14 ஜனவரி 2014

“அடே லேக்கா, போடாதே காக்கா…” ”சொல்லிப்புட்டேன் அம்புடுதேன்…” (மறக்க முடியாத ஏ.கருணாநிதி) ---------கட்டுரை-----------------------------------------------------------(காட்சிப்பிழை – சினிமா மாத ஆய்விதழ் – செப்டம்பர் 2013 ல் வெளிவந்த என் கட்டுரை)

மன்னார்சாமி மன்னார்சாமி போலீஸ்-கப்பலோட்டிய தமிழன்

ஏ.கருணாநிதி-பார்மகளேபார் படத்தில் ஏ.கருணாநிதி ஜெமினியுடன் ஏ.கருணாநிதி-மாறுவேடத்தில்

மிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை என்பது எல்லாக் கால கட்டங்களிலும் முக்கிய இடம் வகித்திருக்கிறது. திரைக்கதையோடு ஒட்டிய நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தல், கதையோடு ஒட்டாமல் தனி வழியாக நகைச்சுவைக் காட்சிகளைச் சுவைபடப் பயணிக்க வைத்தல், ஏதேனும் ஒரு கட்டத்தில் கதையின் மையப்பகுதியில், அல்லது முக்கிய இறுதிக் கட்டத்தில் பொருத்தமாக இணைந்து கொள்ளச் செய்தல் என்பதாக வெவ்வேறு வகைமைகளில், கதையின் மைய ஓட்டம் சிதைந்து விடாமல் நகைச்சுவைக் காட்சிகள், அதன் முக்கிய நடிக, நடிகையர்கள், என்று தவிர்க்க முடியாத ஒன்றாகவே நம் தமிழ்த் திரைப்படங்களில் இருந்து வந்திருக்கின்றன. அந்தந்தக் கால கட்டத்திற்குத் தகுந்தாற்போல் வசன மொழியினாலும், உடல் மொழியினாலும் நின்று நிதானித்து யோசித்துப் புரிந்து, சிரித்து ரசிக்கும் வகையிலும், உடனுக்குடனே, காட்சிகளின் வழியே கூடவே பயணித்து விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்து தன்னை மறக்கும் வகையிலும், மொத்தத் திரைப்படத்திலும் நகைச் சுவைக் காட்சிகளே விஞ்சி நிற்கும் ஆளுமையாகவும் கூட, அவையே படத்தின் வெற்றி இலக்கிற்குக் காரணமாயும் ஆகிப் போன வழியிலும், திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் என்பது முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

ஒட்டுமொத்தத் திரைக்கதையின் காட்சிரூபக் கதைசொல்லலின் வேகமின்மையைச் சரிக்கட்டி, படத்தைத் தூக்கி நிறுத்தும்விதமாகவும், பிழியப் பிழிய வடித்தெடுக்கப்பட்ட சோகத்தின் உச்சத்தை வருடிக் கொடுத்துப் பார்வையாளர்களைப் பதப்படுத்தும் மாமருந்தாகவும், நகைச்சுவைக் காட்சிகள் ஒரு திரைப்படத்திற்கு ஆணிவேராக நின்று விளங்கியிருக்கின்றன.

ஒரு நல்ல கதையை அழுத்தமான காட்சி அமைப்பின் வழி திறமையாகச் சொல்லிக் கொண்டே சென்று கடைசிவரை ரசிகர்களை அசையாமல் நெளியாமல் அமர வைத்து, சிறந்த முடிவைக் கடைசியில் சொல்லி, இதற்குமேல் ஒரு அற்புதமான முடிவை இக்கதைக்குத் தர முடியுமா? என்று சவால் விடுவது போல் படம் பார்த்தவர்களை அதே திருப்தியில் எழுப்பி அனுப்பும் திறமை எத்தனையோ திரைப்படங்களுக்கு இருந்திருக்கிறதுதான். அம்மாதிரியான கடுமையான உழைப்பைத் தாங்கி வந்த படங்களுக்குக் கூட நகைச்சுவைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது என்பதுதான் இன்றுவரையிலான உண்மை.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயக, நாயகிகளைச் சுற்றித்தான் கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நாயகன்தான் பிரதானமாக இருந்திருக்கிறான். இதர கதாபாத்திரங்கள் அப்படிச் சொல்ல வந்த கதையைப் பலமாக நகர்த்த உதவும் சக பயணிகளாகவே கொள்ளப்பட்டிருக்கின்றன. அவைகளின் முக்கியத்துவம் அந்தந்த உப பாத்திரங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்ட சிறந்த பக்குவமிக்க, பழுத்த அனுபவமுள்ள நடிகர்களாலேயே மிளிர்ந்து நினைவில் நிற்கும்படி ஆகியிருக்கிறது. மிகத் திறமை வாய்ந்த அனுபவஸ்தர்களாக மதிப்பு மிக்கவர்களாகவே ரசிகர்களின் மனதில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். பல்லாண்டு கால நாடக மேடை நடிப்பு அனுபவங்கள் அவர்களுக்குக் கை கொடுத்து உதவியிருக்கின்றன. ஒரு சிறு கதாபாத்திரமானாலும், ஓரிரு காட்சிகளேயாயினும், பெருமையோடும், சந்தோஷத்தோடும், அதை ஏற்று, நிறைவோடு செய்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியில், இப்போ இவர் வருவாரு பாருங்க…என்ற அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனது இத்தனை ஆண்டு காலப் பழுத்த நாடக அனுபவத்திற்கு, இந்த மாதிரியான சின்னச் சின்ன வேஷமெல்லாம் ஏற்பதற்கில்லை, அது எனது கௌரவத்தைப் பெரிதும் பாதிக்கும் விஷயம் என்று யாரும் எப்போதும் ஒதுங்கியதேயில்லை. காரணம் அவர்களின் நாடக மேடை அனுபவங்களில் பல பெரிய நடிகர்கள் வெவ்வேறு சமயங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று ஏற்று மேலே வந்திருப்பதும், தவிர்க்க முடியாத ஆள் பற்றாக் குறையும், அவசியமும் தோன்றிய நெருக்கடியான காலகட்டங்களில் ஒருவரே தன் நடிப்புத் திறமையைப் பகுத்துக் காட்டும் விதமாய், ஒரே நாடகத்தில், அடுத்தடுத்த காட்சிகளில், வெவ்வேறு கதாபாத்திரங்களில் சோபித்ததும் (பெண் வேடமிட்டு நடித்தது உட்பட) யாரும் எப்போதும் எதற்கும் தயாராய் இருக்க வேண்டும் என்கிற கடினமான பயிற்சியின் கீழ் தொழில் பக்தியின்பாலான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு தங்களை மிகச் சிறந்த பழுத்த அனுபவசாலிகளாக எப்போதும், எந்நிலையிலும், நிலை நிறுத்திக் கொண்டதும்தான் நடிப்பை உயிர்மூச்சாகக் கொண்ட பலரின் நிகரில்லாத அடையாளங்கள்.

மொத்தத் திரைப்படத்தின் உயிர்நாடியாக கதாநாயக, நாயகி நடிக நடிகையர்கள் மட்டும்தான் நினைவில் நின்றார்களா? தந்தையாகவும், தாயாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும், தங்கையாகவும், அத்தானாகவும், சித்தப்பனாகவும், பெரியப்பனாகவம், தாத்தாவாகவும், பாட்டியாகவும், திரைக்கதைக்கு ஏற்ற இன்னும் பல மாறுபட்ட வேடங்களிலும் இருந்த எவரும் சோபிக்கவில்லையா என்ன? அவர்களையும், அவர்களின் மறக்க முடியாத நடிப்பினையும் மக்கள் ரசிக்காமலா இருந்தார்கள்? அவர்களுக்காகவே வந்து திரும்பப் பார்க்காமலா இருந்தார்கள்? அந்தந்தப் பாத்திரங்களைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவல்லவா கண்டார்கள்? தங்களின் சொந்தங்களாகவல்லவா கற்பனை செய்து கொண்டார்கள்? தங்கள் உறவுகளில் பலரிடம் அந்த நடிகர்களின் அடையாளங்களைக் கண்டு மகிழ்ந்தார்களே? அந்தப் பாத்திரங்கள் பேசிய வசனங்களை மனதில் நிறுத்திக் கொண்டு, அதன் பெருமைகளைத் தாங்களும் உணர்ந்து, வாழ்வில் அடிபெயர்த்துச் செல்லும் ஒவ்வொரு கால கட்டங்களிலும் அந்த நல்லவைகளை நினைத்துப் பார்த்துப் பின்பற்றுபவர்களாகவல்லவா வாழ்ந்தார்கள்? ஒரு திரைப்படத்தின் ஒட்டு மொத்தக் கதா பாத்திரங்களின் நல்லவைகள் அனைத்தையும் மனதில் நிறுத்திக் கொண்டதனால்தானே மீண்டும் மீண்டும் வந்து வந்து பார்த்து ரசிக்கும், அதனை ஒப்புதல் செய்யும் மனோபாவம் கொண்டார்கள்? மூத்த தலைமுறையினரின் இந்த வழி முறைகளை யாரேனும் மறுக்க முடியுமா?

அப்படியான பங்களிப்பு நகைச்சுவைக் காட்சிகளுக்கும், நகைச்சுவை நடிகர்களுக்கும் தவிர்க்க முடியாத இருப்பாகவே இருந்ததுதானே. கிடைக்கும் எளிய சந்தர்ப்பங்களில் பார்வையாளர்களை, (இந்த இடத்தில் சினிமா ரசிகர்களை என்று சொல்வதே சாலப் பொருந்தும்) பலபடி சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களைச் சொல்லி, கேள்விகளை முன் வைத்து, உலக நிகழ்வுகளை, நடப்புக்களை நகைச்சுவையாய்ப் பகடி செய்யும் வித்தையைக் கற்றிருந்தார்கள்தானே…! தங்கள் உடல் மொழியினாலும், கொனஷ்டைகளினாலும், வெவ்வேறுவிதமான பாவங்களினாலும், சொந்தக் கற்பனை சார்ந்த வசனங்களினாலும், அவற்றைக் கொச்சையாகவும், நீட்டிச் சுருக்கிப் பேசும் ரசனையினாலும், அசட்டுப் பார்வை, அட்டகாசச் சிரிப்பு, கோணங்கித் தனத்தினாலும், விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள்தானே? அப்பாடா…! என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு, கதையின் சோகத்திலிருந்து, அது எழுப்பிய மன பாரத்திலிருந்து, நெஞ்சத் தாக்கத்திலிருந்து கொஞ்சம் மீள்வதற்காக அடுத்தடுத்த காட்சிகளில் இவர்களின் வருகையை ரசிகர்கள் எத்தனை உற்சாகமாய் எதிர்கொண்டார்கள்? அப்படி எத்தனையெத்தனை காமெடி நடிகர்களை இந்தத் தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கிறது? அப்படியான எல்லோரின் திறமைகளை, நம் இயக்குநர்கள் கூடியவரை (அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது) விடாமல் பயன்படுத்திக் கொண்டது எத்தனை முக்கியமான விஷயம்.

காளி என்.ரத்தினம், ஃபிரன்ட் ராமசாமி, கொட்டாப்புளி ஜெயராமன், சாய்ராம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காகா ராதாகிருஷ்ணன், டிஆர்.ராமச்சந்திரன், கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதி, புளிமூட்டை ராமசாமி, டி.எஸ்.துரைராஜ், சாரங்கபாணி, ராமாராவ், சந்திரபாபு, குலதெய்வம் ராஜகோபால், என்னத்தே கன்னையா, பாலையா, எம்.ஆர்..ராதா, வி.கே.ராமசாமி, நாகேஷ், சோ என்று அறுபதுகளின் இறுதிவரையிலான காலகட்ட நகைச்சுவை நடிகர்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? இதில் பலரும், குறிப்பாக பாலையா, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, நாகேஷ் போன்றவர்கள் ஆல்ரவுண்டர்களாக அல்லவா வலம் வந்தார்கள்.

இந்த நகைச்சுவை நடிகர்கள் நம் தமிழ்த் திரைப்படங்களில் நமக்கு அளித்த சந்தோஷங்கள்தான் எத்தனையெத்தனை? நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து, மகிழ்வித்த காலங்கள்தான் எத்தனை? இவர்களின் கண்களும், காதுகளும், வாயும், மூக்கும், பல்லும், சிரிப்பும், கைகளும், கால்களும், நடையும் உடையும், எல்லாமும் நடித்து, நம்மை ரசிக்க வைத்து, விழுந்து விழுந்து சிரிக்க வைத்து எப்படியெல்லாம் நம்மைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. அப்படிக் கிடைத்த சந்தோஷங்களில் ரசிகர்கள் தங்களின் சொந்தத் துயரங்களை, சோகங்களை கொஞ்சமேனும் மறந்தார்களே? இல்லையென மறுக்க முடியுமா? வாழ்க்கையின் நெருக்கடிகளைத் தளர்த்திக் கொண்டார்களே…! கட்டுப்பாடுகளின் அடர்த்தியை நெகிழ்த்திக் கொண்டார்களே…! மனதை இலகுவாக்கிக் கொண்டு, உறவுகளோடு சகஜபாவம் கொண்டார்களே…! வாழ்க்கை என்பது எல்லாவிதமானதும்தான் என்கிற திரை வடிவங்களின் இதய நாதங்களை உள் வாங்கி, அவை தந்த தெளிர்ச்சியில், எதையும் யதார்த்தமாய் எதிர்கொள்ளும் மனோபாவங்களைப் போகிற போக்கில் அடைந்து, இருக்கும் காலங்களை எதற்காகக் கெடுபிடியாக்கிக்கொண்டு, நம்மையும், சுற்றத்தையும் பிணக்கிக் கொண்டு திரிய வேண்டும் என்கிற பக்குவ மனநிலையை வந்தடைந்தார்களே….இப்படியான பங்களிப்புக்கு திரைப்படங்கள் செயல்படவேயில்லை, இதெல்லாம் நாமே கற்பனைத்துக் கொள்வது, வெறும் கதையாடல் இது என்று சற்றேனும் உண்மைதான் என்று இணங்கி வராமல் முற்றிலுமாக யாரேனும் மறுதலிக்க முடியுமா?

தவிர்க்க இயலாத முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு என்பது நமது தமிழ்த் திரைப்படங்களின் சிறந்த நகைச்சுவைக் காட்சிகள் என்கிற பரிமாணத்தின் வகைப்பாடுகள் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்திருக்கிறது என்பது உண்மைதானே…!

ஆமாம்யா, ஆமாம்….ஒத்துக்கிறோம் …அதுக்கு இப்போ என்ன செய்யச் சொல்றீங்க? என்று ஓங்கிய குரல்கள் பலவும் காதுக்குள் வந்து ங்ங்ஙொய்ய்ய்ய்………. என்று ரீங்கரிக்கின்றனதான். காலம் போன போக்கில் நாமும் வேகமாய் புற வெளிகளுக்கு இழுக்கப்பட்டு, இவற்றையெல்லாம் மறந்துதான் போனோம். நம்மை ஆற்றிக் கொள்வதற்கு எதுவுமே துணையில்லாமல் போனதே என்று நொந்து கொள்ளும் நிலைக்கு ஆளாகினோம்.

இன்று நகைச்சுவை என்பது அந்தளவில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம்தான் நம்முள்ளே ஜனிக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாய்க் கண்டு கொண்டிருப்பதே, பேசிக் கொண்டிருப்பதே, செய்து கொண்டிருப்பதே நகைச்சுவை என்பதாய்ப் படங்களில் ஏதோ சிறப்புப்போல் எடுத்துக் காண்பிக்கப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. அதனால்தான் யோசித்து, யோசித்து, சரி போகட்டும், தொலைந்து போகிறது என்பதுபோல் கூட்டத்தோடு கூட்டமாய் சிரித்து வைக்கிறோம். எதற்காகச் சிரித்தோம் என்று சற்றே யோசித்துப் பார்த்தோமானால் அது புலப்படாமல் போய் ரகசியமாய் நிற்பதுவும், அப்படியே புலப்பட்டாலும் இதற்கா சிரித்துத் தொலைத்தோம் என்று நமக்கு நாமே வெட்கமுறுவதுபோல் சுயமாய் நாணிக் கொள்வதும் வழக்கமாய் போய்விட்டது.

இருந்து சாதித்த நகைச்சுவை நடிகர்களையெல்லாம் பற்றிச் சொல்வதென்றால் அதற்கு ஒரு நீண்ட தொடர்தான் எழுதியாக வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் படத்துக்குப் படம் தங்கள் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருக்கிறார்கள். எங்களைத் தவிர்த்து விட்டு நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது என்று சவால் விட்டிருக்கிறார்கள். என்ன பெயருள்ள நடிகர் என்பதாக ரசிகர்களின் மனதில் நின்றார்களோ அதே சுய உருவத்தில், வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு பெயர் கொண்ட கதாபாத்திரங்களில் அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே மணமாய் சோபித்திருக்கிறார்கள்.

இவர்களை, இவர்களின் திறமையை, உடல்மொழிகளை, வசனம் பேசும் தன்மையை, முகத்தில் சட்டுச் சட்டென்று மின்னல் வேகத்தில் பிரதிபலிக்கும் பாவங்களை, ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு உய்த்துணர்ந்த இயக்குநர்களை இங்கே பாராட்டாமல் இருக்கவே முடியாது.

அப்படியான, திறமையான இயக்குநர்களால் தவறாமல், தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்பட்ட, ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர்தான் திரு ஏ.கருணாநிதி அவர்கள். அவரை, அவர் பெயரை நினைவு கூறும்போதே நமக்கு மனதில் வருவது அவரது கொனஷ்டை நிறைந்த பெருத்த முகம்தான். அந்த உப்பிய முகமும், அகன்ற கண்களும், சுருண்ட முடிகளும், விடைத்துப் பெருத்த மூக்கும், கோணிக் கோணித் திரும்பும் வாயும், அந்த ஜாலங்களுக்கேற்றாற்போல் அபிநயிக்கும் அவரது கைகளும் கால்களும்….தமிழ் சினிமா ரசிகனை எவ்வளவோ சந்தோஷப்படுத்தியிருக்கிறது.

இங்கே இந்தளவுக்கு அவற்றைப் பகுத்துச் சொல்வதற்குக் காரணம், அதே பார்வையில், அதே ரசனையில்தான் பழம்பெரும் இயக்குநர்கள் அவரை ஆசையாய்த் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை வலியுறுத்தத்தான். ஒரு கதாபாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தம், இந்தக் கதையின், இந்தக் குறிப்பிட்ட நகைச்சுவைப் பாத்திரத்திற்கு இவரைப் போட்டால்தான் சோபிக்கும், தியேட்டர் கலகலக்கும் என்று மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்த திறமையை நாம் எப்படி மறந்து விட முடியும்?

ஒன்றிரண்டைச் சொல்லித்தான் பார்ப்போமே…பொருந்துகிறதா என்றுதான் பாருங்களேன்…சரியான தேர்வுதான் என்று நீங்கள் நிச்சயமாக அந்த இயக்குநரை நினைக்காமல் இருக்கவே முடியாது.

தில்லானா மோகனாம்பாளில் ஒத்து ஊதுபவராக ஏ.கருணாநிதி வருவார். கட்டுக்குடுமியும், கைகளில் பட்டையாய்ப் பூசிய அரைத்த சந்தனமும், முகத்தின் இரு கன்னங்களிலும் அப்பிக் கொண்ட சந்தனக் கோடுகளும், நெற்றியில் பெரிய ஒரு ரூபாய் நாணயம் அளவுக்குப் பதித்த சந்தனக் குங்குமப் பொட்டும், காடாத்துணியிலான பனியன் போன்ற சட்டையும், கீழே கெண்டைக் காலுக்குக் கொஞ்சம் ஒரு பக்கம் ஏறியிருப்பது போன்று உயர்த்திக் கட்டிய வேட்டியுமாய் கையில் உறையிட்ட ஒத்து வாத்தியத்தோடு அவர் நிற்கும் காட்சியும், கச்சேரி நடக்கையில் துணியோடு போர்த்தி வாயில் அழுத்திய ஒத்து வாத்தியத்தோடு கன்னம் உப்பி அவர் வாசிக்கும் ரம்மியமும் அசல் ஒத்து வாத்தியக்காரன் தோற்றான் போங்கள்.இதென்ன பெரியஇதா? என்று தோன்றலாம். அப்படி நினைக்கையில் நீங்கள் உங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது வேறு நடிகர்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்…கருணாநிதிக்குக் கொஞ்சம் கீழேதான் என்று தோன்றவில்லையானால் கேளுங்கள்…! அதென்ன சார், அந்த வேஷமிட்டவுடன் அப்படி அப்படியே இவர்களால் மறுஉருக் கொள்ள முடிகிறது? எங்கே வாங்கி வந்த வரம் இது? எந்த ஜென்மத்து ஆசையை இப்படிப் பூரணமாய் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்? என்ன தவம் செய்து இந்த அளவுக்கான ஒரு அர்ப்பணிப்பு இவர்களுக்குக் கை வந்தது?

இத்தனைக்கும் பெருத்த வசதிகளற்ற, சுமாரான, மிதமான வாழ்க்கை வாழ்ந்த கலைஞர்கள்தான். ஆஉறா, ஓகோ, என்று சந்தோஷத்திலேயே மிதந்தவர்களும் அல்லவே…! பொருளாதாரத் தேக்க நிலையைக் கண்டவர்கள்தானே…! ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்தவர்கள்தானே…! எல்லா இக்கட்டுகளுக்கும் நடுவே எப்படி இவர்களால் இத்தனை தொழில் பக்தியோடு உண்மையாய் வாழ முடிகிறது? ஏற்றுக் கொண்ட தொழிலுக்கு நேர்மையாய் இருத்தல், சத்தியமாய் வாழ்தல் என்கிற ஸ்வரூபம் இத்தனை சக்தி வாய்ந்ததா?

அதே தில்லானா மோகனாம்பாளில் சிவாஜியின் கச்சேரி கோஷ்டி ரயிலில் பயணம் செய்யும் காட்சி. எல்லோரும் கீழே அமர்ந்து, கச்சேரி முடித்த களைப்பில் கண்ணயர்வோம் என்று சோர்ந்திருக்க, மேலே அப்பர் பெர்த்தில் கருணாநிதி படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பார். கீழே இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இடையில் உறாங்ங்ங்ங்…..
ஊங்ங்ங்….ஓஓஓஓஓ……ஊஊஊஊஊ….மேஏஏஏஏஏஏஏஏஏ….என்று ராத்திரி வயிறு முட்டத் தின்ன அசதியிலும், கச்சேரி அலைச்சலூடான தாளமுடியாத உடல் சோர்விலும், காலையும், கையையும் உதைத்துக் கொண்டு வேகமாய்ப் புரண்டு சோம்பல் முறிப்பார். ஊளையிடுவதுபோலான அவர் குரலுக்கேயுரிய இயல்பான நடிப்பு அவ்வளவு அபாரமாய் இருக்கும். நான் இதைச் சொல்லும்போது, சற்றே கற்பனையை ஓடவிட்டு அந்தக் காட்சியை ஒரு முறை மனக்கண் முன்னால் கொண்டு வந்து பாருங்கள். நினைக்கும்போதே சிரிப்புப் பொத்துக் கொண்டு வரவில்லையானால் நீங்கள் எந்த ரசனைக்கும் லாயக்கற்றவர் என்றுதான் பொருள். உங்களிடம் ரசனை என்பது மருந்துக்குக் கூட இல்லை என்று சொல்வேன் நான். இத்தனை ஆழமான ரசனையை ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கிறானே என்று அந்த குணமுள்ளவர்கள் தங்களை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். அதுதான் உண்மை. இதை ஏன் இத்தனை வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் கருணாநிதியின் தனித்தன்மையை உணர்ந்த ரசிகனால்தான் இதை அனுபவித்து ரசிக்க முடியும் என்பதால்தான். பொத்தாம் பொதுவாக, கூட்டத்தோடு கூட்டமாகச் சிரித்து வைக்கும் சராசரி ரசிகனுக்கு இந்தத் தனித்துவமெல்லாம் புலப்படாது. இம்மாதிரி ஒவ்வொருவரையும் பகுத்து உணர்ந்திருந்ததனால்தான் அந்தக்கால இயக்குநர்களும் அவர்களுக்கேற்ற காட்சிகளை ரசித்துப் புகுத்தினார்கள். தங்களின் எதிர்பார்ப்புக்கும் மேலே செய்தபோது அகமகிழ்ந்தார்கள்.

படம் வந்த காலத்தில் கோஷ்டி கோஷ்டியாக வந்து அமர்ந்து கொண்டு, ஒருவரை ஒருவர் முதுகிலும் தொடையிலும் தட்டிக் கொண்டு சினிமா ரசிகர்கள் அமர்ந்தவாக்கில் எவ்வி எவ்விக் குதித்து நெளிந்து ரசித்த காட்சி இது. இதுபோல் இன்னும் பல காட்சிகள் உண்டு இப்படத்தில். உறை போட்ட மேளத்தை ஒரு பக்கமாய்த் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, இன்னொரு கையில் தன்னுடைய ஒத்து வாத்தியத்தோடு சற்றே முதுகு வளைத்து அவர் நடக்கும் காட்சியும், முன்னே நடிகர் திலகமும், பாலையா, சாரங்கபாணி செல்ல, இவர்கள் பின்தொடரும் காட்சிகள் அசல் நாகஸ்வரப் பார்ட்டி பிச்சை வாங்கணும் அத்தனை கனப் பொருத்தமாய் அமைந்திருக்கும் எல்லாருக்கும். வெறுமே கடுமையான உடல் அசதியில் புரளுவதான இந்தக் காட்சியில் பார்வையாளருக்கு இந்த அளவுக்கு ஒரு சிரிப்பை அள்ளிக் கொடுக்க முடியுமா என்று யோசியுங்கள். இந்தக் காட்சிக்கு இதுவரை நீங்கள் சிரிக்காமல் இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை வீண். என்னடா இவன் மட்டையடியாய் அடிக்கிறானே என்றுகூட நீங்கள் நினைக்கலாம். அந்த அளவுக்கான புரிதலுடன் கூடிய ரசிகர்கள் இருந்த காலகட்டம் அது. அதை உணர்ந்து அனுபவப்பட்ட இயக்குநர்கள், தங்கள் திறமையை, ரசனையை, இந்தப் பிறவி நடிகர்களைக் கொண்டு பூர்த்தி செய்து கொண்டார்கள். அவர்களிடமிருந்த பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அவர்களும் மனமுவந்து அதற்கு உடன்பட்டார்கள்.

சினிமா என்கிற கலைரூபத்தை எந்த அளவுக்குக் காட்சி ரூபமாய் மனதில் கணித்து வைத்திருந்தால் இப்படி ஒரு காட்சியை இங்கே வைக்க வேண்டும், அதுவும் கருணாநிதி மூலம்தான் இதைக் காட்சிப்படுத்தியாக வேண்டும் என்று அந்த இயக்குநருக்குத் தோன்றும்? திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள் கொத்தமங்கலம் சுப்புவின் நாவலைத் திரை வடிவமாக்கி, அணு அணுவாகச் செதுக்கி, சித்திரமாய் வடிவமைத்து, ஒரு கலை நயமிக்க, ஆழ்ந்த ரசனைக்குட்பட்ட முழுத் திரைப்படமாக்கி நமக்கு அள்ளி வழங்கிய தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை யாரேனும் அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா? அது வெளி வந்த காலத்தில் ஒரே ஒரு முறை மட்டும்தான் அதைப் பார்த்திருக்கிறேன் என்று யாரேனும் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? குறைந்தது பத்துப் பன்னிரெண்டு முறையேனும் அதைப் பார்த்துப் பார்த்து தன்னை மறந்து ரசித்தவர்கள்தான் நம் தமிழ்நாட்டுத் திரைப்பட ரசிக சிகாமணிகள். காரணம் அந்தப் படத்தில் பாலையாவும், சாரங்கபாணியும், தங்கவேலுவும், டி.ஆர்.ராமச்சந்திரனும், சிவாஜியின் நாடக கோஷ்டியும், எல்லாவற்றிற்கும் தலையாயதாய் வைத்தி கதாபாத்திரத்தில் வெளுத்துக் கட்டிய நாகேஷ் அவர்களும், அவரவர் பாத்திரத்தில் எப்படி வாழ்ந்திருந்தார்கள்? யாரைத்தான் ஒதுக்க முடியும், மறக்க முடியும்? ஏ.கருணாநிதியின் அந்த மிகச் சிறிய ஒத்து ஊதுபவன் கதாபாத்திரம் அத்தனை முக்கியமில்லையாயினும், கிடைத்த ஓரிரண்டு காட்சிகளில் தனது முத்திரையை அழுத்தமாய்ப் பதித்த அவரது நடிப்புத்திறனை நாம் எளிதாக மறந்து விட முடியுமா?

சிறிய வயதில் தந்தையாகவும், பாட்டனாகவும், முதிர்ந்து கிழடுதட்டின வேடங்களையும், சர்வ சுலபமாய் இவர்கள் ஏற்றுக் கொண்டு ஜமாய்த்ததற்கு இவர்களின் நாடக அனுபவங்கள்தானே பெரிதும் கைகொடுத்திருக்கின்றன?

இருவர் உள்ளம் படத்தில் சோடா சுப்பையாவாக வருவாரே, ஞாபகமிருக்கிறதா? சமீபத்தில் கூடக் கலைஞர் டி.வி.யில் இந்தப் படத்தை ஒளிபரப்பினார்கள்…! அட, ஓன் வீட்ல பொன்னா வெளைய….என்று காட்சிக்குள் வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டே நுழைந்து சல்ல்ல்ல்……என்று சோடா பாட்டிலை உடைப்பார். எப்போதும் சோடா குடித்துக் கொண்டே சதா எதையாவது மொச்சு மொச்சென்று வாயில் அரைத்துக் கொண்டேயிருக்கும் தின்னிப் பண்டாரமாய்த் தோன்றுவார். இதுதான் இந்தப் படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்று சொன்னபோது, என்ன சார் இப்படிக் கேவலப்படுத்தறீங்க? என்றா சொன்னார்கள். அது ஒரு காரெக்டர். அப்படியும் ஒரு மனுஷன் எங்காவது இருக்கத்தானே செய்வான், அதை நான் செய்து காண்பிக்கிறேன் என்று களம் இறங்கினார்கள் பலர். தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

எந்நேரமும், அரவமிஷின் மாதிரி எதையாவது அரைச்சுக்கிட்டேயிருக்க வேண்டிது…அது செமிக்கிறதுக்கு சோடாவக் குடிச்சிக்கிட்டேயிருக்க வேண்டிது… க்கும்….எல்லாம் என் தலையெழுத்து என்று ஐயா தெரியாதய்யா ராமாராவ் தலையிலடித்துக் கொள்வார். என்ன மாப்புள பெரிசா அலுத்துக்கிறே…இதுக்குத்தான் என் பொண்ணை உனக்கு ரெண்டாந்தாரமாக் கொடுத்தனா….என்று பதிலுக்கு கையில் சோடா புட்டியோடு இவர் எகிறுவார். ஆசையோடு மனைவியிடம் சென்ற ராமாராவ், செண்பகம், செண்பகம் என்று குழைவார். செண்பகத்துக்கு இப்ப என்ன வச்சிருக்கீங்க? என்று வெடுக்கென்று கழுத்தை ஒடித்துக் கொண்டு சிரிக்காதீங்க, போய்த் தூங்குங்க…என்று விலக்கி விடுவார் அவர் மனைவி.

தன் ஒருவனின் உழைப்பில் உட்கார்ந்து தின்றே கழிக்கும் தன் மனைவிக்கும், மாமனாருக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று, இரவல் வாங்கி வந்த வைர நெக்லஸ் தொலைந்து போய்விட்டதென்று பொய் சொல்லி, அந்தப் பழியைத் தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதி மேல் முகத்தோடு போர்வையைப் போட்டுக் கட்டிப் பிடித்து முதுகில் தொங்கி திருடன் திருடன் என்று கத்திக் குடியைக் கெடுத்து, அவரைக் கதறி அழவும், பயப்படவும் வைத்து, போலீசுக்குப் போக வேண்டிதான் என்று அலற வைத்து, இந்தக் கடனத் தீர்க்க ஒரே வழி சொந்தமாத் தொழில் செய்றதுதான் என்று மனைவியை அப்பளம் போடவும், கருணாநிதியை தேனீ வளர்க்கச்செய்து தேன் தயாரிக்கவுமான குடிசைத் தொழில் வேலையைச் சுமத்தி விடுவார் ராமாராவ். சேகரித்த தேனை வியாபாரத்துக்காகப் பாட்டில் பாட்டிலாய்ப் பெற்றுக் கொள்ளும் போது திருட்டுத் தனமாக ஒரு பாட்டிலை மறைத்திருப்பார் கருணாநிதி. விடாத தீனிப் பழக்கமுள்ள இந்த ஆள், நப்பாசையில், நிச்சயம் ஒன்றை மறைத்திருப்பான் என்கிற ஊகத்தில், மறைந்து நின்று பார்ப்பார் ராமாராவ். அவர் நினைத்ததுபோலவே ஆசையாய் கூட்டுக்குள் கை விட்டு தேன் நிரப்பிய மீதி ஒரு பாட்டிலை எடுத்துத் திறந்து, ரெண்டு விரலை உள்ளே விட்டு, கைநிறைய வழியும் தேனை எடுத்து வாய் நிறைய நக்குவார் கருணாநிதி. அப்படி அவர் ஆசையாய், திருட்டுத்தனமாய் எடுத்துத் தேனை நக்கும் அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டுமே….ஐயோ பாவம்…தின்னா தின்னுட்டுப் போகட்டுமே…என்று தோன்றும் நமக்கு. எம்புட்டு நப்பாசை இந்த மனுஷனுக்கு…விடுங்கய்யா…போனாப் போகட்டும் என்று நம் மனசு பரிதாபப்படும். அத்தனை பரிதாபத்தையும், நமுட்டு ஆசையையும் மனதுக்குள் தேக்கி, அடக்கமுடியாத அந்த நப்பாசையை அவர் தீர்த்துக் கொள்ளும் அந்தக் காட்சியை லேசில் மறந்து விட முடியுமா நாம்…!

அப்டியா சேதி…நா நினைச்சது சரியாப் போச்சு…இதோ வர்றேன்…என்று ஒரு கல்லைத் தூக்கிக் கரெக்டாக அந்தத் தேன் கூட்டை நோக்கி வீசுவார் ராமாராவ். கூடியிருந்த தேனீக்கள் அத்தனையும் சிதறிப் பறக்க ஆரம்பிக்க, தேனீக்கள் உடம்பை மொய்த்து, கருணாநிதியைக் கொட்டித் தீர்ப்பது போலான அந்தக் காட்சியில், கடி தாங்க முடியாமல் அவர் முன்னும், பின்னும், மேலும் கீழுமாக தத்தக்கா, பித்தக்கா என்று குதி குதியென்று குதித்து அலறிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்து தேனீக்கள் ஒன்று கூடிப் போர்க்களமாய்க் கடித்துக் குதறிவிட்ட வேதனையை முகத்தில் பரிதாபமாக வெளிப்படுத்துவார். உண்மையிலேயே தேனீக்கள் கொட்டியதுபோன்றதான அப்படி அவர் குதித்துத் துள்ளும் அந்த தத்ரூப நடிப்பை இன்று வேறு எவரையேனும் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்….நான் எழுதித் தருகிறேன்……

கானகத்துல குரலெழுப்பிக் கதியக் கலக்காதடா…என்று போலீஸ் வேடத்தில் வந்து மன்னார்சாமியாகப் பட்டையைக் கிளப்புவார் கப்பலோட்டிய தமிழனில். மாடசாமியைப் பிடிக்கப் போன இடத்தில் ராவு நேரத்தில் சுடுகாட்டில் அவர் பயந்து நெளியும் காட்சிகள்… யாரும் எதுவும் பேசப்படாது…அம்புடுதேன்…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவுக அம்மாகிட்ட உட்கார்ந்து பேசிட்டிருந்தான் சார் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்…வர்றதுக்குள்ள தப்பிச்சிட்டான் சார்….இவுங்கள்லாம் பொய் சொல்றாங்க சார்…அம்புடுதேன்…என்று தடியைத் தரையில் தட்டிக் கொண்டு அவர் ஜபர்தஸ் செய்யும் காட்சிகளும், இடது கையில் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சட் பட் என்று சல்யூட் அடிக்கும் வேகமும், இயக்குநர்கள் தங்கள் நிலையை மறந்து விட்டு சிரித்து நின்ற காலங்கள் அவை.

வீரபாண்டியக் கட்டபொம்மனில் பெண் வேடமிட்டு, சிவாஜியோடு மாட்டு வண்டி பூட்டிக் கிட்டு…பாடல் காட்சியில் அவர் பின்னால் அமர்ந்து கொண்டு வாயில் வெற்றிலைக் குதப்பலோடு இவர் பண்ணும் சேட்டைகள்…பின் திருடர்கள் எதிர்ப்பட, அவர்களோடு பொம்பளைக்கே உண்டான அஷ்ட கோணல்களோடு குலவிக் கொஞ்சி, நெளிந்து வளைந்து தடியால் அவர்களைப் பதம் பார்க்கும் காட்சிகளும், உளவு பார்ப்பதற்காக யாரை அனுப்பலாம் என்று யோசிக்கும்போது…“ந்ந்நான் போகிறேன் அரசே…”என்று ஆர்வமாய் அவர் முன் வரும் காட்சியில் அவரின் நாட்டுப்பற்றுக் காட்சியும், கடமையுணர்ச்சியை வெளிப்படுத்தும் அந்த வசன உச்சரிப்புகளும், அதே வேகத்தில் கண்ணம்மா…கண்ணம்மா…என்று வீட்டுக்குள் புகுந்து மாவுப் பாத்திரத்தை உருட்டி, உடம்பு முகமெல்லாம் மாவு பூசிக் கொண்டு பெண்டாட்டி முன் நிற்கும் பரிதாபமும், அதிலும் தனக்குக் கிடைத்திருக்கும் பொறுப்பான வேலையைப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளும் நடிப்பும் மறக்க முடியுமா இன்றும்…?

ஏற்றுக் கொண்டவைகள் சின்னச் சின்ன வேடங்கள்தான் என்றாலும், அவற்றை மனமுவந்து செய்த விதமும், தன்னைத் தவிர வேறு யாரும் அந்தக் குறிப்பிட்ட வேடத்திற்குப் பொருந்தாது என்பது போன்றதான அழுத்தமான முத்திரையும், தன் நடிப்பிலேயே ரசிகன் நூறு சதவிகித திருப்தியை அடைந்து விட வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு உணர்வும் இந்தச் சினிமாத் தொழிலில் இப்படி எத்தனை அற்புதமான நடிகர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்கும் போது வியக்காமல் முடியாது. இத்தனைக்கும் ஏ.கருணாநிதி அவர்கள் அந்தக் காலத்தில் காளி என்.ரத்தினம், டி.எஸ்.துரைராஜ், வி.எம்.ஏழுமலை ஆகியோரோடு மாதச் சம்பளத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் வேலை பார்த்தவர் என்பதாக நாம் தகவல் அறிகிறோம். நடிகனாக வேண்டும் என்கிற அவாவும், வெறியும், அவர்களின் ரத்தத்தோடு ஊறிய ஒன்றாகப் பரிணமித்திருக்கிறது. அதற்காகவே பிறந்து, வாழ்ந்து, இருந்து, கழித்து உயிரை விட்டிருக்கிறார்கள் என்பதுதான் சத்தியம்.

நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்றுக் கொண்ட இவர்கள் வேறு வேடங்களே செய்யவில்லையா என்ன? எதற்கும் தயார் என்கிற நிலையிலேதானே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தெய்வப்பிறவி படத்தின் அந்த சமையல்கார நாயர் வேடத்தை யாரேனும் மறக்க முடியுமா? கருணாநிதி எத்தனை சோகம் பிழிய அதற்கு வடிவம் கொடுத்திருப்பார்? அதீத சோகமும், வேதனையும், அமைதியும், தன்மையும் மிளிரும் காட்சிகளில் அவரின் விடைத்த மூக்கு அவருக்கு எத்தனை உதவியாய் இருந்து தக்க பாவங்களை அவருக்குப் பொருத்தமாய் வழங்கியிருக்கிறது?

பாலும் பழமும் படத்தில் சஞ்சீவி காரெக்டரில் பாலையாவோடு இருந்து, பின்பு எம்.ஆர்.ராதாவோடு போய்ச் சேர்ந்து எத்தனை லூட்டி அடிப்பார். குரங்கு புத்தி போக்க தேவாங்கு ராக்கெட் லேகியம் தயாரிக்கிறேன் என்று சாய்ராமிடம் பணம் பிடுங்கிப் பிடுங்கி ஏமாற்றிப் பிழைப்பு ஒட்டும் எம்.ஆர்.ராதாவுக்கே மாமனார் வசிய லேகியத்தைக் கொடுத்து அவரை வழிக்குக் கொண்டு வருவாரே கருணாநிதி. அந்தக் காமெடி டிராக்கை யாரேனும் அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா? உறாலில் அமர்ந்திருக்கும் ராதாவுக்குத் தெரியாமல், அவருக்கு டிபன் எடுத்துவரச் செல்லும் கருணாநிதி ஒரு ஐடியா பண்ணுவார். இட்லியில் அந்த மாமனார் வசிய லேகியத்தை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பதமாய் அதில் தடவிக்கொண்டே, “மாமா, இனிமே நீ எனக்கு ஆமா…”.என்று சொல்லிக் கொண்டே கழுத்தில் தொங்கும் வல்லவெட்டுத் துண்டு நுனியை அந்த லேகிய டப்பாவுக்குள் விட்டு, கொட கொடவென்று ஒரு சுழற்றுச் சுழற்றி ஒத்திக் கொண்டு, போதாக் குறைக்கு கையில் அங்கங்கே தீற்றியுள்ளதை உடம்பெல்லாம் தடவிக் கொண்டு, ஒரு நெளி நெளிந்து கொண்டே நயனமாய் வந்து ராதாவுக்கு அந்த லேகியத்தைப் பவ்யமாய் வழங்குவாரே. இந்த முழுக் காட்சியிலும் தியேட்டரில் என்னவொரு அதிரடிச் சிரிப்பு? இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, உடனே கணப்போதில் ஆளே மாறி கருணாநிதியை மாப்ளேய்ய்ய்ய்….என்று உரக்க சிநேகமாய் அழைத்து அசட்டுச் சிரிப்போடு அப்படியே மண்டியிடுவார் ராதா. இந்தக் காட்சியை ரசிக்காதவர் உண்டா, குதித்துச் சிரிக்காதவர்தான் உண்டா? சாய்ராம் முழி முழி என்று முழிக்க, அடே லேக்கா…போடாதே காக்கா…மாமா இனிமே எனக்கு அடிமை….பேசாதே…என்று விரலை நீட்டுவார் கருணாநிதி. ஏறக்குறைய குரங்கு போலவே ஒரு மேக்கப் செய்யப்பட்டிருக்கும் அவருக்கு. அத்தோடு அவர் பேசும் பேச்சுக்களும், இடையில் கையை மடித்து, மடித்து பக்கவாட்டு இடுப்பில் சரு சருவென்று அவர் சொறிந்து கொள்ளும்போது அசல் வானரம் போலவே இருக்கும். பார்ப்போர் அப்படி ரசிப்பார்கள். அர்த்தமில்லாததானாலும், பாலும் பழமும் படக் காமெடி காலத்திற்கும் மறக்காதது.

எந்தப் படத்திலுமே, எந்த வேடத்திலுமே சோடை போனவரில்லை ஏ.கருணாநிதி. பார் மகளே பார் படத்தில் வேலைக்காரன் மாணிக்கமாக வருவார். விஜயகுமாரியும், புஷ்பலதாவும் நாட்டியம் ஆடுகையில் நட்டுவனாராக எம்.ஆர்..ராதா ஜதி சொல்லுவார். அவர்களோடு சேர்ந்து பின்னால் சற்றுத் தள்ளி நின்று கருணாநிதி பிடிக்கும் நாட்டிய பாவங்கள் இருக்கிறதே, படு காமெடியாக, அதே சமயம் சிரித்து ரசிக்கும்படியாக இருக்கும். நல்ல பாடலைக் கொண்ட இந்த நாட்டியக் காட்சியின் போது, இப்படி இவரை உள்ளே சேர்த்து ஆட விட வேண்டும் என்று எப்படி பீம்சிங் அவர்களுக்குத் தோன்றியது என்று வியந்து போகும் நமக்கு. அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இயக்குநர்கள் இவர்களின் திறமைகளை உணர்ந்து, காட்சிகளை வழங்கி, அதன் மூலம் அவர்களை ரசித்தார்கள், நம்மையும் ரசிக்க வைத்தார்கள் என்று. மதிப்புமிக்க இடத்தில்தான் வைத்திருந்தார்கள் என்பதற்கு இதற்கு மேல் என்ன அத்தாட்சி வேண்டும். சந்திரா, காந்தா என்ற இரு மகள்களில் சந்திரா (விஜயகுமாரி) காணாமல் போய்விட்ட வேதனையில் சிவாஜி அழுது துடிக்கும் அந்த சோகக் காட்சியில், “மாணிக்கம், சந்திரா ஃபோட்டோவ அன்னைக்குத் தூக்கி எறிஞ்சிடுன்னு சொன்னேனே…எறிஞ்சிட்டியா? என்று வேதனையோடு சிவாஜி கேட்க, வேலைக்காரர் ஏ.கருணாநிதி, எஜமான், நீங்க சந்தோஷமாச் சொன்ன காரியத்ததான் நான் செய்திருக்கனே தவிர, கோபத்துல சொன்னது எதையும் இன்னைக்கு வரைக்கும் செய்ததுல்ல எஜமான்…” என்று அவரிடம் அழுது கொண்டே கூறும் காட்சி நம்மையெல்லாம் உலுக்கி எடுத்து விடும்…நீங்கள் நன்றாக ஆழ்ந்து ரசிக்கக் கூடிய ரசனை உள்ளவராய் இருந்தால் ஒன்றை நீங்கள் துல்லியமாகக் கண்டு கொள்ள முடியும். நகைச்சுவை நடிகர்களோடு கூடிய பற்பல படங்களின் சோகக் காட்சிகள் கம்பீரமாகத் திரையில் மிளிர்ந்திருக்கின்றன என்பதுதான் அது. எந்த அளவுக்கு ரசிகர்களை சிரிப்பூட்டி மகிழ்விக்கிறார்களோ, அதே அளவுக்கும் மேலே பிழியப் பிழிய சோகத்தில் அழவும் வைத்திருக்கிறார்கள்.

படித்தால் மட்டும் போதுமா படத்தில் ரங்காராவ் வீட்டு வேலைக்காரனாகத் தோன்றுவார். அவருடைய படத்திலெல்லாம் ஏ.கருணாநிதியைப் பெரும்பாலும் தவற விட்டதேயில்லை டைரக்டர் பீம்சிங் அவர்கள். அந்த அளவுக்கு அவரின் நடிப்பின் மீதும், அவரின் நகைச்சுவை விருந்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த இயக்குநர்கள் ஏராளம். மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் இவரும் நாகேசும் படம் முழுக்க அடிக்கும் கூத்தும் கும்மாளமும் மறக்க முடியுமா என்ன?

ஆனால் இந்த இயக்குநர்களுக்குப் பிறகு காலம் அவர்களைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டதா? என்ற கேள்வி விழுகிறது நம்மிடையே. இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது.

மாமியா ஓட்டல் என்கிற பெயரில் சென்னையில் உணவகம் நடத்தி வந்த ஏ. கருணாநிதி கடைசி காலத்தில் எலும்புறுக்கி நோயால் மரணமடைந்தார் என்பதாகத்தான் செய்தி தெரிய வருகிறது நமக்கு.

காலப்போக்கில் இம்மாதிரி எத்தனையோ அற்புதமான நகைச்சுவை நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி, நம் தமிழ்த் திரையுலகம் மறந்துபோனது. காலம் அவர்களைப் பின்னுக்குத் தள்ளியதா, அல்லது தள்ளப்பட்டார்களா என்று நினைத்து வேதனை கொள்கிறது மனம். ஆனால் மூத்த தலைமுறை ரசிகர்கள் மனதில் அவர்கள் இன்றும் அழியாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஆழ்ந்த அர்த்தமுள்ள ரசனையை தங்களின் இளவல்களோடு, வாரிசுகளோடு பகிர்ந்து கொண்டு புரிந்து கொள்ள வைக்க யத்தனிக்கிறார்கள். அடிப்படையான, அர்த்தமுள்ள அந்த ரசனையை ஆழமாக வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். ஆனாலும் இன்றைய இளைய தலைமுறையின் சினிமா ரசனை என்பது புரிந்து கொள்ள முடியாத கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

 

--------------------------------------------------

1 கருத்து:

Sahadevan Vijayakumar சொன்னது…

நகைச்சுவை நடிகர்களைப் பற்றியும் நகைச்சுவையைப் பற்றியும் எழுதுபவர்களும், வலைப்பூக்களும், இணையதளங்களும் மிக அரிதாகவே இருக்கின்றன. சோகக் கதாபாத்திரங்களைத் தாங்குபவர்களைக் குறித்து எழுதினால் மட்டுமே மற்றவர்களால் கௌரவிக்கப்படுவோம் என்று நினைத்துப் பக்கம் பக்கமாய் எழுதுபவர்களே நிறைந்து காணப்படுகின்ற இந்த இணைய உலகில் நகைச்சுவை நடிகர்களையும் அவர்களது வாழ்க்கை நிறை குறைகளையும், அனுபவித்து குறிப்பாக ஏ.கருணாநிதி அவர்களைக் குறித்து காட்சிகளோடு பின்னிப்பிணைந்து மிகுந்த ரசனையோடு அற்புதமாக எவ்வித எழுத்துப் பிழையுமின்றி கட்டுரையைத் தந்திருக்கின்றீர்கள். என்னுடைய இதயப்பூர்வமான பாராட்டுக்கள் உங்களுக்கு.
சகாதேவன் விஜயகுமார்,
பதிவர், https://antrukandamugam.wordpress.com/