நாவல் “எதிர்பாராதது…!?” *********************************
------------------------------
ஒரு வீடு நல்லாயிருக்கணும்னா அந்தக்
குடும்பத் தலைவன் சரியா இருக்கணும்….எல்லா விஷயத்துலயும், தான் சரியா இருக்கிறது மூலமா
மற்றவர்களுக்கு அவன் ஒரு வழி காட்டியாகவும், தவறுகள் நடக்கக் கூடாதுங்கிறதைப் பாதுகாக்கிறதாகவும்
அமையும். அப்பத்தான் குடும்பத்துல இருக்கிற மற்ற உறுப்பினர்களுக்கு அவன் மேல ஒரு மரியாதையும்,
மதிப்பும், அவரவர் செயல்கள் மேலே ஒரு பயமும், கருத்தும், கரிசனமும் இருக்கும்….
-சொல்லிவிட்டு கங்காவின் முகத்தை உற்று நோக்கினார் தாமோதரன். எந்த பதிலும்
சொல்லாமல் அமைதியாயிருந்தாள் அவள். பதில் சொன்னால் மேலும் வளரும் என்று நினைத்தாளா அல்லது பதில் சொல்லாமல் இருப்பதுதான் ஒப்புதல் என்று கொண்டாளா?
– புரியாமல் பார்த்தார் தாமு.
என்ன, நான்பாட்டுக்குச் சொல்லிட்டிருக்கேன்…ஒண்ணுமே பேசாம இருக்கியே?
அலட்சியமா? என்றார்.
பேசாம இருந்தா அதுக்குப் பேரு அலட்சியமா? – கோபத்தோடு கேட்டாள்.
அப்படியும் அர்த்தமாகுமில்லையா? இந்த வீட்ல, இப்போ, நீயும் நானும்தான்
இருக்கோம். ரெண்டு பேரும் பேசிட்டிருக்கிற இந்த நிகழ்வுல இப்போ நான் உன்கிட்டே சொல்லிட்டிருக்கேன்….வெறுமே
செவுத்தைப் பார்த்துப் பேச முடியாதில்லையா? செவுரு பதிலுக்குப் பேசும்னா, கூடப் பேசலாம்….அப்போ
நீ வேண்டியதில்லை….மரம், மட்டையெல்லாம் பேசறதாச் சொல்றாங்க….அது மனுஷனோட பேசுதா, இல்ல
இவன் அதோட பேசுறானா? அப்படிப் பேசினா அதுக பதில் சொல்லுதாங்கிறதெல்லாம் இன்னும் கேள்வியாத்தான்
இருக்கு….எல்லாம் பாவனைகள்தான். பேசும்…பேச முடியும்ங்கிறதெல்லாம் அவனவன் கற்பனை…ரசனை
சார்ந்த விஷயம்….அப்படியிருக்கைல நீயும் செவுரு மாதிரி இருந்தேன்னா…?
ஆரம்பிச்சிட்டீங்களா? ஒண்ணுக்கு ஒம்பது பேசறதுக்கு என்னால ஆகாது….அது
உங்களுக்குக் கைவந்த கலை….இப்போ என்ன சொல்லணும்ங்கிறீங்க…?
சொல்றதென்னத்த…? எதைச் சொல்லி என்ன செய்யப் போறோம்…? எதையும், யாரும்
யாருக்கும் சொல்லி எதுவும் ஆகப் போறதில்லை….எல்லாரும் அவரவர் இஷ்டப்படிதான் இயங்கிட்டிருக்காங்க….அவனவனுக்கு
அனுபவம் ஏற்படுறபோது பட்டுத் திருந்துறான்….அவ்வளவுதான்…யாரும் யாரையும், சொல்லித்
திருத்திட முடியாது….எல்லாமும் அனுபவிச்சித்தான் திருந்தியாகணும்…அதுதான் சரியான மெச்சூரிட்டியா
இருக்கும். வாழ்க்கைக் கல்விங்கிறது ஏட்டுச் சுரைக்கா இல்ல…அனுபவம்….அனுபவிச்சு உணர்றபோது
கிடைக்கிற பாடமும், அதனால விளையுற முதிர்ச்சியும் தனி. அவைகளோட மகிமையே வேறே….
இப்போ என்னத்துக்கு என்னைப்போட்டு காலங்கார்த்தால பாடாப் படுத்தறீங்க…?
நான் உங்களுக்கு என்ன பண்ணினேன்? – உண்மையிலேயே நொந்துதான் கேட்டாள் கங்கா.
தலைவன் சரியாயிருந்தும், வீடு நல்லாயில்லையே? அதைச் சொல்ல வர்றேன்…ஏன்
இப்படி ஆகிப் போச்சு? என்னவோ ஒரு கோளாறு இருக்குன்னு யோசிச்சு யோசிச்சு அதையும்தான்
சரி பண்ணினேன்….அது இன்னும் சரியாப் பொருந்தலைன்னாலும், நாளாவட்டத்துல பலனளிக்கும்ங்கிற
நம்பிக்கைதான். ஆனாலும் அப்பப்போ இப்படி வக்கரிச்சிதின்னா அந்தக் கோணல்களை எப்படி நிமித்திறது?
தலையைச் சுற்றியது கங்காவுக்கு.
நம்ம வீட்ல பிரச்னையே எல்லாத்தையும் வெளிப்படையாப் பேசாததுதான். பல
வீடுகள்ல இன்னைக்கு இதுதான் பிரச்னை. ஒரே வீட்ல புருஷன், பொஞ்சாதி, பையன், பொண்ணு,
இல்லாட்டி ஒரு பொண்ணு, இல்லேன்னா ஒரே ஒரு பையன் இப்டி மூணே மூணு பேர் மட்டும் இருந்தும்
அந்த வீடுகள்ல அவங்க தனித் தனித் தீவு போல இயங்கிட்டிருக்காங்க….அப்பா சொல்றது அம்மாவுக்குப்
பிடிக்காது…அம்மா சொல்றது அப்பாவுக்குப் பிடிக்காது…ரெண்டு பேர் சொல்றதும் பையனுக்குப்
பிடிக்காது, இல்லன்னா பொண்ணுக்குப் பிடிக்காது, பையன் பேசுறது அப்பனுக்குப் பிடிக்காது,
அம்மாவுக்குப் பிடிக்கும்…பொண்ணு பேசுறது அம்மாவுக்குப் பிடிக்காது…அப்பாவுக்குப் பிடிக்கும்…இப்டியா
பல குடும்பங்கள் போயிட்டிருக்கு…போயிட்டிருக்கென்ன…அல்லாடிக்கிட்டிருக்கு….அதுதான்
சரி….
பணம் இருந்தா மட்டும் போதுமா…? அந்தப் பணத்தால உண்டான வசதி வாய்ப்புக்கள்
மட்டும் போதுமா? மனசுக்கு நிம்மதி வேணுமே? அதைப் பணத்தால தர முடியுதா? சரி, இன்னைக்கு
நிம்மதி இல்லை…தீர்ந்து போச்சு…கடைல போய் ஒரு கிலோ நிம்மதி வாங்கிட்டு வருவோம்னு போய்
விலை பேசியா வாங்க முடியும்? கடைல நிம்மதியைக் கூவிக் கூவியா வித்திட்டிருக்காங்க….பணம்ங்கிறது
வாழ்க்கையோட ஒரு காரணி மட்டும்தான்….அதுவே வாழ்க்கையில்லை…தண்ணீர், சாப்பாடு, காற்று…இது
மாதிரி. ஆனா என்ன? நிறையப் பேர் நினைச்சிக்கிறாங்க…பணம் இருந்திச்சின்னா வேறே எதுவும்
வேண்டாம்…அது ஒண்ணுதான் இந்த வாழ்க்கையோட ஆதாரம். வேறே ஒட்டு உறவு எதுவும் தேவையில்லை…எல்லாத்தையும்,
எதையும் சமாளிச்சிடலாம் அப்படீன்னு…..முடியுதா? இல்ல முடியுதான்னு கேட்கிறேன்…..
யாரைக் கேட்குறீங்க…? – கங்கா தாமோதரனைப் பார்த்துக் கோபமாய்க் கேட்டாள்.
யாரைக் கேட்குறது? நம்மளை நாமளே கேட்டுக்க வேண்டிதான். இப்போ நம்ம வீட்ல
பணமிருக்கு…வேணுங்கிற அளவுக்கு இருக்கத்தான் செய்யுது…ஆனா நிம்மதி இருக்கா?
ஏன் இல்லாமே…? நிம்மதியில்லாம இப்ப என்ன அழுதுக்கிட்டா இருக்கீங்க?
நல்லாத்தானே இருக்கீங்க….பணம் தந்த அந்த வசதி வாய்ப்போட இருக்கிறதுனாலதான் உங்களால்
இப்படிச் சத்தமாப் புலம்ப முடியுது…அதுக்கும் போதிய தெம்பு இருக்கிறதுனாலதானே இப்டிக்
கத்திட்டிருக்கீங்க? அந்தத் தெம்பைத் தந்தது எது? பணம்தானே? அது தெரியுதா உங்களுக்கு?
– அவளும் விடாமல் கேள்வியை வீசினாள்.
பணம் புலம்பத்தானே விட்டிருக்கு…..வயித்துக்குச் சோறு கிடைச்சாப் போதுமா?
எல்லாம் கிடைச்சிருச்சுன்னு அர்த்தமா?
இப்போ என்ன கிடைக்கலேங்கிறீங்க…?
நிம்மதி…மன நிம்மதி……அது இருக்கா இந்த வீட்ல…? எங்கே நிம்மதீஈஈஈ…….?
ன்னு இழுத்துப் பாட வேண்டிதான்……
இவ்வளவு நேரம் பேசினது பத்தாதுன்னு, பாட வேறே போறீங்களா…? அட கர்மமே….என்ன
கஷ்ட காலம்டா இது…ஆண்டவனே…!! என்னைக் காப்பாத்துப்பா….
கங்கா மூலையில் போய் அயர்ந்து உட்கார்ந்து விட்டாள். கங்காதரன் அடுத்து
என்ன செய்யப் போகிறாரோ என்பது அவள் கவலையாய் இருந்தது.
( 2 )
தொலைபேசி மணி அடித்தது.
ரிங் டோனை வைத்து அது கங்காவின் செல் என்று அறிந்து பேசாமல் இருந்தார் தாமோதரன். அவளுக்கு
ஃபோன் வந்தால் அவர் போய் எடுக்க மாட்டார். அவளே வந்து எடுக்கட்டும் என்று இருந்து விடுவார்.
அதுபோல் அவருக்கு ஃபோன் வந்தால் அவளும் போய் எடுப்பதில்லை. அடித்து ஓயட்டும், நமக்கென்ன
என்று விட்டுவிடுவாள்.
இப்போது மணி அடித்துக் கொண்டேயிருந்தது.
நிற்கிறவரை அடிக்கட்டும்…எனக்கென்ன? என்று உட்கார்ந்திருந்தார். அவள்
எங்கே என்ற எண்ணமும் இருந்தது. பாத்ரூம் போயிருக்கிறாள் என்று தெரிந்தது.
ஏன், ஃபோனை எடுத்தா என்ன குறைஞ்சு போவீங்களா?
நான் எதுக்கு எடுக்கணும்? உனக்கு வந்த ஃபோன் ஆச்சே அது….?
அதனாலென்ன? எடுத்து யாருன்னு
கேட்கலாமில்ல…? இல்லன்னா பாத்ரூம் போயிருக்கா…கொஞ்சம் கழிச்சுப் பேசங்கன்னு
சொல்லலாமில்ல….
அப்படி நான் செய்யணும்னா நீ முதல்லயே சொல்லணும்….ஃபோன் வந்தா எடுங்க…பாத்ரூம்
போறேன்னு…இல்லாம நான் செய்ய மாட்டேன்….நீ உடனே வந்த எடுத்தா மட்டும் என் காதுக்கு விழக்கூடாதுன்னு
தனியாக் கொல்லைப் பக்கம் போயிடறேல்ல…ஏன்? அதை நான் கேட்டா என்ன?
இதிலென்ன இருக்கு…சிக்னல் நல்லாக் கிடைக்கும் அங்கே…அதனால போறேன்…
அந்தச் சாக்குல வெளில போய் ரகசியம் பேசறே…அதானே….ஒண்ணு தெரிஞ்சிக்கோ….ரெண்டு
பேர் இருக்கிற வீட்டிலே ரகசியங்கள் மெயின்டெய்ன் பண்ணாதே…அது நல்லதில்லே…
அப்போ நிறையப் பேர் இருந்தாப் பண்ணலாமா?
இந்தக் கேள்வி குசும்புன்னு உனக்கே தெரியலை? புத்திசாலித்தனமா கேள்வி
கேட்கிறதா நினைப்பா?
ரகசியம் என்ன ரகசியம்? நீங்களா எதாச்சும் நினைச்சிட்டா அதுக்கு நான்
என்ன பண்றது?
நானா நினைச்சிட்டா இல்லை….நினைச்சிக்கட்டும்னுதான் நீ அப்டிப் போறே….என்ன
ரகசியம் வேண்டிக் கிடக்கு? உன் பையன் பேசாறான்னா பகிரங்கமாப் பேசு….அது எனக்கும் தெரியணும்….அவனோட
பேசிட்டு, செய்ய வேண்டிய காரியங்களுக்கு நீ எனக்கு உத்தரவு போடுவே…நான் அதுக்கு ஓடணுமா?
நீ ஏவுறதுக்கு மட்டும்தானா நான்? நானென்ன நீ வச்ச வேலைக்காரனா?
ஏவுறதென்ன? உங்களுக்கும் கடமையில்லையா?
எங்கடமையை உணர்த்துறதுக்கு நீ யாருடி? அது எனக்குத் தெரியும்…அதை நீ
சொல்லி நான் உணர்ந்துக்கணும்ங்கிற நிலைமைல நான் இல்லை….எங்களுக்கு அது பிறவியோட வந்தது….நாங்க
வளர்ந்த வளர்ப்பு எங்களுக்கு அதைச் சொல்லிக் கொடுத்திருக்கு…எதாச்சும் வேணும்னா அவன்
நேரிடையா என்கிட்டே சொல்லணும்…அவனுக்குச் சொல்லத் தெரியலைன்னா நீ சொல்லிக் கொடுக்கணும்…அதுதான்
உன்னோட கடமை…ஒரு நல்ல தாயாருக்கு அதுதான் அடையாளம்….பதிலா அவன் தன்னோட மட்டுமே நிறைய
நேரம் பேசறான்னு காண்பிச்சிக்கிறதுக்கும், அதைப் பெருமையா நினைச்சிக்கிறதுக்கும் ஒண்ணும்
இல்லே….அதுல எந்தப் பெருமையும் இல்லை….
உங்களுக்கு வேணும்னா பெருமை இல்லாம இருக்கலாம்…எனக்கிருக்கு…என் கண்ணனைப்பத்தி
எனக்குத் தெரியும்..
என்ன எனக்கிருக்கு? கிறுக்கு…..ஊர் உலகத்துல எல்லாரும்தான் பிள்ளை பெத்து
வச்சிருக்காங்க…அந்தப் பிள்ளைங்கள்லாம் இப்டியா இருக்குது போய்ப் பாரு….தெரியும்….பசங்க
அல்லது பொண்ணுங்க எப்டி இருக்குதுங்கிறதைத் துல்லியமாக் கவனிச்சு, அதுகளுக்கு நல்லதை
போதிக்கணும்…இந்த வயசுல மனசுல நல்லது படிஞ்சாத்தான் காலத்துக்கும் அது நிலைக்கும்….டீன்
ஏஜூக்கு முன்னாடியே மனசுல நல்லவைகள் எல்லாம் பதிஞ்சிடுச்சின்னா அது அவனுக்கும் நல்லது,
நம்மளுக்கும் நல்லது….அவனுக்கு முதல்ல மரியாதை கத்துக் கொடு…இத்தனை காலம் அவன்கிட்டே
மணிக்கணக்காப் பேசுறியே…அவன்ட்ட ஏதாச்சும் முன்னேற்றம் இருக்கா? படிக்கைல எப்படியிருந்தானோ
அதே மாதிரிதான் இருந்திட்டிருக்கான் இப்பவும்….
அதுக்காக டீச்சர் மாதிரி அட்வைஸ் பண்ணிட்டே இருக்க முடியுமா?
நீ டீச்சர் மாதிரி இருக்க வேண்டாம்டீ…அம்மா மாதிரியே இரு…அம்மா ஸ்தானத்துல
இருந்து நீ சொல்றதையே அவன் கேட்டா பெரிசு…! நான் நம்மளுக்கும் நல்லதுன்னு சொன்னது அவன்
நம்மை வச்சுக் காப்பாத்தணும்ங்கிற அர்த்தத்துல
சொல்லலை…அவன் பாட்டை அவன் சரியாப் பார்த்துக்கிட்டாப் போதும்ங்கிற அர்த்தத்துலதான்
சொன்னேன்…என்னைப் பொறுத்தவரை ஒண்ணுமில்லை…இன்னைக்கே எங்கயாச்சும் ரூம்ல போய் இருந்துக்கணும்னா
நான் போயிடுவேன்…என்னால தனிமைல இருக்க முடியும்…அதுக்கான மனப்பழக்கமும், பக்குவமும்
எனக்குண்டு…..நீ உன் பையனோட போய் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. என்னை அழைக்காட்டாலும்
பரவாயில்லை…எதைக் கொண்டு வந்தோம்…கொண்டு செல்லங்கிற தத்துவத்துல எனக்கு ரொம்ப நம்பிக்கை
உண்டு…ஈடுபாடும் உண்டு…
உங்களுக்கு மட்டுமா, எல்லாருக்கும்தான்…..
உனக்கு அப்படி இருக்கிறதா எனக்குத் தெரில…என்னவோ பையன் உன்னையே சுத்திச்
சுத்தி வருவான்னு நினைச்சு இயங்கிட்டிருக்கே நீ….கல்யாணம் ஆகட்டும்….அப்புறம் பாரு…பெண்டாட்டி
குண்டிக்குப் பின்னாடி அவன் போகலே என்னை என்னன்னு கேளு….
அப்படிப் போகணும்னு நீங்க உங்க மனசுல ஆசைப் படுறீங்க…அதனாலதான் அந்த
வார்த்தை வருது…என் பையன் அப்டியெல்லாம் இருக்க மாட்டான்…
இப்டிச் சொன்னவங்க எத்தனை பேரை நான் பார்த்திருக்கேன்….
உங்களுக்கென்னப்பா வசதிக் கேடு…இங்கே தனி ரூமு, டி.வி.,நியூஸ் பேப்பர்,
மூணு தரம் காபி, வேளா வேளைக்குச் சாப்பாடு, வாராவாரம் டாக்டர் செக்கப்பு, வெளில படி
இறங்கினா கோயில்….இதுக்கு மேலே என்ன வேணும்? நான்தான் தவறாமப் பணம் அனுப்பிடறேனே இல்லத்துக்கு…அவங்க
உங்களை எதுவும் கேட்கமாட்டாங்க….நீங்கபாட்டுக்கு நிம்மதியா இருக்கலாம்…..
நேத்துத்தாண்டீ அந்த போஸ்ட்மாஸ்டர் சாம்பசிவம் சொன்னதை இந்தக் காதாரக்
கேட்டேன்….என் கையைப் பிடிச்சிட்டு அழறார் அவர்….வீட்டோட வச்சிக்கணும்….அன்பான வார்த்தை
பேசணும், ஆதரவா இருக்கணும், வீட்டுக் காரியங்கள்ல தன்னைக் கலந்துக்கணும்ங்கிற அக்கறையெல்லாம் இல்லாமப் போயிடுச்சேய்யா
என் பையனுக்கு…இப்படி மாறுவான்னு நினைக்கவேயில்லை….அவ அழகுல மயங்கிச் சறிஞ்சிட்டான்யா…..என்
நாட்டுப்பெண் அவனைக் கைக்குள்ள போட்டுக்கிட்டாய்யா…
உங்க வீட்ல மட்டும் இது பிரச்னையில்ல…பல வீடுகள்ல இதுதான் நிலமை…நிறையப்
பேரு வாய்விட்டுச் சொல்றதில்ல….சந்தோஷமா, திருப்தியா இருக்கிறதா நடிச்சிக்கிட்டு இருக்காங்க…மனசுக்குள்ள
அழுதிட்டிருக்காங்க….இன்னைக்கு தலைமுறை இடைவெளியான இந்த விஷயம் எல்லாத்துக்கும் பொது….
– நான் சொன்னேன். என் நிலைமைக்கு நான் போய் அவருக்கு ஆறுதல் சொல்றதுக்கு என்ன அருகதை
இருக்கு? ஆனா, சொன்னேன். வாயால நாலு வார்த்தை சொன்னா, அது ஒருத்தருக்குச் சமாதானமா
இருக்கும்னா நஷ்டமா? அப்டியாவது ஒருத்தரை ஆறுதல் படுத்த முடியுதே….மனுஷாள் ஏங்கிக்
கிடக்கிறதே இந்த வார்த்தைகளுக்குத்தானே…பிரியமில்லையா…நடி…அப்டியாவது அந்தப் பெரியவங்க
மனச் சமாதானமா இருக்கட்டும்ன்னால் இந்தப் பொடிப் பசங்களுக்குத் தெரியுதா? இந்தத் தலைமுறைப்
பையன் எவன் எந்தத் தந்தைட்ட ஆறுதல் வார்த்தை பேசறான். எல்லாப் பயல்களும் கம்ப்யூட்டர்
முன்னாடி உட்கார்ந்திட்டிருக்கானுங்க…இயந்திரத்தோடு பழகிப் பழகி அவங்களுக்கு மனித உணர்ச்சிகளே
அத்துப் போச்சு….நம்ம பய என்ன வித்தியாசமாவா இருக்கான்…அவனும் இந்த லட்சணம்தான்….
என் பையன் ஒண்ணும் அந்த மாதிரிக் கிடையாது….
அதென்ன என் பையன்?…இத்தனை பேசற நானு, நம்ம பையன்னு சொன்னேன்…நீ என்
பையன்ங்கிறே…?எப்டிப் பெத்தே என் உதவியில்லாம? அப்புறம் எப்டி என் பையன்னு சொல்ல மனசு
வருது? அதுலயே தெரிஞ்சி போகுது உன் குறுகின மனசு….இந்த மாதிரியான உன்னோட பேச்சைக் கேட்கிற
உன் பையனுக்கு எந்த புத்தி மண்டைல ஏறும்? நினைச்சிப்பாரு…? நாமதாண்டீ அவனை உருவாக்குறோம்…அவன்
முன்னாடி நீ என்கிட்டே எப்டி இருக்கேங்கிறதைப் பொறுத்துத்தானே அவன் என்னை மதிப்பான்?
அவன் முன்னாடி நான் எப்படி உன்கிட்டே பேசறேங்கிறதைப் பார்த்துத்தானே அவன் உன் கிட்டப்
பேசுவான்? நாளைக்கு அவன் பெண்டாட்டிகிட்டே பேசும்போதும் நாம சொல்லிக் கொடுத்த இந்த
புத்தி அங்கே வேலை செய்யத்தானே செய்யும்?
ஐயோப்பா,…. போதும் போதும் உங்க வியாக்கியானம்….என்னை ஆளை விடுங்க…அவன்
எதுக்குப் பேசினான்னு கேட்டுட்டு வர்றேன்…. – சொல்லிவிட்டு செல்லை எடுத்துக் கொண்டு
பின்புறம் ஓடினாள்.
எந்தச் சோப்புப் போட்டுத்தான் உன்னை வெளுக்கிறதுன்னு எனக்குத் தெரியலை….பாரு…திரும்பவும்
எடுத்திட்டுக் கொல்லைப் புறம் போறதை….நீ திருந்த மாட்டடீ…அவனையும் இப்டியே பழக்கிட்டே….பேசறதோ
பேசற, அவனை முன்னேத்தப் பாரு….வெறுமே பேசிப் பேசிப் பொழுதைப் போக்குறதுல என்ன இருக்கு
பெருமை…?
சொல்லிவிட்டு வெளியேறினார் தாமோதரன். கதவை ஞாபகமாகச் சாத்தி, உள்ளே
கொண்டிபோட்டுவிட்டுப் புறப்பட்டார். அவள்பாட்டுக்குத் திரேகம் தெரியாமல் பேசிக் கொண்டிருப்பாள்.
என்னதான் அவன் அப்படிக் கதை பேசுவானோ, ம்…..ம்…..ம்….என்று “ம்“ கொட்டிக்கொண்டு கேட்டுக்
கொண்டேயிருப்பாள். அவனுக்கும் அவன் கதைகளைச் சொல்ல வேற இடம் கிடைக்கவில்லை போலும்…
ஆனால் ஒன்று நிச்சயம்….இப்படி அவன் ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் ஏதோ இருப்பதுபோல்
சொல்வதும், அவை ரொம்ப விஷயார்த்தமானதாய் இவள் எடுத்துக் கொண்டு படு அக்கறையாய்க் கேட்டுக்
கொண்டிருப்பதும்…இதற்கு முடிவே இல்லையென்றுதான் இவருக்குத் தோன்றியது. அந்த நேரத்தில்
ஒரு புத்தகத்தின் முப்பது நாற்பது பக்கங்களைப் படித்து விடலாமே என்று தோன்றும் இவருக்கு.
ஏதாச்சும் விஷயம் உண்டா? விபரம் சொல்லணுமா? அல்லது ஏதாச்சும் செய்யணுமா?
சீக்கிரம் சொல்லு….. – இப்படிக் காரியார்த்தமாய் இருந்துதான் இவருக்குப் பழக்கம்.
என்ன சொல்லி என்ன செய்ய? எது நம் கைக்குள் அடங்குகிறது? நாமாய் நினைத்துக்
கொள்ள வேண்டியதுதான். எல்லாம் அடங்கியவைகள்தான் என்று. விடுவித்துக் கொண்டு எல்லாமும்
பறந்து சென்றதை எவனால் உணர முடிகிறது? அனுபவம் பெறப் பெறத்தான் ஒவ்வொன்றாய் உணர வேண்டியிருக்கிறது.
வயதிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. வயது, தானாய் ஓடிக் கொண்டிருக்கிறது. வயதாகிவிட்டதாலேயே
எல்லா அனுபவங்களும் வந்து விட்டது என்று பொருளாகுமா? ஆள் வளர்ந்து விட்டதால், அறிவும்
வளர்ந்து விட்டது என்று சொல்லலாமா? எந்த அனுபவமும் கிட்டாமல் மரித்துப் போன மனிதர்கள்
ஏராளம். எல்லா அனுபவமும் கிட்டியும், திருந்தாமல் போன ஜென்மங்கள் அநேகம். இப்படித்தான்
இந்த உலகம் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.
பழுத்த அனுபவம் என்பார்கள் யாரைப் பார்த்தாவது. அவன் செய்ததெல்லாம்
தகிடு தத்தங்களாயிருக்கும். பெரிய சாணக்கியன்யா அவரு…என்று மரியாதையோடு விளம்புவார்கள்.
நன்றாக உள்ளே நுழைந்து பார்த்தால் அந்த மரியாதைக்கு இம்மியும் தகுதி இல்லாதவராய் இருப்பார்
அவர். இங்கே அவர் என்று விளிப்பது வயது கருதி மட்டும்தான். இப்படி இந்த லோகத்தில் எத்தனை
பார்க்கிறோம்…?
போய்க்கொண்டேயிருந்தார் தாமோதரன். எதிர்ப்பட்டார்
பஞ்சாபகேசன். அவரைப்
பார்த்ததும் ஏதோவொரு பழைய திரைப்படத்தில் வெட்டியாய்த் திரிந்து கொண்டிருக்கும் விசுவின்
கதாபாத்திரம்தான் ஞாபகத்திற்கு வரும் இவருக்கு. சரி, மாட்டியாயிற்று. இனி தப்பிப்பதற்கில்லை
என்று எதிர்கொண்டார் அவரை.
வயசு இருபத்திநாலுதான்யா ஆகுது….அதுக்குள்ளேயும்
என்னய்யா கல்யாணம்….எம்பொண்டாட்டி என்னைப் போட்டு அரிச்செடுக்கிறா…பொண்ணு கல்பனாவுக்கு
உடனே கல்யாணம் பண்ணியாகணுமாம்….
சரிதானே…அப்புறம் எப்போ கல்யாணம் பண்றது…சரியான வயசுதானே இது… -அடக்க
முடியாமல் சொல்லி விட்டார் தாமு.. பிறகுதான் தெரிந்தது சொல்லியிருக்கக் கூடாது என்று.
ஏதேனும் பதில் சொல்லப் போக அதுதான் சாக்கென்று பிடித்துக் கொண்டு விடுவார் பஞ்சு. பிறகு
மனுஷனிடமிருந்து தப்பிக்க முடியாது. வம்புக்கு எதுடா இடம் என்று அலைபவர்.
என்னய்யா சொல்றீர்,இப்பயே கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டு அப்புறம் நானும்
என் பொஞ்சாதியும் சோத்துக்கு சிங்கி அடிக்கிறதா? புரியாமப் பேசுறீரே…
மனுஷனா இந்த ஆளு? என்று தோன்றியது தாமுவுக்கு. அவனவன் காலாகாலத்தில்
ஒரு திருமணத்தை முடித்து எப்படா தள்ளி விடுவோமென்று துடித்துக் கொண்டிருக்கிறான். இந்தாள்
என்னடாவென்றால் தன் பாட்டை நினைத்து பெண்ணின் கல்யாணத்தைத் தள்ளிப் போட நினைக்கிறார்.
எங்காவது இப்படி உண்டா? இந்த மனுஷன் எப்போ என்ன செய்வார் என்று யாராலும் சொல்ல முடியாது.
திட்டமில்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் செய்து கொண்டே போவார். பின் விளைவுகள் என்னாகும்
என்று எதுவும் யோசிப்பதில்லை. இப்படிப்பட்ட மனுஷனை நம்பி யாரும் எதுவும் செய்ய முடியாது.
தன் யோசனை இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி, காற்று அடிக்கும் பக்கம் எல்லாம்
பறக்கும் கிழிந்த பேப்பர் மாதிரிப் போய்க் கொண்டேயிருப்பார். அவரது இப்படியான இருப்பினால்
என்னெல்லாம் அனுபவிக்கப் போகிறாரோ? – தன் நண்பரைப் பற்றி இப்படி நினைத்து சற்றே வருத்தமுற்றார்
தாமோதரன். அவருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று அவர் மனசு கடவுளை வேண்டியது. உண்மையான
நட்புக்கு அதுதானே அடையாளம்… ?
( 3 )
அப்பா தனக்கு இப்போதைக்குக்
கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார் என்று உறுதியாய் அறிவாள் கல்பனா. அம்மா பவானிதான் அரித்தெடுக்கிறாள்.
பஞ்சாபகேசன் அசைவதாயில்லை.
உனக்கு ஒண்ணும் தெரியாதுடி….நாம என்ன ஆம்பிளைப் பிள்ளையா பெத்து வச்சிருக்கோம்…ஒரு
பொண்ணுதானே இருக்கு….உனக்கும் எனக்கும் பென்ஷனா வருது. ஏதோ வியாபாரத்தைப் பார்த்தேன்….காலத்தை
ஓட்டினேன். கஷ்டப்பட்டு ஒரு பொண்ணைப் படிக்க வச்சிட்டேன்…என் தங்கச்சி லலிதா இருந்தா…அவ
வேலைக்குப் போனதால கூடக் கொஞ்சம் வருமானம் வந்திட்டிருந்திச்சி…இப்போ அவளும் இல்லை….பிரிஞ்சி
போயிட்டா…இவ இப்போதான் வேலைக்குப் போனவுடனே கல்யாணத்தைப் பண்ணி ஒருத்தன்ட்டத் தூக்கிக்
கொடுத்திருங்கன்னா நல்லாயிருக்கே கதை….பயிருக்குத் தண்ணி ஊத்தி, ஊத்தி, அதைப் பார்த்துப்
பார்த்து வளர்த்துப்பிட்டு, பலனை எவனோ அனுபவிக்கிறதுன்னா? விட்ர முடியுமா? கொஞ்ச காலத்துக்காவது
அது நமக்கு உரிமையில்லையா? அவளோட சம்பாத்தியம் நமக்குப் பயன்படக் கூடாதா? நல்ல நியாயமா
இருக்கே…?
யாராவது இப்படிப் பேசுவாங்களா? பொண்ணை வச்சிட்டிருக்கிறவங்க யாரும்
உங்களை மாதிரிப் பேச மாட்டாங்க…..எப்படா கல்யாணத்தைப் பண்ணி அனுப்பி வைப்போம்னுதான்
துடிச்சிட்டிருப்பாங்க….நீங்க என்னடான்னா நேருக்கு மாறா இருக்கீங்க….வர்ற மாப்பிளைகிட்டே
கேட்டுக் கிடுவோம்….எங்களுக்கு வேறே நாதியில்லே…எங்களையும் கூடத்தான் வச்சிக்கிடணும்….அப்படியானாத்தான்
எங்க பொண்ணைக் கட்டிக் கொடுப்போம்னு சொல்லிப் பார்ப்போம்….யாராவது ஒரு மாப்பிள்ளை மாட்ட
மாட்டானா? இல்ல நம்ம பொண்ணுக்குத்தான் சாமர்த்தியம் இருக்காதா? அப்டியா நம்மளக் கைவிட்ரும்?
– பதிலுக்கு ஆதங்கப்பட்டாள் பவானி.
நீ சொல்றதெல்லாம் கவைக்கு உதவாது. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி சரின்னு
தலையாட்டி, பின்னாடி உதறி விட்டவங்களெல்லாம் எனக்குத் தெரியும்…..மாசா மாசா இவ்வளவு
கொடுத்திருவோம்னு சொல்லிட்டுத் தாலியைக் கட்டினவனெல்லாம் எப்பவோ மாறிப் போயிட்டான்.
உங்களைக் கைவிடவே மாட்டேன்னு சொல்லிட்டுப் போன பொண்ணுக ஏராளம். எம்புருஷன்காரர் மாட்டேங்கிறார்…நான்
என்னப்பா பண்றதுன்னு மூக்கைச் சிந்திக்கிட்டு நாடகம் போடுங்க….பொம்பளைப் புள்ளைங்க
கல்யாணம் கட்டியாச்சின்னா அப்புறம் தன் புருஷன், தன் குழந்தைங்க….தன் வீடு, தன் வாழ்க்கைன்னு
மாறிடுவாளுங்க…..
அதுக்காகப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணாமயே வீட்டோட வச்சிட்டிருப்பீங்களா?
கன்னி கழிய வேண்டாமா? இது பாவமில்லையா?
பாவமாவது, புண்ணியமாவது? பாவ புண்ணியம் பார்த்தா பிள்ளையே பெத்திருக்கக் கூடாது. யாரும் நினைக்காத,
ஒரு எதிர்பாராத இடத்தில்தான் நான் என் பெண்ணைக் கொடுப்பேன். அதன் மூலமா நீயும் நானும் சாகுறவரைக்கும் சௌக்கியமா இருக்கணும்…அதுதான் என்னோட
திட்டம்…இந்தத் திட்டத்துக்கு யார் குறுக்கே வந்தாலும், எவர் பேச்சையும் கேட்கமாட்டேன்.
நான் முடிவு பண்ணி வச்சிருக்கிறது யாருக்கும் தெரியாது. அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச
ரகசியம்….!! பரம ரகசியம்..!!!
என்ன பேச்சுப் பேசுகிறார் இந்த மனுஷன்? பவானியால் எதுவும் செய்ய முடியவில்லை.
இதற்கு மேலும் பேசினால் சண்டைதான் வளரும். அண்டை அசலில் இருப்பவர்கள் சிரிப்பாய் சிரித்தாலும்
அவர் கவலைப்படமாட்டார் என்பது தெரியும். ரொம்பவும் அடம் பிடித்தால் வெளியே போ என்று
தன்னையே சொன்னாலும் சொல்லி விடுவார். தன் மனக்குறையை யாரிடமாவது கொட்டி அழ வேண்டும்
என்றிருந்தது அவளுக்கு. யாரிடம் போவாள்? அவள் தங்கை லலிதாவிடம்தான் போயாக வேண்டும்.
அந்தக் குடும்பத்துக்கு ஆதரவாய் இருந்த பெண். அவளையும் விரட்டியாயிற்று…அசட்டுப் பிசட்டென்று
அவளைச் சினிமாவில் சேர்க்கிறேன் என்று அலைந்தார். உன் அழகுக்கு நீ கோடி கோடியாச் சம்பாதிக்கலாம்
என்று உளறிக்கொட்டினார். பயந்து போயேவிட்டாள் அவள். அவள் சம்பளத்தால் வந்த வருமானமும் போனதுதான் மிச்சம். லலிதாவின் நினைப்பு
வந்து பவானியை உலுக்கியெடுத்தது. பவானியின் சிந்தனை தடை படுவதுபோல் கத்திக் கொண்டிருந்தார்
பஞ்சு.
இது என் வீடு….நான் லோன் போட்டுக் கட்டின வீடு. இங்க என் பேச்சைக் கேட்டுட்டு
கம்முன்னு இருக்கிறதானா இரு…இல்லன்னா நீயும் வெளியேறலாம்….வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்….எத்தனையோ
முறை சொல்லியிருக்கிறார். அவருக்கு இன்னதுதான் பேசுவது என்றில்லை. இதே பேச்சை எத்தனை
முறைதான் லலிதாவும் கேட்பாள். அவர் எதைத் திரும்பத் திரும்பச் சொன்னாரோ அது ஒரு நாள்
நடந்தே விட்டது….அந்தக் கதை தனி. அதுதான் அவளைச் சினிமாவில் சேர்க்க அலைந்த கதை. தெரியாத்தனமாய்
லலிதாவை இழுத்துக்கொண்டு போய் ஒரு தவறான இடத்தில் விடுவதற்கு இருந்தார். போலீஸ்ல சொல்லி
உங்களை உள்ளே தள்ளிடுவேன்….ஜாக்கிரதை என்று மிரட்டி விட்டு வெளியேறி விட்டாள் லலிதா.
அப்புறம்தான் தன் தவறை உணர்ந்தாரோ என்னவோ, அவரே சங்கடப்பட்டு உதறி விட்டார். அதற்குப்பின்
சுதந்திரமாய் வாழ்கிறாள் லலிதா. சொந்தக் காலில் நிற்கிறாள்.
வீட்டை அடகு வைத்துக் கடன் வாங்கிக் கல்பனாவின் கல்யாணத்தை முடித்து
விடலாம் என்று எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டாள் பவானி. அந்தப் பேச்சே எடுக்காதே என்று விட்டார்.
அப்போ எப்பத்தான் உங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணப் போறீங்களாம்…..
பார்ப்போம்…பார்ப்போம்…. – இதுதான் அவர் பதில். தினமும் பார்க்கும்
பழகும் நண்பர்களெல்லாம் அவரவர் பெண்டுகளைக் காலா காலத்தில் திருமணம் செய்து கொடுப்பதையும்
பொறுப்பினைக் கழித்து உறாயாக இருப்பதையும் பார்க்கத்தான் செய்கிறார். அப்படியும் புத்தி
வர மாட்டேன் என்கிறதே…?
அந்த மார்த்தாண்டம்
இருக்காரே, அதான் உங்க வியாபார நண்பர்…எவ்வளவு சாமர்த்தியமா தன் பெண்ணைத் தள்ளி விட்டிருக்கிறார்
பார்த்தீங்கல்ல?
இதிலென்னடி சாமர்த்தியம்
இருக்கு? சூரத் கொள்முதலுக்குப் போகும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அந்தப் பையன் கூடவே
போயிருக்கான். நாலுகடை தள்ளி சின்னக் கடையா வச்சிருக்கானேன்னு பெருகட்டும்னு எல்லாம்
கத்துக் கொடுத்திருக்கார்…கத்துக் கொடுக்கிறதென்ன அவனே கத்துட்டிருக்கான்…பிளான் பண்ணியே
இவர் கூடவே அலைஞ்சிருக்கான். வியாபார நுணுக்கங்களையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டான்….இப்போ
கடையைப் பெருக்கிட்டான்….ஆளைக் குறி வச்சிட்டாரு…
இப்டியே பேசுங்க….உங்களுக்கு
உங்க பேர்லயும் நம்பிக்கை கிடையாது…அடுத்தவங்களையும் தப்பாவே நினைச்சுப் பேசவீங்க….
அதுதாண்டீ உண்மை….பத்துக்குப்
பத்து கடைக்கு எதுக்கு சூரத் போகணும்…இங்கிருக்கிற ஈரோட்டுச் சந்தைல போய் கொள்முதல்
பண்ணிட்டு வந்தாலே நல்ல லாபம் பார்க்கலாமே….அப்டிப் பார்த்திட்டிருந்த பயதானே அவன்….இவர்தானே
அவனைச் சேர்த்துக்கிட்டார்…..
பார்த்தீங்களா…கொஞ்ச
நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னீங்க…? பிளான் பண்ணியே அந்தப் பய ஒட்டிக்கிட்டான்னீங்க…இப்போ
அவர் சேர்த்துக்கிட்டாருங்கிறீங்க…
என்னதான் சேர்த்துக்கிட்டாலும்
எல்லா நடைமுறைகளையும் புரிஞ்சிக்கிடறதுக்கு புத்தி வேணும்டி, புத்தி வேணும்….அந்தத்
திறமை அவனிட்ட இருந்திருக்கு….பத்திக்கிடுச்சு….பையனோட வளர்ச்சிய கூர்மையாக் கவனிச்சிட்டு
வந்தவர்…சமயம் பார்த்துக் கோழி அமுக்கிற மாதிரி அமுக்கிட்டாரு….அதத்தானே நான் அழுத்தி அழுத்திச் சொல்ல வர்றேன்…அப்டி ஒரு பய நம்ம பொண்ணுக்கு
கிடைக்கணும்னு….அப்டிக் கிடைச்சான்னா நம்மளயும் கைவிட மாட்டான்….நம்பிக்கையா மிச்ச
நாட்கள ஓட்டலாம்….நான் உன்னையும் சேர்த்து இழுத்திட்டேல்ல யோசிக்கிறேன்….நீ என்னடான்னா
என்னைப் புரிஞ்சிக்கிடவே மாட்டேங்கிறியே?
அந்த ரங்கன் மாப்பிள்ளை
மாதிரி நம்ப கல்பனாவுக்கும் கிடைக்கணுமே?
ஏன் கிடைக்காது?
கண்டிப்பாக் கிடைக்கும்…நம்பிக்கையோட இரு…பொண்ணுகளுக்கு இருபத்தி ஏழு, எட்டுல கல்யாணம்
பண்றதில்லையா? அது மாதிரி நடத்திட்டுப் போறோம்….?
அந்த வயசெல்லாம்
பசங்களுக்குத்தாங்க பொருந்தும்…பொம்பளப்பிள்ளைங்களுக்கு இருபத்தி அஞ்சே ஜாஸ்திங்க….
அப்போ என்ன செய்யச்
சொல்றே? எவன்ட்டயாவது தள்ளிவிட்டிட்டுக் கையில திருவோட்டை ஏந்திட்டு நிக்கச் சொல்றியா?
அதெல்லாம் இல்லை…பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி, வசதி வாய்ப்போட இருக்கிறவன் இவன் ஒருத்தன்தான்யான்னு
ஊர் சொல்லணும்….அப்டி ஒரு மாப்பிள்ளையைப் பிடிப்பேன்….வலைவீசிப் பிடிக்கிறேனா இல்லையா
பாரு….? –நான் வீசுற வலைல ஒரு திமிங்கிலமே மாட்டப்போகுதாக்கும்….” சவால் விடுவதுபோல்
சொன்னார் பஞ்சாபகேசன்.
அப்படி அவர் சொன்னபோது
அவர் மனதில் அந்தக் கனவு ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கனவும் வீட்டு ஜன்னல் வழி கண்ணுக்குத்
தெரிந்தது. தினமும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. அவர் ஆசைகளை வளர்த்துக் கொண்டுதான்
இருக்கிறது.
தெருவின் எதிர்ச்சுவரில்
ஒட்டப்பட்டிருந்த அந்த சினிமாப் போஸ்டரில் கையில் ஓங்கி வீசிய சவுக்கோடு எதிரிகள் நாலைந்து
பேரைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் ரசிகர்களின் கனவு நாயகன் பிரேம்குமார். பாலா
என்கிற பாலசுந்தரம் இன்று பிரபல நடிகர் பிரேம்குமாராகி அவன் வெட்டிப் பயலாய்த் திரிந்த
இந்த ஊருக்கே அவன் நடித்த படங்கள் வந்து போய்
விட்டன. இன்று நம்மைக் கண்டால் பிரியமுடன் வந்து கட்டிக் கொள்ளமாட்டானா?
மாம்மா…..மாமோய்……அப்படித்தானே
துள்ளுவான்…அந்தத் துள்ளல் அதற்குள்ளுமா மறந்து போயிருக்கும்?
தன் அம்மா வழிக்கு
தூரத்து உறவான ரங்கபாஷ்யம் இப்போது சினிமாத் தயாரிப்பாளராய் சென்னையில் கொடிகட்டிப்
பறக்கிறார். என் பெண் கல்பனாதான் எத்தனை அழகு? அந்த ரங்கபாஷ்யம்தான் அவன் சமீபத்திய
படங்களைத் தயாரித்தவர். அவரிடம் சொல்லி அந்தப் பிரேம்குமாரைப் பிடித்துப் போட்டால்
என்ன? பெரிய்ய்ய்ய கனவோ?
என்னங்க, சுத்தப்
பைத்தியக்காரத்தனமா இருக்கு …உங்களுக்கென்ன கிறுக்குப் பிடிச்சுப் போச்சா…? இன்னைக்கு
அவன் இருக்கிற நிலைமை என்ன? நம்ம இருப்பு என்ன? எதாச்சும் யோசிச்சீங்களா? சினிமாக்காரனுக்குக்
கொண்டு கொடுத்தா, வச்சு வாழ்வானா? கொஞ்ச நாள்ல வேறொருத்திய வச்சிக்கிட்டான்னா? இவளைக்
கழட்டி விட்டுட்டான்னா நம்ம பொண்ணு வாழ்க்கை என்னாகுறதுங்க? எதாச்சும் யோசிச்சுத்தான்
பேசுறீங்களா?
இந்த ஊர்ல சுத்தின
பயல்ங்கிறதால, நம்ம பொண்ணை அவன் தலைல கட்டிட முடியும்ங்கிற உங்க நினைப்பு உங்களுக்கே
கேலியாத் தெரிலயா? அவனோட இன்னைக்கு இருப்பு
என்ன? பிழைப்பு என்ன? வருமானம் என்ன? நீங்களெல்லாம் அவன் மனசுலயாவது இருப்பீங்களா?
அந்தப் பாலா ரெண்டு மூணு வாட்டி நம்ம வீட்டுக்கு வந்திருக்கான், சாப்பிட்டிருக்கான்ங்கிறதையெல்லாம்
இப்பப் போய்ச் சொன்னா தெரிஞ்ச மாதிரி அவன் காட்டிக்குவானா? அவன் அந்தஸ்தே இன்னைக்கு
எவ்வளவு உயரத்துல இருக்கு? எதாச்சும் புரிஞ்சிதான் பேசறீங்களா?
பவானி அவள்பாட்டுக்குப்
பேசிக் கொண்டிருந்தாள். காதில் விழுந்ததா இவருக்கு? அவர்தான் நினைத்ததை முடிப்பவன்
ஆயிற்றே…! ஜன்னல் வழி தெரிந்த பிரேம்குமாரைக் கண்டு கொண்டே அசாத்தியமான கனவுகளில் மிதக்கலானார் பஞ்சாபகேசன். அவர் மனசில்
அப்போதே கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது எனலாம். மனுஷனின் கற்பனைகளுக்கு எல்கை உண்டா
என்ன? கனவு காணும் வாழ்க்கை……இந்த இடத்தில்தான்
யாரும் எதிர்பார்க்காதபடிக்குக் கதையின் போக்கே மாறிப் போகிறது. ( 4 ) உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான்
பிரேம்குமார். திரும்பத் திரும்ப அவன் கை,
அடிபட்ட அந்தக் கன்னத்தை நோக்கியே சென்று, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. தடம் தெரிகிறதா
என்று எழுந்து சென்று கண்ணாடியின் முன் அமர்ந்து கூர்மையாகப் பார்த்தான். பளிச்சென்று
தெரிந்தது.. நான்கு விரல்கள் அப்படியே பதிந்திருந்தன. மேக்கப் கலைத்த பின்பு தெரியாது
என்றுதான் நினைத்தான். அந்த அளவுக்கு ஆழமான, அழுத்தமான அடி. மனதுக்குள் ரணம் புகுந்திருந்தது
வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. எரிச்சல் அதிகமாகி, வெறியைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
படுக்கையின் மேல் ஓங்கிக் குத்தினான்.. புகையைப் போல் உள்ளே பதுங்கியிருந்த காற்று
குபீரென்று வெளிக் கிளம்பியது. நாசியைத் தூசி நெருடியது. …
ச்சே…!! என்ன ஒரு
அவமானம்…? தடம் பதிந்த விரல்கள். தன்னைத் தழுவ வேண்டிய விரல்கள். அத்தனை வீர்யத்திலும்
உணர்ந்த அந்தக் கட்டுறுதி.. அவள் கையை அப்படியே பிடித்து அழுத்தி, விடுபடவிடாமல் கண்களை
மூடி….அந்தப் மென்மையை உணர்ந்திருக்க வேண்டும். தனியே அது வாய்க்கவில்லை. பொது இடமாகிப் போன அவலம். பலர் கண்களும் இவர்களை நோக்கி….எல்லோரும்
பார்க்க நடந்து முடிந்த கேவலம்.
ஸாரி…ஸாரி…எதோ தெரியாம நடந்து போச்சு ….மனசு சரியில்லை ….ப்ளீஸ் மறந்திடு…-
மனம் ஒப்பித்தான் சொன்னாளா அல்லது நாடகமா?
காரின் ஆக்ரோஷமான
உறுமலில் அவள் வார்த்தைகள் காதில் விழுந்து காணாமல் போயின. பின்னாலேயே சற்று ஓடி வந்தது
போல்தான் இருந்தது. அதெல்லாம் கற்பனை…அவளாவது, ஓடி வருவதாவது?அவள் ஸ்டேட்டஸ் என்னாவது?
உண்மையா அல்லது அதுவும் பிரமையா? அவள் தன் பின்னால் வர வேண்டும் என்பதுதானே அவன் விருப்பம்?
யூனிட்டே பதறி நின்றதைப் பார்க்க முடிந்தது.
அவளின் டச் அப் பார்கவி…
கவனித்து விட்டாள். காட்டிக் கொள்ளவில்லை. அந்த நாசூக்கு அவளுக்கு இருக்கிறது. என்ன
இருந்தாலும் முதலாளி. வேலை போய்விடும் என்கிற பயம்.
கூட்டத்தோடு கூட்டமாய்
ஆடிக் கொண்டிருந்தவளுக்கு நான் கொடுத்த வாழ்வு. அவளின் அழகை அடையாளம் கண்டு கொண்டதற்கான
பலன். திறமையை அறுதியிட்டதற்கான பரிசு. முதல் படத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் அவளோடு
கூட்டு சேர்கிறான். சில படங்களை வெளியில் செய்து விட்ட மமதையா? அந்த சிலதில் சில உச்சத்திற்குப்
போனதால் இவளும் எட்டா உயரத்திற்குப் போய்விட்ட கர்வமா?
நீங்க பண்ணினது பெரிய
தப்பு சார் ….எப்போ உங்களோட சேர்ந்து முதல் படம் வெற்றியாச்சோ, அப்பவே அந்த நந்தினியைக்
குறைஞ்சது அஞ்சு வருஷத்துக்காவது எங்கூட நடிக்கணும்னு சொல்லியிருக்கணும்…சினிமா உலகம் அவளுக்கு நல்லாப்
புரியறதுக்கு முன்னாடி ஒரு சரியான ஆளை வச்சு அவளைக் கோழி அமுக்கிறமாதிரி அமுக்கியிருக்கணும்.
சின்னக் கையெழுத்துதான்னு ஒரு கான்ட்ராக்டைப் போட்டிருக்கணும். …உங்க பின்னாடியே நாய்
மாதிரிச் சுத்தினாள். இன்னைக்கு இப்டியா? – ஏற்றி விட்டான் மானேஜர் ராஜரத்னம். .
நடிகைகளை அறிமுகப்படுத்தினா,
டைரக்டர்கள் கான்ட்ராக்ட் போடுறதில்லையா? அதுபோலத்தான். வேறே எந்தக் கம்பெனியிலும்
ஒப்புக்கக் கூடாதுன்னு…! உங்க பேர்ல அம்புட்டு மரியாதையா இருந்த பொண்ணு…விட்டுட்டீங்க…..இப்போ
இந்தப் படம் உங்களோடதான….மாட்டேன்னா சொல்லிச்சு….? நீங்க சொன்னா மறுக்கவா போகுது…?
அவங்க நினைப்பு உயரத்துக்குப் போறதுக்கு முன்னால உங்க அன்பால நிறுத்தியிருக்கணும்…முதல்
படம் முடிஞ்சவுடனே அடுத்தடுத்து இதுன்னு ஒரு அடையாள ஒப்பந்தம் பண்ணியிருக்கணும்…யாரும்
செய்ததில்லைன்னுட்டீங்க…புதுசா செய்தா என்ன? மாட்டேன்னு சொல்லியிருக்குமா? வழியில்லாமத்தானே
உங்ககிட்டே வந்திச்சு? அன்னைக்குத் தேதிக்கு அதுக்குச் சம்பளம் கூட அதிகமில்லை…விட்டுட்டீங்களே?
உங்க பேர்ல எவ்வளவு மரியாதை இருந்திச்சு….நம்ம வீட்லயே பழியா கிடந்திச்சுல்ல….?
மரியாதை என்கிறான்.
இன்று நடந்தது எப்படி அதன் அடையாளம் ஆகும். அவளுக்குள் வேறு எண்ணங்கள் நுழைந்திருக்கிறது.
தனியாக வெல்ல வேண்டும் என்கிற வெறி புகுந்திருக்கிறது. ஒரே நாயகனுடன் நடிப்பதில் பலனில்லை
என்று நினைக்கிறாளோ? வேறு நாயகன் ஆசை வந்து விட்டதோ? ரெட்டை நாயகன் கதை தேர்வு செய்கிறாள்?
பலமான யோசனை வந்தது பிரேமுக்கு.
ராஜரத்னம் சொல்வது
சரிதான். அவன் வெறும் பி.ஏ., மட்டுமல்ல. அவ்வப்போது தனக்கு வேண்டிய தேவையான ஆலோசனைகளைச்
சொல்பவன். என்ன இருந்தாலும் தூரத்து உறவினன். அந்தப் பாசம் விட்டுப் போகுமா? சார்…சார்…என்றுதான்
இன்றுவரை அழைப்பான். அண்ணே… என்று சொல்ல வராது.. பங்களாவில் இருக்கும்போது கூடச் சரி….அவன்
வார்த்தைகள் வரம்பு தாண்டியதில்லை. தனிமையிலேயே இப்படி என்றால், பொது இடத்தில், படப்பிடிப்பு
நடக்கும் இடங்களில் கேட்க வேண்டுமா? கழுத்தில் தொங்கும் துண்டைக் கூட கையில் பணிவாக
எடுத்து வைத்துக் கொண்டு பத்தடி தள்ளித்தான் நிற்பான் ராஜரத்னம்.
பாரு, என்று கண்ணைக்
காண்பிப்பான் பிரேம். அந்த பாஷை அவனுக்கு மட்டும்தான் புரியும்.
கவனிச்சியா ?
ம்ம்ம்….
…….அத்தனை கூட்டத்துலயும்
துல்லியமாத் தெரியுறா பாரு…..
பேசாமக் கலியாணம்
பண்ணிக்குங்க சார்….- சொல்லியே விட்டான் ஒரு நாள். ரத்னமா சொன்னது இதை. பிரேமுக்கே
ஆச்சரியம். என் மீதுதான் அவனுக்கு எவ்வளவு பிரியம்.
அதத்தான் நான் சொல்லிட்டேயிருக்கேன்…நீங்க
கேட்க மாட்டேங்குறீங்க….ஒரு ஒப்பந்தத்த ஏத்துங்கன்னா…. கூடவே இருத்திக்கிற வேண்டாமா?
கமிட் ஆயிருச்சேப்பா…..இந்த
டைரக்டரே புக் பண்ணியிருக்கானே….ரெண்டு படத்துக்கு…?
இருக்கட்டும்….ஒரு
வருஷத்துல முடிச்சிற மாட்டாரா? ராப்பகலா ப்ளான் பண்ணுவாரே…? பிறகு? என்னோட செய்யணும்னு
சொல்லிக் கூப்பிடுங்க…..
வருவாளா?
வராம என்ன? நீங்க
அறிமுகப்படுத்தலேன்னா யார் சீந்தப் போறா?
அது அறிமுகப்படுத்தினபோது
இருந்த நிலைமை. இன்னைக்கு அப்படியா? அவள் சொன்னாத்தான் என்னையே போடுவாங்க போலிருக்கு…
நீங்களா ஏன் சார்
குறைச்சு நினைச்சிக்கிறீங்க? இன்னைக்கும் உங்களுக்குன்னு ஒரு பேரு இருக்கத்தானே செய்யுது…உறீரோ
எங்க பிரேம்தான் வேணும்னு ரசிகர்கள் விரும்புறதை எழுதறாங்கல்ல….
சினிமாவுல எங்கயாச்சும்
ஒரு உறீரோயினை கதாநாயகன் அறிமுகப்படுத்தின நிகழ்ச்சி நடந்திருக்கா? மாமாங்கமாக் கூட
இல்லை…அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்…நீங்க செஞ்சீங்க…அத வெளில எவனாவது சொல்றானா
பார்த்திங்களா? கிசு கிசு வந்திச்சு…அத்தோட சரி…எத்தனை பேர் புரிஞ்சிக்கிட்டிருப்பாங்க…இன்னைக்கு
நந்தினியே சொல்லாதே…! ஒரு பேட்டிலயாவது சொல்லியிருக்கா உங்க பெயரை?
அதோட தம்பிக்காரன்
ஒருத்தன் இருக்கான்ல…அப்பப்போ தலையைக் காட்டுறானே…அவனப் பிடிங்க…..
அவனையெல்லாம் கூப்டுப்
பேசணும்ங்கிறியா? அவனெல்லாம் ஒரு ஆளாப்பா? நான்பார்க்க உள்ளே நுழைஞ்சவன் அவன். நான்
அறிமுகப்படுத்தினவ அவ…அவகிட்டப் பேசறதுக்கு எனக்கு சிபாரிசா?
நீங்கன்னா நீங்களா?
உங்க பேரைச் சொல்லிக் கூப்பிட்டு விடுறேன்….நான் பேசறேன்…எப்டி மடக்கணுமோ அப்டி…. ஒப்புதலாய்த் தலையாட்டினான் பிரேம்குமார்.
எப்படியாவது அவளைப் படிய வைக்க வேண்டும் என்ற வெறி வந்தது அவனுக்கு.
( 5 )
..என்னம்மா நீங்க…உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க
போலிருக்கு…? அவசரப்பட்டுட்டீங்களே? – டச்சப் பார்கவி ஆறுதலாய் முன் வந்தாள்.
ஆமா….அவன் அழகு நடிப்புங்கிறதைக்
கூட மறக்கடிச்சிடுதுப்பா….ஒரு சிரிப்புச் சிரிக்கிறான் பாரு….கண்ணை மயக்கி, உதட்டைச்
சுழிச்சி… அந்தச் சிரிப்பு வெறும் நடிப்பில்லைப்பா….உண்மைலயே எம்மேலே அவனுக்கு ஆசை இருக்குன்னு தோணிடிச்சு…..அவன் அணைக்கிறபோது நடிப்புங்கிறதையே
மறந்திடுறேன் நான்….எதுக்காக அவன் மேலே இப்டி ஆசை வந்திச்சின்னே தெரில…..ஆனாலும் நடிக்கைல
சில்மிஷம்ங்கிறது ஓவர்….லாங் ஷாட்ல யாருக்குத் தெரியப்போகுதுன்னு உள்ளே கையை விடுறான்….ரொம்ப
ஓவர்ல…..
அதுக்கு வெறி இருக்குதோ
இல்லையோ, உங்களுக்கு எழும்பிடுச்சு போலிருக்கு…..
என்னப்பா சொல்ற?
– இவளைப் பார்த்துக் கள்ளத்தனமாய்ச் சிரித்தாள் நந்தினி.
பின்னே என்னங்க…?
சிக்ஸ் பேக்தான் இப்போ அழகுன்னு ஆயிப்போச்சு…முன்னெல்லாம் உடம்பு பூசிக் கிடந்தாலே
விரும்புவாங்க….இப்போ என்னடான்னா இப்டிக் கேட்குறாங்க வறுமைல கிடந்த ஆளு…இப்போத்தான்
பளபளப்பு ஏறுது….அதுக்குள்ளேயும் நீங்க மயங்கிட்டீங்களாக்கும்……உங்களை அறிமுகப்படுத்தினவரையே
அடையணும்னு ஆசை வந்திடுச்சு உங்களுக்கு….அப்போ சுதந்திரமா விட்ர வேண்டிதானே? அதுலேர்ந்தாவது
அவர் புரிஞ்சிக்கட்டும்….
ஏய்..…என்ன ஒரேயடியா
சொல்லிட்டே போற….? நாளைக்கு உனக்கு அத்தான் ஆகுற ஆளுடி அது……
அக்காவக் கட்டிக்கிட்டாத்தானே….?
– பட்டென்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் பார்கவி.
என்னடி மசிய மாட்டான்கிறியா?
இப்பவே இழுத்துப் போட்டாத்தான் ஆச்சுங்கிறியா?
பின்னே? ஏற்கனவே
சில படத்துக்கு விட்டாச்சு…! அதுலயே ரெண்டு வருஷம் போல ஓடிப் போச்சு…உங்க கூட இப்ப
நடிக்க வந்திருக்கிறதே பெரிய அதிர்ஷ்டம்…..எத்தனை ப்ரொட்யூஸர்ஸ் வர்றாங்க தெரியுமில்ல…?
இன்னைக்குக் காலைல கூட டைரக்டர்கிட்டே ஒரு சேட் உட்கார்ந்திருந்தாரே பார்க்கலியா? நீங்க
தள்ளியிருந்த செட்டுல இருந்தீங்க…..கவனிச்சிருக்க மாட்டீங்க….பெரிய ப்ராஜக்டாம்…..தெலுங்கு,
கன்னடம்னு டப் செய்யப் போறாராம்…சொல்லிட்டிருந்தாரு….ஆந்திராவுக்குப் போயிடாருன்னு
வச்சிக்குங்க…பிடிக்க முடியாது….அங்கயே செட்டிலாயிட்டாருன்னா…? அத விடுங்க…ஷூட்டிங்கிற்காக
பெங்களூர் போகப் போறாரு…தெரியும்ல….ஏமாந்துடாதீங்க…அவ்வளவுதான்…..
எவனாவது இங்க மார்க்கெட்
இருக்கிறபோது ஆந்திரா போவானாடீ? உளராதே…! இங்க குப்பை கொட்ட முடிலங்கிறபோதுதான் அந்தப்
பக்கம் கவனம் போகும்….என்னைமாதிரி நடிகைகளுக்கே அந்த கதிதானே…?
நீங்க போயிடலாம்மா…ஆனா
நாயகனா அறிமுகமாகுறது கஷ்டமாச்சே…!
வில்லனாப் போயிட்டுப்
போறாரு…?
உங்களுக்கு வில்லனாயிடாமப்
பார்த்துக்குங்க…!
நந்தினியின் மனதில்
புயல் வீச ஆரம்பித்திருந்தது. தூரத்து உறவுதான் பாலா. சினிமாவுக்கு வந்த பின்பு பிரேம்குமார்.
அந்தப் பெயரில் யாரும் இல்லை. பொருத்தமான பெயராய்த் தோன்றியது. பெயரிலேயே என்னவொரு
கவர்ச்சி.
அவன் மாமா ரங்கபாஷ்யம்
திட்டமிட்டே அவனைச் சென்னைக்கு அழைத்து வந்து பெரு முயற்சி செய்து சினிமாவில் சேர்த்து
விட்டிருந்தார். அவன் அதிர்ஷ்டம் அடுத்தடுத்த படங்கள் வெற்றியாகி இன்று பெயர் நிலைத்த
கதாநாயகன் ஆகிவிட்டான்.
நீயே இன்னும் நிறையப்
படங்களில் நடிக்கணும். அதுல கவனம் செலுத்துவியா, அந்த நந்தினியை எதுக்கு இழுத்திட்டு
வரணும்ங்கிறே…? – ரங்கபாஷ்யத்திற்குப் பிடிக்கவில்லைதான். அவள் வந்து அவனை வைத்து தான்
செய்யும் வியாபார உத்திகளில் மண் விழுந்து
விடக் கூடாதே என்ற எண்ணம். பெண்ணை நெருங்க விட்டால் கதை கந்தலாகி விடாதா?
சின்ன வயதிலிருந்தே
பாலாவின் மேல் கவனம் இருந்தது இவளுக்கு. ஊரில் வெட்டியாய்த் திரிந்த அவனோடு வலியப்
பழகி, சினிமா பார்த்து, இருட்டிலே சில்மிஷங்கள் செய்து, விடுதிகளுக்குப் போய், எல்லாமும்தான்.
அவன் மேல் தீராத மோகம் உண்டுதான். அதை வெளிக்காட்டிக்
கொள்ள முடியாத நிலைமை. எடுத்த எடுப்பிலேயே கதாநாயகி ஆகிவிட முடியவில்லையே…! எத்தனையோ
படங்களில் குரூப் டான்சராய் இருந்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறாள். கதாநாயகி
சான்ஸ் எப்போதடா வரும் என்று தவமிருந்திருக்கிறாள். அது கிட்டியது ஒரு நாள். அதுவும் அவன் மூலமாகத்தானே…! எல்லாவற்றிற்கும் நேரம்
காலம் என்று ஒன்று இருக்கிறதே…!யாரும் தொட முடியாத உயரத்திற்குப் போக வேண்டும் என்ற
வெறி வந்துவிட்டது இப்போது அவளுக்கு.
நந்தினி…நந்தினி
என்று தயாரிப்பாளர்கள் தவம் கிடக்க வேண்டும். அதுவரை ஓய்வில்லை, ஒழிச்சலில்லை. அறிமுகப்படுத்திய
அவனை விட்டே விலகி தூரமாய் வந்தாயிற்று. அதுவே பொறுக்கவில்லையோ என்னவோ? தானும் நிறையச்
சொத்து சேர்த்து, சுயமாய் சாகும்வரை வாழ்ந்து விட முடியும் என்கிற உச்ச நிலைக்கு வந்த
பின்புதான் அவனோடு இணைய வேண்டும்.
அதுவரை அவன் காத்திருப்பானா?
காத்திருப்பதென்றால் அவன் என்ன தன்னைக் காதலிக்கவா செய்கிறான்? தான்தானே அவனை இப்படி
நெருக்கமாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? ஒரு தலைக் காதல் இது. இதை இருதலைக்காதலாய்
மாற்ற வேண்டும். தன்னை நினைத்து நினைத்து அவன் ஏங்க வேண்டும். சீக்கிரத்தில் தான் அலுத்து
விடக் கூடாது அவனுக்கு. ஸ்பரிசத்தோடு நின்று, ஏங்க வேண்டும். மேலும் கிடைக்காதா என்று
தவிக்க வேண்டும்.
தவிப்பு இருக்கிற
அடையாளம்தானே இன்று அவன் விளையாடியது. வெட்கங்கெட்டுப் போய் யார் பார்த்தால் என்ன என்றுதானே
உள்ளே கைவிடுகிறான்? அவ்வளவு சுதந்திரம் யார் கொடுத்தார்கள் அவனுக்கு? யார் கொடுக்க
முடியும்,? நான் கொடுத்திருந்தால்தானே அது கிட்டும்? நானே கொடுத்திருந்தாலும் பொது
இடத்தில் இதைச் செய்யலாமா? அவன் வைத்த ஆளா நான்? அப்படித்தான் நினைத்து விட்டானோ? சினிமாவில்
நுழைவதற்காக அவனுக்கு நிறையச் சலுகைகள் அளித்தது உண்மைதான். அதற்காகவே அவனுக்கு தாசியாய்
இருக்க முடியுமா? இவனை விட்டால் வேறு ஆள் இல்லையென்று நினைக்கிறானா?
வசீகரன் வந்துவிட்டானே
இப்போது…! அவன் போகும் உயரம், வேகம், இவன்
அறிவானா? அவனோடு சேர்ந்து நான் செய்த புரட்சிக்காரன் படம் பிய்த்துக் கொண்டு போகிறதே…!
அதைப் பார்த்திருப்பானோ? அதில் எனக்கும் வசீகரனுக்குமான அதீத நெருக்கம் அவனுக்குப்
பொறாமையை ஏற்படுத்தி இருக்குமோ? அந்த வசீகரன் என்னடாவென்றால் அதற்குள் பறக்கிறான்.
வலிய வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்து விட்டானே…? அதை அறிவானோ?
இந்தப் படத்தோட முடிச்சிக்கோ…அப்புறம்
எனக்கு மனைவியாயிடு….வீட்டோட இருந்திடு….சுதந்திரமா வாழ்க்கையை அனுபவி…எதுக்கு இந்த
அரிதாரம்? அது ஆம்பளைகளுக்குத்தான் லாயக்கு….உன் அழகு எனக்கு மட்டும்தான் சொந்தம்…..நான்
சொல்றதைக் கேள்…. – என்னவெல்லாம் பேசிவிட்டான். என்ன தைரியம்? சீனியர் ஆர்டிஸ்ட் என்று
கூடப் பார்க்காமல்….என்னவொரு தைரியமான பேச்சு?
இந்த ஆம்பளைகள் ஏன்
இப்படி அலைகிறார்கள்? எல்லாம் என் அழகுதான் காரணமா? முதல் அறிமுகத்திற்குப் பின்பு
எதையுமே நான் தேடிச் செல்லவில்லையே? எல்லாமும் அதுவாய்த்தானே என் பின்னால் வரிசை கட்டியது?
பிரேமின் மீது எனக்கிருந்த பிரேமையைத் தகர்த்தது வசீகரன்தானே? வசீகரன் வசீகரித்து விட்டானா?
அதை அவன் உணர்ந்து கொண்டுவிட்டானா? அதனால் வந்த பொறாமையா இன்றைய எல்லை கடந்தது?
இரு குடும்பங்களும்
வசதியில்லாத நிலையில், கனவுகளைப் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டு திரிந்ததுதான் மிச்சம்.
தனக்கிருக்கும் அளவுக்கு பாலாவுக்குத் தன் மேல் இச்சை உண்டா என்கிற சந்தேகம் சமீபத்தில்தான்
வந்திருந்தது நந்தினிக்கு.
இவள் அதிர்ஷ்டம்
அவன் மாமா பாஷ்யம் வந்து சேர்ந்தார். பல காலம் சென்னையிலேயே இருந்தவர். தத்திப் பித்தி
என்னென்னவோ வேலைகள் பார்த்து, வியாபாரம் செய்து, திகிடு முகடுகள் பண்ணி இன்று நல்ல
நிலைக்கு வந்துவிட்டவர். பெரிய கைகளின் பழக்கமுள்ளவர். காரியம் என்று போய் நின்றால்
முடித்துக் கொடுப்பவர். நினைப்பதை நடத்தி முடிக்கும் திறன் கொண்டவர். ஜகதலப்பிரதாபன்.
பிரேமின் அனத்தல்
தாங்க மாட்டாமல்தான் ஒப்புக் கொண்டார் ரங்கபாஷ்யம். கடிதம் போட்டு வரவழைக்கப்பட்டாள்
நந்தினி. எங்கே கையைவிட்டுப் போய் விடுவானோ என்ற பயம் பாஷ்யத்திற்கு. வட்டிக்குக் கடன்
வாங்கி, அவன் படங்களை அவர்தான் தயாரிப்பாளராய் எடுத்துக் கொண்டிருந்தார். யாரையும்
உள்ளே நுழைய விடுவதில்லை. அவன் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், முறுக்கிக் கொண்டானானால்,
இன்று அவன் இருக்கும் புகழுக்கு தன் வியாபாரம் படுத்துக் கொள்ளும். கை மீறிப் போக விடுவது
அத்தனை புத்திசாலித்தனமில்லை.
செட்டில் எல்லோரும்
அதிர்ந்திருப்பார்கள். அடுத்து இந்தம்மா என்ன செய்யப் போகிறதோ என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
மாமாவுக்கு இந்நேரம் செய்தி போயிருக்கும். கேட்டால் என்ன சொல்லலாம்? அவரை வைத்து அவனை
ஒழித்துக் கட்டத் திட்டம் போடலாமா? வசீகரன்தான் வந்து வந்து வழிகிறானே? ஆள் இல்லாமலா
போயிற்று? இப்படி யோசித்தால் அவர் ஒப்புக்
கொள்வாரா? அவன் கையை வைத்து அவனையே குத்துவது. யோசனை எப்படி எப்படியோ போயிற்று நந்தினிக்கு.
பணமும் புகழும் சேரச் சேர, புத்தி எப்படியெல்லாம் வேலை செய்கிறது?
( 6 )
தன்னை
வைத்துப் படங்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. பத்திரிகைகள் அப்படித்தான் சொல்கின்றன.
கிசு கிசுக்கள் இதைத்தான் பரப்புகின்றன. கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக்
கூட்டியபோது இதை உணர முடிந்தது. ஒரு நாயக நடிகன் செய்வதை விட நாயகி நடிகை செய்தால்
கூடத்தான் செய்கிறார்கள். நடிகையோடு கொஞ்சமாவது பேசலாமே என்ற ஆசை. அவள் அழகை ரசிக்கலாம்.
அவள் பல் வரிசை பளிச்சென்று தெரியச் சிரிப்பதைப் பார்த்துக் களிக்கலாம். அவ்வளவு ஆசை
ஆசையாய் வருகிறார்கள்.ஒவ்வொரு நிருபரின் கண்களும் எங்கெல்லாம் ஓடுகின்றன? எங்கெல்லாம்
பதிகின்றன? விட்டால் துவம்சம் செய்து விடுவார்கள் போலிருக்கிறது.
நல்ல வேளை டச்அப்
பார்கவி கூட இருக்கிறாள். அவள் நாலு ஆம்பளைக்குச் சமம். யாரையோ கூட இளிச்சது போதும்,
புறப்படுங்க என்றாளே? என்ன ஒரு தைரியமான பேச்சு? அவள்தான் சரி. அவள் யோசனை எல்லாமும்
பலன்களைத்தான் கொடுக்கிறது. சூட்கேசும், பணமும் வைத்துக் கொடுக்கும்போது, வந்து வாங்கிக்கொண்டு
போவதற்கென்ன வலிக்கிறது? அப்படித்தானே பழக்கி விட்டிருக்கிறார்கள். அது சம்பிரதாயமாகவேதானே
போய்விட்டது. குற்றம் என்று சொல்வதற்கில்லையே…! அப்படி இருந்தால்தானே ஆதரவாய்ச் செய்தி
வருகிறது. இல்லாவிட்டால் கிசு கிசுவில் பயங்கரமான கற்பனையைக் கலந்துகட்டி விடுகிறார்களே…?
இருக்கும் பத்திரிகைக்காரனெல்லாம்
தன்னை விடாமல் எழுத வேண்டும். ஒரு பத்தியாவது எழுதித்தான் ஆக வேண்டும். எந்த இதழும்
விடுபட்டது என்று இருக்கக் கூடாது. இதுதான் வியாபார உத்தி. அந்த பிரேமின் மாமாவிடமிருந்து
கற்றுக் கொண்டது இது. இப்போது அவர் விட்டுவிட்டதுபோல் இருக்கிறது. எல்லோரும் தன்னை
மொய்க்கிறார்கள். தேனிருக்கும் இடத்தில்தானே வண்டுகள் மொய்க்கும்? நந்தினி சந்தோஷமாய்
உணர்ந்தாள்.
நாயகனை வைத்துத்தானே
எப்போதும் படங்களும், வசூலும். இப்போது அது மாறியிருக்கிறது. அவளின் தற்போதைய படங்களில் ஒன்றிரண்டு கூட அவர் பாகஸ்தர்
என்று கேள்வி. இப்பொழுது அவள் பக்கம் ரங்கபாஷ்யம் மாமா கவனம் திரும்பியிருக்கிறதோ?
அப்படியானால் அவரை உதற முடியாதே…? ஒதுக்க முடியாதே…? பிரேமை விட்டு விலகி வருகிறார்
என்றால் வரவேற்கத்தானே செய்ய வேண்டும். வரட்டும்…முழுதாகத் தன் பக்கம் வரட்டும். அவன்
தனிமைப் படட்டும்….
ஒரு நாயகனுக்குரிய
அந்தஸ்தோடு அவளை முன்னிலைப்படுத்தும் கதையாகத் தேர்வு செய்து, தான் இப்போது செய்து
கொண்டிருக்கும் படம் கூட நல்ல வெற்றி பெறும்தான். அநீதிகளை அழிக்கும் கதாநாயகனை விட,
அதை எதிர்த்து நிற்கும் பெண் பெருமையுடையவளாகிறாள். அவள் எதிர்நோக்கும் சிரமங்களை மீறி
வெளியே வந்து, துணிந்து துஷ்டர்களை அழித்தொழிக்கும் இந்த அதிரடிக் கதை என்னை முன்னிலைப்படுத்தித்தான்.
இதில் பிரேமைப் போடச் சொன்னதே நான்தான். தனக்கு முக்கியத்துவம் இல்லையென்று தெரிந்துதான்
இப்படிக் கோபப்பட்டு விட்டானோ?
ச்சே…! ஒரு கணம்
என் அழகில் மயங்கி விட்டான் போலும். ஷூட்டிங் என்பது கூடவா மறந்து போகும்? காமாக்கினி
எப்படி ஆட்கொண்டது? என் அதரங்களும், அவயவங்களும் அவனை என்னமாய் ஆகர்ஷித்தது? பிடித்த பிடியை அவன் விடாமலிருக்க, அப்படியே ஒரு
உதறு உதறிவிட்டேனே?
அத்தோடு விட்டிருக்க
வேண்டியதுதானே? எதற்காகக் கன்னத்தில் அடித்தேன்? அந்தளவுக்கு நான் ஏன் கோபப்பட்டேன்?
அப்படியானால் என் மனதில் வேறு என்ன புகுந்திருக்கிறது? யார் நுழைந்திருக்கிறார்கள்?
வசீகரன் நுழைந்திருக்கிறானா? எதற்காக அவன் மனதில் இப்படிப் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறான்?
கை நழுவிப் போய் விடுவேன் என்று பயப்படுகிறானோ? நீ எனக்குத்தாண்டீ என்று சொல்லாமல்
சொல்கிறானோ? அந்தச் சுதந்திரம்தானா உள்ளே கை விட்டது? குழப்பம் நீடித்தது நந்தினிக்கு.
நாளை மறுதினம் ஊட்டியிலிருக்கும்
இதே படத்தின் படப்பிடிப்புக்குச் செல்வதா, வேண்டாமா என்ற கேள்வி பிறந்தது அவள் மனதில்.
அது கனவுக் காட்சி என்று சொல்லியிருந்ததாக ஞாபகம். பிரேம் கட்டாயம் வேண்டும். அவன்தான் இவளைக் காதலிப்பதாக…கனவில் மிதப்பதாக.
நிஜத்திலும் அதேகதை. அவன்தான் என்னை நினைத்து ஏங்குகிறான். நடிக்க வந்த பிறகு என்னின்
நடப்பு மாறியிருக்கிறது. அதுதான் அவனுக்குப் பலத்த சந்தேகம்.
யோசனையின் உச்சியில்
உறக்கமின்றிப் புரண்டு கொண்டேயிருந்தாள் நந்தினி. எப்பொழுது தூங்கினோம் என்று அவளுக்கே
தெரியாது.
கண் விழித்தபோது,
தொலைபேசி சிணுங்கியது.
( 7 )
இன்று பிரேம் குமாருக்குப்
படப்பிடிப்பு எதுவுமில்லை. நாளை காலையில் ஊட்டியில் இருக்க வேண்டும். ஃப்ளைட் பிடித்து
கோவை சென்று, அங்கிருந்து காரில் உதகமண்டலம் சென்று விடலாம். அதுதான் அவன் பிளான்.
ஆனால் நந்தினியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாயிருந்தது முதலில்.
இப்போது அது மாறிவிட்டது. அவளாகத்தான் அதைக் கெடுத்துக் கொண்டாள்.
இப்போதுதான் சூடு
பிடிக்கிறது விஷயம். மனசு ஏன் இப்படிப் பறக்கிறது? . திருமணத்தை முடித்துக் கொண்டு
செட்டிலாகக் காத்திருக்கும் மனசு. பெண்ணுக்குத்தான் அந்த அவசரம் இருக்க வேண்டும். தனக்கு
ஏன்? நந்தினி கிடைக்காமல் போய் விடுவாளோ?, அந்தப் புதியவன் வசீகரனோடு நிறைய நடிக்கிறாள்
போலிருக்கிறதே…! காற்று திசை மாறி அடிப்பதுபோல்தான் இருக்கிறது. என்னை நாடியவர்கள்
கூட இப்போது அங்கே…! என்னை விட அப்படி என்ன பெரிய திறமை அவனிடம்? ஆள் கொஞ்சம் அழகு…!
பெண்மை கலந்த அழகுதான் அது. ஆண்மையில்லையே…! அதனால் என்ன, மேக்கப் போட்டுச் சரி செய்து
கொள்கிறார்கள்…ஆளைக் கறுப்பு முரடனாய்க் காட்ட எவ்வளவு நேரம் ஆகும்? .
பிரேம் சிகரெட்டை
அனுபவித்து இழுத்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் பரவியிருந்த புகை அவன் பலத்த யோசனையிலிருப்பதை
உணர்த்தியது.
பேக் அப் பண்ணிட்டுக் கிளம்பிட்டாங்க….இந்தப் பொண்ணு ரொம்ப நேரத்துக்கு
அழுதிட்டிருந்திச்சாம்….டிரைவர் முத்துசாமி சொன்னான்.
சலனமின்றி பார்த்தான்
பிரேம்குமார்.
எனக்கு இந்தப் படம்
வேண்டாம்னுட்டுக் கிளம்பிடுச்சாம்…சொன்னாங்க…
என்னய்யா சொல்ற…?
பாதிப்படம் முடிஞ்சி போச்சி….இப்பப்போயி….? என்ன உளர்றியா?
நான் உளறலீங்க….கொடுத்த
அட்வான்சுக்குச் சரியாப் போச்சுன்னு போயிடுச்சுங்கிறாங்க….தெரிஞ்சிட்டு
வந்துதான சொல்றேன்….. நீ எங்கூட
வந்த ஆளு….உனக்கெப்படிய்யா அதுக்குள்ளே செய்தி வந்திச்சு? அதெல்லாம்
வந்திடுமுங்க…நான் உங்க நிழல் மாதிரி….உங்களுக்கு அப்பப்போ எது வேணுமோ அதைச் செய்றதுக்கும்
சொல்றதுக்கும் கடமைப்பட்டவன்…..
முத்து….நீ நல்முத்துன்னு
எனக்குத் தெரியும்…இத யாரு உனக்குச் சொன்னா? நம்ப
லைட்பாய் பஷீர் தாங்க…
அப்டியா…ஃபோனைப்
போடு….போடு சொல்றேன்……
அட நீங்க என்னங்க….அது
கிட்டப் போய்ப் பேசிக்கிட்டு…?அசிங்கமில்லே….
அட நீ ஒரு ஆளய்யா…?
டைரக்டர்க்குப் போடுய்யான்னா….அவகிட்ட என்ன நான் பேசுறது? – சொல்லிவிட்டுப் புகையை
வேகமாய் விட்டான் பிரேம்குமார். கோபத்தோடு வெளியேறியது அது.
அதானே பார்த்தேன்….என்றவாறே
எண்களை இணுக்கினார் முத்துச்சாமி. அதே சமயம் வாசலில் யாரோ நுழைவது பார்வையில் பட்டது.
வந்திட்டேன்…அங்கதான் வந்திட்டிருக்கேன்…வாசல்ல
பாருங்க… - என்றவாறே நுழைந்தார் விவேகானந்தன். சார்…..டைரக்டரே வந்துட்டாரு….உங்களத்
தேடி வந்திருக்காரு….கீழ இறங்காமப் பேசுங்க…. – சத்தமின்றிச் சொல்லிவிட்டு அங்கிருந்து
விலகினான் முத்துச்சாமி.
வாங்க…வாங்க…என்னாச்சு…இத்தனை
டென்ஷன்…? – பதட்டமாய் இருப்பதுபோல் கேட்டான் பிரேம்.
டென்ஷன்தான் சார்…பின்னே?
நீங்க கிளம்பி வந்திட்டீங்க…அந்தப் பொண்ணு கோவிச்சுட்டுப் போயிடுச்சி….என்பாடு திண்டாட்டமாயிடுச்சு… உங்களுக்கென்ன…? அடுத்த ஷெட்யூல்ல சேர்த்து
எடுத்துக்க வேண்டிதான்…?
என்னசார் இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க…? இன்னைக்கு ஷெட்யூல்
சாயங்காலம் ஆறு வரைக்கும் சார்…உங்களுக்குத் தெரியாததா?
அதுக்கு நான் என்னங்க
பண்றது…? அந்தப் பொண்ணு கோவிச்சிட்டுப் போச்சின்னா….? நடிப்பை நடிப்பா எடுத்துக்காம…..? ஏன்சார்…நீங்களும் அடக்கி வாசிச்சிருக்கணும்ல….அவ்வளவு கூட்டத்துல போயி….நல்லாவா
சார் இருக்கு…? – சொல்லத் தயங்கி மென்று முழுங்கினார் விவேகம்.
அவ நான் கட்டிக்கப்
போறவங்க….எங்க தடவினா என்ன? என் உரிமையை நான் அப்புறம் எப்டிக் காட்டுறது? எந்த நேரத்திலும்,
எந்த எடத்திலும் நீ என் அடிமை…அவ்வளவுதான். அத அந்தப் பொண்ணு மறந்திடக் கூடாது…அவளுக்கு
அந்த வசீகரன்ட்ட நோங்குது போலிருக்கு…அவளைச் சென்னைக்கு வரவழைச்சதே நாந்தான். இப்ப
அவ பெரிய ஸ்டார். எவனோ கொத்திட்டுப் போக விட்ருவேனா?
பாவி…என்ன பேச்சுப்
பேசுகிறான்? பதறியது இவருக்கு.
அது உங்க சொந்த விவகாரம்
சார்…. யூனிட்டையே பாதிக்கக் கூடாதுல்ல….-தயக்கத்தோடே சொன்னார். யூனிட்டையே நான் என்ன சார்
செய்தேன்? நீங்கதான் அந்தப் பொண்ணைப் போக விட்டீங்க….அதை இருத்திட்டு என்னை ஃபோன்ல
கூப்பிட்டிருக்க வேண்டிதானே? ஓடி வந்திருப்பேன்ல….
இன்னைக்குத் தேதிக்கு
உங்களைக் கூட இருத்திப்புடலாம் சார்…அதை நிறுத்தத்தான் எங்களால முடியாது. விட்டா எந்த
ஊர்ல, எந்த நாட்டுல, எந்த ஷூட்டிங்ல இருக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. புதுசு
புதுசா புக் பண்ண ஆளுக வந்திட்டேயிருக்காங்க….பல சமயங்கள்ல செல்லை அணைச்சே வச்சிருக்கு….அந்தப்
பார்கவியிருக்கே அது பத்து ஆம்பளைக்குச் சமம். இன்னும் கொஞ்ச நாள்ல அடியாள் கூட்டத்தையே
சுத்தி வர ஏற்பாடு பண்ணிரும்போல…..அந்தம்மா முழுசா நம்புது அதை…இப்போதைக்கு அதுதான்
அந்தம்மாவுக்குப் பாதுகாப்பு. அந்த வளையத்தைத் தாண்டீ எவனும் உள்ளபுக முடியாது…..
மனசு கோபத்தில் அனலாகியது
பிரேமுக்கு. நந்தினி நடித்த சமீபத்திய படங்கள் அவளுக்குப் பெரும் பேரையும் புகழையும்
ஈட்டிக் கொடுத்திருக்கின்றன. வசீகரனோடு நடித்த படமும் ஓடுகிறது. தானே நாயகனாய், நாயகியாய்
கட்டிக்காத்த படமும் பிய்த்துக்கொண்டு போகிறது. என்ன ஒரு அதிர்ஷ்டம் அவளுக்கு. மாமா
கூட அந்தப் பக்கம் சாய்வதுபோல்தான் தெரிகிறது. பணவேட்டையில் இடமா கணக்கு? தன்னை விட்டு
அவளிடம் பணம் பண்ண முடியுமானால் போகத்தான் செய்வார். அவர் வெறும் வியாபாரிதானே…!
சரி…விடுங்க…நாளைக்கு
ஊட்டி ஷூட்டிங்கை முடிச்சிட்டு, இன்னைக்கு விட்டதை அதுக்கப்புறம் ஒரு நாள் ஃபிக்ஸ் பண்ணுங்க…முடிச்சிக் கொடுத்திருவோம்….அடுத்தாப்ல
எனக்கு பெங்களூர் போகணும்…அதுக்கு எந்த டிஸ்டர்பன்சும் இருக்கக் கூடாது….பார்த்துக்குங்க…
எந்தத் தேதின்னு
நீங்களே சொல்லிடுங்க சார்….
அது எதுக்கு சார்…நான்
ஒரு தேதி சொல்லப் போக, அந்தப் பொண்ணு வீம்புக்கு அதை மாத்துவா…அதுகிட்டயே தேதி குறிச்சு
வாங்கிட்டு வாங்க….அதுக்கேத்தாப்போல நான் மாத்திக்கிடுறேன்…
விவேகம் விவேகமாய்ப்
புன்னகைத்ததுபோலிருந்தது.
சரி சார்…..நான்
இப்போ மெர்க்கென்டைல் ஸ்டுடியோ போறேன். அங்க அந்தம்மா இருக்குது….டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு
உங்களுக்குத் தகவல் சொல்றேன்….ஓ.கே.யா…? கணக்கை முடிச்ச மாதிரிக் கௌம்பிப் போச்சு…திரும்ப
வருமா…? போனாத்தான் தெரியும்….புலம்பிக்கொண்டே கிளம்பினார் விவேகானந்தன்.
மாடியை நோக்கிப்
போனான் பிரேம். அவளுக்கேற்றாற்போல் தன் ஷெட்யூல்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை
வந்து விட்டதே என்ற பொறாமை அவன் மனதுக்குள்
கனன்றது. டைரக்டர் விவேகானந்தன் சற்றே கேலியாய்ச் சிரித்தது அவன் மனதில் மேலும் தீயை
வளர்த்தது. நான் பார்க்க ஊரிலிருந்து வலியக் கூட்டி வந்த நாய். இல்லையென்றால் வெறுமே
தையல் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க நேர்ந்தவள். அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும்
அல்லாடியவள். இன்று தன்னையே பதம் பார்க்கிறாள். அதிர்ஷ்டம் யாரை எங்கெல்லாம் கொண்டு
வைக்கிறது? தானே பெரும் அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தால், அவள் அதிர்ஷ்டம் விண்ணைப்
பிளக்கிறதே…!
ஆந்திராவிலும் அவள்
படம் சக்கைபோடு போடுகிறதாமே? பொம்பளை, போலீசாய் நடித்தால் அதற்குத்தான் எத்தனை வருஷம்
ஆனாலும் என்ன ஒரு மதிப்பு? கலர் கலராய் டிரஸ் போட்டு ஆட்களை மயக்கி விடுகிறார்கள்.
அவர்களுக்குத்தான் காஸ்ட்யூம் அமைகிறது. அதிகபட்சம் ஆண் நடிகருக்கு கோட், சூட் தவிர
அவன் கம்பீரத்தை வெளிப்படுத்த வேறு என்ன டிரஸ்? அதையே எத்தனை நாளுக்குப் பார்ப்பார்கள்?உருண்டு,
திரண்ட பேரழகியாய் வேறு ஆகிவிட்டாள். நினைத்தால் படத்துக்குப் படம் உடம்பைப் குறைக்கவும்,
கூட்டவும் செய்கிறாளாமே? என்ன மருந்து சாப்பிடுகிறாளோ? எங்கே அரிசி வாங்குவாளோ? வெண்ணைக்
கட்டியாய் நிற்கும் அவள் போஸ்டர்களை ரசிகர்கள் வாயிலிருந்து நீர் வழிவது கூடத் தெரியாமல்
அல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு வாரம் முன்பு ஏதோ விபத்து கூட நேர்ந்ததாய்ச்
சொன்னார்களே? வண்டியை மறந்து, அவளை நினைத்து கிண்டியாய்ப் பறந்தவன், நேரே வானத்தை நோக்கிப்
போய்விட்டானோ என்னவோ?
என்னோடு வந்திருக்க
வேண்டிய படங்களெல்லாம் இன்று அவள் தனியளாய். தோசையை அப்படியே புரட்டிப் போட்டு விடுங்களேன்
என்று நாயகன் கதையை நாயகியாய் மாற்றி விடுகிறாளாமே? வசீகரனோடு மட்டும்தான் இப்போது
அவள் படங்கள். அல்லது தனியாய். என்னோடு? இந்த ஒரு படம்தான் கடைசியா? என்னையே ஒதுக்குகிறாளா?
எனக்கே உலை வைக்கிறாளா? பொறாமைத் தீ திசை தெரியாமல் பரவியது அவனுள்ளே…! கண்டமேனிக்கு
வியாபித்துப் படலாய் எரிய ஆரம்பித்து, கொழுந்துவிட்டு வியாபித்தது.
மாடிப்படி தடுமாறியது.
சார்…பார்த்து….பார்த்து… - அக்கறையாய் எழுந்த முத்துச்சாமியின் குரலை அவன் மனம் பொருட்படுத்தவில்லை.
( 8 ) நந்தினி
மனதுக்குள் குமுறியவாறே அமர்ந்திருந்தாள். இன்னும் அவளுக்குக் கோபம் அடங்கியபாடில்லை.
அதற்குள் டைரக்டர் விவேகானந்தன் வந்துவிட்டார். இப்படி அவர் தேடி வருவார் என்று தெரியும்
இவளுக்கு. தான் மெர்க்கென்டைலில் இருப்பதைக் கண்டு பிடித்து அவர் வந்துவிட்டதுதான்
ஆச்சரியம். யாருக்கும் சொல்லவில்லை. பார்கவி மூச்சு விடமாட்டாள்தான். தயவுசெய்து
நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கம்மா….உங்க சண்டையுனால தயாரிப்பாளர் பாதிக்கப்படக்
கூடாதுல்ல….ரொம்ப வருத்தப் படுறார்ம்மா….வேணுங்கிற அளவுக்குப் பணம் கொடுத்து, எல்லா
வசதிகளும் செய்து கொடுத்தும் ஷூட்டிங் நடத்த மாட்டேங்கிறீங்கன்னா உங்களை வச்சு எப்படிய்யா
தொழில் பண்றதுன்னு சலிச்சிக்கிறாரும்மா… அவர்
தொழில் பண்றதுக்காகவா நான் நடிக்கிறேன்….சொல்லுங்க டைரக்டர் சார்….இது இல்லாட்டி இன்னொண்ணு…அதுக்காக
ஒரு மட்டு மரியாதை இல்லையா….? எதுக்கும் ஒரு அளவு இருக்கில்ல…? யம்மா, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல
இருக்கிற பாலிடிக்ஸ் எனக்குத் தெரியாது….எனக்குத் தேவை படம்…அது இந்த மாசத்துக்குள்ள
முடியணும்….அடுத்த மாசம் முதல் வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ணியாகணும்….அதுக்கு இந்த
மாசக் கடைசி வாரத்துல சென்சாருக்கு அனுப்பிச்சுப் படம் திரும்பி வந்தாகணும்….முடியுமான்னு
பயம்மா இருக்குது…இந்த இக்கட்டுல நீங்க இப்டி முறுக்கிக்கிட்டீங்கன்னா நான் என்னதான்
செய்றது? எம்பேரு கெட்டுப் போகும் தாயி….அடுத்தாப்ல எவனும் எனக்குப் படம் தர மாட்டான்….பொழப்பு
நாறிப் போகும்…இப்பத்தான் பத்துப் படம் தாண்டியிருக்கேன்…இன்னும் உங்கள வச்சு தனியா
உறீரோ இல்லாம. ஒரு கதை யோசிச்சு வச்சிருக்கேன்….அதிரடியா அது வந்திச்சின்னா நீங்க எங்கயோ
போயிடுவீங்க… - பேச்சோடு பேச்சாகக் கோர்த்து விட்டார் விவேகம். சமீபத்தில்தான் இதெல்லாம்
பழகியிருந்தார். இந்த ஃபீல்டில் உண்மையாயிருப்பதுபோல், நன்றாய் பேசவும் வேண்டும் என்று
தெரிந்திருந்தது அவருக்கு. அவர் நினைத்தது போலவே குறிப்பிட்ட அதே இடத்தில்தான் அசைந்தாள்
நந்தினி. என்ன கதை அது? ஒரு லைன் சொல்லுங்களேன் பார்ப்போம்.
கதையை ஒரு லைன்ல சொல்லிப்புடலாம்மா…காட்சிகளை
அமைக்கிறதுலதான் சாமர்த்தியம்….ஒரு வரிக் கதை உங்களுக்கு ஸ்வாரஸ்யப்படாது. ப்பூ…இ்ம்புட்டுத்தானான்னுடுவீங்க…..ஒரு
காட்சிக்கும் மறு காட்சிக்கும் கனெக் ஷன் கொடுத்திட்டே நகர்றது இருக்கு பாருங்க…அங்கதான்
டைரக்டர் தெரிவாரு….அப்படி யோசிச்சிருக்கேன்…ஒரு காட்சியில கடைசி சீன் இருக்குது பாருங்க…அதுக்கும்
அடுத்த காட்சிக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கும்…இப்டியெல்லாம் யாரும் மெனக்கெட மாட்டாங்க….இதுக்காக
உங்களை மனசுல வச்சு, ரொம்ப ரொம்ப மெனக்கெட்டிருக்கேம்மா…உங்க இமேஜை உயரே கொண்டு போகிற
மாதிரி இருக்கும் ஒவ்வொரு சீனும்…
என்னைப் பத்தி உங்களுக்குத்
தெரியும்ல…ஸ்பாட்ல போயி ஷூட் பண்ணிக்கலாம்னு எப்பவும் கிளம்ப மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும்
லொகேஷனை மனசுல வச்சே காட்சிகளையும், கதை வசனத்தையும் தயார் பண்ணியிருப்பேன். மொத்த
ஸ்கிரிப்டும் ரெடி பண்ணிக்கிட்டுத்தான் ஸ்பாட்டுக்குப் போறதே என் வழக்கம். ஏனோ தானோ,
எடுத்தேன் கவிழ்த்தேன் கதையெல்லாம் என்னைக்கும் என்கிட்டே கிடையாது… லைட் எங்கயிருக்கணும்,
காமிரா எங்கிருக்கணும்…ஆளுங்க எங்க எங்க நிக்கணும்…வசனம் பேசறது, திரும்புறது, கையசைக்கிறது,
சிரிக்கிறது முதற்கொண்டு ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் ஸ்கிரிப்ட்ல குறிப்பு இருக்கு… வசனங்களோட அர்த்தத்துக்கும் நடிப்புக்கும்
சென்ட் பர்சன்ட் பர்ஃபெக்ட்னஸ் இருக்கணும் எனக்கு…சும்மா ஒப்பிச்சிட்டுப் போறதில்லை…..உழைப்பும்மா…எல்லாம்
உழைப்பு… கொஞ்சம் எங்களையும் நீங்க மதிக்கக் கத்துக்கணும்….எப்பவும் புது டைரக்டர்ட்ட
வேலை செய்றமாதிரியே நினைச்சிக்கக் கூடாது….அனுபவப்படுறதுக்கு முன்னாடி உளறினதெல்லாம்
மனசல வச்சுப் பேசப்படாது…. – என்னென்னவோ சொல்லிக் கொண்டேயிருந்தார் விவேகம்.
சிரித்துக் கொண்டாள்
நந்தினி. சரி…சரி…ரொம்ப வருத்தப்படாதீங்க….நாளைக்குக் காலைல எத்தனை மணிக்கு ஷூட்டிங்
ஊட்டில?
பொழுது அங்க விடியுறபோது
ஆரம்பிச்சிடுறோம்மா….லேசா வெயில் ஆரம்பிக்கிற, விழுற எடமா சூஸ் பண்ணச் சொல்லியிருக்கேன்….யூனிட்
ஆளுக போயாச்சு ரெண்டு நாள் முன்னாடியே…நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற சீன்கள்
நிறைய…..மறக்காம காலைல வந்து சேர்ந்திடுங்கம்மா….
ஓ.கே….ஓ.கே…. – அருகில்
டைரியை எடுத்துக் குறித்துக் கொண்டாள் நந்தினி. இதுநாள்வரை இந்தப் பி.ஆர்.ஓ. வேலைக்கு
ஒரு ஆள் நியமனம் செய்யவில்லை அவள். பார்கவிக்கு இந்தப் பணி பொருந்தாது என்பது அவள்
எண்ணம். சொந்தம்தான். அதற்காக தனக்கு மானேஜர் போஸ்ட்டுக்கு அவள் தகுதியில்லை. ஒரு நல்ல
ஆம்பளை வேண்டும். தனக்குப் பாதுகாப்பாக வேறு இருக்க வேண்டும். ஆண்தான் பி.ஆர்.ஓ. போஸ்ட்டுக்கு
லாயக்கு. அது சற்று வயசான ஆளாய் இருந்தால் கூடப் பரவாயில்லை. ஒரு இளைஞனை வைத்துக் கொண்டால்
அவன் தன் பிசினஸில் விளையாட வாய்ப்பு உண்டு. சற்று வயசான ஆசாமி என்றால், தந்தையைப்
போல் இருப்பார். மற்றவர்களும் நெருங்கப் பயப்படுவார்கள். நம்பிக்கையான ஒருத்தரை எப்படித்
தேடுவது?
விவேகாநந்தன் போய்கொண்டிருந்தபோது
பாஷ்யம் நுழைந்தார். கூடவே இன்னொருவரும்….அப்போதுதான் அவளுக்கே நினைவு வந்தது, தான்
அவரிடம் தனக்கான பி.ஆர்.ஓ.வைப் பற்றிச் சொல்லியிருந்தது.
ஷூட்டிங் வந்த இடத்தில்
இதென்ன இன்று இப்படி வந்து அலைமோதுகிறார்கள். தன் வேலை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்
கூடாது அவளுக்கு. தவிர்க்க முடியாமல் விவேகத்தை இருத்தி, அனுப்பியாயிற்று. இப்பொழுது
இன்னொருவரா?
பார்கவியிடம் குசுகுசுவென்று
ஒன்றைச் சொல்லிவிட்டு, மேக்கப்பை சற்று சரி செய்துகொண்டு உள்ளே ஷெட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
பார்த்துக்கொண்டேதான்
விசுக் விசுக்கென வந்து கொண்டிருந்தார் பாஷ்யம். நந்தினி பார்த்தாளா, பார்க்கவில்லையா?
கவனிக்கவில்லை. அடடா….உள்ளே போயிடுச்சா….? என்று அவர் வாய் அவரையறியாமல் முனகியது.
அய்யா…வாங்க…வாங்க….ஷூட்டிங்
ஆரம்பிச்சிடுச்சி….க்ளைமாக்ஸ் எடுத்திட்டிருக்காங்க….இன்னும் ஒரு மணி நேரத்துக்கும்
மேலேதான் ஆகும்…நீங்க பேசாம ராத்திரி வீட்லயே பார்த்திடலாம்…..என்றாள் பார்கவி. வந்த
ஆவேசத்திற்கு, அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் ரங்கபாஷ்யம்.
போய்யா….உனக்கு ஆரம்பமே
சரியில்லை….என்றார் கூட வந்தவரைப் பார்த்து.
இதிலென்ன இருக்கு….நாம
கொஞ்சம் லேட்டா வந்திட்டோம்…அவ்வளவுதானே…இதுக்கு எதுக்கு நம்ம நேரத்தைக் குறைஞ்சுக்கணும்…இதெல்லாம்
சகஜம்….அடுத்தாப்ல பார்த்துட்டாப் போச்சு…என்ற அவரை உற்றுப் பார்த்தாள் டச் அப் பார்கவி.
அந்த நிதானமும், யதார்த்தமும் அவரின் காரியத்தின் கருத்தை உணர வைத்தது அவளுக்கு.
ஆனாலும் உனக்கு பொறுமை
ஜாஸ்திதான்யா….இத்தனை நாள் என்கூடவே இருந்திட்டியே…? நந்தினியைப் பிடிக்கிறதா பெரிசு…?
– கவலையை விடு…நானிருக்கேன்….என்றார்.
அவர்களின் திட்டம்
என்னவாக இருக்கும் என்பதாக யோசித்துக் கொண்டே ஷூட்டிங் உறாலுக்குள் நுழைந்தாள் பார்கவி.
பிரேம்குமாரை ரங்கபாஷ்யம்
மூலம் தன் மகள் கல்பனாவுக்குப் பிடித்துப் போட வேண்டும் என்ற திட்டத்துடனே சென்னை வந்திருந்த
பஞ்சாபகேசனின் மனதில் இப்போது வெவ்வேறு எண்ணங்கள் உதித்துக் கிளைகள் பரவிக் கொண்டிருந்தன.
பொருத்தமான கனவு என்று நிரூபிக்க வேண்டும். நினைப்பதைப் பெரிதாய் நினைக்க வேண்டும்.
செய்வதைப் பிரம்மாண்டமாய்ச் செய்ய வேண்டும். ஊரே அதிசயிக்க வேண்டும்.
குறிப்பாக அந்தத் தாமோதரன் மயங்கிச் சாய வேண்டும்.
என்னை வெறும் சவடால் என்று சொல்வானில்லையா? நான் வெறும் ஓட்டை வாயில்லடா…சொல்றதைச்செய்து
காட்டறவன்….செய்துகாட்டுறதுக்காகத்தான் சொல்றவன்…..வெத்து வெட்டுன்னு நினைச்சியா…!
என் கனவு ரொம்பப் பெரிசு…அது மாயக்கனவுன்னு மத்தவங்களுக்குத் தோணும்…ஆனா அதுதான் எனக்கு
நிஜம். கனவு மெய்யாகும்….அப்டி நினைச்சு இறங்கினா நிச்சயம் நடக்கும்…நடத்திக் காட்டுவேன்….
உன்னைப் பார்த்தவுடனேயே
என் மனசுல ஒண்ணு தோணிடுச்சிய்யா…அதுக்கு நீ ஒத்துக்கிடுவியா….? ஆனா ஒண்ணு…உன் குடும்பத்தை
இங்க கொண்டு வந்திடணும்…அப்பத்தான் சரியா வரும்….நீ ஒத்த ஆளா இருக்கிறதானாலும் இருக்கலாம்.
அதுக்கு ஒப்புதல் வாங்க வேண்டிர்க்கும்….உனக்குப் பெரிய அதிர்ஷ்டம்தான்யா….. – என்று
சொல்லி ஆளைச் சரிப்படுத்தி இழுத்து வந்திருந்தார்.
தனக்கு நடிகையின்
பி.ஏ. பதவியா? – நினைக்கவே கிளுகிளுப்பாய் இருந்தது பஞ்சாபகேசனுக்கு. தான் நினைத்து
ரயிலேறியதுபோலவே எல்லாமும் நடக்க ஆரம்பித்திருக்கிறதா? படிப்படியாகக் கடவுள் வழி காண்பிக்கிறாரோ?
பவானி ஒத்துக்கொள்வாளா? காசும் பணமும் சேரும்போது ஒத்துக்கொள்வதற்கென்ன? எப்படியாவது
பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் சரி அவளுக்கு, அவ்வளவுதானே? – ஒப்புக்கொண்டு பிறகு போய்ச்
சொல்லுவோம். வேறு வழியில்லாமலேனும் சம்மதித்துத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒன்று. ரங்கபாஷ்யம்
சொல்வதுபோல் குடும்பத்தை உடனே சென்னைக்கு மாற்றுவது என்பது ஆகாது. கொஞ்ச நாளைக்கு அங்கேயே
இருக்கட்டும். பணம் மட்டும் அனுப்புவோம். நந்தினியின் பங்களாவிலேயே டேராப் போட்டுவிட
வேண்டியதுதான். அவளின் தந்தையைப் போல் இருந்து அவளைப் பாதுகாத்தால், படிந்துதானே போயாக
வேண்டும்? அந்த ஸ்தானம் இந்த வயதில் தனக்கும் பொருத்தம்தானே? யம்மாடி….என் பொண்ணே…என்
செல்வமே…என்று குழைந்தால் எந்தப் பெண்தான் மசிய மாட்டாள். அப்பா…..!!! என்று அவளைச்
சொல்ல வைக்கிறேன்….அவளைப் பிடித்து, அவள் மூலமாய் அந்த பிரேம்குமாரைப் பிடித்து, என்
பெண்ணை அவன் தலையில் கட்டுகிறேன். என் கனவு பெருங்கனவு. மாயக் கனவு. ஆனால் நிஜம். இது
சத்தியம். மனதில் கல்வெட்டுப் போல் பதித்துக் கொண்டார் பஞ்சாபகேசன்.
இங்க ஒரு பொண்ணு
கல்யாணத்துக்கு நெல்லுக்குதிரு கணக்கா நின்னுக்கிட்டிருக்கு….அங்க நடிகையைப் பாதுகாக்கப்
போயிட்டீங்களாக்கும்…உருப்பட்டாப்லதான்….. – அசரீரியாய் பவானி கத்துவது போல் காதில்
அவ்வப்போது ஒலிக்கத்தான் செய்தது. அவள் குரல் கேட்கையில் மெலிதாய் உடம்பு நடுங்கவும்தான்
செய்கிறது. நினைப்பை அறவே புறந்தள்ளினார் பஞ்சு.
வாருமைய்யா புறப்படுவோம்…வீட்டுல
பார்த்துக்கிடலாம்…என்று பஞ்சுவை எழுப்பினார் பாஷ்யம். இருவரும் திரும்பிப் பார்க்காமல்
நடந்தார்கள். உள்ளே பார்கவி நந்தினியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
யம்மா…நீங்க ரொம்ப
அதிர்ஷ்டம் செய்தவங்கம்மா…உங்க அப்பா மாதிரி ஒருத்தரை நீங்க விரும்பினபடியே உங்களுக்குப்
பி.ஏ.வா இருக்கிறதுக்குக் கூட்டி வந்திருக்காரு தயாரிப்பாளர் ஐயா….வெளியே உக்கார வச்சிட்டு
வந்திருக்கேன்… - அவள் சொல்லி முடித்தாளோ இல்லையோ, அப்டியா…? என்று அதிசயித்தவாறே,
சார்… ஒரு நிமிஷம்… என்று டைரக்டரிடம் சொல்லிவிட்டு ஆர்வத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டை
விட்டு விறு விறுவென்று நந்தினி வெளியே வந்தபோது,
ரங்கபாஷ்யத்தின் கார் வேகமாகக் காம்பவுன்டைக் கடந்து சாலைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தது.
(9)
ரங்கபாஷ்யம்
ஏன் இப்படி விருட்டென்று காரை எடுத்துக்கொண்டு போனார் என்று புரியாது நின்றாள் நந்தினி.
பார்கவி உட்கார்த்தி வைத்து விட்டு வந்ததாகச் சொன்னவுடனே, கிளம்ப முடியலைதான். பாதியில்
நிற்கும் ஷாட்டை விட்டுவிட்டு எப்படி வருவது? அதுவும் அதே மேக்கப் டிரஸ்ஸோடு? தொடை
தெரியும் இந்த உடையில் அவர் முன்னால் போய் நிற்க முடியுமா? மேக்கப் அறைக்குள் நுழைந்து
வெளியே வந்திருக்கிறேன். அதற்குள் போய்விட்டார்களே? உடன் ஒருவரும் வந்திருக்கும்போது
எப்படி?சற்று நின்றால் என்ன? அதுதான் கோபமோ?
நான் பிஸியாய் இருப்பதைப் பார்த்துவிட்டுக் கிளம்பி விட்டாரா? கூட்டி வந்த பெரியவரைப்
பார்க்கலாம் என்று ஆவலுடன் இருந்தேனே…!
நீ அவங்களை உட்காரச்
சொன்னியா இல்லியா…? – கோபமாய்க் கேட்டாள் பார்கவியிடம்.
என்னம்மா இப்டிக்
கேட்குறீங்க… இத்தனை வருஷமா உங்ககூட இருக்கிற எனக்குத் இது கூடத் தெரியாதா? டீ கொடுத்திட்டுத்தாம்மா
உங்ககிட்டே வந்து சொன்னேன்….பாருங்க டீ கப்ஸ் இருக்கிறதை….என்று விரலை நீட்டி கப்புகளை
அவளுக்குக் காட்டினாள்.
பார்கவியை ஒன்றும்
சொல்வதற்கில்லை. சமயமறிந்து நடப்பவள். இன்னும் கொஞ்சம் படித்தவளாயிருந்தால் அவளையே
பி.ஏ.வாக வைத்துக் கொள்ளலாம்தான். கணக்கு வழக்குக்கு வழியில்லை. பெரிய இடங்களோடு பேச,
பழக இன்னும் கொஞ்சம் படிப்பு வேண்டும். அது இல்லை. ஆனால் பேரம் படியச் செய்வதில் சாமர்த்தியசாலிதான்.
அந்தப் பேச்சுத் திறமையெல்லாம் உண்டுதான் என்றாலும், வரும் வி.ஐ.பி.க்களை எதிர்கொள்வதற்கு
அவள் லாயக்கில்லை….எனவேதான் அவளை தன் பர்சனல் டச்அப்போடு மட்டும் நிறுத்தியிருந்தாள்
நந்தினி.
இப்போது ஒரு வாய்ப்பு
வந்ததுபோல் வந்து உடனே கண்ணுக்கு மறைந்து விட்டதே…! ஏன் போனார் பாஷ்யம்? புரியவில்லை.
மனுஷன் கோபித்துக்கொண்டால் ரொம்பக் கஷ்டம். லேசில் குணம் மாறாது. குழப்பத்தோடேயே திரும்பவும்
படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தாள் நந்தினி.
கார்
மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. வந்த காரியம் முடியவில்லையே என்ற நினைப்பில் முகத்தில்
சலனமில்லாமல் வண்டியை விட்டுக்கொண்டிருந்தார் பாஷ்யம். பெரும்பாலும் அவர் கார் ஓட்டுவதில்லை.
இன்று டிரைவர் வேலு இல்லை. எனவே அவரே எடுத்து வந்தார். அருகில் அமர்ந்திருந்த பஞ்சாபகேசன்
பேசுவோமா வேண்டாமா என்ற யோசனையிலேயே அமைதியாய் அமர்ந்திருந்தார்.
என்னய்யா…உமக்கு நல்ல நேரம் இன்னும் வரல போலையே? என்றார் பாஷ்யம்
சாலையைப் பார்த்தவாறே.
நாம இன்னும் கொஞ்ச
நேரம் வெயிட் பண்ணியிருக்கலாமோ? என்றார் பதிலுக்கு இவர். சொல்லிவிட்டுத்தான் ஏன் சொன்னோம்
என்று நாக்கைக் கடித்துக் கொண்டார்.
ஏன்யா, அந்தப் பொம்பளையைப்
பார்க்க எம்புட்டு நேரம் காத்துக் கிடக்கச் சொல்றே…? உள்ளே கூப்பிடப் போன அந்த பார்கவியோட
உடனே கிளம்பி வர வேண்டிதானே…அவளை வச்சுப் படம் எடுக்கிற தயாரிப்பாளர் வந்திருக்கார்னா
அத விட அவளுக்கு வேறே எதுய்யா முக்கியம்…வந்தாளா
பார்த்தியா?
உள்ளே போன இந்தப்
பிள்ளை எப்போ விபரத்தைச் சொல்லிச்சோ…? யாருக்குத் தெரியும்? அத்தோட நடிச்சிட்டிருக்கைல
எப்படிங்க பாதில விட்டிட்டு வர முடியும்? அதான் லேட்டாயிருக்கு….
பார்யா…அதுக்குள்ளேயும்
அவளுக்குச் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீராக்கும்….நான் இன்னும் அவ கிட்டே சொல்லவே
இல்லைய்யா…அத ஞாபகம் வச்சிக்கோ…..
உங்க மனசுக்கு நீங்க
சொல்லாம இருக்கப் போறீகளா என்ன? ஏதோ உங்களால நானும் ஒரு நிலைக்கு வரணுமில்ல…..? நீங்க
செய்வீங்க…அதானே உங்க அடிபணிஞ்சு சுத்துறேன்…. – தாராளமாய் வார்த்தைகளை விட்டார் பஞ்சு.
எந்த நிலைக்கும் இறங்க அவர் தயார். பாஷ்யம் குளிர்ந்துதான் போனார்.
நல்லாப் பேசத் தெரிஞ்சிருக்கேய்யா
நீ…இதப் புரிஞ்சிதான் எனக்கு இந்த யோசனையே தோணிச்சு மனசுல….கிளம்பின நேரம் சரியில்ல
போலிருக்கு….?
அது சரிங்கய்யா….அத்தனை
அவசரமா ஏன் கிளம்பிட்டீங்க…? அம்புட்டு ஒண்ணும் நாம காத்துக்கிடக்கலியே…? – கொஞ்சம்
தைரியம் வந்தவர்போல் கேட்டார் பஞ்சு. உடனே முறுக்கிக்கொண்டு ஓடி வந்துவிட்டு, இப்படிப்
பேசுகிறாரே?
அது வேறே விஷயம்யா….அந்த
ஸ்டுடியோவுல நிறைய ரூம்க உண்டு…பெரிய உறீரோக்களெல்லாம் தனித்தனி ரூமைப் பயன்படுத்திப்பாங்க…அதுல
ஒண்ணுல அந்தப் பிரேம் இருக்கிறான்னு தோணிச்சு…..வெளிலயும்
காரைப் பார்த்துட்டனா…எதுக்கு வம்புன்னு கிளம்பிட்டேன்…..
என்னது? பிரேம்குமாரையா
சொல்றீங்க…? – அடக்க முடியாத ஆர்வத்தோடு கேட்டார் பஞ்சு.
அவனை இவர் மூலமாய்ப்
பிடித்து எப்படியாவது தன் பெண்ணைக் கட்டி வைத்து விட வேண்டும் என்பதுதானே தனது திட்டம்.
நந்தினியையும் நெருங்கி, அவள் மூலமாகவும் விஷயத்தைப் பழமாக்க வேண்டும். லட்டுப் போல்
கைமேல் அருகில் இருந்த ஒரு விஷயம் நழுவிப் போய் விட்டதே…! ஆளைப் பார்த்திருக்கலாமே…!
அது கூட ஆகாமலாகி விட்டதே…! முடியுமானால் அவனோடு ஒட்டிக் கொள்ளக் கூட வாய்ப்புத் தேடலாமே…!
முதல்ல ஆளைப் பாரு…அப்புறம்
படிப்படியா யோசி…எடுத்த எடுப்பில உச்சிக்குப் போய் உட்கார்ந்துக்கிறதே உன் வேலையாப்
போச்சு… - மனசு தடுத்தது. அதுவும் சரிதான் என்று தோன்றியது. ரொம்ப அவசரப்படுகிறோமோ…!
தடுக்கி விழப் போகிறோம்…!!
ஊருக்கு வந்து இன்னும்
அவனைப் பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே…! எப்படியானாலும் இந்த இடத்தில்
அவனைப் பார்த்தாலும், எதுவும் பேச முடியாதுதான். வெறும் அறிமுகமாவது கிடைத்திருக்குமே…!
பழசைக் கொஞ்சமாவது ஞாபகப்படுத்தி வெள்ளோட்டம் விட்டிருக்கலாம்தான்….! மாம்மா…மாமோய்…..என்று
சொல்லிக் கொண்டு இப்போது பாய்ந்து வருவானா? அல்லது விலகி நிற்பானா? நெருங்கியாவது நிற்க
முடியுமா? அவன் கௌரவம் என்னாவது? அந்தளவுக்கு
எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் தெரியாத மாதிரியா காட்டிக் கொள்ளப் போகிறான்? எதைச் சொல்வது? எதை விடுவது? பணம் பத்தும் செய்யும்…!!
வாய்மூடி மௌனியாய்
வெளியேறிய இந்த மனுஷனை என்னதான் சொல்வது? தனக்குத்தானே நொந்து கொண்டார் பஞ்சு. இவருக்கே
இன்னும் இந்தச் சூழல் படியவில்லை. தயங்கித் தயங்கித்தான் அடி எடுத்து வைக்கிறார். புரிந்தது
பஞ்சாபகேசனுக்கு. பணம் போடுபவராயிற்றே…! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விட்டு விட முடியுமா?
வந்த வேலையே அதுதான்.
அதாவது அவனைப் பார்ப்பது. நெருங்குவது. ஒட்டுவது. கட்டி வைப்பது. ஆனால் இப்போது விஷயம்
திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. எதுவோ வேறு ஒரு அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வருவதுபோல்
தென்படுகிறது. அந்தக் குதிரைமேல் முதலில் ஏறி அமர்ந்துவிட வேண்டும் என்று முனைந்தாயிற்று.
அப்படியானால் படிப்படியாகத்தானே தன் நோக்கத்தை நிறைவேற்றியாக வேண்டும். எடுத்த எடுப்பில்
இரட்டைக் குதிரையில் எப்படி பயணம் செய்தல் சாத்தியம்?
நான் ஒன்று நினைத்திருக்கிறேன்.
இவர் ஒன்று நினைக்கிறார். கடவுள் என்ன நினைத்திருக்கிறாரோ? – பலத்த யோசனையில் பாஷ்யத்தின்
பங்களா வந்தது கூடத் தெரியவில்லை பஞ்சாபகேசனுக்கு.
என்னய்யா, தூங்கிட்டியா….வெளில
வா….என்ற பாஷ்யத்தின் சத்தம் கேட்டுத்தான் தன் நினைவுக்கு வந்தார் பஞ்சு. ரங்கபாஷ்யம்
ரொம்பவும் இஷ்டமாக வா, போ என்றும், சமயங்களில் இடத்திற்கேற்றாற்போல் வாங்க போங்க என்று
விளிப்பதும் அவர் தொழில் யுக்தி என்று தோன்றியது இவருக்கு. எதுவானால் என்ன? நல்லது
நடந்தால் சரி என்பதே அவர் முடிவாயிருந்தது.
இப்படியான
சிந்தனையில் இவர்கள் இங்கே வியாபித்திருக்கையில், அங்கே மனம் குமுறிக்கொண்டிருந்தான்
பிரேம். கைவசம் அவனிடம் இருந்த இரண்டு படங்கள் நழுவிப் போயிருந்தன. காலையில்தான் செய்தி
கிடைத்தது அவனுக்கு.
நாந்தான் ஓ.கே. சொல்லிட்டனே…அப்புறம்
எப்படி நீங்க மாத்துறீங்க…நல்லா யோசிச்சிட்டுப் பேச மாட்டீங்களா? – இயக்குநரை எகிறினான்.
யார் காரணம் என்பதை அவர் மூலமாய் வரவழைத்துவிட வேண்டும்என்ற அவசரம்.
நான் என்ன சார் பண்றது?
எல்லாம் ப்ரொட்யூஸர் விருப்பம் சார்…அந்தம்மா கூடப் பேசிட்டிருந்தாரு, அதான் எனக்குத்
தெரியும்…என்னை ஆள விடுங்க….
ஏன், நீங்க சொல்ல
மாட்டீங்களா? என்னை வச்சு உங்களுக்கு எத்தனை படம் சக்ஸஸ் ஆகியிருக்கு…அதைச் சொல்ல வேண்டிதானே?
சொல்லியாச்சு சார்…அவர்
கேட்கமாட்டேங்குறாரு…வசீகரனத்தான் புக் பண்ணியிருக்காங்க….அந்தம்மாவும் இருக்காங்க….இளமைப்
புயல் வசீகரனும் இருக்காரு….ரெண்டுமே சுனாமிதான்யா எனக்குங்கிறாரு….
சுனாமின்னா அழிவுன்னு
அந்தாள் மூளைல உதிக்காதாமா?
சாரி சார்…இதெல்லாம்
நான் பேச முடியாது. அப்புறம் எனக்குப் படம் பண்ற வாய்ப்புப் போயிடும்….எனக்கு நீங்களும்
வேணும்…அவரும் வேணும்…அந்தம்மாவும் வேணும்…யாருக்குன்னு நிக்கச் சொல்றீங்க என்னை? நீங்க
வேணுங்கிறதுனாலதான் இப்போ இந்த விஷயத்தை உங்ககிட்டே சொன்னேன்…..
நான் ஒரு தப்புப்
பண்ணிட்டேன்…அன்னைக்கே அட்வான்சை வாங்கியிருக்கணும்….பழகின டைரக்டர், ப்ரொட்யூசர்னு
விட்டுட்டேன்…இப்போ என்னடான்னா நீங்க அவரோட சேர்ந்துக்கிட்டுக் கழுத்தறுத்திட்டீங்க….
சாரி சார்…திரும்பத்
திரும்ப என்னையே பழி போடுறீங்களே….பணம் போடுற ஆள் அவரு சார்….நானும் உங்களை மாதிரி
அவர்ட்டச் சம்பளம் வாங்குற ஆள்தானே…
நந்தினி கதாநாயகி
என்றால் இப்போதெல்லாம் அந்த வசீகரனைப் போட ஆரம்பித்து விட்டார்கள். அவனைப் போட்டால்
தெலுங்கிலும், மலையாளத்திலும் டப் செய்து விற்பனை செய்வது தோதாயிருக்கிறதாம். அங்கேயும்
அவனுக்கு ஒரு ரசிகர் கூட்டம் சேர்ந்திருக்கிறதாம். நந்தினிதான் இதற்கு சிபாரிசு என்றார்கள்.
இதென்ன புதிய மோகம் அவளுக்கு? இத்தனைக்கும் அவன் வயசில் சற்றுச் சிறியவன் போல் தெரிகிறது.
ஒன்றிரண்டு வித்தியாசம் காட்டினாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டாளா? தனக்கான
கைவசம் இருந்த மூன்று படங்களும் கைநழுவிப்போன
ஆத்திரத்தில் இருக்கும் படங்களைச் சிரத்தையாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையில்
பெங்களூர் பயணம் பற்றி எண்ணங்களை ஓடவிட்டான். தன்னை அந்தப் படப்பிடிப்புக்குப் பொருத்தமாகத்
தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.. நந்தினியோடு
மீதமிருந்த ஒரே படத்தின் கதி என்னவாகும்? இந்த யோசனையும் அப்போது அவன் மனதில் ஓடிக்
கொண்டுதானிருந்தது.
( 10 )
அன்று
பிரேம்குமாருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. குறிப்பிட்ட காட்சிக்கு இன்று ஐந்து
டேக்குகள். புதிதாகத் திரைக்குள் புகுந்த புது முகங்கள் கூட இன்று தப்புவதில்லை. அடித்துத்
தூள் கிளப்புகிறார்கள். ஆனால் எனக்கு என்ன வந்தது? ஏன் இன்று கவனம் இப்படிச் சிதறுகிறது? அந்தக் காட்சியில் அந்தப் புதுமுகப் பெண்ணும்தான்
எத்தனை முறை தன்னிடம் அடி வாங்கும்?
பரவால்லண்ணே…போதும்…சரியாத்தான்வந்திருக்கு…-
தயங்கிக்கொண்டே கூறிய துணை இயக்குநர் விதேந்திரனை முறைத்தான் பிரேம்.
இவன் யார் இதைச் சொல்ல? எப்படி வந்தது தைரியம்? யார் கொடுத்தது?
எது கொடுத்தது? இவனெல்லாம் பேச ஆரம்பித்து விட்டானா? எனக்கான காலக்கேடுதானா இது?
சே…! என்னவெல்லாம் தோன்றுகிறது இந்த மனதில்? இருக்கும் இடம் தெரியாமல் நிற்கும் ஆளெல்லாம் வாயைத்
திறக்கிறான்கள்?
மனசு சலித்தது பிரேம்குமாருக்கு. இருந்தாலும்
வெளிக்காண்பித்துக் கொள்ள அவன் அப்போதைக்கு விரும்பவில்லை.
உனக்குப் போதும்யா…நீ கூடவே இருந்து எப்பவும்
என்னைப் பார்க்கிறவன்…ஆனா என் ரசிகர்களுக்கு? அவுங்களுக்கு நான் தீனி போட்டாகணுமே…எதிர்பார்த்திட்டே
உட்கார்ந்திருப்பாங்களே…மனசில அவ்வளவு ஆசையைத் தேக்கி வச்சிட்டுக் காத்திருப்பாங்களே…அவுங்கள
நான் ஏமாத்தக் கூடாதுல்ல….-
வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு உதவி இயக்குநரிடம் சகஜமாகப் பேசியிருக்கிறான்
பிரேம்குமார். அவனுக்கே ஆச்சரியம். இவனின் நெருங்கிய பேச்சில் அவன் முழித்துப் போனான்.
மேற்கொண்டு வார்த்தைகளே வரவில்லை அவனுக்கு.
ஒவ்வொரு முறையும் தனக்குத் திருப்தி ஏற்படாத காட்சிகளில்,
இப்படித்தான் சொல்வான் பிரேம். அப்படியே பார்த்துப் பார்த்து, உயிரைக் கொடுத்து உழைத்து
மேலே வந்தவன் அவன். உண்மையான உழைப்புக்கு என்றும் பலனில்லாமல் போகாது என்பதில் அதீத
நம்பிக்கை உள்ளவன்.
ஆனால் அதற்கும் ஒரு காலம்
என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது போலும்…அதனால்தான் தனது முந்தைய இரண்டு சொந்தப் படங்களும்
பின்னுக்கு இழுத்துக் கொண்டனவோ…அதற்கும் முந்தைய பிற கம்பெனிப் படங்கள் ஊத்திக் கொண்டனவே?
இதுதான் காரணமோ? திரும்பத் திரும்ப மனதுக்குள் தோன்றித் தோன்றித் துடிக்க வைக்கும்
அவமானங்கள் இவை. அடுத்தடுத்து எத்தனை வெற்றிகளைக் கொடுத்தவன் அவன். வரிசையாக வெற்றி
மேல் வெற்றி வந்து என்னைச் சேரும் என்று அயராது பாடுபட்டுக் களைத்தவனாயிற்றே! அவனுக்கா
தோல்வி?
நானா களைத்துப் போனேன்? அன்று போல்தானே இன்றும்
உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
பின் எது என்னை இப்படிப் பின்னுக்குத் தள்ளியது? விடை தெரியா கேள்விகள்
பல.
அதற்கு முக்கிய காரணம் அவள். அந்த நந்தினி. நான் கை பிடித்து அழைத்து
வந்தவள். கூடவே வைத்துக் கொண்டு உயரத்தைக் காண்பித்து மேலே போய்விடு என்று தூக்கி உச்சிக்கு
அனுப்பி இப்பொழுது அங்கிருந்து என்னைப் பார்ப்பவள்.
என்னவொரு கொடுமை? காலம் இப்படியுமா வேடிக்கை காட்டும்?அவளோடு கை
கோர்த்த படங்கள் அத்தனையும் வெற்றி. என்னுடன் சேர்ந்து அவள் மார்க்கெட் பிடிக்க முடியாத
இடத்திற்குப் போய்விட்டது. கைக்கு எட்டாத தூரம் போய்விட்டாள் அவள்.
இப்போது தனிக் கதாநாயகியாம் அவள். அவளேதான் நாயகனுமாம். என்ன ஒரு
தெனாவெட்டு? அவள் தன்னைப்பற்றி அப்படி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இந்த
சினிமா உலகம் அவளை உதற எவ்வளவு நேரம் ஆகும்? அனுபவமில்லாதவள்…!
நெஞ்சுக்குள் இனம் புரிந்த குரூரம்…! பொறாமை அறுத்தது
மனதை.. பார்ப்பவர் எல்லாரிடமும் அநாவசியமாய் குற்றம் கண்டு பிடித்தது. தீக்குழம்பு
மனதுக்குள். கொதித்துக் கொண்டிருக்கிறது தளதளவென்று. எதை ஊற்றி அணைப்பது என்று புரியாமல்
தவிக்கிறேன் நான். இவன் என்னடாவென்றால் எனக்கு ஆறுதல் சொல்கிறான்.
நான் மட்டும் பழைய பிரேமாய் இருந்திருந்தால் இவன் வாய் இப்படி நீண்டிருக்குமா?
அல்லது இந்த இடத்தில்தான் இந்நேரம்வரை நின்றிருக்க முடியுமா? எல்லாம் காலத்தின் கோலம்…நேரக்
கொடுமை…!
அப்படி என்ன வீழ்ச்சி வந்து விட்டது தனக்கு. வெளியே
ஒன்றும் அதற்கான பரபரப்புத் தெரியவில்லையே….? எல்லாம் வழக்கம்போல்தானே நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்து விடுமோ? வந்தது வரட்டும், போனது போகட்டும் என்று
இறங்கியாயிற்று. வெற்றி இலக்கை மீண்டும் தொட்டாக வேண்டும். அதை நோக்கித்தான் ஓடிக்
கொண்டிருக்கிறேன். இடையில் எது வந்து வந்து தடுக்கிறது? என்ன பயம் அது? ஏன் வந்தது?
இரண்டு தோல்வி மூன்றாவது வெற்றிக்கான படியாக அமையக் கூடாதா? அதுவும் தோற்றுத்தான் போகும்
என்று ஏன் இப்பொழுதே மனதுக்குள் வெறுப்பு மண்டிப் போக வேண்டும்? ஏன் ஊமையாய் அழ வேண்டும். தாழ்வுணர்ச்சி வெற்றியைப்
பூமிக்குள் புதைத்து விடுமே? என் முனைப்பு மழுங்கிப்
போய்விட்டதா?
நினைப்பது சரி? ஆனால் உலகம்? அந்த ரசிகர்கள் உலகம்? என்னையே நினைத்துக்
கொண்டிருக்குமா? என்னை மீண்டும் எழுப்பி நிறுத்துமா? சும்மாவானும் தூக்கி நிறுத்து
என்றால் எப்படி? கொடுப்பதைக் கொடுத்தால்தானே தூக்கும்? கொடுப்பதைக் கொடுத்தால் அவர்கள்
என்ன தூக்குவது, அது, தானே உயர்ந்துதானே நிற்கும்? அப்படியானால் இதுநாள்வரை, தான் அவர்கள்
மூலம் நிற்கவில்லையா? அவர்கள்தானே கூட்டங்கூட்டமாய்ப் போய் அதிர வைத்தார்கள்? அதை மறந்து
விட முடியுமா? அந்தப் பரபரப்பை உலகறியச் செய்தவர்கள் அவர்கள்தானே? பாலாபிஷேகம் செய்து
கடவுளாய் வணங்கியவர்கள் அந்தத் தொண்டர்கள்தானே? அப்படித்தானே நான் உச்சிக்குப் போனேன்?
பிறகு எப்படிக் கீழே விழுந்தேன். ஏன் இன்னும் எழமுடியாமல் தவிக்கிறேன்? என்னை இந்த
ரசிகர் உலகம் மறந்துவிட்டதா? போதும் என்று அலுத்துவிட்டேனா நான்? இவர்களே வசீகரன் பக்கம்
திரும்பிவிட்டார்களா? அல்லது ஆம்பளை வேஷம் போடும் நந்தினியை நாட ஆரம்பித்து விட்டார்களா?
உன்னைப்பற்றியே இந்த உலகம் நினைத்துக் கொண்டிருக்க
வேண்டுமா? மற்றவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? இப்போது எந்தப் பத்திரிகைக்காரனாவது
எழுதுகிறானா? எதிலாவது உன் செய்திகள் வருகின்றனவா? காலம் மாறிப்போச்சுய்யா… தோல்விப்படமாக்
கொடுத்தேன்னா? எவன் கவனிப்பான் உன்னை? சரக்கு நல்லாயிருந்தாத்தானே விலை போகும்? சும்மாவானும்
வித்துப்புடணும்னு குதியாட்டம் போட முடியுமா? இது குதிரை ரேசு. தெரியும்தானே…? ஜெயிக்கிற
குதிரை மேலதான் பணம் கட்டுவாங்க….அது ஆம்பளையா, பொம்பிளையா கணக்கில்லே….காசப்போட்டா
டபுளா எடுக்கணும்….அவ்வளவுதான்….உனக்குப் போட்டியா பறந்தடிக்கிறாளே நந்தினி…அவ மார்க்கெட்
இப்போ எங்க இருக்கு தெரியுமில்ல? நீ பண்ணுன போலீஸ் வேஷத்தப் பூராவும் இப்போ அவுளுக்குக்
கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க….பொம்பளப் போலீசு எங்கயாவது இத்தனை சாகசம் செய்ய முடியுமா?
முடியும்….ஏன் முடியாது? சினிமாவுல செய்யலாமுல்ல….யாரு தடுக்கப் போறா? தீமையை அழிக்க
தீயாப் புறப்பட்டவடா நா….ன்னு அவ பேசுற பஞ்ச் டயலாக் இன்னைக்கு அவ்வளவு
பிரபலம்…! ஒவ்வொருத்தன் வாயிலயும் துடிக்குது அது..….. இதுதாம்ப்பா டிரென்ட்….ஒரு படம்
வெற்றியாச்சின்னா வரிசையா முப்பது படம் எடுத்திட்டுத்தான் ஓய்வானுங்க ஃபீல்டுல…உனக்குத்
தெரியாதா? நீ பார்க்காத பரபரப்பா? எல்லாம் பார்த்து ஓய்ஞ்சுதான இன்னைக்கு இப்டி நிக்கிறே…?
திரும்ப நிமிரணும்னா அந்த முயற்சி எந்தளவுக்கு இருக்கணும்னு உனக்குச் சொல்லியா தரணும்?
ஆனா ஒண்ணு கீழே விழுந்தவன் எந்திரிச்சதா சரித்திரம் கிடையாது….சர்வ சாதாரணமாத் தூக்கி
நிறுத்துவாங்க….தடால்னு கீழே போட்ருவாங்க…ஜாக்கிரதை….
மனசு தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறது.-ஆனாலும்
எதுவோ காழ்ப்புணர்ச்சியைத் தூண்டியது. இல்லையென்றால் கேரளத்திலிருந்து இப்படியொரு ஜோடியைத்
தேர்ந்தெடுக்க தேடி ஓட வேண்டி வந்திருக்குமா? ( 11 )
அங்கிருந்தபடியே
சற்றுத் தள்ளி வேறொரு காட்சிக்குக் கோணம் பார்த்துக் கொண்டிருந்த டைரக்டர் நவீனை நோக்கிக்
கை தட்டினான் பிரேம். சுற்றிலுமிருந்த மலைச்சாரல் பகுதியும், அந்தப் பண்ணை வீடும்,
அவனுக்குப் புதிய உற்சாகத்தை அளித்திருந்தன. அப்படியும் மனதைப் பழைய நினைவுகள் புரட்டிப்
போட யத்தனிக்கின்றன. மொத்தக் கதைக்கும், அந்தக் குறிப்பிட்ட இடத்திலும், சுற்றுப் பகுதிகளிலுமான
காட்சிகளை ஒரேயடியாக எடுத்து முடித்துக்கொண்டு பிறகு சென்னைக்குக் கிளம்பலாம் என்று
சொல்லி அவன்தான் மொத்த யூனிட்டையும் அங்கு இறக்கி, தங்க வைத்திருந்தான். பணம் ஆறாய்ப்
பெருகி நீராய் ஓடியது. ஏதோ ஒரு வெறியில் அள்ளி வீசினான். வந்தா வருது, போனாப் போகுது…இது
தோத்தா நான் பிச்சைக்காரன்….தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
இனி அடகு வைப்பதற்கு ஒன்றுமில்லை. சென்னை பங்களாவையும் எழுதிக்
கொடுத்திருப்பது இதுவரை யாருக்கும் தெரியாது. துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்று
இறங்கியாயிற்று. ஆனால் இறங்கி நடக்க நடக்கத்தான் துக்கம் பெருகுகிறது. பயப்பேயைக் கையைப்
பிடித்து அழைத்துக் கொண்டே செல்வது போன்ற பிரமை.
வந்திட்டேன்….என்ன ஓ.கே.தானே? – கேட்டவாறே பரபரப்பாய்
நெருங்கியவரை, திருப்தியில்ல…இன்னொரு டேக் எடுத்திருவோம் என்றான் பிரேம். அவர் விதேந்திரனைப்
பார்த்தார். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நிற்பதைக் கண்டு ஏதோ புரிந்தவராய்,
நோ, ப்ராப்ளம்….முடிச்சிருவோம்….என்றார்.
கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக்
கொண்டான் பிரேம். ரொம்பவும் பொருத்தமாகத்தான் அந்தத் தந்தை காரெக்டரை அப்போது உணர்ந்தான்.
தலையில் மாட்டியிருந்த விக் கனகச்சிதமாகப்
பொருந்தியிருந்தது. முன் பக்க நரையும், இரு காதுப்பக்க நரைகளும், அவன் முதிர்ந்த முகத்திற்கு
ஒரு தனி தேஜஸைக் கொடுத்தன. முகத்தின் வட்டத்திற்கு ஏற்றாற்போல, இரட்டை நாடிக்கு உகந்தாற்போல்
கனமான மீசை. உறா…என்ன ஒரு கம்பீரம்? இனிமேல் வயதான வேடங்களை ஏற்றால் கடைத்தேறும் போலிருக்கிறதே? அப்படிக் கொஞ்ச காலம் காசு பண்ணலாமா, தாங்குமா சினி
உலகம்? குரலை வேற மாற்றியிருந்தான். இப்படி ஒரு அடிக் குரல் தன்னிடமிருந்தா? ஜால வித்தை
செய்யலாம் போலிருக்கிறதே…! இந்தக் குரலில் வசனத்தை அழுத்தி, நிறுத்தி, உணர்ச்சியோடு
பேசினால் அசந்து போவார்களே? உற்உறா…என்னா ஸ்டைல்யா….?
மனசு இதற்கும் துள்ளிக் குதிக்கத்தான் செய்கிறது.
இந்தப் படத்தின் மூலம் குறைந்த பட்சம் அதையாவது உறுதி செய்து விட வேண்டும். வில்லன்
வேஷங்கள் கிடைத்தாலும் ஓ.கே.தான் என்று புறப்பட்டு விட வேண்டியதுதான். அப்படி கொஞ்ச
காலம் தன்னால் ஓட்ட முடியாதா என்ன? ஆனால் ஒன்று. அதற்கென்று இந்த விசேஷத் தன்மையை,
நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை யாராலும்
தொடப் படாத, தொட முடியாத நடிப்பு வகை. தீயாய் இருக்க வேண்டும். எனக்கு, எனக்கு என்று
வந்த நிற்க வேண்டும்….நரம்பகள் துடிக்க ஆரம்பித்தன பிரேமுக்கு. பழைய துடிப்பு மீள்கிறதோ
என்று அவனுக்கே வியப்பாய் இருந்தது. இந்தளவுக்கு நினைக்க வேண்டிய அவசியம் என்ன? கேள்வியும்
பிறக்காமலில்லை.
என்ன இது? எதற்காகத் தன் சிந்தனை இப்படியெல்லாம்
பாய்கிறது? என் தோல்வியை நானே ஒப்புக் கொள்கிறேனா? என் காலம் முடிந்து விட்டது என்று
என்னையறியாமல் முடிவு செய்து விட்டேனா? அதனால்தான் சென்ற முறை கொடைக்கானலில் வைத்து அந்தக் குறிப்பிட்ட காரெக்டரைப் பண்ணுறீங்களா என்று அவர்கள் கேட்டார்களோ? என்ன ஒரு
தைரியம்? என்னைப் பார்த்து அப்படிக் கேட்பதற்கு? இரண்டில் ஒன்றாய் நானும் இணைய வேண்டுமாம்.
ஒரு கதாநாயகன் பாத்திரம் வில்லத் தன்மை வாய்ந்ததாம். அது எனக்குப் பொருந்தும் என்று
முடிவு செய்தே வந்தார்களாம்.
அண்ணே, நீங்கதாண்ணே செய்யணும் இந்தக் காரெக்டர்….
உங்க காரெக்டருக்காகவே இந்தப் படம் டாப்புல போகும்ணே…நீங்க மொதப் படத்துல அப்ளை பண்ணுன
ஸ்டைலை இதுல திரும்பவும் யூஸ் பண்ணிக்கலாம்ணே…இந்தக் கதைக்குப் பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….
ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? எது தடுத்தது? இன்னும்
தனக்கு அந்த அளவுக்கான பின்னடைவு ஏற்படவில்லை என்று எந்த மனம் சொன்னது? இருந்தால் கடைசிவரை
கிரீடம்தான். அதைக் கீழே இறக்குவதேயில்லை. இல்லையேல் எதுவும் வேண்டாம். என்னவொரு பிடிவாதம்?
முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு போன அவர்களில் ஒருவன் முணு முணுத்தது இன்னும் காதில்…ரீங்கரித்துக்
கொண்டுதான் இருக்கிறது.
இன்னும் பத்துப் படம் அந்த நந்தினி கூட நடிச்சாத்தான்
தன் மார்க்கெட் பழையபடி எகிறும்னு நினைக்கிறாரு போலிருக்கு….அது என்னடான்னா இவர் பேரைச்
சொன்னாலே ஓடுது… படமே வேண்டாங்குது…. அது மார்க்கெட் பிச்சிக்கிட்டு நிக்குது… தெரியுதா
இவுருக்கு? புதுசு புதுசா எம்புட்டோ பசங்க வரானுங்க…அதுகளோட நடிச்சி தன் பேரை நிக்க
வைக்கிற டிரிக்குல இருக்குது அது….அந்தம்மா ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகுது….இவரக்
கவனிக்குமா?
காண்பவர் எல்லோருமே நந்தினியைப்பற்றிப் பேசுவது
எரிச்சலை ஏற்படுத்தத்தான் செய்கிறது இவனுக்கு. வெளியில் காண்பித்துக் கொள்ள முடியவில்லை.
நாம கொண்டு வந்து விட்ட பொண்ணு…நல்லாயிருக்குன்னா அது நமக்குப் பெருமைதானே? – அவன்
சொன்னதும், சொல்வதும், அவனுக்கே இப்பொழுதும்
செயற்கையாகத்தான் இருக்கிறது. இந்த அளவுக்கான புழுக்கத்தை ஏற்படுத்தியவள் அவள்தான்.
அவளேதான். என் எத்தனையோ படங்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும், கடந்த எனது சொந்தப் படங்களில் அவள் நடித்திருந்தால் இந்த அளவுக்கான
சரிவை அவை நிச்சயம் எட்டியிருக்காதுதான். நானும் கீழே போயிருக்க மாட்டேன். அவள் பெயரை
வைத்தாவது நின்றிருப்பேன்.
ரசிகர்களின் கனவுக் காதல் ஜோடி நாங்களாகத்தானே
இருந்தோம். உண்மையிலேயே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று எத்தனை
கிசு கிசுக்கள்? என்னமாதிரியெல்லாம் புரளிகள். மஉறாபலிபுரம் ரிசார்ட்டில் கபளீகரம்
என்றெல்லாம் தலைப்புப் போட்டு எப்படியெல்லாம் உசுப்பேற்றினார்கள்? பத்திரிகை விற்றார்கள்?
அந்தச் செய்தியை எல்லாம் பார்த்து விட்டு என்னிடம் ஒரு மாதிரியாய்ச் சிரிப்பாளே? அந்தச்
சிரிப்புதானே என்னைக் கொள்ளை கொண்டது? என்னை மட்டுமா? இந்தச் சினிமா உலகத்தையே அல்லவா
ஆட்டி வைக்கிறது. வளைத்து அவள் காலடியில் அல்லவா போட்டிருக்கிறது? அந்த மப்பில்தான்
அவள் என்னை உதறியிருக்கிறாள். அந்த மண்டைக்கனம்தான் என்னைச் சந்திப்பதைக் கூடத் தவிர்த்திருக்கிறது.
வீட்டின் உள்ளே இருந்து கொண்டே வெளியூர் படப்பிடிப்பு என்று சொல்ல
வைத்தாளே….எனக்கே அல்வா கொடுக்கிறாள் பாவி? இந்த சினிமா உலகம் உன்னை உதறித் தள்ள எவ்வளவு
நேரம் ஆகும்? உன்னிடமுள்ள படங்களைப் பிடுங்க எவ்வளவு நாளாகும்? நினைத்தால், செய்தால்,
எல்லாமும் தலை கீழாய் மாறிப் போகும். போகட்டும் என்று விட்டால் தலையில் ஏறி மிதிக்கிறாளே?
அண்ணே…பிரேம்ணே…எடுத்திருவமா…இல்ல இன்னிக்கு இத்தோட
முடிச்சிக்குவமா? – எதிரில் கேள்விகளோடு நின்ற இயக்குநரை வெறித்தான் இவன். அந்த முக
பாவத்தில் எதுவும் புரியாமல் நின்றார் அவர்.
நீங்க வேணா இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கண்ணே…நா
இதோ வந்திடறேன். ஒரு லொகேஷன் ஃபிட் ஆயிடுச்சண்ணே….நாளைக்குக் காலைல அங்கதான் ஷூட் பண்ணப்
போறோம்… - சொல்லிக் கொண்டே அவனின் நிலைமை கண்டு ஓடி ஒளிந்து கொண்டார் அவர்.
பிரேம் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கும் மனது அப்படித்தான்
சொல்லியது. கூடவே என்னவோ ஒரு திட்டம் அவனுக்குள் உருவாகிக்கொண்டிருந்தது. உள்ளுக்குள்
அதுநாள் வரை இருந்த குரூரத்தை அப்பொழுதுதான் சட்டென்று உணர்ந்து கொண்டான். தயங்காதே…உடனே நடத்து……நீயில்லாமல் அவளுக்கு ஏது வாழ்வு?
(
12 )
டச் அப் பாயை அழைத்தான். கண்ணாடியைப் பிடுங்கி முகத்தைத் துடைக்கப்போனான்.
அப்படித் திடீரென்று துடைப்பதற்கு என்ன வந்தது? அப்படியானால் அன்று படப்பிடிப்பு அவ்வளவுதானா?
தன்னை நம்பிக் காத்திருக்கும் மொத்த யூனிட்டும் தன்னைப் பற்றி என்ன நினைக்கும்? கண்ணாடியில்
முகம் வித்தியாசமாய் இருப்பதை அப்பொழுதுதான் கூர்ந்து உணர்ந்தான் பிரேம்.
உண்மையிலேயே தன் முகம் முற்றி விட்டதா என்ன? வயதான
கதாபாத்திரத்திற்கு இப்படிப் பொருந்துகிறது? இரட்டை வேடத்தின் இன்னொரு பாத்திரமான கதையின்
நாயகன் வேடத்தின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே அவன் மனம் எச்சரித்தது.
எப்படியும் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியே தீர வேண்டும். இதுவும் கைவிட்டுப் போனதென்றால்
பிறகு தன்னை அடியோடு மறந்து விடுவார்கள் எல்லோரும். அதற்காகத்தான் ரிலீஸ் தேதியைக்
கூட இன்னும் நிர்ணயிக்கவில்லை. திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து, திருத்தித்
திருத்தி, சே…! என்னவாயிற்று தனக்கு? ஏனிப்படி இழுத்தடிக்கிறது? கெட்ட நேரத்திற்கு
எல்லாமும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுமோ? எதைத் தொட்டாலும் பிசகு வருகிறதே?
செய்ததையே திரும்பத் திரும்பச் செய்ய வைக்கிறதே? எவ்வளவுதான் செலவு செய்வது? பணம் அத்தனையும்,
கண்கொண்டு விரயமாகிறதே? ஏன் எது செய்தாலும் திருப்தி வரவேமாட்டேன் என்கிறது? பயம் படுத்தும்
பாடா இது? படம் பெட்டிக்குள் முடங்கி விட்டால் என்ன செய்வது? என்ற பயம் இப்பொழுதே போட்டு
உலுக்குகிறதே?
எச்சரிக்கை, எச்சரிக்கை…மனசுக்குள் மணி அடித்தது. மேற்கொண்டு தொடர்வதுபற்றித் தீவிரமாய்
யோசி. முடியுமானால் நிறுத்தி விடு. வீம்புக்குச் செய்யாதே. மற்றவர்களுக்கு உன் பணத்தைப்
பற்றிக் கவலையில்லை. நீதான் கவலைப்பட்டாக வேண்டும். அதற்கு நீதான் மொத்தப் படத்திலும்
கவனமாய், கருத்தாய், கண்ணுக்குள் எண்ணை விட்டுக் கொண்டு பார்த்திருக்க வேண்டும். மனம்
குழம்பித் தவித்தது பிரேம்குமாருக்கு.
கதையின் ஸ்வாரஸ்யம் குன்றாமல், காட்சிகள் போரடிக்காமல்
இருக்கின்றதா என்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முழு லாயக்கானவன் அத்யந்த
நண்பன் திவாகரன்தான். அவன்தான் ஆரம்பம் முதல் அவன் கூடவே இருப்பவன். தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாய் இருந்தவன். சில
தோல்விகளுக்கான சரியான காரணங்களைக் கண்டு பிடித்தவன். சினி உலகைக் கரைத்துக் குடித்தவன். அடுத்தடுத்த படங்களில் அந்தக் குறைகளை முழுமையாக
விரட்டியடித்தவன். அவனுக்குத் தன் மீது இருக்கும் அக்கறை இதுவரை வேறு எவனுக்கும் இருந்ததில்லை.
என் வெற்றியே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன். அதற்காகக் கடுமையாகத் தன் உழைப்பைச்
செலுத்தியவன்.
ஆனால் விதி அவனைத் தன்னிடமிருந்து எப்படியோ பிரித்து
விட்டது. உற்ற நண்பனைச் சந்தேகிக்கலாமா? எதெல்லாம் கூடாதோ அதையெல்லாம் செய்தேன் நான்.
வெற்றியின் எக்களிப்பில் போதை ஏறிப் போய்க் கிடந்தேன். அவனைக் கை நீட்டி அடிக்கும்
அளவுக்கு வந்தேன். அந்தளவுக்கு ஏன் என் புத்தி சிதறியது? எதற்காக அப்படி நிதானமில்லாமல்
போனது. தேவையில்லாமல் அவனை விரட்டியாயிற்று. விரட்டுவதென்ன? அவனாகவேதானே போய்விட்டான்?
மானஸ்தன்
அவன். உண்மையாய் உழைத்தவனைச் சந்தேகித்த பாவி நான். அதற்குப் பின் அவன் என்ன ஆனான்
என்று கூட இன்றுவரை கண்டு கொள்ளவேயில்லையே? டைரக்டர் சித்தண்ணாவிடம் இருப்பதாக யாரோ
சொன்னது காதுக்கு வந்ததுதான். ஏன் திரும்ப இழுக்க மனம் விழையவில்லை? அவர் எவ்வளவு திறமையான
இயக்குநர். போய்ச் சேர்ந்த இடம் பொன்னான இடம். அவன் திறமைக்கு ஏற்ற இடத்தில்தான் போய்
நின்றிருக்கிறான். இப்பொழுது அழைத்தால் வருவானா?
கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டில் விட்டதுபோல் ஆகிப்போயிற்றே. ஒரு உற்ற நண்பனை இப்படியா
பகைத்துக் கொள்வது, காலக் கேடு என்னை அப்படிச் செய்ய வைத்து விட்டதா? உச்சியில் நின்று
கூத்தாடிய என் புகழ் போதை. எல்லாம் இந்த நந்தினியால் வந்தது. அவள் தந்த மயக்கம். என்னை
ஏணியாய்ப் பயன்படுத்திக் கொள்ள அவள் செய்த ரகசிய உத்தி. அவள் மட்டும் என்னுடைய முந்தைய இரண்டு படத்தில்
நடிக்க ஒப்புக் கொண்டிருந்தால் இந்த அளவுக்கான தோல்வியை நான் சந்தித்திருக்க நேர்ந்திருக்குமா?
கண்களை மூடி அமர்ந்திருந்தான் பிரேம்.
( 13 )
டைரக்டர்
நவீன் பேச வார்த்தை வராமல் காத்திருந்தார். பிரேமின் மனது அன்று என்னவோ ஒரே குழப்பத்தில்
கிடந்தது. சரி செய்யவே முடியாமல் தவித்தான். நந்தினியை நினைக்க நினைக்க வயிறு பற்றியெறிந்தது.
நான் அடையாளம் காண்பிச்ச நாயி? என்னையே போட்டுப் பார்த்திட்டாளே? அவ ஜோடி இல்லாம எத்தனை
தோல்விகள் எனக்கு? என் பின்னாடியே சுத்தின ப்ரொட்யூஸர்ஸ் எல்லாம் காணாமப் போயிட்டாங்களே?என்
சொந்தப் படத்துக்கே என் கூட நின்ன பார்ட்டனர்சும் மறுத்துட்டாங்களே? இந்தப் படத்துலயும்
எனக்கு இன்னும் நம்பிக்கை வர மாட்டேங்குதே? என்கிட்ட இருக்கிற மீதிச் சொத்தை முழுங்கிறதுக்குத்தான்
இவங்கல்லாம் என் கூடத் திரியறாங்களா? எது இருக்கு எங்கிட்ட, எல்லாத்தையும்தான் அடகு
வச்சாச்சே…? அப்போ இவுங்கல்லாம் என் மூலமா எதை எதிர்பார்க்கிறாங்க? ஆத்மார்த்தமா என்
வெற்றிக்குப் பாடுபடுவாங்களா? இல்ல காசுக்காக ஒண்டிக்கிட்டுக் கிடக்காங்களா? எல்லாரும் வெறும் வேஷதாரிங்களா? நான் படத்துலதான்
வேஷம் போட்டேன். இவுங்க நிஜ வாழ்க்கைலல்ல வேஷம் போட்டு என்னை ஏமாத்தறாங்க? எவ்வளவோ
துட்டு கரைஞ்சு போச்சே…இனி பாதில நிறுத்த முடியுமா? அப்படி நிறுத்தினா எனக்குத்தானே
நஷ்டம். அவமானம். இந்த நஷ்டத்தை சரி பண்ண முடியுமா
என்னால? கைவசம் படமே இல்லையே? …எப்பவும் அக்ரிமென்ட் போட்டமேனிக்கே இருப்பேனே? அது
நண்பன் திவா இருந்தபோது கிடைச்ச அதிர்ஷ்டம். அவன் கைராசி. . அவனும் கழன்டுக்கிட்டான்னா?
கூடவே என் அதிர்ஷ்டத்தையும் பிடுங்கிட்டுப் போயிட்டானா? - நினைக்க நினைக்க அவன் உடம்பு மொத்தமும் பதற்றத்துக்குள்ளானது.
மூளையின் கொதி நிலை ஆவியாய்ப் பிரிந்து தலை உச்சியில் சூடாய் வெளியேறுவது போலான பிரமை.
இந்த
பாரும்மா, காட்சி நேச்சுரலா இருக்கணும்னா கொஞ்சம்
பொறுத்துக்கத்தான் வேணும். கை பலமாத்தான் இறங்கும். அது தெரியாதபடி நேக்கா விலகிக்க
வேண்டியது உன் சாமர்த்தியம்…ஆனா சரியான அடின்னு கண்டிப்பாத் தெரிஞ்சாகணும்…அது தெரியாத
அளவுக்கு விலகிடாதே…ஓ.கே….
நவீன் கருத்தாகத்தான் அறிவுறுத்தியிருந்தார் அந்தப்
புதுப் பெண்ணிடம். அதைப்போடுங்கள் என்று பிரேம்தான்
சொல்லியிருந்தான். மலையாளத்தில் அந்தப் பெண் அறிமுகமாகி இரண்டு படங்கள் வெற்றிகரமாய்ப்
போயிருந்தன. சூட்டோடு சூடாக அதை எப்படியாவது இங்கு இழுத்து வந்து நிற்க வைத்து விட
வேண்டும் என்று மனதில் வன்மமான எண்ணம் தோன்றி பலநாளாய் பிரேமை உறுத்திக் கொண்டேயிருந்தது.
நினைத்தாற்போல் அந்தப் ப்ராஜக்ட் அமைந்தபோது தனக்கு ஜோடியாகவே கூட்டி வந்து நிறுத்தியிருந்தான்.
அப்படித்தானே நந்தினியையும் அழைத்து வந்தது? அவள் அதிர்ஷ்டம், அவள் எங்கோ போய் விட்டாள்.
இன்று என்னையே உதைக்கிறாள். இவளை வைத்து அவளைத் தோற்கடிக்க வேண்டும். காணாமல் போகச்
செய்ய வேண்டும். அதுவரை இந்த மனசு பொறுக்குமா? யாருமில்லாத அநாதைப் பிணம் அவள். அவளுக்கா
இந்தத் திமிறு? காலடியில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டியவள். இத்தனை வருஷத்திற்கு என்று ஒப்பந்தம் போட்டிருந்தேனேயானால்
இப்படி வாலாட்டுவாளா? ஃபீல்டுக்கு வந்தே சில வருஷம்தான் ஆகிறது. அதற்குள் எத்தனை படங்கள்
தாண்டி விட்டாள். திறந்து போட்டால் எவன்தான் வேண்டாம் என்பான்? கவர்ச்சியைப் பொழிகிறாள்.
கிறங்கிக் கிடக்கிறார்கள். அதுதானே? நடிப்புத்தானே நிற்க வைக்கும். திறமைதானே நிலை
நிறுத்தும். எத்தனை நாளைக்கு இந்தப் பகட்டு? அது கிடக்கட்டும்.
ஆனால் இந்த இடைக்காலத்தில் என் மார்க்கெட் ஏனிப்படிச்
சரிந்து போனது? அவளுக்கு முன்பே சினி ஃபீல்டைக் கரைத்துக் குடித்தவன் நான். யாரும்
அசைக்க முடியாமல் மலையாய் நின்றவன். நான் ஏன் இப்படி ஆனேன்? என்னையே அசைத்துப் பார்த்து
விட்டாளே….? அவள் என்னோடு நடிக்காமல் போன பிற்பாடுதானே
இந்த வீழ்ச்சி. என்னை மறுத்தபின்புதானே அவள் மேலே போனாள். மேலே போவதற்குத்தான் அப்படி
மறுத்தாளா? ஏன் என்னால் அவளைக் கட்டிப்போட முடியாமல் போனது. எந்தக் கவர்ச்சியைக் காட்டி
அவள் மேலே ஏறினாளோ, அதையே என் மேலேயும் ஏற்றிவிட்டு ஏமாற்றி விட்டாளே…படு பாதகி அவள்…விஷ
நாகம்…..படமெடுத்து ஆடி ஆடி என்னை மயக்கி விட்டாள்.
பேக் அப்…..என்று அவன் அலறிய போது மொத்த
யூனிட்டும் பதை பதைப்போடு திரும்பிப் பார்த்தது.
( 14 )
”என்னங்க…இந்தாளுக்குக்
கிறுக்குப் பிடிச்சிருச்சா? திடீர்னு பேக்அப்ங்கிறான்…” – தூரத்தில் கூடியிருந்த உதவி
இயக்குநர்களில் ஒருவன் அங்கலாய்க்க, மற்றவர்கள் பிரேமையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்.
காதில் விழுந்திருக்குமோ என்கிற பயம் அவர்கள் கண்களில் தெரிந்தது. பெரிய ப்ராஜக்ட்.
கைவிட்டுப் போயிடக் கூடாது என்கிற ஏக்கம் அவர்களுக்கு.
பாதிப் படத்தை முடிச்சிட்டுத்தான் நகரணும்னு நேத்து
சொன்னாரு…இன்னும் ரேக்ளா ரேசு, ஃபைட்டு சீன்ஸ் எடுக்கலே…அப்புறம் மலையடிவாரத்துல ஒரு
டூயட் வேறே இருக்கு…அந்தப் பொண்ணை வேறே இதுக்காகவே ரூம் போட்டு இருத்தி வச்சிருக்காரு…எதுவுமே
முடியாம அதுக்குள்ளே பேக் அப் பண்ணினா எப்டி?
நேத்துக் கூட ராம்ஜி சேட்டுக்கிட்ட அக்ரிமென்ட்
போட்டதா சொன்னாங்கப்பா… சேத்துப்பட்டு பங்களாவை அடகு வச்சிட்டாராம். ரெண்டுல ஒண்ணு
பார்த்துடறதுன்னு பேசிட்டிருந்த ஆளுதான், இப்ப என்ன வந்ததுன்னு தெரில…”
எப்போ எது நடக்கும்னு சொல்ல முடிலப்பா…நாறப் பொழப்பு
நம்ம பொழப்பு. இன்னும் ரெண்டு மூணு மாசத்த ஓட்டிடலாம்னு கற்பனைல இருந்தா அதுக்கே பங்கம்
வந்திரும் போலிக்கே?
ஆனாலும் அந்த டைரக்டர் ரொம்பவும் சாமர்த்தியமானவன்.
ஒண்ணும் பிரச்னையில்லண்ணே…நாளைக்குப் பார்த்துக்கிடுவோம்….-
பிரேமைக் கைத்தாங்கலாய் அவர்கள் அழைத்து வந்து
அறையில் விட்டது கூட அவனுக்குத் தெரியாது. தான் எப்பொழுது ஊற்றினோம். யூனிட்டில் வைத்து
என்றுமே அதைச் செய்ததேயில்லையே…? பான்ட் பாக்கெட்டில் இருந்த அந்த உயர்ரக விஸ்கியை
எடுத்து தூரமாய் வீசினான் பிரேம். அது வா…வா… என்பது போல் பரந்து கிடந்த அந்தப் பஞ்சு
மெத்தையின் தலையணைக்கடியில் போய் பவ்யமாய் உட்கார்ந்து கொண்டது. உனக்கிருக்கிற நன்றி கூட அவளுக்கில்லையே….!
போதையில் பாட்டிலைப் பார்த்துப் புலம்பி அதை மீண்டும் கையிலெடுத்து
முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சினான். மனதுக்குள் இருக்கும் பாரத்திற்கு நினைவே இல்லாமல்
கிடக்கலாம் போலிருக்கிறது. இந்த அளவுக்கான வீழ்ச்சியை எதிர்பார்க்கவேயில்லை. சொல்லி
அழுவதற்கு ஆப்த நண்பனில்லை. அவனையாவது கூட வைத்துக் கொண்டேனா? உயிர் நண்பன் அவன். ஆனாலும்
எவ்வளவுதான் அவமானங்களைப் பொறுத்துக் கொள்வான். தனிமையிலாவது அவனைத் திட்டியிருக்கலாம்.
கோபத்தைக் காண்பித்திருக்கலாம். யூனிட்டில் எல்லோர் முன்னிலையிலும் அவனை இகழ்ந்தேனே…எப்படிப்
பொறுப்பான்? அனைவரையும் ஆட்டி வைக்கும் அவன் அவர்கள் முன் அவமானப்படுவதை ஏற்றுக் கொள்வானா?
போய் விட்டான். போயே விட்டான். என்னை உதறித் தள்ளி அவள் பிரிந்தாள். கூடவே அவனும் பிரிந்து
விட்டான். கெட்ட நேரம் வந்தால் எல்லாமும்தான் நடக்கும் போலும்.
இந்த இயக்குநர் நவீன், தான் சொல்வதை மட்டும் செய்கிறான்.
அப்படியே செய்து விடுகிறான். வேறு மறு பேச்சே இல்லை. இல்லண்ணே நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க…
நாளைக்குப் பார்த்துக்கலாம் என்று ஒத்திப் போடக் கூடாதா? பேக் அப் சொன்னால் உடனேயேவா
மூட்டையைக் கட்டி விடுவது? கலைந்த கூடு போல் கணத்தில் பறந்து விடுகிறார்களே? என்னையே
மதித்து நின்ற கூட்டம், என் அடுத்த வார்த்தைக்காகக் காத்திருந்த கும்பல், இப்போது என்
வசம் இல்லை. என் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் நிற்கவில்லை. கலைந்த சித்திரம் ஆகி விட்டதா
என் வாழ்க்கை? திட்டமிட்ட என் நியமங்கள் என்ன ஆயின? நில் என்றால் நில், செல் என்றால்
செல் என்கிற கட்டுப்பாடுகள் எப்படிச் சிதறின?
”காலைல ஆறு மணிக்கு ஷூட்டிங் வருவாரு. சாயங்காலம்
ஆறு, தவறினா ஏழுக்கெல்லாம் அவரை விட்டிடணும்…ஏழரைக்குள்ள அவர் வீட்டுல இருக்கணும்.
இதுக்கு சம்மதிச்சு அக்ரிமென்ட்…என்ன சொல்றீங்க?
என் உடல் நலத்தில் எப்படி அக்கறை செலுத்தினாள்
அம்மா. அவள் நம்பிக்கையாய்ச் சொன்னதினால்தானே திவாகரையே எனக்குப் பி.ஏ. வாக வைத்தேன்.
உன் நண்பன் மேலே உனக்கே நம்பிக்கை இல்ல போலிருக்கு…அதுக்காகத்தான் அம்மாவோட ரெக்கமன்டேஷன் வேண்டிர்க்கு…என்று தமாஷாகச் சொன்னானே….இன்று
எல்லாவற்றையும் உதறி விட்டு இப்படி நிர்க்கதியாய் நிற்பதற்கு யார் காரணம்? அந்த நந்தினி
மயக்கிய வலையில் வீழ்ந்ததுதான் காரணமா?
தன் செழுமையான உடம்பை வைத்து என்னை ஆக்ரமித்து விட்ட காமப் பேய்
அவள். எங்கோ சோற்றுக்கே திண்டாடிக் கொண்டிருந்தவளுக்கு, கனவிலும் கிட்டாத வாழ்க்கை
தட்டுப் பட்டபோது ஏற்பட்ட கண்மூடித்தனமான வெறி. தன் முந்தானைக்குள் என்னை முடிந்து
கொண்டு எனக்கே இன்று டேக்கா கொடுத்துவிட்டவள். என் மீது உண்மையான அக்கறை கொண்ட முறைப்
பெண் சாம்பவியை நம்பாமல் இவளின் பிருஷ்டங்களே கதி என்று கிடந்ததுதான் நான் செய்த மகத்தான
பிழை. என் பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட துர் தேவதை அவள். அவளின் உள்ளார்ந்த
குறிக்கோள் அறியாமல் முயங்கிக் கிடந்தேன் அவள் மடியில். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்.
தன் தோல்விக்காக மனமுடைந்து தலையணையில் முகம்
புதைத்து அழுது கொண்டிருக்கிறான் பிரேம். அதன் உச்சம் அவனை எங்கே கொண்டு விடப் போகிறதோ?
சற்றே தன் நினைவு வந்தபோது, தடுமாறி எழுந்து வந்து
ஜன்னல் வழி மலைச்சாரல் பகுதியை நோக்குகிறான். வெற்றிடம்தான் கண்ணில் படுகிறது. காக்காய்க்
கூட்டம் பறந்து விட்டது. அடுத்த முறை புத்தி தெளிந்து அந்த இடம் மறுபடியும் தேவைப்
பட்டால் மீண்டும் அத்தனை பேரையும் அங்கே அழைத்து வந்தாக வேண்டும். இப்போது கிளப்பியதற்கு
எது காரணமில்லையோ அதுபோலவே மறுபடியும் அங்கே கூட்டுவதற்கும் வலுவான காரணமின்றித்தான்
அழைத்துவர வேண்டியிருக்கும். சந்தேகிப்பார்கள்.
என்னய்யா, இந்தாளு இப்டி அலைக்கழிக்கிறான்? என் நிலைமை இன்று இதுதான்.
மதிப்பிழந்த நாட்கள். வெறித்தவனாய் வெற்றிடத்தை நோக்குகிறான் பிரேம். மொத்த யூனிட்டும்
இப்போது சென்னையை அடைந்திருக்கும். ஒரு மறு யோசனையாவது எவனாவது சொன்னானா? எனக்கென்ன
என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள். எவன் பணத்தை யார் வாரி இறைப்பது? மனம் உடைந்தது பிரேமுக்கு.
தேற்றிக் கொள்ள என்ன செய்வது என்று புரியாமல் தவியாய்த் தவித்தான் அவன். ஆனாது ஆயிற்று.
பார்ப்போம் என்று மட்டும் தனக்குள் சொல்லிக் கொண்டான். சற்றே நிதானத்திற்கு வந்தனாய்
உணர்ந்தான்.
அந்த
முறை சென்னை வந்தடைந்த போது கிஞ்சித்தும் நிறைவே இல்லை பிரேமுக்கு. பாதிப் படத்தை முடித்து
விட வேண்டும் என்று போனவன் சில காட்சிகளோடு திரும்பியிருந்ததும், அந்தப் பெண் ஜீவனா
கேரளாவுக்குப் போய்விட்டதும், டைரக்டர் சொல்லித்தான் இவனுக்கே தெரிய வந்தது. அதை அறிமுகம்
என்று இழுத்து வந்ததே பெரிய விஷயம். அந்த அப்பன்காரன் எந்நேரமும் ஆந்தையாய் உட்கார்ந்திருக்கிறான்.
பத்திரிகையாளர் அறிமுகக் கூட்டம் என்றபோது கூட இப்போது வேண்டாம் என்று சொன்னான் அந்த
ஆள்? என்ன பொருள் அதற்கு? வேறு ஏதேனும் திட்டம் இருக்குமோ? அல்லது தன் மீது நம்பிக்கை
வரவில்லையா? தனது சமீபத்திய நிலையைத் துருவியிருப்பானோ? அதுதான் அப்படி நினைக்க வைத்துவிட்டதோ?
நானாய் ஏன் இப்படியெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டும்? தன்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே….சொல்லும்
நிலையிலா தான் இருந்தோம்? அடுத்தாற்போல் ஷூட்டிங்கிற்குத் தவறாமல் வந்தால் சரி. அதுதான்
இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லையே?
மெட்ராசுக்கு வந்தாச்சுல்ல…போய் அவுங்கவுங்க வேலையைப்
பாருங்க…அடுத்த ஷெட்யூல் எப்பன்னு பின்னாடி சொல்றேன்…. – முகத்தில் ஈயாடவில்லையே யாருக்கும்?
காலையில் பொழுது விடிந்ததுமே வந்து நின்று விட்டார்களே? எவனாவது ஒருத்தன் ஃபோனில் கேட்டுக்
கொண்டால் போதாதா? மொத்தப் பேருமா இப்படிக் கூட்டமாய் வந்து வரிசை போட வேண்டும்? ஏண்டா
தலையைக் கொடுத்தோம் என்று நினைக்கிறார்களோ? கழன்று கொள்வார்களோ? பழகிய பழக்கத்தில்
அழைத்தாயிற்று. வந்தாயிற்று. அவர்களுக்குமே நம்பிக்கை இல்லை போல்தான் தெரிகிறது. உறுதிப்
படுத்திக் கொள்ளும் ஆர்வம். அவனவனுக்கு அவனவன் பிழைப்பு.
நம்பிக்கை இருந்திருந்தால்தான் எக்ரிமென்ட் போட்ருவமேண்ணே
என்று அனத்தியிருப்பார்களே….ரெண்டு ஷெட்யூல் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுப் பிடிக்கிறார்களா?
எல்லாம் என் நேரம்….என் மீது இத்தனை அவ நம்பிக்கை விழ, என் தோல்விகள்தான் காரணம். இந்தத்
தொடர்ச்சியான தோல்விகளுக்கு அவள் காரணம். அதன் மூலமாய் பிரபலமாய் உள்ள வேறு சிலரும்
என்னை வேண்டாம் என்று சொல்ல வைத்தது இன்னொரு காரணம். எல்லாச் சீரழிவுகளுக்கும் ஆதாரம்
அந்த மாயப் பிசாசு. அவளின் மாயத் தோற்றத்தில் என்னைச் சீரழித்துவிட்டாள். அந்தக் கிடங்கில்
வீழ்ந்து அழிந்துபட்டேன் நான். இன்று தன்னந்தனியனாய், ஒற்றை மரமாய்த் தனித்து நிற்கிறேன்.
என்ன அவலம் இது? ஒரு மனிதனுக்கு இத்தனை வேகமான ஏற்றமும் வேண்டாம். இத்தனை புயலான இறக்கமும்
வேண்டாம். என் தோல்விகளே என்னை முடங்கச் செய்து விட்டனவா? என் முயற்சிகளை வீணடித்துவிட்டனவா?
உடம்பில் வெறி ஏறியது. கண்கள் ஜிவ்வென்று சிவப்பேறின. தலை வெடித்து
விடும்போல் கொதித்தது. கைகளும், கால் நரம்புகளும் முறுக்கேறி நின்றன. இருக்கும் மதர்ப்புக்கு
என்னமாவது செய்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் இந்த ராட்ச்சசம் அடங்கும். புயலாய் எழுந்தான்
பிரேம். இரண்டில் ஒன்று. இப்போது இதுதான் அவன் முடிவு. என்னை ஒருவனும் அல்லது ஒருத்தியும்
ஏமாற்றியதாக, நான் ஏமாந்ததாக சரித்திரம் முடிவடையக் கூடாது. என் கதைக்கு நானே முதலும்
முடிவும். எல்லாமும் என்னாலேயே துவக்கப்பட்டு, என்னாலேயே முடிக்கப்படவும் வேண்டும்.
அதுதான் என் வீழாத சரித்திரம். எழுந்து நின்று கைகளை அகல விரித்து ஓங்காரமாய்த் தனக்குள்
சொல்லிக் கொண்டான் பிரேம். அடுத்த சில நாட்களில், அவன் மனம் எதிர்பாராத ஒரு தீவிர முடிவுக்கு
வந்திருந்ததைத் தவிர்க்கவே முடியவில்லை அவனால். விளைவுகளைப்பற்றி சிந்திக்காத மனம்
குறிப்பிட்ட புள்ளியில் வெறியோடு நிலை குத்தியிருந்தது.
(
15 )
கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்… -அந்த நள்ளிரவில்
சவமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நந்தினி பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங்
முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத
நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது. வாட்ச்மேனை அழைக்க நினைத்தாள். மனைவிக்கு உடம்பு
சரியில்லையென்று அவன் போயிருந்தது நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இப்போது கதவைத்
திறப்பதா வேண்டாமா? வாழ்க்கையே தனிமைதான்.
அதுவாகவே அப்படி அமைந்து போனதும் இப்போது பழகிப் போய்த்தான் கிடக்கிறது. இனிமேல் எவனைத் துணை தேடுவது? எந்தத் துணையை நம்புவது?
கிர்ர்ர்ர்ர்….. காது ஜவ்வு கிழிவது போல் அலறியது
அது. வீடே ஆட்டம் காணுவதுபோல் பயம் எழுந்தது.
“யாரது?“ கேட்டவாறே ஓடிப்போய் மாடிப்படி லைட்டைப்
போட்டவள் தயங்கியவாறே இறங்கினாள். தாள முடியாத அயர்ச்சியில் உடம்பு கனத்தது. அவளையறியாமல்
தள்ளாடியது தேகம்.
யாருன்னு சொல்றீங்களா? – மீண்டும் கேட்டுவிட்டுக்
கதவை நெருங்கினாள். அப்போதும் திறக்கத்தான் வேண்டுமா என்று பயம் வந்தது. வாட்ச்மேனை
அனுப்பியது மகாத் தவறு. யாரையேனும் பதிலுக்கு வைத்துவிட்டுப் போ என்று சொல்லியிருக்க
வேண்டும். எப்பொழுதும் அவன் பெண்டாட்டி இருப்பாள்தான். உடம்பு முடியாமல் போனது தனது
கெட்ட நேரமோ? உற்றம், சுற்றம் என்று தனக்கும் நாலு பேர் இருந்திருந்தால் இந்த நிலை
வருமா? வெறும் அநாதைப் பிணம் நான். வந்த வாழ்வு தங்குமா என்பதுபோல் வாழ்க்கை பயமுறுத்திக்
கொண்டேயிருக்கிறது. துணையின்றி இருப்பது எத்தனை பாதுகாப்பற்றது? யாரையேனும் இணைத்துக்
கொள்ள முயன்றாலும் எல்லோரும் விலகிப் போகிறார்கள். ஏன்? எனது எந்தக் கதை அவர்களை அப்படிப்
பயமுறுத்துகிறது? நினைத்த போது சர்வாங்கமும் நடுங்கி ஒடுங்கியது அவளுக்கு.
கதவைத் திற நந்தினி…நான்தான்…. சத்தம் தீர்க்கமாய்
வந்தது.
குரலைக்
கேட்டவுடன் மேலும் பதற்றமடைந்தாள். பிரேம்.
இவன் எங்கே இந்நேரத்தில்? ஒரு நாளும் இப்படி வந்ததில்லையே? உடம்பெல்லாம் மேலும் வேகமாய்
நடுங்க ஆரம்பித்தது அவளுக்கு. என்றோ ஒரு முறை என் வீட்டுப் பக்கம் வந்தவன். இதுதான்
மறுமுறை. எப்படி இத்தனை ஞாபகத்தோடு இந்த வேளையில்?
நீங்களா? நீங்க அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கிறதால்ல
சொன்னாங்க…? – வார்த்தைகள் உளறியது. என்ன செய்கிறோம் என்கிற நிதானமின்றித் தன்னையறியாமல் கதவைத் திறந்து விட்டாள். சடாரென்று
உள்ளே பாய்ந்தான் பிரேம்.
போகலே…………..அந்த மாதிரி ஒரு புரளியைக் கிளப்பினேன்…
- சொல்லியவாறே தடுமாறினான் பிரேம்குமார்.
கால்கள் பூமியில் பாவ மறுத்தன. அவனைப்பற்றி அவள் அறிந்த செய்தியை
அவன் இப்போது புரளி என்கிறான். எதற்காக? என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். இங்கே, இந்த
நேரத்தில் வந்து இதை ஏன் என்னிடம் உளறுகிறான்?
உன்னைத் தீர்த்துக்கட்டுறதுக்காகத்தான் இப்டி
ஒரு நாடகம். என் மீது இப்போ எவனுக்கும் கவனமில்லை..அதுதான் எனக்கு இப்போ ப்ளஸ். – சொல்லிவிட்டுக்
கெக்கலியிட்டுச் சிரித்தான் பிரேம். அப்படி ஒரு சிரிப்பை அவன் நடிப்பிற்காகக் கூடச்
செய்ததில்லை. அதுவே அத்தனை பயப்படுத்தியது அவளை.
அவனின் வழக்கமான, மென்மையான, மயக்கும் சிரிப்பல்ல அது. மூளை அவன்
வசம் இல்லைதான். நிதானமாய்ப் பேசுவதுபோல் நினைத்து
உளறுகிறான். முட்டக் குடித்திருக்கிறான். ஆனாலும் அதோடு வந்திருக்கிறான். அதுதான் ஆச்சரியம்.
இவனை என்னமாவது செய்து அப்படியே படுக்கையில் வீழ்த்தி விட வேண்டியதுதான்.
உள்ளேயே விட்டிருக்கக் கூடாது. விட்டாயிற்று. வேண்டாத வேளையில் வந்திருக்கிறான். அதுவும்
கொஞ்சமும் நிதானமில்லாமல். இந்தக் குடிதான் இவனைச் சீரழித்திருக்கிறது. ஆளையே மாற்றியிருக்கிறது.
திறமைகளை நசிந்து போகச் செய்திருக்கிறது. ஊக்கத்தைக் கரைத்திருக்கிறது. அத்தோடு முடங்கிக்
கிடக்காமல் இங்கே பிரசன்னம் என்றால் காரணமில்லாமல் இருக்காது.
நந்தினியின் மனம் பயப்பிராந்தியில் சிக்கியது. அடக் கடவுளே…இந்நேரம்
பார்த்து, ஒருவரும் இல்லாமல் போயினரே….! எப்படித் தப்பிப்பது இவனிடமிருந்து? மூளை மின்னலாய்
வேலை செய்ய ஆரம்பித்தது அவளுக்கு.
ஆமாண்டீ…ஆரம்பத்துல நாலு காசுக்கு ஓட்டல்ல உடம்பக்
காண்பிச்சு டான்ஸ் ஆடிட்டிருந்த உன்னைக் கொண்டுபோய் பெரிய ஸ்டார் ஆக்கினேன் பாரு…நீ
எனக்குக் காட்டின நன்றி இருக்கே…அதுக்கு ஏதாச்சும் பரிசு தர வேண்டாமா? அதுக்காகத்தான்
வந்திருக்கேன்…..
நீங்க என்ன சொல்றீங்க பிரேம்? எதுக்காக எப்பவோ
நடந்ததை இப்போ ஞாபகப்படுத்துறீங்க?…எதுவானாலும் சரி…காலைல பேசிக்கலாம்….இப்போ நீங்க
நிதானத்துல இல்லை…அதோ அந்த ரூம்ல போய்ப் படுங்க….நல்லாத் தூங்குங்க…காலைல பேசுவோம்
– பதற்றத்தில் என்னத்தையோ சொன்னாள் நந்தினி.
அவள் மனம் ரிவால்வாரை எங்கே வைத்தோம் என்று தேட ஆரம்பித்திருந்தது.
இதுவரை பயன்படுத்தியதில்லை. ஒரு பாதுகாப்பிற்குத்தான். இப்போதும் அப்படித்தான் யூஸ்
பண்ண வேண்டும். அதற்காக அவனைச் சுடவா முடியும்? இதற்காகவா இத்தனை காலம் வீறு கொண்டு
எழுந்தது? இவ்வளவு சம்பாதித்தது இப்படி வெறுமே அழிந்து போவதற்கா?
போதும் என்று எல்லா பரபரப்பையும் உதறி, ஆற, அமர எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டாமா?
இந்த நேரத்தில் வந்திருக்கிறானே சனியன்? கையிலெடுத்தால் அவன் அதைப் பிடுங்க எவ்வளவு
நேரம் ஆகும்? சில கணங்கள் போதுமே…அவனை எதிர்த்து நிற்கும் துணிவு, திறன் தனக்கு இருக்கிறதா? வெறியோடல்லவா வந்திருக்கிறான்.
அழகைக் காட்டி வீழ்த்தவும் முடியாதே?
ஏய்…நிறுத்துடி….உன் வீட்டுல தூங்கிறதுக்கா நா வந்திருக்கேன்? என்ன
பசப்புற? அதெல்லாம் நான் தெளிஞ்சு ரொம்ப நாளாச்சு….அதனாலதான் ஒரு முடிவோட வந்திருக்கேன்….
முடிவா? என்ன முடிவு பிரேம்? என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?
நா ரெடி. அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்றேன். நான் எப்பவும் உங்களோட நந்தினிதான்.
நீங்கதான் என்னைத் தப்பா நினைச்சு விலகிட்டீங்க….உங்க கூட இருந்தவங்க, உங்களுக்கு நல்லது
சொல்லலை…அவுங்க பேச்சைக் கேட்டு வீணாப் போயிட்டீங்க….என் கழுத்துல உங்க கையால தாலி
ஏற நான் எப்பவும் தயார்….அது என் பாக்கியம் –
ரொம்பவும் பேசுகிறோமோ என்ற உறுத்தலிலேயே அப்போதைக்கு அவனை எப்படியும்
சமாளித்தாக வேண்டுமே என்று எதையோ உளறிக் கொட்டினாள் நந்தினி. போதையில் அவன் மண்டையில்
எதுவும் ஏறாது என்கிற உறுதி. மேலும் மேலும் உளறத்தான் செய்தான் பிரேம்.
என்னடி, வசனமா பேசுற? உன்னோட மார்க்கட் டல்லாயிடக்
கூடாதுன்னு என் படத்திலெல்லாம் உன்னை சிபாரிசு பண்ணினேனே… அது எதுக்கு? என் புகழை உயர்த்திக்கவா?
நீ உச்சிக்குப் போகணும்னுதானே? அப்பல்லாம் உன்னைப் புரிஞ்சிக்கலடி…இப்போ நான் ஓய்ஞ்சு
போன வேளைல எனக்குக் கிடைக்கிற ஒண்ணு ரெண்டு சான்சையும் கெடுக்கிறியே…ஏன்? என்கூட நடிச்சா
குடி முழுகிடுமா உனக்கு? நடிக்க ஒத்துக்கிற சிலரையும் வேண்டாம்ங்கிறியாமே…அந்த வசீகரன
ரெக்கமன்ட் பண்றியாமே? இவ்வளவும் பண்ணிட்டு, இப்போ பசப்பவா செய்றே? தப்பிக்கிறதுக்கு
கண்டபடி உளர்றே? மனசுல பயம் வந்திடுச்சோ…இப்டி மாட்டிக்கிட்டமேன்னு….உறிஉற்உறிஉற்உறி….
நா கெடுத்தனா? உங்க வாய்ப்பை நான் ஏன் கெடுக்கணும்?எதுக்காக
அப்டிச் செய்யணும்? எப்படி உங்க சான்சை நான் கெடுக்க முடியும்? யார் கேட்பாங்க? நீங்க
எவர் க்ரீன் உறீரோ…உங்களுக்குன்னு ஒரு மவுசு இருக்கு…புகழ் இருக்கு…உங்களுக்குன்னு
ஒரு கூட்டம் என்னைக்கும் உங்க பின்னாடி இருக்கு. .நீங்க அறிமுகப் படுத்தின ஆளு நா…மொத்த
ஃபீல்டுக்குமே தெரியும்…யாராவது அப்டிச் சொன்னா கேட்பாங்களா? நம்புவாங்களா? நீங்களா
எதையாச்சும் கற்பனை பண்ணிக்குவீங்க போலிருக்கு…எனக்குன்னு வர்றதைச் செய்திட்டிருக்கேன்…அதை
எப்படி மாட்டேங்க முடியும்…வசீகரனை நான் பேர் சொல்லலை…அவங்களா செலக்ட் பண்றாங்க…நான்
என்ன பண்ண முடியும்? அவனுக்கும் வியாபாரம் ஆகுதே…! ஆளை மாத்துன்னு நான் சொல்ல முடியுமா?
கதாநாயக நடிகருக்குத்தானே எங்களை விட மவுசு….உங்களுக்குத் தெரியாததா?
உன் பேரத்தானடீ சொல்றாங்க எல்லாரும்….அன்னைக்கு
என் கூட நடிக்கிறதுல ஒரு இன்பம் இருக்கு…த்ரில் இருக்கு…நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குது…அது
இதுன்னல்லாம் பேட்டி கொடுத்த நீ…பிரேம்குமாரைப் போட்டா நடிக்க மாட்டேன்னு சொல்றியாமே?
ரேட்டைக் கூட்டிக் கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்கிறியாமே? அவ்வளவு பெரிய ஸ்டாரா நீ?
பிடிவாதம் பிடிச்சு எனக்கு வர்ற சான்ஸையெல்லாம்
கெடுக்க ஆரம்பிச்சிட்டியே…உன்னைச் சும்மா விடலாமா?
பிரேம்… வேண்டாம்…இப்போ நீ நிதானத்துல இல்லை…பிறகு
நடந்ததுக்காக வருத்தப்படுவே…என்னை ஒண்ணும் செஞ்சிடாதே… போலீஸ்ல மாட்டிக்குவே…சொன்னாக்
கேளு….பயந்து போய் ஒதுங்க ஆரம்பித்தாள் நந்தினி. எப்படி அவனை ஒருமையில் பேசினோம் என்று
அவளுக்கே ஆச்சரியம். பதட்டத்தில் வந்து விட்டதோ?
ஏதோ விபரீதம் நடந்து விடுமோ என்று அவள் உள்மனம் எச்சரிக்க ஆரம்பித்தது.
கதவைத் திறந்து வெளியே ஓடி விடலாமாவென நினைத்தாள். நிச்சயம் முடியாது. கிராதகன் அவன்.
என்னை அப்படியே கோழிக் குஞ்சைப் போல் அமுக்கி விடுவான். காதல் காட்சியிலேயே காமத்தைக்
காண்பித்தவன். படப்பிடிப்புத் தளத்திலேயே படமெடுத்து ஆடியவன். வரம்பு மீறியவன். இந்த
அத்வானத் தனிமையிலே விடவா போகிறான்?
பயமுறுத்துறியா…உனக்கு வழி காண்பிச்ச எனக்கே புத்தி
சொல்றியா…? அவுட்டோர் ஷூட்டிங்குக்கு இன்னைக்குப் பெங்களுரு போயிருக்கிறதா யூனிட்டையே
நம்ப வச்சிட்டுத்தான் வந்திருக்கேன்…சந்திராலயா யூனிட்டே எனக்காக சாட்சி சொல்லும்…பெங்களுர்ல
ஓட்டல் டிரடிஷன் தெரியுமா உனக்கு…இன்னை தேதிக்கு நா அங்க இருக்கேன்…ஆனா இங்கே உன்னைக்
கொலை பண்றேன்… - சொல்லிக் கொண்டே அவளை நோக்கிப் புலியெனப் பாய்ந்தான் பிரேம். பொறி
கலங்கிப் போய் பேயாய்ப் பின் வாங்கினாள் நந்தினி .( 16 ) டைரக்டர்
கோபிநாத் மேல் உத்தரத்தைப் பார்த்தவாறே மோவாயைச் சொறிந்தார். கூடவே அப்படி ஒண்ணும்
நந்தினிக்கு எதிரிகள் இருக்கிறதா தெரில இன்ஸ்பெக்டர்…என்றார். படப்பிடிப்பு நேரத்தில்
இதென்ன தொல்லை என்று தோன்ற ஆரம்பித்திருந்தது அவருக்கு.
நேத்து முழுக்க உங்க படத்தோட ஷூட்டிங்லதான் நந்தினி
இருந்திருக்காங்க…அப்போ யார் கூடவாவது ஏதாச்சும் தகராறு இருந்திச்சா? தொடர்ந்து தோண்டினார்
இன்ஸ்பெக்டர் ரஉறீம்.
சந்தேகம் வந்தால் உயிரிணை, அஃறிணை என்று எந்த
வித்தியாசமும் இருக்காதே போலீசுக்கு. அவர் எழுதிய வசனம் அவருக்கு ஞாபகத்துக்கு வந்தது.
நோ, நோ இன்ஸ்பெக்டர்….அவுங்க ஆக்டிங் டைம் தவிர
மற்ற நேரத்துல யார் கூடவும் எதுவும் பேச மாட்டாங்க….ஏதாச்சும் புத்தகமும் கையுமாத்தான்
இருப்பாங்க…சொல்லப் போனா அவுங்க நடிப்புத் திறமைக்கு அவுங்க படிப்பும் ஒரு முக்கிய
காரணம்….குறிப்பா பல மொழி நாவல்களை விடாமப் படிப்பாங்க ஆர்வமா…அதுனால யார் கூடவும்
அவங்களுக்குத் தகராறுங்கிற கேள்விக்கே சான்ஸ் இல்லை…
ஐ…ஸீ…வேறே எப்போவாவது ஏதாவது யார்கூடவேனும் சண்டை,
சச்சரவு இப்படி?
என்ன இன்ஸ்பெக்டர்…எதுக்கு இப்டித் திரும்பத்
திரும்ப? எனக்குத் தெரிஞ்சு இல்ல …அவுங்களுக்குத் துணைன்னு யாரும் கிடையாது. வீட்டு
வேலைக்காரம்மா ஒருத்தவுங்கதான் கூடவே வருவாங்க…அவுங்களையும் எதுவும் பேச விடமாட்டாங்க….அவ்வளவு
ஸ்டிரிக்ட் ட்டியூட்டில…..!
இஸிட்…. சமீப காலமா அவுங்க யார் கூட அதிகமாச்
சேர்ந்து நடிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா? எனக்கு அதுபத்தியெல்லாம் நாலெட்ஜ் கம்மி….
– சொல்லிக் கொண்டே சகஜம்போல் சிரித்தார் ரஉறீம். கோபிநாத்துக்கு மனதுக்குள் எரிச்சல்
கிளம்ப ஆரம்பித்திருந்தது.
வருஷத்துக்கு மூணோ நாலோதான் பண்ணுவாங்க…அதுவும்
பெரிய பேனர், பெரிய பட்ஜெட் கம்பெனிங்கதான்…பிரபலமான உறீரோக்களோடதான் இருக்கும்…இப்போ
முதன்முறையா என் டைரக் ஷன்ல அவுங்க ஒத்துட்டிருக்கிறதே ஆச்சரியம்தான். என்னாலயே இன்னும்
நம்ப முடில…காரெக்டர் ரொம்பப் பிடிச்சிப் போச்சுன்னு சொன்னாங்க… கதை சொன்னப்போ தன்னை
மறந்து அப்டியே கண்ணீர் விட்டிட்டாங்க….அதுதான் என் அதிர்ஷ்டம்னு வச்சிக்குங்களேன்….அவுங்களை
அப்டியே பாத்திரமாவே மாத்துறதுக்கு இப்போ அந்த இன்வால்வ்மென்ட் எனக்கு ரொம்ப உதவுது…ரொம்ப
டெடிகேடட் ஆர்டிஸ்ட்….
ஸாரி மிஸ்டர் கோபிநாத்…நா சினிமாவுல அதிகமாக்
கவனம் செலுத்துறதில்லை…அந்தப் பிரபலமான உறீரோக்கள் யார் யாருன்னு சொல்லலாமா?
பார்த்தீங்களா, என்னையே மாட்டிவிடப் பார்க்கிறீங்களே?
சிக்கலான கேள்வி…ஸாரி இன்ஸ்பெக்டர்….இதுக்கு பதில் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது…ஃபீல்டுல
இப்பத்தான் காலூன்றியிருக்கேன் நா….என்னை வம்புல சிக்க வச்சிடும்… இதுக்கு பதில் சொன்னேன்னா…சினிமாக்காரங்களைப்
பத்தி செய்தி போடாத பத்திரிகைகளே கிடையாது…நீங்களே படிச்சுத் தெரிஞ்சிக்கலாமே.. - கூறியவாறே
அங்கிருந்த பத்திரிகைகளை எடுத்து டேபிள் மேல் போட்டார் கோபிநாத். சற்று நேரம் அவற்றை
அக்கரையின்றிப் புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரஉறீமுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தி
கவனத்தை ஈர்த்தது. (17)
பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது.
சனங்களை ஒதுக்குவதே பிரயத்தனமாய் இருந்தது. எந்தக் காலத்திலும் சினிமா என்றால் இடம்
மாறினாலும், தனிப் பிரேமைதான் மக்களுக்கு.
பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக்
கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின்
பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான். உள்ளுக்குள் மெலிசாக உதறல்.
ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக
மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் காட்சியைக் கவனிக்கச் சொல்லிவிட்டுத் திரும்பிய
டைரக்டர் உறலோ சார்…என்றவாறே வரவேற்றார் வர்மாவை.
என்ன டைரக்டர் சார்…பந்தோபஸ்து ஏற்பாடெல்லாம்
எப்டியிருக்கு? ஐ திங்க் யு ஆர் சாடிஸ்ஃபைட்…
யெஸ்…யெஸ்…ஐ ஆம் ஃபுல்லி சாடிஸ்ஃபைட்…வெரி கைன்ட்
ஆஃப் யூ….வெளி மாநிலத்துல வேலை பார்த்தாலும் தமிழர் பண்பாடுங்கிறதை மறக்காம எங்களுக்கெல்லாம்
இவ்வளவு ஆதரவா இருக்கீங்களே…அதுக்கு எவ்வளவு
நன்றி சொன்னாலும் தகும்…
நான் என்ன பெரிசா செய்திட்டேன்…மேலதிகாரி ஆர்டர்…அவ்வளவுதானே…என்
ட்யூட்டியைச் செய்தேன்…
இருந்தாலும் அவுங்ககிட்ட எடுத்துச் சொல்லி உதவியிருக்கீங்களே… இவ்வளவு
சின்சியரா யார் செய்வாங்க… உங்களமாதிரியே நாங்க போற எடத்திலெல்லாம் போலீஸ் எங்களுக்கு
உதவிச்சுன்னா எங்க டியூட்டி ரொம்ப சுலபமாயிடும்…உங்களுக்கு எவ்வளவோ பணிகள். அசெம்பிளி
வேறே நடக்குது….அங்கேயும் போக வேண்டி வரலாம்….நாளைக் கழிச்சி ஏதோ பந்த் அறிவிச்சிருக்காங்க
போலிருக்கு உங்களுர்ல…அதுக்கு முன்னாடி நாங்க ஷூட்டிங்கை முடிச்சாகணும்…மனசுல அந்த
அவசரம் வேறே…
அது சரி டைரக்டர் சார்…நம்ம பிரேம்குமார் எப்ப வந்தாரு…?
அவருதான் ட்யூட்டியில் ரொம்ப ப்ராம்ப்ட் ஆச்சே
சார்…காலைல ஆறு மணிக்குப் படப்பிடிப்புன்னா அஞ்சுக்கே தனியாளா வந்து உட்கார்ந்துக்கிடுவாராக்கும்….முந்தியே
வந்திட்டாரே…
ஐ. ஸீ….
எதுக்குக் கேட்குறீங்க…?
நத்திங்…முன்னே இருந்த மார்க்கெட் இப்ப இல்லன்னு
கேள்விப்பட்டேன்…ஆள் இப்போ அவ்வளவு பிஸியில்லையோ? இருந்தாலும் அவருடைய ட்யூட்டி கான்ஷியஸைப்
பார்த்தீங்களா? – எதிரே பார்வை போக பேச்சை நிறுத்தினார் இன்ஸ்பெக்டர்.
இதற்குள் காட்சி முடிந்து பிரேம் குமார் அங்கே
வந்து சேர்ந்தான்.
உறலோ இன்ஸ்பெக்டர்…உறவ் ஆர் யூ…கேட்டவாறே வந்து
உற்சாகமாய்க் கை குலுக்கினான். அந்தக் கையின் இறுக்கம் அதிர வைத்தது.
வெரி ஃபைன் மிஸ்டர் பிரேம்…ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு?
ஆர் யூ ஓ.கே? உங்க சினிமா வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு? ரொம்ப சீக்கிரமா பெங்களுரு
வந்திட்டீங்களாமே? – கேள்விகள் போதும் என்பதுபோல் அவனைப் பார்த்தார்.
ஆமா
இன்ஸ்பெக்டர்…மெட்ராசிலே ஷூட்டிங் இல்லே…வேற வேலையும் இல்லே…சரி இங்கே வந்து ரெஸ்ட்
எடுப்போமேன்னுதான் புறப்பட்டேன்…
ஐ..ஸீ…எங்கே தங்கியிருக்கீங்க..வழக்கம்போல் Nஉறாட்டல்
டிரடிஷன்தானே…?
யெஸ்…பெங்களுருவில் அதைவிட்டுட்டு வேறே எங்கேயும்
நா போறதில்லே…எனக்குப் பிடிச்சமான எடம் அதான்….
ஓகே. மிஸ்டர் பிரேம்…நீங்க ஒங்க ட்யூட்டியைப்
பாருங்க…நான் புறப்படுறேன்…
அச்சா…விடை கொடுத்தான் பிரேம்குமார்.
மறுநாள் காலையே பொழுது புலரும் முன்பு இன்ஸ்பெக்டர் வர்மா மீண்டும் தன்னைத் தேடி தன் அறைக்கே
வருவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
உறலோ…விஷயம் தெரியுமா? சென்னைல நடிகை நந்தினி
கொலையாம்…
அப்படியா…? ஐயையோ….செயற்கையாய் அதிர்ந்தான் பிரேம்.
தெரியாதா? கேட்டவாறே தினசரியை நீட்டினார்.
பிரபல நடிகை நந்தினி கொலை…சென்னையில் பயங்கரம்…முதல்
நாள் மாலைப் பேப்பரின் அந்தத் தலைப்புச் செய்தியைப் படித்தபோது அவனை அறியாமல் கைகள்
ஆட்டம் கண்டன. அடக்கிக் கொண்டான்.
அப்புறம் இன்ஸ்பெக்டர்…எப்படி நடந்திருக்க முடியும்
இந்தக் கொலை…? நேத்து சரியான ஒர்க். டைரக்டர் டிரில் வாங்கிட்டாரு…அப்டியே வந்து பொணமா
விழுந்தவன்தான். என்னால நிக்கக் கூட முடிலன்னா பார்த்துக்குங்களேன்…பயங்கர ஃபைட் சீன்
வேறே…உடம்பு சரியான வலி. நடந்தது எதுவும் தெரியாது எனக்கு. ரொம்பக் கவலையோடு கேட்டான்.
அவனின் பதற்றம் அவனுக்கே செயற்கையாய்த் தோன்றியது.
உங்களை மாதிரித்தான் நானும்…யாருக்குத் தெரியும்..ஆமாம்
மிஸ்டர் பிரேம்…உங்களோட சேர்ந்து சில படங்களில் நடிச்சவங்களாச்சே…அவங்க கேரக்டர் எப்படி?
என்ன இன்ஸ்பெக்டர் நான் அறிமுகப்படுத்திய பொண்ணு
அவங்க…இப்டிக் கேட்கிறீங்களே?
சாரி…சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்…
ஷூட்டிங் டயத்துலயே அவுங்க யார் கூடவும் பேச மாட்டாங்க…அவங்ககிட்ட
யாரும் தப்பாப் பேச முடியாது…அவ்வளவு நல்ல பொண்ணு…சில பேர் ராங்கிக்காரின்னு சொல்வாங்க…ஆனா
எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லே…ராங்கிக்காரி இல்லே… ராசிக்காரி….
ஐ.ஸீ…
எனி ப்ராப்ளம் இன்ஸ்பெக்டர்?
நோ…நோ..ஃபார் இன்ஃபர்மேஷன் கேட்டேன்…ஆனா ஒண்ணு
மிஸ்டர் பிரேம்…கொலையாளி ரொம்ப சாமர்த்தியசாலி…
ஏன் அப்டிச் சொல்றீங்க…? பிரேம் அடிவயிற்றில்
புளியைக் கரைத்தது.
( 18 )
பாத்ரூம் வருவதுபோல் இருந்தது பிரேமுக்கு. அடக்கிக்
கொண்டான்.
கைக்கு
கிளவுஸ் மாட்டிக்கிட்டு, ஃபிங்கர் பிரின்ட்ஸ் கூடக் கிடைக்காம… ஆனா ஃபூட் பிரின்ட்ஸ்
கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன்.. இன்ஸ்பெக்டர் முகத்தில் அத்தனை தீர்மானம்.
அது பிரேமை மிரள வைத்தது.
இசிட்…அது சரி…இதெல்லாம் உங்களுக்கு எப்டித் தெரியும்?
இன்னிக்கு மாரினிங் நியூஸை வச்சித்தான் சொல்றேன்…
பேப்பர்,டிவி., படிக்க, பார்க்க, எதுக்கும் இம்மியும்
டைம் இல்ல இன்ஸ்பெக்டர்…பயங்கர டைட்…ஒவ்வொரு
நாளைக்கு அப்டித்தான் ஆகிப் போகுது…சரியான அலைச்சலா….விடாத ஷூட்டிங் வேறே…வேறெதிலும்
மைன்ட் இல்லே…..
நீங்க இருக்கிற பிஸிக்கு உங்களால முடியாதுதான்….
– ஏதோ கேலியாகச் சொன்னதுபோல் உணர்ந்தான் பிரேம். அமைதியாயிருந்தான். ஆல்ரைட் மிஸ்டர் பிரேம்…நா கிளம்பறேன்…
தூக்கம் வராமல் புரண்ட பிரேம்குமார் துள்ளி எழுந்து
அமர்ந்தான்.
ஃபூட் பிரின்ட்ஸ்…ஃபூட் பிரின்ட்ஸ்…கொலை நடந்த
இடத்தில் ஃபூட் பிரின்ட்ஸ்…வர்மாவின் வார்த்தைகள் அவனைப் பயமுறுத்த ஆரம்பித்தன. மனதிற்குள்
யாரோ பிளேடால் அறுப்பதுபோல் இருந்தது. பயம் பூதாகாரமாய் உருவெடுத்தது. உடம்பெங்கும்
வியாபித்து வியர்த்துக் கொட்டியது. தொப்பலாய் உடைகள் கணத்தில் நனைந்து விட்டன.
எப்படி சாத்தியம்? எப்படி சாத்தியம்? இருக்கலாம். நம் போதாத வேளைக்கு மாட்டிக் கொண்டாலும்
போயிற்று. விபரீதம். எவ்வழியிலேனும் அழித்துவிட
வேண்டும். உடனே செய்தாக வேண்டும் அதையும். அதற்கு முன்னோடியாக சென்னை அறையில் வைத்திருக்கும்
ஷூவை முதலில் அகற்றியாக வேண்டும். அதுவே ஒரு பெரிய சாட்சி.
முடிவு செய்தான். பயணத்தை ரத்து செய்த ஒரு வி.ஐ.பி.யின் இடத்தைக் கெஞ்சிப் பிடித்துப் பறந்து சென்னை வந்து சேர்ந்தான். பரபரப்பான
கூட்டத்தின் நடுவே புகுந்து புயலாய்க் கடந்து அறையை அடைந்த அந்தக் கணம் -
வாங்க
மிஸ்டர் பிரேம்குமார்…என்ன இவ்வளவு அவசரமா புறப்பட்டு வந்திட்டீங்க? – என்று வரவேற்றார்
இன்ஸ்பெக்டர் ரஉறீம்.
அவரை அந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத பிரேமின் சர்வ நாடியும்
ஒரு கணம் ஒடுங்கி மீண்டது.
ஷூவை எடுத்து மறைக்கிறதுக்கா? மல்லேஸ்வரம் இன்ஸ்பெக்டர்
வர்மா சொன்னதை நம்பிப் புறப்பட்டு வந்திட்டீங்களா? நாங்க சந்தேகப்பட்டது சரியாத்தான்
போச்சு…உங்களை எப்படி திசை திருப்பறதுன்னு ஒரு ப்ளான் போட்டோம்…அது ஒர்க் அவுட் ஆயிடுச்சி….எதிர்பார்த்தபடியே
வந்து நிக்கிறீங்களே? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்வாங்க…அதை அப்படியே நிரூபிச்சிட்டீங்க…!
என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்…? - அவரைப் பார்த்துக்
கத்தினான் பிரேம்.
ஒய் ஆர் யூ ஷவுட்டிங்? நாங்க எதிர்பார்த்தது நடந்து
போச்சுன்னு சொல்றேன்.அவ்வளவுதான்…ஜஸ்ட் லைக் தட்….எவ்வளவோ கேர்ஃபுல்லாத்தான் இந்தக்
கொலையைச் செய்திருக்கீங்க மிஸ்டர் பிரேம்…இத்தனை க்ளவரா நடந்துக்கிட்ட நீங்க கொஞ்சம்
இந்தக் காவல்துறையோட திறமையையும் நினைச்சுப் பார்த்திருக்க வேண்டாமா? அதென்ன எங்க மேலே
அத்தனை அவநம்பிக்கை உங்களுக்கு? இவுங்களால என்னதான் முடியும்னு நினைச்சிட்டீங்களோ?
குரலில் மிளிர்ந்த கேலியோடு அதை நீட்டினார் அவர்.
சதுர வடிவமாக வைரத்துண்டு போல் பளபளத்தது ஒரு
பட்டன். மனதிற்குள் புரிந்ததை வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாமல் பார்த்தான் பிரேம்.
இது எப்படி எங்க கைக்குக் கிடைச்சதுன்னு நினைக்கிறீங்களா?
போஸ்ட் மார்ட்டத்துலதான்…நீங்க கொலை செய்தபோது உங்களோட ஏற்பட்ட போராட்டத்துல, என்ன
செய்றோம்ங்கிறது தெரியாம மேகலா இதை விழுங்கியிருக்காங்க…சினிமா டெக்னிக் மாதிரி இல்ல?
அப்படித்தான். ஆனா இது அவுங்க வயித்துக்குள்ள போனதுதான் உங்க துரதிருஷ்டம்…என்ன? இன்னும்
சந்தேகமாயிருக்கா? ஒரு பட்டனை வச்சு எப்படிடா
இவன் நேரா நம்மளைத் தேடி வந்தான்னுதானே? சந்தேகந்தான்…என்னடா ஆயிரத்தெட்டு நடிகைகள்
இருக்கிற போது நேரா நம்ம ரூமுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கானேன்னுதானே யோசிக்கிறீங்க…நீங்க
கோலத்துக்குள்ள போனா போலீஸ் தடுக்குக்குள்ள நுழையும்…தெரியுமில்ல? காரணம் இல்லாமலா?
இந்த பட்டனைக் கொண்டு வந்து திரும்பவும் உங்க சட்டைல வச்சுத் தைச்சுப் பார்க்கணும்னு நான் எவ்வளவு அக்கறையா வந்திருக்கேன் பார்த்தீங்களா?
ரியலி இடீஸ் பியூட்டி மிஸ்டர் பிரேம்…இத்தனை அழகான பட்டன்களோட இந்தச் சட்டையை எங்கே
வாங்கினீங்க? என்ன விழிக்கிறீங்க? நந்தினி வாங்கிக் கொடுத்தாங்களா? அவங்களுக்கும் உங்களுக்கும்தான்
பிடிக்கிறதில்லியே….உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைன்னு சொல்றாங்க…? புரியலேல்ல…? இதோ பாருங்க… - கூறியவாறே அந்தப் புத்தகத்தை
நீட்டினார் இன்ஸ்பெக்டர்.
அமுதம் என்ற அந்த வாரப்பத்திரிகையில் இப்படி வெளியாகியிருந்தது
அந்தச் செய்தி –
”பிரேமையான
நடிகருக்கு இப்பொழுது மார்க்கெட் அவ்வளவு இல்லையென்று அவரோடு இனி சேர்ந்து நடிப்பதில்லையென முடிவு செய்து
விட்டாராம் அந்தப்பிரபல நடிகை. அவரோடு
சேர்ந்து வரும் வாய்ப்புக்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறாராம். விடாப் பிடியாகத் தவிர்க்கிறாராம்.
ஒரு காலத்தில் அவரைப் பற்றி பிரேமையோடு
உளறித் தள்ளிய இந்த நடிகை இப்பொழுது அவரை எதிரில்
கண்டால் கூட கண்டு கொள்வதில்லையாம். இதனால் பிரேமையான நடிகர் குமுறிக் கொந்தளிக்கிறாராம்..
அது சரி…இவர்களின் சண்டையைக் கவனிக்கவா
நமக்கு நேரம்…”
என்ன
மிஸ்டர் பிரேம்…கிசு கிசுச் செய்தி கூட எவ்வளவு… உபயோகப்படுது பார்த்தீங்களா? சந்தேகப்படுறதுன்னு
ஆரம்பிச்சா எதுவேணாலும் உபயோகப்படும். எப்படிக் கோர்த்துப் பார்த்து உண்மையைக் கண்டுபிடிக்கிறதுங்கிறதுதான்
எங்க வேலை…? ஓ.கே…? இப்போ உங்க சந்தேகமெல்லாம் முழுக்கத் தீர்ந்திருக்குமுன்னு நினைக்கிறேன்…லேட்டாச்சு
போகலாமா? கேட்டவாறே கம்பீரமாக எழுந்தார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்
பிரேதமாய் பின் தொடர்ந்தான் பிரேம்குமார்.
(
19 ) சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு ரயிலேறியிருந்தார்
பஞ்சாபகேசன். இன்னும் ஒருநாள் தாமதித்தால் அந்த ரங்கபாஷ்யம் ஆளைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டாலும்
போச்சு. எது எதையோ நினைத்து, கனவுலகில் மிதந்து,கற்பனைக் குதிரையைப் பறக்கவிட்டு, தான்
சென்னையில் காலடி வைக்கப் போக என்னென்னவோ நடந்து விட்டனவே இந்தக் கொஞ்ச நாட்களில் என்பதை
நினைத்தபோது அவர் உடம்பு தவிர்க்க முடியாமல்
நடுக்கம் கண்டது.
நல்லவேளை…அந்தப் பரங்குன்றம் முருகன்தான் தன்னைக்
காத்தருளினான்….அன்று பாஷ்யத்தோடு ஸ்டுடியோவுக்குள் நுழைந்து, தான் ஆசையாய்ப் பார்க்க
வந்த அந்த தடிப்பயல் பிரேம்குமாரைப் பார்க்காமல் திரும்பியது தனக்குக் கடவுள் அருளிய
கிருபை. அவரின் கருணை தன்பால் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான். அவனிடம் மாட்டிக்
கொள்ளக்கூடாது என்ற பாஷ்யம் அவசரம் அவசரமாகக் கழன்று கொள்ளப் போக, காரை எடுத்துக் கொண்டு
பறக்கப் போக….வந்த வேளை நல்ல வேளை என்பது அவருக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் என்று இப்போது
தோன்றியது. அன்று சந்தித்து ஒட்டிக் கொண்டிருந்தால்? மாம்மோய்…என்று பழைய நினைப்பில்
அவன் சேர்த்தணைத்துக் கொண்டிருந்தானானால், இன்று தன் கதி அதோ கதியாகி இருக்குமே…?
ஊரில் வெட்டியாய், தறுதலையாய்த் திரிந்த பயலுக்கு, கடைசியில் அந்த தறுதலைப் புத்திதானே ஜெயித்திருக்கிறது என்பதை அவனென்ன பகுத்து
உணரவா போகிறான்?
என்னவோ பி.ஏ.வாச் சேர்த்து விடுகிறாராம்…பி.ஆர்.ஓ.ன்னு அதுக்கு
பீத்தப் பேரு வேறே…! .அந்தப் பெண்ணிடம் சென்று ஒட்டிக் கொண்டிருந்தால் இன்று தன் கதி
என்னவாகியிருக்கும்? சந்தேகப்பட்டு உள்ளே அல்லவா கொண்டு உட்கார்த்தியிருப்பார்கள்?
நினைக்கும்போதே மனசு பதறியது, உடம்பு நடுங்கியது பஞ்சுவுக்கு.
பெயருக்கேற்றாற்போல் பஞ்சு போல் மனசை வைத்துக் கொண்டு, நண்பர் தாமுவையும்
இழுத்துக் கொண்டு, தெருத் தெருவாய் யாதா யாதா என்று அலைந்தாலும், வெறுமே கதை பேசிக் கொண்டு திரிந்தாலும்,மரத்தடியில்
உருண்டாலும் எவனும் எதுவும் கேட்கப் போவதில்லை. அதில்தான்
எத்தனை சொர்க்கம் அடங்கியிருக்கிறது? ஒரு வம்பில்லை, தும்பில்லை….சாப்டியா,
சாப்பிடலியா, எத்தனை நாள் பட்டினி? எந்தக் கேள்விக்கும் இடமில்லையே?
இந்த மாதிரிக் கோணப்புத்தி ஏன் வந்தது தனக்கு? அக்கறையாய் அறிவுரை
சொன்ன பெண்டாட்டியின் பேச்சைத் துச்சமென மதித்து, சவுக்கைக் கையில் ஏந்திய அந்தப் பாவிப்பயல்
பிரேம்குமாரின் உருவத்தையே மனசில் வைத்து, தன் பெண்ணுக்குக் கணக்குப் பண்ணப் பார்த்து
புறப்பட்டு வந்தோமே…….எவனாவது இப்படி யோசிப்பானா? என்னவொரு பைத்தியக்காரத்தனம்?
தன் புத்தி ஏனிப்படிக் கோணி வக்கரித்துக்கொண்டு போனது? மலையில்
குடியிருக்கும் பரங்குன்றம் முருகா, நாளைக்கே ஊருக்கு வந்து உனக்கு மொட்டை போடுறேம்ப்பா….எனக்கு
நல்ல புத்தியைக் கொடுத்தே….பெரிய ஆபத்துலேர்ந்து என்னைக் காப்பாத்தினே….உனக்கு அனந்த
கோடி நமஸ்காரம்…..உன் கோயிலைச் சுத்தி எத்தனை தடவை உருண்டாலும் அத்தனையும் மன நிம்மதிதாம்ப்பா….இது
புரியாமப் போச்சே இந்த மடப்பயலுக்கு….வெறும் பயலாத் திரிஞ்சாலும் அதுலதான் சுகமிங்கிறதை
எனக்குப் புரிய வச்சிட்டப்பா….புரிய வச்சிட்ட….
சுற்றி அமர்ந்திருக்கும் சக பயணிகளை மனதில் நினையாமல்
கன்னத்தில் பட்டுப் பட்டென்று எம்பெருமான் முருகக் கடவுளை நினைத்து மாறி மாறிப் போட்டுக் கொண்டார் பஞ்சாபகேசன். எல்லோரும் ஒன்றும்
புரியாமல், இந்தாளுக்கு ஏதும் ஆகிப் போச்சோ…? என்று எண்ணியவாறே அவரையே அதிசயமாயும்
பயத்தோடும் பார்த்தார்கள்.
கவலைப்
படாதீங்கம்மா….நம்ப பஞ்சுவுக்கு ஒண்ணும் ஆகாது…..பத்திரமாத் திரும்பி வந்துடுவார்…..நாளைக்குக்
காலைல கல்லுக் குண்டா உங்க முன்னாடி வந்து நிக்கிறாரா இல்லையா பாருங்கோ….என்று பஞ்சுவின்
மனைவி பவானியைப் பார்த்து ஆறுதலாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார் தாமோதரன்.
விமானம், ரயில், பேருந்து, என்று எதிர்பாராத விபத்துக்கள்
இந்த உலகத்தில் அவ்வப்போது நடப்பதில்லையா? அதில் மனிதர்கள் பலியாவதில்லையா? பலரும்
பிழைத்துப் போவதில்லையா?
அதுபோல் இந்த உலகத்தில் சில மனிதர்களை அவர்களின் அதிர்ஷ்டம் பெருவாரியாய்
அலைக்கழிக்கும். சீரழிக்கும். ஆனால் ஆபத்து என்று ஒன்றும் வந்துவிடாது. அப்படியான ராசியள்ளவர்களாய்
சிலர் இருப்பார்கள்.
யாரும் சற்றும் எதிர்பாராத திகில் சம்பவங்களும் சொந்த வாழ்க்கையில்
சிலருக்குக் குறுக்கிட்டுத்தானே போகின்றன?
யப்பாடீ….!!! போதுமைய்யா அப்படி ஒண்ணு….!!! இனி ஒரு தடவை எனக்குக்
கோடியே கொடுத்தாலும் அந்தப் பக்கம் தலைவச்சுப் படுக்க மாட்டேன் என்று இருப்பவர்களை
நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அப்படி அதிர்ஷ்டவசமாய்த் தப்பித்துக் கழன்று
வந்த பஞ்சாபகேசனை நாமும்தான் வாயார, மனதார,
வாழ்த்துவோமே…!!!
------------------------
--------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக