04 மார்ச் 2026

 

சிறுகதை                “பொறு…பொறு…!”பிரசுரம்-தாய்வீடு-மார்ச்“26





            நீயும் உங்கம்மாவும் சரின்னு சம்மதம் சொல்லித்தானே கல்யாணம் பண்ணி வச்சது? – எடுத்த எடுப்பிலேயே கேள்வியை ஆழமாகப் போட்டார் கமலேசன்.  அதாவது நீங்க ரெண்டு பேரும் ஒப்புக்கலேன்னா இது எங்க நடந்திருக்கப் போகுது என்ற கேள்வி அதில் தொக்கியிருந்தது.

            சரிப்பா…அதுக்காக…? – சட்டென்று கோபப்பட்டதுபோல் கேள்வியை வீசினான் சசிதரன்.

            அதுக்காக வாழ்க்கை பூராவும் கஷ்டப்படணும்னு சொல்றியா? என்று கேட்கிறானோ? அதையும் அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தார். சேர்த்து வைப்பதற்குத்தான் பெரியவர்கள். பிரிந்து செல்வதற்கு அல்ல.  

            எப்பப் பார்த்தாலும் சண்டையைப் போட்டுக்கிட்டிருந்தா அப்டித்தானேப்பா தோணும்? -சொல்லிவிட்டு இவர் முகத்தைப் பார்த்தான் சசி.

            எந்த வீட்ல சண்டை இல்ல…சொல்லு பார்ப்போம்….? என்றார் இவர்.

            எப்போது உள்ளே நுழைய வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்பதுபோல் வாளாவிருந்தாள் கமலினி.

            டீ கேட்டேல்ல…வந்து எடுத்துக்கோ சசி….- என்று குரல் கொடுத்தாள். மேற்கொண்டு காலங்கார்த்தாலயே பேச்சை வளர்த்த வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ? அட்டென்ஷன் டைவர்ட் பண்ணுகிறாள்.

            ஆம்மா…இந்த டீ ஒண்ணுதான் குறைச்சல்…இதக் குடிக்கலேன்னா உசிர் போயிடும் பாரு….

            கமலினி அவனைத் திரும்பிப் பார்த்தாள். அப்புறம் எதுக்குக் கேட்டே? வேலை மெனக்கெட்டுப் போட்டு நீட்டுறேன்…இப்டிச் சொல்றியே?

            என்னவோ கேட்டேன். அதக் குடிச்சாவது மனச ஆத்துவோமேன்னு…!

            ஆத்தித் தரவா? ரொம்பச் சூடா இருக்கு போல்ருக்கே…-என்றவாறே எழுந்தார் கமலேசன்.

            அவனுக்கென்ன ஆத்திக்கத் தெரியாதா? சின்னப் பிள்ளையா? போய் உட்காருங்க தேமேன்னு…. – எரிந்து விழுந்தாள் கமலினி.

            தனக்கு இது வேண்டாத வேலை என்று அப்போதுதான் உறைத்தது இவருக்கு. சூடா டீ குடிச்சா மனசு ஆறும்னு அவன் கேட்க, அதை ஆத்தித்தரேன்னு இவர் சொன்னா? பொருத்தமாயிருக்கா?

            அதுக்கில்லப்பா…பொழுது விடிஞ்சு பொழுது போனா சண்டையாவே இருந்தா? எரிச்சலா இருக்குல்ல…? எதையெடுத்தாலும் குதர்க்கமாவே பேசறாப்பா? தேவையில்லாமக் கோபப்படுறா?

            விடுறா…விடுறா…எல்லாம் போகப் போக சரியாப் போகும்…பொறுமையா இரு…..!

            என்னத்தப் பொறுமையா இருக்கிறது? அதுக்குள்ளே எனக்கு உறார்ட் அட்டேக்கே வந்துடும் போல்ருக்கு…

            என்னடா சொல்ற நீ? ஆபீஸ் டென்ஷன்னால சொல்றியா? அல்லது இதுக்காகச் சொல்றியா? – புரியாமல் கேட்டார். அவன் கேள்வி இவருக்கு வேடிக்கையாக இருந்தது. சற்றுப் பயமாகவும் இருந்தது.

            புரியாத மாதிரியே கேளுங்கப்பா…ஆபீஸ் வேலை எவ்வளவானாலும் சமாளிச்சிடுவேன்…இவ கரச்சல்தான் தாங்க முடில என்னால…..! ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு…!

            மருமகள் பிரதீபா ஆபீஸ் போனது நல்லது என்றே தோன்றியது. வாரத்தில் மூன்று நாள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்தான். ஆனால் அது ஆபீஸ் போகிறது. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. ஆளவிடுங்க என்று அவனும் போய்விடுகிறான். இரண்டு கிழங்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே…அது அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை. அத்தோடு கமலினி செய்து வைக்கும் டிபனும் ஆகவில்லை.

            ப்பப் பாரு…இட்லி…தோசை…இல்லன்னா பொங்கல்…இதத்தவிர வேற எதுவுமே உங்கம்மாவுக்கு மனசுல தோணாதா…? – ஒரு நாள் அந்தப் பெண் இப்படிக் கேட்டு வைக்க பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டான் சசிதரன்.

            ஏன்…அம்மாவுக்கு தொண்டைக்குள்ள இறங்காதோ? சுத்தமா, ஆரோக்கியமா வீட்டுல செய்து நீட்டுற உணவு கசக்குதாக்கும்? அம்புட்டு அக்கறை இருந்தா நீயே சீக்கிரமா எழுந்திரிச்சு செய்துக்கிறது? உன் ஒருத்திக்கு மட்டுமாவது செய்து எடுத்துக்கிட்டுப் போக வேண்டிதானே? யாரு தடுத்தா? எங்க அடுப்படிக்குள்ள நுழைஞ்சா ஒட்டிக்குமோன்னு பயம்.   வீட்டுக்கா உன்னைச் சமைக்கச் சொன்னாங்க? அதுக்கும் துப்பில்ல….ஒன்பது மணி வரைக்கும் குறட்டை விட்டுத் தூங்கவேண்டிது….ஒருக்களிச்சுப் படுத்து அந்தக் குறட்டையை ஒதுக்கணும்ங்கிற சின்ன அறிவு கூட இல்ல. பப்பரப்பா…ன்னு கால விரிச்சுக் கிடக்க…இப்டித்தான் ஒரு வீட்டுப்பொம்பள தூங்குவாளா? உங்க வீட்டுல இதுக்குக் கூட உனக்குச் சொல்லித் தரலியா? திரேகம் தெரியாமயா ஒருத்தி கிடப்பா? வெட்கமாயில்ல? ஒரு துரும்ப நகர்த்துறதில்ல நீ…இதுல பேச்சு வேறே….? கம்முனு கொடுக்கிறதப் பொத்திட்டு எடுத்திட்டுப் போகணும்…-பொழிந்து தள்ளி விட்டான்.

            வாயடைத்துப் போனது அதுக்கு.  கொஞ்ச நேரம் கழித்து அறைப் பக்கம் பார்த்த போது அழுது கொண்டிருந்தது.

            பாவம்டா…விடுறா….சத்தம் போடாதே…எல்லாம் காலப் போக்குல சரியாப் போகும்….விட்டுத் தள்ளு…பெரிசு பண்ணாதே….

            எப்போ சரியாகும்?…இல்லே எப்போங்கறேன்? நீங்க மண்டையைப் போட்டப்புறமா? இல்ல நான் கிழவனானப் பிறகா? இவ திருந்த மாட்டாப்பா….!

            மனசில் அதையே போட்டு உழட்டிக் கொண்டிருப்பானோ என்னவோ? சதா டென்ஷனிலேயே நெளிகிறான். ராத்திரி படுக்கையிலாவது சந்தோஷமாக இருக்கிறார்களா? என்று யோசித்தார் கமலேசன். எந்தப் பிணக்கும் படுக்கையில் மறைந்து போகுமே…!

            இந்தப் பயலுக்கு அந்த ஆசையும் அதிகமாய் இருப்பதாய்த் தோன்றவில்லை. பெண் எப்படித் தானே வலிய வரும்? ஆம்பளை சீண்டினால்தானே?  அது சிணுங்கும்…நெளியும், சுணங்கும்…முறுக்கிக்கும்…அப்புறம் படியும். அதில்தானே இன்பமே? அப்படியாவது சரி பண்ண மாட்டானா இந்த இளைஞன்? வயசுக்கான ஆசை இவனிடம் இருக்கிறதா இல்லையா? அதில் மடங்குமே எந்தப் பெண்மையும்?  பல கேள்விகள் பிறந்தது கமலேசனுக்கு.

            தானும் கமலினியும் போடாத சண்டையா? உறவுக்காரர்கள் எல்லோரும் சொல்வார்கள்…எப்பப் பார்த்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருப்பாங்க…இதுதான் அவர்கள்பற்றிய அபிப்பிராயம்.  ஒரு கல்யாணம் காட்சி என்று கூட அவர்கள் இருவரும் சேர்ந்து சென்றதில்லை. எல்லாவற்றிற்கும் அவர் ஒருவர் மட்டுமே சென்று ஆஜராவார்.

            ஏம்ப்பா…உன் பெண்டாட்டிய நாங்களெல்லாம் கண்கொண்டு பார்க்கக் கூடாதா? ஒரு விசேடத்திற்காவது கூட்டிட்டு வந்து அவ முகத்தை எங்களுக்குக் காட்ட மாட்டியா? என்று கேட்டிருக்கிறார்கள். அதிரூப சுந்தரியோ அவள்? என்ற மறைமுகக் கேள்வி அதில் தொக்கி நிற்பதாக உணர்வார் இவர்.

            நான் வந்திருக்கேன்ல…அவளும் வந்த மாதிரிதான்… என்னில் பாதிதானே அவள்…என்பார் இவர் சாமர்த்தியமாய்.

            யப்பாடீ…இரண்டறக் கலந்துட்டாங்க போல்ருக்கு..அர்த்தநாரீஸ்வரர்டோய்..!….என்று கிண்டல் செய்வார்கள். பொருட்படுத்த மாட்டார் கமலேசன். அவர்களோடு சேர்ந்து இவரும் சிரித்துக் கொள்வார்.

            ஆனால் உறவுக்காரர்கள் விசேடங்கள் அனைத்திற்கும் ஒத்தையாய்ப் போய் நிற்கும்போது இவர் மனம் வேதனைப்படத்தான் செய்யும். அழுத்தி தொண்டைக்குள் முழுங்கிக் கொள்வார்.

            நான் வரலை…நீங்க போயிட்டு வாங்க…இதுதான் அவள் எப்போதும் சொல்லும் ஒரே பதில். தன் வீட்டுக்காரர்களோடு அவள் ஒட்டினதேயில்லை. கல்யாணம் முடித்தவுடனேயே நேரடியாய் தனிக்குடித்தனம் கூட்டி வந்தாயிற்று. தன் வீட்டில் கொஞ்ச காலமாவது சேர்ந்து இருந்து ஒன்றுவதற்கான வாய்ப்பே இல்லாமற் போனது. தனிக்குடித்தனம் என்று நேரடியாய் வீடு பார்த்து வந்து குடியேறியதில் அவர்கள் வீட்டில் ஏக சந்தோஷம். தங்களுக்கான முதுகு வேலைக்கு இடமில்லாமல் போனதே என்று. அதற்காக அவர்களும் வந்து உட்கார்ந்து கொண்டு கும்மியடித்தார்களா என்ன? அதுவும் இல்லைதான். ஏழெட்டுப் பேர் இருக்கும் குடும்பத்தில் தன் பெண் வாக்கப்படுகிறாளே…என்ன பாடு படப் போகிறாளோ, எம்புட்டு வேலை செய்து மாயப் போகிறாளோ என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு இது பெரிய ரிலீஃப்தானே?

            அது முழுக்க முழுக்கக் கமலேசனின் மனம் சார்ந்த செயல்பாடு என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லைதான்.  குடும்பம் இருந்தது சென்னையில். இவர் வேலை பார்த்தது மதுரையில். அதனால் நேரடியாய் மதுரையிலேயே வீடு பார்த்துக் குடி புகுந்து விட்டார். இதிலென்ன தப்பு இருக்கிறது? அப்பா, அம்மா, தங்கைகள், அண்ணா, மன்னி என்று சென்னையிலிருந்தார்கள். இவர் மனது சுதந்திரம் வேண்டியது போல் அவள் மனதும் வேண்டியிருக்கலாமில்லையா?  ஆனால் அதற்குப் பின் ஒட்டாமல் போனதுதான் துரதிருஷ்டம். ஒட்டியென்ன ஒட்டாமலென்ன…எல்லாமும் இன்று அவரவர் காரியம், அவரவர் நலம், அவரவர் கஷ்ட நஷ்டம் என்றுதானே தனித்துப் போய்க் கிடக்கிறது? உலகமே அப்படியாகிப் போனதே? கூட்டுக் குடும்பம் என்கிற பழக்கமே அருகிப் போனதே? அவரவர் தனியாய் இருப்பதைத்தானே விரும்புகிறார்கள்?  சுயநலம் என்பதே விஞ்சி நிற்கிறது இன்றைய நாளில்…!

            து இப்படியே போயிட்டிருந்திச்சின்னா ஒரு நாளைக்கு நான் டைவர்சுக்கு அப்ளை பண்ணிடுவேம்ப்பா…எனக்கு நிம்மதிதான் முக்கியம்…

            கடைசியில் அந்தப் புள்ளிக்கு வந்து விட்டான் சசிதரன். எதை எதிர்பார்த்திருந்தாரோ அதைச் சொல்லியே விட்டான். இந்தக் காலத்துப் பசங்களே இப்படித்தான். மனம் சலித்தது.

            என்னடா…நீபாட்டுக்குப் பேசிட்டே போறே?- கொஞ்சம் யோசிச்சுப் பேசப் பழகிக்கோ…-குரல் சற்று உயர்ந்தது கமலேசனிடம்.

            யோசிக்கல்லாம் ஒண்ணுமில்ல…எல்லாம் வேணுங்கிற அளவு  யோசிச்சாச்சு…சும்மாச் சும்மா தினசரி பொழுது விடிஞ்சு பொழுது போனா சண்டை போட்டுக்கிட்டே இருக்க முடியாது. சலுப்பக் குடி மாதிரி… வேறே பொழப்பில்லயா மனுஷனுக்கு?  அது எனக்கு அவசியமில்லே…இதான் என்னோட முடிவு….! வெட்டி விட்ற வேண்டிதான்...

            ஓஉறா…முடிவே பண்ணிட்டீங்களா…?

            கமலேசனின் இந்தக் கேள்வியில் அவரைச் சட்டென்று திரும்பிப் பார்த்தான் சசிதரன். அந்தக் கேலியை உணர்ந்து கொண்டானோ?

            என்னடா பார்க்கிறே? நிதானமாக் கேளு…கல்யாணம் பண்ணனும்ங்கிறபோது மட்டும் பெரியவங்களெல்லாம் சேர்ந்து கூடிப்  போய்ப் பார்த்து, நல்ல குடும்பமா, நல்ல மனுஷாளா, நல்ல குணமா, பக்குவமா பேசறாங்களா…ஃபேமிலி பேக்ரௌன்ட் என்னன்னு ஒண்ணொண்ணையும்  நுணுகிப் பார்த்து உங்களுக்குப் பாந்தமாப் பேசி முடிச்சு வைக்கணும். ஆனா டைவர்ஸ் பண்ணனும்ங்கிறது போது மட்டும் சட்டுன்னு நீங்களே ஒத்தையா முடிவு எடுத்திடுவீங்க…?  யாரையும் கேட்க மாட்டீங்க…கன்சல்ட் பண்ண மாட்டீங்க…பெரிய அறிவுஜீவி மாதிரி உங்களை நீங்களே நினைச்சிட்டு தடால்னு போட்டுக் கவிழ்த்திடுவீங்க…அதுக்கு நாங்களும் வாய மூடிட்டு, கண்ணக் கசக்கிட்டு, பொச்சப் பொத்திட்டு சரின்னு சம்மதிக்கணும்…இல்ல? அதானே? அப்டியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும் செஞ்சிட முடியாதாக்கும்…!

            ஒரு கணம் நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தார் கமலேசன். என்னவோ வாய்க்குள் முனகிக் கொள்கிறான். சொல்வதைச் சொல்லி விடுவோம்…என்று துணிந்தார்.

 வச்சு வாழத்தான் வேணும்…முன்னப் பின்ன இருக்கத்தான் இ ருக்கும்…எல்லார் வாழ்க்கையும் அப்படித்தான்…யாரும் ஒண்ணும் இங்க நிம்மதியா இருந்திடல…புரிஞ்சிதா? உலகத்துல உள்ளவங்க வாழ்க்கையெல்லாமுமே ஏத்த இறக்கம்தான்…அதுக்காக எவனும் விட்டுட்டு ஓடிடுறதில்ல…ஆத்துல இறங்கிக் குளிக்கிறபோது எப்படி கசடுகள ரெண்டு கையாலயும் விலக்கிட்டு, ஒதுக்கிட்டு, நீக்கிட்டுக்  குளிக்கிறமோ அது போலத்தான் நம்ம அன்றாட  வாழ்க்கையும்…! புரிஞ்சிதா…நீபாட்டுக்குத் தடாலடியா எதையாவது பேசிட்டிருக்காதே… போய் கண்ணை மூடிட்டு சாமி முன்னாடி உட்கார்ந்து கொஞ்ச நேரம் தியானம் பண்ணு…எல்லாம் சரியாப் போகும்…!

            ஆம்மா…இத ஒண்ணு சொல்லிடுவீங்க…எதுக்கெடுத்தாலும் தியானம் பண்ணு, சாமியக் கும்பிடுன்னு…எந்தச் சாமியக் கும்பிட்டு என்ன பண்ண? நடக்கிறது நடந்திட்டேதான் இருக்கு. அதுக்கு ஒண்ணும் மாத்துக் கிடச்ச மாதிரித் தெரில….!

            மாத்துக் கிடைக்கிறதும், மாய்ஞ்சு போறதும் நம்ம கைலதாண்டா இருக்கு…அதுக்கு சாமியக் குறை சொல்லி என்ன பண்ண? நல்ல பழக்கங்கள முறைப்படுத்திக்கிட்டேன்னா உனக்குத்தான் நல்லது.  எதுலயும் ஒழுங்குன்னு ஒண்ணு உண்டுதானே? அதுதான் நம்மள நல்வழிப்படுத்தும். பொறுமையும் சகிப்புத் தன்மையும் அதுக்கு அவசியம்…! நம்ம அன்றாட நியமங்கள்தான் நம்மை நெறிப்படுத்தும். அத விடாமக் கண்டின்யூ பண்ணு…உன்னை, உன் இருப்பைப் பார்த்துப் பார்த்து அவ மாறுவா…கொஞ்சம் கொஞ்சமா பதத்துக்கு வருவா..அதுவரை பொறுத்திருக்கத்தான் வேணும். எதிர்பார்க்கிறது கிட்டினவுடனே கிடைக்கிற நிம்மதியும் சந்தோஷமும் இருக்கே..அதுக்கு ஈடே இல்லை….காலம் எல்லாத்தையும், எல்லாரையும் மாற்றிப் போடும். யாரும் பிறந்ததுலேர்ந்து இறப்பு வரை ஒரே மாதிரி இருந்து மறைஞ்சவங்க இல்லை…எல்லார் வாழ்க்கையும் மாறியிருக்கு…நேர் பட்டிருக்கு…ஒரு குறிப்பிட்ட புள்ளில சங்கமமாகியிருக்கு….மறக்கப் பழகிக்கோ…மன்னிக்கப் பழகிக்கோ…அவளுக்கும் அதுதான் உனக்குமே அதுதான்…!!!  வாழ்க்கையை நமக்கு ஏத்தாப்ல மாத்திக்கிறது நம்ம கைலதான் இருக்கு. அது பணத்துனாலயோ வசதி வாய்ப்பினாலயோ வராது. நம்ம குணத்துனாலதான் கைகூடும்… குணத்துனால மட்டும்தான் கைகூடும்….நல்லா ஞாபகம் வச்சிக்கோ….!!

            நீளமாய்ச் சொல்லி முடித்தார் கமலேசன். கொஞ்சம் ஓவர் டோசாகிவிட்டதோ என்று தோன்றியது அந்தக் கணத்தில். ஆனாலும் இருக்கட்டும்…நல்லதைத்தானே சொல்லியிருக்கிறோம் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

            ஃபோன் மணி அடித்தது.  சசிதரன் அதை எடுத்து இணுக்கியவாறே காதுக்கருகில் வைத்தான்.

            எதிரே பேசுவது பிரதீபா என்று தெரிந்தது. சசியின் முகம் மாறியது சட்டென்று. என்னவாயிருக்கும்?

            அப்பா…அவளுக்கு என்னவோ வாமிட் சென்சேஷனாம்…உட்கார்ந்து வேலை பார்க்க முடிலயாம். லீவு போட்டுட்டாளாம். ஆட்டோல வந்திட்டிருக்காளாம்….!

            துண்டு துண்டாய் அவன் சொன்ன அவசரச் சேதியைக் கேட்டு என்னவோ மனதில் ஓடியது கமலேசனுக்கு.

            ஒரு ஃபோன் பண்ணி டாக்டர் செக்அப்புக்கு இப்ப வரலாமான்னு உறாஸ்பிடல்ல கேளு….அப்பாய்ன்மென்ட் ஃபிக்ஸ் பண்ணு என்றார் துரிதமாக.

காரியக்காரப் பயலுங்க…! மனதுக்குள் முனகிக் கொண்டார். கமலினி ஆதுரத்தோடு மகன் அருகில் வந்து தோளில் ஆதரவாய்க்  கை வைத்தாள்.

----------------------------------

           

கருத்துகள் இல்லை: