11 அக்டோபர் 2018

“இது பயணிகள் பாடு” - தினமணி நாளிதழ் துணைக் கட்டுரை


கட்டுரை              
       “இது பயணிகள் பாடு…!”
      யில்களில் பயணிகள் தூங்கும் நேரத்தைக் குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாகச் செய்தி ஒன்று வந்துள்ளது. இப்படி ஒரு அதிகார பூர்வ அனுமதி நேரம் உள்ளது என்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் யதார்த்தம். அப்படியிருக்கையில், நம்ம தூங்குற நேரத்தை இவங்க எப்படிக் குறைக்க முடியும்…? என்றுதான் செய்தியை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நிறையப் புகார்கள் வந்திருக்கக் கூடும் என்கிற அடிப்படையிலேயே இந்தச் செய்தியையும், அதிலுள்ள சாராம்சத்தையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
      மடக்கி வைக்கப்பட்டுள்ள நடுப்படுக்கைக்கு ரிசர்வ் செய்திருப்பவர்கள் சீக்கிரமே படுக்க வேண்டும் என்று வற்புறுத்துவதால், கீழ்ப் படுக்கையில் அமர்ந்திருப்பவர்களோடு தகராறு வருகிறது…என்றும் அதனால் இரவு ஒன்பது மணி முதல் காலை ஆறு மணி வரை என்ற அனுமதி நேரத்தை, இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணிவரை என்று மாற்றப்படுகிறது என்று திருந்திய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
      கீழ்ப்படுக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மேல், நடு, கீழ் மூன்றுக்கும் முன் பதிவு செய்திருப்பவர்கள்தான். அமர்ந்திருக்கும் நேரத்தில் அந்தக் கீழ் இருக்கை மூவருக்கும் உரியதுதான்.  பரிசோதகர் வந்து டிக்கெட் சரிபார்த்துச் சென்றவுடனேயே பெரும்பாலும் எல்லோரும் படுத்துவிடுவதுதான் வழக்கமாய் உள்ளது. அபூர்வமாய் சில இருக்கைகளில் மேலும் சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது சாப்பிட்டு முடிப்பார்கள். பெரும்பாலும் தகராறு என்பது இருந்ததில்லை. எப்போதாவது சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் அது சில நிமிடங்களில் தானே வலுவிழந்து ஓய்ந்து போகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மேல் படுக்கைக்காரரும் நேரம் தெரியாமல் உட்கார்ந்து பேச வாய்ப்புண்டு. பேசுவதும் உண்டு. அதுபோல் கீழ்ப்படுக்கைக்காரரும் இன்னும் சிறிது நேரம்தான் பேசுவோமே என்று அமர்ந்திருப்பதும் உண்டு. நடுப் படுக்கைக்காரருக்கும் அந்த நடைமுறை உண்டுதான்.இது அவர்களுக்குள் செய்து கொள்ளும் அட்ஜஸ்ட்மென்ட். செய்தியில் உள்ளதுபோல் நடுப்படுக்கைக்காரர் மட்டுமே படுக்க வேண்டும் என்று வற்புறுத்துவதுபோல் கீழ்ப்படுக்கைக்காரரும், எனக்குப் படுக்கணும் என்று குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே கேட்க வாய்ப்புமுண்டு. என்னங்க, அதுக்குள்ளயும் விரட்டுறீங்க…என்று மேல் படுக்கைக்காரரும் சலித்து எழுந்து மேலே போக யத்தனிப்பதுமுண்டு.  மனிதர்கள் அன்பானவர்கள். ஒருவருக்கொருவர் பேசும் முறைகளில், அந்தச் சில நிமிடங்களி்ல் ஒரு சகஜத் தன்மை வந்துவிடுவதுண்டு.
      இதை எப்படிப் பார்க்கலாம் என்றால்,…நடு ராத்திரியில் அல்லது விடிகாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ரயில் சத்தத்தில் திடீரென்றுவிழிப்பு வந்தவர்… பதறிப்போய் ”இது எந்த ஸ்டேஷனுங்க….? வண்டி எது தாண்டியிருக்கு?” என்று இருட்டில்  கேள்வி போடுகையில் யாரேனும் ஒருவர்…கண்டிப்பாக எந்த மூலையிலிருந்தாவது பதிலுரைப்பார்.அதில் படிந்திருக்கும் அந்நியோன்யம் நினைத்து உணரத்தக்கது.
      ரயில் சிநேகிதம் என்ற சொலவடைக்கேற்றாற்போல், அவரவர் இறங்கும் இடம் வந்தவுடன், பையைத் தூக்கிக் கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் கிளம்பி விடுவதுதான். ஆனாலும் பயணிக்கும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைய ஒற்றுமைகளை அவர்களுக்குள் பார்க்க முடியும். …ஒருவருக்கொருவரான அமைதியில் ஆழ்ந்த புரிதல் இருப்பது தெரியும்.
      எனவே படுக்கும் நேரத்தை ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்தாலும், பயணிகளுக்கிடையே அந்த நேரத்தில் இருக்கும் ஒரு தற்காலிக உறவு அதைச் சமரசம் செய்துவிடும் வாய்ப்புதான் அதிகம்.
      பலருக்கும் இம்மாதிரி ஒரு நேர நிர்ணயம் இருப்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லாதபோது, அத்தனை பேருக்கும் காட்டிக் கொடுத்தாற்போலானது இந்தச் செய்தி. அவர்கள் அவர்களின் கடமையைச் செய்திருக்கிறார்கள். அதை நாம் தவறு என்று கூற முடியாது. ஆனாலும்  - பத்தானது  சற்றே அதிகம் என்பதுதான் நிஜம். சீனியர் சிட்டிசனுக்காக ரயில்வே நிர்வாகம் கீழ்ப்படுக்கைகளை ஒதுக்குகிறது. அவர்களெல்லாம் பத்துவரை உட்கார்ந்திருக்க வேணும் என்பது இயலாத காரியம். ஆடி ஓடி அவர்கள் ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்திருப்பதே பெரிய பிரயத்தனத்திற்கு உட்பட்டதாய் இருந்திருக்கும். வந்து, அப்பாடா என்று ஆசுவாசமாய் அமர்ந்திருப்பவர்களை…இது மட்டும் போதாது என்று நீ பத்து வரை குத்துக் கல்லாய் அமர்ந்துதான் இருக்கணும் என்று சொல்வது தண்டனை போன்றது. இந்த நேர நிர்ணயத்தைப் பிடித்துக் கொண்டு, வரும் சில வம்புக்காரர்கள் பிடிவாதம் செய்யவும், சண்டைக்கிழுக்கவும் வாய்ப்புண்டுதானே….!
      கர்ப்பிணிகள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அவர்கள் சீக்கிரமே படுக்க விரும்பினால் ஒத்துழைப்பு நல்கும்படியும் நிர்வாகம் அறிவித்துள்ளது. நம் மக்கள் அதெல்லாம் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களின் ரத்தத்தோடு படிந்துபோன ஒன்று. அதே சமயத்தில் “பத்து மணிக்குத்தானே படுக்க முடியும்…” என்று வாய்விட்டுச் சொல்லி ஒரு பந்தாவையும் காண்பித்து விடுவார்கள்.
      எனவே இந்த உத்தரவு நடுப்படுக்கைக்காரருக்கு மட்டுமல்ல. மேல், கீழ் படுக்கைக்காரருக்கும் உகந்ததுதான். ஆனால் இவர்கள் எல்லோர் மத்தியிலும் மனித நேயமாய்க் கலந்து நிற்பது விட்டுக் கொடுத்தல்…என்கிற தாத்பர்யம்தான்.
      அண்ணலின் அஉறிம்சை வழி வந்த நாடு இது. இருப்பதிலியே மிகச் சிறந்த பக்குவம் வேண்டும் என்பது அதற்குத்தான். நம் மக்கள் அதனை அவர்களாகவே வழி நடத்திச் செல்வார்கள் என்பது நம் இந்தியக் குடும்ப அமைப்பின் தலை சிறந்த மாண்பு என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா….!!!!?
                        ----------------------------------------------------------------------
     


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...