11 அக்டோபர் 2018

“நாய்புத்தி” சிறுகதை - ஆகஸ்ட் 2018 - உயிர் எழுத்து


“சிறுகதை”   

“நாய் புத்தி”
ன்னவோ புதிதாய் ஒரு சத்தம் கேட்கிறதே என்கிற தன்னெழுச்சியில் உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி விட்டுத் துள்ளி எழுந்த சிவானந்தம் அறையை விட்டு வெளியே வந்தார். வாயிலிலிருந்து உள் நுழைந்திருந்த வெளிச்சம் சட்டென்று முகத்தில் அறைய கண்கள் தானே சுருங்கிப்போய் வெளியே பார்வையைக் குறுக்கி  வீசியது. முழுதும் தன்னைக் காட்டுவதுபோல் நில்லாமல் பாதி மறைத்துக் கொண்டு எதிர் வலது பக்க வீட்டை நோக்கினார். அறையிலிருந்து வெளியே வந்தால் எப்போதும்  நேர் எதிர் வீடுதான் கண்ணில் படும். வெறும் வீடு மட்டுமா? அந்தப் பெண்மணி நின்று கொண்டிருக்கும் அழகும் தென்படும்தான். இன்றுவரை அதைக் கண்கொட்டாமல்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அழகிலிருந்து இவரால் விடுபடமுடியவில்லை. மூன்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, திருமணமும் செய்து கொடுத்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்திருக்கும் அந்தப் பெண்ணால் இன்னும், இன்றும் எப்படித் திண்ணென்று  இருக்க முடிகிறது? வாசலுக்கு வந்தாலேயே வீதியை நோட்டமிடும்போது இரண்டு கைகளையும் இடுப்பில் தாங்கிப் பிடித்து, கம்பீரமாய் நின்று நோக்கும் அந்தப் பார்வை ஒரு ராஜ பார்வை. இவருக்கு அதைப் பார்க்கப் பார்க்க இன்றும், இந்த வயதிலும் ஏக்கமாய்த்தான் இருக்கிறது. அப்படியே இறுக்க ஆலிங்கனம் செய்து கொள்ள ஒரு நல்வாய்ப்புக் கிட்டாதா என்று! ஒரு முறை, ஒரே ஒரு முறை அது நடந்தால் தன் உடம்பில், மனத்தில் உள்ள வியாதியெல்லாம், அழுக்கெல்லாம் ஓடிப் பறந்து மறைந்து போகும் என்று ஒரு எண்ணம் இவருக்கு.
இவர் இப்படி நின்று, நிதானித்துப் பார்க்கிறார் என்று அவளுக்குத் தெரியும் போலும்…ஒரு முறை கூட அவளின் பார்வை இப்பக்கம் விழுந்ததில்லையாயினும் அவர் அப்படி வெறித்துப் பார்ப்பதை என்றும் அவள் தடுத்ததில்லைதான். ஒரு வேளை அப்படி அவர் பார்ப்பதில் அவளுக்கும் ஒரு கௌரவம் இருந்ததோ என்னவோ…! இவர் மீது அவளுக்கு அன்பு உண்டு. வெளியே தலைகாட்ட நேரும்போதெல்லாம் புன்னகையோடு சுமுகமாய் எதிர்நோக்கி நலம் விசாரித்திருக்கிறாளே….! நலமாய் இருக்கிறீர்களா…ஊரில் எல்லோரும் சௌக்கியமா…என்று…ஏன்…இன்று இங்க சாப்பிட வாருங்களேன்…என்றுகூடக் கூப்பிட்டிருக்கிறாளே…! அன்னமிட்டுத் தின்று முடித்தால் பின் அந்தக் கைக்கு உரிமையாளினிக்கு துரோகம் செய்ய முடியுமா? மனசாட்சி அறுக்குமே…! பின் இப்போதிருக்கும் சுதந்திரம் பறிபோய் விடுமே…! இந்த வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் வெறும் ஏக்கங்களோடு முடிந்து போகின்றனதான். கிடைத்ததை வைத்துத்தான் ஒருவன் திருப்தி கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது இவரின் பார்வை நிலைக்க வேண்டிய  இடம் நேர் எதிர் வலதுபுற வீடு.
 பகிரங்கமாய் அவர் தன்னைக் காட்டிக் கொள்ள முடியாது. மனது ஒப்பாது. அது வெட்கங்கெட்ட செயலாக அமைந்துவிடும். எந்தக் குரல் மானசீகமாய்த் தன்னை வெளியே இழுத்துக் கொண்டு வந்ததோ…அந்தக் குரலுக்குரியவள் அங்கே நின்றிருப்பது தெரிந்தது. அது அவளேதான்…சந்தேகமில்லை. அந்தப் பின்புறம் பார்த்ததுமே அவருக்குள் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. ஓடிப்போய் பின்புறவாக்கிலேயே அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனது துடித்தது. அது அவளுக்கும் தெரியும். இப்போதும் அந்த ரசனை அவளிடம் மீதமிருக்கும். தன் அழகுபற்றிய பிரக்ஞை அவளுக்கு மிக அதிகம்..கிராமத்துக் கட்டை. அதை உணரவும் ரசிக்கவும் அனுபவிக்கவும் ஆளில்லாமல்தானே கொடி இங்கே பற்றியது. கொழு கொம்பு கிடைத்தவுடன் சுற்றிக் கொண்டது. மீள முடியாமல் அதிலேயே சிறைப் பட்டுப் போனார் இவர். முதல் வீச்சிலேயே முறிந்து விழுந்தவர் இவர்.
உடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த வீட்டுப் பெண்மணியும், வீட்டுக்காரரும் ஒரு பார்வையை இங்கே வைத்திருப்பதை இங்கிருந்தே கணிக்க முடிந்தது. திண்ணையைத் தாண்டி வராண்டாப் பகுதியில் வளர்ந்திருந்த செடி கொடிகள் இவரை மறைத்தாலும், அவற்றிற்கிடையே அவர்களின் பார்வை ஊடுருவியிருப்பது கண்டு…தான் அவசரப்படக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இவரை ஆட்கொண்டது. அறைக்குள்ளிருந்தமேனிக்கே திறந்திருந்த ஜன்னல் வழி பார்த்திருக்கலாம், ஏன் எழுந்து வந்தோம் என்று இப்போது நினைத்தார். அங்கு நின்றிருந்தால் அந்த இருட்டு, தன்னைக் காட்டிக் கொடுக்க வாய்ப்பில்லை. தன் பார்வையும் தெளிவாக ஊடுருவ வசதி.
அப்படி ஊடுருவிப் பார்த்ததைப் புரிந்துகொண்டுதான் உள்ளே வந்து கதவுக்குப் பின்புறம் ஒதுங்கினாள். அங்கிருந்த ஜன்னலைப் பாதுகாப்பாக அடைத்துக் கொக்கியிட்டுவிட்டு அவள் நின்றது அதற்காகத்தான். அத்தனை சீக்கிரம் அவள் வலைக்குள் விழுந்து விடுவேன் என்று எப்படித் தீர்மானித்தாள்.அவள் மீதான அழகின் நம்பிக்கையா? அல்லது தான் அவ்வளவு பலவீனப்பட்டவன் என்று நினைத்ததாலா? ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை அது நாள்வரை. வெறும் பார்வைதான். மெல்லிய உதட்டோரப் புன்னகைதான். ஆனால் அந்த விழிகள் மட்டும் எப்போ…எப்போ என்று காத்துக் கொண்டிருந்தது. தான் பார்க்காதபோது ஓரக் கண்ணால் பார்த்தது. தனக்குத்தானே சிரித்துக் கொண்டது. நீயெல்லாம் ஒரு ஆளா எனக்கு? என்று ஏளனம் பேசியது. ஆனாலும் அவளுக்கு ரசனை ஜாஸ்தி. ஆசையும் ஜாஸ்தி. குதிரை ரகம். நிச்சயம் ஒரு ஆம்பளை பத்தாதுதான். மனசுக்குள், தான் ரொம்ப அழகு என்ற கர்வம். அழகுதான் அவள். மறுப்பதற்கில்லை. அள்ளித் தூக்கி மடியில் போட்டுக் கொண்டு நாள் பூராவும் கொஞ்சினால் கூட அயர மாட்டாள். நமக்கும் அலுக்காதுதான். அவள் அழகை ரசிக்கத் தக்க ஆண் வேண்டும் அவளுக்கு.
.எனக்கும் வேண்டியிருந்தது அப்போது. என்னை விரும்பும் அவள். என்னில் ஏதோவொன்று அவளுக்குப் பிடித்திருக்கிறது. எதுவோ அவளை ஈர்த்திருக்கிறது. எனது பேச்சா? குரலா? சிரிப்பா? நடையா? உடலமைப்பா? நிறமா? தலை வாரியிருக்கும் ஸ்டைலா? அதுதானாகவே வளைந்து வந்து நெற்றியைத் தொட்டுப் பார்க்கும் அழகா? ஒதுக்க ஒதுக்க வலிய வந்து விழுந்து மேலும் மெருகூட்டும் தாபமா? அந்த முடியை விரலால் சுற்றிச் சுற்றி ஒதுக்குவாளே…!
அணைத்து வளைத்த அந்த ஒரு கணத்தில் என்னவொரு ஒத்துழைப்பு?  ஒருவேளை அசடோ? தன்னை சினிமாக் கதாநாயகியாய் வரித்துக் கொண்டிருக்குமோ? திரை நாயகி போலல்லவா வளைகிறாள்? நானா வளையச் சொன்னேன்? அல்லது அதுவாய்த்தான் வளைந்து ஒடிந்து விடுமா? இழுத்துப் பிடித்தால் அணைப்பிற்குள்தானே இறுக வேண்டும்.? ஆனாலும் அந்தச் சிரிப்பு? அதோடு சேர்ந்து விரியும் காந்தக் கண்கள்…! என் அழகுக்கு சமமான ஒருத்தனுக்குத்தான் என்னை முழுமையாகக் கொடுப்பேன் என்று நினைத்து வைத்திருப்பாளோ? காமம் கண்ணையும் கருத்தையும் அன்று மறைத்து விட்டது. அதுதான் உண்மை. வீணும்…வீணும்…என்றாள். தவித்துத்தான் கிடந்தாள். தயாராய்த்தான் நின்றாள். என்ன சொல்கிறாள் என்பது ஆரம்பத்தில் புரியவில்லை. கொஞ்சலாக, கெஞ்சலாக, ஆர்வத்தோடு செல்லமாய் அவள் பேசியது.. வேணும் என்பதைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறாள் என்பதைப் பின்னால்தான் புரிந்து கொண்டார்.
அவள் கேட்டதெல்லாம் முன்னம் வேறு யாரும் கேட்காதது. குறிப்பாக யாமினி. அவர் மனைவி. இவர் கேட்டதையே தந்ததில்லையே அவள். பிறகென்ன அவள் கேட்பது? பாவி, என்ன கிராக்கி பண்ணுவாள்? என்னவோ கைக்கு எட்டாதது போல் வைத்துப் பாதுகாத்தாளே…! தங்கக் கலசமா உடம்பு? புளி போட்டுத் தேய்த்து, பளபளப்புக் குறையாமல் அப்படியே வைத்திருக்க? இல்லை, காலத்துக்கும் அப்படியே திண்ணென்று நிற்கப் போகிறதா? ஒரு நாளாவது இசைந்து படுத்திருக்கிறாளா? வலிய வலிய இழுத்து இழுத்து எத்தனை நாளுக்குத்தான் பலவந்தப்படுத்துவது? ஆசையே இல்லையா அவளுக்கு? அல்லது தன்னைப் பிடிக்கவில்லையா? தினமும் பாடுதானா இவளோடு? அவனவன் ராத்திரி ரெண்டு ஷிப்ட் மூணு ஷிப்ட் போடுகிறான்? ஒரு தரத்துக்கே இந்தப் பாடு படுத்துகிறாளே…? பொம்பளதானா இவ? என்னதான் கட்டுப்பாடாய் வளர்க்கப்பட்டிருந்தாலும், உடல்ரீதியான அந்த ஆசைகள் அவ்வப்போது வெளிப்பட வேண்டாமா? அந்தந்த பாகங்களை எத்தனை தூண்டி விட்டாலும் கிளர்ச்சியில்லையே? பாடாய்த்தான் பட்டுவிட்டார் இவர். இத்தனை கட்டுப் பெட்டியாய் எவளையும் பார்த்ததில்லை இதுவரை. தாம்பத்தியத்தில் அத்தனை ஈடுபாடு இருப்பதாய்த் தெரியவில்லை. பொம்பளைக்கே ஆன சராசரி ஆசைகள் கூட காணப்படவில்லை. தூண்டிவிட்டாலும் எழுவதில்லை. என்ன ரகம் இவள்? பேச்சு மட்டும் எகிறுகிறது தலைக்கு மேலே வீட்டிலுள்ள ஒவ்வொரு அறைச் சுவர்களும், கதவுகளும், ஜன்னல்களும், இத்தனையையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவைகளுக்கும் பழகிப் போயிருக்கும். இங்கே நாம் பாதுகாக்க வேண்டிய ரகசியங்கள் எதுவுமில்லையென்று. பார்த்து ரசிக்கவென்றும் ஏதுமில்லையே…! மரமாய், மழு மட்டையாய் நின்று கொண்டிருக்க வேண்டியதுதான். காட்டாற்று வெள்ளமாய் அடங்கிக் கிடந்தார். என்று அழிவை ஏற்படுத்தப் போகிறார் என்று அவருக்கே தெரியாது கிடந்த காலம். கிடந்த கோலம்…!  
இன்று அவளைப் பார்த்து விட்டார். அதே கட்டு விடாத உடம்பு. ஸ்கெட்ச் மாறாத வளைவுகள்…நீரோட்டம் போன்ற தெளிவான பாய்ச்சல்….அடர்ந்து கருத்த கூந்தல். தான் மட்டும் இப்படிக் கிழடாகிப் போனோமே…! அவள்…பாவி அப்படியே வந்து  சித்திரமாய் நிற்கிறாளே…!
திடீரென்று ஒரு சந்தேகம். அவள்தானா? அல்லது வேறு யாரையேனும் பார்த்து அப்படி நினைத்துக் கெக்கலிக்கிறோமா? நிச்சயம் அவள்தான். அவளேதான். பித்த வெடிப்பு துளியும் தென்படாத மொழு மொழுப் பாதங்கள். அள்ளி அள்ளி முகத்தில் பதித்துக் கொண்ட பூம்பாதங்கள்…முகர்ந்து முகர்ந்து நுகர்ந்த வெண்பஞ்சுக் குழம்பு…
அதை முகத்தில் தூக்கி வைத்துக் கொஞ்சியிருக்கிறார் இவர். பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கன்னத்திலும் வைத்துப் பதித்துக் கொண்டு அப்படியே முழுதாக அவளை நோட்டமிட்டிருக்கிறார். இன்றுள்ள வசதிகள் அன்றிருந்திருந்தால் அப்படியே இஞ்ச் பை இஞ்சாகப் படமாய்ப் பிடித்து, இன்றும் அந்தப் பழைய சொர்க்கத்தில் மூழ்கித் திளைக்கலாம். காலம் கடந்த ஏக்கம். ஏக்கமாய்த்தான் விட்டு அகன்றாள். எந்த அளவுக்கு நெருங்கியிருந்தாளோ அந்த அளவுக்கு சட்டென்று ஒதுங்கி விட்டாள். மின்னலாய்த் தோன்றி, பெருமழையைப் பெய்வித்துவிட்டுக் காணாமல் போன தேவதை அவள்.   இமைக்காமல் பழைய நினைவுகளில் அவளையே வெறித்தார் சிவானந்தம்.
 எதற்காக வந்திருக்கிறாள் இப்போது? அழைத்து வரப்பட்டாளா, அவளாக வந்தாளா? ஏற்கனவே அழைத்துத்தான், வரவில்லை என்று மறுத்து விட்டதாகச் செய்தி. அது தானாக அவர் காதுக்கு வந்தது. தன்னை நோட்டமிடுவதற்காக வந்ததா அல்லது தனது பதில் என்னவாக இருக்கலாம் என்று அறியப்படுவதற்காகவா என்ற எச்சரிக்கை உணர்வு இவருக்குள் அந்தக் கணமே உதித்திருந்ததுதான்.    அவர்களுக்கு என்றுமே தன் மீது ஒரு சந்தேகம் உண்டுதான் என்பதை இவர் அறிவார்தானே…! அந்த சந்தேகம் இதுநாள்வரை அப்படியேதான் நீடித்திருந்தது. அதனால்தான் அதன் தீவிரத்தன்மை இன்னும் அவர்களிடம் குறையாமல் இருந்து வருகிறது. எங்ஙனமேனும் அதன் உண்மைத் தன்மையை அறிந்தே தீர வேண்டும் என்கிற முனைப்பு அந்தப் பெண்மணியை விட அவரிடம்தான் அதிகம். அது அந்த அம்மையாரால் தூண்டப்பட்டதாகவும் கொள்ளலாம். மனிதர்களுக்குத் தன்னைவிட எதிராளியின் செயல்பாடுகளில்தான் ஆர்வம் அதிகம். இயல்பு வாழ்க்கையில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஆசாபாசங்களை, அதிகாரங்களை, அதிரடிகளை எப்படி ஒரு திரைப்பட நாயகன் எதிர்கொண்டு சாகசம் புரியும்போது மனம் எங்ஙனம் மகிழ்ச்சி கொள்கிறதோ அதுபோல் தங்களால் இயலாததை அல்லது தங்களுக்குக் கையாலாகாததை எதிராளியின் வழி காண்பதில் ஒரு விறுவிறுப்பு, திருப்தி அல்லது வம்பு. எந்நேரமும் பாய்வதற்குக் காலைச் சுரண்டிக் கொண்டிருக்கும் பொலிகாளையைப்போல. இல்லையென்றால் ஒரு சேர அவர்கள் இருவரின் தீர்க்கமான பார்வையும் இங்கு நோக்கி ஏன் இத்தனை தீவிரத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்?
தான் தனியே கிடந்து கஷ்டப்படுகிறேனே என்று உதவுவதற்காகவா…? தன் மீது இரக்கம் கொண்டு ஒரு ஏற்பாடு செய்யலாமே என்றா? அதன் மூலம் அந்த விட்ட குறை, தொட்ட குறையைப் பூர்த்தி செய்கிறானா பார்ப்போம் என்று அறிவதற்கா?அந்த ஏற்கனவே சந்தேகம் கொண்ட உண்மையை உறுதி செய்து கொள்வதற்காகவா?  அதன்மூலம் ஊருக்கு அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கா? இப்படியான ஒரு சந்தர்ப்பம் வலுவாய் அமைந்திருக்கிறது என்று  காத்திருக்கிறார்களோ…?
என் மிஸஸூக்கு உடம்புக்கு முடில…என்னாலயும் அதிகமா வேலை செய்ய முடில…அதான் யோசிச்சேன்…போய்க் கூட்டிட்டு வந்திரலாமான்னு…சொன்னார்.
வேலையை விட்டு நின்னபோது ஒரே சமயத்துல எல்லா வீட்லயும் நின்னுட்டாங்க…மொத்த வருவாயும் போச்சு….அப்படி அத்தனை வருமானத்தையும் ஒரே சமயத்துல இழக்கத் துணிஞ்சவங்க…இப்ப நீங்க கூப்டா வரவா போறாங்க….எனக்கென்னவோ நம்பிக்கையில்ல….
திரும்ப வந்தா உங்களுக்குக் கூட உபயோகமா இருக்குமுல்ல….!
இந்த வார்த்தைகள் எதற்காக? தன்னை நோட்டம் பார்க்கவா? லேசுப்பட்டவனா நான்…? உபயோகமா இருக்குமுல்ல..எத்தனை பொருள் பொதிந்த வார்த்தை? ஆழம் பார்க்கிறான் இந்த மனிதன்…! சுதாரித்தார் சிவானந்தம்.
எனக்கு வேண்டாம்ங்க…எங்க வீட்ல ஊர்ல இருக்கிறபோது…நான் அவங்களை வேலை செய்யக் கூப்பிடுறது சரியில்லை…..இவ்வளவு ஏன்…யாமினி இருந்தாலுமே இதெல்லாம் நடக்காது…அவளுக்குப் பிடிக்கலேன்னா பிடிக்கலைதான்….அதுதான் என் விருப்பமும்…அவ சொல்லை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது….
த்தனைவாட்டி அலைந்திருக்கிறார் இவர்? தனியாய் இருந்தாலும் அவள் நினைவிலேயேதானே தவித்துக் கிடந்தார். என்றாவது கண்ணில் படுவாள் என்று. டவுனுக்குள் போவதற்கு அது சுருக்கமான வழிதான். ரோடு கல்லும் கட்டியுமாக, மேடு பள்ளமாகக் கிடந்தாலும் அவர் அந்த வழி போவதைத்தான் விரும்புவார். காரணம் ஒரு முறையேனும் அவளைப் பார்த்து விடலாம் என்கிற நப்பாசை. ரொம்ப நாளாயிற்றே…தப்பு தப்பு…வருஷமாயிற்று. நாய், எச்சில் வழிய நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைவதுபோல் தன்னை நினைத்துக் கொண்டார். வெறி நாய்தான் அப்படிப் போகும். அது அடையாளம் அதற்கு. ஒருவகையில் தானும் அப்படித்தானோ?
அந்த நினைப்பே சுகமாகவும், சற்று வெட்கமாகவும்  இருந்தது. வெட்கங்கெட்டவனுக்கு எப்படி வெட்கமாக இருக்கும்? இது ஒருவகை வெட்கங்கெட்ட வெட்கம். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். இம்மாதிரி மனுஷனுக்கு, தான் செய்யப் போகும் தப்பு பற்றிய உறுத்தல் இருப்பதில்லை. நினைக்கும் அந்தத் தப்பை செய்து முடித்தால்தான் மனசு ஆறும். அதுவும் இது பொம்பளை விவகாரம். விடுமா? அவள் கிடைத்தால் இந்த உறுத்தல் எல்லாம் கணத்தில் மறைந்து போகும்தான். நினைப்பே எத்தனை சுகம்? நேருக்கு நேர் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு சிரித்தால் போதும். சொக்கிப் போகும் இவருக்கு. இப்போது இவர் சொல்லும் காரணம் உண்மைதானா? பொய்யானவனுக்கு அடுத்தவனை லேசில் நம்பத் தோன்றாது. இவரும் அலைகிறாரோ?
எதற்கு இப்போது இதை என்னிடம் சொல்கிறார்? என் எதிர்வினை எப்படியிருக்கிறது என்று நோட்டமிடுவதற்கா? அல்லது தான் ஏற்கனவே எதற்கேனும் தேடிப் போயிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை சூசகமாய் உணர்ந்து அதை வெளிப்படுத்துகிறேனா என்பதை அறிவதற்கா? ஆனாலும் கள்ளத்தனம் அதிகமையா உனக்கு…! கூட்டிட்டு வந்திராலாமான்னு என்கிறானே…? இவன் வைத்த ஆளா அவள்? அழைத்தவுடனே பலியாடு போல் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு  பின்னாடியே வருவதற்கு? அப்படி நீ நினைத்துப் போய் நின்றால், சரி என்று மறு நிமிடமே பின்தொடர்ந்து விடுவாளா என்ன? அத்தனை சுலபமாய்ச் சென்று அவளைப் பார்த்து விட முடியுமா நீ?
எத்தனை கெத்தானவள் அவள்? வேலைக்காரி என்றாலும் அவள் தன்னை அப்படியா உணர்ந்து கொண்டு இங்கே அடியெடுத்து வைத்தாள்? வந்த முதல்நாள் அவள் வேலைக்காரியாகவா இருந்தாள்? அவளின் ஓரப் பார்வையும், நடையும், உதட்டோரப் புன்னகையும் அந்தத் தளுக்கும், மினுக்கும்….எங்கேயாவது வேலைக்காரி இப்படி புத்தம் புதிய புடவையோடு காட்சியளித்திருக்கிறாளா? கண்டாங்கிச் சேலையோடு கெண்டைக்கால்  பளபளக்க கொலுசு சத்தமிட….
அவள் வந்த கோலம்…முதல் பார்வையே பட்டு அகலவில்லையே….!
சைடு வழியா சுத்திக் கொல்லைப்புறம் வாங்க…. – எப்படிச் சட்டென்று சுதாரித்தாள் யாமினி. நீங்க உங்க ரூமுக்குப் போங்க…இங்கென்ன பார்வை?  என்று தன்னை வேறல்லவா ஒரு விரட்டு விரட்டினாள்…எதற்கு இப்படிப் பேசுகிறாள் இவள்? அப்படியானால் வீடு கூட்ட அவள் உள்ளே வரமாட்டாளா? அப்போது பார்க்க மாட்டேனா? வேண்டாம் என்றாலும் கண்ணில் படுமே…!  கூட்டச் சொல்லப் போவதில்லையோ? இவளே செய்து கொள்ளப் போகிறாளோ? இவளைப் பீடித்திருக்கும் சந்தேகப் பேய்க்கு செய்தாலும் செய்வாள்…! தானும் கொடுக்க மாட்டாள்…அடுத்தவளையும் கொடுக்க விடமாட்டாள்…என்ன அநியாயம்…! அக்கிரமம்….!!
     அந்த முதல் நாள் அப்படி அவள் ஒதுங்கியதே அதற்காகத்தான் என்று கணத்தில் புரிந்து கொண்டார். அதுவும் யாமினி பாத்ரூமில் தண்ணீர் மொண்டு மொண்டு விட்டுக் குளிக்கும் சத்தம் கேட்கும் அந்தச் சில நிமிடங்களைச் சாமர்த்தியமாய்ப் பயன்படுத்திக் கொள்ள வலுவாய் அமைந்தது.    கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் அவளைக் கட்டியணைத்து முத்தமழை பொழிந்து விட்டார் இவர். ஒரு சத்தம் காட்டவில்லை அவள். அமைதியாக வளைந்து கொடுத்தாள் சினிமாக் கதாநாயகியைப் போல.  புசுபுசுவென்ற அவள் கன்னமும், ரோஸ்நிறத்திலான உதடுகளும், இனித்துக் கொட்டியது இவருக்கு.முதல் தொடுகையாயிற்றே…! அப்படித்தானே இருக்க முடியும்… வேலைக்காரிக்குக் கூடவா இப்படி உதடு இருக்கும்? தேனாய் இனிக்கிறதே…! இப்டியொரு பப்ளிமாஸ் கன்னமா? என்னவோ புது மணம் அவளிடம். என்னை இழுத்துப் போடவென்றே இப்படித் தயாராகி வந்திருக்கிறாளோ? என்ன தேய்த்துக் குளித்திருப்பாள்? அல்லது குளிக்காததால் வரும் மணமா? வியர்வையா இப்படி மணக்கிறது? ஒரு வேளை உடம்பு நாற்றமே சுகமளிக்கிறதோ? புது மணம்தானே. இனிமேல்தான் பழக வேண்டும். காமத்திற்குக் கண்ணில்லை. மூக்குமில்லையோ…! திரும்பத் திரும்ப அந்த மணத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டார். அதே நெடியைக் கொண்டு வர முனைந்தார். லேசாக உணர முடிந்தது. புதுத் தோலின் மணம். அவளுக்குப் பழைய தோல்தான். ஏற்கனவே ஒருவன் சுவைத்தது வேறே. ஆனாலும் இவருக்கு அது புதுசு. தோலில்தான் என்னவொரு இறுக்கம்? எத்தனை வழுவழுப்பு. எவ்வளவு மென்மை. மேலிருந்து நாக்குப் போடலாம் போலிருக்கிறது.  தொட்ட கைகளில் ஏதும் அந்த மணம் ஒட்டிக்கொண்டிருக்குமோ? முகர்ந்து பார்த்துக் கொண்டார். திரும்பவும் அந்த மணத்தை மூக்கில் அழுந்த வாங்க வேண்டும் என்று மனசு சப்புக் கொட்டியது. 
இவ்வளவு வேகத்தை அவள் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ, அசந்து போனாள். சற்று நிதானிக்க வேண்டுமோ என்னவோ? உடனே சமாளித்துக் கொண்டாள். விழியை மேலே உயர்த்தி கிறங்கும் ஒரு பார்வையோடு கூடிய புன்னகையுடன், போதும் என்றாள். அந்தப் போதும்தான் எத்தனை அழகு. அதுவே நிறைய வேண்டும் என்றது. அப்போதைக்குப் போதும். மீதி நாளைக்கு. அவ்வளவுதான். யாமினி வந்துவிடுவாளே…! சரி…சரி…நடத்துங்க என்றா சொல்வாள்?
இயல்பாய் வேலைக்குள் நுழைந்து விட்டாள் உடனே. உதட்டோரப் புன்னகை மட்டும் அப்படியே…! அந்த மென்மைச் சிரிப்புக்குக் கோடி கொடுக்கலாம். தினமும் அவளின் ஓரச் சிரிப்பைப் பார்த்துப் பார்த்துத்தான் மயங்கி விட்டேனா? அந்தப் பல் வரிசையும், அதன் வெளுப்பும்…பாந்தமான வட்ட முகமும்…திண்ணென்ற உயரமும்…சரியான கிராமத்துக் கட்டை….
எங்குமே தேவடியாள்கள் செய்வதெல்லாம் அழகுதான். அப்பத்தானே அவ தேவடியா…!  இவளை அப்படிச் சொல்லலாமா? உடனே அப்படிச் சொல்லி விடுவதா? தொடர்ந்து பலரிடமும் செல்பவள்தானே தேவடி. அவசரப்படாதே…
அதையெல்லாம் ஒரு குடும்பப் பெண் செய்ய முடியுமா? குடும்பப் பெண் கணவனிடம் செய்து காண்பித்தால் அல்லது செய்தால், கணவனுக்கு முதலில் அவள்பேரில் சந்தேகம்தான் வரும். ஏற்கனவே அனுபவம் இருக்குமோ? இந்த நெளிப்பு நெளிக்கிறாளே? என்று.. தேவடியாள் அப்படி இருந்தால்தான் அவளுக்கு அழகு.  பிழைப்பு நடக்கும். மயக்கத்தை அளிக்க வேண்டியது அவள் ட்யூட்டி. மயங்கச் செய்யவில்லையாயின் பொழப்புப் போச்சே…! ஒரு வேளை இவளுக்கும் அப்படி அனுபவம் இருக்குமோ? இல்லை, சினிமாவைப் பார்த்து இப்படிச் செய்கிறாளா? உதடு கடிப்பதும், அரைக்கண்ணில் பார்ப்பதும், பக்கவாட்டில் நெளிப்பதும்…இத்தனை நளினங்களா?
எல்லா யோசனையும்தான் அன்று. நாற்பது தாண்டினால் நாய் புத்தி என்பது சரிதான் போலும். எதுக்கு வம்பு என்று விடவும் முடியவில்லை. இவளை வைத்துத்தான் அவளைப் பழி வாங்க வேண்டும். மனது கருவறுத்தது. எத்தனை நாள் காத்திருப்பு அது? வருடங்களாய்ப் பரவிய ஏக்கம். தீராத மோகம். தணியாத ஆசைகள். புரட்டிப் போட நினைத்து, தொடவே முடியாமல் போனால்? அவளைச் சும்மா விடலாமா? நான் என்ன கேனையனா?   
ப்போது அவர்கள் மூவரும் அமர்ந்து பேசுவது தெரிந்தது. அந்த அம்மாவுக்கும் ஒரு நாற்காலி கொண்டு வந்து போட்டு உட்காரச் செய்திருப்பது, அவர்கள் அவள் மீது வைத்திருக்கும் மதிப்பை உணர்த்தியது. வீட்டுக்குள் கூட்டிப் போகாமல் அதென்ன வராண்டாவில் உட்கார்த்தி வைத்துப் பேசுவது? அவள் அவர்களைப் பார்க்கும் கோணத்தில்தான் அமர்ந்திருந்தாள். வந்ததிலிருந்து இத்திசையில் ஒரு முறை கூடப் பார்வை திரும்பாததும், தான் மட்டுமே கதியாய் நோக்கிக் கொண்டிருப்பதையும் நினைத்தபோது இவருக்குள் பச்சாதாபம் மிகுந்தது.
எல்லாக் காலத்திலும் தான் அவ்வாறுதான் இருந்து வந்திருக்கிறோம். வயிறு நிறையத் தின்பதும், வேலைக்குப் போவதும் வருவதும், அன்றாடம் புணருவதும் அல்லது புணர முயற்சிப்பதும், அதற்காக யாமினியைப் போட்டுப் பாடாய்ப் படுத்துவதும், இணங்கவில்லையானால்  அவளை அடிக்க முனைவதும், வெறித்தனமாய் அவள் உடைகளைப் பிடித்து இழுத்து இருட்டோடு இருட்டாய் அவளை நிர்வாணமாக்க முயன்று தோற்பதும்…பகலில் ஒருவிதமான சண்டை…இரவில் வேறுவகையான யுத்தம், முடிவேயில்லாமல் போனதே அவளுக்கும் தனக்கும்…!
கால்களால் எட்டி உதைத்தாளே ஒரு முறை….அந்த நாளை மறக்க முடியுமா?
சிவா…என்னப்பா சத்தம்….? – பக்கத்து அறையில் படுத்திருந்த அம்மா  தூக்கம் கலைந்து எழுந்து அமர….அதற்கு மேல் எதுவும் பேசத் திராணியின்றி…உருண்டு உருண்டு அருகிலுள்ள தன் படுக்கைக்குச் சென்ற அவலம். அந்த இரவில் மனது என்னமாய்க் கொதித்துப் போனது.
இதென்ன கொடுமை…?கணவன் சற்று அதிக ஆசை கொண்டவனாய் இருந்தால் மனைவியானவள் இணங்கக் கூடாதா? மனதோடு இணங்கி அவன் தாபத்தைத் தணிப்பதுதானே முறை…? இப்படி எகிறியடிக்கிறாளே….? அம்மா இருக்கையிலேயே இத்தனை தைரியமாய்ச் செய்பவள்…அவளுக்குத் தெரிந்தால் வாய் கிழியப் பேசி, தன் மானத்தைக் கப்பலேற்றிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான். அதையும் செய்வாள் இவள். அம்மா முன்னால் தன் மானம் போகும்..அன்று ஒதுங்கிப் படுத்த தன் மனது என்ன பாடுபட்டுப் போனது? இத்தனைக்கும் பையன் ரகுவரன் பிறக்காத அந்த இளமைக்காலம்….அப்போதே…அப்போதேயென்ன…ஆரம்பம் முதலே அவள் அப்படித்தானே இருந்தாள்? என்றுதான் இணக்கத்தோடு இணங்கியிருக்கிறாள். வலிய இழுத்து இழுத்துத்தானே எல்லாமும் நடந்தேறியிருக்கிறது.. பெண் மனதோடு இணங்கும்போதுதானே அழகு கூடுகிறது. இவள் தன் அழகை அப்படி என்றேனும் வெளிப்படுத்தியிருக்கிறாளா? உடலில் மணம் கூட வேண்டுமானால் இணக்கம்தானே முக்கியம். தொட வந்தாலே சலித்துக் கொண்டால்? மேலே விழுந்த கையை எடுத்து உதறினால்? கால்களால் உதைத்து வெளியேற்றினால்?
மனதில் யாரையேனும் நினைத்துக் கொண்டிருந்தால் சொல்லித் தொலையேண்டி… அவனோடுதான் வாழ்வேன் என்று விட்டு ஓட வேண்டியதுதானே? ஏனிப்படி இருந்து கழுத்தறுக்கிறாய்? நானாவது அடுத்த வழி என்னென்று பார்ப்பேனே…அதற்கும் நகர விடமாட்டாயா? பாதகி…! நெஞ்சுக்குள் ஒருவனை வைத்துக் கொண்டு இன்னொருவனுக்கு ஏன் கழுத்தை நீட்ட வேண்டும்? பெற்றோர்களின் நிர்ப்பந்தம் என்று மசிந்திருந்தால் வந்த இடத்தில் பழசை மறந்துவிட்டு அல்லவா இருக்கத் தெரிய வேண்டும்?  அல்லது திருமணத்திற்கு முன்பே இந்தாளை எனக்குப் பிடிக்கவில்லை என்று வாய் விட்டுச் சொல்லியிருந்தால், இது இல்லாட்டா இன்னொரு கழுத…என்றாவது நான் போயிருப்பேன்தானே….! இருந்து உசிரை வாங்கினாளே பாவி…! அவளோடு கலந்து ஒரு குழந்தையை ஜனிக்க வைக்க என்ன பாடு படவேண்டியிருந்தது. எப்படியெல்லாம் அவளுக்கு குழையடிக்க வேண்டி வந்தது? கால் பிடித்து, கை பிடித்து, கொஞ்சி, குலாவி, மசிய வைத்து  வீட்டு வேலைகள் அத்தனையையும் நீக்கமறச் செய்து…அவளை அசையவே விடாமல் நிறுத்தி….என்னவொரு ராஜபோகம்…பெரிய்ய்ய்ய மகராணி இவ….கால் மேல கால் போட்டு உட்கார…வந்து படுறின்னு இழுத்துப் போட்டேன்னா தாங்குவாளா….?
தாங்குவாளா? என்று நினைத்து வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் நடப்பில்…நிகழ்த்த முடியவில்லையே…! பார்க்கப் பார்க்கத்தானே ஆசை பெருக்கெடுத்தது. பார்த்தால்தானே பசி தீரும்? அவளை அந்த வட்டத்திற்குள் கொண்டு போய் நிறுத்தி, மயக்கமடைய வைப்பதற்குள் என்ன ஒரு போராட்டமாகிப் போனது? அவள் மயங்குவதற்குள் தான் முயங்கி விலகிப் போன நாட்கள்தானே அதிகம்…!
சிவானந்தத்தின் பார்வை இப்போது மீண்டும் அந்த எதிர்வீட்டுப் பக்கம் பாய்ந்தது. அவர்களின் பேச்சு முடிந்து விட்டதுபோல் தோன்றியது. அவள் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
உள்ள வந்து ஒரு காபி சாப்டிட்டுப் போகலாமுல்ல….அவர் கேட்டார். அவர்தான் கேட்டார். அந்த அம்மாள் கேட்கவில்லை. அது அவளுக்குப் புரியாதா என்ன…?
இல்லீங்க சார்…நா போகணும்…. பிள்ளைங்களப் பள்ளிக்கூடத்துலேர்ந்து கூட்டிட்டு வரணும்….
நீங்கதான் போவீகளா…? அதுங்களா பஸ்ல வந்துராதுங்களா…?
அதுக்கெல்லாம் பழக்கப்படுத்தலீங்க….நாந்தான் மொபெட்ல  போயி கூட்டிட்டு வருவேன்….
வண்டி ஓட்டுவீகளா…? ஏன் உங்க வீட்டுக்காரரு இருப்பாருல்ல…நீங்க ஏன் அலையுறீங்க….?
அதான் சொன்னேன்ல…அதுக்குள்ளயும் மறந்திட்டீகளா…அவுரு துபாய் போயி அஞ்சு வருஷம் ஆகப் போகுதுன்னு…..!
அதிர்ந்தார் சிவானந்தம். அவளின் இந்தப் பதில் மட்டும் அவர் காதில் பளீரென விழுந்தது. தனியாகவா கிடக்கிறாள்?
என்னம்மா சொல்றீங்க….நா கவனிக்கலையே….அஞ்சு வருஷம் ஆச்சுங்கிறீங்க….அப்போ உங்க கூட இல்லையா இப்போ?
ஆளும் தெரில…பேரும் தெரில… …எம்புள்ளைகள நாந்தேன் காப்பாத்திட்டு வர்றேன்….
நாங்க இருக்கம்மா …பழைய மாதிரி ஏழெட்டு வீடுகள்ல வேலை காத்துக்கிட்டிருக்கு உங்களுக்கு…பேசாம வந்திருங்க…..
பேசாம எங்க வர்றது….எல்லாம் பேசிப் பேசித்தான் ஒண்ணுமில்லாமப் போச்சு….மனுச வாழ்க்கையே அப்டித்தான்யா…பேச்சும் நடப்பும் ஒழுங்கா இல்லாட்டி….எதுவும் என்னமும் ஆயிப் போகும்…அப்டித்தான் கெடந்து நா இப்போ அல்லாடிக்கிட்டிருக்கேன்….
சொல்லிக் கொண்டே அவள் போய்க் கொண்டிருந்தாள். அவர்கள் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர் வீட்டைக் கடந்தபோது மட்டும் அவளின் பார்வை ஒருமுறை இந்தப் பக்கம் அழுத்தமாய்  விழுந்தது போலிருந்தது.
           -----------------------------------------------------
           


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...