நாவல் என்றால் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களோடு அறிமுகமாகி அந்தக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வழி சிறு சிறு நிகழ்வுகளோடு நகர்ந்து அங்கங்கே கதையின் சம்பவங்களுக்கேற்ப வெவ்வேறு அறிமுகமும், முக்கியத் திருப்பங்களுமாக மாறி, ஒரு காலகட்டத்தின் தவிர்க்க இயலா சம்பவங்களையும், அதனால் உண்டாகும் படிப்படியான மாற்றங்களையும் அவற்றின் வழி ஆழமாகவும், அழுத்தமாகவும் விரிந்து குறிப்பிட்ட காலத்தின் ஒதுக்க முடியாத சாட்சியாய் தவிர்க்க இயலாத புரிதலின் முழுப் பரிமாணமாய் விகசித்து, ஒரு இடத்தில் முடிவுக்கு வரும் ஒரு அர்த்தபூர்வமான ஆவணம் போல் என்று கொள்ளலாம். நாவலுக்கான படிமங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ஒரு வகையிலான புரிதல்.
இம்மாதிரியான இலக்கணங்களோடு வெளிவந்திருக்கும் நாவல்கள் இருக்கின்றனவா? அல்லது வெவ்வேறு அமைப்புக் கொண்டனவாய் விரிந்து காணப்படுகின்றனவா? எனில் அப்படித்தான் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். காலத்தின் தேவைக்கேற்றாற்போல் ஒவ்வொன்றும் வேறு வேறு மாற்றங்களைக் கண்டுதான் வந்திருக்கின்றன. பல்வேறு விதமான சிந்தனைகளின்பாற்பட்டு வடிவமாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. வாசக மனத்தைக் கொள்ளை கொண்டு புதிய முயற்சிகளாய் பிரமிக்க வைத்திருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் தன் பார்வையிலேயே கதையைச் சொல்லிக் கொண்டு போவதாய் நாவல் விரிந்திருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரமும் அதைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுமாய் நாவல்கள் வெளி வந்திருக்கின்றன. மிக நீண்ட சிறுகதைகளாய்த் தோற்றமளித்து, நாவல் என்கின்ற பெயரினைத் தாங்கி அதன் சம்பவங்களாலும், சம்பாஷனைகளாலும் பரிமளித்து தன்னை நிமிர்த்திக் கொண்ட படைப்புக்களும் உண்டு.
வெவ்வேறு காலகட்டங்களின் பல்வேறு வித முயற்சிகளிலும், வெளிக்கொணர்வுகளிலும், நாவல்களின் தளங்கள் இயங்கிக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து, அந்தக் கதாபாத்திரத்தின் மன உளைச்சல்களை, எண்ண ஓட்டங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு நாவலைப் படைக்க முடியுமா என்று யோசிக்கும்போது அழுத்தமாக, ஆழமாகப் படைக்கப்பட்டிருக்கிறதே என்பதைக் கண்கூடாகக் காண, அந்தப் படைப்பும் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய படைப்பாளியின், விமர்சகரின், வித்தகரின் வழி வெளிப்போந்திருக்கும் அதிசயத்தை உணர நம்மை அப்படியே பிரமிப்பில் நிலை நிறுத்தி விடுகிறது.
அவரின் இலக்கிய ஞானம் பற்றிப் பேசுவதற்கே தகுதியில்லை (நான் என்னைச் சொல்லிக் கொள்கிறேன் என்று தயவுசெய்து கொள்க…!) என்கிற நிலையில் அவரின் ஒரு நாவலைப்பற்றி விமர்சிக்க எங்ஙனம் நீ துணிந்தாய்? என்ற மனக் கேள்வியின் ஊடே விமர்சிக்கவில்லை அய்யா, இந்த நவீனத் தமிழ் இலக்கிய உலகத்திற்கு, அதில் அறியப்படாதவர்களுக்கு வாசக அனுபவத்தை எடுத்து வைக்கலாம், என்கிற நல்லெண்ணமே என்று என்னை நானே இங்கே நிலை நிறுத்திக் கொள்ள விழைகிறேன்.
இருக்கும் நல்ல விஷயங்களையெல்லாம் உன் மனதிற்குள் போட்டு நிரப்பிவிடு. பிறகு தீயவை, தீய எண்ணங்கள் உன்னை அண்டாது என்றார் சுவாமி விவேகானந்தர். மனித மனத்தின் எண்ண ஓட்டங்கள், அதனால் உண்டாகும் நிகழ்வுகள் அத்தனை சீக்கிரத்தில் கட்டுக்குள் வந்து விடுகின்றனவா? இந்த மனம் பெரும்பாலும் நல்லவைகளைவிட தீய விஷயங்களை நாடுபவைகளாகவும், அறிதலில் ஆர்வமுள்ளதாகவும், நாட்டம் செலுத்துவதாகவும்தானே இருந்து கொண்டிருக்கின்றன? செயல் வடிவம் பெறும் முன் நாம் அதைப் பகுத்து நோக்குகிறோம் என்றாலும், வேண்டாத்தை ஒதுக்க முனைகிறோம் என்றாலும், ஒரு நல்ல விஷயத்திற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் நம்மை நெருங்கும் முன் அதன் எதிர்வினையான தீயது நம்மை எத்தனை சீக்கிரமாக அண்டி நம் தலை மேல் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆட்டுவிக்கிறது?
மனிதனின் குணாதிசயங்கள் எத்தனையோ வகையானவை. அதற்குத் தகுந்தாற்போல் செயல்கள் மாறுபடுகின்றன. எத்தனையோ நல்லவையும் நடக்கின்றன. தீயவையும் நடந்து போகின்றன.
ஆனால் பாவம் இந்த மனிதனால் அந்தத் தீய எண்ண ஓட்டங்களைத் தவிர்க்க முடிகின்றனவா? எதை நினைக்கிறோமோ அப்படியே ஆகிறோம் என்பதைப்போல மனித மனத்தின் அவல எண்ணங்கள், அபத்தச் சிந்தனைகள், சுற்றிச் சுற்றி வந்து அலைக்கழித்து என்னமாய்ப் பாடாய்ப் படுத்துகின்றன? ஆனாலும், அது வேண்டாம் என்று முற்றாக வெறுத்தொதுக்கி அதிலிருந்து விடுபட்டு விட முடிகின்றதா? அப்படி விடுபட்டவர் எத்தனை பேர்? படுகுழியிலிருந்து மீண்டவர் எவரெவர்?
இந்த மனப் போராட்டத்தின், அதனால் உண்டாகும் எண்ண அலைகளின் படிமங்களாய் விரிந்து கிடக்கிறது இந்த நாவல்.
பல்வேறு குண விசேஷங்களைக் கொண்ட கதாபாத்திரங்களா? அடுக்கடுக்கான வித்தியாசமான சம்பவ நிகழ்வுகளா? எதிர்பாராத திருப்பங்களா? அதனால் உண்டாகும் அதிசய மாற்றங்களா? எதுவுமில்லை. கதைக்கான புற நிகழ்வுகள் என்று பார்த்தால் அது மிகச் சாதாரணம்தான். ஆனால் அந்த ஒரு சில நிகழ்வுகளின் ஊடே எழும் மனப் போராட்டங்களும், முரணான எண்ண ஓட்டங்களும், அம்மாதிரி நினைத்து நினைத்தே தன்னை விரித்துக் கொள்ளும் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரமும், தன்னை உணர்ந்தே தன்னை நகர்த்திக் கொள்ள முயலும் முயற்சிகளும், தன் சுய எண்ண ஓட்டங்களின்பாற்பட்ட அறிவு பூர்வமான விமர்சனமும், ஆனால் அதிலிருந்து விடுபட முடியாத, அதன் மீதான தீராத பிரேமையில் தன்னைத் உயரே நிறுத்திக் கொள்ளும் தன்மையும், இந்த நாவலின் தலையாய வெற்றி என்றுதான் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாமும் எழுதலாம் என்கிற மனத் துணிவை, ஊக்கத்தை, ஒரு படைப்பாளிக்கு வழங்கக் கூடிய தன்மையில் தலை நிமிர்ந்து நிற்கிறது இந்த நாவல்.
ஒரு அசாதாரணமான, விசித்திரமான, உங்களுக்குள்ளேயே நீங்கள் பல சமயங்களில் இருந்த, இருக்கிற, ஒரு வித்தியாசமான இளைஞனைக் கதாபாத்திரமாக்கி அவன் மூலமாக ஆழமாக, அழுத்தமாக நாவலை நகர்த்திக் கொண்டு போகும் புதுவித முயற்சியிலான இந்தப் படைப்பு ஒரு தேர்ந்த இலக்கிய இயக்கமாகத் திகழ்ந்த அவருக்கே சாத்தியம்.
அவர் திரு க.நா.சு. அந்த நாவல் அசுர கணம்.
படித்து முடித்த கணத்தில் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்த போது தவறாக, எதுவும் உளறி விடக் கூடாதே என்ற பயம்தான் ஏற்பட்டது. எழுதும் இந்த வேளையிலும் அது கூடவே வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் மனதுக்கு துரோகம் செய்யாத அசல் சிந்தனை. முதலில் அவரைப் படிப்பதற்கே, இப்படி அடையாளம் கண்டுகொள்வதற்கேனும் நமக்கு வழி வகுத்தானே அந்தப் பரம்பொருள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. மனதில் தோன்றும் இந்த மதிப்பு மிக்க எண்ணங்களை எப்படி மறைப்பது? ஏன் மறைக்க வேண்டும்? சரியான நோக்கில் எடுத்துக் கொள்பவர்கள் இல்லாமலா போகிறார்கள்? மாறாக நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டுமே! இந்த உலகத்தில் எல்லா விஷயங்களுக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே மாதிரியாகவா விமர்சனங்கள் இருந்திருக்கின்றன? இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று வரையறுத்தது யார்? இப்படிச் சொல்லக் கூடாது என்று தடுத்தது யார்? ஒரே மாதிரியான எதிர்வினைகளா விழுந்திருக்கின்றன? இதுதான் சரி என்று முற்றுப்புள்ளி வைப்பவன் எவன்? எனக்குத் தோன்றுகிறது, நான் எழுதுகிறேன். இப்படி ஒன்றை அடையாளம் காட்டினானே என்று தேடுபவர்கள் தேடட்டும். பயனடையட்டும். இதையெல்லாம் வெளிக்கொணர்ந்து சொல்வதற்கு ஆள் வந்து விட்டதே என்று நினைத்துப் புழுங்குபவர்கள் புழுங்கட்டும். இப்படி ஒரு படைப்பு இருக்கிறது. இது எல்லோராலும் அறியப்பட வேண்டியது. இந்த எழுத்து இதைச் சொல்கிறது. அறியுங்கள். அவ்வளவே…! பூக்கள் மலர்வதைப்போன்ற மெல்லிய அணுகுமுறைகளும், அசுர கணங்களான தொடர் முரண்களும் மாறி மாறித்தானே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன?
நாவலின் மெய்ப்பொருள் குறித்து திரு சி.மோகன் அவர்கள் அழகாக இவ்வாறு விவரிக்கிறார்
அசுர கணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். படைப்பில் புற நிகழ்வுகள் வெகு சொற்பம். மன நிகழ்வுகளால் கட்டமைக்கப் பட்டிருக்கும் நாவல். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக் கொள்ளும் ஒரு இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஓர் எண்ணம் எழுந்து, அது அதன் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து பரவி வியாபிக்கிறது. தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்.
நாவல் முழுவதும் அசுரகணமான நினைவுகளே நாயகன் வழி நிரம்பிக் கிடக்கின்றன. அவன் சிந்தனை பரந்துபடும் இடமெல்லாம் நேருக்கு முரணான எண்ணங்கள் விரிகின்றன. அதை அவனால் தவிர்க்க முடியவில்லை. ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று அவன் தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான். ஆனாலும் அவனால் இதைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்தி தனது சிறு சிறு செய்கைகளையெல்லாம் வேறொன்றோடு கோர்த்துக் கோர்த்து எண்ணிக் கொண்டே, வலை பின்னிக் கொண்டே செல்கிறான். இப்படியான விபரீத எண்ண ஓட்டங்களும், அதன் பாதிப்பினால் இயல்பான மனித நடைமுறையும் தவறிப் போய், மற்றவர் பார்வைக்கு ஸெமி என்றும், கிராக்கு என்றும், அரைக் கிறுக்கு என்றும் எண்ணப்படுபவனாய், தன்னை இவ்வாறுதான் பிறர் நினைக்கக் கூடும் என்று உணர்ந்தவனாய், அப்படி உணரும் திறனிருந்தும், அதைத் தவிர்க்க முடியாதவனாய் கதாநாயகன் தன் எண்ணச் சுழற்சியினால் படும் பாடு படிக்கும் வாசகனை அப்படி அப்படியே கடைசி வரை இழுத்துக் கொண்டு போய் கூடவே பயணப்பட வைத்து விடுகிறது. இதுவே இந்த நாவலின் வெற்றி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமா? எனக்கு வருகிறதே? நான் என்ன செய்ய? என்றுதான் நாயகனின் சுய விமர்சனம் ஆரம்பிக்கிறது இந்த நாவலில். நம்முடைய அனுபவத்திலேயே பலதையும் நாமும் இப்படிக் கண்டிருக்க முடியும்தான். பலரும் தங்களது அனுபவங்களாக இப்படியெல்லாம் உணர்ந்திருக்க முடியும். திருமண வீட்டில் இருக்கும்போது மனதுக்கு அமங்கலமாகத் தோன்றுவது, உறக்கத்தில் மயானத்தில் படுத்துக் கிடப்பது, கல்லறைகளைக் கட்டிக் கொண்டு அழுவது, பேரலை பெருக்கெடுத்து நகருக்குள் அதிலும் குறிப்பாக நாம் குடியிருக்கும் தெருவுக்குள் நுழைந்து நம்மை அமுக்குவது, கழிவறையில் அமர்ந்திருக்கையில் சுவற்றில் படிந்திருக்கும் அழுக்குகள் அல்லது நீர்ச் சிதறல்கள் வெவ்வேறு தோற்றங்கள் கொண்ட சித்திரங்களாய் மனிதர்களாகவும், மிருகங்களாகவும், பறவைகளாகவும், மரங்களாகவும், இயற்கை வனாந்திரங்களாகவும் கண்ணுக்குத் தெரிவது, இப்படியெல்லாம் பலரும் உணர்ந்திருக்க்க் கூடும். அம்மாதிரி ஒரு விசித்திர மன நிலையில்தான் இந்தக் கதையின் நாயகன் நாவல் முழுவதும் பயணிக்கிறான்.தவறுதான் என்றும் அங்கங்கே உணருகிறான். ஆனால் அந்த எண்ண அலைகளை அவனால் தடுத்தாட்கொள்ள இயலவில்லை. எந்தெந்தப் பிரத்யட்சமான காட்சிகளையெல்லாம் அவன் கண்கள் காணுகின்றனவோ அவைபற்றியெல்லாம் விபரீதக் கற்பனை கொள்கின்றது. சித்தமும், போக்கும் விசித்திரங்களாய் விரிய, அசுர கணங்களாய் உணருகிறான் அவைகளை.
ராமன் என்ற அந்த இளைஞனை அவன் தந்தை தன் நண்பரின் வீட்டுக்கு அனுப்புகிறார். அங்கே அந்தப் பெண்ணை அவன் சந்திக்கிறான். கூடவே அந்தப் பெண்ணின் தாயையும் பார்க்கும்போது பின்னர் ஒரு கட்டத்தில் கூடவே அந்தத் தாயின் நிழலும் ராட்சசிபோல் பேருருக் கொள்கிறது அவன் மனத்தில். அவள் தாயின் உருவம் அவனுக்கு வெவ்வேறு வடிவங்களை மனதுக்குள் தகவமைக்கிறது.
அவள் வீட்டுக்குள் இருக்கும் பொழுதுகளில் இவ்வாறு உணர்கிறான் நாயகன் ராமன்.
அறை கதகதப்பான இருந்தது. நான் உட்கார்ந்திருந்த ஆசனமோ மெத்தென்று எனக்குப் பிடிப்பாகவே இருந்தது. என்று சொல்லிவிட்டு ஃப்ராய்ட் என்ற மனோதத்துவ நிபுணர் கற்பனையால் கண்டு சொன்ன ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது என்று விவரிக்கிறார்.
மனிதர்களாய்ப் பிறந்து விட்டவர்கள் எல்லாருக்குமே கவலையற்ற, மெத்தென்ற, சுகமான, தாய் வயிற்றுக் கர்ப்பப்பை நினைவு அற்றுப் போவதேயில்லை. அந்த சுகத்தை நாடியே மனிதர்கள் செயல்படுகிறார்கள், ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறார்கள். கதகதப்பும் மிருதுத் தன்மையும், அவள் தாயின் அந்த நிமிஷத்து சொர்க்கமாகவே எனக்குத் தோன்றின.
அந்தப் பெண்ணைச் சந்திக்கும் அந்த வேளையிலிருந்துதான் தன் மனதில் நரக வேதனை ஒட்டிக் கொண்டது என்று நினைத்து தன் எண்ணங்களை வளர்த்துக் கொண்டே போகிறான் நாயகன்.
இப்படியான தனது சிந்தனைகள் மற்றவர்களுக்கு ரொம்பவும் வித்தியாசமாய்த் தோற்றமளிப்பதையெல்லாம் உணரும் அவன், இவற்றையெல்லாம் தவிர்க்க முடியாமல் திணறுகிறான்.
பழக்கப்பட்ட சுவட்டிலே, தேய்ந்துபோன தடத்திலே, மனித மந்தையிலே, நானும் ஒரு மந்தை ஆடாக யார் கண்ணிலும் தனியாகப் படாமல் எப்படியும் எந்தக் கவனத்தையும் கவராமல் இருந்த சோடு தெரியாமல் போய் விடுவது நல்லது. அது தெரியாமல் மனிதர்கள் நினைவுச் சின்னங்களை நிர்மாணிக்கிறார்கள்.
கறையெல்லாம் அழுக்குத்தான். நினைவுச் சின்னங்கள் எல்லாம் மறதியையே சுட்டிக் காட்டுகின்றன. நேர் நின்று நோக்கத்தான் யாருக்கும் தெம்பில்லை.
எத்தனை அருமையான கவிதை வரிகள் பாருங்கள்.
சுலபமாக, சிரமப்படாமல், யாரையும் சிரம்படுத்தாமல் வாழ்ந்துவிட்டு இறப்பவனே சிறந்த மனிதன். மற்றவர்களைப் போல இருக்கவும், சிந்திக்கவும், அறியாதவன் தனிமையை நாடி, காட்டிலே விலங்குகளுக்கிடையே ஒரு விலங்காக அல்லது ரிஷிகளுக்கிடையே ஒரு ரிஷியாக உருமாறி வாழ்ந்து விடுவது நல்லது. உலகில் நடமாடுவது பிசகு என்றுதான் தோன்றுகிறது.
புத்தனுக்குப் பிறகும், ஸாக்ரடீசுக்குப் பிறகும்,ஒருகுங்கிற்குப் பிறகும், ஜராதுஷ்டிரனுக்குப் பிறகும் சங்கரனுக்குப் பிறகும் சிந்தனை தேவையாகத்தான் இருக்கிறது. லோக குருமார் எத்தனை பேரோ வந்து போனது உண்மைதான் எனினும் உலகம் இன்னமும் லோகமாகத்தான் இருக்கிறது. கடைசி லோக குருவாக இருக்க முடியுமானால் அது மிகவும் நல்ல காரியம். ஆனால் எனக்குப் பிறகும் லோக குருமாருக்கும் அவசியம் ஏற்படும்தானே?
இப்படியான தத்துவ விசாரங்கள் நாவல் முழுதும் விரிந்து கொண்டே செல்கிறது. எல்லாமும் நாயகனின் எண்ண ஓட்டங்கள்தான். காணும் காட்சிகளுக்கெல்லாம் முரணாகவும், எதிராகவும், விரக்தி கலந்த சந்நியாச மனநிலையிலும் அவன் எண்ணங்களின் விரிந்து பரந்த வியாபகம் படிக்கும் வாசகனையும் ஒரு முதிர்ந்த மனநிலைக்குக் கொண்டு செல்கிறது, கொண்டு செல்லும் என்பதுதான் இந்நாவலின் அடிநாதமாய் நிற்கும் சக்தி.
என்னைப் பற்றியோ, என் உள்ளத்தை, ஆன்மாவை என் சிந்தனைகளைப் பற்றியோ என் சிந்தனைகளின் தனிப் போக்கைப் பற்றியோ எனக்கு என்னதான் நிச்சயமாகத் தெரியும்? நிச்சயமாக ஒன்றுமே தெரியாது என்பதுதான் நிச்சயம். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒன்றும் தெரியாது என்கிற முடிவுக்கு வர இவ்வளவு சிந்தனை எதற்கு? சாதாரண மக்கள் மாதிரி லட்சத்தில் ஒருவனாக, கோடியில் ஒருவனாக ஏன் இருக்க முடியவில்லை? என்று அவன் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளும் கேள்விகள் நாமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டியவைகள்.
அந்தப் பெண்ணின் வீட்டிற்குப் போய்விட்டு தன் வீடு திரும்புகையில் நடந்து கொண்டிருக்கும்போது அவனின் சிந்தனைகள் பலபடி விரிகின்றன. நாவலின் ஓட்டம் முழுவதும் இம்மாதிரியான பரந்துபட்ட எண்ண விரிசல்களிலேயே தொடர்ந்து பயணிக்கிறது. ஒரு இடத்தில் கதை நாயகன் வழி சொல்கிறார்.
உலகத்துச் சிறந்த மனிதர்களின் சிறந்த சிந்தனைகள் எல்லாம் அவர்கள் நடந்து கொண்டிருக்கும்போதுதான் உதிக்கின்றன. ஸாக்ரடீஸ் முதல் இன்றைய நாள் வரையில், உபநிஷத்துப் பெரியவர்கள் முதல் இன்றைய ழாக் மாரி டெய்ன் வரையில் எல்லாச் சிந்தனையாளர்களுமே நடப்பதில் பிரியமுள்ளவர்களாகவேதான் இருந்திருக்க வேண்டும். நடையின் சரித்திரத்தை யாரேனும் ஒரு தீர்க்க தரிசனம் வாய்ந்த ஞானி எழுதிப் பார்த்தால் அதுவே உலகத்தின் சிறந்த நூலாக விளங்கும்.
ராமன் என்ற தன் பெயரைப் பற்றி நாயகனின் சிந்தனை போகிறது. எவ்வளவு பெரிய வார்த்தை அது! எத்தனை உள்ள அர்த்தங்களை அடக்கிய மகத்தான வார்த்தை. பல காவியங்களுக்கு அடிப்படையான வார்த்தையாயிற்றே! அந்த வார்த்தைக்கே அர்த்தம் “நான்” தான் என்று எண்ணிச் சில சமயம் நான் ஏமாந்து விடுகிறேன். அன்று ராவணனின் அசுரத்தனம் சீதையைத்தான் நாடியது. ராமன், சீதை தன்னுடையவள் என்று எண்ணி வலியத் தேடிப்போய் ராவணனுடன் யுத்தம் செய்தான். ராவணனையும் அவன் குடும்பத்தையும் நிர்மூலமாக்கினான்.
அதனால் அசுர கணமே அற்றுப் போய்விட்டது உலகத்திலே என்று கொள்ள முடியுமா?
பாண்டியன் பைலட் என்கிற ராஜ்யப் பிரதிநிதி முன் சக்தி வாய்ந்த ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி முன் கொணர்ந்து நிறுத்தப்பட்ட ஏசு கிறிஸ்துவை பாண்டியன் பைலட், உண்மை என்றால் என்ன? என்று கேட்டானாம். ஏசுவுக்கா தெரியாது? தெரிந்திருந்தும் வாய் மூடி மௌனியாக நின்றாராம் அவர். நாயகியின் தாயார் நாயகனை ரொம்பவும் கெட்டிக்காரர் என்று அறியப்பெற்று தன் வயதிற்குப் பொருத்தமில்லாமல், அதே சமயம் இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்கிற நினைப்பில், காதல் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று வீசும் கேள்விக்கு படிப்படியாகப் எழும் பல்வேறு சிந்தனை மோதல்களில் மேலே குறிப்பிட்டுள்ள கேள்வியும் ஒன்றாக அமைகிறது.
இப்படியாகப் பக்கத்திற்குப் பக்கம் க.நா.சு வின் பாண்டித்யம் நாவல் முழுவதும் விரிந்து கிடக்கிறது. எண்ண ஓட்டங்களினூடே என்ன கதையைச் சொல்லி என்ன செய்யப் போகிறோம் என்று வெறும் கதையையும் சம்பவங்களையும் மனதில் கொள்ளாமல் அவர் மனதிலே இடைவிடாது வந்து மோதிக் கொண்டிருக்கும் தத்துவ நெறிகளையும், காலங்காலமான ஆழ்ந்த வாசிப்பு அனுபவங்களையும் அங்கங்கே நாவல் முழுமைக்கும் விரவிக் கொண்டே செல்கிறார்.
நாவல் என்றால் கதை என்ன, எதைப்பற்றி, எந்தக் காலகட்டத்தைப் பற்றி அது விவரிக்கிறது என்கிற எதிர்பார்ப்பில் வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இது ஏமாற்றமாகத்தான் இருக்கும். நாயகன் நாயகியைப் போய்ப் பார்ப்பதும், பிறகு அவர்கள் பற்றித் தனக்குத் தானே நினைத்துக் கொள்வதும், பிறகு மீண்டும் சந்திப்பதும், கடைசியில் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவாவதும் என்கிற ஒரு வரிக் கதையைத் தவிர வேறொன்றுமேயில்லையே என்று தோன்றும்.
மதிப்பிற்குரிய திரு சி.மோகன் அவர்கள் அவரின் முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல் முழுக்க முழுக்க மன நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டு உருப்பெற்றிருப்பது இந் நாவல். உயர் தரத்தில் எழுதப்பட்டிருக்கும் க.நா.சு. அவர்களின் குறிப்பிடத்தக்க இலக்கியப் பங்களிப்பு.
அவசியம் எல்லோரும் படித்து அனுபவிக்க வேண்டிய இந்த நாவலை நற்றிணைப் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை – 5 வெளியிட்டிருக்கிறார்கள்.(பிரசுரம் - உயிரோசை இணைய வார இதழ் - 27.02.2012)
------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக