21 அக்டோபர் 2018

வண்ணநிலவனின் ”எம்.எல்.“ நாவல் வாசிப்பனுபவம்



வண்ணநிலவனின் ”எம்.எல்.“

      நாவல் வாசிப்பனுபவம்                             
      ண்ணநிலவன் எழுதிய “எம்.எல்” என்ற இந்த நாவலை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்தாரின் வாசிப்பிற்குப் பிறகு இரண்டாவதாக வாசித்து முடித்த பெருந்தகை அநேகமாக நானாகத்தான் இருக்க வேண்டும். திரு வண்ணதாசன் அவர்கள் சொல்வனம் இணைய இதழில் தொடர்ச்சியாகப் படிக்காமல் சற்றே விட்டு விட்டுப் படித்ததாகச் சொல்லியிருந்தார். உடனடியாக நான் உட்கார்ந்து படித்து முடித்ததற்குக் காரணம் முதலில் அந்தத் தலைப்பில் ஏற்பட்ட ஈர்ப்பு. அடுத்ததாக அறுபது எழுபதுகளில் தமிழ்நாட்டில் சாரு மஜூம்தாரின் மார்க்ஸிய – லெனினியக் கட்சி பரவிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் கால கட்டத்தைச் சித்தரிப்பதாக அமைந்த இந்த நாவலின் கதைப்போக்கு.
      அவரது தவறான வழிகாட்டுதலில் இழுத்துச் செல்லப்பட்ட பலரை, நான் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்க முடிந்தது என்று வண்ணநிலவன் தனது குறிப்பில் சொல்லுகிறார். பெரு நகரமான சென்னையில் அது பரவலாய் இருந்திருக்கலாம். அதே சமயம் அவர்களின் கொள்கைகள் துண்டுப் பிரசுரங்களாக தமிழகத்தின் சின்னஞ்சிறு நகரங்களில் கூட அங்கங்கே தூவி விடப்பட்டுக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை.
      தன்னோடு பேசுவது, பழகுவது யார் என்று தெரியாமலேயே பல இளைஞர்கள் அந்தப் புதிய நபர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, வேலை வெட்டி இல்லாத கால கட்டத்தில் வெட்டியாய்ப் பொழுது போவதற்கு இதையாவது கேட்போமே என்று நேரம் காலம் பார்க்காமல் இந்தக் கட்சி ஆட்களின் பேச்சிலே மயங்கிக் கிடந்தார்கள். பின்னால் ஆபத்து காத்திருக்கிறது என்பதை அறியாத அப்பாவிகளாய்…!
      அப்படி மயங்கிக் கிடந்து,  வீட்டுக்கு வந்த விருந்தினர் என்று மட்டுமே அறிந்து கொண்டு அவரது பின்புலம் தெரியாமல் பழகி, காவல் துறையின் சந்தேகத்திற்கு ஆளாகி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தோடு குய்யோ முறையோ என்று அழுது புலம்பி, பல நாட்களுக்கு எங்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதே கூடத் தெரியாமல், என்ன ஆனான் என்பதும் புரியாமல் உற்றார் உறவினர் அலமந்து கிடக்க, திடீரென்று ஒரு நாள் ஆளை விடுங்கடா சாமி….என்று வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் அந்த  இளைஞர்கள். மனதில் பட்டதை எழுதிக் கொடுங்கள் என்று கையெழுத்திட்டு வாங்கி ஆளை விட்டனர்.  
      இந்த பாருங்க…உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீங்க சார்ந்திருக்கிற கட்சி, அமைப்புகளோட கொள்கைகளைப் பரப்பணும்னா அதுக்கு எங்கயாச்சும் லாட்ஜ்ல ரூம் எடுத்திட்டு ஆளுகளக் கூட்டிச்  செய்ய வேண்டிதானங்க…? எதுக்குங்க எங்கள மாதிரி அப்பாவிகளோட வீடுகளத் தேர்ந்தெடுக்கிறீங்க…? எங்க அப்பா உங்களுக்கு என்ன துரோகம் பண்ணினாரு? அவருண்டு, அவர் வேலையுண்டுன்னு கஷ்டப்பட்டு உழைச்சி, குடும்பத்தக் காப்பாத்திட்டிருக்காரு….அவரோட நீங்க வந்து பேசப் போக, நீங்க இன்ன மாதிரி ஆளுன்னு அவருக்குத் தெரியாமப் போக….அப்பாவோட ஃபிரண்டுன்னு நாங்களும் உங்களோட பழகப்போக கடைசில எங்களச் சந்தி சிரிக்க வச்சிட்டீங்க…இதுதான் உங்க பாலிஸியோட லட்சணமா? ஊருல எம்புட்டுப் பேரு வெட்டியாத் திரியறான்….அவிங்களாப் பார்த்துப் பிடிக்க வேண்டிதானங்க…நாங்கள்லாம், படிச்சமா, வேலைக்குப் போனமா, குடும்பத்தக் காப்பாத்தினமான்னு இருக்கிற சராசரியான ஆளுங்க….எங்களோட தொடர்பு வச்சு, வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்கிறீங்க….? நான் சுத்தமா துடைச்சு எழுதிக் கொடுத்திடுவேங்க…எங்க அப்பா அம்பது வருஷமா இந்த ஊர்ல நல்ல பேரோட இருக்கிறவரு…அவர் பேரெல்லாம் அவ்வளவு சாதாரணமா நீங்க கெடுத்திட முடியாது…போலீசுக்கே தெரியும்….சாமி எப்படிப்பட்டவருன்னு…அவரு பிள்ளைங்க நாங்க…எங்களப்பத்தியும் இந்த ஊர் அறியும்…..தெளிவ்வா….எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திட்டேன்….எப்படா கவர்ன்மென்ட் வேல கிடைக்கும்….வண்டியக் கட்டலாம்னு காத்துக்கிட்டுக் கெடக்கேன்….சகுனி மாதிரிப் பூரப் பார்க்கிறீங்களே……
      என்று சொல்லி காவல் துறையிடம் உண்மை உரைத்து, சரண்டராகி,  வெளியே வந்த இளைஞர்கள் அப்போது பலர். இது சின்னச் சின்ன ஊர்களிலும் நடந்தது. ஆனாலும் அந்த இளைஞர்களை வைத்து அந்தப் போராளிகளைப் பிடித்தார்கள் போலீஸார். இவர்கள் ஆழம் தெரியாமல் காலை விட்ட இடங்கள் இம்மாதிரிச் சில. இவர்கள் கணக்கு என்றுமே சரியாய் இருந்ததில்லை. முன் பின் தெரியாத ஊர்களில் மூக்கை நுழைத்தால்…இடிதானே கிடைக்கும்?
      ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாமல் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அரசியல் தீர்வு என்று நம்பிய சாரு மஜூம்தாரும் அவரை நம்பிய கூட்டமும் பலம் பெற முடியாமல் படிப்படியாக நைந்து போனதும், குறி வைத்து ஒடுக்கப்பட்டதும் தமிழகத்தின் வெற்றிகரமான வரலாறு.
      தீவிரவாதம்  என்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதை அறுபது எழுபதுகளின் தமிழகத்தின் இந்தச் சூழ்நிலையை முன் வைத்து ஒரு நாவலின் வழி சொல்ல வேண்டும் என்கிற வண்ணநிலவனின் ஆவல் இந்தப் புத்தகத்தின் மூலம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
      மொத்தமுள்ள 23 அத்தியாயங்களில் பதினேழு அத்தியாயங்களுக்குப் பிறகுதான் ஓரளவு இந்தப் பிரச்னை நாவலில் சூடு பிடிக்கிறது என்று சொல்லலாம். அதுவரை குடும்பம், வியாபாரம், தொழில், விருத்தி என்றே கழிகிறது.   அப்பு என்று ஒரு பாத்திரம் வருகிறது நாவலில். அநேகமாக தமிழகத்தில் இவரை அந்தக் கால கட்டத்தில் பலர் அறிந்திருக்கலாம். உண்மையான கதாபாத்திரமே நாவலிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. பின்னாளில் என்கவுன்டரில் அவர் கொல்லப்பட்டதாக முடிவு தெரியவருகிறது. தமிழகத்தில் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தவர் அவர் எனலாம். இவர்களது கொள்கைகளுக்கு ஆட்களைத் திரட்டுகிற வேலையைச் செய்தவர் அவரும் அவரால் ஈர்க்கப்பட்ட சிலரும்.
      ஆனால் ஜனங்கள் காலங்காலமாக வாழ்க்கை நடத்தி வருவது போலவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடும்பம், வேலை அல்லது தொழில், உறவுகள், நண்பர்கள் என்று தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய வாழ்க்கை முறையில் எந்தத் தவறும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. ஜனங்களுடைய மனோபாவம் சாருமஜூம்தார், கனுஸன்யால், அப்புவுக்கும் கூடத் தெரியும். ஆனாலும் சீனப்புரட்சி, மாசேதுங், மார்க்ஸ், லெனின் இவர்களுடைய கொள்கைகள் வழிமுறைகளில் இருந்த அவர்களுடைய கண்மூடித்தனமான பற்றுதலும், நம்பிக்கையும் அவர்களை வழி நடத்தியது.தாங்கள் வித்தியாச மானவர்கள் என்று அவர்கள் தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் உலகிலுள்ள எல்லா மக்களையும்போல, அவர்களும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுவே சதம் என்றுதான் வாழ்ந்தார்கள்….. – வண்ணநிலவனின் இந்த வரிகளில்தான் எத்தனை யதார்த்தம்….?
      மதுரை நகரைக் களமாகக் கொண்டு இந்த நாவல் நடை பயி்ல்கிறது. ஸ்டடி சர்க்கிள் என்பதாக சிறு சிறு அமைப்பை அங்கங்கே ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து யாரும் அறியாவண்ணம் சின்னச் சின்னக் குழுக்களாகக் கூடிக் கூடிப் பேசுதல், கொள்கைகளை விரித்துரைத்தல் என்பதாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கோபால் பிள்ளை என்கிற கம்யூனிஸ்ட் கட்சியில் 1953 முதல் பிரபலமாயிருந்த பிரமுகரை முதலில் சந்தித்து, அவர் மூலம் ஆயுதப்புரட்சிக்கான கருத்துக்களை வித்திட்டு மெல்ல மெல்லப் பரப்ப வேண்டும் என்கிற திட்டத்துடன் மஜூம்தார் மதுரையில் காலடி வைக்கும் விதமாக நாவல் துவங்கி படிப்படியாக நகர்ந்து செல்கிறது.
      மஜூம்தார் கோபால் பிள்ளையை முதலில் சந்திக்கும் கட்டம். எய்ட் டாக்குமென்ட்ஸ் என்கிற சிறு சிறு பிரசுரங்களை அவரிடம் கொடுக்கிறார். அதைப் பார்த்து விட்டு கோபால் பிள்ளை  கேட்கிறார். நீங்க எதுக்கு சைனா லைன் எடுத்தீங்க? அது நம்ம நாட்டு மேல படை எடுத்த நாடு. அதனுடைய நடைமுறை எல்லாம் நம்ம நாட்டுக்கு ஒத்து வராது… என்கிறார்.
      ஆயுதப் புரட்சி ஒண்ணுதான் ஜனங்களோட கஷ்டங்களுக்குத் தீர்வு. சைனா நமக்கு இதிலே நிச்சயம் உதவி செய்யும்…என்கிறார் அவர்.
      மன்னிக்கணும் மஜூம்தார்…எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை….தெலுங்கானாவுல என்ன நடந்தது? நம்ம ஜனங்களை வீணா பிரச்னைல மாட்டி விடாதீங்க….
ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே….
அது ஆயுதப் புரட்சியா? நான் ஏத்துக்கலை….நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிடும். அங்கே நடந்தது குத்தகைத் தகராறு….. என்று ஆரம்பத்திலேயே மறுத்து விடுகிறார் கோபால் பிள்ளை. இருந்தாலும் ஸ்டடி சர்க்கிள் எப்படியும் ஆரம்பித்தாக வேண்டும் என்கிற முனைப்பில் பாலகிருஷ்ணன் மற்றும் துரைப்பாண்டி ஆகியோருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னாளில் இந்த இக்கட்டுகளிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். இந்த ஆரம்பகட்டப் பேச்சு வார்த்தையிலிருந்து ஒவ்வொரு நகர்வும் பீட்டர் என்கிற இன்ஃபார்மர் மூலமாகப் போலீசுக்குத் தகவல் போய்க்கொண்டேயிருக்கிறது….நாவல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளுக்கும், ஆயுதப்புரட்சிக்கும் உள்ள ஒட்டாத வேறுபாடுகளை அங்கங்கே தொட்டுக் காட்டிக் கொண்டே ஸ்வாரஸ்யமாக நகர்ந்து செல்கிறது.
கோபால்பிள்ளையின் உறவினர் சுப்பிரமண்யபிள்ளையின் மகன் சோமு தெரிந்தும் தெரியாமலும் ஈடுபடுகிறான். படிப்படியாக ஈர்க்கப்படுகிறான். கூடவே துரைப்பாண்டி,  பிச்சாண்டி, வெள்ளையப்பன் என்று சேர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் போலீஸ் என்கொயரி என்று வந்துவிட சோமு அதிர்ந்து போகிறான். பிறகு நிலமையை உணர்ந்து பயந்து சுப்ரமணிய பிள்ளையின் ஜவுளிக்கடைக்கு ஒழுங்காக வேலைக்கு வர ஆரம்பிக்கிறான். தகவல் அறிந்து மருமகன் சோமுவிடம் லெட்சுமணபிள்ளை ஆதரவோடு பேசுகிறார். தன் பெண்ணின் வாழ்க்கை பாழ்பட்டுப் போகுமோ என்று பயந்திருந்தவருக்கு வெளிச்சம் கிட்டுகிறது.
ஆயுதப்புரட்சி என்பது நமக்கு சரிவராது என்கிற கருத்தினை முன்வைக்கும் வாதம் –
“நம்ம நாட்டிலே பிரச்சனைகள், கஷ்டங்கள் இல்லைன்னு சொல்லலை. ஆனா என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு அத்தனை பேருக்கும் தெரியும். தங்களுடைய பிரச்னைகளுக்காக ஜனங்கள் போராடலாம். பத்திரிகையிலே எழுதலாம். மேடை போட்டு பிரச்னைகளைப் பற்றிப் பேசலாம். நமக்குப் பிடிச்ச மாதிரி வாழலாம். பிடிச்ச வேலையைச் செய்யலாம். சைனாவிலே இதெல்லாம் நடக்குமா? ரஷ்யாவிலே நடக்குமா? அங்கிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்ன சொல்றாங்களோ அதுதான் வேத வாக்கு. மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இங்க இந்த சாரு மஜூம்தார் நிலப்பிரபுக்களை ஒழிக்கணும்ங்கிறார்ஆயுதப்புரட்சி வரணும்னு சொல்கிற அளவுக்கு அவருக்கு சுதந்திரம் தரப்பட்டிருக்கு. சைனாவிலே இந்த மாதிரி மாசேதுங்கை எதிர்த்துப் பேச முடியுமா? அந்தக் கவர்ன்மென்டை எதிர்த்து புரட்சி நடத்தப் போறேன்னு சொல்ல முடியுமா?
அப்போ மார்க்ஸிஸம், லெனினிஸம், மாவோயிஸம் எல்லாம் தப்பா?
மார்க்ஸ் ஏழைகள் கஷ்டப்படுகிறதைப் பார்த்து ஒரு கொள்கையை உருவாக்கினார். மூலதனம் எப்படி உருவாகிறதுன்னு ஆராய்ந்தார். அப்போ அவர் வாழ்ந்த ஜெர்மனி, பிரிட்டனிலே எல்லாம் தொழில்கள் எல்லாம் தனியார் கிட்டேதான் இருந்தது. தனியாரோட பங்களிப்புதான் அதிகம். தொழிலாளிகள், சாதாரண மக்களோட நிலமை ரொம்ப மோசமா இருந்தது. முதலாளிகளுக்குக் கடிவாளம் போட மார்க்ஸ் நினைச்சார். அவருடைய தத்துவம் எல்லாமே ஒரு சிலரிடமே செல்வம் குவிகிறது என்பதற்கு எதிரானதுதான். பிறகு வந்த லெனின் மார்க்ஸ் கொள்கைகளை விரிவுபடுத்தினார்.சோஷலிஸத்தை முன் வைத்தார். மக்களைத் திரட்டினார்…ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்கே எல்லாம் அரசுடமை ஆகிவிட்டன. தனியுடமை ஒழிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிதான் உற்பத்தியைத் தீர்மானித்தது. ஆனால் ரஷ்ய மக்கள் அனைவரும் சுதந்திரமற்றவர்களாகிவிட்டார்கள். கம்யூனிஸ்ட் சர்வாதிகாரம் வந்து விட்டது. சைனாவிலும் இதுதான் நடந்தது. ரஷ்ய சீன அரசுகள் மனிதனின் சுதந்திரத்தையும் அவனது பேச்சுரிமைகளையும் சேர்த்தே ஒழித்து விட்டன. கலாச்சாரப் பண்பாட்டு சுதந்திரம்ங்கிறது இல்லாமலே போயிடுச்சு. நம்ம நாட்டுலே எல்லா மதத்துக்காரங்களும் அவங்களோட கடவுளைக் கும்பிடலாம். விழாக்கள் நடத்தலாம்…எல்லா மதத்துலயும் ஏராளமான சடங்குகள் இருக்கு. இதையெல்லாம் செய்யலாம். இதுதான் சுதந்திரம்ங்கிறது. வெறும் சாப்பாடு வேலை மட்டுமே மனிதனுக்குப் போதாது. சாமி கும்பிட, சடங்குகள் செய்ய வழி இருக்கணும்….
நாம யாரையும் சாதாரணமா காயப்படுத்தக் கூட முடியாது. ஆயுதம் வன்முறை எல்லாம் ஒத்து வருமா? யாரோ ஒருத்தர் வந்தாரு, ஏதோ ஒரு கட்டுரையைக் கொடுத்தாருன்னு அவர் புறத்தாலே போக முடியுமா? கட்சியிலே இருந்துதான் ஜனங்களுக்கு நல்லது செய்யணும்ங்கிறதுல்ல….நம்மளவுல யாருக்காவது உபகாரம் செய்தாக்கூட அது நல்ல விஷயம்தான்….- இப்படியான அறிவுரைகளில் தெளிகிறான் சோமு. துரைப்பாண்டி மட்டும் கடைசிவரை சாரு மஜூம்தார்தான் தன் தலைவன் என்று அலைந்து கைதாகிறான்.
இறுதியாக இவ்வாறு முடிக்கிறார் நாவலை.
இந்த 2018லும் எத்தனையோ கட்சிகள், கருத்துகள் மனிதர்களைப் பிடித்துள்ளன. அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம் , கல்வி என்று பல கருத்துகள். தங்களுக்குப் பிடித்தமான கருத்துகளே சதமென்று நம்பி மனிதர்கள் மோதிக் கொள்கிறார்கள். இப்படித்தான் உலகம் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. என்று முடித்து தனது யதார்த்தமான, எளிய நடையினால் ஆயுதப்புரட்சியை மையப்படுத்திய அறுபது எழுபதுகள் காலகட்டத்தின் அந்தக் கொள்கைகள் நம் நாட்டுக்கு என்றும் பொருத்தமானவையல்ல என்பதை அழுத்தமாய் அழகான விவாதங்கள் மூலம் நிறுவுகிறார் வண்ணநிலவன்.நடந்ததும் அதுதானே…! அதைத் தெளிவுபடச் சொல்லியிருக்கிறார்.  இதுவரை தவறான கருத்துக் கொண்டவர்கள் கூட இந்த எளிய நாவலின் வழி தெளிவடைந்து தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளக் கூடும் என்கிற நம்பிக்கை நமக்கு இந்த நாவலை வாசித்து முடிக்கிறது போது எழுகிறது. தீவிரவாதம் என்பது எப்போதும் சாத்தியமில்லை என்கிற கருத்தை இந்நாவலின் வழி வலியுறுத்திய வண்ணநிலவன் 2018 ல் ஒரு சிறந்த மையக் கருத்தை முன் வைத்து நாவல் களமாகக் கொண்டு தன் முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
/-----------------------------/





கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...