11 அக்டோபர் 2018

“சந்தோஷம்“ - கணையாழி - மாத இதழ் - 2017


               
“சந்தோஷம்”                                                             ------------------------------------------------------------                 
டுக்கப் போகும் நேரம் வாசலில் அந்தச் சத்தம். வழக்கமாய்ப் பத்துக்கெல்லாம் விழுந்து விடுவது வழக்கம். அன்று மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்துக்குப் படுத்தால்தான் காலையில் ஐந்திற்கு எழ முடியும். என்னோடு சேர்ந்து புவனாவும் விழித்துக் கொள்வாள். ஆறரைக்கு வீட்டை விட்டுக் கிளம்பி பஸ் பிடித்து, ஏழே காலுக்கு அல்லது சற்றுப் பின்னாக ரயிலடி சென்றடைய முடியும். ஏழு நாற்பதுக்கு வண்டி.. ரொம்பவும் டைட்டான நேரம் அது. ஒன்று சொன்னாற்போல் வாரத்தின் ஐந்து நாட்களும், சமயங்களில் ஆறாவது நாளான சனியன்றும் கூட இந்தக் கூத்து நீடிக்கும். மேடையில் ஆடும் கூத்து நடனம்போல். ஓயாத ஒழியாத ஓட்டம். அப்பாடா….என்று ஞாயிறன்று ஆறரை வரை தூங்கி எழுவதே சொர்க்கம்.  அந்த நாளும் வந்திடாதோ…மனசு கிடந்து ஏங்கும்.
      ஒரு நாள் கூட முகம் சுழித்ததில்லை புவனா. அதுதான் ஆச்சர்யம். எனக்குத் தயார் பண்ணி அனுப்பிவிட்டு, பிறகு அவளுக்கு ரெடி பண்ணிக் கொண்டு ஒன்பதே கால் போல அவள் கிளம்பியாக வேண்டும். நடந்து சென்று பேருந்து நிலையம் அடைந்து, பஸ் பிடித்து ஆபீஸ் வாசலில் இறங்கி அலுவலகத்திற்குள் நுழையும் போது எப்படியும் மணி பத்தரையைத் தொட்டு விடும். ஒரு நாளும் நேரத்துக்கு அவள் ஆபீஸ் போய் நான் பார்த்ததில்லை. பத்தரைதான் ஆபீஸ் நேரம் போல் நிறையப் பேர் அரக்கப் பரக்க நுழைந்து கொண்டிருப்பார்கள். சின்சியராய் டயத்துக்குச் செல்ல வேண்டும் என்பது போலிருக்கும் அந்தப் பரபரப்பு.
      நான் உள்ளூரில் இருந்தவரை நேரம் சாத்தியமாயிருந்தது. வாகன யோகம்.. அப்போது அவள் குறித்த நேரத்துக்குப் போய்க் கொண்டிருந்தாள். நான் தாமதமாய்ச் சென்று கொண்டிருந்தேன். இப்போது அவள் முறை….
      ப்ரமோஷன் வேண்டாம்னா…சரியாப் போகும்….இப்டியே உள்ளூர்ல  நிம்மதியா வண்டி ஓடிட்டிருக்கும்…என்ன….சொல்றே? சாயங்காலம் ரெண்டு பேரும் வீடு வந்திட்டம்னா, ஏதாச்சும் சமாஜம் ப்ரோக்ராம் இருந்தாலும் மிஸ் பண்ணாமப் போகலாம்…ராகப்பிரியா கச்சேரி அட்டென்ட் பண்ணலாம்…அப்டியே ரமணாவுல நாலு இட்லி முழுங்கிட்டு வரலாம்… நாட் வில்லிங்…கொடுத்திடவா…? – அவளுக்காக மனதாரத்தான் கேட்டேன்.
      யாராவது பதவி உயர்வை வேண்டாம்னு சொல்வாங்களா அசடு மாதிரி….இருக்கிற போஸ்ட்லயே இருந்திட்டு…உள்ளூர்லயே குப்பை கொட்டிட்டு….அது நல்லாவா இருக்கும்…உங்க ஜூனியர்ஸ் எல்லாம் உங்களுக்கு மேலே போயிடுவா…அவங்களுக்குக் கீழே வேலை பார்ப்பீங்களா? .மொத்த சர்வீஸ்ல கிடைக்கிற ப்ரமோஷன்லாம் அனுபவிக்கத்தான் வேணும்…அதுதான் சமத்துக்கு அடையாளம்….புத்திசாலித்தனம்…என் கண்ணோல்லியோ…ஏத்துக்குங்கோ…
      அவள் பேச்சே தனி…. கணவன் உயர் பதவிக்குப் போவதை பெண் மனது விரும்பத்தான் செய்யும் போலும்….அப்படியே போனாலும் நான் அவளை விடப் பத்தாயிரம் கம்மிதான்….அது வேறு கதை…..ஆனாலும்…ஆபீஸ் சூப்பரின்டென்டென்ட்….என்று  பிறரிடத்தில் சொல்வதில்…சொல்லிக்கொள்வதில் ஒரு சின்னப் பெருமை….அல்லது பெரிய பெருமை….!
      சூப்பிரன்டா இருக்கார்…ஆபீஸ் சூப்பிரன்டாக்கும்… - என்ன சூப்பிரன்டோ…பேரு பெத்தப் பேரு…!!!
      பதவி உயர்ந்து, ஊரும் உயர்ந்து போயிற்று. கைக்கு எட்டாமல் போனால் உயர்ந்து போனதாகத்தானே அர்த்தம். அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறேன் கடந்த ஐந்து வருடமாய்… அந்த ரயில் மட்டும் இல்லையென்றால்…பஸ்காரனுக்குக் கொடுத்து மாளாது…உடம்பு கழன்று போகும்….அதில் நாலில் ஒரு பங்கு கூட இல்லை….ஏழில் ஒரு பங்கு, பத்தில் ஒரு பங்கு என்றே சொல்லலாம்.  ஏதோ….இலவசம் என்று சொல்லக் கூடாதே என்று டிக்கெட் வைத்தது போல் இருந்தது நாங்கள் வாங்கிய மூன்று மாதப் பாஸ். ரயில்வே துறை இதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லையா…அல்லது இந்த ரூட்டையே மறந்து விட்டார்களா…தெரியாது…ஓடுற மட்டும் ஓடட்டும்…என்று அந்த மீட்டர் கேஜை மட்டும் விட்டு விட்டார்கள். .அரசு ஊழியர்கள், வங்கிப் பணியாளர், தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள்…பொது ஜனம், ஏலக்காய், கிராம்பு, லவங்கம்  என்று அந்த ரயிலை அனுபவிக்காதவர்கள் பாக்கி….! வியாபாரிகளுக்கு அந்த ரயில்தான் பெரிய சொத்து….மூட்டைகளைக் கொண்டு டவுனில் சேர்க்க…!! எதிர் காற்றில் ரயில் பூராவும் மணக்கும்…!
      அலுவலக நேரம் முடிந்து மாலை அஞ்சே முக்காலுக்கு ரயில் எங்கள் ஸ்டாப்பிற்கு வரும்…எங்காவது ரயிலுக்கு ஸ்டாப் இருந்து பார்த்திருக்கிறீர்களா…? ஸ்டேஷன் உண்டு, ஜங்ஷன் உண்டு… ஆனால் நாங்கள் போய் வந்த அந்த ரயிலுக்கு ஸ்டாப்பிங் உண்டு. அது கலெக்டரின் ஸ்பெஷல் பர்மிஷனில் ஊழியர்களுக்கெனப் பெறப்பட்ட சலுகை…கை நீட்டியெல்லாம்       நிறுத்தி ஏறியிருக்கிறோம் என்றால் பாருங்களேன்….பொய்யில்லை…சத்தியம்…! குறிப்பிட்ட அந்த ஸ்டாப்பில் மாலை ஆறு…ஆறரை போல் ஏறினோமென்றால் எட்டே முக்கால் ஒன்பதுக்கு ஊர் வந்து சேருவோம்…சாவகாசமாய் மேல்பால வழி ஏறிக் கடந்து நூற்றி எட்டுப் படிகளில் இறங்கி…ஸ்டான்டில் நிறுத்தியிருக்கும் டூ வீலரை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேரும்போது ஒன்பதரை  தாண்டியிருக்கும்.   பிறகு சாப்பிட்டு விட்டு நீட்டி நிமிர்ந்தால் கண்ணை இறுக்கிக் கொண்டு வரும். அப்படிப் புரண்டு படுக்கும்போது  பொழுது விடிந்திருக்கும்…. உடம்பை அசைத்துக் கொடுத்தோமா…என்ற சந்தேகத்துடனேயே எழ வேண்டியிருக்கும்….முதுகு விண்டெடுக்கும் வலி….திரும்பவும் வேகு வேகுவென்று அன்றைய பாடு ஆரம்பித்து விடும்….உடம்பையும் தூக்கிக்கொண்டு அலைந்த காலம் அது. வயசு காலத்திலேயே உடம்பு சுமையாகிப் போன அவலம்.
      அப்படியான ஒரு தாமதமான இரவில்தான், களைத்துச் சோர்ந்திருந்த நேரம்,  வாசலில் அந்தச் சத்தம் கேட்டது. வெறுமே கொண்டி தூக்கி, கேட் திறக்கும் சத்தம் என்றாலும் பரவாயில்லை. யாரோ தடால்…புடால்…என்று திறந்து பொத்தென்று தரையில் விழுந்தது போலிருந்தது.
      அதனைத் தொடர்ந்து…அத்தா….பார்த்து அத்தா….எதுக்கு இம்புட்டு அவசரம்…என்று ஒரு பெண் குரல்…..அய்யோ…சாமி….நா என்ன பண்ணட்டும்…..”
      இந்த நேரத்தில் யார்……? பதட்டத்தோடும்  திகிலோடும் கதவைத் திறக்கப் போனேன்…..
      இருங்க…என்ன நீங்கபாட்டுக்குத் திறந்தா எப்படி….? முதல்ல லைட்டைப் போடுங்க….என்ற புவனா…உள்ளிருந்த மேனிக்கே வாசல் விளக்கெரியும் சுவிட்சைத் தட்டினாள்.
      ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்…..பகீரென்றது…..
      அட…நம்ப சந்தோஷம்…!. இங்க எங்க வந்தார்…..? – படபடப்போடு கதவைத் திறந்தேன்.
      …வணக்கம் சார்….என்றவாறே அழுத கண்ணீரோடு அவரைப் பார்த்தது அந்தப் பெண். ஐம்பதைத் தாண்டிய வயது.  தளர்ந்த உடம்பு. வியர்த்து விறுவிறுத்துக் கசகசவென்று நின்றிருந்தது. சட்டென்று புடவைத் தலைப்பை எடுத்து சந்தோஷத்தின்  வாயிலிருந்து வழிந்து கொண்டிருந்த எச்சிலைத் துடைத்தது. அவருக்குப் பிரக்ஞை இல்லை.
      …என்னங்க இப்டி….…இந்நேரத்துல… யாரு…நீங்க..? என்றேன்.
      பின்னால் வந்து நின்ற புவனா…எட்டிப் பார்த்துவிட்டு சட்டென்று உள்ளே போய் விட்டாள். காட்சியைக் காணச் சகிக்கவில்லையோ அல்லது பயமோ?
      எங்க வீட்டுக்காரர்தான் சார்….இங்கதான் மெதினா நகர்ல  வீடு…உங்களப் பார்க்கணும்னு பிடிவாதம் பிடிச்சாரு…அதான்….கூட்டியாந்தேன்…
      என்னையா….எதுக்கு…? அதான் ஆபீஸ் வருவாரில்ல….? – அந்த அம்மாள் பேச்சில் மனசு அதிர்ந்தது எனக்கு. இனிமேல் வரமாட்டாரோ….? என்னவோ தோன்றியது.
      …பத்து நாளா ஒடம்புச் சொகமில்லங்கய்யா….ஆசுபத்திரிக்குக் கொடுத்தே…வச்சிருந்த காசு அத்தனையும் போச்சு….முடியாம இருக்கைலயும் குடிச்சுச் குடிச்சுக் கெடுத்துக்கிட்டா…..? அதுலதான்யா அவருக்கு சாவு….
      ம்? என்னம்மா நீ…நேரங்கெட்ட நேரத்துல வந்திட்டு…அபசகுனமாப் பேசிட்டு? எதுக்கும்மா இந்நேரத்துல இப்டி வந்து நிக்கிறீங்க?  இங்க ஏம்மா கூட்டிட்டு வந்தீங்க…?
உங்களப் பார்த்து என்னவோ சொல்லணும்னாருங்கய்யா…அவருதான் வீட்டச் சொன்னாரு….எம்புட்டுச் சொல்லியும் கேட்கலிங்கய்யா…ஆட்டோவுல போவம்னு ஏறி உட்கார்ந்திட்டாருய்யா…தடுக்க முடியல…
      யானை படுத்தாலும் குதிரை மட்டம்….சந்தோஷம் விழுந்து கிடந்தாலும் அத்தனை கம்பீரம் இருந்ததை உணர்ந்தேன். அவரைப் போல் ஒரு பியூன் எந்த ஆபீசுக்கும் கிடைக்காது. அது என் அதிர்ஷ்டம்…
      அவரது பரந்த பெரிய மீசை தளர்ந்து தரையில் விழுந்து கிடந்தது.
எனக்கு சந்தோஷத்தைக் கொடுங்க… - என்று நான்தான் கேட்டு வாங்கினேன். சாதாரணமாய் அலுவலர்கள் அவரது தடாலடியை விரும்புவதில்லைதான். மனுஷன் அத்தனை சுத்தம். ஆபீஸ் நேரத்தில் அநாவசியமாய் சம்பந்தமில்லாத ஒருத்தர் லேசாய்த் தலையைக் கூட எட்டிப் பார்க்க முடியாது.
நீங்க யாரு, என்ன, ஏது என்று கேள்விகளாய்க் கேட்டுத் துளைத்து எடுத்து விட்டுத்தான் உள்ளே அனுப்புவார். அத்தனையையும் கறந்து விட்டு, …கொஞ்சம் பொறுங்க என்று வாசலிலேயே நிறுத்தி உள்ளே வந்து விபரம் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டுதான் அனுப்புவார். இதிலேயே வந்தவர்கள் முக்கால்வாசி ஓய்ந்து போவார்கள்.
என்னய்யா இத்தன கெடுபிடியா இருக்கு இங்க….? என்று கொதித்து எதிர்ப்பட்டவர்கள் அநேகம். இதெல்லாம் நல்லால்ல சார்….என்பார்கள் எல்லாம் தெரிந்தது போல….சந்தோஷத்தை யாரும் இதுவரை மடக்கியதில்லை. அவர் மடங்கியதுமில்லை.
என்னை மாதிரி ஆட்களுக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும். ஆபீஸ் நேரத்தில் வீணாக்காமல் வேலை நடைபெற வேண்டுமென்றால் சந்தோஷத்தைப் போன்ற ஆட்கள்தான் தேவை என்பேன்.
காசு கொடுக்க முயன்ற ஒருத்தரை அப்படியே வெளி கேட் வரை புடணியைப் பிடித்துத்  தள்ளிக் கொண்டுபோய் பஸ்ஸில் ஏற்றி விட்டுத்தான் திரும்பினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…சுத்தம்…சுத்தம்…படு சுத்தம்….!!!
இல்லன்னா…இம்புட்டு அதிகாரமாப் பேச முடியுமாங்கய்யா…நாம இருக்கிறது பெரிய ஆபீசுங்கல்லய்யா? …நமக்குக் கீழ எத்தினி ஆபீசுங்க வேலை செய்யுது…அத்தினி பேரும் அடிக்கடி வந்திட்டுப் போற எடம்ல…அப்போ எம்புட்டு உசத்தியான nஉறட் ஆபீஸ் இது? …அதுக்குள்ள கௌரதைய நாமதான காப்பாத்தணும்….உள்ளே இன்ஜினியர் அய்யா இருக்காகன்னா…அந்த மரியாத நமக்குந்தான….நாம எல்லாரும் சேர்ந்துதான் அவர் மதிப்ப உயர்த்தணும்…சும்மா…குத்துக்கல்லு மாதிரி நிக்குறதுக்கா என்னை இங்க உக்காத்தியிருக்காங்க…?
சந்தோஷத்தின் பேச்சுக்கு மறு பேச்சில்லை அங்கு. எந்த அதிகாரியும் தன் கீழ் பணியாற்றுவோர் நல்ல வேலையாட்களாயும், திறமைசாலிகளாயும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதானே…அது அவர்களின் விருப்பத்துக்கும் மேலாய் அதிக சதவிகிதத்தில் அமைந்து விடும்போது…ஏன் வாயைத் திறக்கிறார்கள்? ம்…நடத்து உன் ராஜ்யத்தை…!!
அதற்கு அடையாளம் நிறைய உண்டு. சந்தோஷத்தைக் கூப்பிட்டு காபி வாங்கி வா…டீ வாங்கி வா…சிகரெட் வாங்கிட்டு வா…என்று ஒருவர் சொல்லி நான் பார்த்ததில்லை. அலுவலகப் பணியாளர்களான நாங்களும் வாயைத் திறந்ததில்லை. ஆபீசருக்கு டீ குடிக்க வேண்டுமென்றால்…கூத்தலிங்கம்தான் அழைக்கப்படுவான். வரும்போதே இதற்குத்தான் என்ற முடிவில் கையில் ஃப்ளாஸ்க்கோடு வந்து நிற்பான். எங்கள் ஆபீஸ் ஃபிளாஸ்கை உடைத்தவனும் அவன்தான். ராத்திரி படுக்கை அங்கேதான் அவனுக்கு. ஃப்ளாஸ்கை அலம்பி, கவுத்தி வாயடைத்து வைத்திருக்கிறான். அது நடு ராத்திரியில் டமால் என்று வெடிக்க…அய்யோ…பேயி…பேயி…பேய்…என்று அலறியடித்து ரோடுக்கு ஓடிவந்து.வெட்டவெளி பிள்ளையார் கோயிலில் சரணடைந்தது தனிக்கதை. .அவனிடம் என்ன ரெக்கவரியா பண்ண முடியும்? பக்கத்து சப்-டிவிஷன் ஆபீஸ் பியூன் அவன். அங்கிருந்து கையோடு கொண்டு வந்து தயாராய் நிற்பான். அவனுக்கு நேரத்துக்கு டீ குடித்தாக வேண்டும் என்பது போலிருக்கும் வந்து நிற்பது.
அய்யா…பாஸ்ஸூக்கு (அப்படித்தான் அழுத்திச் சொல்வான்) டீ வாங்கியாரப் போறேன்….இங்க யாருக்கும் வேணுமா….? என்று கேட்டுக் கொண்டு அலுவலக அறைக்குள் தலையை நீட்டுவான். பல சமயங்களில் நாங்கள் குழுவாக எழுந்து சென்று போய்க் குடித்து விட்டு வருவதுதான். பெண் பணியாளர்களுக்காக வாங்கி வந்து கொடுப்பான். நாங்களும் சரி, கேட்கிறானே என்று சில்லரையைக் கொடுத்து விடுவதும் உண்டு. நிறையப் பேர் கொடுத்தால் குஷிதான் அவனுக்கு.
சார்…ஏழு டீ பிடிக்கும் சார் இந்த ஃப்ளாஸ்க்கு…இந்தப் பய நாலுதான் சார் வாங்குவான்…உள்ளே மட்டும் ஃபுல்லா ஊத்திக் கொடுத்திட்டு மிச்சத்த இங்க நிரவுவான் சார்….அவனுக்கும் மிச்சம் பிடிச்சி…ஊத்திக்குவான் சார்… - என்று சந்தோஷம் புகார் சொல்வார். ஆனால் ஒரு நாளும் அவர் ஓசி டீ வாங்கிக் குடித்து நான் பார்த்ததில்லை. தொண்டை வரள வரளக் கெதியாய்க் கிடப்பார்.
இங்க பாருங்க சந்தோஷம்…உங்ககிட்ட சொல்றாங்களா…இல்லேல்ல…அத்தோட விடுங்க….எதுக்கு அநாவசியமா வம்பு பேசுறீங்க….? – என்றேன் ஒரு நாள்.
டேய்…இந்தக் காசெல்லாம் நிக்காதுடா….பிசிநாறிப் பயலே…. –என்று கூத்தலிங்கத்தைத் திட்டினார். அவரோடு யாரும் மல்லுக்கு நிற்பதில்லை. பதிலுக்கு பதில் சொன்னால்தானே சண்டை…? தவிர்த்து விலகி விடுவார்கள்.
ஒரு சமயம் கையில் கொடி பிடித்துக் கொண்டு ஏழெட்டுப் பேர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டார்கள். அப்படியான பந்தாவோடு பல வசூல் மன்னர்கள் உண்டு அந்தப் பகுதிகளில். கோயில்திருவிழா..…கூழ் ஊற்ற,கஞ்சி காய்ச்ச, கூட்டம் கூட்டி கூத்தடிக்க… என்று…ஒரு வாரம் லவுட் ஸ்பீக்கர் அலறும். அந்தப் பிராந்தியமே கதி கலங்கும். அவிழ்த்து விட்ட சுதந்திரம்…கட்டறுத்த சுதந்திரம்…!
நீங்க யாரு…? எதுக்காக வந்திருக்கீங்க…..?
ஐயாவப் பார்க்கணும்…..
யாரு நீங்கள்லாம்…முதல்ல அதச் சொல்லுங்க…?.
அவர்கள் சொன்னார்கள்… பார்த்தா தெரிலயா…? என்று கொடியை முன்னால் நீட்டினான் வந்ததில் ஒருவன்.
இங்க பாருங்க…இது பொது மக்களுக்கான ஆபீசு…..இங்க கட்சிகளுக்கெல்லாம் எடமில்ல….நீங்க உள்ளாற போக முடியாது…..காம்பவுன்டுக்குள்ள வந்ததே தப்பு…
நாங்களும் பொது ஜனம்தாங்க…. – கூட்டத்தில் ஒருவன் குரல் உயர்த்தினான்.
அப்போ எதுக்கு இந்தக் கொடி….? சாதாரணமா கூட்டமில்லாம  வாங்க….என்னன்னு விபரம் சொல்லுங்க…கேட்டுட்டு வந்து யாராச்சும் ஒருத்தர உள்ளே அனுப்பறேன்….
மாநாடு நடத்தறோம்ங்க….தெரியாதா உங்களுக்கு….போஸ்டர் ஒட்டியிருக்கமே…பார்க்கலியா….இந்தா…நேரா வெளிச் செவுத்துல பாருங்க….எல்லாருக்கும் தெரியுற மாதிரித்தான பெரிசா ஒட்டியிருக்கோம்….அப்புறமும் கேட்குறீங்க….
நீங்க மாநாடு நடத்துங்க…என்னவோ பண்ணுங்க…அதுக்காக ஆபீசுக்குள்ளல்லாம் விட முடியாது…..
ஒவ்வொரு எடமாப் போயிட்டுத்தாங்க வர்றோம்…. … அடுத்த காம்பவுண்டுல ஆபீசு தெரியுதுல்ல…அங்கயும் நுழைஞ்சிட்டுதான் இங்க வர்றோம்….நீங்க மட்டும் என்ன இப்டிச் சொல்றீங்க….?
அதெல்லாம் எனக்குத் தெரியாது…..உங்கள உள்ளே அனுப்ப முடியாது….எனக்கு அதிகாரமில்ல….
உங்களுக்கு ஏது அதிகாரம்? அது எங்களுக்கும் தெரியுமில்ல செக்யூரிட்டிதான…கேட்டுட்டு வந்து உள்ளே விடலாமுல்ல….?
நான் யாரு…என்ன வேல, அதெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டிதில்ல….அதப்பத்தி நீங்களும் பேசப்படாது…புரிஞ்சிதா…வசூலுக்கெல்லாம் ஆபீசுக்குள்ளாற போக முடியாது…இது துட்டு வசூல் செய்ற இடமுமில்ல….
இவரென்னங்க… சோப்புலர்ந்து கொடுக்கிற மாதிரி முடியாதுங்கிறாரு…இப்டிக் கொஞ்ச ஆபீசுல போய் நின்னாத்தான நமக்கு முடியும்…அப்பப்போ வந்து போயிட்டுத்தான இருக்கோம்…இப்ப வந்து தடுக்கிறாரு….
உங்கள நான் பார்த்ததேயில்லயே…அப்பப்போ வர்றம்ங்கிறீங்க…? நான்தான இங்க இருக்கேன்…என்னை மீறி எப்டிப் போயிருப்பீங்க…? கடைகள்ல போயிக் கேளுங்கய்யா…ஆபீசுக்கெல்லாமா பண வசூலுக்கு வர்றது…எங்க வந்து எதைக் கேட்குறதுன்னு ஒரு முறையில்லயா? … நீங்கபாட்டுக்கு வந்து நிக்குறீங்க….?
ஏங்க…எங்களுக்கென்ன எதுவும் தெரியாதுன்னு பேசுறீங்களா? .எத்தன திட்டப்பணி நடக்குதுன்னு தெரியும்ங்க எங்களுக்கும்… எம்புட்டு காசு புரளுதுன்னு புரியும்.. எல்லாம் அறிஞ்சுதான் வந்திருக்கோம்…..விடுங்க உள்ளே….வர்றபோது கவனிக்கிறோம்….
சொல்லிக் கொண்டே ஒருவன் உள்ளே போக யத்தனிக்க…உசுப்பி விட்டது கடைசி வார்த்தை. .அப்படியே மலையாய் குறுக்கே பாய்ந்து இருபக்கமும் கையை நீட்டித் தடுத்தார் சந்தோஷம். விஸ்வரூபமெடுத்த அய்யனார் போலிருந்தது தோற்றம். அவர் மீசைக்கும் அதுக்கும் அப்படியொரு பொருத்தம். அந்தக் கண்ணைப் பார்த்து பயம் கொள்ளவில்லையென்றால்தான் போச்சு…!.
ஜன்னல் வழியாக எங்கள் சிலரது பார்வை அங்கே பதிந்திருந்தது. வேலையில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தவர்களின் கவனம் முழுக்க வெளியே நின்றது.
இந்த மாதிரி வசூல், நன்கொடை…உண்டியல்னு வந்து நிக்கிறவங்களெல்லாம் உள்ளே விடுறதுக்கு எனக்கு அதிகாரமில்லை….நீங்க எல்லாரும் அப்படியே திரும்பிப் போறதுதான் நல்லது…..இல்லன்னா நானே கம்ப்ளெய்ன்ட் எழுதிக் கொடுக்க வேண்டியிருக்கும்….பின்னாடிதான் எஸ்.பி. ஆபீஸ் இருக்கு….
கறாராக நின்ற விதம் அவர்களை மடியச் செய்திருக்க வேண்டும். சத்தம் சட்டென்று நின்று போனது. போட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்து சுவற்றுக்கும் தனக்குமாகக் குறுக்கே கம்பைப் பிடித்து, கச்சிதமாய் அடித்து வைத்த சிலைபோல் இருந்தார் சந்தோஷம். அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
வாங்கய்யா…அப்புறமாட்டு வரலாம்…தனியா வச்சிக்கிருவோம் இந்தாளுக்கு…!
எத்தனையோ சம்பவங்கள். அரண் போல் இருந்தவருக்கு சோதனையும் வரத்தான் செய்தது. எப்படியாவது, என்னத்தையாவது சொல்லி அவரை அந்த மாவட்டத்தை விட்டே வெளியேற்றி விடப் பலரும் முயன்றனர். நல்லவனுக்குத்தான் வினை அதிகம்.  மூன்றாண்டு முடித்தவர்கள், ஐந்தாண்டு முடித்தவர்கள், அதற்கும் மேல் ஒரே இடத்தில் இருப்பவர்கள் என்று ஒரு நாள் காலை தலைமையிட உத்தரவை தலையில் சுமந்தவர்கள் மத்தியில், முதலில் கண்ணிலும் கருத்திலும் வந்து நின்றவர் சந்தோஷம்தான்.
பியூனுக்கு என்னங்க வந்திச்சு …?
பிடிக்கலேன்னா அப்டித்தான்…!!
கச்சேரி நடத்துபவர்கள் வெளியில் மட்டுமில்லை.
அந்த வேளையில்தான் எனக்கும் பதவி உயர்வு வந்திருந்தது. தினமும் ரயில் பயணம் செய்து போய் வந்து விடலாம் என்கிற முடிவில் நான் தயாராகி விட்டேன். போய்ச் சேரும் அலுவலகத்தில் சில பணியிடங்கள் வெகு காலமாய்க் காலியாய்க் கிடந்தன. அதில் ஒன்று பியூன் போஸ்ட்….ஒரு அலுவலகத்தின் அதி முக்கியமான இடம் அதுதான்.
அந்த அலுவலகத்தின் தணிக்கை சமீபத்தில்தான் நடந்து முடிந்திருந்தது. ஆபீஸ் படு குப்பையாய் இருக்கிறது என்று எதிரறிக்கை எழுதி வைத்து விட்டுப் போயிருந்தார்கள். அந்தக் குப்பையைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்கு பொருத்தமான ஆள் என்று என்னைத் தூக்கி அங்கே போட்டிருந்தார்கள். சர்வீசுக்கு வந்த காலத்திலிருந்தே இந்த மாதிரிக் குப்பைகளைக் கூட்டிச் சுத்தம் செய்தே பழகிப் போயிருந்த நான், கஷ்டமே பழகி விட்ட சூழ்நிலையில் ஒன்றும் மலைக்காமல் இந்த மட்டும் காலையில் போய் மாலையில் திரும்பலாமே என்கிற சமாதானத்தில் புறப்படத் தயாராயிருந்தேன். ஒரு மாற்றத்தை மனது விரும்பிய காலகட்டம் அது.
அன்று நான் எனது அலுவலகத்தின் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதே நாளில்தான் பலருக்கும் மாறுதலும், பணி நியமனமும் என்கிற முக்கியமான பணி. அத்தனையையும் சுமுகமாய் முடித்து விட்டுக் கிளம்பலாமே என்ற அலுவலரின் யோசனைக்கிணங்க….விழுந்து விழுந்து அந்த மாறுதல், நியமன ஆணைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த லிஸ்டில்தான் சந்தோஷமும் வந்து நின்றார். சமயம் பார்த்து எனக்கு அந்த நல்ல யோசனை மனதில் தோன்ற,  அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு போனேன்.
ரொம்ப வருஷமாக் குப்பையாக் கிடக்குற ஆபீஸ் அதுன்னு தெரியுது. அதைச் சரி பண்ணனும்னா நல்ல உதவியாளர்கள் எனக்கு இருக்கணும் சார்….அதோட நம்ம சந்தோஷம் மாதிரி ஒரு தங்கமான பியூன் இருந்தா யானை பலம் வந்தமாதிரி சார்…டிரஷரிக்குப் போக…பில்லுகளைப் பாஸ் பண்ண, ஒழுங்காப் பணத்தை வாங்கிட்டு வர, இதுக்கு ஒரு சரியான ஆளுன்னா…அதுவும் நம்பிக்கையான்னா, அது  நம்ம சந்தோஷம்தான் சார்…வெளி வேலைக்கு ஒரு பொறுப்பான ஆளு அவரு…அப்போ ஆபீஸ் வேலை தானா நடக்கும்…எனக்கு அவரைக் கொடுத்துடுங்க….பாதி பாரம் இறங்கின மாதிரி….
அதுநாள் வரையிலான எனது உழைப்பின் பலனாய் அந்த நிமிடத்தில் எனது வார்த்தைகள் நின்றது….
முதல் ஆர்டரா அதை ரெடி பண்ணுங்க…கையெழுத்துப் போட்டுத் தந்துடறேன்…மற்றதைப் பிறகு பார்ப்போம் என்றது தலைமை. அவருக்கு அங்கே குப்பை சுத்தமாக வேணும்…அது நோக்கம்.
அப்படி என்னோடு வந்து சேர்ந்தவர்தான் இந்த சந்தோஷம். ஆனால் அதற்குப் பின் பல நாட்கள் மனதளவில் வெந்து நொந்து போயிருக்கிறேன் நான்.
நாம்தான் அவரை இங்கே கூட்டி வந்து இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டோமோ….- மனசாட்சி இன்றுவரை அறுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
எப்படி இப்படி மாறினார்….?
மாதவம் டிவிஷனுக்கா போறீங்க….? அங்க போய் யாரும் முழுசாத் திரும்பி வந்ததேயில்லையேங்க…..ஏங்க…உங்களுக்கு ப்ரமோஷன்ல வேறே ஊரே கிடைக்கல்லியா? எதுக்கு இப்டி அலையுறீங்க…பேசாம சென்னைக்கே nஉறட் ஆபீசுக்குப் போயிடலாமே…நீங்கள்லாம் அங்கே இருந்தீங்கன்னா, நல்ல மதிப்பா இருக்கலாமே…வேலை செய்றவங்களுக்கு அங்கதாங்க பெருமை...இப்டிப் போய்….அதுவும் விரும்பிக் கேட்டேன்னு வேறே சொல்றீங்க….எவனெவனோ கழிஞ்சு வச்ச குப்பையையெல்லாம் நீங்க போய் கூட்டிச் சுத்தம் பண்ணப் போறீங்களாக்கும்…உங்களுக்கென்ன தலைவிதியா….? அந்தச் சகதில நீங்களும் விழாம இருந்தாச் சரி….!
சொன்னதுபோல் நான் விழவில்லைதான். ஆனால் என்னைக் கொஞ்சம் நெகிழ்த்திக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. கொஞ்சம் என்பது கூடப் பத்தாது. ரொம்பவும் என்பதுதான் சரி.  கடுமையாகவும், கச்சிதமாகவும் வேலை செய்பவன் என்கிற ஆயுத பலம் என்னிடமிருந்தது. அதனால் தப்பித்தேன். இன்றுவரை மதிப்போடு  தப்பித்துக் கொண்டுதான் இருக்கிறேன்….
ஆனால் நான் அழைத்து வந்த இந்தப் பகலவன் இப்படித் தன்னை மறைத்துக் கொண்டு விட்டதே….!
சந்தோஷம்….நீங்களா இப்டி…..? – மனம் நொந்து கேட்டேன் அன்றிரவு. அது நிதியாண்டு முடியும் நேரம்.  அலுவலகத்தில் இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருந்தது. பட்டியல்கள் தயார் செய்வதும், கருவூலத்திற்குக் கொண்டு செல்வதும்,  பாஸ் பண்ணுவதும், காசாக்குவதும், காசோலைகள் பெறுவதும், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவதும், கண்ணும் கருத்துமாக நடந்து கொண்டிருந்த திருவிழா நேரம். வருடாந்திரத் திருவிழா.
ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால்…அது அப்படித்தான். நேரம் காலம் இல்லாமல் அனைத்துப் பணியாளர்களும்…(பெண் பணியாளர்கள் தவிர்த்து) விழுந்து விழுந்து, இரவு பகல் பாராமல் வேலை செய்வதும், அவ்வப்போது தேநீரும், சிற்றுண்டியும்…இடைவிடாமல் வந்து கொண்டிருப்பதும், எத்தனை முறை டீ குடித்தோம், எத்தனை முறை டிபன் சாப்பிட்டோம் என்கிற கணக்கில்லாமல்…அசுரத் தனமாய் நிதியாண்டு இறுதிப் பணிகளைப் புயல் வேகத்தில் முடித்துக் கடந்து செல்வதும்….அந்தக் குறிப்பிட்ட ஒன்றிரண்டு மாதங்கள் அங்கு அப்படித்தான் நம்மை நம் தேகம் அறியாமல் கடக்க வைக்கும். ஓட வைக்கும்…அசுர கணங்கள் அவை…
அந்த நாட்களில் புதிதாய்த் தவறிப் போகிறவர்களும் உண்டு என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. ஏற்கனவே தவறியவர்களுக்கு அது உண்மையான திருவிழாக் கொண்டாட்டம். தவறிய என்ற வார்த்தையே அங்கே தவறுதான். எங்கே சரியான நேரத்திற்கு ஓய்வும், உறக்கமும் போதுமான அளவுக்கு இல்லாமல் போகிறதோ அங்கே தவறுகள் நடப்பது தவிர்க்க முடியாதது என்பதற்கு அந்தக் குறிப்பிட்ட கால நிகழ்வுகளே சாட்சி என்று துணிந்து சொல்லலாம்தான்.
சந்தோஷம் வாய் குழறிப் பேச ஆரம்பித்திருந்த நாட்கள்.. என் வார்த்தைகள் துச்சமாய்ப் போன காலங்கள் அவை. என் கண்களை நேருக்கு நேர் சந்திக்க மறுத்த சந்தோஷம். அவர் அகண்ட கண்களை ஊடுருவ முடியாமல் அந்த மீசையோடு சேர்த்துப் பார்த்து நான் திணறியிருக்கிறேன். அது இப்போது காணாமல் போனது. என்னைக் கூடியானவரை தவிர்த்தார். கண்டபோது ஒளிந்தார். நேரில் நின்ற பொழுதுகளில் முகம் பார்க்காமல் பேசினார். சுருக்கமாய் முடித்து விட்டு விலகினார். இடைவெளியை அதிகமாக்கினார். அவர் உடல் நலம் படிப்படியாகக் கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும், ஏதும் செய்ய இயலா நிலையில் தவித்தேன். கழிவிரக்கம் மேலோங்கிய நாட்கள்.
நீங்க என்ன செய்ய முடியும் அதுக்காக…சொல்லத்தான் செய்யலாம்…கேட்கலேன்னா என்ன செய்றது…இதுக்காக நீங்க ஏன் மனசைப் போட்டுக் குழப்பிக்கிறீங்க…? அவருக்குன்னு ஒரு குடும்பம் இருக்குல்ல…அவுங்க சொல்வாங்கல்ல….நல்லதை…? அந்த அக்கறை அவருக்கும் கொஞ்சமாச்சும் இருக்கும்தானே….அப்புறமென்ன…விடுங்க…. – சுலபமாய்ச் சொல்லி விட்டாள் புவனா.
குழம்பிக் கிடக்கும் குட்டையில் யார் விழுந்தார்கள், யார் எழுந்தார்கள் என்று யார்தான் கவனிக்கப் போகிறார்கள்?
நிலை தடுமாறித்தான் நின்றேன்.. மனசாட்சி என்னைப் போட்டுக் குத்திக் குடைந்து கிழித்துக் கொண்டிருந்தது. பேசாமல் அவரே அவரது விருப்பத்துக்கு வேறெங்காவது ஒரு இடம் வாங்கிக் கொண்டு போயிருந்தால் இந்த வம்பே இருந்திருக்காதோ? வலிய அவரை அழைத்து வந்து இந்தச் சகதியில் தள்ளி விட்டேனோ? சகதி என்று தெரிந்தும் ஏன் அவருக்குக் கை கொடுக்கவில்லை? எந்தக் கையாலாகாத்தனம் தடுத்தது?
அந்த நிதியாண்டு முடிந்திருந்த சில  நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் நாங்கள் சற்று மூச்சு வாங்கிக் கொண்டிருந்தோம். அப்போது உடம்பு சரியில்லை என்று காணாமல் போனவர்தான். ஆளும் இல்லாமல், முறையான விடுப்புக் கடிதமும் வராமல், இதென்ன கூத்து? சந்தோஷம் என் சந்தோஷத்தை அறவே போக்கியிருந்தார்.
கொஞ்சம் விட்டுப் பிடிங்க சார்….நான் பொறுப்பேத்துக்கிறேன்…அவர்ட்டேயிருந்து மெடிக்கல் லீவு அப்ளிகேஷன் வாங்கிடுவோம்…ஒருமாசமோ…ரெண்டுமாசமோ…சமாளிச்சிக்கிடுவோம்…ஏப்ரல்…மேயிலே பில்கள் எதுவும் வரப்போறதில்லை…சம்பளப் பட்டியல்கள் மட்டும்தான்…அதை கிளார்க்குகளை வச்சே நான் சமாளிச்சிக்கிறேன்…நீங்க ஒண்ணும் ஒர்ரி பண்ண வேண்டாம்…அப்டியும் அவர் சொஸ்தமாகி வரலேன்னா…பிறகு முடிவெடுப்போம்…வச்சிருக்கிறதா…மாத்திடுறதான்னு…
என்னவோ சொல்லிச் சமாளித்தேன்…என் வார்த்தைகள் நின்றதுதான் எனக்கே அதிசயம். சந்தோஷம்…தன் சந்தோஷத்தையம் கெடுத்துக் கொண்டு…என்…எங்கள் சந்தோஷத்தையும் போக்கி….ஆபீசையும் தவிக்க விட்டார்.
திடீரென்று இன்ஸ்பெக் ஷன், ஆடிட் என்று வந்து நின்றால் எப்படிச் சமாளிப்பது…ஆளும் வராமல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்தும் போடாமல்…முறையான விடுப்பு விண்ணப்பமும் இல்லாமல், தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேன் நான்.
ன்று இப்படியா வந்து விழ வேண்டும்?
சார்….சார்…..என்னை மன்னிச்சிருங்க சார்…..துவண்டு கிடந்த மேனிக்கே சந்தோஷம் மெல்லக்  குழறினார்…..
தெருவில் நடந்து சென்றவர்கள்…வண்டியில் சென்றவர்களின் பார்வை இங்கே பதிந்தது.  உள்ளே சென்று வாசல் லைட்டை அணைத்தேன். தெருக் கம்பத்தின் வெளிச்சம் போதும் என்று தோன்றியது.
எவ்வளவு சொன்னேன் சந்தோஷம்…கேட்கவே மாட்டேன்னுட்டீங்களே…எப்பிடியிருந்தீங்க நீங்க….?  நீங்களெல்லாம் இப்படி மாறலாமா? அந்தக் கடவுளுக்கே அடுக்குமா இது…?
அய்யா…அய்யா…..இப்ப எனக்குக் கடவுள் நீங்கதான்யா….என் கத முடிஞ்சிரும்யா…மத்ததெல்லாத்தையும் நீங்கதான் பார்த்துக்கிடணும்யா…
என்ன சொல்றீங்க நீங்க….இப்டியெல்லாம் பேசாதீங்க…..எழுந்து உட்காருங்க…..சொல்லியவாறே அந்த அம்மாள் ஒரு பக்கம் பிடித்துக் கொள்ள நான் இன்னொரு பக்கம் பிடித்து அவரைத் திண்ணைச் சுவரில் சாய்த்து நிறுத்தினோம். மீண்டும் விழப் போனார். அந்த அம்மாள் தாங்கிப் பிடித்துக் கொண்டது.
அய்யா…இதுலேர்ந்து இந்த வாட்டி மீண்டு வருவேன்னு எனக்குத் தோணலைங்கய்யா…நீங்கதான் எனக்கு வேண்டியதச் செய்யணும்….கைவிட்றாதீங்கய்யா….!
மனசு நடுங்கியது எனக்கு. ஈரல் கெட்டு விட்டது என்று இவர் போய்ப் படுத்துக் கொண்ட மருத்துவமனை டாக்டர் சொன்னதும், மருத்துவத்திற்கான பணத்தைச் செலுத்த முடியாமல் அலுவலகத்திற்குத் தகவல் வந்ததும்,  அலுவலரும், மற்ற பணியாளர்களும் ஆளுக்குக் கொஞ்சமாய்ப் போட்டு, பீஸைக் கட்டி அவரை மீட்டு வந்ததும் இன்றுவரை சந்தோஷத்திற்குக் கூடத் தெரியாது.
அதான் ஆபீஸ்ல வந்து சொன்னாங்கல்ல….விட்டுடலியா….இதுக்குப் போயி ஏண்டீ இப்டி அழுவுற…..பேசாமக் கெடடி….என்று அவர் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்ததை நாங்கள் அப்போது பொருட்படுத்தவில்லை.
அதெல்லாம் ஒண்ணும் ஆவாது….நீங்க ஒரு லீவு லெட்டர் மட்டும் கொடுங்க…மற்றதை நான் பார்த்துக்கிறேன்….என்று சொல்லி விட்டு…உள்ளே போய் ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கையெழுத்து வாங்கினேன். பேனாவைப் பிடிக்கும் பலம் கூட அவரிடம் இல்லை. சொல்லப் போனால் அது அவருடைய கையெழுத்தே இல்லைதான். யாரும் என்னைச் சந்தேகப்படாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் வந்தது.
பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேருங்க…என்று விட்டு…உள்ளே போய் .புவனாவிடம் “கொஞ்சம் பால் சுட வை…“.என்றேன். என்னவோ முனகிக் கொண்டே அவள் செய்தது போலிருந்தது. வேளை கெட்ட வேளையில் அவளையும் கஷ்டப்படுத்திக் கொண்டு….
வாங்கிக்கொண்டு வெளியே வந்து அவரிடம் நீட்டினேன். அழுது கொண்டிருந்தார் சந்தோஷம். தன்னிரக்கம் பிறந்த வேளை அது.
வருத்தப் படாதீங்க…கண்ணைத் துடைச்சுக்குங்க….எல்லாம் சரியாப் போகும்…நான் ஏதாச்சும் வழிமுறை இருக்கா பார்க்கிறேன்….மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் கார்டு வச்சிருக்கீங்கல்ல…என்றேன்.
தலையாட்டினது போலிருந்தது. அதையும் நாளை அலுவலகம் சென்றுதான் நான் உறுதிப்படுத்த வேண்டும். மொத்த அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் தயார் செய்து அனுப்பியதும்…ஒருவர் இருவராய் அடையாள அட்டைகள் வந்து கொண்டிருந்ததும்…. நினைவில் இருந்தன.
ஆட்டோ ஒன்றைப் பிடித்து, பணத்தையும் கொடுத்து, ஏற்றி அனுப்பினேன். இரவு உறக்கமில்லாமல் கழிந்தது.
மறுநாள் காலையில் 7.40 க்கு அவதி அவதியாக ரயிலடிக்குச் சென்று ப்ளாட்பாரத்தை அடைந்த போது….அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வணக்கம் சார்…..என்ற அந்தப் பையனைக் கவனிக்காமல் நான் பெட்டியில் ஏறியபோது, சார்…உங்களைத்தான் கூப்பிடுறாங்க…அங்க பாருங்க…என்று கூட வரும் நண்பர் வெளியே கையைக் காண்பிக்க, இருக்கையில் பையை வைத்து விட்டுத் திரும்பினேன்.
ஜன்னல் வழியாக என்னைப் பார்த்த அவன்…நின்று நிதானமாக…அதே சமயம் அழுத்தமாகச் சொன்னான்….
சார்….நீங்கதான தியாகராஜன்…..மாதவம் டிவிஷனல் ஆபீஸ் சூப்பிரன்ட்……
ஆமா…..உங்களுக்கு என்ன வேணும்….? நீங்க யாரு….?
நான்தான் சார் சந்தோஷத்தோட மகன்…. இதுதான் எங்க அம்மா……என்றவாறே பின் பக்கமாய்க் கையைத் திருப்பி அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்து முன்னே நிறுத்தினான். இதென்னடா புதுத் தலவலி…..?
அந்தப் அம்மாளையும்…அந்தப் பையனையும்….கூடவே முந்திய இரவு சந்தோஷத்தோடு வந்து நின்ற அவர் மனைவியையும் ஒரு சேர மின்னலாய்  நினைத்துப் பார்த்த எனக்கு தலை கிறுகிறுவென்று சுற்ற ஆரம்பித்தது.
----------------------------------------------------------------------------------------------------------------     
     
.

கருத்துகள் இல்லை: