“நாக்கு” -------------------------------------------------------------------------------------------------------
இன்னும் நுங்கு மட்டும்
பாக்கி….- சிவராமன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டபோது, அவருக்குள் சிரிப்பு. கொஞ்சம்
வெட்கமாகக் கூட இருந்தது. இந்த வயசில் என்ன ஒரு தீனி ஆசை? சுற்றிலும் ஒரு முறை பார்த்துக்
கொண்டார். தனது சுய எள்ளலை யாரேனும் கவனிக்கிறார்களா என்று.
எப்படியோ அது மட்டும்
விட்டுப் போனது. வரிசையாக ரோட்டோரக் கடைகள். காலையில் தோன்றி மாலையில் மறைந்தன. ஒரு
வாரமாகப் போக வரப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ருசி பார்க்கத்தான் வேளை வரவில்லை.
இந்த சீசனுக்கு நிறையக் கடைகள்.. நுங்கு எப்போதுமே இளசாய் இருந்தால்தான்
அழகு. கையில் எடுக்கும்போதே துவள வேண்டும். சொட்டு விடாமல் வாய்க்குள் அந்த நீரை உறிஞ்சுவது
சாமர்த்தியம்.. அப்படியே வாய்க்குள் போட்டு அசைபோடும் சுகமே தனி. அது என்ன ருசி? இனிப்பா,
துவர்ப்பா…அல்லது உப்பும், இனிப்பும், துவர்ப்பும் கலந்ததா?
தோலுரிக்காமயே சாப்பிடலாமா…எதுக்கு இத்தனை அவசரம்? என்றாள் சரோஜா.
அதுக்கெல்லாம் பொறுமையில்லை…என்றவாறே வாய்க்குள் தள்ளுவதைப் பார்த்தாள்.
அடுத்து அடுத்து என்று நான்கைந்தை உள்ளே விட்டதும், சரிதான்…உங்களுக்கே பத்தாது போலிருக்கு……என்று
ஆதங்கத்தோடு ஒன்றைப் பிய்த்து வாயில் போட்டுக்
கொண்டாள்.
என்ன செய்யுமோ, ஏது செய்யுமோன்னு சம்சயப் பட்டுண்டே சாப்பிடாதே…எதானாலும்
மனசோட சாப்பிடப் பழகிக்கோ….அப்பத்தான் வயிறும் மனசும் நிறையும்….உடம்புலயும் ஒட்டும்…
எனக்குப் பதிலாத்தான் நீங்க வேணுங்கிறதைச் சாப்பிடறேளே…அது போறாதா?
என்றாள்.. மெல்லிய பொறாமையின் தெறிப்பு.
உனக்காக நான் சாப்பிடாம
முடியுமா…? முடியறவா சாப்பிட்டுக்க வேண்டிதான்…தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும்
வேறேதானே? புருஷன் பொண்டாட்டின்னாலும் அப்டித்தானே?
இதற்கே இப்படியென்றால்,
பதினி அருந்துவேனே…அதற்கு என்ன சொல்வாளோ?
அய்யோ…கள்ளு மாதிரின்னா
அது…! தலை கிறுக்கி ரோட்டுல விழப் போறேள்…அசட்டுப் பிசட்டுன்னு எதையாவது குடிச்சு வைக்காதீங்கோ…முழுசா
வீடு வந்து சேருங்கோ…
கடைகளின் எண்ணிக்கையே, எங்க ஓடிப்
போகுது என்று அலட்சியமாகி விட்டதோ? கொசுவம் வைத்துச் சுருட்டிய வேட்டியைத் தொடைவரை
வழித்துக் கொண்டு இடது காலை நீட்டி, வலது கால் மடித்து, இறுக்கிக் கட்டிய தலைப் பாகையோடு
நிமிர்ந்து அமர்ந்து அவன் நுங்கு வெட்டும் அழகே தனி.. ஓங்கிப் போடும் அறிவாள் கரெக்டாக
அந்த நுங்கின் பக்கவாட்டில் எப்படி அத்தனை கச்சிதமாய் விழுகிறது? கொஞ்சம் ஆழமாய் இறங்கினாலும்
நுங்கின் உடம்பில் பட்டு செதிலாய் பாகம் வெளியேறி விடும் அபாயம். உள்ளே தத்தளிக்கும்
சுவை நீர் தெறித்து வீணாகும். அறிவாள் நுனியில் நுங்கை மென்மையாய் நெம்புகையில் அப்படியே
லபக்கென்று வாயில் வந்து விழுவதுபோல் உணர்வார். இதுவும் ஒரு தனிக் கலைதான்.
அங்கேயே நின்று, வெட்ட, வெட்ட
ஒவ்வொன்றாய் வாங்கி உள்ளே தள்ளியிருக்கிறார். அந்தந்த சீசனுக்கான பழங்களை அந்தந்தக்
கடைகளின் வாசலிலேயே நின்று வகைக்கொன்றாக வாங்கிச் சாப்பிட்டுப் பழகியவர் சிவராமன்.
சின்ன வயது முதலான பழக்கம். நண்பன் கோபாலனோடு அனுபவித்தது ஏராளம். இப்போது அவன் இல்லை. இருந்தவரைக்கும் வாழ்க்கையைப்
பலபடி ருசித்தவன் அவன்.
மாம்பழத்தை தோலைச் சீவி, கதுப்புக்
கதுப்பாக் கட்டம் போட்டு, எடுத்து சாப்பிடுறது பெரிசில்லை…அது எல்லாரும் பண்றது..எப்டிச்
சாப்பிட்டா இன்னும் பெட்டரா இருக்கும்னு காண்பிக்கிறேன் பார்….என்று விட்டு கையில்
இருந்த அந்தப் பழத்தை ஒரு பத்து நிமிடம் போல் சூடு பறக்க உருட்டி உருட்டி பழத்தை அதனுள்ளேயே கூழாக்கி கடைசியாய் மேல் பக்கமாய் ஒரு சிறு துளையிட்டு
வாயில் வைத்து உறிஞ்சிக் காண்பித்தான். பழம் மொத்தத்தையும் ஜூஸாய் உறிஞ்சிக் குடிக்கச்
செய்து விட்டு, இப்போ எப்டியிருந்திச்சு? என்று அவன் கேட்ட போது, அன்றுதான் மாம்பழத்தின்
மகிமையை முழுமையாய் உணர்ந்தார்.
. இருங்க
சார், இன்னொண்ணு வெட்டுறேன்….! அவனுக்கிருக்கும் உற்சாகத்தில், இவருக்கு நாவு அடங்க மறுக்கிறது.
…தண்ணி சிந்திராம…பார்த்து…பார்த்து….என்றுகொண்டே
துவளத் துவள எடுத்து வாயில் போட்டார்…
எந்தூருப்பா…..? எங்கிருந்து
கொண்டுட்டு வர்றே?
நமக்கு அழகர்கோயிலுக்குப் பக்கமுங்க….பனையெல்லாம்
ரொம்ப வாட்டம் கண்டு போச்சு இந்த வாட்டி…மொட்ட மொட்டயா நிக்குதுங்க…இந்த எரியாவுக்கே
நம்ம கடை ஒண்ணுதானுங்க…
சென்ற முறை தொடர்ந்து சீசன் முழுவதும் ஒரு நாள் விடாமல் நுங்கு சாப்பிட்டதை
நினைத்துக் கொண்டார். தன் கண்ணே தனக்கு திருஷ்டி.
தெனமுமா?…வயித்துக்கு என்னமாவது
பண்ணப் போறது?
அதெல்லாம் ஒண்ணும் ஆவாது…சுட்டெறிக்கிற
இந்த வெயிலுக்கு அதுதான் குளிர்ச்சி…இதெல்லாம் அனுபவிக்கக் கொடுத்து வைக்கணும்டி…..நீ
என்னத்தக் கண்டே…ஆத்தக் கண்டியா, அழகரச் சேவிச்சியா?
எனக்குஞ் சேர்த்துத்தான் நீங்க
அனுபவிக்கிறேளே… போறாதா?
சிரித்துக் கொள்வார் சிவராமன்.
இளம் பிராயத்திலிருந்தே வந்த இந்தப் பழக்க வழக்கங்களை இன்றுவரை விட முடியவில்லையே என்று
இப்போதெல்லாம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் வாய் நீளம்தான். நாக்கை அடக்க வேண்டாமோ?
வயசாகி விட்டதே…!
சீசனுக்கு என்னென்ன உண்டோ அதெல்லாம்
சாப்பிட்றணும்…விடக்கூடாது…நான் சாப்பிடாத மாம்பழ வெரைட்டியே கிடையாது. சவால் விடுவேனாக்கும்.
வகைக்கு ஒண்ணு வாங்கிட்டு வரட்டுமான்னா படு சூடுங்கிறே…பலாப்பழம்னா அது துஷ்ட வாயுங்கிறே….சரி,
வாழைப் பழமாவது சாப்பிடுன்னா, வயிறு புஸ்ஸூன்னு உப்புசம் ஆயிடும்ங்கிறே…எதுதான் உனக்குப்
பிடிக்கும்? ….இந்த உலகத்துல எதுவுமே வேண்டாம்னு தள்ளி வைக்கிறதுக்கில்லடி…மனுஷாளுமே
அப்டித்தான். எதையும், யாரையும் வேண்டாம், ஆகாதுன்னு ஒதுக்கிறதுல அர்த்தமேயில்லே…!
எதையோ தொட்டு, எங்கியோ போக……இதானே
வேலை உங்களுக்கு…எனக்குப் பழம் வேண்டாம்னு சொன்னா, அதுக்கு எதுக்கு இத்தனை பேச்சு?
யாரை யார் வேண்டாம்னு ஒதுக்கினா? நீங்களா எதையாச்சும் நினைச்சிண்டு உளற வேண்டிது…என்னவோ
தாந்தான் பெரிய சமத்துவ புத்தர் மாதிரி….கேட்கிறவா எவ்வளவு தப்பா நினைப்பா?
வாய்விட்டுக் கடகடவென்று வீடே
அதிரும்படி சிரித்தார் சிவராமன். அது அவர் பாணி. நோய் விட்டுப் போகும்டி…..எனக்கு எதாச்சும்
ப்ளட் பிரஷர், ஷூகர்னு இருக்கோ பார்த்தியோ? நன்னா, கலகலன்னு சிரிக்கப் பழகிக்கோ…உடம்புக்குப்
பெரிய ரிலீஃப்பாக்கும்…எந்த வியாதியும் அண்டாது….
எனக்குஞ்சேர்த்துத்தான் நீங்க
சிரிக்கிறேளே…போறாதா? தெருவே அதிர்றது. சிரிப்பாச் சிரிக்காமிருந்தாச் சரி…
அதற்கும் சிரித்துக் கொள்வார்.
அவளுக்குள் இருக்கும் சிறு பொறாமை கவனிக்க வைக்கும். பாவம்…!
நானா தின்ன வேண்டாமென்கிறேன்….வாங்கிட்டு
வர நானிருக்கேன்…தின்ன ஆசையிருந்தால்தானே…? எதைத் தொட்டாலும் வேண்டாம், வேண்டாம்னா?
எல்லாந்தான்
விடாம உள்ளே தள்றேளே? சூனா வயிறும், சுரைக்குடுக்கைத் தொப்பையும்…அம்புட்டும் வயித்துல
பஸ்பமா தகனமாயிடறது உங்களுக்கு…! என் பாடு அப்டியா?
நீயும் தின்னு பார்க்க வேண்டிதானே…யாரு
தடுத்தது? செரிக்குதா இல்லையான்னு அப்புறம்தானே தெரியும்…
ஐயோடா சாமி…எனக்கு வேண்டாம்பா…இருக்கிற
உடம்பு போதும். கண்டதையும் தின்னுப்புட்டு, எதையாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு இழுத்து விட்டுக்கிறதுக்கா…? இப்டியே இந்த ஜீவனைக்
கொண்டு செலுத்தினாப் போதும்…
உனக்குப் பயம் ஜாஸ்திடீ….ரொம்பத்தான்
ஜாக்கிரதையா இருக்கே…நாளை என்பது நமக்கு ஏது? இன்றிருப்பார் நாளையில்லை…இன்னைக்குச்
செத்தா நாளைக்குப் பால்…நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு….எம்புட்டுக்
கேள்விப்படுறோம், படிக்கிறோம்…இதையெல்லாம் நினைச்சு நினைச்சே, எதையுமே அனுபவிக்காமே
இருக்கிறது சரியா? போனா வராது…பொழுது விடிஞ்சாக் கிடைக்காதுங்கிற கதைதான்…இந்த மாதிரிச்
சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நிறைவேத்திக்கலேன்னா எப்டி? நீ ரொம்பப் பாவம்டீ…. பரிதாபமா
இருக்கு எனக்கு….
போகட்டும்…நீங்களாவது பரிதாபப்
படுறேளோல்லியோ? அப்டியாவது கொஞ்சம் ஆயுசு கெட்டியாகட்டும்…..
என்னே நப்பாசை இந்த மனுஷாளுக்கு…நினைத்து
சிரித்துக் கொள்வார். எதுதான் நம் கையில் இருக்கிறது? அடுத்த நிமிஷம் என்ன என்பது எவனுக்குத்தான்
தெரியும்?.
இந்த வெற்றுடம்போடு வட்டமேஜை
மாநாட்டுக்குப் போய் வந்துவிட்டீர்களே என்ற காந்திஜியிடம், எனக்கும் சேர்த்துத்தான்
உங்கள் எஜமானர் உடை அணிந்திருக்கிறாரே…என்று சொல்லிச் சிரித்தாரம் அண்ணல். நகைச்சுவை
உணர்வு மட்டும் எனக்குள் இல்லையென்றால் என்றோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று
சொன்னவர். அந்த எளிய மகாத்மாவைத்தான் அடிக்கடி நினைத்துக் கொள்வார் சிவராமன். இன்றுவரை
அந்த சத்திய சோதனைக்கு மிஞ்சிய ஒரு புத்தகம் உண்டா? திறந்த புத்தகம் என்றால் அது ஒன்றுதான்.
நீ வேணும்னா படுத்துக்கோ…தூங்கு…ரெண்டு
தோசைதானே…நானே வார்த்துக்கிறேன்….என்றார். தனக்காக யாரையும் காக்க வைப்பதில் உவப்பு
இல்லை. அவளும் மனுஷிதானே? தன் நோவு, தளர்ச்சி அவளுக்கும்தானே…! ஆனால் மனசு வெளியே கிளம்ப
யத்தனித்தது. சாயங்கால ரெஃப்ரெஷ்மென்ட் இழுத்தது.
வார்த்து, உறாட் பாக்சுல வச்சிடட்டுமா?
வேண்டாம்…சூடு நிற்காது….எனக்கு
சூடா வேணும்…நீ படுத்துக்கோன்னுதானே சொல்றேன்….எனக்கொண்ணும் சிரமமில்லே…நான் பண்ணிக்கிறேன்…
சொன்னால் கேட்க மாட்டாள். சூடு…சூடு…சூடு…!
என்ன சூடோ…என்ன இழவோ…? வயசாச்சுன்னா கொஞ்சம் பொறுக்கிறாப்ல சாப்பிடுவான்னு கண்டிருக்கு….இப்டியா
சூடு, சூடுன்னு அலையுறது? நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டிதான்… ஒரு காப்பி சாப்பிடுவதானாலும்
சண்டைதான்….
டிகாக் ஷனையும், பாலையும் ஒண்ணாச்
சேர்த்தா காப்பின்னு நினைக்கிறே நீ…நான் அது இல்லேங்கிறேன்….அவ்வளவுதான் உனக்கும் எனக்கும்
வித்தியாசம்…என்பார். கிண்டல் அப்படி மறைந்திருக்கும்.
எவ்வளவு டிகாக் ஷன் விட்டா, எவ்வளவு
பால் சேர்க்கலாம்ங்கிற திட்டம் வேண்டாமா? நீயும்தான் எத்தனை வருஷமாக் காப்பி கலக்கிறே?
எல்லாம் வெறும் யந்திர கதிதான்….ஊளைத் தண்ணியாக் கொண்டு வைக்க வேண்டியது….மனுஷன் குடிப்பானா
அதை…? ரசனை வேணும்டீ…சமையலை, கலைன்னு ஏன் சொல்லி வச்சான்…? எல்லாத்துலயும் ஒரு பக்குவம்
உண்டுதானே…!
எது குடிக்க முடியாதோ, அதுதான்
சூடுன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்? மனசுல வாங்கிண்டாத்தானே….நீ கலக்கிற காப்பியை
வாசல்ல நிக்குதே தெரு நாய்…அதுக்கு ஊத்தினாக் கூட, முகர்ந்து பார்த்திட்டு நகர்ந்திடும்…..தள்ளு,….இனிமே
என் காபியை நானே கலந்து நானே சாப்பிட்டுக்கிறேன்…வேணும்னா சொல்லு…உனக்கும் கலந்து தர்றேன்….என்
காபி மகிமையை அப்பவாவது புரிஞ்சிப்பியே…!
எனக்கு வேண்டாம்…எப்பப் பாரு…திக்க்க்கா
டிகாக் ஷனை விட்டிண்டு, கூழாட்டம் குடிங்கோ….அத்தனையும் பித்தம்….தலையைக் கிறுக்கி
வாந்தி வரும்….சொன்னாக் கேட்டாத்தானே… எனக்கென்ன வந்தது?
உனக்கென்ன வந்தது….அவரவர் பாடு
அவரவருக்கு…நீ முந்திண்டா நோக்கு….நான் முந்திண்டா நேக்கு…. ….! கண்ணை மூடித் தூங்கிட்டு,
எழுந்தாத்தானே நிஜம்..
போதும் உங்க பேச்சு…..கேட்க முடில….நாராசமாயிக்கு…..காதுல
அரக்கை வச்சித்தான் அடைச்சிக்கணும்…
வண்டியை இலக்குப் பார்த்து ஓரமாய்
நிறுத்தினார். சாயங்காலம் ஆறரை போல் அங்கே வருவது
வழக்கம். அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர் வாசலில்
கடை போடுவார்கள் என்று யாரும் நினைக்கவேயில்லை. அதனால் விற்பனை பெருகியதா, அல்லது ஸ்டோருக்கு
வருபவர்களால் அதிகரித்ததா என்று தெரியாத நிலை.
அட, மனிதர்கள் இப்படியா நொறுக்குத்
தீனிக்கு அலைவார்கள்? அலை அலையாய்க் கூட்டம். வயதானவர்கள்தான் அதிகம். குறிப்பாய்க்
கவனித்தார். யாரும் பார்த்து விடுவார்களோ என்று சுவற்றைப் பார்த்து நின்று முழுங்கினார்கள்.
தெருவைப் பார்க்காததுபோல் தின்றார்கள். ஒதுங்கிச் சென்று நிழலாய்த் தன்னை மறைத்துக்
கொண்டார்கள். பேச்சுக் கொடுத்துக் கொண்டே யாரையும் கவனிக்காததுபோல் உள்ளே தள்ளினார்கள்.
பாவம்தான்…வயசானாலும் நாக்கு கொடு…கொடு என்கிறது. தின்பதில் எதற்கு இத்தனை அவசரம்?
யார் பின்னிருந்து விரட்டுகிறார்கள்? யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் போலல்லவா
இருக்கிறது அவர்களின் அவசரம்! என் காசு…என் வாய்…என் நாக்கு….எதற்கு இந்தப் படபடப்பு…!
பாவம்தான்.
சூடா பாப்கார்ன் சார்….முட்டைப்
பப்ஸ், வெஜிடபிள் பப்ஸ், கட்லெட்,
பன், பட்டர், ஜாம்… - பையன் விடாமல் கூவிக் கொண்டிருந்தான். ஸார்…சூப் சாப்பிடுங்க
ஸார்…வெஜிடபிள்…தக்காளி…நெல்லிக்காய்…காளான் சூப் இருக்கு சார்…சூடான சூப்… - அங்கே
கடை போட்ட பிறகு சாயந்தரம் ஆனால் வந்து விடுவது வழக்கமாகி விட்டது. தினமும் இப்படி
விடாமல் சாப்பிடுகிறோமே என்ற நினைப்பும் இருந்தது. உடம்புக்கு என்னமாவது செய்து விடுமோ
என்ற கேள்வியும் உண்டு. ஆனாலும் பெரும்பாலான நாட்களில் விடாமல் சாப்பிட்டுக் கொண்டுதான்
இருந்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சூப்பை ருசி பார்ப்பதில் ஆர்வமிருந்தது. எட்டு
ரூபாய்க்கு ஒரு கப்பும் பத்துக்கு சற்றுப் பெரிய கப்பிலும் சூப் கிடைத்தது. எட்டென்ன,
பத்தென்ன…என்று ஒரு நோட்டை எடுத்து அலட்சியமாய் நீட்டி விடுவதுதான். எட்டுக்குச் சாப்பிட்டால்
சற்று மதிப்புக் குறைச்சலோ? அதல்ல…அளவு குறைகிறதே…? பக்கத்தில் நிற்பவர் பத்துக்குச்
சாப்பிடுகிறாரே…!
மாலை வெளியே கிளம்பும்போது ஏதேனும்
நாலு சாமான்களை ஒப்பிப்பாள் சரோஜா. தினசரி ஏதாச்சும் வாங்கித்தான் ஆகணுமா? மாசம் பூராவும்
வாங்கிட்டேயிருக்கணுமா? என்றார்.
வீட்டுக்கு வேணுங்கிறதைத்தானே
சொல்றேன். மொத்தமா வாங்கிப் போட்டிடுங்க…கேட்கலை…உதிரி உதிரியா வாங்கினா வேண்டித்தானே
இருக்கும்…என்றாள். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அதற்குப் பின் ஒன்று சொன்னாள்.
நானென்ன உங்களை மாதிரி வெளில
வாசல்ல போயா வயித்துக்குப் போட்டுண்டு வர்றேன்…இருக்கிற இடத்துல கிடைக்கிறதத் தின்னுண்டு
கிடக்கேன்…இப்டியா போற எடத்துலயெல்லாம் மேயறது..கொஞ்சமாச்சும் வாயடக்கம் வேண்டாம்?
வயசு தாண்டிப் போச்சுன்னா கூறுமா கெட்டுப் போகும்? – உஷ்ணமான வார்த்தைகள்தான். கொஞ்சம்
அதிகம்தான். தன் மீதான ஆதங்கம் என்றுதான் நினைத்துக் கொண்டார். அந்த அளவுக்கா தான்
தின்கிறோம்? மனமும் கூசத்தான் செய்தது.
வெளியே எங்கேயும் கை நனைக்காமல்தான்
இருந்தார் சிவராமன். சமீபமாய்த்தான் அது அதிகமாய் அவரைத் தொற்றிக் கொண்டிருக்கிறது.
விட்டு ஒழிக்க முடியவில்லைதான். அதைத்தான் குத்திக் காண்பிக்கிறாள். வயசான காலத்தில்
குழந்தை போல் ஆகிவிடுவார்களாமே…! அதுபோல் சின்ன வயசுப் பழக்கமும் மீண்டும் வந்து ஒட்டிக்
கொண்டதோ என்னவோ? யதார்த்தமாய் அவளிடம் அது சாப்டேன், இது சாப்டேன் என்று வெளிப்படையாய்ச்
சொல்லப் போக, அது கடிக்க உதவுகிறது அவளுக்கு.
அப்படி அவள் சொல்லிச் சொல்லி
ஒன்றை மட்டும் நிறுத்தியிருந்தார். அவ்வளவுதூரம் போக முடியவில்லை என்பதுதான் சரி. மாலை
நாலு மணியைப் போல் டவுன் உறால் அம்பி அய்யர் கடையில் வெள்ளையப்பம் போடுவார்கள். நாலஞ்சு
சட்னி வைத்திருப்பார்கள். கொடு, கொடு என்று இழுக்கும். இந்த வயசுக்கு அம்புட்டு எண்ணெய்
ஆகாதுதான். வேலை பார்க்கும் காலத்திலிருந்து அந்தப் பழக்கம். மாலை அலுவலகம் விட்டு
வருகையில் அங்கே கை நனைக்காமல் போக மனசு வராது. இன்று அய்யரின் பையன்தான். ஆனாலும்
அதே கைபாகம் மாறவில்லை. தூரமே அவரை நிறுத்திவிட்டது.
தான் மட்டுமா இப்படி? அவர் வயதொத்த
எத்தனையோ பேரைப் பார்க்கத்தான் செய்கிறார். அங்கங்கே நின்று, தின்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் வாசலில் என்ன ஒரு கூட்டம்? என்னவோ அவன் முட்டைகோஸ் வடை போடுகிறானாம்…சின்னச்
சின்னக் குணுக்கு உண்டாம். காலி ஃப்ளவர் பக்கடா. போதாக் குறைக்கு முட்டை போண்டா வேறு….செரிமானம்
ஆகுமா? என்ன வாங்கு வாங்குகிறார்கள்? எல்லோரும் மண்டுகிறார்கள் என்பதற்காக சரியாகிவிடுமா
என்ன?
அந்த பாரதி ஸ்டோருக்குள் நுழைகையில்
தற்செயலாய்ப் பார்த்து விட்டார். எதிர்வீட்டு ராஜாராமன் நின்று சூப்பு குடித்துக் கொண்டிருந்தார்.
இடது கையில் சூப் கப்பும், வலது கையில் பாதி கடித்த ஆமைவடையுமாய். அந்தக் கடை வடை மொக்கையாய்
இருக்கும். பாதி தின்றாலே ராத்திரிச் சாப்பாடு வேண்டாம். இந்த மனுஷன் எப்டிப் பழகினாரு
இதுக்கு? இந்த மொசுக்கு மொசுக்கிறாரே? எண்ணெய் பட்சணம் ஒத்துக்குமா இந்த வயசுல…? –
சட்டென்று பார்க்காதது போல் தலையைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய்விட்டார். வடை மணம்
உள்ளேயும் மூக்கைத் துளைத்தது. திரும்ப வெளியே வருவதற்குள் தீர்ந்து விடுமோ? மனம் அவாவியது.
சரோஜா சொன்ன நாலைந்து சாமான்களை
வாங்கிக் கொண்டு வெளியேறிய போது அவர் இல்லை. வடையும் காலி. வடைத் தட்டு இவரைப் பார்த்து
இளித்தது. வழக்கம்போல் வெஜிடபிள் சூப் குடிக்க நின்றார். இவர் வருவதைப் பார்த்தவுடனேயே
பழக்கத்தில் ஊற்றி நீட்டி விட்டான் கடைப் பையன். அத்தனை மரியாதை ரெகுலர் கஸ்டமருக்கு.
கொஞ்சம் மிளகுத் தூள் தூவுப்பா…என்று
கேட்டு வாங்கிக் கொண்டார். நிமிஷமாய்த் தீர்ந்து விட்டது சூப். அன்று ஏனோ திருப்தியே இல்லை. என்னவோ குறைந்தது. சூடேயில்ல…இப்டியா
தருவே…” என்றார் எரிச்சலுடன். கடுமையான சூட்டில், ஒவ்வொரு ட்ராப்பாக உள்ளே இறக்குவதில்தான்
சுகம். நாக்கு பொத்துப் போனாலும் சரி…அந்தச் சின்னக் கப் சூப்பை வெகு நேரம் வைத்துக்
கொண்டு குடித்துக் கொண்டிருப்பார். அப்படியே அங்கே வருவோர், போவோரையும், ஊறும் வாகனங்களையும்
பார்த்து ரசிப்பதில் அலாதி திருப்தி. பத்து ரூபாய்க்கு அம்புட்டு நேரம் வைத்துக் குடித்தால்தான்
நிறைவு.
பையன் என்ன நினைத்தானோ…இவர் அதிர்ஷ்டம்
பாருங்கள்….
அப்டியா சார்…சூடே இல்லீங்களா…?
கொடுக்கப்பவே நெனச்சேன்….
நாந்தான் ஆத்தாதேன்னு சொல்லுவேன்ல…மறந்திட்டியா?
நா வர்றதுக்கு முன்னாடி நீட்டினபோதே தெரியும் இப்டியாகும்னு….- கடுப்பான கடுப்பு இவருக்கு. பத்து ரூபாய் அநியாய
விரயம் என்ற ஆத்திரம்.
ஸாரி சார்..…இந்தாங்க…இதைச் சாப்பிடுங்க….என்று கொதிப்புக்
குறையாத டிரம் குழாயைத் திறந்து பிடித்து, பொங்கப் பொங்க அப்படியே நீட்டினான் இன்னொரு
டம்ளரில். அவர் கண் முன்னே மிளகுத் தூளைப் பரவவிட்டான்.
..இதுக்கு ஒரு பத்து ரூபா என்னால
அழ முடியாது..வேண்டாம்…
காசு வோணாம் சார்…சும்மா சாப்பிடுங்க…சூடு
இல்லேன்னீங்கல்ல…? – அடித்தது அதிர்ஷ்டம் அன்று அவருக்கு. ஆனாலும் கொஞ்சம் லஜ்ஜைதான் ஓசி சூப் குடிப்பதில்.
படு கொதியாய் இருந்தது.. அனுபவித்துக் குடித்தார். தொலையுது என்று காசை எடுத்து நீட்டினார்.
வேண்டவே வேண்டாம் என்று விட்டான் பையன். தன் மீதான மதிப்பு என்று நினைத்துக் கொண்டார்.
மனசு நிறைந்தது.
தெனமும் சூடில்ல சூடில்லன்னா,
இன்னொண்ணு தருவியா? – தமாஷாகக் கேட்டுக் கொண்டே நகர்ந்தார். இன்னொரு சூப் குடித்ததில்
அத்தனை திருப்தி.
தந்திருவோம் சார்…..என்ன இப்ப?
– பையன் படு சுறுசுறுப்பு. ஆட்களை வளைத்துப் போடும் லாவகம்.
பார்க்கில் நிறையப் பேர் வழக்கம்
போல் நடந்து கொண்டிருந்தனர். அந்தப் பகுதி மக்களுக்கென்று மாநகராட்சி ஒதுக்கிக் கொடுத்தது.
இன்னும் நான் எத்தனை இளமை என்று காட்டுவது போல் பலர் பாய்ச்சலாய் நடந்து கொண்டிருந்தனர்.
சிலர் காதில் செருகிய இயர் ஃபோனோடு பாட்டுக் கேட்டவாறே நகர்ந்தனர். இன்னும் சிலர் சளசளவென்று
பேசிக் கொண்டே பொழுதைப் போக்க வந்தது போல் அடி பெயர்ந்து கொண்டிருந்தனர். குழந்தைகள்
சறுக்கு விளையாட, ஊஞ்சல் ஆட என்று கலகலவென்றிருந்தது பூங்கா. தாய்மார்கள் குழந்தைகள்
அருகில் பாதுகாப்பாக…
சிவராமனுக்குப் பிடித்தது கர்நாடக
சங்கீதம். அவரும் நடந்துகொண்டே கேட்பார். நிறையப் பாடல்களை அவர் தன் செல் ஃபோனில் பதிவு
செய்து வைத்திருக்கிறார். திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம், ஆலாபனை எழுப்பும்போதே
அந்த ராகத்தைக் கண்டு பிடித்து விட வேண்டும் என்று ஆன மட்டும் முயல்கிறார். இன்றுவரை
அவரால் கண்டு கொள்ளப்பட்டது மோகனம் ஒன்றுதான். அந்த ஸ்வரம் மட்டும் சுகமாய் அவர் மனதில்
பதிந்து போனது. இன்னொன்று சிந்து பைரவி. அதையும் கண்டுபிடிக்க முடிகிறது.. சின்ன வயசில்
பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. வசதியில்லை. தொண்டை முனகலோடு கடந்து
போனது காலம். கச்சேரியின் போது, பக்கத்திலிருப்பவர் என்ன ராகம் என்று கேட்டுவிடக் கூடாதே
என்று இப்போதும் பயம் உண்டு அவருக்கு.
என்ன ராகம் சொல்லுங்கோ பார்ப்போம்…
- சரோஜா, தன்னால் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையில் கேட்கையிலேயே அது மோகனமாய்த்தான்
இருக்கும் என்கிற முடிவுக்கு வந்து விடுவார். கொஞ்சம் அந்த மேன்மையில் லயித்து உள்
வாங்கி, அதுதான் என்று உறுதி செய்து ”மோகனம்…இது தெரியாதா…? என்பார் கெத்தாக. அது இல்லை
என்று இளித்த நேரமும் உண்டுதான். அதுதான் அவரை இன்றுவரை பாடாய்ப் படுத்துகிறது. இத்தனை
வருஷம் கேட்டுக் கேட்டு அனுபவித்து, ஒன்றிரண்டுதான் கண்டு பிடிக்க முடிகிறது என்றால்
என்ன அர்த்தம்? அதுவும் சமயங்களில் தவறினால்? தீராத வருத்தம்தான். ஞானசூன்யமா நான்?
ஆனாலும் கர்நாடக இசையை ரசிக்கும் பாக்யமாவது கிடைத்ததே…அதுவே பெரிசு என்று தேற்றிக்
கொள்கிறார். கர்நாடக இசை ராகத்தில் என்னென்ன சினிமாப் பாட்டு உண்டு என்று ஒரு லிஸ்டே
வைத்திருக்கிறார். அதிலிருந்துதான் ஒரிஜினலுக்குத் தாவினார். ரசனை மேம்பட்டதில் தனிப்
பெருமையே உண்டு அவருக்கு.
பல சமயங்களில் வாசலை நோக்கிப்
போடப்பட்டிருக்கும் சிமின்ட் பெஞ்சில் அமர்ந்து விடுவார். ஆறரை மணியைப் போல, மெல்ல
இருட்டு வாங்கும் வேளையில் அந்த வண்டி அங்கு வந்து நிற்கும். மணிச் சத்தம் கேட்டவுடனேயே
கூட்டம் கலைய ஆரம்பிக்கும். அட, நடந்து கொண்டிருந்தவர்களில் பாதியைக் காணோமே…!
போளியும் கையுமாய்ப் பலரும் அங்கே.
அப்படி ஒன்றும் ருசியாய்த் தெரியவில்லை. ஆனாலும் போய் விழுகிறார்கள். விழுங்குகிறார்கள்.
மாலை வாக்கிங் போக வருகிறார்களா? அல்லது போளி திங்கவா? ஏழரைக்கு போளி காலி. பிறகு வெறும்
சுண்டல்தான். அதையும் விட்டார்களா என்ன? எதையாவது அரைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்
இந்தப் பெரிசுகளுக்கு. ஏனிப்படி அக்யானம் அடித்துக் கொள்கிறது? சாவதற்குள் ஒண்ணு பாக்கியில்லாமல்
தின்றுவிட வேண்டும் என்றா? தான் என்னவோ ரொம்ப
யோக்யம் மாதிரி. பெரிசென்ன பெரிசு…! நினைத்து சிரித்துக் கொள்கிறார். அந்தப் பெரியவர்களைப்
பார்க்கையிலெல்லாம் மனம் பரிதாபம் கொள்ளத்தான் செய்கிறது. சொல்லப்போனால் தானும் அந்த
லிஸ்ட்தானே? அதை ஏன் மனம் ஏற்க மறுக்கிறது? விநோதம்தான்.
அன்று என்னவோ மனசு ஓடவேயில்லை
சிவராமனுக்கு. அம்மாதிரி நேரங்களில் மெயின் ரோட்டில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
செல்வது வழக்கம். அங்கு சென்று மூன்று சுற்றுப் போட்டால் கடைசிச் சுற்றில் அங்குள்ள
பசு மாட்டுக்கு அகத்திக் கீரை வாங்கிக் கொடுக்கலாம். மனசுக்கு சற்று நிம்மதி. பொட்டு
இலை விடாமல் அது தின்று தீர்ப்பதை அருகில் நின்று பார்த்து ரசித்துக் கொண்டேயிருப்பார்.
வாய் தவறிக் கீழே விழும் துண்டுகளை எடுத்து மீண்டும் நீட்டுவார். நீங்க போங்க சாமி…அது
தின்ரும்……! போகமாட்டார். தின்னு முடிக்கட்டும் போறேன் என்பார் குழந்தை போல. கருணை
வழியும் மாட்டின் கண்கள் இவரை என்னவோ செய்யும். தொட்டுக் கும்பிட்டு விலகுவார்.
நீங்க செய்ற ஒரே புண்ணிய காரியம்
இது ஒண்ணுதான்…அந்தப் பெருமாளைத்தான் விழுந்து விழுந்து சேவிக்கணும்…..- மகிழ்ச்சியோடு
சொல்வாள் சரோஜா.
வண்டியைக் கிளப்பினார். எப்படி
வந்தார். எப்பொழுது பிராகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தார்…எத்தனை சுற்றுச் சுற்றினோம்…ஒன்றுமே
நினைவில் இல்லை….என்னவாயிற்று தனக்கு….? மறக்காமப் பணம் கட்டிட்டு வாங்கோ… - சரோஜா
சொல்லியிருந்தது சட்டென்று நினைவுக்கு வர, நல்லவேளை…ஞாபகம் வந்தது…என்று கோயில் ஆபீசுக்குள்
வேகமாய் நுழைந்தார்.
வர்ற புதன்கிழமை, எங்க அம்மாவோட
ஞாபகார்த்த தினம்…அன்னதானத்துக்குப் பணம் கட்டணும்…என்றவாறே அமர்ந்தார். குறிப்பிட்ட
அந்தத் தேதி காலியாகவிருக்கிறதா என்று பார்த்தார் கணக்கர். பிறகு, கட்டுங்க…என்றார்.
பணத்தை எடுத்து நீட்டினார் சிவராமன். ரசீதைக் கையில் வாங்கியபோது மனசு நிறைந்திருந்தது.
வழக்கமாய் இன்னொரு ஸ்பெஷல் உண்டு அங்கே. பெருமாள்
கோயில்களுக்கென்றே உள்ள சிறப்பு அயிட்டம். மனசில் தோன்றியதும் நாக்கில் ஜலம். கூடவே
இன்னுமோர் சங்கடம்…...
ஏன் மனசு நிலையில்லாமல் இப்படி
அலைகிறது? அதுதானோ….வாசலில் பார்த்தோமே….அந்த உருவமா? அது யார்? ஒரு பார்வையில், அசப்பில்
தன் அப்பாவைப் பெத்த பாட்டி போலில்லை? காமாட்சிப் பாட்டி...காமாட்சிப் பாட்டியேதான்…
என்னவொரு உருவ ஒற்றுமை…..! அடடா…! அந்த மெலிந்து நலிந்த உருவம் கண் முன்னே…!
பிச்சு…நீ நன்னாயிருக்கணும்…உன்
குழந்தேளுக்குக் கூடக் கொடுக்காம, அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரியாமே…எனக்கு வாங்கிண்டு
வந்து, பாதுகாத்து, மறைவாக் கொண்டு வர்றியே….கடன் தந்தாளா சாரதா? ஏற்கனவே பழைய பாக்கி
இருக்கும்பாளே…? அதக் கொடுத்தாத்தான் தருவேன்பாளே? தெரு அதிரக் கத்துவாளே…? எப்டி பஜ்ஜி
வாங்கிண்டு வந்தே…? சூடு கொதிக்க ஏது இந்தக் காப்பித் தண்ணி….காபிப் பொடி இருந்ததா?
ஆத்தங்கரைல தோய்ச்சுக் குளிச்சிண்டு வர்ரைல சீவனே இல்லடியம்மா….பாதி வழில இடுப்பு அப்டியே
விட்டுப் போறது….என் மனசறிஞ்சு என் சீவன் புரிஞ்சு, கொண்டு வந்து தர்றியே…நீ நன்னாயிருப்பே…உன்
குழந்தேளெல்லாம் சேமமா இருப்பா….நான் சொல்றேன் பாரேன்….அம்மாவின் கருணை…அளப்பறிய அன்பு……பாட்டியின்
ஆத்மசித்தியான ஆசீர்வாதம்……அதே காமுப் பாட்டி…அந்தக் காமுப் பாட்டியேதான்…..
கையில் ஏந்தி வந்த அந்த இரண்டு
புளியோதரைப் பொட்டலங்களையும் அப்படியே அந்தப் பாட்டியிடம் கொடுக்கிறார் சிவராமன். பெருமாள்
பிரசாதம்… …சாப்டுங்கோ…. – சொல்லி விட்டு பாட்டியையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்.
வர்ற புதன்கிழமை அன்னதானம் நடக்கிறது
கோயில்லே…பணம் கட்டியிருக்கேன்…காலம்பற பதினோரு மணிக்கு மறக்காம இங்கே வந்திடுங்கோ…
- பாட்டியின் முகத்தை நேராக நோக்கி, அழுத்தமாய்ச் சொன்னார் சிவராமன்.
கண்களில் ஜலம் முட்ட, தலையசைத்தபடியே,
பாட்டியின் நடுங்கும் கைகள் அவர் சிரசில் அழுந்தப் பதிந்து ஆசீர்வதிக்கின்றன.
---------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக