11 அக்டோபர் 2018

“முழு மனிதன்” - சிறுகதை - “காணிநிலம்” காலாண்டு இதழ் - ஜூலை-செப்டம்பர் 2018


“முழு மனிதன்”   சிறுகதை                                                       ---------------------------------

-                                                                 
     றைக்குள் தன்னை அடைத்துக் கொண்டிருந்தார் விஸ்வேஸ்வரன். இரண்டாம் எண்ணில் வைக்கப்பட்டிருந்த தலைக்கு மேலான காற்றாடி மெல்லிய சத்தத்தோடு, காற்றை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறேன் என்பதாக அவருக்கு நினைவு படுத்தியது. அதனை மூன்றிலோ அதிகமாக இன்னும் இரண்டு நிலைகளிலோ வைப்பதும் ஏதோ கலவரத்தை உண்டு பண்ணுவது போல் அது வேகமெடுத்து சுழல்வதும் கூட அவரால் சகிக்க முடியாமல்  போயிருந்தது. அப்படித் தன்னையறியாமல் என்றேனும் அந்த எண்களில் வைத்து விடும்போது, யாரோ தலையை விரித்துப் போட்டுக் கொண்டு  முன்னால் நின்று ஆடுவதுபோல் உணர்ந்து பதறிப்போய் வேகம் குறைத்திருக்கிறார் விஸ்வம். அந்த சத்தம் மன அமைதியைக் குலைப்பதாக உணர்ந்தார்.
     ஃபேன் எப்பவும் “ஸ்மைல்டா” சுத்தினாத்தான்  சுகமா இருக்கும்… நண்பரொருவர் சொல்வதை நினைத்துக் கொண்டார். ஸ்மைல் என்பது புன்னகை. அதாவது ஒரு சின்ன, உதட்டோரச் சிரிப்பு. ஸ்மைல்டா சுத்தணும் என்றால் சின்னதா, மெதுவா சுத்தணும் என்று ஒரு பொருள் வருகிறதுதானே…! நினைத்து சிரித்துக் கொள்வார்.
சுற்றிலும் எந்தப் பரபரப்பும் இல்லாத ஒரு மயான அமைதியில் அமர்ந்தே…அல்லது ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே நாள் முழுவதுமான பொழுதைத் தள்ளி விட்டு விட வேண்டுமென்பதுதான் அவரது சமீபத்திய பழக்கமாய் இருந்தது. திரைச் சீலைகள் இழுத்து விடப்பட்ட நிலையில் மெல்லிய இருள் படர்ந்திருக்கும் அறையில் தனிமைக்கு மெருகு கூட்டும் அது.
     எதிரே அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் எல்லாமும் அவரை விடாமல் கண்கொண்டு பார்த்துக் கொண்டேயிருந்தன. என்று என்னை எடுத்துப் படிக்கப் போகிறாய் என்ற அவைகளின் கேள்விகள் அவரை அறைந்து கொண்டேயிருந்தன. நிறங்கள் நாளுக்கு நாள் மங்கிக் கொண்டே வருகின்றனவோ என்று ஒரு கவலையும் இருந்தது..புத்தகங்கள் முழுதும் படிக்கப்படாமல் பழசாகின்றன என்ற வருத்தமிருந்தது.  சில்வர் பூச்சி என்று ஒன்று ஓடியது கண்டு பதறிப் போனார். அந்தப் பெயர் கூட நீலா சொல்லித்தான் அவருக்குத் தெரியும். அன்று அத்தனை புத்தகங்களையும் கீழே இறக்கி, தட்டி…கொட்டி….மீண்டும் அடுக்கினார். அப்படி அடுக்குகையில் ஒரு யோசனை வந்தது. எழுத்தாளர் வாரியாக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பிரித்து அடுக்கி விட்டால் என்ன…? உருப்படியாய் ஒரு வேலை செய்து முடித்ததுபோல் ஆகுமே…! பிறகு டக்…டக்..கென்று ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் புத்தகத்தை உடனுக்குடன் உருவிப் படிக்கலாமே…! தேட வேண்டிய அவசியமில்லையே….! மனம் துள்ளல் போட்டது.  
     நினைத்ததுபோல் செய்ய ஆரம்பித்தார். அறை முழுவதுமாய் தரையில் பிரித்துப் பிரித்து  வரிசையாய் வைக்கலானார். அந்த நேரம் பார்த்துத்தான் நீலா கையில் விளக்குமாரோடு வர வேண்டுமா…? . அவளுக்கிருக்கும் கோபத்தைப் பார்த்தால், அறையைப் பெருக்குகிறேன், தூசியைத் தட்டுகிறேன் பேர்வழி என்று  போகிற போக்கில் தன்னையும் ரெண்டு போட்டாலும் போச்சு என்பதாய் இருந்தது அந்த ஆவேசம். தரையில் அடுக்கியிருந்த புத்தகங்கள் மேலெல்லாம் பட்டுப் பட்டென்று போட ஆரம்பித்தாள். வந்ததே பார் கோபம் இவருக்கு….!
     ஒரு மரியாதை இல்லே…? என்ன நினைச்சிட்டிருக்கே நீ…..புத்தகங்களை சரஸ்வதின்னு சொல்றோம்….சாமி முன்னாடி அடுக்கி வச்சுக் கும்பிடுறோம்…அதப்போய் இப்டிக் கேவலப்படுத்துறியே….இது நியாயமா….?
                அதெல்லாம் சரஸ்வதி பூஜைக்கு…..பாடப் புஸ்தகம், இராமாயணம், மகாபாரதம்,ஸ்லோகப் புஸ்தகங்கள்னு  அடுக்குவாங்கஇதுகளுக்கு என்ன வந்துதாம்…. வெறும் கதைகள்தானே….விறு விறுன்னு தூசியைத் தட்டித் துடைச்சு  எடுத்து அடுக்குற வழியைப் பாருங்க…..தனியாக் கிடந்து கஷ்டப்படுவீங்களேன்னு  உதவி செய்ய வந்தா  இது  வேறயா…?.
     ஒவ்வொண்ணா துடைச்சுத் துடைச்சுத்தான் அடுக்க முடியும். மொத்தமாத் தட்ட முடியாது….தூசி போகாது.   அவசரப்பட்டா ஆகாது….
பழைய புத்தகக் கடையில் வாங்கின புத்தகங்களை கீழடுக்குல  தனியா வைங்கன்னு ஆயிரம்வாட்டி அடிச்சிண்டேன் …கேட்டாத்தானே? இந்தப் புஸ்தகம் படிக்கிறவங்களே இப்டித்தான்…அடுத்தவங்க பேச்சைக் கேட்குறதில்லை…தன்னிஷ்டத்துக்குத்தான் செய்வாங்க எதையும்….அப்டி ஒரு திமிரு….  …அதுலேர்ந்துதான் வந்திருக்கும்….எல்லாத்துக்கும் பாச்சா உருண்டை போட்டா மட்டும் போதாதாக்கும்…ஓடோ நில் வாங்கி வைக்கணும்.அடுக்குக்கு ஒண்ணாவது பிரிச்சு வச்சாகணும்…பை டூ…கெட் ஒன்….போட்டிருக்கான்….நாலு செட் வாங்குங்க…அப்பத்தான் இந்தப் புத்தகங்களெல்லாம் பிழைக்கும்…ஆயுசுக்கும் படிக்கிறமாதிரி இப்டி வாங்கி வாங்கி அடுக்கிண்டேயிருந்தா….? இதென்ன வருஷாந்திர கொலுவா…?  வாயுண்டானா அழும் அத்தனையும் …..! ஏதோ சிலதைப் படிச்சிருப்பீங்க…மத்தது அத்தனையும்…அப்டியே வச்சமேனிக்குத் தூங்கிண்டிருக்கு…என்னத்துக்கு இப்டி பீரோ பீரோவா சேர்க்கணும்….? இதென்ன சொத்தா…?
      எத்தனை சுலபமாய்ச் சொல்லி விட்டாள் அவள். சொத்தா? என்று சொத்தையாய் ஒரு கேள்வி கேட்டு விட்டாளே?  சொத்துதான் என்று எப்படி அவளுக்கு உணர வைப்பது? இத்தனை வயசுக்கு மேல் அவளின் அவநம்பிக்கைகளைத் தகர்க்க முடியுமா? நான் எத்தனையைப் படித்தேன் என்று இவள் என்ன கண்டாள்?   எல்லாம் வெறும் கதையாம்…வாழ்க்கையே இருக்குடி இதுல…நம்ப வாழ்க்கையே இருக்கு….. டி.வி. சீரியலாப் பார்க்குற உனக்கு இதோட அருமை எப்டித் தெரியும்…? அதுல வர்ற பொம்பளைங்க அடிச்சிக்கிற மாதிரி, கர்…புர்ன்னு சீர்ற மாதிரிதான் நீயும் பேசுற….
     வெறும் ஏட்டுச் சுரைக்கா…..கறிக்கு உதவப் போகுதா…..யார் யாரோ கற்பனைல இஷ்டத்துக்குப் புருடா விட்டத எங்கிட்டப் பெருமையாப் பேசறீங்களாக்கும்….
     அடிப்பாவி….எப்டிச் சொல்லீடீ உனக்குப் புரிய வைக்கிறது….? கண்டமேனிக்குப் பேசாத…நாக்கு அழுகிடுமாக்கும்…. பஸ்ல டிராவல் பண்றபோது போற போக்குல படிச்சிட்டுத் தூக்கிப் போடுறதில்லடீ இது….அத்தனையும் இந்த மதிப்பு மிக்க வாழ்க்கையோட ஆழமான அனுபவங்களாக்கும்…அப்டி இந்த வாழ்க்கையை அனுபவிச்சு முடிச்சவங்க… கரை கண்டவங்க…வாழ்க்கையைக் கொண்டாடினவங்க… எழுதிவச்ச பொக்கிஷங்களாக்கும்…இந்த உலகத்துல உள்ள வெவ்வேறு விதமான மக்களோட வாழ்க்கைப் பாடங்களாக்கும்…
     நமக்கும்தானே நிறைய அனுபவங்கள் இருக்கு…நம்ம வாழ்க்கைல நாம பார்க்க மாட்டமா…..? என்னமோ பெரிசாச் சொல்றீங்களே….?-
     அது அப்டியில்லடி….வாழ்க்கையோட எல்கை எல்லாருக்கும் விரிஞ்சி  இருக்கிறதி்ல்லை…உனக்கும் எனக்கும் பத்து கி.மீ. சுற்றளவுதான்….பாத்த மனுஷங்களையே பார்த்து, பேசினதையே பேசி, வாங்கினதையே வாங்கி, தின்னதையே தின்னு…..அது போதுமா….? இல்ல போதுமாங்கிறேன்….உலகத்தைப் படிக்கணும்டி…. …மனுஷாளைப் படிக்கணும்....கையடக்கமா, உட்கார்ந்த இடத்துலயே அந்த அனுபவங்களைத் தர்றதும், நம்மை முதிர்ச்சியடைய வைக்கிறதும் இந்தப் பொக்கிஷங்கள்தான்….உனக்கெங்கே தெரியப் போகுது….என்னவோ சொன்னானாம்…கழுதைக்குத் தெரியுமா…..
     என்ன சொன்னீங்க….என்ன சொன்னீங்க…..? இது வேறே பேச்சா….? எனக்கு வேணும்தான்…– பட்டென்று துடைப்பத்தைப் போட்டவள்தான்…போய் விட்டாள்.
     படிச்சு முடிச்சதெல்லாம் யாருக்காச்சும் கொடுத்திற வேண்டிதானே… எடமாவது மிஞ்சுமில்ல….? என்றாள் ஒருநாள். அன்றும் அந்தக் கற்பூர வாசனைதான் இவருக்கு நினைவுக்கு வந்தது. வாயை அடக்கிக் கொண்டார். சிலதுகளை ஆயுசுக்கும் திருத்தவே முடியாது….
அந்தப் புத்தகங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். படிச்சிட்டா கொடுத்திரணுமாம்….எப்டி கத….? படிச்சிட்டா…?.முடிஞ்சி போயிடுமா…..? அத்தோட அவ்வளவுதானா….? அதுக்கா உன்னை இப்டி வாங்கி வச்சிருக்கேன்…? எனக்கு எப்பல்லாம் திடீர் திடீர்னு தோணுதோ அப்பல்லாம் உன்னை எடுத்து எடுத்துப் படிப்பேனாக்கும்….அப்டி ஒண்ணும் எங்கிட்டேயிருந்து ஈஸியா நீ தப்பிச்சிட முடியாது….-புத்தகங்களோடு ஆதர்ஸமாய் அடிக்கடி பேசுவது அவர் வழக்கம். அவைகளுக்காகவே தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாய் உணர்ந்தார்.
     ஆனால் உண்மையில் அதுவா….? அதுவும்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதுதான் முழுக் காரணம் என்று ஒரு வலிய தோற்றத்தை ஏற்படுத்தவும், அதனை நிறுவவும் சமீப நாட்களாய், தான் முயன்று கொண்டிருக்கிறோம் என்றே அவரது மனசாட்சி சொல்லியது.
     உண்மையில் அவர் நினைத்தது வேறு.  அதற்குத்தான் அவரது மனம் முழுமையாக விழைந்தது. அதில்தான் பரிபூர்ண நிம்மதியை, ஒரு விடுபட்ட நிலையை, தான் எய்த முடியும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் வீட்டிலிருப்பவர்கள் விட்டால்தானே….! தனிமை….அதுதான் அவரது விருப்பம். ஊரிலே தனிமையில் இருத்தல்….தனிமையை விரும்பாதவன், தனிமையில் இருக்கத் தெரியாதவன் ஒரு எழுத்தாளனாக இருக்க முடியாது. நகுலனின் வாக்கு இவைகள்.
     உனக்கு என்னப்பா வேணும்….அமைதியா உட்கார்ந்து படிக்கணும்…படிச்சிட்டேயிருக்கணும்…எழுதணும்….அவ்வளவுதானே….நீபாட்டுக்கு அதைச் செய்யி…யார் உன்னை என்ன சொல்லப் போறாங்க…சாப்பிடற நேரத்துக்கு சாப்பிடு….எதுவும் முடிலயா…படுத்துத் தூங்கு…ஆனா என்கூடத்தான் நீங்க இருக்கணும்…என்று சொன்ன சந்துரு…..திடீரென்று அந்தப் புத்தக ரேக்கோடு வந்து நின்று விட்டானே…! அட…என் மன ஓட்டங்கள் இந்தப் பொடியனுக்கு எப்படித் தெரிந்தது?
     உற்உறா…!!!..சூப்பர்…..எப்படா அளந்தே இந்த இடத்தை….? என் ரூம்ல இருக்கிற இந்தச் சிறிய இடத்துக்குத் தகுந்த மாதிரி கரெக்டாப் பொருந்துதே இந்த ஷெல்ஃப்…? ஆறு அடுக்கு…ஆறரை அடி உயரம்…..மாய்ந்து மாய்ந்து அடுக்கினாலும்…அத்தனை புத்தகங்களும் கொள்ளுமே…..! இங்கே நான் வச்சிருக்கிறது ரெண்டு அடுக்குதானே தேறும்…மிச்சம்….?
     லைப்ரரி மாதிரி அடுக்கணும்னு நீதானேப்பா சொன்னே…நினைச்ச நேரம் நினைச்ச புத்தகத்தை அப்பத்தான் உருவி எடுத்துப் படிக்க வசதின்னு சொன்னியா இல்லியா….அதான் இந்த ஏற்பாடு…..
     வாயடைத்துப் போனார் விஸ்வம். அதுநாள் வரை சுவரோடு சுவராக இருந்த ஒரு அடைத்த ஷெல்ப்பில் புத்தகங்களை இடம் போதாமல் செருகியும், அடைத்தும் வைத்திருந்தார். அத்தோடு இவர் மனதும் அடைந்து போயிருந்தது. வந்திருக்கும் பையன் வீட்டில் எது எதற்கென்றுதான் வாயைத் திறப்பது? எதற்கெல்லாம்தான் அவனைச் சிரமப் படுத்துவது?
     அப்பா…லேப் டாப் வாங்கியாச்சு….ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கிக் கொடுத்துட்டேன்….நெட் போட்டுக் கொடுத்துட்டேன்…உனக்குன்னு ப்ளாக் ஓப்பன் பண்ணியாச்சு…..ஃபேஸ் புக் திறந்தாச்சு…..யூ ட்யூப் இருக்கு….ஒரு நாளைக்கு ரெண்டு ஜி.பி. தாராளமா யூஸ் பண்ணலாம்… ….நாள் முழுக்க இலக்கிய நிகழ்வுகள், உபன்யாசங்கள் கேட்கலாம்…இதெல்லாம் போக 45 இஞ்ச் மெகா டி.வி வாங்கி மாட்டியாச்சு… உன் ஆளுமைக்கு…..இன்னும் ஏதாச்சும் மிச்சமிருந்தாச் சொல்லு….வாங்கிடுவோம்….நல்லா அனுபவிச்சிட்டு உறாய்யா…சந்தோஷமா இரு….
எல்லாம் சரிதான். ஆனாலும் இவருக்கு என்னவோ ஒன்று உதைத்தது. ஊரில் இருக்கும் தன் சொந்த வீட்டில் இருப்பது போலான சுதந்திரத்தை இங்கு எதிர்பார்க்க முடியுமா? இருப்பதற்குள், அடுக்ககக் குடியிருப்பில்,  அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான். எப்போதும் கைவசம் கொண்டு வந்து வைத்திருக்கும் கொஞ்சப் புத்தகங்களையே…சரி…இவைகளைப் படித்து முடித்து பிறகு பார்ப்போம்….என்று பொறுமை காத்தார். ஆனால் இலக்கியம் படிப்பது என்பதும் சுவைப்பது என்பதும்…அந்த வகையினதா? அப்படியா கட்டி நிறுத்த முடியும்? படித்து விட்டு, படித்து விட்டு ஒதுக்கி விடும் வகை மாதிரியா? தோன்றும் போதெல்லாம், தோன்றிய எழுத்தாளர்களையெல்லாம் கைவசம் ரெடி என்று எடுத்து எடுத்துப் படித்துச் சுவைப்பதுதானே ஒரு சிறந்த வாசிப்பாளனுக்கு, ஒரு  படைப்பாளிக்கு இருக்கும் இலக்கணம்?
                அவன் அம்மாவோடு, தான் அடிக்கடி வாதிப்பதையெல்லாம் இந்தப் பயல் கேட்டுக் கொண்டிருந்திருப்பானோ? அப்பாவின் உள்ளார்ந்த ஆசை இவைகள் என்று உணர்ந்திருப்பானோ? தான் செய்யும் ஒரே செலவு இந்தப் புத்தகங்கள் வாங்குவதுதான். அதைக் கூட நீலா அவ்வப்போது கடிந்து கொண்டிருப்பாள். ஆனால் இவன் ஒரு நாளும் ஒரு முறையும்கூட ஒன்றும் சொன்னதில்லையே…!
     ஏம்மா…அப்பா என்ன சினிமா…டிராமான்னா சுத்தறார்…? இல்ல வெளில போய் எங்கயாச்சும் ஆசையாச் சாப்டுட்டு வர்றாரா? அவருக்குன்னு ஒரு தண்டச் செலவு உண்டா?…..செலவே கிடையாது…அப்புறமில்ல தண்டச் செலவுங்கிறதுக்கு…! ஏதோ சர்வீஸ்ல இருக்கிற காலத்துலேர்ந்து இந்த ஒரு ஆசைதான்…புஸ்தகம் படிக்கிறது….படிச்சிட்டுப் போகட்டுமே….அதுனால உனக்கென்ன நஷ்டம்….அதுவும் மாசா மாசமா புஸ்தகம் வாங்குறாரு…வருஷங்கூடி…புத்தகக் கண்காட்சி போடைல ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு வாங்கிட்டு வர்றாரு…..அது ஒரு தப்பா….அதுதாம்மா அப்பாவை ஆரோக்கியமா வச்சிருக்கு…அதப் புரிஞ்சிக்கோ ….இந்த ஒண்ணையும் நீ கட் ஷார்ட் பண்ணினேன்னு வச்சிக்கோ…அப்புறம் அப்பா படுக்கைல விழுந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே…..வாழ்க்கைல ஒவ்வொரு மனுஷனும் இப்டி ஏதாச்சும் ஒண்ணை விடாமத் துரத்திக்கிட்டேயிருக்கான்…ஓடிட்டேயிருக்கான்…அப்பத்தான் இந்த வாழ்க்கையும் ஸ்வாரஸ்யமா இருக்கும்….மனுஷனும் வயசானாலும் புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுவான்…அதனால இதையெல்லாம் எடுத்துப் பிடிச்சு சதா சொல்றத விடு….அப்புறம் அப்பா மனசு ரொம்ப சங்கடப்படும்….நான் ஊர்ல போய்  இருந்துக்கிறேன்னு சொன்னாலும் சொல்லிப்புடுவாரு…ஏற்கனவே அந்த எண்ணம் இருக்கும் போலிருக்கு….கிளம்பிட்டார்னா ஆளப் பிடிக்க முடியாது…அப்புறம் உனக்குத்தான் சங்கடம்…அவசர ஒத்தாசைக்கு உனக்கு அவர் ஒருத்தர்தான்.நாங்க ரெண்டு பேரும் ஆபீஸ் போயிருக்கைல தனியாக் கிடப்பியா? உடம்புக்கு என்னமாவது பண்ணித்துன்னா? கவனம்…..    
என்னமாய் பொறுப்பாய்ப் பேசுகிறான்…இந்த அளவுக்கான பொறுப்புணர்ச்சி இந்த வயதிலே இவனுக்கு எப்படி வந்தது? இவன் வயசில் தன்னிடம் கூட இது இல்லையே…..? – விஸ்வேஸ்வரனுக்கு மனசெல்லாம் நிரம்பிப் போயிற்று.
     ஆனா அன்னிக்கு கடைசியா ஒண்ணு சொன்னானே…அதக் கேட்டியா…? இப்பொழுது மனசாட்சி சொல்லிற்று. ரொம்ப நெருக்கினா நான் ஊர்ல போய் இருந்துக்கிறேன்னு சொன்னாலும் போச்சு என்றானே…..அந்த மனநிலை இப்போது தனக்கு வந்து விட்டதே….இதை எப்படிச் சொல்வது?
     எதிரே அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களையே பார்த்துக் கொண்டு யோசனையில் இருந்தார் விஸ்வம். புத்தகங்களாய்ப் படித்துப் படித்து ஒரு மாதிரியான மோன நிலைக்கு அல்லது ஞான நிலைக்குத் தன் மனம் இடம் பெயர்ந்து வி்ட்டதோ? ஏனிப்படி சமீப நாட்களாய் மனசு தனிமையை நாடித் தவிக்கிறது? ஏகாந்தமாய் ஊரில் உள்ள  அந்தப் பெரிய வீட்டில் ஒண்டிக் கட்டையாய் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதில் ஆழ்ந்து போகிறதே மனம்? இங்கு கிடைக்காத, இல்லாத ஏதோ ஒன்று அங்கிருப்பதாய் மனம் கிடந்து அவாவுகிறதே….! எதையாவது காரணம் சொல்லிக் கொண்டு தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஏன் மனம் இத்தனை வேகம் கொள்கிறது?
     இந்த பார்…கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சா….கடமை முடிஞ்சிது அத்தோட…அப்புறம் அவுங்கவுங்கதான் அவங்களோட ஃபேமிலியைப் பார்த்துக்கணும்….
     ஒரு நாள் மனைவி நீலாவிடம் இப்படித்தான் அடி போட்டார் விஸ்வம். ஆரம்பிக்கும்போதே இன்றைக்கு சண்டைதான் என்கிற நினைப்பிலேயேதான் துவக்கினார். ரெண்டுல ஒண்ணு பார்த்திருவோம்ங்கிற கதைதான்….
     என்ன இப்டிச் சொல்றீங்க….அவனுக்கு இருபத்தியேழுதான் ஆகுது….அந்தப் பொண்ணுக்கு இருபத்தி நாலு…..ரெண்டும் சின்னப் பிள்ளைங்க….அதுகளுக்கு ஆபீஸ் போக, வர இதுக்குத்தான் நேரம் சரியா இருக்கு….போறாங்க…வந்து சாப்பிடுறாங்க…தூங்குறாங்க…திரும்ப எழுந்து குளிச்சிட்டு ஆபீஸ் கிளம்பிடுறாங்க…போதாக் குறைக்கு இந்த ஐ.டி. கம்பெனிகளோட லட்சணமும் அந்த அளவுலதான் இருக்கு….கசக்கிப் பிழிஞ்சிடறாங்க….அதுனால சனி, ஞாயிறுன்னு ஜாலியா வெளில கிளம்பிடுறாங்க….கொஞ்ச நாளைக்குத்தான் சந்தோஷமா, உறாய்யா… இருக்கட்டுமே….என்ன கெட்டுப் போகுது….நாமதான் இருக்கமே…..செய்திட்டுப் போறோம்….நம்ம பிள்ளைகளுக்குத்தானே செய்றோம்…அவன் சந்தோஷமா இருக்கணும்னுதானே இந்தச் சென்னைல வீடு வாங்கிட்டு வந்தோம்….கல்யாணமும் ஆயிடுச்சு…..மீதி நாட்களை அவனுக்காகக் கழிச்சிட்டுப் போவோமே….ஊர்ல போய் ஒத்தக்கட்டையா இருந்திட்டு, நீங்களும் நானும் மூஞ்சிய மூஞ்சியப் பார்த்தி்ட்டு….வெட்டியாக் கழிக்கணுமா…இத்தனை வருஷமா பார்த்தது போறாதா? .நல்லா யோசிங்க….இத்தனை நாளும்  நாம ரெண்டு பேரும் சண்டையும் சச்சரவுமா இருந்தது பத்தாதா?    இப்போ பிள்ளைகள் கண்காண இருக்கிறதுதானே நிம்மதி, திருப்தி, சந்தோஷம்…..-நீலா அடுக்கியதைப் பார்த்தால் வாயே திறக்க முடியாதுதான். ஆனாலும் இவரும் இவர் பங்குக்குக் கொஞ்சம் சொல்லத்தான் செய்தார். எனக்கும் சில பாய்ன்ட்கள் இருக்கத்தான் இருக்கு…. என்று ஆரம்பித்தார்.
                நானெல்லாம் கல்யாணம் பண்ணினவுடனே தனியாத்தானே போய் இருந்தேன். ரெண்டு மாசத்துல நீ டிரான்ஸ்பர் வாங்கிட்டு மதுரை வந்துடலயாஆரம்பத்துலர்ந்து  தனிக் குடித்தனம்தானே…..! நாம நடத்துலயா  குடும்பம்….? அதுபோல இவங்களும் இருந்திட்டுப் போறாங்க…..அதான் கை நிறையச் சம்பளம் அள்ளிக் கொடுக்கிறானே….வச்சிட்டு செலவழிக்க வேண்டிதானே…..செலவு பண்ணி, செலவு பண்ணி அவங்களுக்கும் சேமிப்புங்கிற பொறுப்பு வர வேண்டாமா….நாம கூடவே இருந்து முட்டுக் கொடுத்திட்டேயிருந்தா…. குடும்ப வரவு செலவு தெரிய வேண்டாமா…பழக வேணாமா…. ? – விடாமல் இவரும் அடுக்கத்தான் செய்தார். ஆனால் பலமாய் ஒரு கொக்கியைப் போட்டாள் நீலா. அதில்தான் அதிர்ந்து போனார் இவர்.
                                நீங்களும் நானும் குடித்தனம் ஆரம்பிக்கிற போது உங்களுக்கு முப்பத்தஞ்சு….எனக்கு முப்பத்தி ரெண்டு….அதுவும் இதுவும் ஒண்ணா…..குருவி தலைல பனங்காய  வச்ச மாதிரி இப்பவே அவங்க எல்லாத்தையும் சுமக்கணுமா…..? இந்தப் பேச்சை இத்தோட விடுங்க……ரொம்பப் பிடிவாதம் பிடிச்சீங்கன்னா அப்புறம் நீங்கதான் தனியாப் போக வேண்டிர்க்கும்…..ஆம்மா……!
     அடிப் பாவி மவளே…! என்னாடி இப்டிச் சொல்றே? போற போக்கைப் பார்த்தா என்னையே கழட்டி விட்ருவ போலிருக்கு….? என்னவோ ஒரு தயக்கம் என்று நினைத்தோமே அது இதுதானோ?  எனக்குன்னு ஒரு பொண்ணு இல்லாமப் போச்சு….இருந்திருந்தா அது கேட்கும் இப்ப… அப்பாவ இப்டிச் சொல்றியேன்னு….பரவால்ல இருக்கட்டும்….வந்திருக்கிற என் மருமகளயே என் பொண்ணா நினைச்சிட்டுப் போறேன்….அது எனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசாதா? நீதான் இத்தனை நாளா என்னை முறைச்சே….இனிமே அப்டி முறைச்சுப் பாரு…பார்ப்போம்….நம்ப வீட்டுக்கு வந்த அந்தப் பொண்ணு முன்னாடி நீ என்னை முறைச்சேன்னா உனக்குத்தான் அசிங்கமாக்கும்…ஓஉறா….அப்டியா சமாச்சாரம்னு அது நம்ப பையனை மதிக்காமக் கிளம்பிடும்…அதுக்கு எடம் கொடுத்துடாதே…..ஜாக்கிரதை…….
     யப்பா….யப்பா….யப்பா…..சரிய்ய்ய்யான வாய்….உங்களுக்கு…..காது வரைக்கும் நீள்றது……எதுக்கோ எதையெல்லாமோ சம்பந்தப்படுத்திப்  பேசுறதே உங்களுக்கு வழக்கமாப் போச்சு….காது புளிச்சுப் போச்சு….
                இத்தன வருஷம் கழிச்சு இப்பத்தான் தெரிஞ்சிதாக்கும்…. – அன்று  அத்தோடு பேச்சு முடிந்தது. அதற்குப் பின்,  சரிபார்ப்போம்….என்று விட்டு விட்டார் விஸ்வம். ஆனாலும் இன்று மீண்டும்  தலை தூக்குகிறதே அந்த எண்ணம்…..!!
     குழம்பிப் போய் அமர்ந்திருந்த விஸ்வேஸ்வரன் அறையின் வாசலில் நிழலாடுவதை உணர்ந்தார்.
     என்னப்பா…..என்றவாறே உள்ளே நுழைந்த சந்துருவைக் கண்டு – நீ இன்னும் ஆபீஸ்  கிளம்பலயா….? என்றார்.
     அவரின் கேள்வியில் சற்றே அதிர்ந்த சந்துரு கேட்டான்.  “என்னப்பா…இப்டிக் கேட்குற….மதியத்துக்கு மேலதானே எப்பவும் புறப்படுவேன்….”
     ஓ.கே….ஓ.கே….என்ற விஸ்வம் மீண்டும் அமைதியானார்.
     என்னாச்சுப்பா….மூட் அவுட்டாகிப் போய் உட்கார்ந்திருக்காப்ல இருக்கு….ஊர் ஞாபகம் வந்திருச்சா….? வேணும்னா அங்கே ஒரு சிசிடிவி காமரா வச்சு, இங்க சிஸ்டத்துல நெட்டோட கனைக்ட் பண்ணிடுவோம்…..
     எதுக்குடா அப்டிச் சொல்றே….?
     இல்லே….வீட்டை யாரும் தூக்கிட்டுப் போகாம இருக்கணுமில்ல…..?
     அடி…செருப்பால….பேச்சைப் பாரு…..நான் அதுக்கா மூட் அவுட்டாகி உட்கார்ந்திருக்கேன்….எதக் கொண்டு வந்தோம்…கொண்டு போறதுக்கு….?
     அப்ப வீட்டை எவனும் பெயர்த்து எடுத்திட்டுப் போனாப் பரவால்லேங்கிறே….?
     அந்த வீட்ல தனிமைல இருக்கிறதே ஒரு பெரிய தியானம் மாதிரிடா….உனக்கென்ன தெரியும் அதப்பத்தி….? அத்தனைக்கும் ஆகி வந்த வீlடாக்கும் அது…..
     அதான் தெரியுதே….நீ வழக்கத்துக்கு மாறா….கல கலப்பில்லாம….ரொம்ப நேரம் அமைதியாவும், தனிமையாவும் இருக்கிறதப் பார்த்து.….தீவிர நெனப்பு வந்திடுச்சு….அய்யாவுக்கு….
     அப்டியெல்லாம் இல்லடா கண்ணா…..என்னென்னவோ இந்த மனசுக்குத் தோணுது…..வேறொண்ணுமில்லே…..டாக்கார்டை அறுத்துக்கிட்ட மாதிரி தாவிப் பறக்குது இந்த மனசு….
     அப்டி என்னதான் தோணுது……பழைய காதலியப் பத்தியா….? இல்ல….உங்க ஆபீஸ்ல யாரையோ அடிக்கடி சொல்வியே….ரொம்ப அழகா இருப்பாங்கன்னு….அவங்கள நினைச்சிட்டியா……..அவங்கள்லாம் இப்பக் கெழவியாயிருப்பாங்கப்பா….
     டே…டேய்…குசும்புடா உனக்கு…..இந்த வயசுல எனக்கென்னடா வந்தது? என்னவோ தெரில….மனசு அப்படியொரு தனிமையை விரும்புது……….அதான்…..
                ஏம்ப்பா…..மதுரைல போய் நீ தனியா இருந்தேன்னாஉடம்புக்கு ஏதாச்சும் செய்ததுன்னா….யார்ப்பா பார்க்கிறது? கதவைப் பூட்டிட்டு ராத்திரி வீட்டுக்குள்ள தனியாப் படுத்திருக்கிற போது, திடீர்னு நெஞ்சு வலிச்சிதுன்னு வச்சிக்க….ஒரு பேச்சுக்கு சொல்றேன்….நீயா எந்திரிச்சு வீட்டைப் பூட்டிட்டு ஓட முடியுமா? ஒத்தக்கட்டையா தைரியமாப் போயி ஆஸ்பத்திரில படுத்துக்குவியா…? யாரைன்னு கூப்பிடுவே? வெறுமேயே காய்ச்சல்னு படுத்துக்கிறே….ஒரு சுடு தண்ணி வச்சுக் கொடுக்கிறதுங்கூட நீயாப் பண்ணிக்குவியா….? இங்க நாங்க இருக்கிறபோது,  அறுபத்தஞ்சு வயசுக்கு மேலே அதெல்லாம் சரின்னு உனக்குத் தோணுதா……? பேசாம இருப்பா….இங்கேயே….ரொம்ப போரடிக்குதா சொல்லுடாக்ஸி வச்சிட்டு வெளில கூட்டிட்டுப் போறேன்நாள் முழுக்க நல்லா சுத்துவோம்வீட்டுல சமைக்க வேண்டாம்……வெளிலயே சாப்பிடுவோம்….ரெப்ஃபெரஷ் பண்ணிக்கோ….சந்தோஷமா இரு….எதுக்கு எதையாச்சும் நினைச்சிட்டு அவஸ்தைப் படுறே….மனசப் போட்டு உழட்டிக்காதே…..மார்கழிக் கச்சேரிகள் நடக்குதுடிக்கெட் வாங்கித் தர்றேன்…..திருப்தியாப் போய் கேட்டுட்டு வா….டாக்சில போடாக்சிலயே வா….நாபணம் தர்றேன்….உன் பென்ஷன் காசைத் தொடாதே…..அம்மாவையும் கூட்டிட்டுப் போ…..சரியா…..சந்தோஷமா இருப்பமே…..!
     பையனின் வார்த்தைகளில் மெய் குளிர்ந்து போனார் விஸ்வேஸ்வரன். ஆனாலும் அவனிடம் சொல்ல முடியாத இன்னொன்று அவர் மனதை உறுத்திக் கொண்டேதான் இருந்தது. மலையாய் நிற்கும் அதனைச் சொல்லவும் படு தயக்கமாய் இருந்தது. அவனே மூட் அவுட்டாகிப் போனால்…என்று ஒரு பயம்…
     நினைச்ச போது நினைச்ச புஸ்தகத்தை எடுத்துப் படிக்க முடிலயே…..இங்க இருக்கிற சிலது போக மீதி நூத்துக்கணக்கான முக்கியமான புஸ்தகமெல்லாம் அங்க ஊர்லல்ல கெடக்கு……அந்தப் புத்தகங்கள் அத்தனையும் என் கண்காண இருந்தாத்தானே நான் முழு மனுஷன்…..விரும்பின கணத்துல விரும்புற எழுத்தாளரோட புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அப்டி ஒரு நாள் விடிஞ்சென்ன போயென்ன?  ஆயிரந்தான் ஆனாலும் அந்தப் புத்தகங்கள் அத்தனையும் என் கூடவே இருக்கிறது போல வருமா? என் உயிரப் பிரிஞ்சிருக்கிறமாதிரி இருக்கே எனக்கு…இதை எப்படிச் சொல்வேன் என் மகனிடம்…என் மன ஆதங்கத்தை சரியான கோணத்துல புரிஞ்சிப்பானா?
     இன்னும் எம்புட்டுக் குப்பையைத்தான் சேர்க்கணும்….? அதுகளக் கண்டாலே தலைமூர்ச்சைக்கு வருது எனக்கு… நீலாவின் கேள்விகள் இவரின் மனதைப் போட்டு அறுத்தெடுக்கிறது……! ? தவிர்க்க முடியாமல் விஸ்வத்தின் கண்களில் நீர் கசிகிறது.
     பையனோடு கூடிய, இதமான,  இன்னொரு வலுவான, சீரிய சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கலானார் விஸ்வேஸ்வரன்.                              -------------------------------------------------------------------------------
                                                                                               


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...