13 - ம் நம்பர்
பார்சல்”
-------------------------------------------------
டேவிட் பார்கவியை வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான். ஒரே வீச்சாய்ப் போய்க் கொண்டிருந்தாள் அவள். அந்தப் பின்பக்கத்திலிருந்து இவன் பார்வை அகலவேயில்லை.
மனசு ஏங்கியது. துடித்துத் துவண்டது. பிடி கொடுக்கவே மாட்டேன் என்கிறாளே? தவியாய்த்
தவிக்க விடுகிறாளே? அப்படியே கட்டிப்பிடித்து
சாய்த்து, மடியில் இருத்திக் கொண்டு கைகளை இஷ்டம்போல் விளையாட விட வேண்டும் என்று துடிக்கிறது
மனசு. . அத்தனையும் இன்று ஏமாற்றமாகிப் போனது.
மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டிருப்பாளோ? கண்களையே
அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தாளே? உள்ளபடி காட்டிவிடுமே அது? உள்ளத்தைக் காட்டிடும்
கண்ணாடியாயிற்றே? கெஞ்சினாள் மிஞ்சுகிறாள். மிஞ்சினால் கெஞ்சுவாளா?
பார்க்….பார்க்…. கொஞ்சம் திரும்பித்தான் பாரேன்….
சற்று முன்பு வரை அவளிடம் இப்படித்தான் கெஞ்சிக்
கொண்டிருந்தான். லவலேசமும் பொருட்படுத்தாமல் இதோ நடந்து கொண்டிருக்கிறாள்.
பார்க், பார்க் என்று அழைப்பது பிடிக்கவில்லையோ?
அதென்ன பார்க்கு, சார்க்குன்னுட்டு? அழகா பாருன்னு
கூப்பிட வேண்டிதானே? - அதற்காக இப்படியா முறைத்துக் கொள்ள வேண்டும்?
பார்வதின்னு பேர் இருந்தாத்தான், பாருன்னு கூப்பிடுவாங்க…அது
ரொம்பப் பழைய பேராச்சே….பாரு, என்னைக் கொஞ்சம் திரும்பிப் பாரு. இதுவும் ஓல்டு டயலாக்…அதுனாலதான்
பார்கவியச் சுருக்கி பார்க் பார்க்ன்னு கூப்பிடுறேன்…பார்வதி, ஜானகி, லட்சுமி, கல்யாணி,
இதெல்லாம் ஐம்பது, அறுபதுகள்ல வந்த சினிமா அம்மாக்கள் பேராக்கும்….பார்கவிங்கிற உன்
பெயரை மாடர்னா எப்டிக் கூப்பிடுறதுன்னு யோசிச்சேன்…இப்டித்தான் தோணிச்சு….பிடிக்கலையா?
பார்கவின்னே முழுசாக் கூப்பிடுங்க….
வெறுமே கூப்பிட்டுக் கூப்பிட்டு என்ன பண்றது?
நீதான் விலகி விலகி ஓடுறியே? கொஞ்சம் நெருங்கினாப் பரவால்ல…
நெருங்கினா, தீப்பத்திக்கும்….ஓ.கே.யா?
எனக்கு மட்டுமா பத்தும்? உனக்கும் சேர்த்துத்தானே?
எனக்குப் பத்திச்சின்னா உடனே அதை எப்படி அணைக்கிறதுன்னு
எனக்குத் தெரியும்…ஆனா ஆம்பளைங்கதான் கட்டு மீறிப் போயிடுவீங்க…அப்புறம் தடுக்கிறது
ரொம்ப சிரமமாயிடும்…அதுலயும் உங்ககிட்டே அந்த நிதானம் இருக்கிறமாதிரியே தெரியலையே…
மடையைத் திறந்தாத்தானே தடுக்க முடியாது. இங்கதான்
அப்டியில்லையே? மூடி மூடி, பொத்திப் பொத்தித்தானே வச்சிட்டாகுது….
போதும் உங்க அசட்டுப் பேச்சு….நான் சொன்னது என்னாச்சு…அதைச்
சொல்லுங்க முதல்ல…?
இன்னும் முடியலை பார்க்…
முடியலைன்னா?
முடியலைன்னா முடியலை…அவ்வளவுதான்…
அப்போ அப்டியே வச்சிட்டிருங்க…நான் வரேன்…..கிளம்பிவிட்டாள்.
இப்டிப் பொசுக்குப் பொசுக்குன்னு கோவிச்சுக்கிட்டா
என்ன அர்த்தம்? இதுக்கா இத்தனை நேரம் உனக்காகக் காத்திட்டிருந்தது?
காத்திட்டிருக்கிறதுதான் சுகம்னு சொல்லுவாங்க…நீங்க
என்னடான்னா அலுத்துக்கிறீங்க…
அலுத்துக்கல செல்லம்….ஒண்ணுமே தராமப் போறியே…?
என்ன தரணும்? கன்னத்தில ஒண்ணு கொடுக்கட்டுமா?
கையை ஓங்கினாள். முகத்தில் தெரிது குறும்பா, உண்மையான கோபமா? என்னை ஏமாற்றுகிறாளோ?
முகம் சட்டென்று மாறியது டேவிட்டுக்கு. பாவி,
என்ன கிராக்கி பண்ணுகிறாள்? ஒரு பிடிக்குத் தாங்குவாளா? சமாளித்துக் கொண்டான்.
அப்படித் தர்றதுக்கு நான் எதுவும் தப்புப் பண்ணலியே?
ஓங்கினா பளார்னுதான் அறையணுமா? செல்லமாத் தட்டக்
கூடாதா,?
சட்டுன்னு நீ அப்டி செய்ததும், கொஞ்சம் தடுமாறிட்டேன்…
உன் கை பட்டா அதோட சுகமே தனி….- கன்னத்தைத் திருப்பிக் காண்பித்தான். உயர்ந்த கையை
இழுத்து அதில் வைத்துக் கொண்டான். மறுக்கவில்லையே….?
அடிக்கழுத, மனசுல இத்தனை ஆசையை வச்சிக்கிட்டு,
நாடகமா ஆடறே? நான் நடிக்கிறேனா, நீ நடிக்கிறியா?
ஏன் சொல்லலை? அத முதல்ல சொல்லுங்க….
என்ன டார்லிங்…இப்டி அவசரப்படுறே? நேரம், காலம்,
சமயம் பார்த்துல்ல சொல்லணும்…அப்டியெல்லாம் சட்டுப்புட்டுன்னு எங்கப்பாகிட்டே நெருங்கிட
முடியாது…அவர் பல வேலைல இருக்கிறவரு…எப்போ வர்றார்…என்ன செய்றார்…எப்போ போவார்னு யாருக்குமே
தெரியாது. எனக்கு உள்படன்னு வச்சிக்கயேன்…எப்போ, எப்டிச் சொன்னா காரியம் ஆகும்னு இன்னும்
பிடிபடவே மாட்டேங்குது…அதான் யோசனைலயே இருக்கேன்….
அப்போ ஒண்ணு செய்யுங்க….பேசாம என்னைக் கூட்டிட்டுப்
போய் அவர் முன்னாடி நிறுத்திடுங்க…நான் பட்டுன்னு விஷயத்தைப் போட்டு உடைச்சிடுறேன்….ரெண்டுல
ஒண்ணு தெரிஞ்சி போயிடும்ல…?
ரெண்டுல ஒண்ணா? ரெண்டெல்லாம் கிடையாது….ஒண்ணுதான்…
பார்கவியின் முகத்தில் புன்னகை படர்வதைக் கவனித்தான்
டேவிட்.
என்ன ஒண்ணு?
ஒண்ணுமே தெரியாத பப்பா போலக் கேளு…. அதெல்லாம்
முடியாதுன்னு சொன்னாருன்னா, சரின்னு வந்திட முடியுமா? அதத்தான் சொன்னேன்…
வேறென்ன செய்வீங்களாம்? – இப்போது அவள் முகம்
அவன் மடியில் விழுந்திருந்தது. தலையை மெல்லத் தடவ ஆரம்பித்திருந்தான் டேவிட். அதிலிருந்து
கிளம்பிய மெல்லிய நறுமணம் அவனைக் கிறங்கடித்தது. ஒரு கொத்து மல்லி அந்தத் தலையில் படர்ந்திருந்தால்
அந்த ஸ்பெஷல் கிறக்கமே தனி.
சொன்னா மறுப்புச் சொல்லாம, சரி, கூட்டிட்டுவாங்கணும்..அதைத்தான்
எதிர்பார்க்கிறேன்.
அப்போ அதுக்கு என்னதான் பண்றது…?
அதுக்குத்தான் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திட்டிருக்கேன்.
கிடைக்க மாட்டேங்குது….
எந்த மாதிரி சந்தர்ப்பம்? எங்கப்பா அம்மாவை பேசச்
சொல்லவா?
அது சரிப்படாது. எடுத்த எடுப்பிலே எங்கப்பா கோபம்தான்
படுவாரு…? தன் கௌரவம் முக்கியம்னு நினைப்பாரு… அவர் எதிர்பார்க்கிறதை நீங்க செய்ய முடியாது…
இதை வேறே வழிலதான் மடக்கணும்…
அப்போ அதை எப்டித்தான் செய்றதாம்? எந்த அப்பாவாச்சும்,
பையன் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்றப்போ எடுத்த எடுப்பிலேயே சம்மதிச்சிருக்காங்களா?
நடப்புலயும் இல்ல, சினிமாவுலயும் கிடையாது….கதைகள்லயும் பார்க்க முடில….அவரா நம்ம ரெண்டு
பேரையும் சேர்த்து எங்கயாச்சும் நாம சுத்துறதைப் பார்த்தாத்தான் உண்டு….அப்போதான் இதுக்கு
விடிவு பிறக்கும்…
அப்போ ஒண்ணு செய்வோம்….எங்கப்பா ஒரு குறிப்பிட்ட
டயத்துலே எங்கெங்கே போவார்னு எனக்குத் தெரியும்….அங்கே போய் அவர் பார்க்குறமாதிரி உட்கார்ந்துக்குவோம்…
தற்செயலா கண்ணுல பட்டதுபோல அவர் பார்வைல படுவோம்….நாமளா வலிய மாட்டிக்கும்போது விஷயத்தைச்
சொல்லித்தானே ஆகணும்…
அபத்தமா இருக்கு…வேறே ஏதாவது நல்ல ஐடியா யோசிங்க…
இன்னொரு வழி உண்டு. எங்கப்பா எங்கிட்ட இதுவரை
எந்த வேலையும் சொன்னதேயில்லை. அவர் ஏதாச்சும் முக்கியமான வேலையைச் சொல்லி, அதை நான்
வெற்றிகரமா முடிச்சிட்டேன்னு வச்சிக்கோ, அப்போ அதுக்கு பிரதிஉபகாரமா, எனக்கு இதை நீங்க
செய்துதான் ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்னுடலாம். மகன் விருப்பத்தை நிறைவேத்தறதுதான்
ஒரு தந்தையோட கடமை. இங்க நேரடியா அப்படியெல்லாம் யோசிக்கவோ பேசவோ முடியாது. அப்டி ஏதாச்சும்
சொல்லிட மாட்டாரான்னு காத்திட்டிருக்கேன். அந்த நல்ல சந்தர்ப்பம் உன் அதிர்ஷ்டத்துலதான்
எனக்கு வாய்க்கணும்…
இதுக்கும் என் அதிர்ஷ்டத்துக்கும் என்ன சம்பந்தம்?
பின்னே? கல்யாணம் ஆகி, ஆயுசு பூராவும் என்னோட
வாழப் போறவ நீ. உன் யோக ஜாதகத்துலதான் நம்ப குடும்பமே செழிக்கணும். வீட்டு லட்சுமி
அப்படித்தானே இருக்கணும்…
இதை டேவிட் பார்கவியிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது
சற்றுத் தள்ளி ஒரு கார் வந்து நின்றதும், கறுப்புக் கண்ணாடிக்குள்ளிருந்து இரண்டு கண்கள்
அவர்களை உற்றுப் பார்ப்பதையும், பக்கத்தில் இருந்த இன்னொரு உருவம் டிரைவரை உசுப்புவதையும்
கண்ணுற்ற இவன், யாராயிருக்கும் என்று யோசிக்க
ஆரம்பித்த வேளையில், அந்தக் காரின் எண் இதற்கு
முன் எங்கோ ஒரு விழாவில் முன்னிலையாகத் தான் பார்த்திருப்பதை நினைத்துத் தனக்குள் பட்டென்று
துணுக்குற்றான்.
சரி, பாரு, நீ கிளம்பு…நாம நாளைக்குப் பார்ப்போம்….நான்
ஃபோன் பண்றேன்…என்று சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து நடக்க ஆரம்பித்தான். அவனது
இந்தப் படபடப்பிற்கு என்ன காரணம் என்று புரியாமல் அந்தக் காரில் இருந்தது யாராயிருக்கும்
என்று யோசிக்க ஆரம்பித்தாள் பார்கவி.
( 2 )
சீக்கிரமே உன் கல்யாணத்தை முடிச்சிடணும்னு இருக்கேம்மா….
– புரந்தரன் தீர்க்கமாய் நோக்கிக் கொண்டே இப்படிச் சொன்னபோது, முகத்தில் எந்தவித
உணர்ச்சியையும் காண்பிக்காமல், இறுக்கமாய் நின்றாள் பார்கவி.
அதைத்தான் தந்தை தன் முகத்தில் தேடுகிறார் என்று
ஏனோ உள் மனம் சொல்லியது அவளுக்கு. நகரின் முக்கியப் பிரமுகர். பல சங்கங்களிலும், அமைப்புகளிலும்
அங்கம் வகிப்பவர். எங்கே எது நடந்தாலும் காதுக்கு வராமல் போகாது என்கிற பரந்த கௌரவத்தைத்
தன்னகத்தே கொண்டவர். பல்வேறு தொழில்களில் தன் பணபலத்தை முடக்கி, யாரும் தன்னை ஒதுக்கிவிட
முடியாது என்ற இறுக்கமான நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்.
ஒருவேளை டேவிட்டின் தந்தையை அப்பா ஏன் அறிந்திருக்கக்
கூடாது? தொழில் ரீதியாக ஏன் அவர்களுக்குள் பழக்கம் இருக்கக் கூடாது? அங்கங்கே இருக்கும்
ரோட்டரி சங்கக் கூட்டத்திற்கு அடிக்கடி செல்பவர்தானே அப்பா. அது முக்கிய பிரமுகர்களை
ஒருங்கிணைக்கும் இடம்தானே? அங்கே நிச்சயம் சந்தித்திருக்கும் வாய்ப்பு உண்டே? டேவிட்டிற்கும்
எனக்கும் இருக்கும் காதல் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். விஷயம் ரொம்பச் சுலபமாக
முடியும் வாய்ப்பு இருக்கும்போது டேவிட் ஏன் இத்தனை தயங்க வேண்டும்?
சட்டென்று அவள் புத்திசாலித்தனமான மூளை ஒன்றை
நினைத்துப் பார்த்தது. நேற்று தற்செயலாய் ஒரு
கார் நின்று தங்களைக் கவனித்தது. டேவிட்
வேகமாய் கிளம்பிப் போனார். அதன் தொடர்ச்சியாய் இன்று இந்தக் கணத்தில் அப்பா தன்னிடம்
கல்யாணம் பற்றிப் பேசுகிறாரே? அந்தக் காருக்குள் இருந்த நபர்களுக்கும் இதற்கும் ஏதேனும்
தொடர்பிருக்குமா? அவள் மூளை வேகமாய் யோசிக்க ஆரம்பித்தது. ஏன் பொருத்திப் பார்க்கக்
கூடாது?
சின்னவயசிலேயிருந்தே நாங்க பேசி வச்ச ஒரு பொக்கிஷம்
உனக்குன்னு காத்திட்டிருக்கும்மா….அந்தப் பொக்கிஷத்தை அப்டியே அலுங்காமக் குலுங்காம
எடுத்து உன் கைல ஒப்படைக்கப் போறேன்….அது உன்னை வாழ்க்கை பூராவும் கண்கலங்காமப் பாதுகாக்கும்.
அந்த நம்பிக்கை எனக்கு நிச்சயம் உண்டு. நீ உன் பரிபூரணமான அன்பை அது மேல செலுத்தி உன்
கட்டுக்குள்ள வச்சிக்கிரணும்… அது உன் சாமர்த்தியம்…
யாரைப்பா சொல்றீங்க…? – மனதுக்குள் தோன்றிய திடீர்
அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் கண்கள் கலங்குவதைக் கட்டுப்படுத்த இயலாமல் தந்தையின்
மார்பில் மெல்லச் சாய்ந்தவாறே ஆதரவாய்க் கேட்டாள் பார்கவி.
மகளின் ஆதுரமான அன்பில் தன்னை இழந்தார் புரந்தரன்.
வேறே யாரும்மா? ஸ்ரீநேசனைத்தான் சொல்றேன்….உனக்குன்னே வளர்ந்த பிள்ளை…ஒழுக்க சீலன்…அம்மா
போட்ட கோட்டைத் தாண்டாதவன்….அத்தனை கட்டு செட்டா வளர்த்திருக்காங்க எங்க அக்கா நீலா.
கொஞ்சம் வசதிக் குறைவுதான். ஆனா அந்த மாதிரிப் பையன் உலகத்துல எங்க தேடினாலும் கிடைக்க
மாட்டான். அவனைப் பிடிச்சு உன் கையை அவன்ட்ட ஒப்படைச்சு, என் தொழில் பாரங்கள் பலதையும்
இறக்கி வச்சிடலாம்னு நினைக்கிறேன். வீட்டிற்கு வந்ததும் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம்
அப்பா கொடுப்பார் என்று பார்கவி நினைக்கவில்லைதான். ஸ்ரீநேசன் உண்மையிலேயே தன்னை நேசிப்பவன்தான்.
நீ நேசிப்பவர்களைவிட உன்னை நேசிப்பவர்களைத் தேர்வு செய் என்று எங்கோ படித்தது சரிதான்.
அப்படித் தன்னை நேசிப்பவனாகத்தான் அவன் இருக்கிறான். ஆனால் தன் மனம் இப்படி ஒரு வலையில்
மாட்டிக்கொண்டிருக்கிறதே? இதை எப்படித் தெரிவிப்பேன் அப்பாவிடம்? கடவுளாகப்பார்த்து
இரக்கப்பட்டு இந்தச் சிக்கலைத் தீர்த்து வைத்தால்தான் ஆயிற்று போலிருக்கிறதே? எப்படிச்
சொல்லுவேன் அப்பாவிடம்? டேவிட் என்ற பெயரைக் கேட்டாலே உடன் கொதித்து விடுவாரே அப்பா?
ஜாதி மாறி, மதம் மாற்றிக் கல்யாணம் செய்வது என்பதெல்லாம்
அவருக்கு ஆகாதே? எந்த வகையில் இதைத் தீர்ப்பது? யோசித்து யோசித்து மண்டைதான் குழம்பியது
பார்கவிக்கு. கடைசியாக ஒரு வழி பிறந்தது மனதில். அதை உடனடியாக சோதித்துப் பார்த்துவிட
வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டாள்.
( 3 )
டெலிபோன் மணி அலறியது. ரிசீவரை
எடுத்தான். டேவிட் உறியர்…
எதிர்வரிசையில்
அப்பா. எப்போது எதில் பேசுவார் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவருக்குப் பிடித்தது
லேன்ட் லைன்தான்.
என்னப்பா, சொல்லுங்க…
உங்கிட்டே ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப்
போறேன்…சின்சியராச் செய்வேன்னு நினைக்கிறேன்…
நிச்சயமாச் செய்றேம்ப்பா…சொல்லுங்க… - அப்பா என்ன
சொல்லப் போகிறார் என்று சற்றுப் பதட்டத்துடனேயே எதிர்நோக்கினான் டேவிட்.
அதை போன்ல சொல்ல முடியாது. நேர்ல வா….
எங்கே?
பூந்தோட்டம் பங்களாவுக்கு….
அடுத்த பத்தாவது நிமிடம் தன் தந்தை மைக்கேல் ராபர்ட்
முன் நின்றான் டேவிட்.
ரெண்டு கோடி ரூபா மதிப்புள்ள அபின் பேக்கிங்கோட
ரெடியா இருக்கு…நம்ப எஸ்டேட் பங்களாவுக்கு நீ உடனடியாப் போகணும்…சரக்கைக் கார்ல ஏத்திட்டு
எப்படியாவது கொண்டுபோய் பெங்களுர் பார்ட்னர் கஜராஜ்கிட்டே சேர்த்துடணும்…முடியுமா?
யோசிக்காமச் சொல்லு…
யோசித்தான் டேவிட். தயங்கினான். மலைப்பாகத்தான்
இருந்தது. இந்த மாதிரி வேலைகளையெல்லாம் தவிர்க்க விரும்பினான். எல்லாம் அப்பாவோடு போகட்டும்
என்பது அவன் நினைப்பாக இருந்தது.
உடம்பு லேசாக வியர்த்தது. மறுக்க மனமில்லை. அப்போ…கோழை
என்று அப்பா நினைத்துவிட்டால்? நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டுமே? இம்மாதிரிக் காரியங்களைச்
செய்வதற்கு எதற்கு தைரியம்? மொத்த நேரமும் பயத்தில்தானே கழியும்? என்ன பதில் சொல்வது?
வழியிலே நிறையச் செக்கிங் இருக்குமே ஃபாதர்…?
அதனால்தான் சொல்றேன்…இதைச் சாமர்த்தியமா முடிக்கணும்னு….உன்னால
முடியும்னு எனக்குத் தோணுது…
உதடுகளை அழுந்தக் கடித்தான் டேவிட். மூளையில்
பளீரென்று ஒரு ஷாட்…ஆனால் இதற்கு அப்பா சம்மதிப்பாரா?
அப்பா, ஒரு விஷயம்…
என்ன…?
சரக்குல இருக்கிறது போக, தனியாக் கொஞ்சம் வேணும்
எனக்கு….
சொல்லி முடிக்கவில்லை. கொதித்தெழுந்தார் மைக்கேல்.
இடியட்…உன் ஃப்ரெண்ட்சுகளோடு போய்க் கூத்தடிக்கவா…?
நான் உன்னை உருப்படியா ஒரு பெரிய இடத்துல சேர்க்கணும்னு மனக்கோட்டைக் கட்டிக்கிட்டிருக்கேன்….நீ எல்லாத்தையும்
சிதைச்சிடுவ போலிருக்கே? இதெல்லாம் வேண்டாம்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? அப்டியும்
திருந்த மாட்டேங்கிறியே…? உடம்பு என்னத்துக்கு ஆகும்? அழிஞ்சு போவேடா…அழிஞ்சு போவே…உன்னை
நம்பிக் கூப்பிட்டேன் பாரு…என்னைச் சொல்லணும்…என் புத்தியை செருப்பால அடிக்கணும்…
அய்யய்யோ…அதுக்கில்லைப்பா…நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம்
இல்லை. இதுவும் காரியத்தை சக்ஸஸ்ஃபுல்லா முடிக்கிறதுக்காகத்தான்…இதை மட்டும் செய்யுங்க….அப்டியும்
வேலை முடியலைன்னா, தப்பித்தவறி நான் போலீஸ்ல மாட்டிக்கிட்டேன்னா….என்னை நீங்க பெயில்ல
கூட எடுக்க வேண்டாம்…
மகனின் முகத்தைப் பார்த்தார் மைக்கேல். இரக்கம்
பிறந்தது. அந்த முகத்தில் தெரிந்த உறுதி அவரை மிரள வைத்தது. ஏதேது…என்னை விடத் தைரியசாலியாய்
இருப்பானோ?
ரைட்…! மொத்தம் பதின்மூன்று பேக்கிங் இருக்கு…குழப்பம்
வராதபடிக்கு முதல் ஒரு டஜனை அப்படியே சேர்த்திடு…பதிமூன்றாவது பேக்கிங் சிறிசு…அது
எக்ஸ்ட்ரா…நீ கேட்கணும்னே அதுவே ரெடியாயிடுச்சு போலிருக்கு…அதைப் பயன்படுத்திக்கோ…இன்னிக்கு
ராத்திரி எட்டு மணிக்குக் கிளம்பறே…ஓ.கே….
யெஸ் ஃபாதர்…ஆனா ஒரு விஷயம்…
இன்னும் என்ன? – பொறுமை இழந்தார் ராபர்ட்.
சரக்கு உரியவர்கிட்டே போய்ச் சேரணும்…அவ்வளவுதான்…அதை
நான்தான் கொண்டுபோகணும்னு கட்டாயப்படுத்தக் கூடாது….
என்ன அதுக்குள்ளே உளர்றே…? – ஏதாச்சும் ஏடாகூடமாய்
ஆகிவிடுமோ? ஆள் தேர்வு சரியில்லையோ? எசகு பிசகாய் மாட்டிக் கொண்டுவிடுவானோ? – சட்டென்று
மின்னலாய்ப் பல எண்ணங்கள் மைக்கேலுக்கு.
உளறலை…உள்ளதைத்தான் சொல்றேன்…ஆள் மாறினாலும் கேட்கக்
கூடாது. பொறுப்புதான் என்னோடது…சரிதானா?
ஒரு நிமிடம் அயர்ந்துதான் போனார். தோளில் தட்டி,
கை குலுக்கி, உற்சாகமாய் அனுப்பி வைத்தார்.
( 4 )
எதிர் வரிசையில் ஸ்ரீநேசன் வந்து
அமருவதைப் பார்த்தான் டேவிட். அவனும் பார்த்துவிட்ட பிறகு எழுந்து வேறிடம் செல்வது
சரியல்ல. முகத்தில் வலிய வரவழைத்துக்கொண்ட
புன்னகையோடு உறலோ என்றான்.
பதிலுக்கு ஸ்ரீ ஒப்புகைத்தானா தெரியவில்லை. அதுவே
டேவிட்டிற்கு என்னவோ போலிருந்தது. தெரிந்துதான் வந்திருப்பானோ? கூட வந்து அமர்ந்திருக்கும்
ஆட்களைப் பார்த்தால் இப்போதைக்கு அவனிடம் எதுவும் பேசக் கூடாது என்பதே சரி. முடிவு
செய்து கொண்டான். ஆனால் பேச்சு அவர்களிடம் வலிய ஆரம்பித்திருப்பதே தன்னிடம் சண்டை இழுக்கத்தானோ
என்ற சந்தேகம் ஏற்பட்டது. எப்பொழுதும் நாலு பேருடன் வந்து அமரும் தான் அன்று தனியே
வந்ததும், வலிய மாட்டிக் கொண்டதும், நினைக்கையில் சற்றே உதறலெடுக்க ஆரம்பித்தது.
உறலோ டேவிட், என்ன இந்தப் பக்கம்? இங்க நான் உங்களைப்
பார்த்ததேயில்லையே? ஸ்ரீநேசன் எழுந்து வந்து அப்படி தன் எதிரில் அமருவான் என்று டேவிட் எதிர்பார்க்கவேயில்லை.
எங்கப்பாவுக்காக வெயிட் பண்றேன். வர்றேன்னு சொன்னாரு…
- ஏதோ வாயில் வந்ததைச் சொல்லி வைத்தான்.
அப்டியா, நல்லதாப் போச்சு….அவர்ட்ட நேரடியாவே
பேசிடலாமே…விஷயம் முடிஞ்சு போகுமில்ல…..
எதைச் சொல்றீங்க…?
தெரியாதமாதிரி குழந்தையாப் பேசக் கூடாது. வளவளன்னு
பேசுறது எனக்கு எப்பவுமே பிடிக்காது….நேரடியா விஷயத்துக்கு வர்றேன்…..பார்கவியோட சுத்துறத
விட்டிடுங்க….என் மனசுல இருந்த சந்தேகம் நேற்றைக்குக் கன்ஃபார்ம் ஆயிடுச்சி…நேர்லயே
பார்த்திட்டேன்….இனி ஒரு முறை உங்க ரெண்டுபேரையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது. அவ்வளவுதான்.
மீறி நடந்திச்சின்னா அப்புறம் நான் கொலைகாரனாக் கூட மாறத் தயங்கமாட்டேன். ஜாக்கிரதை……
எதுக்காக சார் இதெல்லாம் பேசுறீங்க….விட்டிடுன்னா
விட்டுடப் போறேன்….எங்க ரெண்டு பேரையும் சேர்த்து நீங்க பார்த்திட்டீங்கங்கிறதுக்காக
நாங்க ரெண்டு பெரும் லவர்ஸ், கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு நீங்களாகவே எதுக்காகக்
கற்பனை பண்ணிக்கிறீங்க…அந்த அளவுக்கான பழக்கம் இன்னும் எங்க ரெண்டுபேர்கிட்டயும் வரலை…அத்தனை
நெருக்கமும் இல்லை….நீங்க பயப்படுறதுக்கு ஒண்ணுமேயில்லை…..
இந்த பார் டேவிட்….நீ போடுற நாடகத்துக்கெல்லாம்
நான் கூடவே வந்திட்டிருக்க முடியாது….எனக்கு நிறைய வேலையிருக்கு….நான் இன்னைக்கு இங்கிருப்பேன்…நாளைக்கு
வேறொரு கன்ட்ரில இருப்பேன்….போற எடத்துலயெல்லாம் உன்னைக் கண்காணிக்கிறதே என்னோட சிந்தனையா
இருக்க முடியாது. அதுக்குன்னே ஆளை நியமிச்சு உன்னை இஞ்ச் பை இஞ்ச்சா கவனிக்கச் செய்ய
முடியும் என்னால.…எனக்குத் தெரியாம பார்கவியோட கல்யாணம் நிச்சயம் நடக்காது. அது நிச்சயம்
ஆகிட்டாலும் கூட என்னால தடுத்து நிறுத்த முடியும்…அவளை அடையறதுக்காக எந்த லெவலுக்கும்
நான் போவேன். சின்ன வயசிலேயிருந்து அவள் மேல எனக்கு ஆசை. அவள் என்னை விரும்புறாளா,
இல்லையாங்கிறதைப் பத்திக்கூட எனக்குக் கவலையில்லை. நான் அவளை அடையணும்…அவ்வளவுதான்….உனக்குத்
தெரியுமோ, தெரியாதோ ஊர்ல படிச்சிட்டிருந்தபோது ஸ்கூல்மேட் ஒருத்தன் அவளைத் துரத்திட்டேயிருந்தான்.
கையைக் காலை ஒடிச்சி அவனை முடமாக்கிட்டேன்….அத்தோட நொண்டிக்கிட்டுத் திரியறான் இப்போ….அவனைப்
பார்க்கணுமா…கோயில் பக்கத்து பாரதியார் மண்டபத்துல உட்கார்ந்திருப்பான்…வேணும்னாப்
போய்ப் பாரு….கேட்டுக்கூடப் பாரு…என் பேரைச் சொன்னவுடனே எழுந்திரிச்சி ஓடலைன்னா என்னன்னு
கேளு…புரியுதா….
நீங்க இப்படிப்பட்ட ஆளா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலே…உங்க
பேருக்கும் உங்க செய்கைக்கும் கொஞ்சம் கூடச் சம்பந்தம் இல்லாம இருக்கே…
பார்கவி நேசன்னு வச்சிருக்கணும்…ஸ்ரீநேசன்னு வச்சிட்டாரு
எங்கப்பா…அது எங்க தாத்தாவோட திரிஞ்ச பேரு…அவர் ஞாபகமா வச்சது…அவர் வச்சிட்டார்ங்கிறதுக்காக
அதைக் காப்பாத்தணும்ங்கிற கட்டாயம் ஒண்ணும் எனக்கில்லே…ஏன்னா இது என்னோட வாழ்க்கைப்
பிரச்னை….
ஓ.கே. சார்…இப்போ நான் இங்கே சாப்பிடவா…இல்ல போகவா….நீங்களே
சொல்லுங்க…அது பிரகாரம் செய்துடறேன்…
அப்பா வர்றதாச் சொன்னீங்க…இப்போ போறேங்கிறீங்க….
அவர் வேறே வந்து என்ன சொல்லப் போறாரோ…அதுக்கு
முன்னாடி கிளம்பிப் போயிடலாமில்லியா……
அப்போ அவர் வந்தா தனியா அவரைக் கவனிச்சிக்கட்டுமா?
ஸ்ரீநேசனின் பேச்சு டேவிட்டைத் துணுக்குற வைத்தது.
எதற்கும் துணிந்தவனோ? என்னமாதிரி எகிறுகிறான் பேச்சில்? எல்லாம் பணத் திமிர்…அதே பணத்திமிர்
என்னிடமும் இல்லையா என்ன? இவனால் அப்படி என்ன செய்து விட முடியும்? சமயத்துக்கு ஒரு
பொய்யைச் சொல்ல அதை அப்படியே நம்பி விட்டான். பயல் காத்துக் கிடக்கட்டும்….நமக்கென்ன….அப்பா
வந்தால்தானே…. – எழுந்தான்.
விறுவிறுவென்று வெளியே வந்தான்.
சார்…ப்ளீஸ்…. – சர்வரின் பணிவான குரல் இவனைத்
தடுத்தது.
அந்தோ உட்கார்ந்திருக்காங்களே அவங்களைப் போய்
கவனியுங்க…நல்ல டிப்ஸ் தருவாங்க….என்றவாறே வெளியேறினான் டேவிட். அப்பா சொன்ன வேலை நினைவுக்கு
வந்தது. அநேகமாக எல்லாமும் தயாராகத்தான் இருக்கும். அப்பா, தோளில் தட்டி, கை குலுக்கி
வழியனுப்பி வைத்தது உற்சாகத்தைத் தந்தது.
( 5 )
நினைத்தது போலவே செக் போஸ்டில் கெடுபிடி. போலீஸ்
கூட்டம் வேறு ஸ்பெஷலாய் நின்றிருந்தது. எதேனும் ஒன்றில் முனைந்து விட்டார்களென்றால்,
அவர்களின் பணியின் தன்மையே தனிதான். புயலாய்ப் பணியாற்றுவார்கள். எந்தக் கொம்பனும்
அவர்களின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாதுதான். ஆனாலும் திருட்டுத்தனம் செய்பவர்களும்,
கடத்தல்காரர்களும் அதற்கும்மேல்தான் சிந்திக்கச் செய்கிறார்கள். அதுவும் அவர்களுக்குத்
தெரிந்துதான் இருக்கிறது. எந்த மேலிடத்தின் குறுக்கீடும் இல்லாதிருக்க வேண்டும். நிச்சயம்
கதையை முடித்து விடுவார்கள்.
கார் தானாகவே வேகம் குறைந்தது. தப்பிச் செல்வது
அத்தனை சுலபமில்லை. குறுக்கே லாரி வேறு நிற்கிறது. அதையும் மீறினால் பாலத்திலிருந்து
பறந்து ஆற்றுப்படுகையில்தான் விழ வேண்டும்.
மாமு, வண்டிய அப்டியே ஸ்டெடியா ஸ்லோ பண்ணி நிறுத்திக்கோ…கெடுபிடி
ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கு…..
கார் மெல்லக் குலுங்கி நிற்க காக்கி உடைகள் நெருங்கின
சுறுசுறுப்பாக.
( 6 )
தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார் மைக்கேல் ராபர்ட்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியாயிற்று. மீன் குஞ்சுக்கு நீந்த்த் தெரியும் என்று
நினைத்தது தப்பாய்ப் போய் விட்டது. தலையில் அடித்துக் கொண்டார்.
என்ன செய்யலாம்? உதவியாளரிடம் கேட்டார்.
முதல்ல எங்கே கொண்டு போயிருக்காங்கன்னு பார்க்கணும்.
ஏரியா டி.எஸ்.பி. யாருன்னு விசாரிக்கணும். பிறகு நம்ம ஆட்களோடு போய் முயற்சி எதுவும்
பலிக்குமான்னு யோசிக்கணும்.
பலிக்குமாவா? பலிச்சாகணும்யா…இல்லேன்னா நாமெல்லாம்
கூண்டோட கைலாசம். எந்த ஏரியாவில் பிடிச்சிருக்காங்கன்னு கவனிச்சியா? குறுக்கு வழி எது
எதுன்னு அத்தனையையும் தெரிஞ்சி வச்சிருக்கு போலீஸ். நாம எப்படியும் தப்பிச்சாகணும்.
நா இவனை அனுப்பினா ப்ரெண்ட்சுகளையுமில்லே கூட இழுத்திட்டுப் போயிருக்கான்? இது ஊருக்கே
டமாரம் போட்டு சொன்ன மாதிரியில்லே இருக்கு? மடப்பய மவன், மடப்பய மவன்…வெறி பிடித்தாற்போல்
கத்தினார் மைக்கேல் ராபர்ட்.
வெல்டன் டேவிட்…வெல்டன்…புலிக்குப் பிறந்த்து
பூனையாகாதுன்னு நிருபிச்சுட்டீங்க ஒண்டர்புல்…ஓண்டர்புல்…
கையை இழுத்துக் குலுக்கி தன் ஆட்களை பலமாகக் கைதட்ட
வைத்து டேவிட்டை வாழ்த்தினார் கஜராஜ்.
இந்த வேலையை சின்னப் பையனான உங்கிட்ட ஒப்படைச்சிருக்கேன்னு
உங்கப்பா சொன்னப்போ, நான் பயந்துதான் போனேன். ஆனா அந்த எண்ணத்தை தூள் தூளாக்கிட்டே
நீ…போலீஸ் கண்ணில மண்ணைத் தூவிட்டு எப்படி இதை சாதிச்சே…
வெரி சிம்பிள் அங்கிள். மலைப்பாதை முடிஞ்சு பைபாஸ்
ரோட்டில ராத்திரி பத்து மணிக்குள்ளே கஞ்சா கட்த்துறதா முதல்லயே போலீசுக்கு யாரோ மாதிரி
ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன்… அப்பா தனியா கொடுத்த எக்ஸ்ட்ரா பார்சலை ஒருத்தனுக்கும்
தெரியாமே காரிலே மறைச்சு வச்சேன். நாலஞ்சு நாளாகவே டூர் போவோம், டூர் போவோம்னு அனத்திட்டிருந்த
என் நண்பர்கள்கிட்டே வேணுங்கிற பணத்தைக் கொடுத்து என் கார் ரிப்பேர்னு சொல்லி இன்னொருத்தனோட
கார்லயே அனுப்பினேன். நாளைக்கு லைட் பெங்களுர்ல வந்து நான் ஜாய்ன் பண்ணிக்கிறதாச் சொன்னேன்.
அவங்க கார் பிடிபட்டிருக்கிற அதே நேரத்துல மெயின் ரூட்ல பஸ்ஸோட பஸ்ஸா, லாரியோட லாரியா,
சொகுசா சுலபமா எந்தவித டிரபிளும் இல்லாமே அனாயாசமா உங்ககிட்டே வந்து சேர்ந்துட்டேன்
அவ்வளவுதான்….
மலைத்து நின்றார் கஜராஜ். அதற்கு மேல் ஒன்றும்
கேட்கவில்லை. மலையாக வந்த பத்துக் கோடி ரூபாய் பணம் ஆளைக் கிறங்கடிக்க மைக்கேலுக்கு
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எண்களை ஒத்தினார்.
அவசியமில்லை அங்கிள். அவசரப்படாதீங்க…நான் கிளம்பறேன்.
நேரில விஷயத்தை உடைக்கிறவரைக்கும் விஷயம் சஸ்பென்ஸாவே இருக்கட்டும்…
இட்ஸ் ஓகே…இன்னிக்கே இந்த சரக்கை உரிய பார்ட்டிக்கு
மாத்திடறதா உங்கப்பாகிட்டே சொல்லு… கைமேல் கேஷ்…அன்டர்ஸ்டான்ட்…
புரிஞ்சிது அங்கிள்….
( 7 )
டேவிட், டேவிட்…- மகனைக் கட்டிக்கொண்டு புலம்பினார்
ராபர்ட் மைக்கேல். முழுசாகப் பையனைப் பார்த்தது அவருக்கு நிறைவைத் தந்தது.
எங்கே என் ஒரே பிள்ளையையும் இழந்திடுவேனோன்னு
மலைச்சுப் போயிட்டேம்ப்பா… - சிறு குழந்தையாய் திக்கித்திக்கிப் பேசினார்.
என்ன டாடி இப்படி? – உங்களுக்கு ஏத்த பள்ளையாத்தானே
சாமர்த்தியமா இந்த வேலையை முடிச்சிட்டு வந்திருக்கேன்? என்னைப் பாராட்டுவீங்கன்னு எதிர்பார்த்தா
அழறீங்களே?
சரி, சரி…விடு. நீ மட்டும் எப்படி போலீஸ்லேயிருந்து
தப்பிச்சே? அதை முதல்ல சொல்லு…
நடந்த்தை அப்படியே விவரித்தான் டேவிட்.
ஃபெண்டாஸ்டிக் ஐடியா டேவிட்…ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்திட்டிருக்கே…போலீஸ் எந்த ரூட்ல செக் பண்ணும்னு தெரிஞ்சு வழியை மாத்திக்கிறது பெரிசில்லே…அவங்க அட்டென்ஷனை டைவர்ட்
பண்ணி எதிர்பார்த்தபடியே ஏமாற்றமில்லாமே சரக்கையும் பிடிக்க வைச்சு அவங்க சந்தோஷப்பட்டிருக்கிற
நேரத்துல வேறொரு திசையில் உன் காரியத்தை சாதிச்சிருக்கே பாரு அதைதான் பாராட்டியாகணும்.
அது சரி, உன் நண்பர்கள்?
என்ன டாடி இது? கொலைக்கும் கொடூரத்துக்கும் அஞ்சாத
தொழில் இது. இதிலே பழம் தின்னு கொட்டை போட்ட நீங்களா இந்தக் கேள்வி கேக்கறீங்க… பத்துக்
கோடில பாதி முக்கியமா, நண்பர்கள் முக்கியமா? சின்ன மீனைப் போட்டு பெரிய திமிங்கலத்தையே
பிடிச்சிருக்கேன். ஒண்ணுமே தெரியாத மாதிரி ஏதோ உதவி பண்ணப் போறது போல பசங்களை வெளியே
இட்டாந்து பத்திவிட்டா போச்சு…
அது எப்படி? எவனாவது உளறி வச்சான்னா?
சரக்கைக் காரிலே பதுக்கி வச்சது நான்தான்னு ஒருத்தனுக்கும்
தெரியாதே?
சந்தேகம் வராமலா போகும்?
ஒரு பர்சன்ட் கூட வராது. ஏன்னா எத்தனையோ முறை
அவங்க கஞ்சா அடிச்சிட்டிருந்தபோது வெறும் சிகரெட்டை ஊதிட்டிருந்தவன் நான். இதுவரைக்கும்
ஒருமுறை கூட நம்ம எஸ்டேட் சரக்கை பகிர்ந்துக்கிட்டதில்லை அவனுகளோட தெரியுமா?
என்ன சொல்ற நீ?
ஆமா டாடி…நீங்க நினைக்கிற அளவுக்கு நான் இன்னும்
கெட்டுப்போகலே…அப்படிக் கெட்டு சீரழிஞ்சிருந்தேன்னா…என் புத்தி இத்தனை கூர்மையா வேலை
செய்யாது இந்நேரம். இதை உணருங்க…என் சாமர்த்தியத்தைப் புரிஞ்சிக்குங்க…என் திறமையைப்
பாராட்டுங்க…மனசில்லையா விட்டிடுங்க…
என்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்…
ரொம்ப அற்புதமாத்தான் செஞ்சிருக்கீங்க. எப்படிங்கிறதை
நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
திடுக்கிட்டுத் திரும்பினர் இருவரும்.
( 8 )
ரொம்ப சாமர்த்தியமா, நயவஞ்சகமா நண்பர்களை ஏமாத்திய
நீங்க ஒரு சின்ன விஷயத்துல தப்புப் பண்ணிட்டீங்க. அது அவசரத்துலே விளைஞ்ச தப்பு. கஞ்சா
அடிக்கிறவன் முழுசா தப்பு பண்ணுவான். அதைத் தொடாதவன் இப்படி எங்கேயாவது கோட்டை விட்டுட்டு
நிப்பான். நீங்க…? அந்த ரகம். ஏன் மிஸ்டர்…பார்சலைக் காரில மறைச்சு வக்கணும்னு தெரிஞ்ச
உங்களுக்கு போயும் போயும் உங்க கை ரேகைகளை அழிக்கணும்னு கூடத் தெரியாமப் போச்சே? போலீஸ்
டிபார்ட்மென்டுக்கே நிறைய கேசுகளைப் பிடிச்சுக் கொடுத்தது அதுதான்னு தெரியாதா?
இன்ஸ்பெக்டர், என்ன சொல்றீங்க…?
உங்க நண்பர்களை ஏமாத்தணும்ங்கிற அவசரத்துலே காரியத்தை
சாமர்த்தியமா முடிக்கணும்ங்கிற துடிப்பிலே உங்களையே ஏமாத்திக்கிட்டீங்கன்னு சொல்றேன்…ரேகையை
வச்சு என்ன செய்ய முடியும்னு கேட்கிறீங்களா? நியூ இயரின் போது ஓட்டல் பிருந்தாவன் பார்ல
நடந்த கலாட்டா ஞாபகம் இருக்கில்லே…அப்போ பதிவு செய்த உங்க கை ஜாதகம் இப்போ எவ்வளவு
உதவியா இருக்கு பாருங்க…?
டேவிட்டிற்கு உடல் வியர்க்க ஆரம்பித்தது. வெறும்
கலாட்டாவோடு ஓடி வந்துவிட்டதாகவல்லவா இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன். தான்
யாரென்றே அன்று காட்டிக் கொள்ளவில்லையே? பின் எப்படித் துருவினார்கள்? கோலத்துக்குள்
நுழைந்தால், இவர்கள் தடுக்குக்குள் நுழைவார்கள் போலிருக்கிறதே?
அது சரி மிஸ்டர் ராபர்ட், தலையில்லாம வால் ஆடாதுன்னு
சொல்வாங்க…எத்தனை நாளா இந்த பிசினஸ்…?
திடுக்கிட்டார் மைக்கேல்…
என்ன முழிக்கிறீங்க? கஞ்சா கடத்துறதைத்தான் சொல்றேன்…
இன்ஸ்பெக்டர், வாட் டு யூ மீன்…?
ஐ மீன், வாட் ஐ மீன்….ஏதோ சினிமா வசனம் மாதிரி
இல்லே?
விளையாடாதீங்க….?
நாங்க விளையாட்டை நிறுத்தித்தான் பழக்கம்….நீட்டிப்
பழக்கமில்லே…மத்த பன்னிரெண்டு பார்சல்ஸ் எங்கேன்னு சொல்றீங்களா?
இருவருக்கும் உடம்பெல்லாம் ஆட்டமெடுத்துப் போனது.
( 9 )
விழித்தார் மைக்கேல் ராபர்ட். தலைக்கு மேல் பூகம்பமே
வெடித்தது போலிருந்தது அவருக்கு. தன் காரியங்களில் அவனையும் ஈடுபடுத்தி இப்படி மாட்டி
விட்டுவிட்டோமே? வழக்கம் போல் தன்னுடைய ஆட்களை வைத்தே இதைச் செய்திருக்கலாமோ? தேவையில்லாமல்
டேவிட்டைக் கூப்பிட்டு, அவனின் பேச்சை நம்பி, அவன் சாமர்த்தியத்தின் மேல் அசட்டு நம்பிக்கை
வைத்து, ஒரு தேர்ந்த கடத்தல்காரன் செய்யும் வேலையா இது? தனது இத்தனை வருஷ சர்வீஸ்,
போயும், போயும் இப்படி விவஸ்தையில்லாமல் ஒரு சின்ன விஷயத்தில் மாட்டிக் கொண்டதே…? அது
கிடக்கட்டும், ஒரு பார்சலை, அதுவும் ஒரு உதரியை மாதிரியாகக் கொண்டு மற்றதை எப்படிக்
கண்டு பிடித்தார்கள்? கரெக்டாகப் பன்னிரெண்டு என்கிறாரே…? அந்த ஒரு டஸன்தானே பத்துக்
கோடி…? அஞ்சு கைக்குக் கிடைத்தாயிற்று என்று வீண் கனவு கண்டுவிட்டேனோ? தோண்டினால் கஜராஜூம்
அல்லவா மாட்டிக் கொள்வார்…?
என்ன? நான் கேட்குறதுக்குப் பதிலையே காணோம்? இந்த உலகத்துலதான் இருக்கீங்களா? அதுக்குள்ளேயும் தடுமாறிட்டா எப்படி? அப்டீன்னா இந்தத் தொழில்லே உங்களுக்கு அனுபவமே பத்தலேன்னுல்ல அர்த்தம்? இதோ பாருங்க…13/13. ஏன்
சார்…? ஒரு டஜன் பார்சல்களை ஞாபகத்துல வச்சிக்க முடியாதா? அதுக்கு நம்பர் வேறையா? ஏதோ
லாரி ஆபீஸ் மாதிரி பட்டையத் தீட்டியிருக்கீங்க….ஒரு வேளை அத்தனையும் ஒரே சரக்கா? இல்ல
வேறெ வேறையா? பதிமூணு பை பதிமூணுன்னு போட்டா, அதிலேயும் வெள்ளைத் துணியில் இன்னர் டிசைன்,
அதக்கூட என்னவோ சொல்வாங்களே…உறாங்…ஞாபகம் வந்திடுச்சி….வாட்டர் மார்க்…வாட்டர் மார்க்….பிரிண்டிங்
கொடுத்தா கவனிக்க மாட்டமா? போலீஸ் கண்ணு பொட்டைன்னு நினைச்சிட்டீங்களோ? கண்ணுல வௌக்கெண்ணை
ஊத்திட்டுப் பார்க்கிறதுன்னு சொல்வாங்களே….அதெல்லாம் உண்மையா என்னன்னு நினைச்சிட்டீங்களோ?
அது கிடக்கட்டும், மீதிப் பன்னிரெண்டு பார்சலுக்கும் நம்பர் கொடுத்திருப்பீங்களே?
1/13 லேயிருந்து 13/13 வரைக்கும். தப்பு, தப்பு…13/13 இதோ இருக்கே….12/13வரைக்கும்
உள்ள பார்சல்களை நான் பார்க்க வேண்டாமா? ஏன் இப்படி நம்பர் கொடுக்கிறீங்க…? ஒரே சரக்கா?
இல்லை இன்னும் அதை வேற நாங்க கண்டுபிடிக்கணுமாக்கும்…போலீசுக்கு நல்லா வேலை கொடுக்கிறீங்க
சார்…என்ன மிஸ்டர் டேவிட்…உங்க ஐடியாவா இது? புதுசானவங்க ஐடியா குடுத்தா இப்டித்தான்
எங்கயாவது வழுக்கிக்கும்…
மிஸ்டர் மைக்கேல்…ஒண்ணு பார்த்தீங்களா? இந்தப்
பதிமூணாம் தேதி பார்த்து ஏன் இந்த வேலையைச் செய்தீங்க? பதிமூணு எப்பவுமே பேட் நம்பர்
தெரியுமா? அது வெள்ளைக்காரங்களுக்குத்தான் ராசி….பாருங்க, இன்னைக்குத் தேதி பதிமூணு,
உங்க பாக்கிங் பதிமூணு, இந்தப் பார்சல் பிடிபட்ட கார் நம்பரும் பதிமூணு…ஒரு வேளை உங்களுக்கு
ராசியான நம்பரோ? – சொல்லிவிட்டு சிரித்தார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்.
----------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக