கட்டுரை
“டென்ட் கொட்டாய்…”
(அந்த நாளின் எளிய சந்தோஷங்கள்) ------------------------------------------------------------------------------------------------------------------
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ..
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ..
உச்ச ஸ்தாயியில் அடி வயிற்றிலிருந்து உணர்ச்சி பூர்வமாய் மதுரை
சோமுவின் குரல் எழும்போது, கூரை உச்சியில் வீற்றிருக்கும் ஒலி பெருக்கிக் குழாய் காற்று
வழி அந்தப் பாடலை எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் முக்கிய தருணம்…
மருதமலை
மாமணியே முருகைய்யா……! தேவரின் குலம் காக்கும் வேலய்யா…அய்யா…!!!
தெருவே
கண நேரத்தில் அலெர்ட் ஆகிவிடும். ம்ம்ம்…..விளையாடினது போதும்….போய்ப் படிக்க உட்காருங்க
எல்லாரும்….என்று அன்பு கலந்த அதிகாரமான குரல்… யாரேனும் ஒரு வீட்டுப் பெண்மணியிடமிருந்து
கிளம்பி எங்களை உசுப்பி விட….. ஏக்கத்தோடு கலையும்
விளையாட்டுக் கும்பல்.
அப்போது
மணி மாலை ஆறரை. மெல்லிய இருட்டு பரவ ஆரம்பித்திருக்கும் நேரம். ஊருக்கு வெளியே மூன்று
கி.மீ. க்கு அப்பால் உள்ள டென்ட் கொட்டகையிலிருந்து வரும் அந்த முதல் பாடல்தான் எங்களின்
தினசரி ஆதர்ஸம். அடுத்த அரைமணி நேரத்துக்குத் தொடர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்கும்….என்னென்ன
பாட்டுப் போடுவார்கள் என்று இன்றும் நினைவிருக்கிறது. அதென்னவோ கதாநாயகன் குதிரையில்
வரும் பாடல்களாய்த் தேர்ந்தெடுத்துப் போடுவதில் எங்களூர் கீற்றுக் கொட்டகைக்காரர்களுக்கு
ஒரு தனி உவகை. அதிலும் பாண்டியன் டூரிங் டாக்கீஸ் ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் அது…!
சத்தியமே….லட்சியமாய்….கொள்ளடா……தலை
நிமிர்ந்து…உனை உணர்ந்து செல்லடா…… - ரஞ்சனின் ஆரோகணிப்பில் நீலமலைத் திருடன் படப்
பாட்டு. அந்தக் காலத்தில் வகுப்பில் ஆசிரியர் பாடச் சொன்ன போது நான் பாடிய முதல் பாட்டு
இது. . அச்சம் என்பது மடமையா….அஞ்சாமை திராவிடர்
உடமையடா…… எம்.ஜி.ஆர். அவரது மயக்கும் புன்னகையோடு கம்பீரமாய்ப் பாடி வரும் தத்துவப்
பாடல்….
வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராசர்கள் உலகாளுதல்
மணி மகுடம் படத்தில் எஸ்.எஸ்.ஆர்.
பாடி வரும் பாரதி தாசன் பாடல் இது….
அதுபோல் சிவாஜி படித்தால்
மட்டும் போதுமா படத்தில் குதிரையில் பாடி வருவார். முதல் காட்சியே அதுதான். ஓNஉறாNஉறா மனிதர்களே…ஓடுவதெங்கே சொல்லுங்கள்…..உண்மையை வாங்கி…பொய்களை
விற்று உருப்பட வாருங்கள்…..
பாடல்கள்
காதுக்கினியவையாய் காற்றில் மிதந்து வர இன்னும் படம் போடவில்லை என்று பொருள். அப்படியானால்…?
அந்த, வழக்கமான கடைசிப்பாட்டு எப்போது வருகிறதோ
அதுதான் எங்கள் உயிர்.
பளிங்குனால்
ஒரு மாளிகை…….முதல் பாடலுக்கும், அதுவரையிலான பாடல்களுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் உண்டா?
அதெல்லாம் கேட்கப்படாது….அப்படித்தான்.
டேய்…படம்
போடப் போறாய்ஞடா…ஒடியாடா…. ….என்று ஓட்டமெடுத்து விசுக் விசுக்கென்று சிட்டாய்ப் பறந்த
காலம் அது. வீட்டில் கொடுத்தோ அல்லது வாங்கும் சாமான்களில் கமிஷன் அடித்தோ….அஞ்சு பைசா,
பத்து பைசா என்று சேர்த்த துட்டு ஆசை நாயகனைத் திரையில் அள்ளிப் பருகும் வேளைக்குக்
காத்திருந்த இனிய பொழுதுகள். காலத்தால் அழிக்க முடியாத கோலங்கள்.
வழி
நெடுக சாலையின் இரு பக்கமும் நெருக்கமாய்க் கிடக்கும் தக்காளிக் கமிஷன் மண்டியிலிருந்து
யாரேனும் பார்த்து விடுவார்களோ….போய் வீட்டில் சொல்லி விடுவார்களோ….வாத்தியார் யாரும்
வழியில் கண்ணில் பட்டு விடுவாரோ…? என்ற பயத்தோடேயே நெஞ்சம் படபடக்க, கால்கள் கொட்டகையை
நோக்கி முன்னேறும்…சினிமாப் பார்த்தால் படிப்புப் போயிரும்…! கணக்கு வாத்தியார் கிருஷ்ணசாமி
காதைப் பிடித்துத் திருகுவார். அந்த வலி ஒரு வாரம் தாங்கும்.
படம்
போட்டாச்சாண்ணே….?. - கேட்டுக் கொண்டே பொந்துக்குள் கை விட்டு டிக்கெட்டைப் பெற்றுக்
கொண்டு அடிச்சேன், பிடிச்சேன் என்று அந்த மணல் பரப்பில் போய் தொபுக்கடீர்….என்று விழும்
ஆரம்ப சுகமிருக்கிறதே….அதற்கு என்ன கொடுத்தாலும் ஈடாகாது. வெற்றிகரமாய் தியேட்டருக்குள்
நுழைந்த கதை அது…!
அத்தனை
நேரம் ஓடி வந்ததற்கும், வியர்த்து விறுவிறுத்துக் கிடப்பதற்கும்… வெளியே சுற்றிலும்
பரந்து விரியும் வயற்காட்டுப் பகுதியிலிருந்து வரும் லவ லவவென்ற காற்றும் அள்ளி அள்ளி வீச….சுகமாய்த் தாலாட்டித் தன்னை மறந்து
உறங்கிப் போன நாட்களும் உண்டு. விடுறா….தூங்கினாத் தூங்கட்டும்…!!
டேய்….என்னாடாது….அதுக்குள்ளேயுமா
இடைவேளை போட்டாய்ஞ்ஞ……?
முறுக்…..முறுக்….முறுக்….கள்ளமிடே…..மிறுக்…..காராக்கடலே…….கூல்டிரிங்ஸ்….
–
எங்கிட்டிருந்துறா
வர்றாய்ங்ஞ….. ….இப்போ இன்டர்வல்னு இவஞ்ஞளுக்கு எப்டித்தான் தெரியிது….?
அண்ணே….முறுகி…..கள்ள
முறுகி…..காராக்கடலெ……அரிசி முறுக்கி……
ஆங்கில எழுத்து V ஐ நன்றாக விரித்துத் தலை கீழாய்ப் போட்டால் எப்படியிருக்கும்…
அப்படித்தான் கூரை ஷெட்டைத் தூக்கிக் கட்டி
நிறுத்தியிருப்பார்கள் டென்ட் கொட்டாய்களை….தலைகீழான V எழுத்தின் இரண்டு பக்கமும் எந்த
இடத்தில் முடிகிறதோ அத்தனை அகலத்திற்கு அகண்ட
திரையாய்க் கட்டி இழுத்திருப்பார்கள். அந்தக் காலத்து 70 MM அது. ஒரே துணியாய்க்
கட்டி ஆகாது என்பதால் மேல்பாதி, கீழ்பாதி என்று மேலுக்கு ரெண்டு, கீழுக்கு ரெண்டு என
மொத்தம் நான்கு வெள்ளைப் படுதாக்கள் ப்ளஸ் வடிவில் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும். யாரும்
அருகில் சென்று பார்க்க, தொடக் கூடாது என்று திரையிலிருந்து ரெண்டடி தூரத்தில் மூங்கில்
தடுப்புகள் நிறுத்தப்பட்டு, அங்கே சிவப்புத் தீ வாளிகள் தொங்க, பூராவும் மணல் நிரப்பப்பட்டிருக்கும்.
அட்ட்டேங்ங்ங்ங்
கப்பா….எம்பூட்டுப் பெரிசுடா…….இத்தந் தண்டிக்கா படம் காமிப்பாங்ஞ…..ஆத்தாடீ….பயங்கரம்டா……
- பார்ப்பவர்கள் விதிர்த்துப் போவார்கள். திரைக்கு அருகிலே முதல், ரெண்டாம் வரிசையிலே
படுத்துக் கொண்டு தலையின் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு படம் பார்க்கும் சுகம் இன்றைக்கும்
கிடைக்காதா என்ற ஏக்கம்தான். அந்த நாளும் வந்திடாதோ…!
எப்பிடிறா
இவ்வளவு பெரிசுக்கு கூரை மேய்ஞ்சாங்ஞ…..கம்புக் கட்டுக்கே ஏகப்பட்ட நாளாகுமேடா….பெறவு
கிடுகு வேறே வேயணும்…..படா கில்லாடிங்ஞடா…..என்னமா நெருக்க நெருக்கமா வேய்ஞ்சிருக்காங்ஞ….!!!
இடியே விழுந்தாலும் ஒக்காராதுடா…..! பயங்கர ஸ்ட்ராங்க்…!!
உண்மைதான்
எந்தப் புயலுக்கும், மழைக்கும் எந்த டென்ட் கொட்டகைகளும் சரிந்ததாய் சரித்திரமில்லை.
மக்களின் பாதுகாப்பும், தொழிலின் அக்கறையும் அத்தனை சுத்தம்.
அண்ணே….என்னைக்குண்ணே
தியேட்டர் திறப்பீங்க…?
திறப்போம்டா…திறப்போம்டா…..போய்ப்
படிக்கிற வழியப் பாருங்கடா….இங்க சுத்திட்டுத் திரியறீங்ஞ…..
டேய்….வாடா போவோம்….இந்த அண்ணேன் ரொம்பத்தான் கிராக்கி
பண்றாரு… அதான் என்னைக்கின்னு கேட்குறோம்ல…….சொல்லலாம்ல….
அட்ட…..எகத்தாளமா
பேசுறீங்க……ஓடுங்கடா….. – சுற்றிலும் திரும்பிக் கல்லைத் தேடுகிறார்…
டாய்….வாங்கடா…..கல்ல
விட்டு எறியறாண்டா இந்தாளு… ஓடிருவோம்….பெறவு ஒருநா வருவோம்ல….அன்னைக்கு வச்சிக்கிரோம்டீ….உனக்கு….கல்லயா
எடுக்கிற…….?
கீற்றுக்
கொட்டகைகள்தான் சிவாஜி எம்.ஜி.ஆரை கிராமத்து
இளைஞர்களுக்கு அணுக்கமாய் ஆக்கியது என்று சொன்னால் துளியும் மிகையாகாது…..ஊரில் உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு வருஷக் கணக்காய் விடாது ஓடிக் கொண்டிருக்கும் இன்னொரு பர்மனென்ட்
சினிமா தியேட்டரில் வாரா வாரம் வெள்ளிக்கிழமை என்ன படம் மாற்றுகிறார்கள் என்று தெரிந்து
கொண்டு மறுநாளைக்கு கரெக்டாக அந்த வசூலை முறியடிப்பதுபோல் டென்ட் கொட்டாயில் படம் கொண்டு
வருவது பெரும் சாகசம். ஒவ்வொரு வாரமும் பரீட்சை ரிசல்ட் பார்ப்பது போல்…ஆனால் கீற்றுக்
கொட்டாயில் வாரம் ஒரு படம் கணக்கில்லை. வசூலுக்கேற்றாற்போல் ரெண்டு அல்லது மூணு நாளில்
படம் மாறி விடும். திடீரென்று காலையில் ஸ்கூல் போகும்போது கண்ணில் படும் “இன்று இப்படம்
கடைசி”…
வெள்ளிக்கிழமை
ராத்திரி டவுனுக்குப் பஸ் ஏறி, ராவோடு ராவாக புதுப் படப்பெட்டியோடு தியேட்டர் மானேநஜர்
ஊரில் வந்து இறங்கும் சாதனை இருக்கிறதே…..
அண்ணனா…கொக்கா…..சும்மா
விட்ருவாரா….? டேய்….வாங்கடா….பொழுது பொள்ளுன்னு விடியறதுக்குள்ளாற போஸ்டர் பூராவும்
ஒட்டியாகணும்…. ஒரு எடம் விட்றப்டாது….புரிஞ்சிதா….….பசை ரெடியாடா…..தூக்கி விடுறா….எடுத்திட்டு
ஓடுங்கடா….ஜல்தி….ஜல்தி……நம்ம வழக்கமான செவுத்த
யாருக்கும் விட்றாதீங்கடா….பார்த்துக்குங்க….
பள்ளிக்குப்
போகையில் படம் மாற்றியிருக்கும் போஸ்டர்கள் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து மனசை ஏங்க
வைத்த காலங்கள். துட்டுக்கு எங்க போறது…? வாரத்துக்கு ஒருவாட்டி கரெக்டா படம் மாத்திர்றானுங்களே…சமயத்துல
ரெண்டு….சினிமாப் பார்க்குறதா…..படிக்கிறதா…..? மனசு கிடந்து தவித்துத் தடுமாறும்…..
மௌனப்
படங்கள் வந்த காலத்திலிருந்து ஆரம்பித்து விட்டன இந்தக் கீற்றுக் கொட்டகைகள் என்று
அறியப்படுகிறது. காலை நேரக் காட்சிகள் கிடையாது. பின்னர் ஒரு கட்டத்தில் மதியக் காட்சிகள்
வர ஆரம்பித்தன. அது ஒரே காட்சியில் ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள் என்று வந்த போது
மதியப் படங்கள் ஆரம்பித்தன. ரெண்டு மணிக்கெல்லாம் படம் போட்டு விடுவார்கள். ஆரம்ப நியூஸ்
ரீல் இருக்காது. ஸ்ட்ரெய்ட்டாகப் படம்தான். அக்ரஉறாரத்தில் உள்ள பெண்மணிகள் சுற்றிலும்
உள்ள தெருக்களில் உள்ள பெண்டுகள் என்று குழந்தை குட்டிகளோடு கையில் மாலை, இரவு நேரத்துக்கான
டிபன், சாப்பாடு, நொறுக்குத் தீனி வகையறாக்களோடு வந்திருப்பார்கள். மதியம் முதல் படத்தின்
இடைவேளையில் டிபன் வேலை நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் காபி…அப்புறம்….ரெண்டாவது
படத்தின் ஆரம்பத்தில் மீண்டும் ஒரு காபி. இந்தக் காபிக்கு முன்னால் தியேட்டரில் விற்கும்
முறுக்கு, காராக்கடலை வகையறாக்கள். பிறகு ரெண்டாவது படத்தின் இடைவேளையில் இரவுச் சாப்பாடு.
ரெண்டு படங்கள் முடிந்து மூன்றாவது படத்திற்கு எப்படியோ கொஞ்சம் நேரம் மிஞ்சி விடும்.
அதைத் தியேட்டர்காரர்களால் கணிக்க முடியாது. போதாக் குறைக்கு மிஷின் சூடு ஆற வேண்டுமே…!
அதனால் ஒரு நீண்ட ப்ரேக் கிடைக்கும் ஒரு அரை மணி நேரம் அங்கேயே காற்றாட உலாத்தலாம்.
அங்கங்கே மணலில் படுத்து உருளலாம். கிடைத்த இடங்களில் ஒன்றுக்கிருக்கலாம். புகையை ஊதலாம்.
அங்கங்கே நின்றமேனிக்கு ஊதித் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஒரு முறையாவது எந்த டூரிங்
டாக்கீசாவது தீப்பிடித்தது என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம். எங்கேனும் ஒன்று
நடந்திருந்தால் அது அபூர்வம்.
மணலில்
எச்சில் துப்பி மூடிக் குவித்து வைத்து அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு உயரமாய்ப்
படம் பார்ப்பார்கள். முன்னால் உள்ளவர் மறைக்கிறார் என்று இந்த ஏற்பாடு. சுற்றிலும்
புளிச் புளிச்சென்று துப்பித் துப்பி சட்டுச் சட்டென்று மணலைப் போட்டு மூடி விடுவார்கள்.
அதையே கையால் அளைந்து கும்மாச்சியாய் உயரமாக்கி ராஜ கம்பீரமாய் அமருவார்கள்.
ஆரம்பத்தில் ஒரே காட்சியில் ஒரே டிக்கெட்டில் ரெண்டு
படங்கள்தான் காட்டப்பட்டன. பின்னர் அது மூன்றாகியது. இந்த மூன்றில் ஒன்று சிவாஜி…ஒன்று
எம்.ஜி.ஆர்., மூன்றாவது சம்பந்தமில்லாத தெலுங்கு டப்பிங் படமாய் இருக்கும். விதியே
என்று பார்க்க வேண்டியிருக்கும். அல்லது கெக்கே பிக்கே என்று சிரித்துக் கும்மாளமிட்டுக்
கொண்டு பார்த்துத் தொலைப்பார்கள். சிவாஜி வாரம்…எம்.ஜி.ஆர்
வாரம் என்று கொண்டாடிய நாட்களும் உண்டு. சலிக்காமல் போஸ்டர் ஒட்டி ஊரையே நிறைத்திருப்பார்கள்.
டென்ட்
கொட்டாய்களில் இடமில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. தரை டிக்கெட்தான் பெரும்பாலும்.
ரெண்டு பங்கு இடம் ஆண்களுக்கென்றால் ஒரு பங்குப் பகுதி பெண்களுக்கு….இடது பக்கம் ஆண்கள்.
வலது பெண்கள். தியேட்டரின் பெரும் பகுதி தரை டிக்கெட்தான். கொஞ்சம் பெஞ்ச் டிக்கெட்களும்
உண்டு பின்னால். அவற்றிற்கு முன்னால் முதல்
வரிசை, நாற்காலி வரிசை. (மூட்டைப் பூச்சிகளுடன்) ஆனாலும் அவர்கள்தான் பணக்காரர்கள்.
தரைட் டிக்கெட்காரர்களோடெல்லாம் பேசவே மாட்டார்கள். பணக்காரர்களாம்….!!!
தரை
டிக்கெட் வெறும் நாலணாதானே….அது ஒரு காசா….? விட்டெறிந்து படம் பார்த்த சில்லரைக் காலங்கள்
அவை.
அந்தக்
காலத்திலெல்லாம் படம் ஓட்டும் ப்ரொஜெக்டர்கள் ஒன்றுதான் இருக்கும். இது பெர்மனென்ட்
தியேட்டருக்கும் விதி. அந்த அறையின் கதவை மூடியே வைத்திருப்பார்கள். யாரையும் உள்ளே
எட்டிப் பார்க்கக் கூட விடமாட்டார்கள். அந்த மிஷினைக் கண்கொண்டு பார்க்க ஆசை ஆசையாய்
இருக்கும். என்னவொரு தொந்தரவு, அரை மணிக்கொருதரம் ப்ரேக் விடுவார்கள். கரெக்டாக
முறுகி…கடல
முறுகி….காராக்கடல….கூல்டிரிங்க்ஸ்….என்று எப்படித்தான் எங்கிருந்துதான் அந்தக் குரல்
கேட்குமோ…அவர்கள்தான் அந்த ப்ரேக்கை நிர்ணயிப்பவர்கள். எப்டித் தெரியுது இவஞ்ஞளுக்கு….?
இன்றும் வியப்புதான்.
தனித்
தனி ரீல்களாக .ஃபிலிம் இருக்கும். ப்ரொஜக்டர் வீலில் ரீலை லோடு செய்து கொள்ள அந்த நேரம்
எடுத்துக் கொள்ளப்படும். சிதைந்த பிலிம் துண்டுகள் வெளியே கிடக்கும். பசங்கள் ஆசை ஆசையாய்ப்
பொறுக்கி பத்திரப்படுத்திக் கொள்வார்கள்.
அண்ணே…எனக்குண்ணே…..எனக்குண்ணே…..எனக்குக்
குடுங்கண்ணே…..!
வீட்டு
ஜன்னலில் ஃபீசாய்ப் போன பல்பைத் தொங்க விட்டு வாசலிலிருந்து கண்ணாடி மூலம் பல்பில்
வெய்யில் ஒளி வீசச் செய்து, அந்த ஒளியின் படலங்கள் திரையாய் அறைச் சுவற்றில் தெரிகையில்
பல்புக்கு முன்னே காட்டப்படும் ஃபிலிம் சுவற்றில் குறிப்பிட்ட படத்தின் காட்சிகளாய்
விரியும். இதற்கென்று கூடும் கூட்டமிருக்கிறதே…அடேங்கப்பா…..அடித்து விரட்டாத குறைதான்.
சின்னஞ்
சிறுசுகள்….என்னத்தையோ வச்சு விளையாடிண்டிருக்கு…போகட்டும்…விரட்டாதே…..! – பாட்டி
சொல்லுவாள் ஆதரவாய்.
ஃபிலிம்
லோடு பண்ணும் இடைவெளியில் சிலைடு போட்டு பயமுறுத்துவார்கள். கரன்ட் போனாலோ, மிஷின்
பழுது பட்டாலோ, டிக்கெட் பணம் வாபஸ் தரப்பட மாட்டாது….என்ற அறிவிப்பு நமக்கு அடிவயிற்றைக்
கலக்கும். ஆனால் வாழ்நாளில் ஒரு தடவை கூட அப்படி நேர்ந்ததில்லை என்பதுதான உண்மை.
விரைவில்
வருகிறது…..என்று போடப்படும் சிவாஜி…எம்.ஜி.ஆர் பட ஸ்லைடுகளின் போது விசில் பறக்கும்…..அதிலும்
விசேட நாட்களுக்கு, ஞாயிறில் சமயங்களில் மூன்று காட்சிகள் என்ற அறிவிப்பைக் கண்டு விட்டால்….தியேட்டரே
அல்லோல கல்லோலப்படும். அந்த மாட்னியைத் தவற விடாமல் வந்து படம் பார்த்து விடுவதில்
அத்தனை பெருமை. சரியான அடைப்பு இல்லாமல் உள்ளே வெளிச்சம் மிச்சமிருக்க…படம் தெளிவாய்த்
தெரியாமல்….விசில் பறந்து…கலகச் சூழல் உருவாக தியேட்டர் ஆட்கள் உள்ளே புகுந்து. கரச்சல்
பண்ணுபவர்களை செந்தூக்காய்க் கொண்டு வெளியே போடுவார்கள். அடங்கிப் போய் பம்மிக் கொண்டு
உள் நுழையும் அந்தக் கூட்டம்.
நாங்கள்லாம்
மாட்னியே பார்த்திட்டம்ல…..நேத்தே பார்த்திட்டம்ல…..மொத நாளே பார்த்தாச்சுய்யா…என்ன
நீ இம்புட்டு மெதுவாப் போயிட்டிருக்கே…..என்ற
குரல்கள் இன்றும் மனதுக்கு அத்தனை ஜனரஞ்சகமானவை. முந்திக் கொண்டு படம் பார்ப்பதில்
அத்தனை பெருமை விஞ்சி நிற்கும்.
இன்றே
இப்படம் கடைசி….என்ற இந்த வாக்கியம் எங்கள்
மனதை ஏங்கச் செய்த நாட்கள் அவை. பார்த்ததை இன்னும் ஒரு முறை பார்க்க முடியாமல் போகிறதே
என்ற ஏக்கம். இன்னொரு முறை இப்படம் வருமோ வராதோ என்ற வருத்தம். பார்க்க முடியாமலே போய்
விட்டதே என்ற சோகம்…..!
உள்ளூர்
டுடோரியல் காலேஜ்கள் என்று திறக்கப்படுகின்றன, என்று பாடங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன
என்பதெல்லாம் கூட ஸ்லைடுகளாகப் போட்டுத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதில் முக்கியமாக
நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. மதுரையில் எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்கள், என்று எந்தப் பாடம் எடுக்கிறார் என்று
ஸ்லைடு போட்டு அறிவிப்பு செய்ததை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு மட்டுமே அந்த கௌரவம்
கிடைத்தது என்பதுதான் அங்கே சிறப்பு. அந்த முறுக்கிய மீசையோடு வெள்ளை வெளேர் வேட்டி
பளபளக்க புஃப் என்று உப்பியிருக்கும் பளீர் ஜிப்பாவோடு சைடுப் பாக்கெட்டில் கையை நுழைத்தவாறே
அவர் நடந்து வரும் காட்சி கண் முன்னால் இன்றும் நிற்கிறது.
வெள்ளிக்கிழமை
அடுத்த தியேட்டர்காரன் என்ன படம் மாற்றுகிறான் என்பதில் எத்தனை கவனமாய் இருப்பார்களோ
அதுபோல் தியேட்டரின் வசூல் எந்தவிதத்திலும் குறைந்து விடக் கூடாது என்பதிலும் அந்தத்
தியேட்டருக்கு ஈடாய் யோசிப்பார்கள். அப்படி யோசித்து, நஷ்டத்தை ஈடு கட்ட சமயங்களில்
ஆங்கிலப் படங்களின் டிரைலர்களை (ஏ – சர்டிபிகேட்) உள்ளே நுழைத்துக் கூட்டத்தைக் கூட்டி
வசூலை அள்ளுவதும் உண்டு. அப்டியெல்லாம் ஒண்ணுமில்லயே…..என்று மறுநாள் கேட்பவர்களுக்கு
மறுத்துத் தலையாட்டிவிட்டு, உள்ளுக்குள் நமுட்டுச் சிரிப்புச் சிரித்த மலையாள செக்ஸ்
ரீல்களும் போகிற போக்கில் எங்கள் பார்வைக்கு வந்திருக்கின்றனதான். இன்ன படம் என்று
தெரியாமலேயே ஒரு நாள் ஒரு பொழுது ஒரு படத்தை ஓட்டினார்கள்.
என்னத்தவோ
தூக்கி விட்ருக்கானுக….பாரு…எதாச்சும் புரியுதா….என்ன எடுத்திருக்கானுக….போஸ்டரெல்லாம்
விரிச்சுப் பார்த்து வாங்க மாட்டிகளா…கொடுக்கிறத அப்டியே தூக்கிட்டு வந்திருவீகளா…என்னாய்யா
மானேசரு நீயி….ரெண்டு ஷோ போட்டா மொத ஆட்டத்துக்கே பத்துப் பேரு கூட வரல்ல…ராத்திரி
ரெண்டாம் ஆட்டம் போடுறதா இல்லையா….? – அந்தப் பத்துப் பேரில் ஒருவன்தான் நான். எனக்கும்
அந்தப் படம் அப்போது புரியவில்லைதான். ஆனால் என்னவோ இருக்கிறதே இதில் என்று மட்டும்
தோன்றியது அப்போது. பின்னாளில் புத்தகமாய்
அதைப் படிக்க நேர்ந்தபோதுதான்….புரிந்து தெளிந்தேன்….ஆஉறா…இது அதுல்ல…..? நெஞ்சின் மூலையில் எங்கோ பதுங்கிக் கிடந்த அழிக்க
முடியா நினைவுகள்….அதுவா இது…..! பதேர் பாஞ்சாலி…..! எண்பதுகளில்….இரவு பத்தரைக்கு
மேல் ஒரு கால கட்டத்தில் அவார்டு ஃபிலிம்களாக வரிசையாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள்
தூர்தர்ஷனில். எத்தனை பேர் அத்தனையையும் பார்த்திருப்பார்களோ தெரியாது. நான் பார்த்தேன்.
தினசரி இரவு விழித்திருந்து பார்த்து, மறுநாள் ஆபீசில் தூங்கி வழிந்தேன்.
டூரிங்
டாக்கீசுகள் மக்களின் சொர்க்கபுரியாய் விளங்கின. ஒரே ஊரில் ரெண்டு கீற்றுக் கொட்டகைகள்,
ஒரு பர்மனென்ட் தியேட்டர்….என்றெல்லாம் கூட உண்டு. சின்ன ஊராகத்தான் இருக்கும். பஞ்சாயத்து.
ஆனால் தியேட்டர்கள் மூன்று….மூன்றுக்கும் சேர்த்து ஊர் ஜனம் பூராவும் அங்கங்கே குழுமியிருக்கும்.
அதென்னடா…போன
வாட்டி மதுரை ரோட்டுல ஒரு தியேட்டர் இருந்திச்சில்ல….அவிங்ஞளும்….பாண்டியன்னுதானடா
வச்சிருந்தாங்ஞ….அதே ஓனரா இவரும்….? அப்டீன்னா அங்கயே திரும்பக் கட்டி லைசன்ஸ் வாங்க
வேண்டிதானே? என்னாத்துக்கு ஊருக்கு இப்பால வந்தாரு….? அங்கியாச்சும் பயமில்லாம இருந்திச்சு…இங்க
சுத்தியும் ஒரே காடால்லடா கெடக்கு…? செகன்ட் ஷோ பார்த்திட்டுப் போகைல பயமா இருக்கும்
போல…..! – விடை தெரியாத எத்தனையோ பால்ய காலக் கேள்விகள். ஊளையிடும் நரியையும் பொருட்படுத்தாது
படம் பார்த்து மீண்ட காலங்கள் அவை.
திருவிளையாடல்
படம் இருபத்தைந்து நாட்கள் ஓடியிருக்கின்றன கீற்றுக் கொட்டகைகளில்….இன்னும் ஒரு வாரம்
ஓட்டலாம் என்ற நிலையில் உடனே படப்பொட்டி வேண்டும் என்று தகவல் வர அவசரத்திற்கு ஏதோவொரு
படம் வந்து இறங்கியது. அறுத்து அறுத்துப் போட்டு ஒரே நாளில் தூக்கினார்கள்.
பதிலுக்கு
இத ரெண்டு நாளைக்கு ஓட்டுய்யா….பெறவு பார்ப்போம்..
ஒரு
நாள் தாங்கலை அந்தப் படம். புதிய படங்கள் என்றும்
கீற்றுக் கொட்டகைகளுக்கு இல்லை. மூன்று…நான்காவது சுற்றில்தான் கிடைக்கும். முதல் சுற்றில்
டவுனுக்குச் சென்று பார்த்து வந்தவர்கள் அங்கே
திரும்ப வந்து பார்ப்பது பெருமை. அவர்கள் உயர்ந்தவர்கள். வசதி படைத்தவர்கள். திறமைசாலிகள்.
பிறரால் எட்ட முடியாதவர்கள். காலம் அப்படித்தான் கணித்திருந்தது.
டென்ட்
கொட்டாய்களில் புதிய படம் மாற்றியிருந்தால் மறுநாள் தெருக்களில் தள்ளுவண்டி கொண்டு
வருவார்கள். குதிரை, மாட்டு வண்டிகளில் தட்டிப் போஸ்டர்கள் கட்டி வீதி வீதியாய் நோட்டீஸ்
கொடுத்துக் கொண்டே போவார்கள். பர்மனென்ட் தியேட்டர்களுக்குப் போட்டியாய் விளம்பரமும்
குறைந்து விடக் கூடாது என்பதில் கடுமையான போட்டி இருக்கத்தான் செய்தது.
இந்த
டென்ட் கொட்டகைகளை நடத்தியவர்கள் எத்தனையோ பேர் பின்னாளில் நிரந்தரத் தியேட்டர்கள்
கட்டியிருக்கிறார்கள். சினிமா விநியோகஸ்தர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரின்
மனதிலும் அந்த நாளின் இந்த எளிய சந்தோஷங்கள் அழிக்க முடியாதவையாய்த்தான் இருக்கும்
என்பது நிச்சயம்.
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக