01 அக்டோபர் 2018

இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகள்-இலக்கியவேல் ஏப்ரல் 2018 கட்டுரை


"இலக்கியவேல்" ஏப்ரல் 2018 இதழில் "இ.பா. சிறுகதைகள்" குறித்த எனது நீண்ட கட்டுரை
                                     “இந்திரா   பார்த்தசாரதி                                                           சிறுகதைகள்”        
        
மிழ் இலக்கியச் சூழலில் பல பழம் பெரும் படைப்பாளிகளின் மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு வந்து விட்டது. புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், ஆதவன், கு.பா.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, கந்தர்வன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், கோபி கிருஷ்ணன், வண்ண நிலவன், ந.பிச்சமூர்த்தி, லா.ச.ராமாமிர்தம் என்று ஏறக்குறைய பலரது படைப்புக்களும் உள்ளன.  அந்த மொத்தத் தொகுப்புகளில் அவரவரது இடம் பெறாத சிறுகதைகளும் உள்ளன. தொகுப்புகள் வந்த பிற்பாடு அவர்களால் தொடர்ந்து எழுதப்பட்டவையும் உள்ளன.
     இந்த மொத்தத் தொகுப்புகளில் அடங்கிய அத்தனை சிறுகதைகளும் அபாரம் என்றில்லாவிட்டாலும், அந்தந்த எழுத்தாளரது க்ளாசிக்கான படைப்புக்கள் பல ஒரே புத்தகத்தில் அடங்குவதும், அவற்றை அவ்வப்போது உடனுக்குடன் எடுத்துப் படிக்க ஏதுவாக இருப்பதும், அதன் மூலமாய் நம்மின் ரசனையை வளர்த்துக் கொள்வதும், எழுத்துப் பயிற்சி உண்டாயின் அதனை மேம்படச் செய்து கொள்ள உதவுவதும், நமது வாசிப்பு அனுபவத்தின்பாற்பட்ட ஆழ்ந்த ரசனை அழியாமல், பசுமையாய்ப் பாதுகாப்பதும் இவற்றினால் விழைந்த  முக்கியப் பயனாகின்றன.  
     இம்மாதிரியான ஒவ்வொரு தலை சிறந்த படைப்பாளியின் மொத்தச் சிறுகதைத் தொகுப்புகளும் வந்த பின்பு, விலையைப் பொருட்படுத்தாது பலராலும் வாங்கப்பட்டு தொடர்ந்து வாசிக்கப்படுகின்றனவா என்கின்ற ஒரு கேள்வி மனதிலே தொக்கித்தான் நிற்கிறது. படைப்பு சார்ந்து, விடாது  இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் இது அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம்…மற்றவர்களுக்கு? வெறும் ஆவணமாகப் போய்விடக் கூடிய அபாயம் உண்டோ என்றும் தோன்றத்தான் செய்கிறது.
      வெறும் ஆவணமல்ல. நம்மைப் புடம் போட்டுக் கொள்ளக் கிடைத்த பொக்கிஷங்கள் இவை என்று பொறுப்புமிக்க ஒரு தேர்ந்த நவீனத் தமிழ் இலக்கிய வாசகனுக்கு, படைப்பாளிக்கு, சமூகப் பிரக்ஞையுள்ள இலக்கிய ரசனையுள்ள ஒரு மனிதனுக்கு நிச்சயம் தோன்றும்.
     அப்படியான இடைவிடாத வாசிப்பில் இப்போது என் கையில் தவழ்ந்து கொண்டிருப்பது இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இரண்டு தொகுதிகளைக் கொண்ட மொத்தச் சிறுகதைகள். இவற்றிலுள்ள படைப்புக்களை வரிசைக் கிரமமாகப் படித்து  விமர்சிப்பது என்கின்ற பாட நூல் வழிமுறை என்பது வேண்டாமென்கிற முடிவில் நான் முதலில் கையில் எடுத்துள்ளது அவரது மொத்தச் சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பு.
     ஒரு படைப்பாளியின் படைப்புக்களை ஆண்டு வாரியாகத், தேதி வாரியாக ஏறு வரிசையில் தொடரும் பொழுது அவரது எழுத்து எவ்வாறு படிப்படியாக மேம்பட்டு வளர்ந்திருக்கிறது, எப்படி அவரது படைப்புக்கள், அதற்கான களங்கள் முதிர்ச்சியடைந்திருக்கின்றன, மாறுபட்டிருக்கின்றன என்பதை நாம் கணிக்க முடியும். இது வளர்ந்து வரும் படைப்பாளிக்குப் பொருத்தமான ஒன்றாக அமையும் வாய்ப்பு உண்டு.
     இ.பா. போன்ற முதிர்ந்த படைப்பாளிகளை எதிர்கொள்ளும்பொழுது அவர்களது ஒவ்வொரு படைப்புமே நம்மை வியக்க வைக்கும்விதமாக அமைந்து பிரமிக்க வைக்கையில் அவற்றை நாம் அணுகும் முறையில் ரொம்பவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.
     சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள் மனத் தோற்றத்துக்கேற்ப உருக்கொள்கிறது என்கின்ற இவரின் கருத்து மிகவும் ஏற்புடையது. கற்பனை, நேர்கோட்டுத் தர்க்க விதிகளின்படி இயங்க வேண்டியதில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் இவர், இது ஓர் உத்திதானே தவிர இதுவே கருவாகி விடாது என்று சொல்லி விட்டு, மகாபாரதத்தைப் படித்து முடித்த பிறகு “மீனுக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” “கங்கை நதி கருவுற்றாள் என்பது எவ்வளவு அபத்தம்?” என்றெல்லாம் நாம் விவாதிப்பதில்லை என்று விளக்குகிறார்.
     படைப்பாளியின் உள் மனத் தோற்றத்துக்கேற்ப உருக்கொள்ளும்  இவரது படைப்புக்கள், இப்படியான கதைகளை இவர் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்று நினைக்க வைத்து, வேறு எந்தப் படைப்பாளியிடமும் இவற்றின் அடையாளங்கள் இல்லை என்பதாகத்தான் முடிவு கொள்ளச் செய்கிறது. இதுவே இ.பா.வின் தனித்துவம் மற்றும் படைப்பாற்றலின் பலம் என்று கொள்ளலாம்.
     “தவம்“ என்ற தலைப்பிலான சிறுகதையை அவர் கையாண்டிருக்கும் விதம் அவரின் எழுத்தாற்றலை இந்த விதத்திலேயே பறைசாற்றுகிறது. என்ன கதையைச் சொல்லப் போகிறோம், அதை எப்படி வடிவமைக்கப் போகிறோம் என்கிற முழுத் தீா்மானத்தில் ஆரம்பிக்கும் இக்கதை ஆரம்ப வரிகளிலேயே நம்மை உற்சாகப்படுத்தி விடுகிறது. இந்த விவாதத்தை இப்படித்தான் துவக்க வேண்டும், அப்படியானால்தான் கதைக்கான கரு பலம் பெரும், அழுத்தமாய் வாசகனால் உணர முடியும் என்கிற அவரின் முடிவு நம்மைப் பிரமிக்க வைக்கிறது். மனதில் தோன்றும் ஒரு விஷயத்தின் நியாய அநியாயங்களை புத்திசாலித்தனமாய் விவாதிப்பது என்பது, அதிலும் அதனை விவாதிக்கும் பெருமக்கள் கீழ்த்தட்டு மக்களா, நடுத்தர வர்க்கத்தினரா அல்லது மேல்தட்டு வர்க்கத்தினரா என்பதை முடிவு செய்து அதற்கேற்றாற்போல் வாதினை முன் வைப்பது என்பதற்கு ஒரு அறிவு ஜீவியால்தான் இது சாத்தியம் என்று நினைத்து வியக்கும் அளவுக்கு இந்தக் கதையைப் படிப்படியாக நகர்த்திச் செல்கிறார் இ.பா. அம்மாதிரி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட நேர்கையில் மேல்தட்டு வர்க்கத்தினரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வரிக்கு வரி கதாபாத்திரங்களின் விவாதங்களின் மூலம் சாமர்த்தியமாய் அடுக்கியவாறே கடந்து செல்கிறார்.  என் வாசிப்பு அனுபவத்தில் இம்மாதிரியான அறிவுபூர்வமான விவாதங்கள் அடங்கிய கதைகளை ஆதவனின் படைப்புக்களில்தான் நான் கண்டு வியந்திருக்கிறேன். அதற்குப்பின் இ.பா.தான்.
     ஆஸ்பத்திரியிலிருந்து மீனாட்சி வந்ததும் அவளை அக்னிப் பிரவேசம் செய்யச்  சொல்லப் போகிறேன் என்று பயப்படுகிறாயா? என்று மகள் ராதிகாவிடம் கேட்கிறார் சபேசன்.  இந்தக் கேள்விக்கான தகவலும் அது குறித்த விவாதங்களும்தான் கதையாகப் பரிணமிக்கிறது. சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்டு அப்பா கொதித்தெழுவார் என்று வீட்டிலுள்ளோர் நினைக்கையில், அவர்கள் எண்ணங்களில் மண் விழுகிறது. எனக்கும் அவளுக்குமான உறவு அத்தனை சராசரியானது அல்ல…உங்களின் புரிதல் வேறு…எனது உணர்தல் என்பது வேறு….அதில் ஆழப் புதைந்து கிடக்கும் எங்களுக்கிடையிலான இந்த வாழ்க்கையின் அர்த்தங்கள் அத்தனை எளிதில் யாரும் விமர்சிப்பதற்கில்லை என்று தன் அனுபவம் செறிந்த நிதானத்தின் மூலம் தன் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கிறார்.
 மூன்று  நாட்களுக்கு முன்பு ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து ஃபோன் வந்தது. மரணத் தறுவாயிலிருந்த நடேசன் என்பவர் அம்மாவிடம் பேச விரும்புவதாக. அம்மா புறப்பட்டுச் செல்வதற்குமுன் அவருக்கு நினைவு தப்பி விட்டது. அம்மா மூன்று நாட்களாக ஆஸ்பத்திரியில் காத்துக் கொண்டிருக்கிறார். செத்துக் கொண்டிருக்கும் எவரோ ஒருவருக்காக அம்மா கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். மருமகள் ராதிகா அப்பா சபேசனிடம்  கூறுகிறாள்.
யார் அந்த நடேசன்…? அம்மாவுக்கும் அவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாகவும், ஆனால் நடேசனுடைய விதவைச் சகோதரி காணாமல் போனதால் நின்று விட்டதாகவும், மாந்தோப்பில் அம்மாவின் படத்தை அவர் போட்டுக் கொண்டிருந்தபோது பார்த்து விட்ட அம்மாவின் தந்தை அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவமானப்படுத்தியதாகவும், பெரிய பண்ணையார் என்பதால் அவர் செய்வதே நியாயம்,  சட்டம் என்று சொல்லப்பட, நடேசன் போகும்போது சொன்னாராம். “நான் எப்பொழுதாவது மீண்டும் உன்னைச் சந்திக்க நேரிட்டால் அப்பொழுது தடை இருக்காது என்று நம்புகிறேன்” என்று. அந்த சந்திப்பு மருத்துவமனையில் நிகழ்கிறது. சந்திப்பு என்று கூடச் சொல்ல முடியாது. சென்றடைவதற்குள் அவர் நினைவு தப்பி விடுகிறார்…
இந்த நிகழ்வு சபேசன் வீட்டலுள்ளோருக்குக் கௌரவப் பிரச்னையாக இருக்கிறது. ஒரு விபத்தின் காரணமாக கால்களின் செயலிழந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்தவாறு வாழ்க்கையை நடத்தும் பிரபல தொழிலதிபர் சபேசன் வீட்டின் மாடியிலேயே தன் பொழுதுகளைக் கழிக்க, அவரிடம் இந்தச் செய்தியைக் கொண்டு செல்லும்பொழுது அது விவாதத்துக்குள்ளாகிறது. எதை அவர்கள் அவமானம் என்று நினைத்துக் கொண்டு தீர்ப்புக்காகத் தந்தையிடம் போய் நிற்கிறார்களோ அந்த விஷயம் வெகு நிதானத்துடன் எதிர்கொள்ளப்படுகிறது. உங்களைப் போல் நானும் உடனே உணர்ச்சி வசப்பட்டால் பிறக அவளோடு நான் இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கைக்குத்தான் என்ன அர்த்தம் உண்டு என்று அவர் நினைத்துக் கொள்கிறார்.
அம்மா ஏதோ கொலை செய்துவிட்ட மாதிரி, அப்பாவிடம் சொல்லத் தயங்குகிறார்களே? அம்மா ஒரு குற்றமும் செய்யவில்லை. நம் மனம்தான் இன்னும் வளர்ச்சியுறவில்லை. அம்மாவைப் புரிந்து கொள்ள. பிறகு நமக்கும் அந்தப் பத்திரிகைக்கும் என்ன வித்தியாசம்? – கேள்வி விழுகிறது இப்படி.
காரணம் தொழிலதிபரின் மனைவி இன்னொரு ஆடவனைச் சென்று சந்தித்தது மஞ்சள் பத்திரிகைச் செய்தியாகிவிடுகிறது. மூன்று பிள்ளைகள், மருமகள்கள் உள்ள அந்தப் பெரிய வீட்டில் இந்த விஷயம் வலம் வந்து குடும்பத்தில் கொதிநிலையை ஏற்படுத்துகிறது.
அம்மாவின் உணர்ச்சிகள்தான் முக்கியமே தவிர, அவற்றின் உண்மைக்கு முன்னால் அவ்வுண்மை கற்பிக்கும் புனிதத் தன்மைக்கு முன்னால் அந்தஸ்து, செல்வாக்கு எல்லாம் அர்த்தமற்றவை….
காலம் என்ற கணக்கு உடம்புக்குத்தான். நினைவுகளோ உணர்ச்சிகளோ அக்கணக்குக்கு உட்படாதவை…..
தியாகத்தையே வாழ்க்கை நெறியாகக் கொண்ட சிலர் வாழ்நாள் முழுவதும் பிறருக்காக வாழ்ந்த பிறகு எப்பொழுதாவது ஒரு சமயம் தமக்காக வாழ விரும்புவா்கள் அல்லவா? அது போல அம்மா இப்பொழுது….
குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்….சபேசன் சொல்கிறார்… நான் வியாபாரி….மென்மை உணர்ச்சிகளைப் பற்றி எனக்கென்ன தெரியும்….தொழில் துறையில் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக இருந்தால்தான் முன்னேற முடியும்….
அவர் வியாபாரிதான். சந்தேகமில்லை. ஆனால் உணர்ச்சிகளை எப்படி இயல்பாக அவரால் கட்டுப்படுத்த முடிகிறது?
சொல்கிறார்…. “மரத்தில் கட்டி வைத்து அடித்த அந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் பெண்ணின் உள்ளத்திலிருந்துதான் அந்த வடுவை அகற்றி விட முடியுமா? நடேசன் அடிபடுவதற்குத் தான்தான்  காரணம் என்று மீனாட்சிக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
விவாதம் ஏறக்குறைய முற்றுப் பெற்ற நிலையில் மீனாட்சி வீடு வந்து சேருகிறாள். நேரே கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு பூஜை அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள்.
அம்மாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. இந்த நிலைமையைச் சமாளிக்க நாம் இப்படிச் சொன்னால்தான் நல்லது. இல்லா விட்டால் நம் அந்தஸ்து…?
அமைதி காக்கிறார் சபேசன். நீங்கள் சுகமாக இந்த மாடியில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். உலகத்தை நான்தானே  ஏறிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது? என்கிறான் மகன் ரவி.
உன் குடும்பத்துக்கு எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ அதைச் செய்…என்கிறார். நீங்கள் இந்தக் குடும்பமில்லையா? என்கிறான் அவன். அவரின் பதில்-
நானும் இந்தக் குடும்பம் என்று நீ நினைத்திருந்தால் இந்த மாதிரி யோசனையை என்னிடத்திலேயே நீ சொல்லுவாயா? என்று கேட்கிறார். தாய்க்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று ஊராரிடம் போய்ச் சொல்லி அவர்களைத் திருப்தி செய்…போ…என்று கொதிக்கிறார். எங்கள் இருவரையும் இந்த அறையில் வைத்துப் பூட்டி விடு…பூஜை முடிந்ததும் அம்மாவை இங்கு வரச்சொல்…நான் அவளுக்காகக் காத்திருக்கிறேன்…என்று கூறிவிட்டு…இந்தா…போகும்போது இந்த சிகரெட் சாம்பலைத் தொட்டிலில் கொட்டிவிடு. ஒரே குப்பையாகி விட்டது….என்று கூறி முடிக்கிறார்.
அவர்கள் இருவருக்கிடையிலான புரிதல் தவமாய்ப் பரிணமிக்கிறது. வாழ்க்கையைத் தவமாய் மேற்கொண்டவர்களுக்கிடையிலான பந்தம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை இச்சிறுகதை மனோலயங்களின் தாலாட்டாக ஆழமாய் முன் வைக்கிறது என்பதான புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது
தன்னால்தானே அந்த நடேசனுக்கு இந்த அவமானம் ஏற்பட்டது என்பதில் மனம் புழுங்கி பரிகாரத்திற்கான ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காகத் தவம் கிடந்து காத்திருக்கும் மீனாட்சிக்கு தன்னைச் சுற்றியிருக்கும் அந்தஸ்து, கௌரவம் என்கிற போலி வாழ்க்கைத் தடைகளைப் பொருட்படுத்தாமல் நடேசனால் சொல்லப்பட்ட அந்த இன்னொரு முக்கிய தருணத்தை நழுவ விட்டு  விடாமல் பயன்படுத்திக் கொண்டு ஆறுதல் அடைகிறாள் மீனாட்சி. அவளின் அந்த உள்ளக்கிடக்கை அவரால், அதாவது சபேசனால் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இச் சிறுகதை அந்தஸ்து, கௌரவம் என்கிற புள்ளிகளில் அந்தக் கருவை முன்னிறுத்தி விவாதக் களமாக்கி, நியாயமான, புத்திசாலித்தனமான, கௌரவமான இருவேறு தீர்வுகளை உணரும் வண்ணம் ஒரு தீவிர வாசகனின் ஆழமான நுகர்வுத் தன்மைக்குப் பெருமை சேர்த்து  வாசக மனதில் பெரும் நிறைவை ஏற்படுத்துகிறது.
                ---------------------------------------------------

கருத்துகள் இல்லை: