11 அக்டோபர் 2018

“பாலு சாரும் சைக்கிளும்” - சிறுகதை - கணையாழி 2017



“பாலு சாரும் சைக்கிளும்”                    சிறுகதை                    *********************************                   ----------------------
           ன்னமும் அதே சைக்கிளைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. துரு ஏறிப் போன ரிம்கள்…தேய்ந்த டயர்கள்…மண்ணும் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து கலந்து கசடாய்ப் படிந்திருக்கும் செயின்…டிங்…டிங்…என்று அவருக்கு மட்டுமே கேட்கும் பெல்….கால் ஒடிந்து போனது போல் நெளிந்து நிற்கும் ஸ்டான்ட்….இவற்றோடு எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு துணிப் பைகள்…..
           ஒரு சைக்கிளுக்கு, அதை வைத்துக் கொண்டிருப்பவரைப் பொறுத்து அதன் ஆயுட் காலம் அதிக பட்சம் பதினைந்து வருடங்கள் என்று கொண்டாலும், நிச்சயம் இது வேறு வண்டியாய்த்தான் இருக்க முடியும்…    அல்லது வேறு வண்டியே இத்தனை பழசாய் ஆகியிருக்க வேண்டும்….ஆக அவரை நினைக்கும்போது, அந்த சைக்கிளையும் சேர்த்துத்தான் நினைத்துப் பார்த்தாக வேண்டும் என்கிற முடிவில், கடைசியாக அவரை அந்த வண்டியோடு பார்த்த பிம்பத்தை மனதில் கொண்டால், ஏறக்குறைய எல்லாமும் ஒத்துத்தான் வருகிறது என்று தோன்றியது ரமணிக்கு.
           பாலு சாரை வேறே எப்டி நினைக்கிறது? முதல்ல அவரும் சைக்கிளும்….என்றுதான் தோன்றுகிறது மனதில்.  
           செய்யும் வேலையில்தான் எத்தனை கவனம். எவன் தெருவில் போகிறான், வருகிறான் என்ற கேள்விக்கே இடமில்லை. பக்கத்துப் பாழ் வெளியிலிருந்து பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து அவருக்கும், அந்த சைக்கிளுக்கும் குறுக்கே கடந்து போனாலும், அவர்பாட்டுக்குத் துடைத்துக் கொண்டுதான் இருப்பார் போலும்….பெற்ற பிள்ளையைக் கூட ஒரு மனிதன் இத்தனை கரிசனையாய்க் கவனிக்க மாட்டான். அன்று கண்ட மேனி அழியாமல் என்று சொல்கிறோமே…அது போல் அன்று கண்ட ஆசான்…அப்படியே…கருக்கழியாமல்….ஆனால் அந்த உருவம்….எத்தனை வளர் சிதை மாற்றம்?
           அடையாளம் தெரில போல்ருக்கே….என்றான்.
           முதல்ல அவர் உன்னைப் பார்த்தாரா…அதச் சொல்லு…..என்றான் சீனிவாசன்.
           பார்த்த மாதிரியும் இருக்கு….பார்க்காத மாதிரியும் இருந்தது….இத்தனைக்கும் பக்கத்துலதானே நடந்து  வந்தோம்…
           நீ சார்னு போய் நின்னேன்னா, பேசிட்டுப் போறார்….எதுக்குக் கடந்து வந்தே?
           அதுக்கு இது சமயமில்லே….சாயங்காலமாப் பார்க்கணும்….அப்போதான் சாவகாசம்….
           சாயங்காலமா கோயிலடிக்குப் போயிடுவார்டா….
           நல்லதாப் போச்சு…அங்க வச்சுப் பார்த்திடுவோம்….
           நம்ம தெருக் கோயிலில்லே…..காட்டாஸ்பத்திரி இருக்கில்ல…அங்க இருக்கிற சர்ச்சுக்கு……
           ஒரு கணம் அதிர்ச்சியாய் இருந்தது ரமணிக்கு.
           அந்த செயின்ட் மேரீஸ் சர்ச்சுக்கா….? அங்க ஏன் இவர் போறார்….? – இதைச் சொன்னபோது…அவனையறியாமல் பின் திரும்பி தள்ளியிருந்த அவரை உற்று நோக்கினான். இவ்வளவு தூரமா கடந்து வந்து விட்டோம் என்றிருந்தது.
          அது அப்டித்தான்…..ஏன்னு அவரைத்தான் கேட்கணும்….   
           என்னடா இப்டிச் சொல்றே? இந்த ஊர்லயே இருக்கிற ஆள் நீ….தெரியாதுன்னா என்ன அர்த்தம்? –எதையும் மறைக்கிறானோ என்கிற சந்தேகத்தில் தீர்க்கமாய் சீனுவைப் பார்த்தவனாய்க் கேட்டான் ரமணி.
           அதெல்லாம் தெரியாது….சாயங்காலம் ஆச்சுன்னா இவர் அங்கதான் இருப்பாரு…பார்த்திருக்கேன்…. –என்றவாறே ஆற்றின் படிக்கட்டுகளில் காலை வைத்தவன்…பார்த்துடா…எதாச்சும் அசிங்கத்த மிதிச்சிடாதே….என்றான்.
           அந்த ஓட்டை சைக்கிளில் ஊர் முழுக்க வலம் வரும் பாலுசாரின் ஓட்டம் எனக்கு நினைவுக்கு வந்தது. ஓடி ஓடி எங்கெங்கோ சென்று கொண்டிருப்பார். வெயில் மழை பார்க்காமல் அலைவார். ஒரு கி.மீ தூரம் கூட இல்லாத சினிமா தியேட்டருக்குப்  போவதானாலும் வாகனம்தான். அந்தக் காலத்தில் காசெல்லாம் கிடையாது அதற்கு. வரிசையாய் தியேட்டர் வாசலில் நிற்க வைத்து, சிகரெட் அட்டை டோக்கன் கொடுப்பார்கள். சைக்கிளோடு நின்று கொண்டிருக்கும் ஒரு படம் அவர் வீட்டுத் திண்ணையில் தொங்கும். அதை ஏன் வீட்டிற்குள் மாட்டாமல் திண்ணையில் தொங்க விட்டிருக்கிறார் என்று தோன்றும். அந்தப் படம் இன்னும் தொங்குகிறதா என்று பார்க்கத் தோன்றியது இவனுக்கு.    
கோடியில் அந்த ஆற்றின் அகலத்திற்கு நூலிழை போல் ஓரமாய்த் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. கலங்கிய ஆற்றுத் தண்ணீரா, சாக்கடையா என்று சந்தேகம் வந்தது.
           அதோ இருக்கு பார்த்தியா…நாம குண்டு விளையாண்ட எடம்…ஞானவாபிக் கூடம்…..அவன் சொல்ல இவன் ஆவலுடன் திரும்பிப் பார்க்க, அந்த சதுரக் கட்டிடமும், வெளியிலிருந்த அந்தப் பரந்து விரிந்த அரச மரமும் Nஉறா என்ற பேரிரைச்சலுடன் இவனைப் பார்த்துக் கதறுவது போல் தோன்றி ஒரு கணம் சிலிர்க்க வைத்தது. கண்களை மூடி “ம்க்கும்…“.என்று சொல்லி உடம்பை விருட்டென்று விதிர்த்து விட்டுக் கொண்டான்.
           ஆமா….கோலிக் குண்டுன்னவுடனே…வெங்காச்சம் ஞாபகம் வருது… இருக்கானா அவன்? – அடியெடுத்து வைத்த காலைத் தரையில் பதிக்காமல் அப்படியே திரும்பிக் கேட்டான்.
           ம்…யாரு…அவனா…? .இருந்தான்……
           என்னடா….வந்ததுலேர்ந்து எல்லாத்தையும் பூடகமாவே சொல்லிட்டிருக்கே….இருக்கானா, இல்லியா…? நம்மளெல்லாம் விடச் சின்னவன்தானே அவன்……
           வயசுலதான் சின்னவன்…..காரியத்துல……
           அப்டீன்னா……? – நீ பேசுறதப்பார்த்தா ஏகப்பட்ட கதையிருக்கும் போல்ருக்கே…
           போலிருக்கே என்ன…இருக்கு…..அதல்லாம் சொல்லணும்னா நாலு நாள் வேணும்….நீதான் இன்னைக்குச் சாய்ந்தரமே போகணும்ங்கிறியே…..
           அதுவரைக்கும் சொல்லலாமில்ல…..?
           இப்போ உனக்கு தண்டபாணி கிணத்துக்குப் போகணுமா வேணாமா?
           ஏண்டா அப்டிக் கேட்குறே….? – புரியாமல் கேட்டான் ரமணி.
           ஏன்னா அங்கல்லாம் இப்ப யாருமே போகறதில்லே….அந்த வழியே அடைஞ்சி போச்சு….இப்போ பார்த்தேன்னா அன்னைக்கு நாம குளிச்ச அவ்வளவு பெரிய அகலக் கிணறா இதுன்னு தோணும்…ச்சே…இதையா பார்க்க வந்தோம்னு கூட நெனப்பே…..
           அதெப்படிறா….கிணறு சுருங்கிப் போகுமா என்ன? நீள அகலம் வச்சுக் கட்டின கிணறு தண்ணியில்லாம தூர்ந்து வேணாப் போகலாம்…..அடைபட்டா போகும்…..
           வழி அடச்சுப் போச்சுன்னு சொல்றேண்டா…காலைல போயிட்டு, மதியம் ரெண்டு மணிக்கு மேலே வருவோமே….இப்ப அங்க காக்கா குஞ்சு இல்ல…..என்றவாறே அதோ தெரியுது பாரு…மோட்டார் ரூமு…..அதான் தண்டபாணி கிணறு…..என்று தொலைவிலிருந்த ஒரு பாழடைந்த சிறிய கட்டிடத்தைக் காண்பித்தான் சீனு.
           உயரம் மட்டும் குன்றியதாகத் தெரியவில்லை. அத்தனை உயர அறையின் உச்சியிலிருந்து கிணற்றுக்குள் தொபுக்கடீர் என்று சொருக்கு அடித்த நாட்கள் நினைவில் வந்தன. கொஞ்சம் தவறினாலும் சுற்றிலுமுள்ள சதுரத்திட்டில் விழுந்து விடும் அபாயம். சற்றுச் சுருங்கினால், மோட்டார் அறையிலிருந்து உள்ளே நெட்டுக்குத்தலாய் இறங்கியிருக்கும் இரும்புக் குழாய்ப் பம்புகள். சரி கணக்காக கிணற்றின் நடுப் பகுதியில் உடம்பு தண்ணீருக்குள் இறங்க வேண்டும். அந்நேரம் சுற்றிலும் கரையில் நின்று வேடிக்கை பார்க்கும் நண்பர்கள், அப்பகுதி ஆட்கள், வேலைக்கு வந்த விவசாயப் பெருமக்கள். என்னே ஒரு சாதனை அது…!
           யேய்…பிரேம விலாஸ் சாமி அய்யர் மவன்தான நீயி….உனக்கெல்லாம் இது வேணுமாடா…? ஏண்டா தம்பி…நாளைக்கு நீ வேலைக்குப் போயி…உன் ஆயி அப்பனக் காப்பாத்த வேணாமா…..இந்தக் குதி குதிக்கிறியே…எங்கயாச்சும் எடங்கேடா அடிபட்டு உயிர் கியிர் போயிடுச்சின்னா….? பத்துரம்டா தம்பி……
           யாரோ அக்கறையாய்ச் சொன்னது அன்றோடு நிறுத்தி விட்டது தன்னை. அது முதல் கிணற்றிலிரங்கிக் குளிப்பதோடு சரி….மேலிருந்து தாவுவதெல்லாம் அடியோடு நின்று போனது. அறிந்தும் அறியாத அந்தச் சிறு வயதிலேயே தன்னோடு ஒட்டிக் கிடந்த பயம்தான் அப்படி நிறுத்தி விட்டதோ…! ஒவ்வொரு சமயத்திலும் அதுதான் தன்னை உடனிருந்து  காப்பாற்றியிருக்கிறது….அதைப் பயம் என்று சொல்வதா, ஜாக்கிரதை உணர்வு என்று புரிவதா? அப்பா அம்மாவிடமிருந்து தொற்றிக் கொண்ட விழுமியம் என்று கொள்ளலாமா? 
           இன்னும் ஒரு வாய்ப்புதான்….என்று அச்சுறுத்தி, அதற்கான முழுத்தகுதியோடு என்னை நான் தயார் படுத்திக்கொள்ளவும், வேலையை வென்றடையவும் உதவியதும் அதுதானோ?  இல்லையென்றால் இங்கிருக்கும் வெங்காச்சம் போல்தானே தானும் திரிய வேண்டியிருந்திருக்கும்?
           கையில் அப்போதே நாலு கோலிக்குண்டு கிடைக்காதா என்ற ஆர்வமெழுந்தது. வெங்காச்சம் கூடப் போட்டி போட்டு விளையாண்ட நாட்கள். அந்தப் பிராயத்தில் பால்ரஸ் வைத்து விளையாடியதாய் ஞாபகம். சின்னச் சின்ன இரும்புக் குண்டுகள். அதைக் குழிகளை நோக்கி எறிந்து, கையிலிருக்கும் பெரிய குண்டால் சொல்லப்படும் ஒரு கோலியை மட்டும் குறிப்பாக அடித்து, தீப்பெட்டிப் படம் சேகரித்தல். அப்போது அது ஒரு சாதனை. புளியங்கொட்டைக்கு விளையாடி, பை நிறையச் சேர்த்துக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்தல். வாசலில் புளியங்கொட்டை வாங்க வருபவளிடம் படியளந்து போட்டு, காசுக்கு பதிலாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கி, நெருப்பில் சுட்டுத் தந்த அம்மா. அந்த நாளின் ருசியே தனி…அதற்கு ஈடு இணை என்று இன்று என்னதான் உண்டு?
           அந்த போந்தாக் குழி இப்போ இருக்காடா…..? – கேட்டுவிட்டு சீனுவைப் பார்க்க, என்னடா இப்டி அபத்தமாக் கேட்குறே…? என்ற அவனின் கேள்வியில் நாக்கைக் கடித்துக் கொண்டான் இவன்.
           வேணும்னா தோண்டிக்க வேண்டிதான்….எடம் அப்டியேதான் கெடக்கு. இந்த வயசுல நாம வெளையாண்டாத்தான் சிரிப்பாங்க…..- இவனுக்கும் சிரிப்புத்தான் வந்தது. அந்த இடத்தில் புகுந்ததும், சற்றுத் தன்னை மறந்து விட்டோமோ என்று நினைத்துக் கொண்டான்.
           அது சரி…வெங்காச்சத்தப் பத்தி சொல்லவேயில்லையே…? என்னாச்சு…அவன் இருக்கான்ல…..?
           இருந்தாலும், அவன் இப்ப உன்னோடெல்லாமை் வெளையாட வரமாட்டான்…வெளையாண்டாலும் நீதான் ஜெயிக்கிறமாதிரிப் பண்ணிடுவான்…..
           ஏன் அப்டிச் சொல்றே…..”? – புரியாமல் கேட்டான்.
           அது அப்டித்தான்….. சரி விடு…ஆள் இருந்தாத்தானே….ரெண்டு மாசம் முன்னாடி லாரில அடிபட்டுச் செத்துப் போனான்.
           அடப்பாவி….! என்னடா இம்புட்டுச் சாதாரணமாச் சொல்றே….? – அதிர்ந்து கேட்டான் இவன்.
           பின்ன என்ன பண்ணச் சொல்றே…மினிஸ்டர் கோவிந்தசாமிட்ட ரொம்ப நெருக்கமா இருந்தான். வரப் போக, செலவுக்குப் பணம் கொடுத்து அவர்தான் இவன உசிரோட நடமாட விட்டிருந்தாரு…..வந்த காச வச்சிட்டு, பொத்திட்டு இருக்கணும்ல….தண்ணியப் போட்டுட்டு சலம்பல் பண்ணினா?  ஏரியா தெரியாமப் போய்க் கன்னா பின்னான்னு கத்தினா? அவனுங்கதான் அடிச்சுப் போட்டுட்டு ஊத்தி விட்டானுங்களோ…இல்ல இவனாப் போய் விழுந்தானோ…கத முடிஞ்சிச்சு….அவ்வளவுதான்….
           அங்கே நடந்திருக்கும் பல விஷயங்கள் சகஜமாய்ப் போயிருப்பதன் வெளிப்பாடாய் அவனின் பேச்சு அமைந்திருப்பதாய்த் தோன்றியது ரமணிக்கு.
           இன்னம் ஏராளமா விஷயங் கெடக்கு…..ஒரு நாப் பத்தாதாக்கும்…இன்னொரு வாட்டி வா….நிறையப் பேசுவோம்…இப்ப வா…சாப்பிடப் போவோம்……
           மறுநாள் கொடைக்கானலில் நடக்கவிருக்கும் ஆய்வுக் கூட்டத்திற்காக வந்திருந்த இவன் அங்கு தங்கி காலையில் முதல் பஸ்ஸில் போக எண்ணியிருந்தான். சீனுவை மட்டும் பூபதி லாட்ஜூக்கு வா….என்று தகவல் சொல்லியிருக்க…கிடைத்த இந்தச் சில மணி நேரங்களில் வந்தடையும் செய்திகள்…ஏனிப்படி மனதை வேதனைப் படுத்துகின்றன? தான் நேரடியாகவே கோடைக்குச் சென்றிருக்கலாமோ? இங்கே இறங்கியே இருக்க வேண்டாமோ?
           சாப்பிட்டு முடித்தவுடனேயே பாலு சாரைப் பார்க்க வேண்டும் என்று துடித்தது மனசு.
           மணி அஞ்சாகட்டும்டா….போலாம்…என்றான் சீனு…மணின்னு ஒருத்தன் இருந்தான் தெரியுமா? என்றான்.
ஆம்மா…திருட்டு மணின்னு கூடச் சொல்வாங்களே….!
அவன் எதைத் திருடினான்னு யாரும் பார்த்ததில்லே..ஆனா அவனுக்குப் பேரு அப்படி…ஆனா ஒண்ணு…ஒரு பொண்ணோட மனசைத் திருடிட்டானே….? அது திருட்டில்லயா?
ஆமாடா.கரெக்டாச் சொன்னே…..பாங்க் கேஷியர் பொண்ணு நிர்மலாதானே….
     அவளேதான்…...அவளும் அவனை விரும்பினா போல்ருக்கே…இல்லன்னா….கல்யாணம் பண்ணிக்கிடுவாளா…..
           பண்ணிக்கிடல…பண்ணி வச்சிட்டாங்க…எப்டியோ…வச்சு வாழறானே…..
     இது ஒரு நியூசாடா? விட்டுட்டு ஓடினாத்தாண்டா நியூசு…அது கெடக்கட்டும்….வெள்ளம்பின்னு ஒருத்தன் இருந்தானே…அவன்?
     அவன்லாம் எங்க போனானோ? ஆனா அவங்க அண்ணன் ஒரு கொல பண்ணிட்டான். அவுங்க பாட்டி கழுத்த அறுத்து….நகையை எடுத்திட்டு போலீஸ்ல போய் சரண்டர் ஆயிட்டான்….
     நகையை எடுத்திட்டு ஓடல்ல செய்யணும்….எதுக்கு போலீசுக்குப் போனான்…?
     இந்த அற்ப நகையைக் கொடுன்னு கேட்டேன்…தர மாட்டேன்னா..அதான் அறுத்திட்டேன்னான்….ரொம்ப வித்தியாசமாயில்ல?
          முட்டாப்பய….வாழ்க்கையை விரயம் பண்ணிட்டாம்பாரு…அநாவசியமா……!
           கேட்டால் சீனிவாசன் இன்னும் ஏராளமாய்ச் சொல்வான் போலிருந்தது.
           இருட்டும் வேளையில் சர்ச்சை அடைந்தோம். அதன் நீண்ட வளாகத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார் பாலு.
           சார்…என்னைத் தெரியுதா? ஃப்ரீயா ட்யூஷன் எடுத்தீங்களே…பிரேம விலாஸ் மாஸ்டர் பையன்….ரமணி……
           முகம் மலர்ந்தது.  ஒரு வருஷம் போல ட்யூஷன் எடுத்திட்டு ரிசல்ட் வந்தவுடனே பாஸ் பண்ணினதைக் கேட்டுட்டு ஒரு இங்க் பாட்டில் மட்டும் வாங்கிட்டு வான்னீங்களே….மறந்திட்டீங்களா…?
           ஞாபகம் இல்லியேப்பா….சரியா…? எனக்கு எல்லாமே மறந்து போச்சு என்றவர் மடை திறந்த வெள்ளமாய்க் கொட்ட ஆரம்பித்தார். சொல்லும்போதோ ஒரே அழுகை…
           என் பையன் ஒரு பொண்ணை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணின்டு என்னை விட்டிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டான்….என் பொண்டாட்டி எப்பவோ என்னை ஒத்தைல விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டா….நா அநாதையாயிட்டேன்…..இந்த ஒலகத்துல யாருமே அநாதையில்லேன்னு…இந்த சர்ச்சு ஃபாதர் ஆன்ட்ருஸ்தான் என்னைக் கொண்டு வந்து இங்கே சேர்த்தார்….இவா தர்ற காசுலதான் என் பொழப்பு ஓடிண்டிருக்கு…..இழுத்துக்கோ பறிச்சிக்கோன்னு….அந்தக் காலத்துலயே நான் வெறும் டியூஷன் வாத்தியார்தானே….ஸ்கூல் டீச்சர் இல்லியே….! எனக்குன்னு ஒரு உத்தியோகம் அமையலை…அதுதான் என் விதி…..வாடகை கொடுப்பனா, வயித்துப் பாட்டைப் பார்ப்பனான்னு சீவன் கழிஞ்சிண்டிருக்கு……அநேகமா என் கடைசி மூச்சு…இந்தக் காம்பவுன்ட்டுக்குள்ளதான் போகும்னு நினைக்கிறேன்….நீ யாருன்னே தெரில…நாம்பாட்டுக்கு கிறுக்கன் மாதிரிப் புலம்பிண்டிருக்கேன்….எம் பொழப்பு பொலம்பலாவே போச்சு….
           நிறுத்தாமல் சொல்லிக்கொண்டேயிருந்தார்….மேல் துண்டை எடுத்து…சரக் சரக்கென்று சளியைச் சிந்திக் கொண்டார். பார்க்கப் படு வேதனையாய் இருந்தது எனக்கு. பர்சிலிருந்து .பணம் எடுத்து அவர் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு… காலைத் தொட்டுக் கும்பிட்டேன்.
           போய்ட்டு வர்றேன் சார்…..என்றுவிட்டுக் கிளம்பிய போது….அந்த ரூபாய் நோட்டுக்களையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தவாறிருந்தார் பாலு சார்…..!
            மஞ்சள் பை தொங்கவிட்ட அவரது அந்தப் பழைய சைக்கிள் காம்பவுன்ட் கேட்டுக்குப் பின்னால் சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. கடைசிவரை அவருக்குத் துணை அது ஒன்றுதான் என்று தோன்றியது. அவர் வீட்டு வாசலில் தொங்கிய அந்தப்படம் மனதிற்குள் வந்தது.
                                ----------------------------------------------

           
    
          



கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...