11 அக்டோபர் 2018

“ஆற்றாமை ” சிறுகதை - நவீன விருட்சம் - அக்டோபர் 2018


                           “ஆற்றாமை”                                ----------------------------             -----------------------------------------------------
     தற்கு வம்பு என்று அமைதி காத்தார் சுதர்சனம். நாகு ஒரு முறை அவரை நிதானமாய் நோக்கியது போலிருந்தது. பிறகு சட்டென்று அடுப்படிக்குள் புகுந்து கொண்டாள். தன்னைப் பார்த்துப் பார்த்து அவளும் அந்த நிலையை எய்தி விட்டாளோ என்றிருந்தது. அவள் சார்ந்து சமீபத்தில்தான் இப்படி உணர்கிறார். அதற்கு முன்பெல்லாம் அவனோடு சேர்ந்து கொண்டு கொட்டமடித்தவள்தான். இப்போதும் அப்படியொன்றும் முழுமையான நம்பிக்கை விழுந்து விடவில்லை. கொஞ்சம் மாறி வருகிறாளோ என்றுதான் தோன்றுகிறது. அவளும் இப்படித்தான் நினைக்கிறாள் என்று முடிவு செய்து, தான் வாயைத் திறந்துவிடுவதற்கில்லை. அது வேறு விதமாகவும் ஆகிவிடக் கூடும். அங்கேதான் ரொம்பவும் நிதானம் என்பது கைகூடியது இவருக்கு. ரொம்ப காலத்திற்கு முன்பே இது சாத்தியமாகி விட்டது. அதாவது பணியில் இருந்த காலத்திலிருந்தே எனலாம். ஒரு வேளை ஆபீஸ்தான் தனக்கு இதைக் கற்றுக் கொடுத்ததோ என்று கூட நினைத்துக் கொள்வார். ஆபீசை விட வீடுதான் அதிக சதவிகிதம்.
     அந்த ஃபைலை மட்டும் என் டேபிள்ல வச்சிருங்க… - இதுதான் அந்த நிதானத்தின் அடையாளம். அது அதிகாரமா, அன்பா என்பதை யாரும் உணர முடியாது. விஷயத்தை முன்னிறுத்தி, விலகி நின்று, ஒட்டுப் பித்து இல்லாமல் பார்ப்பது.
     நமக்கென்ன, நல்லதாப் போச்சுன்னு தூக்கிக் கெடாசிட்டுப் போயிடுவாங்க….பிறகு நீங்கதான் கிடந்து கஷ்டப்படணும்….. – ராமஜெயம் இப்படித்தான் எச்சரிப்பார்.
     பரவால்லங்கிறேன்….அவுங்களை எழுதி வைக்கச் சொல்லி, அதுக்குப் பத்துத்தரம் ஞாபகப்படுத்தி, அப்புறமா வேண்டா வெறுப்பா வச்சு, என்னத்த எழுதிக் கிழிச்சிருக்காங்கன்னு வெறுத்துப் போயி, கசக்கி எறிஞ்சிட்டு, கடைசில நாமளே செய்யுறதுக்கு, ஃ.பைலைக் கொண்டாங்கன்னு ஒரு வார்த்தைல முடிச்சிக்கலாமே…சீஃப் சொன்ன டயத்துக்குள்ள உள்ளே தள்ளிற்லாம்…விஷயமும் முடிஞ்சு போகும்…மனசும் நிம்மதியா இருக்கும்….ஐ வான்ட் பீஸ் ஆஃப் மைன்ட் இன் ஆல் வாக்ஸ் ஆஃப் மை லைஃப்… யாரும், எந்தவகையிலும் என் நிம்மதியைக் கெடுத்து விட முடியாது….
     அது எப்படிச் சொல்ல முடியும்…சம்பந்தமில்லாத ஒருத்தன், சம்பந்தமேயில்லாத ஒரு குடும்பத்தோட நிம்மதியைக் குலைக்கிறதில்லையா? …நடந்து போச்சே…!
     ஓ…! அந்த நியூஸைச் சொல்றீங்களா?
     அது நமக்கு வெறும் செய்தி…ஆனா சம்பந்தப்பட்டவங்களுக்கு?
     நமக்குமே எப்படிங்க வெறும் செய்தியாகும்? மனித நேயமும், கருணையும், அன்பும், தெய்வீகமும் உள்ள ஒருத்தன் அதை வெறும் செய்தியாப் பார்க்க முடியாதுங்க…நம்ம குடும்பத்துல ஏற்பட்ட ஒரு துக்கமாத்தான் கருத முடியும்….ஒரு பொறுப்புள்ள மனுஷனோட எண்ணங்களும் செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்க முடியும்…
     அது சர்த்தான்….அப்டியே ஒவ்வொண்ணையும் நினைச்சு, எல்லாத்தையும் தூக்கி சுமப்பீங்களா? இருபது வருஷம் கழிச்சு மானேஜரா பதவி உயர்வுல வந்து உட்கார்ந்தது இதுக்குத்தானா? சுற்றி வர புற்று வளர்ந்த மாதிரி, ஃபைல்களக் கட்டி அழுதிட்டுத்தானே இதுல வந்து உட்கார்ந்திருக்கோம்…கொஞ்சமாவது ரிலீஃப் வேண்டாமா? நாம செஞ்ச மாதிரி அவுங்களும் செய்யட்டுமே….! அவுங்கள மேய்க்கிறதுக்குத்தானே நாம…! அப்புறம் அட்மினிஸ்ட்ரேட்டிவ்  கபாசிட்டி இல்லைன்னு அர்த்தமாயிடும்….இப்டி இப்டிச் செய்ங்கன்னு கைடு பண்ணலாம்…திருத்தலாம்…நாமளே அடிலர்ந்து நுனிவரை அத்தனையையும் செய்றது சரியில்லே…நமக்கென்ன தலவிதியா? அவுங்களும் சம்பளம் வாங்குறாங்கல்ல…செய்யட்டுமே…எப்பத்தான் வேலைக்குப் பழகுறது…? இப்டியே அடுத்தவன் முதுகுலயே குதிரையேறி சவாரி பண்ணிட்டுப் போயிட வேண்டிதானா? ஏமாந்த சோணகிரியா நாம?
     ராமஜெயம் கொந்தளிக்கத்தான் செய்வார். அந்த டென்ஷனுக்குத் தயாரில்லை சுதர்சனம். அது அவர் வழி, இது தன் வழி, அவ்வளவுதான்.
     நீர் திருந்த மாட்டீரய்யா….உம்மத்தான் எத்தன வருஷமாப் பார்க்குறேன் நான்…இல்லன்னா உள்ளூர்லயே இப்டிக் குப்ப கொட்ட முடியுமா? நாங்கள்லாம் நூறு நூத்தம்பது கி.மீ. ன்னு தள்ளித் தள்ளியாவது, ட்டிரெயின், பஸ்ஸூன்னு போயிட்டு வந்திருக்கோம்..நீரு கிணத்துல போட்ட கல்லு மாதிரி இங்கயேதான கிடக்கீரு…அவர எனக்குக் குடுங்க…அவர எனக்குக் குடுங்கன்னு உம்மத்தானவோய் எல்லாரும் கேட்டு வாங்கிக்கிட்டாங்க…எங்கள யாரு கண்டுக்கிட்டா? நீரு பெரிய ஆளுங்காணும்…எப்டியோ உம்மைத் தக்க வச்சிக்கிட்டீரே…நிக்கிறதுங்கிறத விட நின்ன எடத்துலயே நிலைக்குறது இருக்கே…அது பெரிய திறமைல்ல…?
     மனம் பெருமிதப்படும் சுதர்சனத்திற்கு. ஒருவகையில் பார்த்தால் அது சுயநலம்தான். தன்னை உள்ளூரிலேயே தக்க வைத்துக் கொள்வதற்கு உகந்த வழி இது ஒன்றுதான் என்று என்றோ கண்டு கொண்டார் அவர். எத்தனையோ பேர் ஆபீசருக்கு சொந்த வேலை பார்த்து, ஜால்ரா  அடித்து, கார் கதவைத் திறந்து விட்டு, கூழக் கும்பிடு போட்டு ஓட்டிக் கொண்டிருக்கையில் தனக்கேற்ற நாகரீகமான, கம்பீரமான வழி இதுதான் என்பது துல்லியமாய்ப் புரிந்து விட்டது அவருக்கு. இதில் திறமை மதிக்கப்படுகிறது….! வேண்டப்படுகிறது…!!
     சரியான வேலக்காரன்யா அந்த ஆளு…! – எத்தனை முறை இந்த வார்த்தைகளைச் சுகமாய்க்  காதில் வாங்கியிருக்கிறார்?
     வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு….செய்யாதவனுக்குச் சம்பளத்தைக் கொடு…என்றல்லவா இருக்கிறது நிலைமை…. அது என்னால் முடியாது என்றுதான் பொறுமுகிறார் ராமஜெயம். இவரோ சிரித்துக் கொள்கிறார். இவையெல்லாமும் சேர்ந்துதான் அவருக்கு இன்று இந்த அதீத நிதானத்தைத் தந்திருக்கிறதோ…! மனிதன் முதிர்ச்சியடைவதுதான் என்னவொரு அழகு? அன்று நடந்தது அது. இன்று நடப்பது? வீட்டில் இதெல்லாம் செல்லுபடியாகிறதா?
     நின்றபடியே கசங்கிக் கிடந்த படுக்கையை வெறித்துப் பார்த்தார் சுதர்சனம். மெத்தை மேல் விரித்த படுக்கை இப்படியா அந்தலை சந்தலையாய்க் கிடக்கும்? “கிடந்த கோலம்” என்பது இதுதானோ? கொஞ்ச நேரத்துக்கு முன் அதில் கிடந்த அவனது கிடப்பை நினைத்துக் கொள்கிறார்.
     பத்துத் துணியை விரிச்சிக்கிட்டு, அத்தனையையும் சுருட்டிக்கிட்டில்ல தூங்குறான்…?
     தெனமும் செய்றதுதானே,…என்ன பார்வை வேண்டிக் கிடக்கு? – நாகலட்சுமி சொல்வது போல் ஒரு பிரமை.
     ஒராள் படுக்கிறதுக்கு எத்தனை தலையணை, எத்தனை போர்வை, எத்தனை விரிப்பு?     தலைக்கு ஒண்ணு, காலுக்கு ஒண்ணு, போர்த்துறதுக்கு ஒண்ணு….போதாதா? சைடுல ரெண்டு, காலை விரிச்சுப் போட்டா ஒண்ணு, இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஒவ்வொரு போர்வை, நடுவுல பெட் ஸ்பெரெட் வேறே….எதுக்கு எல்லாத்தையும் போட்டு அழுக்காக்கிட்டு…? படுத்து எழுந்திரிச்சா ஒரே பிசுக்கு வாடை ….ரெண்டு மூணை வாஷ் பண்ணி மடிச்சு உள்ளே வச்சம்னா யாராச்சும்  விருந்தாளிங்க வந்தா கொடுக்க ஏதுவா இருக்கும்ல? புது வீட்டுக்குனு வாங்கினதை அத்தனையையும் யூஸ் பண்ணியே ஆகணுமா? சிலதை புத்தம் புதுசா அப்டியே உள்ளே வச்சிருந்தா என்னவாம்? வர்றவங்களுக்கு நாம உபயோகிச்ச படுக்கையையா கொடுக்கிறது?– இந்த வீட்டுல எதாச்சும் ஒரு ஒழுங்குல இருக்கா? - எத்தனையோ முறை சொல்லிச் சொல்லிக் கேட்காததை இப்போது நினைத்துக் கொண்டார்.
     நாகலட்சுமி மகனிடம் எதையுமே சொல்ல மாட்டாள். அவன் எது செய்தாலும் சரிதான். அவனோடு சேர்ந்து கும்மியடிப்பதில் அலாதி திருப்தி. அதனால்தான் அவனுக்கு எதுவுமே பழகாமல் போயிற்று என்கிறார் இவர்.    வீட்டில் எதையெதை எங்கெங்கு வைக்க வேண்டும், எது எது எங்கெங்கு இருக்க வேண்டும் என்று முறைமை கிடையாதா? எல்லாமும் இஷ்டத்துக்குக் கிடந்தால்? பார்க்கவே எரிச்சலடைந்தார் இவர். எத்தனை முறைதான் சரி செய்வது? பார்த்துப் பார்த்தாவது திருந்த வேண்டாமா? எதையுமே அவனுக்குச் சொல்லியும் கொடுப்பதில்லை. அவனாகவும் தெரிந்து கொள்வதில்லை.  

அத்தனை அன்பா வளர்க்குறீகளாக்கும்? பையனுக்கு எந்த சிரமமும் தெரியக் கூடாதுன்னு? அய்யா சில்வர் ஸ்பூனோட பிறந்தவரு, இல்ல?  கெட்டுச் சீரழிஞ்சு போவாண்டி….தெரிஞ்சிக்கோ…பொறுப்பா ஒவ்வொண்ணா சொல்லிச் சொல்லித் தெரிய வைக்கணும்…செய்ய வைக்கணும்…அப்பத்தான் அனுபவப்படும்.  நாளப்பின்னே தானே செய்யணும்னு அவனுக்குத் தோணும்…செய்ய ஆரம்பிப்பான்…நீயே எல்லாத்தையும் செய்தீன்னா அவனுக்குத் தெரியாமலே போயிடும்….கல்யாணம் பண்ணின பின்னாடி பொண்டாட்டிட்டக் குட்டு வாங்குவான்…என்ன பிள்ளை வளர்த்திருக்காங்கன்னு நம்மளத்தான் குறை சொல்வாங்க….சிரிப்பாச் சிரிச்சுப் போகுமாக்கும்….
     எத்தனையோ முறை சொல்லி விட்டார்தான். கேட்டால்தானே…!
     உங்களையா செய்யச் சொல்றேன்…நான்தானே செய்றேன்…என் பிள்ளைக்கு நான் செய்திட்டுப் போறேன்… பின்னாடி அவன் பாடு, பெண்டாட்டி பாடு…அதுக்கு இப்பவே நாம ஏன் கவலைப்படணும்…?.
     பையன் படிச்சு வேலைக்குப் போனவுடனே உனக்குப் பெருமை பிடி படலையாக்கும்…வேலைக்குப் போயிட்டா எல்லாந் தெரிஞ்சு போச்சுன்னு அர்த்தமா? வாழ்க்கையைப் படிக்கணும்டீ….மனுஷாளைப் படிக்கணும்…அந்த அனுபவம்ங்கிறது அத்தனை எளிசா கைகூடாதாக்கும்…அதுதான் ஒருத்தனை இந்த உலகத்துக்கு ஏத்ததா உருவாக்குது….வீட்டுலேர்ந்துதான் அதை ஆரம்பிக்கணும்…தெரிஞ்சிக்கோ…
     நீங்க சும்மா இருங்க…எல்லாந் தானா சரியாகும்…அவனே ராத்திரி பகல்னு இல்லாம ஆபீஸ் போயிட்டு வந்திட்டிருக்கான்….இதுல நீங்க வேறே……-சொல்லிக் கொண்டே சோபா செட் முன்னால் கலைந்து கிடந்த டீபாயில் இருந்த பொருட்களைச் சரி செய்ய ஆரம்பித்தாள் . கொஞ்சம் சில்லரை, ஒன்றிரண்டு பேனா, நகம் வெட்டி, பென்சில், ரிமோட், சார்ஜர், பர்ஸ், சமீபமாய்க் கட்டாத வாட்ச், புதிதாய் வாங்கிய ஏழாயிரம் ரூபாய் வாட்ச்,  விலையுயர்ந்த செல், லேப் டாப், பென் டிரைவ், காது குடையும் இயர் பெட்., இயர் ஃபோன், ஆபீஸ் பேப்பர்கள், சில புத்தகங்கள், இன்னும் என்னென்னவோ…! கிடந்த மேலும் பலவற்றுக்கு இவருக்குப் பெயர் சொல்லத் தெரியாது…அவளுக்கும் தெரியாதுதான். ஆனாலும் பையன் வைத்திருக்கிறான்…அதனால் அவை மதிப்புள்ளவை…அவளைப் பொறுத்தவரை அவ்வளவுதான்…
     தற்செயலாப் பார்க்கிறவங்களைத் திருடத்தூண்டுற மாதிரிக் கிடக்கு இங்க…திருடினாலும் உடனடியாக் கண்ணுக்குத் தெரியாது…பொருட்களை இப்படியா இறைச்சு வைக்கிறது?
     ஐயோ ராமா…..! – தலையைப் பிடித்துக் கொண்டாள் அவள்.
இருந்த இடத்திலேயே லேட் டாப்பில் வொயர் செருகி அல்லது ஏதோவொன்றைச் செருக்கி எதிரிலிருக்கும் அகன்ற தொலைக்காட்சிப் பெட்டியில் செட்டிங்ஸை சரி பண்ணி, வீடே அதிரப் படம் பார்க்க வேண்டும் அவனுக்கு. என்னவோ Nஉறாம் தியேட்டராம்….போதாக் குறைக்கு நாலா பக்கமும் சவுன்ட் சிஸ்டம் வேறு….தியேட்டரில் பார்க்கும் எஃபெக்டை வீட்டுக்குள் கொண்டு வருகிறார்களாம்…வௌங்கினாப்லதான்…..நினைத்துக்கொண்டார்…சொல்லவா முடியும்? காது சவ்வு அறுந்து போகும் போல் சத்தம்…இருக்கும் ரெண்டு ரூம் போக அடுப்படிதான் மீதி. எங்கே சென்று ஒளிவது என்று தெரியாமல் பரிதவித்தார் சுதர்சனம். எதில் புகுந்து கொண்டாலும் காது கிழிகிறது. அவளானால் அவனோடு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு ரசிக்க ரசிக்கப் படம் பார்க்கிறாள். உண்மையிலேயே அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று சந்தேகம் வந்தது இவருக்கு. செய்யும் செயலுக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா? அவனுக்காகச் சிரிப்பதானாலும் அதிலும் ஒரு இயல்புத் தன்மை வேண்டாமா? அவன் எதைச் செய்தாலும் இப்படியா வம்படியாய் ஏற்பது? ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறாள். இவர்தான் சகித்துக் கொண்டிருக்கிறார். சகித்துக் கொண்டே தவியாய்த் தவிக்கிறார்.
அப்பாவை அவன் விரும்பிக் கூப்பிட்டதேயில்லை. எல்லாம் அம்மாதான் அவனுக்கு. ஒரு பேச்சுக்கு என்று கூட அழைத்ததில்லை. ஒரு சமாச்சாரம் சொல்ல மாட்டான் அவரிடம்.  ஒரு நாள் அவன் கூப்பிடாமலேயே பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டார். சட்டென்று அவர்கள் இருவருக்குமான பேச்சு நின்று போனது. ஏன் என்றே புரியவில்லை இவருக்கு. சூழலே ஒரு மாதிரி செயற்கையாகிப் போனது. தான் என்ன மூன்றாம் நபரா? அவளுக்கே பிடிக்கவில்லையே? பின் மூஞ்சி ஏன் அப்படிச் சுருங்க வேண்டும்? என்னவோ டி.வி.க்குப் பின்னால் போய் எதையோ தேடுபவன் போல், சரி, அப்புறம் பார்ப்போம் என்று அவனாகவே சொல்லிக் கொண்டு பக்கத்து அறையில் போய் நுழைந்து கொண்டான். அது இவருக்குச் சுருக்கென்றது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அன்று முதல் இவர் அந்த உறாலுக்குள் அவன் இருக்கும்போது வருவதேயில்லை.  அவள் மட்டும்தான் அவனோடு புழங்குவாள். அதென்னவோ, எல்லாப் பயல்களுக்கும் அம்மாவைத்தான் பிடித்திருக்கிறது. அப்பா என்றால் எதிரி, கொடுமைக்காரர். வேண்டாதவர். யாரிட்ட சாபமோ? எவரிட்ட பொல்லாங்கோ…? ஆனாலும் அந்த டி.வி. அலறலை இவரால் சகிக்கவே முடியவில்லைதான். சொல்லவும் முடியவில்லை. அடுக்ககம் அது. எதிர் வீட்டில், கீழே என்று இருப்பவர்கள் எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ? யாராவது வந்து கதவைத் தட்டி சத்தம் போட்டால் கூடப் பரவாயில்லைதான். என்று முகத்துக்கு நேர் வந்து நின்று கட்டியேறப் போகிறார்களோ? அப்பத்தான் உரைக்கும்.
     உண்மையில் சொல்லப் போனால் அவரால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.  வயசான காலத்தில் இதென்னடா கொடுமை? மனசு ஒவ்வொன்றாய் விடுபட்டுக் கொண்டிருக்கையில், ஒரு அமைதி வேண்டாமா? ஆன்மா எப்போதும் ஓலமிட்டுக் கொண்டிருப்பது போலவா சூழல்?
     நீங்க ரெண்டு பேரும் ரிடையர்ட் ஆயாச்சுல்ல…இனிமே என்னோட வந்துருங்க…சென்னைல ஒரு வீடு பார்த்திருக்கேன்….வாங்கிடுவோம்…அங்க வந்து என் கூட இருக்கலாம்…எனக்கும் வீட்டுச் சாப்பாடாச்சு….ரூமுலெல்லாம் கண்ட பசங்களோட என்னால இனிமே இருக்க முடியாது.  இத்தனை நாள் சமாளிச்சதே பெரிசு….அதுக்கே என்னமாதிரி ஆளுக்கு பெரிய தில்லு வேணும்….இனிமே நான் அங்கிருந்தேன்…இல்ல அவுங்களோட ஒத்துப் போகாம இருந்தேன்…என்னைக் கொலையே பண்ணிடுவானுங்க….அவ்வளவு மோசமாப் போச்சு நிலைமை….புரியுதா நான் சொல்றது….?
என்னங்க இவன், என்னென்னமோ சொல்றான்…கொலை அது இதுங்கிறான்? எனக்குப் பயமா இருக்குங்க…போதுங்க, இங்க நாம இருந்தது…அவனோட போய் இருப்போம்….அவன் இங்கே வர முடியாது..நாம அவனோட போயிடுவோம்…அதுதான் சரிப்படும்.. – பயந்து நடுங்கியே  விட்டாள் நாகலட்சுமி. சூ…மந்திரக்காளி என்பதுபோல் சென்னைக்கு வந்தாயிற்று.
வீடு ரிச் லுக்கா இருக்கணும்ங்கிறது மட்டும் தெரியுது…அதுக்குத் தகுந்தா மாதிரி மெயின்டெய்ன் பண்ண வேணாமா? ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு இடத்துல, பக்கத்துக்குப் பக்கம் வீசியெறிஞ்சா? வாஷிங் மெஷின் போட வேண்டியதை இதுல போட்டு வைக்கணும்னுதானே இந்தப் பெரிய கூடை வாங்கினது? வந்த அன்னைலர்ந்து இதுல துணி விழுந்திருக்கா? அதுக்குள்ளே நான்தான் போய் உட்காரணும் போலிருக்கு…! அங்கங்க கச்சா முச்சான்னு வீசி வீசியெறிஞ்சா? நாம என்ன வேலைக்காரங்களா, எப்பப் பார்த்தாலும் ஒவ்வொண்ணா எடுத்துசேகரிக்க?செய்வோம்வேண்டாங்கலே….நம்மபையன்தான்…அவனும்பொறுப்பா     நடந்துக்கணுமில்லே….அப்புறம்  எப்பத்தான் தெரிஞ்சிக்கிறது? குடு குடுப்பைக்காரன் கையிலேயும் தோள்லயும் தொங்க விட்டிட்டு வர்ற மாதிரி எங்க பார்த்தாலும் தரைலயும், சேர்லயும், சோபாவுலயும், பெட்டுலயும் விழுப்புத் துணியாக் கிடக்குது…கூடவே துவைச்சதும்…எது வாஷ் பண்ணினது, எது துவைக்க வேண்டியதுன்னு எதாச்சும் வித்தியாசம் தெரியுதா? .யாராச்சும் திடீர்னு வந்தாங்கன்னா, என்ன நினைப்பாங்க? கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்க வேண்டாமா? இதென்ன வீடா, லாண்டிரியா? அங்க கூட தனித்தனியா அடுக்கியிருப்பான், மூட்டை கட்டியிருப்பான்…இங்க…படு கேவலமாயிருக்கு…! இவன் என்ன சின்னப் பிள்ளையா? இருபத்தஞ்சு வயசுப் பையன்…நாளைக்குக் கல்யாணம் பண்ணப் போறவன்…இப்டியிருந்தான்னா? ச்சே…! ரொம்ப மோசம்… சொல்லவும் முடில, மெல்லவும் முடில….
தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த நாகு இவரையே வெறித்துப் பார்த்தாள். இந்தத் தொண தொணப்பு எப்பத்தான் ஓயுமோ?
நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்…எல்லாம் நான் பார்த்துக்கிறேன்…எதையாவது  சொல்லப் போய் அப்புறம் அது பெரிய சண்டையாகும். ஒருத்தருக்கொருத்தர் பேசாம மூஞ்சியத் திருப்பிட்டு இருக்கணும்…
சொல்றேன் சொல்றேன்னு மாசக் கணக்காச் சொல்லிட்டிருக்கே…எங்க சொல்றே…சொல்லியிருந்தீன்னா இந்நேரம் திருந்தியிருக்கணுமே…மேலும் மோசமால்ல போயிட்டிருக்கு…இந்த சீர்திருத்தத்துலயே நம்ம ஆவி அத்துப் போகும் போலிருக்கே…! இந்த வீட்டுல எதுதான் ஒழுங்காயிருக்கு? பட்டப் பகல்ல பக பகன்னு லைட்டு எரியுது…தேவையில்லாம ஏ.சி. ஓடுது…கரன்ட் சார்ஜ் என்னாவுறது? இருக்கிற எடத்துலதான் ஃபேன் போடுவாங்கன்னு கண்டிருக்கு…இங்கயா, ஆளில்லாத ரூம்ல கூட கேட்பாரில்லாம ஃபேன் ஓடிட்டிருக்கு….அட, அத விடு…கக்கூஸ் போனா ஒரு மனுஷன் குழாயைச் சரியா மூட மாட்டானா? அதக் கூடச் சரியாப் பார்க்காமயா வருவான்? அதயும் உணர்ந்து நாமதான் போய் நிறுத்த வேண்டியிருக்கு? அட எதுவுமே வேணாம்…உன்னையே எடுத்துப்போம்…அக்கறையா சமைக்கிறே பையனுக்கு…பட்டர் பீன்ஸ், சோயா பீன்சுன்னு….எல்லாமும் கிலோ நூற்றம்பது,    இருநூறுன்னு விற்குது… போடு, வேண்டாங்கலே….அவன் நல்லாயிருக்கணும்…அதுதான் நம்ம நோக்கம்…ஆனா அதே அக்கறையோட அவன் சாப்பிடுறானா பார்த்தியா? என்னவோ ரெண்டு விரலால சுண்டி, அணில் கொறிச்ச மாதிரிக் கொறிச்சிட்டுப் போறான்…வீணாப் போயிடுமேன்னு அப்புறம் கிடந்து நாம தின்னு தீர்க்க வேண்டியிருக்கு…இந்தக் காலத்துப் பசங்களுக்கு வீட்டு சமையல் எங்க பிடிக்குது? பீட்ஸா, பர்க்கர், ஃபிரைட் ரைஸ், பன்னீர் மசாலா, லொட்டு, லொசுக்குன்னு என்னென்னத்தையோ  தின்னு தீர்க்குறானுங்க…இதையெல்லாம் எவன் கொண்டு வந்தான்? மனுஷாளக் கெடுக்கிறதுக்குன்னே திட்டம் போட்டு செய்வாங்க போலிருக்கு…! இதுக்காகவா நாம இவன் கூட வந்து இருக்கோம்…அவன் நல்ல உடம்போட, திட காத்திரமா, ஆரோக்கியமா இருக்கணும்னுதானே இப்டி வந்து கிடக்கோம்….பேசாம நம்மூர்லயே சிவனேன்னு இருந்திட்டு, வெந்ததைத் தின்னுட்டு, விதி வந்தாச் சாவோம்னு இருக்கத் தெரியாதா? கோயில், கச்சேரி, நாம சங்கீர்த்தனம்னு போயிட்டு பொழுதைப் போக்கத் தெரியாதா? நாம இங்கே வந்ததோட நோக்கம்தான் என்ன? கொஞ்சம் நினைச்சுப் பாரு?
சொல்லி விட்டுத் திரும்பிப் பார்த்தார் சுதர்சனம். நாகு தூங்கிவிட்டாற் போலிருந்தது. தன் புலம்பல்களைக் கேட்கும் போதெல்லாம் அவள் இப்படிக் கண்ணயர்ந்து விடுகிறாள்தான். உண்மையிலேயே தூங்குகிறாளா என்று ஆரம்பத்தில் சந்தேகித்தார். ஆரம்பிச்சாச்சா…? என்று நினைத்தாலே இப்போதெல்லாம் தூங்கி விடுகிறாள் என்பது உறுதியானது. நிற்சிந்தையான பாடு.
எங்கு இரவுத் தூக்கம் பாழாகிறதோ அங்கு எதுவும் ஒழுங்கில் இருக்காது என்பது துல்லியம். மென் பொறியாளர்கள் பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். வேலை முடித்து கண்ட நேரத்திற்கு வீட்டுக்கு வருகிறார்கள். ராத்திரி ஒன்று, இரண்டு என்றும் விடிய விடியவும் என்று வேலை பார்த்து, வீட்டில் எதுவுமே அவர்களுக்குள் ஒரு ஒழுங்கு இருப்பதில்லை. சம்பளம் கை நிறையக் கிடைத்து என்ன பயன்? சுவரிருந்தால்தானே சித்திரம்? அதை அனுபவிக்க உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டாமா? எதிர்காலம் மகிழ்ச்சியாய்க் கழிய வேண்டாமா? என்னென்னவோ பழக்க வழக்கங்களெல்லாம் அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தன் பையன் இத்தனை வருஷம் நண்பர்களோடு அறையில் தங்கியிருந்து, கெடாமல் இருந்திருக்கிறானே, அதுவே பெரிசு….ஏதோவொரு வகை மனத் திண்மை அவனை ஆட்கொண்டிருக்கிறது….என்னமாய் உலக விஷயங்களைப் பேசுகிறான்? தான் பார்க்கும் வேலையைப் பற்றி எவ்வளவு விரிந்து பரந்த அறிவு அவனுக்கு? புரிகிறதோ இல்லையோ தலையாட்டிக் கொண்டு கேட்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி? என்னென்னவோ சொல்கிறானே, மண்டையில் எதுவும் ஏறமாட்டேன் என்கிறதே? திடீரென்று கைக்கும், அறிவுக்கும் எட்ட முடியாத அளவுக்கு எப்படி வளர்ந்தது இந்த மென் பொருள் உலகம்? இரண்டு தலைமுறையை அப்படியே சட்டென்று பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறி விட்டதே? கொஞ்சம் கூட அறிவு பூர்வமாய் நம்மால் பின் தொடர முடியவில்லையே…!
     என்னன்னுதான் கொஞ்சம் சொல்லேண்டா கேட்போம்….
     சொல்லலாம்ப்பா..ஆனா அதெல்லாம் உனக்குப் புரியாது…அதான் யோசிக்கிறேன்….
     அவைகளோடு சேர்ந்து இவர்களும் இப்படிப் புரியாத புதிர்களாய் ஆகி விட்டார்களே…! நினைத்தவாறே அமர்ந்து கூர்மையாய் நாகுவை நோக்கினார். இத்தனை சலனத்தில் நான் ஆட்பட்டிருக்கும் போது எப்படி நிச்சிந்தையாய்த் தூங்குகிறாள் இவள்? அதுதான் ஆச்சர்யம்…! புண்ணியவதி…நினைத்தவுடன் தூங்க முடிகிறதே?
     எல்லாம் சரியாப் போகும்…அந்தந்த வயசு வர்ற போது…சிவனேன்னு இருங்க….-அவள்தான் பேசுகிறாள் தூக்கக் கலக்கத்தோடு….
     நானே எப்டிச் சிவனேன்னு இருக்கிறது? அந்தச் செவன்தானே நம்மள இந்தப் பாடுபடுத்திறான்…! –தனக்குள் முனகிக் கொண்டார். பிறகு கேட்டார்.
     இன்னும் என்னடீ வயசு வரணும்? அதான் வந்தாச்சே…அடுத்து அவனுக்கு ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டிதான் பாக்கி….சமீபத்துல ஒரு கவிதை படிச்சேன்…அது சமயம் பார்த்து ஞாபகத்துக்கு வருது…
     அப்பா பேச்சைக் கேட்டுக் கேட்டு                                            அலுத்துப் போச்சு                                                           அம்மா கையால் சாப்பிட்டு சாப்பிட்டு                                        அயர்ந்து போச்சு                                                            தங்கையை வாயால் திட்டித் திட்டி                                               தளர்ந்து போச்சு                                                            தம்பியை வசவால் விரட்டியடித்து                                                வீணாய் ஆச்சு                                                             எல்லாம் சலித்து                                                           எதிலும் ஒன்றாமல்                                                        புதிதாய் எதைச் செய்ய….?                                                   ம்…! அதுதான் சரி…                                                         சீக்கிரம் ஒரு                                                                 கல்யாணம் பண்ணனும்…!!!
“முடிவு”ங்கிற இந்தக் கவிதை எவ்வளவு பொருத்தமா இருக்கு பார்த்தியா?      
     நல்லாயிருக்கு….அவன் யோகத்துக்கு சீக்கிரம் அமையும் பாருங்க….                                                        இந்தக்காலத்துலபொண்ணுக்குத்தான்கிராக்கி….பையனுக்கில்லே….மேட்ரிமோனியல்லே …பார்த்தீல்ல….பெண்ணுங்க கம்மியா இருக்காங்க….பசங்க லிஸ்ட்தான் பெரிஸ்ஸ்ஸூ…..பையன் வீட்டுக்காரங்க கண்டிஷன் போட்டது போக, இப்போ பொண்ணு வீட்டுக்காரங்க கண்டிஷன்தான் ஓவரா இருக்கு….பையன் மாசத்துக்கு ஒண்ணு…ஒன்றரை லட்சம் சம்பாதிக்கணுமாம்….அப்ராடா….அதான் வெளிநாடா இருந்தா சந்தோஷமாம்…இழுத்திட்டு ஓடிடலாமில்லே…!.காரு வச்சிருக்கணுமாம்….சொந்த வீடு வேணுமாம்…மாமியார், மாமனார் தொந்தரவு கூடாதுங்கிறதை சார்ட்டுல போடலை அவ்வளவுதான்….நாமளா எதுக்கு வம்புன்னு ஒதுங்கிக்கணும்…அதான் நாகரீகம்…பின்னாடி முடியலைன்னா முதியோர் இல்லம் பார்த்து நுழைஞ்சிக்கணும்…நாலு பேர் பார்க்கவாவது மண்டையப் போடலாமே…? எடுத்துப் போட ஆள் வேண்டாமா?
     போதும் அபத்தப் பேச்சு….சாப்பிடலாம் வாங்க…. என்றவாறே அவள் எழ, கை கால்களை அலம்பிக் கொண்டு தட்டின் முன்னே போய் உட்கார்ந்தார் சுதர்சனம். தான் சொன்னது எதையாவது காதில் வாங்கினாளா, இல்லையா? எதிர்வினைக்காக எவ்வளவு தவிக்க வேண்டியிருக்கிறது? சட்டென்று முறித்து விடுகிறாளே…!
     ஒரு டம்பளரில் தண்ணீரைக் கொண்டு வைத்தவாறே நாகு சொன்னாள்.
     ஒரு கஷ்டப்பட்ட, ஏழைக் குடும்பத்துப் பெண்ணா பார்ப்போம்…அதுதான் இவனை அரவணைச்சு, சகிப்புத் தன்மையோட, பக்குவமாக் கொண்டு செலுத்தும்….என்ன, நா சொல்றது புரிஞ்சிச்சா….? கவனமாப் பாருங்க….!
     அட, நாகுவா இதைச் சொல்வது? உதிரும் முத்துக்களை விடுபடாமல் பொறுக்கத் தலைப்பட்டார் சுதர்சனம். புல்லரித்துப் போனது அவருக்கு.
     – மௌனப் புன்னகையோடு, அமிர்தமாய், நேருக்கு நேர் இணக்கமாய் நோக்கிய மனைவியைப் பார்க்கப் பெருமிதமாய் இருந்தது சுதர்சனத்திற்கு.
                           -----------------------------------------------






    
    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...