21 அக்டோபர் 2018

வண்ணநிலவன் சிறுகதைகள் , நயவுரை-2 இலக்கிய வேல்-2018


வண்ணநிலவன்               சிறுகதைகள்                      ,                நயவுரை-2                                    இலக்கிய வேல்-2018                    


வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது. கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது. வாசித்துக் கொண்டிருப்பதே போதும் என்று தோன்றவில்லை. நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது என்கிறார் வண்ணநிலவன். எழுதிப் பார்க்க ஆரம்பித்த கதைகள் எழுதி எழுதி மேற்சென்று எப்படி ஆழமாய்த் தன் வேர்களை நிலத்தில்  ஓடவிட்டிருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். கதைகளைப் பெரும்பாலும் திட்டமிடுவதில்லை. மனதில் சிறு பொறி தட்டும். எழுத உட்கார்ந்தால்…எழுத எழுதக் கதை தானே வளரும் என்றும் பல சிறுகதைகளைப்  பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும் துக்கப்படுகிறார். அதற்காக வருத்தமும் இல்லை என்று உடனே சொல்லி, எல்லாம் உலகின் இயல்பு என்று சமாதானம் கொள்கிறார்.
இந்தப் பதமான மன இயல்புதான், பக்குவம்தான் மனிதர்களை ஊடுருவிப் பார்க்க வைத்து, வாழ்க்கையில் ஊடாடிக் கிடக்கும் இன்பங்களையும், துன்பங்களையும், சோகங்களையும், சந்தோஷங்களையும் அந்தந்தக் கால கட்டங்களில் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், அதில் ஊறித் திளைத்துத் தங்களை எவ்வாறு மீட்டெடுத்துக் கொள்கிறார்கள் என்பதை சாதாரண, நடுத்தர வர்க்க வாழ்க்கையில் கிடந்து உழலும் ஆண்களை, பெண்களைப் பாத்திரமாகக் கொண்டு அவர்களின் இயல்பான சித்திரங்களை மனிதாபிமானத்தோடும், நேயத்தோடும்  தீட்டிக் கொண்டே போகிறார் வண்ணநிலவன்.
தைக்குப் பெயர்தான்பலாப்பழம்”. முக்கனிகளில் ஒன்று. அப்படியானால் எவ்வளவு சுவை மிக்கது. அது போல் இந்த வாழ்க்கையும் நாம் வாழும் முறைமையிலேயே சுவை மிக்கதாகிறது. சந்தோஷத்தைத் தக்க வைப்பதாக மாறுகிறது. அன்பு குடி கொண்டிருக்கும் இடம் இன்ப மயமாகிறது. அங்கே குறைகளும் நிறைகளாய்த் தெரிகின்றன. இல்லாமை என்பதும், இருப்பு என்பதும் மனதைப் பொறுத்த விஷயங்களாக மாறிவிடுகையில் புறச் சூழ்நிலைகள் எதுவும் அவர்களைச் சலனப்படுத்துவதில்லை. மனதுதான் நிறைந்து கிடக்கிறதே…! பிறகு மற்றவை எப்படி அவர்களை அசைத்துப் பார்க்க முடியும்?
பலாப்பழம் ஒரு குறியீடாகக் கதை முழுவதும் ஊடாடுகிறது. ஆனால் அது எங்கு புழங்குகிறதோ அந்த இடத்தில், அந்த வீட்டில் அது தன் மதிப்பை இழந்து நிற்கிறது. பலாப்பழத்தின் அதீத சுவையை ரசிப்பதற்கும் ஒரு இனிமையான சூழல், சந்தோஷமான தருணம், இணக்கமான அன்பின் ஊடாட்டம், அந்தக் கணத்தின் குறைந்தபட்ச மகிழ்ச்சி இவை இல்லாத சூழலில் எது வந்துமே, என்ன இருந்துமே  நிறையாது என்பது நிரூபணமாகிறது. உறவுகளுக்கிடையிலான அன்பு ஊடாடும் இடத்தில் எல்லாமும் இன்பமயமாகிறது.
ஒண்டுக் குடித்தனத்திலே நடுவிலே இருக்கும் தடுப்புப் பலகையைத் தாண்டிக் கொண்டு  வந்து சேரும் பலாப்பழத்தின் மணம்…..அங்கே அதைச் சுவைப்பவர்களின் சூழலில் இல்லை. ஆனால் அந்த மணத்தின் இனிமையை, அதன் சுவையை இல்லாமையில் தவித்துக் கிடக்கும் இப்பகுதி வீட்டில் இருப்போரின் நிறைந்த மனதின் அன்பான தருணங்கள் அழகாய் நிறைவு செய்து விடுகின்றன. முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். தனிச்சுவை. ஈடுசெய்ய முடியாதது. அந்த முக்கனிச் சுவை, எதுவுமேயில்லாத ஆனால் எல்லாம் நிறைந்திருக்கிற இவர்கள் வாழ்க்கையின் அந்நியோன்யத்தில் திளைக்கிறது. அன்பெனும் வலையினால் பின்னப்பட்டு சுவை மிக்கதாக மிளிர்கிறது.  
எளிமையே மனித வாழ்க்கைக்கு நிம்மதியைத் தரும் மாமருந்து. அந்த மனநிலை, பிறவியிலிருந்தே வாய்க்க வேண்டும். வாய்க்கப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். செல்லப்பாப்பா புரண்டு படுத்து கனமான அடி வயிறு சிமிண்டுத் தரையின் குளுமையை உணரத் தலைப்படும்போது அந்த சுகானுபவத்தை நாமும் உணருகிறோம். அடுப்படி மூலையில் சத்தத்தோடு எரியும் ஸ்டவ்வின் திரிகள் கட்டையாகி, சிலது எரியாத நிலையில் எதை வைத்தாலும் இறக்குவதற்கு நேரமாகிவிடும் தாமதத்தில், அதைப் பொருட்படுத்தாது தரையில் ஒன்றையும் விரிக்காமல் குளிர்ச்சியாய் உருளும் மனசை லேசாக்கிவிடுகிறது. வீட்டிலுள்ள எந்த பாட்டில்களிலும், டப்பாக்களிலும் எந்தப் பொருளும், பண்டங்களும் இல்லைதான். ஆனால் அவர்களுக்குள்ளே மனசு நிறைந்து கிடக்கிறது. அவளுக்கும் சீனிவாசனுக்குமான அன்பான புரிதல் அந்த இல்லாமையைத் தாண்டிய நிறைவை அவர்களுக்கு அளிக்கிறது.
பலாப்பழத்தை வைத்துக் கொண்டு அமளி துமளிப்படும் பக்கத்துக் குடித்தனத்திலிருந்து நழுவி ஓடி வந்து விடும் மணம், இல்லாமையில் கிடந்து உழன்றாலும் நிறைந்து கிடக்கும் அவர்களின் மனசை ஆவலோடு வந்து தழுவிக் கொள்கிறது. ஒங்களுக்கு இன்னும் சம்பளம் போடல? என்று கேட்கிறாள் அவள். அவன் முகம் அந்தக் கேள்வியில் மாறிப் போகிறது. கேட்டிருக்க வேண்டாமோ என்று நினைக்கிறாள். அவன் சொல்கிறான். பேச்சு வார்த்தை முடியற வரைக்கும் சம்பளம் வாங்குறதில்லன்னு முடிவு செஞ்சிருக்கோம்….
இப்போது பழ வாசனை ரொம்பவும் காரமாக ஒரு நெடி பரவுவது போல் அந்த அறை முழுதும் விரவிக் கிடக்கிறது. கௌப்புல போயி இட்லி ஏதாவது வாங்கிட்டு வாரேன்…என்று புறப்படுகிறான் அவன். துட்டு? என்கிறாள் அவள். அரிகிருஷ்ணன்ட்ட வாங்கினேன் என்கிறான். எந்த அரிகிருஷ்ணன் என்று அவள் கேட்க…கல்யாணம் ஆன புதுசுல வந்தானே அவன்தான் என்று சொல்ல…மேலும் தகவலாய் இன்னைக்கு சாயந்தரம் மேகநாதன் இருபது ரூவா தாரேன்னு சொல்லியிருக்கான்  என்கிறான். சாயந்தரம் ரெடியா இரு…டாக்டர்ட்டப் போவோம்  என்று அவன் சொல்லும்போது…எதுக்குப்பா…சம்பளம் வாங்கிப் போயிக்கிடலாமே என்க, அவன் கோபமுறுகிறான். இப்டி மறுத்துப் பேசினா எப்டி? என்று செல்லமாய்க் கண்டிக்க…அவர்கள் இருவர் இடையிலான அன்பின் பரிமாணம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இல்லாமை இருக்கும் இடத்தில் மனசு நிறைந்து கிடக்கும்போது வீடே செல்வச் செழிப்புள்ள இடமாக மாறி விடுகிறது. சுற்றி இருப்பவர்கள் உதவி செய்பவர்களாக இருந்து விடுகையில் வாழ்க்கை பலப்பட்டு விடுகிறது. வாழ்க்கை நிறைந்தே கிடக்கிறது. சீனிவாசன் நேரம் கழித்து வெறும் கையோடு வீடு திரும்புகிறான். அவனுக்கென்று எடுத்து வைத்திருந்த உணவை அவன் முன்னே கொண்டு வந்து வைத்து பசியாறட்டும் முதலில் என்று படுத்திருக்கிறாள் செல்லப்பாப்பா. திடீரென்று அந்தப் பழ வாசனை அங்கே அடிக்க, ஆச்சரியத்துடன் எழுந்து உட்கார்ந்து கொள்கிறாள். அவன் குனிந்து மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்று முடிகிறது கதை. நிதானத்தோடும், அன்பு மனத்தோடும் சிந்தித்துச் செயல்படுபவர்கள் துன்பமான விளைவுகளிலிருந்து தங்களைத் தாங்களே சுலபமாய் விடுவித்துக் கொள்கிறார்கள்.  என்னவொரு முதிரிச்சியான செயல்பாடு என்று வியந்து போகிறோம். ஆழ்ந்த ரசனையும், மனங்களை அளவிடும் தன்மையும், அதனால் விளையும் ஆழமான எழுத்து வன்மையும் வண்ணநிலவனின் இந்தக் கதையின் வாசிப்பு அனுபவத்தில் நம்மை வியக்க வைக்கிறது. கதை முடிந்த பின்பும் பலாப்பழம் மணத்துக் கொண்டேயிருக்கிறது.
      நான் சாதாரண வாசகனாய்த்தான் இருந்தேன். ஜனரஞ்சகமான எழுத்துக்க ளில்தான் என் வாசிப்பைத் துவக்கினேன். பொழுது போனதுதான் மிச்சம். ஆனால் மனதை ஒன்றும் செய்யவில்லை. படித்து விட்டு நான்கு நாட்களுக்கேனும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க வாய்க்கவேயில்லை. வழிகாட்டுபவர் எவருமில்லை. எல்லாமும் நம்முடைய சொந்தத் தேடலில்தான் நிகழ்ந்தாக வேண்டும். தீபம் பத்திரிகையிலிருந்துதான் வாசிப்பு மாறுபாடு என்பது ஆரம்பித்தது. சகோதரரின் உபயத்தில் மதுரையிலிருந்து ஊர் திரும்பும்போது வாங்கி வந்து படிக்கக் கிடைத்தது. அதன்பின்தான் உள்ளூர் நூலகத்தில் வாசிப்பின் திசை மாற ஆரம்பித்தது. மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் என்று ஒரு வகை இருப்பதும், 1930 களிலிருந்து ஜெயகாந்தன் வரையிலான படைப்பாளிகளைத் தேடி அணுக வேண்டிய அவசியமும் வாசிப்பின் சுவாரஸ்யத்தை, அவசியத்தை, ஆழத்தை உணர்த்தியது. பிறகுதான் இப்படியான படைப்புக்களை மட்டுமே படிப்பது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னுள்ளிருந்த ஆழ்ந்த ரசனை எனக்கே தெரிய ஆரம்பித்தது அந்தக் கால கட்டம்தான். இப்படியெல்லாமும் எழுத முடியுமா என்று வியப்பு மேலிட்ட அந்தப் பொழுதுகளில் கொஞ்சம் எழுதவும் கற்றது அப்போதுதான். வார மாத இதழ்கள் படிப்படியாக என் எழுத்துக்களை ஏற்றுக் கொண்ட போது மன ஊக்கம் பெற்று இன்றுவரை எனக்கென்று படிந்து போன ஒரு எழுத்துவகைமையில் படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கிறேன் நான். ஆனாலும் இன்னும் எட்டப்படாத ஒன்று இருந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அதுவும் நானாக உணர்ந்து கொண்டதுதான். எவரும் சொல்லி அறிந்ததில்லை. வந்த வழியும் அப்படித்தானே…செல்லும் வழியையும் நாம்தானே நிர்ணயிக்க வேண்டும்.   எப்போதோ எழுதப்பட்டுவிட்ட  விழுமியங்களான அப்படைப்புக்கள் இன்றுவரை நிற்பது கண்டு வியந்து ஏங்குகிறது மனம். இன்றாவது சில  அப்படி எழுதி விட மாட்டோமா என்று தொடர்ந்து முயலுகிறது மனம்.
அப்படி ஒன்றுதான் இது. வண்ணநிலவனின் “மிருகம்“ . இக்கதையைப் படிக்கும்போது கலைக் கண்களோடு காமிரா வழியாகப் பயணித்துப் படித்தால்  வாசிப்பிலும் சிறப்பாக விளங்கும் என்று உணர்த்தியது எனக்கு. எதைச் சொல்ல வந்தாரோ அதை வாசகர்களுக்கு உணர்த்துவதுபோல் கதையின் தலைப்பை வெளிப்படையாய்த்  தேர்ந்தெடுத்திருந்தார் என்றால் சாதாரண வாசகன் எளிமையாகப் புரிந்து கொண்டு …இவ்வளவுதானா?  என்று நகர்ந்து விடக் கூடும். அம்மாதிரித் தலைப்பு வைக்காததே படைப்பாளியின் மேன்மை.  சாதாரண வாசகனுக்கான ஸ்வாரஸ்யம் எதுவும் இப் படைப்புக்களில் தரப்படுவதில்லை. எல்லாவற்றையும் நானே சொல்வதானால்? விரக்திதான் எழுதுபவனுக்கு வரும். படைப்பாளியின் வேலை அதுவல்ல. வாசகனால் அறியப்படாத ஒன்றை, அவனால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றை, தான் கற்பனையில் அனுபவித்து, உணர்ந்து, தானும் அனுபவிக்காத ஒன்றை மனக் கண்ணில் கொண்டு வந்து அதை எழுத்தில் சூட்சுமமாக வடிக்கும்போது, இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒரு தீவிர வாசிப்பாளனால் கண்டடையப்படுமானால் அதுதான் அந்தப் படைப்பாளிக்கும் வெற்றி. அதைப் படித்து உணர்ந்த வாசகனுக்கும் பெருமை. உணர்த்த  நினைத்ததை உரையாடல்கள் மூலம் நிகழ்த்தாமல், மன உணர்வுகள் மூலம் பிணைத்துப் பிணைத்து காட்சிகளைக் கலைப் படமாக்கி, என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதைப் படிக்கும் வாசகன் படைப்பாளியின் அந்த உலகைக் கண்டடையும் முயற்சி வாசிப்பின் உச்சமாக அமைந்து வெற்றி கொள்கிறது.
இந்தக் கதையில் ஒரு காகம், ஒரு நாய், ஒரு மனிதன், பாழடைந்த வீடு, இதுதான் பாத்திரங்கள். என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை வாசகன்தான் படைப்பாளியின் வரிக்கு வரியான எழுத்தைப் பின்தொடர்ந்து கண்டடைய வேண்டும். முதல் வாசிப்பில் எனக்கும் பிடிபடவில்லைதான். எதற்காக இப்டிச் சொல்கிறார்…என்று மீண்டும் மீண்டும் படித்த போது, நான் சொந்த ஊருக்குப் போயிருந்தநாட்களில் குடியிருந்த தெருவின் பல வீடுகள் சிதிலமடைந்திருந்ததும், குடியிருந்த வீடே பகுதி பகுதியாக இடிந்து கிடந்ததும், இடிந்த வீட்டின் நடுவில் நின்று அம்மாவோடும், அப்பாவோடும் கழித்த காலங்களை மனக் கண்ணில் கொண்டு வந்து உணர்ச்சி மேலிட்டதும், அறிந்தும் அறியப்படாமல் போன பல நிகழ்வுகள் வழி நடத்திச் சென்ற காலகட்டங்களும் அழியாது மனக்கண்ணில்  நின்று அவை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதும்….ஆகிய அழியாக் காட்சிகள், இந்தப் படைப்பினை உய்த்துணரப் பெரிதும் உதவின என்று புரிந்து கொண்டேன். பஞ்சம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லாமல் காட்சிகளின் மூலமாய், அதனை விவரித்துக் கொண்டே செல்வதன் வழி, பாழடைந்த வீடும், குட்டிச் சுவரில் அமர்ந்திருக்கும் ஒற்றைக் காகமும் தத்தித் தத்தி அருகருகே அமர்ந்து ஏதேனும் இரை கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்பும்,  அபூர்வமாய் அந்தத் தெருவுக்குள் நுழையும் ஒற்றை மனிதனின் தடங்களைப் பின்பற்றி வரும் ஒரு நாயும்….குடியிருந்த வீட்டின் அழிந்து பட்ட தற்போதைய சூழலும்….இப்படி எல்லாமாகச் சேர்ந்து நமக்கு ஒரு சோகமான, அடர்த்தியான மன உணர்வைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.
அந்தத் தெருவிலிருந்து நாம் வெளியேறும்போது பாதிப்புக்குள்ளானவர்களில் ஒருவனாய் நம்மையே நாம் உணர்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இலக்கியம் இப்படிக் காணாததைக் கண்டடையும்போது மெய் சிலிர்க்க வைத்து விடுகிறது. இந்த மொத்தக் கதைகளின் தொகுதியில் தலைசிறந்த படைப்பில் ஒன்றாக “மிருகம்” என்ற இச்சிறுகதையை நான் உணர்கிறேன்.
னிதனுடைய மனநிலை அடிக்கடி மாறக் கூடியது. சூழலுக்கேற்றாற்போல் மாறும் மனநிலையில் அவனுடைய செயல்பாடுகளும் மாறுபடுகின்றன. அதிலும் வாழ்க்கைப் படகைச் சீராக ஓட்டிச் செல்ல முடியாத காரணிகளினால் துன்பத்திற்கும், மனச் சங்கடத்திற்கும் ஆளாகி அடிக்கடி வெவ்வேறு மனநிலைகளுக்கு ஆட்பட்டுச் சிதைந்து போகிறான். அம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் பார்க்கும் பொருட்களிலெல்லாம் பேசும் இடங்களிலிலெல்லாம் அல்லது பேச முற்படும் நபர்களிடமெல்லாம் காரணமில்லாமல் எரிந்து விழுவதும், தேவையில்லாமல் கோபப் படுவதும், அர்த்தமேயில்லாமல் பேசுவதும், வீட்டில் நெருக்கமான உறவுகளிடம் சட்டுச் சட்டென்று கடுமையான வார்த்தைகளில் கொந்தளிப்பதும் அவனது நடப்பாக மாறிப் போகிறது. தான் செய்வது தேவையில்லாதது, அர்த்தமற்றது, காரணமேயில்லாதது என்று உணர்ந்தும் அவனால் அவனது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
மன நல ரீதியாக இதற்கான காரணங்களை ஆராய முற்பட்டால் இளம் வயதிலிருந்து பாதிக்கப்பட்ட எத்தனையோ விஷயங்கள் உள்ளத்தின் ஆழத்திற்குள் படிந்து போய், அதே சமயத்தில் அவை இன்னதென்று இனம் புரியாத நிலையில், அது தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது என்பதை அறுதியிட்டு உணர முடியாமல், அதற்கான திராணியின்றி அல்லது எதற்காக அதனை ஆராய வேண்டும் என்கிற மன வீம்பில் மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டே செல்பவர்கள் அநேகர்.
இம்மாதிரி இந்த வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விஷயமோ அல்லது பல விஷயங்களோ நம்மை விடாது தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன என்பது நாம் உணர்ந்தோ அல்லது உணராமலோ உண்மையாக இருந்து கொண்டிருக்கிறது. இப்படியாகத்தான் இந்தக் கதை நாயகனின் நடவடிக்கைகள் அவனையறியாதும், அவனை மீறியும் நடந்து போகின்றன. ஒரு குறிப்பிட்ட விஷயம் அவனைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. ஏற்கனவே இயலாமையில் இருந்து கொண்டிருக்கும் சுய பச்சாதாபம் உள்ள அவனுக்கு, வாழ்க்கையின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதையும் வெற்றி கொள்ள முடியாத நிலையில் தவிக்கும் அவனுக்கு….இவைதான் காரணங்கள் என்று அறிந்தும் அறியா நிலையில் தொட்டதற்கெல்லாம் கோபமும் எரிச்சலும் ஏற்பட அவனைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் அந்த ஒரு விஷயத்தின் மீது தீராப் பழி படிந்து போகிறது.
கதையின் பெயர் “வெளிச்சம்“ .  நியாயமாகப் பார்த்தால் வெளிச்சம் ஒரு நாளின் பகல் பொழுதிலும், குறிப்பாக இரவுப் பொழுதுகளிலும் மனிதனுக்குத் தேவையான, தவிர்க்க முடியாமல் இருக்கும் ஒன்று. ஆனால் அதுவே அளவிட முடியாமல் போகும்போதோ அல்லது தேவையில்லாமல் தேவையில்லாத இடத்தில், நேரத்தில் படரும்போதோ அதன் மீது எரிச்சலும் கோபமும் ஏற்பட அதுவே வேண்டாததாக அமைகிறது. அதற்கான மனக் காரணங்கள் அந்தச் செயலைத் தூண்டுகின்றன என்பது மனோதத்துவ ரீதியாக உணரப்பட வேண்டியது.
மெர்க்குரி விளக்கின் தீமைகளைப்பற்றி  உலகம் பூராவும் போய்ப் பிரசங்கம் செய்யத் தேவையான அளவுக்கு அவனுக்கும் அந்த மெர்க்குரி விளக்குக்கும் இடையே பெரிய விரோதம் வளர்ந்து போயிருந்தது. இந்தப் பூமியில் இப்போது அவனுக்குள்ள ஒரே எதிரி இந்த மெர்க்குரி விளக்குதான்….என்று கதையையே இந்த மையத்தை வைத்துத்தான் ஆரம்பிக்கிறார் வண்ணநிலவன்.
விளக்கு வெளிச்சம் கொடுக்கப் போகுது….அது நல்லதுதானே….அது மேலே ஏன் கோபம் வரணும்? அதுவும் வீட்டு வாசல்ல தெருக் கம்பத்துலர்ந்து வர்ற அந்த வெளிச்சம் இலவசமாக் கிடைக்கிற வசதிதானே….என்று படிப்பவர்கள் மனதில் சட்டென்று அந்த மேலோட்டமான உணர்வுதான் தோன்றும்.
ஆனால் சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால்தான் அதற்கான காரணங்கள் நமக்குப் புலப்படத் துவங்கும். வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியா நிலையில் இருக்கும் ஒருவன், பொருளாதார ரீதியாகப் பற்றாக் குறையில் கழிக்கும் ஒருவன், இந்த இயலாமைகளின் வெளிப்பாடாக அவனைத் தொந்தரவு செய்யும் விஷயமாக அந்த மெர்க்குரி வெளிச்சத்தை வெறுக்கிறான். வீட்டிற்கு வரும்போதெல்லாம், வீட்டில் இருக்கும் போதெல்லாம் தன்னை அது மிகவும் துன்புறுத்துகிறது என்று நினைத்துக் கோபமுறுகிறான். முதலில் எடுத்ததற்கெல்லாம், தொட்டதற்கெல்லாம் அர்த்தமில்லாமலும், அர்த்தத்தோடும் கோபம் கொள்ளும் அவன், பிற்பாடு நேரடியாக அந்த விளக்கு வெளிச்சத்தின் மீது தன் வெறுப்பைப் பாய்ச்சுகிறான். வீட்டிற்குள் நுழையும் அந்த வெளிச்சத்தை மறைக்க ஒரு திரைச்சீலை கூட  வாங்க முடியாத இழி நிலையில் இருக்கும் தன் இருப்பை நினைத்து நொந்து போகிறான். அறை நெடுகிலும் ஓடி ஓடிக் காலால் மிதித்து, கைகளால் அடித்து அந்த ஒளியை விரட்ட வேண்டும்…வெளிச்சத்துக்கு…வெறும் விளக்கு வெளிச்சத்துக்கு இத்தனை வல்லமையா? அந்த விளக்கினால் அந்த வீடே நிர்மூலமாகிக் கொண்டிருக்கிறதாய்த் தோன்றுகிறது அவனுக்கு. அவர்கள் இருவருக்குள்ளும் வீணாய்ச் சண்டை வருகிறது இதனால்…வெளிச்சம் இத்தனை இடர்பாடுகளையா உண்டு பண்ணும்? அப்படியானால் அது எத்தனை கொடுமையானது? என்று அவனின் எண்ணங்கள் உச்சத்திற்குச் செல்கின்றன.
திடீரென்று எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியோ போய்…தெருவின் இரண்டு பக்கமும் பார்வையை வீசுகிறான். கீழே கிடந்த கற்களைப் பொறுக்கி அந்த மெர்க்குரி பல்பை நோக்கிக் குறிபார்த்து வீச  நான்காவது கல் பல்பில் பட்டு உடைந்து கண்ணாடிச் சில்லுகள் தெறித்து விழுகின்றன. படிக்கும் நமக்கும் அப்பாடா….என்றிருக்கிறது. ஒரு வழியாய் அவனின் மன உளைச்சலுக்குத் தீர்வு வந்ததே  என்று நிம்மதிப்படுகிறது நம் மனசு.
சிகரங்களைத் தொட்ட சிறுகதைகள் என்று வண்ணநிலவனின் பல கதைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ரெண்டு பக்கங்கள், மூணு பக்கங்கள்தானே என்று நினைத்து விட முடியாது. அது எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது, எதை மைய ஓட்டமாக உணர்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்வோமானால் படைப்பாளியின் மேன்மை புரியும்.  வெறும் பக்கங்கள் அளவிடுவதில்லை படைப்பின் மதிப்பை. இன்று எழுதப்படுவதாகச் சொல்லப்படும் எத்தனையோ வகைமையான படைப்புக்களை அன்றே அந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்களே என்றோ எழுதி முடித்து விட்டார்கள் என்றுதான் நான் சொல்லுவேன். அவைகளைத் திரும்பத் திரும்ப மறு வாசிப்பு செய்வதன் மூலமாகத்தான் நாம் நம்மை ஓரளவு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை ஒரு தீவிர வாசகன் என்றும் மறுத்து விட முடியாது. வண்ணநிலவனின் படைப்புக்கள் காலத்தால் அழியாதவையாய் நிலை பெற்றுள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------










கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...