11 அக்டோபர் 2018

“நெஞ்சம் மறப்பதில்லை” - சிறுகதை - தினமணிகதிர் - 24.12.2017


சிறுகதை       
      “நெஞ்சம் மறப்பதில்லை”                                             ******************************                       
     ந்த அரச மரம் அங்கிருக்கிறதா என்று என் கண்கள் தேடியது.
     அந்தப் பக்கமெல்லாம் இப்ப போக முடியாதுண்ணா…புதர் மண்டிக் கிடக்கு…என்றான் என் தம்பி.
     அது ரொம்பப் பெரிசாச்சே…கொஞ்சம் தள்ளி நின்னு கூடப்  பார்க்கலாமே.… …சுத்திவரக் கல் பாவியிருக்கும் பாரு…அதப் பார்க்கணும் எனக்கு….
     என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். அந்த ஒளியைக் கண்டு கொண்டானோ என்னவோ? நினைப்பு தந்த சந்தோஷத்தை மலர்ச்சியாய் முகத்தில் கண்டிருக்கலாம்.
     சரிண்ணா…வாங்க போவோம்…
     அவனோடு நடந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று நின்று விட்டான்.
     இந்த எடம் எதுன்னு தெரியுதா…?
     சுற்றுமுற்றும் நோக்கினேன். பல வருடங்களாகப் பழகிய அந்த இடம் முற்றிலும் புதிதாய்த் தோன்றியது. ஏதோ பாழடைந்த இடத்திற்கு வந்துவிட்டதுபோல் இருந்தது.
     தெரிலயே…?
     இதுதாண்ணா பிள்ளையார் கோயில். மறந்திடுச்சா…? சொல்லியவாறே வலதுபுறம் கையைக் காண்பித்தான். வாசலில் கம்பிக் கதவு போட்டிருந்த அந்த இடுக்கு வழியே உள்ளே பார்த்தேன். ஒரே இருட்டு.
     என்னடா இது? ஒண்ணுமேதெரில…?
     பிள்ளையாரைத் தேடுறீங்களா? அவர் இல்ல…?
     பின்ன?
     இல்லன்னா இல்ல…அவ்வளவுதான்….யாருக்குத் தெரியும்…. – அதற்கு மேல் அந்தக் கேள்விக்கு பதில் இல்லை அவனிடம்.
     எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்து வைத்த பிள்ளையார், பின்னரும் திருடப்பட்டு இல்லாமல் போனார். கோயில் வெறுமே நின்றது.  
     ஆற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட இடது தோளில் தோய்த்துப் பிழிந்த துணிகளுடனும், இடுப்பில் தண்ணீர்க் குடத்துடனும் பெண்கள் நடந்து வந்து கொண்டிருக்கும் காட்சி அப்படியே என் மனக் கண்ணில்.  அதில் ஒருத்தி  ஸ்ருதி. அது எனக்கு மட்டுமே. யாருக்கும் சொல்வதற்கில்லை.
     இங்கிருந்து பாருங்கண்ணா… - தம்பி எதிரே கையைக் காண்பித்தான்.
     நீட்டிய திசையில் நோக்கினேன். அந்த மரம் இருந்ததற்கான சுவடு கூட அங்கேயில்லை. அப்பொழுதே மிகவும் முதிர்ந்த மரம். விழுந்து காணாமல் போயிருக்குமோ? வெட்டியிருப்பார்களா? சுற்றிலும் பாவியிருக்கும் கற்களுக்கான அடையாளம் கூட இல்லையே? பிரமித்து நின்றேன்.
     மொட்ட…ஏ மொட்ட…என்ன பண்ணி விட்டிருக்கே எம் பேரனுக்கு? நன்னா முடிய ஒட்ட வெட்டி விடுன்னுதானே சொன்னேன் …துளிக் கூட குறைக்காம அப்டியே அனுப்பிச்சிருக்கியே….?
     பாட்டீ…போதும் பாட்டி…நிறைய வெட்டியாச்சு…வா போலாம்…
     சும்மா இரு…உனக்குத் தெரியாது…நாலணா சுளையா கொடுக்கறோம் அவனுக்கு…என்ன வேல பண்ணியிருக்கான் …..போ…போய் அவன்ட்ட உட்காரு….ஒட்ட வெட்டி கிராப்பு வையி… புரிஞ்சிதா…? அப்பத்தான் காசு தருவேன்….
     நீங்க கவலப்படாமப் போங்க பாட்டி…நா அனுப்பிச்சு வைக்கிறேன்…
     ஐயோ பாட்டீ…உன்னோட பெரிய தொல்லை….இன்னமே எனக்கு மொட்டைதான் அடிக்கணும்….
     அடிச்சிக்கோ…பரவாயில்ல…பொடுகு வராது…
     அந்தக் கல் பாவிய இடத்தில் மொட்டை என்று பெயர் கொண்ட நாவிதர் (அப்போதைய பெயர்) முன்னே சம்மணமிட்டு நான். எதிரே சலசலத்து ஓடும் ஆறு. காலைக் கதிரவனின் ஒளி வீச்சு இலைகளுக்கு நடுவே பளபளக்கிறது. கதிரவனின் ஒளிக்கதிர்களால் புத்துணர்ச்சியடைந்து குளிருக்கு விதிர்ப்பு அடைந்ததுபோல் தன்னைச் சிலிர்த்துக் கொள்கின்றன.
     அந்தக் கண்ணாடியத் தாங்களேன்…. பெட்டியில் இருக்கும் முகம் பார்க்கும் கையகலக் கண்ணாடியைக் கேட்கிறேன் நான்.
     அதெல்லாம் பெரியவங்களுக்குத்தான்….சொல்லியவாறே தலையைப் பிடித்து அவன் பக்கமாக வெடுக்கென்று சாய்த்துக் கொள்கிறான்.
     நாலணாவுக்கு இம்புட்டு வேல வாங்குறாகளே…என்ற ஆதங்கமோ என்னவோ. அன்று என் கதை அவ்வளவுதான்.
     என்னடா இப்டி வெட்டியிருக்கே….? படு அசிங்கமா இருக்கு…
     பையன்களோடு விளையாடுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு நான்கைந்து நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்.
     வட்ருபி அடிச்சு விட்டிட்டாங்கடா இவனுக்கு….சிரிக்கிறார்கள் பசங்கள்.
     பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு சொல்லவொண்ணாத் துயரத்துடன். அவளின் கைகள் என் தலையை அளைகின்றன. எங்கேனும் பொடுகு தென்படுகிறதா என்று விரல்கள் தேடுகின்றன.
     அவா சொன்னா சொல்லிட்டுப் போறா…இதுதான் கோந்தே ஆரோக்யம்…
     குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றால் விபூதி எடுத்து என்னவோ ஒரு மந்திரத்தை முனகி நெற்றியில் இட்டு, உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை நீளக்க அந்த விபூதியைத் தேய்த்துத் தரையில் அந்த வியாதியை இறக்கும் பாட்டி. அவளின் கை வைத்தியத்திற்கு எந்த டாக்டரை ஈடு சொல்ல முடியும்? என்னவொரு நம்பிக்கை அந்த மனிதர்களுக்குத்தான்?
     பாட்டி, கொழந்தை ரெண்டு நாளா கண்ணே முழிக்கலை…என்னாச்சோ ஏதாச்சோ தெரிலயே… - அழுது அரற்றிக்கொண்டு வந்து நிற்போருக்கு ஆறுதல் சொல்லியனுப்பும் பாட்டி.
     ஒண்ணும் கவலைப்படாதே…நா இருக்கேன்…நாளைக்குக் காலைல உன் பிள்ளை எழுந்திருச்சி ஓடறானா இல்லையா பார்…
     என்னவொரு தன்னம்பிக்கை? எந்த நோயையும் கண்டு பயப்படாத பாட்டி அப்படி என்ன கை வைத்தியம் வைத்திருந்தாள்? எனக்குத் தெரிய எல்லா வியாதிக்கும் ஒரே மந்திரம்தான்.
     பாட்டி…பாட்டி…உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்…காய்ச்சல்னு வந்தா அதுக்கும், காமாலைன்னு வந்தா அதுக்கும்னு எல்லாத்துக்கும் ஒரே மந்திரத்தைத்தான் சொல்றே…விபூதியத் தேய்ச்சு விடறே? இல்லன்னா வேப்பெண்ணையைக் பாதத்துல தேய்க்கிற…நெத்திக்குப் பத்துப் போடறே…இல்லன்னா தொப்புள்ள வௌக்கெண்ணையைத் தேய்க்கிற…வேறென்ன செய்திருக்கே…நீ…? எல்லா வியாதியும் எப்டி பாட்டீ பறந்தோடிப் போறது? உன்னக் கண்டா ஏம்பாட்டீ இந்த வியாதிக்கெல்லாம் இம்புட்டு பயம்?
     போடா கோட்டிப் பயலே…நீ கண்டியா? நா என்ன பண்றேன்னு? அப்டியெல்லாம் பேசப்படாது..போ…போ…
     அதெல்லாம் கேட்கப்படாது…பாட்டி ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கிறால்ல…அப்புறம் சாமி கோவிச்சுக்கும்…ஏற்கனவே பாட்டிக்கு உடம்பை எவ்வளவு படுத்தறது பார்த்தியோ? பேசாமப் போ…போய் விளையாடு….
     இதுதான் அமானுஷ்ய விஞ்ஞானமோ? என் நண்பன் கண்டறிந்து சொன்னானே? ஏதோ ஒரு கோயிலின் புற்று மண் வியாதியைப் போக்குமாமே! …அது இதுதானோ?
     பாட்டீ…பாட்டீ…ஊருக்கெல்லாம் வியாதியைப் போக்கி அத்தனையையும் உன் உடம்பில் வாங்கிக் கொண்டாயே நீ…! உன்னைப் போல் இனி யார் கிடைப்பார்?
     அந்த நன்றி அந்த மக்களிடம் பரிணமித்ததே…
     ஆம்பூர் பாட்டி பேரன்தானடா நீ….உங்கப்பாம்மால்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியுமோ? உங்களுக்காக உயிரையே பணயம் வச்சு உழைச்சா…..அவாளை சந்தோஷமா வச்சிக்குங்கோடா……
     மூன்று மாதம் ஒருமுறை பேதிக்கு விளக்கெண்ணெய் கொடுக்கும்போது என்ன பாடு…
     அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ராத்திரி ரெண்டு மணிக்கு அடித்து எழுப்பி….மடியில் கிடத்திக் கொண்டு ஒருவர் காலை அழுத்திப் பிடித்துக் கொள்ள கோவர்ணத்தில் இருக்கும் சுட்ட விளக்கெண்ணெயை மூக்கை அழுத்தி இடக் கையால் பிடித்துக் கொண்டு, வாயை கோவர்ணத்தின் நுனியால் அழுத்தித் திறக்க வைத்து உள்ளே விளுக்கென்று  விடும் பாட்டி. ஒரே குமட்டலாகக் குமட்டி அப்படியே வெளியே பீச்சியடித்த நாட்கள் எத்தனை?
     சனியன்…சனியன்…வானரம்…வானரம்….என்ன பாடு படுத்தறதுகள்….கொஞ்சம் சக்கரையைக் கொண்டா…வாயில திணிப்போம்….
     மேற்கொண்டு குமட்டாமல் இருக்க நாட்டுச் சர்க்கரை கொஞ்சம் வாயில் போடப்படும் அந்தக் கணம் அப்பாடா….!
     முடிஞ்சிதுடி…இனிமே உன் பிள்ளேள் பாடு…உன் பாடு…பாட்டி எழுந்து போய்விடுவாள். மறுநாள்….
     கேட்க வேண்டுமா? கக்கூஸே கதிதான். அன்று பூராவும் சுட்ட அப்பளமும் ரசமும்தான் சாப்பாடு. அடித்துக் கலக்கி அந்த வயிறுதான் என்னமாய் சுத்தமாகிப் போகும்? அதற்கு ஈடு உண்டா இன்று? வயிற்றுக் கோளாறுகளினால் எத்தனை வியாதிகளைச் சந்திக்கிறோம்?
     பிரதி வாரமும் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் விட்டாளா பாட்டி? உருவி உருவி அந்த உடம்பைத் தேய்த்த விதமும், வெந்நீரில் குளித்த சுகமும் இன்று எங்கே போயிற்று?
