11 அக்டோபர் 2018

“தீர்வு “ - சிறுகதை - தினமணி கதிர் - 2016


சிறுகதை                        “தீ ர் வு”      
      
வீட்டு வாசலின் பக்கவாட்டில் இருந்த வேப்ப மரம் கிளையோடிப் பரந்து விரிந்திருந்தது. கார் ஷெட்டின் பெரிய கேட்டுக்கும் நேர் மேல்- தளத்திற்குமிடையிலான இடைவெளியில் உள்ளே சுதந்திரமாய் நுழைந்திருந்தது. சற்றே பலமாய்க் காற்று வீசினாலும் பொல பொலவென்று உதிரும் சருகுகள்.  கார் இறங்கி தெருவுக்கு வரும் வசதியாய்ப் போடப்பட்டிருந்த பரந்த சிமின்ட் தளம் முழுக்க குளிர் நிழல் படிந்து வெய்யிலின் தாக்கம் தெரியாமல் இதமான சூழல் தவழ்ந்தது. அந்த வீட்டின் மிகவும் பிடித்தமான இடம் அது எனக்கு.
      இன்றுவரை ஷெட் மட்டும்தான் இருக்கிறது. கார் இல்லை. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பையன் வாங்கி விடமாட்டானா…அப்பொழுது வசதியாய், மதிப்பாய், பார்வையாய்….நிறுத்த உதவுமே என்று முந்திக் கொண்டு கட்டியாயிற்று.
      யாரு அதுக்குள்ளயும் இதெல்லாம் செய்யச் சொன்னது? என்பதுபோல் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. கல்லடி படலாம். கண்ணடி படக்கூடாது…. எதையாவது இப்படி சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.
      நாம கார் வாங்குறமா இல்லையாங்கிறதைக் கவனிக்கிறதுதான் மத்தவனுக்கு வேலையா…? அவனவனுக்கு ஆயிரம் ஜோலி….நாமளா நம்ம வசதி போல நமக்குப் பொருத்தமா எதையாவது நினைச்சு… சமாதானப்படுத்திக்க வேண்டிதான்…!
அப்படிப் பார்த்தா...இன்னைக்குத் தேதிக்கு எவன் வீட்டுல கார் இல்லை? கேள்வி வருதில்ல?  இது அந்தக் காலத்துலதான் டாம்பீகம். இப்போ… அது தேவை…!  ஆபீசுக்குப் போறதே கார்லதான்னுட்டு ஆரம்பிச்சுட்டானுக இந்த ஐ.டி.ப் பசங்க…நாம சைக்கிள்ல அலைஞ்சோம்…பஸ்ல இடிபட்டோம்…இப்பவும் அப்டியே இருக்கணும்னு சொல்ல முடியுமா? கடனோ…உடனோ….எவன் எதுக்குப் பயப்படுறான்? வீட்டு வாசல்ல, இந்தா பிடின்னு கொண்டு காரை நிறுத்திர்றானுங்க… எல்லாம் இப்டி வாங்கி அப்டிக் கொடுக்கிற கதையாயிருக்கு….எவனும் எதுக்கும் அஞ்சுறதில்ல…! யாருக்காச்சும் சேமிக்கிற புத்தி இருக்கா? நாளைக்குக் கஷ்டப்படுவமேன்னு எவனாச்சும் நினைக்கிறானா? ஒத்தன் ரெண்டுபேரத் தவிர…?
.திடீர்ன்னு உன் பையன் கார்ல வந்து இறங்கினாலும் போச்சு…என்னப்பா இது….! நிறுத்த இடமேயில்ல…?.ன்னு அலுத்துக்குவான். அப்ப மட்டும்தான் அப்பன் ஞாபகம் வரும்… அவனோட சேர்ந்து அப்போ நீயும் கும்மியடிப்ப… நொட்டைச் சொல் சொல்லுவ…! அதுக்குத்தான் இப்பவே கட்டித் தொலைச்சேன்…முன் ஜாக்கிரதை முத்தண்ணா…!
      உண்மையிலேயே தொலைச்ச கதையாய்த்தான் போயிற்று. என்ன காரணமோ தெரியவில்லை. தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இப்போது கார் இருந்தாலும், இருக்கும் செத்தை குப்பையெல்லாமும் அதுக்குதான் அபிஷேகம். அந்த சமயம் உள்ளே நுழையும் கிளைகளை வெட்டி எறிய வேண்டியிருக்கும். அப்போது நிழல் குறையும். நினைத்துக் கொண்டேன்.
அப்படியாயினும் கார் வராதா? மதிப்பாய்க் குப்பை அள்ளலாமே…! பீத்தப் பெருமை…! நமக்கும்தானே தொத்திக்கிது…?
இப்போதைக்கு வாசலும் திண்ணையும் குளு குளு…!.. என்ன வெய்யிலாய் இருக்கட்டுமே…மதியச் சாப்பாட்டுக்குப் பின் போர்டிகோவில் ஒரு கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட்டு சரீரத்தைக் கிடத்தினோமானால் நம்மை விடக் கொடுத்து வைத்த ஆசாமி உலகத்தில் வேறு எவனுமில்லை. கவியரசர் சொல்லுவார்.
பாய் விரித்துப் படுத்தவனும்
வாய் திறந்து தூங்குகிறான்
பஞ்சணையில் படுத்திருந்தேன்
நெஞ்சில் ஓர் அமைதியில்லை…!
விஞர் சொன்னதுபோல் பாய் விரித்தும் படுத்துறங்கலாம்தான். அத்தனை குளிர்ச்சி உண்டு அங்கே.  உள்ளே தலை நீட்டியிருந்த கிளைகளும் சலசலத்த பசும் இலைகள் கொணர்ந்த மென் காற்றும்…அடா…அடா..அடா….!!!
சிந்தனை எங்கெங்கோ சிறகடிக்கிறது…ம்ம்ம்…இங்க ஒண்ணு சொல்லியாகணுமே…!
அப்படிப் பார்த்தால் இன்று நாங்களே அந்த வீட்டில் இல்லையே…? இதில்ல முக்கியம்….!
சென்னையில் பையனோடு இருந்து கொண்டு மாதா மாதம் வந்து போய்க் கொண்டிருக்கிறேன் நான். வரும்போதும்… போகும்போதும்… வீட்டோடும்…மரங்களோடும்…விட்டுச் சென்ற செடிகளோடும் பேசிக் களிக்கிறேன்.  
போனவாட்டி வந்து, போயி ரெண்டு மாசந்தான இருக்கும். அதுக்குள்ளயுமா இப்படி? அசுர வளர்ச்சியாயிருக்கு? …. நிமிர்ந்தாக் கழுத்து வலிக்குது …..- அந்த வேம்பின் நீட்சி என்னை பிரமிக்கத்தான் வைத்தது. ரெண்டு கன்றுகள் வைத்தேன். ஒன்று எழும்பவில்லை. இன்னொன்று இப்படி. அதற்கும் சேர்த்துத்தான் இந்த அபார வளர்ச்சியோ?
என்ன நல்லாயிருக்கீங்களா…எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாக்கும்?-கேட்கின்றனவே…!
ஒவ்வொரு முறை வரும்போதும் இந்த இலைக் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிக் குமித்து நெருப்பு வைப்பேன். ஓரமாய்க் குவித்து அப்படியே விட்டு விட்டால் பக்கத்து வீடு, எதிர்வீடு என்று பறந்து அங்கெல்லாம் செத்தையாகிவிடுகிறது. நம்மால் மற்றவருக்கு எதற்கு சிரமம்? வீணாய்ச் சண்டை வரும்…!
ரொம்பக் குப்பை சார்…பேசாம மரத்தை வெட்டிடுங்களேன்…பொறுக்க மாட்டாமல் சொன்ன எதிர்வீட்டுப் பெண்மணி. ஒரு மரம், செடி…கொடி…ஆகாது அவர்களுக்கு. பூராவும் காங்க்ரீட்டைப் போட்டு இழைத்திருந்தார்கள் அவர்கள் வீட்டை. சுள்ளென்று தகிக்கும் வெப்பத்தைப் பற்றி எள்ளளவும் கவலையில்லை. குப்பை கூடாது…அவ்வளவே…! நானோ அதற்கு நேர்மார். இருக்கும் இண்டு இடுக்குகளில் என்னடா செடி வைக்கலாம் என்று அலைபவன். மாடித் திட்டுகளில் வரிசையாய் பூத் தொட்டிகளையும், மிளகாய், வெண்டை, தக்காளி,  கத்தரிக்காய் என்று செடிகளையும்,  சில உர மூட்டைகளையும்  வாங்கி அடுக்கி…வெயிலின் தாக்கம் இல்லாமல் கழிய நேர் மேலே வலைப் பந்தல் தடுப்புகளையும் நிர்ணயித்திருப்பவன். சுமார் முப்பதாயிரத்துக்கும் மேல் இதற்கென்று செலவு செய்திருப்பவன். அதாவது மாடித் தோட்டம்…!
என் உடம்புதான் சென்னையில் இருக்கிறதே தவிர மனசு பூராவும் இங்குதான். எவனாவது வந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு தொட்டியாய் லவுட்டிக் கொண்டு போய்விடுவானோ என்கிற பயம். உர மூட்டைகள் காணாமல் போகும் அபாயம். எல்லாவற்றையும் விட மாதம் ஒருவாட்டி வந்து பார்ப்பதற்குள் அனைத்தும் காய்ந்து சருகாகிப் போகுமே என்கிற வருத்தம். மழை கிடையாது. அவ்வப்போது தண்ணீரும் வார்க்கவில்லையென்றால்?  
இந்தச் செடி கொடிகளுக்காக, நான் மட்டும் இங்கேயே இருந்து கொள்கிறேனே என்று ஆன மட்டும் சொல்லிப் பார்த்தேன். அழுது பார்த்தேன். என் கண்ணீருக்கு விலையில்லை. பொறுப்பத்த மனுஷன்…பேச்சைப்பாரு…? கேட்கவில்லை…அவ்வளவே…!
அப்டீன்னா வேண்டவே வேண்டாம்…அம்மா…நீயும் அப்பா கூடவே இங்கயே இருந்துக்கோ…என்று பிணங்கினான் பையன். அன்புத் தொல்லை. ஆனால் இந்த வாயில்லா ஜீவன்களுக்கு யார்தான் துணை? தினமும் என் கவனிப்பில்லையானால் நசிந்து போகுமே…?
இதெல்லாம் ஒரு பிரச்னையாப்பா…? – சர்வ அலட்சியமான அவன் கேள்வி. விட்டால் ஒரே நாளில் யாரையாவது தெருவில் செல்பவனை அழைத்து…எல்லாத்தையும் எடுத்திட்டுப் போ என்று தூள் தட்டி விடுவான். அவ்வளவுதான் அவற்றிற்கும்  அவனுக்கும் உள்ள பிணைப்பு…! பயிர் பச்சைகளை, பிற ஜீவராசிகளை…இயற்கையை நேசித்தல்…என்பதென்ன சாதாரண விஷயமா? அது ஒரு தனிப்பெரும் கலை…!
சார்…..வந்திருக்கீங்களா…..எப்ப வந்தீங்க…..? – பழகிய குரல் கேட்டுத் திரும்பினேன்.
அடடே…வாங்க ராமையா….நல்லாயிருக்கீங்களா…?  தொழில் நல்லா போயிட்டிருக்கா….?
நல்லாயிருக்கேன் சார்….உங்கள…மாமி, பையன்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு… நல்லாயிருக்காகளா…? எத்தனை நாள் இருப்பீக….?
ராமையாவின் பேச்சில் அன்பு ஒழுகும். ஒரு அத்யந்த நெருக்கம் உணரப்படும்.
நல்லாயிருக்காங்க ராமையா…….என்னா…துணி கொடுத்திட்டுப் போறீகளா…? எதுக்கு இந்த வேகாத வெயில்ல அலையுறீங்க…? வச்சிருந்து சாயங்காலம் வெயில் தாழக் கொண்டு கொடுக்க வேண்டிதானே…? அப்டித்தானே வழக்கமா செய்வீங்க…!
இன்னைக்கு துணி ஜாஸ்தி சார்….ஒரு பொட்டிதான் இருக்கா…? நான் ஒருத்தன்தான் தேய்க்கிறேன்.  இல்லன்னா…சிறிசப் பூராவும் என் வீட்டுக்காரி தேய்ச்சு வைப்பா… சவுரியமாயிருக்கும்…அந்த இன்னொண்ணு ரிப்பேராப் போச்சு…கட்டக் கடோசி கம்மா வரைக்கும் துணி வருதுங்களா…மொத மொதல்ல கடை போட்டதே அங்கதான….கம்மா மேட்டுல….அப்புறந்தான தெருக்குள்ளாற மாத்தினேன்…இங்கவே இன்னைவரைக்கும் மூணு எடம் மாத்திப்புட்டேன். தெருவ விட்டு வெளியேறிட்டா கதை கந்தலாயிடும்…! கம்மா வரைக்குமான வீட்டுல இருக்குறவுக, வேறே யார்ட்டயும் கொடுக்க மாட்டாக….எல்லாமும் நம்மட்டத்தான் வரும்…..பிரியப்பட்டுக் கொடுக்கிறவுகள…ஒதுக்கவா முடியும்…நம்ம தொழில் சுத்தம் அப்டிங்கய்யா...அப்புறம் நாளப்பின்ன துணியே இல்லாமப் போயிடிச்சுன்னா…? இந்தத் தெருவ நம்பித்தான பொழப்பே ஓடுது…..என்னா…மழை…தண்ணீனாத்தான் செரமம்….! வெட்ட வெளி…சீரழிஞ்ச பொழைப்பாப் போகும்…! அதான் ஒரே யோசனையாக் கெடக்கு….!
எப்போதுமே விகல்பமற்ற பேச்சுத்தான் ராமையாவுக்கு. ஒன்று கேட்டால் ஒன்பது சொல்வார். ஒளிவு மறைவு கிடையாது. உரிமையோடு பேசி விடுவார் பல சமயங்களில். அப்படி ஒரு சமயம் அவர் தற்செயலாய்ப் பேசியதுதான், சற்று வித்தியாசமாய்த் தோன்ற லேசான மனஸ்தாபமாகிப் போனது. இப்படிப் பேசலாமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டு விலகியதில்லை. இருந்தாற்போல் இருந்து அப்படியே நின்று போனதுதான். அவரும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. உரிமைக் கோபம் என்று கூடச் சொல்லலாம். அல்லது என்னவோ என்று கூட யோசிக்காமல் விட்டிருக்கலாம். பையனுக்காக நாங்களும் மௌனம் காத்த அவலம்…!
ஏம்ப்பா…அந்தாள் கேட்கிறான்….இந்த ரெண்டே ரெண்டு துணியை எடுத்திட்டு இம்புட்டு தூரம் வந்தியாக்கும்னு….. – என்ற பையனின் கோபத்தை முதலில் மடக்கினேன் நான்.
…..கேட்கிறான்…அவன்…இவன்…ன்னு சொல்றத முதல்ல விடு….உன் வயசென்ன…அவர் வயசென்ன….? பெரியவங்கள மரியாதையாப் பேச வேண்டாமா?
இதிலென்னப்பா இருக்கு…ஜென்ரலா சொல்றதுதானே….எத்தனை துணி கொடுத்தா என்ன? ஒண்ணோ…ரெண்டோ….கொடுத்தத அயர்ன் பண்ணிக் கொடுக்கிறதுதானே அவர் வேலை… பத்துத் துணி கொடுத்தாத்தான் தேய்ப்பாராமா? ஒண்ணு ரெண்டுக்குக் காசு வாங்கினா அது கேவலமா? ரெண்டு துணியத் தூக்கிட்டு இம்புட்டுத் தூரம் வந்தியான்னா…? இந்தக் கேள்வி தேவையா அவருக்கு…? வீட்டுக்கு வீடு  அவரா வந்து வாங்கிட்டுப் போய்த்தானே துணி தேய்ச்சுக் கொடுக்கிறாரு? …அப்போ ஏதாச்சும் ஒரு வீட்டுல ரெண்டே ரெண்டு மட்டும் கொடுத்தா  வாங்க மாட்டாராமா? இதெல்லாம் திமிருல்ல…..?
எனக்குச் சுருக்கென்றது. என்னையே திட்டியது போல்…!  இந்தச் சாதாரண நிகழ்விற்கு “திமிருல்ல…” என்ற வார்த்தை தேவையா…? இளைய தலைமுறை ஏன் இப்படி நறுக்கென்று ஒரு விஷயத்தை முறித்துப் பார்க்கிறது? சார் பையன்தானே என்ற உரிமையில் கூட அப்படிச் சொல்லியிருக்கலாம்…! அப்புறம் வர்றபோது நான் கேட்டு வாங்கிக்கிட மாட்டனா என்ற பொருளில் கூட இருந்திருக்கலாம். தான் பார்க்க வளர்ந்த பையன்தானே என்ற நினைப்பில் யதார்த்தமாய் அந்த வார்த்தைகள் வந்து விழுந்திருக்கலாம். அவர் வயசுக்கு இத்தனை நாள் பழகி, இவனை இது கூட, இப்படிக் கூடச் சொல்லக் கூடாதா? தினமும் பார்த்து, வருஷக் கணக்காய் பழகிய முகம்…! இந்த மாதிரித் தொட்டதுக்கெல்லாம் எதிராளியின் பேச்சுக்களில்  குற்றம் கண்டுபிடித்தால் பிறகு யாரிடமும் பேசவே முடியாதே? எளிதாக எதிலும்  மனம் குற்றம் கண்டு பிடிக்குமே…?  உலகில் தெரிந்தவர்…பழகியவர்….என்பதுவும்….நட்பு…நேசம் என்பவையும் இல்லாமலே போய்விடும் அபாயம் ஏற்பட்டுவிடுமே…! பழகுவதற்கும் பேசுவதற்கும் ஆட்களை சேமிக்கவில்லையென்றால் அப்புறம் உலகம் வறட்சியானதாகி விடாதா? சாதாரண சராசரி மனிதனுக்கு மற்றவர்களோடு கலந்து வாழும் இருப்பில் கிடைக்கும் சந்தோஷமும் நிறைவும் வேறு எதில்தான் கிடைக்கும்? அதுதானே அன்றாட வாழ்க்கையை ஸ்வாரஸ்யப்படுத்தி நகர்த்திச் செல்லுகிறது? அதுதானே ஒருவனை ஆரோக்கியமாய் வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது?
இதையெல்லாம் காலம்தானே இவனுக்குக் கற்றுக் கொடுக்க முடியும்? சொல்லி அறிவதில் உணர்வு பூர்வமாய் இவைகளை அவனால், அவன் வயதுக்கு, கருத்தாய் உள்வாங்க முடியுமா? துள்ளித் தெறிக்கும் இந்த இள வயது எப்படி நிதானப்படும்? எப்போது நிதானப்படும்?
நம்ம பையன்தானேன்னு உரிமையோட, சாதாரணமா, விளையாட்டாக் கூடச்  சொல்லியிருக்கலாம்…இது ஒரு தப்பா.. விடு….விடு….
நான் அவன் பக்கம் பேசாததில் கோபம்தான். அவளுக்குமே…!
நீ என்னப்பா…இப்டி வெளி ஆளுக்குப்போய் பரிஞ்சு பேசுற…? – இது முதல் கேள்வி. அவன் சொல்வதைக் கண்ணை மூடிக் கொண்டு ஒத்துக் கொள்ள வேண்டும்…! எப்டிக் கேட்கப் போச்சு….? என்பதாக…!
அப்பா எப்பவுமே இப்டித்தான். கம்யூனிஸ்ட் மைன்டட்….அந்தாளு ஒரு தொழிலாளியாம்…அதுனால அவருக்குச் சாதகமாத்தான் பேசுவாரு…நாம சொல்றதெல்லாம் இவர் மைன்ட்ல ஏறாது….எப்டியோ போங்க….இனிமே நான் அவர்ட்டத் துணி தேய்க்கக் கொடுக்க மாட்டேன்….அவ்வளவுதான்….
பிடியாய் இருந்து விட்டான் என்றால் பாருங்களேன். எனக்கோ அலாதிச் சிரிப்பு. இப்போது இவன் சொன்னது மட்டும் ஜென்ரலாய்ச் சொன்னதில்லையா…? என்ன வகையான புரிதல் இது? இப்படிப் பேசினால் உடனே கம்யூனிஸ்ட்…! என்ன புரிதல் இது?
நம்ம வீட்டு அயர்ன் பாக்ஸ்ல…நாந்தாண்டா தேய்ச்சேன்….நம்பு….என்று     அவனைப் பிற்பாடு நம்ப வைப்பதற்குப் பெரும்பாடு பட்டேன். அத்தனை பழி. ஆனால் வேறொன்று சொன்னான். அதுதான் நம்ப முடியாததாய் இருந்தது.
      அவர்ட்டயே கொடுத்துத் தேய்ச்சு வச்சிருந்தாலும் எங்கிட்டே சொல்ல வேண்டாம்…..! அது எனக்குத் தெரியவும் வேண்டாம்…..
      இதெப்படி இருக்கு…?
      சுத்த சின்னப்பிள்ளைத் தனமால்ல இருக்கு…. – வடிவேலு சொல்வதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.
      ராமையா போய்க் கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்த வேளை அவரின் பார்வை முழுக்க அங்கே படிந்திருந்த அழுத்தமான மர நிழலில் குவிந்திருந்தது.
      ஸ்ஸ்ஸ்…..அப்பாடா….!! என்று கைத்துண்டை எடுத்து மூஞ்சி, கழுத்து என்றும்…சட்டைக்குள் விட்டு உடம்பு முதுகு என்றும் அழுந்தத் துடைத்து விட்டுக் கொண்டு காற்றின் சுகத்தை உணர்ந்தவராய்… அந்த வேப்ப மரத்தையும், உள்ளே நுழைந்து சலசலத்திருக்கும் விரிந்த கிளைகளையும் கண்டு அவர் முகம் மலர்ந்தது. ஒரு நாளைக்குப் பத்துவாட்டியாவது அந்தப் பக்கம் போகவர இருப்பவர்தான். கண்ணில் படாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போதுதான் அதன் சுகத்தை அனுபவிப்பவர் போல் இருந்தது அவர் செயல்.
      என்னவோ கேட்க நினைத்துக் கேட்காமலே நகர்ந்து  திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தார். எந்த விஷயத்தையும் ரொம்பவும் மனசுக்குள் அசை போட்டு, எடை போட்டு நிறுத்து, அதற்கான தகுதியும், நேரமும் காலமும் தானே கூடி வருகையில் வெளிப்படுத்தும் பரிபூர்ண முதிர்ச்சி உண்டு அவரிடம். மனிதன் தனக்குத்தானே பக்குவப்படுவதில்தான் என்ன ஒரு அழகு…! அனுபவங்களை சக மனிதர்களும், இந்த உலகமும்தானே கற்றுத் தருகின்றது?
      ராமையாவுக்கு எத்தனையோ முறை சிறு சிறு உதவிகள் செய்திருக்கிறேன். வீட்டில் அவளுக்கோ, பையனுக்கோ தெரியாது. தெரிய வேண்டிய அவசியமுமில்லை என்பது என் அபிப்பிராயம். தெரிந்தால் நிச்சயம் எதிர்ப்புதான். எல்லாவற்றையுமா சொல்லிக் கொண்டிருப்பார்கள்? மனைவி எப்படிப் பலவற்றை நம்மிடம் சொல்வதில்லையோ அதுபோல் கணவனும் எல்லாவற்றையும் ஒப்பித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது உலகப் பொதுமறை. பல குடும்பங்கள் இப்படித்தான் நிம்மதியாகக் கழிகின்றன. ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொள்ளக் கூடாது. அது ரொம்ப முக்கியம். எப்பொழுதுமே வாழ்க்கை என்பது நோண்டாமல் இருக்கும்வரை அதுபாட்டுக்குக் கழியும். நோண்ட ஆரம்பித்தால் அத்தனையும் கேடுதான். மனிதர்களுக்கிடையே திரைகள்.   
      ஓட்டைச் சைக்கிளை வைத்து டொடக்…டொடக் என்று சத்தமெழ ஓட்டிக் கொண்டிருப்பது மனதைக் கஷ்டப்படுத்தியது. இரண்டு புது டயர், ட்யூப்கள் வாங்கிக் கொடுத்து சர்வீஸ் பண்ணச் சொல்லிப் புதுப்பித்துக் கொடுத்தேன். அயர்ன் பாக்ஸ் சின்னதாய்த்தான் வைத்துக் கொண்டிருந்தார். அதை வைத்து ஒரு நாள் துணிகளைத் தேய்த்து முடிப்பது படு சிரமமாய் இருப்பதாய்ச் சொன்னார். பெரிய பித்தளை அயர்ன் பாக்ஸ் ஒன்று வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தேன். அதன் பிறகு வேலைகள் படு வேகமாய் நடந்தது கண்டு மனம்   மகிழ்ச்சியுற்றது.
      ஒருவரை நமக்குப் பிடித்து விட்டது என்றால் அவரின் உழைப்பு, பொறுப்புணர்ச்சியின் மீது நமக்கு மதிப்பு ஏற்படுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவருக்கு உதவுவோம் என்று மனம் அவாவுகிறது. அவரின் வளர்ச்சியை மனம் எதிர்நோக்குகிறது. அப்படியான ஒரு பிடிமானத்தில்தான் நான் அவருக்கு உதவினேன். அளந்து போடுவதையும் அழகாய்ப் போட வேண்டும்.
      அப்படி அழகாய்ப் போட்ட ஒருவரைப் பற்றிச் சொல்கிறேனே…!
பிஸ்கட்டைப் பாதிப் பாதியாய் விண்டு விண்டு…கூடவே வரும் அந்த மூன்று நாய்களுக்கும் தினமும் போடுவார் அவர். பாய்ந்து கேட்கும் பைரவனோடு பேசுவார். உனக்குத்தான் போட்டேன்ல…அப்புறமென்ன…? அவரின் நடைப்பயிற்சியின் போது குறிப்பிட்ட இடத்திலிருந்து அதுகளின் நடைப் பயிற்சியும் தொடரும். அவர் நின்றால் நிற்கும். நடந்தால் நடக்கும். அவருக்கு பாடி கார்டு மாதிரி. போட்டுப் போட்டு அவைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டு விட்டார். அவர் வந்தால் தாவித் தாவிக் கொஞ்சுகின்றன அதுகள். என்ன ஒரு இஷ்டம்…? மனதிற்குகந்த நல்லவைகளைச் செய்ய என்ன தடை? இது அவர் தனக்குத்தானே வரித்துக் கொண்ட தர்மம். அவரவர் விருப்பம், தகுதிக்கேற்றாற்போல் செய்யலாமே…! பத்துப் பைசாவுக்கு சூடம் வாங்கி ஏற்றிக் கும்பிடுவதில்லையா? சாமி வேண்டாமென்றா சொல்லியது? மனதில் எழும் பக்திதான் பிரதானம்….அதுபோலதான் எதுவும்…!
சிறுவயது முதல் வாழ்க்கையில் நிறையக் கஷ்டங்களைப் பார்த்தவன் நான். வறுமையில் உழன்றவன். கொடிது கொடிது வறுமை கொடிது…அதனினும் கொடிது இளமையில் வறுமை…என்று ஔவைபிராட்டி பாடவில்லையா? அதனால் கஷ்டப்படுபவர்களைக் கண்டால், வறுமையில் செம்மையாகக் கடுமையாக உழைத்து உண்பவர்களைக் கண்டால் உடனே அவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டு விடும்.
      தினமும் குடத்தைத் தொங்க விட்டுக் கொண்டு எங்கெங்கிருந்தோ தண்ணீர்  பிடித்துக் கொண்டு வந்து வீடு வீடாய்க் கொடுக்கும் சன்னாசிக்கும் இதேபோல் புதிய டயர் ட்யூப் போட்டு சைக்கிளைப் புதுப்பித்துக் கொடுத்தேன். எந்நேரமும் வாயில் கனியும் வெற்றிலை பாக்குத் தாம்பூலத்தோடு செக்கச் சிவக்க சார்….வணக்கம்…என்று சிவப்பு சல்யூட் அடிப்பார் வண்டியில் பறக்கும்போது. மனம் சந்தோஷம் கொள்ளத்தான் செய்கிறது. அவர் இல்லையென்றால் தண்ணீர் கஷ்டத்தில்  வீட்டுக்கு வீடு நாறிப்போகும் பொழப்பு….! மாநகராட்சி லாரி வந்தால்தானே…! என்றாவது வந்து நிற்கும் அபூர்வமாய்…அன்றைய அடிபிடி இருக்கிறதே…ஐயோ பாவம் இந்த மக்கள்…!
       இப்பொழுதும் கூட ராமையா துணி தேய்க்கும் அயர்ன் வண்டியைப் புதுப்பித்து அல்லது புதிதாய் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டு எனக்கு. அவரில்லாத நாட்களில் அந்த வண்டி அநாதையாய்ப் பரிதாபமாய் நின்று கொண்டிருப்பதாய்த் தோன்றும் எனக்கு. போகிற போக்கில் யாரேனும், லேசாய் ஒரு தட்டுத் தட்டினால், படக்கென்று மடங்கி தரையில் உட்கார்ந்து கொள்ளும் நிலையில்தான் அது. யார் தொடப் போகிறார்கள்…அதை எடுத்துக் கொண்டு அல்லது உருட்டிக் கொண்டுபோய் (உருட்ட முடிந்தால்தானே…!) விலைக்குப் விற்று வரும் காசில் ஒரு வேளை டிபன் சாப்பிட முடியுமா…? அந்த தைரியம்தான்…
ன்று தெரிந்துதான் அந்த இடத்திலேயே விட்டிருக்கிறார் ராமையா. பெரும்பாலும் அங்கங்கே பார்க்கும் அயர்ன்காரர்களின் வண்டிகளெல்லாம் அப்படி அப்படியேதான் யதாஸ்தானத்தில் தன்னந் தனியாய் நின்று கொண்டிருக்கின்றன. அத்தனையும் ஓட்லாக் வண்டிகள்தான். வெறுமே நின்றால் போதும்….! மக்கள் மீதான நன்னம்பிக்கை அங்கே நின்று காக்கிறது.
கரும்பு ஜூஸ் பிழியும் வண்டிகளைக் கூட நாம் அப்படிப் பார்த்திருக்கலாம். வெறும் கிழிந்த சாக்கைச் சுற்றிக் கட்டி நிறுத்தி விட்டுப் போய்விடுவார்கள். அதுவாவது தொலைந்தால் நஷ்டம். நல்ல விலையுண்டு அதற்கு. அதையே நம்பிக்கையாய் நிறுத்தி விட்டுப் போகிறார்களே…? இதில் பாங்க் லோன் வண்டிகள்தான் அதிகம்.  வண்டிக்காக மாதத் தவணை கட்ட நிற்பவை. கட்ட முடியவில்லையாயின் கரும்பு ஜூஸாகக் கொடுத்துக் கழிக்க வேண்டியதுதான்.   இது எல்லோருக்குமான உலகம்.
இந்த உலகம் இன்னும் நம்பிக்கைக்குரியதாய்த்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு ஏன்…நான் அனுதினமும் அதிகாலை நடை பயிலும் அந்தக் காந்தி மியூசியம் நெடுஞ்சாலையின் ஓரிடத்தில் ஒரு பிளாட்பாரத்தின் ஓரத்தில் தினமும் காலை நாலு மணியைப்போல் ஒரு வேன் வந்து நின்று ஒரு ஆயிரம் செவ்விளநீர்க் காய்களை ஓரமாய் இறக்கி விட்டு அதுபாட்டுக்குப்  போய் விடுகிறது. அந்தக் கடைக்காரர், விடிந்து  எட்டரை, ஒன்பது மணியைப்போல்தான் வந்து கடையைத் துவக்குகிறார். இளநீர்க் காய்களைப் பெரியதும் சிறியதுமாய்ப் பிரித்து அடுக்கி, தனித் தனியே ஒரு விலையை நிர்ணயித்து விற்க ஆரம்பிக்கிறார். மாலைப் பொழுது தாண்டி இருள் நெருங்கும் வேளையில் அதே வேன்  மறுபடி வந்து வெட்டிப் போட்டிருக்கும் மட்டைகளை அள்ளிக் கொண்டு காலையில் பரத்திய காய்களுக்கான பணத்தை வசூல் செய்து கொண்டு போகிறது. திரும்பவும் மறுநாள் அதிகாலைப் பொழுதில் அதே மாதிரி வந்து இளநீரை இறக்கி விட்டுச் செல்கிறது.
எந்த நம்பிக்கையில் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது? மனிதனுக்கு மனிதன் பரஸ்பர நம்பிக்கைதான் இதற்கான ஆணி வேர். இந்த உலகம் எல்லாருக்காகவும இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாவிதமான தொழில் செய்பவர்களும் இந்த உலகத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தந்தத் தொழில் செய்பவர்களின் மத்தியில் ஆதார ஸ்ருதியாக நம்பிக்கை என்ற பலமான அஸ்திரம்தான். அந்த இளநீர்க் காய்களை விடியாத, ஜன நடமாட்டம் ஆரம்பிக்காத, யாருமே இல்லாத, ஒரு அநாமதேய இடத்தில் நம்பிக்கையாய் இறக்குவதும், படிப்படியாக அந்தப் பகுதியில் ஒன்றும் இரண்டுமாகத் தோன்ற ஆரம்பிக்கும் போக்குவரத்தும், நடைப் பயிற்சியாளர்களுமான மக்கள்தான் அதற்கான  காவல்….பாதுகாப்பு. நம்மை நாமே…நமக்கு நாமே! …அதில் படிந்திருக்கும் இறையாண்மைதானே இந்த மேன்மையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது? ஒரு நாட்டின் இறையாண்மை என்பது இம்மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்களில் படிந்துள்ள ஒழுக்கமும், நேர்மையும், பண்பாட்டு அசைவுகளும்தானே  தலைதூக்கி கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது? அதுதானே இந்த நாட்டை, இந்த நாட்டு மக்களை மதிப்பு மிக்கவர்களாய் மாற்றிக் காட்டுகிறது?
அன்று இரவு முழுவதும் ராமையாவே என் சிந்தையில் நிறைந்திருந்தார். தூங்க விடாமல் படுத்தினார். மறுநாள் நான் ஊருக்குக் கிளம்பும் முன் ஒன்று செய்தேன். அவரைப் போய் அழைத்து வந்து….என் வீட்டின் கார் ஷெட் கேட் சாவியை  ஒப்படைத்தேன்.
இனிமேல் உங்கள் துணி தேய்க்கும் பணியை இங்கிருந்து தொடரலாம் என்றேன். இரவின் நீட்சியில் மனதில் விழுந்த அழுத்தமான முடிவு.
ராமையாவுக்குத் திறந்த வாய் மூடவில்லை. கண்களில் நீர் தளும்பி நிற்கிறது. என்ன சொல்வது என்று தெரியாமல், வார்த்தைகளே வராமல் அதிர்ந்து போய் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
என்ன ராமையா…என்னாச்சு….சந்தோஷம்தானே…….? என்றேன் தோள்களைப் பிடித்து உலுக்கியவாறே….
ஐயா……நீங்க தெய்வம்….. என்றவாறே கையைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டு காலில் விழப் போனவரைத் தடுத்து நிறுத்தினேன்.
நீங்க நேத்து திரும்பிப் பார்த்திட்டே போனது எனக்கு இதைச் சொல்லிச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டேன் இந்தப் போர்டிகோவை உங்ககிட்ட ஒப்படைச்சிர்றதுன்னு. ஆனா ஒண்ணு…எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும்….அது கொஞ்சம் கஷ்டமான வேலை…..என்னடாது இடத்தையும் கொடுத்துப்பிட்டு,இப்படி ஒரு பொறுப்பையும் தலைல சுமத்திட்டுப் போயிட்டானேன்னு மட்டும் நினைக்கப்படாது…..சம்மதமா…சொல்லலாமா…?
ஐயா…என்னய்யா இப்டிக் கேட்குறீங்க…நீங்க செய்திருக்கிற உதவிக்கு என்ன வேணாலும் செய்யலாம்யா…தாராளமாச் சொல்லுங்கய்யா….என் பேர்ல நம்பிக்கையில்லயா? செய்றேன்யா…சொல்லுங்க….!
வார்த்தைக்கு வார்த்தை ஐயா போட்டது இப்பொழுதுதான் உறுத்தியது எனக்கு. நான் ஒரு ஆபீசில் வேலை பார்த்த அரசுத் தொழிலாளி. அவர் ஒரு தனிப்பட்ட சுதந்திரமான சுய தொழிலாளி. என்ன பெரிய வித்தியாசம்?
எப்போதும் போல ஸார்ன்னே கூப்பிடுங்க… இதென்ன திடீர்னு? ஐயாவும் வேணாம்…கொய்யாவும் வேணாம்…நான் சொல்றது என்னன்னா…இந்த வேப்ப மரத்தையும்….மாடில உள்ள தொட்டிச் செடிகளையும்…வாடாம, தவறாமத் தண்ணி விட்டுப் பாதுகாக்க வேண்டியது உங்க பொறுப்பு….செய்வீங்களா….?
கட்டாயம் செய்றேங்கய்யா…..எம் பிள்ளைக மாதிரிப் பார்த்துக்குறேன்….
இந்தாங்க…குச்சி….இதை இந்தக் கிரில்லுக்குள்ள விட்டு…அதோ தெரியுதே…வரிசையா ஸ்விட்சு…அதுல ரெண்டாவதைத் தட்டுங்க…மோட்டார் ஓடும்…மேலே தொட்டில தண்ணீர் ஏறும். வாளி வச்சிருக்கேன். தேவைப்படுற போது அளவா மோட்டார் போட்டு…தண்ணீரை வீணாக்காமே பயன்படுத்தி…கரன்ட் பில்லும் ஏறாமப் பார்த்துக்குங்க…சரியா…? நூறு யூனிட்டுக்குள்ள வந்ததுன்னா பைசாக் கிடையாது…தெரியுமில்ல…? – சொல்லிவிட்டுச் சிரித்தவாறே அவரைப் பார்த்தேன்.
தலையை ஆட்டியவாறே….வார்த்தைகள் வராமல் நின்றார் ராமையா.
முதல் சுவிட்ச் இந்த போர்டிகோ லைட்டு…. சாயங்காலம் போட்டுக்குங்க…எட்டு ஒன்பதுக்கு வேலையை முடிச்சிட்டு வீட்டுக்குப் போகைல அணைச்சிட்டுப் போயிருங்க….ஏறக்குறைய வீட்டை உங்ககிட்ட ஒப்படைச்ச மாதிரி….மாசா மாசம் நான் வருவேன்….ஒரு வாரம் தங்குவேன்…போயிடுவேன்…அப்ப எப்பொழுதும் போல நீங்க இங்க இருக்கலாம்….ஓ.கே…யா….? விளக்குமார் அந்தோ இருக்கு…கூட்டி, சுத்தமா வச்சுக்குங்க…தினமும் வாசலுக்குத் தண்ணீர் தெளிச்சுப் பெருக்குங்க…
எம் பொஞ்சாதி கோலம் போட்டுருவாய்யா…கோயில் மாதிரி ஆக்கிருவா….! அதெல்லாம் சுத்த பத்தமா இருக்கும்….கவலைப்படாமப் போங்க….!
அந்த முறை ஒரு நல்ல காரியத்தைச் செய்து விட்டு ஊர் திரும்புவதாய் எண்ணி மனம் திருப்திப்பட்டது. ராமையாவின் மீதான நம்பிக்கை அதை உறுதிப்படுத்தியது.
என்ன சார்….இப்டித் திறந்து விட்டுட்டீங்க…? நாங்கள்லாம் இருக்கமே பார்த்துக்க மாட்டமா…? நாளைக்கு ஏதாச்சும் தப்புத் தண்டா நடந்திச்சின்னா? – இது எதிர்வீட்டுக்காரர். அவர் அப்படித்தான் கேட்பார் என்பது எனக்குத் தெரியும். எதிர்பார்த்ததுதான். சுபாவம் அப்படி..என் வழி…தனீஈஈஈஈஈ வழி….கதை…!
அதெல்லாம் ஒண்ணும் நடக்காது….நீங்கள்லாம் இருக்கீங்களே…பார்த்துக்க மாட்டீங்களா….? என்றேன். சந்தோஷம் தாங்க முடியவில்லை அவருக்கு. ஒரு மனுஷனை நம்பறமாதிரி ரெண்டு வார்த்தை சொல்லிப் பாருங்க…உடனே உச்சில போய் உட்கார்ந்துக்குவான்….இது மனித இயல்பு. மேன் இஸ் ஸைகலாஜிகல்….ம்ம்ம்…!
நல்லதாப் போச்சு…இனிமே அடுத்த தெருவுக்கு நடந்து போய்த் துணி  கொடுக்கணும்ங்கிறதில்லை…இப்டியே இருந்த மேனிக்குக் கையை நீட்டிக் கொடுத்து… வாங்கிக்கலாம்…வசதிதான்….என்றார் சிரித்துக்கொண்டே..!. முழுமையான சிரிப்பாய் இல்லைதான். நாளைக்கு கார் வாங்கினா அழகா எதிர்த்தாப்போலே நிறுத்திக்கலாம்னு இருந்தேன். இப்டி திடீர்னு கைமாறிப் பறிபோயிடுச்சே….! நினைத்தாரோ என்னவோ…? ஒரு முறை அவர் அப்படிக் கேட்டிருந்து என் மனையாள் மறுத்திருந்தாள் என்பது தனிக்கதை.
என் ஆருயிர்ச் செடி கொடிகள் நம்பிக்கையாய்க் காப்பாற்றப்படுமே ராமையாவால்… அதைச் செய்வாரா இவர்? – மனதுக்குள் கேட்டுக் கொண்டேன்.
மறுநாள் காலை நான் ரயிலடிக்குக் கிளம்பியபோது….வீட்டில் இந்த ஏற்பாட்டைச் சொல்லுவதா வேண்டாமா, இப்போதே சொல்லலாமா அல்லது கொஞ்சம் தள்ளிப் போடலாமா  என்கிற எண்ணத்திலேயே என் பயணம் துவங்கி  நகர்ந்து கொண்டிருந்தது.  
                        -------------------------------------------------


     
     


கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...