14 ஜனவரி 2014

“மானசீகத் தந்தை”(சித்தூர்வி.நாகையா)கட்டுரை (காட்சிப்பிழை – சினிமா மாத ஆய்விதழ்) ஜூலை 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)

நாகையா-படம் images

-----------------------------------------

மிழ்த் திரையுலகம் தவறவிட்ட குணச்சித்திர நடிகர்கள் எத்தனையோ…! தவறவிட்ட என்றால் தொடர்ந்து வாய்ப்புக்கள் அளிக்கப்படாமல் போனது என்றும், வாய்ப்பே அளிக்காமல் போனது என்றும் கொள்ளலாம். ஆனால் அளிக்கக் கூடாது என்று இருந்தவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல இவர்கள். அத்தனை மதிப்புக்குரியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதீதத் திறமைசாலிகளாக வலம் வந்திருக்கிறார்கள். இதைச் சொல்லித்தான், இப்படியான உண்மையை நிறுவித்தான், இந்தத் துயரத்தை ஆற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. துயரம்தான். ஆற்றொணாத் துயரம். தன்னையே அர்ப்பணித்த சிகரங்களைத் தொட்ட தமிழ் சினிமா ரசிகனுக்கு இது தாளமுடியாத துயரம்தான்.

தொடர்ந்த வாய்ப்பில்லாமல் போன திறமைசாலிகள் என்றுதான் இவர்களை நினைக்க வேண்டியிருக்கிறது. அதனால் ரசிகர்களான நமக்கு நஷ்டம். தமிழ்த் திரையுலகத்திற்கு நஷ்டம். இந்த உலகம் என்று நல்ல படைப்பாளிகளையும், நல்ல கலைஞர்களையும் விடாமல் அரவணைத்துப் பாதுகாத்திருக்கிறது. அவரவர் பாடு அவரவருக்கு. இருக்கும் காலத்தில் இருக்கிறாரா என்று கண்டு கொள்ளாது. போற்றிப் பாதுகாக்காது. போன காலத்தில், அப்படியா? என்ற கேள்வியோடு நின்று கொள்ளும். இல்லாத காலத்தில், விடுங்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும். மறைந்த பின்னாலும் கூட அவர்களின் பெருமை பாடத் தெரியாதவர்கள்.

திரையுலகமும், திரை வடிவங்களும் எத்தனை மாறினாலும், அத்தனைக்கும் பொருந்தி வந்த நடிகர்கள் இவர்கள். கால மாற்றத்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். அடுத்தடுத்துத் தோன்றிக்கொண்டேயிருந்தாலும், ரசிகர்களுக்கு அலுக்காமல், சலிக்காமல், இவரைக் காண்பதே பெரும் பேறு என்பதுபோல் நின்று நிலைக்கக் கூடியவர்கள். அடுத்தடுத்த படங்களில் விடாமல் தோன்றியிருந்தாலும், அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறி, ஒன்றிலிருந்து ஒன்றை முற்றிலுமாக வேறுபடுத்திக் காட்டி, தங்களின் அனுபவம் மிக்க நடிப்பினாலும், அர்த்தமும், உணர்வுச் செறிவும் பொருந்திய வசன உச்சரிப்பினாலும், அந்த ஆழமான வசன உச்சரிப்புகளுக்கேற்ப தங்களின் பாந்தமான உடல் மொழியினாலும், தங்களைக் கம்பீரமாக நிலை நிறுத்தி, வெறும் பார்வையாளர்கள் அல்லாத, ஆன்ம பூர்வமான, ஆழமான, உணர்ச்சியும், பொறுப்பும் மிகுந்த ஆழ்ந்த ரசனைமிக்க பண்பட்ட ரசிகப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவர்கள் இந்தக் குணச்சித்திர நடிகர்கள். தாங்கள் இன்ன பெயருள்ள நடிகர்கள் என்பதை மறக்கடிக்கச் செய்து, இந்தந்தப் பெயரில் உலாவிய கதா பாத்திரங்கள் என்று தங்களை உலவ விட்டவர்கள். அப்பாவா வருவாரு, அண்ணனா வருவாரு, என்று வெறும் பார்வையாளனாய் இருந்த சாதாரணச் சராசரி ரசிகனின் மனதில் கூட ஒதுக்கப்படாத மதிப்பு மிக்க இடத்தைப் பிடித்திருந்தார்கள் இவர்கள்.

இவர்களின் விழிகள் நடித்தன. முகங்களில் உள்ள சதைகள் நடித்தன. உதடுகள் நடித்தன. உள்ளே சிரித்த பற்கள் நடித்தன. இந்த உதட்டுக்கும், இந்தப் பல் வரிசைக்கும், இந்த அமைப்புக் கொண்ட வாய்க்கும் இப்படித்தான் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும் என்ற அர்த்தத்தை ஆழமாய்ப் புரிந்தவர்கள். இவர்களின் புருவங்கள் நடித்தன. உடலோடு ஒட்டிய கைகளும்,விரல்களும், கால்களும் நடித்தன. மென்மையான புன்னகையும், உதட்டோரப் புன் சிரிப்பும், வாய் திறந்த மகிழ்ச்சியும், வாய்மூடிய மௌனமும், அந்த மௌனம் தந்த பார்வைகளும், அவைகள் வெளிப்படுத்திய அர்த்தம் பொதிந்த பாவங்களும் நடித்தன. சொல்லப்படும் கதைக்கு இவர்கள் பொருந்தினார்களா அல்லது இவர்களுக்காகக் கதை உருவாக்கப்பட்டதா என்ற கேள்விகள் நம் மனதில் எழ, உருவான கதைக்கும், உருவாக்கப்படும் கதைக்கும் எக்காலத்திலும் பொருந்தி வந்த ஜாம்பவான்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்கையில் நமக்கென்ன பயம் என்று திருப்தியோடும், நிறைவோடும், நம்பிக்கையோடும் வடிவமெடுத்த திரைப்படங்கள் எத்தனையோ. களம் கண்டு வெற்றிக் கொடியை நாட்டின. அந்த வெற்றி அந்தத் திரைப்படத்தின் நாயகனுக்கு மட்டுமே ஆன வெற்றி அல்ல. அல்லது இயக்குநருக்கு மட்டுமே உரியதான வெற்றியும் அல்ல. மொத்தக் கதைக்கும், காட்சிகளுக்கும், அவை சொல்லிச் சென்ற அறநெறிகளுக்கும், அர்த்தபூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளுக்கும், என எல்லோரும் சேர்ந்து கை கோர்த்து சேர்த்துத் தூக்கி நிறுத்திய வெற்றி என்பதைப் பறைசாற்றின.

ஆத்மார்த்தமாகச் சினிமாவை நெருங்கிய ரசிகர்கள் தங்களை அந்தக் குணச்சித்திர நடிகர்களின் இடங்களில் பொருத்திப் பார்த்துத் திருப்தி கொண்டார்கள். தனக்கு, தன் குடும்பத்தில் இப்படியொரு அப்பா இருக்கக் கூடாதா, இப்படியொரு அண்ணன் இருக்கக் கூடாதா? என்று ஏங்கி நின்றார்கள். அந்தக் குண விசாலமுள்ள பாத்திரங்களைத் தங்கள் கண் முன் நிறுத்திய அந்தப் பண்பட்ட நடிகர்களை மனதிற்குள் மதித்துப் போற்றினார்கள். திரையில் அவர்கள் சிரித்தால் இவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்கள் அழுதால் கூடவே இவர்களும் கண் கலங்கினார்கள். அந்தக் கதாபாத்திரங்களின் வழி சொல்லப்பட்ட செறிவான வாழ்க்கை நெறிகளைத் தங்கள் மனதிலும் நிறுத்திக் கொண்டார்கள். சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை, தாங்கள் கண்டு உள் வாங்கிய கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வழி உணர்ந்து, சுமுகமாகத் தீர்த்துக் கொண்டார்கள். ஒருவரை மிஞ்சி ஒருவர் எப்படி நல்லவர்களாய் இருக்க முயல்வது, இருந்து காண்பிப்பது என்கிற பாடம் இவர்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்கள் வழி பார்வையாளனின் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து போனது. நடைமுறையில் தடம் புரள இருந்த பலரும், இம்மாதிரியான நேர்மையும், ஒழுக்கமும், கடமையும், கட்டுப்பாடும் உள்ள கதா பாத்திரங்களைக் கண்டு, தங்கள் வாழ்க்கை நெறிகளையும், நிகழ்வுகளையும் திருத்திக் கொண்டார்கள். ஏதோவொரு வகையில் அவர்கள் கண்ட குடும்ப அமைப்பின் செம்மை இம்மாதிரிச் செழுமை வாய்ந்த திரைப்படங்களின் வழி, அதில் வாழ்ந்த பாத்திரங்களின் வழி பொருத்திப் பார்த்து உணர்ந்து செல்லும் வழியை மென்மையாக்கி, தூய்மைப் படுத்திக் கொண்டார்கள்.

கதாநாயகன், நாயகிகள் தவிர்த்து, இப்படியாய்த் தூண்களாய் நின்ற எத்தனையோ அற்புதமான குணச்சித்திர நடிகர்களைக் காலம் புறம் தள்ளி, கண்டு கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது தமிழ்த் திரையுலகம். அது வேண்டுமென்றே செய்தது என்றெல்லாம் சொல்வதற்கில்லை என்றாலும், இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை காலமாகி விட்டாரா என்று பல்லாயிரக் கணக்கான ரசிக நெஞ்சங்கள் தவிக்குமளவிற்கு மறந்திருக்கிறது. ஏன் இப்பொழுதெல்லாம் இவர்களைப் பார்க்க முடிவதில்லை என்று மனதிற்குள் புழுங்கியிருக்கிறான் தமிழ் சினிமாவின் தரமான ரசிகன். இதிலெல்லாம் இவரைப் போடலாமே, இந்தக் கதாபாத்திரத்திற்கு இவர்தானே கச்சிதமான பொருத்தம், இன்னும் நன்றாய் மெருகேற்றித் தூக்கி நிறுத்தியிருப்பாரே, கற்பனை வளமே இல்லாமல் ஏன் இப்படித் தேர்வு செய்கிறார்கள், இதற்கெல்லாம் அவர்தான் லாயக்கு என்று தங்களுக்குள்ளேயே துல்லியமாய் வரையறுத்துக் கொள்ளும் திறனோடு, அவர்களைக் காணாத ஏக்கத்தில் மனம் சலித்து நின்றார்கள். காலப் போக்கில் விலகி விலகி, படிப்படியாக ஒதுங்கி, இனி ஒன்றுமில்லை என்று எத்தனையோ ஆயிரம் ரசிகர்கள் தங்களை அந்தத் திரைப்பட மகானுபாவர்களிடமிருந்து ஆத்மார்த்தமாய்ப் பிரித்துக் கொள்ள முடியாமல், அமைதியாய் ஒதுங்கி காணாமல் போயிருக்கிறார்கள்.

காலத்தின் மாற்றத்தில் அடிப்படை ஆழமான ரசனை என்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விடுமா என்ன? எல்லாவற்றிற்கும் மூலம் என்கிற விதிகளில் என்றுமே எந்த மாற்றமும் ஏற்படுவதில்லையே…! அவற்றிலிருந்து பிரிந்த கிளைகளில் சுற்றுப் புற சூழல்களினால் நீர்த்துப் போனவைதானே அநேகம்…! அப்படி மாற்றம் ஏற்பட்டிருக்குமாயின், அவற்றிற்கும் மேன்மையாய் ஒன்று தோன்றியிருக்குமாயின், இன்று இதை எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காதே…!அப்படித்தான் தமிழ்த் திரைப்படங்கள் படிப்படியாய் நீர்த்துப் போய் விஷயகனமும், ஆழமும் அற்றுப் போயின. அந்தத் திறமைசாலிகளும் கௌரவமாய், மதிப்பாய் ஒதுங்கியிருந்தார்கள். காணாமல் போனவர்களாய், சாதாரணர்களால் கருதப்பட்டார்கள். ஆனால் அவர்கள் எத்தனை ஆயிரம் ரசிகர்களின் மனதில் நீங்காது வாழ்ந்து கொண்டிருந்தார்கள்?.

எத்தனை கால மாற்றங்கள் ஏற்பட்டால்தான் என்ன…

என்றைக்கும் ஒன்று நிச்சயம். ஒரு நாகையாதான். ஒரு எஸ்.வி சுப்பையாதான். ஒரு ரங்காராவ்தான். ஒரு எஸ்.வி.சகஸ்ரநாமம்தான். ஒரு பாலையாதான். ஒரு எம்.ஆர். ராதாதான். இவர்களை மாற்றி, வேறு ஒருவரை இவர்கள் இடத்தில் என்றென்றைக்கும் தமிழ்த் திரையுலகம் நினைத்துப் பார்க்கவே முடியாது. ரசிகப் பெருமக்களும் வைத்துப் பார்க்க மாட்டார்கள். அப்படியான ராஜ முத்திரையை ஆழமாகப் பதித்தவர்கள். அப்படி முரணாக நினைத்துப் பார்த்தால், பார்க்க முனைந்தால் அவன் ஆழ்ந்த ரசனை இல்லாத சராசரி ரசிகனாகத்தான் இருக்க முடியும். காலம் அப்படித்தான் நிர்ணயித்திருக்கிறது. காலத்தை இவர்கள் இப்படித்தான் நிர்ணயித்து ஸ்தாபித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

தோ போறாரே…. யாரு அது? பாலையா அண்ணன் மாதிரி இல்ல…? மனசு பதறிக் கேட்கிறார் அவர். கண்ணுக்குப் புலப்படாத தூரத்தில் காவி வேட்டியில் தாடியும், மீசையுமடங்கிய சன்னியாசிக் கோலத்தில் அமைதியே உருவாய், ஆண்டவனின் நாமத்தோடு அடியெடுத்துப் போய்க் கொண்டிருக்கிறார் அவர்.

ஆமா…அவரேதான்….என்று ஒருவர் உறுதி செய்ய…அடடே…என்ன இப்படி? என்று பதறிப்போய், ஓடிப் போய் உடனே இங்க அழைச்சிட்டு வாங்க… என்று மதிப்போடும், மரியாதையோடும் கூட்டிவரச் செய்து, அவரைத் தேற்றி, உடனே அடுத்த படத்தில் வாய்ப்பளித்து, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னான காலகட்டத்தை முறியடித்து, அவரை மீண்டும் திரையுலகத்துக்கு இழுத்து வந்து நிறுத்திய பெருமை ஏ.வி.எம். நிறுவன அதிபர்களில் ஒருவருக்கு உண்டு என்ற உருக்கமான செய்தியை எத்தனைபேர் அறிந்திருப்போம்?

அப்படிக் காணாமல் போன, ஒதுங்கிக் கொண்ட, ஒதுக்கப்பட்ட, எத்தனையோ குணச்சித்திர நடிகர்களில் ஒருவர்தான் திரு சித்தூர் வி..நாகையா அவர்கள். இவரைப் போல் இன்னொருவரை இன்றுவரை தமிழ்த் திரையுலகம் காணவில்லை. இது சத்தியம். இத்தனைக்கும் தெலுங்கு, தமிழ் என்று 200க்கும், 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்தான். ஆனாலும் பார்த்துப் பார்த்து ரசித்து, உள்வாங்கிய பண்பட்ட நடிகரைப் படிப்படியாகக் காணவே முடியவில்லையே என்ற நிலை வந்தபோது வேதனைப்பட்டுப் புழுங்கிப் போன மூத்த தலைமுறை ரசிகர்கள் அநேகம்.

நாகையாவின் வாழ்க்கை வரலாற்றையோ, அவரின் சாதனைகளையோ விவரிக்க வரவில்லை இந்தக் கட்டுரை. கணினியைத் திறந்தால் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன அவைகள். 1938 லேயே நடிக்க வந்துள்ள நாகையா அவர்கள் அந்தக் காலத்திலேயே இருப்பவர்களில் அதிகமாகச் சம்பளம் வழங்கப்பட்ட நடிகராக இருந்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், கதை வசனம், பாட்டு, இசை என்று பல்துறை விற்பன்னராக விளங்கியிருக்கிறார். இந்தத் திறமைகளெல்லாம் உள்ளடக்கி அவருக்கு 1965 லேயே பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது. திரையுலகில் தனது திறமையை முன்னிறுத்தியே வளர்ந்து வந்துள்ள நாகையா அவர்கள் நடித்த எத்தனையோ திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் அத்தனை சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. மூத்த தலைமுறை ரசிகன் தனது மகன் மகள்களுக்கு எடுத்துச் சொல்லி அறிய வைக்க வேண்டிய முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் நாகையா மிக முக்கியமானவர். ஸ்வர்க்கசீமா, தியாகய்யா, மீரா, சக்ரதாரி, ஏழை படும் பாடு, குமாஸ்தா, பக்த மார்க்கண்டேயா, பாவ மன்னிப்பு, கப்பலோட்டிய தமிழன், உயர்ந்த மனிதன், தில்லானா மோகனாம்பாள், இரு மலர்கள், பச்சை விளக்கு, பாலும் பழமும், நம்நாடு….என்று இன்னும் எத்தனை எத்தனை முத்திரைகளைப் பதித்துக் கொண்டே போவது? ஒவ்வொன்றிலும், வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசமான பாவங்களையும், உணர்ச்சிகளையும், சோகங்களையும், கோபங்களையும், வீரத்தையும், விரக்தியையும், விதவிதமாக வெளிப்படுத்தியவர் .நாகையா.

இவரின் வசன உச்சரிப்பும், அதிலுள்ள ஏற்ற இறக்கங்களும், அந்தந்த வார்த்தைகளுக்கான பொருள் தெறிக்கும்படியான அழுத்தங்களும் ஏற்றுக் கொண்டுள்ள கதாபாத்திரங்களைத் தூக்கி நிறுத்திய அழகும் சொல்லி மாளாதது.. சீனியர் நடிகர், ஜூனியர் நடிகர் என்ற ஏற்ற இறக்கங்களையெல்லாம் இவர்கள் பார்த்ததில்லை. ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரம் மட்டுமே இவர்களுக்கு முக்கியமாய் இருந்தது. மொத்தப் படத்தில் வெறும் நான்கு அல்லது ஐந்து காட்சிகளில் மட்டும் தோன்றக்கூடிய வேஷமாய் இருந்தாலும், பாருங்க…பாருங்க…இப்ப நாகையா வருவார்…அருமையான ஸீன்… என்று உணர்ச்சி பொங்கக் காத்துக் கொண்டு இருப்பார்கள் தமிழ் ரசிகர்கள்.

பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இஸ்மாயில் அண்ணனாகத் தோன்றி முதல் காட்சியிலேயே ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிழலாய் அவர் நடந்து அகலும் காட்சி பார்ப்பவர் மனதை அப்படிக் கொள்ளை கொள்ளும். தெய்வமே வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். மறைந்து நின்று அந்தத் தவறைச் செய்து விட்ட குற்ற உணர்வோடு, இருக்கும் மனவேதனை மொத்தத்தையும், முகத்தில் காட்டிக் கொண்டு, குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்ட நிம்மதியில் நெஞ்சில் கையை வைத்து ஒரு கணம் கண்ணை மூடும் பாலையாவின் நடிப்பு பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும்.

இந்தக் குப்பத்துல எங்க எல்லாருக்கும் தெய்வம் எங்க இஸ்மாயில் அண்ணன்தான். அவர்தான் எங்க தலைவர் என்று கொத்தமங்கலம் சுப்பு கூற, என்னாய்யா அய்யரே, கதையவே மாத்துற… என்று எம்.ஆர்.ராதா கேலி செய்கையில், யார் தலைவரா இருந்தா என்ன, எங்களுக்குள்ள அந்த பேதமெல்லாம் இல்லே….இங்க …எந்தக் காரியத்தையும் யார் செய்றாங்கங்கிறது முக்கியமில்லே…செய்ற காரியந்தான் முக்கியம் என்று அழுத்தம் திருத்தமாக நாகையா நிதானமாய் எடுத்து வைக்கும் காட்சி, அங்கே, அந்தக் குப்பத்தில் இருக்கும் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் அற்புதமான காட்சியாக அமையும். இப்படி ஒரு மனிதரும், இத்தனை ஒற்றுமையான மக்களுமாக நம் நாடு மொத்தமும் இருந்துவிடக் கூடாதா என்று மனது ஏங்கும். இந்த தேசத்தின் மீது பற்று உள்ள ஒவ்வொரு உண்மையான மனிதனும் இந்தக் காட்சியில் அப்படித்தான் நினைப்பான். திரைப்படங்கள் அத்தனை நல்லவைகளை நமக்குள் விதைத்த புனிதமான கால கட்டம் அது.

கப்பலோட்டிய தமிழனில் சிதம்பரம் பிள்ளைக்குத் தந்தையாக வருவார் நாகையா. பெயர் உலகநாதம் பிள்ளை. மாடசாமியின் (ஜெமினி கணேசன்) வழக்கினை எடுத்து வாதாடுபவர் சிதம்பரம் பிள்ளை (நடிகர் திலகம்). எதிர்த்தரப்பு வக்கீல் நாகையா அவர்கள்.

கட்சிக்காரருக்கு மாடசாமி இடத்தை விற்பதாக எழுதிக் கொடுத்து 200 ரூபாய் முன்பணமும் வாங்கியிருக்கிறார் என்ற விபரத்தைக் கோர்ட்டிலே சொல்லி, அதற்கு சாட்சி இருக்கிறதா என்று சிதம்பரம் பிள்ளை கேட்க, ஓ.யெஸ்…என்று ஆணித்தரமாகத் தலையாட்டிக் கூறுவார். மிகுந்த நம்பிக்கையுடனான திறமையான வக்கீல் என்ற தோற்றம் அந்த ஒரு வார்த்தையின் அவரது உச்சரிப்பால் அங்கே ஸ்தாபிக்கப்பட்டு விடும். கூறிவிட்டு எழுதிக் கொடுத்துள்ள பத்திரத்தின், வரிகளின் மேல் விரலை வைத்து, ஆன் டிமான்ட், ஐ ப்ராமிஸ் டு பே…எ சம் ஆஃப் ருபீஸ், டூ உறன்ட்ரட் இன் கேஷ்…. என்று அவர் வாசிக்கும் காட்சியும், அதை மறுத்து நடிகர்திலகம் (சிதம்பரம் பிள்ளை) அவர்கள் வெறும் பணம் மட்டுமே தருவதாகத்தான் எழுதிக் கொடுத்திருக்கிறாரே தவிர, நிலத்தை விற்பதாக எழுதிக் கொடுக்கவில்லை, இதை ஏன் அப்பா…ஸாரி…எதிர்த்தரப்பு வக்கீல் கவனிக்கவில்லை….என்று மறுதலிக்கும் காட்சி, படத்தின் ஆரம்பத்தையே களை கட்டித் தூக்கி நிறுத்தி விடும்.

அந்த இடத்தில் நடிகர் திலகம் இருந்தாலும், பார்வையாளர்களால் அவர் மட்டுமே கவனிக்கப்படுவார் என்கிற நிலையில், அவருக்கு இணையாக ஒரு திறமையான, பழுத்த அனுபவமிக்க நடிகர் இருந்தால்தான் இந்தக் காட்சி சிறக்கும் என்று நாகையாவைத் தேர்வு செய்த பி.ஆர். பந்துலு அவர்களை நாம் எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?

மொத்தப் படத்திற்குமே ஆரம்பத்தில் வரும் அந்த ஒரு சில காட்சிகள்தான் நாகையா தோன்றுவது என்றாலும், அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று யாரும் அந்தக் காலத்தில் மறுக்கவில்லை என்பதும், நான் எத்தனை சீனியர், இத்தனை சின்ன வேஷத்தில் நடிப்பதா என்று ஒதுங்காதிருந்ததும், தோன்றக் கூடிய ஒரு சில காட்சிகளேயாயினும் அதனை மனப்பூர்வமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு, இயக்குநருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் முழுத் திருப்தியும், நிறைவும் ஏற்படும் வகையில் செய்து முடித்ததும், எத்தனை பண்பட்ட மனதும், தன்னம்பிக்கையும், உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் இருந்திருக்கும் என்று நினைக்க வைத்து நம்மைப் பிரமிக்க வைக்கிறதல்லவா?

பாலும் பழமும் படத்தில் அவர் அந்த மருத்துவமனையின் பெரிய டாக்டராக வருவதும், புதிதாகப் பணியேற்க வரும் டாக்டர் ரவிக்கு (நடிகர்திலகம்) பிற டாக்டர்களை அவர் அறிமுகம் செய்து வைக்கும் காட்சியும், புதிதாகத் திருமணம் முடித்திருக்கும் டாக்டர் ரவி தன் ஆராய்ச்சியை மறந்து விட்டுக் காலம் கடந்து கொண்டிருப்பதை அவரது மனைவி சாந்தியின் வீட்டிற்கு சென்று சாந்தியிடம் பக்குவமாக விஷயத்தை எடுத்துக் கூறுவதும், மனைவிக்குப் புற்று நோய் என்பது அறிந்து வேதனை கொள்ளும் இடத்தில் அன்போடும், அரவணைப்போடும் டாக்டர் ரவிக்கு ஆறுதல் சொல்லும் பொறுப்புணர்வு மிக்க அந்த நடிப்பும், அந்தக் கதாபாத்திரத்தை நாகையாவைத் தவிர வேறு யார் அத்தனை துல்லியமாகச் செய்திருக்க முடியும்?

தில்லானா மோகனாம்பாளில் சண்முக சுந்தரம் தன் குருவான நாகையாவிடம் மோகனாவை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து விபரம் தெரிவித்து ஆசி பெற வரும் காட்சி அது. மூங்கில் தட்டிகளால் தடுக்கப்பட்டிருக்கும் அந்தப் பூஜை அறையில் சண்முகசுந்தரம் பக்தியோடு நுழைந்து தன் குருவின் முன், குறிப்பிட்ட ஒரு இடைவெளியில் பணிவோடு நிற்கும் காட்சி. தன்னை மறந்து வாசிப்பில் ஈடுபட்டிருக்கும் குருவின் ஆழ்ந்த, அற்புதமான, அனுபவித்த, துல்லியமான வாசிப்பை பக்தியோடு கைகளைக் கோர்த்துக் கொண்டு ரசித்து நிற்கையில் காமிரா ஒரு முறை சிவாஜியின் முகத்துக்கு நேரே வந்து மெல்ல விலகிச் செல்லும். குருவின் வாசிப்பை அத்தனை பக்தியோடு அவர் ரசிக்கும் அழகை காமிரா அங்கே கவிதையாய்ச் சொல்லும்.

கலைஞர்களுக்கிடையே போட்டி இருக்க வேண்டிதான்….ஆனா அது பொறாமையா மாறிடாமப் பார்த்துக்கணும்…..என்று நாகையா கூறுகையில் அந்தப் “பொறாமை“ என்கிற வார்த்தையை அவர் அழுத்தமாய் உச்சரிக்கும் விதம். அதன் முழுப் பொருளை அப்படியே அர்த்தப்படுத்தி நிற்கும். மிகுந்த திறமைசாலியான நாதஸ்வர வித்வான் என்று சண்முகசுந்தரத்தை முன்னிறுத்துகையில் அப்படியானால் அவருக்கு குருவானவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதுக்குள் கற்பனை செய்து, அதற்குப் பொருத்தமான நடிகர் இவரைத் தவிர வேறு யாருமில்லை என்று நாகையாவைத் தேர்வு செய்த ஏ.பி.நாகராஜன் அவர்களை இங்கே பாராட்டாமல் இருக்க முடியுமா? சொல்லப் போனால் ஓரிரு காட்சிகள்தான் அந்தத் திரைப்படத்தில். ஆனாலும் எத்தனை அழுத்தமாகத் தங்கள் முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் அந்தக் கால நடிகர்கள்? இன்ன கதாபாத்திரம் என்று சொன்னால் இவர்கள் எப்படி அப்படியே மாறி விடுகிறார்கள்? அந்தக் கதாபாத்திரமாகவே எப்படி வாழ்ந்து விடுகிறார்கள்? இந்த அளவுக்கா ஒரு அனுபவமான நடிப்பு மிளிரும்? இவர்களால் நடிப்பில் தவறே செய்ய முடியாதா? தன் பாத்திரத்தையே உணராத எத்தனை நடிகர்களைப் பார்த்திருக்கிறோம்? பார்த்துக் கொண்டிருக்கிறோம்? தங்களுக்குக் கிடைக்கும் கதா பாத்திரங்களை இந்த மூத்த கலைஞர்கள் எப்படித் தங்கள் மனத் திரையில் கற்பனை செய்து கொள்கிறார்கள்? அப்படியான எல்லாவிதமான மனிதர்களையும் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்களா? அது சாத்தியமில்லையே? அப்படியே சந்தித்திருந்தாலும் அவர்களை, அவர்களது செயல்களை மனதில் பதித்து, எப்படி இத்தனை துல்லியமாக இவர்களால் கண் முன் அந்த நடிப்பைக் கொண்டு வந்து நிறுத்த முடிகிறது? நடித்து நடித்து அனுபவ மெருகேறியிருந்தாலும் கூட, இயக்குநர்களின் கற்பனையை, எதிர்பார்ப்பை விட இவர்களால் எப்படி இத்தனை அழகியலாகச் செய்து முன்னிறுத்த முடிகிறது? கேள்விகள் தோன்றவில்லையா உங்கள் நெஞ்சில்? நீங்கள் ஒரு ஆழமான, அனுபவமான, தேர்ந்த ரசிகராக இருந்தால் நிச்சயம் இந்தக் கேள்விகளெல்லாம் உங்கள் மனதிலும் தோன்றித்தான் இருக்க முடியும்.

இதற்காகத்தான் சொன்னேன் ஆரம்பத்திலேயே…இது வெறும் நாகையாவின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளைக் கொடுக்க வேண்டி முன் வைக்கும் கட்டுரை அல்ல என்று.

நாகையா சின்னசின்னக் கதாபாத்திரங்கள் ஏற்றுத்தான் பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் பத்தோடு பதினொன்று என்று என்றும் அவர் வெறுமே வந்து விட்டுப் போனவராக இருந்தவரில்லை. இவர்தானே இருக்கிறார் என்றும் அவருக்கு வாய்ப்பளித்தவர்களில்லை இயக்குநர்கள். மதிப்போடும், மரியாதையோடும்தான் வைத்திருந்தார்கள் அவரை.

உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் அந்தப் பங்களாவில் வேலை செய்யும் சாதாரணத் தொழிலாளியாகத்தான் நடித்தார் நாகையா. தொழிலாளி ராமையா. காலில் செருப்புப் போட்டுக் கொண்டு தெரியாமல் ஜமீன்தார் முன் நின்று விட்ட அவரை, கோபம் பொங்க ராமதாஸ் பட்டுப் பட்டென்று அறையும் காட்சி பார்ப்பவர் மனதைப் புரட்டிப் போட்டு விடும். ராமதாஸ் வில்லன் நடிகர். அதுவும் பல படங்களில் வில்லனுக்கு உதவியாளராக வந்து கொண்டிருந்தவர். அந்தப் படத்தில் சிவாஜிக்குத் தந்தையாக வருவார். ஜமீன்தார் வேஷப் பொருத்தம் அத்தனை துல்லியமாய் இருக்கும். பட்லருக்கான யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு, இடது தோளில் ஒரு சிறு கைத்துண்டோடு நாகையா நிற்கும் காட்சியும், அடிபடும் காட்சியும் அவர் மீது மிகுந்த பச்சாதாபத்தை ஏற்படுத்தும் நமக்கு. மனது பதறிப் போகும். இப்படி ஒரு காட்சி தேவைதானா என்று வேதனைப்படும். எவ்வளவு பெரிய நடிகர்? இப்படி அடி வாங்கும் சின்னப் பாத்திரத்தில் நடிக்கத்தான் வேண்டுமா? என்று கூட ஒரு கணம் தோன்றும்தான். அது ரசிகர்களாகிய பார்வையாளர்கள் அவர் மீது வைத்திருந்த பெரு மதிப்பு. மாறாத அன்பு.

காட்சியையா பார்த்தார்கள் அன்று? ரொம்பச் சின்னப் பாத்திரம் என்றா ஒதுங்கினார்கள்? அடி வாங்கிற மாதிரியெல்லாம் நடிக்க முடியாது என்றா முரண்டினார்கள்? அங்கே நான் நாகையா இல்லை அய்யா…..வேலைக்காரன் ராமையா. அவர் ராமதாஸ் இல்லை….ஜமீன்தார்….அது அந்தக் கதையில் அவரது பரம்பரைக் கௌரவத்தை, அதற்கான திமிரை வெளிப்படுத்தும் ஒரு காட்சி. அவ்வளவே…

அங்கே நாகையா நின்றாரா? அல்லது வேலைக்காரத் தொழிலாளி ராமையா நின்றாரா? நினைத்துப் பாருங்கள்?

இதே திரைப்படத்தில் தொழிலாளி ராமையா பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒரு காட்சி. முதலாளி சிவாஜியிடம் (தொழிலதிபர் ராஜூ) வந்து சொல்லி விடை பெற்றுக் கொள்கையில் அந்தக் காட்சியின் உருக்கம் வேறு எந்தப் படத்திலாவது இத்தனை சோகமாய் அமைந்திருக்கிறதா? நடிகர்திலகமும், நாகையாவும் தவிர வேறு யார் இருந்து இந்தக் காட்சியை இத்தனை அழகாகச் சிறப்பிக்க முடியும்?

ஒரு முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையே இத்தனை நெருக்கம் ஏற்பட முடியுமா? என்று நம்மை பிரமிக்க வைக்கும் இந்த இடம். உங்களுக்குச் சேர வேண்டியதெல்லாம் மாசம் முடிஞ்சவுடனே கரெக்டா வந்து சேர்ந்துடும் என்று சிவாஜி சொல்ல, ஐயா, எனக்குத் தெரியாதுங்களா இங்க எல்லாமே கரெக்டா நடக்கும்னு என்று சொல்லி அவர் கையைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழும் காட்சி பார்வையாளர்களைப் பிழிந்து எடுத்து விடும். இந்த வரிகளை இங்கே நான் கோர்க்கக் கூடிய இந்த நேரத்தில் கூட என் கண்கள் கலங்கித்தான் போகின்றன.

எதிர்பாராதது திரைப்படத்தில் தன் மகனின் காதலியைத்தான் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று அவர் அறிய நேரும் காட்சியிலும், அதற்குப்பின் அவர் படும் வேதனையிலும், தான் செய்த பாவத்திற்கு எங்கே சென்று கழுவாய் தேடுவது என்று தெரியாமல் அவர் தவித்து நின்று, வெளியேறி விடுவதும், கண் பார்வை போன நிலையில் தான் மகனைச் சந்திப்பதும், அவனோடு கிடந்து அல்லற்படுவதும், முதலிரவில் மனைவி தன்னை அப்பா என்று அழைத்த கணத்தில் துடிதுடித்துப் போவதுமான பல்வேறு உருக்கமான காட்சிகளை இன்றும் மறந்துவிட முடியுமா தமிழ் சினிமா ரசிகர்கள்?

இரு மலர்கள் என்று ஒரு படம். இந்தப் படத்தின் சிறந்த நடிகர் என்று விருது வழங்க வேண்டுமாயின் நான் திரு சித்தூர் வி. நாகையா அவர்களுக்குத்தான் அதை வழங்குவேன். நடிகர்திலகம் இருந்தால் கூட அவரும் நிச்சயமாக அதைத்தான் ஏற்றுக் கொள்வார். அந்த அளவுக்கு உருக்கமான அவரின் தந்தைக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் நாகையா.

சின்ன வயசிலேர்ந்து உனக்காகவே பொத்திப் பொத்தி வளர்த்த இவளைவிட வேறு யார் உனக்குச் சரியான வாழ்க்கைத் துணை ஆக முடியும் என்று கே.ஆர்.விஜயாவை ஒரு கையால் அணைத்து நிறுத்திக் கொண்டு, என்னடா நாபாட்டுக்கு பேசிட்டேன் இருக்கேன், பதில் சொல்லாமயே மேலே போயிட்டிருக்கியே என்று சிவாஜியிடம் கண்டிக்கும் கட்டமும், நா சாந்தியை அப்படி நினைச்சுப் பார்த்ததேயில்லைப்பா என்று அவர் கூற, இவன் கிடக்காம்மா, இவனுக்கு உன்னோட வாழக் குடுத்து வைக்கலை அவ்வளவுதான், இவனை விட படிப்புலயும், அந்தஸ்துலயும் உயர்ந்த ஒருத்தனை உனக்குப் பார்த்து, ஜாம், ஜாம்னு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேம்மா…என்று அவர் மகன் மறுத்துவிட்ட வயிற்றெரிச்சலோடும், விரக்தியோடும் கூறும் காட்சி பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுத்து விடும். நாமும் நாலு பேர் சென்று நல்ல புத்தி சொல்லுவோமே என்று தோன்றும் அளவுக்கு ஒன்றிப் போவோம் அந்தக் காட்சியில்.

மாடியில் சிவாஜி நிற்க, கீழே உறாலில் நாகையா உட்கார்ந்து தினசரி படித்துக் கொண்டிருப்பார். வாசல் கதவை ஒட்டி கே.ஆர்.விஜயா நிற்பார். தபாலை எதிர்பார்த்து கதவு தட்டப்படுவதை எதிர்நோக்கி, என்னாச்சு இன்னும் காணலை என்று சிவாஜி விஜயாவைப் பார்த்து சைகை செய்ய, தெரில என்று குழந்தைபோல் விஜயா பதில் சொல்ல, இந்த சைகைகளையெல்லாம் ஜாடையாய் கவனிக்கும் நாகையாவின் நடிப்பும், அந்தக் காட்சியின் உண்மையான வீர்யமும், இப்படி ஒரு காட்சியை எடுத்த இயக்குநர் திரு திரிலோகசந்தரைப் பாராட்டுவதா, எதிர்பார்ப்புக்கும் மேல் நடித்த நாகையாவைப் பாராட்டுவதா, மதிப்பும் பண்பும் மிக்க அந்தத் தந்தை கதாபாத்திரத்திற்கு வேறு எவரை நினைத்துப் பார்க்க முடியும்?

ஒவ்வொரு படத்திலும் எப்படியெல்லாம் நம்மை உருக வைத்திருக்கிறார்கள். பார்க்கும் ரசிகனைப் பைத்தியமாய் அடித்திருக்கிறார்கள்? அவையெல்லாம் வெறும் திரைப்படங்களா அல்லது உண்மையான வாழ்க்கையா? நடித்தவர்களா அல்லது வாழ்ந்தவர்களா?

நாகையாவைப் போன்ற பண்பட்ட நடிகர்கள் வலம் வந்த ஐம்பது, அறுபது காலகட்டங்கள் தமிழ்த் திரையுலகின் பொற்காலம்.. அந்தத் திரைப்படங்களையெல்லாம் பொறுக்கி எடுத்து இன்றைய இளம் தலைமுறையினருக்குப் போட்டுக் காண்பித்து, விவரித்துச் சொன்னால் நமது பண்பாட்டு விழுமியங்களின் பெருமை அறிவார்கள் அவர்கள். தங்கள் வாழ்க்கையும் இப்படி அர்த்தபூர்வமானதாக அமைய வேண்டும் என்று மனதிற்குள் உறுதி கொள்வார்கள். குறைந்தபட்சம் வாழ்க்கையில் எவ்வகையிலும் கெட்டுப் போய்விடக் கூடாது என்றாவது பிரதிக்ஞை செய்து கொள்வார்கள். எப்படி நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு வரக் கூடிய வாசகர்கள் பழந்தமிழ் சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்றும், நாற்பது, ஐம்பது, அறுபது கால கட்டப் படைப்பாளிகளின் எழுத்துக்களை ஒன்று விடாமல் தேடித் தேடிப் படித்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோமோ அது போல் ஒரு தேர்ந்த, ஆழமான, பண்பட்ட சினிமா ரசிகனாக ஒருவன் விளங்க வேண்டுமாயின், நல்ல திரைப்படங்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமாயின், நடிப்பின் வெவ்வேறு விதமான பரிமாணங்களை உணர வேண்டுமாயின், பல்வேறுபட்ட திறமையான நடிகர்களின் பழுத்த நடிப்புத் திறனை ஆய்ந்து அறிய வேண்டுமாயின், உலக சினிமாக்களை உய்த்துணர வேண்டுமாயின், இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையான இந்தப் பழம் பெரும் ஜாம்பவான்களின் படங்களை ஒன்று விடாமல் பார்த்து ரசிக்கவும், ஆத்மார்த்தமாய் மனதிற்குள் வாங்கவும், எத்தனை திறமைசாலியான நடிகர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள் தமிழ்த் திரையுலகில் என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்ற உறுதியான இறுதி வரிகளோடு சித்தூர் வி.நாகையா என்ற தமிழ் சினிமா மூத்த தலைமுறை ரசிகனின் மானசீகத் தந்தையின் கட்டுரையை இங்கே முழு திருப்தியோடு நிறைவு செய்து கொள்கிறேன்.

---------------------------------------------------

1 கருத்து:

University News சொன்னது…

அற்புதமான கட்டுரை.கட்டுரையின் வாசகங்கள் மிகவும் உணர்ச்சி பிழம்பாக அமைந்தது வரவேற்க வேண்டிய ஒன்று...

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...