     இன்று யார் வாரம்தோறும் எண்ணெய்க்குளி குளிக்கிறார்கள்? அத்தனை பேரும் மறந்தாயிற்றே? அனைத்தையும் மறந்தோம். அத்தனை கேடுகளையும் வரித்துக்கொண்டோம். அதுதானே உண்மை?
     மரத்திற்குக் கீழ் கல்பாவிய இடத்தை என் உள்ளம் நோக்குகிறது. அங்கே வெறும் குப்பையும் கூளமும். எதிரே விரிந்தோடும் ஆறு எங்கே? மூலையிலே கோடு போல் வளைந்து, தேங்கித் தேங்கி கொசுக்கள் மண்ட, ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை நீர்…! படித்துறை, அதை ஒட்டிய யானைக் கல், சற்றுத் தள்ளி குதிரைக் கல்…அங்கிருந்து முங்கு நீச்சில் போட்டி போட்டுக்கொண்டு நீந்தி வந்து முதலில் யார் யானைக்கல்லில் ஏறி உட்காருவது? எப்பயும் ஜெயிப்பவன் அந்த வெள்ளம்பிதான். எப்படித்தான் அத்தனை வேகமாய் வருவானோ? அவனுக்கு மட்டும் அந்தப் பரந்த ஆற்றில் ஆழமான, வேகமான பகுதி எப்படிப் படிந்து அவனை இழுத்து வந்து அங்கே அமர வைத்ததோ? அந்த ஆறு இன்று ஏன் இப்படிக் காணாமல் போனது? அந்த வெள்ளம்பி ராஜாமணி  இன்று எங்கிருப்பான்?
     தெருவுக்கெல்லாம் தண்ணியெடுத்து ஊத்துவானே வைத்தி…அவன் இருக்கானா?
     அவனெல்லாம் போயி எம்புட்டோ காலமாச்சுண்ணா…
     வீடு வீடா மாடு மேய்ப்பானேடா…எல்லா வீடும் சொந்தம் அவனுக்கு. எங்க வேணாலும் சாப்பிடுவான், எங்க வேணாலும் படுப்பான்…எல்லா மனுஷாளும் அவனுக்கு வேண்டியவா…
     அவனுக்கு அவா வேண்டியவாளா? அவாளுக்கு அவன் வேண்டியவனா? தம்பியின் குயுக்தியான கேள்வி.
     சமையல் வேலைக்குப் போவானே வரதன்…அவன்?
     அவரில்லண்ணா…அவர்…அப்பயேஉங்களுக்கெல்லாம் பெரியவராச்சே…அவர் கூட நீங்க ஒரு தரம் கல்யாண சமையல் வேலைக்குப் போயிருக்கீங்களே…?
     ஆமாமா…அப்டிப் போயிட்டுத்தான் அப்பாட்ட அடி வாங்கினேன்…படிச்சி வேலைக்குப் போகணும்னு நா நினைச்சிண்டிருக்கேன்…நீ கரண்டி பிடிக்கிற உத்தியோகமா தேடறேன்னு ரெண்டு விளாசினார்.
     அவரெல்லாம் இல்லண்ணா…
     சரி…அந்தக் குப்பு ….இருக்கானா? நம்ம கூட போந்தாக் குழி விளையாடுவானே…பால்ரஸ் குண்டு போட்டு உருட்டுவமே…?
     ஆமாண்ணா…நான் கூட மறந்து போயிட்டேன் அதை…அதுவும் இங்கதானண்ணா…? சொல்லிக் கொண்டே கையை எதிரே காண்பித்தான்.
     அந்த இடத்தின் நான்கு சுவர்கள் அப்படியே. மேல் புறம் மட்டும் அங்கங்கே இடிந்தும், சரிந்தும்….
     அது என்ன எடம் தெரியுமா? கேட்டேன் தம்பியிடம்.     
     நா பார்க்க அது சும்மாதான் கெடக்கு…உள்ள பாம்பும் பல்லியும் அடைஞ்சு கெடக்கு இப்போ…யாரும் அங்க போறதில்ல…
     ஒரு காலத்துல அது ஃபேமஸ்டா….
     அப்டியா? அப்டி என்னதான் நடந்திச்சு அதில…கோயில் இருந்ததா?
     சர்வாங்க ஷவரம் பண்ற எடம்டா அது…
     அப்டீன்னா…?
     அப்டீன்னாவா? அக்குள், கீழன்னு அங்க போயித்தான் முடி எறக்குவாங்க…
     அது கூடவா செய்தாங்க…..
     அந்தக் காலத்துல இருந்தது …இப்போ நடக்குமா?
     திரும்பி நடக்க ஆரம்பித்தோம். எதிரே தெரியும் தென்னந்தோப்பு. அங்கே நடக்கும் சேவல் சண்டைகள். ஆற்றுக்கு இந்தப் புறம் கிடக்கும் பெரிய கொட்டாரம். அறுவடைக்குப்பின், போரடித்து, அங்கே பறத்திக் காயப் போட்டிருக்கும் வைக்கோல் புற்கள்.  எதிரே தெரு முழுக்கப் பரத்திக் கிடக்கும் வைக்கோல்கள். அதிலே குதித்து உருளும் நாங்கள். பிறகு உடம்பெல்லாம் அரிப்பெடுத்து அம்மாவிடம் வாங்கும் சாத்து.
     அது சரி…அந்த வெங்டான் பத்திச் சொல்லலியே…
     அவனா? இருக்கான்…இருக்கான்….அவன் இப்ப மினிஸ்டரோட பி.ஏ. ஆயிட்டான்…..
     எது? மினிஸ்டர் பி.ஏ.வா? அவன்தான் கூமுட்டயாச்சேடா…
     சும்மாச் சொன்னேண்ணா…பர்ஸனல் பி.ஏ.ன்னு வச்சிக்கயேன்…நம்ம ஊருல எந்தக் காரியம்னாலும் அவன்தான் முதல்ல…அதுலதான் அவன் பிழைப்பே ஓடுது…நல்ல சில்லறை….
     தெருவின் இருபுறங்களிலுமான வீடுகளில் என் பார்வை சென்றது. ஏறக்குறைய அனைத்து வீடுகளும் மாறி விட்டன. ஒன்றிரண்டுதான் அந்தப் பழமை மாறாமல். இரு புறங்களிலும் நூல் பிடித்தாற்போல் இருக்கும் வீடுகளின் அமைப்புகள் என்னவாயிற்று? நான் முந்தி நீ முந்தி என்று இதென்ன வரிசை குலைந்த கட்டட அடுக்குகள்? எந்த விதிக்கும் உட்படாத போக்காகவல்லவா தோற்றமளிக்கிறது!  காலம்தான் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிட்டிருக்கிறது?
     ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். குடியிருந்த இந்த ஒரு தெருவே போதும் இந்த ஊர் என்னவாகியிருக்கிறது என்று அறிய. மனம் ஏன் இத்தனை வேதனைப் படுகிறது. ஊரும் உலகமும் மாறிவிட்டதேயென்றா? பின்னே? அப்படியேவா இருக்கும்? மாறட்டும், கூடவே சேர்ந்து அந்த விழுமியங்களுமா அழிய வேண்டும்?
     மார்கழியில் விடிகாலையில் கோயில் கோபுர உச்சியிலிருந்து ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள். சாரி சாரியாக ஆலயம் நோக்கிச் செல்லும் பெண்கள். ஒரு பக்கம் பண்ணைக்குக் கறவைக்குச் செல்லும் மாடுகள். அவற்றின் கழுத்து மணி ஓசை. ஒரு மணி நேர இடைவெளியில் தினம் ஒரு பாடல் என திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்கும் பொருள் சொல்லி விளக்கும் அந்தத் தமிழாசிரியர்.
     அவர் பேர்கூட சுந்தர்ராஜன்தானே…ஒரு முறை நல்லாசிரியர் விருது வாங்கினாரே…
     ஆமாண்ணா…அவரேதான்…அவரெல்லாம் காலமாயி எவ்வளவோ வருஷங்கள் ஆச்சு. தான் ஸ்கூல் போகும்போதெல்லாம் நாலஞ்சு குழந்தைகளையும் கையைப் பிடிச்சிண்டு அழைச்சிண்டே போவார். உறிந்தி பண்டிட் இருக்காரா?
     அவர் எங்கிருக்கார்னு தெரில…பஞ்சகச்சம் கட்டிண்டு கோட்டுப் போட்டிட்டு குடை பிடிச்ச மேனிக்கே போவாரே…எவ்வளவு அழகா உறிந்தி சொல்லித் தருவார். ஒழுங்கா அப்போ படிச்சமா? ஆப்ஷனல் சப்ஜெக்ட்டுன்னு விட்டுட்டோம். இன்னொரு மொழி மேலே தேவையில்லாம அப்போ வெறுப்பை வளர்த்துக்கிட்டமே…அதனால என்ன லாபம்? இன்னைக்குத் தமிழ்நாட்டை விட்டு வெளியே போனம்னா அந்த உறிந்தி தெரிஞ்சிருந்தா எவ்வளவு பயனா இருக்கும்? யாராவது உணர்ந்தமா? எல்லாத்தையும் இந்த அரசியல்வாதிங்க கெடுத்தாங்க…ஆனா உறிந்திப் படம் மட்டும் இளிச்சிண்டு பார்க்கத் தெரிஞ்சிது நமக்கு.. ஒரு கட்டத்துல அதுவும் தமிழ்நாட்டுல நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டுது.
     என்ன ஒரு அறியாமை? பரஸ்பரம் ரெண்டு பேர் தங்களுக்குள்ள விஷயத்தைப் பரிமாறிக்கிறதுக்கான கருவி மொழி. அது மேலே எத்தனை வெறுப்பை ஏற்படுத்திட்டாங்க…அதுனால எத்தனை பேர் நஷ்டப்பட்டுப் போனாங்க…? நல்லா யோசிச்சுப் பார்த்தா, எல்லாக் காலத்துலயும் இந்த அரசியல்வாதிங்க ஏதேனும் ஒரு வகைல இந்த அப்பாவி மக்களைக் கெடுத்திட்டே வந்திருக்காங்கங்குறதுதான் சரி. எல்லாம் அவுங்களோட லாபத்துக்காக…வாழ்க்கைக்கே போராடிக்கிட்டிருக்கிற இந்த மக்கள் சர்வ சாதாரணமா அதுக்கு பலியாயிட்டாங்க…இதுதான் உண்மை…இன்னைக்கும் பிரத்யட்சமான நிலைமை அதுதான்.
     அன்னைக்கு இருந்த வாத்தியார்கள்ட்ட இருந்த பொறுப்புணர்ச்சியும், தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் யாராலேயும் அத்தனை சீக்கிரம் ஒதுக்கிட முடியாதுதான்.
     ஆமாண்ணா…நீங்க கூடச் சொல்வீங்களே…காலைல நாலு மணிக்குப்  பால் வாங்கப் போகும்போது படிக்கிறதுக்காக எழுப்பி விட்டிட்டுப் போவார்னு…திரும்பி வர்றபோது படிச்சிட்டிருக்கணும். இல்லன்னா நின்னு எழுப்பி படிக்க உட்கார்த்திட்டுத்தான் நகருவாருன்னு….சொல்வீங்க…கையெடுத்துக் கும்பிடணும் அவுங்களையெல்லாம்….
     அதோட மட்டுமில்லே…யார் யார் ஏழைப் பையன்கன்னு பார்த்து அவுங்களுக்கு இலவசமா டியூஷன் எடுப்பாங்க…வகுப்பில சரியாப் படிக்கலேன்னா, சாயங்காலமா வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லிடுவாங்க….இத்தனைக்கும் வீட்டுல தரித்திரம் தாண்டவமாடும். பொருளாதாரப் பற்றாக்குறை பிடுங்கித் தின்னும். ஆனாலும் பசங்க நல்லாப் படிக்கணும்ங்கிறதுல அவுங்களுக்கு இருந்த அக்கறை? அர்ப்பணிப்பு? அதுக்கு இன்னிக்கு ஈடு சொல்ல முடியுமா?
     எனக்கு காம்போசிட் மேத்ஸ் சரியா வரலைன்னு ஃப்ரியா டியூஷன் எடுத்தார் கிருஷ்ணசாமி வாத்தியார். கடைசியா நா எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சவுடனே அவர் என்ன வாங்கிண்டார் தெரியுமா? தெரிஞ்சா நீ ஆச்சரியப்படுவே…கடைல போய் ஒரே ஒரு ப்ரில் இங்க் பாட்டில் வாங்கிண்டு வாடான்னார். அதுக்குக் கூட அவர் என்ன கூச்சப்பட்டார் தெரியுமா? ஏறக்குறைய ஒரு வருஷம் சும்மா டியூஷன் எடுத்தவர். மாதா, பிதா, குரு, தெய்வம்னா அதுக்கு அவுங்கதான் உதாரணம். அப்போ நம்ம வீட்டுல எலெக்ட்ரிக் லைட் கிடையாது. சிம்னி விளக்குதான். இல்லன்னா லாந்தர் விளக்கு எரியும். அதுக்கும் பாதி நேரம் மண்ணெண்ணெய் இருக்காது. அதுனால தணிச்சு வச்சிண்டு படின்னு அம்மா சொல்லுவா…குப்புறப் படுத்தமேனிக்கு படிச்சிட்டிருக்கிற போது சிம்னி  நுனில தலை முடி கருகும். தள்ளி உட்கார்ந்து படின்னு அம்மா சத்தம் போடுவா…இல்லன்னா தெருக் கம்பத்துக்குப் போன்னுவா…முக்காவாசி நாள் தெரு லைட்டுலதான் நா படிச்சிருக்கேன்…அம்பி வாத்தியார் இருக்காரே…அவர் எங்க வீட்டுல வந்து படிடான்னுவார். திண்ணைல லைட்டைப் போட்டு வச்சிடுவார். நாலஞ்சு பசங்க எத்தனையோ நாள் அங்கே உட்கார்ந்து படிச்சிருக்கோம்…வாத்தியார்களுக்கு பையன்களோட முன்னேற்றம்தான் குறி. இப்போ அப்டியா இருக்கு?
     கோதண்டராமன் தமிழ் பண்டிட் தெரியுமா? பால் வாங்கப் போறபோது ஒரு ஈற்றடி கொடுத்திட்டுப் போவார். திரும்பி வர்றபோது அதுக்கு வெண்பா சொல்லணும்…மனுஷன் அந்த ஈற்றடிக்கு கடகடன்னு எத்தனை வெண்பா பொழிவார் தெரியுமா? அவருக்கு நான் மாணவன். அதுதான் பெருமை.
     ஏண்ணா, வந்ததுலேர்ந்து சீரியஸாவே பேசிட்டிருக்கியே…கொஞ்சம் ரிலாக்ஸ்டாத்தான் ஏதாச்சும் பேசேன்…
     ஓ…! பேசலாமே…சந்திரா டாக்கீஸ் இப்ப இருக்கா…?
     அப்புடியே அன்று கண்ட மேனி அழியாம இருக்கு….
     அப்பல்லாம் நாலணாத்தானே டிக்கெட்….வரிசைல நின்னு அந்தப் பொந்துக்குள்ள புகுந்து டிக்கெட் எடுத்திட்டு வந்தா பெரிய சாதனையாச்சே அது…நம்ம தலை மேலெல்லாம் ஏறிப் போவானுங்களே….அது இருக்கா…?
     அதான் சொன்னனே…அன்று கண்ட மேனி அழியாமன்னு….டிக்கெட்தான் இன்னைக்கு ஐம்பது ரூபா….  
     என்னது? ஐம்பதா?
     ஆம்மா…ஐம்பது சுளையாக் கொடுத்தாத்தான் படம் பார்க்க முடியும் இன்னைக்கு. அதே மூத்திர வாடையோட…..
     அதக் கூட இன்னமும் சரி பண்ணலையா…அப்ப அந்த வாடையோட உட்கார்ந்து படம் பார்த்தாத்தான் திருப்தி. அன்னைக்கே எட்டணா பெஞ்சு டிக்கெட்டுக்கு நாம போனதில்லையே…மாடி ஒரு ரூபா…எட்டிப் பார்த்திருக்கமா வாழ்நாள்ல…? ஆனாலும் அன்னைக்கு நாலணா கொடுத்துப் படம் பார்த்த சுகம் இன்னைக்கு இருநூறு கொடுத்துப் பார்த்தாலும் இல்லையேடா….
     அப்டி ரெண்டாம் ஆட்டம் பார்த்திட்டு வந்த அன்னைக்குத்தானே நம்ம வீட்டுல திருடன் வந்தான்…எதிர் நீச்சல் படம் மறக்க முடியாதே நம்மளால….அந்தப் படம் பார்த்திட்டு வந்த அன்னைக்குத்தான் அது நடந்தது.
     திருடன்களப் பிடிச்சு அடையாளம் காட்டச் சொன்னபோது, அவுங்கதான்னு தெரிஞ்சிருந்தும், அப்பா தெரிலன்னுட்டாரே…ஞாபகம் இருக்கா? அவ்வளவு வறுமைலயும் போனாப் போகுதுங்குற எண்ணத்துல மனசுல இருந்த கருணையும், இரக்கமும்…..மறக்க முடியுமா அந்தச் சம்பவத்தை? பாண்டியன் டூரிங் டாக்கீஸ் இருக்கா இன்னமும்?
     என்னண்ணா நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? அது இப்போ பெர்மனென்ட் தியேட்டர் ஆயிடிச்சி…..
     மருதமலை மாமணியே பாட்டுப் போடுவான் அப்போ…அதுலேர்ந்து நாலாவது பாட்டு கல்லிலே கலை வண்ணம் கண்டான்….அந்தப் பாட்டோட ஓவர்…அப்புறம் படம் போட்டுடுவான். அதுனால முதப் பாட்டு போட்டவுடனே ஓடுவோம்…..ஒரே காட்சியில் ஓரே டிக்கெட்டில் மூன்று படங்கள்னு எத்தனை பார்த்திருக்கோம்….வீட்டுலேர்ந்து டிபன், முறுக்கு, சப்பாத்தி, சீடைன்னு எல்லாத்தையும் அம்மா எடுத்திட்டு அன்னைக்குப் பூராவும் டேரா போட்டுடுவாங்களே….பொம்பளைங்க…..அதெல்லாம் மறக்க முடியுமா?
     ராஜாஜி மேடை இருக்கா? எத்தனை வாட்டி குமரி அனந்தன் பேச்செல்லாம் கேட்டிருக்கேன் தெரியுமா? எம்.ஜி.ஆர், அண்ணாதுரை, பக்தவத்சலம், சி.சுப்ரமண்யம், இன்னும் யாரெல்லாமோ வந்து பேசின புகழ்பெற்ற  மேடை அது. மாரியம்மன் திருவிழா அந்தப் பொட்டல்லதான நடக்கும். பூக்குழி இறங்குவாங்களே…..எனக்குக் கூட கழுத்துல ஒரு பெரிய கட்டி வந்ததுன்னு அம்மா மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏத்தறதா வேண்டிக்கிட்டாங்க….கோவிலுக்கு நேர் கீழே என்னைப் படுக்க வச்சு, என் நெஞ்சுல அந்த மாவிளக்கை ஏத்தினது எனக்கு இன்னும் அப்டியே ஞாபகம் இருக்கு…..
     இன்னொண்ணு, அதுக்கு எதுத்தாப்லதான லைப்ரரி. கல்கி, ஜெயகாந்தன், அகிலன், தமிழ்வாணன், நா.பா., ன்னு எவ்வளவு பேரோட எழுத்தையெல்லாம் தேடித் தேடிப் படிச்சிருக்கோம் அங்க…அது இருக்கா இன்னும்?
     இல்லாமயா அண்ணா? எல்லாமும் அப்டியே இருக்கு…ஆனா எந்த வளர்ச்சியும் இல்லாம….நிறைய அப்படி. பலதும் இப்படி….சொல்லிக் கொண்டே மாறி உரு இழந்து போன தெருவைக் காண்பிக்கிறான் அவன்.
     என் மனம் வேதனைப் பட்டது. ஏதாவது செய்ய வேண்டுமே என்று துடிக்கிறது. என்ன செய்யப் போகிறேன் என்றுதான் தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.  
                     ----------------------------------------------------



    


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...