ஞானசுந்தரம் தன் எல்கையைச் சுருக்கிக் கொண்டு வெகு காலமாயிற்று. எல்கையை என்றால் எதுவென்று நினைக்கிறீர்கள்? அவர் உறவுகளுடனான எல்கையையா அல்லது அவரது வாழ்விட எல்கையையா? இரண்டையுமே என்பதுதான் சரி. தன்னுடைய இயல்பே தன்னை இப்படி மாற்றி விட்டதோ என்பதாக அவர் நினைப்பதுண்டு. அதுவாகவே சுருங்கிப் போயிற்றா அல்லது அவராகச் சுருக்கிக் கொண்டாரா?
தானேதான் சுருக்கிக் கொண்டோம் என்பதே விடையாக இருந்தது. அதில் ஏதோ பெரிய நிம்மதி இருப்பதாக அவர் உணர்ந்தார்.
இருக்குமிடமே சொர்க்கம். அதிலும் சும்மா இருப்பதே சுகம். சொல்லிக் கொண்டாரேயொழிய அவரொன்றும் சும்மா இருக்கும் ஆசாமியல்ல. விழித்திருக்கும் நேரம் எல்லாமும் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பார். ஆனாலும் அப்படி நினைத்துக்கொள்வதில் ஒரு சுகம்.
மனிதனே எண்ணங்களுக்காக வாழ்பவன்தானே! தன் மீதான நம்பிக்கையின்பாற்பட்ட எண்ணங்கள்தானே ஒருவனை வழி நடத்திச் செல்கின்றன? அவனவன் அவனவனின் இயல்புக்கேற்றாற்போல் நினைத்துக் கொள்வதாலும், செயலாற்றுவதாலும்தானே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான். அப்படித்தான் தன்னை இயக்கிக் கொள்வதற்கு தனக்குத்தானே சில வழிமுறைகளை வகுத்துக் கொண்டிருந்தார் அவர்.
அதிலும் அவரது வாழ்விட எல்கை சுருங்கிப் போனது ரொம்பவும் காரண காரியமாய்த்தான்.
காலைல வீட்டை விட்டுக் கிளம்பினா பத்து இடத்துக்குப் போயிட்டு வர வேண்டிர்க்கு…ஒவ்வொரு எடத்துலயும் இதைக் கழட்டவும், மாட்டவும்னு செய்திட்டே இருக்க முடியுமா? சரி, கழட்ட வேணாம், தலையோட அப்டியே இருக்கட்டும்னு போய் நின்னா யாருன்னே தெரியாம சந்தேகத்தோட பார்க்கிறாங்க எல்லாரும். நம்ப குரலையோ அல்லது பேச்சையோ வச்சித்தான் கண்டு பிடிச்சாகணும். ஒவ்வொரு எடத்துலயும் எவன்யா இதைக் கழட்டுறதுன்னு அப்டியே சந்திரமண்டலத்துக்குப் போற ஆள் மாதிரி போய் நின்னா பயப்படுறாங்க…எங்கே? பாங்க்லதான். கண்ணுமட்டும்தானே வெளில தெரியுது…யாருன்னு கண்டுபிடிக்க முடிலயே? அதுலயும் சமீபத்துல பாங்க் கொள்ளை அதிகமாப் போச்சா…வர்றவன் போறவன் எல்லாரையும் ரொம்பவும் உன்னிப்பாக் கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க… தலைக்கவசத்தைக் கழட்டிட்டுப் பேசுங்க சார்…அப்டின்னு தெளிவாச் சொல்லுது அந்த அம்மா…அந்த முகத்துலதான் என்ன ஒரு மிரட்சி…கேஷ் கவுன்டராச்சே…அவுங்க பயப்படுறது நியாயம்தானே…
அவுங்களுக்கு அது நியாயமா இருக்கலாம். ஆனா எங்களுக்கு? பக்கத்துல பக்கத்துல எத்தன எடத்துக்குப் போக வேண்டிர்க்கு? ஒவ்வொரு வாட்டியும் கழட்டிக் கழட்டி மாட்ட முடியுமா? கையில உள்ள மத்தது மறந்து போகுது…அன்னைக்கு ஒரு நா பேனாவ யார்ட்டயோ செலான் ஃபில்அப் பண்ணக் கொடுத்தேன். மறந்துட்டேன். இல்ல அவன் தர மறந்துட்டான். ஏன்னா அவனும் தலைல மாட்டியிருக்கிறதக் கழட்டி கைல வச்சிருக்கானே…கவசம் கைவசமே இருக்கிறதுனால ஏதாச்சும் வேறொண்ணு விட்டுப் போகுது. ஒரு நா மேஜைலயே வச்சிட்டு வந்துட்டேன்…பிறகு திரும்பவும் நூறு படி ஏறிப் போய் எடுத்திட்டு வந்தேன். சரி, எனக்குத்தான் இந்த மறதின்னு யோசிச்சா, எத்தனை பேர் என்னமாதிரியே கிறுக்காட்டம் மாடிக்கும் கீழைக்கும் அலைஞ்சாங்க தெரியுமா? எல்லாம் நம்மளமாதிரி வயசான கேசுங்கன்னு நினைச்சா, வயசுப் பசங்களும் அப்டித்தான் அலையுறானுங்க…ஒருத்தன் இதக் கைல வச்சிட்டு வண்டிச் சாவியத் தேடுறான்…ஒருத்தன் கை பேக்கைத் தேடுறான்…எத்தனையோ விதமான தேடல்…! இதெல்லாம் யாருக்குத் தெரியுது…அரசாங்கத்துல இதையெல்லாம் சொல்ல முடியுமா? பிராக்டிக்கலா கஷ்டப்பட்டுப் பார்த்தாத்தான் புரியும்…அடிக்கிற வெயிலுக்கு வியர்த்து ஊத்துது…தலை பூராவும் வியர்வை மழைல நனைஞ்சா மாதிரி. அப்டியே உள்ளே இறங்குது…சளி பிடிக்குது…இதெல்லாம் வண்டியப் பிடிக்கிற சார்ஜன்ட்கிட்டச் சொல்ல முடியுமா? அப்போ உயிர் முக்கியமில்லியா?ன்னு திருப்புறார்.
இந்தக் காயத்துக்குக் காயம் எதுவும் படக்கூடாதுல்ல. காயம் பட்டாலும் பொறுத்துக்கலாம். உயிர் முக்கியமாச்சே…அதத்தான் திருப்பித் திருப்பிச் சொல்றார். அகராதி பிடிச்சவன் கண்ணு மண்ணு தெரியாமப் பறக்குறான்…மோதுறான், சாகுறான்…எவன் சொன்னாக் கேட்குறான்? இந்தா பெரிசு, ய்ய்ய்யெங்களுக்குத் தெரியும்…நீ பொத்திட்டுப் போ…ங்கிறான் விரலை ஒரு மாதிரி அசிங்கமா வளைச்சு…? ஒரு மரியாதை அது இதுன்னு எதாச்சும் அவிஞ்ஞகிட்ட இருந்தாத்தானே? சிட்டிக்குள்ள இருபது இருபத்தஞ்சுலதான் வண்டியே ஓட்ட முடியுது….முப்பதத் தாண்டினாத்தான…? எந்நேரமும் டிராஃபிக் ஜாமாத்தானே இருக்கு? எங்க வேகமாப் போக முடியுது…வெய்யிலா கொளுத்துது…ஆளாளுக்கு தலைக் கவசத்தை மாட்டிக்கிட்டு, கழட்டினாங்கன்னா பேயறஞ்ச மாதிரி இருக்கானுங்க ஒவ்வொருத்தனும்…
பேயறஞ்சென்ன….பேயாவே இருந்தாலும் உறல்மெட் போட்டுத்தான் ஆவணும்…அதான் ரூலு…பேயென்ன வண்டி ஓட்டப் போவுதான்னு பார்க்குறீங்களா? பேய் மாதிரி ஓட்டிட்டுப் போகுறானுங்களே, அவுங்களச் சொன்னேன்…
அதெல்லாம் சும்மா சார்…ஒரு வாரத்துக்கு இப்டி டார்ச்சர் பண்ணுவானுங்க…பிறகு விட்ருவானுங்க…இதுக்கெல்லாம் வேறே நிறையக் காரணம் இருக்கு….நீங்கென்ன இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கீங்க…? இவிஞ்ளப்பத்தி நம்ம சனத்துக்குத் தெரியாதா என்ன? நம்ம உயிர் மேல நமக்கு இல்லாத அக்கறையா இவிஞ்ஞளுக்கு வந்திருச்சி திடீர்னு? காயத்துலேர்ந்து காப்பாத்துறதா சாயம் போடுறாங்க…
என்னென்னவோ சொல்கிறார்கள். எல்லாவற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜனங்கள் பாவம்தான். பாடாய்ப் படுகிறார்கள். அபராதமாய் ஐநூறைக் கொடுப்பதற்கு அந்தக் காசிற்குத் தலைக் கவசத்தை வாங்கி விடுவோமே என்று ஓடுகிறார்கள். கூட்டமான கூட்டம். ஒரே விற்பனைத் திருவிழாதான். ஜனங்களை எந்த ரூட்டில் மடக்கி வரவழைப்பது என்பது தொழில் செய்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
ஏ…ஓடியா…ஓடியா…ஓடியா…போனா வராது…பொழுது விடிஞ்சாக் கிடைக்காது….என்று தட்டிப் பறிக்கிறார்கள். எல்லாம் காலத்தின் கோலம்…
அவனவன் அவனவன் நிலைல என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ…சாமர்த்தியமிருந்தா உயிரோட உலாவு….இல்ல செத்துப் போ…யார் கேட்கப் போறா….ஒருத்தன் ஒருத்தனை மிதித்து, உருட்டி மேலே மேலே முன்னேறும் உலகம். மேலே போவதுதான் முக்கியம். எப்படிப் போகிறோம் என்பதல்ல.
யோசித்தார் ஞான சுந்தரம்…இனி வீட்டைச் சுற்றி இரண்டு கி.மீ. தூரத்தில் இருக்கும் பணிகளுக்கு தலைக் கவசம் அணிவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தத் தைரியமான முடிவுக்கு அவர் வருவதற்குக் காரணம் குறிப்பிட்ட அந்தச் சுற்றளவில் எங்கும் போலீஸ் நிற்பதில்லை என்பதுதான். எதற்குப் போட்டுப் போட்டுக் கழற்றிக்கொண்டு? மகா அவஸ்தை. எவனுக்குத் தெரிகிறது இந்தக் கஷ்டமெல்லாம்? சாதாரண மக்களைப் பாடாய்ப் படுத்துவதே இந்த அரசாங்கத்துக்கு வேலையாய்ப் போயிற்று. கிள்ளுக் கீரை இவர்கள்தான். சட்டத்துக்குக் கட்டுப் பட்டவர்கள். காரில் செல்பவர்களுக்கு அதெல்லாம் இல்லை. எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்தாது. அப்பாவிப் பொது ஜனம்தான் லா அபைடிங் சிட்டிசன்ஸ். பயந்து பயந்து வாழ்பவர்கள். தப்புச் செய்யாமலே. ஏதாவது தப்பாகி விடுமோ என்று. ஆட்டி வைப்பது சுலபம். சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். மாட்டு என்றால் மாட்டுவார்கள். கழட்டு என்றால் கழட்டுவார்கள். ஆஉறா…! நம் அதிகாரம்தான் எப்படிச் செல்லுபடியாகிறது?
உங்களுக்கு உயிர் முக்கியமா இல்லையா? உடம்பு முழுசா இருக்கிறது பிடிக்கலை போலிருக்கு அய்யாவுக்கு…ஜென்ரல் உறாஸ்பிடல்ல ஆக்ஸிடென்ட் செக் ஷனுக்குப் போய்ப் பாருங்க தெரியும். காலையும் கையையும் தூக்கி அந்தரத்துல மாட்டியிருக்கிறதைப் பாருங்க… அப்பத்தான் புத்தி வரும் உங்களுக்கெல்லாம்…
அன்று ஒரு நாள் எச்சரிக்கையோடு விட்டார் ஒரு சார்ஜன்ட். தனது பெரிய மனிதத் தோரணைதான் அவரை அப்படி இரக்கப்படுத்தி விட்டது அல்லது மதிப்பாக்கிவிட்டது என்று கொண்டார் இவர். வீடு திரும்பியவுடனே கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டார் ஞானசுந்தரம். முக முதிர்ச்சிக்கேற்றாற்போல் தலையும் வெளுத்திருந்தால் அதுவும் ஒரு பர்சனாலிட்டிதான். மசியடித்து மாசம் ரெண்டு தாண்டியிருக்குமே…! பின்னே வெளுக்காதா? ஈஈஈஈஈஈ…..அதுதான் இளிக்கிறது. என்னதான் தலையைக் கருப்பாக்கினாலும், முகம் காட்டிக் கொடுத்துவிடுகிறதே…பேசாமல் இப்படியே விட்டுவிட்டால் என்ன?
பலமுறை இந்த யோசனை வந்திருக்கிறதுதான். என்னவோ ஒரு தயக்கம். பையன் கல்யாணம் முடியட்டுமே…அதுவரை இப்படியே ஓடட்டும்…பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். ஒரு முறை மசியடித்தால் குறைந்தது இரண்டு மாதத்திற்குத் தாங்குகிறதுதான். ஒரு மாதம் கழிந்த பொழுதில் மெல்ல இளிக்க ஆரம்பிக்கிறது. குளித்து முடித்த தலையை நன்றாகத் துவட்டிப் பரத்திக் கண்ணாடியில் பார்த்தால் நிறையத்தான் வெளுத்திருக்கிறது. அதுவும் வயதான, செல்வந்தர் சிவாஜிகணேசனுக்குப் போல் டிசைனாக வெளுத்திருந்தால் பரவாயில்லை. பர்சனாலிட்டி தூள் கிளப்பும். இது கண்டா முண்டா என்றல்லவா வெளுத்துக் கிடக்கிறது? பார்த்தால் அசடு போலல்லவா தெரிகிறது. நம் மீது பிரியம் உள்ளவர்கள் கூட சீ இவனென்ன இப்டியாயிட்டான் என்று ஒதுங்கி விடுவார்கள் போலிருக்கிறதே? கொஞ்சம் எண்ணெய்யைத் தடவி வாரிவிட்டால் சுமாராய் மறைந்து போகிறதுதான். என்ன ஒரு அதிசயம்?
எண்ணெய் தடவும்முன் முன்பக்கமாக வெளுத்திருப்பவற்றில் லேசாகச் சாயத்தைத் தடவி விட்டால் முகப்பார்வையின் முன்பகுதி கருப்பாகிவிடுவதால் இளமை கூடிவிடுகிறது. மேல் தலையில், பின்பக்கம், பக்கவாட்டு என்று வெளுத்திருந்தால் யார் கண்டு கொள்ளப்போகிறார்கள்? முன்னும் பின்னுமாகச் சுற்றி வந்து என்ன இப்டியாயிடுச்சு என்றா கேட்கப் போகிறார்கள்? ரொம்பக் கிழண்டு போயிட்டீங்களே…? என்று வருத்தப் படப் போகிறார்களா? இப்டி நினைப்பாங்களோ, அப்டி நினைப்பாங்களோ என்று எல்லாமே நாமே நினைத்துக் கொள்வதுதான். அவனவனுக்கு ஆயிரம் வேலை. நாம சாயம் அடிக்கிறோமா இல்லையான்னு கவனிச்சிட்டிருக்கிறதா பாடு!
ஆனாலும் இந்தச் சாயம் அடிக்கும் வேலை கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சமென்ன ரொம்பவும் கஷ்டம். சரி தொலைகிறது பார்பர் ஷாப்பிலேயே முடித்துக் கொண்டு வந்து விடுவோம் என்று பார்த்தால் எம்பதக் கொண்டா, நூறக் கொண்டாங்கிறான் அவன். கட்டிங்க பண்ணின கையோட தலையை உலுப்பி விட்டுட்டு சாயத்தப் பூச ஆரம்பிச்சிடறான். எண்ணெய்ப் பசை உள்ள தலைல கொண்டுபோய் சாயத்தப் பூசினா அந்தத் தலை என்னத்துக்காரது? அதுதான் நிறையப் பேறு சிவப்புத் தலையோட அலையுறாங்க….ஷாம்பூ போட்டு அலசி, காயவிட்டு, சுண்டக் காய்ஞ்ச பிறகு பூசினா கறுப்பும் நிக்கும், வெளுத்தா வெளுப்பும் நிக்கும். எண்ணெய்த்தலைல பூசினா அப்புறம் காலத்துக்கும் சிவப்புத் தலையோட செவ்விந்தியரா அலைய வேண்டிதான். நாமதான் வாயத் திறந்து சொல்லணும்…இப்ப வேணாங்க…போய் குளிச்சி, தலையை அலசிக் காய வச்சிட்டு வர்றேன்…பிறகு பார்த்துக்கலாம்னு…டை போடணுமேன்னு சொன்னாத்தான் அடுத்த நிமிஷமே அவன் பூச ஆரம்பிச்சிடுவானே…பார்பர் ஷாப்புல. அவனுக்குத் தேவை பைசா. லேசா இளநாக்கு அடிச்சாப் போதாதா? கட்டிங் பண்ற வேளைல தூங்குறதுதானே நமக்குப் பழக்கம். தூக்கக் கலக்கத்துல உளறிப்புட்டு, அப்புறம் முழிச்சா? நீங்கதான சார் சொன்னீங்க….ங்கிறான் அவன்.
வசுமதி, கொஞ்சம் இங்க வாயேன்……
என்னா, அங்கிருந்தே சொல்லுங்க….எனக்கு வேலையிருக்கு…
அட வான்னா….ரொம்பத் தேவைன்னாத்தானே கூப்பிடுவேன்….சொன்னாக் கேளு வா…
வேற வேலையில்ல உங்களுக்கு…நேரம் காலமில்லாம….இன்னும் பத்து வயசு போகணும்….
அடச் சீ! நீ என்னடீ…எதையாச்சும் நீயா நெனச்சிக்குவ போலிருக்கு….உன் மனசுலதான் அந்த நெனப்பு இருக்குன்னு தோணுது….நீதான் எனக்கு ஞாபகப்படுத்துற…
எத…?
எதயா? அதத்தான்….!
ஐயோ கடவுளே….அறுபது முடிஞ்சாச்சு….நீங்க இப்ப சீனியர் சிட்டிசன்….ஞாபகம் இருக்கட்டும்…உங்க பேர்ல இருந்த ஒரு எஃப்.டியை முந்தா நாள்தான் போய் சீனியர் சிட்டிசன் இன்ட்ரஸ்ட்டுக்கு மாத்திட்டு வந்தீங்க….நினைவு இருக்கா இல்ல மறந்து போச்சா…..?
அட, ராமா…ராமா…நீயா அடுப்படில இருந்தமேனிக்கே எதையாச்சும் பேசுவ போலிருக்கு…இந்த வயசுல அதுக்கு எவனாச்சும் கூப்பிடுவானா? அதுவும் இந்தப் பட்டப் பகல்ல….?
அப்போ ராத்திரின்னாப் பரவால்ல போலிருக்கு…?
சரியாச் சொல்லப் போனா பொம்பளைங்களுக்குத்தான் இதுல அதிகமாக ஆசை இருக்குன்னு தெரியுது…நீங்கதான் நாங்க மறந்திருக்கிற சமயமெல்லாம் எதையாச்சும் சாக்கு வச்சு அத ஞாபகப்படுத்திட்டிருக்கீங்க…ஆள விடு…நா அதையெல்லாம் விட்டு பத்துப் பன்னெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது…உனக்கே தெரியும்…ஒரு வேளை அதுனாலதான் உனக்கே இன்னமும் ஆசையிருக்கோ என்னவோ…ஐம்பதிலும் ஆசை வரும்னு பாட்டுக் கூட இருக்கு….அது சினிமாவுக்குச் சரி…நிஜ வாழ்க்கைல அந்த ஆசை கூடாதாக்கும்…உடம்பு பாழாப் போயிடும்….
அப்போ இதுக்கெல்லாமும் சினிமாவுல சொல்லித் தர வேண்டிர்க்கு…நம்ம ஜனங்களுக்கு எல்லாமும் சினிமாதான். அது வழி வந்தா மனசுல பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….அதுலயும் மனசுக்குப் பிடிச்ச கதாநாயகன் சொல்லிட்டா அது வேத வாக்கு மாதிரி…எனக்குத் தெரிய அம்பது வருஷமா நானும் பார்க்கிறேன்…இப்டித்தான் போயிண்டிருக்கு…சினிமாக்காராதான் எல்லாத்தையும் சாதிக்கிறா….
அவாளப் பார்த்துப் பார்த்துப் பொழுதக் கழிச்ச ஜனம் அப்டியேதான் இருக்கு…அதையும் சொல்லு…சொல்லப் போன நானெல்லாம் கூட அப்டிக் கெட்டுப் போனவன்தான்…என்ன, கெட்ட பழக்க வழக்கங்கள் எதுவும் படியல…அந்தமட்டுக்கும் தப்பிச்சது…அதுக்குக் காரணம் அந்தக் காலத்து சினிமா நல்லதக் கத்துக் கொடுத்தது..ஆனாலும் சினிமாப் பார்க்கிறதுலயே பெரும்பாலான காலமும் நேரமும் வீணாயிடுச்சே…அதை இப்போ திரும்பவும் சம்பாதிக்க முடியுமா? தூக்கம் முழிச்சு, தூக்கம் முழிச்சு ரெண்டாம் ஆட்டமாப் பார்த்துப் பார்த்துத்தானே உடம்பு இன்னைக்கு இப்டிக் கெட்டுக் கெடக்கு…சினிமாப் பார்க்கிறதுக்கான அந்த சக்தியை வேற நல்ல வழில திருப்பி விட்டிருந்தம்னா? வயசான காலத்துல அப்பத்தான் தெம்பா நடமாட முடியும்…குழந்தைகளுக்கான காரியங்களைத் தடையில்லாமச் செய்ய முடியும்னு யாரும் அறிவுறுத்தலயே…அதுக்காகத் தாய் தந்தையரைக் குறை சொல்ல முடியுமா? குறைஞ்ச வருவாய்ல குடும்பத்தை நடத்துற போராட்டமே அவுங்களுக்குப் பெரிசா இருந்தது அந்தக் காலத்துல…அங்க இங்கன்னு எங்கயும் வெளில கூட்டிட்டுப் போக முடியலே…நாலணா சினிமாக்குத்தானே போறான்னு விட்டுட்டாங்க….ஃபெயிலாகாமப் படிக்கிறான்தானேன்னு விட்டுட்டாங்க…அந்த இலவசக் கல்வியையும் அரசாங்கம் அன்னைக்குக் கொண்டு வரலேன்னா பாடு தாளமால்ல போயிருக்கும்…முத முதல்ல வெள்ளச் சட்டையும், ப்ளு ட்ரவுசருமா சீருடை போட்டுட்டு வந்தது இன்னமும் என் கண்ணுக்குள்ள அப்டியே இருக்கு…அறுபது ஆரம்ப காலம் அது….இந்த அறுபதுலயும் அதை நினைக்காம இருக்க முடியுதா? அந்த இலவசக் கல்வி இல்லன்னா நானெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி.யே கூடப் படிச்சி இருக்க முடியாது…அதுனாலதானே ஒரு வேலைக்கே போக முடிஞ்சிது…சர்வீஸ் கமிஷன்தானே அன்னைக்குக் காப்பாத்தினது…இல்லன்னா வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்குமே? மாடு மேய்க்கிற பையனும் பள்ளிக்கூடத்துக்குப் போயிப் படிச்சாகணும்ங்கிற உயர்ந்த எண்ணம். அந்த மஉறானுபாவனுக்குப் பின்னாடி காலம் எப்டியெல்லாம் ஆயிப் போச்சு…எதையும் வாயத் திறந்து சொல்ற மாதிரியா இருக்கு…
அன்னைக்கு அந்தச் சினிமாக் கிறுக்கை உதறிட்டு முழுக்க முழுக்கப் படிப்புல கவனத்தைச் செலுத்தியிருந்தா, இன்னும் பெரிய பெரிய உத்தியோகம், பதவி உயர்வுன்னு மேலே போயிருக்கலாம்…இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடலை…வாழ்வாதாரம் பாதிக்கப்படலைன்னு வச்சிக்கோ…பெற்றோர் செய்த புண்ணியம்…நாம தப்பிச்சோம்….அவ்வளவுதான்…
எம்புட்டோ பெரிவா எவ்வளவோ நல்லதச் சொல்லி வச்சிட்டுப் போயிருக்கா…அதல்லாம் கண்ணுக்குப் படாது…தேடி எடுத்துப் படிக்க ஏலாது…இப்டிப் போனவா வந்தவான்னு சினிமாக் கதாநாயகன் சொல்றதுதான் மண்டைல ஏறும்…என்னிக்கு இந்த லோகம் உருப்படுறது? இப்டித்தான் கழியும் எல்லாமும்…..சரி விடுங்கோ…ரொம்பவும் யோசிச்சா அப்புறம் மனசுக்குப் பெருத்த கஷ்டமாப் போயிடும்…சொல்லுங்கோ, என்ன வேணும்? எதுக்குக் கூப்டேள்?
யோசிக்கணும்டி…யோசிக்கத்தான் வேணும்…நம்மளமாதிரி யோசிக்கிறவா, பழசை மறக்காதவா இன்னும் நிறையப் பேர் இருக்கிறதுனாலதான் லோகத்துல இன்னமும் நல்லது நடந்திண்டிருக்கு…தெய்வ பக்தியும், தேச பக்தியும் மனுஷாளுக்கு முக்கியம்….அதை இந்தத் தலைமுறைக்கு நாம சொல்லத் தவறிட்டோம்….அதுனாலதான் என்னென்னவோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம்….நாளைக்கு நமக்குப் பின்னாடி இந்தத் தலைமுறையும் அந்தக் கஷ்டங்களை அனுபவிக்கும்….அப்போ உணருவா…அன்னைக்காவது மாற்றங்கள் வராதா? ஆனா அப்போ அதையெல்லாம் பார்க்குறதுக்கு நாம இருக்க மாட்டோம்…
சரி, போரும் வியாக்யானம்…எதுக்குக் கூப்டேள், சீக்கிரம் சொல்லுங்கோ…
உனக்கும் போரடிச்சிடுத்தா? போகட்டும்…. இங்க வா…இப்டி உட்காரு…நா திரும்பிக்கிறேன்…பின்னாடி கைபடாத எடத்துல கொஞ்சம் பூசி விடு….திட்டுத் திட்டா இருந்தா அசிங்கமா இருக்கும்….
இருந்தா இருந்திட்டுப் போறது…என்ன வேண்டிர்க்கு டையி கிய்யீன்னு….இந்த வயசுல….
செய்வன திருந்தச் செய்னு சொல்வாடி….அத எப்போ விடணும்னு மனசு சொல்லுதோ அப்போ விட்டுடறேன்…அது தானா ஒரு நாளைக்கு என்னை விட்டுப் போயிடும்….இப்போ பூசு…இந்தச் சீப்பால முடியை விலக்கி விலக்கி எங்கெல்லாம் வெள்ளையாத் துருத்திண்டு இருக்கோ அங்கெல்லாம் கருப்பாக்கு….மனுஷனுக்கு .மனசு வெள்ளையா இருக்கணும்டி, அதுதான் முக்கியம். இதெல்லாம் உலகத்துக்கு…உலகத்தோடு ஒட்ட ஒழுகல்….அந்தக் காலத்துல நல்லவைகளுக்குன்னு இதச் சொல்லி வச்சான்…இப்போ இதுமாதிரிப் பலதுக்கும் அர்த்தங்களே மாறிப் போச்சு இன்னைக்கு. ஒண்ணு தெரிஞ்சிக்கோ…மனுஷன் மனசுக்காக வாழ்றவன். எப்போ மனசு ஒண்ணை வேண்டாங்குதோ அப்போ அது தானா அவனை விட்டுப் போயிடும்…அதுவரைக்கும் எது தடுத்தாலும் நிக்காது…ஆக மனசைக் கன்ட்ரோல்ல வச்சிக்கணும்…..அதான் முக்கியம்….
அப்போ உங்களுக்குக் கன்ட்ரோல் இல்லன்னுதானே அர்த்தம்…?
இது அந்த வகையைச் சாராதுடி….இயங்கு சக்தி இது….அறுபதுலயும் சுறுசுறுப்பா வச்சிக்கிறதுக்கு உதவுற நிஜம்…சென்ட்ரல் மினிஸ்டர்லேர்ந்து, சாதாரணப் பொது ஜனம் வரைக்கும் யார் பூசல…சொல்லு….? எல்லாருக்கும் சாயம் ஒரு நாளைக்கு வெளுக்குமாக்கும்… அதுவரை பொறுத்தான் ஆகணும்…..
ஆனா ஒண்ணுன்னா….உங்களுக்கு முடி ரொம்ப அடர்த்தி….அப்டியே காடு மாதிரி இருக்கு இன்னமும்….எனக்கே பொறாமையா இருக்காக்கும்…
கூந்தலுள்ள சீமாட்டிதானே அள்ளி முடிய முடியும்…உனக்கு இப்போ முடியுமா? சொல்லு…ஒண்ணு செய்யலாம்…பேசாம நீ பாப் வெட்டிக்கலாம்….
நீங்க முதல்ல பூசறத நிறுத்துங்கோ…நா அதப்பத்திப் பிறகு யோசிக்கிறேன்…பாப் வெட்டிக்கணுமாம்ல பாப்பு….க்க்கும்…
நொடித்துக்கொண்டே மீதமிருந்த கொஞ்சூண்டை சுட்டு விரலில் எடுத்து என் மூக்கில் கீற்றாகத் தீற்றி விட்டு எழுந்தாள் வசுமதி.
இதென்னது…? கேட்டுக் கொண்டே மூக்கை நோக்கி என் கை அவசரமாய்ப் போனது.
திருஷ்டி…திருஷ்டி… - சொல்லியவாறே கொல்லைப்புறம் நோக்கி விருட்டென்று நகர்ந்தாள் அவள்.
திருஷ்டியா அது! இல்லை…இல்லை… சந்தோஷமான தருணங்களின் தெறிப்பு அது…!
அது அவளின் அன்பின் அடையாளம்…! (வெளியீடு - திண்ணை இணைய இதழ் 04.03.2012)
-----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக