26 டிசம்பர் 2014

“மேகலா”- மாத நாவலில் என் குறுநாவல் “சொல்லாதே யாரும் கேட்டால்”

 

 

2014-12-26 18.36.56 2014-12-26 18.37.48

 

 

 

 

எனக்கு எதுவும் விலக்கல்ல. எழுத்துப் பயிற்சிக்காக நான் மாத நாவல்களும் எழுதுவதுண்டு. விறுவிறுவென்று கதை சொல்ல முடிகிறதா என்கிற பரீட்சார்த்தம். எதிர்பாராத (நானே எதிர்பாராத) முடிச்சுகளை நானே போட்டுவிட்டு அதிர்ந்து கிடப்பேன். பின்பு எந்தவொரு அத்தியாயத்திலாவது அதை அவிழ்க்க முனைவேன். சாமர்த்தியமாக, கதைக்கு முற்றிலும் பொருத்தமாக, இயல்பு மாறாமல், சிடுக்கு அவிழ்ந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வேன். புதிய புதிய கதா பாத்திரங்களை அங்கங்கே பொருத்தி, உறவு முறைகளை நீட்டித்து, கதை கச்சிதமாய் வளர்ந்து செல்வதை நானே ரசிப்பேன். நான் ரசிப்பதை மற்றவர்களாலும் ரசிக்க முடியுமா என்பதை அவர்கள் நிலையில் நின்று கவனமாய்ப் பார்ப்பேன். இப்படியே பதின்மூன்று அத்தியாயங்கள் கடந்து செல்ல, ஒரு நூறு பக்கங்கள் தாண்டும் போது கதை தானே தன் முடிவைத் தேடிக் கொண்டு நிற்கும். அங்கே தன்னையறியாமல் அதுவே நின்று போதும் என்று சொல்லும்.  

இப்படி என் எழுத்துப் பயிற்சியில் வளர்ந்ததுதான் இந்த நாவல்…குறுநாவல்….சொல்லாதே யாரும் கேட்டால்…

20 டிசம்பர் 2014

மனசுமிக்க எழுத்தாளர் கர்ணன்

 

 

 

 

2014-12-21 07.10.34 karnan 2014-12-21 07.10.45

 

 

 

 

மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் இன்றும் நம்மிடையே உண்டு. அவர்களில் முக்கியமானவர் திரு கர்ணன். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், 4 நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுதிகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு “நினைவின் திரைக்குள்ளே (க(ரு)விதைகள்)“ . கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரது “அவர்கள் எங்கே போகிறார்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பு முக்கியமானது.தமிழக அரசு பரிசு பெற்றது.
பழம் பெரும் எழுத்தாளர்களைப் பற்றிய மற்றும் அவரறிந்த மேன்மைமிக்க மனிதர்கள்பற்றிய ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இவரது புத்தகங்கள் அனைத்தையும் கவிதாவும், நர்மதா பதிப்பகங்களும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஐம்பதுகள், அறுபதுகளில் ஜெயகாந்தனுக்குப் போட்டியாக விகடனில், தாமரையில் என்று கதைகளைக் கொடுத்தவர் இவர். ஜெயகாந்தனின் பத்துக்கதைகள் பெஸ்ட் ஸ்டோரீஸ் என்றால் கர்ணனின் ஐந்து கதைகளாவது கண்டிப்பாய் அதற்குச் சமமாய், சவாலாய் நிற்கும்.
காலத்தால் அறியப்படாத எழுத்தாளர்கள் நம்மிடையே பலர். அறிந்தும் சொல்லப்படாதவர் என்று வேண்டுமானால் இவரைச் சொல்லலாம். எழுத்தாளர்களுக்கான குறுகிய மனப்பான்மையில் இது முதன்மை பெறுகிறது

06 டிசம்பர் 2014

எழுத்தாளர் இமையம் அவர்களின் “சாவு சோறு” – சிறுகதைத் தொகுப்பு – க்ரியா வெளியீடு.

 

 

 

2014-12-06 18.41.12 2014-12-06 18.41.24

 

 

download download (1)

 

ஏற்கனவே உயிர்மையில் படித்ததுதான் என்றாலும், கையில் புத்தகமாய் வைத்துப் படிப்பதில் ஒரு சுகம், சந்தோஷம். மறு வாசிப்புக்கும், மறுபடி, மறுபடி வாசிப்புக்கும் தகுதியானவற்றைத்தானே தேடித் தேடிப் படிக்கிறோம். அப்படித்தான் படித்தேன் இன்று. முதல் கதையைப் படித்ததுமே மனசு நடுங்கிப் போனது. இதயம் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் பல கிராமங்களில் சாதி வெறி எப்படித் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது? என்று நினைக்க வைத்தது. முதல் கதையைப் படித்து முடித்து, அதன் பாதிப்பு அடங்கவே ரெண்டு நாள் ஆகும்போல்தான் தெரிகிறது. மனசு உள்ளுக்குள் அழுது கொண்டே இருக்கிறது. எண்ணி எண்ணிப் புழுங்குகிறது. எல்லா மக்களும் சந்தோஷமாயும், ஒற்றுமையாயும், சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளையும், செய்திகளையும் அறிய நேரிடும்போது தங்களுக்குள் நொறுங்கித்தான் போவார்கள்.
“சாவு சோறு - அதுதான் நான் படித்த முதல் கதை. அது வெறும் கதையல்ல. அந்த மக்களின் அவல வாழ்க்கை. புத்தகத்தின் பெயரும் அதுதான். க்ரியா வெளியீடு. இன்று கைக்குக் கிடைத்தது. இமையத்தின் ஆழமான எழுத்து மனசைப் பிழிய வைக்கிறது. அற்புதமான படைப்பாளி. அவரின் எந்தப் படைப்பையும் சோடை சொல்லவே முடியாது. நான் அதிகம் விரும்பிப் படிக்கும் படைப்பாளிகளுள் அவரும் ஒருவர்.
மீதமுள்ள ஒன்பது கதைகள் இன்னும் என்னெல்லாம் பாடுபடுத்தப் போகிறதோ என்னை...! கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு ”சாவு சோறு”

04 டிசம்பர் 2014

கணையாழி – இலக்கிய இதழ் டிசம்பர் 2014 ல் எனது “அவர் அப்படித்தான்” சிறுகதை

2014-12-04 16.35.28 2014-12-04 16.35.56    சிறுகதை  (டிசம்பர்                      2014 கணையாழி வெளியீடு)                                                                       “அவர் அப்படித்தான்…”      

     
     ன்றுவரை அந்த வாசப்படி மிதிக்கவில்லை கிருஷ்ணமூர்த்தி. மிதிக்கக் கூடாது என்பது  அல்ல. என்னவோ ஒரு வெறுப்பு. அது இனம் புரியாதது என்று சொல்வதற்கில்லை. புரிந்ததுதான். மனதளவில் ரொம்ப காலத்திற்கு முன்னமே விலகிப் போனார் என்பது உண்மை. உடலளவிலும் சேர்த்து முற்றிலுமாக விலகியது அந்த 31.12.க்குப் பிறகுதான். சரியாக வருஷம் முடிந்தபோது அவரது சர்வீசும் முடிந்து போனது.  
     புத்தாண்டு பிறந்த அன்று இவர் வேலையில்லாதவராக நின்றார். அப்படித்தானே சொல்லியாக வேண்டும். அதுதானே சரியும் கூட. வேலைதானே ஆணுக்கு அழகு. ரெண்டு வருஷம் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதோ வருது, அதோ வருது என்றார்கள். ஒன்றையும் காணோம். சர்தான் கழுதைய விடு…என்று வெளியேறியாயிற்று. இல்லாவிட்டால் யார் உட்கார்த்தி வைக்கப் போகிறார்கள்? தன் இருக்கைக்கு எதிர்ப்பக்கமாக வேணுமானால் உட்காரலாம். அதுவும் ரெண்டொரு நாளைக்கு. பிறகு அதுவும் போரடித்து விடும். அவருக்கும் இருப்பவர்களுக்கும்.
     இந்த மனுஷன் எதுக்கு தெனம் இங்க வந்து  உட்கார்றான்…போவேண்டிதானே…அதான் ரிடையர்ட் ஆயாச்சுல்ல…இந்தக் கெழடுகளே இப்டித்தான்….
     ரெண்டே நாளில் தன்னை முக்கால் கெழடு, முழுக் கெழடு ஆக்கி விடுவார்கள். இந்தப் பக்கம் தலை வச்சுக் கூடப் படுக்கக் கூடாது. அதான் கௌரவம்.
     ஏதோ நாலைந்து பேர் போன் பண்ணினார்கள். துக்கம் விசாரித்தார்கள்.  என்னங்க, அதுக்குள்ள அம்பத்தெட்டாயிடுச்சா….? என்றார்கள். சார், நீங்கள்லாம் இல்லன்னா நாங்கள்லாம் என்ன சார் வேலை பார்க்கப் போறோம்? என்று துக்கப்பட்டார்கள். நல்ல வேளை நாங்கள்லாம் இல்லன்னா நீங்கள்லாம் என்று சொல்லவில்லை.  என்ன தலைவா, ஓய்வு பெற்றுட்டீங்களாமுல்ல? உங்களுக்குமா? நம்ப முடில தலைவரே…! என்று வெடிச் சிரிப்புச் சிரித்தார்கள். பொருந்தாமல் எதையாவது செய்வதுதானே வழக்கம்.  எல்லார் உளறலையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். ஆத்மார்த்தமாய் கேட்ட சிலரும் உண்டு.அது தவிர்க்க முடியாததுதானே, எல்லார்க்கும் பொதுவானதுதானே என்பதான தொனியில் அடங்கியது. எப்பொழுதுமே ஓய்வு பெற்றவர்களைப் பார்த்து சர்வீசில் உள்ளவர்கள், என்ன அதுக்குள்ளேன் செத்துட்டீங்க? என்பதுபோலத்தான் கேட்பார்கள். செத்த பிணத்தைப் பார்த்து எங்களுக்கெல்லாம் சாவு கிடையாதாக்கும்  என்கிற பாவனையில் எழவு வீட்டில் துக்கப்படும் மனிதர்களைப் போல..
     ஒரு காலத்தில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு சமதையாய் அந்நாளைய நடிகர்களை நினைத்துக்கொண்டிருக்கவில்லையா? ஸ்டார்ஸ் என்கிற வார்த்தை உண்மையிலேயே அவர்களுக்குத்தான் நூறு சதவிதம் பொருந்தும். அவர்களெல்லாம் அபூர்வப் பிறவிகள். எட்டிப் பிடிக்க முடியாத  நட்சத்திரங்கள். அவர்களுக்கு முதுமை என்பதே கிடையாது, இறைவனால் ஸ்பெஷலாக இதற்கென்றே பிடித்துப் பிடித்து அழகு பார்த்துப் படைத்து அனுப்பப்பட்டவர்கள், என்று கனவுகளில் மிதந்த காலம். இப்படி ஒரு தலைமுறையே கற்பனைகளில் மிதந்ததும், காலத்தை வீணாக்கியதும், தங்கள் சொந்த வாழ்க்கைபற்றிய பிரக்ஞையே இல்லாமல் திரிந்ததும், நாசமாய்ப் போனதும், பிற்பாடு அ(இ)வர்களுக்கெல்லாம் வயதாகி, கிழமாகி, மரித்துப் போனபோதே மேற்படியார்கள் தங்கள் கா(நா)லாந்திர இழப்பை உணர்ந்ததும், காலம் எல்லாமும் கடந்து போய் செத்த சவமாய் நின்றதும்,  இன்றும் நினைத்துப் பார்த்து புத்தியில் நிறுத்த வேண்டிய கதை. உண்மையிலேயே நடப்புத் தலைமுறைகளுக்குச் சொல்ல வேண்டிய விழுமியங்கள் இவை. அது போல எல்லாருக்கும் ஓய்வு உண்டு, அனைவருக்கும் சாவு உண்டு. இப்டியெல்லாம் அசடு மாதிரிச் சொல்லித்தானே ஆக வேண்டிர்க்கு…?
     மனதில் தோன்றிய வெறுப்புணர்வில் என்னென்னவோ தோன்றியது கிருஷ்ணமூர்த்திக்கு. எதற்கு இதையெல்லாம் அனாவசியமாய் நினைத்துக் கொண்டு? நம்மளவில் வேலை பார்த்த காலத்தில் சரியாய் இருந்தோமா, வெளியே வந்தோமா…அவ்வளவுதானே…?
     நம்ம இல்லன்னா என்ன, ஆபீசே ஸ்தம்பிச்சிடவா போகுது…என்கின்ற தெளிவு எப்பவுமே உண்டு கிருஷ்ணமூர்த்திக்கு.  இந்தக் குப்பன் இல்லன்னா இன்னொரு சுப்பன்…! அவ்வளவுதான். ஒரு வழியாய் விட்டது சனி…காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் போனது என்று நினைத்து ஆறுதல் பட்டுக் கொண்டார். மாதா மாதம் சம்பளம் தந்த இடத்தை அப்படி நினைக்கலாமா என்று இன்னொரு மனசு கேட்டது. கோயிலாக நினைத்துக் கும்பிட வேண்டாமா? அதைத்தான் இருந்தவரை செய்து தீர்த்தாயிற்றே? கடமைதான் தெய்வம், கூலி தரும், வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட உறுதுணையாய் நிற்கும் வேலையை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்று பாடாய்ப் பட்டு பம்பரமாய்ச் சுழன்றாயிற்றே? ஓடாய்த் தேய்ந்து ஒன்றுமில்லாமல் ஆனது போதாதா?  
     என்னளவுக்கு எவன் இருந்தான்? இருக்கான்? உழவு மாடு மாதிரி இதுகாறும் வேலை பார்த்தாச்சு…சம்பளம் தவிர வேறே அது இதுன்னு இம்மியும் எதிர்பார்க்காம உண்மையா உழைச்சாச்சு…மொத்த சர்வீசுல ஒரு தடவை கூட மனசு சபலப்படலை…எவனும் கையை நேருக்கு நேரா நீட்டி, பல்லு மேலே நாக்குப் போட்டு….ச்ச்சீ…தப்பா வருது….நாக்கு மேல பல்லுப் போட்டு ஒரு வார்த்தை பேச முடியாது…சொன்னதுமில்ல…சொல்ற தெம்பும் இருந்ததில்ல எவனுக்கும்… ஏதாச்சும் தப்பு செய்திருந்தாத்தானே? மடில கனமிருந்தாத்தானே வழில பயமிருக்கணும்? பழைய பழமொழிதான்…இருந்தாலும் அவசரத்துக்கு இதுதான் வருது…
     என்ன வேலை பார்த்து என்ன செய்ய? எப்படி இருந்து என்ன ஆக? எல்லாம் பொய். வீண். பெருமைப் பட்டுக்கொள்ள ஒன்றுமேயில்லை. விதி, விதி என்று விதியோடு மாரடித்ததுதான் பாக்கி. எது நடந்தது விதிப்படி? எல்லாமும் அதனதன் தலைவிதிப்படி ஆனது. அவ்வளவுதான். பத்துக்கு நாலு ஆச்சா? அட, ரெண்டு? அட வேணாம், ஒண்ணு? போளும்யா பெருமை…! நெனச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, அதனால முழிக்குதே அம்மாக் கண்ணு…! பழைய பாட்டு ஒன்று ஞாபகம் வந்தது. இங்கே அம்மாக்கண்ணு இல்லை…அய்யாக் கண்ணு…அது ஒன்றுதான் மாற்றம்.
     சார்…கரெக்டா போட்டிருக்கீங்க ஸார் லிஸ்ட்….இது பிரகாரம் போஸ்டிங் போட்டுட்டீங்க….சூப்பர் ஸார்…எங்க எல்லாருக்கும் சம்மதம் ஸார்….நீங்க இருக்கீங்கங்கிற நம்பிக்கைலதான் வந்தோம்…சாரு செய்து கொடுப்பாருன்னு…இத மட்டும் எங்களுக்குப் பண்ணிக் கொடுத்துட்டீங்க நாங்க உங்கள மறக்கவே மாட்டோம் சார்….
     நா என்னத்தைய்யா பண்றது…உள்ளத்தச் சொல்றேன்…எது சரியோ அதச் சொல்றேன்….உள்ளே அனுப்பறேன்….அப்டியே கையெழுத்தாகி வந்தா உங்க யோகம்…
     நீங்க அப்டிச் சொல்லப் படாது சார்…சீஃப்டச் சொல்லி எங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்….
     சரி, சொல்றேன்….இதுனால என்ன குறைஞ்சா போறேன்…தாராளமாச் சொல்றேன்….
     தான் போட்ட மூதுரிமைப் பட்டியலை தன் முன்னே விவாதிக்கும்போது அப்படியே ஏற்றுக் கொண்ட அதிகாரி, தான் வெளியே வந்த கொஞ்ச நேரத்தில் எப்படித் தலை கீழாக மாற்றி விட்டார்? தன்னை ஒரு வார்த்தை கேட்டாரா? பின், தான் மணிக்கணக்காய் மெனக்கெட்டது எதற்கு? பார்த்துக் கொண்டேகை சூம்பவா? எது வேலை செய்தது அங்கே? லிஸ்ட் போடுங்கிறது, நேர்ல பேசும்போது ஓ.கே. குட்… ங்கிறது… பெறவு இஷ்டம்போல மாத்தறது…என்ன கண்றாவி இது? அப்போ நா எதுக்கு? இது இத இப்டிச் செய்யணும்னு சொல்றதுக்குத்தானே என்னை வச்சிருக்கா? உங்க இஷ்டப்படி செய்துக்கிறதுன்னா கையொடிய நா ஏன் எழுதணும்? மண்டையப் போட்டுப் பிச்சுக்கணும்?  நா என்ன கிறுக்கனா?
     கிறுக்கன்தான். பின்ன? உங்கைலயா அதிகாரம் இருக்கு? பவர் அங்கல்லய்யா இருக்கு? நீ சொல்லத்தான் முடியும். செய்றது அவுங்கதான்…நீ பார்த்திட்டு பெப் பெப் பேன்னு நிக்க வேண்டிதான்…போவியா? பொத்திட்டுப் போய்யா…சும்மா வாய் பேசாத…..
     அப்படியெல்லாம் நின்றதில்லை. அதற்கான அவசியமும் இல்லை தனக்கு என்று நினைத்தவர் இவர். சரியைச் சொல்வது என் வேலை. அதற்குத்தான் எனக்குச் சம்பளம். நான் சொல்லியாயிற்று. என்னை நோக்கிக் கேள்வி வந்தால் அதற்கு எப்படிப் பதிலளிப்பது என்பது எனக்குத் தெரியும்.
     இன்றுவரை அதே நினைப்புத்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. அவர் தலை எப்பொழுதும் நிமிர்ந்தேதான் இருக்கும். பார்வை தெளிவாய் நீண்டிருக்கும். அதை நேருக்கு நேர் அணுக முடியாதவர்கள்தான் அதிகம். அவரை டிஸ்கஷனுக்கு அழைக்கும் அலுவலர்கள் கூட அவர் கண்களை நேரடியாய் நோக்க மாட்டார்கள். நோக்க முடியாது அவர்களால். ஏனென்றால் அவர்கள் தப்பு செய்பவர்கள். அதை இவர் அறிவார். ஆனாலும் வேறு வழியில்லை என்று இருப்பவர்கள். கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போட்டுத்தான் ஆகணும் என்பவர்கள்.
     கிருஷ்ணமூர்த்தி தினமும் சந்தித்த பிரச்னை இது. விதி முறைப்படி என்ன உண்டோ அதை அச்சுப் பொறித்தாற்போல் எழுதி அமைதியாய் உள்ளே தள்ளி விட்டு விடுவார். இது எப்படி? அது எப்படி? என்று யாரும் ஒரு வார்த்தை கேட்க முடியாது. தேவையான விதிமுறைப் புத்தகங்களும், அந்தந்தப் பக்கங்களில் தக்க குறிகளிடப்பட்டு கொடி மாட்டப்பட்டு கோப்புகளுக்குக் கீழே தலை நிமிர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். வாய் பேசாது அதைத் திறந்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அவை சொல்லும் தேவையான விடைகளை. அவை தரும் தக்க விளக்கங்களை.
     அவற்றைக் கூடப் பொறுமையாய்ப் படித்து அறிய முடியாத ஜென்மங்கள் அநேகரைப் பார்த்துத்தான் இருக்கிறார் இவர். “இவங்கள்லாம் எதுக்கு ஆபீசர்னு வந்து நம்ம கழுத்த அறுக்கிறாங்க…“ என்று தனக்குத்தானே நினைத்துக் கொள்வார். அல்லது முனகிக் கொள்வார்.
     சார், உங்கள சீஃப் கூப்பிடுறார்… - பியூன் வந்து தயங்கித் தயங்கி இப்படி நிற்கும்போதே சங்கடத்தோடுதான் எழுவார்.
     அதான் எல்லாந்தானய்யா வச்சு அனுப்பியிருக்கேன்…இன்னும் என்னத்துக்குக் கூப்பிடுறாரு…? என்பதும் உண்டு சில சமயம். பழத்த உரிச்சு நீட்டியாச்சு…இன்னும் வாயில வேறே ஊட்டி விடணுமா? போகச் சொல்லுய்யா அந்தாளை…
     எதையும் படிக்கிறதுக்கு எவனுக்கும் பொறுமை கிடையாது. பிட்டுப் பிட்டு வாய்ல திணிக்கணும்…மென்னு…மென்னு….மென்னு முழுங்கு….என்று சொல்லித் தரணும். அது நாலு வரியோ, நாலு பக்கமோ… படிக்கும், அறிந்து கொள்ளும் ஆர்வம் கிடையாது. ஏதோ பரீட்சை எழுதியாச்சு, வந்தாச்சு வேலைக்கு…கிராஜூவேஷன் இருக்கு…பணம் இருக்கு….கையில காசு வாயிலதோச…ஆப்பீசர்…..நாஆப்பீசராக்கும்…ஞாபகமிருக்கட்டும்…..உங்களுக்கெல்லாம் பாஸ்…..முதல்ல இந்த எண்ணம் வந்தா எங்கிருந்து உருப்படும்…சட்டிய முதல்ல நிரப்பணும்…அப்பத்தான் அகப்பைல வரும்ங்கிற எண்ணத்துல இருக்கிற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸை முதல்ல தரவ் பண்ணுவோம்ங்கிற நினைப்பு எவனுக்காச்சும் இருக்கா? எவனும் நம்மளக் கேள்வி கேட்கக் கூடாது…எந்தக் கேள்வியும் வராத எடத்துல நாம நிக்கணும்ங்கிற நெனப்பு வேண்டாமா?
     மொத்த சர்வீசில் அப்படி ஒரு சிலரைத்தான், தான் பார்த்திருப்பதாக அடிக்கடி தனக்குத்தானே நினைத்துக் கொள்வார் கிருஷ். அவர்களிடமெல்லாம் வேலை பார்க்க சந்தோஷமாய் இருக்கும். எல்லாம் தெரியும் என்கிற கர்வம் துளிக்கூட அவர்களிடம் தென்படாது. எதிராளியை, அவனது திறமையை மதிக்கத் தெரியும். ஊக்கப்படுத்தத் தெரியும். பலே என்று வாய் திறந்து பாராட்டத் தெரியும். ஒரு நல்ல அலுவலரிடத்தில் பணியாற்றுகிறோம் என்கிற பெருமை நமக்கு இருக்கும். அலுவலகத்தின் மதிப்பும் கூடும்.
     ஆனால் ஒன்று அந்தக் காலத்திலேயே இந்தத் திறமையெல்லாம் இருந்தும் ஓடிச் சென்று காரின் கதவைத் திறந்து விடுபவர்களும் இருக்கத்தானே செய்தார்கள்?
     உறலோ மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, குட் மார்னிங்…. என்று வாயிலில் நின்று, உள்ளே உறாலில் உட்கார்ந்து சிவனே என்று தன் வேலையில் ஈடுபட்டிருக்கும் இவரை வம்படியாய் அழைத்து வணக்கம் சொன்ன அலுவலர்களையும் பார்த்திருக்கிறார் இவர்.
     எதிர்ப்பட்டால் வணக்கம். இல்லையென்றால் அவருண்டு அவர் வேலையுண்டு. அவ்வளவுதான். வலிய அவர் அறைக்குச் சென்று, அவர் தலை நிமிரும் வரை காத்திருந்து, சலாம் போட்டுவிட்டு வரும் வேலையெல்லாம் என்றுமே இருந்ததில்லை இவரிடம்?
     நம்ம வேலையைக் கவனிக்கத்தானே இங்க அனுப்பியிருக்காங்க…தெனம் இப்டி சலாம் அடிக்கிறதுக்கா? எதுக்கு? நாளுக்கு எத்தனை சலாம் அடிச்சேன்ங்கிறதுக்கு முக்கியமா? அல்லது எத்தனை ஃபைலை டிஸ்போஸ் பண்ணினேன்ங்கிறது முக்கியமா? போய்யா…அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு….இவ்வளவுதான் கிருஷ்ணமூர்த்தி. இவை அலுவலர்கள் காதுக்கெல்லாம் போனதுமுண்டு. ஆனால் எவரும் எதுவும் கேட்டதில்லை. அவர்களுக்கே இவர் பேரில் கொஞ்சம் பயம் இருக்கும் போலத்தான். தங்கள் கேபினுக்குப் போக இவர் அறையைத் தாண்டும்போது விருட்டென்று கடப்பார்கள்.
     எதுக்கு இந்த மனுஷன் மூஞ்சில முழிச்சிட்டு? என்று இருக்கலாம். வரும்போதே ஏதோ தப்பு செய்துவிட்டு வருபவர்கள் போலத்தான் இருக்கும். இவர் கண்களை அவர் நேருக்கு நேர் சந்தித்ததே இல்லையே?
     இதற்குப் பேர் என்ன? ஞானத் திமிரா? அதெல்லாம் இல்லை. அப்படி ஒன்றும் அவர் தன்னை என்றுமே நினைத்துக் கொண்டதில்லை.எல்லாரும் முன்னேறணும், நல்லாயிருக்கணும் என்று எல்லோரையும்போல நினைப்பவர்தான்.  அப்படியெல்லாம் பிசகாய் இருந்தால், வெறுமே, கட்டணம் எதுவுமில்லாமல் எல்லாருக்கும் அவர் வகுப்பு எடுப்பாரா? எத்தனை பேரைத் தேற்றி விட்டிருக்கிறார்? அவரால் பயனடைந்தோர் எவ்வளவு நூறு பேர்? எனக்கென்ன தலைவிதியா? படிச்சாப் படி…இல்லன்னா போ…என்று இருந்திருக்கத் தெரியாதா?
     வலிய ஒரு பள்ளிக்குப் போய் காலை எட்டரை வரை தனக்கு ஒரு இடம் வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு, பணியாளர்களுக்கான வகுப்பை அங்கே நடத்தினாரே!
     மனுஷன் க்ளாஸ் எடுத்தார்னா அப்டியிருக்கும்யா….அவர்ட்டப் போயிட்டு நீ ஆபீஸ் சீட்ல ஒக்கார்ந்தேன்னு வச்சிக்க…தானா எல்லா வேலையையும் பார்த்திடுவ…யார் உதவியும் உனக்குத் தேவைப்படாது….ப்ரமோஷனுக்கான டெஸ்ட்டையெல்லாம் தூசு மாதிரித் தட்டி விட்டிடலாம்….அவரெல்லாம் நம்ம டிபார்ட்மென்டுக்குப் பொக்கிஷம் மாதிரிய்யா….
     பொக்கிஷந்தான்…யாரு இல்லன்னா..? ஓசில சொல்லித்தந்தா பின்ன பொக்கிஷமில்லாம வேறென்ன? காசுக்கு எல்லாத்தையும் விக்கிறவன்தானே இங்க கெட்டிக்காரன்…பொய்யான உலகம்…
     எல்லாருமே நன்னா பண்றேள். நம்பிக்கையாப் பண்ணுங்கோ…எல்லாரும் கெட்டிக்காராள்தான்….சொல்லிச் சொல்லி எத்தனையோ பேரை மேலே கொண்டு சென்றிருக்கிறார்.
     அவருக்கே அதிகாரியாய் இருந்து கொண்டு, அவரிடமே படித்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். டேரெக்ட் ரெக்ரூட்மென்ட் ஆசாமிகள். மேலிடத்தின் ஆமாசாமிகள். என்னதான் நேரடியாய் நுழைந்து தலையாய் உட்கார்ந்திருந்தாலும், ஒரு இன்க்ரிமென்டுக்குப் பிறகு அடுத்தடுத்த ஊதிய உயர்வுகளுக்கு இந்த இந்த டெஸ்ட்டுகளெல்லாம் பாஸ் பண்ணினாத்தான் ஆச்சு என்று ஆப்பு வச்சிருக்கானே….அப்போ அதுகளையும் காசு குடுத்தா விலைக்கு வாங்க முடியும்? மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கே அதைக் கொஞ்சமாச்சும் தேய்ச்சு விட்டுத்தானே ஆகணும்…
     வகுப்பில் உட்கார்ந்திருக்கும்போதே நான் உனக்கெல்லாம் அதிகாரியாய் இருப்பதற்குத் தகுதியற்றவன்தான் என்று நிரூபித்தவர்கள்தான் அநேகம். என்ன செய்ய? மண்டைக்காய்ச்சல்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. எல்லாரோடும் போராடித்தான் இருக்கிறார். அப்படி அவர் தேற்றிவிட்டவர்களிடமெல்லாம் கணக்குப் பண்ணி ஒரு அமௌன்ட்டை ஃபீசாகத் தேற்றியிருந்தால் கூட இன்னும் சற்று முன்னே, அதாவது சர்வீசில் இருக்கும் காலத்திலேயே தன் ஒரே பெண்ணுக்கு அவர் கல்யாணம் செய்திருக்க முடியும். அதற்கான சமத்து அவரிடமில்லாமல் போனது ஒன்றும் அதிசயமில்லை. துட்டு மீது என்றுமே அக்கறை இருந்ததில்லை அவருக்கு. வாழ்க்கையின் ஒரு காரணி அது. அவ்வளவே…! அது என் பின்னால்தான் வர வேண்டும். நான் அதைத் துரத்திக் கொண்டு செல்ல முடியாது. அது என்னை ஆள முடியாது.
     ன்னத்தக் கூப்பிடச் சொல்ற? ரிடையர்ட் ஆகி வருஷம் ரெண்டு முடியப் போவுது…இப்பப் போய் அவனவன்ட்ட பத்திரிகையை நீட்டினா மொய்க்காகத்தான் இந்த ஆள் வந்திருக்கான்னு நினைப்பான்….நீங்கள்லாம் வந்து ஆசீர்வாதம் பண்ணனும்னு பொத்தாம் பொதுவாச் சொல்லச் சொல்றியா? இந்த ஊழல் ஆசாமிகளெல்லாம் வந்தா என்ன வராட்டா என்ன? இவங்க வந்து ஆசீர்வாதம் பண்றதுக்குப் பண்ணாமயே இருக்கலாம்…
     அப்டிச் சொல்லலாமா? மனுஷா வேறே…ஆபீஸ் வேறே…அதையும் இதையும் மிங்கிள் பண்ணாதீங்க….
     என்னடீ, மிங்கிள் தங்கிள்ங்கிற? மனுஷன் மனுஷனா இருந்தாத்தான் எல்லாம் நல்லாயிருந்திருக்குமே…! அவன் மிருகம் மாதிரி ஆகுறதுதானே கோளாறு…! தன்னோட சொந்த வக்கிரங்களையெல்லாம் வேலைல புகுத்தினதுனாலதானே நிர்வாகம் கெட்டுப் போச்சு….ஒழுக்கம் அதுனாலதானே சீர் கெட்டுது...அப்டித்தானே ஊழல் புகுந்தது…நிர்வாகத்துக்குன்னு என்னதான் விதிமுறைகளை வகுத்து வச்சிருந்தாலும், மனுஷாளோட சொந்தக் குணம் எல்லாத்தையும் கெடுத்துடுத்துங்கிறதுதானே உண்மை…அப்டிப்பட்டவாகிட்ட இப்பப் போயி இன்விடேஷனை நீட்டினா என்ன நினைப்பான்? வந்திட்டாருய்யா அங்கேருந்து நீஈஈஈஈஈட்டிக்கிட்டு….ன்னு மனசுக்குள்ள கருவுவான். இல்லன்னா கட்டாயம் வந்திருவோம் சார்னு பொய்யாச் சிரிப்பான்…எதுக்கு அவுங்களுக்கு தர்ம சங்கடத்த உண்டு பண்ணிட்டு…எத்தனையோ பேர் மாறிப் போயிருப்பா…இருக்கிற ஒரு சில பழையவா பேரும் எனக்கு மறந்து போயாச்சு…ஸ்டில் சம் குட் பர்சன்ஸ் ஆர் தேர்… சில நல்லவா இன்னைக்கும் இருக்கத்தான் செய்றா…இல்லைன்னு சொல்லலை…அவாளெல்லாம் மனசுலயும் இருக்கா…இவாளோட சேர்த்து அவாளையும் விட்டுட வேண்டிதான்….அநியாயமும் அக்ரமமும் பொறுக்க மாட்டாம இந்த லோகம் அழிஞ்சா எப்டி எல்லாக் கெட்டவாளோட சேர்ந்து நிறைய நல்லவாளும் அழிஞ்சு போவாளோ அத மாதிரி நினைச்சிக்க வேண்டிதான் இதையும்…
     போறுமே உங்க வியாக்யானம்…அப்ப்ப்ப்பா…கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு….பத்திரிகையை கொடுத்திட்டு வாங்கோன்னா அதுக்கு இதெல்லாமா பேச்சு?
     பார்த்தியா, உனக்கே இம்புட்டு அலுப்பிருக்கு…ரெண்டு வருஷமா அந்தத் திசைப்பக்கமே திரும்பாத நா இப்பப் போய் அங்க நின்னா என்ன நினைப்பாங்க என்னப்பத்தி?
     சரி விடுங்கோ, உங்க இஷ்டம்போல செய்ங்கோ…
     அப்டிச் சொல்லு…அதுதான் என்னோட சகதர்மிணிக்குப் பொருத்தம்….
     ப்படியும் ஒரு சிலரைப் பார்க்கத்தான் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. கடை, கண்ணி, மார்க்கெட், சபா என்று கண்ணில் பட்டு விடுகிறார்களே….
     சாஆஆஆஆஆஆஆர்…….எங்களெல்லாம் மறந்திட்டீங்கல்ல….நல்லாருக்கீங்களா சார்……? ஆளே மாறிட்டீங்களே சார்…
     நல்ல்ல்ல்லா….இருக்கேன்…நீங்களெல்லாம் எப்டியிருக்கேள்? யாரெல்லாம் ப்ரமோஷன்ல போனா? யாரெல்லாம் டிரான்ஸ்பர் ஆனா? இப்ப யாரெல்லாம் இங்க இருக்கேள்? சொல்லுங்கோ… - அவரையறியாமல் ஆர்வமாய்த்தான் கேட்டார். தினமும் அவர்களோடெல்லாம் கலகலப்பாய்ப் பேசிச் சென்று வடையும் டீயும் சாப்பிடும் அந்த நேசமான நேரங்களை மறக்க முடியுமா? பணியை அவ்வளவு  நேசித்தவராயிற்றே…கூடஇருந்தவர்களையெல்லாம் கொண்டாடியவராயிற்றே…
     நன்னா வருவேள் எல்லாரும். கொஞ்சம் அக்கறைதான் வேணும்…கருத்தா, கவனமா வேலை பார்த்தா எல்லாமும் மனசுல பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….அப்புறம் நீங்க மத்தவாளக் கேள்வி கேட்கலாம்….நமக்குக் கூலி தர்ற வேலையாச்சே….அம்பத்தெட்டு வரைக்கும் இதுலதானே கழிச்சாகணும்…அப்போ? சும்மா ஓட்ட முடியுமா? அதெல்லாம் செல்லுபடியாகாது. என்னைக்கும் வேலைதான் நிக்கும்….உங்களப்பத்தி மத்தவா சொல்லணும்னா உங்க திறமைதான் பேசணும்….
     சாமர்த்தியமா இருக்கிறதுங்கிறது வேறே…அது இப்போ இங்கே தப்புத் தப்பா அர்த்தப்பட்டு நிக்கிறது…சம்பளம் தவிர மேல் வரும்படின்னு வருதே பல பேருக்கு….அதை சாமர்த்தியம்னு சொல்றா…சொல்ல ஆரம்பிச்சுப் பல காலம் ஆயாச்சு…அன்பளிப்புங்கிறமாதிரி….உங்க குடும்பம் நன்னாயிருக்க வேண்டாமா? குழந்தைகுட்டிகள்நன்னாயிருக்கணுமோல்லியோ?அதை நீங்கபார்க்கணுமோல்லியோ…கண்ணாரக்கண்டுசந்தோஷப்படணுமோல்லியோ…அப்போ அந்தத் தப்பை நாம பண்ணக் கூடாது. அவ்வளவுதான்…இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததுல்ல…என்னமோ பெரிசா நான்போய் உளறிண்டிருக்கேன்….என்னைவிட உங்களுக்குத்தான் இந்த லோகத்துல நடக்குற நல்லது கெட்டது எல்லாம் நன்னாத் தெரியும்…ஏதோ தோணித்து சொன்னேன். கொஞ்சம் ஆசுவாசப் பட்டுண்ட மாதிரின்னு வச்சிக்குங்கோளேன்…
     இம்புட்டுப் பேசுறாருல்ல…இவர் பையன் ஏன் அப்டிப் போனானாம்? கேளுங்களேன்யா யாராச்சும்? யாரோ கேட்பது போலத்தான் இருக்கிறது.
     அது கர்ம வினை….உதவாக்கரையாப் போகணும்னு இருக்கு….அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சாத்தான் முடியும். சில ஜென்மாந்திரக் கடனை அந்த ஜென்மத்துலயே அடைச்சாகணும்னு இருக்கும்…அனுபவிக்கிறேன். இதையும் மத்தவா சொல்றதுக்கு என்ன இருக்கு…எனக்கு நானே உணர்ந்துதானே இருக்கேன்…நமக்குப் பையன் விளங்காமப் போயிட்டானேன்னு நானும் தப்பாவே நடக்க முடியுமா? அது இன்னுமில்ல மனசையும் உடம்பையும் கெடுத்துண்டதாகும்….இந்த சரீரமும், மனசும் அதுக்காகவா இருக்கு? பஞ்ச பூதங்களும் ஆட்டிப் படைக்கிற இந்த உடம்புலேர்ந்து இந்த மனசைப் பிரிக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு? சாதாரண மனுஷனுக்கு அதென்ன அவ்வளவு சாத்தியமா? நான் யாரு, நான் யாருன்னு கேள்வி கேட்டுண்டேயிருன்னு மகான்களெல்லாம் சொல்றா? யாரு விடை கண்டு பிடிச்சிருக்கா? ஆதிப் பெரியவா தவிர்த்து? முயற்சி பண்ண வேண்டிதான்….இந்த ஸ்தூல சரீரத்துலர்ந்து ஆன்மாவப் பிரிச்சு உணர முயற்சிச்சுண்டேயிருக்க வேண்டிதான்….உடம்பு வேறே, ஆன்மா வேறேன்னு உணர்ந்ததுனாலதானே “என்ன, ஆயிடுத்தா?“ ன்னு கேட்டார் ரமணர். முதுகுல வளர்ந்திருந்த கட்டிய ஆபரேட் பண்ணி எடுத்தபோது அது அவரை ஒண்ணுமே பண்ணலியே? அவாளெல்லாம் மகான்கள். நாம சாதாரண மனுஷா…அவ்வளவுதான்….
     இன்று என்ன, எண்ண அலைகள் போட்டு இந்தப் பாடு படுத்துகிறது?  நினைத்துக்கொண்டே அந்த வடையைப் பிய்த்து வாய்க்குள் தள்ளினார் கிருஷ்ணமூர்த்தி. பேருந்தை விட்டிறங்கித் தன்னை அறியாமல் அங்கு வந்து விட்டோமோ? அந்த முக்குக் கடையில் வடை சாப்பிட்டு எவ்வளவு நாளாயிற்று? அந்தப் பகுதிக்கே வருவதில்லையே? கடைக்காரனுக்கே தன் முகம் மறந்து போயாச்சு….அதோ அந்தப் பாலத்தை ஒட்டின ஆபீசுல இருந்தீகளே…அந்த சார்தானா? என்று கேட்பான் என்று எதிர்பார்த்தால்… அதற்குள்ளேயுமா அடையாளம் தெரியாமல் போய் விட்டது? அவன் கேட்காட்டா என்ன? நா கேட்டுட்டுப் போறேன்…நன்னாயிருக்கேளா…? வேலை மும்முரத்தில் தலையாட்டி வைத்தான் அவன்.
     தன்னை விட்டு விடுவோம்…சாதாரண மனுஷப் பிறவி. அடையாளப் படுத்தப் பட வேண்டிய பல புனிதர்கள் இந்த உலகத்தில் இப்படித்தானே அடையாளமில்லாமல் போயிருக்கிறார்கள்? எல்லாம் காலத்தின் கோலம்….
     இடது கையில் அந்த மஞ்சள் பையில் அடுக்கியிருந்த கல்யாணப் பத்திரிகைகளோடு அப்படியே நின்று கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
     நீங்களே சொல்லுங்களேன்…அதோ அந்தப் பாலத்தின் அருகிலிருக்கும் அவரின் அந்தப் பழைய ஆபீசுக்கு அவர் போவதா வேண்டாமா என்று? அவர் அதுக்காகத்தான் கிளம்பி வந்தாரா தெரியாது! இருந்தாலும் ஒரு யோசனைதான்…இப்டியாப்பட்ட காரெக்டர் உள்ள மனுஷன் என்ன செய்வார்?
     நானும் யோசிச்சித்தான் பார்க்கிறேன்…ஒண்ணும் புலப்படலை….
     உறலோ….! என்னங்க நீங்க…நீங்களும் இப்டி ஒரேயடியா தலையைச் சொறிஞ்சிட்டு நின்னீங்கன்னா…? எதாச்சும் சொல்லுங்க…? யாருமே ஒண்ணும் சொல்ல மாட்டீங்கிறீங்களே…?  சரியாப் போச்சு…அங்க பாருங்க…..?
     எல்லோரும் அவசரமாய்த் திரும்பி நோக்குகிறார்கள்.
     சுருட்டி மடக்கிக் கட்கத்தில் இடுக்கிய மஞ்சள் பையோடு எந்த நிறுத்தத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வந்து இறங்கினாரோ, அதே இடத்தின் எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை  நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
                     ---------------------------------------------
                                                                                                          

02 டிசம்பர் 2014

தி.ஜானகிராமனின் “அமிர்தம்”- நாவல்

படித்ததில் பிடித்தது -

----------------------------------------

 

 

2014-11-30 19.55.08 thija-logo2 timthumb

படித்தது - “கிராம ஊழியன்” என்ற இதழில் தொடராக வந்து பேசப்பட்ட தி.ஜா.ரா.வின் “அமிர்தம்“ என்ற முதல் நாவல்தான் நான் இன்று படித்து முடித்தது. அவரது முதல் நாவல் என்றே என்னால் இதை எண்ண முடியவில்லை. அத்தனை அனுபவச் செழுமையோடு கூடிய எழுத்து. தாசி குலப் பெண்ணான அமிர்தம் சேற்றிலே மலர்ந்த செந்தாமரையாக காதல், அன்பு இவற்றின் பொக்கிஷமாகத் திகழ்கிறாள். பல நாவல்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே...சரி..கடைசில என்னவாகுது பார்ப்போம் என்று கடக்க வைத்து விடும். அல்லது எதற்கு நேரத்தை வீண் பண்ணிக் கொண்டு என்று மூடி வைக்க உதவும். இது அப்படியில்லாமல் கடைசிவரை நம்மைக் கை கோர்த்து அழைத்துச் செல்கிறது. அழகிய சொற்பிரயோகங்கள் மிகுந்த கலையழகோடு ஆழ்ந்து நம்மை ரசிக்க வைக்கின்றன. நாவலுக்கு ஒரு அற்புதமான முடிவைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். உள்ளார்ந்த மனசாட்சியின் வெளிப்பாடு அது. கடைசிப் பக்கங்களை எட்டும்போது இந்த நாவல் இப்படித்தான் முடியும் என்று யாரேனும் அவரிஷ்டத்திற்கு எதிர்பார்த்தார்களென்றால் நிச்சயமாக அது அப்படி இருக்காது. அப்படியான சற்றும் கணிக்க முடியாத , மகுடம் சூட்டினாற்போன்ற முடிவாக அமைவது பெரும் சிறப்பு. அது தி.ஜா.ரா.வின் பெருமை.

கருத்தைக் குலைக்கும் அமிர்தத்தின் சௌந்தர்யம். அவிழ்ந்து புரண்ட அந்தக் கேசபாரம், அங்க புஷ்டி. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் கொடியுடல். கலங்கிய கண்கள். நனைத்து விட்டாற்போல் மின்னிய இமை மயிர்கள். நகரத்தில் எங்கு சென்றாலும் காட்சியளிக்கும் உன்னத கோபுரம்போல், அமிர்தத்தின் அலட்சியத்தைப் பற்றிய நினைவுகளுக்கு நடுவே, அவளுடைய சௌந்தர்யம் அவர் நெஞ்சில் ஆடிக் கொண்டிருந்தது. பரீட்சை முடிவை எதிர்பார்ப்பவன் போல தோல்வியை நினைக்கக் கூசித் தன்னையே நம்பிக்கையுடன் தேற்றிக் கொண்டார். காரணம் அவர் பரம்பரையில் இதுவரை ஒருவரும் குடும்ப பாசத்திற்கு வெளியே வேறு பிரேம பாசங்களில் கட்டுண்டதில்லை....
இப்படி வரிக்குவரி சொல்லிக் கொண்டே போகலாம் இந்த நாவலின் தேனாய் இனிக்கும் எழுத்து வன்மையின் ஸ்வாரஸ்யத்தை அனுபவித்து மகிழுங்கள். ஒரு அற்புதமான நாவலைப் படித்த திருப்தி, நிறைவு எனக்கு.

செம்மலர் டிசம்பர் 2014 இலக்கிய இதழில் எனது “கணிதம்” சிறுகதை

2014-12-01 15.06.03 2014-12-01 15.05.30 2014-12-01 15.05.58 Ramani-III                                                         “கணிதம் ”

 (சிறுகதை)  (செம்மலர் டிசம்பர் 2014வெளியீடு)                      

 று மாதம் பிரிந்திருந்த வருத்தம் துளிக் கூட இல்லை என்று தோன்றியது. அட, வருத்தம் வேண்டாம்…அந்த உணர்வு கூடவா இருக்காது? ஒரு வேளை அதை வெளிக் காட்டுவது கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறாளோ?
     கட்டிய கணவனிடம் என்ன கௌரவம்? அவனிடமும் கெத்தாகக் காட்டிக் கொள்ள வேண்டும். என்ன மனநிலை இது? எவ்வளவோ சண்டைகள், சச்சரவுகள், மனத் தாங்கல்கள், வருத்தங்கள்….எல்லாமும் காலப் போக்கில் விலையில்லாமல்தானே போயின?
     புருஷன் பெண்டாட்டிக்குள்ள எதுக்குதாண்டா விலை இருக்கு? – எப்போதோ அம்மா சொல்லி வைத்த முத்தான வார்த்தைகள். ஆனால் விலை இருக்கு என்றுதான் இப்போது தோன்றுகிறது. அந்த மூத்த தலைமுறைதான் இல்லாமல் போனதே…அவர்கள் சொன்ன விழுமியங்கள் அவர்களோடு போனது.  
     எல்லாமும் மாறுதலுக்குட்பட்டதுதான் என்றாலும், சில அடிப்படை தர்ம நியாயங்கள், ஒரு வீட்டின் இறையாண்மை என்பது காலத்தால் மாறுதலுக்குட்படலாமா என்ன?  அப்புறம் இந்தக் குடும்ப அமைப்பிற்கு என்னதான் மதிப்பிருக்கிறது? அந்த இறையாண்மைதானே விண்டு விரிந்து ஒரு நாட்டின் கட்டுக் கோப்பான இறையாண்மையாகக் கூடி நிற்கிறது? அப்படித்தானே தேசங்கள் மதிக்கப்படுகின்றன?
     தனக்குத்தான் இப்படியெல்லாமோ? அவள் இன்னும் எல்லாவற்றையும் விலையாய் நினைக்கிறாளோ என்னவோ? இருக்கும் இருப்பைப் பார்த்தால், “இன்னும் ஆறு மாசத்துக்கு வேணா அங்க போய்த் திரும்பவும் உட்கார்ந்துக்கோ….” என்று சொல்லிவிடலாம் போல்தான்.
     ஆறு மாதங்கள் முக்க முழுங்கத் தனித்திருந்திருக்கிறானே, தானே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, உடல் உபாதைகளையும் பொறுத்துக் கொண்டு, டாக்டரிடம் காட்டிக்கொண்டு, மருந்து மாத்திரைகளைச் விழுங்கிக் கொண்டு, தன்னந் தனியே இருந்து கழித்திருக்கிறானே…என்று கிஞ்சித்துமா ஒரு ஜீவனுக்குத்  தோன்றாது?.அப்படியா ஒரு ஜென்மம்? அவ்வகையிலும் ஒரு நெஞ்சம் ஈரமற்றுப் போகுமா? அந்த மாதிரியும் ஒரு இதயம் கெட்டிப்பட்டு நிற்குமா?
என்ன, ஏது என்று ஒரு வார்த்தை கேட்டாளா? சரியான கல்லுளி மங்கி….! கிராதகி…!!
இந்த ஆறு மாதத்தில் என்ன பாடுபட்டிருக்கிறார் இவர்? சரியாகச் சமைக்கவும் வராமல், என்னவோ தெரிந்ததை அரையும் குறையுமாய்ச் செய்து இறக்கி, பிடித்தும் பிடிக்காமலும் முழுங்கி வைத்து,   சகிக்க மாட்டாமல் தூர எறிந்து, வெந்ததைத் தின்னு விதி வந்தால் சாவோம் என்று நாட்களை நகர்த்தினாரே…..
தேர் முட்டிக்கு எதிர்த்தாப்போல ஒரு அம்மா கடை போட்டிருக்கும். அங்கே உப்பில்லாம எல்லா வற்றல் வடகமும் கிடைக்கும்….போய் வாங்கிட்டு வந்து வச்சிக்கிங்க…..
பொறுப்பாய், அக்கறையாய் சொல்கிறாளாம்….இந்த விபரமே அவளுக்கு நான் சொன்னதுதான்….நான் அலையாத கடையா, கண்ணியா? மதுரையைச் சுற்றிய கழுதையாயிற்றே நான்…! அதிசயமாய் ஒரு நாள்,  கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டாள். அந்த ஒரு நாளோடு சரி….பிறகு? கொணக்கிக் கொண்டு விட்டது மனசு.
ஒரு நாள்….ஒரு பொழுது….ஒரு வார்த்தை….அன்பாய்….ஆதரவாய்…..
என்னங்க….எப்டியிருக்கீங்க….? சமைச்சீங்களா? சாப்டீங்களா? உடம்பு சவுரியமா இருக்கா…? முடிலன்னா Nஉறாட்டல்ல சாப்டுக்குங்க….கஷ்டப்படாதீங்க….காசு போனாப் போயிட்டுப் போகுது…நல்ல எடமாப் பார்த்துச் சாப்பிடுங்க….பத்திரமா இருங்க…..ஞாபகமா வீட்டைப் பூட்டிட்டுப் படுத்துக்குங்க…மறந்திடாதீங்க….உள் மரக் கதவைச் சாத்திக்குங்க…திறந்து போட்டுட்டுத் தூங்காதீங்க….நீங்க பகல்ல அப்டித் தூங்குவீங்க…அதுனாலதான் சொன்னேன்….கேஸை ஞாபகமா ஆஃப் பண்ணிக்குங்க….கவனம்…..
எல்லாமும் இவருக்கு இவரே கற்பனை செய்து கொள்வதுதான்….அவள் கேட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்வார்….கனவுக் காட்சிகளிலே வானில் பறப்பது போல…..!
மன்னவனே அழலாமா….கண்ணீரை விடலாமா?.....உன்னுயிராய் நானிருக்க….என்னுயிராய் நீ இருக்க…..!!!
ஆனால் இவர் எதிர்பார்ப்பதில் ஒரு பொட்டு வார்த்தை கூட அவளிடம் இருந்து இந்த நிமிஷம் வரை வரவில்லை.
திருச்சி ஸ்டேஷனுக்கு வந்து கூட்டி வரவில்லையாம்….அதுதான் இப்பொழுது மகாப் பிசகாய்ப் போனது. பெருத்த கோபமாய் வெடித்துவிட்டது  அவளுக்கு.
அந்தப் பையன்தான் உன்கூட சௌத் ஆஃப்ரிக்காவிலேர்ந்தே வர்றானே…..அவன் திருச்சில இறங்கினா நீ மதுரை வந்துட வேண்டிதானே..….நான் எதுக்கு திருச்சி வரணும்? மதுரை ஜங்ஷனுக்கு வர்றேன்….. – முடித்து விட்டார் இவர்.
பையனை விட்டுச் சொல்ல விடுவாள் என்று எதிர்பார்த்தார். அவனிடமிருந்து ஃபோனே வராதது ஒன்றும் அதிசயமில்லை. நல்ல காலத்திலேயே தில்லைநாயகம் அவன். இஞ்சினைக் கழட்டி விடும்போது அது எந்த மூலையில் போய் நின்றால் என்ன? சாதாரணமாகவே பேச மாட்டான். அவனுக்கு விருப்பமான அம்மா (அப்படித்தான் அவள் நினைக்கிறாள்) அங்கே போய் அவனுடன் உட்கார்ந்து கொண்டாயிற்று. எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு இயல்புதானே என்று இவர் புரிந்து கொண்டிருக்கிறார் அதை.  பிறகு இந்த பாழாய்ப் போன அப்பாவுடன் என்ன பேச்சு? அப்பா என்றால் சண்டைக்காரர். அவருக்கான பிம்பம் அதுதான். சதா அட்வைஸ் செய்பவர். எப்போது பேசினாலும் ஏதாவது அறிவுரை சொல்லிக் கொண்டேயிருக்கும் அறுவை. ரம்பம், பிளேடு.
என்னப்பா….நல்லாயிருக்கீங்களா? இதோ அம்மாட்டத் தர்றேன்…..எப்படி இத்தனை நாசூக்காகக் கட் பண்ணி விடுகிறார்கள்? இந்த நாகரீகத்தை எங்கே கற்றுக் கொண்டார்கள்? எந்தப் பள்ளியின் கல்வி அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தது? அப்படியானால் நம் கல்விமுறையின் தரம்தான் என்ன?   ஏதோ அவள் இவரிடம் பேசத் துடித்துக் கொண்டிருப்பதைப் போல…..பிரிந்திருக்கும் இருவரை இவர்கள் சேர்த்து வைப்பதைப் போல….அப்பாவுக்கு அம்மாவிடம்தான் பேச இஷ்டம் என்பதைப் போல…..எனக்கு இஷ்டம் அவளுக்குக் கஷ்டம்…அதுதானே…?
டே…டேய்…கொஞ்சம் இர்றா….. போச்சு….கட் பண்ணிட்டானா? என்னா அவசரம் இந்தப் பசங்களுக்கு? ரெண்டு வார்த்தை பேசறதுக்குள்ளே…..? அவன் குரலே மறந்து போயிடும் போலயிருக்கு எனக்கு…..! ரொம்ப நெருக்கினா, வேறே யார்ட்டயாச்சும் கொடுத்து, ரெண்டு வார்த்தை என்னை மாதிரிப் பேசுறா என்று மிமிக்ரி செய்தாலும் போயிற்று. அதைத்தான் கலாய்த்தல் என்று சொல்கிறார்களே இப்போது…! அப்படிச் செய்தால் அது அவர்களைப் பொருத்தவரை குற்றமா என்ன?  
என்னாங்க….எப்டியிருக்கீங்க…..ஏதோ போயிட்டிருக்கு….எனக்கு வேலையிருக்கு, வச்சிடறேன்…. – எப்போது ரெண்டு வார்த்தை பேசினாலும் ஏதோவோர் அலுப்போடேயே…! அவள் சந்தோஷமாய் இருப்பது இவருக்குத் தெரிந்து விடக் கூடாதாம்.  அவளுக்கு வேலையிருந்துகொண்டே இருப்பதாய் இவர் உணர வேண்டுமாம். . அங்கு ஒன்றும் தான் சுதந்திரமாய், சொகுசாய் இல்லை என்பதாய்….தன்னிடம் பேசுவதில் அத்தனை ஆசுவாசம்……
சுமதீ…..எப்டியிருக்கே…..நா ராஜசேகர் பேசறேன்…..உன் பையனப் பார்த்தேன்…..நீ வரைஞ்ச படத்தைப் பார்த்தேன்…..நல்லாயிருக்கியா சுமதீஈஈஈஈஈஈஈஈ…….?
….என்னங்க.….நீங்க எப்டிங்க இருக்கீங்க……?நான் சுமதி….உங்க சுமதி பேசறேங்க……
நல்ல்ல்ல்ல்லா இருக்கேன்……நல்ல்ல்லாயிருக்கேன் சுமதீ…..
எல்லாம் சினிமாவோடு சரி…...நடைமுறை யதார்த்தம் என்பதே வேறு…..சிவாஜியும், விஜயாவும் ஃபோனில் கதறும்போது, பரஸ்பரம் பனியாய் உருகிய ரசிகர் கூட்டம்… தியேட்டரே அழுது துடித்ததே….!! இவள் கூடப் புடவைத் தலைப்பை முகத்தில் பொத்திக் கொண்டு குலுங்கினாளே……அந்த ஈரத்தில் துளி கூடவா தன் மீது ஒட்டவில்லை?  
ஒட்டலையே…! ஒட்டியிருந்தாத்தான் போய் இறங்கினதும் பேசியிருப்பாளே…
அப்பா…அம்மா வந்து சேர்ந்தாச்சு…..வச்சிடறேன்….. – முடிந்தது கதை.
ஆனால் ஒன்று. பையன்கள் காசிலே கருத்தாய் இருக்கிறார்கள். ஃபோன் பேசுவதில் கூடச் சிக்கனம்தான். யாரோடு? தந்தையோடு….!!! அவர்கள் நண்பர்களோடு? சிநேகிதிகளோடு? அதெல்லாம் கேட்கக் கூடாது….அது மணிக்கணக்காய்க் கூடக் கரையும்…..அவர்கள் இஷ்டத்திற்கு அப்படியெல்லாம் குறுக்கே புகுந்து விட முடியாது.
வெளிநாட்டு வேலை அவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறதோ இல்லையோ, பணம் சேர்க்க வேணும் என்ற உத்தியை மட்டும் நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதற்குத்தானே வெளிநாட்டுப் பயணமே…!
அப்பா…எம்.பி.ஏ., படிக்கணும். எம்.எஸ். முடிக்கணும்….அப்பத்தான் எழுபது, எண்பதுன்னு நான் டிமான்ட் பண்ண முடியும்…ஒரு வருஷம்…இருந்திட்டேன்னு வச்சிக்குங்க…. ஃபாரின் போயிடுவேன்…..அப்புறம் பிடிக்க முடியாது….
இப்பவே பிடிக்கிற இடத்துலயா நீ இருக்கே…? – நினைத்துக் கொண்டார்.
அப்பா வேண்டியிருந்தது அப்போது. அதற்காகத்தானே சேமித்து வைத்திருக்கிறார் அப்பா. மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்? நிச்சயம் அவர் தன் கடமையிலிருந்து தவறப் போவதில்லை. அதெல்லாம் பசங்களுக்கு நன்றாய்த் தெரியும்.
சரி, வேலை பார்த்திட்டே படிக்கிறியா…இல்ல……? – வாய் தவறிக் கேட்டு விட்டார். எஸ்.எஸ்.எல்.சி முடித்த கையோடு காலேஜ் போக வசதியில்லாமல் மறுநாளே ஒரு ரைஸ்மில்லில் நாற்பது ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குப் போனார் இவர். அதில் பதினைந்து ரூபாய் டைப்ரைட்டிங்கிற்கும், ஷார்ட்உறான்ட்டிற்கும் கொடுத்துவிட்டு அஞ்சு ரூபாய் செலவிற்கு வைத்துக் கொண்டு, மீதி இருபதை வீட்டில் கொடுத்தார். அந்த நினைப்பில் இதைக் கேட்கலாமோ…! தப்பாயிற்றே…!!
அதெல்லாம் சரிப்படாதுப்பா….அப்டின்னா அந்தக் கன்சர்ன் மூலமாத்தான் போக வேண்டியிருக்கும்…. அக்ரிமென்ட் போடுவான்….படிப்பு முடிச்சு அதுக்கப்புறம் கண்டிப்பா ரெண்டு இல்லன்னா மூணு வருஷம் அவன்ட்டயே அடிமை மாதிரி நான் வேலை பார்த்தாகணும்….நாம எதிர்பார்க்கிற சாலரி கிடைக்காது…..அதுக்கப்புறமும் அந்த சாலரி ரேஞ்சை ரீச் பண்ண முடியாது …தனியாப் படிச்சா…ரெண்டே வருஷத்துல முடிச்சிட்டு, ரெஸ்யூம் போட்டேன்னா டெஃபனெட்டாப் போயிடுவேன்…..மாசம் ஒன் லாக் மேலே துணிஞ்சு டிமான்ட் பண்ணலாம்….அவனே தருவான் நம்ம க்வாலிஃபிகேஷனுக்கு…..- சொன்னதுபோல்தான் செய்து விட்டான். எல்லாம் சந்தோஷம்தான். ப்ளானிங்கெல்லாம் படு பிரமாதம். புள்ளியை நோக்கி கச்சிதமாய் நகரும் உத்தி. இந்தக் காலத்தில் பெண்களே டிமான்ட் பண்ணுகின்றனவே…! பையன் பெண்ணைப் பற்றி விசாரிப்பது போக, ஒண்ணே கால், ஒன்றரை லட்சம் வாங்கணும் மாசத்துக்கு…அப்படிப் பையனாப் பாருங்கப்பா….கல்யாணத்துக்கு நிற்கும் பெண் அப்பாவிடம் சொல்கிறதே…! காலம் எப்படித் தலைகீழாய் மாறி விட்டது? ஆனால் இந்தப் பசங்களுக்குக் காசில் கருத்தில்லையே…! அப்படித்தான் தெரிகிறது.
காசு சேர்க்கிறதுல  அப்படி ஒண்ணும்  கவனமா இருக்கிறதா எனக்குத் தெரில…. – என்றார் நண்பரிடம் ஒரு நாள்.
என்ன சுந்தரேசன் இப்டிச் சொல்றீங்க…? அவுங்க வெளி நாடு, வெளிநாடுன்னு துடிக்கிறதே இதுக்குத்தானே….அந்த நாட்டுக் காசு, நம்ம ரூபாயா மாறும்போது மதிப்பு கூடுதுல்ல….அதுனாலதானே சீக்கிரம் நிறையப் பணம் சேர்க்கணும்னு துடிக்கிறாங்க…..நம்மள மாதிரிப் பென்ஷன் கின்ஷன் கிடையாதுல்ல அவங்களுக்கு….இப்பருந்தே சேர்த்தாத்தானே உண்டு….
நீங்க அப்டிச் சொல்றீங்க….பாருங்க….என் பையன் அவன் பொண்ணு, பிள்ளையை அங்கே எல்.கே.ஜி., யு.கே.ஜீன்னு, அதுதான் அங்க பேருன்னு நினைக்கிறேன்…ஸ்கூல்ல  சேர்க்கிறதுக்கு மாசா மாசம் இருபதாயிரம், முப்பதாயிரம்னு செலவு செய்றான்….தேவையா இது? ரெண்டு வருஷம் அங்க இருந்திட்டு வரப்போறான்….அந்தப் பீரியட்ல குழந்தைங்க இங்க படிச்சா என்ன? அதான் தெனமும் வெப் காமிராவுல பேசிக்கலாமே, பார்த்துக்கலாமே…!! காசு எம்புட்டு மிச்சமாகும்…..உன் ஒய்ஃப் குழந்தைகளோட இங்க இருக்கட்டும்டா…நாங்க பார்த்துக்கிறோம்னா கேட்கிறாங்களா? பொண்டாட்டிய விட்டிட்டு இருக்க முடியல….ஆனா அப்பன் ஆத்தாள விட்டிட்டு ஓடத்தான் பார்க்கிறாங்க….
அப்டின்னும் சொல்ல முடிலயே….அம்மாவக் கருத்தா அழைச்சிக்கிறாங்களே….?
அது எதுக்கு? எதுக்குன்னேன்? குழந்தைகளப் பார்த்துக்க ஒரு ஆயா வேணாமா? இத்தனைக்கும் அந்தப் பொண்ணு வீட்டுலதான் இருக்குது….இருந்தாலும் பொண்டாட்டி கசங்கிடப்படாதுங்கிறதுல கவனமா இருக்காங்க பசங்க….அம்மாவ, பாசத்துலயா கொண்டு வச்சிக்கிறாங்க….ஒரு வேலைக்காரிக்கு பதிலா…அவ்வளவுதானே…இந்த லட்சணத்துல இவ படுத்துற பாடு இருக்கே….அட்டேங்கப்பா…..என்னவோ ஊருல இல்லாத பிள்ளைய இவதான் பெத்துட்டாப்லயும், அவன்தான் கிடந்து எங்கம்மா, எங்கம்மான்னு துடிக்கிறாப்லயும், இவ பவுசு இருக்கே….எல்லாம் நம்ம கிட்டதான்….அங்க போனான்னு வச்சிக்கிங்க….இவ மருமகளுக்குப் பயப்படுற Nஷாக்கு படு பீத்தல்…..ஏன் கேட்குறீங்க அந்தக் கண்றாவியையெல்லாம்….அங்கே பெட்டிப் பாம்பாக் கெடக்குறது….அதவிட நம்ப கூட இருக்கிறது இவளுக்கு ஆகாமப் போச்சு….காலம் எப்டி ஆயிடுச்சி பார்த்தீங்களா? இவளுக்கு, தான் தோற்கிறோம்ங்கிறதைவிட என்னைத் தோற்கடிக்கிறதா மனசுல நினைப்பு…இந்த அறியாமையை எங்க போய்ச் சொல்றது?
ந்ததிலிருந்து ஒரு வாரமாய் பேசவேயில்லை. என்னவோ பக்கத்து ஊருக்குப் போய்விட்டு வந்தது போல் அவள்பாட்டுக்கு இருக்கிறாள். .இவரும் விட்டு விட்டார். கழுதை கிடக்கட்டும் என்று. வெளில சாப்ட முடியலை, அல்சர்…..வீட்டுல சரியா சமைக்க வரலை….வலது பக்கம் இறக்கத்துல லேசா வீக்கம்….உறிரண்யாங்கிறார் டாக்டர்….அங்கங்க வாயுப் பிடிப்பு வேறே….உடம்பை அப்டி இப்டி அசைக்க முடியலை….இவ்வளவு சங்கடத்துல ஆறுமாசம் தன்னந் தனியா ஓட்டியிருக்கேன்….ஏதோ வாக்கிங், அது இதுன்னு கடத்திக்கிட்டிருக்கேன்….படுக்கைல விழுந்திடக் கூடாதே….பாவி இவள்கிட்டே வார்த்தை கேட்டுடக் கூடாதேன்னு….நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும்….இதுல இவளை இன்னும் என்ன தாங்கணுமாம்…எப்டித் தனியா சமாளிச்சீங்க….என்னதான் செஞ்சீங்க..? .ஒரு வார்த்தை கேட்டாளா?
எனக்கு ஏதாச்சும் ஆயிருந்திச்சின்னா நான் அநாதைப் பொணமால்ல கிடந்திருப்பேன்? அதை உணர்ந்தாளா இவ? ராத்திரி தனிமைல கிடக்க முடியாம என்ன பாடு பட்டேன்? இந்த மனசு என்னெல்லாம் நினைக்குது….தேவையில்லாம எதையெல்லாம் பயங்கரமாக் கற்பனை பண்ணிக்குது….எதையாச்சும் நினைச்சுப் பார்த்தாளா இவ? இந்த லட்சணத்துல மச்சினன் வீட்டுல போய்ப் படுத்துக்கிட்டது இவளுக்குக் கோபமாப் போச்சாம்…! அவன் கூடப் பேசக் கூடாதாம்…..அவனோட ஒட்டு உறவு கூடாதாம்….நான் தனியாக் கிடந்தப்போ, அவன்தானே எனக்குத் துணையா இருந்தான்….நீங்க இங்க வராதீங்க மாமான்னு சொல்லியிருந்தான்னா என் கதி?
வீட்டைப் பூட்டிட்டு நீங்க அங்க போய்ப் படுத்தீங்கன்னா என்னா அர்த்தம்? திருடு போச்சுன்னா?
எனக்குத் தனியாத் தூக்கம் வரலைன்னு அர்த்தம்……அதான் எல்லாத்தையும் கொண்டு லாக்கர்ல வச்சிருக்கியே…அப்புறமென்ன? இங்க சட்டி பானையைத் தவிர வேறே என்ன இருக்கு?
அப்போ அவனை இங்க வந்து படுக்கச் சொல்ல வேண்டிதானே…?
அதெப்டிறீ முடியும்? அவன் விடிகாலைல எழுந்திரிச்சு வெளியூருக்கு வேலைக்குப் போறவன்….அவனுக்கு அவன் வீடு தோதா இருக்குமா, இங்க வர்றது சரியா இருக்குமா? எதாச்சும் பொருத்தமாப் பேசுறியா? ஏதோ மாமா, மாமான்னிட்டு, சுமுகமா இருக்கானேன்னு பார்த்தா, அதையும் கெடுத்துருவ போலிருக்கே…..உனக்கு மனுஷங்களே ஆகாதா? தன்னந் தனியா மாசக் கணக்குல கிடக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எல்லாம் இருந்து பார்த்தாத்தான் தெரியும்….எவன்ட்டயும் முகம் கொடுத்துப் பேசாம, நானே உலகம்னுட்டு இருந்தா, தனியாப் படுத்திருக்கைல நெஞ்சடைச்சிதுன்னு வச்சிக்க….போய்ச் சேர்ந்துட்டேன்னா…வெறும் ஃபோன் நம்பராக் குறிச்சு வச்சு என்னசெய்ய? அவனவன் கைக்கு எட்டுற தூரத்துலயா இருக்கான்…வர்றதுக்குள்ள வாயைப் பிளந்து பல மணி நேரம் ஆகியிருக்கும்…..சங்கதி தெரியாம பேசுறியே…,? எடுத்துப் போடக் கூட ஆளில்லாம, அழுகி நாறணும்….தேவையா எனக்கு…..?
உங்களை யாரு வர வேண்டாம்னு சொன்னாங்க….நீங்களும் வந்திருக்க வேண்டிதானே….?
நீ சொல்வடீ… சொல்லுவ….அவரும் வந்தாத்தான் நான் வருவேன்னு நீ சொன்னியா? இல்ல சொன்னியான்னு கேட்குறேன்…எப்படா கூப்பிடுவான்னு காத்திருந்த மாதிரிக் கிளம்பிட்டே…? உன் தேவை அங்கே அவனுக்கிருக்கு. ஆனா என் தேவை? அவன் கூப்பிடுற போக்குக் கூட உணராத கூகை இல்ல நான்….ஒரு சொல் வெல்லும்…ஒரு சொல் கொல்லும்….நம்ம பையன்தானேன்னு வந்திட்டு, மரியாதை இல்லாமச் சீரழியச் சொல்றியா என்னை?
என் வயசுக்கேற்ப, என்னோட தேவைகளை உணருவானா அவன்? உனக்கே தெரில..அப்புறம் அவனை எங்க சொல்ல? உணர்ந்து மதிப்பானா? அங்க வந்தா வெளில, வாசல்ல தனியாக் கிளம்பிப்  போக முடியாது….எல்லாத்துக்கும் ஆள் வேணும்….ஊர் உலகம் தெரியாது….அப்படிக் கிளம்பற மாதிரியா அவனோட வேலைகள் இருக்கு…? எந்நேரமும் கால்ல வெந்நீரைக் கொட்டிட்ட மாதிரில்ல அலையறாங்க…ஊரச் சுத்திக் காண்பிக்கவா அவன் கூப்பிடுறான்…அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கணும்…அதுக்கு ஆள் வேணும்…. நீ போனியே….எத்தனை எடம் பார்த்திட்டு வந்தே…எங்கே சொல்லு பார்ப்போம்….எங்கம்மா….எங்கம்மான்னு உன்னைக் கூட்டிக் கொண்டு காண்பிச்சானா? இல்லேல்ல…?..இங்கேயிருந்து கிளம்பி அங்கே வீட்டுக்குள்ளே போய் அடைஞ்சே…..அங்கேயிருந்து கிளம்பி திரும்பவும் இங்கே வந்து இப்போ அடைஞ்சிருக்கே…அதானே உண்மை…..?
ஒண்ணு தெரிஞ்சிக்கோ….உனக்கு என்னைக்கானாலும் நான்தான் துணை….நீ என்ன முறுக்கிக்கிட்டாலும், சரி…கிடக்குதுன்னு எல்லாத்தையும் உதறிட்டு, நாந்தான் உனக்கு செய்தாகணும்…வேறே எவனும் வந்து நிக்க மாட்டான்…..நாளைக்கு நீ போனாலும் சரி, இல்ல நா முந்திண்டாலும் சரி…..ஒரு நாள்தான்….ஒரே ஒரு நாள்தான்…..பசங்க பறந்திடுவாங்க……கருமங்களையெல்லாம் அப்பா பேரைச் சொல்லி நீங்களே செய்துடுங்கன்னு வேணுங்கிற துட்டைக் கொடுத்திட்டு, அடுத்த ஃப்ளைட்ல ஏறிடுவாங்க….முதல்ல சாவுக்கு வர்றாங்களாங்கிறதே சந்தேகம்…அது தெரியுமா உனக்கு? .உள்ளே தள்ளினா ஒரு மணி நேரத்துல ஒரு டம்ளர் சாம்பல்….அவ்வளவுதாண்டி இப்போ…!..நோ சென்டிமென்ட்ஸ்…..இதுக்கு எதுக்கு இத்தனை ஆயிரம் மைல் பறந்து வரணும்ங்கிற காலம் இது…!
நீயும் நானும்தான் ஒருத்தருக்கொருத்தர் இப்டி முறைச்சிக்கிட்டுத் திரியணும்…என்னத்தையோ தலைல கொண்டு போகிற மாதிரி…..காலம் எவ்வளவோ பின்னோக்கித் தள்ளிடுச்சி நம்மளை….அதப் புரிஞ்சிக்கோ…..என்னவோ உலக மகாக் குத்தம் மாதிரி மூஞ்சியத் தூக்கிட்டு நிக்கிறியே….நானும் பார்க்கிறேன் வந்ததுலேர்ந்து….ஒரு வார்த்தை சிரிச்சுப் பேசினியா? நல்லாயிருக்கீங்களான்னு ஒரு சொல் கேட்கத் தெரிஞ்சிதா உனக்கு? என்ன பொம்பளை நீ? என்னத்தைக் கொண்டு போகப் போறே? இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பாலுன்னு வசனம் கேள்விப்பட்டதில்லே? பாடியை எடுத்து, வீட்டைக் கழுவி விட்டா, காரியம் முடிஞ்சிது…உயிரோட இருக்கிறவங்க இயங்கணுமே…! ஜீவிக்கணுமே !!…அப்டியே நெடு மரமா உட்கார்ந்திருக்க முடியுமா? அதுனால,  .சாதாரணமா இருக்கப் பழகிக்கோ….எது நடந்தாலும் சம்மதம்ங்கிறமாதிரி மனசை சமனமா வச்சிக்கோ….நமக்கு முன்னாடி கோடானு கோடிப் பேர் வாழ்ந்து மறைஞ்ச உலகம் இது…நமக்கு அப்புறமும் இது காலத்துக்கும் தொடரும்….நாமெல்லாம் கால வெள்ளத்துல சர்வ சாதாரணமாக் கரைஞ்சு, காணாமப் போயிடுவோம்…மூணு தலைமுறைக்கு முந்தின உறவுகளை தெரியுமா நமக்கு….? யாரையாவது சொல்லச் சொல்லு பார்ப்போம்…தெரியாதுல்ல….அப்புறம் சொல்ற? என்னடீ வேண்டிக் கிடக்கு முறைப்பும், முறுக்கும்…..அறியாமைங்கிறதுங்கூட அளவா இருந்தாத்தாண்டி அழகு….
உலகம் போற போக்கைப் பாரு….தந்தனத் தில்லாலே…..                              ஜிங்கிடி ஜிங்காலே…மீனாட்சி ஜிங்கிடி ஜிங்காலே….. 
சுந்தரேசனின் சகதர்மிணி,  தர்மபத்தினி  திருமிகு மீனாட்சி என்கிற ஸ்ரீமதி மீனாட்சியம்மாள் வாய் மூடி மௌனியாகக் கிடந்தாள்.                                                                   -----------
                                                                                                                                          
                                                                                                                                                                                                                       


20 நவம்பர் 2014

சக்திஜோதியின் கவிதைத் தொகுப்பு “சொல் எனும் தானியம்”

2014-11-21 05.53.19 joithi-2

   

  படித்ததில் பிடித்தது என்ற வரிசையில் சக்தி ஜோதியின்”சொல் எனும் தானியம்“ கவிதைத் தொகுப்பு முக்கியமாகப் படுகிறது. இந்தத் தொகுதியின் கவிதைகளை ஆழப் புரிந்து அற்புதமாக ஒரு அணிந்துரை வழங்கியுள்ளவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்.கவிதைகளைப் படிக்கும் முன்பும், படித்து முடித்த பின்பும் மீளவும் படித்து ரசிக்க வேண்டிய அணிந்துரை இது.
  தொகுப்பில் பல கவிதைகள் மனதை நெருடின என்பது நிஜம். இவர்கள் நன்றாகவே எழுதுகிறார்கள். அணிந்துரையின் அழகில் சொல்லப்படுவதுபோல், பாடுபொருளைக் கவிஞன் தீர்மானிக்கலாம். ஆனால் கவிஞனை மொழிதான் நிர்ணயிக்கின்றது என்பதும், ஒரு ரோஜாவைப் பாட வேண்டிய அவசியமில்லை, கவிதையில் ரோஜா மலர்ந்தால் போதும் என்பதும், ஒரு மரத்தின் இலைகள் இயற்கையாக அரும்புவதுபோல் கவிதை துளிர்க்க வேண்டும் என்றும் அணிந்துரை மாலையாகப் பிரவகிக்கின்றது. ஒரு கவிதை இன்னும் என்னைச் சங்கடத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

  எனக்கு முன்பாக உறங்காதிருந்த
  பெண்கள் பலரின்
  தசையிழைகளினாலும்
  நரம்புகளினாலும்
  என் உடல் கட்டப்பட்டுள்ளது
  பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட
  தானியங்களையே நாம் உண்ணுகிறோம்
  பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட நூல் கொண்டே நாம் உடுத்துகிறோம்
  அந்த மண் கொண்டே நாம் நட்டுகிறோம்
  கட்டப்பட்ட வீடு முழுக்க
  ஆணின் குறட்டை ஒலி நிறைந்திருக்கிறது்
  உண்மையில் நான் எனக்கென்று உறங்கவே விரும்புகின்றேன்
  இத்தனை காலம், இத்தனை பெண்கள்
  உறங்காதிருந்த அத்தனை உறக்கமும்
  நான் உறங்கவே விரும்புகின்றேன்
  சவம் போலொரு யுகாந்திர உறக்கம்

  என்னைத் தழுவட்டும்

18 நவம்பர் 2014

கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது

 

 

download (1) vikatan2009-5

 

 

 

download (2)

download

 

கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது பாராட்டுக் கேடயமும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கியது. அருமையான கவிஞர். வலியக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டவர் என்று சொல்ல வேண்டும். எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. எழுத்து, அது என்ன சொல்கிறது என்பது மட்டும்தானே கணக்கு. இங்கே அப்படி அல்லாமல் பலவும் புகுந்து கொண்டன. அதுபற்றி அவருக்கு எந்த இழிவுமில்லை. அவர் கவிதைகள் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. “அன்று வேறு கிழமை” என்ற ஒரு கவிதைத் தொகுப்பு போதும் அவரது பெயர் சொல்ல...! ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். கவிஞருக்கு மனமார்ந்த, அன்பான. இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

சாம்பிளுக்கு ஒரு கவிதை
----------------------------------------------------------

அம்மாவின் பொய்கள்
----------------------------------------------------

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்

— with Ayyanpettai Dhanasekaran.


17 நவம்பர் 2014

“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -

 

 

2014-11-18 07.33.04 download

 

 

 

smallimage

 

 

 

படியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பதுபோலவோ, நாவல் படிப்பது போ லவோ விறுவிறுவென்று நகர்ந்து பலனில்லை. உங்களை நீங்கள் அறிவதற்கான ஆத்மநிலையில் முழுமையான சுயச் சார்போடு படித்து உள்வாங்க வேண்டும்.

பாலுறவை நான் எதிர்க்க வில்லை. ஆனால் அதில் என்ன சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காண வேண்டும். தன்னை இழந்த நிலையை ஒரு கணம் பாலுறவு அளிக்கிறது. மறுபடியும் மனம் பழைய கொந்தளிப்பு நிலைக்கே வந்துவிடும். அந்தக் கணத்தில் துயரம், பிரச்னை, “தான்“ என்ற இவை இல்லையாதலால் பாலுறவைத் திரும்பத் திரும்ப வேண்டுமென்கிறோம். உங்கள் மனைவியை அன்புடன் நேசிப்பதாகக் கூறுகிறீர்கள். அந்த அன்பில் பாலுறவு இன்பம், உங்கள் குழந்தைகளை அவள் பராமரித்தல், உங்களுக்குச் சமையல் செய்து உணவு பரிமாறுதல் போன்றவை எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கும்.நீங்கள் அவளைச் சார்ந்திருக்கிறீர்கள். அவள் தன்னுடைய உடலை உங்களுக்குத் தந்திருக்கிறாள். உங்களுடன் அவள் உணர்ச்சிகளை பங்கு கொண்டிருக்கிறாள். உங்கள் செய்கைகளுக்கு ஊக்கமளிக்கிறாள்.உங்கள் நலனுக்கும், பாதுகாப்புக்கும், தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள். என்றேனும் ஒரு நாள் அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டு உங்களை விட்டு விலகி விட்டால் உங்கள் மனம் தடுமாறுகிறது. உங்களுக்குப் பிடிக்காத அந்தத் தடுமாற்றம்தான் பொறாமை, மனவலி, கவலை, வெறுப்பு, வன்முறை இப்படிப் பலவும். அதாவது நீ எனக்கே சொந்தமானவளாக இருக்கும்வரை நான் உன்னை அன்புடன் நேசிப்பேன். என்னை விட்டு விலகினால் உன்னை நான் வெறுப்பேன் பாலுறவு மற்றும் என்னுடைய தேவைகளை நீ பூர்த்தி செய்யும்வரை நான் உன்னை நேசிப்பேன். இவைகளை நீ தராவிட்டால் உன்னை நான் வெறுப்பேன் என்று கூறியதாக ஆகும்.

இதைப் படிக்கும் நீங்கள் உங்களுக்குள் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்படி இல்லை என்று யாரேனும் ஒருவர் சொல்ல முடியுமா?

அட போங்க சார்...படத்தப் பார்த்ததும் இந்தியன் தாத்தாதான் ஞாபகத்துக்கு வருது.....!! அதையும் நினையுங்கள். இதையும் படியுங்கள். எது ஜெயிக்கிறது என்று பாருங்கள்.


16 நவம்பர் 2014

க.நா.சு.வின் “விலங்குப்பண்ணை” –ஜார்ஜ் ஆர்வெல் நாவல் (மொழிபெயர்ப்பு நாவல்)

வாசிப்புப் பயணத்தில்
--------------------------------------------

13149 download

 

 

மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.

ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும்.

1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்.

2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள்.

3. மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது.

4. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது.

5. மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது.

6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது.

7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.

12.11.2014 அன்று வைகையில் சென்னைக்குப் பயணித்தபோது ஆசையாய் எடுத்துப் படித்த மொழி பெயர்ப்பு நாவல். நாவலின் ஒட்டு மொத்த நோக்கத்தையும் மனதிற்குள் ஆழமாய் வாங்கி, வரிக்கு வரி அதன் தன்மை பிசகாது, ஒரு மொழி பெயர்ப்பைப் படிப்பது போன்ற உணர்வே இல்லாது, அழுத்தமாகக் கதை சொல்லிச் செல்லும் அழகு. ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு நடை படிவதுண்டு. ஆனால் மொழி பெயர்ப்புக்கு என்ன நடை? படைத்த ஆசிரியன் எந்த நடையில் கதைசொன்னானோ, அதே நடையில், அதே உணர்வின் ஆழத்தில் பயணித்து, , தடங்கலில்லாத தெளிந்த மொழியில், நெருடலின்றி, அந்தந்த மொழியாளர்கள் சுலபமாக உள்வாங்குவதுபோல் பக்கங்களை நகர்த்திய இந்த நாவலைப் படித்து முடித்த அனுபவம் நிறைவானது.

02 அக்டோபர் 2014

திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 (2.10.2014 விழா)

 

 

 

2014-10-03 08.07.16 2014-10-03 08.09.05 2014-10-03 08.06.55 2014-10-03 08.08.55

நேற்று (02.10.2014) திரு கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருது விழா நாமக்கல்லில் சிறப்புற நடந்தேறியது. திரு ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் சி.பி.எம்.(எம்) அவர்கள் பேராசிரியர் திரு அருணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் முதன்மை விருது மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் விழங்கிச் சிறப்புரை வழங்கினார். வரவேற்புரையை திரு கு.பாரதிமோகன், உறுப்பினர், கு.சி.பா. அறக்கட்டளை நிகழ்த்தினார். துவக்கவுரையை திரு ச.தமிழ்ச்செல்வன் அரங்கேற்றினார்.திரு கா.பழனிச்சாமி, கு.சி.பா.அறக்கட்டளைச் செயலர் முன்னிலை வகித்து விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. தனக்கு வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் தொகையை அப்படியே கட்சி நிதியாக திரு ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார் திரு அருணன் அவர்கள். அருமையான ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியதும் மறக்க முடியாதது. இம்மாதிரி நாம் என்று பேசப் போகிறோம் என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தியது.
பல விருதுகள் பெற்ற, திறமையான, அற்புதமான படைப்பாளி திரு சுப்ரபாரதிமணியன் அவர்களுடன் காலை பத்து மணி முதல் மாலை மூன்று மணி விழா துவங்கும்வரை உடன் இருந்து உரையாடியது மறக்க முடியாத நிகழ்வாக எனக்கு அமைந்தது. அன்பும், அரவணைப்பும் உள்ள அவருடனான மன நெருக்கம் என்றும் என் நினைவில் நிற்பது.
இந்த பிரம்மாண்டமான விழாவில் எனது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்ட சிறப்பு விருது மற்றும் ரூ.10000 எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை. நிறைவாய்க் கிடைத்த விருதும் புத்தகங்களும், சான்றிதழும் அன்பு நண்பர்களின் பார்வைகாக... - உஷாதீபன்

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...