“கணிதம் ”
(சிறுகதை) (செம்மலர் டிசம்பர் 2014வெளியீடு)
ஆறு மாதம் பிரிந்திருந்த வருத்தம் துளிக்
கூட இல்லை என்று தோன்றியது. அட, வருத்தம் வேண்டாம்…அந்த உணர்வு கூடவா இருக்காது? ஒரு
வேளை அதை வெளிக் காட்டுவது கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறாளோ?
கட்டிய கணவனிடம் என்ன கௌரவம்? அவனிடமும் கெத்தாகக்
காட்டிக் கொள்ள வேண்டும். என்ன மனநிலை இது? எவ்வளவோ சண்டைகள், சச்சரவுகள், மனத் தாங்கல்கள்,
வருத்தங்கள்….எல்லாமும் காலப் போக்கில் விலையில்லாமல்தானே போயின?
புருஷன் பெண்டாட்டிக்குள்ள எதுக்குதாண்டா விலை
இருக்கு? – எப்போதோ அம்மா சொல்லி வைத்த முத்தான வார்த்தைகள். ஆனால் விலை இருக்கு என்றுதான்
இப்போது தோன்றுகிறது. அந்த மூத்த தலைமுறைதான் இல்லாமல் போனதே…அவர்கள் சொன்ன விழுமியங்கள்
அவர்களோடு போனது.
எல்லாமும் மாறுதலுக்குட்பட்டதுதான் என்றாலும்,
சில அடிப்படை தர்ம நியாயங்கள், ஒரு வீட்டின் இறையாண்மை என்பது காலத்தால் மாறுதலுக்குட்படலாமா
என்ன? அப்புறம் இந்தக் குடும்ப அமைப்பிற்கு
என்னதான் மதிப்பிருக்கிறது? அந்த இறையாண்மைதானே விண்டு விரிந்து ஒரு நாட்டின் கட்டுக்
கோப்பான இறையாண்மையாகக் கூடி நிற்கிறது? அப்படித்தானே தேசங்கள் மதிக்கப்படுகின்றன?
தனக்குத்தான் இப்படியெல்லாமோ? அவள் இன்னும் எல்லாவற்றையும்
விலையாய் நினைக்கிறாளோ என்னவோ? இருக்கும் இருப்பைப் பார்த்தால், “இன்னும் ஆறு மாசத்துக்கு
வேணா அங்க போய்த் திரும்பவும் உட்கார்ந்துக்கோ….” என்று சொல்லிவிடலாம் போல்தான்.
ஆறு மாதங்கள் முக்க முழுங்கத் தனித்திருந்திருக்கிறானே,
தானே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, உடல் உபாதைகளையும் பொறுத்துக் கொண்டு, டாக்டரிடம்
காட்டிக்கொண்டு, மருந்து மாத்திரைகளைச் விழுங்கிக் கொண்டு, தன்னந் தனியே இருந்து கழித்திருக்கிறானே…என்று
கிஞ்சித்துமா ஒரு ஜீவனுக்குத் தோன்றாது?.அப்படியா
ஒரு ஜென்மம்? அவ்வகையிலும் ஒரு நெஞ்சம் ஈரமற்றுப் போகுமா? அந்த மாதிரியும் ஒரு இதயம்
கெட்டிப்பட்டு நிற்குமா?
என்ன, ஏது என்று ஒரு வார்த்தை கேட்டாளா?
சரியான கல்லுளி மங்கி….! கிராதகி…!!
இந்த ஆறு மாதத்தில் என்ன பாடுபட்டிருக்கிறார்
இவர்? சரியாகச் சமைக்கவும் வராமல், என்னவோ தெரிந்ததை அரையும் குறையுமாய்ச் செய்து இறக்கி,
பிடித்தும் பிடிக்காமலும் முழுங்கி வைத்து, சகிக்க மாட்டாமல் தூர எறிந்து, வெந்ததைத் தின்னு
விதி வந்தால் சாவோம் என்று நாட்களை நகர்த்தினாரே…..
தேர் முட்டிக்கு எதிர்த்தாப்போல ஒரு அம்மா
கடை போட்டிருக்கும். அங்கே உப்பில்லாம எல்லா வற்றல் வடகமும் கிடைக்கும்….போய் வாங்கிட்டு
வந்து வச்சிக்கிங்க…..
பொறுப்பாய், அக்கறையாய் சொல்கிறாளாம்….இந்த
விபரமே அவளுக்கு நான் சொன்னதுதான்….நான் அலையாத கடையா, கண்ணியா? மதுரையைச் சுற்றிய
கழுதையாயிற்றே நான்…! அதிசயமாய் ஒரு நாள்,
கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டாள். அந்த ஒரு நாளோடு சரி….பிறகு? கொணக்கிக்
கொண்டு விட்டது மனசு.
ஒரு நாள்….ஒரு பொழுது….ஒரு வார்த்தை….அன்பாய்….ஆதரவாய்…..
என்னங்க….எப்டியிருக்கீங்க….? சமைச்சீங்களா?
சாப்டீங்களா? உடம்பு சவுரியமா இருக்கா…? முடிலன்னா Nஉறாட்டல்ல
சாப்டுக்குங்க….கஷ்டப்படாதீங்க….காசு போனாப் போயிட்டுப் போகுது…நல்ல எடமாப் பார்த்துச்
சாப்பிடுங்க….பத்திரமா இருங்க…..ஞாபகமா வீட்டைப் பூட்டிட்டுப் படுத்துக்குங்க…மறந்திடாதீங்க….உள்
மரக் கதவைச் சாத்திக்குங்க…திறந்து போட்டுட்டுத் தூங்காதீங்க….நீங்க பகல்ல அப்டித்
தூங்குவீங்க…அதுனாலதான் சொன்னேன்….கேஸை ஞாபகமா ஆஃப் பண்ணிக்குங்க….கவனம்…..
எல்லாமும் இவருக்கு இவரே கற்பனை செய்து கொள்வதுதான்….அவள்
கேட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்வார்….கனவுக்
காட்சிகளிலே வானில் பறப்பது போல…..!
மன்னவனே அழலாமா….கண்ணீரை விடலாமா?.....உன்னுயிராய்
நானிருக்க….என்னுயிராய் நீ இருக்க…..!!!
ஆனால் இவர் எதிர்பார்ப்பதில் ஒரு பொட்டு
வார்த்தை கூட அவளிடம் இருந்து இந்த நிமிஷம் வரை வரவில்லை.
திருச்சி ஸ்டேஷனுக்கு வந்து கூட்டி வரவில்லையாம்….அதுதான்
இப்பொழுது மகாப் பிசகாய்ப் போனது. பெருத்த கோபமாய் வெடித்துவிட்டது அவளுக்கு.
அந்தப் பையன்தான் உன்கூட சௌத் ஆஃப்ரிக்காவிலேர்ந்தே
வர்றானே…..அவன் திருச்சில இறங்கினா நீ மதுரை வந்துட வேண்டிதானே..….நான் எதுக்கு திருச்சி
வரணும்? மதுரை ஜங்ஷனுக்கு வர்றேன்….. – முடித்து விட்டார் இவர்.
பையனை விட்டுச் சொல்ல விடுவாள் என்று எதிர்பார்த்தார்.
அவனிடமிருந்து ஃபோனே வராதது ஒன்றும் அதிசயமில்லை. நல்ல காலத்திலேயே தில்லைநாயகம் அவன்.
இஞ்சினைக் கழட்டி விடும்போது அது எந்த மூலையில் போய் நின்றால் என்ன? சாதாரணமாகவே பேச
மாட்டான். அவனுக்கு விருப்பமான அம்மா (அப்படித்தான் அவள் நினைக்கிறாள்) அங்கே போய்
அவனுடன் உட்கார்ந்து கொண்டாயிற்று. எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு இயல்புதானே என்று
இவர் புரிந்து கொண்டிருக்கிறார் அதை. பிறகு
இந்த பாழாய்ப் போன அப்பாவுடன் என்ன பேச்சு? அப்பா என்றால் சண்டைக்காரர். அவருக்கான
பிம்பம் அதுதான். சதா அட்வைஸ் செய்பவர். எப்போது பேசினாலும் ஏதாவது அறிவுரை சொல்லிக்
கொண்டேயிருக்கும் அறுவை. ரம்பம், பிளேடு.
என்னப்பா….நல்லாயிருக்கீங்களா? இதோ அம்மாட்டத்
தர்றேன்…..எப்படி இத்தனை நாசூக்காகக் கட் பண்ணி விடுகிறார்கள்? இந்த நாகரீகத்தை எங்கே
கற்றுக் கொண்டார்கள்? எந்தப் பள்ளியின் கல்வி அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தது?
அப்படியானால் நம் கல்விமுறையின் தரம்தான் என்ன?
ஏதோ அவள் இவரிடம் பேசத் துடித்துக்
கொண்டிருப்பதைப் போல…..பிரிந்திருக்கும் இருவரை இவர்கள் சேர்த்து வைப்பதைப் போல….அப்பாவுக்கு
அம்மாவிடம்தான் பேச இஷ்டம் என்பதைப் போல…..எனக்கு இஷ்டம் அவளுக்குக் கஷ்டம்…அதுதானே…?
டே…டேய்…கொஞ்சம் இர்றா….. போச்சு….கட் பண்ணிட்டானா?
என்னா அவசரம் இந்தப் பசங்களுக்கு? ரெண்டு வார்த்தை பேசறதுக்குள்ளே…..? அவன் குரலே மறந்து
போயிடும் போலயிருக்கு எனக்கு…..! ரொம்ப நெருக்கினா, வேறே யார்ட்டயாச்சும் கொடுத்து,
ரெண்டு வார்த்தை என்னை மாதிரிப் பேசுறா என்று மிமிக்ரி செய்தாலும் போயிற்று. அதைத்தான்
கலாய்த்தல் என்று சொல்கிறார்களே இப்போது…! அப்படிச் செய்தால் அது அவர்களைப் பொருத்தவரை
குற்றமா என்ன?
என்னாங்க….எப்டியிருக்கீங்க…..ஏதோ போயிட்டிருக்கு….எனக்கு
வேலையிருக்கு, வச்சிடறேன்…. – எப்போது ரெண்டு வார்த்தை பேசினாலும் ஏதோவோர் அலுப்போடேயே…!
அவள் சந்தோஷமாய் இருப்பது இவருக்குத் தெரிந்து விடக் கூடாதாம். அவளுக்கு வேலையிருந்துகொண்டே இருப்பதாய் இவர் உணர
வேண்டுமாம். . அங்கு ஒன்றும் தான் சுதந்திரமாய், சொகுசாய் இல்லை என்பதாய்….தன்னிடம்
பேசுவதில் அத்தனை ஆசுவாசம்……
சுமதீ…..எப்டியிருக்கே…..நா ராஜசேகர் பேசறேன்…..உன்
பையனப் பார்த்தேன்…..நீ வரைஞ்ச படத்தைப் பார்த்தேன்…..நல்லாயிருக்கியா சுமதீஈஈஈஈஈஈஈஈ…….?
….என்னங்க.….நீங்க எப்டிங்க இருக்கீங்க……?நான்
சுமதி….உங்க சுமதி பேசறேங்க……
நல்ல்ல்ல்ல்லா இருக்கேன்……நல்ல்ல்லாயிருக்கேன்
சுமதீ…..
எல்லாம் சினிமாவோடு சரி…...நடைமுறை யதார்த்தம்
என்பதே வேறு…..சிவாஜியும், விஜயாவும் ஃபோனில் கதறும்போது, பரஸ்பரம் பனியாய் உருகிய
ரசிகர் கூட்டம்… தியேட்டரே அழுது துடித்ததே….!! இவள் கூடப் புடவைத் தலைப்பை முகத்தில்
பொத்திக் கொண்டு குலுங்கினாளே……அந்த ஈரத்தில் துளி கூடவா தன் மீது ஒட்டவில்லை?
ஒட்டலையே…! ஒட்டியிருந்தாத்தான் போய் இறங்கினதும்
பேசியிருப்பாளே…
அப்பா…அம்மா வந்து சேர்ந்தாச்சு…..வச்சிடறேன்…..
– முடிந்தது கதை.
ஆனால் ஒன்று. பையன்கள் காசிலே கருத்தாய்
இருக்கிறார்கள். ஃபோன் பேசுவதில் கூடச் சிக்கனம்தான். யாரோடு? தந்தையோடு….!!! அவர்கள்
நண்பர்களோடு? சிநேகிதிகளோடு? அதெல்லாம் கேட்கக் கூடாது….அது மணிக்கணக்காய்க் கூடக்
கரையும்…..அவர்கள் இஷ்டத்திற்கு அப்படியெல்லாம் குறுக்கே புகுந்து விட முடியாது.
வெளிநாட்டு வேலை அவர்களுக்கு எதைக் கற்றுக்
கொடுத்திருக்கிறதோ இல்லையோ, பணம் சேர்க்க வேணும் என்ற உத்தியை மட்டும் நன்றாகச் சொல்லிக்
கொடுத்திருக்கிறது. அதற்குத்தானே வெளிநாட்டுப் பயணமே…!
அப்பா…எம்.பி.ஏ., படிக்கணும். எம்.எஸ். முடிக்கணும்….அப்பத்தான்
எழுபது, எண்பதுன்னு நான் டிமான்ட் பண்ண முடியும்…ஒரு வருஷம்…இருந்திட்டேன்னு வச்சிக்குங்க….
ஃபாரின் போயிடுவேன்…..அப்புறம் பிடிக்க முடியாது….
இப்பவே பிடிக்கிற இடத்துலயா நீ இருக்கே…?
– நினைத்துக் கொண்டார்.
அப்பா வேண்டியிருந்தது அப்போது. அதற்காகத்தானே
சேமித்து வைத்திருக்கிறார் அப்பா. மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்? நிச்சயம் அவர்
தன் கடமையிலிருந்து தவறப் போவதில்லை. அதெல்லாம் பசங்களுக்கு நன்றாய்த் தெரியும்.
சரி, வேலை பார்த்திட்டே படிக்கிறியா…இல்ல……?
– வாய் தவறிக் கேட்டு விட்டார். எஸ்.எஸ்.எல்.சி முடித்த கையோடு காலேஜ் போக வசதியில்லாமல்
மறுநாளே ஒரு ரைஸ்மில்லில் நாற்பது ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குப் போனார் இவர். அதில்
பதினைந்து ரூபாய் டைப்ரைட்டிங்கிற்கும், ஷார்ட்உறான்ட்டிற்கும் கொடுத்துவிட்டு அஞ்சு
ரூபாய் செலவிற்கு வைத்துக் கொண்டு, மீதி இருபதை வீட்டில் கொடுத்தார். அந்த நினைப்பில்
இதைக் கேட்கலாமோ…! தப்பாயிற்றே…!!
அதெல்லாம் சரிப்படாதுப்பா….அப்டின்னா அந்தக்
கன்சர்ன் மூலமாத்தான் போக வேண்டியிருக்கும்…. அக்ரிமென்ட் போடுவான்….படிப்பு முடிச்சு
அதுக்கப்புறம் கண்டிப்பா ரெண்டு இல்லன்னா மூணு வருஷம் அவன்ட்டயே அடிமை மாதிரி நான்
வேலை பார்த்தாகணும்….நாம எதிர்பார்க்கிற சாலரி கிடைக்காது…..அதுக்கப்புறமும் அந்த சாலரி
ரேஞ்சை ரீச் பண்ண முடியாது …தனியாப் படிச்சா…ரெண்டே வருஷத்துல முடிச்சிட்டு, ரெஸ்யூம்
போட்டேன்னா டெஃபனெட்டாப் போயிடுவேன்…..மாசம் ஒன் லாக் மேலே துணிஞ்சு டிமான்ட் பண்ணலாம்….அவனே
தருவான் நம்ம க்வாலிஃபிகேஷனுக்கு…..- சொன்னதுபோல்தான் செய்து விட்டான். எல்லாம் சந்தோஷம்தான்.
ப்ளானிங்கெல்லாம் படு பிரமாதம். புள்ளியை நோக்கி கச்சிதமாய் நகரும் உத்தி. இந்தக் காலத்தில்
பெண்களே டிமான்ட் பண்ணுகின்றனவே…! பையன் பெண்ணைப் பற்றி விசாரிப்பது போக, ஒண்ணே கால்,
ஒன்றரை லட்சம் வாங்கணும் மாசத்துக்கு…அப்படிப் பையனாப் பாருங்கப்பா….கல்யாணத்துக்கு
நிற்கும் பெண் அப்பாவிடம் சொல்கிறதே…! காலம் எப்படித் தலைகீழாய் மாறி விட்டது? ஆனால்
இந்தப் பசங்களுக்குக் காசில் கருத்தில்லையே…! அப்படித்தான் தெரிகிறது.
காசு சேர்க்கிறதுல அப்படி ஒண்ணும் கவனமா இருக்கிறதா எனக்குத் தெரில…. – என்றார் நண்பரிடம்
ஒரு நாள்.
என்ன சுந்தரேசன் இப்டிச் சொல்றீங்க…? அவுங்க
வெளி நாடு, வெளிநாடுன்னு துடிக்கிறதே இதுக்குத்தானே….அந்த நாட்டுக் காசு, நம்ம ரூபாயா
மாறும்போது மதிப்பு கூடுதுல்ல….அதுனாலதானே சீக்கிரம் நிறையப் பணம் சேர்க்கணும்னு துடிக்கிறாங்க…..நம்மள
மாதிரிப் பென்ஷன் கின்ஷன் கிடையாதுல்ல அவங்களுக்கு….இப்பருந்தே சேர்த்தாத்தானே உண்டு….
நீங்க அப்டிச் சொல்றீங்க….பாருங்க….என் பையன்
அவன் பொண்ணு, பிள்ளையை அங்கே எல்.கே.ஜி., யு.கே.ஜீன்னு, அதுதான் அங்க பேருன்னு நினைக்கிறேன்…ஸ்கூல்ல
சேர்க்கிறதுக்கு மாசா மாசம் இருபதாயிரம், முப்பதாயிரம்னு
செலவு செய்றான்….தேவையா இது? ரெண்டு வருஷம் அங்க இருந்திட்டு வரப்போறான்….அந்தப் பீரியட்ல
குழந்தைங்க இங்க படிச்சா என்ன? அதான் தெனமும் வெப் காமிராவுல பேசிக்கலாமே, பார்த்துக்கலாமே…!!
காசு எம்புட்டு மிச்சமாகும்…..உன் ஒய்ஃப் குழந்தைகளோட இங்க இருக்கட்டும்டா…நாங்க பார்த்துக்கிறோம்னா
கேட்கிறாங்களா? பொண்டாட்டிய விட்டிட்டு இருக்க முடியல….ஆனா அப்பன் ஆத்தாள விட்டிட்டு
ஓடத்தான் பார்க்கிறாங்க….
அப்டின்னும் சொல்ல முடிலயே….அம்மாவக் கருத்தா
அழைச்சிக்கிறாங்களே….?
அது எதுக்கு? எதுக்குன்னேன்? குழந்தைகளப்
பார்த்துக்க ஒரு ஆயா வேணாமா? இத்தனைக்கும் அந்தப் பொண்ணு வீட்டுலதான் இருக்குது….இருந்தாலும்
பொண்டாட்டி கசங்கிடப்படாதுங்கிறதுல கவனமா இருக்காங்க பசங்க….அம்மாவ, பாசத்துலயா கொண்டு
வச்சிக்கிறாங்க….ஒரு வேலைக்காரிக்கு பதிலா…அவ்வளவுதானே…இந்த லட்சணத்துல இவ படுத்துற
பாடு இருக்கே….அட்டேங்கப்பா…..என்னவோ ஊருல இல்லாத பிள்ளைய இவதான் பெத்துட்டாப்லயும்,
அவன்தான் கிடந்து எங்கம்மா, எங்கம்மான்னு துடிக்கிறாப்லயும், இவ பவுசு இருக்கே….எல்லாம்
நம்ம கிட்டதான்….அங்க போனான்னு வச்சிக்கிங்க….இவ மருமகளுக்குப் பயப்படுற Nஷாக்கு படு பீத்தல்…..ஏன் கேட்குறீங்க அந்தக்
கண்றாவியையெல்லாம்….அங்கே பெட்டிப் பாம்பாக் கெடக்குறது….அதவிட நம்ப கூட இருக்கிறது
இவளுக்கு ஆகாமப் போச்சு….காலம் எப்டி ஆயிடுச்சி பார்த்தீங்களா? இவளுக்கு, தான் தோற்கிறோம்ங்கிறதைவிட
என்னைத் தோற்கடிக்கிறதா மனசுல நினைப்பு…இந்த அறியாமையை எங்க போய்ச் சொல்றது?
வந்ததிலிருந்து ஒரு வாரமாய் பேசவேயில்லை. என்னவோ பக்கத்து ஊருக்குப்
போய்விட்டு வந்தது போல் அவள்பாட்டுக்கு இருக்கிறாள். .இவரும் விட்டு விட்டார். கழுதை
கிடக்கட்டும் என்று. வெளில சாப்ட முடியலை, அல்சர்…..வீட்டுல சரியா சமைக்க வரலை….வலது
பக்கம் இறக்கத்துல லேசா வீக்கம்….உறிரண்யாங்கிறார் டாக்டர்….அங்கங்க வாயுப் பிடிப்பு
வேறே….உடம்பை அப்டி இப்டி அசைக்க முடியலை….இவ்வளவு சங்கடத்துல ஆறுமாசம் தன்னந் தனியா
ஓட்டியிருக்கேன்….ஏதோ வாக்கிங், அது இதுன்னு கடத்திக்கிட்டிருக்கேன்….படுக்கைல விழுந்திடக்
கூடாதே….பாவி இவள்கிட்டே வார்த்தை கேட்டுடக் கூடாதேன்னு….நான் படுற பாடு எனக்குத்தான்
தெரியும்….இதுல இவளை இன்னும் என்ன தாங்கணுமாம்…எப்டித் தனியா சமாளிச்சீங்க….என்னதான்
செஞ்சீங்க..? .ஒரு வார்த்தை கேட்டாளா?
எனக்கு ஏதாச்சும் ஆயிருந்திச்சின்னா நான்
அநாதைப் பொணமால்ல கிடந்திருப்பேன்? அதை உணர்ந்தாளா இவ? ராத்திரி தனிமைல கிடக்க முடியாம
என்ன பாடு பட்டேன்? இந்த மனசு என்னெல்லாம் நினைக்குது….தேவையில்லாம எதையெல்லாம் பயங்கரமாக்
கற்பனை பண்ணிக்குது….எதையாச்சும் நினைச்சுப் பார்த்தாளா இவ? இந்த லட்சணத்துல மச்சினன்
வீட்டுல போய்ப் படுத்துக்கிட்டது இவளுக்குக் கோபமாப் போச்சாம்…! அவன் கூடப் பேசக் கூடாதாம்…..அவனோட
ஒட்டு உறவு கூடாதாம்….நான் தனியாக் கிடந்தப்போ, அவன்தானே எனக்குத் துணையா இருந்தான்….நீங்க
இங்க வராதீங்க மாமான்னு சொல்லியிருந்தான்னா என் கதி?
வீட்டைப் பூட்டிட்டு நீங்க அங்க போய்ப் படுத்தீங்கன்னா
என்னா அர்த்தம்? திருடு போச்சுன்னா?
எனக்குத் தனியாத் தூக்கம் வரலைன்னு அர்த்தம்……அதான்
எல்லாத்தையும் கொண்டு லாக்கர்ல வச்சிருக்கியே…அப்புறமென்ன? இங்க சட்டி பானையைத் தவிர
வேறே என்ன இருக்கு?
அப்போ அவனை இங்க வந்து படுக்கச் சொல்ல வேண்டிதானே…?
அதெப்டிறீ முடியும்? அவன் விடிகாலைல எழுந்திரிச்சு
வெளியூருக்கு வேலைக்குப் போறவன்….அவனுக்கு அவன் வீடு தோதா இருக்குமா, இங்க வர்றது சரியா
இருக்குமா? எதாச்சும் பொருத்தமாப் பேசுறியா? ஏதோ மாமா, மாமான்னிட்டு, சுமுகமா இருக்கானேன்னு
பார்த்தா, அதையும் கெடுத்துருவ போலிருக்கே…..உனக்கு மனுஷங்களே ஆகாதா? தன்னந் தனியா
மாசக் கணக்குல கிடக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எல்லாம் இருந்து பார்த்தாத்தான்
தெரியும்….எவன்ட்டயும் முகம் கொடுத்துப் பேசாம, நானே உலகம்னுட்டு இருந்தா, தனியாப்
படுத்திருக்கைல நெஞ்சடைச்சிதுன்னு வச்சிக்க….போய்ச் சேர்ந்துட்டேன்னா…வெறும் ஃபோன்
நம்பராக் குறிச்சு வச்சு என்னசெய்ய? அவனவன் கைக்கு எட்டுற தூரத்துலயா இருக்கான்…வர்றதுக்குள்ள
வாயைப் பிளந்து பல மணி நேரம் ஆகியிருக்கும்…..சங்கதி தெரியாம பேசுறியே…,? எடுத்துப்
போடக் கூட ஆளில்லாம, அழுகி நாறணும்….தேவையா எனக்கு…..?
உங்களை யாரு வர வேண்டாம்னு சொன்னாங்க….நீங்களும்
வந்திருக்க வேண்டிதானே….?
நீ சொல்வடீ… சொல்லுவ….அவரும் வந்தாத்தான்
நான் வருவேன்னு நீ சொன்னியா? இல்ல சொன்னியான்னு கேட்குறேன்…எப்படா கூப்பிடுவான்னு காத்திருந்த
மாதிரிக் கிளம்பிட்டே…? உன் தேவை அங்கே அவனுக்கிருக்கு. ஆனா என் தேவை? அவன் கூப்பிடுற
போக்குக் கூட உணராத கூகை இல்ல நான்….ஒரு சொல் வெல்லும்…ஒரு சொல் கொல்லும்….நம்ம பையன்தானேன்னு
வந்திட்டு, மரியாதை இல்லாமச் சீரழியச் சொல்றியா என்னை?
என் வயசுக்கேற்ப, என்னோட தேவைகளை உணருவானா
அவன்? உனக்கே தெரில..அப்புறம் அவனை எங்க சொல்ல? உணர்ந்து மதிப்பானா? அங்க வந்தா வெளில,
வாசல்ல தனியாக் கிளம்பிப் போக முடியாது….எல்லாத்துக்கும்
ஆள் வேணும்….ஊர் உலகம் தெரியாது….அப்படிக் கிளம்பற மாதிரியா அவனோட வேலைகள் இருக்கு…?
எந்நேரமும் கால்ல வெந்நீரைக் கொட்டிட்ட மாதிரில்ல அலையறாங்க…ஊரச் சுத்திக் காண்பிக்கவா
அவன் கூப்பிடுறான்…அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கணும்…அதுக்கு ஆள் வேணும்…. நீ போனியே….எத்தனை
எடம் பார்த்திட்டு வந்தே…எங்கே சொல்லு பார்ப்போம்….எங்கம்மா….எங்கம்மான்னு உன்னைக்
கூட்டிக் கொண்டு காண்பிச்சானா? இல்லேல்ல…?..இங்கேயிருந்து கிளம்பி அங்கே வீட்டுக்குள்ளே
போய் அடைஞ்சே…..அங்கேயிருந்து கிளம்பி திரும்பவும் இங்கே வந்து இப்போ அடைஞ்சிருக்கே…அதானே
உண்மை…..?
ஒண்ணு தெரிஞ்சிக்கோ….உனக்கு என்னைக்கானாலும்
நான்தான் துணை….நீ என்ன முறுக்கிக்கிட்டாலும், சரி…கிடக்குதுன்னு எல்லாத்தையும் உதறிட்டு,
நாந்தான் உனக்கு செய்தாகணும்…வேறே எவனும் வந்து நிக்க மாட்டான்…..நாளைக்கு நீ போனாலும்
சரி, இல்ல நா முந்திண்டாலும் சரி…..ஒரு நாள்தான்….ஒரே ஒரு நாள்தான்…..பசங்க பறந்திடுவாங்க……கருமங்களையெல்லாம்
அப்பா பேரைச் சொல்லி நீங்களே செய்துடுங்கன்னு வேணுங்கிற துட்டைக் கொடுத்திட்டு, அடுத்த
ஃப்ளைட்ல ஏறிடுவாங்க….முதல்ல சாவுக்கு வர்றாங்களாங்கிறதே சந்தேகம்…அது தெரியுமா உனக்கு?
.உள்ளே தள்ளினா ஒரு மணி நேரத்துல ஒரு டம்ளர் சாம்பல்….அவ்வளவுதாண்டி இப்போ…!..நோ சென்டிமென்ட்ஸ்…..இதுக்கு
எதுக்கு இத்தனை ஆயிரம் மைல் பறந்து வரணும்ங்கிற காலம் இது…!
நீயும் நானும்தான் ஒருத்தருக்கொருத்தர் இப்டி
முறைச்சிக்கிட்டுத் திரியணும்…என்னத்தையோ தலைல கொண்டு போகிற மாதிரி…..காலம் எவ்வளவோ
பின்னோக்கித் தள்ளிடுச்சி நம்மளை….அதப் புரிஞ்சிக்கோ…..என்னவோ உலக மகாக் குத்தம் மாதிரி
மூஞ்சியத் தூக்கிட்டு நிக்கிறியே….நானும் பார்க்கிறேன் வந்ததுலேர்ந்து….ஒரு வார்த்தை
சிரிச்சுப் பேசினியா? நல்லாயிருக்கீங்களான்னு ஒரு சொல் கேட்கத் தெரிஞ்சிதா உனக்கு?
என்ன பொம்பளை நீ? என்னத்தைக் கொண்டு போகப் போறே? இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பாலுன்னு
வசனம் கேள்விப்பட்டதில்லே? பாடியை எடுத்து, வீட்டைக் கழுவி விட்டா, காரியம் முடிஞ்சிது…உயிரோட
இருக்கிறவங்க இயங்கணுமே…! ஜீவிக்கணுமே !!…அப்டியே நெடு மரமா உட்கார்ந்திருக்க முடியுமா?
அதுனால, .சாதாரணமா இருக்கப் பழகிக்கோ….எது
நடந்தாலும் சம்மதம்ங்கிறமாதிரி மனசை சமனமா வச்சிக்கோ….நமக்கு முன்னாடி கோடானு கோடிப்
பேர் வாழ்ந்து மறைஞ்ச உலகம் இது…நமக்கு அப்புறமும் இது காலத்துக்கும் தொடரும்….நாமெல்லாம்
கால வெள்ளத்துல சர்வ சாதாரணமாக் கரைஞ்சு, காணாமப் போயிடுவோம்…மூணு தலைமுறைக்கு முந்தின
உறவுகளை தெரியுமா நமக்கு….? யாரையாவது சொல்லச் சொல்லு பார்ப்போம்…தெரியாதுல்ல….அப்புறம்
சொல்ற? என்னடீ வேண்டிக் கிடக்கு முறைப்பும், முறுக்கும்…..அறியாமைங்கிறதுங்கூட அளவா
இருந்தாத்தாண்டி அழகு….
உலகம் போற போக்கைப் பாரு….தந்தனத் தில்லாலே….. ஜிங்கிடி ஜிங்காலே…மீனாட்சி ஜிங்கிடி ஜிங்காலே…..
சுந்தரேசனின்
சகதர்மிணி, தர்மபத்தினி திருமிகு மீனாட்சி என்கிற ஸ்ரீமதி மீனாட்சியம்மாள்
வாய் மூடி மௌனியாகக் கிடந்தாள். -----------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக