11 அக்டோபர் 2018

“புகைச்சல்” - அந்தி மழை - மே 2018 ல் வெளி வந்த சிறுகதை


                  “புகைச்சல்”               

தெளிவாய்க் காதில் விழும் நாதஸ்வர ஓசையை மீறிக்கொண்டு, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதாய் மரக்கதவை இழுத்துப் பூட்டி திண்ணை கிரில் கேட்டையும் வெளியே நின்றமேனிக்கு உள்ளே கைவிட்டுக் கொக்கியில் சரியாகத் தொங்குகிறதா என்று கணக்கிட்டு, அந்த இரண்டாவது பூட்டையும் கவனமாய்ப் பூட்டி இழுத்துப் பார்த்து விட்டுத் திரும்பினார் ரங்கநாதம்.
வாசலுக்கு வந்த வேகத்தில் பார்வை எதிர்த் திசையில் போய்விடாதபடிக்குத் தலையைக் குனிந்து கொண்டு கேட்டைத் திறந்து வெளியே வந்து அதன் கொண்டியைச் சற்று சத்தமாகவே போட்டுவிட்டு நடையைக் கட்டினார். எப்பொழுதும் அமைதியாய், சத்தமெழாமல் கொண்டியைச் சாய்க்கும் தான் இன்று ஏன் இப்படி அதிரடியாய் டங்கென்று அதைப் போட வேண்டும்? என்னவோ ஒரு கோபம் அதில் இருப்பதாய் மனசு சொல்ல பெருமிதமாய் உள் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
மனுசனுக்கு மனசு எப்போ எப்டி வேலை செய்யும்னு யார் கண்டது? போற போக்குக்கு அதோட ஒத்துப் போறமா அல்லது பிடிச்சு இழுத்து நிறுத்துறமாங்கிறதுதானே பிரச்னை? இப்போது, தான் அதன் போக்கில் போவதாய் நினைத்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டார் ரங்கநாதம்.
நாதஸ்வர ஓசை கொஞ்சம் சத்தமாகவே காதில் விழ, பதிவு செய்யப்பட்ட இசைதான் அது என்று உணர, கல்யாண மண்டபத்தில் வாசிக்கப்படுவதுபோல் எதற்கு இத்தனை சத்தமாய் டம்மு…டும்மு என்று அலற விடுகிறார்கள் என்ற சங்கடம் எழ அடியை எட்டிப் போட்டார். காதுல பஞ்சத்தான் அடைச்சிக்கணும்… நகர நகர, சத்தம் குறைந்தபாடில்லைதான்.  நாராசமாய் காதில் ஒலித்தது.
எதிர்வீட்டுக்காரர் வாசலில் நின்று கொண்டிருக்கிறாரோ என்று ஊகித்து, தலையை உயர்த்தாமலேயே நகர்ந்துவிட்டதை எண்ணினார். நல்லவேளை கூப்பிடவில்லை. கூப்பிட்டு, இப்போதும் ஞாபகப்படுத்தினார் என்றால் சிக்கல்தான்.
 வந்துருங்க…மறந்துறாதீங்க….இங்கே சாப்பிடலாம்… என்று நேற்றும் அதற்கு முன் தினமும் அவர் வற்புறுத்திக் கூறியிருந்ததும், அந்த அம்மாளும் “சமைச்சிட்டெல்லாம் இருக்காதீங்க…விசேஷத்தன்னிக்கு இங்க சாப்பிட்டுக்கலாம்…” என்று சொல்லியிருந்ததும்…ரொம்பவும் வருந்தி வருந்தித்தான் அழைக்கிறார்கள். அதுவே சங்கடமாய்த்தான் இருக்கிறது. மனிதன் தனக்குத்தானே சுதந்திரமாய் இருந்தாலும், இருக்க முயற்சித்தாலும், புற நடைமுறைகள், புற ஜீவாத்மாக்கள் வாழ விடுவதில்லை. அவனவன் இஷ்டப்படி இருக்க முடிந்ததில்லை. இருந்ததுமில்லை. சுற்றுச் சூழலின்படிதான் வாழ்ந்து கழித்தாக வேண்டியிருக்கிறது. புற பாதிப்புகள் இல்லாமல், தான் கட்டுக்குள் இருப்பதாய் ஒருவன் தனக்குத்தானே பெருமையாய் வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நிஜத்தில் அப்படியில்லை என்கிற யதார்த்தத்தை நினைத்துக் பார்க்க மறுக்கிறான்.
இவருக்கு இந்த நிமிஷம் வரை லஜ்ஜையாகத்தான் இருக்கிறது. போக வேண்டுமா, கட்டாயமா….என்றெல்லாம் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. தனக்குத்தானே கேட்டுக்கொண்டேயிருக்கிறார். வயசாச்சு…ஆனாலும் ஒரு கூச்சம். போனபாடில்லை. வெறும் கூச்சம் மட்டும்தானா அது? வசுமதிக்கு ஃபோன் போட்டு விபரத்தைச் சொன்னார். நான் போய் அவங்க வீட்ல எப்டிச் சாப்பிடுறது….அவங்க தயாரிப்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கும்…நான்வெஜ் பாத்திரத்துலேயே சைவமும் சமைச்சிருப்பாங்க. அது எனக்கு வயித்தைப் பெறட்டும்….பிடிக்காது…. வெளிப்படையாச் சொல்ல முடியாது…காண்பிச்சிக்கவும் முடியாது…தர்ம சங்கடம்….என்று புலம்பினார்.
நேர் எதிர் வீடு…ரொம்ப வருஷமாப் பழக்கம்…எப்டிப் போகாம இருக்கிறது? போய்…ஓதி வைக்கிறது உண்டானால் இருநூறோ…முன்னூறோ செஞ்சுட்டு, கையை நனைச்சிட்டு வாங்க….ரசம் சாதம்…மோர் சாப்பிடலாமோல்லியோ…வேறே ஒண்ணும் தொட வேண்டாம்….பாயசம் பிடிக்குமே உங்களுக்கு…அதை டம்ளர்ல வாங்கிக் குடியுங்க..…உட்கார்ந்து பேர் பண்ணிட்டு வாங்க…எதுத்த வீடில்லியா…..? போலேன்னா நல்லாயிருக்காது….நீங்க இங்கே வந்து போறபோதெல்லாம் அவங்கதானே வீட்டைப் பார்த்துக்கிறாங்க….ஒரு தகவல் சொல்ல ஆள் வேண்டாமா? எறிஞ்சிட்டுப் போற தபால்களையெல்லாம் எடுத்து பத்திரமா பொட்டில போட்டு வைக்கிறாங்கல்ல? உபகாரம் உண்டுன்னா சும்மாவா? விட்டுக் கொடுக்கப்படாதாக்கும்….
அவளுக்கென்ன சொல்லி விட்டாள். அடுத்தவர்களுக்கென்றால் எல்லாமும் எல்லாருக்கும் தாராளமாய்த்தான் வருகிறது. முறைமைகளைக் கட்டன்ரைட்டாகக் கடைப்பிடிக்கிறார்கள். தனக்கு வரும்போது வழுவிக் கொள்கிறார்கள்.  அவள் இங்கிருந்தால் நாலு எட்டு வைத்து நகர்ந்து விட மாட்டாள். அப்போதும் நீங்க மட்டும் போயிட்டு வாங்க என்றுதான் வற்புறுத்துவாள். உடல் சுணக்கம்போல் இழுத்துப் பொத்திப் படுத்துக் கொள்வாள்.  இப்போது பையனோடு குஷாலாகப் பெரு நகரத்தில்  உட்கார்ந்து கொண்டு எனக்கு போதிக்கிறாள். நேர் எதிர்வீடாம்…ரொம்ப வருஷப் பழக்கமாம்… சொல்கிறாள் இவள் எனக்கு…இந்த வீட்டில் இருந்து குப்பை கொட்டும்போது இந்த புத்தி எங்கே போயிற்றாம்? வந்து விழும் அழைப்புக்களுக்கெல்லாம் ஒன்றுக்குக் கூட உடன் வந்ததில்லை. எல்லாம் தன் தலையில்…செல்லும் இடங்களில் உருளும் தலையும் தன்னுடையதுதான். சொந்த பந்தங்களுக்குக் கூட அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. முகத்துக்கு முகம் பேச்சும் ஏச்சும்…!
எங்கடா…உன் அருமைப்….பெண்டாட்டிய? அழைச்சிட்டே வரமாட்டியா….? கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாச்சு….நீ மட்டும் ஒத்தக் கட்டையா வந்து நிக்கிறே? அவள நாங்கள்லாம் பார்க்கப்படாதா? அப்டி என்னடா பவிசு? கண்லயே காண்பிக்க மாட்டேங்கிறே….?
பவிசோபதவிசோ….கூப்டா வந்தாத்தானே? மாட்டை இழுக்கிறமாதிரி. கட்டி  இழுத்திட்டா வர முடியும்? அதெல்லாம் அவங்களுக்கா தெரியணும்….நமக்கும் நாலு பேர் வேணும்னு….நாம நாலு எடத்துக்குப் போனாத்தான்நம்ம வீட்டு விசேடத்துக்கும் நாலு பேர் வருவாங்கன்னுஇதெல்லாம் சொல்லித் தெரியணுமாகல்யாணம் ஆகி வருஷங்கள் ஆச்சு… ….அப்புறமும் இப்டி இருந்தா….இருந்துக்க வேண்டிதான்….அதப்போலதான் மத்தவங்களும் இருப்பாங்க….எத்தனையோவாட்டி சொல்லிச் சொல்லி அலுத்தாச்சு….என்னை என்ன பண்ணச் சொல்றீங்க…..கேட்டா ஆபீஸ் வேலைம்பாஇவ ஒருத்திதான் ஆபீஸ்ல வேலை பார்க்கிறாளா….ஊரு உலகத்துல எல்லாப் பொம்பளைங்களும்தான் ஓடறாங்க….அவங்கள்லாமும் இப்டித்தான் இருந்துட்டிருக்காங்களா? நான் வர்றேனா  இல்லையா…?.அத்தோட விடுங்க. மனைவியின் குறையை அவரே  தூக்கிச் சுமந்து விடுவதால், மற்றவர் வாய் அடைபட்டுப்  போகும்.
 குனிந்த தலை நிமிராமல் நடந்து கொண்டிருந்தார் ரங்கநாதம். எப்போதும் அப்படித்தான். அடையாளம் கண்டு எதிராளி பேசினால்தான் ஆச்சு. அவராக யாரிடமும் வாயெடுக்க மாட்டார். அகஸ்மாத்தாய் நிமிர்ந்தால் ஒரு புன்னகையோடு சரி…கடந்து விடுவார். என்னத்தப் புதிசா பேசிடப் போறாங்க…இங்க சுகமா…அங்க சுகமான்னு கேட்பாங்க… இல்லன்னா லோகல் பாலிடிக்சுக்கு இழுப்பாங்க… அத்தனையும் குப்பை… இதைப் பேசினா என்ன…பேசாட்டாத்தான் என்ன…குடியா முழுகுது….
ஆனாலும் இந்தாளுக்கு மண்டக்கனம் ஜாஸ்திய்யா…என்னவோ பெரிய்ய்ய்ய லார்டுன்னு நெனப்பு…மனசுல…..நாலு பேரோட கலகலன்னு பேசினாத்தான் என்ன…என்னத்தத் தூக்கிட்டுப் போகப் போறான் இந்த உலகத்துல….இவனையெல்லாம் நல்லாப் போட்டுப் பார்க்கணும்யா…..
ஆபீஸ்லதான் நிம்மதியா வேலை பார்க்க விட்டாங்களா….? அங்கயும் ஊழல்தான்… பேச்சுல ஊழல்…நடத்தைல ஊழல்…உட்கார்ந்தா ஊழல்…எழுந்திரிச்சா ஊழல்…மாசச் சம்பளம்ங்கிற வட்டத்துக்குள்ள  மாட்டிண்டு பட்டபாடு இருக்கே…சொல்லி மாளாது….ஒரு நாளாவது ஒருத்தன்ட்டயாவது உண்மையா முகம் காண்பிச்சதுண்டா? எல்லாம் போலி…ஊரே போலி…உலகமே போலி….ஒரு வழியா சங்கிலிய அறுத்துண்டு வெளிய வந்தாச்சு….அப்பப்பா…ஆளாளுக்கு என்ன பேச்சு…?
எத்தனையோ பேர் கண்டும் காணாமல் பேசியதுண்டுதான். தன் இயல்புப்படிதானே தான் இருக்க முடியும்….வலிய வரவழைத்துக் கொண்ட வெடிச் சிரிப்பும், சளசளப்பும்…. பொய்யான பேச்சும்  மனுஷனுக்குப் பொருந்த வேண்டாமா? அவனவன் இருப்புப்படி ஒருவனை ஏற்றுக் கொள்ள இந்த உலகம் ஏன் மறுக்கிறது? நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஏனிப்படி சராசரிகளாய் இருந்து தொலைக்கிறா்கள்? அதுதான் உலகமா? நடைமுறை என்பதே இப்படி இயற்கைக்கு முரணாய்த்தான் இருக்குமா? அல்லது இதுதான் இயற்கையா…?
இன்று என்னவோ வழக்கத்திற்கு மாறாகத் தெருவில் நடமாட்டம் சற்று அதிகம்தான். இல்லையென்றால் ஓய்ந்துதான் கிடக்கும். கேட்பாரில்லாத தெருக்கள் விழித்தெழவே மணி ஒன்பதைத் தாண்டும்.  எல்லாம் அந்த வீட்டிற்குப் போகிற ஆசாமிகள்தான். இல்லையென்றால் தெரு ஓ…..என்று கிடக்கும்தான்.…ஒரு பறவைச் சத்தம் கூடக் காதில் விழாது. இந்த நடை ஓசையை வைத்துத்தான் தெருக்கள் சீக்கிரம் விழித்துக் கொள்ள வேண்டும்.
சார்…வள்ளுவர் நகர்…வாசுகி ஸ்ட்ரீட்…இதானே…..? – குரல் வந்த திக்கில் திரும்பிப் பார்த்து…ஆமாமா…போங்கோ….காது குத்து விசேஷம்தானே…திரும்பினவுடனே இடது பக்கம் நாலாவது வீடு…..உங்க மனுஷாள்லாம் நின்னுண்டிருப்பாங்க….-ரொம்பவும் அந்நியோன்யமாய்த்தான் பதில் சொன்னார். தனக்கும் நன்றாய்த்தான் சொல்ல வருகிறது. எப்போதாவது பேசினாலும் பொருந்தி வரத்தான் செய்கிறது.
ரொம்பத் தேங்க்ஸ் சார்…. –அவர்கள் நகர்ந்தார்கள். ஆனாலும் சுற்றமும் நட்பும் அதிகம்தான். எந்நேரமும் அதென்ன அப்படியொரு போக்குவரத்து…ஆட்கள் வந்தமணியமாய் இருக்கிறார்களே…ஒருவனுக்கு ஊர் உலகமெல்லாமா சொந்த பந்தங்கள் இருப்பார்கள்….? அதற்கும் ஒரு அளவு வேண்டாமா? எல்லா நாளும் விருந்துதானா? ஆனாலும் அந்தாள் பம்பரமாய்த்தான் சுழல்கிறார்….என்னத்துக்கு இந்தப் பாடு? அளவா, அழகா, சிக்கனமா சின்ன ஃபங்ஷனா வைக்க வேண்டிதானே….எந்நாளும் திருநாள் கொண்டாட்டம்தானா? பாட்டும் கூத்தும் அமர்க்களப்படுதே…! அத்தனையும் இப்டியா தலைல தூக்கி வச்சுட்டு ஆடும்? பொத்துன்னு கீழே போட்டுடாம இருக்கணும்….
எதிர் வீட்டுல இருந்திட்டு மனசுக்கு அமைதியே இல்லாமப் போச்சு….எதாச்சும் ஒரு சத்தம்….ஒண்ணு பாட்டுச் சத்தம்…இல்லன்னா டி.வி. சத்தம்….தெரு முழுக்கவா அது கேட்கணும்…டிஸ்கஷன்ல அப்டி அக்கறையாக் கலந்துக்கிறாராம்…எதுவுமே இல்லையா….விருந்தாளிங்க….போகவும்…வரவும்….ச்சே…ச்சே…ச்சே…சே…சலுப்பக்குடி மாதிரி….நல்ல எடம் பார்த்து வீடு கட்டினம்யா….? சந்தைக் கடைக்கு நடுவுல…?
சார் நல்லாயிருக்கீங்களா…? – பக்கத்துச் சந்திலிருந்து திடீரென்று ஒருவர் உதித்தபோது சற்றே பதறித்தான் போய்விட்டார். அந்தச் சந்து வழியாய் இவர் செல்வதில்லை. வருஷங்களாயிற்று. இன்னும் அந்த இரண்டு நாய்கள் அங்குதான் இருக்கின்றனவா…அல்லது பிடித்துப் போய்விட்டார்களா..எதுவும் தெரியாது இவருக்கு. துஷ்டனக் கண்டா தூர விலகு என்று அந்தச் சந்தையும், பின்பு விரியும்  நீண்ட தெருவையும் தவிர்த்துப் பல காலமாயிற்று. சுருக்கு வழிதான் அது. நாய்க்கு பயந்து இழந்த சோகம்.
என்ன சார்…ஆளையே பார்க்க முடில…..? அந்தக் கவிஞர் கேட்டார் ஒரு நாள். அவரது ஆழ்ந்த அமைதியே கவிஞர்தான் என்று சொல்லியது.
தெருவில் நுழைய விட்டால்தானே…? எத்தனையோ முறை விரட்டு வாங்கியிருக்கிறார். வண்டியை விரட்டுவதனால்தான் அது நம்மை விரட்டுகிறதோ என்று மெதுவாயும் ஓட்டித்தான் பார்த்தார். அப்போது நிதானமாய் நன்றாக அடையாளம் கண்டு கொண்டதுபோல்…உர்ர்ர்ர்…..என்று உறுமிக் கொண்டு பாயத் தலைப்பட்டது. இரண்டு கறுப்பு நாய்களில் ஒன்றாவது கண்டிப்பாய் விரட்டியே தீரும். தெருக் கடைசி வரை விடாமல் பாய்ந்திருக்கிறது. இரண்டு தெருக்கள் இடையே.. அங்கிருந்து ஏதேனும் வாகனங்கள் குறுக்கிட்டிருந்தால் நேரே கைலாசம்தான். தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.  
ஒரு வேளை மூக்குக் கண்ணாடியோடு முகத்தைப் பார்க்கும்போது கோபக்காரனாய்த் தெரிகிறதோ என்று கழற்றி சட்டைப் பையில் வைத்தமேனிக்குப் போய்ப் பார்த்தார். அப்போதும் பாயத்தான் செய்தது. தன் தெருவில் உள்ள நாய்களுக்கு இருக்கும் ஸ்நேக பாவம் இவைகளுக்கு ஏன் இல்லை? மனுஷன் எது எதற்கெல்லாம்தான் வருத்தப்படுவது? அனுதினமும் இவைகளைப் பார்க்கத்தானே செய்கிறேன்?  அப்படியுமா கருணை பிறக்கவில்லை?
பிஸ்கட்  கூடப்  போட்டுப் பார்த்தார். கவ்விக்கொண்டு விரட்டியது. பார்க்கப்  பார்க்கப் பிடிக்கும்  என்று  நினைத்தது தப்பாய்ப் போயிற்று. எல்லாவற்றையும் மீறி என்னவோ ஒரு வித்தியாசம் தெரிகிறது தன் முகத்தில். அதைக் கண்டால் அதற்கு ஆகவில்லை. எல்லாத்துக்கும் முகராசி வேண்டும். நாய்க்குக் கூட நம்மளப் பிடிக்கலை… மனம் சுணங்கத்தான் செய்தது. தெரு நாய்களே இல்லாத தெருவில், பகுதிகளில் குடியிருப்பது துர்லபமா?
சோறு போட்டு வளர்ப்பவர்களாவது சத்தம் கொடுத்து நிறுத்த மாட்டார்களா…? பலபேர் அதனிடம் விரட்டு வாங்கியிருக்கிறார்கள் என்று பின்புதான் தெரிந்தது. ஆனால் அவர்களெல்லாம் எதற்கு வம்பு? என்று அந்த வீதியைத் தவிர்த்தார்களா தெரியாது. அதுவே தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பு என்று வளர்க்கும் வீட்டுக்காரர்கள் நினைத்தார்களோ என்னவோ? ஒரு சமயம் தனது பதட்டத்தைப் பார்த்து, வாசலில் நின்ற அந்த அம்மா….ஒண்ணுஞ் செய்யாதுங்கய்யா…சும்மாப் போங்க….என்றது. அது விரட்டுவது அவர்களுக்கு விளையாட்டாய்த் தோன்றுகிறதோ என்னவோ…? பிடிச்சுக் கட்டி வைக்க மாட்டீங்களா…இப்டியா அலைய விடுவீங்க….என்றார் சற்று ஆக்ரோஷமாக…! .உறாங்ங்ங்…..என்று மோவாயில் கைவைத்து இவரையே பார்வை அகலாமல் பார்த்தது அந்த அம்மாள். தெருவுக்கு ஏழெட்டு நாய்கள் அலைகின்றன. யாரும் கண்டு கொள்வதில்லை. மாநகராட்சியும்தான். அன்றாட வாழ்க்கையே சிரமமாய்த்தான் கழிகிறது. இந்த நாய்கள் ஒரு பெரிசா என்ன என்று விட்டு விட்டார்களோ என்னவோ…? வீடுகளில் அனுதினமும் நடக்கும் உறுமல்களுக்கும் சண்டைகளுக்கும் நடுவில்  இந்த உறுமல்களும், குரைப்புகளும்…தம்பிடி பேராது..
அழைத்தது யாரென்று இவருக்குத் தெரியவில்லை. தெரிலயா சார்…..உங்க வீட்டுக்கு எதிர் வீட்டு கோவிந்த்ராமோட ரிலேடிவ் சார்….
ஓ…..சரி…சரி….விசேஷத்துக்கு வந்தீங்களா….போங்க…போங்க…. என்றார் இவர். என்ன ஒரு அந்நியோன்யம் தன் குரலில்… இவருக்கே ஆச்சரியம்தான்.
இப்பப் புரிஞ்சிடுச்சா….? போனவாட்டி கூட அங்க கரன்ட் போயிடுச்சின்னு உங்க வீட்டு மாடில தங்கிக்கிட்டமே …ஞாபகமில்லே….? சார் மறந்துட்டார் போல்ருக்கு…
மறக்கலே…ஞாபகமிருக்கு… ….போயிண்டேயிருங்கோ….இதோ வந்துடறேன்….. – சொல்லிவிட்டு நடையை எட்டிப் போட்டார் ரங்கநாதம். இன்னும் வழியில் பலரையும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். ஆள், அம்பு, படை, சேனை என்று அவருக்கு எல்லாமே ஜாஸ்திதானே….தனக்குத்தான் ஒன்றுமில்லை….ஒத்த மரத்துக் குரங்கு….
இதோ வந்துடறேன்….என்று ஏன் வாயில் வந்தது என்று நினைத்துக் கொண்டார். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் கிளம்பி வெளியே வந்தது. அப்படியானால் இந்தத் தெரிந்த முகங்களுக்காகத் தான் கட்டாயம் போய்த்தான் ஆக வேண்டுமா? ஆட்கள் சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்கள். எல்லாமும் அந்த வீட்டு முகங்கள்தான்.. வர்ற கூட்டத்துக்கு ஒரு மண்டபத்தப் பிடிச்சு நடத்த வேண்டிதானே….எதுக்கு இப்டி வீட்லயே வைக்கணும்….அப்புறம் எங்கிட்ட வந்து ராத்திரிக்கு மாடியக் கொண்டான்னு சாவிக்கு நிக்குறதுக்கா…? அம்புட்டுப் பேரும் கக்கூச நாறடிச்சிட்டுப் போவான்… அதக் க்ளீன் பண்ண நான் ஆளுக்கு அலையணும்….தேவையா….? தண்ணிக்கு எவன் காசு தர்றது…?
எப்பப் பார்த்தாலும் என்ன விசேஷம்…வேண்டிக் கெடக்கு?  பொழுது விடிஞ்சு பொழுது போனா இதே பொழப்பாப் போச்சு அந்தாளுக்கு..….வரிசையா ரெண்டு பெண்டுகளுக்குக் கல்யாணம் முடிச்சார்…பக்கத்துல ஒரு வீடு….அடுத்த தெருவுல ஒரு வீடு…. எப்டித்தான் வீடுகள் விலைக்கு வருதுன்னு தகவல் தெரியுமோ? நானுந்தான் இந்தத் தெருவுல வருஷக் கணக்காக் கெடக்கேன்… பாங்க் லோனாப் போட்டுப் போட்டு வாங்கி அடுக்கிட்டான் மனுஷன். ஒருத்தன் சம்பாத்தியத்துல இத்தனை எப்டி சாத்தியம்?   எதிர்த்தாப்ல இருக்கேன்….எனக்கு விபரம் சொன்னா என்ன வாங்கிடவா போறேன்…அதுக்கு ஏது ஐவேஜூ நம்மகிட்ட…? ஒரு முறை சொன்னார்…
ரிடையர்ட்மென்ட் பென்ஃபிட்ல…நீங்க மாடி எடுத்திருக்கலாம்….
சொல்லுவய்யா….நல்லாச் சொல்லுவ…ஏன் சொல்ல மாட்ட…? இருக்கிற காச செங்கல்லுக்கும், சிமின்ட்டுக்கும் செலவழிச்சிப்புட்டு…அப்புறம் சிங்கி அடிக்கவா…? நாளப்பின்ன எனக்கு உடம்புக்கு ஏதாச்சும் வந்தா….நீயா வந்து காப்பாத்துவா…? யோசன சொல்ற ஆளப் பாரு…? – மனதுக்குள் புழுங்கிப் போனார். அவனவன் சோலியப் பார்த்திட்டு இருக்க மாட்டாங்ஞ போல்ருக்கு….இதுல அட்வைஸ் வேறே….
அதிர்ஷ்டமான ஆளுதான்யா நீரு…ஒத்துக்கிறேன்…மூணு பசங்களுக்கும் டக்கு டக்குன்னு பொண்ணுக அமைஞ்சு போச்சு….நமக்குந்தான் இருக்கே….ஒண்ணு பெத்து எடுக்கவே வயசு நாற்பத நெருங்கிடுச்சு…ரிடையர்டாகி வருஷம் ஏழாச்சு….இப்பத்தான் தெத்திப் பித்தி அமையப் போக அப்பாடான்னு கல்யாணத்த முடிச்சேன்…போதுண்டாப்பா…ஆடிஓடிஆயாசப்பட்டுஉட்காருவோம்னா….அதுக்குள்ளேயும் ஆயுசு முடிஞ்சி போயிரும் போல்ருக்கு….
இதுல தெனமும் என்ன கூத்து வேண்டிக் கெடக்கு….நம்ம வாழ்க்கையே இந்தாளு வீட்டு விசேடங்களுக்கு அட்டென்ட் பண்றதிலயே கழிஞ்சிடும் போல்ருக்கு…நல்ல பொழப்புய்யா….மருமகளுக்கு வளகாப்பு, பேத்திக்குக் காதுகுத்து, கிரஉறப் பிரவேசம்…அது இதுன்னு எதாச்சும் ஒண்ணு எதிர்த்தாப்ல நடந்திட்டேதான் இருக்கு….இவருக்கு மொய்யெழுதியே என் சேமிப்பு கரஞ்சிடும்போல்ருக்
கு….அதுக்காக இப்டியா…. தெருவே இவருக்கு எழுதி வச்சாப்ல இருக்கு…பக்கத்து வேகன்ட் ப்ளாட்ல…அன்னைக்குப் பார்த்து ஆயிரம் வண்டி நிக்குது..இப்டியா படையா ஆட்கள் வருவாங்க….இதன் மூலமா தெருவுல உள்ளவங்கள நாம டிஸ்டர்ப் பண்றோம்னு இந்தாளுக்கு கொஞ்சமேனும் தெரிய வேண்டாம்?ஒரு உறுத்தல் வேண்டாமா மனசுக்கு?  மனுஷன் மொட்ட மாடிலயே ஷாமியானாவப் போட்டு பந்திய முடிச்சுப்பிடறானே…!  அங்கருந்து சொத்து…சொத்துன்னு எச்சிலையைக் கீழே போடுற சத்தம்…அய்ய…நாராசம்….தெருவே நாறிப் போகுது ….நாய்கள் கூட்டங் கூட்டமா அடிச்சிக்குது …
யானையாத்துக் குடும்பம்னு எங்க பரம்பரையச் சொல்வானுங்க…ஒருத்தனும் இருக்கிற எடம் தெரில…யானையுமில்ல…பானையுமில்ல ….நாளைக்கு மண்டயப் போட்டாக் கூட பையனுக்கோ, பெண்டாட்டிக்கோ தெரிஞ்சாத்தான் ஆச்சு….இல்லன்னா தூக்கிப் போட ஆள் கெடைக்க மாட்டான் போலிருக்கு….நம்ம பொழப்பு அப்டி நாறிக்  கெடக்கு…இதுல இந்தாளுக்கு சதா விசேஷம் வேறே…திண்ணைல உட்கார்ந்திட்டு, இந்தப் போக்குவரத்தக் கவனிச்சாப் போதும் போலிருக்கு…பொழுது நல்லாப் போகும்…எம்புத்திய செருப்பால அடிக்கணும்….பேசாம அவளோட சேர்ந்து நானும் ஊருக்குப் வண்டிய விட்டிருக்கலாம்.  மொய்யெழுதுற காசாவது மிச்சமாகும்…அதான் மாசத்துக்கொண்ணு எதாச்சும் நடந்தமணியமாத்தானே இருக்கு…வீம்புக்கு நா இங்க உட்கார்ந்து கெடக்க….சார் வந்திருங்க…சார் வந்திருங்கன்னு சதா  பன்னிப் பன்னி ஒரு அழைப்பு…..….என்னைக்கு ஓய்ஞ்சிருக்கு விசேஷம்…அத்தனை நல்லதும் இப்டி வரிசையாவா கச்சை கட்டி நிக்கும்…மொத்தக் குத்தகை எடுத்தாப்ல….போன ஜென்மத்துல ராஜ வம்சத்துல பொறந்திருப்பார் போல்ருக்கு…அந்த ஜபர்தஸ் இன்னும் விடலை…களை கட்டி நிக்கிறானே மனுஷன்….
அதென்னவோ கலகலப்பான காரியங்கள் என்றால் தனக்கு ஆகவில்லை. ஆர்ப்பாட்டங்கள் பிடிப்பதில்லை. அமைதியாய் இருக்குமிடம் தெரியாமல் கிடப்பதில் ஒரு அநாயாசமான திருப்தி.  மனசு பரபரப்பை எதிர்கொள்ள மறுக்கிறது. சந்தோஷங்களைப் புறக்கணிக்கிறது, புறந்தள்ளுகிறது. மறுத்தொதுக்குகிறது. எல்லாவற்றையும் கமுக்கமாய் நோட்டமிடுவதில் மட்டுமே நியாயம் இருப்பதாய்த் தோன்றுகிறது. ஒரு ஞானியைப் போல என்று சொல்லலாமா? அப்படியென்றால் இந்த மனதுக்கு ஏன் இத்தனை சல்லாபங்கள்…சஞ்சலங்கள்…?
பஸ்-ஸ்டாண்டை அடைந்திருந்தார் ரங்கநாதம். அந்த வள்ளுவர் நகருக்கான சிறிய பேருந்து நிலையம் அது. வண்டிகள் வந்து திரும்பி, சற்று நேரம் நின்று, பின் கிளம்ப….எதிர்த்தாற்போல ஒரு சுடுகாடு. ஒரு காலத்தில் திறந்த வெளிக் கூடமாய்க் கிடந்தது. அந்த நகர் படிப்படியாய் நிர்மாணம் பெற்றபோது, சங்கம் ஏற்படுத்தி, அலையாய் அலைந்து ரோடு போட, தெரு விளக்குகள் மாட்ட, பஸ்-ஸ்டான்ட் ஏற்படுத்த….பஸ்களைக் கொண்டு வர என்று நிறைய உழைத்தாயிற்று. சொல்லப் போனால் வாசுகி தெரு என்று பெயர் வைத்ததே அவர்தான்.  சீட்டுக் குலுக்கிப் போட்டு பெயர் தேர்ந்தெடுக்கும் முறையில் வாசுகி தெருவுக்கு மட்டும் சீட்டு வேண்டாம் என்று இவரே அவர் தெருவுக்குப் பெயரிட்டு விட்டார். வீட்டுக் காம்பவுன்ட் சுவரில் ரெண்டு பக்கமும் அம்புக் குறியிட்டு நடுவில் வாசுகி தெரு என்று எழுத வைத்து, பெயரை நிர்மாணித்தார். பிறகு படிப்படியாய் தெருக் குழாய்கள் வர, சாக்கடை வர என்று ஒன்றொன்றாய் நடந்தது. அத்தனைக்கும் அலைந்திருக்கிறார் நாயாய் பேயாய். லீவு போட்டுவிட்டு எரிக்கும் வெயிலில் திரிந்ததை எவனாவது இன்று நினைப்பானா? ஒருத்தன்ட்ட ஒரு வார்த்தை…தம்பட்டம் அடிச்சிருப்பனா?  அப்படியான முயற்சியில் முடியாமல் போனது அந்தச் சுடுகாட்டை அவ்விடம் விட்டு அகற்றுவது ஒன்றுதான்.
ரொம்பவும் சென்சிடிவ்வான இஷ்யூ….இப்போதைக்கு வேண்டாம்…விட்ருங்க….என்றார் மாவட்ட ஆட்சியர். அன்று விட்டது விட்டதுதான். சுற்றிலும் அடுக்கடுக்காக வீடுகள் வந்தபின்பும் அவர்களாகப் போக வேண்டாமா? இப்போதும் பிணங்கள் அங்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சமயம் சூழலே சற்று பயம் ஏற்படுத்துவதாய் இருக்கும். சுற்றிலும் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. அமைதியாய் நடந்தேற வேண்டிய இறுதிக் காரியங்கள் ரொம்பவும் தாங்கமுடியாத ஆர்ப்பாட்டமாய் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு திருத்தம். இப்போது சுடுகாட்டை மறைத்து காம்பவுன்ட் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. அதுவே முன்னேற்றம். ஆனாலும் பேருந்துகள் வந்து, நின்று, புறப்படும் அம்மாதிரியான சமயங்களில் ஒரு கலவர சூழ்நிலையே நிலவுகிறது. பார்த்தவாறே பயந்து பயந்து போய் வந்து கொண்டிருக்கும் அப்பாவி ஜனங்கள்.
 சுடுகாட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளேயிருந்து புகை மண்டலம் கிளம்பி அந்தப் பிராந்தியத்தையே அசத்திக் கொண்டிருந்தது. பிணம் எரியும்போது வரும் அடர்ந்த புகையோடு கூடிய வாடை உள் பகுதியில் அவர் வீட்டையும் தாண்டிச் செல்வதை உணர்ந்திருக்கிறார். பிணப் புகை நல்லதாம். எவனோ உளறி வைக்க அதை நின்று வாங்கும் ஜன்மங்கள். என்றுதான் அதற்கு விடிவோ?. அந்த வள்ளுவர் நகருக்கென்று எத்தனை காரியங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்? எதையாவது வாய்விட்டுச் சொல்லியிருப்பேனா? எவனும் சொல்லவில்லையே என்று வருந்தியிருப்பேனா? பொதுக்காரியங்கள் பொது நலனுக்கா, விளம்பரத்துக்கா? என்னவோ தனக்குத்தானே ஆதங்கமாய் வருந்திக் கொண்டார்.
அப்போது வந்து நின்ற பேருந்திலிருந்தும் நாலைந்து பேர் இறங்கினர். அந்த வீட்டு ஆட்களாகத்தான் தெரிந்தது. யாரும் தன்னைக் கண்டு கொண்டு ஏதும் கேட்காமல் இருக்க வேண்டும் என்று தலையைத் திருப்பிக் கொண்டார் ரங்கநாதம். அப்போதைய அவரது மனநிலை அதற்கு உகந்ததாக இல்லை. ஏதோ தீவுப் பகுதியிலிருந்து தப்பிப்பது போல் உணர்ந்தார் அந்தக் கணத்தில்.
இவங்கள ஆளாளுக்கு முகம் பார்த்து வரவேற்கிறதுக்கா நா இருக்கேன்…கௌம்புனதுலேர்ந்து இவிங்ஞ ஆளுகளாத்தான் கண்ணுல படுது…கூட்டங் கூட்டமா இப்டியா…? …நல்ல கெரகம்டா சாமி….
எண்ணியவாறே அந்த நிமிடம் கிளம்பிய பஸ் ஒன்றில் படக்கென்று  ஏறி தன்னை மறைத்துக் கொண்டார்.. வெகு தூரம் செல்லும் பஸ் அது. சென்றடையும் இடத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் ஒரு நூலகம்.. வெகு நாட்களாய் அங்கு சென்று நாள் பூராவும் கிடந்து படித்து மீள வேண்டும் என்று ஒரு அவா. இன்றுதான் அதற்கு வேளை வாய்த்திருக்கிறது. அநேகமாய் மறுபடி வீடு வந்து சேருவதற்கு இருட்டி விடும்தான். இருட்டட்டுமே என்ன கெட்டுப் போகிறது. அதுதான் விட்டேற்றியான பாடு.  ஏதோவொரு விதத்தில்  எதிர் வீட்டு விழாவைத் தவிர்க்க வேண்டும். அதற்குத்தானே இத்தனை யத்தனம்?  எதற்காக அப்படித் தனக்கு மனசில்லாமல் போனது, ஏன் இவ்வாறெல்லாம் தோன்றுகிறது?.. நிறைவேற்றுநிறைவேற்று என்று துடிக்கிறதே மனசு?. ஏதோவொரு சந்தோஷமும், குரூர திருப்தியும் …அதை ஏன் தவிர்க்க முடியவில்லை?
மனசு விரும்பறதச் செய்றதுக்குத்தானே மனுஷனே…வாழ்றதே அதுக்குத்தானே…! .குதூகலித்தது மனது.. அது எப்படிச் சரி? என்ற கேள்வியை வலியப் புறந்தள்ளியது.
ராத்திரி ஒன்பதுக்கு மேல் வீட்டுக்கு வந்து கதவைத் திறக்க முனைந்தபோது கரன்ட் இல்லாதது தெரியவந்தது. அடிக்கடி இதுவொரு தொந்தரவு. எப்போ போகும்…எப்போ வரும் என்றே சொல்ல முடியாது. இருட்டில் தட்டித் தடவி வெளிப்பூட்டு, உள்பூட்டு என்று திறக்க முற்பட்டுக் கொண்டிருந்த போது….பின்னால் அந்தச் சத்தம்….
எங்க போயிட்டீங்க… இன்னைப் பார்த்து…?..உங்களைத் தேடு தேடுன்னு தேடினோம்….இவ்வளவு நேரம் ஆயிடுச்சா…?..என்றவாறே கையில் சில பாத்திரங்களோடு நுழைந்த எதிர்வீட்டுப் பெண்மணியைப் பார்த்து சற்றே திடுக்கிட்டார் ரங்கநாதம். அன்பு செய்பவர்களுக்கு அது மட்டும்தான் தெரி
யுமோ…? என்ன ஒரு உற்சாகம்?
சாப்பிடுங்க சார்…. உங்களுக்குன்னு தனியா எடுத்து வச்சிருந்தேன்…சாரக் காணலியேன்னு..கவனிச்சிட்டேயிருந்தேன்..சூடுபண்ணிக்கொண்டாந்திருக்கேன்….     ஆறுறதுக்கு முன்னாடி ருசியாச் சாப்பிடுங்க….உங்க பேருள்ள கேட்டரிங்தான்….வீட்ல எதுவும் பண்ணலே…காபி முதற்கொண்டு வெளி ஏற்பாடுதான்….
என்றவாறே பரபரப்பாய்  உள்ளே நுழைய….அதே சமயம் போயிருந்த மின்சாரம் திரும்ப வந்துவிட…பளீரென்ற விளக்கு வெளிச்சத்தில் அந்த அம்மாளின் முகத்தை நேருக்கு நேர் கண்கொண்டு பார்க்க ஏலாமல் கூசி நின்ற ரங்கநாதத்திற்கு மனதை என்னவோ சட்டென்று உறுத்தி அறுக்க ஆரம்பித்தது.

                     ----------------------------------------------------


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...