“சூ ழ ல்” ------------------------- ------------------------------
சுறுசுறுப்பாக வேலை ஓடியது ராகவாச்சாரிக்கு..
சுற்றிலும் படர்ந்த அமைதி. வாசலில் அடர்ந்து பரந்து விரிந்திரிக்கும் மரத்தின் குளிர்ச்சியான
நிழல். தலைக்கு மேலே சரசரவென ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறி. அதன் சத்தம் மட்டும்
துல்லியமாய் காதுகளில்.
கதவைச் சாத்திடு…யாருக்கும் நான் இருக்கிறதைச்
சொல்ல வேண்டாம்…என்று விட்டு, தனது டூ வீலரையும் உள்ளே தூக்கி நிறுத்தியிருந்தார்.
விடுமுறை நாளில் வேலைக்கு வருவது நிலுவை வேலைகளை
முடிக்க. அன்றும் யாரேனும் தேடி வந்து விட்டால் வேலை கெட்டுப் போகும். அதோடு மட்டுமல்லாமல்
அப்படி ஆட்கள் வருவதும் தங்கள் காரியங்களுக்காக வேண்டுவதும் வேறு வகையான அர்த்தங்களைக்
கொடுக்கும். வந்த நோக்கம் முக்கியப் பணிகளை முடிப்பது. வாரத்தின் முதல் வேலை நாளில்
அலுவலர் கேட்கும்போது தயாராய் இருப்பது.
அந்த மிகப் பெரிய காம்பவுன்டின் வலது கோடியில்
இருக்கும் நுழைவாயிலின் ஆரம்பத்தில் இருக்கும் சின்னப் பிள்ளையார் கோயிலில் படுத்துக்
கிடப்பான் வாட்ச்மேன் ரங்கன்.
காலைல பல்லும் விளக்காம, கக்கூசுக்கும் போகாம
இப்டிப் படுத்து உருண்டு கோயிலை அசிங்கப்படுத்தற நீ….பிள்ளையார் ஒண்ணும் கேட்கலையா?
என்று கொண்டேதான் உள்ளே நுழைந்தார்.
அவுருக்குத் தெரியும் சார் நா ராத்திரி பூராவும்
தூக்கம் முழிச்சுக் காவக்காக்குறேன்னு…- ரங்கனும் அசராமல் பதில் சொன்னான். அவன்தான்
இவரிடம் சகஜமாகப் பேசுபவன். அதென்னவோ அவனோடு ஒரு ஒட்டுதல் இவருக்கு. அதற்குக் காரணம்
தெரியவில்லைதான். ஏதோவொரு வகையில் அவனின் பேச்சு
பல சமயங்களில் இவருக்குப் பிடித்திருந்தது. அவ்வளவுதான்.
அடேங்கப்பா….பிள்ளையார் முழிச்சிட்டு இருந்தாத்தானே
நீ காவக் காக்குறதை அவர் பார்க்க முடியும்…அவர் தூங்கிட்டார்னா?
அவுருக்கு ஏது சார் தூக்கம்? எந்நேரமும் கண்ணுமூடாம
உலகத்தைக் காக்குறதுதான கடவுளுக்கு வேலை…
அப்போ நீ எதுக்கு? அவர்தான் காவல் காக்குறாருல்ல…?
அப்டியில்ல சார்…அவர் சஞ்சாரம் செய்யப் போயிட்டாருன்னா?
சிரித்தவாறே கேட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்தவர்தான்.
அடேயப்பா…லீவு நாளில்தான் எப்படி வேலை ஓடுகிறது? இதில் பாதி கூட இருப்பதில்லையே வேலை
நாட்களில்….சதா ஆட்கள் வருவதும் போவதுமாய்….இன்று எப்படியும் டேபிளைக் காலி செய்து
விட வேண்டும். அதென்னவோ எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள். காலையிலிருந்து
நடவடிக்கை எடுத்த கோப்புகளை அடுக்கி வைத்துக் கொண்டு மொத்தமாக மாலை நான்கு மணியைப்
போல் தன் டேபிளில் கொண்டு சுமத்தினால், தான் வீட்டுக்குப் போக வேண்டாமா? தினசரி ஆறு
மணிக்கு மேல் உட்கார்ந்து ஒவ்வொன்றாகப் பார்த்து, அடித்து, திருத்தி, சரி செய்து, அல்லது
வேறு ஒன்று எழுதி ராத்திரி ஒன்பதே வழக்கமாகிப் போனதே! இதற்காகவா உள்ளுர் வந்தது? தினசரி தாமதம் என்றால்?
அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்து சேர்ந்தது
முதல் வேலை அதிகம்தான். உள்ளுர் என்றால் அப்படித்தான். கிளம்பினாலும் அரை மணிக்குள்
வீடு போய்ச் சேர்ந்து விடலாமே…! ரொம்பவும் சந்தோஷமாய் உணர்ந்தார் இந்த அனுபவத்தை. வீட்டுச்
சாப்பாட்டின் ருசியே தனிதான். வெறும் தயிர்சாதம் மாவடு என்றாலும் வயிற்றுக்கு ஒன்றும்
செய்யாது என்கிற உறுதி உண்டு. காலம் போன கடைசியிலாவது வந்து சேர்ந்தோமே…! எந்தப் பிரக்ஞையும்
இல்லாமலே இத்தனை காலம் ஓட்டியாயிற்று.. சொச்ச காலத்தையாவது இங்கே ஓட்டுவோம் என்று நிம்மதியாய்
அவரது கடமையைச் செய்து கொண்டிருந்தார்.
அப்பாய்ன்ட்மென்ட் ஆன நாள் முதல் இன்றுவரை கடந்த
முப்பது ஆண்டுகளாக அவர் வெளியூர்தான். சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னங்க சொல்றீங்க?
முப்பது வருஷமாவா உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கலை? என்று புரியாமல் அல்லது பொய்யோ
என்பதுபோல் பார்ப்பார்கள். விதி வலியது என்று அவர்களுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது?
சலிக்காமல், சளைக்காமல் விடுமுறை நாளில் ஊர் வருவது,
இருப்பது, பின் புறப்பட்டுச் சென்று விடுவது என்று இருந்தே காலத்தைக் கழித்துவிட்டார்.
அவருக்குப் பின் வந்தவர்களெல்லாம் மாறுதல் விண்ணப்பம் கொடுத்து நேரில் சென்று என்னென்ன
செய்ய வேண்டுமோ செய்து உள்ளுர் வாங்கிக்கொண்டு போய்ச் சேர்ந்து விட்டார்கள். இவரது
ஊரைச் சேர்ந்தவர்களே, இவரோடு கூட அப்பாய்ன்ட் ஆன பலரும் உள்ளுர் வந்து பல காலமாயிற்று.
என்னவோ இவருக்கு அது வாய்க்கவில்லை. அப்ளிகேஷன் அனுப்புவதோடு சரி. எவனையும் நேரில்
சென்று பார்க்கும் ஜோலியெல்லாம் இல்லை. இங்கே நான் க்ளார்க் மாதிரி அங்கே அவன் க்ளார்க்.
அவனையென்ன நான் போய்ப் பார்ப்பது? கெஞ்சுவது, தலையைச் சொரிவது? இம்மாதிரிக் கேள்விப்
பட்டாலே அவருக்கு எரிச்சல்தான் வரும். அதெல்லாம் என்னால முடியாதுங்க….இதுதான் அவர்
பதில்.
மனைவி அபிதா. பள்ளி ஆசிரியை. அவளை அலைக்கழிக்க
வேண்டாம் என்று விட்டு விட்டார். இல்லையென்றால் இவர் வேலை பார்க்கும் ஊருக்கு அவளை
மாறுதல் வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கலாமே…! அவளுக்கும் அதில் முனைப்பில்லை என்றுதான்
சொல்ல வேண்டும். என்னவோ ஆர்வமில்லை. எல்லாம் செக்கு மாடு கதைதான்.
லீவு நாளுக்கு வாங்க…அது போதும்…நா இங்கியே இருந்துக்கிறேன்….என்று
சொல்லி விட்டாள். பக்கத்து பக்கத்து ஊர்களுக்கு மாறுதல் கிடைத்தாலும் அவள் அதைப் பெரிதாய்
எடுத்துக் கொள்ளவில்லை. போய்ப் போய் வந்து கொண்டிருந்தாள். அப்படிப் போய் வந்ததனாலேயே
அது பெரிதும் இரக்கத்திற்குள்ளாகி, கடந்த ஏழெட்டாண்டுகளாய் அவள் உள்ளுரிலேயே இருக்கிறாள்.
எந்தப் புண்ணியவாளன் கண்களில் இவரின் அப்ளிகேஷன்
பட்டதோ!
என்னய்யா இது…அநியாயமா இருக்கு…..வருஷா வருஷம்
அவர் அப்ளிகேஷனும் வந்திருக்கு…ரிஜிஸ்டர்ல பதிஞ்சு பதிஞ்சு சுழிச்சிருக்கீங்களே…ஒரு
மனுஷன் நேர்ல வந்து உங்களப் பர்சனலாப் பார்த்தாத்தான் எதுவும் செய்வீங்களா…இல்லன்னா
எனக்கென்னன்னு விட்ருவீங்களா? செக் ஷன்ல எத்தனை
ஆள் மாறினா என்னய்யா…ரிஜிஸ்டர் என்ட்ரி பேசும்ல…? அப்புறம் எதுக்கு இதெல்லாம்? சும்மா
கண் துடைப்புக்கா…? இதுக்குப் பேர்தான் சீனியாரிட்டியா…?
க்ளார்க்கா சேர்ந்து, செக் ஷன் அசிஸ்டன்ட்
ஆகி, இப்போ கண்காணிப்பாளராவும் ஆயிட்டார். அவரும் வருடாந்திரக் கடன்ங்கிற மாதிரி அப்ளிகேஷன்
அனுப்ப, நீங்களும் காலியிடமில்லை காலியிடமில்லைன்னு எழுதி எழுதி முடிச்சிருக்கீங்களே?
இது அநியாயமில்லை? இத்தனை வருஷத்துல எப்பவோ சீனியாரிட்டில அவர் மொத ஆளா வந்திருக்கணுமேய்யா….என்னா
ஃப்ராடு பண்ணினீங்க…? என்று வாங்கு வாங்கென்று வாங்கியதாக இவர் காதுகளுக்கு வந்த அந்தப்
போதில் மனசுக்குள் குளிர் பரவியது ராகவாச்சாரிக்கு. மானசீகமாய்க் கும்பிட்டுக் கொண்டார்.
அந்தப் பலன்தான் இன்று இங்கு உட்கார்ந்திருக்கிறார். பைசாக் கொடுக்காமல், யாரையும்
நேரில் சென்று பார்க்காமல் அப்ளிகேஷன் மட்டும் பேசியது அவரது இந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான்
என்று சொல்லலாம்.
கையில் அந்தக் கோப்பை எடுத்தவுடன் மனத்துக்குள்
ஒரு தடங்கல் வந்தது இவரிடம். அவரையறியாமல் சுற்றிலும் எவரும் இருக்கிறார்களா என்று
பார்வை ஓடியது. இந்தப் பட்டப் பகலின் தனிமை கூடவா இப்படிப் பயமுறுத்தும்?
சார்…பார்த்து முடிச்சி விடுங்க….ஏதாச்சும் செய்திருவோம்….
என்ன சொல்றீங்க….?
என்ன சார், புரியாத மாதிரிக் கேட்குறீங்க…ரிலீஸ்
பண்ணி எழுதி வைங்க சார்…ஒரு பர்சன்ட் வாங்கிக்குங்க….சொல்லணுமா இதுக்கு நா….
ராகவாச்சாரிக்கு உடம்புக்குள் சில்லென்று என்னவோ
பரவியது. ஒரு பர்ஸன்ட்…ஒரு பர்ஸன்ட்…..ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ரூபாய்…..
படுபாவி…சர்வ சாதாரணமாய்த் தருகிறேன் என்று சொல்கிறானே…?
வேறு யாரேனும் சொல்லி அனுப்பியிருப்பார்களோ? அல்லது நான் என்ன செய்கிறேன் என்று சோதனை
செய்கிறார்களா? ரொம்பவும் கவனமாய் இருக்க வேண்டும். இந்த ஆபீசே ஒரு மர்மமாய் இருக்கிறது.
யார் எப்படி என்று இன்னும் நன்றாகப் பிடிபடவில்லை. அதற்குள் தடுமாறக் கூடாது…முடிவு
செய்து கொண்டார்.
செக் ஷன் க்ளார்க் லீவுங்க…அவரு இல்லாம நா எப்டிச்
செய்றது?
என்னசார்…எனக்கென்ன தெரியாதா? எத்தனை வருஷமா இங்க கான்ட்ராக்ட் பார்க்கிறேன் நான்….அவுரு இல்லேன்னா
என்ன? நீங்க எழுதி வச்சா ஓ.கே. ஆயிட்டுப் போகுது….
தன்னை அவசரப்படுத்தி க்ளார்க்குக்குக் கொடுக்கும்
அரை பர்ஸ்ன்ட் பணம் மிச்சம் என்று வாங்கிக் கொண்டு மீளப் பார்க்கிறான் ஆள். லட்ச லட்சமாய்
காசு பார்ப்பவனுக்கு இந்த அரை பர்சன்ட் ஒரு பர்சன்ட்டில்தான் வந்துவிடப் போகிறதா? மனசோடு
அதையும் சேர்த்துக் கொடுத்துவிட்டுப் போவோம் என்ற நல்ல எண்ணமில்லை. நாளை அந்தோணி வந்தால்
நான் என்ன பதில் சொல்வது? சார், என் பங்கு….என்று இழுப்பானே….தரலை என்றால் சந்தேகப்படுவானே?
தானே சேர்த்து வாக்கட்டை போட்டு விட்டதாய் நினைப்பானே…?
நீங்க கிளம்புங்க…பார்த்து செய்வோம்….என்றார்
பொதுவாய்.
வந்தவனின் முகம் மாறியது.
உங்ககிட்ட சொன்னா ஈஸியா முடிஞ்சு போகும்னு ஜே.இ.,
சொன்னாரு…நீங்க என்னடான்னா இப்டிச் சொல்றீங்க….
யாரு ஜே.இ.,…?
ஜெகந்நாதன் சார்…..
அவரே சொல்லிட்டாரா…? அவர்தாங்க இந்தப் பீரிட்ல
இருந்திருக்காரு….அவர ரெக்கமன்ட் பண்ணச் சொல்லுங்க….முடிஞ்சு போகும்…..
நா இல்லன்னு சொல்றாரு அவுரு…..?
என்னங்க, நான் இல்லைன்னு சொன்னாலும் நியாயம்…இப்பத்தான்
வந்திருக்கேன்….பத்துப் பதினைஞ்சு வருஷமா குத்துக்கல்லு மாதிரி இந்தக் காம்பவுன்ட்டுக்குள்ளயே
குதிரை ஓட்டுறாரு….அவுரு ரெக்கமன்ட் பண்ணக் கூடாதா? யாராச்சும் ஒரு செக் ஷன் ஆபீசர்
ரெக்கமன்டேஷன் இல்லாம கதையாகாது….அதுதான் ப்ரொசீஜர்…..முதல்ல ஜெகந்நாதனச் சரி பண்ணுங்க…..
சொல்லி அனுப்பியதுதான். இன்றோடு ஒரு மாதத்திற்கு
மேல் ஆகி விட்டது. என்ன காரணத்துக்காக அந்த ஆள் வரவில்லை என்று தெரியவில்லை. அந்த ஜே.இ.,
ஜெகந்நாதனும் ஒரு வார்த்தை பேசவில்லை இவரிடம்.
என்னவோ ரகசியங்கள் இருப்பது போல் உள்ளது இந்த
அலுவலகத்தில். எழுத்தர்கள் ரொம்பவும் பவ்யமாய் நடந்து கொள்வதுபோல் தெரிகிறார்கள். இருக்கும்
ஏ.இ., ஜே.இ., க்களும் பணிவாய்த்தான் இருக்கிறார்கள். அலுவலக சூப்பிரன்டென்டென்ட் என்ற
மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அந்த
மரியாதையில் என்னவோ மறைந்திருக்கிறது. ஏதோவொரு கள்ளத்தனம்.
வெளிப்படையாய்ப் பேசாத்தனம். பேச முடியாத் தன்மை.
ஒவ்வொருவர் மனதிலும் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அட, இந்தக் க்ளார்க்குப் பசங்களும்
கூடவா இப்படி இருப்பார்கள்? பதினோரு மணிக்கு டீ சாப்பிடக் கிளம்பும் போது அவர்களோடு
கை கோர்த்துக் கொண்டல்லவா அலைகிறார்கள்? ஒரு நாள் கூட என்னைச் சேர்த்துக் கொண்டதில்லையே?
நானும் வரலாமா? என்றார் ஒரு நாள். போகவும் செய்தார்.
ஆனால் ஒட்டவில்லை. அவர்களின் பேச்சு ஜாடையாய் இருந்தது. கூட நடக்கும் இவரைப் பொருட்படுத்தாமல்
அவர்களாக என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். புரிந்தும் புரியாததுமாய் இவரும் சிரித்துக்
கொண்டார். அந்தச் சிரிப்பு நீடிக்கவில்லை. அன்று எல்லோருக்கும் சேர்த்து இவரைக் காசு
கொடுக்கச் செய்து விட்டார்கள். பத்து டிக்கெட்டுக்குக் குறையாது. ஒரு நாளுக்கு நூறு
வரை செலவு செய்ய யாரிடம் இருக்கு ஐவேஜு…! கொடுக்கல் வாங்கல் இருக்கும் அவர்களுக்குச்
சரி….தான் அப்படி இருக்க முடியுமா? விலகிக் கொண்டார். மறுநாளிலிருந்து போவதை நிறுத்திக்
கொண்டார். பியூனைக் கொண்டு ப்ளாஸ்க்கில் வாங்கி வரச்சொன்னார்.
பெண் பணியாளர்களோடு சேர்த்து நாலஞ்சு டீ தேவைப்பட்டது.
பியூன் ரெங்கசாமி ஒரு டீக் காசை ஆட்டை போடுவான்
என்றார்கள்.
என்னய்யா இது கொஞ்சமா ஊத்திட்டு வர்றே…முக்கா
டம்ளராவது கொடுக்க வாணாம்? என்று சத்தம் போட்டார்.
அதிலிருந்து அவருக்கு மட்டும் அப்படி வந்தது. மற்றவர்கள் கொடுத்ததைக் குடித்தார்கள்.
அவ்வளவுதான் சார்…அவன்ட்டப் போயி என்னத்தச் சண்டை போடச் சொல்றீங்க…? என்றார்கள். வெளியே
பெஞ்சில் அமர்ந்து கொண்டு முக்க முழுங்க முழு டம்ளரில் டீ குடித்தான் அவன்.
ஆபீசே என்ன இத்தனை பீத்தலாய் இருக்கிறது? என்று
தோன்றியது இவருக்கு. படு சல்லிப் பயல்களாய் இருப்பார்கள் போலிருக்கிறதே…
காலைல ஆபீசுக்கு வந்திட்டு சாயங்காலம் வீடு திரும்பைல
பையில அம்பது நூறு இல்லாமப் போக மாட்டான் சார் அந்த ரெங்கசாமி….வாட்ச்மேன் சரவணனின்
கூற்று இது. செகன்ட் ஷிப்ட் காவலன் அவன்.
முன்னே விரிந்திருந்த அந்தக் கோப்பைப்
புரட்டலானார் ராகவாச்சாரி. முழுக்க முழுக்கப் பிணை வைப்புப் பத்திரங்களை விடுவிப்பது
சம்பந்தமான நடவடிக்கைகள் அடங்கிய கோப்பாக இருந்தது
அது. வந்திருக்கும் விண்ணப்பங்களில் எது எது டிஸ்போஸ் செய்யப்பட்டது எது எது இன்னும்
பென்டிங் என்பதே தெரியவில்லை. ஒரே கலவையாய்க் கிடந்தது. இடையிடையில் சம்பந்தமில்லாத
வேறு பொருள் கொண்ட கடிதங்களும் இடைச் செருகல்களாகக் இணைந்திருந்தன. அவையெல்லாம் எதற்கு
இதில் வந்தன? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். இதென்ன மிஸ்ஸலேனியஸ் ஃபைலா? என்று
கோபம் வந்தது. அன்று பூராவும் பார்த்தாலும் அந்த ஒரு கோப்புக்கான அலசல் தீராது என்று
தோன்றியது. அந்தக் கோப்பு அப்படிக் கலவையாய் இருப்பதுதான் பாதுகாப்பு என்ற கவனம் இருக்குமோ?
யாரும் எதுவும் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு கோப்பு கலவையாய் இருப்பதுதான் சேஃப்டி…!
ஆஉறா…என்ன ஒரு கண்டுபிடிப்பு? தப்புச் செய்பவர்களுக்குத்தானே இதெல்லாம் தோன்றும்? தன்
சர்வீசில் எத்தனை பார்த்திருக்கிறார் அவர்!
ஆனால் ஒன்று மட்டும் வித்தியாசமாய் இருந்தது.
அதுதான் அது. ஒரே முகவரியில் வெவ்வேறு பெயர்களிலான விண்ணப்பங்கள். கீழே கையெழுத்து
மட்டும் ஒரே ஆள்.
இதெல்லாம் அவரோட ஆட்கள் சார்….பத்திரம் பூராம்
அவர் வாங்கிக் கொடுக்கிறதுதான்…தன் பேர்லயே எல்லாத்தையும் தர முடியாதுல்ல…அவரோட அசிஸ்டன்ட்கள்
வேலை செய்வாங்க….கொடுத்திரலாம்…ஒண்ணும் பயமில்லே…..
நீங்க எதுக்குத்தான்யா பயந்தீங்க…?
வருஷா வருஷம் இப்டித்தான் சார்….சென்னைக்குப்
போயி அங்கேயே ஆர்டரை வாங்கிட்டு வந்திடுவாங்க…நாம ஒண்ணும் செய்றதுக்கில்லே….சரி சரின்னு
வாங்கி வச்சிக்கிட வேண்டிதான்…கேட்டாத் திருப்பிக் கொடுக்க வேண்டிதான்…
எல்லாம் சரி…என்னவோ இருந்து விட்டுப் போகட்டும்…குறைந்த
பட்சம் அந்தந்த ஆட்கள் வந்தாவது ஒரு கையெழுத்துப் போடலாமில்லையா….
அதெல்லாம் வரமாட்டாங்க சார்…எல்லாம் வெவ்வேறு
ஊர்ல இருப்பாங்க…ரெண்டு பேர் துபாய்ல இருப்பாங்க…இன்னும் ரெண்டு பேர் சிங்கப் பூர்
போயிருப்பாங்க…இல்லன்னா ஏதாச்சும் டூர்ல இருக்காங்கன்னுவாரு…என்ன பண்ணச் சொல்றீங்க…?
அதுக்காக…?
அதுக்காகன்னா அப்டித்தான்….எல்லாக் கையெழுத்தையும்
இவரே போட்ருவாரு…..
பதறிப் போனார் வரதாச்சாரி. பதிவேட்டைப் பக்கம்
பக்கமாய்ப் புரட்டினார். எல்லாம் அந்தந்தப் பெயரை அப்படி அப்படியே எழுதினாற்போல இருந்தது.
வலது கையிலும், இடது கையிலுமாக மாறி மாறிப் போட்டிருப்பானோ அந்த ஆள். அப்படித்தான்
தோன்றியது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாமே…அந்த ஆள்தான் வர வேண்டும் என்று என்ன
இருக்கிறது? என்ன ஒரு கூட்டு சதி….கூட்டு சதியா, கூட்டுக் கொள்ளையா?
இது நாள்வரை வெளியூரில் நிர்வாகப் பிரிவில் இருந்து
கழித்து விட்டு வந்த இவருக்கு இந்தக் கொடுமை பெருங் கொடுமையாய்த் தோன்றியது. ஒரு கணம்
ஏனடா உள்ளுர் வந்தோம் என்று உடம்பு ஆடிப் போனது. ஒன்றும் அதற்கு மேல் ஓடவில்லை. கிடக்கட்டும்
என்று அப்படியே தூக்கித் தள்ளி வைத்தவர்தான்.
சார்…நாளைக்குப் பார்ட்டி வந்துரும்….
வரட்டுமேன்யா…வந்தா என்ன…தலையையா சீவிடுவாங்க…எல்லாம்
எனக்குத் தெரியும்…நீ உன் வேலையைப் பாரு - கத்தினார். சத்தம் பெரிதாய் இருப்பதைக் கண்டு
பதறிப் போய் ஒதுங்கி விட்டான் அந்தோணி.
அதற்குப் பின் அவரும் கேட்கவில்லை. அவனும்
சொல்லவில்லை. என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்றிருந்தார். இதோ, இன்று, இப்பொழுது,
அவர் முன்னால் அந்தக் கோப்பு.?
அட, ராமச்சந்திரா…..இந்த விடுமுறை நாளிலும் இதுதான்
கண்ணில்பட்டு உபத்திரவம் செய்ய வேண்டுமா? எரிச்சல் வந்தது. அன்று போல் இன்றும் எந்தச்
சலனமும் இல்லாமல் அதைத் தள்ளி வைத்தார். வேறு ஒரு கோப்பினை எடுத்தார். உறாய்யாச் சாய்ந்து
கொண்டு மைன்ட் ஃப்ரீயாகப் பார்க்கத் தொடங்கினார். லீவு நாளில் வந்து வேலை பார்த்தால்
டென்ஷன் இல்லாமல் பார்க்க வேண்டாமோ? அன்றைக்குமா பிக்கலும், பிடுங்கலும்….?
வேலையையெல்லாம் முடித்து விட்டுக் கிளம்பிய
பொழுது மணி ஏழு ஆகி விட்டது.
இன்றைக்குமா இந்தப் பாடு? என்று கண்டிப்பாகச்
சலித்துக் கொள்வாள் அபிதா. பல சமயங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பது
ரொம்பவும் வசதியாகப் போய்விடுகிறது. இங்கிருக்கும் நிலைமை அவளுக்குப் புரிவதில்லை.
சொன்னாலும் அலட்சியம். ஊர் உலகத்துல வேறே ஆபீஸே இயங்கலியா? உங்க ஆபீஸ் மட்டும்தான்
இப்டியா? அதிசயமாத்தான் இருக்கு…என்று அர்த்தம் பொருத்தம் இல்லாமல் எதையேனும் பேசுவாள்.
அவள் சலிப்பு, சொல்லித் தீருவது. இல்லையென்றால் அது ஆதங்கமாக மாறிவிடும் அபாயம் உண்டு.
எனவே புலம்புவதைப் புலம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார். கொஞ்ச நேரத்தில்
எல்லாமும் சமனுக்கு வரும். பிறகு வழக்கமான இயக்கம்.
எந்தக் குடும்பத்திலுமே பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே
போவதனால்தானே சண்டை வளர்கிறது. அன்றாட வேலையைப் போலவே இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால் தானே எழும்பி தானே அடங்கிக் காணாமல் போய் விடுமே…! இது குடும்ப சைக்காலஜி.
எத்தனை பேருக்குத் தெரிகிறது இந்தத் தாத்பரியம். எல்லாம் நான் பெரிசா, நீ பெரிசா என்கிற
கதைதான். பாதிக் குடும்பங்கள் நிம்மதியற்று அலைவது இந்தக் காரணத்தினால்தான்.
உலகத்திலே விட்டுக் கொடுத்தலைப் போல நிம்மதியான
பாடு வேறு ஒன்றுமில்லை. சில நஷ்டங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நஷ்டம் என்று மனது
கணக்குப் பண்ணினால்தானே அந்தத் தாக்கம். எல்லாமும் பூஜ்யம் என்கிற உணர்வு வந்து விட்டால்
மனதுக்கு எந்த ஏற்ற இறக்கமும் தோன்றாது.
நமது பாட்டனார், முப்பாட்டனார் எப்படி வாழ்ந்தார்கள்
என்று நமக்குத் தெரியுமா? அவர்கள் தம்பதி சமேதராய் சந்தோஷ போஷகர்களாய்த்தான் வாழ்ந்து
மறைந்தார்கள் என்று அறிய ஆதாரங்கள் உண்டா? நம் தாயாரிடம் கேட்டாலே தன் தந்தையைப் பற்றி,
அதாவது நம் தாத்தாவைப் பற்றிச் சொல்வார்கள். தாத்தாவுக்கு அப்பாவைப் பற்றிக் கேட்டால்
சொல்லத் தெரியுமா? அப்பப்போ ஏதோ பார்த்திருக்கேன் என்பார்கள். நமக்கு முந்திய மூன்று
தலைமுறையைப் பற்றியே நம்மால் சொல்ல முடியவில்லை. எதை நிர்ணயித்து என்ன ஆகப் போகிறது?
மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அதாவது அந்த ஒரு வார்த்தையைத்
தவிர எல்லாமும் இந்த உலகத்தில் மாறுதலுக்குரியது. காலத்தால் அழிந்து போகக் கூடியது.
மறந்து மண்ணடிச்சுப் போவதானது. இதில் வாழும் காலத்தை எத்தனை பேர் நரகமாக்கிக் கொண்டு
திரிகிறார்கள்?
சலனமின்றி ஓடும் நதியை நடுவே இறங்கி வெட்டியாய்
கலக்கிக், கெடுத்துக் கொண்டுதான் நான் குளிப்பேன் என்றால் யார் தடுக்க முடியும்? எல்லாமும்
நம் கையில்தான் இருக்கிறது. இருப்பது போதும், இது இப்படியே நிம்மதியாய் ஓடினால் சரி
என்று விட்டு விட்டால் அவனுக்கு நிம்மதி. அல்லாமல் ஸ்வாரஸ்யமே இல்லையே என்று தேவையில்லாமல்
பொருத்தமில்லாமல் ஒன்றுக்குள் நுழைந்தால் அது விபரீதம்தான்.
மனிதன் தன் இயல்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
தனக்கு எது பொருந்தும் என்று ஒருவன் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும்
ஒருவன் இயல்பு நிலையிலிருந்து மாறக் கூடாது. அதற்குப் பெயர்தான் ஒரிஜினாலிட்டி. அதுதான்
அழகு. எப்படித்தான் ஒருவன் செயற்கையாக நடந்து கொண்டாலும், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
அவனின் ஒரிஜினாலிட்டி அவனைக் காட்டிக் கொடுத்து விடும்.
எனது ஒரிஜினாலிட்டி சதும்ப ஆபீஸ் வேலை பார்ப்பது.
அதை நிம்மதியாக்கிக் கொள்வது. வீட்டில் குறையில்லாமல் பொறுப்பாக இயங்குவது. இயன்றவரை
இவையிரண்டையும் முழுமையாகச் செய்ய முயல்வது. நிம்மதியாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை
அனாவசியமாகக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
அடேயப்பா…! வண்டியில் வரும்போதே என்னவெல்லாம்
சிந்தனை. இது ரொம்ப ஆபத்தாயிற்றே…இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த மாதிரிச்
சிந்தனைகள், அதுவும் சாலையின் நடுவே…என்ன இது கண்றாவி…ஏன் இப்படி ஆகிப் போனேன். எதற்காக
இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும்? இப்போ அப்படி என்ன வந்தது? படு பாவி…ஒரு பர்ஸன்ட்…ஒரு
பர்ஸன்ட் என்று சொல்லி என்னையும் சலனப்படுத்தி விட்டானே…நானுமா இந்தச் சபலத்திற்கு
ஆட்பட்டுப்போனேன். இத்தனை காலம் வெளியூரில் என் மனதில் தோன்றாத சலனமும், சபலமும் இப்போது
ஏன் தோன்றுகிறது? ஏன் என் மனதைப் போட்டு இப்படி அலைக்கழிக்கிறது? வினாச காலே விபரீத
புத்தி என்பார்களே…அதுவோ…!
குழப்பத்தோடேயே வீடு போய்ச் சேர்ந்தார் ராகவாச்சாரி.
வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்து மின் விசிறியைச் சுழல விட்டு அமர்ந்தவர்தான்.
வேகமெடுத்தபோது கீச், கீச், கீச் என்று அது கத்த ஆரம்பித்து விட்டது.
மொத்தமா நின்னவுடனே கழற்றிக்கிடுவோம் சார்…கொஞ்ச
நாளைக்கு இப்டியே ஓடட்டும்…இப்பத் தொட்டா காயலும் மாத்தணும். செலவு ஜாஸ்தியாகும்… என்று
சொல்லிவிட்டுச் சென்ற எலெக்ட்ரீஷியனை நினைத்துக்
கொண்டார். அது போடும் சத்தத்தைப் பார்த்தால் தூங்கிக் கொண்டிருக்கும்போது தலையில் விழுந்து
விடுமோ என்பது போலிருந்தது. வீட்டுச் செலவுகளையெல்லாம் யோசித்து யோசித்துத்தான் செய்வார்
ராகவாச்சாரி. அபிதா சொன்னாளே என்பதற்காக சிரமேற்கொண்டு உடனே எதையும் நிறைவேற்றி விடுவதில்லை.
அது அவர் மனதுக்கு நியாயமானதாகத் தோன்ற வேண்டும். தவிர்க்க முடியாத அவசியம்தான் என்று
உறுதிப்பட வேண்டும். தேவை என்று ஒன்றை நீட்டித்துக் கொண்டே போனோமானால் பிறகு அதற்கு
ஒரு முடிவே இல்லாமற் போய்விடும். அப்படித்தான் கோடுகளை வரையறுத்துக் கொண்டு வாழ்ந்து
கொண்டிருந்தார் அவர்.
என்னவோ அவர் மனதைப் போட்டு அரித்தது. அலுவலரின்
அறைக்குள் சென்று மீண்டிருந்த அந்தக் கோப்பின் ஞாபகம் வந்தது. ஆஉறா…! அது அவர் கேம்ப்
ஆபீசுக்கல்லவா சென்று மீண்டது? அந்த அறைக்கு எப்பொழுது சென்றது? யார் அனுப்பினார்கள்?
நான் பார்க்கவேயில்லையே? ஒப்பமாகி வந்திருக்கிறதா? இப்பொழுதுதான் என் டேபிளுக்கு வந்திருப்பதுபோல்
ஒதுக்கிவிட்டேனே? அப்படியானால் என்ன உத்தரவாகியிருக்கிறது? எடுத்துப் பார்த்திருக்கலாமோ?
தொலைபேசி மணி அடித்தது. இன்று விடுமுறை நாள்.
ஆனாலும் ஏதேனும் சந்தேகம் கேட்பதற்காக அல்லது நாளைய பணியை நினைவுபடுத்தி உறுதி செய்து
கொள்வதற்காக அலுவலர் பேசலாம். இவரிடம் ஒன்றைக் கேட்டுக் கொண்டுதான் பயணத்தைத் தொடருவார்.
இப்பொழுது வேண்டாம், இன்ன தேதியில் அதைச் செய்து கொள்ளலாம் என்பதான இவரது யோசனைகள்
அவருக்கு பக்கபலமாக இருந்தது. அதுதான் ராகசாச்சாரியின் சிறப்பு. ஒரு வேளை அந்தமாதிரியான
முதன்மை ஸ்தானம்தான் தன்னை லேசாக ஆட்டிப் பார்க்கிறதோ, ஒரு அதீதமான தைரியத்தைக் கொடுத்து
தன்னைச் சிக்கலில் மாட்டிவிட யத்தனிக்கிறதோ?ரொம்பவும் கவனமாக யோசிக்கத் தலைப்பட்டார்.
உறலோ, ராகவாச்சாரி உறியர்…..
நான்தான் எஸ்.இ., பேசறேன்….சாரீசார்.. ….நாளைக்கு
நாம என்கொயரிக்காக மணிகண்டம் போறோம்…..தகவல் போயிடுச்சில்லையா?
அனுப்பிச்சு அக்னாலெட்ஜ்மென்ட்டும் வாங்கியாச்சு
சார்…அந்த டிரைவர், பியூன், சம்பந்தப்பட்ட செக் ஷன் ஆபீஸர், அந்தப் பார்ட்டி நாலுபேரையும்
ரெஸ்ட் உறவுசுக்கு வரச் சொல்லியிருக்கு…
கண்டிப்பா நீங்களும் வரணும்…வேறே யாரையும் அனுப்பிடாதீங்க…ஃபைல்
எடுத்திட்டீங்களா…? செபரேட் ரிட்டர்ன் ஸ்டேட்மென்ட்ஸ் ஷூட் பி அப்டெய்ன்ட் ஃப்ரம் த
இன்ட்விஜ்வல்ஸ்…ஓ.கே. கீப் இட் கான்ஃபிடன்ஷியல்….காலைல எட்டு மணிக்கு கரெக்டா பஸ் ஸ்டான்ட்
வந்திடுங்க…..
தொலைபேசி லைன் துண்டிக்கப்பட்டது.
எங்கே தான் வராமல் போய்விடுவோமோ என்று எதையும்
எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று பேசிவிட்டு ஃபோனை வைத்துவிட்டதும், எல்கைதாண்டிப்
போகிற ஊர் என்பதனால் ஜீப்பைத் தொடாமல் பேருந்து நிலையத்திற்கு வரச் சொல்வதும், எல்லாவற்றிற்கும்
மேலாக கண்டிப்பின் அடையாளமாகப் பயன்படுத்தும் சொல்லாக சார் போட்டுப் பேசுவதையும், துல்லியமாய்
உணர்ந்து கொண்டார் ராகவாச்சாரி. அக்கடா என்று இருப்போம் என்று நினைத்து உள்ளுர் வந்தால்,
அங்குதான் எல்லாமும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுகிறது. கஷ்டப்படுபவன் வாழ்க்கை
முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? அவனுக்கு விடிவு என்பதே கிடையாதா?
ஆனாலும் ஒரு விஷயம் தன்னைச் சார்ந்து இருப்பதில்தான் என்னவொரு திருப்தி, நிறைவு?
உடனடியாக எழுந்து முகம் கைகால் கழுவிக் கொண்டு
அபிதா தந்த அற்புதமான காபியைக் குடித்து விட்டு அந்தக் குறிப்பிட்ட கோப்பினை எடுத்து
வைத்துக் கொண்டு அதில் மூழ்கிப் போனார் ராகவாச்சாரி. மனதுக்குள் மொத்தப் படமும் உருவாக
வேண்டும் அவருக்கு. எங்கெங்கு எடிட் செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
வேறு யாரும் அதில் தலையிடுவது அவருக்குப் பிடிக்காது. இவர் எழுதி அனுப்பிய கோப்பிலே
அலுவலரே கை வைப்பது ஆகாது. அத்தனை துல்லியமாக இருக்க வேண்டும் அவருக்கு. என் கடன் பணி
செய்து கிடப்பதே…! மாதச் சம்பளம் என்கிற வட்டத்துக்குள் இந்த மனிதனின் கடமையாற்றல்
சொல்லி மாளாது. ஆத்ம திருப்தி என்று சொல்வார்களே…அது இன்று தேய்ந்து போன சொல் வழக்கு.
ஆனால் அதற்காக மட்டுமே இத்தனை ஆண்டு காலம் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து போனவர்
இந்த ராகவாச்சாரி. ஆனாலும் இந்த அலுவலகத்தில் தனக்குத் தெரியாமல் சில நடக்கிறதே…! அதைத்
தன்னால் தடுக்க முடியவில்லையே…! நான் என்னளவில்தான் சரியாக இருக்க முடியும்…மற்றவரை
எப்படித் திருத்த முடியும்?
டேரெக்டா ஃபைலை எனக்குப் புட் அப் பண்ணுங்க…என்கிற
நடைமுறை தன்னை மறைத்துக், கடந்துதானே செல்கிறது. நரி வலம் போனால் என்ன இடம் போனால்
என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி…இதுதான் ராகவாச்சாரியின் முடிவாக இருந்தது.
பிறகு என்ன செய்வது? நூலைக் கட்டித் தேரை இழுக்க முடியுமா? இந்த அலுவலகத்தில் தான்
ஒரு நூல் மட்டுமே. என்ன ஒரு வசதி? சிடுக்கில்லாத நூல். முறைப்படி பயன்படுத்தினால் பெரிதும்
பயன்பாடாக உதவும் நூல். இன்றைய நிலையில் ஒருவன் அப்படி இருப்பதே பெருமைதானே?
மறுநாள் அந்த ஓய்வு விடுதியில் வைத்து விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம்
அந்தத் தொலைபேசி வந்தது அவருக்கு. சட்டைப் பையிலிருந்து எடுத்து இரண்டு முறை அணைத்தும்,
மறுபடியும் மறுபடியும் ரிங் வருவதைக் கண்டு என்னவோ அவசரம் என்று உணர்ந்தவராக அறைக்குள்
பேசுவது முறையல்ல என்று எழுந்து “சாரி சார்…“ என்று விட்டு சுற்றுப்புறத் தோட்டப் பகுதிக்குள்
நுழைந்தார் ராகவாச்சாரி. அந்த இடிச் செய்தி வந்து இறங்கியது அவர் காதில்.
சார்….நா சரவணன் வாட்ச்மேன் பேசறேன்….நம்ம ஆபீஸ்ல
விஜிலன்ஸ் ரெய்டு வந்திருக்காங்க சார்….
என்னய்யா சொல்ற…? பதறிப்போய்க் கேட்டார் ராகவாச்சாரி.
ஆமா சார்…கரெக்டா காலைல பத்தரைக்கு நுழைஞ்சிட்டாங்க…வாசக்
கதவைச் சாத்திட்டு யாரும் உள்ளே வராதபடிக்கு செய்திட்டாங்க சார்….டிராப்டிங் ஆபீசர்
மேகநாதன் மாட்டிக்கிட்டார் சார்….அந்தோணி சார் செக் ஷன் ஃபைலில் ஏதோவொண்ணை எடுத்து
ஆர்டர் கொடுக்கைல பிரச்னை ஆகியிருக்கு சார்….வழக்கமா வருமே ஒரு பார்ட்டி அந்தாள்தான்
சார். எதுத்தாப்ல உட்கார்ந்திருந்தாரு…வெளில மறைஞ்சு நின்ன ரெண்டு பேரு திடீர்னு நுழைஞ்சு
மேகநாதனை தோள்பட்டையை அமுக்கி அப்டியே உட்கார்த்திட்டாங்க சார்….உள்ளாற டீ கொடுத்திட்டிருந்த
என்னை வெளில நில்லுன்னுட்டாங்க…அந்தோணி சார் இன்னைக்கு வரலை…ஏன்னு தெரிலை…கேம்ப் முடிச்சிட்டு
இன்னைக்கு ஆபீஸ் வராதீங்க…அப்டியே வீட்டுக்குப் போயிடுங்க சார்…யாருக்கும் சொல்லிக்கிட
வேணாம்…இது நா உங்களுக்கு மட்டும் பேசுறது…..வச்சிடறேன்….நா பேசினது தெரிய வேணாம்…
விக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தார் ராகவாச்சாரி.
மனதில் அந்தக் காட்சி படமாக ஓட ஆரம்பித்தது அவருக்கு. ஏற்கனவே வெளியூரில் இன்னொரு நிகழ்வில்
இந்தக் களேபரங்களைக் கண்டவர்தான் அவர். சம்பந்தப்பட்ட பணியாளரைக் காப்பாற்றுவதற்கு
எவ்வளவோ மன்றாடியும் இயலவில்லை. ஆனால் ஒரு வித்தியாசம். இங்கு எந்த நபர் அந்த அலுவலகத்திற்கு
மிகவும் நெருக்கமாக இருந்தாரோ அவராலேயே இது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. திட்டமிட்ட முடிச்சுக்களைப்
பத்திரமாகப் போட்டுத் தன் கைக்குள்ளேயே அடக்கமாக வைத்துக் கொள்பவர்களே எப்பொழுதாவது
தன்னை மீறி அதை அவிழ்த்து விடுகிறார்கள். அந்தத் தூண்டுதல் எப்படி நிகழ்கிறது? ஏன்
நிகழ்கிறது? அப்பொழுது மட்டும் அவைகள் தவறாக, தேவையில்லாமல் போடப்படும் முடிச்சுக்களாக
ஏன் மாறுகின்றன? அவை அப்படி அவிழவே வாய்ப்புக்கள்
அதிகம். யார் உணருவார்கள்? சொல்பவன் கிறுக்கன். பிழைக்கத் தெரியாதவன். தொட்டபின் பாம்பு
என்றும், சுட்ட பின் நெருப்பு என்றும், பட்டபின் அறிவதே என் பழக்கமென்றான பின்பு என்ற
கண்ணதாசனின் பாடல் வரிகள் திடீரென்று ஞாபகத்திற்கு வந்தன இவருக்கு.
. எந்தக் கோப்பு அலுவலரின் அறைக்குள் சென்று மீண்டிருக்கிறதோ
அதில்தான் பிரச்னையாகியிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது. அது, தான் பார்த்து
ஒப்பமிடாமல் போய் மீண்டது. கை வைத்தால் பிரச்னை வரும் என்று தெரிந்து ஒத்திப்போட்டது.
ஆனால் தன் பார்வைக்கு வராமல் நேரடியாக எல்லாமும் நடந்திருக்கிறது. போகட்டும்…யாருக்கென்ன?
வினை விதைத்தால் அதைத்தானே அறுத்தாக வேண்டும். ஆனால் ஒன்று! உள்ளே விசாரணை நடத்திக்
கொண்டிருக்கும் அவரும் ஒரு வார்த்தை தன்னிடம் கூறவில்லையே! என்ன ஒரு அழுத்தம்? அப்படியானால்
என்ன பொருள்? திறமையானவன் தனக்கு வேண்டும். அவனின் உழைப்பும் வேண்டும். தனக்குப் பக்கபலமான
அவனை விடத் தயாரில்லை. அதே சமயம் இன்னொரு பக்கமான
அந்தப் பேராசையும் வேண்டும். தான் இதில் தலையைக் கொடுக்க விரும்பவில்லை என்று உணர்ந்துதான்
இதைப்பற்றித் தன்னிடம் பேசவேயில்லையோ? ஒரு மாதமாக அடிக்கடி வந்து போகும் அந்த ஆள் இப்படித்தான்
காரியத்தை முடித்துக் கொண்டிருக்கிறானா? இத்தனை விபரீத முடிவுக்கு ஏன் போனான்? இந்த
மேகநாதன் ஏன் அதில் தலையிட்டார்? அவருக்கும் பாஸுக்கும் இடையில் என்ன நடந்தது? பிரிவு
எழுத்தர் அந்தோணி ஏன் கழற்றி விடப்பட்டான்? கழற்றி விடப்பட்டானா அல்லது எதுக்கு வம்பு
என்று நேக்காக ஒதுங்கி விட்டானா? அவன் எம்டன் இம்மாதிரி விஷயங்களில். இந்த உலகில் எப்படி
வாழ்வது என்பதை விட எப்படித் தப்பிப்பது என்கிற சாமர்த்தியங்களைத்தான் முதலில் கற்றுத்
தேர்ந்து கொள்ள வேண்டுமோ? யோசனைகள் நீண்டு கொண்டே போனது ராகவாச்சாரிக்கு.
ஆயிரத்தைந்நூறு ரூபாய் என்று அன்றொரு நாள் அந்தப்
பார்ட்டி ஒரு பர்ஸன்ட் ஆசை காட்டியதையும், அந்தக் கணத்தில் தன் மனது லேசாகச் ஆடிப்
போனதையும், இப்போது நினைத்த போது, மெல்லிய
நடுக்கம் பரவியது அவர் உடம்பில். தானும் சராசரி மனிதன்தானே என்பதற்கடையாளமாய் சபலத்திற்கு
ஆட்பட்டுப் போனது இப்போது அவரை நாண வைத்தது.
கூடவே தனது பணி ஓய்வு வெகு பக்கத்தில் என்ற எண்ணம்
வந்தபோது ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காத கதையாய் இதுகாலம் வரையிலான நேர்மையும், கண்ணியமும்,
கடமை தவறா நற்பெயரும், நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்த நிச்சலனமான இந்த வாழ்க்கையை
அனாவசியமாய் அல்ப சந்தோஷத்திற்கு ஆட்பட்டு மொத்தமாய்க் கெடுத்துக் கொண்டு நிற்க இருந்தோமே
என்ற எண்ணம் வந்தபோது அவர் மனதில் இதுநாள்
வரை இல்லாத ஒரு தீர்க்கமான சுதாரிப்பு நிலை திடமாய்ப் பரவியது. அது அந்தக் கணத்தில்
அவர் மனதில் பிரதிக்ஞையாய் மாறி அவரை மிகத் தெளிந்த மனநிலைக்குத் தள்ளியது. --------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக