு வந்தவனாய், அடி ஆத்தீ…நேரமாயிடுச்சி போலிருக்கே…என்று வெயிலைக் கணக்கிட்டு திடுபுடுவென்று எழுந்தான். இருபக்கக் கட்டைகளையும் பிடித்து தம் கட்டித் தூக்கினான். ரொம்பவும் வேகமாய்த் தூக்கினால் கம்பிக் கட்டுகள் பின்னோக்கிச் சரிந்து விட்டால், நடு ரோட்டில் களேபரமாகிப் போகும். போலீசு வரும் முன் வண்டியை நகர்த்தியாக வேண்டும். மனசு படபடத்தது. அந்த ஏரியாவில் நிறுத்தியதே தப்பு. என்றைக்குமில்லாமல் இன்று புத்தி பிசகி விட்டது. எவன் கண்டுக்கப் போறான்னு சமயத்துல தில்லு வந்திடுதுல்ல…! எனக்கெல்லாம் இது தேவையா? பவுனு…நீதான் காப்பாத்தணும்….-மனசு கலங்கும் வேளைகளில் மனைவி பெயரைச் சொல்லித்தான் வேண்டிக் கொள்வான். அவள்தான் காவல் தெய்வம்! இந்த வெற்றுப் பயலைத் தேடி வந்தடைந்த செல்வம்…!
     கொஞ்ச நாளைக்கு ரிக் ஷா ஓட்டினான் செல்லப்பன். அதிலிருந்து ஆட்டோவுக்கு மாறுவோம் என்பது எண்ணமாய் இருந்தது. வருமானம் போதவில்லை. யார் ஏறுகிறார்கள்? குதிரை வண்டிகள் கூட ஓரிரண்டு அங்கங்கே நிற்கத்தான் செய்கின்றன. நிற்கின்றன, அவ்வளவுதான். ஓடவில்லை. அடியில் கட்டித் தொங்க விட்டிருக்கும் புல்லுக்கட்டு வாசனையுடன் வண்டிக்கென்றே ஒரு மணம் இருக்குமே, அதோடு பயணிப்பது எத்தனை சந்தோஷம். எல்லாவற்றையும் மக்கள் தூர ஒதுக்கி விட்டார்கள். ரிக் ஷாவில் அமர்ந்து ஊரம்புட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டே சந்தோஷமாய் வீடு போனது ஒரு காலம். இப்போது அதுவே இளப்பமாய் போய்விட்டது. வெளியூர் டூரிஸ்ட்கள் வந்தால் கூட ரிக் ஷாவில் ஏற மறுத்தார்கள். வெளிநாட்டுக்காரர்கள் வந்தால்தான் கொண்டாட்டம். அவர்களை ஏற்றி கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்து அதையும் இதையும் பொட்லர் இங்கிலீஷில் உளறிக் கவர்ந்து காசு பறித்து விடுவான். சதுரம் சதுரமாய் இருக்கும் தெருக்களின் அமைப்பு  கண்டு அவர்களும் வண்டியை விட்டுக் கீழே இறங்க மாட்டார்கள். சந்து சந்தாக நுழைந்து எங்கு கிளம்பினோம், எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் ஒரு இடத்தில் இறக்கி விட்டு, காசு கை மாறும்போது கிடைக்கும் திருப்தியே அலாதிதான். ஆனால் அந்த வருவாயை வைத்து ஒரு புது ரிக் ஷா கூட வாங்க முடியவில்லையே…! சின்னச் சின்னதாகச் சேர்த்து, ஒரு ஆட்டோவுக்கு அடி போடலாம் என்றால் பாதிக் காசு போக மீதிக் காசுக்கு வங்கிக் கடனுக்குச் சென்று நின்றாக வேண்டும். பிறகு மாதத் தவணை கட்டியாக வேண்டும். கை வீசி அதெல்லாம் செய்ய செல்லப்பனுக்குத் தைரியம் இல்லை. எதாச்சும் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தாளானால் அடகு வைக்கலாம். அதற்கும் வழியில்லை. தன்னை நம்பி வந்த பேதை அவன் பவுனு. ஏகப்பட்ட பயம் கடைசியில் வண்டியிழுப்பதில் வந்து நின்றதுதான் மிச்சம். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்கள். சாண் ஏறாவிட்டாலும் முழம் சறுக்காமல் இருந்தால் சரி.   இதுதான் அவன் சித்தாந்தம்.
அன்னன்னிக்கு ராத்திரி வீடு போய் எம்பொண்டாட்டிய இறுக்கமா அணைச்சிட்டுப் படுக்கிற சுகம் இருக்கே…அதுக்கு ஈடுதான் ஏது? எல்லாக் கஷ்டமும் அப்போ பஞ்சாப் பறந்து போகுமே…!
ஏய்..! எவன்டா அது…? இங்ஙன கொண்டாந்து வண்டிய நிறுத்தியிருக்கிறது? அதுவும் எம்மாம் நேரம்? நானும் பார்த்திட்டேயிருக்கேன்…எடுக்கிறாப்ல இல்ல….உனக்கெல்லாம் வாயால சொன்னா ஆகாதுய்யா… ஓரங்கட்டு, வண்டிய ஓரங்கட்டு…..ம்…ம்…ம்…திருப்பு…..லத்தி வட்டமாக இவனைப் பார்த்துச் சுழன்றது. வேகத்தைப் பார்த்தால் தன்னை நோக்கிப் பாய்ந்து விடுமோ…! அடி வயிறு கலங்கியது.
     அய்யா…அய்யா…இதோ எடுத்திர்றேன்யா….ஒரு டீ சாப்டுக்கிறலாம்னு நின்னுட்டன்யா…சாமி….கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்….விட்ருங்கய்யா….
     என்னய்யா புளுகுற….ரொம்ப நேரமா நானும் பார்த்திட்டேயிருக்கேன்…பீடிய வலிச்சிட்டு நீபாட்டுக்கு உட்கார்ந்திருக்கே…சிக்னல் தாண்டி வண்டி அத்தனையும் பாய்ச்சலா வர்ற எடம் இது, தெரியும்ல?….ஒருத்தன் கண்ண மூடிட்டு வந்தாலும் போச்சு… கம்பிக கட்டுக் கட்டா நீட்டிட்டிருக்கு…பக்கத்துல வந்தாத்தான் நீ போட்டிருக்கிற துணியே தெரியும் போலிருக்கு. அதுக்குள்ளே நிதானிக்க முடியாதேய்யா? செத்துருவானுக…செயிலுக்குப்போயிருவ…தெரிஞ்சிக்க…..அப்பருந்தேவிசிலடிச்சிட்டேயிருக்கனே, உன் காதென்ன செவிடா? அனுபவிச்சி பீடிய இழுக்கிறீகளோ…? ஓரங்கட்டுய்யா…சொன்னதச் செய்…..உன்ன அப்புறம் வந்து கவனிக்கிறேன்….- தெய்வான டிரேடர்ஸ்தானய்யா…வையி…வையி…. - சொல்லிவிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தவனாக அந்தப் போலீஸ் முறைத்த முறைப்பு செல்லப்பனை நடுங்க வைத்தது. யம்மாடி…! எத்தான் தண்டி இருக்காரு இந்தாளு….ஒரு ஒதை விட்டார்னா தாங்குவமா?
அய்யா…அய்யா…மன்னிச்சிடுங்கய்யா….தெரியாம நடந்து போச்சு…ரொம்ப ஒடம்பு முடியாம வண்டிய எறக்கிட்டேன்….கையெல்லாம் செத்துப் போச்சிய்யா…இதோ எடுத்திர்றேன்யா…. – சொல்லிக் கொண்டே எடுக்க முனைந்தவனைத் தடியைச் சுழற்றிக் கொண்டு அந்தக் காவல் நெருங்கிய போது, வினையாய் எங்கிருந்தோ பாய்ச்சலாய்க் குறுக்கே ஓடி வந்தது அந்த மாடு. வாயில் நுரை வழிய வந்த வேகம் நிதானிக்க முடியாத கணத்தில் -
மோதப் போன காவல் ஓங்கிய கையின் பலமான அடி அந்த மாட்டின் மீது சடேரென்று விழ, வலி தாள மாட்டாமல் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது. புயலாய் வந்து கொண்டிருந்த கார்களும், ஆட்டோக்களும் பலம் கொண்ட மட்டும் கிறீச்சிட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முனைய, ரெண்டு மூன்று டூ வீலர்காரர்களை சட்டுச் சட்டென்று விரட்டிக் கீழே தள்ளிவிட்டு, கண்டமேனிக்குப் பாய்ந்து, உருமிப்  பெருகி ஓட்டமெடுத்தது காளை. எதிர்த்திசையில் இருந்த நெடுஞ்சாலையில் தனது பாய்ச்சலைத் திசை தெரியாமல்  துள்ளித் தொடர்ந்தது. நடந்து கொண்டிருந்தவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடி ஒதுங்கினார்கள்.
அவுத்து விட்ட மாடுங்கிறது சரியாத்தான்யா இருக்கு….என்னா அளப்பற பண்ணுது பாரு…! .என்று நினைத்தவாறே தலையில் கை வைத்து பிரமித்துப் போய் அப்படியே உட்கார்ந்து விட்டான் செல்லப்பன். உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது கட்டுப்பாட்டை  மீறி..
அருகிலே பெரிய சாக்கடைப் பள்ளத்தில் கழிவுநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் பாய்ந்து  கொண்டிருந்தது. என்னா ஓட்டம் ஓடுது? கொஞ்சம் தவறியிருந்தால், பதட்டத்தில் அதில் விழுந்திருப்பான். தப்பியது தம்பிரான் புண்ணியம். தற்செயலாய் இடது கையைத் தூக்கியவன், உள்ளங்கையில் நீட்டமாய்க் கூர்மையாகக் கிழித்ததுபோல் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறினான்..அட கண்றாவியே, இது எப்பப் பட்டுச்சு…?  தலையில் வைத்து அப்படியே ஒரு இழு இழுத்துத் துடைத்துக் கொண்டு நாக்கால் நீட்டமாய் ஒரு நக்கு நக்கினான். கோடு விழுந்தது போல் கீறியிருந்த இடத்தில் திரும்பவும் ரத்தம் கசிய ஆரம்பிக்க, குழாய் எங்கேனும் இருக்கிறதா என்று கண்கள் தேடின. இருந்தாலும், தண்ணீர் வரப் போகிறதா என்ன…? கொஞ்சம் மண்ணைத் தூவினாப் போச்சு..! எதிரே இருந்த ஆபீஸ் வளாகத்தில் யாரோ மூஞ்சி அலம்பிக் கொண்டிருந்தார்கள். அங்கு போய்க் கழுவி வருவமா என்று நினைத்தவனை போலீஸ் பார்வை துணுக்குறச் செய்தது. இன்னிக்கு நீ செத்தடீ…!  இன்னும் வண்டியத் திருப்பாம உட்கார்ந்திட்டா இருக்க…காலம்பற டென்ஷன்ல வகையா மாட்டுன…..!
யார் முகத்துல முழிச்சனோ கடவுளே….பெருத்த கெரகமாப் போச்சே…! – பவுனுவின் முகம் ஞாபகத்துக்கு வந்தது செல்லப்பனுக்கு. நீதான் காப்பாத்தணும் தாயி….  மனசுக்குள் வேண்டிக் கொண்டான்.
நாள் கணக்கா இந்தப் பக்கம் வண்டியிழுத்திட்டுப் போறேன், வர்றேன்….என்னைக்குமில்லாம இன்னைக்கு நம்மளப் போட்டுப் பார்த்திடுச்சே….ஆண்டவா….எம்பொழப்புல இன்னைக்கு மண்ணுதானா?
காதில் வைத்த ஃபோனில் அந்தாள் யாருடனோ பேச ஆரம்பித்திருப்பது தெரிந்தது. இருக்கும் டிராஃபிக் சத்தத்தில் அலறலாய்க் கத்திக் கொண்டிருந்தான்.
கீழ்ப்பாலம் தெய்வானை டிரேடர்ஸ்தானே? ஏங்க இம்புட்டு கம்பிக்கட்டப் போட்டு ஒத்த ஆள அனுப்பிச்சிருக்கீங்களே…கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உங்களுக்கு? அவன் சாக மாட்டாம இழுத்திட்டு வந்து இங்க நட்ட நடு ரோட்டுல படுத்துக்கிட்டான்யா…என் உசிறு போகுது இவனால….…
. எதிர்த்தரப்பு பதிலைக் கூர்ந்து கேட்பது புரிந்தது.
என்னது, என்னா பேசுறீங்க நீங்க….? எப்பயும் இதுதான் வழக்கமா? ஏன்யா, பக்கத்துல பக்கத்துலன்னாச் சரி….உங்க கடைலேர்ந்து அஞ்சு மைல் தூரம் ஒருத்தன் இழுத்திட்டுப் போகணும்னா அதுக்கு ஏதாச்சும் வண்டிய ஏற்பாடு பண்ண மாட்டீங்களா? இல்ல, கொஞ்சம் கொஞ்சமா ரெண்டுவாட்டி மூணுவாட்டின்னு  கொண்டு போய்யான்னு சொல்லி ரெண்டுபேத்தை அனுப்ப மாட்டீங்களா? பெரியார் சிலை தாண்டி வண்டி படுத்துப் போச்சிய்யா….நானா இருக்கக்கண்டு, ஓரமாத் தள்ளி உட்கார்த்தி வச்சிருக்கேன்…இங்கென்ன ஊருக்கு ஒதுக்குப் புறமுன்னு நெனச்சீகளா..? நிமிசத்துக்கு ஆயிரம் வண்டி கடக்குது…மோதிச்சின்னா தூள் தூளாயிடும்….கண் இமைக்கிறதுக்குள்ள உயிர்ப்பலி நடந்து போகும்…புரியுதில்ல…? என்னவோ பேசுறீக….?
……………...எதிர்த் திசையில் வரும் பதிலுக்குக் கோபமாய்த் தலையாட்டியது காவல்.
என்னாது, எந்த பீட்டா? என்னாய்யா கேட்குறே…நீங்க இந்த ஊர்தானா இல்ல வேறே எதுவுமா?  நான் இம்புட்டு நேரம் என்னா சொல்லிக்கிட்டிருந்தேன்…எந்த பீட்டுன்னு கேட்குறீக…பெரியார் சிலைப் பக்கம்னு சொன்னனே…காதுல விழலியா…அவுட் போஸ்ட்டுய்யா…எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ஜ் தாண்டி…..எம்புட்டு சனம் வரும் போகும்….நினைச்சிப் பாருங்க…..எத்தன வருஷமாக் கடை நடத்துறீங்க…இம்புட்டுக் கேள்வி கேட்க மட்டும் தெரியுது…ஒழுங்கா, மரியாதையா லோடு அனுப்பத் தெரியாதோ? என்னா நினைச்சிட்டிருக்கீங்க மனசுல…? கேஸ் புக் பண்ணட்டுமா? சொல்றதக் கமுக்கமாக் கேட்காம கேள்வியா அடுக்குறீங்க? வேணுங்கிறதச் செஞ்சிடுவமா? எனக்கொண்ணுமில்ல….!
பேச்சு போகும் திசையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் செல்லப்பன். எதற்கு அடி போடுகிறான் இந்தாள்? அடப்பாவி, நிறுத்தி வச்சிருக்கேன்ல சொல்றான்…விட்டா நாம்பாட்டுக்கு நகத்திட்டுப்  போகப் போறேன்…என்னவோ நான் முடியாம உட்கார்ந்துட்ட கதையால்ல ஆவுது….என்னா பேச்சுப் பேசுறான்….பசைய எதிர்பார்ப்பானோ? அதுக்குத்தான் இத்தனை விரட்டலா? ஆழமாத்தான் அஸ்திவாரம் போடுறான்யா…!
கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது செல்லப்பனுக்கு. காலையிலிருந்து ஒரு டீத்தண்ணி கூட உள்ளே ஊற்றவில்லை. சட்டியில் பவுனு சேமித்து வைத்திருந்த நீச்சுத் தண்ணிதான் இத்தனை நேரம் அவனைக் காத்திருக்கிறது.  அவளுக்குக் கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் பாவி நான் ஊத்திக்கிட்டுக் கிளம்பிட்டேன் அவள் என்ன செய்தாளோ? பாவம்…!
நினைத்தவாறே கம்பத்தில் கண் சுழற்றி சாய்ந்திருந்தவனை அந்தக் குரல் உசுப்பிற்று.
யோவ்…! என்னா…அதுக்குள்ளயும் தூங்கிட்டியா? சொகுசுதானா? நல்ல ஆளுய்யா லோடு இழுக்கிற ஆளப்பாரு?….எழுந்திரிய்யா….போய் சட்னு வண்டிய நகத்து…..சடுதியா எடுத்திட்டு ஓடிடணும்…நிக்கப்படாது இந்த ஏரியாவுலயே…!
இதோ எடுத்திட்டேன்யா….பதறியடித்தவாறே எழுந்தான் செல்லப்பன். தன்னை மறந்து உடல் அயர்ச்சியில் கண்ணயர்ந்தது மேலும் அசதியை ஏற்படுத்தியிருந்தது. உடம்பு பேயாய் வலித்தது. அடக் கடவுளே…! மணி என்னாவுது தெரிலயே…இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேன்…இப்டியாகிப் போச்சு….?
சட்னு போய்யா…அன்ன நடை நடக்குற…சீக்கிரம் போய் வண்டிய இழுத்து நகத்து…… வா, பின்னாடி வேணா தள்றேன்…பாவமாயிருக்கு….! -  
இந்தாள் வேறே மாதிரில்ல தெரியுது….அப்போ அவுரு….?
என்னாது அவுரா…..? என்னா அவுரு, செவுருன்னுக்கிட்டிருக்கே…அவுருக்கெல்லாம் முடிஞ்சிருச்சு….சல்தியாப் போய்யான்னா…..வேகமாய்த் தன்னை நோக்கி முன்னேறி வந்த அந்தக் காவலை, எடுத்திட்டன்யா….எடுத்திட்டன்   என்று வணங்கியவாறே…விரைந்து வண்டியை புதிய பலத்தோடு தூக்கிப் பிடித்தான் செல்லப்பன். அவ்வளவு நேரம் கண்ணயர்ந்து ஆழ்ந்து சாய்ந்த உறக்கத்தில் திடீரென்று விழித்தது பக்கத்திற்குப் பக்கம் வலித்தது. பலம் கொண்ட மட்டும் தம் பிடிக்க வண்டி மெல்ல நகர்ந்தது.
மாலை ஆறு மணிக்கு மேல் வண்டியைக் கோடவுனில் நிறுத்தி விட்டு, கடை வாசலில் வந்து  நின்ற செல்லப்பனுக்கு மறு நிமிடமே எந்தப் பேச்சுமின்றி கூலி கைக்கு வந்து சேர்ந்தது படு ஆச்சரியம். என்னவொரு அதிசயம். இது நம்ம கடைதானா?
இன்னைக்கு என்னாவப் போவுதோ? என்று எண்ணியவாறே வந்திருந்தவனுக்கு மறு பேச்சில்லாமல் காசு கைக்கு வந்ததில், கொஞ்சம் பயமும் சேர்ந்து வந்து ஒட்டிக் கொண்டது.
ஐயா, நாளைக்கு செங்கரணைக்கு லோடு கொண்டு போகணும்னு சொல்லியிருந்தீக….காலைல எப்ப வர சாமி…!- தயங்கித் தயங்கிக் கேட்டவாறே தலையைச் சொறிந்து கொண்டு என்ன பதில் வருமோ என்கிற பயத்தில் நின்ற செல்லப்பனை முதலாளியின் கூர்மையான பார்வை துளைத்தெடுத்தது.
காலையில் நடந்த களேபரத்தின் எதிரொலி…! வெடிக்குமோ…! என்ன சொன்னாலும் கேட்டுக்குவம். எதுவும் பேசுறதில்ல…! சாவகாசமா உண்மையச் சொல்லிக்கிடலாம். மனம் முடிவு செய்தது.
எட்டாப்புப் படிச்சிருக்கேல்லடா நீ…!-  ….
யாரைக் கேட்கிறார்? வேறு யாரும் பின்னால் நிற்கிறார்களோ? திரும்பிப் பார்த்தான்.
அட, ஒன்னத்தான் கேக்குறேன்….டிரைவிங் லைசன்ஸ் வச்சிருக்கியா ?
ஆஉறா…! பவுனு…நீ எம்புட்டுப் புத்திசாலி?….எந்தங்கமே….!!
என்னடா நா கேட்குறேன்…மரம் மாதிரி நிக்கிறே? இருக்கா, இல்லியா?
முதலாளியின் அந்தக் கேள்வி ஆயிரம் பூக்களை அள்ளிச் சொரிந்த மாதிரி இருந்தது செல்லப்பனுக்கு.
நாந்தேன் சொன்னேன்ல…என்னைக்காச்சும் ஒதவும்னு…. எடுத்து வச்சது எம்புட்டு நல்லதாப் போச்சு…? – கையை நெஞ்சில் வைத்து பவுனு சொல்வதாய் உணர்ந்தான்.  
பவுனு……பவுனு…..-சந்தோஷத்தில் பெண்டாட்டியின் பெயரைத் தன்னை மறந்து உச்சரித்தான் செல்லப்பன்.
என்னா இவன்…பெரிய கோட்டியா இருப்பான் போலிருக்கே…! எலே செவுட்டுப் பயலே…நான் சொன்னது காதுல விழுந்திச்சா இல்லியா…? சீக்கிரம் சொல்லு…எனக்கு வேலையிருக்கு…!
.இந்த போட்டோவுலதேன் நீ எம்பூட்டு அழகாயிருக்கே….என் ராசா….இத எங்கிட்டயே பத்திரமா வச்சிருக்கேன்…என்னைக்காச்சும் தேவைப்படைல தாரேன்….
அன்னைக்கு இப்டிச் சொல்லித்தானே அந்தக் கார்டை நெஞ்சுக்குள்ள வச்சா…!! அதத்தான் கேட்குறாரா இவுரு…! – சட்டென்று மூளையில் மின்சாரம் பாய….
இருக்குங்கய்யா….. – என்று அந்த ஏரியாவே அதிருவது போல் உற்சாகம் பொங்கச்  சத்தமாய்க் கத்தினான் செல்லப்பன்.
                     --------------------------------------------------கருத்துகள் இல்லை: